லோகமாதேவியின் பதிவுகள்

Month: September 2020

லிங்கம்-வரலாறு, அமைப்பு, வகைகள் மற்றும் வழிபாடுகள்

ஆதியோகியும் ஆதிகுருவுமான சிவபெருமான் உரு, உரு-அரு, அரு(வம்) என்ற மூன்று விதங்களிலும் வழிபடப்படுபவர். தொன்மையான சிவஸ்தலமான சிதம்பரத்தில் தாண்டவக்கோனாகிய நடராஜப் பெருமான் உருவாகவும், ஸ்படிக லிங்கமாக உள்ள சந்திரமௌளீஸ்வரர் அரு-உருவாகவும், சிதம்பர ரகசியம் எனும் வெட்டவெளி அருவாகவும் மூன்று விதமாகவும் வழிபடப்படுகிறார். இது மட்டுமல்லாமல், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், லிங்கோத்பவர், பிக்ஷாடனர் போன்ற பல்வேறு வடிவங்களிலும் கூட சிவபெருமான் வழிபடப்படுகின்றார்.

சிந்து சமவெளி அகழ்வாய்வில் கிடைத்த லிங்க வடிவம்

எனினும் உலகம் முழுவதுமே சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியமானது. இந்தியாவிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  பரவியுள்ள லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. 

ஹம்பி

 ரிக் வேதத்தில் லிங்கம் பற்றீய குறிப்புக்களோ சொல்லோ இல்லை மாரக ருத்ரன் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதர்வவேதத்தில்  சொல்லப்பட்டிருக்கும் ஸ்தம்ப வழிபாடு என்பது லிங்கத்தின் வடிவையே குறிப்பதாக கொள்ளப்படுகின்றது. உபநிஷங்களில்தான் லிங்கம் எனும் சொல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தம்பமே புத்த ஸ்தூபிகளீன் வடிவினை அடிப்படியாக கொண்டு லிங்க வ்டிவாகி இருக்கலாமென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

புத்த ஸ்தூபி

சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ்வழிபாடு இருந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பிரயபாஸ் (Prayapas) என்ற பெயரில் ரோமானியர்கள் சிவலிங்க வடிவத்தை வணங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ரோமானியர்களுக்கு முன்னர் சிவலிங்க வடிவத்தை பாபிலோனாவிலும், பண்டைய காலத்து நகரமான மெசபடோமியா (Mesopotamia), ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவிலும் வழிபாட்டு வந்திருக்கிறார்கள். அயர்லாந்தில் ’ஊழின் கல்’ என்றழைக்கப்படும் லிங்க வடிவினை 500 வருஷங்களுக்கு முன்பே வணங்கி வந்திருக்கிறார்கள்.  

stone of Destiny-Ireland

தொல்காப்பியத்தில் ‘கந்தழி’ என்றும், சங்க இலக்கியங்களில் ‘கந்துடை நிலை’என்றும் சிவலிங்கம் சுட்டப்படுகின்றது.

சிவலிங்கம் என்றால் சிவனின் அருவுருவ திருமேனி அதாவது உருவத்திற்கும் அருவத்திற்கும் இடைப்பட்ட ஒரு அடையாளமேயாகும். இதை,

காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

                                                                                  -என்கிறார் சேக்கிழார்.

லிங்க புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி அண்ட சராசரங்களையும் கீற்பகுதி அண்டசராசங்களை தாங்கி நிற்கும்  அளப்பரிய சக்தியையும் குறிக்கும் என செல்லப்படுகிறது. சிவ புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி சிறிதிற்கும் சிறிதான – பெரிதிற்கும் பெரிதான சகலத்தையும் உள்ளடக்கிய ஒரு ஸ்தம்பம் எனக் குறிப்பிடுகிறது.  இதனையே மாணிக்கவாசகர் ”அணுவிற்குள் அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்’’ என கூறுகிறார்.

சிவலிங்க வடிவம் சுயம்புவாக உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றெனும் கருத்தும் உள்ளது. இயற்கையோடு இசைந்த, நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமே லிங்கமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்கள் சொல்கின்கிறன.  தவஞானிகளின் ஆற்றல்களாலும், மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பிரம்மாண்டமான பேராற்றல் இயற்கையிலேயே லிங்க வடிவத்திற்கு உள்ளது என அறிவியலும் சொல்கின்றது.

25 அடி உயர லிங்கம்-ஜிரோ பள்ளத்தாக்கு அருணாச்சலபிரதேசம்

  சுவாமி விவேகானந்தர் பிரான்ஸில் 1900  ல் நடந்த ’சமயங்களின் சரித்திரங்கள்’ என்ற மாநாட்டில் சிவலிங்கம் என்பது யுப ஸ்தம்பம் அல்லது யுப கம்பம் அதாவது வேதங்களின் சாரங்களை அடிப்படையாகக் கொண்ட மகா பிரம்மத்தின் அடையாளச் சின்னமே எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

லிங்கம் என்றால் அடையாளம் என்று பொருள். அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போதும் சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் வெளிப்படுகின்றன. மூவரின் ஆற்றலையும் உள்ளடக்கிய வடிவமே லிங்க வடிவம் என்கிறது ஸ்ரீருத்ரம்.


சிவதியானத்தில் முதல்படி நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் இருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது.  அருணகிரிநாதர் இதனால்தான் “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.


உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்கிற, அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதைத்தான் அத்வைத விளக்கமான  “தத்துவ மஸி” — நான் அது ஆதல். “அஹம் பிரமாஸ்மி” – நானே கடவுள் என வேதங்களும் சொல்கின்றன. ’தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே ’ என்கிறது  திருமந்திரம்.

இமயமலையில் பனி லிங்கமாகவும், இயற்கையில் விளைந்த பாணலிங்கமாகவும் சிவலிங்கங்கள் உள்ளன. மார்க்கண்டேயருக்கு  என்றும் பதினாறு ஆயுளைக் கொடுத்தது சிவலிங்க வழிபாடேயாகும். வேடுவனாக இருந்த ஒருவனை கண்ணப்பராக்கியதும் சிவலிங்கமே!

லிங்க வடிவின் அமைப்பு

அடிப்பகுதி, நடுப்பகுதி, ஆவுடையார், மேல்பகுதி ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும் லிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. லிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் வெளியில் தெரியும ருத்ர பாகத்திற்கு மட்டுமே பூசைகள் நடைபெறுகின்றன.

இந்த ருத்ர பாகத்தின் மீது நீர் படும்படி  தாராபாத்திரம்  எனப்படும்  மூலவருக்கு மேல் தொங்கவிடப்பட்டிருக்கும் குடம்போன்ற பாத்திரத்தில் நீர் அல்லது பால் நிரப்பி லிங்கத்தின் மீது சொட்டும்படி அமைக்கப்படுகிறது. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்திகளின் வடிவாகும். ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.

’’பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம்’’ என்று இதை விளக்குகின்றது சிவ புராண மந்திரம்

திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும். ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு..யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!

“ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம காயனக தேவகீ நந்தன ஸ்ரஷ்டா”
என்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம். “ஆத்ம யோனி” என்றால் ஆத்மா செல்லும் பாதை.

எல்லா சிவலிங்கத்திலும் ஆவுடையார் இருக்காது, மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு. நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது. கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். பாணாசுரன், மந்திரங்கள் கொண்டு சிவ பூஜை செய்து வழிபட்டிருந்ததால்  அந்த லிங்கங்களில் எப்போதும் சிவசான்னித்தியம் இருப்பதாக ஐதீகம்.

பாணலிங்கம்

இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான். நர்மதேஸ்வர சிவலிங்கம் எனப்படும் இவை கீறல் போன்ற ரேகையுடன், பளபளப்பாக, நீள் உருண்டை வடிவம் கொண்டதாக இருக்கின்றன. நாவற்பழத்தின் அடர்நிறம், தேன் நிறம், வண்டு நிறம், காவி, நீல, பச்சை, பழுப்பு  முதலிய பலவண்ணங்களில் பாணலிங்கம் இருக்கும்.

 திருப்பெருந்துறையில் மணிவாசகர் ஆலயத்தில் மேலே லிங்கமில்லாது வெறும் ஆவுடையார் மட்டும் இருக்கும்

சிவலிங்கத்தின் பீடமும் பலவகையான முறையில் அமைந்திருக்கும். பீடம் நாற்கோணமாயிருந்தால் இயக்கச் சத்தியாகும். பீடம் அறு கோணமாயிந்தால் கிடத்தற் சத்தியாகும். பீடம் வட்டமாயிருந்தால் இருத்தற் சத்தியாகும்

பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் லிங்கங்கள் வர்த்தமானக லிங்கம் எனப்படும்

ஆத்ய லிங்கம்  எனபவை பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் லிங்கங்கள்.

சிவலிங்கத்தின் ருத்திர பாகமாகிய மேற்பகுதி உருண்டை அல்லது எட்டு மூலை அல்லது 16 மூலை என்ற முறையிலும் அமைவதுண்டு.

சிவலிங்கத்தின் உச்சி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட நான்கு வகை லிங்கங்களாவன;,

ஆட்யலிங்கம் – சிவலிங்கத்தின் உச்சி அர்த்த சந்திரன் வடிவில் இருக்கும்.

அநாட்யலிங்கம் – உச்சி வெள்ளரிப் பழம் போல் இருக்கும்.
சுரேட்யலிங்கம் – உச்சி கோழி முட்டை வடிவில் இருக்கும்.
சர்வசமலிங்கம் – உச்சி குடை வடிவில் இருக்கும்.

சர்வசமலிங்கத்தில் மட்டும் முகலிங்கங்கள் எனப்படும், நான்கு அல்லது ஐந்து முகங்களைக் கொண்ட லிங்கம் அமைக்கப்படும்.

சதாசிவமூர்த்தம் எனப்படும் சிவலிங்கம் ஈசானம் என்னும் நடு உச்சிமுகம், தற்புருடம் (கிழக்கு), அகோரம் (தெற்கு), வாமதேவம் (வடக்கு), சத்தியோசாதம் (மேற்கு) ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டதாகும்.

 நான்கு முகங்கள் கொண்ட சிவலிங்கம் – ஈசானம் என்னும் உச்சிமுகம் தவிர, ஏனைய  நான்கையும் கொண்டிருக்கும்

மும்முக லிங்கத்தில், தற்புருடம்,வாம்தேவம்,அகீரம் ஆகியவை மட்டுமே அமைந்திருக்கும்

இரண்டு முக லிங்கத்தில் தற்புருடம், சத்தியோசாதம் ஆகிய இரண்டு மட்டும் அமைந்திருக்கும் .

ஒருமுக லிங்கத்தில் தற்புருடம் மட்டும் இருக்கும். கிழக்கு நோக்கியுள்ள இந்த முகம் பொன் நிறமானது. கோயில்களில் ‘நிருதி’ என்னும் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இவற்றை ‘நிருதி லிங்கம்’ என்பர். மனிதனை வாகனமாகக் கொண்டவர் நிருதி எனும் தேவன். அவரால் வழிபடப்படும் இந்த லிங்கத்தை வணங்குபவர்கள், ராஜயோகத்துடன், மனிதர்களை அடக்கி ஆளலாம் என்கிறார்கள்.

திருவண்ணாமலை அருணா சலேச்வரர் மூலஸ்தானம் அருகில் உள்ள நிருதி மூலையில் ஒருமுகலிங்கம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சபையிலும் ஒருமுகலிங்கம் இருக்கிறது

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் லிங்கத்துக்கு முகம் இல்லா விட்டாலும், வெள்ளி, தங்கக் கவசங்களில் கண், மூக்கு, வாய் முதலியவற்றை அமைத்து அணிவிக்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் கவசத்துடனான முகலிங்கம் உள்ளது.

.திருக்கோயில் கருவறையில் சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்தாற்போல உலோகத்தால் அமைத்து வழிபடுவதும் பின்வரும் ஐந்து கலைகளைச் சுட்டுவதன் பொருட்டேயாகும்.

  1. ஆன்மாக்களைப் பாசத்திலிருந்து விடுவிக்கும் நிவிர்த்திக் கலை
  2. ஆன்மாக்களை முத்திக்குச் செலுத்தும் பிரதிட்டாக் கலை
  3. பந்த நிலை  நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைக் கொடுக்கும் வித்தியா கலை
  4. அனுபவ ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு விருப்பு, வெறுப்பு முதலிய எல்லாவற்றையும் சாந்தமாகச் செய்வதற்கான சாந்தி கலை .
  5. விருப்பு, வெறுப்பு நீங்கிச் சாந்தமாக நின்ற ஆன்மாக்களுக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற நிலையை உண்டாக்கும் சாந்தியதீத கலை

தொன்மையான கோவில்களில் நான்முகலிங்கத்தினருகில் இரட்டைபாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்  அமைப்பை அறிவியலாளர்கள் DNA Helix அமைப்புடன் ஒப்பிடுகிறார்கள்.  

சிவலிங்கத்திலேயே நமசிவாய என்ற மந்திரத்தை அமைத்துக் காட்டும் முறையும் உண்டு. மேற்குமுகம் ஆகிய சத்தியோசாதம் ‘ந’, வடக்கு முகம் ஆகிய வாமதேவம் ‘ம’, தெற்கு முகம் ஆகிய அகோரம் ‘சி’, கிழக்கு முகம் ஆகிய தற்புருடம் ‘வா’, உச்சி முகம் ஆகிய ஈசானம் ‘ய’ – என்ற ஐந்தெழுத்து, ஐந்து முகங்ளாயின.

  ..

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதை விட, லிங்க ரூபத்தில் வழிபாடு செய்வதே சிறந்தது’ என்று மகாபாரதத்தில் வியாசர் அருளியிருக்கிறார்.  அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மையும் கொண்டது  லிங்க வடிவங்கள் என்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன.

அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்தி காத்துவரும் ஆற்றலின் வடிவம லிங்கம்.. இக்கருத்து நவீன விஞ்ஞான யுகத்திலும் பொருந்தி வருவதை அணுக்கரு உலைகள்(Nuclear Reactors) லிங்க வடிவிலிருப்பதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணம். சிவ புராணம், ஸ்கந்த புராணம் என எல்லாவற்றிலும் லிங்கத்தை பற்றிய வரலாறு உள்ளது! பிருகு முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு, பிரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

“திருமூலர்” லிங்க வடிவத்தை   பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே”

அடுத்த பகுதியில் லிங்கங்களின் பல்வேறு வகைகளைக் குறித்து காணலாம்

அமலபர்ணி-Rheum nobile

அமலபர்ணி . Rheum nobile

உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை   3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும்  2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில்  மட்டும் உள்ள தாவரங்கள் 45,000 (7.8%).  இவற்றில் 33% தாவரங்கள் இந்தியாவில் பூர்வீகமாக உள்ளவை. இதில் 15,000 பூக்கும் தாவர இனங்களாகும். இந்தியாவின் வடகிழக்கு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வடமேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் அரிய தாவரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு இமாலய பகுதி உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கச்செறிவு உள்ள பகுதிகள் உலகிலேயே மொத்தம் 34 தான் உள்ளது

உலகின் பூங்கா என்றழைக்கப்படும் இந்தியாவெங்கிலுமே மருத்துவத் தாவரங்கள்  செழித்துக்காணப்படுகின்றது. பல்வேறு நாட்டுப்புற மருந்துகளும்,பாரம்பரிய சிகிச்சை முறைகளும்  மிகப் பரவலாக புழக்கத்தில் உள்ள இந்தியாவில் மிகத்தொன்மையான காலந்தொட்டே அரிய மருத்துவக்குணங்கள் உள்ள தாவரங்கள் இமாலயத்தில் வளர்கின்றன

பனிசூழ்ந்த என்று பொருள் கொண்ட ’’இமாச்சல’ பகுதி, உலகின் மொத்த தாவர இனங்களின் 10 சதவீதத்தையும் இந்தியாவின் 50 % தாவரங்களையும் கொண்டது. வடகிழக்கு இமாலய பகுதி தாவர சிற்றினங்களின் தொட்டில் என்றே அழைக்கப்படுகிறது.  

இமயத்திலிருக்கும் அரிய தாவரங்களிலொன்றான அமலபர்ணி / ஏகாவீரா எனும் பெயரகளில் அழைக்கப்படும் Rheum nobile பனிமூடிய சிகரங்களின் உச்சியில் சுமார் 50,000அடி உயரத்தில் மிக அதிக புற ஊதாகக்திர்வீச்சும் பனிப்பொழிவுமாக இருக்கும் சூழலில் வளரும் ஒரு மருத்துவத்தாவரமாகும். பிரகாசமான தந்த நிறத்தில் கூம்புவடிவ கோபுரம்போல வளர்ந்திருக்கும் 2 லிருந்து 6 அடி வரை   வளரும் இத்தாவரம் பளபளப்பான இலைகளை கொண்டது.

 இமயமலையிலும், ஆஃப்கானிஸ்தான், திபெத், பூட்டான், பாகிஸ்தான், சிக்கிம் . சீனா மற்றும் மியான்மரில் உயரமான இடங்களில் மட்டும் இத்தாவரங்கள் காணப்படுகின்றன. சிக்கிம் மாநிலத்தின் லாச்சென் நகரத்தில் 14,000 அடி உயரத்தில் வளர்ந்திருந்த இத்தாவரத்தின் விசேஷமான வாழிடம், தோற்றம் மற்றும் பண்புகள் குறித்த  முதல் ஆய்வுக்கட்டுரை 1855ல் தாவரவியலாளர்கள் ஹூக்கர் மற்றூம் தாமஸ் ஆகியோரால் எழுதி வெளியிடபட்டது. 

தாவரவியலாளர் ஹூக்கர் வரைந்த சித்திரம்

சிவந்த இலைக்காம்பும் நரம்புகளும் கொண்ட, வட்ட வடிவில் அமைந்திருக்கும் இலைகளும் அவற்றின் மீது உயரமாக  கூம்பு வடிவில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியதுபோல தடிமனான  இலைச்செதில்களும் அமைந்திருக்கும் சிக்கிம் ருபர்ப் என அழைக்கப்படும் இந்த மருத்துவத்தாவரத்தின் நுனியில் மட்டும் இலைச்செதில்களின் விளிம்புகள் இளஞ்சிவப்பிலிருக்கும்.நுண்ணிய பசும்மலர்க்கொத்துக்கள் இலைச்செதில்களின் உள்ளிருக்கும்.

இச்செடி அசாதாரணசூழலில் வாழும் பொருட்டான பல தகவமைப்புக்களை கொண்டிருக்கிறது. வரிசையாக ஒன்றின் மீதொன்று படிந்திருக்கும் இலைச்செதில் (bracts) அமைப்புக்களினுள்ளே மலர்களையும் கனிகளையும் பொதிந்து வைத்து உறைபனியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்,  Quercetin flavonoids என்னும் வேதிப்பொருளின் உதவியால் புறஊதாக்கதிர்களை வடிகட்டி, ஒளியை தனக்குள்ளே கடத்தும் அரிய தகவமைப்புக்கொண்ட இந்த தாவரம் இமயத்தின் பல அற்புதங்களில் ஒன்றாகும்.

 பாலிகோனேசியே குடும்பத்தைச்சேர்ந்த இத்தாவரத்தின் வேர்கள் உட்பகுதி அடர் மஞ்சளாக, முழங்கை  தடிமனில் 7 அடிஆழம் வரை சென்றிருக்கும்.’’சுக்கா’’ என்றழைக்கப்படும் மெல்லிய அமிலச்சுவையுடன் இருக்கும் இதன் தண்டுகளை உள்ளூர் வாசிகள் உணவாக உட்கொள்ளுகின்றனர். மூங்கில்களைப்போல் உட்புறம் காலியாக இருக்கும் தண்டுகளுக்குள் துல்லிய இனிய சுவையான நீரிருக்கும்

மகரந்தச்சேர்க்கை

ஜூன்-ஜூலை மதங்களில், மலர்கள் மலர்ந்த பிறகு  தனித்தனியே பிரிந்து ஆழ்ந்த சிவப்பு நிறமாகிவிடும் இலைச்செதில்கள், கனிகள் முதிர்ந்தபின்னர் உதிர்ந்துவிடும். அடர் காபிக்கொட்டை நிறத்தில் கொத்துக்கொத்தாக பழங்கள் இலைகளற்ற தண்டுகளில் அழகாக தொங்கிக்கொண்டிருக்கும்.

ஒளியை வடிகட்டி தேவையான ஒளியை மட்டும் தனக்குள்ளே ஊடுருவிச்செல்ல அனுமதித்து இலைச்செதில்களின் உட்புறம் மிதமான வெப்பத்துடன் இருப்பதால், இத்தாவரம் ’’ glasshouse plant ’’ என்றும் அழைக்கப்படுகிறது .

இருபாலின மலர்களில் காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும்.  கனிகள் ஆகஸ்ட் செப்டம்பரில் முதிர்ந்து விடும்.  பனிப்பொழிவு மிகுந்த வாழிடமாதலால் மகரந்தசேர்க்கைக்கு தேவையான பூச்சிகளும் இங்கு மிகக்குறைவு அதற்கு தேவையான தகவமைப்பையும் கொண்டிருக்கும் இச்செடியின் 93 % மலர்களில் மகரந்ச்சேர்க்கை நடந்து விடுகின்றதென்பதும் அதிசயமே! Bradysia என்னும்  சிறிய பறக்கும் பூச்சி இனங்கள் இச்செடியின் இலைச்செதிலுக்குள்ளிருக்கும் வெப்பத்தில் தங்களது முட்டைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, இந்த உதவிக்கு மாற்றாக  இச்செடியின் மகரந்தசேர்க்கைக்கு உதவுகின்றது. இந்த  இரு உயிரினங்களும் பரஸ்பரம் உதவியாக இருந்து தொடர்ந்து இப்பகிர்வாழ்வில் இருந்து வருவதும் அதிசயமே. இப்பூசிகளை கவரும் வேதிப்பொருட்களை இச்செடி சுரந்து காற்றில் பரப்புகின்றது.

தாவரபாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் ஜீரணத்தை தூண்டவும் குடற்புழுக்களை நீக்கவும், சிறுநீர் பெருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் சேர்ந்திருக்கும் அசுத்த நீரை வெளியேற்றவும் வீக்கங்களை வடியச்செய்து குணமாக்கவும் இவை அதிகம் பயன்படுத்தபடுகின்றன. இதன் மருத்துவ குணங்களுக்கு இவற்றிலுள்ள Rutin, quercetin 3-O-rutinoside, Guaijaverin, quercetin 3-O-arabinoside, Hyperin, quercetin 3-O-galactoside, Isoquercitrinquercetin 3-O-glucoside,, quercetin 7-O-glycosidequercetin , kaempferol glycoside& feruloyl ester ஆகிய வேதிப்பொருட்களே  காரணமாக இருக்கின்றன

டாகா (‘taga’)என அழைக்கபடும் இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயத்தில், அந்தப்பகுதி மக்கள் கம்பளிகளுக்கு சாயமேற்றுகிறார்கள்.

அப்படியான அசாதாரண வாழிடங்களில், அத்தனை உயரத்தில் வளரும் பல தாவரங்கள் பாறைகளின் பின்னே மறைந்தும் தரையோடு தரையாக பரவி வளர்ந்தும், சிற்றிலைகளை மட்டும் உருவாக்கியும், அங்கிருக்கும் மிகக்குறைந்த வெப்பம், கடும் பனிப்பொழிவு மற்றும் அதிக புறஊதா கதிர்வீச்சு ஆகிவற்றிலிருந்து தப்பிக்கும் ஆனால் அமலபர்ணி அப்படியல்ல,  தௌந்த தகவமைப்புக்களுடன் நிமிர்ந்து பெரிய முறம்போன்ற இலைச்செதில்களுடன், சிறு கோபுரம்போல எழுந்து  6அடி வரை வளர்ந்து கம்பீரமாக மனிமலையின் உச்சியில்  நிற்கிறது.

இந்த தாவரத்தை பொது ஊடகங்களில் சிலர் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும்  அதிசய மகாமேரு என்று  உண்மைக்கு புறம்பான செய்தியை பலஆண்டுகளாக  புகைப்படத்துடன் பகிர்ந்தவாறே இருக்கிறார்கள். இது  அரியதுதான், இயற்கையின்  அதிசயங்களிலொன்றுதான் ஆனால் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் தாவரமல்ல, வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரம்தான். நூற்றுக்கணக்கான் வருடங்களுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரமேதும் இப்புவியில் இல்லை.

மோஹநாசினி

சங்கு புஷ்பம் – Clitoria ternatea

சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், கருவிளை, மாமூலி, காக்கட்டான், காக்கரட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதா என பலபெயர்களில் அழைக்கப்படுகின்ற  இக்கொடி ஃபேபேசியே குடும்பத்தை சேர்ந்தது. இலங்கையில் இதனை நீல காக்கணை பூ எனறழைப்பார்கள். இதன் ஆங்கிலப்பெயர்களாவன;  Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea,  Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea, மகாபாரதம் இதனை அபராஜிதா என்கிறது, ‘’கார்க்கோடப் பூ” என்கிறாள் ஆண்டாள். அரவிந்த அன்னை இம்மலரை’’ கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார்

சங்குப்பூ காடுகள்.தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. இச்செடியின் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. இதில் வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் அரிதாக வளர்வதுண்டு. வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளுமே மருத்துவப் பயன் கொண்டவை.

  சங்குப்பூ ஏறு கொடி வகையை (Climber) சார்ந்தது. இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் அடர்நீல நிறமான மலர்களையும் உடையது. சிறிய நீளமான காய்கள் தட்டையாக இருக்கும். இச்செடியின் பூ நன்றாக விரிந்து மலர்ந்திருக்கும்போது, ஒரு சங்கைப்போல தோன்றுவதால் சங்குப்பூ என்று பெயர் வந்தது.  வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட மலர்கள் இருக்கின்றன.

தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ்  50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும்   Clitoria ternatea  தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora Voigt செருவிளை எனவும் தமிழ்ப்பெயர்களை கொண்டிருக்கின்றன.

 ஆசியாவை தாயகமாக கொண்ட இச்செடி தற்பொழுது ஆப்பிரிக்காஅமெரிக்காஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும் காணப்படுகிறது.  கொடி போல் வளரும் இயல்புடைய இவை பற்றிக்கொள்ள துணை  இல்லாத இடங்களில் தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவி வளரும். ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் இச்செடி செழித்து  வளரும். சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10  தட்டையான விதைகள் இருக்கும்.  ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள்   வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி  மண்ணை  வளமாக்குகிறது. 

ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் வகையான இக்கொடியில் 4×3 செமீ அளவில்  நன்கு மலர்ந்த மலர்கள் இருக்கும் . மலர் உள்ளிட்ட இச்செடியின் பாகங்களில் இருக்கும் வேதிப்பொருட்கள்  ternatins , triterpenoidsflavonol glycosidesanthocyanins , steroids, Cyclic peptide-cliotides  ஆகியவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும்  anthocyanins வகையைச்சேர்ந்த  delphinidin.  என்னும் நிறமியால் உணடானது. மலர்கள் பட்டாம்பூச்சியின் இறகுகளைப்போல அழகுற அமைந்திருக்கும்.

இச்செடி முதன்முதலில் 1678ல் Rumpf என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த தாவரவியலாளரால் Flos clitoridis ternatensibus  என்று பெயரிடப்பட்டிருந்தது.  பிறகு 1800ல் மற்றோரு ஜெர்மானிய தாவரவியலாளரால்   இவை டெர்னேஷியா தீவுகளில் கண்டறியப்பட்டபோது மலர்களின் அமைப்பைக்கொண்டு அதே பெயரில்தான் அழைக்கப்பட்டன.

 இதன் பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்ப்தால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பை குறிக்கின்றது.  ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக ஒரு தாவரத்திற்கு பெயரிடுவது குறித்து தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்து Vexillaria, Nauchea  போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள் ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் நிலைத்தது. பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’விலிருந்து கொண்டு வந்த செடிகளாதலால்  தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் சிற்றினப்பெயராக  ternatea என்பதையே வைத்தார்.  

இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இச்செடியின் மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும்.

வேகமாக வளரும் இயல்புடைய,  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்

குறிஞ்சிப்பாட்டு, சீவகசிந்தாமணி மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும்  சிதம்பர நாத மாமுனிவர்  இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்குபுஷ்பங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது

 பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மலர் ’’மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும், மயில்-பீலியின் கண் போல் இருக்கும்., கண்ணைப்போல் இருக்கும்.
கண்ணைப் போல் மலரும்’’.என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது

மணிப்பூங் கருவிளை – குறிஞ்சிப்பாட்டு (அடி 68)

மணி கண்டு அன்ன மா நிற கருவிளை/ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற்றிணை 221/1,2

பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி – குறுந்தொகை 110/4

தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற்றிணை 262/1

கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1

நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/

கருவிளை முரணிய தண் புதல் பகன்றை – அகம் 255/11

உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளன் உடல் நிறத்தால், “கருவிளை புரையும் மேனியன்’ எனப்பட்டான்.  இச்செடியின் வெண்மலர்கள் அரிதாகவே காணக்கிடைப்பதைபோலவே இலக்கியங்களிலும் அதிகமாக நீலமலர்களும் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் வெண்மலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.   இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது . அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத தென்னிந்தியாவை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant)  இருக்கின்றது.

 தென்கிழக்கு ஆசியாவில்  உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது.  மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் அநேக மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம்

 சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களும் விதைகளும் கூட உணவில் சேர்க்கப்படுகின்றது

சீன பரம்பரிய மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும்  பலநோய்களுக்கு தீர்வாகும் முக்கியமான  மருந்தாக இது உபயோகிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மலர்கள் நினைவாற்றலுக்கும் மனச்சோர்வு நீங்கவும் வலிப்புநோய் தீரவும் தூக்கம் வரவழைக்கவும் கொடுக்கப்படுகின்றது. பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும்  சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறது .

மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிபொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று. இச்செடியின் வேர்கள் conjunctivitis. எனப்படும் இமைப்படல அழற்சிக்கு நல்ல மருந்தாகும்

சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

மலர்களில்   Antioxidants நிறைந்துள்ளதால் சருமத்தை பாதுகாத்து உடல் கழிவுகளை வெளியேற்றும். கேசப்பராமரிப்பிற்கான குணங்களையும் கொண்டிருக்கும் சங்குபுஷ்ப பானம் இளநரையை தடுத்து, கேசத்தின் வேர்களை பலமாக்கி, கேசமுதிர்வதையும் குறைக்கின்றது. ஜீரணத்திற்கும் குடற்புழுக்களை நீக்கவும் உதவுகின்றது இம்மலர்ச்சாற்றின் பானம்

மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின்  மனதை அமைதிப்படுத்துகின்றது. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தைக் குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்

மலர்களின் சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும் சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும்

தென்கிழக்கு ஆசியாவில் இம்மலர்கள் bunga telang  என்னும் பெயரில் இயற்கையான உணவு நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது, மலாய் உணவுகளில்  அரிசிச்சோற்றை நீலநிறமாக்க  சங்குப்பூச்சாறு  பயன்படுத்தப்படுகின்றது

மலேசியாவின் சில பகுதிகளில் சங்குபுஷ்பத்தின் அரும்புகள் சிலவற்றை அரிசி வேகும்போது சேர்த்து இளநீல நிறமான nasi kerabu. எனப்படும்  உணவை தயாரிக்கிறார்கள் தாய்லாந்தில்  dok anchan  எனப்படும் இந்த மலரிலிருந்து தயாரிக்கப்படும்  நீலநிற சர்பத் எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தப்படுகின்றது. தாய்லாந்தில் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பு சங்குப்பூக்கொண்டு செய்யப்படுகிறது.

பர்மாவிலும் தாய்லாந்திலும் மாவில் தோய்த்த இம்மலர்களை பஜ்ஜி போல் பொறித்தும் உண்கிறார்கள். ஜின் போன்ற பானங்களிலும் கூட இப்போது பலநாடுகளில் இம்மலரைச் சேர்த்து நிறம் இளஞ்சிவப்பாக மாறிய பின் பருகும் வழக்கம் இருக்கிறது

செயற்கை உணவு நிறமூட்டிகளின் பக்க விளைவுகளால் இம்மலர்களிலிருந்து எடுக்கப்படும் நிறமூட்டிகளுக்கு நல்ல வரவேற்இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கத்தின் சுற்றுப்புறங்களில் தாவரங்கள் அழிந்து மலடாகிபோன மண்ணில் இவற்றை வளர்க்கிறார்கள். (revegetation crop)

இறைவழிபாட்டில் இம்மலர் மிக சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. சிவபூஜைக்குரிய மலர்களில் காலை, மதியம், மாலை என படைக்கப்படும் மலர்களின் பட்டியலில் சங்கு புஷ்பம் மதியம் பூஜை செய்யவேண்டிய மலர்கலின் பட்டியலில் இருக்கின்றது

வெண்சங்குபுஷ்பம் சிவனுக்கும், நீலம் விஷ்ணுவுக்கும் உரியது அம்பாளுக்கும் உரியதுதான் நீல சங்குபுஷ்பம். திருமியச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆலயத்தில் சதய நட்சத்திரத்தன்று தாமரை மலருக்குள் சங்குபுஷ்பத்தை வைத்து அங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் மேகநாதனருக்கு அர்ச்சனை செய்வது மிகச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

கோவை கொட்டிமேடு என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஷ்வரி சமேத ஸ்ரீ சங்கநாதருக்கும் சங்குபூஷ்பங்களால் அர்ச்சனை அலங்காரம் ஆகியவை  விசேஷமாக செய்யப்படுகின்றது.

இத்தனை அழகிய எளிதில் வளரக்கூடிய சங்குபுஷ்ப செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும்  வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யபடுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. தற்போது இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால்  ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் விற்பனையில் இருக்கின்றன.

Changeling!

Changeling

ஐரோப்பிய நாட்டுப்புறக்கதைகளில் தேவதைகளும், யட்சிகளும் தங்களுக்கு பிடித்தமான மனிதக்குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் அடிமைகளாக்கி சேவை செய்ய வைத்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக அதே சாயலுள்ள, தீய குணங்களுள்ள வேறு குழந்தைகளை கொண்டு வந்து மாற்றி வைத்துவிடுவார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது. அப்படி மாற்றபட்ட குழந்தைகளே ‘changelings’ எனப்படுவார்கள்.

லாஸ் ஏஞ்சலஸில் 1928 ஆம் வருடம், திருமதி கிரிஸ்டைன் கோலின்ஸ் பணியிலிருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் தனித்திருந்த அவரது 9 வயது மகன் வால்ட்டர் காணாமல் போயிருந்தான்.  காவல்துறையில் புகாரளித்தும் பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காத நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு  வால்ட்டர், இல்லினாய்ஸில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையிலிருந்து செய்து வருகின்றது. ஆனால்  ரயில் நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்த அன்னை கோலின்ஸிடம் வால்ட்டர் என்று ஒப்படைக்கப்பட்டதோ  உயரம், சாயல், உடல்மொழி, பாவனை என அனைத்திலும் வேறுபட்டிருந்த மற்றொரு சிறுவன். அது தன் மகனில்லை என்ற கோலின்ஸின் மறுப்புக்கு காவல்துறை செவிசாய்க்காமல், அது வால்ட்டர்தான் 5 மாதங்களில் சாயல் மாறிவிட்டது என்று சாதித்துவிட்டு, ஊடகங்களில் காணாமல்போன சிறுவனை விரைவில் கண்டுபிடித்த  தங்களின் சாகசத்தை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

 அச்சிறுவன் தன் மகனில்லை என்பதை நிரூபிக்க கோலின்ஸ் செய்யும் முயற்சிகள், போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப்போகையில், திருச்சபையின்  மதகுரு ஒருவரின் உதவியால்  லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையின் செயலின்மையும், ஊழலும் வெளிச்சத்துக்கு  வந்து, கடத்திச்செல்லபட்டு கொடூரமாக கொலைசெய்யபட்ட பலகுழந்தைகளைப்பற்றியும் பின்னர் தெரிய வந்து புலன்விசாரணை நடக்கிறது. அதன்பிறகும் வால்டரைக்குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால், தன்னிடம் அளிக்கப்பட்ட சிறுவன் தன் மகனல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முயன்ற கோலின்ஸை மனநோயாளி என முத்திரை குத்தி காப்பகத்துக்கு அனுப்பி சித்ரவதை செய்கிறார்கள்.கடும் போராட்டத்துக்கு பிறகு காப்பகத்திலிருந்து வெளிவரும் கோலின்ஸ் மீண்டும் முழுவீச்சில் தன் மகனைதேடுவதை தொடர்கிறார்.

 இந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையிலான  குற்றமும் மர்மமும் கலந்த திரைப்படம்தான் 2008ல் வெளியான ’’Changeling’.’ தயாரிப்பும், இயக்கமும், பிண்ணனி இசையும் பிரபல இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood ). திரைக்கதை மிக்கேல் ஸ்ட்ரேக்ஜின்ச்கி (Michael Straczynski). இக்கதையில் அக்காலகட்டத்தின் குழந்தைக்கடத்தல்,  பெண்களுக்கெதிரான குற்றங்கள், வன்முறைகள், அரசியல் ஊழல், மனநோய் காப்பகங்களில் நடந்த அநீதிகள், ஆகியவையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஏஞ்சலினா ஜோலி, திருமதி கோலின்ஸ் ஆக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். திரைக்கதை எழுதியிருக்கும் மிக்கேல் எதேச்சையாக இந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டு அதன்பின்னர் அதன் குற்றப்பின்ணனியை காவலதிகாரிகளால் எரிக்கப்படவிருந்த  பல்லாயிரக்கணக்கான பக்கங்களடங்கிய   குற்றம் தொடர்பான ஆவணங்களையும், கோலின்ஸுடனான நீதிமன்ற  விசாரணைகளையும் வாசித்து,  சம்பவத்துடன் தொடர்பிலிருந்த பல இடங்களுக்கு பிரயாணித்து, பல வருடங்கள் ஆய்வு செய்தே இக்கதையை எழுதியிருக்கிறார். இது அவரின் முதல் வெள்ளித்திரைக்கதை. ஊடகவியல் மற்றும் இதழியலில் அவருக்கிருந்த அனுபவம் திரைக்கதையை செம்மையாக்கியிருக்கிறது Imagine Entertainment மற்றும் Universal Pictures ஆகியவையும் தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் பங்கு கொண்டனர்

 Period film வகையிலான  இத்திரைப்படத்தில் மகனை இழந்த, நம்பிக்கை இழக்காமல் இறுதிவரை போராடும் அன்னையின் கதாபாத்திரத்திற்கு பல முன்ணனி நடிகைகள் போட்டியிட்டும், கிளிண்ட் ஈஸ்ட்வுட் 1920களில் நடக்கும் கதைக்கான முகமும்,  அன்னைமை மிளிரும் தோற்றமும் இருப்பவராக  ஏஞ்சலினாவையே   தேர்வு செய்தார். ஏஞ்சலினாவுடன்  Jeffrey DonovanJason Butler HarnerJohn MalkovichMichael Kelly, மற்றும் Amy Ryan.ஆகியோரும் முக்கியப்பாத்திரமேற்றிருக்கின்றனர்

2007 அக்டோபரில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவில் துவங்கி நடத்தப்பட்ட படப்பிடிப்பு விரைவாக நடந்து 43 நாட்களில்  முடிவடைந்தது. அதன் பின்னர் post production வேலைகளாக கணினியில்  70 வருடங்களுக்கு முன்னரான நகரநிர்மாணம் மற்றும் சாலைப்போக்குவரத்து, உடையலங்காரம் உள்ளிட்ட பழமை ஒவ்வொரு காட்சியிலும்  பிழையின்றியும் சிறப்பாகவும் இருக்கும்படி கவனமாக இணைக்கப்பட்டது  

.அக்டோபர் 2008ல் உலகெங்கிலும் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் காட்டும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கான எதிர்ப்பும் கொஞ்சம் இருந்ததென்றாலும் 55 மில்லியனில் தயாரிக்கபட்ட இத்திரைப்படம் 113 மில்லியன் லாபமீட்டி பெருவெற்றி பெற்றது சந்தேகமில்லாமல். ஆஸ்கார் உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்கு பரிந்துரைககப்பட்டு, மிக முக்கியமான பலவிருதுகளையும் பெற்றது ‘’changeling’’.

 ஏஞ்சலாவின் பிரமாதமான நடிப்புக்கு இப்படமும் மற்றுமொரு உதாரணம். படத்தின் துவக்கத்தில் அவரின் அழகியதோற்றத்தில், குறிப்பாக ரத்தச்சிவப்பு சாயமிட்ட அவரின் உதடுகளிலிருந்து கவனத்தை திருப்ப கொஞ்சம் பிரயத்தனப்படவேண்டியிருப்பினும் சில காட்சிகளிலேயே அவர் மகனை இழந்த அன்னையான கோலின்ஸ் ஆக மட்டுமே உணர்வுபூர்வமாக திரையில் தெரியத்தொடங்குவதால் கதையோட்டத்தில் நாமும் கலந்துவிடுகிறோம்.

மகனுடன் அவனுக்கு புரியும் மொழியில் உரையாடியபடியே நாளைத்துவங்குவது, தன் அப்பா ஏன் தன்னுடன் இல்லையென்ற அவன் கேள்விக்கு  வெகுசாமர்த்தியமான பதிலைச்சொல்லுவது, மகன் காணாமல் போனபின்பு பரிதவிப்பது, விடாமுயற்சியுடன் அவனை தேடுவது, அக்காலகட்டத்தில் வழக்கத்திலிருந்தது போல் ஸ்கேட்டிங் ஷூக்கள் அணிந்து லாவகமாக பணிசெய்வது, காவல் துறையினரிடம் தன் கருத்தை திரும்பத் திரும்ப மனம் தளராமல் எடுத்துரைப்பது, மகனல்லவென்று தெரிந்திருந்தும் அந்த மாற்றி அனுப்பப்பட்டிருந்த சிறுவனிடமும் கரிசனத்துடன் இருப்பது என ஏஞ்சலினா  கோலின்ஸாகவே மாறி விட்டிருக்கிறார்

இயற்கையில் மலரிதழ்களின் மிகச்சரியான எண்ணிக்கை, அவற்றிற்கிடையேயான  சீரான இடைவெளி, மிகத்துல்லியமான இடைவெளியில் அமைந்திருக்கும் சூரியகாந்திப்பூக்களின் விதைகள், பைன் கோன்கள் ஆகியவற்றின் அமைப்பை கணிதவியல் தங்கக்கோணம், Golden  Angle அல்லது Golden Ratio என்கிறது. அப்படியான மிகத்துல்லியமான அளவுகளில் தங்கவிதியின்படி அமைந்திருக்கும் முகம் கொண்டவரென்று (golen ratio face) அறியப்பட்ட பிரபலமான ஏஞ்சலினா தன் அழகுக்கு அழகு சேர்க்கும் நடிப்பை இப்படத்தில் அளித்திருக்கிறார்.  இல்லினாய்ஸிலிருந்து ரயிலில் வரும் காணாமல் போன மகனுக்காக  பரிதவிப்புடன் காத்திருப்பதும் மகனல்லவென்று சந்தேகம் வந்தாலும் ஊடகங்களின் முன்னால் எப்படி மறுத்துச்சொல்வதென்ற தயக்கமும், காவலதிகாரியின் வற்புறுத்தலால் வந்த குழப்பமுமாக இருக்கையில், இவர்தான் நாயகி என்னும் கிளிண்ட் ஈஸ்வுடின் கணிப்பு எத்தனை சரியென்பது புலனாகும் பார்வையாளர்களுக்கு.

 இத்திரைப்படத்தின் பொருட்டு ஸ்கேட்டிங் ஷூக்களில் விரைவாக நடப்பதற்கான பயிற்சியையும் ஏஞ்சலினா எடுத்துக்கொண்டிருக்கிறார்.

 திரும்ப கிடைத்திருப்பது தன் மகனல்ல, இன்னும் எங்கேயோ தன்மகன் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறான் என்பதை நிரூபிக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாமே  மனதை பிசைபவை. இப்படி ஒரு ஒற்றைத்தாய் முன்னெப்போதோ அல்லலுற்றிருக்கிறார் என்னும் உண்மையை கண்முன்னே கொண்டு வந்து காட்டிவிடுகிறார் ஏஞ்சலினா.

மாற்றபட்ட சிறுவனின் உயரம் குறைவாக இருப்பது, சிறுவனின் ஆணுறுப்பின் முனைத்தோல் நீக்கப்பட்டிருப்பது, அவன் பற்களின் அமைப்பு மாறியிருப்பது, அவன் பள்ளி ஆசிரியையின் இது வால்டரல்ல என்னும் வாக்குமூலம்  போன்ற மறுக்க முடியாத ஆதாரங்களை மறுநாள் ஊடகங்களின் முன்வைக்கப்போகிறார் என்று தெரிந்ததும் சொந்த மகனை மறுக்கும் மனப்பிறழ்வு உள்ளவரென காட்டி கோலின்ஸை காவல்துறை மனநோயாளிகளின் காப்பகத்துக்கு அனுப்புவதும், அங்கு அவருக்கு நடக்கும் இழிவுகளும், கிடைத்திருப்பது வால்ட்டர்தான் என்று ஒத்துக்கொள்ளும்படி அவருக்கு  கொடுக்கப்படும் நேரடியான மிரட்டல்களும், உயிராபத்துக்களுமாக திரைப்படம் உண்மைச்சம்பவம் நடைபெற்ற காலத்துக்கே நம்மை அழைத்துச்சென்று கலங்க வைத்து விடுகின்றது.

 மதகுருவின் ஒத்துழைப்பால் பல குழந்தைப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்து குற்றவாளி நார்த்காட்(Northcott) பிடிபடுகிறான்.20 குழந்தைகளை கொன்று புதைத்தாக ஒத்துக்கொண்ட  அவனிடமிருந்து தப்பி வந்த சிறுவனின் வாக்கு மூலமும், அவனுடன் தப்பித்த சிறுவர்களைப்பற்றிய தகவல்களும், சிறைத்தண்டனையில் இருக்கும் நார்த்காட் 2 வருடங்களுக்கு பிறகு தூக்கிலிடப்படுவதற்கு முந்தின நாள், கோலின்ஸை சந்தித்து வால்டரைக்குறித்து பேச விருப்பப்படுவதாக சொல்லுவதும்,  தூக்கிலடப்படும் இறுதி நிமிடம்வரை பரிதவித்தபடி காத்திருக்கும் அன்னையிடம் அவன் என்ன சொன்னானென்பதுவும், வால்டர் மீண்டும் கிடைத்து அன்னையும் மகனும்  இணைந்தார்களா என்பதையும் திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்வதே உசிதம்.

இச்சம்பவத்தில்  சம்பந்தப்பட்ட ஊழல் காவலதிரிகாரிகள் உண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் (Captain Jones & Chief Davis ) அரசியல்வாதி ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவே இல்லை. கலிஃபோர்னியவின் நீதித்துறை மனநாயாளிகளை விடுதியில்  சேர்ப்பது குறித்த முறையான சட்டங்களை இதன்பிறகே பிறப்பித்தது. குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட வைன்வில்லி (Wineville) நகரம் கொலைகளினாலேயே  பிரசித்தி பெற்றுவிட்டதால் சில வருடங்களுக்கு பிறகு நகரமே மிரா லோமா (Mira Loma ) எப்பெயர் மாற்றபட்டது   

 குற்றவாளி Northcott,  ஆக நடித்திருக்கும்   Jason Butler Harner  ன் நடிப்பை பாராட்ட வேண்டும். மனம் பிசகியவர்களுக்கேயான பித்தேறிய கண்களும் கொஞ்சம் குழறலான உச்சரிப்புமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

 படப்பிடிப்பு தளங்களில் பழையபாணி கட்டிடங்களும், அப்போதிருந்த புகைப்படக்கருவிகள், நெருப்பை உபயோக்கும் காமிரா ஃப்ளாஷ்கள் புகைவண்டி, 1918லிருந்து 1928 வரை புழக்கத்திலிருந்த கார்களை சேகரித்து வைத்திருந்தோரிடமிருந்து  வாங்கிய 150 கார்கள்  என மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும் பின்ணனி திரைக்கதையை உறுத்தாமல் கொண்டு போகின்றது. ஒரு சில காட்சிகள் கோலின்ஸ் வாழ்ந்த தெருவிலேயே படமாக்கவும் பட்டிருக்கிறது. பல வரலற்றுஆய்வாளர்களும் படப்பிடிப்பில் முக்கியப்பங்காற்றியுள்ளனர்

   ஆடைவடிவமைப்பளர் Deborah Hopper, பள்ளி , கல்லூரிகளின் மிகப்பழைய ஆண்டு மல்ர்கள்,  LIFE உள்ளிட்ட எராளமான பழைய சஞ்சிகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தே உடைகளை வடிவமைத்திருக்கிரார். 1930ல் பிறந்தவரான கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனது பால்யகால நினைவுகலிருந்தும் சில விஷயங்களை சொல்லி உதவியிருக்கிறார்

 ஒளி இயக்குநர் டாமுக்கு ( Tom Stern)  இது ஆறாவது திரைப்படம். ஒளிப்பயன்பாட்டை வெகுவாக குறைத்து திரையில் ஏஞ்சலீனாவை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் காட்சியமைப்புக்களை  சிறப்பாக செய்திருக்கிறார். படத்தொகுப்பு மூன்றே நாட்களில் முடிவடைந்திருக்கிறது.

 தேவதைகளின் பிரதேசமென அறியப்பட்ட லாஸ் ஏஞ்சலஸ், மெல்ல மெல்ல   குற்றங்களும், வன்முறையும், ஊழலும் மலிந்த நகரமாக மாறியதையும் இப்படம் பதிவுசெய்கின்றது

குழந்தை கடத்தலை மையமாக கொண்ட எல்லா மொழித்திரைப்படங்களிலும் பழிவாங்குதலே பிரதானமாக இருக்கும். changeling இம்மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மகன் மீண்டும் கிடைக்கும் வரை போராடிக்கொண்டேயிருந்த  அன்னையின் கதையைசொல்லும் வகையில் மிக முக்கியமானதாகின்றது.. திரைக்கதையை காலையில் கேட்டுவிட்டு அன்று மதியமே இயக்குவதாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டிருக்கிறார் ஈஸ்ட்வுட்

 இயக்குநரின் மகள் கைல் இசையமைப்பில் உதவியிருக்கிறார். மற்றொரு மகள் மோர்கன், ’’வால்ட்டரை பார்க்கவில்லை’’ என்று கோலின்ஸிடம் சொல்லும் ஒரு சிறுமிகளில் ஒருவராக திரையில் ஒரே காட்சியில் தோன்றுகிறார்.

பலவருடங்களுக்கு முன்பான பழமையை திரையில் காட்டவென இத்திரைப்படத்திற்கென படக்குழுவினர் மேற்கொண்ட கடின உழைப்பைக்குறித்து இணையத்தில் வாசிக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.இதற்காகவே இப்படத்தை பார்க்கலாம்

அரியதும் தற்காலிகமானதும்!

2018 ல் பின்தெருவில் புதுக்குடித்தனம் வந்தார்கள் ஒன்றரை வயது மகனுடன் ஒரு தம்பதியினர். குடிவந்த மறுநாளே அதிகாலை அந்தப்பெண் என்னை சமையலறை ஜன்னல்வழியே அழைத்து பின்மதிலுக்கு வெளியே செறிந்து மலர்ந்திருக்கும் தங்கரளி மலர்களை பறித்துக்கொள்ளட்டுமா என்று கேட்டதிலிருந்து எங்கள் ஸ்நேகிதம் தொடங்கியது. செல்வம் ரேகா தம்பதியினர், மகன் தர்ஷன்

செல்வம் ஒவ்வொரு, வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உணவு/ சமையல் கலையில் பட்டம் பெற்றிருக்கும், கின்னஸில் இடம் பிடித்திருக்கும், தேனியருகிலிருக்கும் ஒரு ஊரை சேர்ந்தவர். 20 வருடங்கள் ஹாலிவுட் உணவகமொன்றில் chef ஆக பணிபுரிந்துவிட்டு இங்கு ஆழியாறு அணையருகே ஒரு உணவகம் துவங்கும் திட்டத்துடன் வந்திருக்கிறார்.

முன்வாசல் எனக்கு கொஞ்சம் நடக்கவேண்டும் என்பதாலும் சமையலறையின் மிக அருகே பின் வாசலும் மதிலும் இருப்பதாலும், மதிலைத்தாண்டி கைநீட்டியே பால், காய்கறி, கீரை வாங்குதல், அங்கேயே கொடியில் துணி உலர்த்த கறிவேப்பிலை கிள்ள என்று பெரும்பாலான புழங்குதல் பின்வாசலில்தான். எனவே அடிக்கடி பார்த்துப்பேசி  விரைவிலேயெ அவர்கள் நல்ல அணுக்கமாகிவிட்டனர். தர்ஷன் என்னை கண்டால் வெட்குவதும் முறுக்கு மீசையுடன் சரணைக்கண்டால் அஞ்சி உள்ளே ஓடுவதுமாக சிலநாட்கள் இருந்தான்.

பின் மெல்ல மெல்லப்பழகினான். என்ன  காரணத்தினாலோ 2 வயதை நெருங்கும் அவனுக்கு பேச்சு வரவில்லை. எல்லாமே சைகையில்தான். மருத்துவர்கள் குழப்பமேதுமில்லை காத்திருக்கலாமென்றார்கள், ஆனால் வெகுபுத்திசாலி.

கொரோனா விடுமுறையில் தேனிக்கு சென்றவர்கள் அங்கிருந்து ஓரிரவில் தர்ஷன் எனக்கு ‘’டே,யட்டை, சன்னன்னா, நுன்னைட்’’ என்று தேவியத்தைக்கும் சரணன்னாவுக்கும் குட்நைட் சொன்னதை குரல் பதிவாக வாட்ஸப்பில் அனுப்பினார்கள்

ஊர் திரும்பியவன் பேசாமலிருந்த 2 வருஷங்களுக்குமாக சேர்த்து பேசுபேசென்று பேசத்துவங்கினான். சன்னன்னாவுடன் ஒரே ஒட்டுதல் எந்நேரமும் ஈஷிக்கொண்டே இருப்பான். செல்வம் ஹாலிவுட்டில் இருந்ததால் திரைப்படங்கள் பார்ப்பதில் அவனுக்கும் அலாதி பிரியம். வீட்டுக்கூடத்தில் பிரம்மாண்டமான திரையில் எந்நேரமும் எதாவது படம் ஓடிக்கொண்டிருக்கும். தர்ஷனுக்கு தமிழில் ஆங்ரிபேர்ட் அல்லது லயன்கிங் நாளெல்லாம் திரும்பத் திரும்ப ஓடவேண்டும். அவன் எளிதாக அந்த டப்பிங் தமிழை கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தான்

 ’’கப்பல் முழுகுது எல்லாரும் ஓடிவாங்க அடி செம தூள், ஆபத்து காப்பாற்றுங்கள், மக்கள் எல்லாரும் எங்கே போறாங்க? என்ன அருமையான காலம், உற்சாகம் பொங்குமே, தொல்லையில்லை கவலையேதுமில்லை, என்றெல்லாம் கலந்துகட்டி  பேசத்துவங்கினான்.

மேலும் அவன் உலகமே கேள்விகளாலாயிருந்தது

தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் ’’ பச்சைதண்ணியா, சுடுதண்ணியா’’?

8 மணியானால் என்னிடம் ‘’ நீ காரேஜ்(காலேஜ்) கிளம்பித்தியா’’? யாரை  எதிரில் பார்த்தாலும் நல்லாக்கியா?சாப்பித்தியா?

சண்ணன்னா பெயர் எப்படியோ வாயில் வந்தாலும் தருணன்னனா வரவேயில்லை எனவே தருண் ’இன்னோன்னு சண்ணன்னா’’ வாகிவிட்டான்

கோகுலகிருஷணன் போல தெருவில் எல்லார் வீட்டிலும் எப்போதும் இருந்தான் மதிலுக்கு பின்னிருந்துஉருவம் தெரியாமல் ’’தூக்கு தூக்கு என்று கீச்சுக்குரல் கேட்டு, எட்டிப்பார்த்தால் கைகளிரண்டையும் தூக்கிக்கொண்டு நிற்பான். யாரோ ஒருத்தர் தூக்கி விடவும் மீண்டும் இறக்கிவிடுவதுமாக ஒருநாளைக்கு பலமுறை உடற்பயிற்சி செய்துகொண்டிருப்போம். எப்போதும். என்னுடன் சரிக்குச்சரி பேசிக்கொண்டு கூடவே இருப்பான். ஓயாத அவன் கேள்விகளால் என் காதிரண்டும் நிரம்பி வழியும். ’’ஏன் இந்தச்செடி இந்தகலர்ல பூக்குது, அந்த செடி வேற கலர்ல பூக்குது’’? போன்ற என்னால் விடையளிக்க இயலாத கேள்விகளும் இருக்கும்.

யாரிடமிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தாலும் பேசிக்கொண்டிருக்கையிலே அவனிடம் என்னை அழைத்தவரின் பெயரை ஜாதகத்துடன் சொல்லி என்ன பேசுகிறோம் என்பதையும் சுருக்கமாக சொல்லியே தீரவேண்டும். சில சமயம் பேசும் விஷயத்தையும் கவனித்து, ’என்ன லீவ்’ என்றோ ’யாருக்கு காய்ச்சல்’ ’ஏன் இன்னும் சம்பளம் வரலை’ என்றும் கேள்விகள் வரும்.

இன்னும் தீவிரமாக, போனில் யாரு ? என்பதற்கு பதிலாக ”என்  பிரண்டு சுபா” எனறால் ’’ இல்ல சுபா என் பிரண்டு, என் பிரண்டு என்று ஆவேசமாய் ஆட்சேபித்து  சண்டைக்கு வருவதும் நடக்கும்.

லாக் டவுன் காலங்களில் ஆன்லைன் வகுப்புக்களுக்கும் பழக்கமாகிவிட்டான். அவன் வருகையில் நாங்கள் கணினி முன்பாக அமர்ந்திருந்தால் ரகசியமாக ’’காஸா? என்பான் (கிளாஸா) ஆமென்றால் அமைதியாக பிஸ்கட் இருக்குமிடம் தெரியுமாதலால் எடுத்துக்கொண்டுவந்து சமர்த்தாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான். சம்மணம் கட்டி அவன் அமர்வதும் மழலையில் முதிர்ச்சியான பேச்சுக்களை பேசுவதும் அத்தனை அழகு.

ஜாமுக்கு பிரட்டையும் சாஸுக்கு பூரியையும் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அவன் வழக்கம் .அவ்வப்போது ‘எமன்’ ஜுஸ் கேட்பதும் உண்டு.

சப்பாத்தி தேய்க்கிறேன் பேர்வழியென்று சமையலறையின் புலனையும் தாண்டி கூடம் வரை கோதுமைமாவு பறக்க, குட்டிக்காலில் மிதித்து வீடெல்லாம் மாவை பரப்பி  எனக்கு சமையலில் உதவி செய்வதும் உண்டு. என் எல்லா நாட்களிலும் அனைத்து வேலைகளிலும் தர்ஷனின் பங்களிப்பு இருக்கும்.

என் வாட்ஸப் நிலைத்தகவல்களை தொடர்ந்து பார்க்கும் ஒரு  மூத்த பேராசிரியர் வேறு ஒரு அலுவலின் பொருட்டு ஒருமுறை என்னை அழைத்தபோது  ’’எப்படி மேடம் இத்தனை வேலைகளை தினம் செய்யறீங்க என்று கேட்கையில் தர்ஷனும் உடனிருந்தான்.  

ஜெ அதற்கு முந்தின வாரம் ’’வாழ்க்கை அரியதும் தற்காலிகமானதும் கூட இதில் சோம்பலுக்கு கொடுக்க பொழுதே இல்லை’’  என்று சொல்லி இருந்தாரென அந்த பேராசிரியரிடம் சொல்லி அதான் நான் எந்நேரமும் வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்றேன்.   எதிர்பார்த்தபடியே ’’என்ன வாழ்க்கை’’? என்று தர்ஷன் கேட்டன்

அரியதும் தற்காலிகமானதும் என்பதை இவனுக்கு எப்படி சொல்லுவதென்று யோசித்து ’’நாம காலையில் எழுந்திருச்சு சாப்பிட்டு விளையாடிட்டு மறுபடி சாப்பிட்டு மறுபடி தூங்கறோமில்ல அந்த வாழ்க்கை ஒரு பப்பிள் மாதிரி சீக்கிரம் உடைஞ்சு காணாம போயிரும்,அதைதான் சொன்னேன்’’ என்றேன் ’’வாழ்க்கை ஒரு பப்பிளா’’ என்று எதிர்க்கேள்வி கேட்டான், ’’ஆமா வாழ்க்கையே ஒரு பப்புள், அவ்வளவுதான்’’ என்றேன்.

அந்த சொற்றொடர் என்னவோ  அவனுக்கு மிகப்பிடித்துவிட்டது அடிக்கடி ’’வாழ்க்கையே ஒரு  பப்பிள்’’ என  ரைம்ஸ் சொல்லுவது போல் சொல்லத்துவங்கினான்.

’’சின்னப் பையனுக்கு இதைப்போய் சொல்லியிருக்கியே?’’ என்று சரண் என்னை கோபித்துக்கொண்டு அப்படி சொல்லக்கூடாது என்று அவனை மிரட்டியும் வைத்தான். அதன்பின்னர் இன்னும் தீவிரமாக பிடிவாதமாக அடிக்கடி சொல்லத்துவங்கினான்.   அவனுடைய மூன்று சக்கர சைக்கிளை தோழர்கள் தோழிகளுடன் ஓட்டும் ஒருமாலையில் ’பூனிக்கா’ என அவனால் அழைக்கப்படும் பூரணியிடம் ’’பூனீக்கா வாழ்க்கையெ ஒரு பப்பிள்’’ என்று கூவியபடியே பின்னால் துரத்திக்கொண்டு சென்றதை பார்த்தேன்

காகங்களுக்கு உணவு வைக்க பின் கதவைத் திறக்கும் அதிகாலைகளில்  சிலசமயங்களில்  அப்போதுதான் கண்விழித்து வாசலுக்கு வரும் அவன் என்னைப்பார்த்து, ‘’ டே யட்டை வாழ்க்கையே ஒரு பப்பிள்’’ என்பான். அதிகாலையில் வாழ்வை அத்தனை தத்துவார்த்தமாக  துவங்குவது எனக்கே பகீரென்றுதான்  இருக்கும்.

சென்றவாரம் இரவு 11 மணிக்கு மேல் கட்டிலில் உயரமாக அடுக்கி வைத்திருக்கும் தலையணைகளின் மீது ஏறி கீழே குதிக்கும் சாகசச்செயலில் தர்ஷன் ஈடுபட்டிருக்கையில் கணக்குத் தவறி அவன் முகம் தரையில் பட்டு நெற்றியில் ஆழமான வெட்டுக்காயமாகிவிட்டது.

அடித்துப்பிடித்து எங்கள் குடும்ப மருத்துவமனைக்கு போயிருக்கிறார்கள். கோவிட் தொற்றால் தினமும் ஓய்வொழிச்சலின்றி பணி புரிந்து களைத்துப்போயிருந்த மருத்துவர் தையல் போட்டுமுடித்துவிட்டு ’’ஏண்டா போன மாசம் மூக்கில் அடிபட்டு தையல், இப்போ நெத்தியிலா, சும்மாவே இருக்க மாட்டியா?’’ என்ற கேட்டபடி கொரோனாவால் வாழ்க்கை எப்படி தலைகீழால மாறிவிட்டதென்பதை பொதுவாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

வாழ்க்கை என்று காதில் கேட்டதும் இவன்  திரும்பி‘வாழ்க்கையே ஒரு பப்பிள் ‘’ என்றிருகிறான். இறப்பையும் பிறப்பையும் மிக அருகில் தினம் சந்திக்கும் மருத்துவர் திகைத்து பேச்சிழந்து என்ன சொல்லறான்? என்று கேட்டிருக்கிறார்.’’ தேவிக்கா  ஜெயமோகன்னு ஒருத்தர் சொன்னதை இவனுக்கு சொல்லி இருக்காங்க’’ என்று விளக்கியிருக்கிறார்கள்.அநேகமாக மருத்துவர் இரவு உறங்கியிருக்க மாட்டாரெண்ணிக்கொண்டேன்.

  வைரஸ் தொற்று உலகளவில் 3 கோடியை தாண்டிவிட்டதை செய்தியில் கேட்டு வருந்திக்கொண்டிருந்த போது நெற்றியில் தையல் பிரித்துவிட்டு உற்சாகமாக  வீட்டுக்கு வந்து ’’டே யட்டை வாழ்க்கையே ஒரு பப்பிள்’’என்றான். இனி துயருற்றுக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லையல்லவா,  அவனை வாரி எடுத்து அழுந்த முத்தமிட்டு ’ஆமாண்டா’! என்றேன். ஜெ’வின் மிக இளைய வாசகன் தர்ஷன்தானென்பதை, வாழ்க்கையே ஒரு பப்பிளாயிற்றே, அவருக்கு சீக்கிரம் எழுதவேண்டும்.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑