2018 ல் பின்தெருவில் புதுக்குடித்தனம் வந்தார்கள் ஒன்றரை வயது மகனுடன் ஒரு தம்பதியினர். குடிவந்த மறுநாளே அதிகாலை அந்தப்பெண் என்னை சமையலறை ஜன்னல்வழியே அழைத்து பின்மதிலுக்கு வெளியே செறிந்து மலர்ந்திருக்கும் தங்கரளி மலர்களை பறித்துக்கொள்ளட்டுமா என்று கேட்டதிலிருந்து எங்கள் ஸ்நேகிதம் தொடங்கியது. செல்வம் ரேகா தம்பதியினர், மகன் தர்ஷன்

செல்வம் ஒவ்வொரு, வீட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உணவு/ சமையல் கலையில் பட்டம் பெற்றிருக்கும், கின்னஸில் இடம் பிடித்திருக்கும், தேனியருகிலிருக்கும் ஒரு ஊரை சேர்ந்தவர். 20 வருடங்கள் ஹாலிவுட் உணவகமொன்றில் chef ஆக பணிபுரிந்துவிட்டு இங்கு ஆழியாறு அணையருகே ஒரு உணவகம் துவங்கும் திட்டத்துடன் வந்திருக்கிறார்.

முன்வாசல் எனக்கு கொஞ்சம் நடக்கவேண்டும் என்பதாலும் சமையலறையின் மிக அருகே பின் வாசலும் மதிலும் இருப்பதாலும், மதிலைத்தாண்டி கைநீட்டியே பால், காய்கறி, கீரை வாங்குதல், அங்கேயே கொடியில் துணி உலர்த்த கறிவேப்பிலை கிள்ள என்று பெரும்பாலான புழங்குதல் பின்வாசலில்தான். எனவே அடிக்கடி பார்த்துப்பேசி  விரைவிலேயெ அவர்கள் நல்ல அணுக்கமாகிவிட்டனர். தர்ஷன் என்னை கண்டால் வெட்குவதும் முறுக்கு மீசையுடன் சரணைக்கண்டால் அஞ்சி உள்ளே ஓடுவதுமாக சிலநாட்கள் இருந்தான்.

பின் மெல்ல மெல்லப்பழகினான். என்ன  காரணத்தினாலோ 2 வயதை நெருங்கும் அவனுக்கு பேச்சு வரவில்லை. எல்லாமே சைகையில்தான். மருத்துவர்கள் குழப்பமேதுமில்லை காத்திருக்கலாமென்றார்கள், ஆனால் வெகுபுத்திசாலி.

கொரோனா விடுமுறையில் தேனிக்கு சென்றவர்கள் அங்கிருந்து ஓரிரவில் தர்ஷன் எனக்கு ‘’டே,யட்டை, சன்னன்னா, நுன்னைட்’’ என்று தேவியத்தைக்கும் சரணன்னாவுக்கும் குட்நைட் சொன்னதை குரல் பதிவாக வாட்ஸப்பில் அனுப்பினார்கள்

ஊர் திரும்பியவன் பேசாமலிருந்த 2 வருஷங்களுக்குமாக சேர்த்து பேசுபேசென்று பேசத்துவங்கினான். சன்னன்னாவுடன் ஒரே ஒட்டுதல் எந்நேரமும் ஈஷிக்கொண்டே இருப்பான். செல்வம் ஹாலிவுட்டில் இருந்ததால் திரைப்படங்கள் பார்ப்பதில் அவனுக்கும் அலாதி பிரியம். வீட்டுக்கூடத்தில் பிரம்மாண்டமான திரையில் எந்நேரமும் எதாவது படம் ஓடிக்கொண்டிருக்கும். தர்ஷனுக்கு தமிழில் ஆங்ரிபேர்ட் அல்லது லயன்கிங் நாளெல்லாம் திரும்பத் திரும்ப ஓடவேண்டும். அவன் எளிதாக அந்த டப்பிங் தமிழை கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தான்

 ’’கப்பல் முழுகுது எல்லாரும் ஓடிவாங்க அடி செம தூள், ஆபத்து காப்பாற்றுங்கள், மக்கள் எல்லாரும் எங்கே போறாங்க? என்ன அருமையான காலம், உற்சாகம் பொங்குமே, தொல்லையில்லை கவலையேதுமில்லை, என்றெல்லாம் கலந்துகட்டி  பேசத்துவங்கினான்.

மேலும் அவன் உலகமே கேள்விகளாலாயிருந்தது

தண்ணீர் குடிக்கக் கொடுத்தால் ’’ பச்சைதண்ணியா, சுடுதண்ணியா’’?

8 மணியானால் என்னிடம் ‘’ நீ காரேஜ்(காலேஜ்) கிளம்பித்தியா’’? யாரை  எதிரில் பார்த்தாலும் நல்லாக்கியா?சாப்பித்தியா?

சண்ணன்னா பெயர் எப்படியோ வாயில் வந்தாலும் தருணன்னனா வரவேயில்லை எனவே தருண் ’இன்னோன்னு சண்ணன்னா’’ வாகிவிட்டான்

கோகுலகிருஷணன் போல தெருவில் எல்லார் வீட்டிலும் எப்போதும் இருந்தான் மதிலுக்கு பின்னிருந்துஉருவம் தெரியாமல் ’’தூக்கு தூக்கு என்று கீச்சுக்குரல் கேட்டு, எட்டிப்பார்த்தால் கைகளிரண்டையும் தூக்கிக்கொண்டு நிற்பான். யாரோ ஒருத்தர் தூக்கி விடவும் மீண்டும் இறக்கிவிடுவதுமாக ஒருநாளைக்கு பலமுறை உடற்பயிற்சி செய்துகொண்டிருப்போம். எப்போதும். என்னுடன் சரிக்குச்சரி பேசிக்கொண்டு கூடவே இருப்பான். ஓயாத அவன் கேள்விகளால் என் காதிரண்டும் நிரம்பி வழியும். ’’ஏன் இந்தச்செடி இந்தகலர்ல பூக்குது, அந்த செடி வேற கலர்ல பூக்குது’’? போன்ற என்னால் விடையளிக்க இயலாத கேள்விகளும் இருக்கும்.

யாரிடமிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தாலும் பேசிக்கொண்டிருக்கையிலே அவனிடம் என்னை அழைத்தவரின் பெயரை ஜாதகத்துடன் சொல்லி என்ன பேசுகிறோம் என்பதையும் சுருக்கமாக சொல்லியே தீரவேண்டும். சில சமயம் பேசும் விஷயத்தையும் கவனித்து, ’என்ன லீவ்’ என்றோ ’யாருக்கு காய்ச்சல்’ ’ஏன் இன்னும் சம்பளம் வரலை’ என்றும் கேள்விகள் வரும்.

இன்னும் தீவிரமாக, போனில் யாரு ? என்பதற்கு பதிலாக ”என்  பிரண்டு சுபா” எனறால் ’’ இல்ல சுபா என் பிரண்டு, என் பிரண்டு என்று ஆவேசமாய் ஆட்சேபித்து  சண்டைக்கு வருவதும் நடக்கும்.

லாக் டவுன் காலங்களில் ஆன்லைன் வகுப்புக்களுக்கும் பழக்கமாகிவிட்டான். அவன் வருகையில் நாங்கள் கணினி முன்பாக அமர்ந்திருந்தால் ரகசியமாக ’’காஸா? என்பான் (கிளாஸா) ஆமென்றால் அமைதியாக பிஸ்கட் இருக்குமிடம் தெரியுமாதலால் எடுத்துக்கொண்டுவந்து சமர்த்தாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான். சம்மணம் கட்டி அவன் அமர்வதும் மழலையில் முதிர்ச்சியான பேச்சுக்களை பேசுவதும் அத்தனை அழகு.

ஜாமுக்கு பிரட்டையும் சாஸுக்கு பூரியையும் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அவன் வழக்கம் .அவ்வப்போது ‘எமன்’ ஜுஸ் கேட்பதும் உண்டு.

சப்பாத்தி தேய்க்கிறேன் பேர்வழியென்று சமையலறையின் புலனையும் தாண்டி கூடம் வரை கோதுமைமாவு பறக்க, குட்டிக்காலில் மிதித்து வீடெல்லாம் மாவை பரப்பி  எனக்கு சமையலில் உதவி செய்வதும் உண்டு. என் எல்லா நாட்களிலும் அனைத்து வேலைகளிலும் தர்ஷனின் பங்களிப்பு இருக்கும்.

என் வாட்ஸப் நிலைத்தகவல்களை தொடர்ந்து பார்க்கும் ஒரு  மூத்த பேராசிரியர் வேறு ஒரு அலுவலின் பொருட்டு ஒருமுறை என்னை அழைத்தபோது  ’’எப்படி மேடம் இத்தனை வேலைகளை தினம் செய்யறீங்க என்று கேட்கையில் தர்ஷனும் உடனிருந்தான்.  

ஜெ அதற்கு முந்தின வாரம் ’’வாழ்க்கை அரியதும் தற்காலிகமானதும் கூட இதில் சோம்பலுக்கு கொடுக்க பொழுதே இல்லை’’  என்று சொல்லி இருந்தாரென அந்த பேராசிரியரிடம் சொல்லி அதான் நான் எந்நேரமும் வேலை செய்துகொண்டிருக்கிறேன் என்றேன்.   எதிர்பார்த்தபடியே ’’என்ன வாழ்க்கை’’? என்று தர்ஷன் கேட்டன்

அரியதும் தற்காலிகமானதும் என்பதை இவனுக்கு எப்படி சொல்லுவதென்று யோசித்து ’’நாம காலையில் எழுந்திருச்சு சாப்பிட்டு விளையாடிட்டு மறுபடி சாப்பிட்டு மறுபடி தூங்கறோமில்ல அந்த வாழ்க்கை ஒரு பப்பிள் மாதிரி சீக்கிரம் உடைஞ்சு காணாம போயிரும்,அதைதான் சொன்னேன்’’ என்றேன் ’’வாழ்க்கை ஒரு பப்பிளா’’ என்று எதிர்க்கேள்வி கேட்டான், ’’ஆமா வாழ்க்கையே ஒரு பப்புள், அவ்வளவுதான்’’ என்றேன்.

அந்த சொற்றொடர் என்னவோ  அவனுக்கு மிகப்பிடித்துவிட்டது அடிக்கடி ’’வாழ்க்கையே ஒரு  பப்பிள்’’ என  ரைம்ஸ் சொல்லுவது போல் சொல்லத்துவங்கினான்.

’’சின்னப் பையனுக்கு இதைப்போய் சொல்லியிருக்கியே?’’ என்று சரண் என்னை கோபித்துக்கொண்டு அப்படி சொல்லக்கூடாது என்று அவனை மிரட்டியும் வைத்தான். அதன்பின்னர் இன்னும் தீவிரமாக பிடிவாதமாக அடிக்கடி சொல்லத்துவங்கினான்.   அவனுடைய மூன்று சக்கர சைக்கிளை தோழர்கள் தோழிகளுடன் ஓட்டும் ஒருமாலையில் ’பூனிக்கா’ என அவனால் அழைக்கப்படும் பூரணியிடம் ’’பூனீக்கா வாழ்க்கையெ ஒரு பப்பிள்’’ என்று கூவியபடியே பின்னால் துரத்திக்கொண்டு சென்றதை பார்த்தேன்

காகங்களுக்கு உணவு வைக்க பின் கதவைத் திறக்கும் அதிகாலைகளில்  சிலசமயங்களில்  அப்போதுதான் கண்விழித்து வாசலுக்கு வரும் அவன் என்னைப்பார்த்து, ‘’ டே யட்டை வாழ்க்கையே ஒரு பப்பிள்’’ என்பான். அதிகாலையில் வாழ்வை அத்தனை தத்துவார்த்தமாக  துவங்குவது எனக்கே பகீரென்றுதான்  இருக்கும்.

சென்றவாரம் இரவு 11 மணிக்கு மேல் கட்டிலில் உயரமாக அடுக்கி வைத்திருக்கும் தலையணைகளின் மீது ஏறி கீழே குதிக்கும் சாகசச்செயலில் தர்ஷன் ஈடுபட்டிருக்கையில் கணக்குத் தவறி அவன் முகம் தரையில் பட்டு நெற்றியில் ஆழமான வெட்டுக்காயமாகிவிட்டது.

அடித்துப்பிடித்து எங்கள் குடும்ப மருத்துவமனைக்கு போயிருக்கிறார்கள். கோவிட் தொற்றால் தினமும் ஓய்வொழிச்சலின்றி பணி புரிந்து களைத்துப்போயிருந்த மருத்துவர் தையல் போட்டுமுடித்துவிட்டு ’’ஏண்டா போன மாசம் மூக்கில் அடிபட்டு தையல், இப்போ நெத்தியிலா, சும்மாவே இருக்க மாட்டியா?’’ என்ற கேட்டபடி கொரோனாவால் வாழ்க்கை எப்படி தலைகீழால மாறிவிட்டதென்பதை பொதுவாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

வாழ்க்கை என்று காதில் கேட்டதும் இவன்  திரும்பி‘வாழ்க்கையே ஒரு பப்பிள் ‘’ என்றிருகிறான். இறப்பையும் பிறப்பையும் மிக அருகில் தினம் சந்திக்கும் மருத்துவர் திகைத்து பேச்சிழந்து என்ன சொல்லறான்? என்று கேட்டிருக்கிறார்.’’ தேவிக்கா  ஜெயமோகன்னு ஒருத்தர் சொன்னதை இவனுக்கு சொல்லி இருக்காங்க’’ என்று விளக்கியிருக்கிறார்கள்.அநேகமாக மருத்துவர் இரவு உறங்கியிருக்க மாட்டாரெண்ணிக்கொண்டேன்.

  வைரஸ் தொற்று உலகளவில் 3 கோடியை தாண்டிவிட்டதை செய்தியில் கேட்டு வருந்திக்கொண்டிருந்த போது நெற்றியில் தையல் பிரித்துவிட்டு உற்சாகமாக  வீட்டுக்கு வந்து ’’டே யட்டை வாழ்க்கையே ஒரு பப்பிள்’’என்றான். இனி துயருற்றுக்கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லையல்லவா,  அவனை வாரி எடுத்து அழுந்த முத்தமிட்டு ’ஆமாண்டா’! என்றேன். ஜெ’வின் மிக இளைய வாசகன் தர்ஷன்தானென்பதை, வாழ்க்கையே ஒரு பப்பிளாயிற்றே, அவருக்கு சீக்கிரம் எழுதவேண்டும்.