சூர்யாவின் 2 D நிறுவனம் தயரித்துள்ள ’பொன்மகள் வந்தாள்’ திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஒ.டி.டி யில் (OTT, Over the top) வெளியாகியுள்ள தமிழ் சினிமாவின் முதல் பெரிய படம்.
மார்ச் மாத இறுதியிலேயே திரையரங்குகள் வைரஸ்தொற்றினால் மூடப்பட்டதால் ஓ.டி.டி தளங்களின் பார்வையாளர் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ள நிலையில் நேரடியாக இதில் வெளியிடுவதாக ஒப்பந்தமிட்டால் கூடுதலாக சில கோடிகள் லாபமென்பதால் தயரிப்பாளர்கள் கவனம் முழுக்க இதை நோக்கியே திரும்பியிருக்கிறது. சூர்யாவின் நிறுவனமும் படத்தை அமேசான் பிரைமுக்கே கொடுத்ததால், மே 29 அன்று ரசிகர்களின் வீடுகளுக்கே பொன்மகள் வந்தாள்
படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு, வினோதினி என்று நடிகர்களின் பட்டாளமே இருக்கிறது. ஒளிப்பதிவு ராம்ஜி, இசை கோவிந்த் வசந்தா, ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்க்கின் இயக்கத்தில் இது முதல் படம். படத்தொகுப்பு ரூபன்.5 மாதஙகளில் முழுப்படப்படிப்பும் முடிந்திருக்கிறது. சூர்யாவின் தங்கை பிருந்தாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்
2004 ஆம் வருடத்தில் ஊட்டியில் பல குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக சொல்லப்பட்ட சைக்கோ ஜோதி என்னும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொலைகாரியின் வழக்கை 15 வருடங்க.ள் கழித்து மீண்டும் தோண்டி எடுக்கும் பெத்துராஜ் என்கிற பாக்கியராஜ், அவரது மகள் வழக்குரைஞர் வெண்பாவாக ஜோ. சைக்கோ கொலையாளி எனப்படும் ஜோதி எப்படி கொலை செய்யப்பட்டாள், குழந்தைகளை கடத்தியதும் கொலைசெய்ததும் உண்மையில் யார்? வழக்கின் மறுவிசாரணைக்கான பலத்த எதிர்ப்பு, மறுக்கப்பட்ட நீதியையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் வெண்பா போராடி வெளிச்சத்துக்கொண்டு வருவது, இந்த வழக்கில் ஏன் இவர்களுக்கு இத்தனை அக்கறை என்பதெல்லாம்தான் கதை
ஜோதி அப்பாவி, அரசியல் மற்றும் பணபலமுள்ளவர்களே உண்மைக்குற்றவாளிகள் என்னும் அதே அரதப்பழசான கதை. முதல் பாதி ஆமைவேகம் என்றால் பின்பாதி நத்தை வேகம். தேவையேயில்லாமல் 5 இயக்குநர்கள் வந்து, யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கோர்ட் வாசலில் இருக்கும் டீக்கடைக்காட்சிகள் அனைத்துமே அநாவஸ்யம் அங்கு பேசப்படும் வசனங்களும் அபத்தம். நமக்கு அறிமுகமான ஏராளமான துணைநடிகர்கள் திருமண வீடுபோல கும்பலாக வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
தியாகராஜனுக்கு கழுத்திலே என்ன பிரச்சனையோ! இறுக்கமாக கழுத்தை வைத்துக்கொண்டு இயந்திர மனிதனைப்போல நடிக்கிறார். எளிய மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு அவர்களை தொட்டுவிட்டு பின்னர் கையை சோப் போட்டுக்கழுவும் வில்லனெல்லாம் போன ஜென்மத்துப்பழசு.
ஜோவையும் பாக்கியராஜையும் தவிர அனைவருமே அநியாயத்துக்கு கெட்டவர்களாக இருக்கிறார்கள். Character assassination பாக்கியராஜிலிருந்து துவங்குகிறது. மகள் 15 வருடஙகள் கழித்து திரும்ப எடுத்திருக்கும் அவர்களிருவருக்கும் மிக முக்கியமான ஒரு வழக்கு, ஜோ முழுப்படத்திலுமே சோகமே உருவாக இருக்கிறார் , ஆனால் அப்பாவோ பெண் நீதிபதியை மாமி , மாமி என்பதும், அவரது பிரத்யேக நக்கல் பேச்சுகளுமாக இருக்கிறார். நீதியரசராக வரும் ப்ரதாப்போத்தனையும் திடீரென லஞ்சம் வாங்கவைத்து கெட்டவராக்கிவிட்டிருக்கிறார்கள்.அதைபோலவே வில்லனுடன் அணுக்கமாக இருக்கும் சாட்சிகளை திசை திருப்பும் கெட்ட வழக்குரைஞராக பார்த்திபன், தேவையேயில்லாமல் திணிக்கபட்ட பாத்திரத்தில் பாண்டியராஜன்
மிகச்சிறிய இடைவெளிகளில் திரும்ப திரும்ப வரும் நீதிமன்றக் காட்சிகளும் உப்புச்சப்பில்லாத குறுக்கு விசாரணைகளும் அலுப்பூட்டுகின்றது. சட்டவல்லுநர்களை எல்லாம் இயக்குநர் கலந்தாலோசித்து எடுகப்பட்ட காட்சிகள் அவை என்றறியும் போது இன்னும் ஆயாசமாக இருக்கின்றது.
நீதிமன்ற அவமதிப்பை குறித்து துவக்கத்தில் ஜோ பேசுவதும் பின்னர் தொடர்ந்து அதுவே அங்கு நடப்பதும் முரண். பிரதாப் போத்தனும் பார்த்திபனும் நேருக்கு நேராக உரக்கக் கத்தி சண்டை போட்டுக்கொள்கிறார்கள் நீதிமன்றத்தில்!
நீதிமன்றக்காட்சிகள் எல்லாமே ஒட்டுமொத்த அபத்தம். எந்த வலுவான விசரணையும் குறுக்கு விசாரணையுமே இல்லாமல் பார்த்திபன் ஜோவை அவருக்கேஉரித்தான் பாணியில் நையாண்டி செய்வதும், நீதிபதி குறுக்கிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இரண்டு வழக்குரைஞர்களும் இஷ்டத்துக்கு விவாதித்துக்கொண்டிருப்பது, பலமான சாட்சியங்கள் ஆணித்தரமான விவாதங்கள், மறுக்கமுடியாத உண்மைகள் என்று நிரூபிக்க வேண்டிய ஒரு வழக்கின் மறுவிசாரணையை கண்ணீரும் கம்பலையுமாக உணர்வுபூர்வமாக நீதிமன்றத்தில் ஜோ முன்வைப்பது என்று வேடிக்கையாக இருக்கிறது. நீதிமன்றம் நாடகமேடையா என்ன?
ஜோ உள்ளிட்ட எல்லா முக்கிய கதாபாத்திரங்களுமே சொதப்பல்தான். புறப்பட்ட இடத்துக்கே திரும்பத்திரும்பவந்து திரைக்கதை முட்டிக்கொண்டு நிற்கிறது.
பெண்குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் கருத்துச்சொல்லும் படமான இதில் வழக்குரைஞராக வரும் ஜோவை இறுதிகாட்சி நீங்கலாக எல்லா காட்சிகளிலும் பார்த்திபன் இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு குள்ளமான பெண் நீதிபதி நிதிமன்றத்துக்கு வெளியே இருக்கும் கோவில் மணியை எட்டி அடிக்க முடியாத காட்சி எதற்கு திணிக்கப்பட்டிருக்கிறது? அது நகைச்சுவையா? அவரை பாக்கியராஜ் மாமி என அழைப்பதும் அப்படியே முற்றிலும் தேவையில்லாத காட்சி. இன்னொரு பெண் வக்கீல் நீதிமன்ற வாசலிலேயே பிரபல வழக்குரைஞரான பார்த்திபனுடன் செல்ஃபி எடுக்க முண்டியடிக்கிறார். அந்த செல்ஃபியைக்காட்டி பெருமையடித்துக்கொள்கிறார். சொல்ல வந்த கருத்துக்கு முரணாக பெண்களை கொச்சைப்படுத்தும், மலினப்படுத்தும் பலகாட்சிகளை சேர்த்திருப்பது சொந்தச்செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுவதல்லாமல் வேறென்ன?
இரண்டு தலைமுறையாக சினிமாவில் இருக்கும் குடும்பம், பிண்ணனிப்பாடகியான தங்கை உட்பட மொத்தம் 5 பேர் தமிழ்ச்சினிமாவில் காலூன்றி இருக்கும் குடும்பத்தின் சொந்த தயாரிப்பு என்னும் எந்த உண்மையையும் படத்தின் தரத்துடன் ஒப்பிடமுடியாத அளவில்தான் சூர்யா படத்தை தயாரித்திருக்கிறார்.
ஒரு நூற்றாண்டான இந்தியச்சினிமாவை திரையரங்குக்கு சென்று வெள்ளித்திரையில் பார்ப்பதென்பது வெறும் திரையனுபவமாக மட்டும் இல்லாமல் பல உளவியல் விடுதலைகளை அளிக்கும் ஒரு கேளிக்கை நிகழ்வாகவும் இருந்து கொண்டிருக்கிறது. ஒன்றேபோலான அன்றாடங்கள் அளிக்கும் சோர்விலிருந்து விடுபடவும், சமையலறைக்கும் வீட்டுவேலைகளுக்கும் வெளியெ வந்து சற்று மூச்சுவிட்டுக்கொள்ளவும், அலங்கரித்துக்கொள்ளவும், திரளாக அதே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மனிதர்களை காண்பதுவுமாக திரைப்படம் பார்க்கும் அனுபவம் பலருக்கும் பல விதங்களில் தேவையாக இருந்துவருகின்றது. அந்த அனுபவங்களுக்கு இணையாக ஓ.டி.டி வெளியீடு எதையும் செய்யமுடியாதென்றாலும் அவற்றிற்கு மாற்றாகவாவது ஏதேனும் செய்ய முயற்சித்திருக்கலாம்.
ஒரு பாடல் கூட முழுதாக கேட்கமுடியாத ரகம். மனதில் நிற்காத வெண்டைக்காயை விளக்கெண்ணையில் வதக்கியதுபோல் வழவழ வசனங்கள், எந்த முக்கியத்துவுமும் இல்லாத ஏராளமான துணைக்கதாபாத்திரங்கள், தெளிவற்ற திரைக்கதை, ஜோதி சரணடைந்தாள் பின்னர் சரணடையவில்லை, நானே கைதுசெய்தேன், இல்லை கைதுசெய்தது நானில்லை, உண்மையில் கைதுசெய்த அதிகாரி கொலை, வெளிநாட்டு சுற்றுலாப்பயணி எடுத்த வீடியோ, சிசிடிவிகாட்சி, கருப்பாக அம்மா ஜோ வெள்ளையாக துயரே உருவான மகள் ஜோ என்று குழப்பியடித்து கதை வாலறுந்த பட்டமாக மனம் போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறது
திரைக்கதையில் உள்ள இத்தனை குழப்பங்கள் போதாமல் இறுதியில் வெண்பா ஏஞ்சலாவது என்னும் இன்னொரு திருப்பமும் இருக்கின்றது., எல்லாபக்கத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார் சூர்யா அத்தனை நாட்கள் ஜோவை முடிந்தவரை கிண்டலடித்து விட்டு திடீரென காகிதத்தில் சிறகுகள் வரைந்து பார்த்திபன் ஏஞ்சலை பாராட்டுவது அம்புலி மாமா கதை ரகம்
நேரடியாக ஓ.டி.டி வெளியீடு என்னும் முன்னெடுப்பிற்கும், அருமையான ஒளி இயக்கத்துக்கும் மட்டும் பொன்மகளைப் பாராட்டலாம்.
கேளிக்கைகளுக்கு வழியில்லாத இரண்டு மாத சமூக விலகலின் போது நேரடியாக வீட்டுக்கே வரும் புதுப்படம் என்னும் எதிர்பார்ப்பில் அமேசான் பிரைமில் பொன்மகள் வெளியானதும் பார்த்துவிட ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவு வரை விழிந்திருந்தனர். இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் சூர்யா நியாயம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சொதப்பலான படத்தை தந்து அநியாயமல்லவா செய்துவிட்டிருக்கிறார்?
’’மின்னுவதெல்லாம் பொன்னல்ல!’’
Leave a Reply