நசீர் பார்த்த கையோடு இதை எழுதுகிறேன். கூடுதல் பணிச்சுமையிலிருந்தேன் இன்னும் ப்ரியாவின் கதையை சாயின் சுட்டிப்பேச்சை எதையுமே பார்க்கவில்லை. எனினும் நசீரை பார்த்துவிடுங்கள் என்று அதிக அழுத்தம் மாதவனின் பேச்சில் தெரிந்தது. சொல்முகம் நரேனும் இதைபார்க்கவேண்டிய அவசியத்தை சொல்லிக்கொண்டிருந்தார் அதற்கு காரணமின்றி இருக்காது என்று தோன்றியது. படம் முழுக்க பார்த்தேன். பிரமாதம். இன்று உண்மையில் என்னால் மிக அவசரமாக எழுதி முடிக்கவேண்டிய எதையும் துவங்க முடியாத அளவிற்கு சோர்வாக இருந்தேன். நசீரைப் பார்த்த பின்பு அப்படி எழுதாமல் இருக்கவே முடியாது என்றே தோன்றியது.
இந்து இஸ்லாமிய பிரச்சனைகளைக் குறித்து “கருத்து” சொல்லும் ஏராளமான படங்களை சலிக்க சலிக்கப் பார்த்திருக்கிறேன், வருந்தியிருக்கிறேன், பின்னர் அப்படியே மறந்துமிருக்கிறேன். ஏனெனில் நசீர் சொல்லியிருப்பதைப் போல இத்தனை ஆழமாக, இவ்வளவு வலிக்கும் படியாக இதற்கு முந்தின எந்தப் படமும் இதை சொல்லியிருக்கவேயில்லை.
ஒரு சாமான்யனின் ஒற்றை நாள் எப்படி துவங்கி எப்படி முடிகின்றது என்பதே கதை. மிக மிக மெதுவாக நசீரின் காலை பள்ளியில் பாங்கு விளிப்பதிலிருந்து துவங்குகிறது. எல்லா கதாபாத்திரங்களுமே மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். நடித்திருக்கிறரகள் என்று சொல்லவே தயக்கமாக இருக்கிறது. அத்தனை இயல்பாக வந்துசெல்கிறார்கள் திரைக்கதையில். அந்தச் சந்துகளில் மார்க்கெட்டின் அடைசலான வழிகளில், துணிக்கடையில் ஹாஸ்டலில் எல்லாம் உண்மையில் காமிரா இருந்ததா என்றே சந்தேகம் வந்துவிட்டது. அந்த வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் காட்சியெல்லாம் அபாரம். நசீர் என்று டைட்டில் போடும்போதே அந்த எழுத்து வடிவத்தின் வித்தியாசம் படத்தின் பேரிலான கவனத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து செய்வதென்பார்களே, அப்படியான படைப்பு இது.
எழுத்தாளர் திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ யை மையமாகக்கொண்டே இத்திரைப்படம் எடுக்கபட்டிருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளருக்கு ஒரு கைகுலுக்கல். பிரமாதப்படுத்தியிருக்கிறார். பேகத்தின் கம்மலும் கல்லு மூக்குத்தியும் பளிச்சிடும் அந்தக் காட்சியிலிருந்தே காமிராக் கண்களை சிலாகிக்காமல் படத்தை தொடர முடியவில்லை
நசீரின் பாத்திரப் படைப்பும் மிக நன்று. இளமை இறங்குமுகமாக இருக்கையிலும் அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யமும் காதலும் , பேரன்பும் ரசிக்கும்படியாக இருந்தது. இக்பால் இவர்களின் குழந்தையல்ல என்பதும் வியப்பளித்தது.
எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இழக்காத, சிடுசிடுக்காத, மனைவியின் மீது பிரேமையுடனும், அவளின் மூன்று நாள் பிரிவுக்கே முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும், கடிதங்கள் எழுதும், பழைய காலத்தின் நினைவுகளில் மூழ்கும் பாடல்களை கவிதைகளை நினைவுகூரும், அம்மிஜானின் நோயைக்குறித்து வருந்தும், மிக நேர்மையான தொழில் சிரத்தையுள்ள, அன்பான சகிப்புத்தன்மை கொண்ட ஒருவராக சித்தரிக்கபட்டுள்ள பாத்திரம். அத்தனை எளிய கதாபாத்திரம் என்பதாலேயே இறுதிக்காட்சியின் அநீதி அதிகம் வலிக்கின்றது.
பின்னணியில் இசையின்றி அக்கம்பக்கத்தினர் பேசுவதே பிண்ணனியில் ஒலிப்பது புதுமையாகவும் கவனிக்கும்படியும் இருப்பது படத்தின் காட்சியுடன் நம் அணுக்கத்தை இன்னும் கூட்டிவிடுகின்றது. நசீர் துணிக்கடைப் பெண் பொம்மையின் மூக்கை செல்லமாக நிமிண்டும் காட்சி அழகு. அவரின் தொழில் மீதான விருப்பத்தையும் அவரின் கலாரசனை மிகுந்த மனதினையும் நாம் உணரும் காட்சி அது.
மனைவியுடன் பேருந்து நிலையத்திற்கு நடந்து வருகையில் கடைவீதியில் இருக்கும் பல வண்ண பிள்ளையார் பொம்மைகளை அவர்கள் கடக்கிறார்கள். அப்போதே மனம் படபடக்க துவங்கிவிட்டது. கோவைக்காரியான எனக்கு இதில் பல முன் நினைவுகள் இருந்ததால், என்னவோ சரியாக இல்லையே என்று பதைபதைத்தது மனது. .
வெட்டி வெட்டிக் காட்டப்படும் காட்சிகள் நன்றாக இருந்தன. சாமன்யர்களின் வாழ்வின் வண்னங்களை சட் சட்டென்று காட்டிச் செல்லும் காட்சிகள் படம் முழுக்கவே நிறைந்திருந்தன. பொதுக் கழிப்பறை, அங்கிருக்கும் ஒற்றை ரோஜாச் செடி, இட்லி விற்கும் பெண்மணி, வர்ணப் பூச்சை இழந்து பல்லிளிக்கும் வீட்டுச் சுவர்கள் என்று காட்சிகள் அடுத்தடுத்து வந்து அடித்தட்டு மக்களின் வாழ்வியலையே ஒரு சித்திரம் போல நம் முன்னால் வைத்து விடுகின்றது.
மிக இயல்பான உரையாடல்கள், காட்சிகள் வழியே நசீரின் எந்த திருப்பமும் இல்லாத ஒரு மிகச் சாதாரண வாழ்வு நமக்கு முன் அப்படியே திறந்து வைககப்டுகின்றது.
நசீருக்கு அவர் சார்ந்திருக்கும் இஸ்லாம் என்பது அவர் தொடர்ந்து வாழ்வை நடத்த உதவும் ஒரு மார்க்கம் அவ்வளவே. ஆகம விதிகளின் படி உடல் தூய்மை செய்துகொண்டு பள்ளிக்குப் போய் வேண்டிக்கொள்வதோடு அவரது மத உணர்வின் தீவிரமற்றத் தன்மையைக் காட்டுகிறார்கள்.கடை முதலாளி “துலுக்கனுங்க” என்று பேசுகையிலும் நசீர் எந்த உணர்வுமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதிர்ந்துகூட பேசாத, தொழிலில் மிக நேர்மையாக இருக்கின்ற மனவளர்சியில்லா உறவுக் குழந்தையை சொந்த மகனைப் போல பார்த்துக்கொள்கிற, இசை கேட்கிற, கவிதை எழுதுகின்ற மனைவி மீது பேரன்புடன் இருக்கிற முதலாளி சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்கிற என்று நசீரின் பாத்திரம் வெகு எளிமை.
அந்தத் துணிக்கடை, முதலாளியின் கொங்கு பாஷை நன்று. கோவை உணவகங்களின் விவரணையெல்லாம் இயக்குநரின் வாய்ஸ் ஓவெர் போலிருக்கிறது. முழுக்க சரிதான்):
மிக மெதுவே நகரும் படமாதலாலும் அந்த சந்துக்குள் தன் மனைவிக்கான கடிதத்தை மனதிற்குள் சொல்லியபடி வீட்டுக் கடமைகளை, கடன் கிடைக்காமல் போனதை எல்லாம் நினைத்தபடி வந்து கொண்டிருக்கும் நசீருக்கு திடீரென வெறியுடன் கோஷமிட்டபடி சந்தில் நுழையும் வெறிகொண்ட இளைஞர் கூட்டத்தால் என்ன நடந்தது, என்னதான் ஆகியிருக்கும் என அக்காட்சி முடிந்து திரை அமைதியாகும் வரையிலும் மனம் பதைபதைத்துகொண்டே இருந்தது.
அந்தச் சாலையில் மெல்லிய வெளிச்சத்தில் கிடப்பது நசீராக இருக்கக்கூடாது என்று பதட்டத்துடனேயே பார்த்துக்கொண்டிருந்தேன் அது நசீர்தானென்று தெரிந்திருந்தும்.
நசீரைப்போலவே மதங்களின் வேறுபாடு குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் தான் பிறந்த மதத்தின் விதிகளை முழுமனதாக பின்பற்றிக்கொண்டு தனக்கேயான கடமைகளில் தவறாமல், தன் எல்லைக்குட்பட்ட மகிழ்வின் சாத்தியங்களை அனுபவித்துக்கொண்டு இருத்கும் பல்லாயிரக்கணக்கான சாமான்யர்களும் இப்படி சம்பந்தமே இல்லாமல் வெறியர்களால் தாக்கப்பட்டு மிச்சமின்றி அழிக்கபட்டிருக்கிறார்கள். கடைசிக் காட்சியின் பதட்டமும் யார் யாரை அடிக்கிறார்கள் என்னும் அச்சமும் நிச்சயம் படம் பார்த்த அனைவருக்கும் வந்திருக்கும்.
ஒரு சாமான்யனின் ஒரு நாளின் கதையைச்சொல்வதிலேயே வாழ்வின் அழகியலை அவலத்தை குரூரத்தை சொல்லமுடிவதென்னும் சவாலில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார் வெகு நிச்சயமாக.
பாய்ஸ் ஹாஸ்டல் கேட் வாட்ச்மேனும், நசீரும் பீடியை பகிர்ந்து கொள்ளும் காட்சியும் அழகு. எத்தனையோ அல்லல்கள் இருக்கின்றது நம் அனைவருக்கும் , எனினும் எளியவர்களுக்கு இப்படியான் ஒரு தோள் பகிரல், எடையை தற்காலிகமாக இறக்கிவைத்தல் என்பது எப்படியும் நடந்துவிடுகின்றது. பணத்தேவை, மனைவியின் தற்காலிய ’இன்மை’ இக்பால் அம்மிஜானின் உடல்நிலை, அலைச்சல் என்று கஷ்டங்கள் இருப்பினும் நசீரும் அவருமாக அந்த பீடியை பகிர்ந்துகொள்ளுதல் என்பது துயரையும் பகிர்ந்துகொள்வதுதான். கழுத்தை அழுத்தும் ஊழின் விரல்களை அகற்றி கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளும் தருணங்கள் அல்லவாஅவை? அக்காட்சி எனக்கு மிக நுண்மையானதாக பட்டது.
நசீரை நடக்கையில், ஸ்கூடர் ஓட்டுகையில், பல்தேய்க்கையில், குளிக்கையில் மனைவியை முத்தமிடுகையில், பணியில், புடவைகளை எடுத்துக்காட்டுகையில் என்று காமிரா தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வகையில் கதை சொல்லபட்டிருப்பதால், நாமும் அவரை நெருக்கமாக பின்தொடர்ந்து கொண்டே இருந்து ஒரு கட்டதில் நாமும் நசீராகிவிட்டிருக்கிறோம். அந்த கடைசிக்காட்சி அதனால்தான் மிகவும் அதிர்ச்சியாக அந்த வன்முறை நம்மீதே நடந்ததுபோன்ற உணர்வை தந்து, அந்த கொஞ்சமும் எதிர்பாராத சந்துக்காட்சிகள் நம்மையும் முற்றாக அழித்துவிட்டதுபோல செயலற்றுப்போய் பார்க்கவைத்து விடுகினறது.
அத்தனை நேரம் மிக மெல்ல ஓசைகள் அடக்கிவைக்கப்ட்ட காட்சிகளில் மூழ்கி இருக்கும் நமக்கு அந்த கூச்சலும் ஆரவாரமும் வெறியும் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் அதிர்ச்சியுமே படத்தின் வெற்றி
ஊருக்கு போயிருக்கும் மனைவி கருப்பைப் புற்றுநோயாளியான அம்மீஜான், மூளை வளர்ச்சியற்ற இக்பால் இவர்களில் யாருக்கு முதலில் தகவல் போய்ச்சேரும் என்று பார்வையாளர்களை கவலைப்பட வைத்து விட்டிருக்கும் படம் இது. கோவையின் மிகப் பரிச்சயமான தெருக்களில் காட்சிகள் இருப்பதால் திரைக்கதையுடன் இன்னும் நான் அணுக்கமாகி விட்டிருந்தேன்
அலங்கோலமான அந்தச் சாலையில் யாருமற்று கிடக்கும் நசீரின் உடல், அன்று மதியம் நசீர் சொல்லிகொண்டிருந்த வாழ்வென்பதே தனிமைதான் என்னும் கவிதை வரிகளை நினைவுப்படுத்தியது.
மனைவிக்கான மானசீக கடிதமொன்றை முடிக்குமுன்பே முடிந்துவிடுகின்றது நசீரின் துயர்களும் கனவுகளும் கடமைகளும் எல்லாமும்.”Shame on us” என்று வெட்கித் தலைகுனிய வைக்கும் வெகுசில படங்களில் நசீரும் ஒன்று.
இப்படி 24 மணி நேரம் மட்டுமே காணக்கிடைக்கும் என்னும் அழுத்தமும் நல்லதே. பிறகு பார்த்துக்கொள்லலாம் என்று ஒத்திப்போடாமல் தரமான படைப்புக்களை அப்போதே பார்க்க ஒரு நல்வாய்ப்பல்லவா இந்த கட்டாயம்.
இயக்குநர் அருண் மற்றும் எழுத்தாளர் திலீப் குமார் இருவருக்கும் படப்பிடிப்புக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாரட்டுக்களும். இவர்கள் எட்டப்போகும் உயரங்களை இப்போதே யூகிக்க முடிகின்றது.
நீங்கள் சொல்லியிருக்கா விட்டால் நான் இதை நிச்சயம் தவற விட்டிருப்பேன்.
நன்றி தம்பி!