இந்த வாரம் முழுவதும் தொழுநோய் சிகிச்சைக்குச் சருமத்தில் தடவப்பட்டுச் சிகிச்சையளிக்கப் பயன்பட்ட, ஒரு விதை எண்ணெயிலிருந்து, ஊசிமருந்தை முதன் முதலாகத்தயாரித்து, அந்த ஆராய்ச்சிக்கட்டுரை வெளியாகும் முன்பே 78 நோயாளிகளைக் குணப்படுத்திய, ஹவாய் பல்கலைக்கழகத்தின் முதல் அறிவியல் முதுகலைப்பட்டதாரியான, ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண் ஆலிஸ் பால் குறித்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

கிளை கிளையாகப்பிரிந்த வாசிப்பில் ஹவாயிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 8000 தொழுநோயாளிகள் வசித்த ஒரு தீவையும், அவர்களுக்குச் சவப்பெட்டி செய்வதிலிருந்து அடக்கக்குழிதோண்டுவது, வீடு கட்டிக்கொடுப்பது, வீட்டுக்கு வர்ணமடிப்பது, அவர்களுடனேயே தங்கி சமைத்து உண்பது என்று சேவை செய்த ஒரு பாதிரியைக்குறித்தும் அறிந்துகொண்டேன். 3000 அடி உயர செங்குத்துப்பாறைகளால் புற உலகிலிருந்து விலகி இருந்த அந்தத்தீவில் இறையியலை போதித்து தானும் தொழுநோயாளியாகி அங்கேயே இறந்தும் போன அவரைக்குறித்து பெருமதிப்பு உண்டாகி இருக்கிறது.

அவரைக்குறித்தும் 24 வயதில், தன் கண்டுபிடிப்பை வெளியிடாமலேயே ஆய்வகத்தின் குளோரின் நஞ்சினால் உயிரிழந்த ஆலிஸைக் குறித்தும் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அந்தப்பாதிரி தொழுநோயாளிகளுடன் இணைந்து உண்ட பாலினேசியாவின் பிரதான உணவான சேம்பின் கிழங்கிலிருந்து உண்டாக்காப்படும் போய் (Poi) குறித்து வாசிக்கையில் தான் உலெகெங்கிலும் இருக்கும் இப்படியான, அதிகம் பேர் அறிந்திருக்காத தாவர உணவுகளைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் வந்தது.

போய், வஸாபி, ஃபலாஃபல்,புரிட்டோஸ், ராசவள்ளிக்கிழங்கு, நோச்சி, குயினா, சில அரிய மதுவகைகள், இந்த உணவுகள் தயாரிக்கப்படும் முறை, அந்தத்தாவரத்தின் இயல்புகள் என்று விரிவாகச் சுமார் 25 கட்டுரைகள் எழுதவிருக்கிறேன்.

இன்று போய் எழுதிமுடித்து, தொடர்ந்து நாலைந்து கட்டுரைகள் எழுதியபின்னர் அவற்றைத் தொடர்ந்து வெளியிட உத்தேசித்திருக்கிறேன். இந்தத் தொகுப்பை நூலாக வெளியிடுகையில் வைக்க ஒரு நல்ல தலைப்பையும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். பஞ்ச கால உணவுகள் குறித்தும் சட்டரீதியான அல்லது மதம், கலாச்சாரம் சார்ந்த தடைசெய்யபட்ட உணவுகள் மற்றும் பானங்கள் (Taboo food and drink) குறித்தும் தொடர்கள் எழுதவெண்டும்.