லோகமாதேவியின் பதிவுகள்

Author: அதழ் (Page 1 of 28)

தருண் 24

இன்று தருணுக்குப் பிறந்த நாள் 24 வருடங்களாகிவிட்டதா? நம்பத்தான் முடியவில்லை. புட்டுத் தருணாக இருந்து எந்நேரமும் “தூக்கி தூக்கி” என அடம்பண்ணி இடுப்பிலேயே உட்கார்ந்துகொள்ளும் தருண் இப்போது பல பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் இளைஞனாகிவிட்டிருக்கிறான். 

அவனது முதல் பிறந்தநாள் முடிந்து 2003 ஆகஸ்ட் 28ம் தேதி அவனைத் தோளில் போட்டுக்கொண்டு, சரணைக் கையில் பிடித்துக்கொண்டு இந்தியா திரும்பியது கனவு போலிருக்கிறது. ஒரே சமயத்தில் பெரும் நம்பிக்கையாகவும் பெரும் பொறுப்பாகவும் இருந்தார்கள் அவர்கள் அப்போது; ஆனால் என் ஒரே பற்று இப்போது இருவரும் தான்.

தருணுக்கு ஸ்நேகிதிகள் எண்ணிக்கை கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும், யாரிடமும் இதுவரை கூடுதல் பிரியமோ அடுத்த கட்டநகர்வுக்கான விழைவோ வந்ததில்லை (என்று சொல்கிறான், நானும் நம்புகிறேன்).

சரணை பிரீ கே.ஜி வகுப்புக்கு கொண்டு விடுகையில் தருணும் என் கையைப் பிடித்துக்கொண்டு உடன் வருவான், காலை மாலை இருவேளையும். 

வழியில் ஒரு வீட்டில் பொமெரேனியன் ஒன்று சாலையை கடப்பவர்களைப் பார்த்து, அதன் சைஸுக்கு பொருத்தமில்லாமல் பயங்கரமாக குலைக்கும். தருண் அந்த வீட்டு கேட்டைப் பிடித்துக்கொண்டு அதைப் பார்த்து பதிலுக்கு விடாமல் குரைத்து, அந்த நாய் அமைதியாகும் வரை அதை ஒரு வழி பண்ணுவான். சமாதானம் பண்ணி இழுத்துக்கொண்டு போவேன். 

சரண் பள்ளியில் மைதானத்தில் விளையாடுவதை கேட்டின் கீழிருக்கும் இடைவெளி வழியே குனிந்து பார்த்து, அண்ணன் தெரிந்தால் மகிழ்ந்து என்னிடம் சொல்லுவான். அந்தப் பள்ளி ஆசிரியைகளுக்கெல்லாம் அவன் அங்கே சேரும் முன்னரே செல்லமான செல்லம் பாலாமணி என்று ஒரு டீச்சர். அவனை எப்போதும் இடுப்பிலேயே வைத்துக்கொண்டிருப்பாள். இதோ இப்போது அந்த தருண் காட்டியல் முடித்து, எம்பிஏவும் முடித்து வேலையிலும் சேர்ந்துவிட்டான், 

யானை டாக்டரின் தாக்கம் இன்னும் இம்மியும் குறையவில்லை. எப்போதும் காட்டில்தான் இருக்கிறான். பாம்புகளைப் பாதுகாப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறான். தருமனும் அர்ஜுனனும் பீமனும் கலந்த கலவை இவன்.

உடலெங்கும் அட்டை கடித்த வீரத்தழும்புகள் நிறைந்திருக்கிறது.”எப்போ பார்த்தாலும் வீட்டுத் தோட்டத்தை கூட்டிப் பெருக்கி சுத்தமாவே வச்சிருந்தா, எப்படி இங்கே பாம்பு வரும்? எங்கே தங்கும்” என்று அம்மாவிடம் கோபித்துக்கொண்டு இலைதழையை கூட்டிக் குவித்து, அதன் மீது ரெண்டு காலிப் பூந்தொட்டிகளை சற்று இடைவெளி இருக்கும்படி கவிழ்த்துவைக்கும் இளைஞனை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறானே தருண்.

பிரமாதமான சமையல் நிபுணன். எனக்குத் தெரிந்து தோழிகளுக்கு வீட்டில் பிரியமாக சமைத்துப் போடும் நண்பன் இவன்தான். அண்ணன் மீது மாறாத அன்பும் அபிமானமும் கொண்டிருப்பதில் லக்ஷ்மணனுக்குப் பிறகு தருணைத்தான் சொல்லவேண்டும். 

எங்கும் தேங்கி நிற்காமல் காற்றில் பட்டுத் துணி போல் நழுவி நழுவி சென்று கொண்டே இருப்பான்; யாரையும் காயப்படுத்துவதில்லை, அதில் கவனமாக இருக்கிறான்.  என் வஞ்சங்கள் அவனை தொட்டுவிடாத தூரத்தில்தான் இருக்கிறான். சரணுக்கு எல்லாமே கருப்பும் வெள்ளையும்தான், என்னைப்போலவே, இடையில் ஒரு சாம்பல் நிறமெல்லாம் இல்லை; ஆனால் தருண் அப்படியில்லை, மன்னிக்கிறான் எவராயினும் எப்பிழை செய்திருந்தாலும்!

குந்திக்கு அர்ஜுனன் போல் என் விழைவுகளே வடிவாக உருவானவன் தருண். மகன்களோடு சென்ற கார் பயணங்களைத்தான் நான் மின்மயானம் செல்லும் வழியில் நினைத்துக்கொள்வேனாயிருக்கும். சரண் கண்கள் ஒளிர தீவிரமாக பேசிக்கொண்டிருந்தவற்றை கேட்டுக்கொண்டிருந்ததையும் அப்போது நினைத்துக் கொள்வேன். 

 சமீபத்தில் ’’ஒடிஸி’ படம் பார்த்துவிட்டு பின் இரவு வீடு திரும்புகையில், அந்தப் படத்தின் நாயகனின் அகப்பயணம் பற்றி தருண் சொல்லிக்கொண்டேவந்த, அவ்வளவையும் திகைப்புடன் கவனித்துக்கொண்டிருந்தேன். சென்ற மாதம் குடும்பப் பிரச்சனையைப் பேச பொது நண்பர்கள் இருவர் வந்திருந்தபோது, அவனும் உடனிருந்து மிக முதிர்ச்சியாக பலவற்றை பேசிக்கொண்டிருந்ததையுமே திகைப்புடன் கவனித்தேன். சரணின் இடத்துக்கு தருண் வந்துவிட்டிருக்கிறான். இருவரும் எனக்களிக்கும் மாரல் சப்போர்ட்டைப்போல   இவ்வுலகில் வேறு யாருமே அளிக்கவில்லை; இனி அளிக்கவும் முடியாது. 

 நான் ஒருமுறை சென்னையிலிருந்து ரயிலில் பொள்ளாச்சி வந்தேன். அந்த குட்டி ஸ்டேஷனில் Dr Logamadevi என்று அட்டையில் எழுதி தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றான். மொத்த ஸ்டேஷனுமே வேடிக்கை பார்த்தது நான்  இறங்கி வந்ததை. இப்படி சரண், தருணைப் போன்ற இயல்பில் இருக்கும் ஒருவரை நான் எப்போதும் மனதில் எனக்கானவராக  கற்பனை செய்துவைத்திருந்தேன். புத்திசாலி, handsome, playful, nature loving  நகைச்சுவையுணர்வு கொண்டவன் என்று,அதில் கவிதை எழுதுவதும் இருந்தது எனினும் இரண்டு பேருமே அதில் இன்னும் இறங்கவில்லை, ஒருவேளை இனிமேல் எழுதக்கூடும்.

தருணைக் குறித்து பெருமையாய் எண்ணிக்கொள்ளும் நினைவுகளில் மிக முக்கியமானது: வீட்டுக்கருகே இருக்கும் ஒரு நீர்நிலையில் கிடந்த ஒரு மீன்பிடி வலையில் எப்போதோ நுழைந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டு, உடலின் காயமும் பசியும் தாகமும்  வலியும் தாங்காமல் உயிருக்குப் போராடிய ஒரு பாம்பை கண்டுபிடித்து, அவ்வழியில் சென்றவர்களிடம் கெஞ்சிக்கேட்டு கத்தி வாங்கி வரச்சொல்லி நெடுநேரம் போராடி  வலையைஅறுத்து அதைக் காப்பாற்றியதுதான். 

அந்தப் பாம்பு அவன் அதை முழுவதும் காப்பாற்றும்வரை பயத்திலும் பசியிலும் காப்பற்றப்பட்டு விடுவோம் என்னும் நம்பிக்கையிலும் அவன் விரலைத் தன் வாலால் இறுக்க, ஒரு சின்னக் குழந்தையைப் போல் சுற்றிப் பிடித்திருந்தது. அவனால் நீருக்குள்  விடப்பட்டதும் அந்தப்பாம்பு மறுபிறவி எடுத்தது போல வழுக்கிக்கொண்டு  இறங்கிச் சென்றதை கண்ணீருடன்தான்  வீடியோவில் பார்த்தேன். நானும் அந்த பாம்புதான்  மகன்களால் காப்பாற்றப்பட்டு மகிழ்ந்திருப்பவள்.மகன்களை பிடித்துக்கொண்டே இருப்பவள்.

எத்தனையோ சிக்கல்களில் இருந்து என்னை இருவரும் உயிருடன் விடுவித்திருக்கிறார்கள்

 தருணே!

உனக்கென காடு எப்போதும் திறந்திருக்கட்டும், உன் கனவுகள்  என்றென்றும் கலையாதிருக்கட்டும், அன்பும் ஆசிகளும்.

 கடவுளே காத்துக்கொள்க.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் தாவரங்கள்

சமீப காலமாகவே எனக்குக் கிறித்தவ இலக்கியங்களில் கொஞ்சம் ஆர்வம் உண்டாயிருக்கிறது. இதற்கு என் நண்பர் பனை காட்சனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு அவரும் நானும் பேசிக் கொண்டிருக்கையில், விவிலியத்தில் இடம்பெற்றிருக்கும் தாவரங்களைப் பட்டியலிட்டு ஒரு கட்டுரை எழுதலாம் என்ற யோசனை வந்தது. ஆனால், அது யோசனை என்ற அளவிலேயே நின்றுவிட்டது.

இந்த வருடத் தொடக்கத்தில் மும்பை மெதடிஸ்ட் தேவாலயத்தில் உரையாற்றும்படி காட்சனிடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஏற்றுக்கொண்டேன். காட்சன் எங்களது கல்லூரிக்கு வந்தபோது, அந்த நிகழ்வைக் குறித்து நான் தயங்கித் தயங்கி ஜெ விற்கு எழுதிய கடிதம் தான் அவரது தளத்தில் வெளியான எனது முதல் கடிதம். அதன் பிறகுதான் இத்தனை எழுதுகிறேன். எனவே, காட்சன் அழைத்தால் தட்டவே முடியாது. மேலும், சரண் அந்த வாரம்தான் மும்பையில் பணியில் இணைந்திருந்தான். அவனுடைய வீட்டிற்கும் போய்விட்டு அப்படியே இந்த நிகழ்வையும் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

விவிலியத்தில் இருக்கும் தாவரங்கள், மெதடிஸ்ட் கிறித்தவப் பிரிவை உருவாக்கிய ஜான் வெஸ்லே எழுதிய மூலிகைத் தாவர நூலிரண்டு, தேவாலயங்களில் அளிக்கப்படும் திராட்சரசத்தின் பொருட்டுத் திராட்சைக் கொடிகள் கிறித்தவ போதகர்களால் உலகெங்கும் பரவியது ஆகிய செய்திகளை மையமாகக் கொண்டு அந்த உரையை அமைத்திருந்தேன். எனது மிக நல்ல உரைகளில் மும்பை உரையும் ஒன்று.

“Consider the lilies” என்று கிறிஸ்து ஏன் சொன்னார்? எந்த லில்லிகளைச் சொன்னார்? விவிலியத்தில் தேன் என்று சொல்லப்படுவது தேனீக்களிடமிருந்து பெறப்பட்டதா அல்லது கனிந்த பேரீச்சைகளின் சாறா? ‘ஆமென்’ என்பதன் பொருள் என்ன? ஏன் தேவன் நானே உண்மையான திராட்சைக்கொடி நீங்கள் அதன் கிளைகள் என்றார்?போன்றவற்றைக்கொண்டு அந்த உரையை அமைத்திருந்தேன். அந்த உரை எனக்கும் மிக நிறைவளித்தது.

லக்கி குளோவர்’ குறித்தும், அதற்கும் கிறிஸ்தவத்திற்குமான தொடர்பை மையமாகக் கொண்டும் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டேன். தற்போது ‘மிஷன் கிரேப்ஸ்’ குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன், .

இப்போது சொல்வனத்தில் வந்து கொண்டிருக்கும்கொலம்பஸ் தொடரிலும், அவரது முதல் கப்பற்பயணத்தின் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே அன்றாடம் காலையும் மாலையும் மூன்று கப்பல்களிலும் கீழ்வரும் கிறித்தவப் பிரார்த்தனைப் பாடல்களும் கீர்த்தனைகளும் பாடப்பட்டதை எழுதியிருந்தேன்.

  • சால்வே ரெஜினா (Salve Regina – வாழ்க அரசியே): கொலம்பஸின் கப்பல்களில் பாடப்பட்ட மிக முக்கியமான பாடல்.
  • தே தேவும் (Te Deum): கடவுளுக்கு நன்றி செலுத்தும் திருப்பாடல்.
  • பேட்டர் நோஸ்டர் (Pater Noster): எங்கள் பரமபிதாவே.
  • ஆவே மரியா (Ave Maria): அருள்நிறை மரியே.
  • க்ரேதோ (Credo): விசுவாச அறிக்கை.

அந்தக் காலத்துக் கத்தோலிக்கப் பாரம்பரியத்தின்படி, இந்தப் பாடல்கள் அனைத்தும் லத்தீன் மொழியிலேயே பாடப்பட்டன. இந்தக் கீர்த்தனைப் பாடல்கள் தன்னை அந்த அபாய காலங்களில் மிகவும் அமைதிப்படுத்தியதாகக் கொலம்பஸ் தனது நாட்குறிப்பிலும் எழுதியிருக்கிறார்.

எனவே, கிறித்தவ இலக்கியங்கள் மற்றும் கீர்த்தனைகளில் எனக்கும் கொஞ்சமே கொஞ்சம் பரிச்சயம் உண்டாயிருக்கிறது.

இந்த வருடம் பெரியசாமி தூரன் விருது தமிழ் கிறித்தவ இலக்கிய ஆய்வாளர் திரு. ஞான சந்திர ஜான்சனுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே, கிடைத்தவரை அவரது ஆய்வுகளையும் நூல் விமர்சனங்களையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

‘குருகு’ இதழின் ஞான சந்திர ஜான்சன் சிறப்பிதழும் இன்று வெளியானது; அதிலும் அவரது கிறித்தவத் தமிழ் இலக்கியங்கள் குறித்த பலரின் கட்டுரைகளை வாசித்தேன். பலகோணங்களில் ஜான்சன் ஆய்வுகள் செய்திருக்கிறார். எனினும், அந்த இலக்கியங்களில் இருக்கும் தாவரங்களைப் பற்றி அவர் ஆவணப்படுத்தியிருக்கிறாரா அல்லது குறிப்பாவாவது எழுதியிருக்கிறாரா என்று தேடினேன்; ஆனால் இல்லை.

இன்று திரு. ஞான சந்திர ஜான்சன் அவர்களின் பிறந்தநாள் எனவே அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லிவிட்டு இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டேன். அவர் யோசித்துவிட்டு, “இல்லை, தாவரங்களை நான் எங்குமே கவனித்துக் குறிப்பிடவில்லை” என்றார்.

“ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து இறக்காவிட்டால் அது தனியாகவே இருக்கும்; இறந்தால் மிகுந்த கனியைத் தரும்” என்ற இயேசுவின் உருவகம், யோவான் நற்செய்தியில் வரும் மிக அழகான தாவர உருவகங்களில் ஒன்று. இங்கு ஒரு விதையின் இயற்கையான வாழ்க்கைச் சுழற்சி,மண்ணில் விழுதல், மறைதல், முளைத்தல், வளர்தல், கனியளித்தல் என்பது ஒரு மனிதனின் ஆன்மிக வாழ்க்கையையும், இறுதியில் இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விளக்கும் மொழியாகிறது.

தமிழில் கிறித்தவ இலக்கியம் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. காப்பிய அமைப்பு, சமயக் கருத்து, இறையியல், மொழிநடை, இலக்கிய உத்திகள், வரலாற்றுப் பின்னணி, கவிஞர்களின் வாழ்க்கை, விவிலியத் தாக்கம் போன்றவை ஆராயப்பட்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளுக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்களில் யோ. ஞான சந்திர ஜான்சன் குறிப்பிடத்தக்கவர். கிறித்தவத் தமிழ் இலக்கியம், கிறித்தவக் கீர்த்தனைகள், கிறித்தவக் காப்பியங்கள், கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் எனப் பரந்த பரப்பில் அவர் தொடர்ந்து ஆய்வு செய்து வந்துள்ளார். குறிப்பாக ‘கிறித்தவக் காப்பியங்கள்’ என்ற அவரது ஆய்வு, கிறித்தவக் காப்பிய உலகை ஒருங்கிணைத்துப் பார்க்கும் முக்கியமான முயற்சியாகும்.

ஆனால் சமய இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகளில் பொதுவாக ஒரு சிறிய இடைவெளி இருக்கிறது. அந்தப் படைப்புகளுக்குள் வாழும் தாவரங்கள் பெரும்பாலும் தனியாகக் கவனிக்கப்படுவதில்லை. ஒரு மலர் வந்தால் அது அழகுக்கான உவமை என்று பதிவு செய்யப்படுகிறது; ஒரு மரம் வந்தால் அது ஒரு காட்சியின் பகுதியாகக் கடந்து செல்கிறது; ஒரு கனி வந்தாலும் அப்படித்தான். ஆனால் அந்த மலர் எந்தத் தாவரம்? அந்த மரம் தமிழ்ச் சூழலின் எந்த மரபைச் சேர்ந்தது? கனி உருவாகும் தாவரவியல் நிகழ்வு என்ன? விதை ஏன் ஒரு புதிய வாழ்க்கையின் உருவகமாகிறது? மலர்–வண்டு உறவு ஏன் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வருகிறது? போன்ற கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை.

தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்பது வெறும் காட்சிப் பின்னணி அல்ல; அது மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் உதவும் ஒரு இயற்கை மொழியாகவும் இருக்கிறது. காடு, மரம், செடி, கொடி, மலர், கனி, விதை, மண், மழை, வயல், சோலை, தோட்டம் போன்ற இயற்கைக் கூறுகள் மனித உணர்வுகள், அறம், ஆன்மிகம், இறைநம்பிக்கை, பிறப்பு, வளர்ச்சி, அழிவு, மீட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் கிறித்தவ இறையியலில், மீட்பின் வரலாறு ஏதேன் தோட்டத்தில்தானே முளைவிட்டது? எனவே, திரு. யோ. ஞான சந்திர ஜான்சன் அவர்கள் ஆய்வு செய்த கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களிலும் பிற இலக்கியங்களிலுமாக என் தேடலைத் தொடர்ந்தேன்.

சமீபத்தில் கோவை புத்தகத் திருவிழாவில் “புறத்திணையில் மலர்கள்” எனும் உரையாற்றினேன். ஒரு கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வு மாணவிகளும் சிறு தயாரிப்போடு வந்திருந்தார்கள். ஆனால், என்னென்ன மலர்கள் இருக்கின்றன என்று மட்டுமே சொன்னார்களே தவிர, ஏன் வெட்சி, ஆநிரை கவர்தலுக்கு ஏன் வாகையை வெற்றிக்காகச் சூடினார்கள் என்பதை ஒருவர் கூட விளக்கவில்லை; அவர்களுக்குத் தெரியவும் இல்லை. நான் ஒவ்வொரு மலரையும் விளக்கி, ஏன் அது அந்த குறிப்பிட்ட பொருளில் அங்கு வருகிறது என்று கூறினேன். சொல்லப்போனால், ஒரு வாரமாக அதைக் குறித்துத் தீவிரமாகப் படித்தறிந்த பிறகே உரையாற்றச் சென்றேன்.

தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் மனிதனுக்கும் தாவரங்களுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. சங்க இலக்கியத்தின் திணைக் கோட்பாட்டிலிருந்து பக்தி இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் வரை தாவரங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

திருவாசக வாசிப்பின் போது:

“புற்றேர் அரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்

கற்றேர் குழவியின் தீம்பால் உற்றே அமிழ்தெனினும்

நற்றேர் நச்சுற்ற மாம்பழம் போன்மிளிரும் உலகை

அற்றேனென்று அஞ்சாமை கண்டு அஞ்சினேனே.”

இப்பாடலில் வரும் “நச்சு மாம்பழம்” என்னவென்று ஆராய்ந்தேன். அது ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் கடற்கரை மரமான செரிபரா மாங்காஸ் (Cerbera manghas, commonly known as the sea mango) என்னும் மரமாகத்தான் இருக்க வேண்டும். வேறு நச்சு மாம்பழங்கள் ஏதும் எனக்குத் தெரிந்தவரை இல்லை. இப்படி ஆய்வு செய்யத் தொடங்கினால் மிக நல்ல புதிய விஷயங்கள் தெரியவருகின்றன.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் இந்தத் தாவர உலகம் இன்னொரு பரிமாணத்தைப் பெறுகிறது. இங்கு தாவரங்கள் தமிழ் இயற்கை மரபுடனும் விவிலியச் சிந்தனையுடனும் சந்திக்கின்றன.

முனைவர் யோ. ஞான சந்திர ஜான்சன் அவர்களின் ‘கிறித்தவக் காப்பியங்கள்’ நூல், முப்பது கிறித்தவக் காப்பியங்களை விரிவாக அறிமுகப்படுத்தி ஆய்வு செய்கிறது. அவை திருமறை வரலாற்றுக் காப்பியங்கள், கிறிஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள், திருமறை மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள், திருமறை சாரா மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள் என உள்ளடக்க அடிப்படையிலும்; தழுவல் மற்றும் மொழிபெயர்ப்புக் காப்பியங்கள் எனப் படைப்புத் தன்மை அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றுள் முழுத் தாவரங்களாக மரம், செடி, கொடி, புல், பயிர் போன்றவைகளும்; அவை வளரும் சூழல்களான சோலை, தோட்டம், நந்தவனம், வயல், காடு, புல்வெளி ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும் வேர், தண்டு, கிளை, இலை, தளிர், அரும்பு, மலர், கனி, விதை போன்ற தாவர உறுப்புகளும்; விதைத்தல், முளைத்தல், வளர்தல், மலர்தல், கனிதல், வாடுதல், உதிர்தல், அறுவடை போன்ற தாவரம் சார்ந்த செயல்பாடுகளும் உள்ளன. இவை நேரடி இயற்கை வருணனையாக, உவமையாக, உருவகமாக, குறியீடாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் மலர் பல இடங்களில் குறியீடாக அமைகிறது. குறிப்பாகத் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு காவியம், திருத்தொண்டர் காப்பியம் போன்ற காப்பியங்களில் தாவரங்கள் இயற்கைக் காட்சிகளாக மட்டுமல்லாமல் அழகு, தூய்மை, நம்பிக்கை, ஆன்மிக வளர்ச்சி, நற்செயல், பயன், நிலையாமை, மீட்பு ஆகிய கருத்துகளின் உருவகங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

மலர்மாலை, மலர்க்காணிக்கை, மலரால் அலங்கரித்தல் போன்ற செயல்களும் தாவரத்தைச் கிறிஸ்துவச் சமய அனுபவத்துடன் இணைக்கின்றன.

வீரமாமுனிவரின் தேம்பாவணி, கிறித்தவத் தமிழ்க் காப்பிய மரபின் மிக முக்கியமான படைப்பு. இது மூன்று காண்டங்களையும் 36 படலங்களையும் 3,615 பாடல்களையும் கொண்ட பெருங்காப்பியம்.

காட்சிப்படலத்தில், “கொழுந்து உறும்கு ளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும்…” என்று முல்லை குறிப்பிடப்படுகிறது. இங்கு “முல்லை” என்பது வெறும் மலர் அல்ல. அது முல்லை நிலம், இடையர், கால்நடை, இயற்கை, குழந்தை இயேசுவைச் சந்தித்தல் ஆகியவற்றை இணைக்கும் பண்பாட்டு அடையாளமாகிறது. இப்படி இந்தக் கிறிஸ்தவக் கதை தமிழின் நிலவியல் மொழிக்குள் மாற்றப்படுகிறது.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் இந்த மரபு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. மேற்கத்திய விவிலிய உலகில் காணப்படும் விதை, திராட்சைக் கொடி, அத்திமரம், ஆலிவ் மரம், அத்திப்பழம், தோட்டம் போன்ற உருவகங்கள் தமிழ்க் காப்பியப் புலவர்களின் கைகளில் தமிழின் இயற்கை மொழியுடன் கலக்கின்றன. அதே நேரத்தில், தமிழ் இலக்கிய வாசகர்களுக்குப் பரிச்சயமான முல்லை, வேங்கை, தாமரை, சோலை, வயல், நந்தவனம் போன்ற இயற்கைக் கூறுகளும் கிறித்தவக் கதையுலகிற்குள் நுழைகின்றன.

அதே காட்சிப்படலத்தில், “மாலை மேவு வேங்கை பற்றி வண்டு…” என்று வேங்கை மலரும் வண்டும் குறிப்பிடப்படுகின்றன.

தேம்பாவணியில் தாமரை உருவகம் கண்களின் அழகைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. காட்சிப்படலத்தில் குழந்தையின் பார்வை தாமரை மலருடன் ஒப்பிடப்படுகிறது:

“விண்மீன் ஒக்கும் விழிவிளங்கும்; வேதம் நாறக்

கண்மீன் உற்ற தாமரைபோல் கமழும் வாயான்;

தண்மீன் தேன்சொல் சுவைஒழிக்கும்; தையல் காட்டும்

வான்மீன் பூத்த முகம்ஒக்கும் வடிவின் மேலோன்.”

எச். ஏ. கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் தாவர உருவகங்களை ஏராளமாகக் குறிப்பிடுகிறது. மலர், மலர்முகை, தேன், வனம், கற்பகமரம், புல், தரு/மரம், கனி, விதை, தளிர், கிளை, சோலை, நந்தவனம், கொடி, மரக்கிளை, வயல்/பயிர் எனப் பல தாவரச் சொற்கள் தொடர்ச்சியாக வருகின்றன.

“வண்டு இனம் பயிலச் செய்ய மலர் முகை அவிழ்ந்து செந்தேன்…” என்று வரும் காட்சி குறிப்பிடத்தக்கது. இரட்சணிய யாத்திரிக உரைப்பகுதியில் “புனித ஜீவ கற்பக மலர்”, “கற்பகப் பொதும்பர்” போன்ற சொற்கள் வருகின்றன. இங்கு ‘கற்பகம்’ என்பதை ஒரு குறிப்பிட்ட தாவரமல்ல. அது ஒரு புராணக் கற்பனை மரம். கிறித்தவக் காப்பியத்தில் அது இறை அருளின் வளம் என்ற புதிய பொருளைப் பெறுகிறது.

மேலும் இரட்சணிய யாத்திரிக உரையில் “விதி”, “விதை”, “முளைத்த” போன்ற சொற்கள் தாவர உருவகத்துடன் தொடர்புடைய பகுதிகளில் வருகின்றன. குறிப்பாக “முளைத்த இச் சீவ கங்கை” போன்ற தொடர்களைச் சொல்லலாம்

கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ 1982-இல் வெளியானது. இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பாடல் வடிவில் எடுத்துரைக்கும் காப்பியமாகும். தாவர உருவகங்களைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது.

இதில் “கனி கொடு, இல்லையேல் வரும் கேடு” என்ற தலைப்பின் கீழ் அத்திமர உருவகம் வருகிறது. மரம் வேர்விட்டும் கிளைவிட்டும் வளர்கிறது; ஆனால் கனி தர மறுக்கிறது. ஒரு மரம் உயரமாக வளரலாம், கிளைகள் பரவலாம், வேர் வலிமையாக இருக்கலாம்; ஆனால் கனி தராவிட்டால் அதன் வளர்ச்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. “வாழ்வது மட்டும் போதாது; வாழ்க்கை பிறருக்குப் பயனளிக்க வேண்டும்” என்ற அறக்கருத்தாக இது மாறுகிறது. கிறித்தவ விவிலிய மரபில் அத்திமரம் முக்கியமான குறியீட்டு மரமாகும்.

இதே அத்திமர உருவகம் இரட்சணிய யாத்திரிகத்திலும் மிகத் தெளிவாக வருகிறது. ஒரு மரம் பெரிதாக வளர்ந்திருந்தும் கனி தராத நிலை குறித்து, “பெரு மரம் ஆன போதும் கனி கொடாப் பெற்றி…” என்று குறிப்பிடுகிறது. தொடர்ந்து அந்த மரத்திற்கு இன்னும் ஒரு கால அவகாசம் வழங்கி, உரமிட்டு, பராமரித்து, கனி தருகிறதா என்று பார்க்கும் காட்சியும் வருகிறது.

இது தாவரவியல் ரீதியாகவும் சுவாரஸ்யமான உருவகம். மரம் கனி தராததற்கு வயது, ஊட்டச்சத்து குறைபாடு, நீர் பற்றாக்குறை, ஒளி, மலர்ச்சி இல்லாமை, மகரந்தச் சேர்க்கை, நோய், சூழல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் காப்பியம் இதனை மனித ஆன்மிக வாழ்க்கையின் மொழியாக மாற்றுகிறது: வாய்ப்பு → திருத்தம் → கனியளித்தல்’ என்ற கருத்து உருவாகிறது.

இரட்சணிய யாத்திரிக உரையில், “மன்னு நந்தனவனத்து எழில் மரக்கிளை பின்னியும் வல்லிகள் பிணைத்தும்…” என்று வரும் பகுதி தாவரக் காட்சியின் சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு மரக்கிளை, வல்லி, தழைக்கொடி, மணம், தோட்டம் எனப் பல விஷயங்கள் ஒன்றாக வருகின்றன. ஒரு தோட்டச் சூழல் இங்கு வர்ணிக்கப்படுகிறது.

சூ. இன்னாசியின் ‘திருத்தொண்டர் காப்பியம்’ 4,135 பாடல்களைக் கொண்டது; நாற்பது படலங்களாக நான்கு காண்டங்களில் அமைந்துள்ளது. இதில் நாட்டுப்படலம், பொழிலுறு படலம், இயற்கை வருணனைகள், உவமைகள் போன்றவை இடம்பெறுகின்றன.

இந்தக் காப்பியத்தில் தேவசகாயம் பிள்ளையின் ஞானஸ்நான மாற்றத்தை விளக்கும்போது, “தருவழிந் ததன்விதை மறுதரு ஆம்போல் தாய்வழிப் பாவம் அழியும் புத்துயிர்…” என்றிருக்கிறது.

ஒரு மரம் பட்டுப்போய்/அழிந்து போனாலும், அதிலிருந்து விழும் விதையானது மீண்டும் முளைத்து ஒரு புதிய மரமாக (மறுதரு) உருவாகிறது. அதுபோலவே, மனிதன் பிறக்கும்போதே தாயின் வழியே (முன்னோர்கள் வழியே) தொடரும் ஜென்மப் பாவம் என்ற நிலை இருந்தாலும், இறைவனின் அருளாலும் திருமுழுக்கினாலும் அந்தப் பாவம் முற்றிலும் அழிந்து, மனிதன் ஆன்மீக ரீதியாக ஒரு “புதிய உயிராக” மாறுகிறான்.

மேலும் திருத்தொண்டர் காப்பியம் தேவசகாயம் பிள்ளை துன்புறுத்தப்பட்ட நிகழ்வை வருணிக்கும்போது, “நிலைகுலைய எருக்கலையால் நெடியமாலை சூடினார்கள்…” என்று கூறுகிறது. இங்கு எருக்கலையின் தாவரவியல் பண்பை விட, அவமானத்தின் அடையாளமாக இலைமாலை சூட்டுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு இலக்கியத்தை, காப்பியத்தைப் படிக்கும்போது நாம் பொதுவாகக் கதாநாயகனை அல்லது நாயகியை, அவர் எங்கு பிறந்தார், எங்கு சென்றார், யாரைச் சந்தித்தார், என்ன செய்தார் என்று பார்க்கிறோம். கவிஞன் கட்டியிருக்கும் உலகத்துக்குள் நுழைகிறோம்; ஆனால் அந்த உலகில் நம்மோடு கூடவே மரங்களையும் செடிகளையும் கவனிப்பதில்லை.

அந்தக் குழந்தையின் அருகில் எந்த மலர் மலர்கிறது? அந்தப் பாதையின் ஓரத்தில் என்ன மரம் நிற்கிறது? எந்தக் கனியைப் பற்றிக் கவிஞன் சொல்கிறான்? விதை ஏன் உருவகமாகிறது? ஒரு மரம் ஏன் கனி தர வேண்டும்? மலர் எப்போது அழகாக இருக்கிறது; எப்போது அவமானத்தின் அடையாளமாகிறது?

இந்தக் கேள்விகளோடு யோ. ஞான சந்திர ஜான்சன் ஆராய்ந்த கிறித்தவக் காப்பியங்களுக்குள் நுழைந்தால், நாம் எதிர்பார்த்ததை விடப் பெரிய ஒரு தாவர உலகம் திறக்கிறது. அது வெறும் மரங்களின் பட்டியல் அல்ல; விதையிலிருந்து கனி வரை மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு பசுமையான மொழி.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்கள் மேற்கத்திய மதக் கதைகளைத் தமிழில் சொல்லிய நூல்கள் மட்டுமல்ல. அவை தமிழ்மொழியின் கற்பனைக்குள் நுழைந்து தங்களுக்கான புதிய நிலப்பரப்பை உருவாக்கியவை. அதனால் விவிலிய உலகத்தின் தோட்டங்களும் மரங்களும் தமிழின் வயல்களோடும் பொழில்களோடும் சோலைகளோடும் கலக்கின்றன.

இதில் ஜான்சனின் ‘கிறித்தவக் காப்பியங்கள்’ முக்கியமான வழிகாட்டியாக இருக்கிறது. கிறித்தவக் காப்பியங்களைப் பற்றிய அவரது ஆய்வின் வழியாகச் சென்றால், காப்பியங்களின் கதை மட்டுமல்லாமல் அவற்றின் இயற்கைக் காட்சிகளும் நம் கவனத்திற்கு வருகின்றன.

மிக மேலோட்டமாகத்தான் பார்த்திருக்கிறேன். இனி விழா முடிந்து அவருடைய நூல்களை வாங்கி வந்து வாசித்து, மேலும் செறிவான கட்டுரை எழுதவேண்டும்.

சஹேலி!

 சிறுமியாக இருந்தபோதிலிருந்தே மருதாணி வைத்துக்கொள்வதில் பிரியமுண்டு.   வீட்டு முற்றத்தில் வளர்ந்த மருதாணிச் செடியிலிருந்து இளந்தளிர் இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, புளி, சர்க்கரை, கிராம்பு, எலுமிச்சைச் சாறு எல்லாம் சேர்த்து அரைத்து, இரவு முழுவதும் விரல்களில் தொப்பியும், உள்ளங்கையில் பெரிய வட்டமும் அதைச் சுற்றி சின்னச் சின்ன வட்டங்களுமாக  ’’இட்லி தோசை டிசைன்” என்று அழைக்கப்படும் அந்த எளிய வடிவம் மறுநாள் ரத்தசிவப்பில் கைகளை அழகாக்குவது ஒரு மாயம் போல் இருக்கும் எனக்கு. அம்மா சமயங்களில் உயிருடன் கட்டெறும்புகளையும் வைத்து அரைப்பதை கண்ணை பாதி மூடிக்கொண்டு பார்த்திருக்கிறேன்

 இப்போதும் மருதாணி வைத்துக்கொள்கிறேன் நிறம் மங்க மங்க தொடர்ந்து வைத்துக்கொள்வது வழக்கமாகி இருக்கிறது. மருதாணிச்சிவப்பு இல்லாத உள்ளங்கை எனக்கு வளையல் இல்லாத கை, கம்மல் இல்லாத காது போல ஒரு மூளியான உணர்வை கொடுக்கும்.

வீட்டுத்தோட்டத்தில்  மருதாணிச்செடி இருக்கிறது என்றாலும் பறித்து அரைக்க இப்போது நேரம் இருப்பதில்லை .  செயற்கை ஹென்னாக் குழம்புகளை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதனால்தான் ராஜஸ்தானிலிருந்து நேரடியாக வரவழைக்கும் சஹேலி (Saheli) இயற்கை மருதாணிப் பசையை இப்போது பயன்படுத்துகிறேன்.சஹேலி என்றால் தோழி என்று பொருள்  உருது மொழியில்.எத்தனை பொருத்தமான அழகுப்பெயர்.

சஹேலி மருதாணி தயாரிக்கப்படுவது ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சோஜத் (Sojat) பகுதியில் சோஜத் தான் உலகின் “மருதாணி நகரம்” என்றே அழைக்கப்படும் இடம். அங்குள்ள வறண்ட, வெப்பமான காலநிலையும் மணல் கலந்த களிமண்ணும் Lawsonia inermis தாவரத்தின் இலைகளில் லாசோன் (lawsone) என்ற இயற்கை நிறமியை அதிக அளவில் சேர்க்கின்றன. இதனால்தான் சோஜத் மருதாணி மற்ற பகுதிகளின் மருதாணியை விட அடர் நிறத்தையும் நீடித்த தன்மையையும் தருகிறது.  

ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய பாலைவனப் பகுதிகளில் மக்கள் கடும் வெப்பத்திற்கு நடைமுறை சிகிச்சையாக கை, கால்களில் மருதாணிக் குழம்பைப் பூசிக்கொண்டனர் — ஈரமான குழம்பு ஆவியாகும்போது ஏற்படும் குளிர்ச்சி, நவீன குளிரூட்டும் தொழில்நுட்பம் இல்லாத அக்காலத்தில் சிறிது நேர நிவாரணத்தை அளித்தது. காலப்போக்கில் இந்த நடைமுறைப் பயன்பாடு அலங்கார, சடங்கு, மங்கல அர்த்தங்களுடன் இணைந்தது, குறிப்பாக திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் . இப்பகுதியே  மருதாணித் தாவரத்தின் முதன்மையான வளரும் மண்டலமாக இருந்ததால், மருதாணி ஏராளமாகவும் மலிவாகவும் கிடைத்து, பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கலாம்.

ராஜஸ்தான் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக இருந்ததால், அதன் மருதாணியும் (கை, கால்களில் நுணுக்கமான வடிவங்களை வரையும் மெஹந்தி கலைப் பாரம்பரியமும்) வர்த்தக வழிகள் மற்றும் திருமண உறவுகள் வழியாக வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், பின்னர் இதே போன்ற காலநிலை மற்றும் பண்பாட்டு சூழல் கொண்ட மத்திய கிழக்கிற்கும் பரவியது.

பாலி மாவட்டத்தில் உள்ள சோஜத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இப்போதும் 2026 ரிலும் இந்தியாவின் மொத்த மருதாணி உற்பத்தியில் தோராயமாக 80% வழங்குகின்றன, ( இது 90%க்கும் மேல் கூட இருக்கலாம்). இந்தியா உலக மருதாணி விநியோகத்தில் சுமார் 80% வழங்குவதால், சோஜத் ஒன்றே உலக மருதாணி வர்த்தகத்தின் பெரும்பகுதியை நிர்ணயிக்கிறது என்று கூட ச்சொல்லலாம்.

இதற்குக் காரணம் தாவரவியல் ரீதியானது, வர்த்தக ரீதியானது மட்டுமல்ல காலநிலை சார்ந்ததும் கூட. சோஜத்தின் அரை-வறண்ட காலநிலை, மணல் கலந்த களிமண், கடுமையான வறண்ட வெப்பம் (கோடையில் வெப்பநிலை அடிக்கடி 45°C கடக்கும்) ஆகியவை Lawsonia inermis என்னும் மருதாணிச்செடியின் வளர்ச்சிக்கு சிறந்த சூழலை உருவாக்குகின்றன. இந்த வறட்சியில் வளரும் தாவரங்கள் குளிர்ந்த அல்லது ஈரப்பதமான பகுதிகளில் வளரும் மருதாணியை விட கணிசமாக அதிக lawsone செறிவை உருவாக்குகின்றன — இதுவே அடர்ந்த, நீடித்த சாயத்திற்கு நேரடியாக வழிவகுக்கிறது

இந்த ஊரின் மருதாணிப் பொருளாதாரம் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது — சோஜத் ஒரு முழுமையான மருதாணி பதப்படுத்தல் சுற்றுச்சூழல் அமைப்பையும் கட்டியெழுப்பியுள்ளது: சுத்தம் செய்யும் யூனிட்டுகள், அரைக்கும் ஆலைகள், ஈரப்பத கட்டுப்பாட்டு பேக்கேஜிங் வசதிகள், தர சோதனை ஆய்வகங்கள், தரகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் அடர்ந்த வலையமைப்பு ஆகியவை UAE, சவூதி அரேபியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளின் வாங்குபவர்களை நேரடியாக சோஜத்துடன் இணைக்கின்றன .

சோஜத்  60 ஆயிரம் மக்கள் தொகை கொண்டிருக்கும் ஒரு சிறிய நகரம்தான் .ஒப்பீட்டளவில் இந்தியாவின் பல மாவட்டத் தலைநகரங்களைக் காட்டிலும் மக்கள்தொகை குறைவு. ஆனால் இந்த ஒரு சிறு நகரமும் அதைச் சுற்றியுள்ள பாலி மாவட்டப் பகுதியும் இணைந்து இந்தியாவின் மொத்த மருதாணி உற்பத்தியில் 80%-90% வரை வழங்குகின்றன,  

சஹேலி பசையின் தன்மைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன . எந்த ரசாயனமும் சேர்க்கப்படாமல், காபிக்கொட்டைச்சாறு மட்டும் சேர்ககப்பட்டு மிக மென்மையாகக் குழைக்கப்பட்டு, தரமான பாக்கெட்டுகளில் கிடைக்கிறது; குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பல மாதங்கள் பயன்படுத்தலாம். ஒரு மணி நேரத்திலேயே கைகள் ரத்தச்சிவப்பு நிறத்தில் சிவந்துவிடும் என்பது, இதன் லாசோன் செறிவு உண்மையிலேயே அதிகம் என்பதற்குச் சான்று. காய்ந்த பிறகு அதைச் சுரண்டி எடுத்தவுடன் தண்ணீரில் கழுவாமல், நீலகிரி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவினால், நிறம் இன்னும் நீண்ட நாட்களுக்கு அடர்த்தியாக நிலைத்திருக்கும் என்பது என் அனுபவம்.

இந்த “லாசோன்” என்ற வேதிப் பெயரின் மருதாணிச்செடியின் பேரினப்பெயரின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் இன்று தாவரவியல் வகைப்பாட்டு முறையின் தந்தை என்று போற்றப்படும் கார்ல் லின்னேயஸ்   ஒரு ஏழைப் போதகரின் மகனாக ஸ்வீடனின் ஸ்மாலண்டு எனும் வறிய பிராந்தியத்தில் பிறந்தார். இளமையில் அவரிடம் பணமே இல்லை; பல்கலைக்கழகக் காலத்தில் ஆசிரியர்களின் நூலகங்களையும் தயாள மனப்பான்மையையும் நம்பியே கல்வி கற்றார். 1735-ல் ஹாலந்துக்குச் சென்று தன் புரட்சிகரமான Systema Naturae கையெழுத்துப் பிரதியை வெளியிட முயன்றபோதும், அவரிடம் அச்சிடச் செலவு செய்யப் பணம் இல்லை.

அப்போது அவருக்கு உதவிய இருவரில் ஒருவர் — ஐசாக் லாசன் (Isaac Lawson) என்ற ஸ்காட்லாந்து மருத்துவர். மரபுரிமையாகப் பெற்ற செல்வத்தைக் கொண்டிருந்த லாசன், தன் நண்பர் க்ரோனோவியஸுடன் இணைந்து, லின்னேயஸின் அந்த நூலின் அச்சிடல் செலவை ஏற்றுக்கொண்டார். அந்த ஒரு உதவியே, இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தாவர வகைப்பாட்டு முறையை சாத்தியமாக்கியது.

நன்றியுணர்வுடன், லின்னேயஸ் தன் நண்பரின் பெயரை என்றென்றைக்கும் நினைவுகூரும் வகையில், கிழக்கத்திய பாலைவனங்களில் காணப்பட்ட ஒரு தாவரத்திற்கு — நம் மருதாணிக்கு — Lawsonia என்று பெயரிட்டார். அந்தத் தாவரத்தில் காணப்படும் சிவப்பு-ஆரஞ்சு நிறமியும் அதே பெயரிலிருந்தே lawsone (லாசோன்) என்று அழைக்கப்பட்டது.

“Lawson” என்பது ஓர் ஆங்கில/ஸ்காட்டிஷ் தந்தைவழிப் பெயர் (patronymic surname) , இதை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

  • Law — “Lawrence” (Laurence) என்ற முதற்பெயரின் இடைக்கால சுருக்க வடிவம். “Lawrence” இலத்தீன் “Laurentius” என்பதிலிருந்து பிறந்தது — அதாவது “Laurus” (லாரல் மரம்/இலை) என்பதுடன் தொடர்புடையது; மூலப் பொருள் “லாரல் மரத்துடன் தொடர்புடையவர்” என்பதே.
  • -son — “மகன்” எனப் பொருள்படும்.

எனவே “Lawson” = “லா(ரன்ஸின்) மகன்”, அதாவது “லாரல் மரத்துடன் தொடர்புடையவனின் மகன்” எனும் நீண்ட வழிமுறையில் ஒரு மரத்தின் பெயரிலிருந்தே இப்பெயர் தோன்றியுள்ளது — Johnson (John-ன் மகன்), Robertson (Robert-ன் மகன்) போன்ற அதே அமைப்பு முறையில் உருவான ஒரு பொதுவான ஸ்காட்டிஷ் குடும்பப்பெயர்தான் இது.

 ஒரு மரத்தின் (லாரல்) பெயரிலிருந்து தொடங்கிய குடும்பப்பெயர், தலைமுறை தலைமுறையாகக் கடந்து, ஐசாக் லாசன் என்ற மனிதர் வழியாக, இறுதியில் இன்னொரு தாவரத்தின் மருதாணியின் , விஞ்ஞானப் பெயராகவே மாறியிருப்பது  எத்தனை அழகு?.

உள்ளங்கையில் மருதாணி வைத்துக்கொளும் போதெல்லாம், அதன் பின்னணியில் இருக்கும் இந்தச் சங்கிலியை நினைத்துப் பார்க்கிறேன் — சோஜத்தின் வறண்ட மண், ஒரு ஏழை ஸ்வீடிஷ் இளைஞனுக்கு உதவிய செல்வந்த மருத்துவரின் நட்பு, ஒரு மரத்தின் பெயரிலிருந்து பிறந்த குடும்பப்பெயர், இறுதியில் என் உள்ளங்கையில் பதிந்த சிவப்பு நிறம்.

ஒரு சிறிய தாவரம், இத்தனை நூற்றாண்டுகளையும் கண்டங்கள் கடந்த கதைகளையும் எடுத்துக்கொண்டு, நம் கையில் வந்து செக்கச்செவேலெனச் சேர்ந்திருக்கிறது!

இயற்கையான, தூய்மையான மருதாணியைப் பயன்படுத்துவது வெறும் அழகுக்காக மட்டுமல்ல — அது ஒரு பாரம்பரியத்தைத் தொடர்ச்சியும் கூடத்தான். சஹேலி மருதாணியை நான் அனைவருக்கும் மனப்பூர்வமாகப் பரிந்துரைக்கிறேன்.

இரக்கமற்ற விதி!

காலையில் கல்லூரிக்குப்போகத் தயாரான போது Striped lily எனப்படும் வாள்போன்ற பசிய இலைகளும், கவிழ்ந்த வெள்ளை மணிபோன்ற, கழுத்தில் இளஞ்சிவப்புக் கோடுகளுள்ள பெரியமலர்களும் கொண்ட, விளிம்பி மரத்தடியில் கூட்டமாக வளர்ந்திருந்த செடி சோர்ந்து வாடியிருந்தது. (பள்ளியில் படிக்கையில் ஆங்கில ஆசிரியை திரிபுரசுந்தரி ’’..லோகா இப்படி காம்பவுண்ட் செண்டென்ஸாவே எழுதிட்டே இருந்தா அதுவே பழக்கமாயிரும்..’’ என்று அதட்டுவதை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.)

பதறியபடி அருகில் சென்றேன். ஏராளமான வண்ணப்புழுக்கள் இலை மலர் அரும் பு என எல்லாவற்றையும் தின்றுகொண்டிருந்தது. கைப்பையை கீழே எறிந்துவிட்டு புழுக்களை திட்டிக்கொண்டே அப்புறப்படுத்த முனைந்தேன்.

“..நில்லு என்ன பண்ணறே! ” என்று தருண் வந்தான். “புழுடா பாவம் செடி”என்றேன். “எந்திரி முதல்ல இது லில்லி மோத்தோட இளம்புழுக்கள், இந்தச்செடியை மட்டும்தான் சாப்பிடும் இதோட அம்மா இந்தச்செடிதான் புழுக்களோட Host plantனு தெரிஞ்சு இதில் முட்டை வச்சிருக்கு. ஒரு செடியோட பயன் கண்ணுக்கு அழகா இருக்கறதும் சாப்பிடக்கொடுக்கறதும் நிழல் தரதும் தானா? நீயும் அப்படித்தான் நினைக்கறியா? பயோடைவர்சிட்டின்னா என்னன்னு நினைக்கறே?


இயற்கையின் அறம்னு வகுப்புவேற எடுக்கறே? வெண்முரசில் சொன்னியே இயற்கையின் இரக்கமற்ற விதிகளில் நாம் தலையிடக்கூடாது பார்வையாளராகத்தான் இருக்கனும்னு? விட்ரு அது சாப்பிட்டு இறக்கை வளர்ந்து பறந்து போகட்டும். தண்டடிக் கிழங்கிலிருந்து செடி மறுபடியும் வளர்ந்துரும் “என்றான்.
எனக்கு பதில் சொல்ல ஒன்றுமில்லாமல் போனது.லில்லியிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு கருநீலஉடலெங்கும் வெண்புள்ளிகளுடன் ஆர்வமாய் செடியை சாப்பிட்டுக்கொண்டிருந்த புழுக்களை பார்த்தபடியே புறப்பட்டேன். காரில் போகும்போது தருண் சொன்ன வெண்முரசு உவமையை யோசித்துப்பார்த்தேன்.

” இங்கு வாழ்வெனத் திகழ்வது என்ன? நெறியற்ற முட்டிமோதல். ஒன்றை ஒன்று தின்று செல்லும் வெறி. நெறியென்று எதையேனும் நம்பியிருப்போர் வீழ்ந்து மிதிபட்டு அழிய தன்னை எண்ணி தானொன்றே ஆக முன்செல்வோர் வெல்கிறார்கள்”

“வேட்டையில் விழுந்து சிம்மத்திற்கு உடலளிக்கும் மானுக்கு துயரில்லை. இப்புவியை ஆளும் இரக்கமற்ற நெறிக்கு தன்னை அளிக்கிறது அது!

ஆம் அவ்வாறே ஆகுக!

இளமைக்காலங்கள்!

கடந்த வெள்ளிக்கிழமை ஊட்டியருகில் ஒரு கல்லூரிக்கு இன்ஸ்பெக்‌ஷனுக்கு போயிருந்தேன். சமீபத்தில் துவங்கப்பட்டிருந்த கல்லூரி அது. மேலும் மாணவர்களைச் சேர்க்க போதுமான அளவு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என சோதிக்க வேண்டும். நடந்து சலித்தேன் கல்லூரி முழுக்கவே. ஒரு ஆய்வகம் திறக்க சாவி வரும்வரை வராண்டாவில் காத்திருந்தோம். அது உணவு இடைவேளை. பக்கத்தில் இருந்த ஒரு வகுப்பறையின் வாசலில் கதவுநிலவின் இருபக்கமும் கைகளை வைத்துக்கொண்டு நின்றிருந்த ஒருத்தியிடம் சிவப்பு ஸ்வெட்டெர் போட்டுக்கொண்டு ஒரு ஒல்லிப்பையன் வந்து லாங்சைஸ் நோட் ஒன்றை கொடுத்தான். அவளும் அதை மறுமுனையில் பிடித்துக்கொண்டாள். இவனும் கொடுக்கவில்லை அவளும் வாங்கவில்லை. அவன் அவளிடம் ’’எப்போ திருப்பித்தருவீங்க? என்கிறான். அவள் அவனை கண்ணுக்குள்ளேயே பார்த்து ‘’ ஏன் திருப்பித்தரணுமா கட்டாயம்? என்கிறாள் அவன் ’இல்லை நீங்க திருப்பித் தருவீங்கனு நம்பித்தான் நான் இதைகொடுக்கறேன் திங்கட்கிழமை தந்துருங்க’’ என்றன் அவள் வெட்கிச்சிவந்து வெடுக்கென நோட்டைப் பறித்தபடி உள்ளே ஓடினாள். அத்தனைபேர் அங்கே கூட்டமாக ஒரு முக்கியவேலையாக நிற்பதும் அருகில் அவர்கள் கல்லூரியின் ஆசிரியர்கள் நிற்பதும் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் புன்னகைத்தபடி திறக்கப்பட்ட அந்த ஆய்வகத்துக்குள் நுழைந்தேன். இசை சமீபத்தில் அகழ் இதழில் மலைச்சாரலில் மையல் யானைகள் என்று அபாரமான ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நான் ஒருவேளை தமிழ்த்துறை ஆசிரியராக அதுவும் இப்போது இருக்கும் நவீன இலக்கியப்பரிச்சயமே இல்லாத ஒருத்தியாக இருந்து அந்தக் கட்டுரையைப் படித்திருந்தால் நிச்சயம் குற்றவுணர்வும் அவமான உணர்வும் மேலிட தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன். அதில் சொலலப்பட்டிருக்கும் கெடுதி வினாவுதல் தான் இதுவும். நேற்று நான் அவள் அந்த நோட்டை திருப்பித்தந்திருப்பாளா அல்லது அவன் வந்து கேட்கட்டும் என்று கொடுக்காமல் வைத்திருப்பாளா என்று நினைத்துக்கொண்டேன்.

சாம்பல்!

அரிதாக நேரம் கிடைக்கையில் வெப்சீரிஸ் பார்ப்பதுண்டு. மணிஹெயிஸ்டுக்குப்பிறகு நெட்ஃப்ளிக்ஸில் காலாபாணி தொடரைத்தான் வெகு சுவாரஸ்யமாக பார்த்தேன்.

மணி ஹெயிஸ்ட் வந்தபோது சரண் டெங்குக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவன் உறங்கிக்கொண்டிருக்கையில் நான் அருகிலிருக்கும் பெஞ்ச்சில் அமர்ந்து தொடரைப் பார்ப்பேன். ஒருமுறை அவனுக்கு ட்ரிப்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது தீர்ந்துபோய், அவன் ரத்தம் அந்தக் குழாயில் மேலே ஏறத் தொடங்கியதைக் கடைசித் தருணத்தில்தான் கவனித்து அந்த வால்வை நிறுத்தினேன்.

சரண் இன்றும் இதைச் சற்று மிகைப்படுத்தி, “மகனுக்கு ரத்தம் போனாலும் மணி ஹெயிஸ்ட் பார்த்த ஆளாச்சே நீ!” என்பான். காலாபாணியும் அப்படித்தான், நம்பவே முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக இருந்தது. அதன்பிறகு அதர்வாவின் மத்தகம் என்னும் தொடர் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.

இப்போது அமேசான் பிரைமில் ‘சாம்பல்’ என்று இந்தியில் பொருள் கொண்ட ‘Raakh’ தொடர் வெகுகாலத்துக்குப் பிறகு வந்திருக்கிறது. இரண்டு வாரம் முன்பு முதல் சீசனின் 8 எபிசோடுகளையும் ஒரே நாளில், உட்கார்ந்த இடத்தில் லேப்டாப்பில் சார்ஜ் தீரத் தீர, தருணை அழைத்துப் போடச் சொல்லியும், சமையலறையின் மேடை மீது வைத்துக்கொண்டும் பார்த்து முடித்தேன்.

உணர்ச்சிவசப்பட்டு, “அடிப்பாவி! அவனுக்கு இப்பவே விஷம் வச்சிரு, இல்லைன்னா உன்னைக் கொன்னுருவான்” எனத் திரையைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் என்னை தருண் புன்னகையுடன் கடந்துசெல்வான். அபாரமான தொடர்!

ஏன் இப்படியெல்லாம் தமிழில் எடுப்பதில்லை?

சிலுவையின் நிழலில் திராட்சைக்கொடி!

தாவரங்களின் பரவலைப் பற்றி வாசித்துக்கொண்டே இருக்கிறேன். மிகேல் போலானின் ’பாட்டனி ஆஃப் டிஸையர்’ நூல் குறிப்பிட்ட சில தாவரங்களின் பரவலைக்குறித்து மிக ஆச்சர்யமான தகவல்களைப் பேசுகிறது.

காற்றில், நீரில், வெடித்துப்பரவும் வழியில் ,விலங்குகளால், பறவைகளின் எச்சத்தால், மனிதர்களால் தெரிந்தும் தெரியாமலும் என்று அவற்றின் பல வழிகளை அறிந்துகொண்டிருக்கும் போதுதான் 1492 என்னும் நூலை எழுதத் தொடங்கினேன்.

1492-ல் தொடங்கிய கொலம்பஸின் கடற்பயணத்தில் அவர் கண்டறிந்த புதிய நிலங்கள் அங்கிருந்து பழைய உலகிற்கு அவர் அறிமுகப்படுத்திய அன்னாசி, புகையிலை, பருத்தி போன்ற தாவரங்களை அவரது கடல் பயணத்துடன் விவரித்துச் சொல்லும் நூலின் அத்தியாயங்களை சொல்வனத்தில் தொடராக எழுதிக் கொண்டிருக்கிறேன் இன்று அவர் கால்வைத்த கன்னித்தீவைக் குறித்த 5 வது அத்தியாயம் வெளியாகிறது.

மனிதர்களால் பரவிய தாவரங்களைக் குறித்த தேடலின் போதுதான் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏசுவின் ரத்தமாக கருதப்படும் திரட்சை ரசத்தை அளிக்க உலகெங்கிலுமிருந்தும் கிறிஸ்துவ இறைப்பணியாளர்கள் திரட்சைக்கொடியின் நறுக்கிய தண்டை சிலுவை மற்றும் பைபிளுடன் கடல்கடந்து எடுத்துச் சென்றது, திராட்சை வளர வழியே இல்லலாத இடங்களிலும் தேவாலயத்தோட்டங்களில் அவற்றை வளர்த்தது ஆகியவற்றைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மும்பை மெதடிஸ்ட் தேவாலயத்தில் மிஷன் கிரேப்ஸ் என்னும் தலைப்பில் சமீபத்தில் ஒரு உரையாற்றினேன்.

கிறிஸ்தவ சமயச் சடங்குகளுக்கான வைனுக்காக திராட்சைக்கொடி உலகெங்கிலும் கிறிஸ்துவப் பாதிரியார்களால் பரவியதைக் குறித்தும், ஏன் திராட்சை ரசம் மட்டும் தேவைப்பட்டது, குருதியைப் போலவே இருக்கும் மாதுளைச்சாற்றை ஏன் தேவாலயங்கள் மறுத்தன, துருவப்பகுதி தேவாலயங்கள் ரத்தம் போல திரவமாக இருக்கவேண்டிய வைனுக்கு என்ன செய்தன? இவற்றோடு மெதடிஸ்ட் பிரிவை உருவாக்கியவரான வெஸ்லே மற்றும், ஈஸ்டின் பெருகலால் புளித்துப்போகாமல் இருக்க வைனை பாஸ்டுரைஸ் செய்த லூயி பாஸ்டரின் பங்களிப்பையும் சேர்த்து எழுதுவது சுவாரசியமாக இருக்கிறது.

ஏராளமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அகராதி முடிந்த பாடில்லை அதில் இணைத்த சித்திரங்களுக்கான credit கொடுக்காமல் அனேகமாக எழுதி முடித்தே விட்டேன். பாம்பு கடித்து பரமபதத்தின் கடைசிக்கு வந்து மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறேன் இந்த credit கொடுக்கும் வேலையை. இன்று மகன்களிடம் சொன்னேன் அனேகமாக இதை என் சார்பாக நீங்கள் தான் வெளியிடுவீர்களாக இருக்கும் என.

இன்னும் இரு நூல்கள் , ஸம்பா மற்றும் பொற்சுழல்; பிழைதிருத்தி பதிப்பகங்களில் தரவேண்டி இருக்கிறது. காலச்சுவடில் மொழிபெயர்ப்பு நூல் ‘அலையிடைவெளியில்’ வெளியாக வேண்டி இருக்கிறது. திரு அரவிந்தனின் மறைவினால் அது தாமதமாகிவிட்டது.

பெரும்பாலான பதிப்பகத்தார் என் தாவரவியல் நூல்களில் அக்கறை காண்பிப்பதில்லை என்பதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை , இறையன்பு மற்றும் கவிதாசனின் தன்னம்பிக்கை நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளியிட்டால் லாபம் வருகிறது, யாரும் விரும்பாத தாவரவியலைப் பற்றி நூல் வெளியிட்டு தெரிந்தே கையைச்சுட்டுக்கொள்ள யார்தான் தயாராக இருப்பர்கள்?

நூலாக வராவிட்டாலும் சரிதான்.எனக்கு எழுதவேண்டி இருப்பதை எல்லாம் மகிழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நதி நீரின் புனிதமும் நுண்ணுயிரியலும்!

உத்தர பிரதேசத்தில் பிரம்மாண்டமான மகா கும்பமேளா 2025-ம் ஆண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் (அலகாபாத்) நடைபெற்றது. திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்தது. சுமார் 66 கோடிப் பேர் அங்கு புனித நீராடி இருக்கின்றனர்.

இந்தியாவின் இரு பெரும் நதிகளான யமுனையும் கங்கையும் கலக்கும் அலகாபாத்தில், இந்த நதிகள் சங்கமிக்கும் இடத்தில்  நீராடுகையில் பல நோய்கள் தீருமென்றும் பிறவிச்சரடு அறுபடும் என்றும் கர்மவினைகள் தீரும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

 இந்தப் புனித நதிகளின் நீரின் தூய்மைப்படுத்தும் இயல்புகளுக்கு நுண்ணுயிரியல் வரலாறும் உள்ளது.  நுண்ணுயிரியல் வரலாற்றில் மூன்று அறிவியலாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளில் பெரும் பங்காற்றி இருக்கின்றனர்.

ஹான்கின்-(Ernest Hanbury Hankin)

 1895-ல் ஆக்ராவில் அரசு நுண்ணுயிரியலாளாராகப் பணியில் இருந்த பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் மற்றும் இயற்கையியலாளர் எர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின்   அங்கு ஒரு நுண்ணுயிரியல் ஆய்வகத்தையும் அமைத்திருந்தார். அப்போது இந்தியாவில் காலராத்தொற்று அதிகம் இருந்து பலரை பலிவாங்கிக்கொண்டிருந்தது. ஆக்ராவைச்சுற்றிலும் காலரா பரவி இருந்தது. கங்கை யமுனை ஆறுகளில் பிணங்களை வீசுவதும் குளிப்பதும் துணிகளைத் துவைப்பது கழிவுகளை கொட்டுவதும்தான் அந்த நீரை மாசுபடுத்தி காலாரவை அந்தபகுதியில் உருவாக்கியது என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் ஹான்கின் அந்த நீரை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது எதிர்பாராத முடிவுகள் கிடைத்தன.

   காலராத்தொற்றினால் இறந்த உடல்கள் வீசப்பட்ட  கங்கை மற்றும் யமுனை நதிநீரை அருந்தும் மக்களுக்கு நோய்த்தொற்று உருவாகவில்லை என்பதைக் குறிப்பிட்டு அந்த இரு நதிகளின் நீரிலும் ஏதோ ஒரு கிருமிக் கொல்லிப்பொருள் இருப்பதாக ஹான்கின் தெரிவித்திருந்தார்.

1896-ல்  முதன்முதலாக  காலராக் கிருமிகளை குணமாக்கும் யமுனை மற்றும் கங்கை நதி நீரின் இயல்புகளைக் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றில் விவரித்தார்.  அதற்கு காரணமான பாக்டீரியாக்களை உண்ணும் வைரஸ்களான பேஜ்கள்  (phages) அதற்கு  20 ஆண்டுகள் கழித்துத்தான் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும் ஹான்கின் அவற்றைக் குறித்த முதல் கண்டுபிடிப்பை செய்ததாகக்  கருதப்படுகிறார்.

நோய்க்கிருமிகளை அழித்து தூய்மைப் படுத்தும் நதி நீரின் இயல்பைக் குறித்த ஹான்கினின் ஆய்வுக் கட்டுரைகள் அறிவாய்வியலுடன் தொன்மங்கள்,  நாட்டுப்பாடல்கள், வாய்வழிக்கதைகள் ஆகியவற்றையும்,  இணைத்துச் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளைத் தெரிவித்தன.

இந்தியாவின் வடமேற்கு பகுதிமுழுக்க அரசாங்க அதிகாரியாகப் பொறுப்பிலிருந்த ஹான்கின் பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவன சஞ்சிகையில் 1896-ல்  வெளியிட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க L’action bactéricide des eaux de la Jumna et du Gange-“The Bactericidal Action of the Waters of the Jumna and the Ganges on the Cholera Vibrio” என்னும் ஆய்வறிக்கையில் கங்கை யமுனை நதிகளின் நீரில் இருக்கும் கிருமிக்கொல்லிகளைக் குறித்து விவரித்திருந்தார்.  

அந்த நதிகளின் நீரில் பிற நதிகளில் இருப்பதை விட மிக மிகக் குறைவாகவே  நோய்க்கிருமிகள் இருப்பதை  ஹான்கின் குறிப்பிட்டிருந்தார்.  

பாதி எரிந்த நிலையில் வீசப்பட்டு மிதக்கும் பிணங்களுக்கருகில் சூழ்ந்திருக்கும் பிணந்தின்னிக் கழுகுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு  நீர் மாதிரிகளை ஆய்வுக்கெனச் சேகரித்தார் ஹான்கின்.

பல முறை  ஆய்வுகளைச் செய்து அப்படிச் சேகரித்த நதிநீர் 3 மணி நேரத்தில் காலராக் கிருமிகளைக் கொல்கிறது என்று நிரூபித்த அவர் அந்த ’’பாக்டீரியக்கொல்லித்தன்மை’’ நீரை வெப்பமூட்டுகையில் ஆவியாகி விடுகிறது என்பதையும் ஆய்வுகளின் மூலம் தெரிவித்தார். 

1915-1917- களில் பாக்டீரியாக்களை கொன்று தின்னும் வைரஸ்களான பாக்டீரியா பேஜ்கள் ஃபெலிக்ஸ் மற்றும் ட்வார்ட் ஆகியோரால் (Frederick Twort & Félix d’Herelle) கண்டுபிடிக்கப்பட்டதில் ஹான்கினின் இந்த ஆய்வுகள் மிக உதவியாக இருந்தன 

ஹான்கினின் இந்த ஆய்வு முடிவுகள் இருவகையான எதிர்வினைகளை  உருவாக்கின. 

ஒரு தரப்பு இப்படி நீரின் கிருமிக்கொல்லித் தன்மையை அறிவித்ததன் மூலம் மேலும் மேலும் கழிவுகளையும், பிணங்களையும் நதியில் கொட்டுவதற்கு ஹான்கின் காரணமாகிறார் என்று குற்றம் சாட்டியது

இந்துமத நம்பிக்கையாளர்களின் தரப்பு புனித நதிகளின் நீராடல் மக்களைத் தூய்மைப்படுத்துகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தவர் என்று ஹான்கினுக்கு பாரட்டைத் தெரிவித்தது.

ஹான்கினின் ஆய்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு அலகாபாத், பனாரஸ் மற்றும் ஆக்ராவுக்கு வருகை தந்த அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின்  பண்டைய இந்தியர்கள், பிணங்கள் மிதக்கும், நாற்றம் அடிக்கும் கங்கை நீர், தான் தொடுபவற்றை எல்லாம் புனிதப்படுத்தும் என்ற உண்மையை எப்படி அறிந்திருந்தார்கள்? என்று தன் வியப்பை தெரிவித்திருந்தார், பண்டைய இந்தியர்கள் கிருமி ஆய்வாளர்கள் என்றும்  பயணக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்கந்த புராணம் பகவத்புராணம் மஹாபரதம் ஆகிவற்றிலும் கங்கை நீரின் கெட்டுப்போகாத, பாசிபிடிக்காத, எத்தனை காலம் வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசாத புனிதத்தன்மை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற பின்னர், லூயி பாஸ்டருடனும்,  ராபர்ட்  காச்சுடனும் பணிபுரிந்த பின்பு இந்தியாவிற்கு வந்த ஹான்கின் இந்தியாவில் பரவிக் கொண்டிருந்த காலரா உள்ளிட்ட  தொற்று நோய்களுக்கான காரணம் நுண்ணுயிர்கள் என்பதை அறிவித்தவர்களில் முதன்மையானவர். ஹான்கின் ஆந்த்ராக்ஸ் மற்றும் உடலின் நோயெதிர்ப்புக் குறித்த ஆய்வுகளிலும் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்.

இந்திய காலனியாதிக்கக் காலத்தில் மருத்துவ ஆய்வுகளை துவங்கியதில் ஹான்கினின் பங்கு அளப்பரியது. 1900-களில் இமாச்சல பிரதேசத்தில் முதல் பாஸ்டர் ஆய்வு நிறுவனத்தை உருவாக்குவதில் ஹான்கின் மிக முக்கியப் பங்கு வகித்தார். அங்குதான் இந்தியாவில் பரவிக்கொண்டிருந்த டைபாய்டு மற்றும் காலாரா நோய் குறித்த ஆராய்ச்சி முழுவீச்சில் நடைபெற்றது.

அங்கு பணியில் இருந்த புகழ்பெற்ற  பாக்டீரியா நிபுணரான  ஹாஃப்கின்னுடன் (W. M. Haffkine) இணைந்து இந்தியா முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருந்த  பிளேக் மற்றும் காலராவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியதில் ஹான்கின் பெரும்பங்காற்றினார்.

 இந்திய கிராமங்களில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை கிருமிநாசினியாக உபயோகிப்பதை பரவலாக்கியதும் ஹான்கின்தான். 

காலரா மற்றும் பிளேக் நோயுற்று இறநதவர்களின் உடல்களைத் தின்று, நோயுற்ற பிணந்தின்னிக் கழுகுகளைக்  கருணையுடன் சிகிச்சையளித்து காப்பாற்றியவராக  மருத்துவ அறிவியல் வராலாற்றில்  ஹான்கின்  பெருமதிப்புடன் நினைவு கூறப்படுகிறார்.ஹான்கின் இந்தியாவில் ஆற்றிய பணிகளில், காலரா பாக்டீரியா பற்றிய ஆராய்ச்சிக்கு அடுத்தபடியாக மிக முக்கியமானது, அவர் பாறுகழுகள் (Vultures) மற்றும் பிற பறவைகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறித்து மேற்கொண்ட ஆய்வுகள்தான்.

அவர் கழுகுகளைக் குணப்படுத்தினார் என்பதை விட, “அவ்வளவு அசுத்தமான அழுகிய இறைச்சியைத் தின்றும் கழுகுகளுக்கு ஏன் நோய் ஏற்படுவதில்லை, அவற்றின் செரிமான மண்டலம் எவ்வாறு நோய் கிருமிகளை அழிக்கிறது?” என்ற கோணத்திலேயே அவரது முதன்மை ஆராய்ச்சி அமைந்தது. ஹான்கின் கழுகுகளை வெறும் ஆராய்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்கவில்லை; அவர் பல கழுகுகளைத் தனது சொந்தக் கைகளால் பராமரித்து, குணப்படுத்தி, காப்பாற்றவும் செய்துள்ளார்.

அவர் ஆக்ராவில் இருந்த தனது ஆய்வகத்தின் அருகே பெரிய கூண்டுகளை (Aviaries) அமைத்து, காயமடைந்த அல்லது நோயுற்ற கழுகுகளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்த்தார்.வேட்டையாடப்பட்டோ அல்லது விபத்துகளில் சிக்கியோ காயமடையும் கழுகுகளை ஹான்கின் மீட்டு வருவார். அவற்றின் சிறகுகள் மற்றும் கால்களில் ஏற்படும் காயங்களுக்கு மருந்திட்டு, அவை மீண்டும் பறக்கும் திறன் பெறும் வரை தனது கூண்டுகளில் வைத்துப் பராமரித்தார்.

பொதுவாக பாறுகழுகுகள் மனிதர்களைக் கண்டால் அஞ்சும் அல்லது தாக்க வரும் குணம் கொண்டவை. ஆனால், ஹான்கின் அவற்றுக்குத் தொடர்ந்து உணவளித்துக் காப்பாற்றியதால், அவை அவரிடம் மிகவும் பழகிவிட்டன.

அவர் கூண்டுக்குள் செல்லும்போது, அந்தக் கழுகுகள் நாய்க்குட்டிகளைப் போல அவரிடம் ஓடிவந்து, அவரது கைகளில் இருந்து உணவைக் கொத்தித் தின்னும் அளவுக்கு சாதுவாக மாறின. பூனைகள் அல்லது பிற விலங்குகள் தாக்க வரும்போது, இந்தக் கழுகுகள் ஹான்கினைத் தங்களுக்குப் பாதுகாப்பான அரணாகக் கருதி அவர் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு அவற்றுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது.

கழுகுகள் குணமடைந்தவுடன், அவற்றின் சிறகுகள் பலம்பெற வேண்டும் என்பதற்காகத் தனது ஆய்வக வளாகத்திலேயே அவற்றைப் பறக்கவிட்டுப் பயிற்சி அளிப்பார். முழுமையாகக் குணமடைந்த பறவைகளை மீண்டும் இயற்கையாக வாழ காடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவார்.

தன் உடலையே ஆராய்ச்சி விலங்காக மாற்றிக்கொண்டு நாகத்தின் நஞ்சு, ஓபியத்தின் போதை ஆகியவற்றின் விளைவுகளை  ஆராய்ந்த ஹான்கின் அவரது காலத்தில் முக்கியமான  இந்த  ஆய்வுகளுக்கு பேரும் புகழும் பெறவில்லை என்றாலும் பாக்டீரியாபேஜ் கண்டுபிடிப்பாளர்கள் இருவரும்   பல ஆய்வறிக்கைகளில் ஹான்கினின்  துவக்க கால ஆய்வு முடிவுகளைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ட்வார்ட்- Frederick Twort

1915-ல் பிரிட்டிஷ் பாக்டீரிய நிபுணர் ஃப்ரெட்ரிக் ட்வார்ட்( Frederick Twort), நதி நீரில் இருக்கும் ஒரு மிகச்சிறிய நுண்ணுயிர் பாக்டீரியாக்களை அழிப்பதை கண்டறிந்தார். 

அந்த நுண்ணுயிர் 

  • வாழ்க்கைச் சுழற்சியில்  பாக்டீரியாவின்ஒரு நிலை 
  • பாக்டீரியா ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வெளியிடும் ஒரு நொதி 

           அல்லது

  • பாக்டீரியாவைக் கொல்லும் ஒரு வைரஸாக  இருக்கக்கூடும் என அவர் யூகித்தார்

  மேற்கொண்டு ஆய்வுகளைத் தொடர்ந்து அது என்னவென்று ட்வார்ட் உறுதிப்படுத்துவதற்கு முன்பு முதல் உலகப் போர் துவங்கியது . எனவே நிதிப் பற்றாக்குறையால் ட்வார்ட்டின் இந்த ஆய்வு அப்படியே கைவிடப்பட்டது.

1917-ல்தான் அது பாக்டீரியாபேஜ் என்று ஃபெலிக்ஸினால் பெயரிடப்பட்டது.  ட்வார்ட்டின் கண்டுபிடிப்பு நுண்ணுயிர்களின் அடிப்படை வகைகளின் அறிதலில் ஒரு பெரிய திறப்பை உண்டாக்கியது.  ட்வார்ட் 1950-ல் இறந்தார். நுண்ணுயிரியல் வரலாற்றில் ட்வார்ட்டின் சோதனைகள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மிக முக்கியமானவை

ஃபெலிக்ஸ் -Félix d’Hérelle

தானாகவே நுண்ணுயிரியலை கற்றுத்தேர்ந்திருந்த, பாரீஸில் பாஸ்டர் நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருந்த ஃபெலிக்ஸ் (Félix d’Hérelle) என்னும் நுண்ணுயிரியலாளர் 1917- செப்டம்பர் 3-ம் தேதி,  நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்  கண்ணுக்குத் தெரியாத அளவு நுண்மையான ஒரு உயிரியைத்தான் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார்,  அவர் பாக்டீரியாக்களைக் கொல்லும் அந்த வைரஸுக்கு பாக்டீரியோ பேஜ் – bacteriophage என்றும் பெயரிட்டிருந்தார்.

 வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட ஒரு நோயாளிக்கு பாக்டீரியோ பேஜ் சிகிச்சை அளித்து அவர் முழுக்க குணமானதையும்  அப்போது அவர் ஆவணப்படுத்தினார். அதன் பிறகு ஃபெலிக்ஸ் பல ஆய்வுகளைச் தீவிரமாகச் செய்து பேஜ் சிகிச்சை முறையை அறிமுகம் செய்தார். 

பாரிஸில் முதல் அதிகாரபூர்வமான பேஜ் சிகிச்சையை அளித்த ஃபெலிக்ஸ் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த பாக்டீரியாபேஜ்களைக் கொண்டு மனித மற்றும் விலங்குகளின் நோய்க்கு சிகிச்சையளிக்கலாம் என்னும் கருத்தை வலுவாக முன்வைத்தார். ஆனால் உலகப்போரில் மும்முரமாக இருந்த உலகநாடுகள் இதைக் கவனிப்பதற்குள் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கின் பெனிசிலின் கண்டுபிடிப்பு ஃபெலிக்ஸின் இந்த முன்னெடுப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

உலக நாடுகள் பலவற்றில் பெனிசிலின் பயன்பாடு துவங்கி இருந்த வேளையில் ஃபெலிக்ஸின் குழு சோவியத் யூனியனில் இந்த பேஜைக்கொண்டு சிகிச்சையளிப்பதை வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தது.

முதல் உலகப்போரில் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஃபெலிக்ஸ்  பாக்டீரியா பேஜ்களைக்கொண்டு அளித்த சிகிச்சை பலனளித்ததை  உலகெங்கும் இருந்த மருத்துவர்கள் வியந்து கவனித்தார்கள். மருத்துவ சஞ்சிகைகளில் பேஜ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து விளைவிக்காத வைரஸ் என்பது பரவலாக அறிவிக்கப்பட்டது.

1930-40-களில் அஜர்பைஜான், உக்ரைன், ஜார்ஜியா மற்றும் ரஷ்யாவில் பேஜ் சிகிச்சை முயற்சிகள் ஃபெலிக்ஸின் முன்னெடுப்புக்களால் பரவலாக நடந்தன. மத்திய ஐரோப்பா, பிரான்ஸ் மற்றும் பிரேசிலிலும் இந்த பேஜ் சிகிச்சைச் சோதனைகள் நடந்தன.

 ஃபெலிக்ஸ்  இந்தியாவுக்கு வந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் புனிதத்தலங்களில் இருக்கும் நீர்நிலைகளில் காலராவுக்கெதிராக பேஜ்களைக்  கலந்தார். அந்த இடங்களிலெல்லாம் காலராத்தொற்று மிக வேகமாகக் குறைந்தது.

அஸ்ஸாம் மற்றும் வங்காளத்தின் பல  கிராமங்களுக்கும் நேரில் சென்று பேஜ் கலந்த நீரை ஊர்க்கிணறுகளில் கலக்கவும், அந்த நீரை கொதிக்க வைக்காமல் அருந்தச்சொல்லியும் ஊர்த்தலைவர்களிடம் ஃபெலிக்ஸும் அவரது குழுவினரும்  அளித்தனர்.

அப்போது காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நடந்துகொண்டிருந்த காலமாதலால் நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்கும் அந்த எளிய முறையை துரதிர்ஷ்டவசமாக  பெரும்பாலான ஊர்த்தலைவர்கள்  மறுத்தனர். அங்கெல்லாம் காலரா தொற்றினால் பலர் பரிதாபமாக இறந்தார்கள்.

எனவே 1937-ல் ஃபெலிக்ஸின் இந்த பேஜ் சோதனை கைவிடப்பட்டது. பிரான்ஸுக்கு திரும்பிய  ஃபெலிக்ஸ் ஜெர்மானிய ஆயுதப்படையினரால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருக்கையில் அறிவியல் சோதனைகளின் விளைவுகள்- “The Value of Experiment” என்னும் 800 பக்க நாவலை  ஃபெலிக்ஸ் எழுதி முடித்தார்.

நுண்ணுயிரியலை எந்த கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் படிக்காமல் தானே நூல்களிலும் சோதனைகள் செய்தும்   கற்றுக்கொண்ட  நுண்ணுயிரியல் படிக்காத மேதையான ஃபெலிக்ஸ் 1949-ல் கணையப் புற்றுநோயால் மடிந்தபோது அவர் யாருக்குமே தெரியதவராயிருந்தார்.

பேஜ் ஆராய்ச்சிகளுக்காக பலருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. 1960-லிருந்து நோபல் பரிசுக்காக 10 முறை பரிந்துரைக்கப்பட்டும் ஃபெலிக்ஸுக்கு அப்பரிசு கிடைக்கவில்லை. ஆனால் ஃப்ரான்ஸ் அவரை மறக்கவில்லை ஒரு தெருவுக்கு அவர் பெயர் வைக்கப்ட்டிருக்கிறது.

 Félix d’Hérelle என்னும் அவர் பெயரைக்கொண்டு பேஜ்களின் ஒரு குடும்பமான Herelleviridae பெயரிடப்பட்டிருக்கிறது.

 இப்போது இந்த பேஜ்சிகிச்சை நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புச்சக்தி பெற்றிருக்கும் நோய்க்கிருமிகளுக்கெதிராகச் செயல்புரியுமென்பது ஆய்வுகளில் நிரூபணமாகி இருக்கிறது

நுண்ணுயிரெதிர்ப்பிகளால் அழிக்கமுடியாத  Pseudomonas aeruginosa, Klebsiella pneumoniae, மற்றும் Staphylococcus aureus ஆகிய பாக்டீரியாக்களுக்கு எதிராக பேஜ் வெற்றிகரமாகச் செயல்படுகிறது. 

நுண்ணுயிரெதிர்ப்புச் சக்தி பெற்றுக்கொண்டிருக்கும் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பேஜ் சிகிச்சை உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை, உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விவசாயத்துறைகளில் மிக முக்கியமான  பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

நுண்ணுயிரிகளின் வாழ்க்கை மற்றும் மருத்துவத்தில் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய நமது புரிதலை இந்த மூன்று முன்னோடி நுண்ணுயிரியலாளர்களின் பங்களிப்புகள் வெகுவாக மாற்றியமைத்தன.  பாக்டீரியோ பேஜ்களின் ஆரம்பகால கண்டுபிடிப்பு முதல் நுண்ணுயிரெதிர்ப்பி-எதிர்ப்பு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் அவற்றின் நவீன பயன்பாடு வரை, இம்மூவரின் பணி புதிய தலைமுறை அறிவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. 

இப்போது மீண்டும் கவனத்துக்குள்ளாகி இருக்கும் பேஜ் சிகிச்சை இம்மூவரின் பங்களிப்பை  நாம் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியமாகிறது.

1930-ல் பிரயாக்ராஜில் (அலகாபாத்)  நிறுவப்பட்ட அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவான  கங்கா கேலரியில் கங்கை நீர் குறித்த தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியவை சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.

அங்கு  ஹான்கினின் புகைப்படமும்,  3 மணி நேரத்தில் காலராக் கிருமிகளை கங்கை நீர் அழிக்கிறது என்னும் அவரது  ஆய்வு முடிவுகளின்  வாசகங்களும் பொறிக்கட்டிருப்பதை  கும்பமேளாவுக்கு வருகை தருபவர்கள் காணலாம்

நியூயார்க் டைம்ஸில் 2019 -ல் வெளியான கட்டுரையொன்று கங்கை நீரில் பெருகி இருக்கும் நோயுருவாக்கும்  பாக்டீரியாக்களைப் பற்றி கவலை தெரிவித்திருந்தது.

ஹான்கின் இந்த நீரின் தூய்மைத் தன்மையைக்குறித்து ஆய்வு செய்து நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகின்றன.  இன்று திரிவேணி சங்கமத்தில் தொழிற்சாலைக் கழிவுகளும், கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடுதலால் உண்டாகும் மாசுபாடும் சாக்கடைக்கழிவுகளும் அதிக அளவில் கலந்திருப்பதால் ஹான்கின்  குறிப்பிட்ட  கிருமிக்கொல்லித்தன்மையும், ட்வார்ட்டும் ஃபெலிக்ஸும் கண்டு பிடித்த பாக்டீர்யாபேஜின் பாக்டீரியாவைக் கொல்லும் தன்மையையும் தாண்டி நதி நீர் மாசுபட்டிருக்கிறது.

 சமீபத்தில்  கோடிக்கணக்கில் மக்கள் நீராடும் இந்த நதிகளில் மலபாக்டீரியா எனப்படும் இகோலியின்-(E coli) அளவு மிக மிக அதிகரித்திருப்பது  முக்கியச் செய்தியாகியிருகிறது.

பொதுமக்களின் ஆரோக்கியம்,நீர் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு,கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நதிநீரின் புனிதத்தன்மை, ஆகியவற்றால் பிரயாக்ராஜின் நதி நீர் மாசுபாடு மிகப்பெரிய சவாலாகி இருக்கிறது.  

 மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டு, பெருந்திரளாக அங்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி, கழிவு நீர் சுத்திகரிப்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை புகுத்தி கங்கை யமுனை நதிகளின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.  

திரிவேணி சங்கமத்தில் கங்கை யமுனை நதிகளுடன் சரஸ்வதி நதியும் கண்ணுக்குப்புலப்படாத மாய நதியாக கலப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. அன்னை நதிகளான கங்கையும் யமுனையும் அப்படி மாயமாகிப்போய்விடாமல்  காக்கப்படட்டும்.

விசால ஹ்ருதயன்!

நிமோனியாவில் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அப்பா (!) கடந்த 2 வாரங்களாக இருக்கிறார். தம்பி மனைவி லஷ்மி, நான், தருண் மூவருமாக உடனிருக்கிறோம். தம்பிவிஜி முக்கிய வேலையாக வெளியே இருக்கிறான் எனவே அவனை தொந்தவரவு செய்யாமல் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.

வீடு, கல்லூரி, மருத்துவமனை என தொடர்ந்து அலைந்து பின்னிரவில் களைத்து வீடு திரும்புகையில் சமயங்களில் எனக்கு சுய பச்சாதாபமும் எதிர்படுவோர் மீது ஆத்திரமும் வந்துவிடுகிறது. ஆனால் வெளியில் காண்பித்துக்கொள்வதில்லை லக்‌ஷ்மியும் மருத்துவமனையே கதி என்றுதான் இருக்கிறாள்.

ஜூன் மாதம் தருண் கொச்சியில் அவனுக்கு கிடைத்திருக்கும் பணியில் இணைய வேண்டும். எதன்பொருட்டோ அது தாமதமாகி, வரும் ஆகஸ்டில் வந்தால் போதும் எனச்சொல்லிவிட்டதால் அவன் வீட்டில் இருந்து நல்லவேளையாக எங்களுக்கு உதவுகிறான்.

காலை, மதியம், இரவு என வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவது,அவ்வப்போது லக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து வந்து அவள் குளித்து தயாரானதும் மீண்டும் மருத்துவமனைக்கு செல்வது, இது ஒரு கிராமத்து மருத்துவமனை என்பதால் ஸ்கேன் எடுக்க அடிக்கடி பொள்ளாச்சிக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து வருவது, மருத்துவமனையிலேயே அடிக்கடி எக்ஸ்-ரேவுக்கு கூட்டிச்செல்வது இரவுணவு கொண்டுவருவது என ஓயாமல் கார் ஓட்டிக்கொண்டு, ஓய்வு கிடைக்கையில் அந்த சின்ன மருத்துவமனை அறையிலேயே அமர்ந்து போனை பார்த்துக்கொண்டு  இருக்கிறான். .

ஒருமுறைகூட சங்கடப்பட்டுக்கொண்டோ முகம்சுளித்தோ புகார் சொல்லியோ  அவனைப் பார்க்கவில்லை. ’’பாவம்டா நீ இத்தனை வேலை செய்யறே, ஸாரி’’ என்று நான் சொன்னாலும் “டேய் கார், ஓட்டறதெல்லாம் ஒரு வேலையா” என்பான்.

அவரை முழு அன்புடன் அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறான். இரு மகன்களுக்கும் மூத்தோரின் அன்பு என்பதே கிடைத்ததில்லை. முற்றிலுமாக அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.  நான் மகன்களைக் கல்லூரிக்கு என்னுடன் அழைத்து வந்துதான் வளர்த்தேன். அழைத்து வரமுடியாத சமயங்களில் இந்த வீட்டிற்குள் அவர்களை வைத்து கதவை பூட்டிவிட்டு கல்லூரிக்கு வந்திருக்கிறேன். 

ஆனாலும் அந்த நினைவுகளின் காயம் ஏதுமில்லாமல் என் வருத்தங்கள், துயரங்கள் அறிந்திருந்தும் அவை தொட்டுவிடாத தொலைவில் தருண் இருக்கிறான். 

இடையில் அவனது தோழிகளும் தோழர்களும் அழைத்தால் “டிரைவிங்கில் இருக்கிறேன் பிறகு பேசலாம்” என்பான். முகம் சுளிக்காமல் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு, டயப்பர் மாற்ற செவிலியர்களுடன் இணைந்து கொள்கிறான். இரவு வீடு திரும்புகையில் எனக்கு பிடித்தமான பாடல்களை ஒலிக்கச் செய்வது, என்னிடம் கல்லூரிக் கதைகளைக் கேட்பது என்று சுவாரஸ்யமாகப் பயணத்தை அமைத்துக் கொள்கிறான்.

மருத்துவமனையிலிருந்து வீடு வந்ததும் உலக வழக்கமான, ஆண்கள் நேரே வீட்டிற்குள் சென்று உடைமாற்றி சாப்பாட்டுக்கு காத்துக்கொண்டிருப்பது என்பதற்கு மாறாக  காரில் இருக்கும் பைகள், சாவி, பாட்டில்கள், அழுக்குத்துணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாடிக்கு வருவது, என்னை அதிகம் நடக்காமல் பார்த்துக்கொள்வது என எதைச்செய்தாலும் சிரித்த முகத்துடன் செய்கிறான். 

இரவு குளித்து சமைக்க வருகையில் அவனும் தயாராகி இயல்பாக சமையலறையில் கூட ஒத்தாசை செய்வது, அல்லது முதலில் என்னை சாப்பிட வைத்து பிறகு அவன் சாப்பிடுவது என்று கவனமாக இருக்கிறான். இடையிடையே அடுத்த கானுலாவைக் குறித்து திட்டமிடுவது, வீட்டில் இளநீர் குடித்துவிட்டு மரத்திலேயே குடியிருந்து  கொழுத்திருந்த எலியை கூண்டில் பிடித்து வேறெங்காவது கொண்டு விட்டுவிட்டு வருவது என எந்நேரமும் பிஸியாகவே இருக்கிறான். 

அவ்வப்போது சூழலின் இறுக்கத்தை உணர்ந்து, நானும் மகன்களும் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் நகைச்சுவையாக ஏதேனும் சொல்லி தளர்த்துவதையும் செய்கிறான். நேற்று புரோட்டீன் பார் எனக்கு அனுப்புவதாக சரண் சொன்னதும் நான் ’’ அப்புறமா நான் சொன்னபுறமா வாங்கலாம்ஆர்டர் போடாதே’’ என்றேன். தருண் அண்ணனிடம் ’’டேய் அம்மாட்டெ ஆர்டர் போடலாமா பொறுமையா பேசு’’ என்கிறான் 🙂

ஆனைமலை விவசாய பூமி வழியே தினமும் மருத்துவமனைக்கு செல்லுகையில் மரங்களடர்ந்த அந்தச் சாலையைப் புகைப்படம் எடுப்பது, வயலில் இருக்கும் கருந்தலை அரிவாள் மூக்கன்களை கவனித்து வீடியோ எடுத்து எனக்கு அனுப்புது என அவனையும் உடன் இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறான்.

நான் தாவரங்களிடமிருந்து ஒளியை நோக்கியே செல்வது என்னும் பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன்தான் எனினும்  களைச்செடிகளின் தொல்லை தாங்கமுடியாமலாகும்போது சலிப்படைந்துவிடுகிறேன் ஆனல் மகன்கள் அப்படியல்ல என்பதில் மகிழ்கிறேன்

மாலை வாசல் தெளித்துக் கோலமிட்டு விளக்கேற்றிக் கொண்டிருப்பார்கள், தோட்டத்தில் பூப்பறித்து நெருக்கமாக தொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம்  சொல்வதற்கில்லைதான் எனினும் எங்கோ கொடுத்து வைத்த மகராசிகள் இருவர் நெட்ஃப்ளிக்ஸ் பார்த்துக்கொண்டோ, அஸைன்மென்ட் எழுதிக்கொண்டோ, மால்களில் சுற்றிக்கொண்டோ இருப்பார்கள். அவர்கள் இருவரையும் நினைத்தால் கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

. அருட்காப்பு. 

மிஸல்டோ – முத்தச் சிறுகிளை!

ஜெர்மனியின் ஆபென்பெர்க் பல்கலைக்கழகம் அந்நகரின் முதியவர்கள் நலனுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடன் பல்கலைக்கழகம்  இந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் அங்கு பட்ட மேற்படிப்பின் பொருட்டு  சென்றிருக்கும் மகன் சரணும்   கலந்து கொண்டான்.

கொண்டாட்டம் நடைபெற்ற அரங்கு நுழைவாயிலில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த வெண்ணிற கனிகளுடன் கூடிய  ஒரு சிறு பசுங்கிளையை கடப்பவர்கள், அதனடியில் நிற்பவர்கள் அனைவரும், அவனுட்பட தொடர்ந்து முத்தமிடப்பட்டார்கள் என்பதை மெல்லிய வெட்கத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டான் 

பொதுவெளியில் பாராட்டுவது, அன்பை தெரிவிப்பது ஆகியவற்றிற்கு அவ்வளவாக பழக்கப்பட்டிருக்காத தென்னிந்திய சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு நிச்சயம் இது வெட்கத்தை உண்டாக்கும்  நிகழ்வுதான்.

அந்த குறுங்கிளை மிஸல்டோ (Mistletoe) என்னும் ஒரு மர ஒட்டுண்ணிச்செடியின் பகுதி. இந்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இச்செடியின் கிளைகள் அலங்காரத்துக்கான பயன்பாட்டில் இருக்கின்றன எனினும் அதனடியில் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இல்லை.

மிஸல்டோ என்னும் இச்செடி அதனடியில் செல்பவர்கள் முத்தமிடப்பட வேண்டும் என்னுமளவில் மட்டுமே அறியப்பட்டிருக்கிறது. மிக நெடிய வரலாறும் தொன்ம தொடர்புகளும் கொண்டது இந்த மிஸல்டோ முத்தமிடல்.

மிஸல்டோ தொன்மம்

மிஸல்டோ வளமை, குழந்தைப்பிறப்பு மற்றும் காதலின் குறியீடாக ரோமானியர்கள் மற்றும் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும், நடுக்காலத்திலும் வாழ்ந்த பழங்குடிச் சமுதாயங்களை உள்ளடக்கிய செல்ட்டியர் (Celts) இன-மொழிக் குழுவினரால் கருதி வணங்கப்பட்டது. வேர்களற்ற பசுமைமாறா இலைகளை கொண்டிருக்கும் கடும்பனிக்காலத்தில்,  மரங்கள் இலைகளை முற்றாக உதிர்த்திருக்கையிலும் அவற்றின் மீது செழித்து வளரும் இவை  நீள்வாழ்வு மற்றும், இறவாமையின் அடையாளமாக  பல பண்டைய நாகரீகங்களால் வணங்கப்பட்டது. இச்செடி அமைதி மற்றும் புனிதத்தின் குறியீடாகவும் ரோமானியர்களால் கருதப்பட்டது.

ரோமானியர்களின் குளிர்காலக் கொண்டாட்டம், விதைத்தல், விதை மற்றும் விவசாயத்தின் கடவுளான சனியை வழிபடும் நாளாகக் கருதப்பட்ட சாடர்னேலியா (Saturnalia) கொண்டாட்டங்களின் போது, வீடுகளைத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க வீட்டின் முன்னால் மிஸல்டோ கிளைகளைk கட்டித் தொங்கவிடும் சடங்குகள் இருந்தன. ஒவ்வொரு டிசம்பர் 17 அன்று தொடங்கும் இந்த விழா அடுத்த 7 நாட்களும் பொது விருந்து, மது, சூதாட்டம், விளையாட்டுப் போட்டிகள் என்று கோலாகலமாக டிசம்பர் 23 அன்று முடியும். சீசரின் காலத்தில் விமரிசையாக இருந்த இவ்விழா பின்னர் படிப்படியாக குறைந்து மூன்று நாள் கொண்டாட்டமாகியது. 

நார்ஸ் தொல்குடியினர் போர் முடிவை அறிவிக்க ஆயுதங்களை மிஸல்டோ வளர்ந்திருக்கும் மரத்தினடியில் குவித்து வைத்தனர். பண்டைய செல்ட் கலாச்சாரத்தில்  ட்ரூயிட் (Druids) எனப்பட்ட சமூகச் சான்றோர்களைக் (ஆசிரியர்கள், நீதிபதிகள், மதத்தலைவர்கள் போன்றவர்களை) குறித்த சொல்,  மிஸல்டோ ஒட்டுண்ணி மரத்துடன் சேர்ந்து இருப்பதால் கூட்டுறவு என்பதின் புனித அடையாளமாகவும் இதனை கருதினார்கள்.

பொதுக் கால வரிசையில், முதல் நூற்றாண்டில் ட்ரூயிடுகள் கடும் பனிப்பொழிவால்  மொட்டையான மரங்கள் மீது பச்சை பசேலென்று வளர்ந்திருக்கும் இவற்றை மரணச் சூழலில் காணப்படும் உயிர்நிறைந்த தாவரங்களாக,  அசாதாரண சக்திகளும் மந்திர பண்புகளும் கொண்ட தாவரங்களாக கருதினார்கள். இவற்றின் குறுங்கிளைகள் கால்நடைகளை அடைத்து வைத்திருக்கும் இடங்களிலும் வீட்டின் முன்பாகவும் தீய சக்திகள் அண்டாதிருக்கவும், சந்ததி விருத்திக்கும் கட்டிவிடப்பட்டன.

அக்காலங்களில் வாய்ச்சண்டை முற்றினால் சண்டையிட்டுக் கொள்பவர்கள் மிஸல்டோ வளர்ந்திருக்கும் மரங்களினடியில் நின்று சமாதானம் பேசிக் கொள்ளும் வழக்கம் முதலில் இருந்திருக்கிறது. மிஸல்டோ பல வகையான மரங்களில் ஒட்டுண்ணியாக வளர்ந்தாலும்   ஓக் அவர்களின் புனித மரமாதலால் அதன்மீது வளர்ந்திருந்த மிஸல்டோ மிகப்புனிதமானதாக  வழிபடப்பட்டது . குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் இந்த மிஸல்டோ வளர்ந்த ஓக் மரங்களினடியில் நிகழ்ந்தன.

நார்ஸ் தொன்மங்களில்  போர் மற்றும் இறப்பின் கடவுளான ஓடினுக்கும் (Odin), அவரது  மனைவியும் கர்ப்பத்திற்கும் தாய்மைக்குமான கடவுளான  ஃப்ரிக்கிற்கும்(Frigg ) பிறந்த மகன் பால்டர் (Balder).   ஃபிரிக் தன் மகனுக்கு நெருப்பு ,நோய், நீர், தாவரங்கள் என விண்ணிலும் மண்ணிலும் இருக்கும் எவற்றாலும் உயிராபத்து வரக்கூடாது என ஒவ்வொரு உயிரினங்களிடமும் சென்று வேண்டி வரம் பெற்றுக் கொண்டாள்.   தன் பாலினத்தையும் உருவத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் தொந்தரவின் கடவுளான லோகி (Loki) நிலத்திலும் வானிலுமல்லாது ஒட்டுண்ணியாக மரங்களில் வளரும் மிஸல்டோவின் கிளைகளினால் அம்பு செய்து பால்டரைக் கொன்றான்.

அதுவரையிலும் கனிகளற்று இருந்த மிஸல்டோவில் தன் மகனுக்காக ஃபிரிக் அழுத கண்ணீர் முத்துக்களே கனிகளாகின, என்றும் தன் மகனைக் கொன்ற மிஸல்டோவை யாரும் வெறுக்காமல் அதன் மீதும் அன்பு செலுத்தி, அதனடியில் எப்போது யார் சென்றாலும் முத்தமிட்டு கொள்ள வேண்டும் என்று அவள் கேட்டுக்கொண்டதாகவும்  சொல்லப்படுகின்றது.

பால்டரின் அன்னை வரம் கேட்க மறந்துவிட்ட மிஸல்டோவை இனி யாரும் மறக்க கூடாது என்பதற்காகவே அதன் குறுங்கிளைகள் பிறகெப்போதும் வீடுகளின் முன்பாக கட்டி தொங்க விடப்படுகிறது என்றும் அந்த தொன்மத்தின் பொருட்டே அதனடியில் முத்தமிட்டு கொள்வதும் வழக்கமாகியது என்றும் பரவலாகச் சொல்லப்படும் ஒரு தொன்மம் சார்ந்த கதை.

பிரபல ஆங்கில நாவலாசிரியர் வின்ஸ்டன் க்ரஹாம் (Winston Graham) மிஸல்டோ முன்பு மரமாக இருந்ததாகவும் அதன் கட்டையிலிருந்தே ஏசு கிறிஸ்துவின் சிலுவை உண்டாக்கப்பட்டதாகவும், அதனால் அம்மரம் சபிக்கப்பட்டு ஓட்டுண்ணியானதாகவும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலோ-சாக்ஸன்கள் (Anglo-Saxons) பிரிட்டானியாவின், தெற்கையும், கிழக்கையும் கிபி 5ம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவிய பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்த ஜெர்மானிய குழுக்கள். இம்மக்களே இங்கிலாந்து நாட்டை அமைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியே ஆங்கிலத்தின் மூல மொழி. அவர்களின் ஆங்கிலோ-சாக்ஸன் மொழியில்தான் ’’கிளையில் இருக்கும் சாணம்’’  என்று பொருள்படும் Mistletoe என்னும் பெயர் இந்த ஒட்டுண்ணிச்செடிகளுக்கு அவை பறவைகளின் எச்சங்களால் வளர்வதை குறிக்குமாறு பெயரிடப்பட்டது.

மிஸல்டோ வரலாறு

மிஸல்டோவின் கீழ் மனிதர்கள் ஏன் முத்தமிட முனைகிறார்கள் என்பதற்கு கடவுள்கள், இறப்பு, காதல், காமம் ஆகியவற்றின் தொன்மம் சார்ந்த விளக்கங்கள் இருந்தாலும், இந்த தாவரம் புனித தன்மையிலிருந்து கலாச்சார குறியீடாக பரிணாம வளர்ச்சி அடைந்தது பல நூற்றாண்டுகால வரலாற்றை கொண்டது. 

பொது ஆண்டுக்கு முந்தைய ’30-19’ல் ரோமானிய கவிஞர் வர்ஜிலால்  (virgil) எழுதப்பட்ட  முற்றுப்பெறாத கவிதைத் தொகுப்பில் //தூய ஆன்மாக்களின் உலகத்தில் நுழைய மிஸல்டோ பந்துகள் தேவைப்படுகின்றன// என்னும் வரிகள் உள்ளன.

விவிலியம் குறிப்பிடும் எரியும் புதர், இலைகளற்ற செங்கனிகளும் மஞ்சள் மலர்களும் நிறைந்த மிஸல்டோவின் தோற்றம்தான் என்றும் சொல்லப்படுகின்றது.

பண்டைய பாபிலோனிய- அஸிரிய சாம்ராஜ்யத்தில் காதல் கடவுளின் ஆலயத்தின் முன்பு  மிஸல்டோ வளர்ந்திருக்கும்  மரங்களினடியில் நிற்கும் இளம்பெண்களை முதன்முதலில் காணும் ஆண் அவளை மணம் புரிந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது அப்போது அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்க வில்லை.

மிஸல்டோவும் அதன் கொண்டாட்டங்களின் போதான பயன்பாடுகளும் கிறிஸ்துவத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்தது. தீராப்பயணி பிளைனி, தியோபிராஸ்டஸ் ஆகியோர் 2000 வருடங்களுக்கு முன்பே மிஸல்டோவை குறிப்பிட்டிருக்கின்றனர். பிளைனி இதை சொர்க்கத்திலிருந்து விழுந்த  ஒரு துளி என்கிறார்.

பிளைனி ரோமானியர்களின் மிஸல்டோ அறுவடைச் சடங்கை விவரித்திருக்கிறார். மிஸல்டோ  வளர்ந்திருக்கும் ஓக் மரத்தின் மீதேறி பொன் அரிவாளொன்றினால் மிஸல்டோவை வெட்டி எடுக்கும் சடங்கின் போது அம்மரத்தின் முன்பாக இரண்டு வெள்ளெருதுகள் பலியிடப்பட்டன. மிஸல்டோ நிலத்துக்கும் வானுக்குமான இடைப்பட்ட உலகில் இருக்கும் தாவரமாக வணங்கப்படுவதால், வெட்டியெடுக்கப்படும் மிஸல்டோ ஒருபோதும் நிலத்தில் விழாதவாறு மரத்தடியில் ஒரு வெண்ணிறத் துணி விரிக்கப்பட்டு அதில் சேகரிக்கப்படுகிறது, 

பின்னர் மிஸல்டோவிலிருந்து விஷமுறிவு போன்ற உயிர்காக்கும் மருந்துகள் அம்மக்களுக்கென அப்புனித நாளில் தயாரிக்கப்பட்டது.  ரோமானியர்களுக்கு முன்பு செல்ட்டுகள் இச்சடங்கில் மனிதர்களை பலியிட்டிருக்கலாம் என்றும் அதை ரோமானியர்கள் தடை செய்து எருதைப் பலியிட்டிருக்கலாம் என்றும் வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது.

கிறிஸ்தவ  மதம் பரவிய காலங்களில் குளிர்கால கொண்டாட்டங்களில் அலங்காரங்களில் இடம் பெற்ற மிஸல்டோ தீய ஆவிகளை விரட்ட கதவுகளில் தொங்கவிடப்பட்டது.  இதன் அலங்கார உபயோகம் பரவலாகிக் கொண்டிருந்தாலும் தேவலாயங்கள் இவ்வழக்கம் பாகன் பழங்குடியினரின் வழக்கமென்பதால் அதன்மீது விலக்கம் கொண்டிருந்தன. பல தேவாலயங்களில் அச்சமயத்தில் மிஸல்டோ கொண்டாட்டங்களில் பயன்படுத்தத் தடை விதித்திருந்தன. ஆனால் வீடுகளில் இதன் உபயோகம்  தொடர்ந்து இருந்தது.

தாவர வகைப்பாட்டு இயலின் தந்தை லின்னேயசும், டார்வினும் மிஸல்டோவை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.  

3ம் நூற்றாண்டில் கிருஸ்துவமதம் பரவியபோது அம்மதத்துடன் மிஸல்டோவின் தொன்மங்களும் இணைந்தது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) ஆய்வாளர்கள்  20000 வருடங்களுக்கு முன்பான  குட்டை மிஸல்டோவின் எச்சங்களை அகழ்வாய்வில்  கண்டுபிடித்திருக்கிறார்கள். ஐரோப்பிய தொன்மங்களில் மிஸல்டோ ஆண்மையின் சாரமாக குறியீடாக கருதப்படுகிறது.

1500 களில் ஐரோப்பாவில் மிஸல்டோவின் கத்தரிக்கப்பட்ட குறுங்கிளைகள், மலர்கள் மற்றும் கனிகளைக்கொண்டு ஒரு பந்துபோல உருவாக்கி வண்ண ரிப்பன்களையும் இணைத்து, அதை வீட்டு முன்பாக தொங்கவிடும் வழக்கமும் குளிர்கால கொண்டாட்டங்களின் ஒரு  பகுதியாக இருந்திருக்கிறது அவற்றை முத்தப் பந்துகள் என அழைத்தார்கள். அதனடியில் நிற்கும் கன்னி பெண்ணுக்கு முத்தமிடப்பட்டால் அவளுக்கு அடுத்து வரும் புத்தாண்டில் திருமணம் நடக்கும் என்றும் மிஸல்டோவின் கனிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முத்தத்தின் போதும் எடுத்துக்கொண்டு கனிகள் தீர்ந்துபோகையில் முத்தமிடுதலும் நின்றுபோவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. பல பல வரலாற்றாய்வாளர்களும் இதை குறிபிடுகிறார்கள் 

1719 மற்றும் 1720களில் மிஸல்டோவை குறித்த விரிவான ஆய்வு நூல்கள்  மருந்தாளுனரும் மருத்துவருமான ஜான் கோல்பேட்சினால்(John Colbatch,) வெளியிடப்பட்டது. அதில் பல பக்கங்களில் மிஸல்டோவை குறித்த தொன்மையான நம்பிக்கைகளும், சடங்குகளுடன் மிஸல்டோவுக்கிருந்த தொடர்புகளும் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அந்நூல்களில் எங்குமே மிஸல்டோ முத்தத்தை அவர் குறிப்பிடவில்லை .

பிரபல வரலாற்றாய்வாளர் மார்க் ஃபோர்சைத் (Mark Forsyth) முத்தமிடுதல் குறித்த இந்தத் தொன்மக் கதைகளில் உண்மையில்லை என்கிறார். அவரது  A Christmas Cornucopia: The Hidden Stories Behind Our Yuletide Traditions என்னும் நூலில் பால்டாவின் மரணம் மிஸல்டோவினால் உண்டாகி இருக்கும் என்னும் தொன்மத்தில் நம்பகத்தன்மை இருக்கலாம் எனினும் மிஸல்டோவின் அடியில் முத்தமிட்டு கொள்ளும் கலாச்சாரத்துக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும்  அந்த தொன்மத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் டைம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலொன்றில்.

ஏதேனும் ஒரு புத்திசாலிப் பையன் அல்லது சாமார்த்தியசாலியான ஒரு பெண்ணால் இவ்வழக்கம் உருவாகி இருக்கலாம் என்று ஃபோர்சைத் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அப்படியான ஒரு வழக்கம்  எப்படி எப்போது துவங்கி இருக்கும் என்பதை யூகிப்பது  மிகவும் கடினம் என்பதைக் குறிப்பிட்டு, ’’எனினும் விவாகரத்து மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான எந்த சாயலும் இல்லாத 18 ஆம் நூற்றாண்டில், காதல் அறவே இல்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் பெண்களின் கவலைகள் மற்றும் தீமைகளின் பட்டியலில்  இந்த கட்டாய மிஸல்டோ முத்தம் என்பது மிக, மிக மிக குறைவான தொந்தரவாகவே இருந்திருக்கும்’’ என்கிறார் அவர்.

1784ல் வெளியான ஒரு பாடலில் முதல் முறையாக மிஸல்டோ முத்தம் குறிப்பிடப்பட்டிருப்பதையும்  ஃபோர்சைத் சுட்டிக்காட்டுகிறார் 

” ஜெம், ஜான், ஜோ, உள்ளிட்ட ஆண்கள்

எங்களுக்கு என்ன அதிர்ஷ்டம் அனுப்பப்பட்டது?’என்று 

கூச்சலிட்டபடியே முத்தமிட்டார்கள்’’,

மிஸெல்டோவுக்கடியில்  

 20 வயது கூட ஆகியிருக்காத இளம் பெண்களுக்கு “

மேலும் பல வரலாற்றாய்வாளர்கள் இந்த பாடலை குறிப்பிட்டு அந்த காலத்தில்தான் மிஸல்டோ முத்தங்கள் பிரபலமாயிருக்கும் என்று யூகிக்கிறார்கள். இங்கிலாந்தில் 1700களின் இறுதியில் துவங்கிய இந்த வழக்கம் 1800களில் உலகெங்கிலும் அறியபட்ட ஒன்றாக இருந்தது  

இப்பாடலுக்கு பின்னர் 18 ம் நூற்றாண்டின் பல பிரபல இலக்கிய படைப்புக்களில் இவ்வழக்கம் இடம்பெற்றிருந்தது.1794 ம் ஆண்டின் சித்திரமொன்றில் ஒரு உணவு கூடத்தில் சமையலறை பணிப்பெண்கள் மிஸல்டோவின அடியில் வலுக்கட்டாயமாக முத்தமிடப்படுகிறார்கள் 

விக்டோரிய காலத்தின் துவக்கத்தில் ஆங்கிலேய பணியாளர்கள் மத்தியில் பிரபலமான இவ்வழக்கம் பின்னர் நடுத்தர குடும்பங்களுக்கும், உயர்குடியினருக்கும் பரவி புகழ்பெற்றது. முத்தமிடுவதை மறுக்கும் பெண்களுக்கு துரதிர்ஷ்டம் நேரும் என்றும் நம்பப்பட்டது  .

மிஸல்டோவின் காதல் குறியீட்டு உபயோகம் 18ம் நூற்றாண்டில் மிக பரவலாகியது அச்சமயத்தில் மிஸல்டோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக மாறிவிட்டிருந்தது

அலங்கார பொருளாக இருந்து புனிதமான தாவரமாக உயர்ந்து காதலின் குறியீடாக மாறிவிட்டிருந்தது மிஸல்டோ

1843ல் சார்ல்ஸ் டிக்கென்ஸ் வெளியிட்ட  ‘A Christmas Carol’ என்னும் நூலில் மிஸல்டோவினடியில் முத்தமிட்டுக்கொளும் சித்திரங்கள் இடம் பெற்றிருந்தன.அதில்தான் மிஸல்டோவின் கனிகள் தீரும்வரையே முத்தமிடுதல் என்னும் தகவலும் இருந்தது. 

டிக்கென்ஸ் அவரது The Pickwick Papers  என்னும் நூலில் மிஸல்டோவினருகில் முத்தமிட்டுக்கொள்வதை சொல்லுகிறார்.

வாஷிங்டன் இர்விங் 1819 மற்றும் 1820ல் தொடர்ந்து வெளியிட்ட,  ‘The Sketch Book of Geoffrey Crayon’ நூலிலும், ‘Christmas Eve’ என்னும் 1855-1859 களில் வெளியான நூலிலும் மிஸல்டோவினடியில் முத்தமிட்டுக் கொள்வதை விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ‘’அந்த அரங்கில் இளம்பெண்கள் கூச்சலிட்டபடி முத்தமிட வரும் ஆண்களிடமிருந்து தப்பிக்க மூலைகளுக்கு ஓடுகிறார்கள் கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்களது முத்தங்களை ஏற்று கொள்கிறார்கள்.’’ என்று விவரிக்கிறார்.

இர்விங்கின் அந்த நூல் 19ம் நூற்றாண்டில் அப்போது சிறு கொண்டாட்டமாக இருந்த கிறிஸ்துமஸ் தினங்களை, மிஸல்டோ முத்தங்களால் வளர்ந்த பெரும் கொண்டாட்டமாக மாற  வழிவகுத்தது.  இந்நூலின் அமெரிக்க வாசகர்கள் மிஸ்ல்டோ முத்தத்தை பின்னர் பரவலாகினர். ஃபிரெஞ்ச் மக்களும் அப்போது மிஸல்டோவை பரிசாக அளிப்பதை பண்டிகை மற்றும்  புத்தாண்டு கால வழக்கமாக கொண்டிருந்தனர்.

குளிர்கால மற்றும் கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்களின் அங்கமாகிவிட்டிருக்கும் மிஸல்டோ ஹாரிபாட்டர் வரைக்கும் பிரபல கலாச்சாரங்களிலும் இடம் பெற்றுள்ளது. ஹாரிபாட்டரும் தன் முதல் முத்தத்தை சோ-சாங்கிற்கு மிஸல்டோவினருகில்தான் அளிக்கிறான்.

18 ம் நூற்றாண்டில் மிஸல்டோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் சாதரணமாகவே காணப்பட்டது. மிஸல்டோ நிலத்தில் படக்கூடாது என்னும் மரபின் படி அது எப்போதும் கயிற்றில் அல்லது சிவப்பு ரிப்பனில் கட்டி தொங்கவிடப்பட்டது. வருடம் முழுவதும் இப்படி தொங்கும் மிஸல்டோ கிளைகள் கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிதாக மாற்றப்படுகிறது

ஜெர்மனியில் இதனருகில் செல்லும் யாராகிலும் முத்தமிடப்படுகையில் அவர்கள் அன்புக்குரியவர்களாகவும் தொடரும் ஆண்டில் அதிர்ஷ்டக்காரர்களாகவும் இருப்பார்கள் என்னும் நம்பிக்கை உள்ளது

கிறிஸ்தவத்தில் முத்தமிடல்

கிறிஸ்தவ மதத்தில் முத்தமிடுவது மரியாதையின், மன்னிப்பின் பொருட்டாக வழக்கத்தில் இருக்குமொன்று. சிலுவை வடிவங்கள், ஏசுவின் சித்திரங்கள் ஆகியவற்றை வணங்குவதும்,  மண்டியிட்டு வணங்குவோரின் புறங்கையில் முத்தமிடுவதுமாக கிறிஸ்துவத்தில் முத்தம் வழிபாட்டின் ஒரு அங்கமாக  இருக்கிறது

 பண்டைய கிறிஸ்தவம் “greet each other with a holy kiss” என்னும் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கன்னங்களில் முத்தமிட்டுக்கொள்வதை வலியுறுத்தியது, ஏசு கிறிஸ்து சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார் என்பதால் பாதங்களில் முத்தமிட்டு வணங்குவதும் கிறிஸ்தவத்தில் ஒரு வழக்கமாக உள்ளது.

மீனவர்களின் கை விரல் மோதிரத்தை முத்தமிடுவதென்பது பண்டைய ரோமானிய சடங்குகளில் ஒன்று.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனிததந்தை, அவரது பெயரும் படகில் அமர்ந்திருக்கும் புனிதர் பீட்டர் உருவமும் பொறிக்கப்பட்ட பொன் மோதிரத்தை அணிவார். அந்த மோதிரத்தை முத்தமிடும் வழக்கம் இன்றளவும் உள்ளது

 30 வெள்ளிக்காசுகளுக்காக யூதாஸ் கிறிஸ்துவை காட்டிக்கொடுத்ததும் முத்தமிட்டுத்தான் என்கிறது விவிலியம்.

எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது மிஸல்டோவினடியில் அன்பை பரிமாறிக்கொள்ள முத்தமிடுவதை கிறிஸ்துவம் சார்ந்த ஒரு சடங்காகவும் நினைத்துக்கொள்ளலாம்

தாவரவியல் தகவல்கள்

உலகெங்கிலும் சுமார் 1500  வகை மிஸல்டோக்கள் உள்ளன அனைத்துமே மரங்களின் மீது ஒட்டுண்ணிகளாய் செழித்து புதர் போல் வளர்பவை

அனைத்து மிஸல்டோக்களும் விஸ்கேசி (Viscaceae) மற்றும் லொராந்தேசி (Loranthaceae) குடும்பங்களை சேர்ந்தவை. லொராந்தேசி மிஸல்டோ தாவரங்கள் வண்ணமயமானவை. நவீன தாவர வகைப்பாட்டியல் விஸ்கேசியை சந்தன மரங்களின் குடும்பமான சாண்டலேசியின் துணைக்குடும்பமாக அங்கீகரிக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும் மிஸல்டோ விஸ்கம் ஆல்பம்(Viscum album) என்னும் அறிவியல் பெயர் கொண்டது. மிஸல்டோவுக்கு  birdlime, all-heal, golden bough, drudenfuss, iscador மற்றும் devil’s fuge, என்றும் பெயர்கள் உண்டு

ஐரோப்பாவிற்கு வெளியே மிஸல்டோவின் பலவேறு சிற்றினங்களும் வகைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. 

வட் அமெரிக்காவில் பல மிஸல்டோ வகைகள் உள்ளன. முக்கியமாக  Phoradendon  leucarpum சிற்றினம் இங்கு அதிகம் பயன்பாட்டில் உள்ளது. அறிவியல் பெயரான Phoradendron, என்பது மர திருடன் என்று பொருள்படுகிறது. 

அதைக்காட்டிலும் சிறிய செடியான Arceuthobium சிற்றினமும் அங்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது இவை குட்டை மிஸல்டோ என அழைக்கப்படுகின்றன இவை செதில்களை போன்ற சிற்றிலைகளுடன் காணப்படுபவை.

மிஸல்டோ ஒட்டுண்ணியென்பதால் அது சார்ந்திருக்கும் மரங்களிலிருந்து  நூல் போன்ற உறிஞ்சும் வேர்களால் நீரும் சத்துக்களும் எடுத்துக்கொண்டு எப்போதும் பசுமை மாறா தாவரமாக இருக்கும்.

அமெரிக்க மிஸல்டோ கனிகள் வெடித்து சிதறி சுமார் 50 அடி தொலைவுக்கு அதன் விதைகளை பரப்பும்

மிஸல்டோ கனிகள் மனிதர்களுக்கு நஞ்சல்ல எனினும் செல்லப்பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்துண்டாக்கும் எனவே கவனம் தேவை

அடர்ந்து வளரும் இவற்றின் கனிகளை பல வகை பறவைகளும் அணில்களும் விலங்குகளும் உணவாக எடுத்துக் கொள்கின்றன  மிகப்பெரிய புதராக வளரும் இவற்றில் பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன

விஸ்கம் ஆல்பம்  கிளைத்திருக்கும் தண்டுகளும், பசுமைமாறா ஜோடி இலைகளும் வெளிர் மஞ்சள் மலர்களும் வெண் கனிகளும் கொண்டவை.  சொரசொரப்பான கடினமான இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும் 

இவற்றின் உறிஞ்சும் வேர்கள் மரங்களின் தண்டுக்குள் சென்று உணவையும் நீரையும் உறிஞ்சிக்கொள்ளும் இவை  5 வருடங்கள் கழித்தே மலர்க்காம்பற்ற மிகச்சிறிய  மலர்களை உருவாக்கும்.   ஆண் பெண் மலர்கள் தனித்தனியே காணப்படும் ஜூனிபர், பைன், ஓக் மற்றும் பலவகை மரங்களில் இவை வளரும். 

இதன் கனிகளில் ஒற்றை விதை பசை போன்ற viscin என்னும் சதையால் சூழப்பட்டிருக்கும். விசினின் ஒட்டும் தன்மையால் விதைகள் முளைக்கும் வரை காற்றாலும் மழையாலும் அவ்விடத்திலிருந்து நீங்காமல் பாதுகாக்கப்படுகின்றன

மிஸல்டோ ஒரு பகுதி ஒட்டுண்ணி அதாவது அவை வளரும் மரங்களிலிருந்தும் உணவை நீரை எடுத்துக் கொள்வதோடு இலைகளின் பச்சையம் கொண்டு பிற தாவரங்களைப்போல ஒளிச்சேர்க்கையின் மூலமாகவும் உணவு தயாரிக்கின்றது

இவை செழித்து வளர்ந்து ஒரு மூட்டைபோல் மரங்களின் கிளைகளில் காணப்படுவதால் சூனியக்காரியின் துடைப்பம், மரம் மேல் கூடை போன்ற வழங்கு பெயர்களும் உள்ளன 

மிஸல்டோ ஆப்பிள் மரங்களில் மிக அதிகமாக வளரும். வெளிச்சம் குறைவான காட்டில் வளரும் மரங்களை காட்டிலும் , அதிக வெளிச்சம் கொண்ட தனித்தனியான மரங்களில் இவை நன்கு செழித்து வளரும்

பிசிபிசுப்பான ஒட்டும் தன்மை கொண்ட இதன் கனிகள்  பறவைகளின் இறகுகளில் ஒட்டிக்கொண்டு பல இடங்களுக்கு பரவும் சுவையான கனிச் சதையை உண்ணும் விலங்குகளும் இவற்றை பரப்பும். மரங்களின் மீது விழும் விதைகள் அம்மரத்தின் ஒட்டுண்ணியாக வளர தொடங்கும். மரங்களின் மீது விழும் மிஸல்டோ விதைகள் 6 வாரங்களில் முளைக்கின்றன. மிஸல்டோ கனிகளில்  phoratoxin என்னும் நஞ்சு இருக்கிறது. 

 பல்லாண்டு தாவரங்களான இவை தான் வளர்ந்திருக்கும் மரங்களை கொல்லுவதில்லை மாறாக உணவுக்கும் நீருக்கும் மட்டுமே அவற்றை சார்ந்திருக்கின்றன. பொதுவாக மிஸல்டோக்களின் வளர்ச்சி அவை சார்ந்திருக்கும் பெருமரங்களை பாதிப்பதில்லை. எனினும் ஒரே மரத்தில் பல மிஸல்டோ தொகுதிகள் வளருகையில் மரத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது

இவற்றை கட்டுப்படுத்த செய்யப்படும் அனைத்து முயற்சிகளும் மிஸல்டோ சார்ந்திருக்கும் மரங்களின் வளர்ச்சியையும் சேதப்படுத்துமென்பதால் கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இல்லை

 இவற்றின் வேறுபாடுகளும் வகைகளும்

  • Viscum album subsp. abietis வெண்ணிற கனி, இலைகள் 8 செமீ.மத்திய ஐரோப்பாவில் காணப்படும். Viscumin என்னும் கடும் நஞ்சு கொண்டது. கனிகள் உயிராபத்து உண்டாக்கும்
  • Viscum album subsp. album. ஐரோப்பா, தென்மேற்கு ஆசியாவிலிருந்து நேபாளம் வரை காணப்படுவது. கனி வெண்ணிறம்,இலைகள் 3-5 செ மீ. ஆப்பிள் போப்புலஸ் மற்றும் டீலியா மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. austriacum -கனி மஞ்சள் நிறம், இலைகள் 2-4 செமீ மத்திய ஐரோப்பாவில் காணப்படுபவை பைனஸ் லாரிக்ஸ் மற்றும் பிசியா மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. meridianum தென்கிழக்காசியாவில் காணப்படும்.கனி மஞ்சள் நிறம், இலைகள் 3-5 செ மீ மேப்பிள், ப்ரூனஸ் மற்றும் சோர்பஸ் மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. creticum  சமீபத்தில் கிழக்கு கிரீட்டில்(Crete) கண்டறியப்பட்டது. கனி வெண்ணிறம், இலைகள் மிகமிக சிறியவை பைனஸ்  மரங்களில் வளரும்
  • Viscum album subsp. coloratum  – சீன மிஸல்டோ, சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
  • American mistletoe (Phoradendron leucarpum)  வடஅமெரிக்காவில் காணப்படுவது.
  • European mistletoe (Viscum album) ஐரோப்பா மற்றும் ஆசியாவில் காணப்படுவது.
  • P. tomentosum ssp. macrophyllum-Big leaf mistletoe, தென்மேற்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவிலிருந்து டெக்ஸாஸ் வரை காணப்படுவது. 
  • Arceuthobium spp-Dwarf mistletoe வட அமெரிக்காவிற்கு அறிமுகமான அயல் தாவரம் . குட்டையானது
  • Viscum articulatum- இந்தியாவில் ஜகரண்டா மரங்களில் காணப்படுகின்றன-இலைகளற்றவை. சதைப்பற்றான தட்டையான பசுந்தண்டுகளை  கொண்டவை.  சமஸ்கிருதத்தில் இவை காமினி எனப்படுகின்றன.
  • Viscum triflorum-கிழக்கு ஆப்பிரிக்க மிஸல்டோ, சிறிய வட்ட இலைகளை கொண்டது. 
  • Viscum minimum- மிகச்சிறிய தாவரம், சதைப்பற்றான தாவரங்களின் தண்டுகளில் வளருபவை
  • Loranthus longiflorus (Honeysuckle Mistletoe) – இந்திய மிஸல்டோ-வேம்பு , வாகை, புங்கை போன்ற மரங்களில் வளரும்.
  • Loranthus acacia, Agelanthus sansibarensis-ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் காணப்படும்  இவையிரண்டும்  அலையாத்தி மரங்களின் மீது வளர்பவை
  • Helicanthes elastica- the mango tree Mistletoe- இந்திய மாமர மிஸல்டோ-தடித்த பளபளப்பான காம்பற்ற இலைகளை கொண்டது 

மிஸல்டோவின் சூழல் முக்கியத்துவம்

மிஸல்டோக்கள் வெறும் காதலின் சின்னங்கள் மட்டுமல்ல, காடுகளில் சூழல்முக்கியத்துவம் கொண்ட மிக முக்கியமான தாவரமாகவும் இருந்து வருகிறது. ஒட்டுண்ணி என்னும் பெயர் இருப்பினும் மிஸல்டோ உணவு உறைவிடம் ஆகியவற்றை பிற உயிரினங்களுக்கும் அளிக்கும் தாவரமாகவே இருக்கிறது. விலங்குகள் பறவைகள் மட்டுமல்லாது வண்ணத்து பூச்சிகளுக்கும் இவை உணவளிக்கின்றன. மேலும் தான் பெற்ற சத்துக்களை  மரங்களிலிருந்து விழுந்த பின்னர் நிலத்துக்கே மீண்டும் அளிக்கிறது

பாலைமரங்களிலும் இவை வளர்ந்து அங்கிருக்கும் உயிரினங்களுக்கு வேறெதுவும் கிடைக்காதபோது உணவளிக்கின்றன. மிஸல்டோ குளிர்காலத்தில் தேனீக்களுக்கு மகரந்தங்களையும் மலரமுதினையும் அளிக்கிறது.   

செழிப்பான வனப்பாதுகாப்பு சூழலுக்கு இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பங்காற்றி வருகின்றன.

மான்களின் விருப்ப உணவாக மிஸல்டோ இருப்பதால் அமெரிக்க பழங்குடியினர் மிஸல்டொவை இரையாக  வைத்து மான்களை பிடிப்பது உண்டு

மருத்துவ பயன்கள்

 பண்டைய கிரேக்கர்கள் மிஸல்டோவை மாதவிலக்கு வலியிலிருந்து கல்லீரல் கோளாறுகள் வரை சிகிச்சையளிக்க பயன்படுத்தினர். இது சாவா மூவா மருந்து என்னும் நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது

மனித இன அறிவியலான Anthroposophy’யை தோற்றுவித்தவரான ருடால்ப் ஸ்டெய்னர் மிஸல்டோவை புற்றுநோய்கெதிரான சிகிச்சையில் பயன்படுத்தலாமென்பதை தெரிவித்தார். மிஸல்டோவிவிலிருந்து அமெரிக்க மருத்துவர்கள் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கின்றனர். மிஸல்டோவின் சாறு கீமோ சிகிச்சையைக் காட்டிலும் மிககுறைந்த பக்கவிளைவுகளை அளிக்கிறது

மிஸல்டோ இலைகளையும், இளம் தண்டுகளையும் அரைத்து சாறெடுத்து பல சிகிச்சைகளில் ஐரோபியர்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக சுவாச கோளாறுகளுக்கு,

பிற பயன்கள்

மிஸல்டோ கனிச்சாறை கொண்டு உருவாக்கப்படும் பசையை மரக்கிளைகளில் தடவி பறவைகளையும் அணில் போன்ற சிறு விலங்குகளையும் பிடிக்க வேட்டைக்காரர்கள்  பயன்படுத்துகின்றனர்.

மிஸல்டோவின் இலைகள் பாலுணர்வை தூண்டும் இயல்பை கொண்டிருக்கிண்றன.(aphrodisiac). ஆஸ்திரியாவில் புதுமண தம்பதிகளின் மண இரவில்  கட்டிலில்  மிஸல்டோவை வைக்கும் வழக்கம்  தொன்று தொட்டு இருக்கிறது. ஜப்பானிய தொல்குடிகளான ஐனுக்கள் (Ainu) வயல்களில் நடவுக்கு முன்னர் நறுக்கிய மிஸல்டோவை வைத்து வணங்கி நல்ல மகசூல் கிடைக்க வழிபாடு நடத்துகின்றனர்

இஸ்டிரியாவில் (Istria)பிஸ்கா (Biska) என்னும்  மிஸல்டோ  சாறு கலந்த பிராந்தி தயாரிக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் ஹெர்ஃபெட்ஷியா நகரின் மலராக மிஸல்டோ மலர் 2002ல் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பெயினில் குளிர்கால கொண்டாட்டங்களின் போது மிஸல்டோவை அம்பு செலுத்தி மரங்களினின்றும் விடுவித்து அவற்றை நிலத்தில் விழாமல் வலது கையில் பிடிப்பது ஒரு சடங்காக செய்யப்படுகிறது

கிறிஸ்துமஸ் காலங்களில் இவற்றை சேகரித்து சந்தைப்படுத்தும் தொழிலில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சில குடும்பங்கள் மட்டும் பல தலைமுறைகளாக  ஈடுபட்டுவருகின்றனர்.

மிஸல்டோ நறுமணம் கொண்ட மிட்டாய்களும் இனிப்புக்களும்  கிறிஸ்துமஸ் சமயங்களில் கிடைக்குமென்றாலும் மிஸல்டோவில் எந்த நறுமணமும் இல்லை.

தாவரகுருடு

தாவரகுருடு என்று சொல்லப்படும்  தாவரங்களை சரியாக அடையாளம் காணமுடியத சிக்கல் இந்த மிஸல்டோ விஷயத்திலும் இருக்கிறது

பலர் அசல் மிஸல்டோவை அடையாளம் காணமுடியாமல் சிவந்த கனிகளை கொண்டிருக்கும் ஹோலி எனப்படும் (Ilex aquifolium) மற்றொரு தாவரத்தையும் மிஸல்டொவாக பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகள் முட்கள்,போல குத்தும் மடிப்புக்கள் உடையது.இவற்றின் கனிகள் ரத்த சிவப்பில் இருக்கும். இவை ஒட்டுண்ணிகள் அல்ல, மிஸல்டோக்களும் அல்ல. நிலத்தில் வேரூன்றி வளரும் தாவரங்கள். பண்பாட்டுடன் இணைந்துள்ள தாவரங்களை இனங்கண்டு அவற்றை முறையாக பயன்படுத்துவது  மிக அவசியமானது. 

 கிறிஸ்துமஸ் தாவரவியல் மற்றும் விழாக்கால சூழியல் என்று தனி கிளை துறைகள் இருக்கின்றன. தாவரங்களின் விழாக்கால பயன்பாடுகளையும் அவை சார்ந்த தொன்மங்களையும் இத்துறை கற்பிக்கிறது(.Christmas Botany & Festive Ecology) 

தாவரங்களின் கலாச்சார முக்கியத்துவம்

மனித வாழ்வாதாரம் தாவர உலகத்துடன் உணவு, உடை இருப்பிடம் மருந்து, கேளிக்கை என பல தேவைகளின் பொருட்டு மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. பல கலாச்சாரங்களில், குறிப்பிட்ட சில தாவர இனங்கள் அதற்கு அப்பாலும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன என்பதற்கு மிஸல்டோவும், கிறிஸ்துமஸ் மரங்களும் சிறந்த உதாரணங்கள்

சார்ந்திருக்கும் சமூக வாழ்விற்கான குறியீடாக, பிறருக்கு பலனளிக்கும் ஒர் உயிரினமாக, அசாதாரண சூழலிலும் தானும் வழ்ந்து பிறரையும் வாழவைக்கும் ஒன்றாக பல வகைகளில் இந்த மிஸல்டோவை நாம் பொருள் கொள்ளலாம்

அக்காலத்தில் மிஸல்டோவினடியில்  முத்தமிடப்படுவது திருமணத்திற்கான உத்தரவாதம் என கருதப்பட்டது. பாலியல் சுதந்திரம் கட்டற்று இருக்கும் இக்காலத்தில் மிஸல்டோ முத்தம் அன்பை பரிமாறிக் கொள்ளும் பொருளை மட்டும் தான் கொண்டிருக்க முடியும். எனவேதான் மிஸல்டோவை கடக்கும், அதனடியில் நிற்கும் யாரும் யாராலும் முத்தமிடப்படுகிறார்கள் 

எத்தனை கனிகளோ அத்தனை முத்தங்கள், என்பதையும் நாம் வாழ்வில் சக மனிதர்களிடம் எத்தனை முறை அன்பை செலுத்துகிறோம் என்பதன் கணக்கீடாகவும் எடுத்துக்கொள்ளலாம்

நார்ஸ், கிரேக்க ரோமானிய தொன்மங்களில் இடம் பெற்றிருக்கும் இந்த மிஸல்டோ குறுங்கிளைகளினடியில் முத்தமிடும், முத்தமிடப்படும் வாய்ப்பு  கிடைக்கையில் தவிர்க்க வேண்டாம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது பரிசுப் பொருட்களும் அன்பும் அவற்றுடன் முத்தங்களும் பரிமாறப்படட்டும்

இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு நகரமே தயாராகிக் கொண்டிருக்கிறது. மாலை வேளைகளில் சிறுவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு முன் வந்து சிறிது நேரம் நின்றுபாடல்கலை பாடிச்செல்கிறார் .

நேற்றிரவின்  பாடல் 

“ஒரு வான்கோழி மற்றும் சில மிஸல்டோக்கள் இந்த கொண்டாட்ட காலத்தை பிரகாசமாக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.” என்றது.

  1. மிஸல்டோவை குறித்தும் அதன் பழங்குடி உபயோகம், வரலாறு குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவும் மிஸல்டோ இணையதளம்:https://mistletoe.org.uk/mp/.
  2. https://wonderopolis.org/wonder/why-do-people-kiss-under-mistletoe/
  3. https://wonderopolis.org/wonder/why-do-people-kiss-under-mistletoe/
  4. https://insider.si.edu/2011/12/mistletoe-facts-from-a-smithsonian-botanist/
  5. காணொளி- https://youtu.be/QtJqBiF6EF0

« Older posts

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑