லோகமாதேவியின் பதிவுகள்

Author: அதழ் (Page 2 of 26)

செம்பருத்தி செம்பருத்தி!

1760-களின் இறுதியில் HMS Endeavour கப்பல் தென்பசிஃபிக் கடலின் மனிதவாசம் படாத பிரதேசங்களையெல்லாம் கடந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப்பயணத்தினூடே பழங்குடியினரின் வாழ்விடங்களில் மட்டும் இருந்த செம்பருத்திச் செடியின் விதைகளும் மேற்கத்திய உலகிற்குப் பயணித்தன. 

நம் வீடுகளில் எளிமையாக வளர்ந்து கொண்டிருக்கும் செம்பருத்தி வெறும் தாவரவியல் அற்புதம்  மட்டுமல்ல; அது மனிதத் தேவைகளுக்கும், அந்தத் தேவைகளைத் தீர்ப்பதன் மூலம் தாங்களின் வாழ்வையும் பரவலையும் உறுதிசெய்துகொண்ட  தாவரங்களின் நுண்ணறிவிற்கும் இடையே காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒரு உயிரியல் ஒப்பந்தமும் கூட.

1769-ல் கேப்டன் ஜேம்ஸ் குக்கும் அவரது கப்பலின் தாவரவியலாளரான ஜோசப் பேங்க்ஸும் தஹிதி தீவில் நுழைந்தார்கள். அவர்களுக்கு அழகிய செம்பருத்தி மலர்களால் ஆன மாலைகளை அணிவித்து அத்தீவின் பழங்குடியினர் வரவேற்பு அளித்தார்கள். மலர்களில் அழகென்றால் ரோஜாதான் என்று அறிந்திருந்த அவர்களுக்கு, இரத்தச் சிவப்பில் மிகப்பெரியதாக இருந்த, மலரின் நடுவில் இருந்து சிறு கம்பி போல நீட்டிக்கொண்டிருந்த மகரந்தக் குழாயுடன் கூடிய அந்த அழகிய மலர் பெரிய தாவரவியல் அதிசயமாகத் தெரிந்தது.

அதை தஹிதி தீவுவாசிகள் ‘கட்டுமர மலர்’ என அழைத்தார்கள். அவர்களின் முன்னோர்களின் கடற்பயணங்களில் கட்டுமரங்களில் அவர்களின் பயணத் துணையாக எப்போதும் இருந்ததால், அம்மலருக்கு அப்பெயர் வந்திருந்தது.

அக்காலத்தில் கடற்பயணங்களில்  உணவுக்காக சேம்பு, கறிப்பலா, மற்றும் வாழை  ஆகியவற்றைப் போலவே,  மருத்துவ உபயோகங்கள் கொண்டிருந்த, அடர்நிறச்  சாயம் அளித்த செம்பருத்தியும்  தவறாமல் கொண்டு செல்லப்பட்டது. கடற்பயணங்களில், கரையொதுங்கிய பல  தீவுகளிலிருந்த  மலர்ச் செடிகளில் செம்பருத்திச்செடியின் ஆதிப்பயிர் கடற்பயணிகளால்  கலப்பினச் சோதனைகளுக்கு உட்பட்டிருக்கலாம்.  நீண்டகாலப்பயணத்துக்குப்பிறகு இவை இந்தியா மற்றும் சீனாவை வந்து சேர்ந்தபோது, மனிதர்களால் முழுமையாக மேம்படுத்தப்பட்ட ஒரு பயிரிடு வகையாக (Cultigen) இப்போதிருக்கும் செம்பருத்திச்செடியாக  மாறியிருக்கக் கூடும்.

குக்கும் பேங்க்ஸும் அந்த மலர்ச்செடி அந்தத் தீவின் காடுகளில் எங்கும் வளர்ந்திருக்கவில்லை என்பதை அறிந்தார்கள். அந்தத் தீவுவாசிகளால் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கியப் பங்கை வகிக்கும் ஒரு மலராக அது இருந்ததையும் அவர்கள் கவனித்தார்கள்.

கப்பல் குழுவினர் தஹிதியில் தங்கியிருந்த காலத்தில், அத்தீவுவாசிகள் மரவுரி ஆடைகளில் பிற தீவினரைப் போல சாயக் கற்கள் அல்லது கரியைக் கொண்டு சாயமிடாமல், செம்பருத்தியின் செவ்விதழ்களைக் கற்களுக்கடியில் வைத்து நசுக்கிப் பிழிந்து கிடைக்கும் சிவப்புச் சாற்றை, சிறிது நேரத்தில் ஆழ்ந்த பழுப்பு நிறம் கொண்டு விடும்போது அதைக்கொண்டு மரவுரிகளுக்குச் சாயமிடுவதை குக்கின் குழுவினர் அதிசயமாகக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அதே சாயத்தைப் பெண்கள் புருவங்களுக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டுக்கொள்வதும் குக்கினால் ஆவணப்படுத்தப்பட்டது.

குக் மற்றும் பேங்க்ஸ் வரைந்த நேர்த்தியான செம்பருத்திச் செடியின், மலரின் சித்திரங்களும், அவர்கள் சேகரித்த செம்பருத்திச் செடியின் உலர் தாவரங்களும், விதைகளும் கியூ ராயல் தாவரவியல் பூங்காவிற்கு வந்து சேர்ந்தன. பின்னர் உலகின் பல பாகங்களுக்கும் செம்பருத்தி அறிமுகமானது.

செம்பருத்தி மலர் ஐரோப்பிய தாவரவியலாளர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. அந்த அழகிய மலர்ச்செடி பசிஃபிக் பகுதியினரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதையும், செம்பருத்தி ஒரு ‘மனிதப்பயிரிடு வகை’ என்பதையும், மனிதர்களால் அவர்களின் தேவைக்கேற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வளர்க்கப்படும், காட்டு மூதாதையர்கள் ஏதுமில்லாத ஒரு தாவரம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

சீனா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கக் காடுகள் எதிலும் செம்பருத்தியின் காட்டு மூதாதையர்கள் இல்லை. எனவே, இவை இந்தியாவையோ அல்லது அந்த நாடுகளையோ பூர்வீகமாகக் கொண்டிருக்க முடியாது. இந்தியப் பெருங்கடல் தீவுகளில் இருந்த H. liliiflorus மற்றும் H. schizopetalus ஆகிய இரு இனங்களின் அழகிய மலர்களைக் கண்ட பண்டைய மாலுமிகள், கலப்பினச் சோதனைகள் மூலம் உருவாக்கியவையே இன்றைய செம்பருத்தியின் மூதாதையர்களாக இருக்கக்கூடும். காட்டு மூதாதையர்கள் மட்டுமல்ல, புதைபடிம எச்சங்களும் (Fossils) செம்பருத்திக்கு இல்லை என்பது, இது ஒரு பயிரிடு வகை (Cultigen) என்பதற்குச் சான்றாகும்.

ஜேம்ஸ் குக்கினால் கண்டுபிடிக்கப்பட்ட செம்பருத்தி, பின்னர் வெகுவேகமாக உலகெங்குமே பெருகிப் பரவியது. தொடக்க நாட்களில் குக் ஆவணப்படுத்தியதிலிருந்து, கடற்பயணத் துணையான செம்பருத்தியின் பயன் உலகெங்குமே பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

விழியை இழந்த தாவரவியலாளர் ஜார்ஜ் ஈபர்ஹார்ட் ரம்பீயஸ் (Georg Eberhard Rumphius), 17-ம் நூற்றாண்டில் செம்பருத்திச் சாற்றை அம்போன் தீவுப் பெண்கள் கண் புருவம் மற்றும் தலைமுடிக்குச் சாயமேற்றப் பயன்படுத்துவதைத் தனது Herbarium Amboinense என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

செம்பருத்தி அக்காலத்தில் அழகுத் தாவரமாக மட்டுமல்லாமல், அதன் மருத்துவக் குணங்கள் கொண்ட பிசுபிசுப்பான திரவம், சாயம் மற்றும் தண்டின் நார் போன்றவற்றுக்காகச் சாகுபடி செய்யப்பட்ட ஒரு பணப்பயிராகவே இருந்தது.

உண்மையில் செம்பருத்தி குக்கினால் கண்டுபிடிக்கப்பட்டு உலகளாவிய பயன்பாட்டுக்கு வந்தது என்பது வெறும் தற்செயலான ஒரு தாவரக் கண்டுபிடிப்புத்தான். உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து தாவரப் பொறியியல் மற்றும் கலப்பினச் சோதனைகள் மூலம் உருவாக்கப்பட்ட, அழகுக்கும் தாவரஅறிவியலுக்குமான உலகளாவிய குறியீடாகவே செம்பருத்தி இன்றுவரை இருக்கிறது. மனிதகுல வரலாற்றில் செம்பருத்திக்கென மிகத் தனித்துவமான ஒரு இடம் இருக்கிறது.

கூடவே செம்பருத்தித் தாவரத்தின் புத்திசாலித்தனமும் வியக்கவைக்கும் ஒன்று. மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, நறுக்கப்பட்ட தண்டு (Stem cuttings) மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, இயற்கையாகவே வளர்ந்த செம்பருத்திச் செடிகள் மலர்களை உருவாக்கி, மகரந்தச் சேர்க்கையாளர்களைக் கவர்ந்து, பாலினப் பெருக்கம் செய்து விதைகளை உருவாக்கின. விதைகளை உருவாக்கச் செம்பருத்திச் செடிக்கு, பிற செடிகளைப் போலவே ஏராளமான ஆற்றல் தேவைப்பட்டது. உருவாகும் விதைகளைப் பல இடங்களுக்கும் பரவச் செய்து, சந்ததிகளின் வாழ்வை உறுதிப்படுத்தவும் ஆற்றல் தேவைப்பட்டது.

ஆனால் செம்பருத்தி ஒரு பயிரிடு இனமாக மனிதர்களால் மாற்றப்பட்ட பிறகு, அது பாலினப் பெருக்கத்திற்குச் செலவழித்த, 20 விதைகள் கொண்ட கனியை உருவாக்குவதற்குத் தேவையான ஆற்றல்  அப்படியே மீதமானது. பலமுறை கலப்பினச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதால், 4, 6 அல்லது சில சமயங்களில் 8 ஜோடி குரோமோசோம்களைக் (Polyploidy) கொண்ட செடியாக இருந்ததால், வீரியம் அதிகமுள்ள அதிக வெப்பம் உள்ளிட்ட பல சூழல் சிக்கல்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டிருந்த ஒரு செடியாக மாறிய செம்பருத்திக்கு  விதைகள் உருவாகாத மலட்டுத்தன்மையும் உண்டானது.

தானாகவே மலட்டுத்தன்மையை உருவாக்கிக்கொண்ட செம்பருத்திச் செடியிலிருந்து முளைதிறன் இல்லாத விதைகள் சிறிது காலம் உருவாகின. பிற்பாடு தனது புத்திசாலித்தனத்தினால், முளைக்காத விதைகளை அளிக்கத் தேவைப்பட்ட ஆற்றலை, மலர்களை மிக அழகாகவும் மிகப் பெரியதாகவும் உருவாக்குவதற்குச் செலவழித்து கனிகள் உருவாக்கத்தை நிறுத்திக்கொண்டது செம்பருத்தி. 

மனிதர்களின் மலர்களுக்கான ஆசையைத் தூண்டி, அதன் மூலம் தனது இனப்பெருக்கத்தையும் சந்ததிப்பரவலையும் உறுதி செய்துகொண்டது செம்பருத்தி.

செம்பருத்திச் செடி தனது அழகான, பெரிய வண்ணமயமான மலர்களையும், மருத்துவப் பயனுள்ள வழுவழுப்புத் தன்மையையும் மனிதர்களைத் தன்பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு உத்தியாகக் கையாண்டது. 

“நான் உங்களுக்கு அழகையும் பயன்களையும் தருகிறேன்; பதிலுக்கு நீங்கள் என்னை அழிந்துபோகாமல் அடுத்தடுத்த இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்னும் ஒரு உயிரியல் ஒப்பந்தத்தின் மூலம் இன்றுவரை உலகின் மிக விரும்பப்படும் பாலிலா இனப்பெருக்கம் மூலம் பரவும் செடியாகச் செம்பருத்தி இருக்கிறது.

தனது இனப்பெருக்கத்திற்கு விதைகளை நம்பியிருக்காமல் மனிதனின் தேவையையும் ஆசையையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உலகெங்கும் பரவிய தாவரங்களில் செம்பருத்தி முதன்மையானது. கடற்பயணங்களில் தேவைப்படும் மருந்துகளுக்கும் சாயத்துக்கும் மிக அவசியமானதொரு செடியாக இருந்ததன் மூலம் தனது கடல்வழிப் பயணத்தையும் செம்பருத்தி உறுதி செய்துகொண்டது.

இதன் புத்திசாலித்தனத்திற்கு இன்னும் ஒரு உதாரணமாகச் செம்பருத்திச் செடி ஒரு ‘பேக்-அப்’ (Back-up) உத்தியையும் வைத்திருக்கிறது. ஒருவேளை மனிதர்களுக்குச் செம்பருத்தியின் மீதான ஆசையோ தேவையோ அற்றுப் போனாலும், மீண்டும் பழையபடி விதைகளை உருவாக்கும் திறனையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. இதை அவ்வப்போது நம் வீடுகளில் இருக்கும் செம்பருத்திச் செடிகள் கனிகளை உருவாக்குவதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

செம்பருத்தி எப்படி விதைகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டுத் தண்டுகள் மூலம் பரவி உலகின் ராணியாக இருக்கிறதோ, அதேபோல மக்காச்சோளமும் மிகத் தடிமனாகவும், பல அடுக்குகளாகவும் இருந்த தனது கதிர் உறையை மெலிதாகவும். எண்ணிக்கை குறைவாகவும் மாற்றி, அதற்குத் தேவைப்பட்ட ஆற்றலைக் கதிர்மணிகளின் நிறம் மற்றும் அளவை அதிகரிக்கப் பயன்படுத்திக்கொண்ட பயிர். மக்காச்சோளமும் மனிதர்கள் இல்லாவிட்டால் உலகெங்கும் பரவ முடியாத ஒரு பயிர். தனித்தன்மை வாய்ந்த மிகப்பெரிய விதைகளைக் கொண்டிருந்த காட்டுச் சோளத்தை (Teosinte), பலநூறு ஆண்டுகளாக மனிதர்கள் தொடர்ந்து கலப்பின ஆய்வுகளுக்கு உட்படுத்தியதால், விதைகளுக்கான சதவீதத்தை அதிகரித்துக் கொண்ட ஒரு பயிர் இது. 

கடினமான பெரிய விதைகளைக் கொண்டிருந்த காட்டு வாழைப்பழங்களிலிருந்துதான் மனிதர்கள் தொடர்ந்து கலப்பின சோதனைகள் செய்து பார்த்து, மிகச்சிறிய மென்மையான விதைகளும் அதிக சுவையான சதைப்பகுதியையும் கொண்டிருக்கும் இன்றைய வாழைப்பழத்தை உருவாக்கினார்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ப்ரோக்கலி, என்று இப்படியான கல்டிஜென்களுக்கு பல உதாரணங்கள் உள்ளன.

இந்தத் தாவரங்களின் உயிரியல் ஒப்பந்தம் அவற்றின் தாவரப் புத்திசாலித்தனத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. தங்களுக்கென இருக்கும் பிரத்யேக உயிர்வாழும் உத்தியினால் மனிதர்களுடன் இணைந்து, அவர்களின் வாழ்வியலில் ஒரு தனித்துவமான, பிரத்யேகமான, நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளன இந்தத் தாவரங்கள்.

Hibiscus rosa-sinensis என்னும் தாவரவியல் பெயர் கொண்டியிருக்கும் செம்பருத்தி, இப்போது உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஒரு சாகுபடி மலர். ‘சீனச் செம்பருத்தி’ அல்லது ‘ஷூ பிளாக் பிளாண்ட்’ (Shoeblack plant) என்று அழைக்கப்படும் செம்பருத்தி, பருத்தியின் குடும்பமான மால்வேசியை (Malvaceae) சேர்ந்தது. இது 1.5 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமைமாறாப் புதர்ச் செடி. மிக வளமான நிலங்களில் ஒரு குறுமரமாகவும் வளரும் இயல்பு கொண்டது.

பல்லாண்டுகளாகச் செம்பருத்தி இதழ்களின் வழுவழுப்பான சாற்றைக் கொண்டு, செயற்கை பாலிஷ் கண்டுபிடிக்கப்படும் வரை ஷூக்களைப் பாலிஷ் செய்யப் பயன்படுத்தியதால், இந்தச் செம்பருத்திக்கு ‘ஷூ பிளாக் பிளாண்ட்’  என்று பெயர் வந்தது.

இதன் இலைகள் பளபளப்பாகவும், முட்டை வடிவிலும், விளிம்புகளில் ரம்பம் போன்ற அமைப்பையும் கொண்டவை. இதன் மலர்கள் பொதுவாகச் சிவப்பு மற்றும் பல அழகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. மலர்கள் 10–15 செ.மீ விட்டம் கொண்டவை; ஐந்து இதழ்கள் மற்றும் ஒரு நீளமான மகரந்தத் தூணைக் (Staminal column) கொண்டவை.

இது ஆண்டு முழுவதும் பூத்தாலும், அரிதாகவே கனிகளை உருவாக்குகிறது. அவ்வாறு உருவாகும் முட்டை வடிவக் கனிகள், ஐந்து பகுதிகளாகப் பிரிந்து, 20 விதைகள் வரை கொண்டிருக்கும். வெப்பமண்டலக் காலநிலையில் செழித்து வளரும் இத்தாவரம், முழுமையான சூரிய ஒளியை விரும்புகிறது. 

ஐரோப்பிய ஆய்வாளர்கள் சீனக் கோவில்களுக்கு அருகில் இதன் பல சாகுபடி வகைகளைக் கண்டறிந்தனர். எனவே இதன் பூர்வீகத்தை உறுதி செய்துகொள்ளாமல், தாவர வகைப்பாட்டியலின் தந்தை எனக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ், 1753-ம் ஆண்டில் (லின்னேயஸின் Species Plantarum வெளியானது 1753-ல் தான்) இதற்கு அதிகாரப்பூர்வமாக Hibiscus rosa-sinensis என்று பெயரிட்டார்.

இந்த பிழையான பெயரிடலை 18-ம் நூற்றாண்டின் கடற்பயணங்கள் எப்படி நவீனத் தாவரவியலை வடிவமைத்தன என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். லின்னேயஸ் ஒருவேளை மலர்ந்த புத்தம் புதிய செம்பருத்தியைப் பார்த்திருப்பாரேயானால், அதன் மகரந்தத் தூணைப் பார்த்து அது ரோஜாக்களில் ஒன்றல்ல என்பதை எளிதில் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால், சீனத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களில் வந்த தாவரங்களில் ஒன்றாகச் செம்பருத்தி இருந்ததாலும் அவரிடம் வந்து சேர்ந்த போது மலர்கள் வாடித்துவண்டு போயிருந்ததாலும், லின்னேயஸ் அதைச் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாவரம் எனக் கருதினார். பிற்பாடு அறிவியலாளர்கள் இதன் கொடிவழியைத் தேடிச் சென்று, செம்பருத்தி மொரிஷியஸ் தீவுகளுக்கு அருகில் இருக்கும் மஸ்கரீன் தீவுகளைச் (Mascarene Islands) சேர்ந்தது என்று கண்டறிந்தார்கள்.

அந்தத் தீவுகளிலிருந்துதான் கடற்பயணங்களின் வழியாக, ஐரோப்பியத் தாவரவியலாளர்கள் மற்றும் கடற்பயணிகளால் பார்க்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா மற்றும் சீனாவிற்கு இது அறிமுகமாகியிருக்க வேண்டும்.

கேப்டன் குக்கிற்குப் பிறகு, 1731-ல் பிலிப் மில்லர் (Philip Miller) இதனை இங்கிலாந்திற்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் இதன் உலகளாவியப் பரவல் வேகம் எடுத்தது. 1810-ல் ஜான் ரீவ்ஸ் (John Reeves) சீனக் கலைஞர்களைக் கொண்டு இதன் பல்வேறு வகைகளை ஆவணப்படுத்தினார்.

1900-களின் தொடக்கத்தில் புதிய கலப்பினங்களை உருவாக்குவதில் ஹவாய் முக்கியப் பங்காற்றியது. 1923-இல் செம்பருத்தி ஹவாயின் மாநில மலராக மாறியது. 1950-களில் ‘அமெரிக்கன் ஹைபிஸ்கஸ் சொசைட்டி’ (American Hibiscus Society) உருவாக்கப்பட்ட பிறகு, இதன் வகைகள் தரப்படுத்தப்பட்டு இன்று உலகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இன்றைய நவீன செம்பருத்திகளின் மரபணுத் தளம் எட்டு அசல் இனங்களைக் கொண்டது. இவற்றிலிருந்தே ஆயிரக்கணக்கான செம்பருத்தி வகைகள் உருவாக்கப்படுகின்றன:

  • மொரிஷியஸ்: H. fragilis, H. genevii, H. liliiflorus
  • மடகாஸ்கர்: H. schizopetalus
  • ஹவாய்: H. arnottianus, H. kokio
  • பிஜி: H. storckii
  • சீனா/இந்தியா: H. rosa-sinensis

அலங்கார அழகைத் தாண்டி, இது இயற்கைச் சாயத்துக்காகவும், பாரம்பரிய மருத்துவத்திலும், தேநீர் தயாரிப்பிலும், நிலப்பரப்பு வடிவமைப்பிலும் (Landscaping) பயன்படுகிறது. இந்தியாவில் காளி தேவிக்கு உகந்த புனித மலராகவும், ஹவாயில் அழகின் அடையாளமாகவும், பல்வேறு கலாச்சாரச் சடங்குகளிலும் இது ஆழமான இடத்தைப் பெற்றுள்ளது.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளில், மனநலம் குன்றியவர்களுக்கு அதன் இயற்கையான அமைதிப்படுத்தும் (Natural Calmative), பதற்ற எதிர்ப்பு (Anti-Anxiety) மற்றும் மனச்சோர்வு எதிர்ப்பு (Antidepressant) இயல்புகளினால் செம்பருத்தி மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே, கேரளாவில் “காதில் செம்பருத்தி வைப்பது” (செவியில் செம்பருத்தி வைப்பது) என்பது, தமிழில் “தலையில் எலுமிச்சை தேய்த்துக்கொள்வது” என்னும் சொலவடையைப் போல, மனநலம் குன்றியதைக் குறிக்கும் கிண்டலாக இருக்கிறது.

1958-ல் மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர், தேசிய மலரைத் தேர்வு செய்ய மல்லிகை, தாமரை மற்றும் செம்பருத்தி உள்ளிட்ட ஏழு மலர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இவற்றில் அனைத்து வீடுகளிலும் எளிதாக வளரும், மிக அழகிய மலர்களைக் கொண்டிருப்பதோடு, மக்களையும் இணைக்கும் ஒரு காரணியாகச் செம்பருத்தி இருந்ததால், அதுவே தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. மலேசிய நாட்டின் ஐந்து முக்கியக் கொள்கைகளுக்கான குறியீடாக செம்பருத்தியின் ஐந்து இதழ்கள் கருதப்படுகின்றன. “Bunga Raya” என்பது மலாய் மொழியில் தேசிய மலரான சிவப்புச் செம்பருத்தி மலரைக் குறிக்கும்.

பல பண்டைய இந்திய நூல்களில் செம்பருத்தி ‘ஜப புஷ்பம்’ (Japa Kusuma) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியக் கடவுளுக்கான ‘ஆதித்ய ஹ்ருதயம்’ நூலின் முதல் வரி:

“Japa Kusuma Sankarsham” – “செம்பருத்தியைப் போல் ஒளிர்பவனே!” எனச் சூரியனைப் போற்றுகிறது.

பல பண்டைய சமஸ்கிருத நூல்களில் சிவனுக்கான மலராக ‘ருத்ர புஷ்பம்’ எனச் செம்பருத்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டில் உருவான சுஸ்ருத மற்றும் சரக சம்ஹிதைகளில், செம்பருத்தி ‘பித்த தோஷ’ சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பண்டைய சித்த மருத்துவ நூல்களும் தலைமுடி அலசிக் குளிக்கவும், தலைமுடி கருப்பாக இருக்கவும் செம்பருத்தியைப் பரிந்துரைக்கின்றன.

பண்டைய சீனத்தில் மண்பாண்டங்களில் செம்பருத்தியின் சித்திரங்கள் அதிகமாக வரையப்பட்டன. சீனக் கவிதைகளிலும் செம்பருத்திக்கு முக்கியமான இடமிருந்தது.  பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு 16-ம் நூற்றாண்டில் (1578-ல் நிறைவுபெற்ற) சீன மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான மற்றும் விரிவான தாவரவியல் கலைக்களஞ்சியமான ‘பென்காவ் காங்மு’ (Bencao Gangmu), புகழ்பெற்ற மருத்துவர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளரான லி ஷிஜென் (Li Shizhen) என்பவரால் தொகுக்கப்பட்டது. இந்த மூலிகை மருத்துவ நூலில், ஐரோப்பியர்களால் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்பே செம்பருத்திச் சாற்றின் கூந்தல் ஆரோக்கியம் மற்றும் நிறம் தரும் பண்பு குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதன் இதழ்களைச் சாப்பிடுவது இளமையைத் தக்கவைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

தாவரமும் மனிதனும் ஒன்றையொன்று சார்ந்து பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் இணைப் பரிணாமக் கொள்கைக்கான (Co-evolution) மிகச்சிறந்த உதாரணம் செம்பருத்திதான். ஒரு தாவரம் தனது உயிர்வாழ்தல் மற்றும் பரவலுக்காக மனிதனைப் பயன்படுத்துகிறது; மனிதன் தனது தேவைக்காகத் தாவரத்தைப் பயன்படுத்துகிறான். இது ஒரு உயிரியல் ஒப்பந்தம் மட்டுமல்ல, “கொடுத்தல்-வாங்கல்” (Mutualistic contract) ஒப்பந்தமும்கூட.

விதைகளை நம்பியிருக்காமல், தாவரத்தின் தண்டுப்பகுதியைக் (Stem cuttings) கொண்டு புதிய செம்பருத்திச் செடிகள் உருவாக்கப்படுவதால், அந்தத் தாவரத்தின் அசல் மரபணுக்கள் மாறாமல் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு கடற்பயணி தனது கட்டுமரத்தில் எடுத்து வந்த அதே செம்பருத்தியின் மரபணுவை, இன்று நம் தோட்டத்தில் உள்ள செடியிலும் காண முடியும்.

“பரவுக” என்னும் கட்டளை ஒவ்வொரு தாவரத்திற்கும் இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டளையின்படி, சொந்த நிலமற்ற ஒரு மலர்ச்செடி  மனிதர்களை உபயோகித்துக்கொண்டு உலகெங்கிலும் பரவி இருப்பது எப்பேற்பட்ட ஒரு ஆச்சரியம்.

சரண் 26!

சரணுக்கு இன்று 26-ஆவது பிறந்தநாள். நாட்கள் ஒன்றும் அத்தனை வேகமாகச் சென்றுவிடவில்லை; மிக மெதுவாகத்தான் நகர்ந்திருக்கிறது காலம். ஒன்பது மாதங்கள் முடிந்து, வான்வழிப் பயணத்திற்கான சட்டபூர்வ நாட்களும் கடந்த பின்னால், பொய்ச்சான்றிதழ் வாங்கித்தான் நிறைமாதக் கர்ப்பிணியாக அபுதாபியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தேன். கர்ப்பகாலம் முழுவதுமே கொந்தளிப்பான கால மாகத்தான் இருந்தது. வயிற்றில் இருப்பது பெண் என்று எப்படியோ நான் நம்பினேன்; ‘துர்கா’ எனப் பெயரும் இட்டிருந்தேன்.

ஏப்ரல் 4, 2000 அன்று சரண் ஆனைமலை அம்பராம்பாளையம் வசந்த் மருத்துவமனையில் பிறந்தான். கர்ப்பகாலத்தில் நான் நல்ல உணவைச் சாப்பிட்டிருக்கவில்லை என்கிற குற்றவுணர்வு, சரணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போதெல்லாம் என்னைக் கஷ்டப்படுத்தும். புதிய தேசம், புரியாத பாஷை, மிகச் சிக்கலான தாம்பத்தியம், பொருளாதார ரீதியான சார்பு நிலை, கர்ப்பகாலச் சிக்கல்கள் என அனைத்திற்கும் மேலாக, வயிற்றில் இருக்கும் குழந்தையை யாரேனும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்னும் அச்சம் என்னை நிரந்தரமாகப் பீடித்திருந்தது. ஊரிலிருந்து கொடுத்து அனுப்பப்பட்ட ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் நிறைய இருந்த குலோப் ஜாமூனை, அவ்வப்போது எடுத்து வாஷ் பேசினில் கரைத்துக் கரைத்துத் தீர்த்தேன். அதில் வயிற்றுக் குழந்தைக்கு ஆபத்தான ஏதோ இருக்குமென அஞ்சினேன்.

கடுமையான  வீட்டு வேலைகள்அப்போது இருந்தன; ஓய்வென்பதே ஒரு நிமிடம் கூட உடலுக்கு இல்லாத காலம். வீட்டில் ஒரே அறையில் குடித்தனம்; மற்றொரு படுக்கையறையும் சமையலறையும் உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தன. எனக்கென உறங்கும் நேரமோ, தனிமையோ, ஓய்வோ எதுவுமே இல்லாத, பெரும்பாலும் பசியுடன் இருந்த மாதங்கள் அவை. பிரசவத்திற்கு ஊருக்கு வருவதிலும் எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. ‘வாணலிக்குத் தப்பி அடுப்புக்கு வரும் கதை’தான் அதுவும் என்றாலும் வந்தேன்; எங்கும் போக இடமில்லாத நிலை அது.

வழக்கம்போல வீட்டிலும் அப்பா என்பவரின் வன்முறை. ஆனால், திருமணத்துக்குப்பிறகு  உடல்ரீதியான துன்புறுத்தல்  இல்லை; இருப்பினும் மனோரீதியான வன்முறை கட்டுக்கடங்காமல் இருந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் கொண்டிருந்ததால், அப்போது கைகளில்  சுத்தமாகப் பணமில்லாமல் இருந்தது பெரும் சுமையாக இருந்தது. இரண்டு பக்கமும் மனித உணர்வு, உறவு, மனிதாபிமானம் ஆகிய எல்லாவற்றையும் விடப் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்த ஆட்களே இருந்தார்கள்.

எப்போதாவது மாலை காற்றாட நடைக்கையில் அப்பா என்பவரும் உடன் வருவார். முனிசிபல் ஆபீஸ் முனையில் இருக்கும் இளநீர்க்கடையில், அந்த அம்மாவிடம் இளநீர் வாங்கி குடித்துவிட்டு நான் பணம் கொடுப்பதை அப்பா உணர்ச்சியின்றிப் பார்த்துக்கொண்டிருப்பார்.  சரண் ஐரோப்பா செல்லும் முன்பு அந்த இளநீர்க்கார அம்மாவிடன் அவனை அழைத்துச்சென்று அவன் வயிற்றில் இருக்கையில் அவர்வெட்டித்தந்த இளநீரை அவன் குடித்திருக்கிறான் என்று சொன்னேன். அவரது கால்தொட்டு வணங்கிவிட்டுத்தான் புறப்பட்டான். அந்த அம்மா அவனுக்கு கண் நிறைந்து ஒரு இளநீர் வெட்டித்தந்தார்கள்.

கர்ப்ப காலத்தில் அம்மா என்னை எப்படி நடத்தினார் என்று சொல்ல இன்னும் மனது வரவில்லை. அன்னைமை குறித்த ஒரு மாயை உலகில்  இருக்கிறதல்லவா, அது அப்படியே இருக்கட்டும். 

நல்ல பசியில் ஒருவாய் அதிகமாகச் சாப்பிட்டால், உடனே அம்மா, ‘அதிகமா சாப்பிட்டா குழந்தை ஊறிப் பெரிசாகும், அப்புறம் சுகப்பிரசவம் ஆகாது; சிசேரியனுக்கெல்லாம் இங்கே பணமில்லை…’ என்பார்கள். இதை மட்டுமே என்னால் வெளியே சொல்ல முடியும். 

இளமையில் நல்ல புடவை உடுத்திக்கொண்டோ, தலைக்குக் குளித்து நீளமான அடர்த்தியான கூந்தலை ஆயிரங்கால் ஜடை பின்னிக்கொண்டோ, ஜிமிக்கி போட்டுக்கொண்டோ, தலை நிறையப் பூச் சூடிக்கொண்டோ கல்லூரிக்கோ பல்கலைக்கழகத்திற்கோ செல்கையில், அம்மாவின் கண்ணில் ஒரு கனல்புள்ளி தெரியும். கட்டாயமாக ஏதோ ஒன்று சுருக்கென்று சொல்வார்கள்; ஏதோ ஒரு குறை சொல்லியோ அல்லது அப்பா என்பவர் என்னை கடுமையாக பேசும்படியாக ஒரு சூழலை வேண்டுமென்றே  உண்டாக்கியோ என் முகம் வாடிப்போன பின்னரே நான் அங்கிருந்து இறங்கிச் செல்வதை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.. ‘காடு’ நாவலில் கிரியின் சம்பளத்தைக் கேட்டதும்  அவன் அப்பாவின் உணர்வுகளை ஜெ சொல்லியிருப்பார்; அப்போது நான் அம்மாவைத்தான் நினைத்துக்கொள்வேன். உண்மையிலேயே நான் வேறெங்கோ வேறு யாருக்கோதான் பிறந்திருக்கவேண்டும் எப்படியோ அந்த வீட்டுக்கு நான் கொண்டு வரப்பட்டிருக்கவேண்டும் என்று ஆழமாக இப்போதும் நம்புகிறேன்.

இன்றைக்கும் நான் எப்போதும் மிக விரிவாக, தேவைக்கும் அதிகமாகவே சமைப்பதற்கும், யார் வந்தாலும் திருப்தியாகச் சமைத்துப் போடுவதற்கும் அப்போதைய என் பசிதான் காரணம். பிரசவத்திற்குப் பிறகும் பத்திய உணவோ, வயிறு சுருங்கப் பிரத்யேக உணவோ, ஏன் பாலூட்டுவதற்கான உணவோ கூட எனக்கு அளிக்கப்படவில்லை. சரணுக்கு 21 நாட்களானபோது, நான் அவனைச் சரியாகப் பிடிக்கக்கூடத் தெரியாமல் ஷார்ஜா விமான நிலையத்தில் இறங்கியிருந்தேன். எனக்கு ஓய்வு வேண்டும், அறுவை சிகிச்சைக் காயங்கள் ஆற வேண்டும் என்றெல்லாம் என் தரப்பில் யோசிக்கக்கூட  யாரும் இல்லை.

என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில் எனக்கு மிக ஆச்சரியமாக இருப்பதெல்லாம், நான் இன்னும் உயிருடன் இருப்பதுதான். சரண் பிறந்தபோது, ‘ஆண் குழந்தை’ என்னும் டாக்டர் வசந்தின் குரல் என் காதில் விழுந்த பின்னரே நான் நினைவிழந்தேன். அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை அவனும் சின்னவனும் உடனிருக்கிறார்கள் என்னும் ஒன்றே என் பிடிப்பாக இருக்கிறது.

அபுதாபியில் அவனுடன் பேசிக்கொண்டே இருப்பேன். அவனுக்கு நான் பேசுவது புரியாத மிகச்சிறு வயதிலிருந்தே என் கண்ணீரையும் குரலையும் அவன் கேட்டுத்தான் வளர்ந்தான். அவனுக்காகத்தான் இந்த கிராமத்து வீட்டைக் கட்டி இங்கு வசிக்க வந்தேன். அவனால்தான் இன்று நான் இருக்கிறேன்.

மிகச் சிக்கலான ஒரு காலகட்டத்தில், சரண் ஸ்கூல் வேனிலிருந்து கீழே இறங்கும்போது, தெருவின் எதிர்ப்பக்கத்தில் இருந்த எனக்கு அவனது பெரிய ஷூ அணிந்த கால்கள் தெரிந்தது அத்தனை நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. சரணுக்கும் தருணுக்கும் தெரியாது; அவர்கள் இருவரும் என் வாழ்வை எப்படியெல்லாம் நேராக்கி, நான் இன்று உயிருடன் இருக்க உதவியிருக்கிறார்கள் என்று.

 கண்பட்டதுபோல, தவிர்க்கவே முடியாமல் வேறு ஒரு தரப்பிலிருந்து உண்டான காரணத்தினால்  சரணுக்கு இப்போதிருக்கும் ஒரு சிறு துயர் மறைந்து, அவன் அதை மறந்து, குடும்பமும் குழந்தைகளுமாக என் கண்முன்னே வாழவேண்டும் அவன் ஒரு தொடக்கம்தான் பின்னாலேயே தருணும் சாம்பவியும் அவனைப்போலவே நலமாக இருப்பார்கள் . அது மட்டுமே இப்போது என் ஒரே ஒரே ஒரே ஆசை. தெய்வங்களே காத்துக்கொள்க! 

பிறந்தநாள் வாழ்த்துகள் சரண் குட்டி.

மாதொருபாகன் மிளகாய்!

சமீபகாலங்களில் இணையச் செய்திகள் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது. இணைய ஊடகங்களுக்கு அடிமையாவதும் மிக விரைவாக நடக்கிறது. எல்லோரும் எல்லாத் துறைகளிலும் கருத்துச் சொல்லி, அது பரவி ஆயிரக்கணக்கிலான அந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லாமல் அது நம்பவும், கடைபிடிக்கப்படவும் செய்கிறது. தாவரவியல் பிழைகளில் மட்டும் நான் ஒருசில சமயங்களில் தாங்க முடியாமல் இடைபடுகிறேன்.

காந்தள் மலர்ச் செடியின் (Gloriosa superba) ஆங்கில V வடிவக் கிழங்குகளின் நச்சுத்தன்மையைக் குறித்து எதுவுமறியாத யாரோ ஒருவர், அதன் கிழங்குகளைச் சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என வாட்ஸ்அப்பில் சொல்ல, அதை நம்பிய ஓர் ஆம்பூர் இளைஞர் போன வருடம் அப்படியே செய்து உயிரிழந்தார்.

நான் இளங்கலை தாவரவியல் படிக்கையில் என்னுடன் இருந்த சில நண்பர்கள் ஒரு புலனக்குழுமம் (whats app Group) தொடங்கி அதில் என்னையும் இணைத்திருந்தார்கள். ஒரு சமயம் ஒரு நண்பர் அதில் சைகஸ் (Cycas) ஆண் கூம்பின் படத்தைப் பகிர்ந்து, இது மேருமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் “சிவலிங்க மலர்”, அனைவரும் வழிபட்டு தொழுது முடிந்த வரை பலருக்கும் பகிரவும் என்னும் செய்தியைப் படத்தோடு (அவருக்கு எங்கிருந்தோ வந்ததை) பகிர்ந்திருந்தார்.

நான் சும்மா இருக்க முடியாமல், “அது நாமெல்லோருமே படித்த ஜிம்னோஸ்பெர்ம் (Gymnosperm) வகையைச் சார்ந்த, ஒரு கூம்புத் தாவரமான சைகஸின் மேல் கூம்பு (Male cone). நம் லேபில் கூட ஃபார்மலினில் ஊறிக்கொண்டு அது இன்னும் இருக்கிறது” என்று சொல்லி, அப்படிச் சிவலிங்கப் பூ என்று ஒன்றுமில்லை என்றும், உலகில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூக்களும் எங்குமில்லை என்றும் விளக்கினேன். தாவரங்கள் Annual, Biennial, Perennial, Monocarpous வகைகள்தாம் என்று விளக்கிய பின், குழுவில் மரண அமைதி.

பிற்பாடு அவர்கள் என்னிடம் பேசுவதை மெல்ல மெல்ல நிறுத்திவிட்டார்கள். நான் துறைத் தலைவரானதற்கு சம்பிரதாயமாக ஒரு விருந்து கேட்டார்கள். நான் மகிழ்ந்து அளிப்பதாகச் சொன்ன பின்னரும், அவர்கள் என்ன காரணத்தாலோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி அதை தவிர்த்தார்கள் நானும் விட்டுவிட்டேன்.அறிதலுக்கான வாயில்கள் அனைத்தையும் மூடிப் பூட்டி, சாவியை எங்கோ வீசி எறிபவர்களிடம் நான் என்னதான் சொல்வது?

இப்போது இன்ஸ்டாவில் யார் யாரோ தவறான தாவரவியல் தகவல்கள், அற்புதங்கள், மருந்துகள், சடங்குகளைச் சும்மா போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

ஒரு தாத்தா பயங்கர ‘டாக்ஸிக்’ (Toxic). எருக்கின் பயன்களை எல்லாம் சொல்லிவிட்டு, அதன் காயை அரைத்துக் குடிக்கலாம் என்று ஒருநாள் சொன்னார். கமெண்ட்டில் “தாத்தா, ஏன் கொலைப்பழிக்கு ஆளாகிறீர்கள்? எருக்கை உள்மருந்தாக அப்படிப் பயன்படுத்தவே கூடாது” என்று பதிவிட்டேன். யாரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

ஜகஜ்ஜோதியாக ஒரு அம்மா பட்டுப்புடவை, பெரிய மூக்குத்தி, நகைகளுடன் வருவார்கள். வீட்டுக்கு முன்னால் எந்தச் செடியெல்லாம் வைக்கக்கூடாது, எது ‘நெகட்டிவ்’ ஆற்றல் அளித்து வாழ்வை நாசமாக்கும் என்று சொல்லுவார்கள். நான் பார்த்த அன்று வெற்றிலைக்கொடி வைத்தால் வீடு பாழாய்ப்போகும் என்றார்கள். என்னென்னவெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்! கம்பிகட்டும் கதையெல்லாம் .

இப்போது இன்ஸ்டாவில் அதிகமாக வருவது குடைமிளகாயின் ஆண்-பெண் வித்தியாசம் என்னும் ஒரு புளுகு. நான்கு மடிப்புகள் இருக்கும் மிளகாய் பெண்ணாம், அது இனிக்குமாம், அதைச் சாலட்களில் அப்படியே சாப்பிடலாமாம்; மூன்று மடிப்புகள் இருப்பது ஆணாம், அதைச் சமைத்துச் சாப்பிட வேண்டுமாம்.

குடைமிளகாய் என்னும் கனி, இருபால் மலரொன்று கருவுற்று உருவாவது. மலரில்தான் பாலினமெல்லாம் கனிகளில் அப்படி எதுவும் இல்லவே இல்லை. மேலும் கனியில் அதில் எத்தனை மடிப்புகள் இருந்தாலும் சுவையோ சத்தோ வேறுபடாது. நான்கு மடிப்புகள் இருக்கும் மிளகாய்களில் அதிக இடமிருப்பதால் அதிக விதைகள் இருக்கும், அவ்வளவுதான் வித்தியாசம். எப்படி இப்படியெல்லாம் யோசித்துப் புளுகுகிறார்கள்?

தாவரவியல் ரீதியாக, குடைமிளகாயின் இந்த மடிப்புகளின் (Lobes) எண்ணிக்கை மிளகாய்க்கு மிளகாய் மாறுபடுவதற்குப் பாலினம் காரணம் அல்ல; மலரின் சூலக இலைகளின் எண்ணிக்கைதான் (Carpels) காரணம்.

குடைமிளகாயைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால், உள்ளே விதைகள் ஒட்டியிருக்கும் அறைகளைக் (Chambers) பார்க்கலாம். பூவின் பெண் பாகமான சூலகத்தில் உள்ள “சூலக இலைகள்” (Carpels) எனப்படும் பகுதிகளே இந்த அறைகளாக மாறுகின்றன. ஒரு பூ உருவாகும்போதே அதன் சூலகத்தில் எத்தனை இலைகள் இணைகின்றனவோ, அத்தனை மடிப்புகள் கனியில் உருவாகும். பூவில் 3 Carpels இருந்தால் 3 மடிப்புகளும், 4 Carpels இருந்தால் 4 மடிப்புகளும் உருவாகும்.

மேலும், மடிப்புகளின் எண்ணிக்கை பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட மிளகாய் விதையின் வகையைப் பொறுத்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் 4 மடிப்புகள் கொண்ட பெரிய, சதுர வடிவிலான குடைமிளகாய்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் 4 மடிப்புகள் தரும்படி மரபணு ரீதியாக உருவாக்கப்பட்ட (Bred) விதைகளையே அதிகம் பயிரிடுகின்றனர். சிறிய குடைமிளகாய் வகைகளில் இயற்கையிலேயே 2 அல்லது 3 மடிப்புகள் மட்டுமே இருக்கும்.

ஒரே செடியிலேயே 3 மடிப்புகள் கொண்ட மிளகாயும் காய்க்கலாம், 4 மடிப்புகள் கொண்ட மிளகாயும் காய்க்கலாம்! (இந்தச் செடிக்கு நம் புளுகு மூட்டைகள் ‘மாதொருபாகன் மிளகாய்’ என்று பெயர் வைத்தாலும் வைக்கக்கூடும்).

இதெல்லாம் தப்புத்தப்பாக நன்றாகச்செய்வார்கள் ஆனால் பப்பாளியின் ஆண் மரத்தை மலட்டுமரமென்று வெட்டிவீசுவார்கள் ஒரு பெண் அந்த மலட்டு? மலர்களை முட்டைப்பொரியல் போல் செய்து சாப்பிடும் ரெசிபியை இன்ஸ்டாவில் சொல்லிக்கொடுக்கிறார். அநியாயத்துக்கு அளவேயில்லை,

அப்பாடா! ஒரு இன்ஸ்டா புளுகுக்கே ஒரு பதிவு போட வேண்டும் என்றால், தினம் எத்தனை போடுவது? முடியலை!

கல்லெழும் விதை-என்னுரை

என் பால்யம் இப்போது  முழுமையாக நகரமயமாகி விட்டிருக்கும் நகரத்திலல்லாமல் சுற்றிலும் சிறு சிறு கிராமங்கள் சூழ்ந்திருந்த, இயற்கை எழில் நிறைந்த பசிய பொள்ளாச்சியிலும், எனது பூர்வீக கிராமமான வேட்டைக்காரன் புதூரிலும் கழிந்தது. அதிர்ஷ்ட வசமாக இணையமும் தொலைக்காட்சியும் கணினியும் அப்போது அறிமுகமாகாததால் இயற்கையோடு இணைந்த இளமைப்பருவம் வாய்த்திருந்தது.  மரத்தடி வகுப்புகளில் பள்ளிப்பாடங்கள் கற்றுக்கொள்ள முடி ந்தது. விடுமுறைகளில் வேப்பமுத்து சேகரிக்கவும், பருத்தி, மிளகாய் பறிக்கும் அத்தைகளுடன் இருக்கவும் கொடுத்து வைத்திருந்தது.

பள்ளிப்படிப்புக்காக தாராபுரம், பொள்ளாச்சி என அடிக்கடி ஊர் மாறினாலும் எங்கேயும் என்னுடன் இயற்கை இருந்துகொண்டே இருந்தது.  முருங்கைப்பிசினை  சுரண்டித் தின்பதும், கள்ளிப்பழங்கள் கனியும் வரை காத்திருந்து அதன் முட்களோடு வாயிலிட்டுச் சுவைத்ததும், வேர்க்கடலை எப்படி கண்ணுக்கு தெரிந்து மலர்ந்து நிலத்தடியில் காய்க்கிறது என்று வியப்பதும், சீனிப்புளியங்காயை மரமேறிப்பறிப்பதுமாக எந்நேரமும் செடிகொடி மரங்களுடன் இருந்த அந்த இளமைக்காலத்தில் என் அகத்திலும் இயற்கையின் தீண்டல் நிகழ்ந்திருந்தது. 

பள்ளி முடிந்து வீட்டுக்கு வராமல் எங்கேனும் காடுகளில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கும் என்னை தேடிக்கண்டுபிடிக்கவே வீட்டில் ஆள் வைத்திருந்தார்கள். 

எப்பொதும் பசுமை சூழவே இருந்தேன் சமையலறைத் தேவைகளுக்கான சிறிய வீட்டுத்தோட்டத்திலும், தென்னை நகரென்பதால் தோப்புகளிலும் வயல்களிலுமாகவே என் இளமைப்பருவம்  இருந்தது.

பள்ளிப்படிப்புக்கு பின்னர் இளங்கலையில் எனக்கு பிடித்த தாவரவியல்  படிப்பையே தேர்ந்தெடுத்தேன்.  நல்லாசிரியர்கள் வகுப்பில் கற்றுக்கொடுத்ததோடு  களத்தாவரவியலுக்கென்று (Field Botany) பல இடங்களுக்கு அழைத்துச் சென்று இயற்கை மீதான என் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினார்கள்.  இளங்கலை இறுதியாண்டில்  தொட்டபெட்டா மலைச்சிகரத்திலிருந்து மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளம் போல் விரிந்திருந்த குறிஞ்சியை மாணவியாக பார்த்த பரவச அனுபவமும், தமிழக, கர்நாடக காடுகளுக்குள்ளும் அமைதிப்பள்ளத்தாக்கிலும் செலவழித்த நாட்களும் மேலும் மேலுமென என்னைத்  தாவரங்களை நோக்கிச் செல்ல வைத்தது. 

பிறகு முதுகலை தாவரவியலை நேரடியாக மேற்குமலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் இருந்த கோவைப் பல்கலைக்கழகத்தில் தங்கிக் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. மருதமலைச்சரிவுகளில் தாவரவகைப்பாட்டியலையும், ஊட்டி வெலிங்டன் கோதுமை வயல்களில்  தாவர மரபியலையும் குருசடைத்தீவுகளில் கடற்பாசிகளையும் நேரடியாகக் கற்றுக்கொண்ட பொற்காலமது.  பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில் இலக்கியப்பரிச்சயமும் அப்போதுதான் உண்டானது.  தி.ஜானகிராமனையும், தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்களையும் அப்போதிலிருந்துதான் அறிந்துகொண்டேன்.

நாட்குறிப்புகளாக  தாவரங்களைக் குறித்து எனக்கே எனக்கென்று கொஞ்சமாக எழுதத்துவங்கி இருந்தேன். முதுகலை படிக்கையில்தான் எனக்கான ஆய்வுத்துறை தொல்குடித் தாவரவியல் என்று தெய்வாதீனமாக முடிவானது. மாணவர்களுக்கு முன்னால்  துறைகளின் பெயர் எழுதிச்சுருட்டப்பட்ட காகிதங்கள் இருக்கும் யார் எதை எடுக்கிறோமோ அதுவே அவர்கள் ஆய்வைத் தொடரவேண்டிய துறையாகும். என் கைகள்  Tribal pulse lab என எழுதியிருந்த அந்தக் காகிதச் சுருளை தேர்ந்தெடுத்த போது ஏதேனும் ஒரு அறியாத்தெய்வம் உடனிருந்திருக்கக்கூடும்.

அப்போது ஆய்வின் பொருட்டு சந்தித்த பழங்குடியினரின் தாவரங்கள் குறித்த தொல்லறிவு பிரமிப்பேற்படுத்தியது மட்டுமல்லாமல் ஆவணப்படுத்தப்பட்டிருக்காத அவ்வறிவு வேகமாக அழிந்து கொண்டிருக்கும் ஆபத்தும் புரிந்தது.

பின்னர் முனைவர் பட்ட ஆய்வை இந்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிதிநல்கையுடன் தொடர்ந்தேன். நிதிநல்கை அளிக்கப்பட்டிருந்ததால் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுதில்லி சென்றதும் அப்படிச் சென்றிருந்த ஒரு சமயத்தில் நகரெங்கும் மலர்ந்து நறுமணத்தால் மூச்சுத்திணற வைத்த ஏழிலைப் பாலைமரங்களுக்கருகில் கழித்த நாட்களும் இப்போதும் ஆய்வுக்காலத்தைத் திரும்பிப்பார்கையில் மனமெங்கும் வாசனை வீசுபவை.

தாவர உலகின் அற்புதங்களைக் கவனித்துக் குறிப்பு எடுக்கத் தொடங்கிய காலமது.

பொள்ளாச்சியில் அப்போது சூழல் மாசை உருவாக்கிக் கொண்டிருந்த தென்னைநார்க்கழிவை மட்கச்செய்து இயற்கை உரமாக்கும்  முனைவர் பட்ட ஆய்வை மூன்றே வருடங்களில் முடித்து கைவசம் பல சர்வதேச சஞ்சிகைகளில் வெளியான ஆய்வுக்கட்டுரைகளும் இருந்ததால்  பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணியில் இணைந்தேன். 

பணியில் இருந்த 2- வது வருடம் திருமணமாகி வேலையை விட்டுவிட்டு வளைகுடா நாடொன்றில் 6 வருட வாழ்வு. பொள்ளாச்சிப் பசுமையில்  இருந்தவளுக்கு அந்த பாலை அளித்த வெறுமையைச் சொல்லவே முடியாது.

பேரீச்சை மரங்களின் வரிசைக்கு இடையில் எப்போதாவது கண்ணுக்கு தெரியும் வேப்பமரங்கள் நெருங்கிய உறவினர்களை எதிர்பாராமல் சந்தித்ததுபோல கண்ணை நிறைத்துவிடும்.

இருமகன்கள் பிறந்து அவர்கள் பள்ளிக்குச் செல்லும் வயதில் இந்தியாவுக்குத் திரும்பி வால்பாறை மலையடிவார குக்கிராமொன்றில்  துண்டு  நிலம் வாங்கி  செடிகொடி மரங்களுக்கும் இடமிருக்கும் ஒரு தோட்ட வீட்டைக் கட்ட முற்பட்ட போது ஒரே ஒருவர் கூட என் முடிவை ஆதரிக்காததோடு மூர்க்கமாக எதிர்க்கவும் செய்தார்கள். உலகமே நகரமயமாக்கலின் பின் மண்டியிட்டுத் தொழுது பின் செல்கையில் நான் கிரமப்புறமொன்றிற்கு செல்வதை பெரும் முட்டாள்தனமென்று கண்டித்தார்கள்.

 வளரும் பருவத்தில் இருந்த மகன்களின் கராத்தே, அபாகஸ், கணிதம் போன்ற சிறப்பு வகுப்புகளுக்கு கிராமத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போவதையும், என் தாவரக்கிறுக்கினால் மகன்களின் எதிர்காலம்  கேள்விக்குரியதாகி விடுவதும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் நான் மகன்கள் இயற்கையுடன் நெருங்கி வளரவேண்டும் என்பதில்  கவனாமகவும் பிடிவாதமாகவும் இருந்து அந்த வீட்டை கட்டி முடித்தேன். வீடு கட்டி முடிக்கப்பட்ட போது சுற்றிலும் பசுமை சூழத்துவங்கி இருந்தது.

மகன்களுடனேயே மரங்களும் வளர்ந்தன. சுற்றிலும் பசுமரங்கள் சூழ இருந்த நான்கே அறைகள் கொண்ட சிமிழ் போல் ஒரு சிறுவீடு. தொலைக்காட்சிப்பெட்டி இல்லததால் மகன்கள் தோட்டத்தில் விளையாடியும்,  செடிகொடிகளை பராமரித்தும்  மேலும் மேலுமென இயற்கையை அறிந்துகொண்டார்கள். 

அந்தியில் கிளிகளும் மயில்களும் வரும் தோட்டமிருக்கும், அதிகாலையில் குயில் கூவி கண் விழிக்கும் , தென்னையும், பலாவும் மாவும், புன்னையும், புங்கையுமாக நிறைந்திருக்கும் வீட்டில் மகன்கள் வளர்ந்ததில் நான் மகிழ்ந்திருந்தேன்.

கல்லூரியில் தாவரவியல் கற்பிப்பதோடு தொல்குடித்தாவரவியல் ஆய்வுகளும் செய்துகொண்டிருந்தேன். என் வழிகாட்டுதலில் ஆய்வு மாணவர்கள் கோவில் காடுகளைக் குறித்தும், வளர்ப்பு யானைகளுக்கு  பழங்குடியினப் பாகன்கள் அளிக்கும் தாவரமருந்துகள் மற்றும் மகப்பேறியலில் தொல்குடிகள் உபயோகப்படுத்தும் மூலிகைகள் குறித்தும் ஆய்வுகள் செய்தார்கள்

மியாவாக்கி அடர்வனம் அமைக்கவும், பெரு நிறுவனங்கள், வீடுகள் மற்றும் தங்கும்விடுதிகளில் தோட்டக்கலை (landscape gardening) அமைக்கவும் நான் பரிந்துரைகள் அளிக்கத் தொடங்கினேன். மரமோ செடியோ கொடியோ புதரோ கொடியோ அதன் வளரியல்பின்படி எப்படி வளரும் , எத்தனை இடைவெளி இருக்கலாம், என்ன நிறத்தில் மலர்கள் உருவாகும், எதற்கு எவ்வளவு சூரிய ஒளி தேவை, எங்கெங்கு என்ன வைக்கலாம், வைக்கக்கூடாது போன்ற பரிந்துரைகளை பலவருட தாவரவியல் கற்பித்தல் மற்றும் கற்றலில் இருந்து அறிந்து கொண்டிருந்தேன். பரிந்துரைகளோடு  தேவையான மரக்கன்றுகளும் நாற்றுகளும் எங்கு கிடைக்கும் என்பதையும்  தெரிவித்துவிடுகிறேன்.

வலைப்பூவில் மட்டும் எழுதிக்கொண்டிருந்த போது 2016-ல் தினமலரில் தொடர்ச்சியாக தாவரங்களைக் குறித்து எழுத வாய்ப்பு வந்தது. அப்போது எழுதத்துவங்கி, இன்றுவரை பல ஊடகங்களில் இணையப்பத்திரிகைகளில் தாவர உலகின் அற்புதங்களை, அவற்றைக் கவனித்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை, ஒவ்வொரு தாவரத்துடனும் இணைந்திருக்கும்  சுவாரஸ்யமான கதைகளை  தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கட்டுரைகளின் தொகுப்பு முதல்பிரசுரமாக இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் வெளியீடாக வந்தது. பின்னர் விஷ்ணுபுரம், அகநி, மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், NCBH  ஆகிய பதிப்பகங்களில் பிரசுரமானது.

ஒரு சில கட்டுரைகளை, நேர்காணல்களை மொழியாக்கமும் செய்துகொண்டிருக்கையில் தான் அரிஸோனா பல்கலைகழகத்தின் (Arizona State University, Arizona, United States.) இணையதளத்தில்  அறிவியல் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இணையத்தளத்தில் வெளியான முதல் தமிழாக்கம் நான் செய்தது தான். 

ஜெர்மானியக் காட்டியலாளர் பீட்டரின் ‘’The hidden life of trees’’ என்னும்  பிரபல நூலின் தமிழாக்கம்  ’’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் காலச்சுவடிலிருந்தும், மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் 3-வது நூலாக ’’நுண்ணுயிருலகு’’ என்னும் கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.

லின்னேயஸ் , ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், எட்மண்ட் ஆல்பஸ் போன்ற தாவர அறிவியலில் பெரும் சாதனைகளைச் செய்த ஆளுமைகளைக் குறித்து  ’’இரண்டாம் ஆதாம்’’ என்னும் நூலை எழுதி முடித்திருக்கிறேன். அதை அடுத்ததாக வெளியிடவேண்டும்.

தற்போது Plant arithmetic என்னும் தாவரக்கணக்கீட்டு அறிவு குறித்து ஆர்வம் கொண்டிருக்கிறேன்.  பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தோம், எங்களில் கணிதமேதைகள் இருக்கீறார்கள் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் நமக்கு, பல லட்சம் வருடங்கள் முன்பு தோன்றிய தாவரங்களில்,  மலரிதழ்கள் ,இலைகள், கணுக்களின் நீள அகலம் எப்படி மிகச்சரியான அளவுகளில் அமைந்திருக்கிறது,  branching architecture-ன் துல்லியம், ராமனெஸ்கோ பச்சைப் பூக்கோசின் பின்ன வடிவமைப்பு (Fractal design), சூரியகாந்திப் பூவின் தங்கக்கோண அமைப்பு என ஒவ்வொன்றும் அளிக்கும் ஆச்சர்யம் அளவற்றது. அதைக்குறித்து ஒரு நூல் எழுதும் உத்தேசம் இருக்கிறது. இப்போது ஈடுபட்டிருக்கும் தாவரவியல் அகராதித் தயாரிப்பு ஏராளமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது அதை முடித்தபின்னர் இந்த நூலை எழுதவிருக்கிறேன்.

மரங்கள் சூழஇருக்கும் இந்த வீட்டில் வளர்ந்த மகன்கள் இருவரும் வீட்டுத் தோட்டத்தைப் போலவே வளர்ந்துவிட்டிருக்கிறார்கள். மூத்த மகன் சரண் ஐரோப்பாவில் முதுகலை  சைபர் பாதுகாப்பு முடித்து ஜெர்மனியில் அரசு வேலையில் இருக்கிறான். வளரும் நாடுகளுக்கு சைபர் பாதுகாப்பு தொழிநுட்பத்தை அளிக்கும் ஐரோப்பாவின் திட்டமொன்றில் ஆய்வாளராகப் பணிபுரிகிறான். இளையவன் தருண் டேராடூனில் காட்டியல் முடித்துவிட்டு இந்திய வனத்துறைத் தேர்வெழுதவிருக்கிறான்.  காட்டுயிர்ப் புகைப்பட நிபுணரான தருண் பாம்புகளைப் பிடிக்கும் சிறப்புப்பயிற்சிகளும் பெற்றிருப்பதால் அவன் அறிவுக்கும் கண்ணுக்கும் எட்டியவரையில் எந்தப்பாம்பையும் அடித்துக்கொல்ல விடுவதில்லை. எப்படியும் போராடி அவற்றைக் காப்பாற்றி காடுகளில் விட்டுவிடுகிறான். 

மேலும் பாம்புகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் பொறுப்புடன் காட்டுயிர்ப் புகைப்படமெடுப்பது  (Responsible wildlife Photography) குறித்தும் மேடைகளில்  உரையாற்றுகிறான். காட்டுயிர்கள் குறித்து ஆங்கிலக்கட்டுரைகளும் எழுதுகிறான்.  இயுற்கை எழில் சூழ வளர்ந்ததினால் நகர்ப்புற இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இழந்தாலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இலக்கியப்பரிச்சயமும் மனிதநேயமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

தாவரங்களின் மகத்துவத்தை, தாவர உலகின் அற்புதங்களைச் சொல்லும் கட்டுரைகளின் இந்தத் தொகுப்பு தன்னறம் வெளியீடாக வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுரைகளின் வாசிப்புவழியே இலைகளையும் கொடிகளையும் மலர்களையும் கடந்து வருபவர்களுக்கு நிச்சயம் தாவரங்கள் மீதான அபிமானம் உண்டாகி இருக்கும்.  

இந்த கட்டுரைகளை மெய்ப்புப் பார்ப்பதிலிருந்து எல்லா உதவிகளையும் செய்த மீனாட்சி ரவீந்திரன் தம்பதிகளுக்கும் சிவராஜுக்கும், குக்கூ காட்டுப்பள்ளி அமைப்பினர் அனைவருக்கும் எனது தனித்த பிரியங்களும் அன்பும்.

இந்த நூலை  எங்கள் குடும்ப மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான திரு. வசந்த் ஆல்வா அவர்களுக்குச் சமர்பிப்பதில் மகிழ்கிறேன்.

பசுமை; மாறாததும், மாறியதும்!

அகராதிப்பணியின் நிறைவில் இருக்கிறேன். ஒரு சில பொருத்தமான எளிய சித்திரங்களையும் ஆங்காங்கே கட்டங்களிட்டு முக்கியத்தகவல்களையும், சில சொற்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் இணைத்துக்கொண்டிருக்கிறேன்.

தினமும் மிகப்புதிதான அறிதல்கள் கிடைக்கின்றன. அப்படி இன்றைய அறிதல் evergreen x ailophyllus என்பது குறித்தது.

பொதுவாகவே கூம்புக்காடுகளின் பூவாத்தாவரங்களான பைன் , ஃபிர், ஜூனிபர், குப்ரெஸெஸ் , யூ செடார் போன்றவற்றை இதுநாள் வரையிலும் evergreen என்றே குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் மிகச்சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அவை எவர்க்ரீன் வகைமரங்கள் அல்ல.

Ever green என்பவை மாமரம் போல வருடம் முழுவதும் அதன் canopy எனப்படும் இலைப்பரப்பு முழுவதுமாக ’இல்லாமல் போகாமல்’, முற்றிலும் வெறுமையாகாமல் வருடா வருடம் பழைய முதிர்ந்த இலைகள் உதிர உதிர, புதுத்தளிர்கள் உருவாகிக்கொண்டெ இருக்கும் வகை மரங்கள்,

பைன் போன்றவைகளை ever green என்றல்லாமல் Aiophyllous என்றே குறிப்பிடவேண்டும். அவற்றின் ஊசி இலைகள் பல்லாண்டுகள் வாழும். இந்தச்சொல் மரத்தின் இலையுதிர்க்கும் இயல்பை அல்லாமல், நீண்ட காலம் உயிர்வாழும் இலையின் இயல்பைக்குறிப்பிடுவது.

உதாரணமாக பைன் மரத்தின் ஊசியிலை சுமார் 30 வருடங்கள் வரை அந்தக் கிளையில் ஒளிச்சேர்க்கையையும், நீர் கடத்துதலையும் ஆரோக்கியமாகச்செய்தபடி உயிருடன் இருக்கும். எனவே ஊசி இலைகளின் இந்த நீடித்திருக்கும் இயல்பு தாவரவியல் ரீதியாக அம்மரத்தை Aiophyllous என்கிறது.

இதோடு இன்னுமொரு திருத்தமும் இருக்கிறது. பண்டைய கிரேக்கச்சொல்லான Aio என்பதற்கு “always” அல்லது “ever.” என்று பொருள். உண்மையில் Aiophyllous என்னும் சொல்தான் சரியானது. எப்படியோ மொழியியல் பிழையினால் இது Ailophyllous ஆகியிருக்கக்கூடும். ஏனெனில் Ailo என்பது Allo என்னும் கிரேக்கச்சொல்லின் மருவூ. Allo என்பது மாற்று அல்லது மற்ற – other என்று பொருள் கொண்டது.

ஏறக்குறைய 35 ஆண்டுகளாக பசுமைமாறாதவை பைன் மரங்கள் என்றும் gymnosperms are evergreen என்றும் கொண்டிருந்த அறிதல் உடைந்து அத்தனுடன் கூடவே குறிப்பிட அதற்கென Ailophyllous என்னும் பிரத்யேகச் சொல் இருப்பதை அறிந்துகொண்டதில் பெரும் ஆச்சர்யம் உண்டாயிருக்கிறது.

எனவே கூம்புத்தாவரங்களை Evergreen என்று மட்டுமல்ல இலைகளின் நீடித்திருக்கும் இயலபைக்குறிப்பிட்டு Ailophyllous என்றும் குறிப்பிட வேண்டும்.

Evergreen vs. Ailophyllous: Botanical Leaf Cycles

Evergreen: This is a general ecological term for a plant that appears green throughout the year by replacing its leaves gradually. The canopy is never bare, but individual leaves may only live for a single year before being swapped for new ones.

Example: The Mango tree (Mangifera indica). It maintains a green canopy year-round, but it is constantly shedding old leaves and growing new ones in a continuous cycle.

Aiophyllous: This is a specific botanical term for a plant whose individual leaves are biologically long-lived, often persisting for several years or even decades. It refers to the “permanent” nature of the leaf itself rather than just the look of the tree.

Example: The Bristlecone Pine (Pinus longaeva). Not only is it evergreen, but its specific needles (leaves) are truly aiophyllous, as a single needle can remain functional and attached to the branch for 20 to 30 years.

Correct Term: Aiophyllous (ai + phyll + us) — “Always-leaved.”

Common Error: Ailophyllous — This would literally translate to “other-leaved” or “different-leaved” (which would actually be Allophyllous).

இன்னுமொன்றும் குறிப்பிடுகிறேன். phyllous -phyllus இந்த இரண்டு சொற்களும் எங்கெங்கு எப்படி குறிப்பிடப்படவேண்டுமென்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

phyllous if you are describing how a plant grows (the trait);\

“The aiophyllous trees of the Western Ghats remain vibrant throughout the year.”

-phyllus if you are writing the scientific name of the plant (the identity);

“The researcher identified the specimen as Rhododendron microphyllus.”

’’கற்றல் எல்லையற்றது. கற்கப்படுவது எதுவாயினும் எந்நோக்கம் கொண்டதாயினும் கல்வி என எழுந்து வந்து முன்னிற்பது முடிவிலியாகிய பிரம்மமே” – வெண்முரசு.

செர்ரி மலருக்குக் கொண்டாட்டம்!

JMC எனப்படும் ஜப்பான் வானிலைக் கூட்டுஸ்தாபனம் (Japan Meteorological Corporation) ஒவ்வொரு வருடமும் செர்ரி மலரும் காலம் மற்றும் இலையுதிர் கால வண்ணங்கள் போன்றவற்றை முன்னறிவிக்கிறது. இந்த முன்னறிவிப்புகள் ஜப்பானிய மொழியில் மட்டுமல்லாது, தமிழ் போன்ற பிற மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த வருடத்திற்கான செர்ரி மலர்கள் மலரத் துவங்குகிற, மரம் முழுவதும் மலர்ந்திருக்கும் காலங்களை ஜப்பானின் முக்கிய நகரங்களில் கணித்து, 23.1.26 அன்று செர்ரி மலரும் முன்னறிவிப்புப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வருட வெப்பம் சற்று உயர்ந்திருப்பதால் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே செர்ரி மலர்க் கொண்டாட்டங்கள் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செர்ரி மலர்களின் peak flowering காலம் 7-லிருந்து 10-நாட்கள் வரைதான் இருக்குமென்பதால் உலகெங்கிலும் இருந்து ஜப்பானுக்கு செர்ரி மலர்க் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகள் பயணத்தைத் திட்டமிட வசதியாகத்தான் இந்த முன்னறிப்பு வெளியிடப்படுகிறது.

பொதுவாக மார்ச், ஏப்ரலில் நிகழும் செர்ரி கொண்டாட்டத்துக்குச் சற்று முன்னதாக, பிப்ரவரியில் Kawazu-zakura என்றழைக்கப்படும் அடர் சிவப்பு செர்ரி மலர்கள் மட்டும் டோக்கியோவின் தென் பகுதிகளில் மலர்ந்திருக்கும்.

உலகெங்கிலும் அனைத்து நாகரீகங்களிலும் வசந்த கால மலர்க் கொண்டாட்டங்கள் வெறும் காட்சி இன்பத்திற்காக மட்டுமன்றி, நல்ல அறுவடை, செழுமை மற்றும் இயற்கையின் மறுபிறப்பை உறுதிப்படுத்தும் முக்கியச் சடங்குகளாகவே பண்டைய காலத்திலிருந்து நடைபெறுகின்றன.

பண்டைய தமிழ் நாள்காட்டிகளில் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் ‘இளவேனில்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தன, பல்வேறு கொண்டாட்டங்களும் அக்காலத்தில் நிகழ்ந்தன. சங்கப் பாடல்கள் வேங்கை மலர்வதைத் திருமணத்திற்கு உகந்த நேரமாகக் குறிப்பிட்டன. ஈழத்தில் பாலைமரங்கள் மலர்வதைக்காண்பது ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே இருக்கிறது.

மல்லிகை ஏராளமாக மலர்கையில் நடக்கும் மதுரையின் பிரபல சித்திரைத் திருவிழா, வாழ்க்கையின் சுவைகளை உணர்த்தும் தமிழ்/தெலுங்குப் புத்தாண்டின் வேப்பம்பூ பச்சடி மற்றும் நிலத்தின் வெப்பத்தைத் தணிக்க அம்மனுக்குக் கோடைக்காலங்களில் செய்யப்படும் பூச்சொரிதல் விழா ஆகியவை பண்டைய மலர்த்திருவிழாக்களின் நீட்சியாகத்தான் இன்றும் தொடர்கின்றன.

பண்டைய ரோமானிய மற்றும் ஐரோப்பியச் சடங்குகள்

ரோமானியர்கள் பயிர்களைக் காக்க மலர் தேவதைகளை வழிபட்டனர் :

புளோராலியா (Floralia) என்னும் விழா அவர்களின் மலர்த் தேவதையான ‘புளோரா’வுக்காக ஏப்ரல் இறுதியில் நடத்தப்பட்டது. மக்கள் பல வண்ண ஆடைகளை அணிந்து, மலர்களைச் சூடிக்கொண்டு செழுமையின் அடையாளமாக முயல்களை வீதிகளில் ஓடவிட்டும், அறுவடை நன்கு நடைபெற பீன்ஸ்களைத் தெருவில் வீசி எறிந்தும் கொண்டாடினார்கள்.

ரோசாலியா (Rosalia) என்னும் மற்றுமோர் கொண்டாட்டம் ரோஜாக்கள் ஏராளமாக மலர்கையில் முன்னோர்களை நினைவுகூர நடத்தப்பட்ட வழிபாட்டுடன் இணைந்த கொண்டாட்டமாக அங்கு இருந்தது.

இவற்றோடு பண்டைய கிரேக்கத்தின் மது மற்றும் மலர் விழாவான ஆன்தெஸ்டீரியா, கெல்டிக் மக்களின் நெருப்பு மற்றும் நெருப்பு வண்ண மஞ்சள் மலர் வழிபாடான பெல்டேன் மற்றும் தார்கேலியா ஆகியவையும் முக்கியமானவை.

ட்யூலிப் மலர்த் திருவிழா

இன்று நெதர்லாந்துடன் இணைத்துப் பேசப்படும் ட்யூலிப் மலர்களின் பூர்வீகம் மத்திய ஆசியா மற்றும் துருக்கி… துருக்கிய சுல்தான்கள் தங்கள் தலைப்பாகையில் (Turban) அணிந்ததால், பாரசீகச் சொல்லான ‘டல்பாண்ட்’ என்பது மருவி ‘ட்யூலிப்’ ஆனது.

1634–1637- ல் நெதர்லாந்தில் ஒரு ட்யூலிப் கிழங்கின் விலை ஒரு மாளிகையின் விலைக்கு நிகராக உயர்ந்தது. இதுவே வரலாற்றின் முதல் பொருளாதாரக் குமிழியாகக் கருதப்படும் ட்யூலிப் மேனியா. 1949-லிருந்து நெதர்லாந்தின் பிரம்மாண்ட மலர் பூங்காவான கியூகென்ஹாஃப்-ல் ஒவ்வொரு ஆண்டும் நவீன ட்யூலிப் திருவிழா நடைபெறுகிறது.

1953-லிருந்து கனடாவில் இரண்டாம் உலகப் போரில் உதவியதற்காக நெதர்லாந்து கனடாவிற்கு வழங்கிய நன்றிப் பரிசான ஒரு மில்லியன் ட்யூலிப் மலர்களுக்கான நன்றி தெரிவிக்கும் ட்யூலிப் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய ட்யூலிப் தோட்டத்திலும் வருடா வருடம் பிரமாண்டமாக ட்யூலிப் விழா கொண்டாடப்படுகிறது.

பண்டைய காலத்தில் ஒரு சிறு பனிப்பொழிவு கூட விளைச்சலைப் பாதிக்கும் என்பதால், மலர்களைப் பாதுகாப்பது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகக் கருதப்பட்டது. இன்று அவை சுற்றுலா மற்றும் நட்புறவின் அடையாளமாக மாறினாலும், அவற்றின் அடிப்படை நோக்கம் இயற்கையின் செழுமையைக் கொண்டாடுவதுதான்.

ஜப்பானில் வசந்த காலத்தில் செர்ரி மலர்கள் (Cherry Blossoms) பூத்துக் குலுங்குவதைக் கொண்டாடும் நிகழ்வு ‘ஹனாமி’ (Hanami) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ‘ஹனா’ என்றால் மலர், ‘மி’ என்றால் பார்ப்பது என்று பொருள். இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஜப்பானிய கலாச்சாரத்தின் ஆன்மாவோடு கலந்த ஒரு பாரம்பரியம்.

சகுரா கொண்டாட்டத்தின் வேர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை: இம்மரங்கள் வருடா வருடம் பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாகப் பூத்துக்குலுங்கிப் பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தைச் சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.

கி.பி. 710–794 இல் ஜப்பானியர்கள் சீனக் கலாச்சாரத்தின் தாக்கத்தால் ப்ளம் மரங்களின் ‘உமே’ (Ume) மலர்கள் மலருகையில் அந்தக் காலத்தைச் சிறு விழாவாகக் கொண்டாடினர்.

ஹீயன் காலத்தில்தான் (794–1185) சகுரா மலர்கள் முக்கியத்துவம் பெற்றன. கி.பி. 812-ல் பேரரசர் சாகா கியோட்டோவில் உள்ள அரச மாளிகையில் முதன்முதலில் சகுரா மலர் பார்க்கும் விருந்தை நடத்தினார். அதுவே இன்றைய ஹனாமி திருவிழாவின் தொடக்கமாக அமைந்தது.

பண்டைய ஜப்பானிய விவசாயிகள், செர்ரி மரங்களில் ‘காமி’ (Kami) எனப்படும் தெய்வங்கள் வசிப்பதாக நம்பினர். மலர்கள் பூப்பதை வைத்து அந்த ஆண்டின் அறுவடை எப்படி இருக்கும் என்று அவர்கள் கணித்தனர்.

சகுரா மலர்கள் மிகக் குறுகிய காலமே (சுமார் ஒரு வாரம்) பூத்திருக்கும். இது மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைக் குறிப்பதாக சாமுராய்கள் கருதினர். “வாழும் போது அழகாக வாழ்ந்து, வீழும் போது கௌரவமாக வீழ வேண்டும்” என்ற தத்துவத்தை இம்மலர்கள் அவர்களுக்கு உணர்த்துவதாக நம்பப்பட்டதால் ஹனமி கொண்டாட்டம் ஜப்பானின் பிரிக்கமுடியாத அங்கமானது.

இன்று சகுரா திருவிழா ஜப்பான் முழுவதும் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது :

செர்ரி மரங்கள் ப்ருனஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்தவை. காட்டுச்செர்ரியான–Prunus avium என்பதுதான் செர்ரிப் பழங்களுக்காக வளர்க்கப்படும் மரம். ஜப்பானியர்கள் செர்ரியின் காட்டு மூதாதைகளிடமிருந்து பல நூறு கலப்பின செர்ரி வகைகளை அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர். (ப்ளம் மரங்களான Prunus mume செர்ரி மரங்களிலிருந்து வேறுபட்டது, இரண்டும் ஒன்றல்ல).

செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும். ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும் வகைக்கேற்றபடி காணப்படும்.

ஜப்பானியர்கள் இதை சகுரா என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக (sato zakura) சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள் யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை யேசகுரா (yaezakura) என்றும் அழைக்கப்படுகின்றன. இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862-ல் ஜப்பானிலிருந்து வட அமெரிக்காவிற்கு G.R. Hall என்பவர் கொண்டு வந்த பின்னர் அங்கும் இவை வளர்கின்றன.

Prunus serrulata எனப்படும் மலர்களுக்கான செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவைத் தாயகமாகக் கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம் 26–39 அடி வரை வளரும். இம்மரத்தின் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரங்கள் (lenticels) நிறைந்தும் காணப்படும். இலைகள் ஓரங்களில் பற்கள் போன்ற அமைப்புடன் எதிரடுக்கில் நீள்முட்டை வடிவிலிருக்கும்.

மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மி.மீ அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன.

சகுரா மலர்கள் என்றாலே இளஞ்சிவப்பு நிறம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஜப்பானில் 200-க்கும் மேற்பட்ட சகுரா வகைகள் உள்ளன. சில பூக்கள் வெண்மையாகவும், சில அடர் சிவப்பாகவும், ‘கியோய்கோ’ (Gyoiko) என்ற வகை சகுரா பச்சை நிறத்திலும் பூக்கும்.

ஜப்பானில் பள்ளி மற்றும் அலுவலகங்களின் ‘புதிய ஆண்டு’ ஏப்ரல் மாதத்தில்தான் தொடங்குகிறது. சகுரா மலர்கள் பூக்கும் அதே நேரத்தில் இந்தப் புதிய தொடக்கமும் அமைவதால், இது மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்குகிறது. பகலில் மலர்களைப் பார்ப்பது ஒரு ரகம் என்றால், இரவில் பார்ப்பது தனி அழகு. பூங்காக்களில் ஆயிரக்கணக்கான காகித விளக்குகள் (Paper Lanterns) ஏற்றப்படும். நிலவொளியிலும், செயற்கை விளக்கு ஒளியிலும் சகுரா பூக்கள் மின்னுவதை ’யோசகுரா’ (Yozakura – இரவு அழகு) என்று அழைக்கிறார்கள்.

ஜப்பானில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு: “ஹனா யோரி டாங்கோ”. இதன் பொருள், “மலர்களை ரசிப்பதை விட, அங்கு விற்கப்படும் இனிப்புப் பலகாரங்களை (Dango) உண்பதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்பதாகும். கொண்டாட்டங்களில் உணவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இது குறிப்பிடுகிறது.

ஹனாமி சிறப்பு உணவுகள்

  ஹனாமி டாங்கோ (Hanami Dango): இது இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும் இனிப்பு உருண்டைகள். இவை வசந்த காலம், பனிக்காலம் மற்றும் வரவிருக்கும் கோடை காலத்தைக் குறிக்கின்றன.

  சகுரா மோச்சி (Sakura Mochi): இளஞ்சிவப்பு நிற அரிசி மாவினால் செய்யப்பட்டு, உள்ளே இனிப்பு பீன்ஸ் பேஸ்ட் வைக்கப்பட்டிருக்கும். இது உப்பில் நனைக்கப்பட்ட சகுரா இலையினால் சுற்றப்பட்டிருக்கும்.

  சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும் ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகளும் இதே பெயரில் இருக்கின்றன.

  ஜப்பானியர்கள் ‘சாகே’ (Sake) எனப்படும் அரிசி மதுவில் செர்ரி மலர்களை மிதக்கவிட்டு அருந்திக் கொண்டே மலர்களை ரசிப்பார்கள்.

  சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேநீர், சோயா பால் மற்றும் கோலா.

  Hanami bento – ஹனாமி பெண்டோ எனப்படும் வறுத்த மீன் துண்டு, பொறித்த காய்கறிகள், போன்றவை இருக்கும் மதிய உணவுப்பெட்டி.

  Finger food எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால், சுஷி மீன் மற்றும் சமைத்த காய்கறிகள்.

  மஞ்சள் கலந்த குடிநீர்.

சகுரா இதழ்கள் காற்றில் விழுவதைப் பார்ப்பதற்கு “இளஞ்சிவப்பு பனிப்பொழிவு” (Sakura Fubuki) போல இருக்கும். ஜப்பானியக் கவிதைகளில் இது வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கும் ஒரு அழகான குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும் காலத்தில், நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்படுகிறது.

ஹனமியின் போது பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்குக் கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். ஹனமி கொண்டாட்டத்தின் போது பிரபலமான பூங்காக்களில் இடம் பிடிப்பது மிகவும் கடினம். அலுவலகத்தின் இளநிலை ஊழியர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அதிகாலையிலேயே சென்று ‘ப்ளூ ஷீட்’ எனப்படும் நீல நிற விரிப்பை விரித்து இடம் பிடித்துக் காத்திருப்பார்கள்.

ஹனாமி பெண்டோ எனப்படும் பிரத்யேகமான உணவுப் பெட்டிகள் தயார் செய்யப்படும். இதில் வண்ணமயமான சுஷி, காய்கறிகள் மற்றும் மீன் உணவுகள் இருக்கும். இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும் ஓய்வெடுத்தும் மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்.

பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக் காண உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்.

இங்கு 100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பல நாடன் பாடல்களும், பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் காலத்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுப்புத்தகங்கள், குடைகள், அலங்காரப் பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு சகுரா என்று பெயரிடுகிறார்கள்.

நதிகள் மற்றும் ஏரிக்கரைகளில் உள்ள சகுரா மரங்களை ரசிக்க மக்கள் படகு சவாரி செய்வார்கள். உதாரணமாக, டோக்கியோவின் சிடோரிகாபுச்சி (Chidorigafuchi) போன்ற இடங்களில் படகில் சென்று கொண்டே மலர்களைப் பார்ப்பது மிகவும் பிரபலம்.

ஜப்பானியர்கள் கொண்டாட்டத்தின் போதும் சில விதிகளைத் தவறாமல் பின்பற்றுவார்கள் :

  தங்களின் குப்பைகளைத் தாங்களே வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் போட வேண்டும்.

  மரக்கிளைகளை ஒடிக்கவோ அல்லது பூக்களைப் பறிக்கவோ கூடாது. மரங்களின் வேர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றின் மீது மிதிக்காமல் அமர வேண்டும். ஆகியவை மிக அடிப்படையான விதிகள்.

ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா, வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் மேகாலயாவில் Prunus cerasoides வகைச் செர்ரிமரங்களின் மலர்தல் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

சகுரா மலரும் ஹனமி கொண்டாட்டம் முடிந்த பிறகு, ஜப்பானின் நிலப்பரப்பையே இளஞ்சிவப்பு நிறமாக மாற்றும் மற்றொரு பிரமாண்டமான மலர்க் கொண்டாட்டமான ஷிபாசகுரா நடைபெறுகிறது. ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் ஜப்பான் சென்றால், இந்த ஷிபாசகுரா திருவிழாவைக் கண்டு மகிழலாம்.


ஷிபாசகுரா விழாவில் கொண்டாடப்படுவது ‘மாஸ் பிளாக்ஸ்’ (Moss Phlox) என அழைக்கப்படும் Phlox subulata என்னும் தரையை ஒட்டி அதிகபட்சமாக 10 செ.மீ உயரம் மட்டுமே வளரும், ஒரு கம்பளம் போலப் படர்ந்து வளரும் ஒரு தரை படர்த் தாவரத்தின் இளஞ்சிவப்பு மலரைத்தான். இந்தத் தாவரம் ஜப்பானைப் பூர்வீகமாகக் கொண்டதல்ல; இது வட அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஜப்பானிய மொழியில் ‘ஷிபா’ என்றால் புல்வெளி என்று பொருள். இந்த மலர்களும் மரங்களில் பூக்கும் சகுரா மலர்களைப் போலவே இருப்பதால், இது ‘புல்வெளி சகுரா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திருவிழாக்களில் சுமார் 8-வகை பிளாக்ஸ் மலர்கள் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக:

  McDaniel’s Cushion: அடர் இளஞ்சிவப்பு நிறம்.
  Mont-blanc: தூய வெள்ளை நிறம்.
  Autumn Rose: மென்மையான ரோஜா நிறம்.
  Oakington Blue-eye: நீல நிறச் சாயல் கொண்ட மலர்.

இது ஜப்பானின் இயல் தாவரமில்லையென்றாலும் இந்த மலர்தலும் ஜப்பானின் வசந்த கால அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஹனமி கொண்டாட்டங்களின் போதே வயோலா மலர்களும் ஜப்பானியப் பூங்காக்களில் நிறைந்து மலர்ந்து கண்ணைக் கவரும்.

பண்டைய ரோமின் ஆரவாரமான ‘புளோராலியா’ முதல் ஜப்பானின் அமைதியான ‘ஹனாமி’ மற்றும் நவீன கால ‘ட்யூலிப்’ திருவிழாக்கள் வரை, மனிதகுலம் மலர்களை வெறும் அழகிற்காக மட்டும் கொண்டாடவில்லை; அவை வாழ்வின் நம்பிக்கையையும், மறுபிறப்பையும் குறிக்கும் குறியீடுகளாகவும் இருக்கின்றன. காலப்போக்கில் இந்தச் சடங்குகளின் தீவிரம் குறைந்து அதன் வடிவங்கள் மாறிவிட்டிருந்தாலும், இயற்கையின் அழகிய மாற்றங்களை ரசிப்பதும், நிலத்தின் வளமைக்கு நன்றி செலுத்துவதும் இன்றும் மாறாமல் உள்ளன.

2026-ல் நிகழவிருக்கும் சகுரா மற்றும் ஷிபாசகுரா போன்ற திருவிழாக்கள், மனிதர்களுக்கும் இயற்கைக்குமான ஆழமான பிணைப்பை மீண்டும் புதுப்பிக்கும் ஒரு பாலமாக அமைகின்றன. மலர்ந்து உதிரும் ஒவ்வொரு இதழும் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான்—வாழ்க்கை நிலையற்றது, எனவே மலரும் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாகக் கொண்டாடுவோம்!

மும்பையிலிருந்து கோவைக்கு!

இரவு வெகுநேரம் உறக்கமில்லை. சரண் இத்தனை காற்று மாசு இருக்கும் இடத்தில் இருப்பது வேதனையளித்தது. எப்பவோ தூங்கினேன். அதிகாலையிலேயே எழுந்து இருவரும் தயாரானோம். வாசலில் நேற்று ஹோலிகா தகன் நடந்த சுவடே இல்லை, துப்புரவாக இருந்தது. சாம்பலை நெற்றியில் வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்வார்கள் என்று சரண் சொல்லியிருந்தான், அதன்பின்னர் சுத்தம் செய்திருப்பார்களாக இருக்கும்.

காற்று மாசு 300-க்கு அருகில் இருந்தது. இந்த புழுதிமண்டலத்தில் மூழ்கி இருக்கும் நகரில் ,முரணாகச் சாலைகளை உடனுக்குடன் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் இந்தப் பெருநகரம் இயங்குகிறது என்றே எனக்குப் புரியவில்லை.

விமான நிலையத்தில் சாப்பிடலாம் என்று நினைத்து வந்தோம், ஆனால் அங்கு எந்த உணவகங்களும் வெளியே இல்லை. சரணுக்கு ஹோலி விடுமுறை, எனவே அவன் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொன்னான். நான் உள்ளே சென்று டிஜி யாத்ராவின் உதவியால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போர்டிங் பகுதிக்கு வந்தேன்.

பெண்களைச் சோதனையிடும் இடத்தில் இருந்த பெண்காவலர் ‘நமஸ்தே ஜி’ சொல்லி வணங்கி, “நீங்கள் சென்னையா?” என்றார். “இல்லை, கோயம்புத்தூர்” என்றேன். அவருக்கு ‘மனசிலாகவில்லை’. சென்னை நங்கநல்லூரில் சில வருடம் பணியாற்றியதாகச் இந்தியில் சொன்னார். எனக்குப்புரிந்தது இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக்கொண்டோம்.

புத்தகக்கடை இருந்தது, ‘வெண்முரசு’ இருக்குமா என்று தேடினேன்; இல்லை. தமிழே இல்லை எந்த வரிசையிலும். புது தில்லி விமான நிலையத்திலெல்லாம் நிறைய தமிழ் நூல்கள் இருந்தன.

ஓர் இடத்தில் பலர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஹோட்டல் என நினைத்து அங்கே செல்ல முயன்றபோது ஒரு பணியாளர் மிக மென்மையாக, “அங்கே லவுஞ்சில் இருக்க சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டும்தான் வரலாம்” என்றார். சரி என்று திரும்பி வேறு உணவகத்தைத் தேடினேன். ‘Gully’ என்று ஒரு உணவகம் இருந்தது. என்ன பேரோ, என்ன அர்த்தமோ!

வரிசையில் நின்று ஒரு மசால் தோசையை 450 ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தேன். அதிகாலைக் கொள்ளை! உணவகத்தின் பணிப்பெண் ஒருத்தி டோக்கன் எண்ணைக் கூவி கூவிச் சொல்லிக்கொண்டிருந்தாள். அழகி,இல்லையில்லை பேரழகி. கண்கள் முகத்தில் கால் பாகம் இருந்தன.காதில், மூக்கில் கழுத்தில் ஒன்றுமில்லை. கொண்டை போட்டு மேலே ஒரு தொப்பி, சாம்பல் நிறச் சீருடை. “உலக அழகிகள் கோடி உன் காலைக் கழுவலாம் வாடி” என்ற பாட்டை இவளுக்குத்தான் பாட வேண்டும்.

என் டோக்கன் 18. நான் அவளிடம் சென்று, “என்னைக் கூப்பிடுகையில் ஆங்கிலத்தில் எண்ணைச் சொல்ல வேண்டும், இந்தியில் வேண்டாம்” என்றேன். புன்னகைத்துத் தலையசைத்தாள். பத்து வரை இந்தியில் தெரியும், 18-க்கு என்ன செய்வது?

அந்த 450 ரூபாய் மசால் தோசை கால் கரண்டி மாவில் முறுகலாகச் செய்யப்பட்டிருந்தது. வெகு சுமாரான சட்னிகளுடன் கொடுத்தார்கள். வேடசெந்தூர் வந்து சமைத்துச் சாப்பிடுவதைப் பற்றி நினைத்துக்கொண்டே சாப்பிட்டேன்.

ஏர் பஸ்ஸில் அமர்ந்து தருண், சரணிடம் விமானம் ஏறப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என் அருகில் ஓர் அம்மாள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். நான் போன் பேசி முடித்ததும், “தமிழா?” என்று ஆர்வமாகக் கேட்டார். “ஆமாம்மா” என்றேன்.

“தமிழ் பேசிக் கேட்டு எத்தனை நாளாச்சு! சொந்த ஊர் சேந்த மங்கலம். இங்கே மகன் வீட்டுக்கு வந்து 26 வருஷமாச்சு. வீட்ல மராத்திதான் பேசறாங்க எல்லாரும். பேரப்பிள்ளைகளும் ஸ்கூல்லயும் மராத்தியும் இந்தியும்தான் படிக்கறாங்க, அதனால் வீட்ல தமிழ் பேசினா பாடம் படிக்கறது கஷ்டமாயிடும்னு பையனும் மருமகளும் சொல்றாங்க. எனக்கு தமிழே மறந்துபோயிருச்சு” என்றார்.எனக்கு அவரைப் புரிந்துகொள்ள முடிந்தது. மூன்று நாட்களே எனக்கு கண்ணைக்கட்டியதே!

அவர் கையைப் பற்றிக்கொண்டேன், மகன் ஏதோ ஒரு தனியார் வங்கியின் பெயரைச் சொன்னார், அங்கே உதவி மேலாளர். வீட்டு வாடகை, பிள்ளைகள் படிப்பு, போன் கட்டணம் எல்லாம் வங்கியே கொடுக்கிறதாம். கல்யாணம் செய்து கொடுத்த பெண் கோவைப்புதூரில் இருக்கிறாள், அங்கே ரொம்ப வருஷம் கழித்துப் போவதாகவும், பெண் வயிற்று பேரப்பிள்ளைகளின் கோடை விடுமுறை வரை அங்கே இருந்துவிட்டு மீண்டும் இங்கே வரப்போவதாகச் சொன்னார். என்னைக் குறித்து அவர் எதுவுமே கேட்கவில்லை, அவருக்குத் தமிழில் யாரிடமாவது பேச வேண்டும் என்னும் ஆதங்கம் இருந்திருக்கும் போல.

விமானத்தில் கூட்டமில்லை. என் மூன்று இருக்கை வரிசையில் இரண்டு இருக்கை காலி, எனவே பணிப்பெண்ணிடம் சொல்லிவிட்டு ஜன்னலோரம் அமர்ந்துகொண்டேன். விமானி சுஷீல் குமார், துணை விமானி பபிதா.

இறக்கைக்கு நேர் மேலே இருந்த இருக்கை என்னுடையது. எட்டி இறக்கையின் ஸ்க்ரூவெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். எனக்கு முன் வரிசையில் இளம்தம்பதி கைக்குழந்தையுடன் வந்து அமர்ந்தார்கள். அந்தப் பாப்பா கொள்ளை அழகு, குட்டி முகம், கண்கள் கழுவிய குருவிமுட்டை போல பளபளப்பாக.

அவ்வப்போது பாப்பா சிணுங்கியது. அப்படிச் சிணுங்குகையிலெல்லாம் அந்தப் பெண், “அச்சோ அத்தை வர்றா பாரு” என்று மிரட்டினாள். என்ன அநியாயம்? நாத்தனார் மீது அப்படி ஒரு விரோதம் போல.

விமானம் புறப்படுகையில் அந்தப் பெண் கணவன் தோள் மீது தலைசாய்த்துக்கொண்டாள்; நான் அவசரமாகக் கண்களை விலக்கிக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தேன். Physical intimacy-யின் இப்படியான சின்னச் சின்ன விஷயங்களுக்கு ஏக்கம் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களின் கணவர்களுக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. அந்தப்பாப்பா ஜன்னலோரம் எட்டி எட்டி வேடிக்கை பார்க்கையில் அதன் கருப்புவளையலிட்ட பிஞ்சுக்கைகள் தெரிந்தன.

சுஷீல் குமார் பாதிப் பயணத்தில் தேவையில்லாமல் விமானம் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது என்பதையெல்லாம் சொல்லி, வயிற்றில் உப்பு, புளி, காரமெல்லாம் கரைத்துக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் முன்னதாகவே கோவை வந்து சேர்ந்தேன். பெட்டிக்குக் காத்திருக்கையில், தன் சூட்கேஸை எடுக்கக் காத்திருந்த ஓர் இளம்பெண், கொஞ்சம் முன்னால் நின்று,பெல்ட்டில் வந்த அவளது சூட்கேஸைக் எடுத்துக்கொண்ட அப்பாவிடம் கோபித்துக்கொண்டு, தரையை உதைத்துச் சிணுங்கிக்கொண்டே சென்றாள். அவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார் போல. சிரித்துக்கொண்டு அவளை தழுவிக்கொண்டார். இப்படி அப்பாக்களும் இருக்கும் உலகுதான் இது. பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

காரில் ஏறுமுன்பு, கல்லூரியில் நான் விடுப்பு எடுக்கையில் இந்த வருடப் படிப்பை முடிக்கவிருக்கும் ஒரு மாணவி, தன் காதலனுடன் திருமணம் நடக்க வீட்டில் எதிர்க்கிறார்கள் என்றும், தன் மனம் மாற அக்கா வீட்டில் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்றும், தனக்கு விருப்பமில்லாத வேறு திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் என்னிடம் அழுதுகொண்டிருந்தது திடீரென நினைவுக்கு வந்தது. “அவரை வந்து நேரே பார்த்துப் பேசச்சொல்லு தேவைன்னா நான் வந்து பேசறேன், கவலைப்படாதே” என்று தைரியம் சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தேன்.

கோவையில் வெயில் தொடங்கி இருந்தது. மதிய உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன். 3 நாள்தான் என்றாலும் நீண்டதாக இருந்தது இந்த மும்பைப் பயணம்.

மறுநாள் கல்லூரியில் பணியில் சேர்ந்தேன். அந்தப் பெண் முதல் ஆளாகத் துள்ளிக் குதித்து என் அறைக்கு வந்தாள். “மேம், எங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க, 6-ம் தேதி நிச்சயதார்த்தம்” என்றாள். அவளின் கையைப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன். அவள் கையில் புதிதாக மஞ்சள் நிற நோன்புக்கயிறு கட்டியிருந்தாள்.

தெய்வங்களே கைவிடாது காத்துக்கொள்க!

நிறைவு.

மும்பை- தத்புருஷன்.

இரவு டிமார்ட்டுக்கு ஆட்டோவில் போய் இறங்கி கொஞ்சம் பொருட்கள் வாங்கினோம். ஹேண்ட் பேக்கை வரிசையில் நின்று டேக் போடுகையில், எனக்கு முன்னே இருந்த ஒரு பெண் தோளில் போட்டுக்கொண்டிருந்த , இரண்டு இட்லிகளை கன்னத்துக்குள் திணித்தது  போல புட்டு புட்டென்று, ரசகுல்லாவே குழந்தையானது போலிருந்த பாப்பா என்னைப் பார்த்துச் சிரித்தது. நான் அதன் கையை மெல்லத் தொடப் போகையில், சரியாய் சரண் குறுக்கே வந்து என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “வேண்டாம்  மீ ப்ளீஸ்” என்றான். அந்தப் பாப்பா மறுபடியும் என்னைப் பார்த்துச் சிரித்தது. சரணிடம் கொஞ்ச நேரத்திற்கு கோபித்துக் கொண்டேன்.

திருவிழாக்கூட்டம் போல இருந்தது. கடைக்குள் டிராலியைத் தள்ளிக்கொண்டு வந்த சரண், நான் கூட்டத்தில் தொலைந்து போய்விடுவேன் என்று பதட்டமாக இருந்தான். நான் பாட்டுக்கு ஒவ்வொரு பிரிவாக வேகமாகத் தாண்டித் தாண்டி, எனக்குத் தெரிந்த பாஷையில் விசாரித்து, எனக்கு வேண்டியதைத் தேடி எடுத்துக்கொண்டிருந்தேன். சரண் என்னை விமானம் ஏற்றும் நேரத்திற்காக குலசாமியிடம் எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான்.

வாங்கிய பொருட்களுடன் மீண்டும் ஆட்டோ பிடித்து, ஒரு பெரிய சைவக் கடையான ஜைன உணவகத்திற்குப் போனோம். அங்கே வாசலில் ஏராளமாக நாற்காலிகள் போட்டு, பார்சல் வாங்கக் காத்திருந்தார்கள். உள்ளேயும் கூட்டம். நாங்கள் எதிரெதிரே அமர்ந்து வேண்டியதை ஆர்டர் செய்தோம். கடைசியில் தயிர் சாதமும் ஆம் ரஸும்  கேட்டேன். தயிர் அப்படி ஒரு புளிப்பு! ஊறுகாய் மகா கேவலமாக இருந்தது. ஆம் ரஸ் அதற்கும் மேல் புளிக்கவே முடியாது என்பது போல இருந்தது. நம்மூரில் கூட ஆம் ரஸ் அருமையாகக் கொடுப்பார்களே!

ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு வரும் வழியெல்லாம், எல்லா அடுக்குமாடி வீட்டு வாசலிலும் நாம் போகிக்குச் செய்வது போலக் கட்டைகளைக் கூம்பாக நிறுத்தித் கட்டிக்கொண்டிருந்தார்கள்; ஏதோ ஒரு சடங்கு போல. “என்ன இது?” என்றேன். “நாளைக்கு ஹோலின்னா, முந்தின நாள் ராத்திரி இப்படி ஹோலிகா தகன் செய்வாங்க” என்றான். “அப்படின்னா  போய்ப் பார்க்கலாண்டா” என்றேன்.

எனவே, டாக்ஸியை அவன் அடுக்கத்துக்குச் சற்று முன்பாகவே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். ஒரு சில தனி வீடுகளில் உள்ளேயே நெருப்பு எரிந்தது. சரண் தங்கியிருக்கும் அடுக்ககத்தின் வாசலில் பெருங்கூட்டம். எல்லா வீட்டினரும் அங்கே இருந்தார்கள். நல்ல ஜொலிக்கும் உடைகளில் பெண்கள்; எல்லாப் பெண்கள் கையிலும் தாம்பாளம், இனிப்பு, அகல்விளக்கு, மலர்சரங்கள் மற்றும் தேங்காய் இருந்தன.

நானும் சரணும் எதிரே நின்று வேடிக்கை பார்த்தோம். ஒரு ஒல்லி இளைஞன் என்னிடம் “நமஸ்தே ஜி” என வணங்கிவிட்டு, சரணிடம் என்னவோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவன்தான் அந்தச் அடுக்கத்தின் மேற்பார்வையாளராம். பல கட்டைகள், அட்டைகள், மரப்பலகைகள் எல்லாவற்றையும் சேர்த்து கயிற்றால் கட்டி, தெருவில் ஒரு ஓரத்தில் நிறுத்தி, அது உறுதியாக இருக்கிறதா என்று ஆண்கள் சோதித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சில இளைஞர்கள் ஓரக்கண்ணால் சுடிதார் அழகிகளைப் பார்த்துக்கொண்டு அவர்களுக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். சின்னப் பிள்ளைகள் ஊடே ஓடிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு என்னவோ ‘7G ரெயின்போ காலனி’க்குள்ளே இருப்பது போலத் தோன்றியது.

வனஸ்பதி பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து ஒருவர் கட்டைகளுக்குள்ளே கொட்டினார். பெண்கள் கட்டைகளுக்கு மலர்சரம் அணிவித்து, ஆரஞ்சு நிறக் குங்குமம் இட்டார்கள். சில மாமியார்கள் இளம் மருமகள்களிடம் நாரியல்  எங்கே காணோம் பூரண் போளி எடுது வச்சியா என்றெல்லாம் கோபித்தார்கள். பின்னர் எல்லாரும் கூடி அந்தப் பெரிய கட்டைக் குவியலுக்கு நெருப்பு வைத்து, கைதட்டி ஆரத்தி காட்டி ஆரவாரம் செய்து இனிப்பு வழங்கினார்கள்.

ஒரு பெரியவர் அந்த எரியும் நெருப்பிற்கு முன்பாக நின்று மராத்தியில் உரையாற்றினார். எல்லோரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “என்னடா சொல்றாரு?” என்றேன். ஹோலிகா தகனம் பத்திச்சொல்லறாரு”

’’..எனக்குப் புரியலையே..’’

வா, நான் உள்ளே வந்து சொல்றேன்” என்றான்.

அப்படி ஒரு மூத்தவர் சடங்குகள் நிகழுகையில், இளையோருக்கு அந்தச் சடங்கைப் பற்றிச் சொல்வது மிக முக்கியமாக எனக்குப் பட்டது. நாம் அப்படி ஏதும் செய்வதில்லை. நமக்கே பல சடங்குகள் என்னவென்று தெரியாது. அதிகபட்சமாக, “அதை எடுக்காதே, சாமி கண்ணைக் குத்தும்” என்று மட்டும்தான் சொல்கிறோம். கொஞ்சம் வெட்கமாக இருந்தது. எல்லா கலாசாரச் சடங்குகளிலும் இப்படி அதன் பொருள் என்ன என்று மூத்தவர்கள் இளையோருக்குச் சொன்னால்தானே அது தலைமுறைகளாகத் தொடரும்?

உள்ளே சென்றோம். லிஃப்ட்டுக்காகக் காத்திருக்கும் இடத்திற்கு அருகில், கண்ணாடிக் சுவர்களாலான ஒரு அறை இருக்கிறது. அங்கே அமர்வதற்கு வெளுத்துப் போன சிவப்பு நிறத்தில் சோஃபாக்கள் போடப்பட்டிருக்கும். அங்கே அமர்ந்தோம். வெளியே மதிலுக்கு மேலே நெருப்பு கொழுந்துவிட்டு எரிவது இங்கிருந்தே தெரிந்தது.

“சொல்லுடா” என்றேன்.

’’பிரகலாதனை தெரியுமில்ல…’’

‘’ ஆமா’’

’’…அவனை அவங்க அப்பா ஹிரண்யகசிபு, தன்னை மட்டும்தான் வழிபடணும்னு சொல்லிட்டே இருந்தாரு. ஆனா அவன் நாராயணனை மட்டும்தான் வணங்கினான். எனவே அவனை கொல்ல பல முயற்சி செய்தார் ஹிரண்யகசிபு, ஆனா அவனை கொல்ல முடியலை. ஹிரண்யகசிபுவின் தங்கை ஹோலிகா. அவளுக்கு நெருப்பில் மரணம் சம்பவிக்காதுனு ஒரு வரம் இருக்கு. அதனால் வாடி தங்கம் அத்தை மடியில் உட்கார்ந்துக்கோனு சொல்லி பிரகலாதனை உட்கார வச்சுட்டுச் சுற்றிக் கட்டைகளை அடுக்கி நெருப்பு வச்சாங்க. அப்போ பிரகலாதன் கை கூப்பி “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருந்தான். அந்த நெருப்பு நாராயண நெருப்பா மாறி ஹோலிகாவைச் சுட்டுக் கொன்னுடுச்சு. பிரகலாதன் ஒண்ணுமே ஆகாம வெளியே வந்தான். இதை ஹோலிக்கு முந்தின நாள் கொண்டாடுறாங்க…’’ என்றான்.

’’…இன்னொரு வெர்ஷனில் ஹோலிகாகிட ஒரு ஷால் இருந்தது அது நெருப்பில் எரியாது அதை போர்த்திகிட்டு பிரகலாதனை மடியில் வச்சுகிட்டா ஆனா பிரகலாதன் அந்த மந்திரம் சொன்னதும் ஷால் பிரகலாதனமேல விழுந்து அவனை மூடிருச்சு ஹோலிகா எரிஞ்சுபோயிட்டா…’’

“இதெல்லாம் எப்படிடா உனக்குத் தெரிஞ்சுது?”

’’..இரு வர்றேன்… ஹோலிக்கு ஏன் கலர் பூசிக்கிறாங்கன்னு சொல்லேன்..’’

எனக்கு தெரியவில்லை. உண்மையிலேயே வெட்கம் அதிகமானது. என்னது ஒண்ணுமே தெரியாம இருக்கோமே என்று! ஹோலியைத் தான் வருஷக்கணக்கா கொண்டாடுறாங்க. ஆனா ஏன், என்னனு ஒரு நாளும் நினைச்சுப் பார்த்ததே இல்லையே!

’’….ஏன்னா கிருஷ்ணர் ஒருநாள் தான் ரொம்ப கருப்பா இருக்கோம்னு வருத்தப்பட்டாராம். ராதா அதுக்கு அவர் மேல பல வண்ணங்களைத் தூவி வண்ணமயமா ஆக்கினாளாம். கிருஷ்ணரும் அங்கிருந்த ராதைக்கும் கோபிகைகளுக்கும் பூசி எல்லாருமா விளையாடினாங்களாம். அதுதான் ஹோலி பண்டிகை.

’’…நிற பாகுபாடு இல்லாம எல்லோரும் ஒரே நிறம்னு சொல்லறதும் ஹோலியின் ஒரு அர்த்தம் மீ..’’

“முன்னடியெல்லாம் குளிர்காலம் முடிஞ்சு கோடைக்காலம் துவங்கும்போது ஹோலி கொண்டாடுவாங்க. பருவங்கள் மாறும்போது உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தணிக்க, கோடையில் ரத்தம் போல் மலரும் பலாச மலர்களின் சாற்றையும், மஞ்சள் மற்றும் வேம்பு அரைத்த சாற்றையும் உடலில் பூசி அறுவடையைக் கொண்டாடுவார்கள். அது அப்படியே மருவி இப்படி ஆயிருச்சு” என்றான்.

வழக்கமாகவே சரண் மீது, அவன் அறிதலின் மீது எனக்குப் பெரும் மரியாதை இருக்கும். இப்போது பெரும் பிரமிப்பு இருந்தது. எங்கே இவன் இதையெல்லாம் தெரிந்துகொள்கிறான்? எனக்கு வெட்கமாக இருந்தது, எனக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை என்று. பேசிக்கொண்டிருக்கையிலேயே தருண் கல்லூரியில் அன்றே ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை அனுப்பியிருந்தான்.

சரண் என் கண்களைப் பார்த்து ’’..மீ என்ன சொன்னான் பிரகலாதன் தீக்குள்ள உட்கார்ந்துட்டு” என்றான். நான் திகைத்து, திக்கித்திணறி ” வந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்று எப்படியோ சொல்லிவிட்டேன்.

எனக்கு என்ன தெரியும் என்று என்னைச்சுற்றியிருக்கும் சிலருக்குத் தெரியும் ஆனால் எனக்கு என்ன தெரியாது என்று சரண் தருணுக்குத் தான் தெரியும்

சரண் மீண்டும் என் கண்களை உற்றுப் பார்த்து, “..வாசுதேவாய அப்படின்னா?” என்றான். “கிருஷ்ணர்டா, வசுதேவரின் மகன் வாசுதேவன்” என்றேன் பெருமையாக.

“இந்த நரசிம்ம அவதாரம் நடக்கிறப்போ வசுதேவரே இல்லை. பிறக்கலை அப்புறம் எப்படி வாசுதேவனும் கிருஷ்ணரும் வந்திருப்பாங்க? அவதார வரிசை தெரியும் இல்லையா உனக்கு? நரசிம்ம அவதாரத்துக்கு அப்புறம்தானே ராம, கிருஷ்ண அவதாரமெல்லாம்?” என்றான். அப்படியே திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன்.

சரணின் முகத்தின் பின்னால் வெளியே எரியும் நெருப்பின் செந்நிறம் பூசியது போல ஒளிர்ந்தது. குருவின் முன்பாக அமர்ந்து பாடம் கேட்பது போல அமர்ந்திருந்தேன்.’’..என்னடா எனக்கு ஒன்னுமே தெரியலையே..’’

சிரித்து என் தோளைத் தழுவிக்கொண்டு, “சரி பரவாயில்லை, வா நாம் மேலே போய் மீதியப் பேசலாம். வசுதேவரின் மகன் வாசுதேவரைப் பிரகலாதன் அன்னைக்குக் கும்பிடலை. ‘வாசுதேவன்’னு அவன் அப்போ சொன்னது… ‘வசு’ன்னா வாழ்க்கை, ‘தேவா’ன்னா இறை. எங்கும் எல்லா உயிரிலும் நிறைந்திருப்பவனே வாசுதேவன் என்று வணங்கினான். சரியா? வா போய் வசு, வாசு மாதிரி என்னென்ன இருக்குன்னு பேசலாம்” என்றான். ஒரு மாதிரி மந்திரித்து விட்டது போல் மேலே போனேன்.

ஹாலில் ஐக்கியா விரிப்பில் இருவருமாக அமர்ந்துகொண்டோம்.

’’…அப்பாவோட பெயரில் முதல் எழுத்தைக் கொஞ்சமா மாத்தி மகன்பேரச் சொல்லற வழக்கத்தில்தான் நீ நினைச்ச வசுதேவரின் மகன் வாசுதேவன்கிறது,

ராமரோட காயத்ரியில சொல்றதைப்போல தசரதனின் மகனான தாசரதின்னு அந்த காயத்ரி தொடங்கும்” என்றான். பலர் தசரத ராமனு சொல்றாங்க, அப்படி இல்லை அது தப்பு. அவன் தாசரதி… தாசரத ராமன்” என்றான்…’’

நான், “இரு இரு… என்னடா காயத்ரி மந்திரம் ராமனுக்குன்னு சொல்ற? காயத்ரி மந்திரங்கிறது பெண் தெய்வத்துக்குானதுதானே, லலிதா சகஸ்ரநாமம் மாதிரி?” என்றேன்.

கண்கள் கனிய’’… மீ ரொம்ப இல்லன்னாலும் அடிப்படையாவாவது சிலது நீ தெரிஞ்சுக்கணும். காயத்ரிங்கிறது அப்படி ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கான வழிபாட்டு மந்திரம் இல்லை. காயத்ரிங்கிறது ஒரு பொயடிக் மீட்டர் , மூணு 8 – 24 அக்ஷரங்களில் அமைந்த ஒரு பாட்டு, அல்லது கவிதை மாதிரி. அது எந்த சாமிக்கும் போட்டுக்கலாம். திருக்குறள் எப்படி எல்லா விஷயங்களையும் இரண்டு அடியில் சொல்லுதோ, அப்படி எந்தக் கடவுளுக்கு காயத்ரி சொல்லுறோமோ, அந்தக்கடவுளின் வீரத்தையோ, தோற்றத்தையோ, அவருக்குப் பிடிச்சமானவங்களையோ அல்லது அவர் யாருக்கு உறவோ, யார் அவர் கணவனோ அப்படிச் சொல்லிக்கலாம்.”

“உதாரணமா ராமன் காயத்ரியையே எடுத்துக்கோ. ‘ஓம் தசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தன்னோ ராம: ப்ரசோதயாத்’

தசரதனின் மகனே… வித்மஹேன்னா அறிதல். உன்னை அறிகின்றோம். சீதா வல்லபாயன்னா சீதாவின் கணவனே… தீமஹின்னா தியானிக்கிறது. தன்னோ ராம… அந்த ராமச்சந்திர மூர்த்தி… ப்ரசோதயாத்… நமக்கு ஒளி அளிக்கட்டும் இல்லைன்னா நல்வழிகாட்டட்டும் இல்லைன்னா அறிவைத் தூண்டட்டும்னு அர்த்தம்” என்றான்.

அவன் ஸ்பஷ்டமாக அந்த மந்திரங்களைச் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. மானசீகமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்திடன் ’’ இதெல்லாம் எங்களுக்கு புரியாது ,நாங்க சொல்லகூடாது, சொல்ல முடியாதுன்னுதான, நீங்க மேல நாங்க கீழேன்னு சொல்லிட்டு இருக்கீங்க இதோ சொல்லறானே என் மகன்’’ என்று கேட்டேன்.

“ஆனா 24 அக்ஷரம்னு சொன்னியே, இதில் எழுத்து அதிகமா இருக்கே?” என்றேன்.

“இல்ல, அது ஒரு கணக்கு. அந்தச் சந்தத்தில் புள்ளி வச்ச எழுத்துகளைக் கணக்கில் எடுத்துக்கறதில்லை. அத்தனை தூரம் போன உனக்குத் தாங்காது விட்ரு” என்று புன்னகைத்தான்.

“இப்படி அப்பா பேரின் முதல் எழுத்தை மாத்தி, அம்மா பேரின் முதல் எழுத்தை மாத்தின்னு பேர் இருக்கு.

வேணும்னா வெண்முரசின் ரசிகையே இதைக் கேளு.

திருதராஷ்டிரனின் மகன்கள்தான் ‘தார்த்தராஷ்டிரர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். சமஸ்கிருத இலக்கணப்படி, ஒரு தந்தையின் பெயரிலிருந்து மகனின் பெயரைக் குறிக்கும்போது அந்தப் பெயரில் சின்ன மாற்றம் இருக்கும். திருதராஷ்டிர என்ற பேரிலிருந்து உருவான ‘தார்த்தராஷ்ட்ர’ என்ற சொல்லுக்கு ‘திருதராஷ்டிரனின் வாரிசு’ ன்னு அர்த்தம்.

கர்ணனுக்கு அவனது வளர்ப்பு அம்மா ராதையின் மகன் என்னும் அர்த்தத்தில் ராதேயன் என்று பெயர் இருக்கு.”

“இப்போ சொல்லு மீ ஆஞ்சநேயர் யாரு?”

நான் உற்சாகமாக, “அஞ்சனையின் மகன்” என்று ஏறக்குறைய கத்தினேன்.

“அவ்வளவுதான்! அஞ்சனையின் மகன் ஆஞ்சநேயன். கங்கையின் மகன் காங்கேயன் குந்தியின் மகன் கௌந்தேயன் அர்ஜுனனுக்கு அப்படி ஒரு பேர் இருக்கு, ஏன்னா அப்பா யாருன்னு தெரியாதே அதனால அம்மா குந்தி பேரு. அம்மா பேருக்கு முன்னாடி ஒரு ‘ஆ’ சேர்த்துக்கிட்டாலும் மகன்தான். பிருதையின் மகன் பார்த்தன்.”

வாய் பிளந்து என்பார்களே, அப்படி கேட்டுக்கொண்டிருந்தேன். “இதெல்லாம் எப்படிடா படிச்சே?

காயத்ரி படிச்சா ரொம்ப நல்லாருக்கும்மா? கேளேன்.”

“கிருஷ்ணருக்கு ‘ஓம் தாமோதராய வித்மஹே ருக்மிணி வல்லபாய தீமஹி’ன்னு வரும். தாம்புக் கயிறால் கட்டப்பட்டவன்னு அவர் லீலையைச் சொல்லி, ருக்மிணியின் கணவன்னு சொல்லுது இது.

ராதாவுக்கு பார்… ‘விருஷபானுஜாயை வித்மஹே கிருஷ்ணப்ரியாயை தீமஹி’ன்னு வரும். விருஷபானுவின் மகளே, கிருஷ்ணனுக்குப் பிரியமானவளேங்குறது ராதா காயத்ரி” என்றான்.

நான், “ஏண்டா ராதா கிருஷ்ணப்பிரியாங்கிறது ராதா வீட்டுக்காரருக்குத் தெரியுமா?” என்றேன்.

முறைக்க வந்தவன் வெடித்துச் சிரித்து, “நீ வேற… மீ, இங்க பாரு. ராதா கிருஷ்ண பிரேமம்ங்கிறது ஒரு பரகீய ரசம். அதாவது ஆன்மா பரமாத்மாவோட கொண்டிருக்கும் காதல். நீ உலகியல் காதலோடு அதை கம்பேர் பண்ணக்கூடாது” என்று சிரித்தான்.

 ’’..சீதாக்கு இருக்கா,,’’

’’..இருக்கே..’’ 

“‘ஓம் ஜனகநந்தின்யை வித்மஹே ராமப்ரியாயை தீமஹி தன்னோ சீதா: ப்ரசோதயாத்’…

ஏண்டா இங்கே ஜனகனின் மகள் ஜானகினு தானே வரணும்? ஏன் ஜனகநந்தினினு வருது?”

“இதுல ‘ஜா’ போட்டா மீட்டர் உதைக்கும்னு நினைக்கிறேன். அதனால் ஜனகனின் மகளேன்னு சொல்லாம, ஜனகனுக்கு மகிழ்ச்சி அளிப்பவளே, ராமனுக்குப் பிரியமானவளேங்கிறாங்க.”

உனக்கு எல்லாமே மனப்பாடமா தெரியுமா சரணா? ’

’…மனப்பாடமெல்லம் இல்லை மனப்பாடமே பண்ணக்கூடாது,என்றவன் நெற்றியைத்தொட்டுக்காட்டி புரிஞ்சுகிட்டதெல்லாம் இங்கே இருக்கு, எல்லாம் தெரியாது ஆனா கொஞ்சம் தெரியும்..’’

” சரிடா கணபதிக்கு?”

“தத்புருஷாய வக்ரதுண்டாயன்னு வரும்.’’

இரு இரு… நானே சொல்லறேன். வக்ரதுண்டாயன்னா உடைஞ்ச கொம்புன்னு தானே அர்த்தம்?

மறுபடி ஒரு கனிந்த புன்னகையுடன் ‘’..இல்லை மீ, வக்ரதுண்டாயன்னா வளைஞ்ச தும்பிக்கை கொண்டவனே!

சே! வெட்கம் வேதனை அவமானம்!

தொடர் தோல்வியில் நான் புண்பட்டுவிடக்கூடது என்பதற்காக உடனே  “இரு மீ… உன் ஏரியாவுக்கே வரேன். மரத்துக்குக் கூட விருக்ஷ காயத்ரி இருக்கு” என்று போனில் எடுத்து காண்பித்தான்.

“ஓம் வனராஜாய வித்மஹே மஹாவ்ருக்ஷாய தீமஹி தந்நோ வ்ருக்ஷ: ப்ரசோதயாத்”

காடுகளின் அரசனான இறைசக்தியை அறிவோமாக. பிரம்மாண்டமான விருட்சமாக இருப்பவரை நாம் தியானிப்போமாக. அந்த மரம் போன்ற உறுதியான சக்தி, நம்மை நல்வழிப்படுத்தட்டும்.

“இப்படி மிகப்பெரிய அரசமரத்துக்கு ‘மஹாராஜ்ய விருக்ஷ மந்திரம்’னே ஒண்ணு இருக்கு. இதுக்குள்ள போனா போயிட்டே இருக்கலாம்” என்றான்.

திகைப்பும் பெருமிதமுமாக ஆக இருந்தேன். சரண் சமஸ்கிருதக் கட்டுரைகளை ஆங்கிலமாக்கி இருக்கிறான் முன்பே. அவன் வாசிப்பின் தீவிரம் என்னால் எட்ட முடியாதது அல்ல, கற்பனை கூட செய்ய முடியாதது. இருந்தும் இன்று பெரிய திகைப்பும், ஒரு தத்புருஷன் முன்னால் அமர்ந்துகொண்டிருக்கிறோம் என்னும் உணர்வையும் அளித்தது.

இவனது மேதாவித்தனத்திற்கு இணையாக ஒரு பெண் கிடைக்கணும். அல்லது இவன் மேதாவித்தனத்தைப் புரிந்துகொண்டு இவன் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் பக்குவம் உள்ளவளாகவாவது இருக்கணும்.

“நாளைக்கு நேரமே ஏர்போர்ட் போகணும், போய் தூங்குவோம்” என்றான்.

திகைப்பு விலகாமலேயே உள்ளே போனேன்.

தத்புருஷன் சரண்.

மும்பை-பழையன கழிதல்.

காலை உணவைச் சரணுக்குச் சமைத்துக்கொடுத்து, மதிய உணவையும் அழகிய சிறு கண்ணாடித் கிண்ணங்களில் அடைத்துக் கொடுத்து அனுப்பினேன். பொறுமையாகக் குளித்து, எனக்குப் பிடித்த இலைப்பச்சை நிறப் புடவையை கட்டிக்கொண்டேன். வீட்டில் நிறைய மலர்ந்திருந்த ராமபாண மல்லிகைப் பூக்களைத் தொடுத்துக் கொண்டுவந்து, பிரிட்ஜில் வைத்திருந்தேன். எடுத்துத் தலையில் வைத்துக்கொண்டேன். ஒன்றிரண்டு வேலைகளை முடித்துவிட்டு, பால்கனி வழியே கிரிக்கெட் விளையாடுபவர்களின் உற்சாகக் கூச்சல்களை ரசித்துக் கொண்டிருந்தேன்.

என்னைச் சந்திக்க வருபவர் நண்பரா என்றால் இல்லை. தெரிந்தவரா என்றால், அதுவும் இல்லை; இதுவரை நான்கு முறைதான் சந்தித்திருக்கிறேன். வேண்டியவரா என்றால், இல்லவே இல்லை .வெறும் ஒருவர் வருகிறார்.

தில்லியில் 1997 பிப்ரவரி 13-ம் தேதி விடைபெற்றுக்கொண்ட பிறகு, அவரை இன்று சந்திக்கவிருக்கிறேன். எனக்கு எதுவானாலும் சரியான closure வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சந்திப்பை ஒத்துக்கொண்டேன். நெஞ்சில் உறுத்திக்கொண்டிருக்கும் அந்தப்பூ முள்ளை எடுக்க வேண்டும்.

முகவரி அல்லது கூகுள் லொகேஷன் அனுப்பும்படி செய்தி வந்தது

அனுப்பினேன் 10.15க்கு வருவதாக தகவல். 10.20க்கு வாசலில் இருந்த செக்யூரிட்டி இண்டர்காமில் அழைத்து எனக்கு விருந்தினர் வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள், அனுமதிக்கும்படி சொன்னேன். சரணுக்கும் தகவல் போயிருக்கிறது, அவனும் அனுமதிக்கும்படி சொல்லியிருக்கிறான்.

வந்தவர் வேறு மாதிரியான எதிர்பார்ப்புகளோடு, உணர்வுபூர்வமான ஒரு சந்திப்பை அல்லது கண்ணீரால் மிதக்கும் ஒரு சந்திப்பைக் கற்பனை செய்துகொண்டிருந்திருக்கலாம்.

மராத்தியிலும் “…கோப்பால் கோப்பால், ஏன் இப்படி செய்தீர்கள் கோப்பால்? எப்படி உங்களுக்கு மனசு வந்தது…” போன்ற கண்ணீர்க் காட்சிகள் கொண்ட படங்கள் இருக்குமாயிருக்கும். நான் கதவைத் திறந்து வைத்திருக்கவில்லை; அவர் வந்து அழைப்பு மணியை அழுத்தவும் திறந்தேன். மிக இயல்பாக “ஹலோ வாங்க” என்று சொல்லி, மருதாணியிட்டுச் சிவந்திருந்த கைகளை நீட்டிக் கைகுலுக்கினேன். இரண்டு கைகளிலும், கூடுதலாக பாதங்களிலும் மருதாணி வைத்துக்கொண்டிருந்தேன். அவர் கொஞ்சம் ஸ்தம்பித்துப் போன மாதிரிதான் இருந்தது; இத்தனை மகிழ்ச்சியான ஒருத்தியை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்தானே!

கதவைச் சாத்தும்போது கவனித்தேன், அவர் போட்டிருந்தது புத்தம் புதிய செருப்புகள். ‘இம்ப்ரெஸ்’ பண்ணுவதற்காக இருக்கலாம்.

உள்ளே வந்ததும் “என்னம்மா அப்படியே இருக்காய், ஒரு சேஞ்சுமே இல்லாம” என்று ஒரு மகா பொய் சொன்னார். நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “அப்படியா?” என்று புன்னகைத்தேன். தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தேன். “காபி சாப்பிடுறீங்களா?” என்றேன். “காத்தாலதான் சாப்பிட்டேன், வேண்டாம்” என்றார். ஒரு “நல்ல காபி போட்டுத் தர்றேன், சாப்பிடுங்க” என்று ஒரு காபி போட்டுக் கொடுத்தேன்.சொன்னதில் இருந்த சின்னப்பகடியை கவனித்தமாதிரி தெரியவில்லை

“எங்க ஆத்துக்கு உன்னைக் கூட்டிண்டு போகணும்னு நினைக்கிறேன், நீ என்ன சொல்றாய்?” என்று கேட்டார். “எனக்கு உங்க வீட்டுக்கு வர்றதுக்கு இஷ்டமில்லை, வெளியே எங்காவது பொது இடத்தில் உட்கார்ந்து பேசலாம்” என்றேன். “சரி, ஒரு பெரிய நல்ல மால் இருக்கு, அங்கே கூட்டிண்டு போறேன். மும்பையைச் சுத்திக் காமிக்கிறேன் நோக்கு” என்றார். “சரி போலாம்” என்று எழுந்தேன்.

வீட்டைப் பூட்டி லிஃப்டில் இறங்கி வாசலுக்கு வரும்வரைக்கும் நான் ஏதோ உணர்வுபூர்வமாகச் சொல்லப்போகிறேன் என்று அந்த முகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. நான் மிக இயல்பாக இருந்தேன். உண்மையிலேயே மனம் துடைத்துச் சுத்தம் செய்தது போல நிச்சலனமாக இருந்தது; திரும்பி வரமுடியாத தொலைவிற்கு வந்துவிட்டேனல்லவா.

“மும்பையைச் சுற்றிப் பார்த்தியா நீ?” “இல்லையே, ரெண்டு நாள்தானே ஆச்சு.” “அப்படின்னா வா, நோக்குச் சுற்றிக் காமிக்கிறேன்.”

ஒரு நீல பஸ் கடந்துசென்றது. “இதோ இந்த பஸ்ஸில் போனா நன்னாச் சுத்திக் காமிப்பான். ஏசி பஸ், நன்னாயிருக்கும், கூட்டமும் இருக்காது.” “வேண்டாம், நான் பஸ்ஸில் வரவில்லை, டாக்ஸியில் போலாம்.” “இல்லைம்மா, உங்க ஊர் பஸ் போல இல்லை, இது நல்ல பஸ்ஸாக்கும்.”

“இல்லை வேண்டாம், டாக்ஸின்னாதான் ஓகே.” “சரி வா, உன் இஷ்டம்.”

ஒரு டாக்ஸி பிடித்து என்னவோ மராத்தியிலோ அல்லது இந்தியிலோ பேசி எங்கோ போகச் சொன்னார். நான் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நோக்கு மும்பை பிடிச்சிருக்கா?”

“இல்லை, சுத்தமா பிடிக்கல.”

“ஏன்ம்மா?”

“தூசி, சத்தம், கூட்டம், பாஷை புரியலன்னு நிறைய காரணம் இருக்கு.”

“நல்ல பிளேஸ்மா, நீ இருந்தேன்னா பிடிச்சுடும்.”

“நான் தான் இங்க இருக்கப் போறதில்லையே. அப்புறம் எதுக்கு எனக்குப் பிடிக்கணும்? நான் என் ஊரில் சந்தோஷமா இருக்கேன், அதுவே போதும்.”

பேச்சை மாற்ற “பாஷை என்னம்மா பாஷை? இங்கே எல்லாருமே இங்கிலீஷும் பேசுவா.” என்று சொல்லிய கையோடு டாக்ஸி ஓட்டுநரிடம் “பையா ஆப்கோ…” என்று துவங்கி, “இங்கிலீஷ் தெரியும் தானே? இந்த மேடம் பேசினா புரியும் தானே?” என்று கேட்டார். அதற்கு ஓட்டுநர், “நஹி சாப், எனக்கு அட்சரம் கூடத் தெரியாது. சில கஸ்டமர் இப்படி வந்து என்னைச் சோதிக்கிறார்கள்” என்றார். நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டேன்..

“அரே, இவரென்னமோ இப்படிச் சொல்றார்? ஆனா எல்லாருக்கும் இங்கிலீஷ் பேசத் தெரியுமே!”

“பார்த்தேனே… அவர் சொன்னாரே!”

மால் வந்துவிட்டது. முந்தின நாள் நானும் சரணும் போய் ‘ஹல்திராம்’ஸில் பூரி சாப்பிட்ட அதே மால். டாக்ஸிக்குப் பணம் கொடுத்துவிட்டுத் திரும்பி, “இந்த மால்…” என்று அவர் தொடங்குவதற்குள், “இதுக்குத்தான் நான் நேத்து வந்து ரொம்ப நேரம் இருந்தேனே” என்றேன்.

“என்னம்மா சொல்றாய்? ஏன் முன்னாடியே சொல்லலை? வேற எங்கேயாவது கூட்டிப் போயிருப்பேனே!”

“எனக்கெப்படி இந்த இடத்துக்கு நீங்க கூட்டிட்டு வரப்போறீங்கன்னு தெரியும்?”

முகம் சுண்டிப்போய், “சரி வாம்மா” என்று உள்ளே கூட்டிப்போனார். வேலைநாள் என்பதால் அத்தனை கூட்டமில்லை. மஞ்சளாக நாற்காலிகள் ஏராளம் போட்டிருந்த உணவுக் கூடத்தில் (Food Court) ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தோம்.

“என்ன சாப்பிடறே?”

“எதுவானாலும்.”

“இங்க ஊர் பண்டம் ஒன்னு வாங்கித் தர்றேன், நோக்கு பிடிக்கும்.”

“சரி.”

“போய், என்னவோ ஆர்டர் கொடுத்து விட்டு வந்து. ’’அவா டோக்கன் சொல்லி கூப்பிடுவா, அப்போ போய் வாங்கணும்” என்றார்.

எனக்கு இப்படியான மால்களுக்குச் சென்று பழக்கமிருக்காது என அவர் நினைப்பது அப்போதுதான் புரிந்தது. “ஓ அப்படியா!” எனக்கேட்டு வைத்தேன்.

பிறகு ’97-ல் 47 லட்சத்துக்கு தான் வாங்கிய புனே வீட்டு மதிப்பு, இப்போது கோடிக்கணக்கில் உயர்ந்திருப்பதைச் சொன்னார். அவரது ‘டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட்’ பயிற்சிகளின் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டியதை, அந்தப் பயிற்சி குறித்த சிலரின் புகழுரைகளை போனில் காட்டிக் கூறினார்.

“அப்படியா! எங்கே… காட்டுங்க, பிரமாதமாச் சொல்லியிருக்காங்களே!” என்று சிலாகித்தேன்.

மனிதன் தான் எத்தனை எளிய உயிர்!

“அதற்குள் அந்த கொத்தம்பரி வடா எனப்பட்ட ‘கொத்தமல்லி வடை’ என்கிற கடலைமாவில் சோம்பு, உப்பு, நறுக்கிய மல்லி இலைகள் போட்டு, கட்டம் கட்டமாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்த வடை வந்தது. சுமாராக இருந்தது. எனக்கு சாஸ் தொட்டுச் சாப்பிடப் பிடிக்காது என்பதால் ஒன்றை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அதன் அருமை பெருமைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்.

பின்னர் மெதுவாகப் பேச்சு அவரது ராணுவக் காலத்திற்கு வந்தது. நான் அதற்குக் காத்துக்கொண்டிருந்தேன். கார்கிலில் என்ன நடந்தது, தான் அமிர்தசரஸ் போனது, அங்கே எப்படி மிகக் கடுமையான நாட்கள் என்றெல்லாம் அந்தப் பேச்சுப் போனது.

“நான் அமிர்தசரஸில் இருந்தேன், தெரியுமோல்லியோ?”

“தெரியும் சரண் பிறந்து 1வருஷம் ஆனப்போ’’,

’’ரொம்ப ரொம்பக் கஷ்டம் அங்கே வேலை செய்யறது’’

’’அப்படியா?’’

இப்போது சரண், தருண், சாம்பவி யார் உடன் இருந்திருந்தாலும் நான் ஃபார்முக்கு வந்துவிடேன் இனி அங்கே இருப்பது ஆபத்து எனப் புரிந்துகொண்டிருப்பார்கள்.ஒரே ஓட்டமாக ஓடிப்போயிருப்பார்கள்

’’பின்னே பொற்கோவில் பாதுகாப்புன்னா சும்மாவா? எப்போ வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கும். அங்கே சும்மா ஏப்பைசாப்பையான ஆளெல்லாம் போட மாட்டாங்க, திறமையானவங்க மட்டும்தான் அங்கே போக முடியும்.”

“நம்பின பெண்ணுக்கு ஒரு பதிலைச் சொல்ல முடியாமல் ஓடி ஒளிஞ்சுக்கிறவங்களுக்கும் அங்கே இடம் இருக்கு இல்லையா? சொந்த வாழ்க்கையைத் திட்டமிட முடியாமல், குடும்பமாக மூன்று சிட்டிங் உட்கார்ந்து பேசினப்புறம், அந்தப் பெண்ணுக்கு ஒரு முறையான பதிலோ அல்லது விடைபெறுதலோ கூடக் கொடுக்காமல் ஓடிப் போயிட்டு, எப்படி உங்களால் இதெல்லாம் பெருமையாகப் பேச முடியுது?” என்றேன், நேரடியாகக் கண்களைப் பார்த்துக் கொண்டு, குரலைச் சற்றும் உயர்த்தாமல்.

“இதில உங்க அம்மா, ‘பொம்மனாட்டிகளை மதிக்கணும்’னு சொல்லுவான்னு வேற சொல்றீங்க? இதான் உங்க ஊரில் பொம்மனாட்டியை மதிக்கிற லட்சணமா?”

அப்படியே ஷாக் ஆயிட்டார்னு வடிவேலு சொல்லுவாரே, அதுதான் நடந்தது.

“என்னம்மா நீ இப்படி அரோகண்ட்டாஆயிட்டாய்? எனக்கென்ன தெரியும்? அந்த வயசில் பெரியவங்க எல்லாம் என்ன சொன்னாங்களோ அதைக் கேட்கணும்னுதான் நினைச்சேன். நீ ஏன்மா இப்படி ஹார்ஷாப் பேசறாய்?”

“பெரியவங்க என்ன சொன்னாலும் செய்யறவர், இந்த விஷயத்துக்கு வந்திருக்கக் கூடாதல்லவா?”

“அப்போ சின்ன வயசு, மெச்சூரிட்டி இல்லைம்மா. அதுக்கு என்ன பண்ணச் சொல்றாய்?”

“என்ன வயசு அப்போ உங்களுக்கு? எனக்குத் தெரியாது. இப்போ வரைக்கும், உங்க வயசைச் சொல்லுங்க.”

“அப்போ எனக்கு 29.”

“அதென்ன சின்ன வயசா உங்க ஊர்ல?”

பதிலில்லை. தலை கவிழ்ந்தது.

வெண் முரசில் பெண்ணின் கண்ணீருக்கு ஏழு தலைமுறை பதில் சொல்லவேண்டி இருக்கும் என்று இருப்பதை சொல்லலாமா என்று யோசித்தேன். இவருக்கு வெண்முரசெல்லாம் மகா ஒவர் டோஸாகிவிடும். வீணாக கொலைப்பழிக்கு ஆளாவானேன் என்று அந்த யோசனையை கைவிட்டேன்.

“இல்லை, நான் மூணு தரம் உங்காத்துக்கு போன் பண்ணினேனாக்கும். உங்க அக்கா எடுத்து இனிமே போன் பண்ணப்படாதுன்னுட்டா.”

அத்தனை சீரியஸான உரையாடலில் எனக்கு ‘மைக்கேல் மதன காமராஜன்’ நினைவு வந்தது. “திருப்பு திருப்புன்னு சொல்லி நான் ஸ்கூட்டரைத் திருப்பி, இதோ முழங்கால்ல அடிபட்டு…”

சிரிப்பை விழுங்கிக்கொண்டேன்.

“சரி, எத்தனை லெட்டர் போட்டிருக்கீங்க? எத்தனை போன் பண்ணி இருக்கீங்க? அப்படி ஒரு லெட்டர் போட்டு, ‘இப்படி இப்படி மிரட்டுறாங்க, எனக்குப் பயமா இருக்கு, நான் அமிர்தசரஸ்க்கு ஓடிப் போறேன்’னு சொல்லிட்டுப் போயிருக்கலாமே!”

“ஏய், எனக்கொன்னும் பயமில்லை எதுக்கு வீண் பிரச்சனைன்னுதான் அங்க போனேன்.”

அய்யோ மதனகாமராஜா…

பேச்சை மாற்ற,”என்னம்மா உன் புள்ளாண்டான் சரண்? நான் நாலு வார்த்தை கேட்டா, ஒரு வார்த்தையில பதில் சொல்றானே!”like mom like son”

நான் கொஞ்சம் சேரில் முன்னால் நகர்ந்து அமர்ந்து, “ஊரில் எங்க வீட்டுக்கு ரைட் சைடுல ஒரு வீடு இருக்கு” என்று ஆரம்பித்தேன். அவர் அகமகிழ்ந்து, “ஆஹா! இப்பதான் கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கிறாய் பெண்ணே, சொந்தக் கதையையெல்லாம் சொல்லப்போகிறாய்” என்று நினைத்து ஆவலாக, “சரி சொல்லு” என்றார்.

“அந்த ரைட் சைடு வீட்ல இருக்கார் பாருங்க, அவர் பேரு பழனிச்சாமி.”

“சரி.”

“அவர் மனைவி பேரு செல்வி.”

“சரி.”

“அந்தச் செல்வி மாதிரியா சரண் இருப்பான். என்னை மாதிரித் தானே இருப்பான்?

“ரொம்ப ஹார்ஷா பேசக் கத்துக்கிட்டிருக்கே நீ! முன்னாடியெல்லாம் இப்படிப் பேசவே மாட்டாய் .”

“இருக்கலாம்.”

மனம் முழுக்க ஒரு புகை போல மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தேன்.அமைதி நிலவியது.

“சரி, மணி ஒன்னாயிடுத்தே, சாப்பிடப் போலாமா? ராஜஸ்தான் சாப்பாடு வேணுமா மராத்தி சாப்பாடு வேணுமா நோக்கு?”

“நான் ஏற்கனவே பல ராஜஸ்தான் சாப்பாடு சாப்பிட்டிருக்கேன். நாம மராத்தி உணவகம் போலாம்” என்றேன்.

இடையில் சரண், “All good?” என்று கேட்டிருந்தான். “எல்லாம் நல்லாத்தான் போகுது, கவலைப்பட ஒண்ணுமில்லை. ஒரு மராத்தி பவன்ல சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துருவேன்” என்று பதில் சொன்னேன்.

தருண், “I hope you can handle the situation very well. If you are not comfortable, please leave the place” என்று செய்தி அனுப்பினான்.

நான் உற்சாகமாக ஒரு குரல் பதிவை அந்த ‘கொத்தமல்லி வடை’யைக் குறித்துச் சொல்லி அனுப்பிவிட்டு, அந்தப் பண்டத்தைப் புகைப்படமும் எடுத்ததையும் அனுபினேன் . நான் நிகழ்வை ‘left hand’-இல் டீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்பது அவனுக்குப்புரியும்

“டேக் கேர்” என்று இருவரும் செய்தி அனுப்பினார்கள்.

மற்றொரு டாக்ஸி பிடித்து உட்கார்ந்ததும், ‘மராத்தி பவன்’ போகுமாறு சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பி, “இப்போ சொல்லேன், என்னைப்பத்தின உன் ஒப்பினியன் மாறியிருக்கான்னு?” என்று கேட்டார்.

அதாவது லிஃப்டில் என்னை முதலில் போகச்சொன்ன, கார்க்கதவை நான் ஏறுவதற்காக திறந்து பிடித்துக்கொண்ட, எனக்கு சாப்பிட என்னத்தயோ வாங்கிக்கொடுத்த, டாக்ஸிக்கு எதையும் யோசிக்காமல் பணம் செலவு செய்த,கோடிக்கணக்கில் மதிப்புள்ள வீடு வைத்திருக்கிற, பலர் பாராட்டிப் புகழும் ஒரு முக்கியப்பணியில் இருக்கிற. இப்போது தன்னந்தனிமையில் இருக்கும் ஒருத்தரைப் பற்றிய என் ஒப்பினியன்!!!!!!

வான்டடா வண்டியில் ஏறுபவர்களை என்னதான் செய்வது?

’’ ஒப்பினியன் மாறறதுக்கு முதல்ல ஒப்பினியன்னு ஒன்னு இருக்கணுமே! அப்படி ஒன்னு இல்லவே இல்லை. நீங்க பார்க்கணும்னு நினைச்சீங்க, எனக்கும் சிலதையெல்லாம் கேட்கணும்னு இருந்தது, அவ்வளவுதான்!” எனக்கு இந்த கொங்கு பெல்ட்டில் இருந்து தப்பிக்கனும்னு தோணிருக்கு அதான் நானும் உங்களை விரும்ப காரணமாயிருந்திருக்கும். சோ ஒப்பினியனெல்லாம் ஒன்னுமே இல்லை

(“என்னடா… எப்படிப்போனாலும் கேட்டுப் போடறாளே!”) மீண்டும் பேச்சை மடை மாற்றி,

“நன்னாச் சமைப்பாயாமே! சரண் சொன்னான். ஒருநாள் உன் கையால சாப்பிடணும்.”

“அந்த வாய்ப்பே இல்லை. நீங்க எங்கேயோ இருக்கீங்க, நான் எங்கேயோ இருக்கேன்.”

அடுத்த முயற்சிக்குப்போனார்.

’’நீ என்னவோ நிறைய எழுதறாயாமே? ஏன்மா எழுதறதை இங்லீஷில் எழுதினா என்ன? நானும் வாசிப்பேனே’’

’’அதை விட ஈஸி நீங்க தமிழ் வாசிக்க கத்துக்கறது’’

’’ Why are you so harsh?”

“இல்லை, நான் உண்மையைச் சொல்றேன்.”

மகாராஷ்டிரா பவன் வந்துவிட்டது.

சின்ன உணவகம். தடியாய் ஒரு அம்மா தான் ஓனர் போல முன்னால் உட்கார்ந்திருந்தாள். ஒரு உயரமான திட்டில் பூனை ஒன்று தூங்கிக்கொண்டிருந்தது. மெல்ல அதன் காதில் மியாவ் என்றேன் திடுக்கிட்டு விழித்து கோபமாய்முறைத்தது. அதை போட்டோ எடுத்துக்கொண்டேன்.

உள்ளே போய் எதிரெதிரே போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் அமர்ந்தோம் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது.

“என்ன சாப்பிடறாய்?

‘’அதுதான் மகாராஷ்டிரா சாப்பாடுன்னு சொன்னீங்களே?’’

’’இல்லம்மா, நான் வெஜ் சாப்பிடறியான்னு கேட்டேன்.”

(என்ன ஒரு பெருந்தன்மை!).

“இல்லை வேண்டாம், நான் வீட்லதான் அசைவம் சாப்பிடறேனே. வெஜ் போதும்.”

“இல்லை, நீ சாப்பிடு. நன்னா இருக்கும்னு சொல்லுவா இங்கே எல்லாரும். மீன் சாப்பிடறியா?”

“சரி சொல்லுங்க.”

ஆர்டர் எடுக்க வந்தவன் அச்சு அசல் தனுஷின் ஜாடையிலேயே இருந்தான். ’’அவனிடம், தனுஷ் மாதிரி இருக்கான்னு நான் சொன்னேன்னு சொல்லுங்க” என்றேன். சொன்னதும் அவனுக்குப் பிடிபடவில்லை. “அரே, ரஜினி மருமகன்” என்று மராத்தியில் சொன்னதும், அவன் ஒளிர்ந்தான், வெட்கி மேலும் வசீகரமானான். நிஜமாகவே தனுஷின் சாயல் அப்படியே இருந்தது அவனுக்கு.

இரண்டு மீல்ஸ், ஒரு மீன் வறுவல் சொன்னார்.

மீல்ஸ் பெரிய தட்டில் ஏராளமான தொடுகறிகளுடன் வந்தது. தட்டின் நடுவில் காம்பஸ் வைத்து வரைந்தது போல நல்ல வட்டத்தில், மிக மிக மிருதுவான சோள ரொட்டிகள் இருந்தன. தணலில் வாட்டியவை.அப்படி ஒரு மிருதுவான சோள ரொட்டியை நான் செய்யக் கற்றுக்கொள்வேனானால், என் வாழ்நாள் முழுக்க அதைமட்டுமே சாப்பிடுவேன்.

ஒரு கத்தரிக்காய் கிரேவி மிகச் சுவையாக இருந்தது. பாசிப்பருப்பு கடைந்ததும், கடலைப் பருப்பைக் கரைத்துச் சாம்பார் போல இருந்ததும் ஓகே. நம்மூரிலும் செய்வதுதான்.

“நீ நான்-வெஜ் சாப்பிடறதில் நேக்கொன்னும் பிரச்சனை இல்லை” என்று மீண்டும் சொன்னார். அந்த மீன் கிழங்கு வேகவைத்தது போல மிக மென்மையாக கொஞ்சம் தித்திப்பாகவேறு இருந்ததால், (நேக்கே) பிடிக்கவில்லை என்று அப்போதே சொல்லிவிட்டேன்.

என் நண்பருக்கு செய்தி அனுப்பி என்னை கூப்பிடச் சொன்னேன்.அவரிடம் நான் இவருடன் வெளியெ வந்ததைச் சொல்லி இருந்தேன் முன்னாடியே. என்ன கவலையானாலும் உடனே பகிர்ந்துகொள்ளும், கண்ணீரை வெட்கமின்றி காட்ட முடியும் நண்பர் அவர்.

உடனே அழைத்தார். எப்போதுமிருக்கும் அதேஅணுக்கத்துடன் பேசி வைத்தேன்

எதிர்பார்த்தபடியே.’’ ஆராக்கும்’’

என் நண்பர் நெருங்கிய நண்பர் என்றவள் அவர் யாரென்றும், அவர் இருக்கும் இடத்தையும் சொன்னேன். பேச்சுமூச்சே இல்லை கொஞ்ச நேரத்துக்கு.

குடம்புளியை எதிலோ கரைத்துக் கலந்து உப்பிட்டு ரசம் போல இளஞ்சிவப்பில் ஒரு கிண்ணத்தில் கொடுத்தார்கள். எனக்குக் குமட்டியது.அதற்குப் பெயர் என்னவோ! அதைத் தனுஷிடம் கேட்டுகேட்டு வாங்கிப் பருகினார்கள் அவர் உள்ளிட்ட எல்லோருமே.

நம்மூரில் அன்லிமிட்டட் சாப்பாடு போல அங்கே அந்தச் சோள ரொட்டி கேட்கக் கேட்கக் கொண்டு வந்து அடுக்கினார்கள்.

“எனக்குச் சாதம் வேண்டும்” என்றேன். ஒரு சின்னக் கிண்ணத்தில் குழைய வேகவைத்த, கலங்கலான நிறம் கொண்டிருந்த அரிசி சாதத்தை லேசாக நெய்விட்டுக் கொண்டு வந்து தந்தான் தனுஷ். பார்க்கவே பிடிக்கவில்லை எனக்கு; மல்லிகைப்பூ போல இருக்கும் நம்மூர் பொன்னி எங்கே என்று நினைத்துக்கொண்டே, “தயிர் வேணும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டேன்;

என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு சுவையான அரிசிச் சாதம் சாப்பிட்டதே இல்லை,இனி சாப்பிடப் போவதுமில்லை. என்ன மணம் என்ன சுவை. அன்றைய நாள் அப்படி ஒருவருடன் கழிந்ததற்கான பிழையீடு என்று சொல்லலாம் அந்தச் சாதத்தை.

தனுஷ் தயிர் கொண்டு வந்ததும் நானே அவனிடம் “இது என்ன அரிசி?” என்று தமிழில் கேட்க, அவனுக்கும் அது புரிந்தது. “இது மகாரஷ்டிராவில் விளையும் இந்திரயாணி அரிசி” என்றான். பொருத்தமான அழகுப் பெயர்; சுவையென்றால் அப்படி ஒரு சுவை! வெறும் சாதத்தை அப்படியே சாப்பிடலாம். வரும்போது வாங்கிவர நினைத்தேன், நேரமில்லாமல் போனது. ஆன்லைனில் கிடைத்தால் வாங்கவிருக்கிறேன். Love you Indrayani!

வெளியே வந்தோம். வாசலில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. மறுநாள் ஹோலி என்பதால் இளைஞர் பட்டாளம் ஒன்று வர்ணங்களை வீசி எறிந்து, தப்பித்து ஓடி, துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். “போலாம்” என்றேன்.

டாக்ஸிக்கு காத்திருக்கையில் கட்டக்கடைசி முயற்சியாக “நோக்கு என்கிட்ட எதுனா கேட்கணுமா?” என்று கேட்டார். கொஞ்சம் யோசித்துவிட்டு “ஆமா” என்றேன்.

அவர் பரவசமாகி, “என்ன வேணும்னாலும் கேளு” என்றார்.

“பாவோபாப் மும்பையில் இருக்கா பார்க்கனும்?”

“என்னவாக்கும் அந்த சாதனம்?”

புன்னகைத்து, “விடுங்க, சொன்னா புரியாது. எனக்கு வீட்டுக்கு போகணும், டாக்ஸி பிடித்துக் கொடுங்க” என்றேன்.

“அவ்வளவுதானா? என்கிட்ட சொல்ல ஒன்னுமில்லையா நோக்கு?”

“சொல்லணும்னு இருந்ததைச் சொல்லிட்டேன், அவ்வளவுதான்!”

முகம் வாடிப் போய், “சரி… ஆனா அப்படி டாக்ஸியில் அனுப்பி வைக்க முடியுமா? நான் வந்து ஆத்தில் விட்டுட்டுதான் போவேன். அடுத்த முறை நீ மும்பை வந்தியானா எங்காத்துக்குக் கட்டாயம் வரணும். ஒரு மாமி நன்னாச் சமைக்கறா, நோக்கு அவளைச் சமைச்சுப் போடச் சொல்றேன்” என்றார்.

“வந்தால் பார்க்கலாம்” என்றேன்.

டாக்ஸி பிடித்து அமைதியாகப் பயணித்தோம். தெருவெங்கும் வண்ணமயமாக இருந்தது. வீடு வந்து இறங்கியதும், “நான் வீட்டுக்குள்ளே வரவேணாமா? இங்கேயே பை சொல்றியே?” என்றார்.

“இல்லை, சரண் வந்ததும் நான் வெளியே கிளம்பணும். நீங்களும் ரொம்பத் தூரம் போகணுமே, அதான்” என்றேன்.

“அப்போ சரி… பை, பை!”

முடிந்தது.

வாழ்கையையே புரட்டிப்போட்டதாக நினைத்த,முழு வாழ்க்கையையுமே பலியிடத் துணிந்த ஒன்று வெறும் இளமையின் அசட்டுத்தனங்களில் ஒன்று அவ்வளவுதான். அவ்வளவேதான். உண்மையில் அடுப்பில் இருந்து தப்பித்தான் வாணலியில் விழுந்திருக்கிறேன். முழுக்க கருகுவதற்குள் வாணலியிலிருந்தும் வெளியே தப்பித்து வந்துவிட்டேன்.

16-வது தளத்திற்கு ஏறுகையில் என் முகம் புன்னகையில் மலர்ந்திருந்ததை லிஃப்ட் கண்ணாடியில் பார்த்தேன்.

ஆத்துக்குள், சீ ….வீட்டுக்குள் நுழைந்து கைகால் கழுவிவிட்டு, அலெக்ஸாவை ஏசி போடச் சொல்லிவிட்டு ஆழ்ந்து உறங்கினேன். மாலை எழுந்து குளித்து விளக்கேற்றுகையில், நெஞ்சில் உறுத்திக்கொண்டிருந்த அந்தப் பூமுள் இருக்கிறதா என்று தடவிப் பார்த்தேன்; இல்லவே இல்லை!

சரண் சீக்கிரமே வந்துவிட்டான். மறுநாள் நான் கோவை புறப்பட வேண்டியிருந்ததால், இரவு எங்கேயாவது நல்ல பெரிய ஹோட்டலில் போய்ச் சாப்பிடலாம் என்று சொன்னான்.

என் முகத்தைப் பார்த்து, “நல்லாதானே இருக்கே?” என்றான். “ரொம்ப நல்லா இருக்கேன். இங்கே ‘ஆம் ரஸ்’ கிடைக்கும் இடத்திற்கு போய் சாப்பிடலாம்” என்றேன்.

அகல் விளக்கின் சுடர் முத்துப்போல் ஒளிர்ந்தது சரண் ஒற்றி கண்களில் வைத்துக்கொண்டான்.

மும்பை – விரைவு, வாய்ப்பு, வறுமை

உரை முடிந்ததும் காட்சன் நன்றி சொன்னார். “இப்படி ஒரு உரை இந்தத் தேவாலயத்தில் இனி ஒருபோதும் நடக்கப் போவதில்லை” அவ்வளவு நன்றாக இருந்தது என்றார். கிறிஸ்தவரல்லாத என்னை அங்கே அழைப்பதற்கு அவர் பெரிதும் மெனக்கெட்டிருந்தார். அவர் பெயரையும் காப்பாற்றவேண்டி இருந்தது.

பலரும் வந்து உரையின் சில குறிப்பிட்ட பகுதியைச் சொல்லிப் பாராட்டிப் பேசினார்கள். ஒரு பெண்மணி முக்காடிட்டுக்கொண்டு, “ஆண்டவரே! இந்த அம்மாள் (நான்தான்), அவர் மகன் (சரண்) ஆகியோருக்கு இந்த அருமையான உரையின் பொருட்டு அருள் புரியுங்கள்” என்றார். ஒருவர் வந்து உபகாமத்தில் இருந்த 7 தாவரங்களைச் சொன்னதில் மகிழ்ந்ததாகச் சொன்னார். மேலும் பலர் வந்து நன்றி சொன்னார்கள்.

என் பின்னால் அமர்ந்திருந்த ஒரு மூத்த பெண்மணி என் கைகளைப் பற்றிக்கொண்டு, “நான் சி.எஸ்.ஐ பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து, மெதடிஸ்ட் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறேன். வாராவாரம் சர்ச்சுக்கு வருகிறேன். ஆனாலும் என்ன ஏதுன்னு ஒன்றும் தெரிஞ்சுக்கிட்டதில்லை. நீங்க சொன்னது ரொம்ப நல்லா இருந்தது, நன்றி…” என்றார். இன்னொரு பெண், தன் சின்ன வயதில் தான் நட்ட பலாமரம் எப்படிப் பலருக்குப் பிரயோஜனமாக இருந்தது என்பதையும், ஒருபோதும் தான் நினைத்தேயிராத, மறந்திருந்த அந்த மரத்தை இன்று என் உரை நினைவூட்டியது என்றும் சொன்னார். இப்படிப் பலர் பேசின பின்னர் விடைபெற்றுப் புறப்பட்டோம்.

டாக்ஸி வந்துவிட்டது. காட்சனும் ஜாஸ்மினும் பலரும் டாக்ஸி புறப்படும் வரை உடன் வந்து நின்று விடையளித்தார்கள். எனக்குக் களைப்பும் தூக்கமும் பசியுமாயிருந்தது. உடல்நலக் குறைவுக்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் உறக்கம் வரவழைப்பவை. ஆனால், இந்த உரையின் பொருட்டுத் தூக்கத்தைப் பற்றி நினைக்காமலிருந்தேன்.

காரில் ஏறி அமர்ந்தேன்.நல்ல சொகுசுக் கார் .. எப்படி இந்த காரைச் சரண் புக் செய்தான்? மிக அதிகக் கட்டணம் இருக்குமே?” என்று நினைத்தேன் கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை. “நான் அடிக்கடி இந்த டாக்ஸியின் சேவையைப் பயன்படுத்துவதால், அவ்வப்போது அவர்களே இப்படி ப்ரீமியம் வண்டிகளைச் சாதாரணக் கட்டணத்தில் அனுப்புவார்கள்” என்றான்.

நான் பேசியது குறித்து அவன் அபிப்பிராயம் கேட்டேன். “நல்லா பேசினே… ஆனா ‘Rice Christians’ பத்தி சொல்லி இருக்க வேண்டாம். யாரு ஆடியன்ஸ்னு பார்த்துட்டு கவனமா பேசணும். ஒரே ஒருத்தர் கூட நம் உரையினால் புண்பட்டுடக் கூடாது” என்றான். “சரி” என்று கேட்டுக்கொண்டேன். பின்னர் நல்ல வசதியான கார் இருக்கையில் அப்படியே ஆழ்ந்து உறங்கி, ஒரு மணி நேரம் கழித்துத்தான் கண் விழித்தேன்.

வீடு வர 6 மணி ஆகிவிட்டது. கடும் பசியில் இருந்தேன். சரண் வீட்டில் சாப்பிட எதுவுமில்லை , எனக்கும் சமைத்துச் சாப்பிடும் தெம்பு இல்லை. பொதுவாகவே எனக்கு மாலை 5-6 மணிக்குப் பசிக்கும். ஒரு நல்ல ‘டார்மோனா’ தேநீரும், பிஸ்கட்டுகள் அல்லது சிற்றுண்டி ஏதாவது சாப்பிட்ட பின்னரே விளக்கேற்றப் போவேன். கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 12.15-க்கு உணவு இடைவேளை என்பதால் மாலை இப்படிப் பசிக்கும்.

சரண் “என்ன வேணும் சாப்பிட? நான் ஆர்டர் பண்ணறேன் என்றான். “எதாச்சும் பஜ்ஜி” என்றேன். “எதாச்சும்னா என்ன பஜ்ஜி’’? வெங்காயம், மிளகாய், வாழைக்காய்… எதாச்சும்” என்றேன். “நான் பிளிங்கிட்டில் ஆர்டர் போடறேன், நீ போய் குளி” என்றான். சரண் வீட்டுக்கு ஒரு கிருஷ்ணர் படமும் அகல் விளக்கும் கொண்டு வந்திருந்தேன். மாலை விளக்கேற்ற வேண்டும். எனவே, “சரிடா, நான் குளிச்சுட்டு வந்து டீ போடறேன். அதுக்குள் நீ ஆர்டர் போடு” என்று குளிக்கச் சென்றேன்.

குளித்து வசதியான உடை மாற்றி நான் ஹாலுக்கு வரும்போது, ஒரு அட்டைப்பெட்டியில் நல்ல சுவையான, சூடான மசாலா டீயும், இன்னொரு வெப்பம் தாங்கும் பெட்டியில் மிளகாய், வெங்காயம், வாழைக்காய் பஜ்ஜிகளும் தொட்டுக்கொள்ளச் சட்னியுடன் காத்திருந்தன. “டீயா?” என்றேன். “ஆமா, இவங்க ரொம்ப நல்லா போடுவாங்க, குடிச்சுப் பாரு” என்றான். அவனுக்கும் browni இருந்தது. விளக்கேற்றிவிட்டு வந்து, அத்தனை பசியில் அத்தனை ருசியான டீயும் திண்பண்டங்களுமாய் சாப்பிட்டேன்.

எத்தனை அவசரமான வாழ்க்கை ஆனாலும் , எத்தனை விரைவான வசதிகள் இந்த பெருநகர வாழ்வில்?

அன்று காலையும் அவனிடம் சாம் ஹிக்கின்பாதம் நூலைக் குறித்து ஒருவேளை நீண்ட நேரம் பேச வேண்டியிருந்தால் தேவைப்படுமே என 6 பக்கமிருக்கும் குறிப்புகளை பிரிண்ட் செய்ய வேண்டும் என்றேன். “வழியில் எடுத்துக்கலாம் வா” என்றான். நான் உடை மாற்றி வெளியே வரும்போது, என் கையில் ஒரு A4 அளவில் மஞ்சள் உறையை சிரித்தபடி கொடுத்தான். உள்ளே எனக்குத் தேவையான பிரிண்ட் இருந்தது. ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனேன். “எப்படிடா?” என்றேன்.

“பிளிங்கிட்டுக்கு வாட்ஸ்அப்பில் விஷயத்தை அனுப்பினா 3 நிமிஷத்தில் கொண்டு வருவாங்க. ஒரு பக்கத்துக்கு 6 ரூபாய்” என்றான். பிளம்பரோ, எலக்ட்ரீஷியனோ ரிப்பேர் வேலைகளுக்கோ ஆள் வேண்டுமென அழைத்தால், “சொல்லுங்கள் ஹுஜூர்” என்று அலாவுதீன் விளக்கு பூதமாக உடனே வந்து நிற்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 99 ரூபாய்கள் என வீட்டு வேலைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். சமைப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ, வீடு பெருக்கித் துடைத்துப் பாத்திரம் தேய்ப்பதற்கோ ஒரு மணி நேரத்துக்கு என்று உடனே வருகிறார்கள். மாதமொருமுறை முழு வீட்டையும் 400 ரூபாய்க்கு ஜன்னல் கம்பி வரை துடைத்துச் சுத்தம் செய்து தருகிறார்கள்.

ஆதங்கமாக இருந்தது எனக்கு, வேடசெந்தூரில் நான் இப்படியான வேலைகளை ஒன்றொன்றாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதும் வேலையாட்களுக்கு தொங்கு தொங்கென்று தொங்கிக்கொண்டிருப்பதையும் நினைத்துக்கொண்டேன். மேலும், இனி மகன்களுக்கெல்லாம் அம்மா, அத்தை, அக்கா வந்து உதவி செய்ய வேண்டிய அவசியமில்லாதது துயரளித்தது.

அலெக்ஸாவை பல வேலைகளுக்கு சரண் பணித்திருக்கிறான் . “அலெக்ஸா, ஹால் லைட்டைப் போடு” – போடுகிறாள். “அலெக்ஸா, பெட்ரூம் லைட்டைப் போடு” – போடுகிறாள். “பெட்ரூம் ஏசியைப் போடு, 25-ல் வை” – வைக்கிறாள். “அலெக்ஸா, பெட்ரூம் லைட்டை அணை” – அணைக்கிறாள்.அலெக்ஸா பெட்ரும் லைட்டை மஞ்சளாக்கு! ஆக்குகிறாள். என்ன அநியாயம் பாருங்கள்.

சரண் ஒரு எலக்ட்ரிக் குக்கர் வைத்திருக்கிறான். அதிலேயே தாளிப்பு, பொரித்தல், வேகவைத்தல் எனச் சகலமும் செய்யலாம். இரவு படுக்கப் போகையில் உள்ளே அரிசி, பருப்பு , காய்கறிகளை வைத்து 7 மணி நேரம் கழித்துச் சமைக்கத் தொடங்க ஆணையிட்டுவிட்டுத் தூங்கலாம். அது காலையில் நான் எழுந்திருக்கையில் சமைத்து முடித்துச் சூடாகக் காத்திருக்கிறது. 6 மணி நேரத்துக்கு வெம்மையாக வைக்கவும் அறிவுறுத்துகிறான்.

Food Processor-ல் பொடிப் பொடியாகக் காய்கறிகளை நறுக்கிக்கொள்கிறான். எனக்கென்னவோ கையொடிந்தது போல இருந்தது. இனி எதற்கு அம்மாவும் அவளின் ஒத்தாசைகளும்?

வீட்டில் தோட்டத்திற்குச் சொட்டுநீர்ப் பாசனம் போட்டபோது இப்படித்தான் உணர்ந்தேன். எனக்கும் செடிகளுக்குமான தொடர்பே போய்விட்டது போல ஏக்கமாகியது. சில மாதங்களிலேயே அந்த குழாய்களைப் பிரித்தெடுத்து மாடியில் போட்டுவிட்டு, நானே நீரூற்றத் தொடங்கினேன். 50,000 செலவு செய்த வேலையை வீணடித்த என் செடிக்கிறுக்கிற்காக பல வருடம் திட்டு வாங்கினேன்.

தாளிக்க வாணலியில் எண்ணெய் ஊற்றிவிட்டு ஆர்டர் கொடுத்தால், எண்ணெய் சூடாவதற்குள் கடுகு வந்துவிடும் போலிருக்கிறது. நொடியில் ஆட்டோவோ காரோ வாசலுக்கு வருகிறது. எல்லாம் வேகம், வேகம், வேகம்தான். வேலை செய்யவும், சம்பாதிக்கவும், வாழவும் ஏராளமாய் வாய்ப்புகள் அங்கே. ஆனால், “ஏன் இத்தனை வறுமை?” என்று கேட்டேன்.

சாதிபற்று அல்லது வெறிதான் என்றான்

அலுவலகத்திலும் வெளியே அவன் சந்திக்கும் நபர்களும் “உன் பேர் என்ன?” என்றால் “சரண்” என்பானாம். சரணுக்கு அப்புறம்? ஒரு பெயரைச் சொன்னால், “அதன்பின்னர் என்ன?” என்கிறார்கள். “அப்படி ஒன்றும் இல்லை” என்றால், சரண் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்தவன் போலிருக்கிறது, அதனால் குடும்பப் பெயரைச் சொல்லாமல் இருக்கிறான் என்று விலகி நிற்கிறார்களாம்.

உணவு இடைவேளையில் சரண் சைவம் என்று சொன்னதும், முகமும் மனமும் மகிழ்ந்து தோளைத் தொட்டு தழுவிப் பேசுகிறார்களாம். சைவ உணவுக்காரன் நிச்சயம் உயர்ந்த ஜாதிதான் என்னும் நம்பிக்கை இருக்கிறதுஅங்கே

’’..அடுத்த முறை ஆக்டோபஸ் வரை விரும்பிச் சாப்பிடும் தம்பியை கூட்டிட்டுப்போ, சரண்” என்றேன்.

ஒரு ஆட்டோ ஓட்டினால் எளிதாக ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் அந்தத் தொழிலில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டினால் பல சாதிக்காரனும் வந்து ஆட்டோவில் உட்காருவான் என்பதால் ஓட்டாமல் வறுமையில் இருப்பவர்களை அறிவேன் என்றான்.

சிறு குழந்தைகள் ஒரு ரூபாய்க்காகக் காலில் விழுந்தும், தெருவிலிருந்து அப்படியே தொற்றி கூடவே ஆட்டோவில் அமர்ந்து கெஞ்சியும் பிச்சை எடுப்பதைப் மிகுந்த வேதனையுடன் சொல்லிக் கொண்டிருந்தான். வேதனையாக இருந்தது.

இரவு வெகுநேரம் வரை பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலை சரணுக்கு அலுவலகம் செல்ல வேண்டும் நானும் என்னைசந்திக்க கேட்ட மும்பைக்காரர் ஒருவருக்குச் சரி என்று சொல்லி இருந்தேன். சொல்லப்போனால் மும்பை வந்தது அந்த சந்திப்புக்காகவும் தான்.

இரவு எளிமையாகச் சமைத்துச் சாப்பிட்டுவிடு உறங்கப் போனோம்.காட்சனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. ’’..ஒரு புதிய சகாப்தத்தை துவங்கிவிட்டிருக்கிறீர்கள் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலான உரை ஆனால் சாமார்த்தியமாக கையாண்டீர்கள் நன்றி…’’ என்றிருந்தார். பதிலுக்கு ஒரு ஸ்மைலியை அனுப்பினேன்.

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑