லோகமாதேவியின் பதிவுகள்

Month: September 2019 (Page 1 of 2)

Bro’Taa

நேற்று கோவை சென்றிருந்தேன். சரணையும் தருணையும்  கல்லூரியிலிருந்தும் பள்ளியிலிருந்தும்அழைத்துக்கொண்டு வழக்கமான கோவை சுற்றல்கள். மாலையில் மென்தூரலாய் மழை இருக்கையில்  மகன்களை அவரவர் விடுதிகளில் சேர்ப்பித்துவிட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். மதிய உணவை மாதவன் இளங்கோ மற்றும் அவரது நண்பர்கள் துவங்கியுள்ள ப்ரோ’டா-Bro’Taa என்னும் புதிய உணவகத்தில் சாப்பிட்ட அனுபவங்களை நாளைக்கு எழுதலாம் என்று ஒத்திப்போடமுடியாமல் இப்போதே எழுதிவிட்டு உறங்கச்செல்கிறேன். அத்தனைக்கு சிறப்பானதொரு அனுபவமாக இருந்தது.

வழக்கமாக  தருணின் ‘day out’ நாட்களின் போது திரைப்படங்களுக்கு செல்லுவோம் இன்று அதைத்தவிர்த்து மாதவன் மாமாவின் உணவகத்துக்கே போகலாமென்று ஏகமனதாக முடிவெடுத்தோம். எற்கனவே இதுகுறித்து மகன்களிடம் அலைபேசுகையில் சொல்லியுமிருந்தேன். காந்திபுரத்திலிருந்து கணபதி செல்லும்போது உணவகத்தை அலைபேசியில் சரண் அழைத்து சரியான அமைவிடம் கேட்டுக்கொண்டான். பொறுமையாக சரியாக அன்னபூர்ணாவின் அருகில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் மேற்புறம் என்று பதிலளித்தார்கள்.

சரணுக்கு உடனே கவலை தொற்றிக்கொண்டது அன்னபூர்ணா பெரிய போட்டியாளர்களாச்சே, இத்தனை அருகிலேயே இருக்காங்களே என்று. பின்னர் அவனே சமாதானமாக அசைவமும் இருக்கில்லையா அப்போ போட்டின்னு சொல்லிறமுடியாது என்றான்

வழியை அத்தனை விசாரித்தும், உணவகத்தை கடந்து சற்று தூரம் சென்றுவிட்டு பின்னர் மீள கூகிளாண்டவரின் உதவியால் வந்துசேர்ந்து. பக்கவாட்டில் இருந்த படிகளின் வழியே மேலேறிச்சென்றோம். படிகளின் பக்கச்சுவற்றில்  புதிகாக அடர் ஆரஞ்சு வர்ணமடித்திருந்ததால் வாசனையாக இருந்தது. வர்ணம் பொருத்தமாகவும் இருந்தது. எனக்கு எப்போதும் ஆரஞ்சுநிறம் சமையலை, உணவை நினைவூட்டும். தீப்பிழம்பின் நிறமாதலாலோ என்னவோ.

முகப்பிலேயே நீளவாக்கிலான, சிறிய ஆனால் கச்சிதமான ஒரு வரவேற்பறை. நேர்த்தியாக நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன.  அறிவிப்புப்பலகையின்றில் ’’வரவேற்கிறோம் புரோ’டாவிற்கு’’ என்றெழுதியிருந்தது.

உள் நுழைந்ததும் நல்ல pleasant feel  வரும்படியான அமைப்பிருந்தது. நாற்காலிகளும் மேசைகளும் அடர் காப்பிக்கொட்டை நிறத்தில் , மேசையின் கால்கள் வித்தியாசமான வளைவுவடிவத்தில்.  நடமாடும்/புழங்கும் இடம் தாராளமாக செளகரியமாக விடப்பட்டு மிகச்சரியாக இருந்தது எல்லாம். சுவரோரமாக அமர்ந்தோம். அங்கே பணியில் பொள்ளாச்சி ஸ்லேவ்ஸில்  எனக்கு அறிமுகமாயிருந்த ஹரீஷ் என்னும் இளைஞனிருந்தான், அவனை இளைஞன் என்று சொல்வதே பிழை என்னும்படிக்கு சிலவருடங்களாகவே பார்த்துக்கொண்டிருந்தும் சற்றும் மாறாமல் சிறுவனின் தோற்றமுடையவனாகவே இருக்கிறான். தோழிகளுடன் எப்போது ஸ்லேவ்ஸ் சென்றாலும் அவனை அவதானித்திருக்கிறேன். சுறுசுறுப்பும் ஆர்வமும் துடிப்பும் உள்ளவன்.  பிரகாசமான கண்களுடன் பணிவு நிரம்பிய உடல்மொழியுடன், தோழமையுடன், புன்னைகையுடன் இருக்கும ஹரீஷ் போன்றவர்கள் எந்த நிறுவனத்திலும் பெரும் சொத்தென நான் நினைத்துக்கொள்ளுவேன்

சுவரோரம் இருக்கும் ஒரு மேசையை தேர்ந்தெடுத்து அமர்ந்து தண்ணீர் குடித்தோம். அழகிய பித்தளைக் கைப்பிடியுடனான ஜாடியில் தண்ணீர். அதை ஜாடி என்று சொன்னதும் jug அல்ல அது pitcher என்று சின்னவன் திருத்தினான். ஆம் பின்னரே கவனித்தேன் சரிதான்.

 வரெவேற்பு குளிர்பானம் அளிக்கப்பட்டது. நன்னாரி வாசனையுடன், குளிர்ச்சி நேரடியாக மூளையை கூசவைக்கும்படி இல்லாமல் மிதமாக வெய்யிலில் அலைந்துவந்தவர்களுக்கு குடிக்க ஏதுவாக இருந்தது. மெனு அட்டையை கைகளில் கொடுத்தபின்னர் பணியாளார்கள். விருப்பமிருந்தால் கன்வேயரில் வரும் துவக்க உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாமென்று தெரிவித்தார்கள். அந்த ’தெரிவித்தலை’ மிகச்சரியாக செய்தார்கள். கன்வேயரின் உணவுகளை எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தவில்லை. கூடுதலாக  விளக்கம் சொல்லி அழுத்தமும் தரவில்லை. ஆர்வமூட்டும்படி மிகைப்படுத்தவுமில்லை. ஒரு புதிய விஷயம் இருக்கின்றது, தேவையெனில் விரும்பினால் செய்யலாம் என்னும் தொனியில் அழகாக சொன்னார்கள்.

உடன் கன்வெயரின் அருகிலிருக்கும் மேசைக்கு மாறினோம். பின்னர் உணவுகளின் வகைகள், அவை வைக்கபட்டிருக்கும் தட்டுக்களின் நிறங்களைப் பொருத்து சைவம் அசைவம் என அவை வேறுபடுவது இவறையெல்லாம் விளக்கி, அவறிறின் விலை விபரங்கள் பிரசுரமாயிருக்கும் பக்கத்தை மெனுஅட்டையில் சுட்டிக்காட்டிவிட்டு சென்றனர். ஆர்வமாக வேண்டியதை எடுத்துக்கொண்டோம்

உண்மையிலேயே அனைத்தும் சுவையாக, சிறப்பாக  இருந்தன. பிரதான உணவுகளைக்காட்டிலும் துவக்க உணவுகளையே தொடுகறிகளாகவும் எண்ணியபடி அதிகம் எடுத்துக்கொண்டிருந்தோம். விலையும் worth paying எனும் உணர்வையே அளித்தது.

வழக்கமாக ஒரு முறை ஆர்டர் செய்து வாங்கும் ஒரு உணவை பிடித்திருந்தாலும் இல்லையெனினும் பெரிய கிண்ணங்களில் அளிக்கப்படுவதை   அனைவரும் பகிர்ந்துகொண்டே இத்தனை வருடங்களாக சாப்பிட்டிருக்கிறோம். இங்கு கன்வேயரில் வந்ததைப்போல போதுமான ‘proper size of a single serve’’ என்று சொல்லும்படி சிறிய தட்டுக்களில் பல வகைகளை  அளவாக ருசிக்கும்போது வயிற்றுடன் மனதுக்கும் நிறைவளிக்குமொன்றாகவே இருந்தது. வரிசையாக எங்களைக்கடக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்ட அனுபவம் மிகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தது.

மிகப்பிடித்தவற்றை மீண்டும் கேட்டு வாங்கினோம்.   வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தட்டுக்களின் வண்ணங்களையும் எண்ணிக்கைகளையும் கொண்டு செலுத்தவேண்டிய தொகையை கணக்கிடுவார்கள் என்பதை புரிந்துகொண்டோம். மகன்கள் கேட்ட வீச்சு மற்றும் நாணய பரோட்டாக்களும் எனக்கான தயிர்சாதமும், பிற மெனுஅட்டையிலிருந்த கேட்டுக்கொண்ட அனைத்துமே வந்தன.  எதையுமே இல்லையென்று சொல்லவில்லை. அனைவரும் மகிழ்ந்து உணவுண்டோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்

பணியாளர்கள் மரியதையான தூரத்தில், ஆனால் அழைத்தால் உடன் வரும் இடத்தில் நின்றபடி காத்திருந்து உதவினார்கள். அசைவம், முட்டை இரண்டுமே சாப்பிடாத மகனுக்கு 2 நிமிடங்களில் பீன்ஸ் வெட்டிப்போட்ட ஒரு குழம்பு கொண்டு வந்து தந்தார்கள்,

 ஒன்றே ஒன்று மட்டும் வருத்தமளித்தது. இனிப்பு  உண்பதில்லை என்று கட்டுப்பாட்டுடன் கொஞ்சநாளாக இருந்தேன்.  கையருகில்  மெல்ல நீந்துவது போல வந்துகொண்டிருந்த கிண்ணங்களில்  வைக்கப்பட்டிருந்த கவர்ச்சியான கஸ்டர்டை எல்லாக்கட்டுப்பாடுகளையும் நிமிஷமாய் மறந்து எடுத்துக்கொண்டேன்.  இனிப்புக்களை ஆர்டர் செய்து சாப்பிடாமல் இருப்பதும், வேண்டுமா என கேட்கையில் மறுப்பதும் மிக எளிது. இப்படி மெதுவாக அழகாக கையருகில் கைக்குழந்தை நீந்துவது போல சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்குமொன்றை எப்படித்தான் வேண்டாமென்று சொல்வது?

எனவே இப்போதுதான் மறையத்துவங்கியிருந்த அந்த குண்டம்மா மீண்டும் கண்ணாடியில் தெரிந்தால் அந்தப்பாவம் மாதவன் இளங்கோவையே சேரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

 .

நிகழாக்காலம் -சுரேஷ் பிரதீப்

நிகழாக்காலம் வாசித்து முடித்தேன் இரண்டாம் முறையாக.  சில பகுதிகளை துண்டு துண்டாக முன்பே வாசித்திருந்தும் இப்போது முழுவதுமாக வாசித்தேன். சனியன்று விமான நிலையத்தின் வரிசை நாற்காலிகளில் பெரும்பாலும் காலியாக இருந்தது அதிலொன்றில் அமர்ந்து இதை வாசித்தேன் 65 சதமானம். மிச்சத்தை பின்பு நேற்று கல்லூரியில் வகுப்புக்களுக்கு இடையில் வாசித்தேன். புரியாத பகுதிகளை நேற்று இரவு மீள் வாசிப்பு செய்தேன். இப்போது கதையில் புரியாமை ஏதும் இல்லை எனினும் ஏன் இவையெல்லாம் இவற்றுக்கு இடையில் வந்தது என்று புரியலை இப்பொவும்

ஆனா. முன்பே  சுரேஷ் சொல்லியிருப்பதை நினைத்துக்கொண்டேன்.இதிலும் குணா எழுதும் கடிதம் ஒன்றில்   இப்படி வரும் ‘’ காலமும் நிகழ்வும் தொடர்பினை கைவிடும்போது வரும் விந்தை’’ ன்னு. அதான் எனக்கு புரியலை போலிருக்கு.அருமையான கதை. சுரேஷ் எழுதினதிலேயே இதுதான் நீளம் அதிகம்னு நினைக்கிறேன். Loved it totally

 சக்தி குணா வரும் முழுக்கதையும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதே போல் ரிஷ்டெப் செடிக்கதையும். அது ஒரு fairytale போலிருக்கு. குணா படித்து முடித்து வாலிப வயது வரையுலும் அவன் வாழ்வில் நடந்த பலவறை விரிவாக சொல்லியிருக்கீங்க. அவன் வாழ்வில் குறுக்கிட்ட பெண்கள் அவன் காயப்படுத்திய பெண்கள் அவ்னை காயப்படுத்திய பெண்கள்  என விஸ்தாரமாகவே இருந்தது சக்தியின் பால்யகாலத்து நட்பிலிருந்து, நஸ்ரியா நிலோஃபர், உறவுகளில் சுகன்யா நதியா மலர் அலுவலகத்தில் ஸ்வப்னா பக்கத்து வீட்டில்  மஞ்சுளா என்று அலைக்கழிக்கிறார்கள் குணாவை ஒவ்வொருத்தியும்.

ஒரு கடிதம் எழுதி துவங்கும் நாவலையும். அப்படியே பதில்கடிதமொன்றில் முடியும் நாவலையும் இப்போதுதான் வாசிக்கிறேன் நான். நல்ல முயற்சி.குணாவும் சுரேஷும் வேறு வேறில்லை எனவே சுரேஷ் சுரேஷுக்கு எழுதும் கடிதம் துவங்கி வைக்கின்றது நாவலை

நாவலின் துவக்கம் ஒரு திரைப்படத்தின், அதுவும் தமிழ் திரைபப்டத்தின் துவக்கம் போலவே இருந்தது. கோழிகளும் சேவல்களும், பனி பெய்யும் அதிகாலை, உறக்கம் கலையாத குழந்தைகள். சாணி போடும் மாடுகள் குளிக்க செல்லும்பெண்கள்  டீக்கடை என்று டிபிகல் சினிமா ஓப்பனிங்.

கதை முழுக்க வரும் கதைமாந்தர்கள் பேசும் slang  கதையுடன் வாசிப்பவர்களை ஒன்றச்செய்கின்றது.

வழக்கம் போலவே கதையுடன் நான் என் வாழ்வையும் என்னையும் பல இடங்களில் பொருத்திப்பார்த்துக்கொண்டேன். சுகந்தி தன்னந்தனியே வீடுகட்டியது தனிமை அவளுக்குள் வைராக்கியத்தை உண்டு பண்ணியது எலாம் தேவிக்கும் பொருந்தும். தனிமை முதலில் பயமுறுத்தியது, பின்னர் பழகியது பின்னர் பிடித்து விட்டது. இப்போ நானும் தனிமையும்’சேர்ந்து’’ வாழ்கிறோம்

//உடலில் பளிச்சென்று தெரியும் கூறுகளை மட்டுமே கண்ணுக்குப் புலப்படச் செய்யும் அந்தியைப் போன்றவள்.

// அம்மா அப்பா நான் மூவரும் நின்றிருந்தோம். எங்களுக்கு இடையே பொட்டலின் காற்று கடந்து சென்று கொண்டிருந்தது.//

// கீறினால் கிழிந்துவிடும்படியான மனப்படலங்கள் எதையும் அந்த உரையாடலில் தொட்டுவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள்//

//கார்களின் உள்ளே பொழியும் இளநீலம்//

இருவரும் பற்றிக்கொண்டிருந்த சரடின் ஒரு முனையை அவள் ஏற்கனவே விட்டு விட்டிருந்தாள்இவையெல்லாம் கவனிக்க வைத்தது. நான் மிகவும் ரசித்தவையும் கூட

//. நஸ்ரியா பெண்களுக்குரிய இயல்பான முறையில் என்னைக் கைவிடத் தொடங்கினாள்//

// புதுத்தகப்பன் என்பதால் அந்த சதைப்பிண்டத்தை ஞானபீட விருதினைப் போல அவர் ஏந்தியிருந்தார்.// இதெல்லாம் கஷ்டமாயிருந்தது ரொம்ப வாசிக்கும் போது

குழந்தையை அப்படி சதைப்பிண்டம்னு சொல்லலாமா ? அதுபோலவே பெண்களுக்கு ஸ்நேகிச்ச ஆண்களை கைவிடுதல் இயல்புன்னு அப்படி பொதுவில் சொல்லமுடியாது இல்லியா

பாலூட்டிக்கொண்டே பெற்றுக்கொண்டுமிருந்தாள்னு சொல்லியிருக்கீங்க இல்லியா அதும் அறிவியல்ரீதியா சாத்தியமில்லை பாலூட்டுதல் ஒரு இயற்கை வழி கர்ப்பத்தடைதான்.  மிக அரிதாகவே அபப்டி கருவுருதல் நிகழும் பாலூட்டும் தாய்மார்களுக்கு. இது சுரேஷ்க்கு தெரிஞ்சிருக்கலாம்  ஒருவேளை அத்தனை அறிவியல் பின்புலம் தேவையில்லை இந்த கதைக்குன்னு நினச்சுருக்கலாம் நீங்க

ஆத்தா கொடுக்கும் புளியின் செம்பழம் எனக்கும் சாப்பிடனும்னு ஆயிருச்சு. வீட்டுக்கு திரும்பும் தெருமுனையில் இருக்கும் மரத்திலிருந்து அப்பப்போ உதிர்ந்து கிடக்கும் பழங்களை நான் இப்பொவும் சீசனில் பொறுக்கி சாப்பிடுவேன்.

’நெருப்பை தாண்டும் முயற்சியில் இருக்கும் பாம்பைபோல சென்று சென்று திரும்பிக்கொண்டிருக்கும் புள்ளி’’ இதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா  இருக்கு

டிவி பத்தி கேட்கும் கேள்வி பத்தி ஏற்கனவே சுரேஷிடம் பேசியிருப்பதை நினைவு கூர்ந்தேன்

பள்ளியில் கர்த்தர் சுரேஷைப்போலவே எனக்கும் பிரியமானவர்.ஒரு போட்டொ வச்சிருந்தேன் கிழிஞ்சு நார் நாரா போறவரைக்கும் .  கழுத்துக்கு கீழே புரளும் நெளிக்கூந்தலுடன் கருணை ததும்பும்  முகத்துடன் அஞ்சல் முத்திரையுடன்  கர்த்தர் இருக்கும் அந்த புகைப்படம் அன்பென்பதை அறியாத அப்பருவத்தில் எனக்களித்த பாதுகாப்பு உணர்வினையும் நிம்மதியையும் எழுதி விளக்கிவிட முடியாது

மழைக்காற்றை குளிர்பட்டுன்னு சொன்னதும் நல்லாருக்கு

மஞ்சள் கலர் சுரேஷுக்கு பிடிக்காது போலிருக்கு

நதியாக்கு எழுதி கிழிக்கும் கடிதத்திலும் நஸ்ரியா கேண்டினில் முக்கிய விஷயம் பேசறப்போ போட்டுக்கொண்டு வருகையிலும் அப்படித்தான் எனக்கு தோணுது அவர் எழுதியிருக்கறதை பார்த்தா

எஞ்சினீயரிங் கல்லூரி அட்மிஷன் விடுதி இதெல்லாம் சமீபத்தில் மகனை கொண்டு போய் விட்டுவிட்டு வந்ததால் அவற்றுடன் இணைத்து பார்த்துக்கொண்டேன்

சக்தி அரசடி குளத்தில் துணி துவைத்துக்கொண்டிருக்கையில் குணா போய் பார்க்கும் காட்சி அற்புதம் ராஜ்கபூர் நர்கீஸ் சந்திப்பை நினச்சுட்டேன்.

மலர்விழியும் தோழிகளும் குணாவை பெண் வேடமிட்டு ரசித்து விளையாடும் பகுதி  தேவைக்கும்கொஞ்சம் அதிகமான நீளம்னு தோண்சுச்சு.

மையெழுதினா கண்களில் மர்மம் கூடும்னு சொன்னதும் அழகு. எனக்கும் அப்படி தோணும் கவர்ச்சியும் மர்மமும் கூடிரும் கண்ணெழுதிட்டானு நினைப்பேன்.

ஏன் சுகந்தி மகனுடனான தன் பிரியத்தை காட்டாமல் தன்னையே கட்டுபடுத்திக்கிட்டானு புரியலை. அவனை யாரையும் சாராமல் வளர்க்கனும்னு நினைச்சாளா/?

 ஆற்றுத்தண்ணீரை சேம்பிலையில் கோரிக்குடிக்கும் அக்காட்சி மலையாளப்படத்தை நினவு படுத்தியது.

ஹாஸ்டலில் யூகலிப்டஸ் மரங்கள் பெரியம்மா வீட்டில் ஊஞ்சல் கட்டியிருக்கும் புன்னை,  பூசன மரங்கள்( மல்பெரியா?) இப்படி நிறைய பச்சை பிடிச்சுருக்கு கதைக்குள்

சுனதன் கதையையும் கதைக்குள் என்னால் பொருத்திக்க முடியலை. என் புரிதல் திறன் குறைவென்பது காரணமாயிருக்கலாம். உங்களுக்கு நடந்த பைக் விபத்தும் இருக்கே கதையில்/?

// முற்றத்தில் காயும் ஈரத்தவிட்டை
சூரியனும் பின்னர் காற்றும் வனைவது போல// loved this very much

ஸ்வப்னாவுடனான உறவுக்கு பின்னர் கண்ணீர் வழிய அவன் இருக்கையில் மனம் சங்கடப்பட்டது . அந்த சமயத்தில் குணாவை  அணைத்துக்கொள்ளனும்னு தோணுச்சு என்னமோ

// கொஞ்சம் நாகரிகக் கனிவுடன் பேசினாலே தங்களுடைய பலகீனமான பக்கங்களைத் திறந்து படிக்கத் தரும் பெண்களைப் போன்றவள் அல்ல ஸ்வப்னா./ இது என்னவோ என்னை புண்படுத்தியது காரணமின்றி அல்லது காரணத்துடன்

சொல்முகம் கலந்துரையாடலில் கவனித்தேன் பலரும் அக தரிசனம புறதரிசனம் என்றெல்லாம் பேசியதை அப்படி தரிசனஙக்ளையோ படிமங்களையோ கதைகளில் தேடிக்கண்டடையத்தெரியாத, கதைகளை நேரடியாக் புரிந்துகொள்ளும் எளிய வாசகி நான்

எனக்கு இக்கதை அல்லது கதைகள் பிடிச்சிருக்கு. இடையிடையே வருபவற்றை தொடர்புபடுத்திக்க தெரியலைங்கறது வாசகியா என்னோட குறை

பலமுறை புன்னகைச்சபடியேதான் வாசிச்சேன்

நேர் கொண்ட பார்வை

ஹெச். வினோத்தின்  எழுத்து மற்றும் இயக்கத்தில் போனிகபூரின் தயாரிப்பில் 2016 ல் வந்த (’’பின்க்’’ஹிந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமான) நேர்கொண்ட பார்வை 8/8/2019 அன்று  உலகெங்கும் வெளியானது அஜித் குமாருடன்  கன்னட நடிகை ஸ்ரத்தா, அபிராமி , ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ள legal drama வகைப்படம் இது. ஆண்ட்ரியா மட்டுமே மூலப்படமான பின்க்’ கிலும் நடித்தவர். இசை யுவன் ஷங்கர் ராஜா. வித்யா பாலன் அஜித்தின் ஜோடியாக தமிழில் இப்படத்தில் அறிமுகமாகிறார்.பிரபல நடிகை கல்கி கோச்லினும் துவக்க பாடலில்  மட்டும் வருகிறார்

பின்க் சொன்ன அதே கதைதான்  எனினும் இதில்  அஜீத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். அமிதாப் நடித்த வயதான ஒரு பாத்திரத்திற்கு ஒத்துக்கொண்டதற்கும் மிக அழகாக இப்பாத்திரத்தை கையாண்டதற்கும் அஜித்தை பாராட்டியே ஆகவேண்டும்.

நிகழ்வுகளில் நடனமாடும் ஸ்ரத்தா,  கால் சென்டரில் வேலைபார்க்கும், மணமுறிவான பேராசிரியருடன் வாழ்வை பகிர்ந்துகொண்டிருக்கும் பேரிளம்பெண்ணான அபிராமி, ஒரு சலூனில்   சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஆண்ட்ரியா, இவர்கள் மூவரும் சென்னையில், பூந்தொட்டிகளும் டெராரியமும்  மூலை முடிச்செல்லாம் பசுஞ்செடிகளும் நிறைந்திருக்கும் ஒரு அழகிய வீட்டில் வாடகைக்கு  வசித்து வருகிறார்கள்.

ஸ்ரத்தா நடனமாடும் ஒரு நிகழ்வுக்கு மூவருமாக சென்றுவிட்டு திரும்ப எத்தனிக்கும் ஓரிரவில் அவர்கள்  சில  இளைஞர்களை சந்திக்கின்றனர். அதன்பின்னர் நடக்கும் எதிர்பாரா விஷயங்களால் அப்பெண்களின் வாழ்வே முற்றிலுமாக மாறிவிடுகிறது.,  வழக்கறிஞர் உத்யோகத்திலிருந்து ஓய்வு பெற்ற அஜித்  அரசியல்  மற்றும் குண்டர்கள் தொல்லைகளையும், கடந்த கால வாழ்வின் கசப்புகளினால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நிலையையும் சமாளித்து மூன்று பெண்களுக்கும் உதவி எப்படி அனைத்தையும் சீராக்குகிறார் என்பதே கதை

 துடிக்கும் இசையுடன் நடனம் , கொப்பளித்து ததும்பும் இளைஞர் கூட்டம்,   விரையும் காரினுள் இருக்கும் இளைஞனின் மண்டை உடைந்து கொட்டும் இரத்தம்,, இறுகிய முகத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பயணிக்கும் மூன்று பெண்கள், மிக அருகே என மோத வரும் ஒரு லாரி என துவக்க காட்சிகளே படத்தை  பரபரப்பாக்குகிறது

வழக்கம் போலவே எந்த ஒப்பனையும் இல்லாது முகத்தை கழுவிவிட்டு அப்படியே படப்பிடிப்பிற்கு வந்தாற்போல  உப்பும் மிளகுமான தலைமுடியுடன்  அஜீத்.  அவர் திரையில் தோன்றியதும் அவரது ரசிகர்கள் ததும்பி வெறி கொண்டு கூச்சலிடுகிறார்கள்.. பென்சில் மீசையும், பொய்த்தலைமுடியும் லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளும் சேர்ந்து அளிதது வந்திருந்த   வந்த நாயகன் என்னும் பிம்பமெல்லாம் வழக்கொழிந்துபோய், திரைக்கு பின்னும் முன்னுமான   ஆளுமையால் மட்டுமே இப்போது நாயகர்கள் இளைஞர்களை ஈர்க்கமுடியுமென்பதை , ,திரையில் அவரை நோக்கி வீசப்பட்ட  வண்ணக்காகிதங்களும் காது கிழியும் படியான விசிலும் கூச்சலும் உணர்த்தின

என்ன நடந்தது என்பதை பிற்பாடு நீதிமன்றத்தில் தன் நாம் புரிந்துகொள்கிறோமென்றாலும் பெண்கள் மூவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அரசியல் செல்வாக்குடைய ஆதிக்’தான் அடிபட்டது என்று தெரியும் போதும், ஸ்ரத்தா கடத்தபடுகையிலும்  நாமும் பதட்டமாகிறோம்.

 பூங்காவில் அமர்ந்திருக்கும் அஜீத் மாத்திரைகளை போட்டுக்கொள்ளாமல் இருக்கையில் அவருக்குள்ளிருந்து திமிறிக்கொண்டு, கட்டுக்களையும் தளைகளையும் அறுத்துக்கொண்டு வெளிவரத்துடிக்குமொன்றை அவர் கட்டுப்படுத்திக்கொள்வதை மிக நன்றாக காட்டியிருக்கிறார். அந்த பூங்காவில் நடக்கும் சண்டைக்ககாட்சி ( கதைக்கு தேவையற்றது எனினும் ) பிரமாதம். உடைந்த குழாயிலிருந்து பீறிட்டு வரும் நீரின் பிண்ணணியில், யுவனின் பொருத்தமான இசையுடன் ஒவ்வொரு அடியும் இடியாக நம் இதயத்தில் விழுகிறது. தமிழில் வித்யா பாலன், நல்ல புஷ்டியாக கொழுக் முழுக்கென்றூ இருக்கிறார். Close up காட்சிகளில் கண் பட்டுவிடும் என்றூ சொல்லும் அளவிற்கு பேரழகியாக இருக்கிறார்.அகலாதே மனதை விட்டு அகலாத பாடல்.

மகேசின்டெ பிரதிகாரத்தின் வில்லனாகிய சுஜித் இதிலும் வருகிறார் மிக இயல்பான உடல்மொழி அசத்தல் நடிப்பு. தமிழுக்கு ஒரு நல்ல உருப்படியான வில்லன் கிடைத்திருக்கிறார்.

நீதிமன்ற நிகழ்வுகள் மிக நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன. அரங்கு மொத்தமும் மிக அமைதியாக கவனிக்கிறது வசனங்களை. Are you a virgin ? என்று அஜித் ஸ்ரத்தாவை கேட்கும் கேள்வியைப்போல, தமிழ் சமூகமும், திரையுலகும் கொஞ்சமும் நினைத்திராத பல திடுக்கிடும் கேள்விகள் நம்முன் கேட்கப்படுகின்றன.

nerkonda-paarvai-et00104821-12-06-2019-04-13-49

இப்படம் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தவறுசெய்யலாம் என்று சொல்லும் படமல்ல. வெகுவாகவும் விரைவாகவும் மாறிவரும் கலாச்சார சூழலில், சில பண்பாட்டுக்கூறுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதை நாம் விசால மனதுடன் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், கற்பை மட்டுமல்ல இதுபோன்ற தவிர்க்கவே முடியத சில அம்சங்களையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைக்கவேண்டும் என்றும் சொல்லுகிறது

இறுதியாக அஜித் சொல்லும் ’”NO என்றால் அது NO’” தான் என்பது, அவர் குரலாக மட்டுமல்லாது பல்லாயிரம் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவும் ஒலிப்பதால் பெரும் ஆறூதலளித்தது .தினமலர், ஆயுத எழுத்து, என் கேள்விக்கென்ன பதில் போன்ற நிகழ்ச்சிகளில் பிரபலமான தொலைக்காட்சி புகழ் ரங்கராஜ் பாண்டே இதில் அரசுத்தரப்பு வக்கீல். மிக மிகப்பொருத்தமான பாத்திரம் அவருக்கு. இருக்கையிலிருந்து எழுந்து அவரை ஓங்கி அறைந்துவிடலாமாவென்று நினைக்க வைக்கும் உடல்மொழியும் வசனவெளிப்பாடும். பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

டெல்லி கணேஷும் ஸ்ரத்தாவின் அப்பாவாக வருகிறார். புராதன அப்பாவாக இன்றி மகள் குடிப்பது கன்னித்தன்மையை இழந்தது பற்றியெல்லாம் கேட்டபின்னரும் நீதிமன்றத்தில் இருக்கிறார், வருந்துகிறார். ஆனால் எந்த காட்சியிலும் ’’அடிப்பாவி மகளே! மோசம் பண்ணிட்டியே,   என்று  கண்ணீர் விட்டு கதறியோ  வழக்கமான தமிழ்சினிமாவில் போல்  மொத்துமொத்தென்று மொத்தியோ இருந்தால் இப்படம் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போயிருக்கும். இப்போது காலம் மாறியிருக்கிறது என்பதை டெல்லி கணேஷ் பாத்திரமும் நமக்கு உணர்த்துகிறது

பெண்களின் பாலுறவு தொடர்பான   சிக்கல்களுக்கும், வீட்டிற்கு வெளியே அவர்களுக்கு  எப்போதும் கூர் நகங்களுடனும் கோரைப்பற்களுடனும் காத்திருப்பதாக நாம் நம்பும் ஒரு ஆபத்தான உலகிற்கும் அவர்கள் அணிந்துகொள்ளும் ஆடைகளும், அவர்கள் சுயமாக எடுக்கும் துணிச்ச்சலான முடிவுகளும், அவர்களும் மது அருந்துவதும் தான் என்று காரணங்களை நாம் அடுக்காமல் இதற்கு நாம் எத்தனை தூரம் காரணமாயிருக்கிறோம் என்றும் யோசனை செய்ய சொல்லும் படமிது. கூட்டுக்குடும்பம் இல்லை பல வீட்டில் ஒற்றை பெற்றோர் அல்லது ஒற்றை பிள்ளைகள்.  சொந்தம் பந்தம் என்று எதுமில்லா சூழலில் உள்ளத்திலுள்ள பதின்பருவ சிக்கலகளை பகிர்ந்துகொள்ள யாருமற்ற ஒரு சமூகத்தில் அவர்கள் வளரவேண்டி வந்திருப்பதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டும்

 பெண்களும் ஆண்களும் எதையெதையெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது என்று பாடம் எடுக்கும் படமுமல்ல இது.கலாச்சார மாறுதல் என்பது ஒரு சுனாமி போல வெகு விசையுடன் இளைஞர்களை உள்ளிழுத்துகொண்டிருக்கையில் நாம் இன்னும் பெண்கள் எதை செய்யலாம் செய்யக்கூடாது என்று பட்டியல் போட்டுக்கொண்டிருக்காமல் அவர்களை, அவர்களின் வயதை, ஹார்மோன்கள் செய்யும் கலவரங்களை, உடல் சார்ந்த தேவைகளை  வீட்டுக்கு  வெளியே அவர்களை ஈர்க்க காத்திருக்கும் ஒரு வேகமான உலகை, நாமும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நமக்கு சொல்லும் ஒரு படம்

  பெண்களுக்கு தளைகளை பிணைப்பதற்கு முன்பு, குற்றம் சாட்டுவதற்கு முன்பு  அவர்களை  பரிர்ந்துகொள்வதும் , அவர்கள் தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் நாம் அறிந்துகொள்வதன் அவசியத்தை சொல்லும் படமிது

ஸ்ரீதேவி இருக்கும் போது அவருக்கு அளித்த வாக்கின்படி போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடித்துக்கொடுத்திருக்கும் இப்படத்தை சென்ற தலைமுறையை சேர்ந்தவர்களும் இத்தலைமுறையினரும் இணைந்து பார்க்கலாம்

ஜப்பான் ஒரு கீற்றோவியம்- ஜெ

ஜெ வின் ஜப்பான் பயண அனுபவங்களை சற்றே தாமதமாக வாசிக்கிறேன். ஜப்பானைக்குறித்த அனைத்தையும் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.   செர்ரி மலர்களுக்கான ஹனமி கொண்டாட்டத்தையும்  ,  ஹிரோஷிமாவின் குண்டுவீச்சில் அழிந்து பின்னர் மீண்டும் துளிர்த்து இன்று வரை இருப்பதாக  சொல்லப்படும் ஜிங்கோ மரத்தையும், Giant timber bamboo  எனப்படும்  மோஸோ மூங்கில்களையும் குறித்து அவர் எழுதப்போவதை வாசிக்க ஆவலாக இருந்தேன்

ஜெ அங்கே போகையில் மிகச்சரியாக செர்ரிமரஙகள் பூத்து முடிந்ததால் அவற்றை பார்க்க இயலவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஜிங்கோ மரம் குண்டுவீச்சின் பிறகும் துளிர்ந்து வளர்ந்ததால் நகரை புனரமைக்கையிலேயே சுமார்  16000 ஜிங்கோ மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு இன்று ஜப்பான் பூங்காக்களிலும் நெடுஞ்சாலைகளிலும்  அவற்றின் விதைகளினின்றும் வளர்ந்த ஜிங்கோக்கள் செறிந்து நிற்கின்றன. அழகிய சிறு கைவிசிறி போன்ற அதன்  இலைகள் பொன்மஞ்சளும் ஆரஞ்சுமாக பழுத்து உதிர்கையில் கொள்ளை அழகாக இருக்கும். டோக்கியோவில் நவம்பர் –டிசமப்ரில் ஜிங்கோதிருவிழா நடக்கும். ஜிங்கோ மரங்கள் எங்கேனும்  பிண்ணனியில் இருக்கின்றதா என்று  அவர் தளத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பெரிது பண்ணிப் பண்ணிப்பார்த்தேன். எதிலும் இல்லை

மோஸோ .மூங்கில் காடுகளின் புகைப்படங்கள் நிறைய இருந்தது பதிவில். மகிழ்ச்சியாக இருந்தது. இவை Phyllostachys edulis,  என்னும்  தாவர அறிவியல் பெயர் கொண்டவை. Timber bamboo என்றும்  அழைக்கப்படும் மோஸோ மூங்கிலும் ஜிங்கோவும் ஜப்பானை பிறப்பிடமாக் கொண்டவை அல்ல சீனாவை சேர்ந்தவை

இம்மூங்கில் குருத்துக்கள் மண்ணிலிருந்து வெளிவருகையில் , பிரவுன் நிற சாக்ஸ் போலான உறையினால் மூடப்பட்டிருக்கும்,  வெளியிட்டிருந்த புகைப்படங்களிலும் இவை இருக்கின்றது. ’மண்ணிலிருந்து வெளிவரும் யானைத்தந்தங்களைப்போல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த இக்குருத்துக்களை ஜப்பானியர்கள் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். இதன் அறிவியல் பெயரின் பின் பகுதியில் இருக்கும் edulils என்பது ’உண்ணப்படுவது’ என்னும் பொருளில் வந்தது.

மஞ்சளும் பச்சையுமாக நிறைய மோஸோ மூங்கில்களின்பின்ணனியில் ஜெ மற்றும் அருணாவின் புகைப்படங்கள் மிக்க மகிழ்வளித்தன.

எப்போதும் போல பல சொற்றொடர்கள்  அத்தனை அழகு.பழைய புதிய ஜப்பான்களை பற்றிச்சொல்கையில் // அது நன்றாகப் பேணப்பட்டுவரும் ஒர் இறந்தகாலம். ஒரு வெறும் கனவு. //

நாய்களுக்கான சிலைகளை பற்றிய குறிப்பில் // நாம் நம் தேவைக்காக அவற்றை கொன்றோம் என்பதை நமக்கே சொல்லிக்கொள்வதற்காகவாவது இவை இருக்கட்டும்.// இதை வாசிக்கையில் மனம் கனத்தது

//சாகசங்களற்ற, கனவுகளற்ற நுகர்வின் இன்பம் மட்டுமே எஞ்சியிருக்கும் உலகே நமக்கு எஞ்சியிருக்கிறது//. என்னும் வரிகள் பெரும் சோர்வையும் துயரையும் அளித்தது

அதைப்போலவே ஸ்வெட்டரும் ஸ்கார்ஃபும் அணிவிக்கபப்ட்டிருந்த ஜிஸோ சிலைகள் மனதைபிசைந்தது. மறக்கவே முடியாத புகைப்படங்களில் இதுவும் ஒன்று

பச்சைத்தேநீர் குடித்தலில்  ஜெ அருந்தியது thick tea.  Thin tea யும் உண்டு ஜப்பானியர்களின் தேயிலை வளர்ப்பும், இந்த  uji matcha  எனப்படும் பச்சைதேநீரின் பொருட்டு பிரத்யேகமாக தேயிலைச்செடிகள்  நிழலில் குறிப்பிட்ட காலம் வரை வளர்க்கப்படுவதும், அவை மிக தனித்துவமான வகையில் பின்னர் தயாரிக்கப்படுவதும், தேநீர் அருந்தும் சடங்குகளும் அதிலும் வெண்முரசில் வருவது போன்ற ஒடுக்கு நெறிகளும் செலுத்து நெறிகளும் உள்ளதுமாய் வெகு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.. மாணவர்களுக்கு தேயிலைச்செடியைக்குறித்து நடத்துகையில்  ஆர்வமூட்டும் பொருட்டு இவற்றைக்குறித்தும் சொல்லுவேன் பிறிதொரு முறை விரிவாக  இதைக்குறித்து எழுதுகிறேன்

.அரண்மனை என்றாலே ஆடம்பரம் விஸ்தீரணம் என்னும் உளசித்திரமே  இருந்தது சிறு பசுங்குன்றின் மீது அமந்திருக்கும்   சிறிய கச்சிதமான  ஜப்பானிய அரண்மனைகள் அழகு.

அபுதாபியில் இருக்கையில்  அப்போதைய  மன்னர்  எகிப்திலிருந்து புதிதாக மணம் செய்துகொண்டு வந்த 16 வயதேயான  இளம் ஷேக்கியாவின் அரண்மனை  அபுதாபி துபாய் நெடுஞ்சாலையில் ஈச்ச மரஙகள் சூழ நான்கு புறமும் பல கிலோமீட்டர்கள் அளவிலான மதில்சுவற்றுடன் பிரம்மாண்டமாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.

பல அளவுகளிலான  புத்தர் சிலைகளையும் இலங்கையில் இருக்கையில் பார்த்தற்கு பிறகு உங்களின் பதிவில்தான் பார்க்கிறேன். அதுவும் முழங்கையை முட்டுக்கொடுத்து ஒற்றைக்காலை மடித்து கன்னத்தில் கையைத்தாங்கி இருக்கும் குட்டி புத்தரை மடியில் எடுத்து வைத்துக்கொள்ளலாம் போலிருந்தது.

சுமி மூங்கில் கீற்றோவியங்களும் அதனுள்ளேயே பொறிக்கபட்டிருக்கும் கவிதையும் அற்புதமாக இருந்தது. உலக வரைபடத்தில் ஜப்பானே தூரிகையில் வரைந்த சிறு தீற்றல் போலத்தானே இருக்கும்

பழமையும் மரபும் கலந்த ஜப்பானிய தோட்டங்களை பற்றிய பதிவு மற்ற எல்லாவற்றையும்விட பிடித்திருந்தது. சில தோட்டங்களில் ஓடையில் நீருக்கு பதில் வெண்ணிற மென் மணலை பயன்படுத்தியிருப்பார்கள் என்றும் வாசித்திருக்கிறேன்

களைகளும் கூட பேணப்படுகின்றன என்று சொல்லியிருந்தீர்கள் அமெரிக்காவிலும் officcal weeds என்றே சிலவற்றை அறிவித்திருப்பார்கள். களைச்செடி என்பதும் ’ a right plant in a wrong place தான். பெரும்பாலான அல்லது அனைத்து களைச்செடிகளுமே மருத்துவப்பயன்பாடுகள் உள்ளவைதான் இந்தியாவில் அப்படியான காப்புக்கள் இவற்றிற்கு ஏதும் இல்லை. தாவரங்களைப்பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் ஏரளமான களைசெடிகள் அழிந்தே போய்விட்டன.

நான் மாணவியாக இருந்தபோது பார்த்த, குறிப்பெடுத்துக்கொண்ட களைச்செடிகளில் பாதிக்கு மேல் இப்போது அந்த இடங்களில் இல்லவே இல்லை. நாம் இழந்துகொண்டிருக்கும் பல வளங்களில்  களைச்செடிகளும்  இருக்கிறது.

ஜப்பானிய இல்லங்களின் முற்றத்தோட்டங்களைக்குறித்தும் நிறைய வாசித்திருக்கிறேன்.//தோட்டத்தை பேணுபவர் தோட்டத்தில் நிகழ்த்துவது தன் அகத்தை. அகம் பூக்கிறது, தளிர்விடுகிறது, ஒளிகொள்கிறது.//

இதுவே ஒரு அழகிய ஜப்பானிய கவிதை போலிருந்தது

நான் புத்தகங்களிலும் இணைய வழியிலும் மகன்களின் cross country cultures  பாடங்களின் வாயிலாகவும் மட்டுமே கண்டிருந்த ஜப்பானை இன்னும் நெருக்கமாக பார்த்தேன்  ஜெவின் பயண அனுபவக்கட்டுரை வாசிப்பில்.

. இருபுறங்களிலும் பைன்மரங்கள் நின்றிருக்கும் மிகச்சுத்தமான  தெரு,.  குழந்தையின்  உள்ளங்கைகளைப்போல சிவப்பும் பச்சையுமான  வசீகர இலைகளுடன் மேப்பிள் மரங்கள்  சாய்ந்திருக்கும் வழிபாட்டுத்தலங்களின் மதிற்சுவர்கள், வளைந்த மிகப்பழைய பைன்  சாய்ந்திருக்கும் நுழைவு வாயில், மாபெரும் புத்தர் சிலைகள் கணினித்திரையிலிருந்தே எடுத்து சாப்பிடுவிடலாம்போல உந்துதல் அளிக்கும் ஜப்பானிய உணவுகள் பச்சைப்பசேல் டோபியரி குன்றுகள் என பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் இன்னும் அணுக்கமாக ஜப்பானை பார்க்கமுடிந்தது

காகித அன்னங்களோ , கன்னத்தில் கையை ஊன்றிய புத்தரோ,   அன்பு மிளிரும் கண்களால் என்னை பார்த்தபடியிருக்கும் ஒரு நாயோ இன்றிரவு  என் கனவில் வருமாயிருக்கும்

 

சென்னைப்பெருநகர்-வாழ்தலும் பிழைத்தலும்!

ஒரு உடல் நலக்குறைவின் பொருட்டு, மூளையை முற்றிலும் மழுங்கடிக்கும் வீரியமுள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வதால், வகுப்புக்களுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்று, ஒரு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்னை, செம்பரம்பாக்கம் சென்றேன். சரண்அப்பா துவங்கவிருக்கும் புதிய கிளையின் கட்டுமானப்பணிகள் அங்கு நடப்பதால்  அவரிருக்கும் ஒரு அடுக்ககத்தில் தங்கி இருந்தேன்.

 இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை. (கடைசியும் கூட!) திருமணமாகி. அபுதாபியில் பல வருடங்கள் இருந்தபோதும் அது அத்தனை உவப்பான வாழ்விடமாக எனக்கு தெரியவில்லைதான் எனினும் அன்னைமையிலும் மகன்களை வளர்த்துவதிலும் எப்படியோ அவ்வருடங்களை நான் கடந்துவிட்டிருந்தேன்.

ஆனால் இப்போது தனியே மகன்களின்றி, இங்கு இத்தனை நாள் இருந்தது பெரிய திகில் அனுபவமாகி விட்டது. புதிதாக கட்டப்பட்டிருக்கும்  20 தளங்களுடனான அடுக்ககம். பச்சையே எங்கும் இல்லை.  மரக்கன்றுகளை கொண்டு வந்து  இப்போதுதான் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்

இவரை அனுப்பி காலை 8 மணிக்கு கதவைச் சாத்தினால் இரவு 8 மணி வரை கொடுந்தனிமை. காலி பங்களாவில் பேய் நடமாடுவதைப்போல அறையறையாக நடந்துகொண்டிருந்தேன். இரண்டுமூன்று நாட்கள் கழித்துத்தான், நானே  என்னுடன்  பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை கண்டுபிடித்தேன்.

புறப்படுகையில் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் சில, பால்கனி இருக்கும், எட்டாவது மாடியிலிருந்து வாசிக்க உகந்தவையல்ல என்று சில பக்கங்களிலேயே தெரிந்தது. சுகந்தி சுப்ரமணியனின் பதிவுகளை  வாசித்தேன் அவரின்  எளிய கவிதைகளையும், நாட்குறிப்புக்களையும் சுகந்தி யாரென்று அறியாமல் வாசிப்பவர்களுக்கு பொருளற்றவையாக கூட தோன்றியிருக்கும்,  ஆனால் உங்கள் தளத்தின் வாயிலாக நான் சுகந்தியை அறிந்துகொண்டவளென்பதால் அவரது பதிவுகள்  என்னை பெரிதும் தொந்தரவு செய்தன

 வாசல் தெளிக்க கோலம்போட என்று எந்த வேலையும் இல்லை பெரிதாக. புறநகர் குடியிருப்பென்பதால் சென்னையின் விரைவும் பரபரப்பும் கூட இங்கில்லை.

எல்லாவற்றையும் விட அங்கு மனிதர்களை அதிகம் பார்க்கவோ பேசவோ முடியவில்லை கதவை திறந்தால்  இன்னும் இரண்டு வீடுகளின் கதவுகள், எப்போதாவது கீழே போனாலும், மின்தூக்கியில்  துக்கவீட்டைபோல இறுகின முகத்துடன் இருக்கும் யாரும் யாரையும் பார்த்து பேசுவதோ, புன்னைகைப்பதோ கூட இல்லை

chennai.jpg

 அங்கேயே இருக்கும் சிறிய  பூங்காவில், சைக்கிள் ஓட்டிக்கொண்டு துரத்தி ஓடி  விளையாடும் குழந்தைகள். (கூண்டுப்பறவைகளின் காதலில் பிறந்த  குஞ்சுப்பறவைகளுக்கு எப்படி, எதற்கு,  சிறகுன்னு வண்ணதாசன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார். அதை நினச்சுக்கிட்டேன்) ஒரு  குட்டி  விநாயகர் கோவில், உள்ளேயே வந்து குழந்தைகளை ஏற்றி இறக்கும் பள்ளி வாகனங்கள், செல்போனில் மூழ்கி இருக்கும்  இளைஞர்கள். இங்கிருப்பவர்களுக்கு வெளி உலகமென்பது ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லும் மால்களும் சினிமாவும் உணவகங்களும் மட்டும்தான் போல. பகலிலும் இரவிலுமாய் நாற்பது காவலாட்கள் உள்ளிருக்கும் எதையோ தீவிரமாக  காவற்காக்கின்றனர். பெரிய நூலகம், ஏராளமாய் ஆங்கிலப்புத்தகங்களும், தமிழில் ஒரே ஒரு வைரமுத்துவின் புத்தகமும்.

வாரமொருமுறை கறிகாய்கள் விற்கும் ஒரு அம்மாவுக்காக. பெண்கள்  கூட்டமாக காத்திருக்கிறார்கள் நான்கு முழம் மல்லிகைச்சரத்தை கொண்டு வந்து நறுக்கி, ஒரு இணுக்கு 20 ரூபாய் என்று அந்தம்மா விற்கிறார். வாங்கி அங்கேயே தலையில் வைத்துக்கொள்கிறார்கள். ”போன வாரமே  மாங்காய் கொண்டு வரேன்னு சொன்னீங்களே என்னாச்சு” என்று வயிறு மேடிட்டிருந்த இளம் பெண்ணொருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள்

சென்னையில் இருக்கும் உறவினர்களுடன் ஒரு சினிமா போனோம். 6 பேர் இருக்கும் ஒரு குடும்பம் சென்னையில் சினிமா  பார்க்க    ஆகும் செலவில் இங்கு ஒரு குடும்பம் தாராளமாக  ஒரு மாதத்தை மகிழ்ச்சியாக கழித்துவிடலாம் அத்தனை செலவுள்ள விஷயம் அது.

அதுவும் இடைவேளையில் விற்கும் சோளப்பொறியின் விலையை கேட்டு கிராமத்து மனுஷியான எனக்கு  கண்ணைக்கட்டியது.  முன்னைப்போல முகமூடியுடனோ, ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் எண்ணையும் கரியுமாக பூசி, இருட்டில் பயந்தும் ஒளிந்துமோ கொள்ளையடிக்க வேண்டியதில்லை, உன்னத சீருடையணிந்து, குளிரூட்டப்பட்ட சென்னை மால்களில்  சோளப்பொறி விற்றால் போதும் போலிருக்கிறது

ஆட்டோவிலும் இருசக்கரவாகனத்திலும் குடங்களுடன் சனம் அலைகின்றது தண்ணீருக்காக.  வயதுக்கு மீறி கொழுந்த குழந்தைகள், எங்கெங்கும் துரித உணவுகள், ஒரு மழைக்கே நாறிப்போகும் தெருக்கள் என்று சென்னைப்பெருநகரின் முகத்தைப்பார்த்து மிரண்டு போனேன்.

உடல் ஓய்வெடுத்தாலும் உள்ளம் இது எனக்கான இடமல்ல என்று அலறிக்கொண்டெ இருந்தது. என்னால் அமைதியாக  ஒரு மணி நேரம் கூட அங்கே இருக்கமுடியவில்லை.  பால்கனியை திறந்தால் பரந்து விரிந்து, முற்றிலும் வறண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் மனச்சோர்வையளித்தது..

தீயின் எடையும் தாங்க முடியவில்லை. குருதிபெருக்கெடுத்து ஓடியது குருஷேத்திரக்களத்தில், துரியோதனனின் பாவை தன்னந்தனியெ களத்தில் நின்றிருந்த அன்றும், பீமனை குரங்குகள் புறக்கணித்தபோதும் கடுமையான உளச்சோர்வுக்கு உள்ளானேன்.  பாதிஇரவுகளில் அலறிக்கொண்டு விழித்தெழத்துவங்கினேன் ஒரே வாரத்தில்

நல்லவேளையாக சென்னை  நண்பர் ஒருவர் பரிசளித்த புத்தகங்களை வாசித்தபின்னரே என்னுடன் தமிழ்நதியும் ,யூமா வாசுகியும், கசீ சிவகுமாரும் சில நாட்கள் உடனிருந்தனர்

 நரம்புக்கோளாறு, இன்னும் இங்கிருந்தால் மூளைக்கோளாறாக மாறிவிடும் சாத்தியங்கள் தென்பட்டதால், விடுப்பு முடியும் முன்னரே ரயிலைப்பிடித்து, ஊர் வந்து சேர்ந்தேன். வெளிக்கதவை திறந்ததும் திடுக்கிட்டு தென்னையில் தாவி ஏறிய அணிற்பிள்ளைகளையும், புன்னம்பூக்களும் பவளமல்லியுமாய் நிறைந்துகிடந்த ஈர வாசலையும் குலைதள்ளி இருந்த வாழைகளையும் பார்த்தபின்பே பழைய மனுஷியானேன

இந்த இரண்டு வாரத்தங்கலில் எதையாவது மீள நினைத்துக்கொள்வேன் என்றால் அங்கிருந்த துல்லிய நீலவானை பிரதிபலித்துக்கொண்டு, ஒளியலைகளுடனிருந்த மாபெரும் நீச்சல்குளத்தையும், மெட்ரோவில் பயணிக்கையில் என்னை நோக்கி சிரித்தபடி கையை நீட்டிய ஒரு குழந்தையையும் தான்.

பிழைப்புக்காக சென்னை போவது, என்பதை நெடுங்காலம் முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சரிதான், சென்னையில் வாழ்தலே இல்லை வெறும் பிழைத்தல் தான்.

வெள்ளி நிலம்- ஜெ

கோவை புத்தகத்திருவிழாவில் வெள்ளிநிலம் வாங்கியிருந்தேன். இது தொடராக வந்தபோது ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசித்திருந்தேன் எனினும் அந்த பிட்சுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட துவக்கம் மனதில் அப்படியே பசுமையாக இருந்தது. புத்தகமாக வாசிக்க காத்திருந்து வாசித்தேன் இப்பொழுது.

பனிமனிதனும் இதுவுமே ஜெ சிறார்களுக்காக எழுதியவை. பனிமனிதனைக்காட்டிலும் வெள்ளிநிலம் சாகசங்களும் மர்மங்களும் பயணங்களும் ஆபத்துக்களுமாக  நிறைந்திருந்தது. முழுக்கதையுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் முக்கியமாக இரண்டு விஷயங்கள் மிகவும் வசீகரித்தது; சிறுவன் நோர்போவுடன் பேசிக்கொண்டிருப்பதால் வாசிப்பவர்களுடனும் பேசிக்கொண்டிருக்கும்  நாக்போ நாய்,  ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கதையோட்டத்துடன் தொடர்புள்ள மிக முக்கியமான பெட்டிச்செய்திகள்.

 சிறார்களுக்கானதுதான் என்று சொல்லிவிடவே முடியாதபடிக்கு அத்தனை அடர்த்தியான சம்பவங்கள் நிறைந்திருக்கும் கதை. பெரியவர்களுக்கானது  என்றும் சொல்ல முடியாதபடிக்கு  குறும்பு நாயும், அது பேசுவதும் அந்த அதிபுத்திசாலி  சிறுவனும், பார்த்தோ கேட்டோ இராத புதிய இடங்களின் விவரணைகளுமாக  கதை பொதுவில் அனைவருக்கும் ஏற்றதாக இருந்தது

 நேற்று ஓணம் விடுமுறை என்பதால் துவங்கி இன்று  புத்தகத்தை கீழேயே வைக்க முடியாததால் கல்லூரியில் வகுப்புக்களின் இடைவெளிகளில்  வாசித்து முடித்தேன்

 இணையமும் அலைபேசியும் இத்தனை வேக தொலைத்தொடர்பும் இல்லாத காலத்தில் உலகை கவனிக்கத் துவங்கிய 5 அல்லது 6 வயதில் அனைவருக்குள்ளும் இருந்த சாகசத்திற்கான் ஏக்கத்தை, இப்படியான சிறார் கதைகளே தீர்த்து வைத்துக்கொண்டிருந்தன. சிறுவர்களும் சிறுமிகளும் செல்லவே முடியாத ஆனால் அவர்களின் கற்பனைகளில் எப்போதும் அவர்கள் சென்று கொண்டே இருக்கக்கூடிய நிலப்பரப்புக்களுக்கு இக்கதைகளே வழிகாட்டின, அவர்களால் நிச்சயம் செய்ய முடியுமென்று அவர்கள் நம்பும் சாகசங்களை அவர்களே செய்தது போல் உணரவும், இதுபோன்ற கதைகளே அன்று இருந்தன. மாயாவிகளையும், தேவதைகளையும், பேசும் விலங்குகளையும் இளவரசன் இளவரசிகளையும் குதிரைகளையும் கொண்ட சாகச சிறார் கதைகளின் உலகிற்குள்ளேயே பலவருடங்கள் வாழ்ந்தவர்களே  இன்றைய பெரியவர்கள்.

நானும் அப்படியே.  5’ல் படிக்கையில்  வீட்டருகில் இருக்கும் இன்னும் சில சிறுவர்களுடன் சேர்ந்து ஒரு வருடம்   காமிக்ஸ்  புத்த்கம் போல  காட்சிகளை கைகளால் அடுத்தடுத்து (மகா கேவலமாக)  கைகளால் வரைந்து அதை வீடு வீடாக கொடுத்தனுப்பி அதற்கு காசு வசூல் பண்ணிகொண்டு இருந்த நாட்களை வெள்ளி நிலம் வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்

அதில் ஒரு பிரதி தன்னிடம் இருப்பதாகவும் ஒருநாள் என் மகன்களிடம்  அதைக்காட்டப் போவதாகவும் என் அக்கா பல வருடங்களாக என்னை பிளேக் மெயில் செய்துகொண்டே இருக்கிறாள்

 கதைகளில் ஜப்பானிய வில்லன்கள் அப்போது அடிக்கடி வருவார்கள்.  ஒரு ஜப்பானிய கெட்டவன் ’’எங்கே என் மகன் மாருமோச்சி’’ என்று கேட்கும் ஒரு கேள்வியை பலவருடங்கள் சொல்லிக்கொண்டு திரிந்திருக்கிறோம் இரும்புக்கை மாயாவியும், அவர் மனைவி டயானாவும் அவரின் டெவில் நாயும் இன்னுமே மனதில் அப்படியே இருக்கிறார்கள்.   அதன்பிறகு நான் இப்போது வாசிக்கும் அப்படியான சாகசக்கதை வெள்ளி நிலம்

 தோண்டி எடுக்கப்படும்  500 வருடங்களுக்கு முந்தைய பிட்சுவின் உடலிலிருந்து துவங்கும்  வெள்ளி நிலத்தின் கதை,  எந்த சிக்கலும் இல்லாமல் பல அடுக்குகளாக உடலை திருட நடக்கும் முயற்சி, இந்திய மற்றும் சீன ராணுவம், மதங்கள் அவற்றின் பிரிவுகள், பழங்கால எழுத்துக்களில் ஒளிந்திருக்கும் புதிர்கள்  உளவாளிகள், ஒற்றன், பனிப்பொழிவில் மலைகளுக்கு மேலே ஹெலிகாப்டர் பயணம், விபத்து, ராணுவ அதிகாரிகளுக்கு இணையாக  பெற்றவர்களின் துணையின்றி  வரும் ஒரு சிறுவன், அவனுடன் பேசிக்கொண்டே இருக்கும்  திறமையான வாயாடி நாய், துப்பாக்கிச்சூடு, கொலை, கொள்ளை, மர்மம் என திருப்பங்களாலும் சுவரஸ்யங்களாலும் வேடிக்கைகளாலும் மெல்ல மெல்ல வேகம் பிடிக்கின்றது

பெட்டிச்செய்திகளில் மிக அரிய விஷயங்களை ஜெ  சொல்லியிருக்கிறார். அவையெல்லாம், பாராசூட், தந்தி முறை போன்ற கண்டுபிடிப்புக்களின் தகவல்களாக மட்டுமல்லாது கதைக்கு மிகத்தேவையானவைகளாக இருப்பதால் கூடுதல் சுவாரஸ்யமாகின்றது வாசிப்பு

சீன எழுத்துருக்கள், உலகின் உயரமான ஆபத்தான சாலை, இமையமலையின் சிக்கலான தட்பவெப்பம்,  மாமிசம் உண்ணும் புத்த பிட்சுக்கள் பசுவதையை இந்துமதமும் பன்றி இறைச்சியை இஸ்லாமியமும் ஏன் தடைசெய்கின்றன, சிலுவைப்போர்களில்  இறந்த கோடிக்கணக்கானவர்கள் என  எல்லாமே நான் இதுவரையிலும் அறிந்திராதவை. குறிப்பாக பட்டினிப்புத்தர் பற்றிய தகவல் வெகு ஆச்சர்யம்.

//பயத்தினால் மனிதன் தெய்வங்களை உருவாக்கவில்லை// என்பதற்கான விளக்கத்தை வெள்ளி நிலத்தில், வாசிக்கும்  சிறுவர்களுக்கு இதுபோன்ற அறிதல்கள் எத்தனை பெரியதிறப்பை  உருவாக்கும் என்று நினைத்துக்கொண்டேன்

வெறும் சாகசகக்தைமட்டும் அல்ல, கதையில் எந்த இடத்திலும் லாஜிக் இடிக்கவில்லை. குழந்தைகளுக்கு அத்தனை எளிதில் எதையும் போகிறபோக்கில் சொல்லிவிடமுடியாது . வெகு நுட்பமாக கவனித்து எதிர்பாரா கேள்விகள் கேட்பார்கள்.

அவசர வான்வழிபயணத்திலும் ஆங்காங்கெ இறங்கி கழிவறை செல்வதும் எரிபொருள் நிரப்பியபின்னர் பயணம் தொடர்வதும், பனிக்குகைக்குள்ளே தேநீர் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எப்படி கிடைக்குமென்பதும், பாராசூட் இல்லாமல் குதிக்க சரியான உயரமுமாக  ஏராளமாக நுணுக்கமான,  சரியான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள்.

நாக்போ மற்றும் நோர்போவை ஒரே மாதிரியான மூன்றெழுத்துப் பெயர்களாகையால் அவ்வப்போது யார் சிறுவன் யார் நாய் என குழப்பிக்கொண்டேன்.

 நாக்போ மிகப்பிடித்த ஒன்றாகிவிட்டது. விபத்துக்குள்ளாகும் ஹெலிகாப்டரிலும் அது உணவைப்பற்றியே யோசிப்பதும், பழமையான மனித எலும்புக்கூடுகளை தின்ன விரும்புவதும் மனிதர்களை தனக்கு  ஒருபடி கீழே இருப்பவர்களாக எடைபோடுவதும், அந்த ‘’கெட்ட’’ லசா நாயைக்கண்டு பயந்து சிறுநீர் கழித்துவிடுவதுமாய், நாக்போவை  கொண்டாடிக்கொண்டு வாசிப்பார்கள் சிறுவர்கள்.

பல இடங்களில் நானும் நாக்போவின் வாயாடித்தனத்தை புன்முறுவலுடனேதான் வாசித்தேன்.

பல புதிய உணவு வகைகளும் அவற்றின் பெயர்களும் ஆச்சர்யமூட்டின. பொடித்த உலர் இறச்சி, ஆட்டுரத்த கேக், வெண்ணைத்தேநீர்,கொழுப்பும் சீனியும் கலந்து உடலுக்கு உடனடி ஆற்றல் தரும்பொருட்டு தயாரிக்கபட்ட பிஸ்கட் என ஆச்சர்யங்களுக்கு மேல் ஆச்சர்யங்கள்

முகுளத்தில் அடிபட்டால் ஏன் உடல் சமனிலை இழக்கின்றது, கரியமில வாயு தரைப்பகுதியில் அதிகம் தங்கி இருப்பதால் நாய்க்கு வரும் ஆபத்து, குகைக்குள்ளிருக்கும் விஷ வாயுவை கண்டறியும் யுத்தி, ஸ்டால்கமைட்ஸ் எனும் பனிக்கூம்புகள் உருவாகும் விதம், இடுங்கிய கண்கள் எப்படி அந்த இடங்களுக்கேற்ற தகவமைப்பாகிறது,, என்பதுபோல பக்கத்துக்கு பக்கம் ஆச்சர்யமூட்டும் தகவல்கள் மிக சுவாரஸ்யமாக கதையுடன் இணைந்து வரும்படி சொல்லப்பட்டிடிருக்கின்றது. உதவ ராணுவ ஹெலிகாப்டர் வரும் பொருட்டு  பனிமலையில் கம்பி நட்டு ஏற்றப்படும் கொடியில்,ராடாரால் அடையாளம் காணப்படும் சாத்தியமுள்ள சிறு மின்னணுக்குறிப்பான் இணைக்கப்பட்டிருப்பதை வாசிக்கையில்  சிறுவர்கள் உள்ளம்  மிகப்புதிய அதிசயத்தகவலை கேட்கும்   கிளர்ச்யை நிச்சயம் அடையும்

கதைக்கு பெரும் பலமாக பிரேம் டாவின்ஸியின் சித்திரங்கள். அந்தசிறுவனை அத்தனை உயிர்ப்புடன் கொண்டுவந்திருகிறார். வெண்பனிச்சாலைகள், ஹெலிகாப்டரிலிருந்து தெரியும்  பாலை, குகைக்குள் டார்ச் வெளிச்சத்தில் தெரியும் தெய்வ உருவங்கள் என மறக்க முடியாதவை அனைத்து சித்திரங்க்ளும். இரட்டை கண்ணாடிக்கதவு வழியே நார்பா வெளியே பார்க்கும் காட்சியை மனதில் எப்படி கற்பனை செய்திருந்தேனோ, அப்படியே அடுத்த பக்கம் வரையபட்டிருந்த  சித்திரம் பெரும் மகிழ்வைக்கொடுத்தது

 வெள்ளி நிலம் எனக்கு திரும்பக்கிடைத்த பால்யம். இன்னும் பல வருடங்களுக்கு நான் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருக்கப் போகும் அருமையான இந்தக்கதைக்கான ஜெ விற்கு நன்றியும் அன்பும்

கும்பளாங்கி நைட்ஸ்

கும்பளங்கி நைட்ஸ், 2019 பெப்ரவரி 7ல் வெளியான         மலையாளத் திரைப்படம். மது சி. நாராயணன் இயக்கத்தில் சௌபின் ஷகீர், ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாஸி, பகத் பாசில் நடித்திருக்கின்றார்கள்

 திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன், பகத் பாசில், நஸ்ரியா நசீம் ஆகியோரின்  வர்க்கிங் க்ளாஸ் ஹீரோ என்னும் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஸுஷின் ஷாம் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன

திரைக்கதை கும்பளாங்கி என்னும் கொச்சியைஅடுத்துள்ள, தேவதை கதைகளில் வருவது போன்ற மிக அழகிய, ஒரு  கடற்காயல்(Back waters) கிராமத்தில் நடக்கிறது. அதிகம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருமிடமென்பதால் கதையிலும் சுற்றுலாப்பயணிகளும் அவர்களின் தங்குமிடங்களும் வருகின்றது

 முழுதாக கட்டி முடிக்காத, செங்கற்களாலான சுவர்களுடன் இருக்கும், எந்த ஒழுங்குமின்றி பல சாமான்கள் அடைந்த ஒரு வீட்டில் வசிக்கும் நான்கு சகோதரர்கள் அதில் ஒருவர் வாய் பேச இயலாதவர் இவர்களின் வாழ்வும் இடையே  எட்டிப்பார்க்கும் சில காதல்களுமே கதை. துவக்கத்தில் யார் யாருக்கு யார் யார் பெற்றோர் என்பதில் குழப்பமிருக்கிறது எனினும் பிற்பாடு மெல்ல மெல்ல ஒரு மலர் அவிழ்வது போல கதை அவிழ்கையில் நமக்கு ஒவ்வொன்றாக புரிகின்றது..

ஃபகத் ஃபாசில் எப்போதும் போல அசத்தியிருக்கிறார். முதல்காட்சியில் கண்ணை உருட்டி விழித்தபடிக்கு தன் அடர்ந்த மீசையை கண்ணாடியில் பார்த்து மீண்டும் மீண்டும் சரி செய்கையிலேயே என்னவோ ஒரு பிழையென்று நமக்கு சந்தேகம் வருகின்றது அப்பிழை என்னவென்று இறுதிக்காட்சியில்,  கயிறுகளால் கட்டி,கட்டிலுக்கடியில் தள்ளப்பட்டிருக்கும் ஃபகத்தின் மாமியார் வெளியே இழுக்கப்பட்டு வாயைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் கட்டுக்களை அவிழ்த்த உடனே சொல்கிறார்

மனைவியும்  கொழுந்தியும் அந்தரங்கமாக பேசிக்கொண்டிருக்கையில் கதவோரம் நின்று என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கேட்கையில் ஃபகத்தின் உடல்மொழி அசத்தல், கடைசியில் அந்த பைத்தியக்காரத்தனமான சண்டையிலும் அப்படியே. மனைவி கோபித்துக்கொள்ளும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மணிக்கணக்காக சுவர் மூலையில் திரும்பி நின்று கொள்வதுமாக ஃபகத் கலக்கியிருக்கிறார்.  உன்னத உடைகளுடன் மிடுக்காக அவர் பைக்கில் புறபட்டு போகும் அந்த அந்தஸ்தான வேலை என்னவென்று தெரியவருகையிலும் வியப்பும் சிரிப்பும்  வருகின்றது.

ஃபகத்தை விட அதிகம் ஸ்கோர் பண்னுவது என்றால்  அது ஸாஜியாக வரும்  செளபின் தான்.  மேல் சட்டையிறி மீன் சோறும் கள்குடியுமாக  கேரளக்காரருக்கே உரித்தான இயல்பான உடல்மொழி, மனநல மருத்துவரின் சட்டை நனையும் அளவிற்கு கட்டிபிடித்து கதறுவது  திடீரென ஏற்பட்ட உணர்வெழுச்சியில் தூக்கிட்டுக்கொள்வது, இறந்த நண்பனின் மனைவியிடம் பரிவாக இருப்பது என்று அவரின் நடிப்பு மிளிர்கிறது. கேரளத்தின் மற்றொரு இணையில்லா நடிகன் செளபின்.  இறந்த நண்பனின் மனைவியையும் அவருக்கு பிறந்த பச்சிளம் சிசுவையும் மருத்துவமனையில் பார்க்கும் செளபினின் முகத்திலும் கண்களிலும் ஓராயிரம் உணர்வுகளை படிக்கலாம். அற்புதக்கலைஞன் இவர். திலீஷ் போத்தனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்யாம் புஷ்கரன் கும்பளாங்கிக்கு சென்றிருக்கையில் அங்கு நடந்த சில நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு இக்கதையை எழுதியிருக்கிறார். பல இடங்களில் வசனங்களும் அழகு. ’’அவங்கல்லாம் கிருஸ்துவங்களாச்சே’’ எனும் அக்காவிடம் ’’ஜீசஸ் நமக்கு தெரியாதவரா என்ன’’ என்கிறாள் தங்கை

 ரிசார்ட்டில் பணிபுரியும் பெண்ணின் காதலும் அமெரிக்க அழகி நைலா- போனி காதலும் அருமை. எனினும் பேபி- பாபி காதலே படத்தின் மையப்புள்ளி. ஷைஜு காலித்தின் காமிராவுக்கு திருஷ்டி சுற்றி போடவேண்டும் என்ன அழகு எத்தனைஅழகு! சைஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பு படத்திற்கு ஒளிப்பதிவிற்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கிறது.

ஃபாசிலின் மனைவி சிம்மியாக வரும் கிரேஸும் அசத்துகிறார். பைக் ஹார்ன் திடீரென அடிக்கையில் திடுக்கிடுவது, பயந்துகொண்டே கணவனுடன் உள்ளறைக்கு போவது, தங்கையை கணவன் பேச்சில் இழிவு படுத்துகையில் மேசை மேலிருக்கும் கொசுஅடிக்கும் மட்டையை  ஒரே அடியில் அடித்து உடைத்தபடி கணவனை எச்சரிப்பது, திருமண விருந்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் தங்கையின் திருமண பேச்சுவார்த்தை  நடக்கையில் அசெளகரியமக அமர்ந்திருப்பது என்று பிரமாதப்படுத்துகிறார். கண்கள்   அதிகம் பேசுகிறது அவருக்கு.

பேபி,பள்ளிப்பருவத்திலிருந்தே தான் காதலிக்கும் பாபியிடம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மீன் பிடிக்க வலை வீசி காண்பிக்க சொல்கையில் பாபி வீசுகிறார் ஒரக்கண்ணால் பேபியை பார்த்தபடிக்கே காதலெனும் மாயவலையையும். அவ்வலையில்  மீட்சியின்றி அகப்பட்டுக்கொண்டவர்களின்  கதையைத்தான் சொல்கிறது கும்ப்ளாங்கி இரவுகள்.

நான்கு பாடல்களில் ’’எழுதாக்கதை போல் இது ஜீவிதம்’’  மிக அருமையான மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். அக்குரலும் இசையும் உள்ளத்தை உருக்குகிறது. எழுதாக்கதையை கேட்கையில் இசையமைத்து பாடிய ஸுஷின் ஷாமின் கரஙகளை இறுக பற்றிக்கொள்ள  வேண்டும் போலிருக்கிறது.

காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறது அல்லது கண்களை ஈரமாக்குகிறது. இறைப்பணியில் இணைந்து விட்ட தாயை கல்யாணத்தின் பொருட்டு கொஞ்ச நாள் வந்து உடன் இருக்கசொல்கையில், தாய் ஒரு மகனின் கைகளைப்பற்றியபடிக்கு வர இயலாதென்றும் அவர்களுக்காக பிரார்த்தித்து கொள்வதாகவும் சொல்கையில் கண்கள் ஈரமாவதை தவிர்க்கவே முடியாது. மலர்த்திய அகலக்கண்களுடன் பேபி மோளாக வரும் அன்னாவும் சுட்டிப்பெண்தான்.

இத்திரைப்படம் காட்டும் கும்ளாங்கியின்  சில இரவுகள் மறக்க இயலாதவை. சாஜி தற்கொலை செய்ய முயன்று, எதிர்பாராவிதமாக நண்பன் இறக்கும் இரவு, நிலவு பொழிகையில் கடலில் போனியும் நைலும் களித்திருக்கும் இன்னுமொரு இரவு, விருந்துக்கு  ஃபகத்தும் மனைவியும் சிற்றப்பன் வீட்டுக்கு செல்லும் இரவு, காயல் நீரில் படகு ஒழுகிச்செல்லும் இரவு,காதலின் பொருட்டு சண்டை நடக்கும் அந்த இறுதியிரவு,  இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம்

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரும் முன்னடி எடுத்து வைத்திருக்கும் இத்திரைப்படம் காதலென்னும் ஒரு  எளிய, இயல்பான, சின்னஞ்சிறு புள்ளியை தொட்டு தொட்டு கடற்காயல் அளவிற்கே விரித்து   அழகாக்கியிருக்கிறது

கும்பளாங்கி கிராமம் அழகோ அழகு. காயலும் அதன் கரையிலிருக்கும் வீடும், நடுவில் இருக்கும் பசுந்திட்டும் அங்கு காதலர்கள் ஒரு சிறு படகில் சென்று சந்திப்பதும் அத்தனை அழகு. ஒரு காட்சியில்  அங்கு  கொண்டு வந்த பிளாஸ்டிக் தண்ணீர்பாட்டிலை  திரும்ப எடுத்துக்கொண்டு வரசொல்கிறார் காதலி. சூழல்பாதுகாப்பில் கேரளம் காண்பிக்கும் கவனம் திரைப்படம் வரை நீண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

முதல் பாதியைக்காட்டிலும் இரண்டாம் பாதி

kumbalangi nightsகூடுதலாக ஈர்க்கின்றது. பாபியாக வரும் ஷேன் நிகாமின் கன்னக்குழிகளும் காது வரை நீளும்புன்னகையும் வெகு வசீகரம்.

எந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அதிகம், யார் கதநாயகன் என்னும் கேள்விகளெல்லாம் இன்றி கதையும் கதைக்களமும் கதாபாத்திரங்களின் உணர்வெழுச்சிகளுமே கதையை நகர்த்திக்கொண்டு போகின்றன. நடிகர்கள்  திரையில் தங்களை பெரிய நடிகர்களாக காட்டிக்கொள்ளாமல் கதாபாத்திரங்களாக மட்டுமே மிளிர்கிறார்கள். எந்த காட்சியும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படவில்லை. கதையினூடே அனைத்துக்காட்சிகளும் காயலில் படகு போல இயல்பாக  ஒழுகிச்செல்கின்றது

பலதரப்பட்ட உறவுகளை, அவற்றின் சிக்கலான பல அடுக்குகளை, இவற்றினிடையே முகிழ்க்கும் காதலை, உணர்வெழுச்சிகளை மனத்தடுமாற்றங்களை காயலின் பிண்ணனியில் குளிரக்குளிரச் சொல்லும், மிக அழகிய, உலகெங்கிலும் பல வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக்குவித்த இத்திரைப்படத்தை தவறாமல் பார்ப்பதோடு கும்பளாங்கிக்கும் ஒருமுறை போய் வரவேண்டும்

கேசரி

 

2019 ல் வெளி வந்த போர் குறித்தான திரைப்படம் கேசரி. தர்மா ப்ரொடக்‌ஷனில் கரன் ஜோஹரும் சேர்ந்து தயாரித்த படம் இது. அக்‌ஷய் குமார் நாயகனாகவும்  பரினிதி சோப்ரா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1897செப்டம்பர் 12 ஆம் தேதி  ஏறக்குறைய பத்தாயிரம் வரை இருந்த ஆஃப்கான் பழங்குடியினருக்கும் (அப்போதைய பிரிடிஷ் ராணுவத்திலிருந்த) 21 பேர் மட்டுமே கொண்ட சீக்கிய படையினருக்கும் நடந்த மிக உணர்ச்சிகரமான, வீரமான, நம்மில் பலர் அறிந்திருக்காத ஒரு போரைப்பற்றியது

80 கோடி தயாரிப்புச்செலவில் உலகம் முழுக்க ஹோலிப்பண்டிகை அன்று  ஜீ ஸ்டுடியோவால் திரையிடப்பட்டது. படம் வெளியான சில வாரங்களிலேயே அதிக வசூலான பாலிவுட் திரைப்பட வரிசையில் இணைந்தது

உண்மைக்கதையான இது எந்த மாற்றமும் இன்றி எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரிட்டிஷ் இந்தியாவில் ஆஃப்கான் எல்லையில் இருந்த சரகரி கோட்டையில் 20 சீக்கியர்கள் மட்டுமே கொண்ட ஒரு  படைப்பிரிவு அமைத்திருந்தது. ஹவல்தார் இஷார் சிங் என்னும் சீக்கியர் இந்திய ஆஃப்கான் எல்லையில் இருந்த  குலிஸ்தான் கோட்டையில் புகழ்பெற்ற படைவீரராக இருந்தவர். அவரது பிரபல்யத்தைக்கண்ட, இந்தியர்கள் கோழைகள் என்னும் தீர்மானமான முடிவில் இருந்த  அவரது பிரிட்டிஷ் உயரதிகாரி அவர் மீது பொறாமைகொண்டார். ஒரு நாள் அவரது கோட்டை அருகிலேயே முல்லா என்னும் ஒரு ஆஃப்கன் பழங்குடித்தலைவன், கட்டாயத்திருமணத்தில் விருப்பமில்லாமல் இனத்தை விட்டு தப்பியோடிய ஒரு பெண்ணை அவளது கணவனை விட்டே கொல்லச்சொல்கிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த இஷார் சிங் அவரது மேலதிகாரியின் கட்டளையையும் மீறி அந்த பெண்ணை அவளது கணவனைக்கொன்று காப்பாற்றுகிறார்.

இந்த ஒரு காரணத்தினாலேயே இஷார் சிங்கை மேலதிகாரியின் கட்டளையை மதிக்காத குற்றத்தின் பொருட்டு குலிஸ்தானுக்கும் லாக்கர்ட் கோட்டைக்குமிடையிலிருக்கும் சரகரி கோட்டைக்கு இடமாற்றம் செய்கிறார்.அங்கு 20 சிப்பாய்கள் மட்டுமே இருந்தாலும் ஒழுங்கின்மையே பிரதானமாக இருக்கிறது. அங்கு பொறுப்பேற்றுக்கொண்டு அனைவரின் அன்புக்கும் உரியவராகி ஒழுங்கான ஒரு படைப்பிரிவை தயார் செய்கிறார் இஷார் சிங்.

விரைவிலேயே இஷார் காப்பாற்றிய அதே பெண்னை சரகிரி கோட்டைக்கு முன்பாகவே வெட்டிக்கொன்று பத்தாயிரம் பழங்குடியினருடன் முல்லா போருக்கு வருகிறான். வரும் பொழுது பிறர் இவர்களின்  உதவிக்கு வரும்  எல்லா வழியையும் அடைத்தும் விடுகிறான்

அப்போது 21 பேர் மட்டுமே இருக்கும் அப்படைபிரிவில் தனது காவி நிற (kesari)  டர்பனை அணிந்துகொண்டு உணர்ச்சிகரமான உரையாற்றும் இஷார் 21 பேரிடத்திலும் சாகும் வரும் வரை போரிடும் உறுதியை உருவாக்குகிறார்.

மிககுறைந்த ஆட்களே அப்படைபிரிவில் இருப்பதால் படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே அனைவரும் நமக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள். குள்ளமான சமையல்காரர், எப்போதும் சிரிக்கவே சிரிக்காத ஒருவர், 6 வாரமே ஆன மகளின்  கைகளின் அச்சு பதிந்திருக்கும் அஞ்சல் அட்டையை எடுத்து எடுத்து பார்த்துக்கொள்ளும் ஒருவர், சகிக்க முடியாத இசையை அடிக்கடி வாசிக்கும் ஒருவர் என்று அனைவரும் நமக்கு விருப்பமானவர்களாகிவிடுகிறார்கள் இந்த போருக்கு முன்பே. செல்லுமிடங்களிலும் போர் நடைபெறும் போதும் கற்பனையில் தன் மனைவியுடன் அடிக்கடி இஷாரும் பேசிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கிறார்

21பேரும் பல ஆஃப்கனியர்களை கொன்று தாங்களும் உயிரைவிடுவதும் இறுதிக்காட்சியில் மானசீகமாக தன் மனைவியுடன் பேசியபின்னர் தீயில் பழுக்க காய்ச்சிய வாளுடன் பலரை கொன்றுவிட்டு தன் டர்பனை யாரும் தொடாமல் பார்த்துக்கொண்டு இஷாரும் உயிர்விடும் காட்சிகளில் நம் அனைவரும் கண் கலங்குவோம்.

இஷார் சிங்கிற்கு பிரிட்டிஷ் படைகளின் மிக உயரிய விருதான விக்டோரியா க்ராஸ் என்னும் விருது அளிக்கப்பட்டது. இறந்து போன 21 சிப்பாய்களுக்குமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் 2 நிமிட அமைதி காத்ததும் குறிப்பிடத்தக்கது. .ராணுவ வரலாற்றில் எவராலும் மறக்கமுடியாத நிகழ்வு சீக்கிய படையினரின் இந்த சரகிரி போர். இனிமையான பல பாடல்களும் இத்திரைப்படத்தில் இருக்கின்றது.

nationalism patriotism heroism  என எல்லாம் கலந்த பிரமாதமான் நடிப்பை தந்திருக்கிறார் அக்‌ஷய்குமார். படத்தொகுப்பு பிண்ணனி இசை ஒளிப்பதிவு உடையமைப்பு என எல்லாம் பிரமாதம் கேசரியில்

.சீக்கியர்கள் போற்றும் அவர்களது விழுமியங்களையும் வீரத்தினூடே சொல்லும் படமிது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் பரவலாக போற்றப்படும் போர் நினைவுப்படமான இதனை நம் இளைஞர்கள் அவசியம் காணவேண்டும்.

சுரேஷ் பிரதீப்பின் அபி

இன்று எதேச்சையாக சுரேஷின் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் பார்க்கையில் ‘அபி’ குறித்த லின்க் பார்த்தேன். வேறேதேனும் தலைப்பாக இருந்திருந்தால் பின்னர் கூட வாசித்திருப்பேன் ஆனால் இந்த அபி எனக்கு மிக விருப்பமான பெயர், சங்கமித்ரா,  கருவுற்றிருந்தபோது  இங்கு பொள்ளாச்சி வீட்டிலிருந்தாள் பிரசவம் வரைக்கும். அப்போது ஷாரூக்கான் முதன் முதலில் சின்னத்திரையில் நடித்த தொலைக்காட்சியில் பிரபலமான ஹிந்தி தொடர் ஒன்று ’சர்க்கஸ்’  அதில்  ஷாரூக்கின் பெயர் அபி, அது எனக்கு மிகப்பிடித்த தொடர். இரவு பல்கலையிலிருந்து வீடு வந்த உடன் நான் செய்யும் முதல்காரியம் இந்த தொடரை பார்ப்பதுதான்

மித்ராவிற்கு என்ன குழந்தை பிறந்தாலும் அபியென்று தான் அழைக்கப்போவதாக சொல்லிக்கொண்டே இருந்தேன். மகன் பிறந்து மகாபாரதத்தின் மீதிருந்த பெருவிருப்பின் காரணத்தால் ’’சந்தனுபரீக்‌ஷித்’’ என்று அவனுக்கு பெயரிட்டாலும் ,கல்லூரியில் மட்டுமே அவன் அப்பெயரால் அழைக்கப்படுகிறான் நாங்கள் அனைவருமே அபியென்றே அழைக்கிறோம் அவனை

எனவே, அபியென்னும் தலைப்பில்  கவரப்பட்டு இன்று பின் மதியம்  வாசிக்கத்துவங்கினேன். பலத்த மழைக்கான ஆயத்தங்களுடன் வானிலையும் நல்ல குளிரும் இருந்ததால் அதிகாலை மட்டுமே  ஒரு சிறிய  கப் காபி என்னும் வழக்கத்திற்கு விரோதமாக இன்னொரு காபியும் கலந்துகொண்டு என் பிரிய கல்மேசைக்கு எதிரில் அமர்ந்து  வாசித்தேன்.  ஒரு பகுதி வாசித்தபின்னரே இது Non linear   narrative முறையில் எழுதபட்டது என்று மனசிலானதால் மீண்டும் முதலிலிருந்து வாசித்தேன்.

அபி, அச்சு,ஸ்ரீ,சரண்  நான்கு பேரின்  கதை. அபிக்கும் அர்ச்சனாவிற்கும் இரண்டு வாய்ப்பு தந்திருந்த நீங்கள் ஏன் சரணுக்கு அளித்த  ஒரு வாய்ப்புக்கூட ஸ்ரீக்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை. ஸ்ரீயின் பார்வையிலும் ஒரு பகுதி இருந்திருக்கலாம். மனைவியின் அலைபேசியை சோதிக்காத கணவர்களே இல்லாத உலகம் போலும் இது, எனினும் ஸ்ரீ குறித்து offensive  ஆக ஏதும் இல்லை இந்தக்கதையில்.  பயிற்றுவிக்கப்பட்ட கண்ணியத்துடனான நல்ல கணவன்,  மனைவியின்  extra marital affair  குறித்து தெரிந்ததும் விலகிக்கொள்கிறான் அவ்வளவே இல்லையா?

ஆனால் ஒரு பெண்ணாக எனக்கு இதில் ஸ்ரீயின் கோணம் என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலிருந்தது. இதுபோன்ற தாம்பத்தியத்தை தாண்டின மீறின உறவுகள் மிக வெளிப்படையாக அதிகம் தெரியவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில்,  இதற்கு பெரும்பாலும் பெண்களின் அடங்காமை அல்லது அதீத பாலுறவு நாட்டமே காரணமாய் சித்தரிக்கப்படுகின்றது. நல்ல துணையொன்றிற்கான தேடல் பெண்களுக்கும் இருக்குமல்லவா? மேலும், பாலுறவைத்தாண்டிய சந்தோஷங்களை அறிந்துகொண்ட பெண்களும் இருக்கிறார்கள்

வேலிதாண்டுவதென்பது ஆண்களின் பிறப்புரிமை யாகவும் , நடத்தை கெட்ட பெண்களே எல்லைகளைத் தாண்டுவார்கள் என்பதுமே காலம் காலமாக நிலவிக்கொண்டிருக்கிறது இங்கு. நடத்தை, அதிலும் நல்ல நடத்தை என்பதற்கான  standardization   யார் நிறுவியது?

Arranged  திருமணங்கள்,  இனிமேல் அவனும் அவளும் ஒரே கூரையின் கீழ் ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ்வதற்கான ஒரு ஏற்பாடு , ஒரு ஒப்பந்தம் அவ்வளவே! பலருக்கு மணவாழ்வை பாதி முடித்தபின்னரே தனக்கு  எல்லாவிதத்திலும் இணையான, காதலும் சாத்தியமாகும் ஒருவரைச்சந்திக்கும் வாய்ப்பே வருகின்றது. முன்பைப்போலில்லாமல் இப்போது அப்படியான வாய்ப்புகளை பலரும் உபயோகப்படுத்தியும் கொள்கிறார்கள்.  காலம் மாறிக்கொண்டிருக்கையில் அதற்கேற்றபடி வாழ்வுமுறையும்  பெருமளவில் மாறிக்கொண்டிருக்கின்றது அப்படியான மாற்றமொன்றினை இலகுவாக ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் கதையே இது

ஜெ அவர்கள் இப்போது  ஊட்டி முகாமில் கூட சொல்லிக்கொண்டிருந்ததுபோல, ஒரு நல்ல கதை அல்லது நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் ஓகே   so what ?  என்று வாசகன் கேட்காதபடிக்கு இருக்கணும் அது. அபி ஸ்ரீயின் மனைவி அவளுக்கு சரணுடன் கூடுதல் நட்பு இதை தோழி அர்ச்சனாவும் அறிவாள் கணவனுக்கு தெரிந்து அவன் விலகிவிடுகிறான்,  so what?  என்று கேட்டிருக்கலாம் இதை linear  கதையாக எழுதி இருந்தீர்களென்றால்.

ஆனால் இக்கதையை இப்படி கதாபாத்திரங்களின் கோணங்களில்  மாற்றி மாற்றி வாசிக்கையில்,  அது ஏற்படுத்தும் பாதிப்பே இதன் வெற்றி

அதில் வரும் பல நிகழ்வுகளை  என் சொந்த வாழ்வுடன் தொடர்பு படுத்திக்கொண்டேன், கதை முடிந்தபின்னர் மழை துவங்கியதால் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த துணிகளை வாரிக்கொண்டுவருகையிலும்  தோழியை பேருந்தில் ஏற்றிவிட சென்ற சரணைக்காணோமென்று காத்திருக்கையிலும், கதையை உள்மனசு அசைபோட்டுக்கொண்டே இருந்தது

அர்ச்சனாவின் தோழமை அருமை கணவருடன் கொஞ்சிக்கொண்டிருந்துவிட்டு பிரிவுத்துயரில் கண்ணீர் விடும் அபிக்கும் ஆறுதல் அளிக்கிறாள், அலுவலகத்தில் புதிய நட்பை முன்பே யூகித்தும் தடையோ , பாக்கியராஜ் கதைகளில் வரும் பெரிய கண்ணாடி போட்டுக்கொண்டு வரும்  முதிர்கன்னியைப்போல புத்திமதியோ சொல்லாமல் அப்பொழுதும் உடனிருக்கிறாள்.  இந்த நேர்மறைத்தோழமை என்னவோ ஆறுதலாக இருந்தது ஏறக்குறைய அபியின் மனச்சாட்சியைபோல அச்சுவின் பாத்திரம் அர்ச்சனாவைப்போல இதை ஆரம்பத்திலிருந்து கவனித்தும், ஸ்ரீயுடனான உறவிலும் சரணுடனான உறவிலும் இரண்டுபேரும் இல்லாத பொழுதிலும் உடனிருக்கும் தோழமை நிஜத்தில் யாருக்கும் கிடைபதில்லை.

சரணின் முகம் இறுகியிருந்ததைத்தவிர வேறேதும் சொல்லாமலேயே அவன் என்ன சொல்லியிருப்பானென்று வாசகர்களை யூகிக்க வைத்ததும் அருமை

அபி இறுதியில்  ’இருக்கட்டும் ஒரு சேஃப்டிக்கு’ என்னுமிடத்தில் நானும் புன்னகைத்தேன்

சரண் வந்து எனக்கும் அவனுக்குமாக சிற்றுண்டி சமையலறையில் தயாரித்துக்கொண்டிருந்தான், இந்த கதையை கூடத்திலிருந்து  இன்னொரு முறை வாசித்து  HBO channel  ஐப்போல  suitably modified version  ஆக அவனுக்கும் சிலவற்றை மட்டும் கத்தரித்துவிட்டு சொல்லிக்கொண்டிருந்தேன். சரண் என்னும் பெயரைக்கேட்டதும் நான் வேண்டுமென்றே  அந்தப்பெயரைச்சொல்கிறேன்  என்றெண்ணிக்கொண்டான். வந்து வாசித்து ஊர்ஜிதம் பண்ணிவிட்டே மீண்டும் சமையலறைக்கு  போனான்

முழுக்க கேட்டு முடித்ததும்  எங்கள் வீட்டுக்குப்பின் வீட்டிலிருக்கும் கவிதாவின் இதுபோன்றதொரு சிறு மீறலுடனான வாழ்வொன்றினைக்குறித்து அவன் இக்கதையை  relate  பண்ணி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனின் இந்த மனமுதிர்ச்சியையையும் இக்கதை அவனைபோன்ற பதின்பருவத்திலிருக்கும் இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்குமென்பதையும்  நான் எதிர்பார்க்கவேயில்லை

இறுதியாக இன்னுமொன்று, சுரேஷ் எழுதுகிறான் என்று முகப்பில் வாசித்தாலும் கதையில் எங்கும் சுரேஷை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. இக்கதை சுரேஷின் முந்தைய எந்தக்கதையையும் நினைவூட்டவில்லை எந்த வரியிலும்  சுரேஷின் ஸ்டைல் என்று ஒன்றை அடையாளம் காணவும் முடியவில்லை முழுக்க வேறாகவே இருக்கின்றது இவரின் ஒவ்வொரு கதையும்

எப்போதுமே விரிவாகவே எழுதுபவள் நான் என்பதால் இக்கதையினைக்குறித்து மட்டும் எதிர்வினையாற்றாமல்  பலதையும் நினைவுக்கு கொண்டு வரும் கதையாகிவிட்டபடியால் இன்னுமே இதன் நீளம் அதிகமாகிவிட்டது

எப்போதும் நினைவிலிருக்கும் கதைகளில் ஒன்று அபி, நன்றி சுரேஷ்

ISKON

கோவை iskon கோவிலுக்கும் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆச்சர்யமாக கிருஷ்ணர் தங்கை சுபத்ரையுடனும் அண்ணா பலராமருடனும் அங்கிருந்தார். ஒரு பூரி அளவிற்கு உப்பி இருக்கும் கண்களும் மிக அகலமாக காது வரை விரிந்திருக்கும் புன்னகையுமாக பொம்மைகளைப்போல  கடவுளர்களை முதன்முறையாகப் பார்த்தென். அங்கிருக்கும் ஒரு சேவகி எனக்கு அதை விவரித்தார் மனைவியுடனும் காதலியுடனும் இருப்பதைக்காட்டிலும் உடன்பிறந்தவர்களுடன் இருக்கையிலேயே உளம்நிறைந்த மகிழ்ச்சியுடன் இருப்போமல்லவா அதனால் தான் கண்கள் உவகையிலித்தனை பெரிதாகவும் இதழ்கள் இத்தனை அகலமாக சிரிப்பில் விரிந்தும் இருக்கிறதென்றார்

loved that!

iskon

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑