ஒரு உடல் நலக்குறைவின் பொருட்டு, மூளையை முற்றிலும் மழுங்கடிக்கும் வீரியமுள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வதால், வகுப்புக்களுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்று, ஒரு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்னை, செம்பரம்பாக்கம் சென்றேன். சரண்அப்பா துவங்கவிருக்கும் புதிய கிளையின் கட்டுமானப்பணிகள் அங்கு நடப்பதால் அவரிருக்கும் ஒரு அடுக்ககத்தில் தங்கி இருந்தேன்.
இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை. (கடைசியும் கூட!) திருமணமாகி. அபுதாபியில் பல வருடங்கள் இருந்தபோதும் அது அத்தனை உவப்பான வாழ்விடமாக எனக்கு தெரியவில்லைதான் எனினும் அன்னைமையிலும் மகன்களை வளர்த்துவதிலும் எப்படியோ அவ்வருடங்களை நான் கடந்துவிட்டிருந்தேன்.
ஆனால் இப்போது தனியே மகன்களின்றி, இங்கு இத்தனை நாள் இருந்தது பெரிய திகில் அனுபவமாகி விட்டது. புதிதாக கட்டப்பட்டிருக்கும் 20 தளங்களுடனான அடுக்ககம். பச்சையே எங்கும் இல்லை. மரக்கன்றுகளை கொண்டு வந்து இப்போதுதான் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்
இவரை அனுப்பி காலை 8 மணிக்கு கதவைச் சாத்தினால் இரவு 8 மணி வரை கொடுந்தனிமை. காலி பங்களாவில் பேய் நடமாடுவதைப்போல அறையறையாக நடந்துகொண்டிருந்தேன். இரண்டுமூன்று நாட்கள் கழித்துத்தான், நானே என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை கண்டுபிடித்தேன்.
புறப்படுகையில் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் சில, பால்கனி இருக்கும், எட்டாவது மாடியிலிருந்து வாசிக்க உகந்தவையல்ல என்று சில பக்கங்களிலேயே தெரிந்தது. சுகந்தி சுப்ரமணியனின் பதிவுகளை வாசித்தேன் அவரின் எளிய கவிதைகளையும், நாட்குறிப்புக்களையும் சுகந்தி யாரென்று அறியாமல் வாசிப்பவர்களுக்கு பொருளற்றவையாக கூட தோன்றியிருக்கும், ஆனால் உங்கள் தளத்தின் வாயிலாக நான் சுகந்தியை அறிந்துகொண்டவளென்பதால் அவரது பதிவுகள் என்னை பெரிதும் தொந்தரவு செய்தன
வாசல் தெளிக்க கோலம்போட என்று எந்த வேலையும் இல்லை பெரிதாக. புறநகர் குடியிருப்பென்பதால் சென்னையின் விரைவும் பரபரப்பும் கூட இங்கில்லை.
எல்லாவற்றையும் விட அங்கு மனிதர்களை அதிகம் பார்க்கவோ பேசவோ முடியவில்லை கதவை திறந்தால் இன்னும் இரண்டு வீடுகளின் கதவுகள், எப்போதாவது கீழே போனாலும், மின்தூக்கியில் துக்கவீட்டைபோல இறுகின முகத்துடன் இருக்கும் யாரும் யாரையும் பார்த்து பேசுவதோ, புன்னைகைப்பதோ கூட இல்லை
அங்கேயே இருக்கும் சிறிய பூங்காவில், சைக்கிள் ஓட்டிக்கொண்டு துரத்தி ஓடி விளையாடும் குழந்தைகள். (கூண்டுப்பறவைகளின் காதலில் பிறந்த குஞ்சுப்பறவைகளுக்கு எப்படி, எதற்கு, சிறகுன்னு வண்ணதாசன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார். அதை நினச்சுக்கிட்டேன்) ஒரு குட்டி விநாயகர் கோவில், உள்ளேயே வந்து குழந்தைகளை ஏற்றி இறக்கும் பள்ளி வாகனங்கள், செல்போனில் மூழ்கி இருக்கும் இளைஞர்கள். இங்கிருப்பவர்களுக்கு வெளி உலகமென்பது ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லும் மால்களும் சினிமாவும் உணவகங்களும் மட்டும்தான் போல. பகலிலும் இரவிலுமாய் நாற்பது காவலாட்கள் உள்ளிருக்கும் எதையோ தீவிரமாக காவற்காக்கின்றனர். பெரிய நூலகம், ஏராளமாய் ஆங்கிலப்புத்தகங்களும், தமிழில் ஒரே ஒரு வைரமுத்துவின் புத்தகமும்.
வாரமொருமுறை கறிகாய்கள் விற்கும் ஒரு அம்மாவுக்காக. பெண்கள் கூட்டமாக காத்திருக்கிறார்கள் நான்கு முழம் மல்லிகைச்சரத்தை கொண்டு வந்து நறுக்கி, ஒரு இணுக்கு 20 ரூபாய் என்று அந்தம்மா விற்கிறார். வாங்கி அங்கேயே தலையில் வைத்துக்கொள்கிறார்கள். ”போன வாரமே மாங்காய் கொண்டு வரேன்னு சொன்னீங்களே என்னாச்சு” என்று வயிறு மேடிட்டிருந்த இளம் பெண்ணொருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள்
சென்னையில் இருக்கும் உறவினர்களுடன் ஒரு சினிமா போனோம். 6 பேர் இருக்கும் ஒரு குடும்பம் சென்னையில் சினிமா பார்க்க ஆகும் செலவில் இங்கு ஒரு குடும்பம் தாராளமாக ஒரு மாதத்தை மகிழ்ச்சியாக கழித்துவிடலாம் அத்தனை செலவுள்ள விஷயம் அது.
அதுவும் இடைவேளையில் விற்கும் சோளப்பொறியின் விலையை கேட்டு கிராமத்து மனுஷியான எனக்கு கண்ணைக்கட்டியது. முன்னைப்போல முகமூடியுடனோ, ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் எண்ணையும் கரியுமாக பூசி, இருட்டில் பயந்தும் ஒளிந்துமோ கொள்ளையடிக்க வேண்டியதில்லை, உன்னத சீருடையணிந்து, குளிரூட்டப்பட்ட சென்னை மால்களில் சோளப்பொறி விற்றால் போதும் போலிருக்கிறது
ஆட்டோவிலும் இருசக்கரவாகனத்திலும் குடங்களுடன் சனம் அலைகின்றது தண்ணீருக்காக. வயதுக்கு மீறி கொழுந்த குழந்தைகள், எங்கெங்கும் துரித உணவுகள், ஒரு மழைக்கே நாறிப்போகும் தெருக்கள் என்று சென்னைப்பெருநகரின் முகத்தைப்பார்த்து மிரண்டு போனேன்.
உடல் ஓய்வெடுத்தாலும் உள்ளம் இது எனக்கான இடமல்ல என்று அலறிக்கொண்டெ இருந்தது. என்னால் அமைதியாக ஒரு மணி நேரம் கூட அங்கே இருக்கமுடியவில்லை. பால்கனியை திறந்தால் பரந்து விரிந்து, முற்றிலும் வறண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் மனச்சோர்வையளித்தது..
தீயின் எடையும் தாங்க முடியவில்லை. குருதிபெருக்கெடுத்து ஓடியது குருஷேத்திரக்களத்தில், துரியோதனனின் பாவை தன்னந்தனியெ களத்தில் நின்றிருந்த அன்றும், பீமனை குரங்குகள் புறக்கணித்தபோதும் கடுமையான உளச்சோர்வுக்கு உள்ளானேன். பாதிஇரவுகளில் அலறிக்கொண்டு விழித்தெழத்துவங்கினேன் ஒரே வாரத்தில்
நல்லவேளையாக சென்னை நண்பர் ஒருவர் பரிசளித்த புத்தகங்களை வாசித்தபின்னரே என்னுடன் தமிழ்நதியும் ,யூமா வாசுகியும், கசீ சிவகுமாரும் சில நாட்கள் உடனிருந்தனர்
நரம்புக்கோளாறு, இன்னும் இங்கிருந்தால் மூளைக்கோளாறாக மாறிவிடும் சாத்தியங்கள் தென்பட்டதால், விடுப்பு முடியும் முன்னரே ரயிலைப்பிடித்து, ஊர் வந்து சேர்ந்தேன். வெளிக்கதவை திறந்ததும் திடுக்கிட்டு தென்னையில் தாவி ஏறிய அணிற்பிள்ளைகளையும், புன்னம்பூக்களும் பவளமல்லியுமாய் நிறைந்துகிடந்த ஈர வாசலையும் குலைதள்ளி இருந்த வாழைகளையும் பார்த்தபின்பே பழைய மனுஷியானேன
இந்த இரண்டு வாரத்தங்கலில் எதையாவது மீள நினைத்துக்கொள்வேன் என்றால் அங்கிருந்த துல்லிய நீலவானை பிரதிபலித்துக்கொண்டு, ஒளியலைகளுடனிருந்த மாபெரும் நீச்சல்குளத்தையும், மெட்ரோவில் பயணிக்கையில் என்னை நோக்கி சிரித்தபடி கையை நீட்டிய ஒரு குழந்தையையும் தான்.
பிழைப்புக்காக சென்னை போவது, என்பதை நெடுங்காலம் முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சரிதான், சென்னையில் வாழ்தலே இல்லை வெறும் பிழைத்தல் தான்.