கோவை புத்தகத்திருவிழாவில் வெள்ளிநிலம் வாங்கியிருந்தேன். இது தொடராக வந்தபோது ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசித்திருந்தேன் எனினும் அந்த பிட்சுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட துவக்கம் மனதில் அப்படியே பசுமையாக இருந்தது. புத்தகமாக வாசிக்க காத்திருந்து வாசித்தேன் இப்பொழுது.
பனிமனிதனும் இதுவுமே ஜெ சிறார்களுக்காக எழுதியவை. பனிமனிதனைக்காட்டிலும் வெள்ளிநிலம் சாகசங்களும் மர்மங்களும் பயணங்களும் ஆபத்துக்களுமாக நிறைந்திருந்தது. முழுக்கதையுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் முக்கியமாக இரண்டு விஷயங்கள் மிகவும் வசீகரித்தது; சிறுவன் நோர்போவுடன் பேசிக்கொண்டிருப்பதால் வாசிப்பவர்களுடனும் பேசிக்கொண்டிருக்கும் நாக்போ நாய், ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கதையோட்டத்துடன் தொடர்புள்ள மிக முக்கியமான பெட்டிச்செய்திகள்.
சிறார்களுக்கானதுதான் என்று சொல்லிவிடவே முடியாதபடிக்கு அத்தனை அடர்த்தியான சம்பவங்கள் நிறைந்திருக்கும் கதை. பெரியவர்களுக்கானது என்றும் சொல்ல முடியாதபடிக்கு குறும்பு நாயும், அது பேசுவதும் அந்த அதிபுத்திசாலி சிறுவனும், பார்த்தோ கேட்டோ இராத புதிய இடங்களின் விவரணைகளுமாக கதை பொதுவில் அனைவருக்கும் ஏற்றதாக இருந்தது
நேற்று ஓணம் விடுமுறை என்பதால் துவங்கி இன்று புத்தகத்தை கீழேயே வைக்க முடியாததால் கல்லூரியில் வகுப்புக்களின் இடைவெளிகளில் வாசித்து முடித்தேன்
இணையமும் அலைபேசியும் இத்தனை வேக தொலைத்தொடர்பும் இல்லாத காலத்தில் உலகை கவனிக்கத் துவங்கிய 5 அல்லது 6 வயதில் அனைவருக்குள்ளும் இருந்த சாகசத்திற்கான் ஏக்கத்தை, இப்படியான சிறார் கதைகளே தீர்த்து வைத்துக்கொண்டிருந்தன. சிறுவர்களும் சிறுமிகளும் செல்லவே முடியாத ஆனால் அவர்களின் கற்பனைகளில் எப்போதும் அவர்கள் சென்று கொண்டே இருக்கக்கூடிய நிலப்பரப்புக்களுக்கு இக்கதைகளே வழிகாட்டின, அவர்களால் நிச்சயம் செய்ய முடியுமென்று அவர்கள் நம்பும் சாகசங்களை அவர்களே செய்தது போல் உணரவும், இதுபோன்ற கதைகளே அன்று இருந்தன. மாயாவிகளையும், தேவதைகளையும், பேசும் விலங்குகளையும் இளவரசன் இளவரசிகளையும் குதிரைகளையும் கொண்ட சாகச சிறார் கதைகளின் உலகிற்குள்ளேயே பலவருடங்கள் வாழ்ந்தவர்களே இன்றைய பெரியவர்கள்.
நானும் அப்படியே. 5’ல் படிக்கையில் வீட்டருகில் இருக்கும் இன்னும் சில சிறுவர்களுடன் சேர்ந்து ஒரு வருடம் காமிக்ஸ் புத்த்கம் போல காட்சிகளை கைகளால் அடுத்தடுத்து (மகா கேவலமாக) கைகளால் வரைந்து அதை வீடு வீடாக கொடுத்தனுப்பி அதற்கு காசு வசூல் பண்ணிகொண்டு இருந்த நாட்களை வெள்ளி நிலம் வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்
அதில் ஒரு பிரதி தன்னிடம் இருப்பதாகவும் ஒருநாள் என் மகன்களிடம் அதைக்காட்டப் போவதாகவும் என் அக்கா பல வருடங்களாக என்னை பிளேக் மெயில் செய்துகொண்டே இருக்கிறாள்
கதைகளில் ஜப்பானிய வில்லன்கள் அப்போது அடிக்கடி வருவார்கள். ஒரு ஜப்பானிய கெட்டவன் ’’எங்கே என் மகன் மாருமோச்சி’’ என்று கேட்கும் ஒரு கேள்வியை பலவருடங்கள் சொல்லிக்கொண்டு திரிந்திருக்கிறோம் இரும்புக்கை மாயாவியும், அவர் மனைவி டயானாவும் அவரின் டெவில் நாயும் இன்னுமே மனதில் அப்படியே இருக்கிறார்கள். அதன்பிறகு நான் இப்போது வாசிக்கும் அப்படியான சாகசக்கதை வெள்ளி நிலம்
தோண்டி எடுக்கப்படும் 500 வருடங்களுக்கு முந்தைய பிட்சுவின் உடலிலிருந்து துவங்கும் வெள்ளி நிலத்தின் கதை, எந்த சிக்கலும் இல்லாமல் பல அடுக்குகளாக உடலை திருட நடக்கும் முயற்சி, இந்திய மற்றும் சீன ராணுவம், மதங்கள் அவற்றின் பிரிவுகள், பழங்கால எழுத்துக்களில் ஒளிந்திருக்கும் புதிர்கள் உளவாளிகள், ஒற்றன், பனிப்பொழிவில் மலைகளுக்கு மேலே ஹெலிகாப்டர் பயணம், விபத்து, ராணுவ அதிகாரிகளுக்கு இணையாக பெற்றவர்களின் துணையின்றி வரும் ஒரு சிறுவன், அவனுடன் பேசிக்கொண்டே இருக்கும் திறமையான வாயாடி நாய், துப்பாக்கிச்சூடு, கொலை, கொள்ளை, மர்மம் என திருப்பங்களாலும் சுவரஸ்யங்களாலும் வேடிக்கைகளாலும் மெல்ல மெல்ல வேகம் பிடிக்கின்றது
பெட்டிச்செய்திகளில் மிக அரிய விஷயங்களை ஜெ சொல்லியிருக்கிறார். அவையெல்லாம், பாராசூட், தந்தி முறை போன்ற கண்டுபிடிப்புக்களின் தகவல்களாக மட்டுமல்லாது கதைக்கு மிகத்தேவையானவைகளாக இருப்பதால் கூடுதல் சுவாரஸ்யமாகின்றது வாசிப்பு
சீன எழுத்துருக்கள், உலகின் உயரமான ஆபத்தான சாலை, இமையமலையின் சிக்கலான தட்பவெப்பம், மாமிசம் உண்ணும் புத்த பிட்சுக்கள் பசுவதையை இந்துமதமும் பன்றி இறைச்சியை இஸ்லாமியமும் ஏன் தடைசெய்கின்றன, சிலுவைப்போர்களில் இறந்த கோடிக்கணக்கானவர்கள் என எல்லாமே நான் இதுவரையிலும் அறிந்திராதவை. குறிப்பாக பட்டினிப்புத்தர் பற்றிய தகவல் வெகு ஆச்சர்யம்.
//பயத்தினால் மனிதன் தெய்வங்களை உருவாக்கவில்லை// என்பதற்கான விளக்கத்தை வெள்ளி நிலத்தில், வாசிக்கும் சிறுவர்களுக்கு இதுபோன்ற அறிதல்கள் எத்தனை பெரியதிறப்பை உருவாக்கும் என்று நினைத்துக்கொண்டேன்
வெறும் சாகசகக்தைமட்டும் அல்ல, கதையில் எந்த இடத்திலும் லாஜிக் இடிக்கவில்லை. குழந்தைகளுக்கு அத்தனை எளிதில் எதையும் போகிறபோக்கில் சொல்லிவிடமுடியாது . வெகு நுட்பமாக கவனித்து எதிர்பாரா கேள்விகள் கேட்பார்கள்.
அவசர வான்வழிபயணத்திலும் ஆங்காங்கெ இறங்கி கழிவறை செல்வதும் எரிபொருள் நிரப்பியபின்னர் பயணம் தொடர்வதும், பனிக்குகைக்குள்ளே தேநீர் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எப்படி கிடைக்குமென்பதும், பாராசூட் இல்லாமல் குதிக்க சரியான உயரமுமாக ஏராளமாக நுணுக்கமான, சரியான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள்.
நாக்போ மற்றும் நோர்போவை ஒரே மாதிரியான மூன்றெழுத்துப் பெயர்களாகையால் அவ்வப்போது யார் சிறுவன் யார் நாய் என குழப்பிக்கொண்டேன்.
நாக்போ மிகப்பிடித்த ஒன்றாகிவிட்டது. விபத்துக்குள்ளாகும் ஹெலிகாப்டரிலும் அது உணவைப்பற்றியே யோசிப்பதும், பழமையான மனித எலும்புக்கூடுகளை தின்ன விரும்புவதும் மனிதர்களை தனக்கு ஒருபடி கீழே இருப்பவர்களாக எடைபோடுவதும், அந்த ‘’கெட்ட’’ லசா நாயைக்கண்டு பயந்து சிறுநீர் கழித்துவிடுவதுமாய், நாக்போவை கொண்டாடிக்கொண்டு வாசிப்பார்கள் சிறுவர்கள்.
பல இடங்களில் நானும் நாக்போவின் வாயாடித்தனத்தை புன்முறுவலுடனேதான் வாசித்தேன்.
பல புதிய உணவு வகைகளும் அவற்றின் பெயர்களும் ஆச்சர்யமூட்டின. பொடித்த உலர் இறச்சி, ஆட்டுரத்த கேக், வெண்ணைத்தேநீர்,கொழுப்பும் சீனியும் கலந்து உடலுக்கு உடனடி ஆற்றல் தரும்பொருட்டு தயாரிக்கபட்ட பிஸ்கட் என ஆச்சர்யங்களுக்கு மேல் ஆச்சர்யங்கள்
முகுளத்தில் அடிபட்டால் ஏன் உடல் சமனிலை இழக்கின்றது, கரியமில வாயு தரைப்பகுதியில் அதிகம் தங்கி இருப்பதால் நாய்க்கு வரும் ஆபத்து, குகைக்குள்ளிருக்கும் விஷ வாயுவை கண்டறியும் யுத்தி, ஸ்டால்கமைட்ஸ் எனும் பனிக்கூம்புகள் உருவாகும் விதம், இடுங்கிய கண்கள் எப்படி அந்த இடங்களுக்கேற்ற தகவமைப்பாகிறது,, என்பதுபோல பக்கத்துக்கு பக்கம் ஆச்சர்யமூட்டும் தகவல்கள் மிக சுவாரஸ்யமாக கதையுடன் இணைந்து வரும்படி சொல்லப்பட்டிடிருக்கின்றது. உதவ ராணுவ ஹெலிகாப்டர் வரும் பொருட்டு பனிமலையில் கம்பி நட்டு ஏற்றப்படும் கொடியில்,ராடாரால் அடையாளம் காணப்படும் சாத்தியமுள்ள சிறு மின்னணுக்குறிப்பான் இணைக்கப்பட்டிருப்பதை வாசிக்கையில் சிறுவர்கள் உள்ளம் மிகப்புதிய அதிசயத்தகவலை கேட்கும் கிளர்ச்யை நிச்சயம் அடையும்
கதைக்கு பெரும் பலமாக பிரேம் டாவின்ஸியின் சித்திரங்கள். அந்தசிறுவனை அத்தனை உயிர்ப்புடன் கொண்டுவந்திருகிறார். வெண்பனிச்சாலைகள், ஹெலிகாப்டரிலிருந்து தெரியும் பாலை, குகைக்குள் டார்ச் வெளிச்சத்தில் தெரியும் தெய்வ உருவங்கள் என மறக்க முடியாதவை அனைத்து சித்திரங்க்ளும். இரட்டை கண்ணாடிக்கதவு வழியே நார்பா வெளியே பார்க்கும் காட்சியை மனதில் எப்படி கற்பனை செய்திருந்தேனோ, அப்படியே அடுத்த பக்கம் வரையபட்டிருந்த சித்திரம் பெரும் மகிழ்வைக்கொடுத்தது
வெள்ளி நிலம் எனக்கு திரும்பக்கிடைத்த பால்யம். இன்னும் பல வருடங்களுக்கு நான் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டிருக்கப் போகும் அருமையான இந்தக்கதைக்கான ஜெ விற்கு நன்றியும் அன்பும்
Leave a Reply