லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2020

சர்க்கார்பதி – நிறைவு

மேற்குத்தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான ஆனைமலையிலுள்ள கோழி கமத்தி, ஆழியார் அணை, நவமலை, பவர்ஹவுஸ், கொல்லத்திப்பாறை போன்ற இடங்களில் மலமலசர் என்ற பழங்குடிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மலையில் வாழ்பவர்கள் மலைமலசர், மலையடிவாரத்தில் வாழ்பவர்கள் பதிமலசர் என்று இவர்களுக்குள்ளேயே இரண்டு பிரிவுகள் உள்ளது.

இவர்களில் மகா மலசர்கள் அல்லது மலமலசர்கள் கோவை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் உள்ள சர்க்கார்பதி கிராமத்தில் பலதலைமுறைகளாக  வசித்து வருகின்றனர்.  மேல் சர்க்கார்பதி, கீழ் சர்க்கார்பதி என இரண்டு கிராமங்கள் இருக்கின்றன.  இரண்டு கிராமங்களிலும் சேர்த்து 130 பழங்குடியினர் குடும்பங்கள் இருக்கின்றன.  பெரும்பாலும் வருடத்தில் 10 மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும் கிராமமென்பதால் பசுமை அடர்ந்து கிடக்கும் வனப்பகுதியாக இருக்கிறது சர்க்கார்பதி. மழைவாழ்மக்கள் குழந்தைகளுக்கான் துவக்கப்பள்ளியும் அங்கு இருக்கின்றது.

மேல்சர்க்கார்பதியில் ஒருசில மலமலசர் பழங்குடியினரே இருக்கின்றன இவர்களின் தெய்வம் மகா மாரியம்மன். இவர்கள் ஒருசில சிறுதெய்வங்கள மூங்கில் தப்பைகளால் தடுக்கப்பட்ட பாறைமீது எழுப்பப்பட்ட எளிய சிறு கோவில்களில் வழிபடுவதோடு அனைவருக்கும் பொதுவான இறையாக மாகா மாரியையே வழிபட்டு வருகின்றனர்

பதிமலசர்கள் எனப்டும் கீழ்சர்க்கார்பதியை சேர்ந்த பழங்குடியினர் அங்குள்ள கோவிலில் அருள் புரிந்துகொண்டிருக்கும் குண்டத்து மாரியம்மனை வணங்குகிறார்கள்.

மேல்சர்க்கார்பதியின் மகாமாரியம்மனை பலஆண்டுகாலம் இப்பழங்குடியினர் சிற்றாலயமொன்றீலேயே வழிபட்டுவந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இங்கு கோவில் எழுப்பப்பட்டது.  மூன்று வருடங்களுக்கு முன்னரே குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது.

சின்னதும் பெரியதுமாக அருவிகளும் சிற்றாறுகளும் நிறைந்த வனப்பகுதியென்பதால் இங்கு மின் உற்பத்தி நிலையமும் உள்ளது. இதன்பொருட்டான் தடுப்பணையொன்றின் அருகில் ஏரளமான கூந்தல்பனைகளும்,அரசும், வில்வமும், ஆலும், அத்தியும் இன்னபிற காட்டுமரங்களும் சூழ ,அருவியின் ஓசை பிண்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்க தொடர்மழையிலும், அடர்நிழலிலுமாக நிரந்தரமாக குளிர் நிரம்பியிருக்கும் அந்த இடத்தில்  மிகச்சிறிய அழகிய கோவிலில் மகாமாரியம்மன் அருள்பாலிக்கிறாள். கோவில் வளாகமெங்கும்  கால் வைக்க இடமின்றி வில்வமரத்தின் கனிகள் உதிர்ந்து தரையெங்கும் நிறைந்து கிடக்கின்றன. கோவில் வளாகமே இயற்கையான  சூழலில் காட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. பல்லாண்டு வயதுள்ள அரசப்பெருமரங்கள் அதிகம் இருப்பதால் அவற்றின் சின்னஞ்சிறு கனிகள் மணலைப்போல தரையெங்கும் நிறைந்துகிடக்கின்றன.

எதேதோ பச்சிலைகளின் வாசம் நாசியில் நிறைய கோவிலுக்கு சென்றால் நுழைவு வாயிலிலேயே வனக்காவலர்களின் காவல் கண்காணிப்புக்கோபுரம் அமைந்துள்ளது. ஏராளமான இடத்தில் சுற்றிலும் பரிவாரத்தெய்வங்கள் தனித்தனியே நல்ல இடைவெளியில் அமைந்திருக்க மத்தியிலிருக்கும் சிமிழ்போன்ற சிறு ஆலயத்தில் அம்மனிருக்கிறாள்

 சற்றுத்தள்ளி சிறிய பீடங்களில் துர்க்கையும், உயரமான மேடையில் நவக்கிரகநாயகர்களும் உள்ளனர். ஆலயத்திற்கு எதிரே பாசிபிடித்திருக்கும் கற்படிகளில் சற்று தாழ்வான பகுதியில் இறங்கிச்சென்றால் சப்தகன்னியரின் சன்னதி. ஆண்டாளைப்போல கொண்டையிட்ட சர்வலட்சணம் பொருந்திய  எண்ணைப்பூச்சில் மெருகேறி பளபளக்கும் சப்தகன்னியரின் சிலைகளிலிருந்து கண்ணை அகற்றவே முடியாது். அத்தனை அழகு. சற்றுத்தள்ளியிருகும் மிகபெரிய அரசமரத்தடி மேடையில் விநாயகர், மேடையின் வெளிப்புறமர்ந்திருக்கும் தக்‌ஷிணாமூர்த்தியுடன் அருள்பாலிக்கிறார்.

மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தின் பரிபூரண தனிமையில்,  ஒவ்வொரு மரத்திலும் கிளையிலும் இலைகளினசைவிலும் இறைமையை உணரலாம்.  சுப்ரமணி என்னும் பூசாரி அம்மனுக்கு தினசரி 3 வேளை பூசைகளை செய்துகொண்டிருக்கிறார்.. ஏராளமான பறவைகளின் கீச்சிடல், மரங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் குரங்குகளின் ஓசை, அருவியின் பேரிரைச்சல் மூலிகைவாசம் இவற்றுடன் கோவில் மணியோசையும் இணைகையில் உடல் மெய்ப்பு கொள்கின்றது. அம்மன் மிக எளிய பச்சைப்புடவையில் மூக்குத்தி மின்ன காலடியின் இரு அகல்விளக்குகளிலும், ஒற்றை தொங்கு விளக்கிலும் தீபச்சுடர் மலர்மொட்டுப்போல் அசையாது சுடர்விட புன்னகை தவழ அமர்ந்திருக்கிறாள்

அன்று அமாவாசை. வனச்சரக உயரதிகாரியொருவரின் கட்டளையாக அம்மனுக்கும் சப்தகன்னியருக்கும் பிற  மூர்த்திகளுக்கும் அகன்ற அரசிலையில் சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் படைக்கப்பட்டிருந்தது. 

இந்த மகாமாரியமன் ஆனைமலை மாசாணியின் தங்கை என கருதப்படுகிறாள். உலகபுகழ்பெற்ற மாசாணியம்மன் பூமிதித்திருவிழாவின்  கொடியேற்றுதலுக்கு சர்க்கார்பதி வனத்திலிருந்தே பெருமூங்கில் பல்லாண்டுகளக வெட்டிவரப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மூங்கிலை கொடிமரத்துக்கென வெட்டுகையிலேயே அடுத்த ஆண்டுக்கான மூங்கிலையும் தெரிவு செய்து மஞ்சள் துணி சுற்றி அடையாளம் செய்துவைத்து அடுத்த ஒரு வருடம் அதை கடவுளாகவே எண்ணி பூசிக்கிறார்கள் மலசப்பழங்குடியினர்.அந்த மிகநீளமான பருமனான கொடிமர மூங்கில்களை வெட்டி இங்கு மகாமரியம்மன் சன்னதியில் வைத்து பூசித்து அனைவருக்கும் அன்னதானமிட்டபின்னரே பலகிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆனைமலைக்கு  கால்நடையாக பக்தர்களால், சுமந்து செல்லப்படுகின்றது. இந்நிகழ்வும் பன்னெடுங்காலமாகவே மிகப்பெரும் விழாவாக இங்குள்ள பழங்குடியினரால் கொண்டாடப்படுகின்றது.

எதிரிலிருக்கும் அருவிக்கரையில் ஏராளமான் காட்டு நாவல் மரங்கள் ,கொழுத்த, விரல்களில் அப்பிக்கொள்ளும் அடர் ஊதா சாறு நிரம்பிய கனிகளை உதிர்த்தபடி நின்றிருக்கின்றன. சுற்றிலும் காட்டு அத்திமரங்களும் நிறைந்துள்ளன. மரத்தடியில் கொழுத்த இளஞ்சிவப்பு அத்திபழங்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.

PC Tharun

மிக நெருக்கத்தில் மான்கூட்டங்களையும், திமில் பெருத்த காட்டெருதுகளையும், பெயர்தெரியா பல பறவைகளையும், அரிதாகவே காடுகளில் காணக்கிடைக்கும் மரங்களிலிருந்து மரங்களுக்குத் தாவும் பறக்கும் பாம்புகளையும் இங்கு காணமுடிந்தது.

Chrysopelea ornata  Golden flying snake- @ sarkarpathi forest- PC Tharun
இரையை விழுங்கும் பாம்பு- Pc Tharun

ஆலயத்தின் உள்ளே மட்டுமல்ல மகாமாரியம்மனை அங்கு எல்லா இடத்திலும் உணரமுடிந்தது அடர்ந்த அந்தக்காடும் அதனுள்ளே வீற்றீருக்கும்  பேரியற்கையென்னும் சக்தியின் அங்கமான அம்மனுமாக அந்தத் தலம் அளிக்கும் உணர்வை அங்கு சென்றால்தான் உணர முடியும்.

அங்கே வழங்கப்பட்ட சர்க்கரைப்பொங்கலை அந்த இறையனுபவத்தின் சுவையுடன் கலந்து உண்டோம் நான் காட்டிற்குள் நுழைகையில் மிஸ், பின்னர் லெக்சரர், அதன்பின்னர் கல்லூரி புரஃபஸர், பின்னர் கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அக்கா ஆகியிருந்தேன். எதிர்ப்படும் அனைவரிடமும் ’’அக்கா வந்திருக்காங்க’’ என்று வாயார மனமார சொல்லியபடியே வந்தார். அதுவும் மனநிறைவை அளித்தது. .துவாரகர் நல்ல கீர்த்தனைகள் பாடுவாரென்பதையும் அப்படி கோவில்களில் கீர்த்தனை பாடுகையில்தான் தன் வருங்கால மனைவியை சந்தித்திதாரென்பதையும் சொன்னார். அத்திப்பழங்களையும் மலைநெல்லிகளையும் நாவல்களையும் சேகரித்து கொடுத்தபடியே இருந்தார்.

 மீண்டும் பள்ளிக்கு சென்று மதிய உணவுண்டோம். கேரியரை பார்த்ததுமே “அக்கா அதிகாலை 4.30க்கு எழுந்திரிச்சாத்தான் இதெல்லாம் செஞ்சுகொண்டு வரமுடியும்” என்றார். ஆமென்றேன். வாழ்வின் இயங்கியலில் பிறரையும் அவர்களின் பக்கக்து நியாய அநியாயங்களையும் அறிந்தவர் என்று அவர் மீது கூடுதலாக மரியாதை வந்தது எனக்கு. உணர்ச்சி வசப்பட்டு 10 பேருக்கான் உணவை கொண்டு வந்திருந்தேன்

நிறைய உணவு மீந்துவிட்டிருந்தது. காரில் அவற்றை எடுத்துக்கொண்டுபோய் மழைவாழ்மக்கள் குடியிருப்பில் நிறுத்தி ’’சந்திரா’’ என்று  துவாரகர் குரல்கொடுத்ததும் 10/12 வயதுச்சிறுமி எட்டிப்பார்த்தாள். அவளது தூய அழகை எப்படி எழுதியும் விளக்கிவிட முடியாது. மிகச்சரியான பளபளக்கும் மான் நிறம்,.மாவடுபோல சிறிய பளிச்சிடும் அழகிய கண்கள், சின்ன மூக்கு சின்னஞ்சிறு குமின் உதடுகள். மையிட்டுக்கொள்ளவில்லை பவுடர் பூச்சோ வேறு எந்த ஒப்பனைகளுமோ இல்லை ஒரு சின்ன சாந்துபொட்டு புருவ மத்தியில் ,வெள்ளைப்பிண்னணியில் நீலப்பூக்கள் போட்ட மலிவுவிலை நைட்டி, கையில் எதற்கோ ஒரு சின்னத் தடி. உயரமான இடத்திலிருந்து துள்ளலாய் இறங்கி வந்து ’’என்ன சார்’’ என்றாள். சாருடன் புதியவர்களைக்கண்ட வெட்கம் உடனே கண்களில் குடியேறியது. எனக்கு அவள் மீதிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை. அவளை தொட்டுக்கொண்டு மீதமிருக்கும் உணவுகளை வாங்கிக்கொள்வாளா என்று கேட்டேன் மகிழ்ந்து சரியென்று சொல்லி மீண்டும் துள்ளிக்கொண்டு மேலேறிச்சென்று சில பாத்திரங்களுடன் வந்தாள். உணவுகளை அதில் மாற்றிவிட்டு நான் வழக்கமாக கல்லூரிக்கு ஊறுகாய் கொண்டுபோகும் ஒரு சிறு எவர்சில்வர் சம்புடத்தை ஊறுகாயுடன் அவளிடம் கொடுத்து ’’என் நினைவா இதையும் நீயே வச்சுக்கோ’’ என்று கொடுத்தேன் கண்களில் ஒரு கூடுதல் மின்னலுடன் சரியென்று தலையாட்டிவிட்டு மேலே ஏறிச்சென்று அங்கிருந்த குட்டிகுட்டி தடுப்புக்களுடன் கூடிய மண்சுவர்களாலான வீடு என்னும் அமைப்புக்குள் சென்று மறைந்தே விட்டாள்.

என்னதான் நாம் உரமிட்டு நீரூற்றி பராமரித்து வளர்த்தாலும் காட்டுச்செடிகளின் தூய அழகை வீட்டுசெடிகளில் காணவே முடியதல்லவா? சந்திராவின் சருமப்பளபளப்பு ஒளிவிட்ட சின்னக்கண்கள், துள்ளல், முகமே சிரிப்பாக வந்துநின்றது, அவளது கள்ளமின்மை எல்லாமாக என் மனதில் இனி என்றைக்குமாக நிறைந்திருக்கும். அம்மனை மீண்டும் தரிசித்தேனென்றுதான் சொல்லனும்

மகா மலசர்களின் வீடுகளுக்கு சென்று சிலரைச் சந்தித்து பேசினேன். பச்சை தென்னை ஓலை முடைந்துகொண்டிருந்த லச்சுமி என்னும் ஒரு மூத்த பெண்ணிடம்  பேசினேன்.

லச்சுமி

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். தருணுக்கு தேவையான பல அரிய புகைப்படங்கள் கிடைத்தன. அருவியொன்றில் கேன் நிறைய தண்ணீர் பிடித்துக்கொண்டு சூடாக இட்லி வைத்து சாப்பிட அகன்ற பசும் தேக்கிலைகளையும் நிறைய பறித்துக்கொண்டு சேம்புச்செடிகளும் விதைகளுமாக  காரையே ஒரு சின்ன வனமாக மாற்றியபின்னர்  அனைவருமாக கிளம்பினோம்.

கிளம்புகையில் 2 கீர்த்தனை பாடுவதாக சொல்லிக்கொண்டே இருந்த துவாரகரிடம் நான் ’’அட கீர்த்தனையா, பாடுவீங்களா’’ என்று கேட்கவே இல்லியே!  

துவாரகரை அவரது தோப்பில் விட்டுவிட்டு சூர்யாவையும் அவனது வீட்டில் விட்டுவிட்டு விடைபெற்றுக்கொண்டு வந்தோம்.

இரவு நல்ல களைப்பில் சீக்கிரம் உறங்கப்போகையில் தான் நினவு வந்தது அந்த பிரதாப்  வரவே இல்லை டிசி வாங்க.

இந்த பள்ளிக்கு மாறுதலை வேண்டி விரும்பிக் கேட்டு வாங்கி 8 வருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கும் துவாரகரின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் அன்பும் ஏற்பட்டுவிட்டது Ethnobotany யில் ஆய்வுமாணவிகள் என் வழிகாட்டுதலில் பல பழங்குடியினரின் தாவரப்பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்திருப்பதால் பல மழைவாழ் மக்களின் வாழிடங்களுக்கு பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் சர்க்கார்பதி ஒரு புதிய நிறைவான அனுபவம்.

——————————————————-x————————–

சர்க்கார்பதி -2

வனத்துவக்கத்தின் சாலை

அவரின் தோப்பிலிருந்து காடு 30 கிலோ மீட்டர்தான். பத்து கிலோ மீட்டர் தாண்டியதும் ஊரெல்லைகள் முடிவுற்று காடு துவங்கிவிட்டது. சீவிடுகளின் இடையறாத சத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது பச்சிலை வாசனையும் காட்டின் எல்லையில் social forestry செயல்பாடுகளால் நட்டுவைக்கப்பட்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களின் வாசனையுமாக பசுமை  நுரையீரலை நிறைத்தது.  20 கிலோ மீட்டருக்கும் மனித சஞ்சாரமே இல்லை. இணையாகவோ எதிரிலோ ஒரு வாகனம்கூட வரவில்லை மயில்கள் அடிக்கடி எதிர்ப்பட்டன. யானைச்சாணமும் வழியெங்கும் இருந்தது

.

துவாரகரும் செந்திலும்,

காடு வர 20 நிமிடங்கள் ஆனது அதற்குள் துவாரகநாதரின் சுயசரிதையை 400 /500 பக்கங்களுக்கு எழுதும்படியான அளவுக்கு எனக்கு அவரைக்குறித்த தகவல்கள் கிடைத்திருந்தது. அவரது குடும்பம் சகோதர சகோதரிகள் அவர்களின் திருமண உறவுகள் குழந்தைகள், குழந்தைகளின் இயல்புகள், குறும்புகள். அண்ணன் மகள் தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனை; விவசாயியாக தன் வாழ்வு அவர் படிப்பு வேலை காதல் (ஆம் காதலியைத்தான் கைப்பிடிக்க விருக்கிறார்)  சில வருடங்களுக்கு முன்பாக இறந்துபோன அவரின் தந்தை சமீபத்தில் இறந்த அவரது தாய், அவருக்கும் வேதியியலுக்கும் உள்ள தொடர்பு (அவர் chemistry mphil.)  அவருக்கும் பெருமாளுக்கும் உள்ள நெருங்கின தொடர்பு (இறைவன் பெருமாளே தான்) இப்படி அநேகம் தெரிந்தாகிவிட்டது.

சிற்றாறுகளும் ஓடைகளும் குறுகிட்டன. கொஞ்சம் பெரியதாகவே இரைச்சலுடன்  இருந்த ஒரு ஆற்றின் கரையில் செக்போஸ்ட் இருந்தது 3 சீருடை வனக்காவலர்கள் இருந்தார்கள். துவாரகரை அவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்றனர். தகவல் சொல்லி அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். காவலர்களிடம் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்யும் தன் உறவினர் என்று என்னை அறிமுகப்படுதினார் துவாரகர்.

ஒற்றையடிப்பாதை கற்களும் குழிகளுமாக, நீண்டு சென்று கொண்டே இருந்தது 10 /12 வயதுடைய  ஒருசில  பழங்குடிச்சிறுவர்கள் எதிர்ப்பட்டார்கள். காரை நிறுத்தி துவாரகர் இறங்கி அதில் உயரமான ஒருவனை தோளைப்பிடித்து உலுக்கி ’’டே, கெளசிக்கு, பிரதாப்ப வரச்சொல்லுடா ஸ்கூலுக்கு, அவன் இன்னும் tc வாங்கலை நேத்தும் வந்தேன் ஆளே வரலை’’ என்றார். அவன் இவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை அவன் உடல்மொழியிலும் ஒரு ஆசிரியரை, அதுவும்  தலைமைஆசிரியரை கண்ட பாவனை ஏதும் தெரியவே இல்லை கண்களில் மட்டும் புதியவர்களை. வெளியாட்களைக்கண்ட வெட்கம் கொஞ்சூண்டு, அவ்வளவுதான்.வழியில் அவ்வப்போது எதிர்ப்பட்ட ஒரு சிலரிடமும் அந்த பிரதீப் இன்னும் tc வாங்கலைன்னும் அவனை வரச்சொல்லியும் அதை வாங்கினாலே அவன் 6 ஆம் வகுப்பில் சேரமுடியுமென்றும் சொல்லிச்சொல்லி மன்றாடினார்.

எனக்கு என்ன ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததென்றால் இவரைக்கண்டால் அங்கிருப்பவர்களிடம் தெரியவேண்டிய அந்த பணிவுகலந்த உடல்மொழி இல்லவே இல்லை.

அடர்ந்த காடு, காட்டு மாமரங்கள், அத்திகள், நாவல்பெருமரங்கள் இந்தனை வருட தாவரவியல் அனுபவத்தில் நான் பார்த்தும், கேட்டும், அறிந்துமிராத  பெயர் தெரியா பல மரங்கள், செடி கொடிகள் என்று நல்ல சூழல் தருண் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல இருந்தான் இப்படி ஒரு காட்டில் நாளை செலவழிக்க வேண்டும் என்பது  அவனின் கனவு. நினைத்துக்கொண்டாற்போல சடசடவென மழையும் பின்னர் இளவெயிலுமாக காலநிலை விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்தது

.

காட்டின் முகப்பில் காட்டிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் பாழடைந்த என்று சொல்லுவதற்கு கொஞ்சம் முந்தின நிலையிலிருக்கும்  வனக்காவலர்கள் மற்றுமதிகாரிகளின் சில குடியிருப்புக்கள், ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருக்கும் இரண்டு  நெட்டிலிங்க மரங்களால் பந்தலிடப்பட்ட அழகிய முகப்புடன்  சின்னதாக சிமிழ் போல வனச்சரக அலுவலகம் இவற்றை கடந்தால் ஒரு அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கட்டிடம் , அதன் வாசலிலிருந்த கம்பிக்கதவு பிய்த்தெறியப்பட்டிருந்தது. சிவப்பு சிமெண்ட் போட்ட வழவழப்பான் திண்ணையும், சற்று தூரத்தில் 3 நாய்களும்

பள்ளிக்கூடம்

 அந்த திண்ணை, உள்ளே இரண்டு நாற்காலிகளும் ஒற்றை மேசையும் போட்டிருக்கும் ஒரு ஆசிரியர் அறை , இரண்டு வகுப்பறைகள்,  ஒரு சின்ன இடைநாழியை கடந்தால் விறகடுப்புடன் ஒரு சமையலறை. யூகலிப்டஸ் மரங்களின் விறகுகள் உள்ளிருக்கும் பிசினின் பளபளப்புடன் அடுக்கி வைக்கபட்டிருந்தது.அதுதான் பள்ளிக்கூடம்.

யானைகள் சேதப்படுத்திய கேட் இருந்த இடம்

சர்கார்பதிக்கு காலையும் மாலையுமாக 2 முறைகள் மட்டும் வரும் ஒரே அரசுப்பேருந்தை தவறவிட்டால் இங்கேயே அவர் தங்கிக்கொள்ள வசதியாக அக்கட்டிடம் வீடும் பள்ளியும் இணைந்த ஒரு அமைப்பாக இருந்தது. கட்டிடத்தை ஒட்டி கழிவறை குளியலறை. பின்புறமாக காட்டுநெல்லிப்பெருமரமொன்று. சொப்பிக்காய்த்தலென்று கொங்கு வட்டாரத்தில் சொல்லிக் கேட்டிருக்கவில்லையெனில் அம்மரத்தைப் பார்த்துக்கொள்ளலாம். கீழே நிலமெங்கும் கொட்டிக்கிடந்த சிறு மலைநெல்லிக்கனிகளின் சுவையை எழுதியெல்லாம் தெரிவிக்க முடியாது. உண்மையில் இயற்கையின் சுவையது.

 எல்லாருமாக திண்ணையில் அமர்ந்து  கொண்டு வந்திருந்த  மசாலா தேநீரை அருந்தினோம் இளமழை திடீரென பெய்தது அந்த மழைக்கு, குளிருக்கு தேநீர் மிக இதமாக இருந்தது. நாய்கள் மூன்றும் மெல்ல நடந்து வந்து திண்ணைக்கு அருகில்  சுருண்டு படுத்துக்கொண்டு சோம்பலாக கொட்டாவி விட்டன. சமீபத்தில் ஜெ சொல்லியிருந்தார் நாய்கள் இப்படி மனிதர்களின் அரு்காமையில்  இருக்க பிரியப்படும் என்று.

கேட்டை சமீபத்தில் யானைகள் பிய்தெறிந்துவிட்டது என்றார் துவாரகர். பள்ளியைச்சுற்றிலும் யானைச்சாணம் கிடந்தது. எப்போதும் யானைகள் சுற்றித்திரியும் சூழல் என்பது ஆர்வமூட்டியது. கூடவே இந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தரவென அவர் மெனக்கெடுவதையும் அங்குவிரும்பி மாற்றல் கேட்டுக்கொண்டு தினம் அந்த அத்துவானக்காட்டுக்கு வந்து பணிசெய்துகொண்டிருப்பதையும் நினைத்து மனம் கனத்தது. ஆசிரியமென்பது ஒரு தொழிலல்ல வாழ்வுமுறையென்பதை எனக்கு உணர்த்திய வெகுசிலரில் துவாரகரும் ஒருவர். அந்த சூழலே கற்றலுக்கானது அல்ல, ஆயினும் அக்குழந்தைகள் படித்து எப்படியும் முன்னேறவேண்டும் என நினைக்கும் நல்லுள்ளம் கொண்டஅவரை நி்னைத்து பெருமிதமாயிருந்தது.

பூட்டியிருந்த பள்ளியின் சாவியை ஒரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார் அந்த பெண்ணை அழைத்தால், தான் இன்னொரு ஊரில் இருப்பதாகவும், சாவியை தன் மகள் சந்திராவிடம் வாங்கிக்கொள்ளூம்படியும் சொல்லிவிட்டாள்.  அந்த சந்திராவை சாரல் மழையில் தேடிச்சென்றோம்..

எனக்கு ஜெ வின் கொரோனாக்கால நூறுகதைகளில் ஒன்றான யானையில்லா’வின் சந்திரி நினைவுக்கு வந்தாள். சந்திரா ஆற்றுக்கு குளிக்க போயிருந்ததால்  காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லையென்றானது. தருணும் சூர்யாவும் காட்டுக்குள் சென்றுவிட்டார்கள் நானும் செந்திலும் துவாரகரும் அங்கிருந்த  அகன்ற கால்வாயையும் அங்கு பெருக்கெடுத்தோடிய நீரையும் பார்த்தபடிக்கே நடை சென்றோம்.  பேச்சில் எங்களை முழுக்காட்டிக்கொண்டே உள்ளே அழைத்துச்சென்றார்.

வழியில் ஒரு பரட்டைத்தலை சிறுவன் எதிர்ப்பட்டான். அவனை பார்த்ததும் இவர் பரவசமாகி ‘’டே கொஞ்சும் குமரா, (அதான் பெயரே! என்ன அழகுப்பெயர்  இல்லையா?) பிரதாப்ப வரச்சொல்லுடா’’ என்றார்.

அந்த கொஞ்சும் குமரன் என்னும் 6/7 வயதிருக்கும் முந்திரிக்கொட்டை கேட் வாக் குமரிகளைப்போல ஒரு காலை லேசாக முட்டிபோட்டு தெற்குநோக்கியும் இன்னொரு காலை  நீட்டி வடக்கிலும் வைத்துக்கொண்டு ஒரு கையை பின்னே வளைத்து தலையை தொட்டுக்கொண்டு ‘இன்னா’’ என்னும் தொனியில் இவரை பார்க்கிறான். எனக்குள் இருந்த ஆசிரிய ரத்தம்’’ டேய் காட்டுப்பயலே, HM டா ‘’ என்று கொந்தளித்தது. அவனோ இவருக்கு பதில் கூட சொல்லாமல் மேலேறி எங்கோ சென்றான். பிரமிப்பாக இருந்தது இவர்களின் ஆசிரிய மாணவ உறவு. சிலநாட்களாக ஜெ தளத்தில் எஸ்ரா ஞானி கட்டுரை, ஆசிரிய மாணவ உறவு சர்ச்சை எல்லாம் ஒடிக்கொண்டிருக்கே, இவர்கள் நாமிருக்கும் யுகத்திற்கு பலயுகங்களின் தொலைவில் இருக்கிறார்கள் என்று தோன்றியது.

துவாரகர் எதிர்ப்படும் பலருக்கு இவராக வணக்கம் சொல்லுவதும் அந்த டிசி வாங்காத கடங்காரன் பிரதாப்பை வரச்சொல்லி தூதுவிடுவதுமாகவே இருந்தார்.

எனக்கு இதற்குள் துவரகரைக்குறித்த ஒரு சுமாரான சித்திரம் கிடைத்திருந்தது. எளிமையான மனிதர். அவருக்கென்று சில நியமங்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிக்கொண்டு அவற்றை தீவிரமாக நம்பி வாழ்வை மிக எளிமையாக வாழ்ந்து வருபவர். இந்தகாட்டுப்பள்ளிக்கு விருப்ப மாறுதல் வாங்கிக்கொண்டு வந்திருப்பதில் இப்போது கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.

மேலும் அவருடனான உரையாடலை, எப்படி கொண்டு போகிறாரென்றூம் பிடிகிடைத்தது. ஓயாத பயிற்சியாயிற்றே!

பேசிக்கொண்டிருக்கையிலேயே எதாவது ஒரு முக்கியமான பாயிண்ட் சொல்லும்போது ( அதாவது அவரைப்பொருத்த வரைக்கும் முக்கியமானது) அதை மீண்டும் சொல்லத்துவங்கி  பாதியில் அந்த வாக்கியத்தை நிறுத்தி என்னைப்பார்த்து ’’எப்படி, எட்டாம் கிளாசிலேயே?’’ என்பார் நான் சுதாரித்துக்கொண்டு ’’ஃபெயிலானப்புறமும்’’ என்று அதை முடிப்பேன் அகமலர்ந்து மீண்டும் தொடருவார். எதிரிலிருப்பவர் பேச்சை கவனிக்கிறாரா என்று சோதிக்கும் அற்புதமான உத்தி இது.

உமாகரன் ராசையா என்னும் இலங்கைப் பேச்சாளரின் உரைகளை கேட்டிருக்கிறீர்களா?  துவாரகரின் இதேஉத்தியைத்தான் அந்த இளைஞனும் கடைப்பிடிக்கிறான், பேச்சின் இடையே’’ எப்படி’’? என்பான் நம்மிடம் பின்னர் முன்பு சொன்னதை மீண்டும் ஒருமுறை அழுத்திச்சொல்லுவான்.  அத்தனை   அ ழகாக இருக்கும் அவன் தமிழைக்கேட்பது. இணையத்தில் கிடைக்கும் அவனது உரைகள், கேட்டுக்கொண்டிருங்கள். நான் மீண்டும் தொடருகிறேன்

சர்க்கார்பதி

வன உயிர்களை புகைப்படம் எடுக்க விரும்பும் தருணை அவன் விடுதியில் இருக்கையிலிருந்து ஏறக்குறைய 20 முறைக்கு மேல்  வனப்பகுதிகளுக்கு அழைத்துச்செல்வதாகச் சொல்லி திட்டமிட்டு ஏற்பாடும் பண்ணி அனுப்ப முடியாமல் எல்லாவற்றையுமே தவிர்க்க இயலாமலும் எதிர்பாரா காரணங்களாலும் ரத்துசெய்திருந்தேன். எனவே இந்த கொரோனா காலத்தில்  எப்படியும் போகத்தீர்மானித்து அது ரிசர்வ் ஃபாரஸ்ட் என்பதால் முறையான அனுமதி வாங்க முயற்சித்து ஏகப்பட்ட குழப்பங்களுக்கு பிறகு ஒரு வழியாக சிலநாட்கள் முன்பு, அந்த பகுதியில் பரிச்சயம் இருக்கும் தமிழ்த்துறை மாணவனும் எங்கள் உறவினருமாகிய சூர்யாவின் துணையோடு அதிகா்லையிலேயே எழுந்து விரிவான சமையல் பண்ணி எடுத்துக்கொண்டு  வெயிலேறத்துவங்கும் முன்பே காலையில் கிளம்பிப் போனோம்.

 அந்த வனத்தில் ஆதிதிராவிடபழங்குடியின நலத்துறையின் ஒரு பள்ளிக்கூடம் (துவக்கப்பள்ளி) இருக்கின்றது. அந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் செல்லும் வழியில ஒரு கிராமத்தில் தான் இருக்கிறார் தானும் கூடவந்து உதவுவதாக சூர்யாவின் மூலமாக தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். எனவே அவரையும் அழைத்துக்கொள்ளச்சென்றோம்.  அவரது வீடும்  தோப்பும்   வீட்டிலிருந்து 20 நிமிஷம்தான் கார் பயணத்தில். தோப்பு முழுவதுமே கரைபுரண்டு ஓடும் அம்பராம்பாளையம் ஆற்றின் கரையில் இருந்தது, கடைசி ஒருவரிசை மரங்கள் எல்லாமே ஆற்றை நோக்கி தான் வளர்ந்திருந்தன.

தேங்காய்கள் முற்றி கீழே விழுந்து ஆற்றோடுபோய் விடாமல் இருப்பதற்காக ஒரு தடுப்பணைபோல விழுந்த மரங்கள் மட்டைகளை எல்லாம் போட்டு வைத்திருக்குமளவுக்கு செழுமை.

 அக்கா தங்கை அண்ணன் தம்பி என எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாய் இருக்கும் அழகிய வீடு. நண்டும் சிண்டுமாக ஏழெட்டு குழந்தைகளுக்கும் 2 நாய்க்குட்டிகளுக்குமாக ஒரு அம்மாள் இப்போதைய  பெரும்பாலான இல்லத்தரசிகளின் default உடையாகிவிட்டிருக்கும் நைட்டியும் ( பகல்டி ) மேலே சம்பிரதாயத்துக்கு ஒரு துண்டுமாக உணவு  ஊட்டிக்கொண்டு இருந்தார்கள் மாஸ்க் எல்லாம் முறையாக போட்டுக்கொண்டு காரிலேயே சானிடைசரையும் கொண்டுபோயிருந்த எங்களுக்கு ’’கொரோனாவா ? கிராம் என்ன விலை’’ன்னு கேட்கும்படியான  அவர்களின் வாழ்வின் இயங்கியல் அதிர்ச்சியளித்தது.

 அரசு பள்ளி பள்ளிக்கூட தலைமை ஆசிரியரென்பதால்    அவரை குறித்த ஒரு சித்திரத்தை என் மனதில்  முன்கூட்டியே உருவாக்கி வைத்திருந்தேன்.

அதாவது என்னுடன் வந்த  தற்போது முதுகலை தமிழ் பட்டம் முடித்திருக்கும் மாணவனுக்கு அவர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து இப்போது தலைமை ஆசிரியராக இருக்கிறாரென்பதால் என் வயதிலிருப்பாரென யூகித்திருந்தேன். இதை வாசிக்கையிலேயே உங்கள் மனதிலும் இப்படியான  சித்திரமே இருந்திருக்கும்

’’வெள்ளை வேட்டி சட்டை, கொஞ்சம் காதோரம் நரை, கண்ணாடி, சட்டை பாக்கட்டில் ஒரு பேனா இப்படி, (டெல்லி கணேஷ் சார், ராதாரவி சார்,ஆடுகளம் நரேன் சார்)’’ போல.

P C Sri Harsha Digesh

ஆனால் அங்கே எங்களை வரவேற்றது  முழு மொட்டைத்தலையும் பெரிய செந்தூர திலகமும் பெரிய மூக்குமாக (மொட்டைத்தலையும் செந்தூரமும் பார்த்தாலே எனக்கு தெலுங்கு அம்மன் வில்லன் ஜண்டாடாடாடா!!!!!!! நினைவு வந்து பயமாகிவிடும் ஆனா இவர் நல்லவேளையாக அத்தனை புஷ்டியாக இல்லை) நம்ம தமிழ் திரை நடிகர் rs shivaji  நினவிருக்கின்றதா? (பார்க்க, புகைப்படம் ) அவரின்  இன்னொரு வடிவம் போல அல்லது பத்து விட்ட தம்பி போல ஒருவர் அவருக்கு கொஞ்சமும் பொருந்தாத  பிரகாசமான மஞ்சளும் கருப்புமாக பெரிய கட்டங்கள் போட்ட சட்டையிலும் டக் இன் பண்ணியும் கால்சட்டையின் அரணை மீறிக்கொண்டு வெளிவர முயற்சிக்கும் தொப்பையுமாக இருந்தார். அந்த சட்டை அவருக்கல்ல, ஒட்டுமொத்த ஆண்குலத்துகே பொருந்தாத அநியாய கலர் காம்பினேஷனில் இருந்தது

R S Shivaji

இவற்றுக்கும் மேலே அவர் என்னை மிஸ் என்று அழைத்ததில் இன்னும் கொஞ்சம் அசெளகரியமாக உணர்ந்தேன் எனக்கு இந்த விளி எபோதுமே பயங்கர ஒவ்வாமையை கொடுக்கும். ஆனால் இந்த துவக்க பிரச்சனைகள் அதிர்ச்சிகள் எல்லாத்தையுமே மறக்கடித்துவிட்டது சூழல்

கரைபுரண்டோடும் ஆறு காலெட்டும் தூரத்தில்,  ஆங்காங்கே அடர் ஊதா நிற  பூங்கொத்துக்களுடன் வெங்காயத்தாமரைகளின் கூட்டம். மேடான பகுதியிலிருந்து குட்டி குட்டியாக அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தது

சேம்பும் தெங்கும் கமுகும் மூலி்கைகளூம், உதிர்ந்து சேகரிக்கப்படாமல் சிதறிக்கிடக்கும் ஏராளமான தேங்காய்களுமாக வளமை கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும். காலடி அழுந்திய தடத்தில் உடனே நீர் நிரம்பும் வளம் அங்கே! கண்ணைக்கட்டும் பசுமையின் நிறைவு அது

அங்கேயே தருண் ஏராளமாக புகைப்படம் எடுத்தான். 2மணி நேரங்கள் அங்கே செலவழித்த பின்னர் சர்க்கார்பதி போக பயணித்தோம். காரில்  ஓட்டுநர் செந்திலுக்கு அருகில் அவர் முன்சீட்டில், நான் தருண், சூர்யா பின் சீட்டில்

கார் கிளம்பியதும் அவர் துவங்கினார்  பெருமழை பெய்வதைப்போல ஓயாத பேச்சை.

ஆனால் அவர் மீது தவறில்லை, என் பேரென்னவென்று அவர் கேட்டதும் சொல்லிவிட்டு பதிலுக்கு நானும் கேட்காவிட்டால் மரியாதையாக இருக்காதல்லவா எனவே ‘’ சார் உங்க பேரு?’’ என்று கேட்டேன்

அவர் துவாரகநாதன்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டு உரையாடலை முடிச்சிருக்கனுமில்லியா அங்கேதான் நான்  வெண்முரசால அகப்பட்டுக்கொண்டேன் ’’ஆஹா, அருமையான பேராச்சே’’ன்னு குழாயை மொத்தமாக திறந்து விட்டுட்டேன். அதன்பின்னர் ஓயாத பிரவாக பேச்சு மாலை வரை. இப்போது என் தலையை லேசாக சாய்க்க சொன்னீர்களென்றாலும் அவர் பேசினதெல்லாம் என் காதிலிருந்து பொலபொலவென்று கொட்டும் அப்படி நிறைந்திருக்கின்றது காதுகள்.

 மகாபாரதத்தில் பீஷ்மரின் இறுதிகடன்கள், ராமாயணத்தில் ல‌ஷ்மணனின் அண்ணனுக்கு அடங்கிய  குணம், சீதையின் குணநலன்கள், பெருமாள் மகிமை, கொரோனாவின் தீவிரம், அம்மாவுக்கு உதவ வேண்டியதின் அவசியம் (இது தருணுக்கு) இப்படி ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு இன்னதுதானென்று முன்கூட்டியே யூகிக்க முடியவே முடியாத தலைப்புக்களில் தாவித் தாவி பேசிக்கொண்டே இருந்தார். வயது 43 தடைபட்டுக்கொண்டே போன திருமணம் இப்போதுதான்  கூடி வந்து வரும் 30 அன்று திருமணமாம். மனதார வாழ்த்தினேன் அந்த மணப்பெண்ணுக்கு கூடுதலாக சில ஜோடி காதுகள் இருந்தால் பிழைத்தாள்

P C Sri Harsha Digesh

ஆனால் அவர் எத்தனை தன்மையானவரென்றும் , அன்புள்ளவரென்றூம், அவரைப்போன்றவர்களை இப்போது பார்ப்பதென்பது அரிதினும் அரிதென்பதையும் சில மணி நேரங்களிலேயே உணர்ந்தேன்.பேச்சு சுவாரஸ்யத்தில் ஊர்களையும் வயல்வரப்புக்களையும் தாண்டி வனப்பகுதி கண்ணில் தெரியும் தூரம்வரை வந்துவிட்டிருந்தோம். மிக அருகில் வனத்துறையினரின் செக்போஸ்ட் தெரிந்தது

மீண்டும் தொடருகிறேன்

சூரரைப்போற்று!

நவம்பர்  12 ஆம் தேதி அமேஸான் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட ’சூரரைப்போற்று’  நடிகர், தயாரிப்பாளர் சூர்யாவின் 2D Entertainment  சொந்த தயாரிப்பில், சுதா கோங்குராவின் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படம், இதில் சூர்யாவுடன் மலையாள நடிகை அபர்ணா பாலகிருஷ்ணன், ஊர்வசி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் கருணாஸ்  ஆர் எஸ் சிவாஜி, காளி வெங்கெட் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர். இசை ஜி வி பிரகாஷ். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா , வசனங்கள் விஜயகுமார். ஒரே சமயத்தில் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளிலும் சூரரைப்போற்று வெளியாகி இருக்கிறது.

Air Deccan  – ஏர்டெக்கான் நிறுவனத்தின் தலைவர் திரு கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அவரது simply fly நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம்.

எளிய கிராமத்துப் பின்னணி கொண்ட நெடுமாறன் ராஜாங்கமான சூர்யா ராணுவ விமான பைலட்டாகிறார். மரணப்படுக்கையில் இருக்கும், சொந்த  கிராமத்தை முன்னெடுக்க பல முயற்சிகளை சாத்விகமாக செய்து தோல்வியுற்ற, தன் தந்தையை பார்க்க வர விமான பயணக்கட்டணம் அதிகமென்பதால் அவ்வாய்ப்பை தவறவிட்டு தந்தையை இறுதியாக காணமுடியாமலாகும்  மாறன் தானே சாமான்யர்களும் குறைந்த கட்டணக்களில் பயணிக்கும்   பட்ஜெட் விமான நிறுவனம் துவங்க முடிவு செய்வதும், அதை சாதமாக்க அதே தொழிலில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் செய்யும் சதிகளும், இம்முயற்சியில் மாறன் சந்திக்கும் தோல்விகளும், சோதனைகளும், நிதி உள்ளிட்ட பல தடைகளும், அனைத்தையும் மாறன்  முறியடித்து நினைத்தபடியே விமான சேவையை துவங்குவதும் தான் முக்கிய கதை. இடையில் காதல், குடும்பம், குழந்தை, நட்பு, தந்தையுடன் கருத்துமோதல்  செண்டிமெண்ட் என பலவற்றை சேர்த்திருக்கிறர்கள்.

மோகன் பாபு தெலுங்கு நெடியுடன் பேசும் வசனங்களும் காட்சிகளும் ஓகே ரகம் தான் இந்த பாத்திரத்துக்கு ஏன் அவரை மெனெக்கெட்டு அழைத்துவந்தார்கள்?. கருணாஸும் காளி வெங்கட்டும் வழக்கம் போல அப்பாவி பாத்திரங்களில் ஒரு மாற்றமுமின்றி  வந்து போகிறார்கள்

விமான நிறுவனம் ஒன்றை சொந்தமாக தயாரிக்கும் ஒருவரின் கனவைக்குறித்த படமென்பதால் அந்த தொழிலைக்குறித்த பிரத்யேக சிக்கல்கள் நெளிவு சுளிவுகள், போட்டிகள் என்று படத்தின் மையக்கரு  அதிகம் தொழிநுட்பம் சார்ந்ததாகவே இருப்பதும் ,சாமான்யர்களுக்கு புரியாத பல காட்சிகளும் வசனங்களுமாக, படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை சென்றடையவில்லை.  

கோபிநாத்தின் சுயசரிதையை அப்படியே திரைப்படமாக்கவில்லை தழுவல் மட்டுமே என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கின்றது. தழுவல் என்றான பின்னர் ஏன் அத்தனை சிக்கலான காட்சிகளை கொடுக்க வேண்டும். தழுவலில் ஏன் பொம்மி ஒரு நகரத்தில் பேக்கரி தொழிலை துவங்கி இருப்பதாக காட்டியிருக்கக்கூடாது? கதையின் ரியல் நாயகன் கோபிநாத் ஒரு பிராமணர் ஆனால் மாறனுக்கு அப்படியான சாதி அடையாளங்கள் ஏதும் காட்டப்படவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மதுரைத்தமிழனாகவே காட்டப்படுகிறார். இத்தனை  வணிகரீதியான மாற்றங்களிருக்கையில் இந்திய விமான சேவையின் வரலாற்றில் மிக முக்கியமான அடையாளம் கொண்டிருக்கும் டெக்கான் ஏர் நிறுவன உரிமையாளரின்  சுயசரிதைக்கு ஏன் போகவேண்டும். வழக்கமான கற்பனைக்கதையாகவே எடுத்திருக்கலாமே ?

மாபெரும் விமான நிறுவனத்தை உருவாக்கும் சூர்யாவின் நெடுமாறன் பாத்திரத்தின் ’உன்னதமாக்கல்’ கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. இத்தனை பெரிய நிறுவனம் துவங்க இருக்கும் ஒரு  கிராமத்து இளைஞன், லஞ்சம் கொடுக்காமலும், எந்த குறுக்கு வழியிலும் போகாமலும், கோடிகளை ஒருவர் கொடுக்கையிலும் மறுப்பது போலவும் காட்டியிருக்கிறார்கள். விஜய் மல்லையா அளிப்பதாக சொல்லும் பெருந்தொகையை மாறன் மறுப்பதை மட்டும் காட்டும் திரைகதை ஏர் டெக்கான் விஜய்மல்லையாவுடனே பிறகு இணைந்ததை சொல்லவில்லை

இயக்குநர் சுதா  தெலுங்கு தேசமென்பதால் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் தூக்கலாகவே இருக்கின்றது. குறிப்பாக ஊர்மக்கள் 100, 200 என்று பணம் அனுப்பி சூர்யாவின் தொழிலுக்கு உதவுவது,  பணம் அனுப்ப ஊரே திரண்டு வருவது, மாற்றி மாற்றி போனில் பாசம் காட்டும் காட்சிகளிளெல்லாம் ஆந்திர நெடி அடிக்கின்றது

அதிலும் ஊர்வசி கண்ணீரும் கம்பலையுமாக  மாறனுக்கு கொடுக்கும் உணர்வுபூர்வமான அழுத்தம் மாறனோடு சேர்த்து நமக்கும் பதட்டத்தை அளிக்கின்றது. ‘’ ஜெயிச்சுருவியில்ல மாறா, ஜெயிச்சுருடா ஊரே உன்னைத்தான் நம்பி இருக்கு’’ என்று அவர் பிழிந்து ஊற்றுகையில் நமக்கே  பயத்தில் நெஞ்சடைக்கின்றது, அத்தனை ஓவராக பாசம் காட்டும் ஊர்மக்கள் சூர்யாவின் சிறு தோல்விக்கே அவரை இகழ்ந்து பேசி தூக்கி வீசுவதும் பின்னர் மறுபடியும் பாட்டிகளும் தாத்தாக்களும் குழந்தை குட்டிகளும் பொண்ணு மாப்பிள்ளையுமாக விமானத்தில் வந்து, காது வளர்த்தி பாம்படம் போட்ட பாட்டிகள் சூர்யாவை நெட்டிமுறித்து வாழ்த்துவதுமாக படம் செண்டிமெண்ட் ட்ராக்கில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பறந்து கொண்டே இருக்கிறது. விமான நிலையத்தில் சூர்யா பணம் கேட்டுக்கெஞ்சி அழும் காட்சிகளும் அதிகப்படிதான். மசாலா நெடியை குறைத்திருக்கலாம். தெலுங்கு டப்பிங் படம்பார்க்கும் உணர்வு வந்துகொண்டே இருக்கிறது

பெண்பார்க்க கதாநாயகன் செல்லும் காட்சிகள் ஏராளம் பார்த்திருக்கிறோம் இதில் முதல் காட்சியிலேயே மாப்பிள்ளையை பார்க்க நாயகி செல்வது புதுமை. அபர்ணா நன்றாக நடித்திருக்கிறார் முற்றின முகம் என்பதால் சூர்யாவுக்கு அக்காபோல இருக்கிறார்.   துவக்க காட்சிகளின் அதிரடி இயல்புகள் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு காணாமல் போய் , கணவனுக்கு உணவை ஊட்டிவிடும் குழந்தையை பார்த்துக்கொள்ளும்,, தோல்வியில் துவண்டுபோகையில் கணவனுக்கு உத்வேகம் தரும் நஷ்டமேற்பட்டால் கடன் ,தரும் கைக்குழந்தையுடன் தனியே விமானத்தில் பயணிக்க தயாராகும்    உன்னத மனைவியாகிவிடுகிறார்.

கணவன் ஒரு பொது இடத்தில் எதிர்பாரா சிக்கலில் இருக்கையில் பிரசவ வலி வர, தான் பார்த்துக்கொள்வதாக தைரியமாக சொல்லிச் செல்வதும், கடைவீதியில் இருக்கையில்  வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் டென்ஷனாகும் மாறன் மனைவியை மறந்து பைக்கில் புறப்பட எத்தனிக்கையில் தான் ஆட்டோவில் வந்துவிடுவதாகவும் மாறன் போகலாமென்றும் சொல்லும் காட்சியும் சிறப்பு. இப்படியான நல்ல புரிதல் உள்ள, அழகிய, கேட்கையிலெல்லாம் கடனளிக்கும், கனவுகளுக்கு கைகொடுக்கும், காதலிக்கும்,  சாப்பாடு ஊட்டிவிடும்  மனைவிக்கான ஏக்கத்தை பொம்மி பாத்திரம் இளைஞர்களுக்கு அளித்திருக்கிறது

பல வருடங்களுக்கு பிறகு கருணாஸுடனும் முதல் முறையாக ஊர்வசியுடன் முழுப்படத்திலும் சூர்யா இதில் நடிக்கிறார். ஊர்வசி மிகத் தளர்ந்திருக்கிறார்.

உடலைக்கட்டுக்குள் வைத்து பாத்திரத்திற்கு பொருந்தும் தோற்றத்துடன் இருக்க கடுமையான  உணவுகட்டுப்பாட்டில்  இருந்ததற்கு சூர்யாவிடம் நல்ல பலன் தெரிகின்றது. சீருடையில் பிரமாதமாக  இருக்கிறார். வயதையே யூகிக்க முடியாத உடற்கட்டும் இளமையும்  வலிமையுமாக வருகிறார். பாராட்டுக்கள்

சொந்தக்குரலில் மதுரைத்தமிழில் சரளமாக பேசும் அபர்ணா, சூர்யாவிடம் உணர்வுபூர்வமாக உச்சஸ்தாயியில்  ஆக்ரோஷமாக பேசும் மொட்டைமாடிக் காட்சி வசனங்களில் மட்டும் மலையாள நடிகை என்பதை காட்டிவிடுகிறார். தாய்மொழியின் வலிமையல்லவா அது!

சென்சாரில் U சான்றிதழ் வாங்கி இருந்தும் சூர்யா ஆபாச வசவுகளை ஏராளமாக பேசுகிறார். சிவகுமார் சார் கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?

கோபமும், கனவுகளும், வேகமும் வெற்றிக்கான துடிப்பும் நிறைந்த  இளைஞனாக, மாறனாகவே மாறி இருப்பதற்கும், அகரம் அமைப்பின் மூலமாக ’’தனது பெரிய கனவு’’ என்னும் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 70 பேரை இலவசமாக விமானத்தில் பயணம் செய்ய வைத்து, அந்த பயணத்தில், வெய்யோன் சில்லி’யென்னும் அருமையான பாடலை நடுவானில் விமானத்தில் ரிலீஸ் செய்திருப்பதற்கும், புத்திசாலித்தனமாக இணையத்தில் படத்தை வெளியிட்டு சொந்த தயாரிப்பில் நஷ்டம் வராமல் பார்த்துக்கொண்டதற்கும், படத்தை அமேஸானுக்கு விற்ற தொகையில் 5 கோடிகளை கொரோனா பணியாளர்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளித்ததற்குமாக சூர்யாவை போற்றுவோம்.

நந்தி

சிவாலங்களில் விநாயகரை வணங்கிய பின் நந்தி பகவானை வணங்கிய பின்னரே ஈசனை வணங்கச் செல்வது வழக்கம். அதோடு நந்தியிடம் சிவ பெருமானை வணங்க அனுமதி கேட்டுவிட்டு, அவரிடம் வைக்கப்போகின்ற குறைகளையும் முதலில் சொல்ல வேண்டும். அவரின் அனுமதியை மானசீகமாக  வாங்கிய பின்னரே சிவனை வணங்க செல்ல வேண்டும்

 உடல் வலிமையும், ஞானமும், செல்வச் செழிப்பும் மேன்மையும் பெற்றவர்கள் நந்திகள் என்று  அழைக்கப்படுகின்றனர். அவர்களது கூட்டமே நந்தி கணம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் அனைத்து ஆற்றலுக்கும்,  ஞானத்திற்கும் முழுமுதற்  பொருளாக இருப்பதால், சிவபெருமான் நந்தி எனப்படுகிறார்.  அவரது பேரருளைப் பெற்றவர்களும், அவரைச்சார்ந்திருப்பவர்களும் நந்தி என்றே அழைக்கப்படுகின்றனர்.

அனைத்து சிவாலயங்களிலும் கருவறை இறைவனை நோக்கியபடி அமந்திருக்கும் நந்தி,  கணத்தினரில் முதன்மை பெற்றவராக இருப்பதுடன், சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலை மலையைக் காத்து நிற்கும் அதிகாரம் பெற்றவராகவும் இருப்பவர். சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின்  வாகனமாகவும் கருதப்படுபவரும்  திருநந்தித் தேவரே ஆவார்

.  இவர் சித்தராகவும், சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் கருதப்படுகிறார்.  நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது.

 சிவன் கற்பித்த  அகமிக்  மற்றும் தான்ரீக  ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதியிடமிருந்து நந்தி பெற்றார். நந்திநாத சம்பிரதாயத்தின் முன்னோடிகளாக அடையாளம் காணப்பட்ட சனக, சனாதன, சனந்தன, சனத்குமார,  திருமூலர், வியாக்ரபாகர், பதஞ்சலி , மற்றும் சிவயோக முனி ஆகிய   தனது எட்டு சீடர்களுக்கு அந்த தெய்வீக அறிவை அவர் கற்பித்தார். நந்தி என்பதற்கு வளர்வது என்பது பொருள் ஞானத்தாலும்,  செல்வச்செழிப்பாலும், வலிமையாலும், வளர்ந்து கொண்டே இருப்பதையே நந்தி எனும் சொல் குறிக்கின்றது.

சிவாயநம எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவரும், ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவருமாவார் நந்திதேவர் என்கின்றன புராணங்கள்.

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில்  அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுகிறார். அழிவே இல்லாதது தருமம். அது ரிஷப வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த தர்ம வடிவான நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.  இறைவனைத் தாங்கும் தர்மத்தின்  மூச்சுக்காற்றுதான் அவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், நந்தீசர், நந்தீஸ்வரர், நந்தியெம் பெருமான் இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்கள் நந்திக்கு உள்ளன.

 நந்தி வழிபாடு பல்லாயிரம் ஆண்டுகளான பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சிவன் மற்றும் நந்தியின் வழிபாடுசிந்து பள்ளத்தாக்கு நாகரீக காலத்தில் இருந்திருக்கிறது. மேலும் மொகங்சதாரோ மற்றும்  ஹரப்பாவிலும் பல காளை முத்திரைகள் கண்டறியப்பட்டிருகின்றன..

 புராணங்களில் நந்தி, சிலாத  முனிவரின் மகன் என்று கருதப்படுகிறார். வீதஹவ்யர்  என்னும் முனிவர்,அறியாச்சிறு வயதில் சிவனடியாரின் அன்னப் பாத்திரத்தில் கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கி “சிலாத முனிவர்’ என்ற பெயர் பெற்றார். இவரது மனைவி சித்திரவதி.

 ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர், யாகம் புரிய அகழ்ந்தெடுத்த மண்ணிலிருந்து கிடைத்த மகவே செப்பேசன். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய செப்பேசன் ஈசனையே அகத்தில் நினைத்திருந்தார். இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்த செப்பேசுவரரின்   திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செப்பேசுவரரின் தவவலிமையையும் உறுதியையும் கண்டு மகிழ்ந்த இறைவன்,  அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிலைத்த பதினாறு பேறுகளையும் வரமாக அருளி,  செப்பேசனுக்கு நந்தீசன் என தீட்ச நாமம் சுட்டி தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு, தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும்  அளித்தார்.

அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமான ரிஷபமாகவும் ஆனார் செப்பேசர்.  சிவபெருமானே நேரடியாக சிவாகமங்களை நந்தி தேவருக்கு போதித்து அருள் செய்தார். இறுதியாக நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்திய இறைவன், நந்தீஸ்வரருக்கு வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை திருமணமும் செய்துவைத்தார். சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. கயிலாயத்தில் சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். அதனால்தான் நாம் செய்துகொண்டிருக்கும் வேலையில் யாராவது தடையிட்டால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்கிறோம்.  

நந்திகேஸ்வரர்

நந்தி புராணத்தில் நானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்கிறார் சிவன் திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதற்கு சமமானது ஆகும்.


          சிவன் கோயில்களில் சிவ ஆகமங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்  ஐந்து நந்திகள்.

கைலாய நந்தி:

 அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே இருப்பவர். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாய நந்தி என்ற பெயர்.

அவதார நந்தி:

அவதார நந்தி சிவாலயங்களில் கைலாய நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமாலே நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

அதிகார நந்தி:

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவது. கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம்  உள்ளதால் இவருக்கு அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. இவர் உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பார்

சாதாரண நந்தி;

சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருக்கும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

மஹா (பெரிய) நந்தி:

பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் விஸ்வரூபத்தில் எந்நேரத்திலும்  காவலனாக இந்த நந்தி இருப்பார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

லேபாக்‌ஷி

கொடிமரத்தருகில் இருப்பது ஆத்மநந்தி, கருவறை பின்புறம் இருப்பது விருஷப நந்தி ,  கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி  காட்சி தருவது பிரகார நந்தி இவையல்லாது இன்னும் பலவகை நந்திகள் சிவாலயங்களில் காணப்படுகின்றன.

சிவபெருமான் ஆலயங்கள்  என்றாலே சிறிய அளவிலான நந்தியாவது அமைந்திருக்கும். பல பெருமைகளை உடைய நந்திதேவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் உள்ளன. இந்தியாவில், குறிப்பாக, தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நந்திகள் அமைந்துள்ள கோயில்கள் நிறைய உண்டு.        

ஐந்து  மிகப்பெரிய நந்திகள்:


1. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.


2. வீரபத்ரர் கோயில், லேபாக்ஷி

ஆந்திரப்பிரதேச மாநிலம் லேபாக்ஷியில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது. இந்த நந்திதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலையாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியும் இதுவே. இச்சிலை 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்டது.


3. சாமுண்டி மலை, மைசூர்

மைசூரில் உள்ள சாமுண்டி மலையில்  1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது. இது 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது.


4.  பசவனகுடி பெங்களூர்

பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் இந்த நந்தி சிலை அமைந்துள்ளது. இந்தக் கோயில் இருக்கும் இச்சிலை 15 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டது.

5. ஹோய்சாலேஸ்வரர் கோவில் ஹலேபீடு

 12-ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது. ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் 14 அடி உயரம் கொண்ட இரண்டு ஒற்றைக்கல் நந்தி சிலைகள் காணப்படுகின்றன.

 
நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலையை சாற்றி, அரிசிமாவில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து  வழிபடலாம். இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

இரட்டை நந்தி

   கோயில்களில் நந்தியை தரிசிக்காமல்  சிவபெருமானை தரிசிக்க முடியாது. ஆனால் நந்தியை மட்டுமே தரிசனம் செய்தால் கூட சிவபெருமானை தரிசித்த முழுபலனும் கிட்டும்.   

 ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பதால்தான்  கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு  குணங்களை வெளிப்படுத்தும் கால்களில், முன்பக்கத்து வலது கால் சற்றே உயர்ந்திருக்கும். அது  ஞானமார்க்கத்தை குறிக்கும். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கிக் கொண்டு நாலம் பாதமாகிய ஞானப்பாதத்தினால்  பரம்பொருளைக் கண்டு கொண்டிருக்கிறது என்கிறது ஆகம நூல்கள்.

  சில ஆலயங்களில் நந்தி நின்றகோலத்திலும் காட்சியளிக்கிறார். இன்னும் சில கோவில்களில்  கோவில் வாசலை நோக்கியபடி இருக்கும் நந்திகளும், காதற்ற. ஒரு காலற்ற, சற்றே ஈசனைவிட்டு விலகி நிற்கும்,  பக்தர்கள் தன் செவியில் குறைகளை சொல்ல ஏதுவாக தலையை சாய்த்தபடி, வாயிலிருந்து நீரூற்று வந்துகொண்டிருக்கும் நந்தி, இரட்டை நந்தி, ஒருபாதி மனித உருவிலும் பின்பாதி காளைவடிவிலும் இருக்கும் நந்தி, என பல்வேறு வடிவங்களிலும், அமைப்புக்களிலும், நிலைகளிலும் நதியை காணமுடியும்.

நின்ற நிலையில் நந்தி


    நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது. இங்கு சிவனும் சக்தியும் கூட உருவமின்றி விளங்குகின்றனர். இத்தலம் மாணிக்கவாசகப் பெருமானால் கட்டப்பட்டது. நாகப்பட்டினம் திருநாங்கூரில் இறைவன் திருமணத்திற்கு சீர் கொண்டு வரும்பொருட்டு திரும்பி நிற்கும் நிலையில் சுவேத நந்தியும் இறைவனை பார்த்தபடி இருக்கும் மதங்க நந்தியையும் ஒருசேரக் காணலாம்.

மதங்கீஸ்வரர் ஆலய நந்திகள்

ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், நந்தியாலுக்கு அருகிலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் மகாநந்தி. சிவபெருமான் மகா நந்தீஸ்வரராக அருள்புரியும் இத்தலத்திருக்கும் சுயம்பு  லிங்கத் திருமேனியில் பசுவின் குளம்படிகளை இன்றைக்கும் காணலாம். இந்த லிங்க மூர்த்தத்தின் அடிப்பகுதியில் சுரக்கும் தீர்த்தமே இத்தலத்தின் குளங்களில் நிரம்புவதாக நம்பிக்கை!

காநந்தி தலத்தைச் சுற்றி சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில், விநாயக நந்தி, கருட நந்தி, சூரிய நந்தி, சோம நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, பிரம்ம நந்தி, நாக நந்தி ஆகிய நந்திகளுடன் இந்த தல நந்தியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நந்தி தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது தலங்களும் ‘நந்தி மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்திகளுக்கு நாயகனாக, மகாநந்தியில் உள்ள சிவன் மகாநந்தீஸ்வரர் திகழ்கிறார்.  

வழிபடும் முறை;  சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப்  பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின்னரே சிவபெருமானை வழிபட வேண்டும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று,  இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும்.  

நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி  சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும் நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும்,  சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும் நல்லொழுக் கமும் கிடைக்கும். எல்லா வற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.

’நந்திவழிபாடு நற்கதியளிக்கும்’

கடுகு- Mustard

வாசனை மற்றும் மசாலாபொருட்களின் தேசமான,உலகின் மசாலாப்பொருட்களின் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் இந்தியா  ( Land of Spices / Worlds Spice Bowl) அனைத்து மசாலாப்பொருட்களின் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனமான ISO பட்டியலிட்டிருக்கும் 109 மசாலாப்பொருட்களில் 75 இந்தியாவில் விளைகின்றது. இந்தியா இவற்றின் உற்பத்தி, உபயோகம் மற்றும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருந்து உலக வாசனைப்பொருட்கள் வர்த்தகத்தில் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்கா, சீனா, வியட்நாம், வளைகுடா நாடுகள், ஜெர்மனி, மலேஷியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்திய மசாலாபொருட்களை மிக அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. இந்திய மசலாப்பொருட்களின் நறுமணம், தரம் மற்றும் சுவை  உலகநாடுகளின் விருப்பத்துக்குகந்ததாக இருந்துவருகின்றது.

வறுத்தும்,அரைத்தும் பொடித்தும் தாளித்தும் பலவிதமானஇயற்கைச் சேர்மானங்கள் சேர்க்கப்பட்டு, உலகெங்கிலும் மிகப்பிரபலமாக உள்ள, அறிவியல் அடிப்படையிலான இந்தியச்சமையலில், குறிப்பாக தென்னிந்திய சமையலில் மசாலாபொருட்களின் இடமும் பயனும் மிககுறிப்பிடத்தகக்து. பல மருத்துவ குணங்களும் சத்துக்களும் நிறைந்த இடுபொருட்கள் இந்தியச்சமையலில் நிரந்தர இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் தாளிதம் செய்யும் மசாலாபொருட்களில் மிக முக்கியமானது கடுகு. கடுகு பல வகைப்படும்.  முழுவிதையாக, எண்ணெயாக, பொடியாக, அரைத்த விழுதாக என்று பல விதங்களில் சமையலில்  கடுகு உபயோகப்படுத்தப்படுகின்றது

கடுகுச்செடிகளின் நீளமான பச்சைக்காய்களின் சிறிய உருண்டை விதைகளே கடுகு எனப்படுகின்றது. ஐரோப்பாவை தாயகமாகக்கொண்ட கடுகின் உலகளாவிய பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது.  கடுகில் சுமார் 40க்கும் அதிகமான வகைகள் உள்ளன.

பிரேசிகேசியே குடும்பத்தை சேர்ந்த கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு சிறிய செங்கடுகு பெரிய செங்கடுகு என பலவகைகள் உண்டு.  90 லிருந்து 160 நாட்களுக்குள் முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகும் கடுகுச்செடி நீளமான பசும் இலைகளுடன் மென்மையான இளம் பச்சை தண்டுகளுடனும் இருக்கும். 90 செ மி லிருந்து 4 அடி உயரம் வரை இவை  வளரும்.  கூட்டல் குறியைப்போன்ற வடிவில் அமைந்திருக்கும் நான்கு  மஞ்சள் இதழ்களுடன் கூடிய அழகிய  சிறுமலர்கள் இருக்கும். 

சிலிகுவா (siliqua) என்றழைக்கப்படும் இச்செடியின் காய்களுக்குள்ளே சிறிய கடுகு விதைகள் பொதிந்து இருக்கும். கடுகு விதைகள் 1-2 மி மீ அளவில் இருக்கும்

பலநாடுகளில் கடுகு பயிரிடப்படுகின்றது. களைச்செடியாகவும் கடுகுச்செடிகள் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் செழித்து வளரும். வெள்ளைக்கடுகு  white mustard (Sinapis alba)  வட அமெக்காவின் காடுகளில் இயற்கையாக விளைந்து அங்கிருந்து உலகின் பிற பாகங்களுக்கு சாகுபடி மூலம்  பரவியது.

தங்க மஞ்சள் கடுகு oriental mustard (Brassica juncea),  இமாலய மலைபிரதேசங்களில் வளர்ந்து பின்னர் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் டென்மார்க்கிலும் சாகுபடி செய்யப்பட்டு பரவலாகியது

brown, yellow and oriental mustard seeds

 கருப்பு கடுகு  black mustard (Brassica nigra) அர்ஜெண்டினாவை சேர்ந்தது அங்கிருந்து சிலி, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் சாகுபடி செய்யபட்டு பரவலகியது

நசுக்கப்பட்ட கடுகு சேர்த்த வைனை குறிப்பிடும் லத்தீன் சொற்களான  ‘mustum ardens’(burning wines) என்பதிலிருந்தே  mustard எனப்படும் ஆங்கிலப்பிரயோகம் வந்தது.

காரசாரமான கடுகு உணவுகளை சாப்பிடுகையில் கண்களில் நீர் வருவதால், பண்டைய கிரேக்கர்கள் கடுகை ‘ கண்ணுக்கு தொந்தரவு தருகின்ற ஒன்று’ ( Si ‘na-pi’ ) என்றழைத்தனர்.

 சிந்துச்சமவெளியின் சன்ஹூதரோ பகுதி அகழ்வாய்வில் கடுகின் பயன்பாடு  இருந்ததற்கான சான்றுகள் கிடத்துள்ளன. உலகெங்கும் கடுகை பிரபலமாக்கிய பெருமை ரோமானியர்களையே சேரும். கடுகை சாகுபடி செய்து ஏற்றுமதியும் செய்துகொண்டிருந்த ரோமனியர்களிடமிருந்து 10 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ்  மடாலயத்தின் துறவிகள், சாகுபடி நுட்பங்களை கற்றுக்கொண்டு அங்கும் சாகுபடியை துவங்கி இருக்கின்றனர்

பாரீஸ் அரசகுடும்பத்தினரின் உணவுகளில் கடுகின் பயன்பாட்டை குறித்த  1292 ன் எழுத்துப்பதிவுகள் கிடைத்துள்ளன. பிரான்ஸ் 13 நூற்றாண்டின் மிக முக்கிய கடுகு சாகுபடி மற்றும் பயன்பாட்டிற்கான இடமாக இருந்திருக்கிறது. அங்கு  1336ல்  நடைபெற்ற ஒரு விருந்தில்  ஒரே நாளில்  320 லிட்டர் கடுகு க்ரீமை உண்டதற்கான வரலாற்றுக்குறிப்பும் உள்ளது

1904 ல் அமெரிக்காவில் நடந்த ஒரு  பன்னாட்டு கண்காட்சியில் தான் முதல்முதலாக பிரபல உணவு வகையான ஹாட் டாக்கில் (hot dog) கடுகு சாஸின் சேர்மானம் அறிமுகம் செய்யபட்டு பின்னர் உலகெங்கிலும் பிரபலமாகி இருக்கின்றது.( St. Louis world fair Missouri 1904)

மத வேறுபாடிகளின்றி பல மதநூல்களில் கடுகு குறிப்பிடப்பட்டிருக்கின்றது

புனித வேதகாமத்தில், இயேசு தனது போதனைகளின் போது கூறியதாக மூன்று நற்செய்திகளில் கடுகு குறிப்பிடப்பட்டுள்ளது.

//இஸ்ரேலில் விதைக்கப்பட்ட விதைகளில் மிகவும் சிறியது கடுகே//

 // பரலோக அரசாங்கம் என்பது கடுகு விதையைப்போன்றது//

  // உங்களுக்கு கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட உங்களால் கூடாத காரியம் ஏதுமில்லை/

”தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்”  என்கிறது இஸ்லாம்

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன். என்கிறது குர் ஆன்.

சங்கத்தமிழர்கள் கடுகினை ஐயவி என்றனர். மணிமேகலை பேய்கள் பயப்படும் பொருட்களில் ஒன்றாக கடுகை குறிப்பிடுகின்றது. போரில் காயமுற்ற வீரனை இரவில் குருதி குடிக்கும் பேய்களிடமிருந்து காப்பாற்ற கடுகுப்புகையிட்டதை சொல்கின்றது புறநானூறு

பிறந்த குழந்தையை பேயணுகாதிருக்க அதன் தலையில் கடுகைஅரைத்து பூசும் வழக்கமிருந்ததை நற்றிணை  குறிப்பிடுகிறது.கடுகும் நெய்யும் சேர்த்த குழைத்த சோறு, கடுகன்னம் என்று பண்டைய தமிழர்களால் உண்ணப்பட்டிருக்கிறது.

பழந்தமிழர் இறப்பு சார் நிகழ்வுகளில் இறுதி ஊர்வலத்தின் போது கடுகு சிதறுதல் வழக்கத்தில் இருந்திருக்கிறது.   பண்டைய இந்தியாவில் கடுகை வீட்டிற்கு  வெளியே இறைத்துவிடுவது  துஷ்டசக்திகள் வீட்டினுள் நுழையாமலிருக்க உதவும் என்னும்  நம்பிக்கை நிலவியது.

கடைக்கண்ணை பாவையர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.‘ – என்பது காதலின் வலிமையைப் பற்றி பாரதிதாசன் பாடியது

’’கடுகுப்பூக்களை பார்த்தல்’’ என்பது ஒர் அதிர்ச்சிக்கு பின்னர் திகைத்து நிற்பதை குறிக்கிறது நேபாளத்தில்

பிரான்ஸில் ’’கடுகு மூக்கில் ஏறிவிட்டது’’ என்பது கோபப்படுதலுக்கு இணை வைத்துச் சொல்லப்படும் ஒரு வாக்கியம்

தமிழிலும் உண்டு கோபமான பேச்சை சொல்லுகையில்  ”பேச்சில் கடுகு பொரிந்தது” என்று சொல்லும் வழக்கம்.

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

போன்ற முதுமொழிகளும் தமிழகத்தில் பிரபலமானவையே!

கடுகை நறுமணமூட்டியாக பயன்படுத்துவதை குறித்து பெளத்த நூல்களும் சொல்கின்றன

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமின் மிகச்சிறந்த உணவு நிபுணரும் ஆடம்பர உயர்தர உணவு வகைகளை உருவாக்கும் கலையை அறிருந்தவருமான   ஆபிக்யூஸ் (Marcus Gavius Apicius) என்பவரே இன்று நாம் உபயோகப்படுத்தும் கருங்கடுகின் பல உணவுச்சேர்மானங்களை அவரது சொந்தத்தயாரிப்பாக உருவாக்கினார். அவரது தயரிப்பான கடுகு, உப்பு, வினிகர், ஆல்மண்டுகள், பைன் கொட்டைகள் ஆகியவை சேர்ந்த ஒரு தயாரிப்பு இன்றும் ரோமில் மிகப்பிரபல உணவு வகையாக இருந்து வருகின்றது. ரோமானியர்களின்  பிரபல சமையற்கலை நூல்கள் abicius என்னும் பெயரிலேயே  உள்ளன.

19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குடும்பத்தொழிலாக கடுகு உணவுகளை தயாரித்த ஜெரோமியா கல்மேன் (Jeremiah Colman) என்பவர் பிரிட்டிஷ் பேரரசின் மீதே கடுகுப்பொடியைத் தூவி நிரப்பினார் என்கிறது வரலாறு அவரது நிறுவன தயாரிப்புக்களான கடுகுப்பொடி வகைகள் அக்காலகட்டத்தில் தண்ணீரிலும், பீரிலும் பாலிலும் கலக்கப்பட்டு, பரவலாக விரும்பி அருந்தப்பட்டன. J.& J.  Colman என்னும் அந்நிறுவனம் அப்போதே 200 பணியாட்களை அமர்த்தியிருந்தது. இன்று வரையிலுமே இந்நிறுவனம் கடுகுத்தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகின்றது

வெண்கடுகைவிட  (Brassica alba) கருங்கடுகில் (Brassica nigra) தான் காரம் மிகுந்து காணப்படும். மிதமான நறுமணம் உள்ள மஞ்சள்/வெள்ளைக்கடுகு  (Sinapis alba)  வட அமெரிக்க உணவு வகைகளில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றது. அடர் காப்பிக்கொட்டை நிறத்திலிருக்கும்  கடுகின் சுவை (brown mustard-Brassica juncea)aஉலகெங்கிலும் விரும்பப்படுகின்றது. தங்க மஞ்சள் நிற கடுகுதான் (Oriental mustard-Brassica juncea)  கடுகு வகைகளில் முக முக்கியமானது. ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இந்த கடுகின் விழுது பெருமளவில் உபயோகத்தில் இருக்கிறது. இதன் பொடியும் சூப்களிலும் சாஸ்களிலும்  அதிகமாக சேர்க்கப்படுகிறது.

கடுக்குக்கென்று தனியே சுவை இல்லை. கடுகின் மேல்தோல் அகற்றப்படும் போது  மைரோஸினேஸ் எனப்படும் நொதியம் (enzyme) வெளிப்படுகிறது. . இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம்.  கடுகு நீருடன் சேர்கையில் அலைல் ஐஸோ தையோனேட் என்னும் காரமான நெடியுடைய வேதிப்பொருள் வெளிப்பட்டு எரியும் நெடி வருகின்றது..

 கடுகில் செலினியம், மெக்னீசியம் , உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம் போன்ற, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் இதில் உள்ளன

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்தும்,  கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

கடுகுச்செடியின் எல்லாப்பாகங்களுமே பயனுள்ளவை. இந்திய கடுகுக்செடியின் (Brassica juncea) கீரையும் உணவாக பயன்படுகின்றது. முளைவிட்ட கடுகு ஆரோக்கிய உணவில் மிக முக்கியமானது. இதில் அதிக கலோரி ஆற்றலும்  நார்ச்சத்தும் ஆண்டிஆக்சிடண்ட்களும், வைட்டமின் K,A,C, கால்சியம், இரும்புச்சத்து பொட்டாஷியம், மேங்கனீஸ் உள்ளிட்ட பல தாவர வேதிச்சேர்மங்களும் நிறைந்துள்ளன கடுகில் மூன்றில் ஒரு பங்கு எண்ணையும் நான்கில் ஒரு பங்கு புரதமும் உள்ளது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.

நியாசின் (விட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன

 மிதமான காரமும், நெடியும், கசப்புமான கடுகின் இயல்பு பலவகையான உணவுகளுக்கு பொருத்தமானதாக இருப்பதால் உலகநாடுகளின் விருப்பத்துகுரிய சுவையாகிவிட்டிருக்கிறது

இந்திய சமையலில் கடுகை வறுத்தோ அலல்து  சூடான எண்ணெயில் பொரித்தோ, மேல் தோலை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடித்தோ அல்லது அரைத்த விழுதாகவோ அல்லது முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட தையோ  உணவில் பயன்படுத்துகிறார்கள்.

கடுகின் மருத்துவப்பயன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தெ அறியப்பட்டிருக்கின்றது. உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பே கடுகு கிரேக்கர்களால் பல்வலிக்கும் ரத்தஓட்டத்தை சீராக்கவும் பசியுணர்வை தூண்டவும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது. பூச்சி, வண்டு கடி , தேள் விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.

வேனல் கட்டிகள் குணமாக  கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. முடக்கு வாதம், ரத்தச்சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்த்மாவிற்கு தொடர்ந்து கடுகை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல சிகிச்சையாக இருக்கும்.

இருமலை கட்டுப்படுத்தும், ஜீரணத்தை  சீராக்கும், ஒற்றை தலைவலியை போக்கும, விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. 

  கடுகை மருந்தாகவோ உணவகவோ எப்படி பயன்படுதினாலும்  குறைந்த அளவிலேயே உபயோகப்படுத்த வேண்டும்.அதிகளவில் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி ஏற்படும்..

கடுகு எண்ணெய்

 பிரான்ஸின்  கடுகு தலைநகரென அறியப்படும் பர்கண்டியிலுள்ள டீஜான் நகரில் நிலத்திலிருக்கும் பொட்டாசியம் சத்தினால் மிகச்சிறப்பான கடுகு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது பிரான்ஸ் 80 சதவீத கடுகை கனடாவிலிருந்து இறக்குமதி செய்தாலும் டீஜன் கடுகு உலகப்பிரசித்தம்

இங்கிலாந்தின்  பிரபல கடுகுத்தயரிப்பான கோல்மான் (Colman’s) ஜெர்மனியின்   பாரம்பரிய கடுகு தயாரிப்பான க்யூன்,(Kühne), பிரான்ஸின் அமோரா மற்றும்  மெய்லீ Amora (Unilever), Maille , நெதர்லந்தின் மர்னெ (Marne )ஆகியவை உலகப்புகழ் பெற்ற கடுகுஉணவுகள்.

 இந்தியாவில் வட இந்தியப்பகுதிகளில் கடுகு அதிகம் விளைவிக்கபடுகின்றது.. மேற்கு வங்கத்தை கடுகு உணவிற்கான மாநிலமென்றெ சொல்லிவிடலாம். கடுகெண்ணை சமையல், கடுகுப்பொடி உபயோகம் என்று சைவம், சைவம் இரண்டிற்குமே கடுகை பிரதானமாக உபயோகபடுத்துவார்கள் இம்மாநில மக்கள். ஜப்பானில் சுஷி மீன் உணவுடன் தரப்படும் காரசாரமான வசாபியைப்போலவே வங்காளத்தின்  கடுகு சேர்த்து செய்யப்படும் கசுண்டி எனப்படும் கண்ணில் நீர் வரவழைக்கும் சுவையான  உணவு வகை ஒன்று மிகப்பிரபலம். மீனுணவில் கடுகைச்சேர்ப்பது காஷ்மீரி மக்களின் வழக்கம்.

கசுண்டி

உலகெங்கிலும் சுமார்  700 மில்லியன் பவுண்டு கடுகு ஒரு வருடத்தில் உட்கொள்ளப்படுகின்றது உலகிலேயே கடுகை உணவில் அதிக அளவில் பயன்படுத்துவது அமெரிக்கர்கள் தான். தேசிய கடுகு தினம் அமெரிக்காவில் ஆகஸ்டின் முதல் சனிக்கிழமையில் கடுகு தொடர்பான கேளிக்கைகளும் விளையாடுக்களும் , உணவுப்பொருட்களுமாக விமர்சையாக கொண்டாடப்படும்

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள, திரட்சைதோட்டங்களுக்கும் வை தொழிற்சாலைகளுக்கும் பிரசித்தி பெற்ற  நாபா கவுன்ட்டி (Napa County) பகுதியில் வருடம்தோறும் கடுகுத்திருவிழா மிக விமர்சையாக நடக்கும்.

Napa valley

 கடுகு வாயு என அழைக்கப்படும் முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட, லட்சக்கணக்கணவர்களின் மரணத்திற்கு காரணமாயிருந்த     இரசாயன திரவமான Mustard gas என்பதற்கு கடுகுடன் எந்த தொடர்பும் இல்லை காரமான நெடியுள்ளதாலும், மஞ்சள் நிற புகையினாலும் இப்பெயர் வந்திருக்கலாம்

mustard gas

 பிராசிகேஸியே குடும்பத்தைச் சேர்ந்த, முட்டைகோஸ் மற்றும் கடுகு  வகைகளின் மரபணு மூலத்தையும், உலகெங்கிலும் தற்போதிருக்கும் கடுகுகளின் மரபணுத்தொடர்புகளையும் கணக்கிடும்  சுவாரஸ்யமான  முறை ’’U முக்கோணம்’’(U triangle) எனபடுகின்றது.  இது 1935ல்  வூ ஜங் சூன் (Woo Jang-choon) என்னும் கொரிய தாவரவியலாளரால் உருவாக்கப்பட்டது 

அரிதான அருங்காட்சியங்களின் ஒன்றான  தேசிய கடுகு  அருங்காட்சியகம் அமெரிக்காவின் விஸ்கான்ஸினில் உள்ளது  18986. பேரி லீவென்சனால் (Barry Levenson,) துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தற்போது 60 நாடுகளிருந்து  தருவிக்கபட்ட 5,300 கடுகு வகைகள் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது,

கடுகின் வரலாறு மற்றும் அரிய தகவல்களையும் இங்கு அறிந்துகொள்லலாம்.காலை 10 லிருந்து மாலை 5 மணி வரை திறந்திருக்கும்  இங்கு அனுமதி இலவசம். இங்கு இருக்கும் உணவகத்தில் பலதரப்பட்ட கடுகு சேர்க்கப்பட்ட உணவு வகைகள் இலவசமாக சுவைக்கவும் கிடைக்கின்றது

Mustard Museum

 உலகின் மொத்த  கடுகு உற்பத்தியில் கனடா முதல் இடத்திலும் ,   தொடர்ந்து நேபாளமும், மியான்மரும், ரஷ்யா மற்றும் சீனாவும் இருக்கின்றன.  இந்தியா இந்த வரிசையில் 10 ஆவது இடத்தில் தான் இருக்கின்றது.

காஷ்மீர கடுகு வயல்

கங்காபுரம்

 கவிஞர், எழுத்தாளர்  வெண்ணிலாவின் வரலாற்று நாவலான கங்காபுரம் முதல் நாவல் என்று சொல்லிவிடவே  முடியாதபடிக்கு  நல்ல செறிவான கதையோட்டத்துடன் இருக்கின்றது. சிக்கலான பழைய வரலாற்றை சொல்லும் நூலென்றாலும்  அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் புரியும்படி அதிகம் அடர்த்தியில்லாத எளிய  மொழி நடை, அருமையான வர்ணனைகள் மற்றும் கதாபாத்திர சித்தரிப்புக்கள், வரலாற்றுக்கதைகளில் வாசகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வீரம், காதல், இறைமை, அரசியல் புகைச்சல், போட்டிகள், சதி, உளவு என அனைத்தையும் சரி விகிதத்தில்  கலந்து திகட்டாமல் கொடுத்து மிகச்சிறப்பானதொரு தொடக்கத்தை அளித்து விட்டி்ருக்கிறார் வெண்ணிலா!

எனக்கு வரலாற்று நாவல்களில் எப்போதுமே தனிப்பட்ட பிரியமுண்டு. அம்மா வரலாற்று ஆசிரியை அப்பா தமிழாசிரியர்.  எனக்கும் அக்காவிற்கும் சங்கமித்திரை லோகமாதேவி என்றே பெயர். சிறுமியாக இருக்கையிலேயே எனக்கு வரலாறு, குறிப்பாக சோழப்பேரரசுடையது பரிச்சயமாயிருந்தது. முன்பும் இவ்வரலாற்றை வாசித்தறிந்திருக்கிறேன் என்றாலும் கங்காபுரம் சோழப்பேரரசின் மற்றோரு பரிமாணத்தை காட்டியது. அதுவும் மிக சுவாரஸ்யமாக!

பேரரசி லோகமாதேவியின் நானறியாத முகமொன்றை முதன்முதலில் கங்காபுரத்தில் தான் காண்கிறேன். பிள்ளைப்பேறற்றவர் என்னும் கரிசனமும் ராஜேந்திரனின் அரசியல் வாழ்வில் அவர்களால் ஏற்பட்ட தொய்வுமாய் அவர்மீது கலவையான, கசப்பும் விருப்பும் கனிவும் கலந்த ஒரு அபிப்பிராயம் உண்டாயிருந்தது.

பல வர்ணனைகள் உவப்பாக இருந்தன. குறிப்பாக பெண்களின் உடை, ஆபரணங்கள், மலர் சூடிக்கொள்ளுவது, இறையுருவங்களின் அலங்காரங்கள் இவையெல்லாம். ஆர்வமாக  வாசித்தேன்  சில குறிப்பிட்ட பக்கங்களை மீள மீள வாசித்தேன.  நங்கை குளித்து விட்டு கரையேறுகையில் குளமும் கூடவே வரும் அந்த கற்பனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது

சதுரத்தடிகளார் பச்சிலையில் விளக்கேற்றும் காட்சியும் அப்படித்தான் எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமானதொன்றாகிவிட்டது வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம் இருக்கிறது அதில் இருக்கும் பேய்மிரட்டி என்னும் துளசிக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு செடியின் பசும்  இலைகளை திரியைப்போலவே விளக்கேற்றுவோம்.

மரங்களின் வகைகளை தெரிவு செய்யும் முறைகள் உள்ளிட்ட பல தாவரஅறிவியல் தகவல்கள் ஆர்வமூட்டின.  மிகமுக்கியமான தாவரவியல் தகவல்கள் இருந்ததால் கங்காபுரம் எனக்கு பிரியப்பட்டதொன்றாகி விட்டது. மரங்களில்  மலரமைப்பின் இனப்பெருக்க உறுப்புக்களல்லாது ஆண் பெண் என இனம் கண்டுகொள்ளுவது, முப்பழங்கள் எனப்படும் கடுக்காய் நெல்லி தான்றிக்காய்களை கொண்டு செய்யப்பட்ட பல தயாரிப்புக்கள்  உள்ளிட்ட பலவற்றை குறிப்பெடுத்து கொண்டிருக்கிறென். அவற்றைக்குறித்து இன்னும் விவரங்கள் அறிந்துகொண்டு கட்டுரை எழுத உத்தேசித்து இருக்கிறேன்.

புஷ்பவிதி என்னும்  நூலில் பூசனைகளுக்கு பயன்படுத்தப்படும் தோஷமற்ற மலர்களைக்குறித்து சொல்லியிருப்பவற்றை மிகச்சரியாக சொல்லி இருக்கிறது கங்காபுரம்.. கங்காபுரம் மிக முக்கியமான ஒரு ஆவணம். இதன் பின்னிருக்கும் ஆசிரியரின்  ஏராளமான உழைப்பையும் யூகிக்க முடிந்தது

ஜெ அவர்களின் குருநித்யா கூடுகையொன்றிற்காக ஊட்டி வந்திருந்தபொது அறிமுகமான  சிற்ப சாஸ்திர நிபுணர் திரு சுவாமிநாதன் அய்யா அதன்பிறகு எனக்கும் பலவற்றை கற்றுக்கொடுத்திருந்தார். குறிப்பாக கோவில் கட்டுமான விதிகளை. அவற்றைக் குறித்து கொஞ்சம் தெரிந்திருந்ததால் கங்காபுரத்தின் அந்த இடங்கள் எனக்கு வாசிக்க  விருப்பதுக்குகந்தைவையாக இருந்தன. ஜெ தளம் வாயிலாக இப்படி பல முக்கியமான ஆளுமைகளை  அறிந்து கொண்டிருக்கிறேன். அவருக்கு  என் வாழ்நாள் முழுவதுமே நன்றி சொல்லிக்கொண்டிருப்பேன் போலிருக்கிறது

தஞ்சைப்பெரிய கோவிலைக்குறித்து பலநூறு நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. தஞ்சைபெரியகோவிலால் மறக்கப்பட்ட புறக்கணிக்கப்ட்ட கோவிலொன்றக்குறித்தும் அதிலிருந்து துவங்கி சொல்லப்பட்ட சோழப்பேரரசின் கதையையும் இப்போதுதான் கங்காபுரத்தில் அறிந்துகொண்டேன். ராஜேந்திரசோழனின் மனைவியின் பெயர் சுத்தமல்லி என்பதுவும் எனக்கு இதுவரை தெரிந்திருக்கவில்லை. எத்தனை அழகிய பெயர்!

  அரசகுடும்பத்தினர், அமைச்சர்கள் பேசுகையில் வரும் சொல்லாட்சி குடிமக்கள் அவர்களுக்கிடையில் பேசுகையில் தேவைக்கேற்ப மாறுவதே தெரியாத  நுட்பமான மாறுதல்களுடன் இருந்தது, ராஜேந்திரர் வீரமாதேவியிடன் பேசுகையிலும் அப்படியே.  பெரிதாக வாசிப்பவர்களுக்கு வித்தியாசம் தோன்றும்படி இல்லாது கதையோட்டத்திலேயே நாங்களும் இழுத்துக்கொண்டு போவதைப்போல இணைந்திருக்க முடிந்தது.

அட்டை வடிவமைப்பும் மிக நேர்த்தி. இறுதியில் glossary இருந்தது வசதியாக இருந்தது. பண்டாரம் என்னும் சொல்லுக்கெல்லாம் பொருளறிந்து கொண்டபின் வாசிப்பு இலகுவானது. இண்டை என்னும் சொல்லுக்கு பொருளைத் தேடி, வழக்கத்துக்கு மாறான நீண்ட தண்டான ’இண்டு’ உடைய  தாமரையே ’இண்டை’ என புதிதாக அறிந்துகொண்டேன். இப்படி பல புதிய திறப்புக்களும் கங்காபுரம் எனக்களித்தது

இரண்டாம் பாகம் சடுதியில் முடிந்துவிட்டதோ என்று தோன்றியது. இன்னும் சிலரை குறித்து விவரமாக சொல்லி இருக்கலாமே என்று நினைத்தேன். குறிப்பாக அழகி.  ஒரு நல்ல படைப்பு இன்னும் இன்னும் என வாசகர்ளை எதிர்பார்க்க வைப்பதுதானே!.

கங்காபுரம் வாசித்துமுடித்த பின்னர் லோகமாதேவியைக்குறித்தே அதிகம் நினைத்துக்கொண்டிருந்தேன் பிள்ளையில்லாதவர் என்னும் உண்மை என்னை என்னவோ கஷ்டபடுத்தியது. மிகப்புதிதாக தெரிந்துகொண்ட இந்த பெரிய விஷயம் எப்படியோ இருந்தது. மறுபிறப்புக்கள் இருந்திருந்தால் அவர் மீண்டும் மீண்டும் பிறந்து பேரன்னையாகவே வாழ்ந்திருப்பாரெண்ணிக்கொண்டே உறங்கிய அன்று அதிகாலை கனவொன்று கண்டு விழித்தேன் பெரும்பாலும் கனவுகள் நிறைய வரும் எனக்கு, அவை மறக்காமல் நினைவிலும் இருக்கும். என் கனவுகளை எழுதிவைக்கவே தலைமாட்டில் நோட்டுப்புத்தகங்களை வைத்திருக்கிறேன்  

அன்றைய கனவில் அரண்மனையைப்போலவோ அல்லது ஷாப்பிங் மாலைப்போலவோ ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தின் திறந்தவெளி முற்றத்திலிருந்த நீள அகலமான  படிக்கட்டில் என் மூத்த மகனுடன் அமர்ந்திருக்கிறேன் அறிமுகமற்ற இரு ஆண்கள் என்னிடம் பேச வருகிறார்கள். அந்த வழியே வந்த ஒரு பெரிய ஆடம்பரக்காரில் இருந்த புஷ்டியான, செல்வந்தர் வீட்டுபெண் போன்ற தோற்றம்  உடைய ஒரு இளம்பெண் எங்களைக் கூப்பிட்டு தன் சித்தியான ராணி தற்போதுஅங்குதான் இருப்பதாகவும் நாங்கள் கொஞ்சம் தள்ளிப்போய் பேசும்படியும் சொல்லுகிறாள். நான் மனம் குன்றிப்போகிறேன் ஆனாலும் உடனே விலகிச் செல்கையில் கால்களை ஒருக்களித்து அமர்ந்தபடி ஒரு முதியபெண் சற்றுத்தொலைவில்  திண்ணைபோன்ற உயரத்திட்டில் சற்று இருட்டில் அமர்ந்திருப்பதை பார்க்கிறேன். நல்ல களை  முகத்தில் கேரள தரவாட்டு  மூத்தம்மையைபோல, வெள்ளிநிறக்கூந்தல் அலையலையாக நெளிந்துபடிந்திருக்கிறது. தந்தநிறத்தில் தூய புடவையணிந்திருக்கிறார். என்னை  அவரருகில் அமரும்படி சைகை காட்டுகிறார் அமர்கிறேன் அவர் பாதங்களை கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறதெனக்கு செய்கிறேன் அவர் மலர்ந்து புன்னகைதபடி ’’இந்தா நல்லா ஆசிவாங்கிக்கோ’’ என்று தன் கால்களைநீட்டுகிறார். வெண்ணிற சிறிய சுருக்கங்கள் நிறைந்த பாதங்கள் பாதங்களின் நடுவில் நாட்டியமாடுபவர்களைப்போல குங்குமத்திலகமிருக்கிறது. மெட்டியைப்போல சிறு வளையமும்  ஒரு விரலில். நான் பாதங்களை தொட்டு வணங்குகையில் உடைந்து கதறி அழுகிறேன், அழுதபடியே இருக்கையில் என் பாரங்கள் குறைவது போலிருக்கிறது, விழித்துக்கொண்டேன். லோகமாதேவியிடம்தான் ஆசிவாங்கினேனா என காலையில் நினைத்துப்பார்த்தேன் .

என்னை பாதித்த, கடைசிக்கணம் வரையிலும் நினவிலிருக்கும் கதைகளில் கங்காபுரமும் உண்டு.

இன்று முழுநிலவு. பவளமல்லிகள் உதிரத்துவங்கியிருக்கும் நறுமணமிக்க இந்த  பின்னிரவில் தென்னைகளின் அடியில் அமர்ந்து நிலவின் புலத்தில் கங்காபுரத்தை உணர்வு பூர்வமாக வாசித்தது பெரும் மனநிறைவை அளிக்கின்றது.

மார்செல்லா- Marcella- A popular series in Netflix

Nordic noir, அல்லது Scandinavian noir, வகையைச்சேர்ந்த காவல்துறையினரின் பார்வையில்  சொல்லப்படும் குற்றப்புலனாய்வு கதைகளின் நெடுந்தொடர் ’’மார்செல்லா’’

இந்த மூன்று சீசன்களும் 24 பகுதிகளுமான  நெடுந்தொடரை எழுதி இயக்கி தயாரித்துமிருப்பவர் ஸ்வீடன் நாட்டு திரைக்கதாசிரியரும், 2011ல் வெளிவந்து 10 நாடுகளில் ஒளிபரப்பான புகழ்பெற்ற குறறப்பின்னணிக் கதையான‘ The Bridge’’ தொலைக்காட்சித் தொடரை எழுதி இயக்கியவருமான  (Hans Rosenfeldt,)  ஹான்ஸ்  ரோசன்.

விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத பரபரப்பாகவே செல்லும் கதைத்தொடர் இது. கடத்தல், கொலை, குடும்ப வன்முறை, காவல் துறை குற்றப்புலனாய்வு,  தாய்மை, காதல், பிறழுறவு, வன்முறை, போதை மருந்து, கடத்தல், ஊழல், இளமை, பயணம் ஆள் மாறாட்டம் , நம்பிக்கைத்துரோகம் என எல்லா அம்சங்களும் உள்ள ஒரு நெடுந்தொடர் மார்செல்லா. ஒவ்வொரு எபிசோடும் மிக சுவரஸ்யமாகவே கட்டமைக்கப்ட்டிருக்கிறது.

குடும்பத்தை கவனிக்கவென காவல்துறைப்பணியிலிருந்து விலகியிருந்த  காவல் அதிகாரியான மார்செல்லா 11  வருடங்களுக்கு  முன்பு தொடர் கொலைகள்  செய்துகொண்டிருந்த குற்றவாளி மீண்டும் கொலைகளை செய்யத்துவங்கிருக்கலாமென்னும் சந்தேகத்தின் பேரில்  அக்கொலைகளை விசாரிக்கவென மீண்டும் பணியில் இணைகிறார்.

சவாலான பணி, சீர்கெட்டுக்கொண்டிருக்கும் குடும்ப வாழ்வு, மனப்பிறழ்வு, கட்டுபடுத்தமுடியாத கோபம், இப்படி பலவற்றுடன் போராடும்  30களின் இறுதியில் இருக்கும் பெண் காவலதிகாரி மார்செல்லாவாக ’துணிந்து’ நடிப்பதில் பெயர் பெற்ற பிரிடிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான அன்னா ஃப்ரெயெல்  (Anna Friel) . அவரைத்தவிர வேறு யாராலும் இத்தொடரின் மார்செல்லா பாத்திரத்தை இத்தனை சிறப்பாக நடித்திருக்க முடியாது என்பதை பார்வையாளர்களை முதல் சீசன் முடியும் போதே உணர வைத்துவிடுவார். காவலதிகாரியாக நடிக்கையிலேயே, குடும்பத்தலைவியாக், கணவனின் அன்புக்கு ஏங்குபவளாக , நல்ல அன்னையாக கணவனின் துரோகத்தை தாங்க முடியாமல் சீறுபவராகவும் நடி்ப்பதென்பது பெரிய சவால். அன்னா இதை வெகு சிறப்பாக செய்திருக்கிறார். பொருத்தமான  உடற்கட்டும் கூட.

மார்செல்லாவின் கணவராக அன்னாவைபோலவே திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துகொண்டிருக்கும் புகழ்பெற்ற நடிகர்  நிக்கோலஸ். (Nicholas Andre Pinnock)

லண்டனை தலைமையகமாக கொண்ட பிரிட்டிஷ் தொலைக்காட்சியான ITV யில் 2016ல் ஒளிபரப்பான மார்செல்லா தற்போது நெட்ஃப்லிக்ஸில் கிடைக்கிறது.

முதல் தொடர்;

பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்கொலைகளை செய்த குற்றவாளி மீண்டும் அதே பாணியில்  மூன்று கொலைகளை செய்திருப்பதாக சந்தேகப்படுவது, அந்த குற்றப்புலனாய்வும் அதன் திடுக்கிடும் திருப்பங்களும், செல்வந்தரும் கணவன் பணியாற்றும் தொழில்குடும்பத்தின் வாரிசுமான் கிரேஸ் கொலையாவதும், அந்தகொலையை மார்செல்லாவே மனம்பிறழ்ந்திருந்த சமயத்தில் செய்திருக்கலாமென்ன்னும் சாத்தியமும் , இறந்துபோன கிரேஸுக்கும் மார்செல்லாவின் கணவனுக்குமான  பிறழ் உறவு , கிரேஸின் கர்ப்பம், குடும்ப வன்முறை குழந்தைகளுடனான் முரண், கணவன் மணவிலக்கு கோருவது,   என கலவையான, உணர்வெழுச்சிகளுடனான் கதைகள் நிறைந்தது இந்த முதல் தொடர்.

 இரண்டாம் தொடர்;

மார்செல்லாவின் மகனின் பள்ளித்தோழன் உட்பட பல குழந்தைகள் காணாமல் போய், பின்னர், தொடர்ந்து கொல்லப்படுவதை புலனாய்வு செய்யும் இந்த தொடரில்  குழந்தைகளுடன் உற்வுகொள்ளும் முன்னால் குற்றவாளி, ஒரு செல்வந்தர் , மிகப்பிரபலமானெ முன்னால் பாடகர் என ஒவ்வொருவராக விசாரிக்கப்படுவது, இடையே வரும்  மாந்த்ரீக குறியீடுகள், விலகிச்சென்றுவிட்ட கணவன் மணவிலக்குக்கு முன்பாகவே  ஒரு நர்சுடன் வாழத்துவங்குவது, மார்செல்லாவின் மனப்பிறழ்வு அதி்கரித்திருப்பது, குழந்தைகள் மார்செல்லாவை புரிந்து கொள்ளாமலிருப்பது என விறு விறுப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.

 மூன்றாம் தொடர்;

மார்செல்லா, தான் இறந்துவிட்டதாக மற்றவர்களை நம்பவைத்துவிட்டு கெய்ரா எனும் புதிய பெயரில் under cover அதிகரியாக மாபெரும் குற்றசாம்ராஜ்ஜியத்துக்கே சொந்தமான  வீட்டிலேயே வாழத்துவங்குவதும் அந்த வீட்டு வாரிசுடன் நெருங்கிப் பழகுவதும் அவர் எதிர்கொளும் பிரச்சனைளுகம், அவர் கெய்ரா இல்லை மார்செல்லாதான் என கண்டுபிடிக்கப்படும் சாத்தியங்கள் அவ்வப்போது இடைபட்டுக்கொண்டே இருப்பதும்தான் கதை

முதலிரண்டு தொடர்களை ஒப்பிடுகையில் மூன்றாம் தொடர், நாடகபாணியில்  பிரம்மாண்ட வீடு, மர்மமான பல நிகழ்வுகள், என பழைய சிவாஜிகணேசன் திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றது..

சர்வசாதாரணமான கொலைகள், கெளரவக்கொலைகள் என இதிலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.

8 பகுதிகளை கொண்டிருக்கும் மூன்று தொடர்களுமே இறுதிப்பகுதிகலில்  இருக்கை நுனிக்கு நம்மை கொண்டு வந்துவிடும். அத்தனை பரபரப்பு, மர்மம் ,அத்தனை வேகம், அத்தனை எதிர்பாராமை  கொண்டவைகளாக இருக்கும் காட்சிகள்.

சிறந்த இயக்கம்,பொருத்தமான கதாபாத்திர தேர்வு, பிரமாதமான திரைக்கதையாக்கம் மற்றும்  அபாரமான படத்தொகுப்பு

குற்றப்ப்புலனாய்வு கதைப்பிரியர்கள்  அவசியம் பார்க்கவேண்டிய சிக்கலான சுவாரஸ்யமான ஒரு தொடர் மார்செல்லா.  காவல் துறை குற்றப்புலனாய்வு என்று ஒரே பாதையில் திரைக்தையை அமைக்காமல் குடும்பச்சிக்கல்களையும்,  சேர்த்திருப்பதால் இத்தொடர் மற்றவற்றிலிருந்து மாறுபட்டிருக்கிறது. ஆபாசவசைச்சொற்கள், போதை மருந்து பயன்பாடு, வன்முறை , கொலை, இறப்பு இறந்த உடல்கள், மற்றும் நெருக்கமான ஆண்பெண் உறவுக்காட்சிகள் நிறைந்திருப்பதால்   மார்செல்லா  பெரியவர்களுக்கு மட்டுமேயான தொடர்.

கள்ளிக்கற்றாழை- Agave

 பாலைக்கற்றாழை அல்லது கள்ளிக்கற்றாழை பேரினமான   Agave என்பது சுமார் 200 சிற்றினங்களை கொண்ட  அஸ்பராகேசியே (Asparagaceae) (துணைக்குடும்பம் அகேவேசியே _ (Agavaceae), குடும்பத்தை சேர்ந்தது. அமெரிக்காவின்  வறண்ட பகுதிகளில் தோன்றிய இவற்றில் 150 சிற்றினங்கள்  மெக்சிகோ மற்றும் கரீபியன் கடற்கரைப்பகுதிகளில்   காணப்படுகின்றன. 12 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றி உலகெங்கிலும் பரவியிருக்கலாம் என்று தாவரவியலாளர்களால் கருதப்படும் இந்த கள்ளிக்கற்றாழைகள் மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.

இப்பேரினத்தைச்சேர்ந்த பல தாவரங்களிலிருந்து மதுபானங்கள், நார், வலை, கைவினைப்பொருட்கள் எரிபொருட்கள் ஆகியவை பெறப்படுகின்றன. பல தாவரங்கள்  அலங்காரச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன.  53 சிற்றினங்களிலிருந்து பல வித மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றது.

கள்ளிக்கற்றாழைகளின்  சதைப்பற்றுடன் கூடிய வாள் போன்ற இலைகள் ரோஜா மலரிதழ்களைப்போல அடுக்கடுக்காக அழகாக அமைந்திருக்கும். இலைகள் 2லிருந்து 3 மீட்டர் நீளமிருக்கும். பெரும்பாலானவை இலைகளின் விளிம்புகளிலும் நுனியிலும் கூரிய முட்களிக்கொண்டிருக்கும். இதன்காரணத்தாலேயே இவை கள்ளிக்கற்றாழைகள் எனப்பெயர்பெற்றன.

இலைகள் இளம்பச்சை, அடர் பச்சை, சாம்பல், நீலம், வெள்ளி மினுங்கும் பச்சை, நீலச்சாம்பல் என பல வண்ணங்களில் இருக்கும். இலைகளின் விளிம்புகளில் வேறு வண்ணமிருப்பவையும், வரிகள் உள்ளவையும் உண்டு   பெரும்பாலான கள்ளிக்கற்றாழை வகைகளில் இலைகளினடியிலிருக்கும் கிழங்குகளிலிருந்தே புதிய தாவரங்கள் முளைக்கும்

கள்ளிக்கற்றாழைகள் அனைத்துமே ஒரு முறை பூத்துக்காய்த்தபின் மடிந்துவிடும் monocarpic வகையை சேர்ந்தவை. அதிகபட்சமாக 35 வருடங்களே இவை உயிர்வாழும். இலையடுக்குகளின் மத்தியிலிருந்து வளரும் 9-12 மீட்டர் உயரம் வரையிருக்கும் தண்டுகளில், இளம்பச்சை பழுப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண மலர்க்கொத்துக்கள் உருவாகும். 6 இதழ்களுடன் இருக்கும் மலர்களில் இனிப்புச்சுவையுள்ள சாறு நிறைந்திருப்பதால் பூச்சிகள், தேன்சிட்டுக்கள் பட்டாம்பூச்சிகள் , அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் ஆகியவற்றை கவர்ந்திழுக்கும்.

கற்றாழை இலை முள்

மெக்சிகோ முழுக்கவே இக்கள்ளிக்கற்றாழைகள் பரவியுள்ளதால் இவற்றின் பல்வேறுபட்ட பயன்பாடுகளை மெக்சிகோவின் பழங்குடியினர் தொன்றுதொட்டே அறிந்திருந்தனர். கயிறுகள், பிரஷ்கள், செருப்புக்கள், பாய்கள், போன்றவறை இச்செடிகளின் இலைநாரிலிருந்து தயாரிக்கும் வழக்கம் மெக்சிகோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றது.

Sisal எனப்படும் இலைகளின் நாரை நுனியிலிருக்கும் ஊசிபோன்ற முள்ளுடனேயே உருவி எடுத்து ஊசியும் நூலும் போல உபயோகப்பபடுத்தும் பழக்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. இலைகளை செதுக்கி விட்டு அன்னாசிப்பழம்போன்ற  அடிப்பகுதியை நெருப்பில் வாட்டியும், அரைத்தபின்னர் சமைத்தும் உண்ணும் வழக்கமும் உண்டு. இந்த அடிப்பகுதியில் நிறைந்திருக்கும் மாவுச்சத்தைத்தான் நொதிக்க வைத்து மது பானமாக்குகிறார்கள்.

 மலர்ச்சாற்றை சர்க்கரைக்கு பதிலாக உபயோகப்படுத்துவார்கள். Agave syrup எனப்படும் இந்த கற்றாழைத்தேன் மிக பிரபலமான சர்க்கரை மாற்றுப்பொருளாக உலகெங்கிலும் உபயோகத்திலிருக்கின்றது. இலைசாற்றில் நஞ்சிருப்பதால் சமைக்காமல் உண்ணுவது ஆபத்தானது

ஒருவித்திலை (Monocot) வகையைச்சேர்ந்த  கள்ளிக்கற்றாழைகள்    அனைத்துமே மிக மெதுவாக வளரும் இயல்புடைய பல்லாண்டுத்தாவரங்கள்

சோற்றுக்கற்றாழையும் கள்ளிக்கற்றாழையும்

பொதுவாகவே Aloe  எனப்படும் சோறறுக்கற்றாழைகளையும் இந்த கள்ளிக்கற்றாழையான Agave களையும் ஒன்றென குழப்பிக்கொள்ளுபவர்கள் உண்டு. நம் அனைவருக்கும் மிகவும் தெரிந்த மருத்துவப்பயன்கள் ஏராளம் கொண்டிருக்கும் சோற்றுக்கற்றாழை Aloe vera,.

 தரிசு நிலங்களிலும் வேலியோரங்களிலும் ரயில் தண்டவாள ஓரங்களிலும் மாபெரும் பச்சை ரோஜாஇதழ்களை போல வளர்ந்திருப்பவையே Agave பேரினத்தைச்செர்ந்த கள்ளிக்கற்றாழை வகைகள்.

சோற்றுக்கற்றாழையான Aloe ஆப்பிரிக்காவின் சஹாரா பாலையின் தென்பகுதியில் தோன்றியவை. கள்ளிக்கற்றாழையான Agave  மெக்சிகோவில் தோன்றியவை.  இரண்டு வகைச்செடிகளுமே சதைப்பற்றான , கூர் நுனிகளை உடைய, விளிம்புகளில் முட்கள் இருக்கும் இலைகளையும் இனிப்பான திரவத்தைச் சுரக்கும் மலர்களையும், கொண்டிருந்தாலும், இவை இரண்டும் வேறு வேறு தாவரக்குடும்பங்களை  சேர்ந்தவை Agave, Asparagaceae குடும்பம் Aloe ,  Asphodelaceae குடும்பம்.

Agave ,இலைகளின் அளவிலும் முட்களின் நீளத்திலும் Aloe வை விட பெரியது. Agave வின் சாறு நச்சுத்தன்மை கொண்டது, Aloe வின் சாறு உண்ணத்தக்கது மருத்துவ குணங்களுடையது, இப்படி இரண்டிற்கும்  நிறைய வேறுபாடுகள் உள்ளன

கள்ளிக்கற்றாழையின் முக்கியமான சில வகைகள்;

நரிவால் கற்றாழை-Fox Tail Agave- Agave attenuata

வெள்ளி நிறம் மினுங்கும் இளம்பச்சையில் ரோஜா இதழ்களைப்போல அடுக்கில் அமைந்திருக்கும் இந்த கற்றாழை மிக அழகிய தோற்றமுள்ளது. மேலும் பிற கற்றாழை வகைகளைப்போல இலையின் ஓரங்களில் முட்களும் இல்லாதது. பச்சையும் மஞ்சளும் கலந்த இதன் நீண்ட மலர்க்கொத்துக்கள் நரிவாலைப்போல உயரமான தண்டில் அமைந்திருப்பதால்  இப்பெயர் பெற்றிருக்கும் இவை தோட்டங்களில் அழகுச்செடியாக வளர்க்க மிகவும் ஏற்றது

கரீபியன் கற்றாழை-Carribean Agave- Agave angustifolia

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த கற்றாழை இளம்பச்சையில் வெண்ணிற ஓரங்களுடன் நீண்ட வாள் போன்ற உறுதியான,  விளிம்புகளில் உறுதியான முட்களை கொண்டிருக்கும் இலைகளைக்கொண்டது. அடர்ந்த இலை அமைப்பினுள்ளிருந்து 10அடி உயரமுள்ள மலர்த்தண்டு உருவாகி அதன் உச்சியில்  இளம் பச்சைநிற கிளைத்த  மலர்கொத்துக்கள் உருவாகும். இவற்றை தோட்டங்களின் ஓரங்களில் வளர்க்கலாம். இச்செடியின் இலைகள் இணைந்திருக்கும்

அன்னாசிப்பழத்தைபோன்ற heart  எனப்படும் அடிப்பகுதியிலிருந்து  மெஸ்கல் (mezcal) என்னும் மதுபானம் தயாரிக்கப்படுகின்றது. முட்டை வடிவ இலைநுனியில் கூரான ஊசிபோன்ற அமைப்பிருக்கும்

நீலக்கற்றாழை- Blue Agave- Agave tequilana

நீலக்கற்றாழை

மெக்ஸிகோவின் டெக்யூலா நகரில் எரிமலை மண்ணில் வளரும் இந்த நீலக்கத்தாழைச்செடிகளிலிருந்து, அந்நகரின் பெயருடைய  ’’டெக்யூலா’’ என்னும் மதுபானம் தயாரிக்கப்படுகின்றது.
 (Tequila). டெக்யூலா தயாரிக்க கற்றாழையின் இலையடியில் அன்னாசிப்பழம் போன்ற வடிவை வெட்டி தயாராக்கும் முறை  அங்கிருக்கும் பழங்குடியினரால் மட்டுமே செய்யப்படுகின்றது.

‘Heart ‘ எனப்படும் இலைகளின் அடிப்பகுதி

பெயருக்கேற்றபடி நீலப்பச்சையில் அகலமும் நீளமும் உடைய வாள்போன்ற உறுதியான இலைகளின் ஓரங்களில் கூரிய முட்களை உடைய இந்த கற்றாழை 5 வருடங்களானபின்பு அழகிய மஞ்சள் நிற மலர்க்கொத்துக்களை உருவாக்கும்

நூற்றூக்கற்றாழை- American  Century Agave-Agave Americana

 குட்டையான, மிகக்கூரிய நுனிகளையும் இளமஞ்சள்பட்டைகள் உள்ள ஓரங்களையும் கொண்டிருக்கும் இலைகளைக்கொண்ட, பெருங்கள்ளி வகைச்செடியான இந்த கற்றாழையின் மலர்கள் தேன்சிட்டுக்களை வெகுவாக கவரும். தோட்டக்கலைத்துறை விருதுகள் பலவற்றை பெற்றிருக்கும் மிக அழகிய தோற்றமுள்ள கற்றாழை இது. உலகெங்கும் அதிகம் அலங்காரச்செடியாக வளர்க்கப்படும் கற்றாழையும் இதுவே. மலர்கள் நீள மூக்கு வவ்வால்களாலும், தேன்சிட்டுக்களினாலும் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன.நூற்றூக்கற்றாழை என அழைக்கப்பட்டாலும் இவை 35 வருடங்கள் வரையே உயிர் வாழும்.

திமிங்கல நாக்குக்கற்றாழை-. Whale’s Tongue Agave -Agave ovatifolia

உட்புறம் குழிந்த,  கிண்ண வடிவில்,  திமிங்கல நாக்கைப்போன்ற அழகிய இலைகளில் நுனியில் 25 செமீ நீளமுள்ள  ஊசிபோன்ற  நீட்சி இருக்கும். இளம்பச்சை நிற இலைகளின் மத்தியிலிருந்து உருவாகும் தண்டில் மலர்க்கொத்து  வர 10 ஆண்டுகளாகும். பசுமஞ்சள் நிற மலர்கொத்து மிக அழகியதாக இருக்கும்.  மிக அழகிய   இக்கற்றாழைகள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். செடியின் மத்தியிலிருந்து உண்டாகும் உயரமான தண்டிலிருந்து அழகிய மஞ்சள் நிற மலர்கொத்துகள் உண்டாகும்.

இதன் அடித்தண்டை வெட்டினால் சுரக்கும் இனிப்பான திரவத்தை நொதிக்க வைத்து  புல்க்யூ (Pulque) என்னும் மதுபானம் தயரிக்கப்படுகின்றது.

pulque பானம் தயாரிக்க கற்றாழைத்தண்டின் சாறு பாரம்பரிய முறையில் சேகரிக்கப்படுகின்றது

பிட்டா (pitta) எனப்படும் இலைநார்கள் கயறு, பாய், கெட்டியான துணிகள் ஆகியவற்றை உருவாக்கபயன்படுகின்றது. இதன் நார்களைக்கொண்டு எம்பிராய்டரி செய்யபட்ட தோல்பொருட்கள்  பிடெடோ piteado எனப்படுகின்றன.

உலர வைக்கப்படும் கற்றாழை நாரானா’ பிட்டா’
piteado belt

ஆக்டோபஸ் கற்றாழை- Octopus Agave- Agave vilmoriniana (கணவாய் கற்றாழை)

இக்கற்றாழைச்செடிகள் 1899 ல் ஜோசஃப் நெல்சன் ரோஸ் என்பவரால் மெக்சிகோவின் கெளடாலஜரா  நகரில்  கண்டறியபட்டது.

  நீண்ட ரிப்பன்களைப்போன்ற நுனி வளைந்து சுருண்டிருக்கும் இலைகள் எண்காலி எனப்படும் ஆக்டோபஸின் உணர்கொம்புகளைப்போல இருப்பதால் இவற்றிற்கு ஆக்டோபஸ் கற்றாழை என்றே பெயர் வந்தது. இவை  10 வருடங்களில் 40 அடி உயரமுள்ள தண்டில் மஞ்சள் நிற மலர்கொத்துக்களை உருவாக்கும். 18 ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் வாழ்ந்த வில்மோர் என்பவர் உலகின்  பலநாடுகளிலிருந்து மரங்களின் விதைகளை  வரவழைத்தவர். இவரது பெயர் ஃப்ரான்ஸின் வரலாற்றில் மிக முக்கியமான இடம்பெற்றிருக்கின்றது. இவரை கெளரவிக்கும் பொருட்டே இந்த கற்றாழைக்கு வில்மோரியான் என்று பெயரிடப்பட்டது.

இதன் இலைகளில் நுரைக்கும் தன்மையுள்ள வேதிப்பொருளான saponin  இருப்பதால், மெக்சிகோவின் சில பகுதிகளில் வெட்டி உலர்த்தபட்ட நார்களுக்குள்  சோப்புதுண்டங்களை வைத்து துணி துவைக்கும் பிரஷ்கள் செய்யப்படுகின்றன. (brush with built-in-soap) பல பூங்காக்களில் இவை  அலங்காரச்செடிகளாக வளர்க்கப்படுகின்றன.

விக்டோரிய மகாராணி கற்றாழை- Queen Victoria Agave -Agave victoriae-reginae

கற்றாழைகளிலேயெ அரிதான இந்த வகையை தொட்டிகளிலும் வளர்க்கலாம். மகுடம் போன்ற அமைப்பில் மிக நெருக்கமாக செருகப்பட்டது போல  இலைகள் அமைந்திருப்பதால் விக்டோரிய மகாராணியின் பெயரால் இக்கற்றாழை அழைக்கப்படுகின்றது

.

தூரிகையால் தீட்டியதுபோல இலைகளின் ஒரத்தில் மெல்லிய  வெள்ளைக்கோடு காணப்படும். மெக்சிகோவின் சிக்குவாஹுவன் பாலையில் (Chihuahuan Desert) இவை பரவலாக  காணப்படும். பச்சை மற்றும் பழுப்பு நிற மலர்கள் கொத்தாக இலைகளின் நடுவிலிருந்து உண்டாகும் தண்டின் நுனியில் காணப்படும்

நூல்கற்றாழை -Thread –leaf Agave- Agave filifera

சிறிய வகை கற்றாழையான இதில் தளர்வான அடுக்குகளாக அமைந்திருக்கும் இலைகளுடன் இலைமொட்டுக்கள் உரிக்கும் நூல் போன்ற இழைகள் நூலகண்டை பிரித்து போட்டதுபோல காணப்படும். இளம்பச்சையில் உலோகப்பளபளப்புடன் காணப்படும் இச்செடி அதிகபட்சமாக 3 அடி வரையே வளரும்.

 இலைகளின் அடியில் இருக்கும்  மொட்டுக்களிலிலிருந்து புதிய செடிகள்  முளைக்கும். தொட்டிகளில் வளர்க்க ஏதுவானது இந்த கற்றாழை Royal horticultural society வழங்கும் தோட்டக்கலைத்துறை விருதையும் பெற்றிருக்கிறது இந்த அழகிய கற்றாழை. பிரகாசமான மஞ்சளும் சிவப்புமான மலர்களுடன் மலர்கொத்து உண்டாகும்.

கடற்கரைக்கற்றாழை-Coastal Agave- Agave shawii

மிகமிக அரிதான இந்தக்கற்றாழை மிஸவ்ரி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய   Henry Shaw என்பவரை கெளரவிக்கும் விதமாக shaw Agave எனப்பெயரிடப்பட்டது. நகரமயமாக்களில்  பெருமளவில் அழிந்துபோய்விட்ட இவை  தற்போது கலிஃபோர்னிய கடற்கரைகளில் மட்டுமே காணப்படுகின்றன. மிக மெதுவாக வளரும் இயல்புடைய இதன் இலைகள் 50 செமீ அளவில் முட்டை வடிவில் அமைந்திருக்கும். இலை விளிம்புகளில் ரம்பம் போல முட்கள் அமைந்திருக்கும். இலைகளின் மத்தியிலிருந்து தோன்றும் உயரமான மலர்காம்பிலிருந்து ஊதாவண்ண  இலைச்செதில்களால் (Bracts) சூழப்பட்ட மஞ்சள் – சிவப்பு மலர்கள் உருவாகும். இவை மணற்பாங்கான இடங்களில் நன்கு வளரும் இயல்புடையவை

இரட்டை மலர்க்கற்றாழை – Twin flower Agave -Agave geminiflora

மெக்ஸிகோவின் 32 மாநிலங்கலில் ஒன்றான  நயாரிட்டில் (Nayarit)  மட்டுமே காணப்படும் இவ்வரிய வகைக்கற்றாழை குட்டையானது   2 அடி வரை வரையே வளரும். 12 அடி உயுர மலர்த்தண்டின் இருபுறமும்  வரிசையாக  இளஊதாமஞ்சள் நிற மலர்கள் தோன்றுவதால் இக்கற்றாழைக்கு இந்தப்பெயர் வந்தது.. ஒரு செடியில்  60 செமீ நீளமுள்ள 100 லிருந்து 200 இலைகள் அடுக்கடுக்காக அமைந்திருக்கும்,

இலை விளிம்புகளின் நார்கள் நூலிழைகளைப்போல உரிந்து வந்து இலைகளின் அடுக்குகளுக்குள் சிக்கி இருப்பதும் அழகாக இருக்கும்

மலைக்கற்றாழை-Mountain Agave-Agave Montana villarreal

நீலக்கற்றாழையைப்போலவே இதன் இலைகள் இருக்கும் ஆனால் இளம்பச்சை நிறத்தில் அதிக சதைப்பற்றுடன்  இருக்கும்.  இலைகளின் ஓரங்களில் லவங்கபட்டையின் அடர் சிவப்பில் கோடுகள் இருக்கும்.

10 வருடங்களுக்கு பிறகு 20 அடி நீள மலர்த்தண்டு உருவாகி  பிரகாசமான மஞ்சள் நிற மலர்கள் உண்டாகும். இக்கற்றாழை 4 அடி உயரம் வரை வளரும். எந்த நோயும் இந்த கற்றாழையை தாக்காது. இது கற்றாழைகளின் அரசி என அழைக்கப்படுகின்றது. இனிப்புச்சுவை உள்ள இதன் மலர்களை உள்ளூர் மக்கள்  சாப்பிடுவதுண்டு. மலர்கள் வண்ணத்துபூச்சிகளை அதிகம் கவரும். இலைச்சாறு பட்டால் தோல் அழற்சியை உண்டாகும்.

பெருங்கற்றாழை-Agave salmiana ferox-Feroceous/Giant Agave

11 அடி உயரம் வரை வளரும் இந்தக் கற்றாழை அடர்பச்சை நிறத்தில் அகன்ற உறுதியான இலைகளைக் கொண்டது. இலைகள் ரோஜா இதழ்களைப்போல அடுக்கடுக்காக ஆனால் தளர்வாக அமைந்திருக்கும். இலைகளின் விளிம்புகளில் மிகக் கூரிய   8 செமீ நீளமுள்ள பெரிய முட்கள் அமைந்திருக்கும். 15லிருந்து 25 வருடங்களில் நீண்ட மலர்த்தண்டின் நுனியில் பசுமஞ்சள் நிற மலர்களை உருவாக்கும். இவற்றை தொட்டிகளிலும் வளர்க்கலாம்.

ஒரு சில மென்மையான இலைகளைக்கொண்டிருக்கும் வகைகளைத்தவிர பிற கள்ளிக்கற்றாழைகள் அனைத்திற்குமே நல்ல சூரிய ஒளி தேவைப்படும். அதிகமாக நீர் ஊற்றினால் வேர்கள் அழுகிவிடும். மணற்பாங்கான இடங்களில் செழித்து வளரும். வாடிய இலைகளை வெட்டுகையில் ஆங்கில ‘v’ வடிவத்தில் இலையின் கீழ்பகுதி இருக்கும்படி வெட்டவேண்டும். இல்லாவிடில் அடித்தண்டு உலர்ந்துவிடும்.

மதுபானங்களுக்காக கள்ளிக்கற்றாழைகளை ’ஜிமாதர்’கள் (jimador) எனப்படும் பழங்குடி இனத்தை சேர்ந்த  திறமையானவ்ர்கள், (Coa ),கோவா எனப்படும் நீண்ட கைப்பிடியின் நுனியில் வட்ட வடிவ மிகக் கூரான கத்தியை உடைய உபகரணத்தால் இலைகளை பாதுகாப்பாக  செதுக்கி அடித்தண்டை எடுப்பார்கள்.

கள்ளிக்கற்றாழைகளின் புகைப்படங்களை பார்க்க; https://www.shutterstock.com/search/agave

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑