மேற்குத்தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான ஆனைமலையிலுள்ள கோழி கமத்தி, ஆழியார் அணை, நவமலை, பவர்ஹவுஸ், கொல்லத்திப்பாறை போன்ற இடங்களில் மலமலசர் என்ற பழங்குடிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மலையில் வாழ்பவர்கள் மலைமலசர், மலையடிவாரத்தில் வாழ்பவர்கள் பதிமலசர் என்று இவர்களுக்குள்ளேயே இரண்டு பிரிவுகள் உள்ளது.
இவர்களில் மகா மலசர்கள் அல்லது மலமலசர்கள் கோவை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் உள்ள சர்க்கார்பதி கிராமத்தில் பலதலைமுறைகளாக வசித்து வருகின்றனர். மேல் சர்க்கார்பதி, கீழ் சர்க்கார்பதி என இரண்டு கிராமங்கள் இருக்கின்றன. இரண்டு கிராமங்களிலும் சேர்த்து 130 பழங்குடியினர் குடும்பங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வருடத்தில் 10 மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும் கிராமமென்பதால் பசுமை அடர்ந்து கிடக்கும் வனப்பகுதியாக இருக்கிறது சர்க்கார்பதி. மழைவாழ்மக்கள் குழந்தைகளுக்கான் துவக்கப்பள்ளியும் அங்கு இருக்கின்றது.
மேல்சர்க்கார்பதியில் ஒருசில மலமலசர் பழங்குடியினரே இருக்கின்றன இவர்களின் தெய்வம் மகா மாரியம்மன். இவர்கள் ஒருசில சிறுதெய்வங்கள மூங்கில் தப்பைகளால் தடுக்கப்பட்ட பாறைமீது எழுப்பப்பட்ட எளிய சிறு கோவில்களில் வழிபடுவதோடு அனைவருக்கும் பொதுவான இறையாக மாகா மாரியையே வழிபட்டு வருகின்றனர்
பதிமலசர்கள் எனப்டும் கீழ்சர்க்கார்பதியை சேர்ந்த பழங்குடியினர் அங்குள்ள கோவிலில் அருள் புரிந்துகொண்டிருக்கும் குண்டத்து மாரியம்மனை வணங்குகிறார்கள்.
மேல்சர்க்கார்பதியின் மகாமாரியம்மனை பலஆண்டுகாலம் இப்பழங்குடியினர் சிற்றாலயமொன்றீலேயே வழிபட்டுவந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இங்கு கோவில் எழுப்பப்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்னரே குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது.
சின்னதும் பெரியதுமாக அருவிகளும் சிற்றாறுகளும் நிறைந்த வனப்பகுதியென்பதால் இங்கு மின் உற்பத்தி நிலையமும் உள்ளது. இதன்பொருட்டான் தடுப்பணையொன்றின் அருகில் ஏரளமான கூந்தல்பனைகளும்,அரசும், வில்வமும், ஆலும், அத்தியும் இன்னபிற காட்டுமரங்களும் சூழ ,அருவியின் ஓசை பிண்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்க தொடர்மழையிலும், அடர்நிழலிலுமாக நிரந்தரமாக குளிர் நிரம்பியிருக்கும் அந்த இடத்தில் மிகச்சிறிய அழகிய கோவிலில் மகாமாரியம்மன் அருள்பாலிக்கிறாள். கோவில் வளாகமெங்கும் கால் வைக்க இடமின்றி வில்வமரத்தின் கனிகள் உதிர்ந்து தரையெங்கும் நிறைந்து கிடக்கின்றன. கோவில் வளாகமே இயற்கையான சூழலில் காட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. பல்லாண்டு வயதுள்ள அரசப்பெருமரங்கள் அதிகம் இருப்பதால் அவற்றின் சின்னஞ்சிறு கனிகள் மணலைப்போல தரையெங்கும் நிறைந்துகிடக்கின்றன.
எதேதோ பச்சிலைகளின் வாசம் நாசியில் நிறைய கோவிலுக்கு சென்றால் நுழைவு வாயிலிலேயே வனக்காவலர்களின் காவல் கண்காணிப்புக்கோபுரம் அமைந்துள்ளது. ஏராளமான இடத்தில் சுற்றிலும் பரிவாரத்தெய்வங்கள் தனித்தனியே நல்ல இடைவெளியில் அமைந்திருக்க மத்தியிலிருக்கும் சிமிழ்போன்ற சிறு ஆலயத்தில் அம்மனிருக்கிறாள்
சற்றுத்தள்ளி சிறிய பீடங்களில் துர்க்கையும், உயரமான மேடையில் நவக்கிரகநாயகர்களும் உள்ளனர். ஆலயத்திற்கு எதிரே பாசிபிடித்திருக்கும் கற்படிகளில் சற்று தாழ்வான பகுதியில் இறங்கிச்சென்றால் சப்தகன்னியரின் சன்னதி. ஆண்டாளைப்போல கொண்டையிட்ட சர்வலட்சணம் பொருந்திய எண்ணைப்பூச்சில் மெருகேறி பளபளக்கும் சப்தகன்னியரின் சிலைகளிலிருந்து கண்ணை அகற்றவே முடியாது். அத்தனை அழகு. சற்றுத்தள்ளியிருகும் மிகபெரிய அரசமரத்தடி மேடையில் விநாயகர், மேடையின் வெளிப்புறமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியுடன் அருள்பாலிக்கிறார்.
மனித சஞ்சாரமற்ற அவ்விடத்தின் பரிபூரண தனிமையில், ஒவ்வொரு மரத்திலும் கிளையிலும் இலைகளினசைவிலும் இறைமையை உணரலாம். சுப்ரமணி என்னும் பூசாரி அம்மனுக்கு தினசரி 3 வேளை பூசைகளை செய்துகொண்டிருக்கிறார்.. ஏராளமான பறவைகளின் கீச்சிடல், மரங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் குரங்குகளின் ஓசை, அருவியின் பேரிரைச்சல் மூலிகைவாசம் இவற்றுடன் கோவில் மணியோசையும் இணைகையில் உடல் மெய்ப்பு கொள்கின்றது. அம்மன் மிக எளிய பச்சைப்புடவையில் மூக்குத்தி மின்ன காலடியின் இரு அகல்விளக்குகளிலும், ஒற்றை தொங்கு விளக்கிலும் தீபச்சுடர் மலர்மொட்டுப்போல் அசையாது சுடர்விட புன்னகை தவழ அமர்ந்திருக்கிறாள்
அன்று அமாவாசை. வனச்சரக உயரதிகாரியொருவரின் கட்டளையாக அம்மனுக்கும் சப்தகன்னியருக்கும் பிற மூர்த்திகளுக்கும் அகன்ற அரசிலையில் சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் படைக்கப்பட்டிருந்தது.
இந்த மகாமாரியமன் ஆனைமலை மாசாணியின் தங்கை என கருதப்படுகிறாள். உலகபுகழ்பெற்ற மாசாணியம்மன் பூமிதித்திருவிழாவின் கொடியேற்றுதலுக்கு சர்க்கார்பதி வனத்திலிருந்தே பெருமூங்கில் பல்லாண்டுகளக வெட்டிவரப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மூங்கிலை கொடிமரத்துக்கென வெட்டுகையிலேயே அடுத்த ஆண்டுக்கான மூங்கிலையும் தெரிவு செய்து மஞ்சள் துணி சுற்றி அடையாளம் செய்துவைத்து அடுத்த ஒரு வருடம் அதை கடவுளாகவே எண்ணி பூசிக்கிறார்கள் மலசப்பழங்குடியினர்.அந்த மிகநீளமான பருமனான கொடிமர மூங்கில்களை வெட்டி இங்கு மகாமரியம்மன் சன்னதியில் வைத்து பூசித்து அனைவருக்கும் அன்னதானமிட்டபின்னரே பலகிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆனைமலைக்கு கால்நடையாக பக்தர்களால், சுமந்து செல்லப்படுகின்றது. இந்நிகழ்வும் பன்னெடுங்காலமாகவே மிகப்பெரும் விழாவாக இங்குள்ள பழங்குடியினரால் கொண்டாடப்படுகின்றது.
எதிரிலிருக்கும் அருவிக்கரையில் ஏராளமான் காட்டு நாவல் மரங்கள் ,கொழுத்த, விரல்களில் அப்பிக்கொள்ளும் அடர் ஊதா சாறு நிரம்பிய கனிகளை உதிர்த்தபடி நின்றிருக்கின்றன. சுற்றிலும் காட்டு அத்திமரங்களும் நிறைந்துள்ளன. மரத்தடியில் கொழுத்த இளஞ்சிவப்பு அத்திபழங்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.
மிக நெருக்கத்தில் மான்கூட்டங்களையும், திமில் பெருத்த காட்டெருதுகளையும், பெயர்தெரியா பல பறவைகளையும், அரிதாகவே காடுகளில் காணக்கிடைக்கும் மரங்களிலிருந்து மரங்களுக்குத் தாவும் பறக்கும் பாம்புகளையும் இங்கு காணமுடிந்தது.
ஆலயத்தின் உள்ளே மட்டுமல்ல மகாமாரியம்மனை அங்கு எல்லா இடத்திலும் உணரமுடிந்தது அடர்ந்த அந்தக்காடும் அதனுள்ளே வீற்றீருக்கும் பேரியற்கையென்னும் சக்தியின் அங்கமான அம்மனுமாக அந்தத் தலம் அளிக்கும் உணர்வை அங்கு சென்றால்தான் உணர முடியும்.
அங்கே வழங்கப்பட்ட சர்க்கரைப்பொங்கலை அந்த இறையனுபவத்தின் சுவையுடன் கலந்து உண்டோம் நான் காட்டிற்குள் நுழைகையில் மிஸ், பின்னர் லெக்சரர், அதன்பின்னர் கல்லூரி புரஃபஸர், பின்னர் கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அக்கா ஆகியிருந்தேன். எதிர்ப்படும் அனைவரிடமும் ’’அக்கா வந்திருக்காங்க’’ என்று வாயார மனமார சொல்லியபடியே வந்தார். அதுவும் மனநிறைவை அளித்தது. .துவாரகர் நல்ல கீர்த்தனைகள் பாடுவாரென்பதையும் அப்படி கோவில்களில் கீர்த்தனை பாடுகையில்தான் தன் வருங்கால மனைவியை சந்தித்திதாரென்பதையும் சொன்னார். அத்திப்பழங்களையும் மலைநெல்லிகளையும் நாவல்களையும் சேகரித்து கொடுத்தபடியே இருந்தார்.
மீண்டும் பள்ளிக்கு சென்று மதிய உணவுண்டோம். கேரியரை பார்த்ததுமே “அக்கா அதிகாலை 4.30க்கு எழுந்திரிச்சாத்தான் இதெல்லாம் செஞ்சுகொண்டு வரமுடியும்” என்றார். ஆமென்றேன். வாழ்வின் இயங்கியலில் பிறரையும் அவர்களின் பக்கக்து நியாய அநியாயங்களையும் அறிந்தவர் என்று அவர் மீது கூடுதலாக மரியாதை வந்தது எனக்கு. உணர்ச்சி வசப்பட்டு 10 பேருக்கான் உணவை கொண்டு வந்திருந்தேன்
நிறைய உணவு மீந்துவிட்டிருந்தது. காரில் அவற்றை எடுத்துக்கொண்டுபோய் மழைவாழ்மக்கள் குடியிருப்பில் நிறுத்தி ’’சந்திரா’’ என்று துவாரகர் குரல்கொடுத்ததும் 10/12 வயதுச்சிறுமி எட்டிப்பார்த்தாள். அவளது தூய அழகை எப்படி எழுதியும் விளக்கிவிட முடியாது. மிகச்சரியான பளபளக்கும் மான் நிறம்,.மாவடுபோல சிறிய பளிச்சிடும் அழகிய கண்கள், சின்ன மூக்கு சின்னஞ்சிறு குமின் உதடுகள். மையிட்டுக்கொள்ளவில்லை பவுடர் பூச்சோ வேறு எந்த ஒப்பனைகளுமோ இல்லை ஒரு சின்ன சாந்துபொட்டு புருவ மத்தியில் ,வெள்ளைப்பிண்னணியில் நீலப்பூக்கள் போட்ட மலிவுவிலை நைட்டி, கையில் எதற்கோ ஒரு சின்னத் தடி. உயரமான இடத்திலிருந்து துள்ளலாய் இறங்கி வந்து ’’என்ன சார்’’ என்றாள். சாருடன் புதியவர்களைக்கண்ட வெட்கம் உடனே கண்களில் குடியேறியது. எனக்கு அவள் மீதிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை. அவளை தொட்டுக்கொண்டு மீதமிருக்கும் உணவுகளை வாங்கிக்கொள்வாளா என்று கேட்டேன் மகிழ்ந்து சரியென்று சொல்லி மீண்டும் துள்ளிக்கொண்டு மேலேறிச்சென்று சில பாத்திரங்களுடன் வந்தாள். உணவுகளை அதில் மாற்றிவிட்டு நான் வழக்கமாக கல்லூரிக்கு ஊறுகாய் கொண்டுபோகும் ஒரு சிறு எவர்சில்வர் சம்புடத்தை ஊறுகாயுடன் அவளிடம் கொடுத்து ’’என் நினைவா இதையும் நீயே வச்சுக்கோ’’ என்று கொடுத்தேன் கண்களில் ஒரு கூடுதல் மின்னலுடன் சரியென்று தலையாட்டிவிட்டு மேலே ஏறிச்சென்று அங்கிருந்த குட்டிகுட்டி தடுப்புக்களுடன் கூடிய மண்சுவர்களாலான வீடு என்னும் அமைப்புக்குள் சென்று மறைந்தே விட்டாள்.
என்னதான் நாம் உரமிட்டு நீரூற்றி பராமரித்து வளர்த்தாலும் காட்டுச்செடிகளின் தூய அழகை வீட்டுசெடிகளில் காணவே முடியதல்லவா? சந்திராவின் சருமப்பளபளப்பு ஒளிவிட்ட சின்னக்கண்கள், துள்ளல், முகமே சிரிப்பாக வந்துநின்றது, அவளது கள்ளமின்மை எல்லாமாக என் மனதில் இனி என்றைக்குமாக நிறைந்திருக்கும். அம்மனை மீண்டும் தரிசித்தேனென்றுதான் சொல்லனும்
மகா மலசர்களின் வீடுகளுக்கு சென்று சிலரைச் சந்தித்து பேசினேன். பச்சை தென்னை ஓலை முடைந்துகொண்டிருந்த லச்சுமி என்னும் ஒரு மூத்த பெண்ணிடம் பேசினேன்.
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். தருணுக்கு தேவையான பல அரிய புகைப்படங்கள் கிடைத்தன. அருவியொன்றில் கேன் நிறைய தண்ணீர் பிடித்துக்கொண்டு சூடாக இட்லி வைத்து சாப்பிட அகன்ற பசும் தேக்கிலைகளையும் நிறைய பறித்துக்கொண்டு சேம்புச்செடிகளும் விதைகளுமாக காரையே ஒரு சின்ன வனமாக மாற்றியபின்னர் அனைவருமாக கிளம்பினோம்.
கிளம்புகையில் 2 கீர்த்தனை பாடுவதாக சொல்லிக்கொண்டே இருந்த துவாரகரிடம் நான் ’’அட கீர்த்தனையா, பாடுவீங்களா’’ என்று கேட்கவே இல்லியே!
துவாரகரை அவரது தோப்பில் விட்டுவிட்டு சூர்யாவையும் அவனது வீட்டில் விட்டுவிட்டு விடைபெற்றுக்கொண்டு வந்தோம்.
இரவு நல்ல களைப்பில் சீக்கிரம் உறங்கப்போகையில் தான் நினவு வந்தது அந்த பிரதாப் வரவே இல்லை டிசி வாங்க.
இந்த பள்ளிக்கு மாறுதலை வேண்டி விரும்பிக் கேட்டு வாங்கி 8 வருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கும் துவாரகரின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் அன்பும் ஏற்பட்டுவிட்டது Ethnobotany யில் ஆய்வுமாணவிகள் என் வழிகாட்டுதலில் பல பழங்குடியினரின் தாவரப்பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்திருப்பதால் பல மழைவாழ் மக்களின் வாழிடங்களுக்கு பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் சர்க்கார்பதி ஒரு புதிய நிறைவான அனுபவம்.
——————————————————-x————————–
Leave a Reply