அவரின் தோப்பிலிருந்து காடு 30 கிலோ மீட்டர்தான். பத்து கிலோ மீட்டர் தாண்டியதும் ஊரெல்லைகள் முடிவுற்று காடு துவங்கிவிட்டது. சீவிடுகளின் இடையறாத சத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது பச்சிலை வாசனையும் காட்டின் எல்லையில் social forestry செயல்பாடுகளால் நட்டுவைக்கப்பட்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களின் வாசனையுமாக பசுமை நுரையீரலை நிறைத்தது. 20 கிலோ மீட்டருக்கும் மனித சஞ்சாரமே இல்லை. இணையாகவோ எதிரிலோ ஒரு வாகனம்கூட வரவில்லை மயில்கள் அடிக்கடி எதிர்ப்பட்டன. யானைச்சாணமும் வழியெங்கும் இருந்தது
.
காடு வர 20 நிமிடங்கள் ஆனது அதற்குள் துவாரகநாதரின் சுயசரிதையை 400 /500 பக்கங்களுக்கு எழுதும்படியான அளவுக்கு எனக்கு அவரைக்குறித்த தகவல்கள் கிடைத்திருந்தது. அவரது குடும்பம் சகோதர சகோதரிகள் அவர்களின் திருமண உறவுகள் குழந்தைகள், குழந்தைகளின் இயல்புகள், குறும்புகள். அண்ணன் மகள் தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனை; விவசாயியாக தன் வாழ்வு அவர் படிப்பு வேலை காதல் (ஆம் காதலியைத்தான் கைப்பிடிக்க விருக்கிறார்) சில வருடங்களுக்கு முன்பாக இறந்துபோன அவரின் தந்தை சமீபத்தில் இறந்த அவரது தாய், அவருக்கும் வேதியியலுக்கும் உள்ள தொடர்பு (அவர் chemistry mphil.) அவருக்கும் பெருமாளுக்கும் உள்ள நெருங்கின தொடர்பு (இறைவன் பெருமாளே தான்) இப்படி அநேகம் தெரிந்தாகிவிட்டது.
சிற்றாறுகளும் ஓடைகளும் குறுகிட்டன. கொஞ்சம் பெரியதாகவே இரைச்சலுடன் இருந்த ஒரு ஆற்றின் கரையில் செக்போஸ்ட் இருந்தது 3 சீருடை வனக்காவலர்கள் இருந்தார்கள். துவாரகரை அவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்றனர். தகவல் சொல்லி அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். காவலர்களிடம் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்யும் தன் உறவினர் என்று என்னை அறிமுகப்படுதினார் துவாரகர்.
ஒற்றையடிப்பாதை கற்களும் குழிகளுமாக, நீண்டு சென்று கொண்டே இருந்தது 10 /12 வயதுடைய ஒருசில பழங்குடிச்சிறுவர்கள் எதிர்ப்பட்டார்கள். காரை நிறுத்தி துவாரகர் இறங்கி அதில் உயரமான ஒருவனை தோளைப்பிடித்து உலுக்கி ’’டே, கெளசிக்கு, பிரதாப்ப வரச்சொல்லுடா ஸ்கூலுக்கு, அவன் இன்னும் tc வாங்கலை நேத்தும் வந்தேன் ஆளே வரலை’’ என்றார். அவன் இவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை அவன் உடல்மொழியிலும் ஒரு ஆசிரியரை, அதுவும் தலைமைஆசிரியரை கண்ட பாவனை ஏதும் தெரியவே இல்லை கண்களில் மட்டும் புதியவர்களை. வெளியாட்களைக்கண்ட வெட்கம் கொஞ்சூண்டு, அவ்வளவுதான்.வழியில் அவ்வப்போது எதிர்ப்பட்ட ஒரு சிலரிடமும் அந்த பிரதீப் இன்னும் tc வாங்கலைன்னும் அவனை வரச்சொல்லியும் அதை வாங்கினாலே அவன் 6 ஆம் வகுப்பில் சேரமுடியுமென்றும் சொல்லிச்சொல்லி மன்றாடினார்.
எனக்கு என்ன ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததென்றால் இவரைக்கண்டால் அங்கிருப்பவர்களிடம் தெரியவேண்டிய அந்த பணிவுகலந்த உடல்மொழி இல்லவே இல்லை.
அடர்ந்த காடு, காட்டு மாமரங்கள், அத்திகள், நாவல்பெருமரங்கள் இந்தனை வருட தாவரவியல் அனுபவத்தில் நான் பார்த்தும், கேட்டும், அறிந்துமிராத பெயர் தெரியா பல மரங்கள், செடி கொடிகள் என்று நல்ல சூழல் தருண் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல இருந்தான் இப்படி ஒரு காட்டில் நாளை செலவழிக்க வேண்டும் என்பது அவனின் கனவு. நினைத்துக்கொண்டாற்போல சடசடவென மழையும் பின்னர் இளவெயிலுமாக காலநிலை விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்தது
.
காட்டின் முகப்பில் காட்டிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் பாழடைந்த என்று சொல்லுவதற்கு கொஞ்சம் முந்தின நிலையிலிருக்கும் வனக்காவலர்கள் மற்றுமதிகாரிகளின் சில குடியிருப்புக்கள், ஒன்றையொன்று தழுவிக்கொண்டிருக்கும் இரண்டு நெட்டிலிங்க மரங்களால் பந்தலிடப்பட்ட அழகிய முகப்புடன் சின்னதாக சிமிழ் போல வனச்சரக அலுவலகம் இவற்றை கடந்தால் ஒரு அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கட்டிடம் , அதன் வாசலிலிருந்த கம்பிக்கதவு பிய்த்தெறியப்பட்டிருந்தது. சிவப்பு சிமெண்ட் போட்ட வழவழப்பான் திண்ணையும், சற்று தூரத்தில் 3 நாய்களும்
அந்த திண்ணை, உள்ளே இரண்டு நாற்காலிகளும் ஒற்றை மேசையும் போட்டிருக்கும் ஒரு ஆசிரியர் அறை , இரண்டு வகுப்பறைகள், ஒரு சின்ன இடைநாழியை கடந்தால் விறகடுப்புடன் ஒரு சமையலறை. யூகலிப்டஸ் மரங்களின் விறகுகள் உள்ளிருக்கும் பிசினின் பளபளப்புடன் அடுக்கி வைக்கபட்டிருந்தது.அதுதான் பள்ளிக்கூடம்.
சர்கார்பதிக்கு காலையும் மாலையுமாக 2 முறைகள் மட்டும் வரும் ஒரே அரசுப்பேருந்தை தவறவிட்டால் இங்கேயே அவர் தங்கிக்கொள்ள வசதியாக அக்கட்டிடம் வீடும் பள்ளியும் இணைந்த ஒரு அமைப்பாக இருந்தது. கட்டிடத்தை ஒட்டி கழிவறை குளியலறை. பின்புறமாக காட்டுநெல்லிப்பெருமரமொன்று. சொப்பிக்காய்த்தலென்று கொங்கு வட்டாரத்தில் சொல்லிக் கேட்டிருக்கவில்லையெனில் அம்மரத்தைப் பார்த்துக்கொள்ளலாம். கீழே நிலமெங்கும் கொட்டிக்கிடந்த சிறு மலைநெல்லிக்கனிகளின் சுவையை எழுதியெல்லாம் தெரிவிக்க முடியாது. உண்மையில் இயற்கையின் சுவையது.
எல்லாருமாக திண்ணையில் அமர்ந்து கொண்டு வந்திருந்த மசாலா தேநீரை அருந்தினோம் இளமழை திடீரென பெய்தது அந்த மழைக்கு, குளிருக்கு தேநீர் மிக இதமாக இருந்தது. நாய்கள் மூன்றும் மெல்ல நடந்து வந்து திண்ணைக்கு அருகில் சுருண்டு படுத்துக்கொண்டு சோம்பலாக கொட்டாவி விட்டன. சமீபத்தில் ஜெ சொல்லியிருந்தார் நாய்கள் இப்படி மனிதர்களின் அரு்காமையில் இருக்க பிரியப்படும் என்று.
கேட்டை சமீபத்தில் யானைகள் பிய்தெறிந்துவிட்டது என்றார் துவாரகர். பள்ளியைச்சுற்றிலும் யானைச்சாணம் கிடந்தது. எப்போதும் யானைகள் சுற்றித்திரியும் சூழல் என்பது ஆர்வமூட்டியது. கூடவே இந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தரவென அவர் மெனக்கெடுவதையும் அங்குவிரும்பி மாற்றல் கேட்டுக்கொண்டு தினம் அந்த அத்துவானக்காட்டுக்கு வந்து பணிசெய்துகொண்டிருப்பதையும் நினைத்து மனம் கனத்தது. ஆசிரியமென்பது ஒரு தொழிலல்ல வாழ்வுமுறையென்பதை எனக்கு உணர்த்திய வெகுசிலரில் துவாரகரும் ஒருவர். அந்த சூழலே கற்றலுக்கானது அல்ல, ஆயினும் அக்குழந்தைகள் படித்து எப்படியும் முன்னேறவேண்டும் என நினைக்கும் நல்லுள்ளம் கொண்டஅவரை நி்னைத்து பெருமிதமாயிருந்தது.
பூட்டியிருந்த பள்ளியின் சாவியை ஒரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார் அந்த பெண்ணை அழைத்தால், தான் இன்னொரு ஊரில் இருப்பதாகவும், சாவியை தன் மகள் சந்திராவிடம் வாங்கிக்கொள்ளூம்படியும் சொல்லிவிட்டாள். அந்த சந்திராவை சாரல் மழையில் தேடிச்சென்றோம்..
எனக்கு ஜெ வின் கொரோனாக்கால நூறுகதைகளில் ஒன்றான யானையில்லா’வின் சந்திரி நினைவுக்கு வந்தாள். சந்திரா ஆற்றுக்கு குளிக்க போயிருந்ததால் காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லையென்றானது. தருணும் சூர்யாவும் காட்டுக்குள் சென்றுவிட்டார்கள் நானும் செந்திலும் துவாரகரும் அங்கிருந்த அகன்ற கால்வாயையும் அங்கு பெருக்கெடுத்தோடிய நீரையும் பார்த்தபடிக்கே நடை சென்றோம். பேச்சில் எங்களை முழுக்காட்டிக்கொண்டே உள்ளே அழைத்துச்சென்றார்.
வழியில் ஒரு பரட்டைத்தலை சிறுவன் எதிர்ப்பட்டான். அவனை பார்த்ததும் இவர் பரவசமாகி ‘’டே கொஞ்சும் குமரா, (அதான் பெயரே! என்ன அழகுப்பெயர் இல்லையா?) பிரதாப்ப வரச்சொல்லுடா’’ என்றார்.
அந்த கொஞ்சும் குமரன் என்னும் 6/7 வயதிருக்கும் முந்திரிக்கொட்டை கேட் வாக் குமரிகளைப்போல ஒரு காலை லேசாக முட்டிபோட்டு தெற்குநோக்கியும் இன்னொரு காலை நீட்டி வடக்கிலும் வைத்துக்கொண்டு ஒரு கையை பின்னே வளைத்து தலையை தொட்டுக்கொண்டு ‘இன்னா’’ என்னும் தொனியில் இவரை பார்க்கிறான். எனக்குள் இருந்த ஆசிரிய ரத்தம்’’ டேய் காட்டுப்பயலே, HM டா ‘’ என்று கொந்தளித்தது. அவனோ இவருக்கு பதில் கூட சொல்லாமல் மேலேறி எங்கோ சென்றான். பிரமிப்பாக இருந்தது இவர்களின் ஆசிரிய மாணவ உறவு. சிலநாட்களாக ஜெ தளத்தில் எஸ்ரா ஞானி கட்டுரை, ஆசிரிய மாணவ உறவு சர்ச்சை எல்லாம் ஒடிக்கொண்டிருக்கே, இவர்கள் நாமிருக்கும் யுகத்திற்கு பலயுகங்களின் தொலைவில் இருக்கிறார்கள் என்று தோன்றியது.
துவாரகர் எதிர்ப்படும் பலருக்கு இவராக வணக்கம் சொல்லுவதும் அந்த டிசி வாங்காத கடங்காரன் பிரதாப்பை வரச்சொல்லி தூதுவிடுவதுமாகவே இருந்தார்.
எனக்கு இதற்குள் துவரகரைக்குறித்த ஒரு சுமாரான சித்திரம் கிடைத்திருந்தது. எளிமையான மனிதர். அவருக்கென்று சில நியமங்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிக்கொண்டு அவற்றை தீவிரமாக நம்பி வாழ்வை மிக எளிமையாக வாழ்ந்து வருபவர். இந்தகாட்டுப்பள்ளிக்கு விருப்ப மாறுதல் வாங்கிக்கொண்டு வந்திருப்பதில் இப்போது கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.
மேலும் அவருடனான உரையாடலை, எப்படி கொண்டு போகிறாரென்றூம் பிடிகிடைத்தது. ஓயாத பயிற்சியாயிற்றே!
பேசிக்கொண்டிருக்கையிலேயே எதாவது ஒரு முக்கியமான பாயிண்ட் சொல்லும்போது ( அதாவது அவரைப்பொருத்த வரைக்கும் முக்கியமானது) அதை மீண்டும் சொல்லத்துவங்கி பாதியில் அந்த வாக்கியத்தை நிறுத்தி என்னைப்பார்த்து ’’எப்படி, எட்டாம் கிளாசிலேயே?’’ என்பார் நான் சுதாரித்துக்கொண்டு ’’ஃபெயிலானப்புறமும்’’ என்று அதை முடிப்பேன் அகமலர்ந்து மீண்டும் தொடருவார். எதிரிலிருப்பவர் பேச்சை கவனிக்கிறாரா என்று சோதிக்கும் அற்புதமான உத்தி இது.
உமாகரன் ராசையா என்னும் இலங்கைப் பேச்சாளரின் உரைகளை கேட்டிருக்கிறீர்களா? துவாரகரின் இதேஉத்தியைத்தான் அந்த இளைஞனும் கடைப்பிடிக்கிறான், பேச்சின் இடையே’’ எப்படி’’? என்பான் நம்மிடம் பின்னர் முன்பு சொன்னதை மீண்டும் ஒருமுறை அழுத்திச்சொல்லுவான். அத்தனை அ ழகாக இருக்கும் அவன் தமிழைக்கேட்பது. இணையத்தில் கிடைக்கும் அவனது உரைகள், கேட்டுக்கொண்டிருங்கள். நான் மீண்டும் தொடருகிறேன்
Leave a Reply