அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

கவா!

ஃபிஜி தீவின் ஒரு சிறு கிராமத்தில் அந்தி நேரம். கடற்கரையில் நெருக்கமாக வளர்ந்திருந்த ஆற்றுப்பூவரசு மரங்களால் சூழப்பட்டிருந்தது அந்தப் பனையோலைக் கூரையிடப்பட்ட, ‘பூர்’ (Bure) குடிசை. வெளியிலிருந்து வந்த கடற்காற்றுடன் வேர்களின் ஈர மணமும் மண் வாசமும் குடிசைக்குள் நிறைந்திருந்தன.

குடிசையின் தரையில் விரித்திருந்த , தாழம்பூ இலையால் பின்னப்பட்ட ‘இபே’ (Ibe) பாய்களில் ஆணும் பெண்ணுமாகப் பலர் குழுமி அமர்ந்திருந்தனர்.

குடிசையின் நடுவே ‘வெசி’ மரத்திலிருந்து கைவேலையாக உருவாக்கப்பட்டு, ஃபிஜி கலாச்சாரத்தில் தலைமுறை தலைமுறையாகப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும் கால்கள் கொண்ட பெரிய மரக்கிண்ணமான ‘தநோவா’ (Tanoa) வைக்கப்பட்டிருக்கிறது. அதன் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் கிராமத்து மூத்த தலைவரான ‘துகா’ கடற்கரையோர ஆற்றுப்பூவரசு மரத்தின் பட்டையிலிருந்து உரிக்கப்பட்ட ‘வாவு’ (Vau) நார்களைத் தன் கைகளில் சுற்றிக்கொள்கிறார்.

மேலும் சில ஆண்கள் ஆற்றுப்பூவரசு, பெரணி மற்றும் சில நறுமண மூலிகை இலைகளை நாரில் கட்டி கைகளிலும் கழுத்திலும் அணிந்துகொண்டு சடங்கிற்குத் தயாராகிறார்கள். இடுப்பில் ‘வாவு’   மரப்பட்டை நாராலான இடையாடையை ஆண்கள் அனைவரும் அணிந்திருக்கிறார்கள்.

ஃபிஜியக் கலாச்சாரத்தில் “நிலம், அதில் வாழும் மக்கள், மற்றும் தாவரங்கள் அனைத்தும் பிரிக்க முடியாத ஒரே உயிரமைப்பு” என்னும் ‘வானுவா’ என்றொரு முதன்மையான கோட்பாடு உண்டு. எனவே தாவரங்கள் அவர்களின் அன்றாட வாழ்விலும் சடங்குகளிலும் விழாக்களிலும் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கின்றன. 

ஃபிஜி நாட்டின் பாரம்பரிய முறைப்படி கவா தயாரித்துப் பரிமாறும் ஒட்டுமொத்தக் கலாச்சாரச் சடங்கான  இந்த ‘யாக்கோனா வாகாவிடி’யின் போது, இயற்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் மரப்பட்டைகள், குரோட்டன் இலைகள் மற்றும் நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆடைகளை ஃபிஜி மக்கள் உடுத்துகிறார்கள்.  தேங்காய்ச்சிரட்டையை எரித்துக் கிடைக்கும் கருஞ்சாம்பலைக் குழைத்து அனைவரும் முகத்தில் வரிகளையும் பொட்டுகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்,

அந்த அமைதியான அந்திப் பொழுதில், சடங்கின் தொடக்கமாக கிராமத்தின் மூத்த தலைவரான  ‘துகா’ வின்  குரலில் ஃபிஜிய மொழியின் பாரம்பரியப் பாடல் எழுகிறது.

“Bula vinaka, bula re…

Yaqona tabu, yaqona tabu…

Vaka turaga na nodada Vanua…”

உங்களுக்கு நல்வாழ்த்துகள், இனிய நல்வாழ்வு உரித்தாகட்டும்…

 இது புனிதமான கவா, இது தூய்மையானது…

 அரச மாண்பும் பெருமையும் மிக்கது நமது தாய் நிலம் …

அந்த நீண்ட பாடலின் இறுதியில் “இந்த மண்ணின் தெய்வங்களே, எங்களின் தலைவரே, இந்தத் தூய வேர்ப்பானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இயற்கையையும் மூதாதையர்களையும் வாழ்த்திப் பாடும் வரிகள்  ஒலித்ததும், சுற்றிலும் வட்டமாக அமர்ந்திருக்கும் மூத்தவர்கள் அனைவரும் தங்கள் உள்ளங்கைகளைக் கிண்ணம் போலக் குவித்துத் தாளம் எழுப்புகிறார்கள். சாதாரணக் கைதட்டல் போலல்லாமல், ஆழமான  ஒலியாக எழும் அந்த ‘கொபோ’ (Cobo) கைத்தாளம் மூதாதையர்களின் ஆன்மாவை வணங்கி, இயற்கையிடம் அமைதியைக் கோரும் ஃபிஜித்தீவின் பிரத்யேகப் பண்பாட்டுத்தாளம்.

அந்த தாளத்தோடு தநோவா மரக்கிண்ணத்தின் குழிவில் கவா வேர்ப்பொடியும் தண்ணீரும் கலக்கப்பட்டு,  வாவு நார்ச்சல்லடையில் சாறு பிழியபடுகிறது. சாறு  இறங்கும் சலசலப்பும் கொபோ கூட்டுத்தாளமுமாக கவா என்னும் அந்தத் தூய வேர்ப்பானம் தயாராகிறது.

பசிபிக் மொழியின் தொன்மரபுச் சொல்லான ‘கவா’ (kawa) என்பதற்கு “கசப்பு”  என்று பொருள். இந்தப் பெயர் இந்த வேர்ப்பானத்தின் தீவிரமான கசப்புச் சுவையைக் குறிக்கிறது

ஃபிஜி மொழியில் இதற்கு நாக்கை மரத்துபோகச்செய்யும் கசப்புவேர் என்னும் பொருள் கொண்ட  ‘யாகோனா’ (Yaqona) என்று தனிப்பெயர் இருந்தாலும், கவா தான் பரவலான பசிபிக் வட்டாரப் பயன்பாட்டில் இருக்கிறது. 

கவா என்ற பொதுப்பெயர் தென் பசிபிக் மொழிகளின் பழைய சொல்வடிவங்களுடன் தொடர்புடையதாக மொழியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொழியியலாளர் ஜான் டி. லிஞ்ச் (John D. Lynch) 2002-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில், kava என்ற சொல் பண்டைய பெருங்கடலிய மொழியில் இருந்திருக்கக்கூடிய kawari என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். அந்தச் சொல், தனித்துவமான நரம்பியல் அல்லது சடங்குசார் பண்புகளைக் கொண்ட வேரைக் குறித்திருக்கலாம் அல்லது அது காட்டுக் கவாவையோ வேறு தாவரங்களையோ குறித்திருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் ஜான்

ஃபிஜியின் தேசிய பானமான கவா அவர்களின் சமூக உறவுகள், சடங்குகள், நம்பிக்கைகள், விருந்தோம்பல், பொருளாதாரம் ஆகியவற்றோடு மிக நெருக்கமாகப் பிணைந்திருக்கிறது. 

தென் பசிபிக் தீவுகளில் ஒன்றான வனுவாட்டுவைத் தாயகமாகக் கொண்ட Piper methysticum என்னும் கவா தாவரத்தின் வேர் மற்றும் வேர்க்கிழங்குகளிலிருந்து இந்தப் பாரம்பரியப் பானம் தயாரிக்கப்படுகிறது. மிளகுக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்ச்சாறு, மனிதர்களின் மனநிலை மற்றும் நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இது பசிபிக் தீவுகளின் பாரம்பரியச் சடங்குகளிலும் சமூகக் கூடுகைகளிலும் தனித்த சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தப்பானம் சமோவா தீவில் ஆவா (Ava), ஹவாயில் ஆவா (ʻAwa) எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

கவாவை அறிந்துகொள்ள, அதன் தாவரவியல் அடையாளத்திலிருந்து அதன் பெயரின் பொருள், காட்டு மூதாதை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலப்பின வளர்ப்பு, தொன்மக் கதைகள், பண்பாட்டு முக்கியத்துவம், வேதிப்பொருட்கள், பயன்பாடுகள் மற்றும் பக்கவிளைவுகள் எனப் பல தளங்களுக்குள் பயணிக்க வேண்டியிருக்கிறது.

கவா ஒரு மெதுவாக வளரும், பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய வெப்பமண்டலச் செடி. இதன் இலைகள் அகலமாகவும் இதய வடிவிலும் இருக்கும். இலைகளில் நரம்பமைப்பு தெளிவாக அமைந்திருக்கும். 

கவா செடியில் அதன் தடிமனான வேர்களும் வேர் அடிக்கிழங்கும், முக்கியமானவை. வேரில் இருக்கும் வேதிப்பொருள்களே பானத்தின் நரம்பு மண்டலத் தாக்கங்களுக்குக் காரணமாக இருக்ன்றன.

Piper methysticum என்னும் மனிதர்களின் மனநிலை மற்றும் உணர்வுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்ட இதன் அறிவியல் பெயரை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் புரிந்துகொள்ளலாம்.

Piper என்பது  மிளகைக் குறிக்கும் லத்தீன் பெயர். (கருமிளகான Piper nigrum இதே பேரினத்தைச் சேர்ந்தது.) methysticum என்னும் சிற்றினப்பெயர் கிரேக்க மொழியின்  “போதையை ஏற்படுத்தக்கூடியது” என்று பொருள் படும்  methystikos என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.  

ஜெர்மானிய இயற்கையியலாளர் ஜார்ஜ் ஃபோர்ஸ்டர் (Georg Forster), 18-ம் நூற்றாண்டில் (ஜேம்ஸ் குக் உடன் தனது இரண்டாம் உலகப் பயணத்தின் போது) இந்தத் தாவரத்தை அறிவியல் உலகிற்கு முறையாக அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர். இது 1786- ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக  அறிவியல் பெயரிடப்பட்டது.

“போதையுணர்வை ஏற்படுத்தும் மிளகுத் தாவரம்” என்று  கவா பொருள் கொண்டிருந்தாலும், காவாவின் தாக்கம் மதுவின் தாக்கத்திலிருந்து வேறுபட்டது. 

இன்று பசிபிக் தீவுகளில் பயிரிடப்படும் கவா எங்கிருந்து தோன்றியது?

இப்போது  பயிரிடப்படும் Piper methysticum தாவரம், அதன் காட்டு மூதாதையான Piper wichmannii -லிருந்து உருவாக்கப்பட்டது.

Piper wichmannii என்பது நியூ கினியா, சாலமன் தீவுகள், வனுவாட்டு உள்ளிட்ட மெலனேசியப் பகுதிகளுடன் தொடர்புடைய காட்டுத் தாவரம். இதன் சிற்றினப்பெயர் ஹென்ரிச் விச்மேன் (Heinrich Wichmann) என்னும் ஜெர்மன் நாட்டுப் புவியியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரை சிறப்பிக்கும் பொருட்டு வைக்கப்பட்டது.*

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பசிபிக் தீவுகளில்  மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகளின் போது, கவா தாவரத்தின் காட்டு இன மாதிரிகளை (Wild specimens) முதன் முதலில் சேகரித்து வகைப்படுத்தியவர் இவரே. புகழ்பெற்ற தாவரவியலாளர் கசிமிர் தே காண்டோல் (Casimir de Candolle), விச்மேன் சேகரித்து அனுப்பிய அந்தத் தாவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டுதான், இந்த காட்டு இனத்திற்கு Piper wichmannii என்று முறையான அறிவியல் பெயரிட்டு ஆவணப்படுத்தினார்.

Piper methysticum காட்டுமூதாதையிலிருந்து பெறப்பட்ட”கலப்பினப்” பயிர் அல்ல, மாறாக, மனிதர்களின் தேர்ந்தெடுத்த வளர்ப்பு முறை -Selective Cultivation மூலம் உருவானது. 

கவா பானம் வனுவாட்டு பழங்குடியினரால் கி.மு. 1000 அளவில் கண்டுபிடிக்கப்பட்டது. தாவரவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளின்படி (குறிப்பாக தாவரவியலாளர் டாக்டர் வின்சென்ட் லெபோட் போன்றோரின் ஆய்வுகள்). சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் பெருங்கடல் பகுதியில் குறிப்பாக வனுவாட்டு தீவுகளில், காட்டுக் கவாத் தாவரமான Piper wichmannii-ல் சில இயற்கை மரபணு மாற்றங்கள்  ஏற்பட்டன.  இந்த மாற்றமடைந்த தாவரங்களிலிருந்து கிடைத்த பானம்  மனிதர்களுக்கு அதிக அமைதியையும், நல்ல உணர்வையும் தருவதை பசிபிக் தீவு மக்கள் கண்டறிந்தனர். அதனால், அந்த குறிப்பிட்ட செடிகளின் தண்டுப் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து, தொடர்ந்து பயிரிட்டு வளர்த்தனர்.

பசிபிக் பெருங்கடலில் ஆயிரக்கணக்கான தீவுகள் பரவிக் கிடக்கின்றன. அவற்றுக்கிடையே மக்கள் மேற்கொண்ட கடற்பயணங்கள், குடியேற்றங்கள், உணவுப் பயிர்கள் மற்றும் பயனுள்ள தாவரங்களின் பரிமாற்றங்கள் ஆகியவை அப்பகுதியின் உயிரியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை வடிவமைத்தன.

தாவரவியல் மற்றும் மொழியியல் ஆய்வுகள், வடக்கு வனுவாட்டுவிலிருந்து மனிதர்களின் கடற்பயணங்கள், குடியேற்றங்கள், தாவரப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் வழியாக கவா பசிபிக் தீவுகளின் பல பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம் என்கின்றன.   பிஜி, டோங்கா, சமோவா, வனுவாட்டு, ஹவாய் உள்ளிட்ட பல பசிபிக் சமூகங்களில் கவா சாகுபடியும் அதனுடன் தொடர்புடைய பான மரபுகளும் இப்படித்தான்  பரவி வளர்ந்தன. 

ஆனால் எல்லாத்தீவுகளிலும் கவாவின் பெயர், தயாரிப்பு முறை, சடங்குகள், சமூகப் பயன்பாடுகள் ஒரே மாதிரியாக இல்லை.

காவாவைப் பற்றிய தொன்மக் கதைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தீவுச் சமூகத்திலும் உள்ளூர் மரபுகள், கடவுள்கள், மூதாதையர் பற்றிய நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கவாவின் கதைகளும் மாறுபடுகின்றன. 

பிஜியப் பண்பாட்டில், தேகெய் (Degei) என்ற தெய்வம் தொடர்பான பிரபலமான  தொன்மக்கதை இருக்கிறது. 

உலகின் உயர்ந்த படைப்பாளி மற்றும் ஆதிப் பெருநாகக் கடவுளான தேகெய்  மனிதர்களுக்கு வழங்கிய தெய்வீகப் பரிசுதான் கவா செடி. காடுகளிலும் மலைகளிலும் தொடர் போர்களால் தொல்குடிமக்கள் அடித்துக்கொண்டு அழிந்த காலகட்டத்தில், மனிதர்களின் மனக்கசப்பையும் வன்முறையையும் தணித்து அவர்களை அமைதிப்படுத்தவும், தெய்வங்களுடன் தொடர்பில் வைத்திருக்கவும் இந்தச் செடியைத் தேகெய்  பூமிக்கு அளித்தார் என்கிறது அந்தத் தொன்மம்.

மனிதர்கள் தங்களிடையே உள்ள பகையை மறந்து ஒரே வட்டமாக அமர்ந்து கவாவைச் சுவைப்பதன் மூலம், கடவுளின் அருளும் அமைதியும் அவர்களுக்குக் கிடைக்கும் என்பது அங்கே நிலைத்துவிட்டிருக்கும் ஒரு மரபு.

பிஜியில் காவா ஒரு பானம் மட்டுமல்ல; அது சமூக உறவுகளை உருவாக்கும் ஒரு பண்பாட்டுக் கருவி. பாரம்பரிய நிகழ்வுகள், விருந்தோம்பல், பேச்சுவார்த்தைகள், குடும்பக் கூடுகைகள், கிராமக் கூட்டங்கள் போன்ற பல சூழல்களில் அது இடம் பெறுகிறது.

பிஜியில் செவுசெவு (Sevusevu) என்பது ஒரு கிராமத்திற்கோ சமூகத்திற்கோ வருகை தரும் விருந்தினர்கள், அங்குள்ள தலைவர்களிடம் அல்லது சமூகப் பிரதிநிதிகளிடம் மரியாதையுடன் தங்களை அறிமுகப்படுத்தும் பாரம்பரிய நிகழ்வு. இதன் ஒரு பகுதியாக கவா வேர்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்தப் பரிசு விருந்தினர்கள் அந்தச் சமூகத்தின் மரபுகளை மதிக்கிறார்கள் என்பதையும், அங்குள்ளவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஃபிஜியில் கவா அருந்துவது ஒரு சமூகக் கூட்டமைப்பின் வெளிப்பாடு. வட்டமாக அமர்ந்து கவாவை அருந்திக்கொண்டே நாட்டின் அரசியல், சமூகப் பிரச்சினைகள் முதல் குடும்ப நிகழ்வுகள் வரை கலந்துரையாடும் பண்பாட்டிற்கு ‘தலனோவா’ என்று பெயர்.

கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும், உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் இந்தத் தலனோவா நிகழ்வுகளே முதன்மையான களமாக அமைகின்றன.

ஃபிஜி கலாச்சாரத்தில் ஏதேனும் ஒரு தவறு நடந்து, இரண்டு குடும்பங்கள் அல்லது கிராமங்களுக்கு இடையே பிணக்கு ஏற்பட்டால், தவறு செய்தவர் கவா செடியின் காய்ந்த வேர்களைக் கொண்டு சென்று மன்னிப்பு கேட்பார். இந்தச் சடங்கிற்கு ‘சொரு’ என்று பெயர். கவா வேரை ஏற்றுக்கொண்டால், தவறு முழுமையாக மன்னிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள்.

கவா சடங்கின் தொடக்கத்தில் பழங்குடித் தலைவர்களுக்கு  முதல் கவா கோப்பை வழங்கி மரியாதை செய்யப்பட்டாலும், அந்த வட்டத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஒரே பாத்திரத்தில் இருந்துதான் கவா பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது சமூகத்தில் உள்ள அனைவரையும் சமமாக மதிக்கும் உணர்வை வளர்க்கிறது.

கவாவில் உள்ள ‘கவாலக்டோன்கள்’  மன அழுத்தத்தைக் குறைத்து, உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் இயல்புடையவை. மது அல்லது பிற போதைப்பொருட்களைப் போல இது மூளையின் தெளிவைக் கெடுப்பதில்லை. இதனால், நாள் முழுவதும் உழைத்த மக்கள் மாலையில் உடற்சோர்வைப் போக்கவும், நிம்மதியான உறக்கத்தைப் பெறவும் கவாவை நாடுகிறார்கள்.

ஃபிஜியர்களின் ‘வானுவா’ தத்துவத்தின்படி, நிலமும் அதில் உள்ள தாவரங்களும் மூதாதையர்களின் ஆன்மாக்கள் வாழும் இடங்கள். எனவே, கவா செடியை வெட்டி எடுப்பதற்கு முன், அந்தத் தோட்டத்தின் அல்லது காட்டின் மூதாதையர்களிடம் மனதார அனுமதி கேட்பார்கள்.

“இந்தத் தூய வேரைக் கொண்டு நாங்கள் மனிதர்களின் அமைதிக்காகவும் நல்லுறவுக்காகவும் சடங்கு செய்யப் போகிறோம்; இந்தத் தாவரத்தை அறுவடை செய்ய எங்களுக்கு அனுமதி தாருங்கள்” என்று அமைதியான முறையில் வேண்டிக்கொள்வார்கள்.

அறுவடைக்காக  ஒரு கவா தோட்டத்திற்குள் நுழையும்போது, கைவசம் இருக்கும் கவா வேர்ப்பொதியையோ அல்லது புகையிலை இலையையோ ஒரு சிறிய காணிக்கையாக  அந்த நிலத்திற்குச் செலுத்துவது அவர்களின் வழக்கம். “நிலத்திடம் இருந்து எதை எடுக்கிறோமோ, அதற்குப் பதிலாக மரியாதையைக் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்ற தொல்மரபின் அடிப்படையில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. கவா செடியின் வேர்கள் முழு முதிர்ச்சி அடைந்திருந்தால் மட்டுமே மிகுந்த கவனத்துடன் வெட்டி எடுப்பார்கள்.  

கழுவிச் சுத்தமாகப்பட்ட கவா வேர்கள் வெட்டி,  நசுக்கப்பட்டு உலர்த்தி  அரைக்கப்பட்டு  பொடியாக்கி, வெசி (Intsia bijuga) மரத்திலிருந்து உருவாக்கப்பட்ட  தநோவா மரக்கிண்ணத்தில் குழியிலிடப்பட்டு தண்ணீருடன் கலக்கப்படுகின்றன. பின்னர்  வாவு மரப்பட்டை நார்த்துணியால் வடிகட்டப்பட்ட  சாம்பல்-மஞ்சள் நிறப் பானம்  தநோவாவில் சேகரிக்கப்படுகிறது. சிறிய தேங்காய்ச் சிரட்டைக் கிண்ணமான பிலோ (bilo) மூலம் அது பரிமாறப்படுகிறது.

இந்தத் தயாரிப்பு முறை வெறும் சமையல் முறையாக அல்லாமல்   இயற்கையோடு இணைந்து செய்யப்படும் ஒரு புனிதச் சடங்காகச் செய்யப்படுகிறது. இந்த காவு பானச்சடங்கு பெரும்பாலும் மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகுதான் நடைபெறும்.

கவாவுக்கு உடலைத் தளர்த்தி, அமைதிப்படுத்தும் இயல்பு உண்டு என்பதால்  மக்கள் தங்கள் அன்றாட விவசாய வேலைகளை முடித்துவிட்டு, மாலை வேளையில் மன அழுத்தத்தைப் போக்கவும் நிம்மதியாக உறங்கவும் கவாவைப் பருகுகிறார்கள்.

அரசு விழாக்கள், புதிய விருந்தினர்களை வரவேற்கும் அல்லது பழங்குடித் தலைவர்களின் முக்கியமான கூட்டங்கள் நடைபெறுகையில் பகல் நேரத்திலும் கவா தயாரிக்கப்படுகிறது.

சடங்குகளில் கவா பாத்திரத்தைச் சுற்றி அமர்ந்து பிழிந்து தரும் பணிகளை ஆண்களே முதன்மையாகச் செய்வார்கள். பெண்கள் கவாவை விருந்தினர்களுக்குக் கோப்பைகளில்  ஊற்றி உபசரிப்பதில்  ஈடுபடுகிறார்கள். கவா அருந்தும் நிகழ்வுகளில் பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமர்வதும், பேசுவதும், பானத்தைப் பரிமாறுவதும் முக்கியமானதாக இருக்கிறது.

கவா முழுக்க முழுக்க இயற்கையான வேர்ப்பொடியைத் தண்ணீரில் கலந்து வடிகட்டப்படும் ஒரு சாறு  மட்டுமே. இதில் ஆல்கஹால் இல்லை எனவே இது ஒரு மதுபானம் அல்ல, மனநிலை மற்றும் உடல் செயல்பாடுகளை மாற்றக்கூடிய உளச்செயல்பாட்டுத் தாவரப் பானம்தான் கவா.

கவா பொதுவாகத் தயாரிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்  பருகப்பட்டுவிடும். இதில் இயற்கையான நொதித்தல் இல்லாததால், புளிக்கவைக்கும் பாக்டீரியாக்களோ அல்லது ஈஸ்ட்களோ இதில் பங்காற்றுவதில்லை. இது தாவரச் சாற்றின் நேரடிப்பானம். தண்ணீரில் கரைக்கப்பட்ட கவா சாற்றை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க முடியாது. சில மணி நேரங்களுக்கு மேல் வைத்தால் அது கெட்டுப்போய்விடும், அதன் சுவையும் தன்மையும் மாறிவிடும்.

வெயிலில் உலர்த்திய வேர்த்துண்டுகளையும் வேர்ப்பொடியையும்   பல ஆண்டுகளுக்குச்  சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.  

கவா (Piper methysticum) தாவரத்தின் வேர்களில் காணப்படும் முக்கிய வேதிச்சேர்மங்கள் ஆறு வகையான  கவாலாக்டோன்கள். மன அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் கவாவின் பண்புகளுக்கு இந்த கவாலாக்டோன்களே காரணம்.  

  • முதன்மைச் சேர்மமான கவைன் (Kavain), மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அமைதிப்படுத்தி, தசைத் தளர்வைத்  தூண்டுகிறது.
  • இதன் துணைச் சேர்மமான டைஹைட்ரோகவைன் (Dihydrokavain), மூளையின் நரம்பியல் செயல்பாடுகளைச் சீரமைப்பதுடன், கவாவின் அமைதியளிக்கும் பண்புகளை மேலும் தீவிரப்படுத்துகிறது.
  • மெத்திஸ்டிசின் (Methysticin) மற்றும் டைஹைட்ரோமெத்திஸ்டிசின் (Dihydromethysticin) ஆகிய இரண்டு சேர்மங்களும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பதற்றத்தைக் குறைத்து, நரம்பணுக்களின் மிதமிஞ்சிய தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துகின்றன.
  • யாங்கோனின் (Yangonin)  உடலின் நரம்பியல் சமிக்ஞை அமைப்புகளுடனும், மனநிலையை முறைப்படுத்தும் ஏற்பிகளுடனும் (Receptors) நேரடியாக வினையாற்றி, மனதிற்கு  அமைதி உணர்வைத் தருகிறது. 
  • இதனுடன் இணைந்து செயல்படும் டெஸ்மெத்தாக்ஸி யாங்கோனின் (Desmethoxy yangonin), மூளையில் டோபமைன் போன்ற நரம்புக்கடத்திகளின் அளவைச் சீராகப் பராமரிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, இந்த ஆறு கவாலாக்டோன்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு மனித உடலுக்கு தசை மற்றும் நரம்புத் தளர்வையும் அளிக்கும் மருத்துவப் பானமாகிறது.

கவா அருந்துகையில் வாயில் தற்காலிக மரத்துப்போதல் அல்லது கூச்ச உணர்வும் உண்டாகும். கவாவை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைச்சுற்றல், மயக்கம், செரிமானக் கோளாறு அல்லது உடல் ஒருங்கிணைப்பில் குறைபாடு ஆகியவை உண்டாகக்கூடும். அதிக அளவில், நீண்டகாலம் பயன்படுத்தும்போது தோல் வறட்சி, செதில் போன்ற தோல் மாற்றங்கள் கல்லீரல் பாதிப்பு ஆகியவை உண்டாகலாம்..

மதுபானம் அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளுடன் கவாவைச் சேர்த்துப் பயன்படுத்தக்கூடாது. கல்லீரல் நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனையின்றிக் கவாவை அருந்தக்கூடாது. 

கவாவின் காட்டுமூதாதையிலும்  காவாலாக்டோன்கள் காணப்படுகின்றன. எனினும், அதன் வேதியியல் அமைப்பு வளர்ப்புக் காவாவிலிருந்து வேறுபடுகிறது எனவே, இரண்டையும் ஒரே தாவரமாகவோ ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தக் கூடியவையாகவோ கருதக்கூடாது

கவா பசிபிக் தீவுகளின் பண்பாட்டின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. 

கவாவை வெறும் கலாச்சாரத்தோடு நிறுத்தாமல், அதன் உலகளாவிய தரம் மற்றும் பெயரைப் பாதுகாப்பதற்காக, உருவாக்கப்பட்ட  ‘ஃபிஜி கவா மசோதா’ (Fiji Kava Bill) தற்போது ஃபிஜி நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. இது பிஜியின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கவா தொழில்துறையை முறைப்படுத்தவும், பாதுகாக்கவும், வர்த்தக ரீதியாக மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒரு முக்கியமான சட்ட முன் வடிவம்.  

கவா தொழில்துறையை நிர்வகிக்கவும், விவசாயிகள், பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உரிமங்கள் வழங்கவும், தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தவும் ஒரு பிரத்யேக அமைப்பை  உருவாக்குவது இதன் முதன்மையான நோக்கம்.

கவா சாகுபடி, வேர் பதப்படுத்துதல், உள்நாட்டு விற்பனை முதல் சர்வதேச ஏற்றுமதி வரை முழு உற்பத்திச் சங்கிலியிலும் கட்டாய உரிம முறை, தயாரிப்பு கண்காணிப்பு மற்றும் கடுமையான தரக் கட்டுப்பாட்டு முறைகளையும் இம்மசோதா அறிமுகப்படுத்துகிறது

வெளிநாடுகளில் போலியான அல்லது தரமற்ற பானத்தை ‘ஃபிஜி கவா’ என்ற பெயரில் விற்பதைத் தடுப்பதற்கான பிரத்யேக தரக்கட்டுப்பாடுகளும், ‘ஃபியூஜி யாகோனா கவுன்சில்’ (Fiji Yaqona Council) அமைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளும்  இதன் மூலம் எடுக்கப்படும்

இன்று அக்டோபர் 10-ம் தேதி  பிஜி நாடு தனது சுதந்திரத்தைப் பெற்ற நாளாகவும் (1970), பிரிட்டிஷ் ஒப்பந்த நாளாக மாறிய வரலாற்று நாளாகவும் (1874) போற்றப்படும்  ‘பிஜி நாள்’ (Fiji Day) ஆக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், வழக்கத்துக்கு அதிகமாக கவா அருந்தும் நிகழ்வுகளும், நட்புறவு உரையாடல்களும், தேசியக் கொண்டாட்டங்களின் முக்கியப் பகுதியாக விமரிசையாக நடைபெறும்.

PC-தற்போது ஃபிஜியில் இருக்கும் ஜெ

மேலதிக வாசிப்புக்கான நம்பகமான ஆதாரங்கள்

1. National Center for Complementary and Integrative Health — கவாவின் பயன்பாடுகள், மருத்துவ ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்பு: Kava: Usefulness and Safety.

2. Museum of Archaeology and Anthropology, University of Cambridge — பிஜியின் யகோனா மரபு, தானோவா மற்றும் சடங்குகள்: Yaqona.

3. John D. Lynch (2002) — Potent roots and the origin of kava, Oceanic Linguistics: ஆய்வின் சுருக்கம்.

4. Dan F. Orcherton (2012) — Forging Fijian Camaraderie: The Cultural Significance and Social Uses of Kava (Yaqona): முழு ஆய்வுக் கட்டுரை.

5. US National Library of Medicine — தாவரத்தின் வேதிப்பொருள்கள், உருவவியல் மற்றும் பயன்பாடு தொடர்பான ஆய்வுத் தகவல்கள்: Kava: Botanical and exposure information.

* தாவரவியல் வரலாற்றில் வழக்கமாக, இயற்கையில் இருக்கும் காட்டுத் தாவரத்தைககண்டுபிடித்துப் பெயரிட்ட பிறகே, அதிலிருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட பயிர் வகைகளுக்குப் பெயரிடுவார்கள். ஆனால், கவா பெயரிடுதலில் இது தலைகீழாக நடந்தது.

18-ம் நூற்றாண்டில் (1770-களில்) கேப்டன் ஜேம்ஸ் குக்கின் இரண்டாவது உலகப் பயணத்தின் போது, அவருடன் வந்த ஜெர்மனியத் தாவரவியலாளர் Georg Forster பசிபிக் தீவுகளில் மக்கள் வளர்த்து வந்த கவா செடியை முதன்முதலில் சேகரித்து 1786- ல் அறிவியல் ரீதியாக Piper methysticum எனப் பெயரிட்டார். தீவுவாசிகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நறுக்கிய தண்டு மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஒரு வளர்ப்புப் பயிரைத்தான் (Domesticated Cultigen) ஐரோப்பிய தாவரவியலாளர்கள் முதலில் சந்தித்தனர்.

கவாவின் பிறப்பிடமான மெலனீசியக் தீவுகளின் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு 20ம் நூற்றாண்டில்தான் (1903-ல்) சுவிஸ் தாவரவியலாளர் காசிமிர் டி கண்டோல் (Casimir de Candolle) போன்றவர்கள் சென்று ஆய்வு செய்தனர். அங்கிருந்த காடுகளில் இயற்கை முறையில் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்து தானாக வளர்ந்த அதன் காட்டுமூதாதையைக் கண்டறிந்து, 19.-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் அதற்கு ‘பைப்பர் விச்மானி’ (Piper wichmannii) எனப் பெயரிட்டனர்.

அம்மா!

குளித்தலை ஷண்முகம் அவர் வயலிலிருந்து மெய்யாகவே தூயதான, நஞ்சில்லாமல் விளைவித்த தூயமல்லி கைக்குத்தல் அரிசியைக் கொடுத்திருந்தார். பாண்டிச்சேரியிலிருந்து குளித்தலை வந்து, அவரது பிரம்மாண்டமான மாளிகை வீட்டிலிருந்து அரிசியை எடுத்துக்கொண்டுதான் வீடு வந்தேன். இன்றுதான் இந்த அரிசியைச் சமைத்தேன். கைக்குத்தல் அரிசியின் சுவையே அலாதிதான்; அதுவும் நஞ்சற்றது என்பதால் இன்னும் சிறப்பு.

இதற்கு முன்பு ஒரு நண்பர் ஒரு மூட்டை கைக்குத்தல் அரிசி கொடுத்தனுப்பி இருந்தார், கோவிட் முடிந்த சமயம் என்று நினைக்கிறேன். அச்சமயத்தில் பெல்ஜியம் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வருவதாகத் தகவல் சொன்னபோது நான் கல்லூரியில் இருந்தேன். மதியம் விடுப்பெடுத்துக்கொண்டு வந்து, அன்று சனிக்கிழமை என்பதால் கொள்ளுப்பருப்பு கடைந்து, ரசம், பீட்ரூட் பொரியல் செய்து, கைக்குத்தல் அரிசியைக் கஞ்சி வடித்துச் சமைத்திருந்தேன். சனிக்கிழமை எப்போதும் கொங்குப் பகுதியில் கொள்ளுப்பருப்பு செய்வது வழக்கம்.

நண்பருடன் அவரது நண்பருமாக இருவரும் வந்திருந்தார்கள். அவர்கள் இந்தியா வரும்போதெல்லாம் பொள்ளாச்சியின் பிரபல நிறுவனமொன்றிலிருந்து அவர்களுக்குக் கார் கொடுத்தனுப்புவார்கள். அன்றும் அப்படித்தான்; ஓட்டுநர் வெள்ளைச் சீருடையில் இருந்தார். அவரும் மதியம் சாப்பிட்டிருக்கவில்லை. எனினும் எத்தனை அழைத்தும் உள்ளே விருந்தினர்களுடன் அமர்ந்து சாப்பிட மறுத்துவிட்டார். எனவே  திண்ணையில் இருக்கும், நான் காபி குடிக்கும் எனது பிரியத்துக்குரிய வட்ட கிரானைட் மேசையில், இலை போட்டு ஒரே சமயத்தில் அவருக்கும் பரிமாறி உள்ளும் புறமுமாக நடந்துகொண்டிருந்தேன்.

மறுசாப்பாடு போட வெளியே வந்தபோது அந்த ஓட்டுநர் தோளில் அரட்டை அரங்கம் விசு போலச் சின்ன டவல் போட்டிருந்ததை எடுத்துக் கண்ணையும் மூக்கையும் துடைத்துக்கொண்டே, “அம்மா,” என்று குரல் கமற, “நீங்களாம்மா கொள்ளுப்பருப்பு கடைஞ்சீங்க?” என்றார். “ஆமாங்க, இங்கே வீட்டில் எப்போதும் சமையல் நான்தான்” என்றேன். மீண்டும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “அப்படியே இந்தக் கைக்குத்தல் அரிசிக்குக் கொள்ளுப்பருப்புமா எங்கம்மா கைப்பக்குவம்மாதிரியே இருக்குங்க, இப்படித்தான்; இப்படியேதான் எங்கம்மா கொள்ளு சமைச்சுப் பக்கத்திலேயே நின்னுட்டு பரிமாறுவாங்க. அவங்க போனதுக்கப்புறம் அதே மாதிரி இன்னிக்குத்தான் சாப்பிடறேன்” என்றார். 

நான் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தேன். பின்னர் சமாளித்துக்கொண்டு, “இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைச்சு ரசம் ஊத்தட்டுமா?” என்றேன். “சாப்பாடு போடுங்க, கொள்ளு இருக்காம்மா?” என்றார். “இருக்குங்க, நிறையவே கடைஞ்சிருக்கேன்” என்றேன். “ரசம் வேண்டாம்மா, கொள்ளுப்பருப்பே ஊத்துங்க” என்றார். மீண்டும் கண்ணையும் மூக்கையும் துடைத்துக்கொண்டே சாப்பிட்டார்; மறுமுறையும் சாப்பாடு வாங்கி, கொள்ளுப்பருப்பையே வாங்கிக்கொண்டார். சுத்தமாக சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம் ஏதோ யோசித்துவிட்டு இலையை மடக்கி எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனார். 

என்னவோ எனக்கு நெஞ்சில் கனமாக அடைத்துக்கொண்டதுபோலவே இருந்தது. பின்னர் விருந்தினர்கள் மாலை 5 மணிவாக்கில் புறப்படும்வரை அரப்பு மரத்தடி மரப் பெஞ்சில் உட்கார்ந்திருந்து, கையைக் கட்டிக்கொண்டு எதிரில் இருந்த தென்னை மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

புறப்படுகையில் என்னைப் பார்த்து,  கைகூப்பி வணங்கி “அம்மா வரட்டுங்களா! மறக்கவே மாட்டேன் உங்களையும் இந்தச் சாப்பாட்டையும்” என்றார். நானும் கைகூப்பி விடைகொடுத்தேன். 

இப்போது சில வருடங்களாக, மகன்களை விமான நிலையத்திலும் ரயிலடியிலும் பேருந்து நிலையத்திலும் அனுப்பிவைத்துவிட்டுத் திரும்புகையில், அவரது அடிபட்டதுபோல் சிவந்து கன்றிய முகத்தையும் கண்ணீர் தளும்பிய கண்களையும் நினைத்துக்கலங்குகிறேன்.

பித்துத்தேன்!

க்னேயஸ் பாம்பேயஸ் மாக்னஸ் என்கிற பாம்பே,  ரோமானியக் குடியரசு கண்ட மிகச் சிறந்த தளபதிகளில் ஒருவர். இளம் வயதிலேயே சிசிலி, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் நடந்த பெரும்போர்களில் வெற்றி பெற்றதால் “மாக்னஸ்” (பெரியவர்) என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஸ்பெயினில் நடந்த போரிலும், மத்தியதரைக் கடலைப் பீடித்திருந்த கடற்கொள்ளையரை ஒடுக்கியதிலும் அவர் பெரும்புகழ் பெற்றார். இந்தப் புகழால் கி.மு. 66-ல், கருங்கடலின் தென்கரையிலிருந்த பாண்டஸ் அரசின் மன்னன் ஆறாம் மித்ரிடேட்ஸுக்கு எதிரான பல தொடர்ப் போர்களின் முழுப் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் போரில் அவர் மித்ரிடேட்ஸின் படையை முறியடித்து, பாண்டஸ் பகுதிகளில் தம் படைகளை நிறுத்தி நகரங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றிக்கொண்டிருந்தார். 

அந்தக் காலத்தில் (சுமார் கி.மு. 66–64) ஒரு சமயம், அவருடைய படைப்பிரிவுகள் டிரபிசஸ் நகரைச் சுற்றிய மலைநாட்டு வழியாகச் சென்றன. படையினர் பசியிலும் தாகத்திலும் வெகுவாகக் களைத்திருந்தனர். 

அங்கு வாழ்ந்த ஹெப்டகோமெட்டாய் (“ஏழு கிராமத்தார்”) என்ற மலைக்குடிகள் அவர்கள் வரும் பாதையோரத்தில் தேன் நிரம்பிய குடுவைகளை ஏராளமாக வைத்துவிட்டுப் பதுங்கிக்கொண்டனர். பசியில் களைத்திருந்த வீரர்கள் அதை மலைக்குடியினரின் வழக்கமான விருந்தோம்பல் என்று கருதி அந்தத் தேனை அருந்தினார்கள். ஆனால்  அருந்திய உடனேயே வீரர்களுக்குத் தலை சுற்றிப் புலன்கள் தடுமாறி, கால்கள் நிற்க முடியாமல் போனது.  கையில் ஆயுதத்தைத் தாங்க முடியாமல் போதையில் இருப்பவர்கள்  போல் அவர்கள் தள்ளாடியபோது, பதுங்கியிருந்த மலைக்குடியினர் பாய்ந்து வந்து மூன்று ரோமானியப் படைப்பிரிவுகளையும் முழுமையாக  வெட்டி வீழ்த்தினர். தங்களின் பிரதேசத்துக்குள் அந்நியர் வருவதை விரும்பாத அவர்கள் உயிரிஆயுதமாக அங்கு கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட மலர்த்தேனை பயன்படுத்தியிருந்தார்கள்.

இந்தச் சம்பவம் உலகிற்குத் தெரிய வந்தது பாண்டஸ் பகுதியின் அமாசியா நகரில் பிறந்த கிரேக்கப் புவியியலாளர் ஸ்ட்ராபோவின் “புவியியல்” (Geographica) நூலிலிருந்து. அவர்  இதை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார். எனினும் இந்தச் சிறு மோதல் போரின் முடிவை மாற்றவில்லை; இறுதியில் அந்தப் போரில் வென்றது பாம்பேதான். புகலிடம் கிடைக்காமல் மித்ரிடேட்ஸ் மரணமடைந்தான்.

ஆனால் ஒரு மலைக்குடியின் இயற்கையறிவு ஒரு பெரும் படையின் ஆயுதபலத்தை விஞ்சிய அந்தத் தருணம் போரின் வெற்றியைக்காட்டிலும் முதன்மையானதாக வரலாற்றில் நிலைத்துவிட்டது. அந்தத் தேனில் அப்படி என்னதான் இருந்தது? எந்த மலரிலிருந்து அந்தப் பித்துத்தேன் கிடைத்தது?

ஏழு கிராமத்தார் அந்தச் செடியை என்ன பெயரில் அழைத்தனர் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. அவர்களுடைய மொழி எழுத்திலும் இல்லை; ஸ்ட்ராபோவும் செடியின் பெயரைச் சொல்லாமல் “தேன்” என்று மட்டுமே பதிவு செய்கிறார். எனவே அந்த மலைக்குடிகள் பொறியாக வைத்த தேன் எந்தச் செடியின் மலரிலிருந்து எடுக்கப்பட்டது, அந்தச் செடியை அவர்கள் எந்தப் பெயரில் அழைத்தனர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் குறிப்பிட்ட மலர்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேன் மனிதர்களைத் தற்காலிகமாகப் பித்தாக்கித் தடுமாறச் செய்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அது ஆளைக் கொல்வதைவிடச் சிறிது நேரம் செயலிழக்கச் செய்யும் என்பதையும், பசியோடு வரும் வீரர்கள் தேனை மறுக்க மாட்டார்கள் என்பதையும் அறிந்தே அதை ஆயுதமாக்கினர். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இன்றும் அதே கருங்கடல் மலைகளில் வாழும் மக்கள் இத்தேனை “கோமார் பாலி” (komar balı) என்று அழைக்கின்றனர்; “கோமார்” என்பது கிழக்குக் கருங்கடலில் ரொடோடென்ட்ரான் செடியைக் (R. ponticum) குறிக்கும் உள்ளூர்ச் சொல்.

பாம்பேயின் வீரர்கள்  பித்துத்தேனால் வீழ்ந்த நிகழ்வுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கும் முன்பே, அதே கருங்கடல் கரையில் இதே தேனால் ஒரு படை வீழ்ந்ததாக ஒரு வரலாற்றுப்பதிவு உண்டு.

கி.மு. 401-ல் பாரசீகப் பேரரசர் இரண்டாம் ஆர்டாக்செர்க்செஸுக்கு எதிராக அவருடைய தம்பி இளைய சைரஸ் கிளர்ச்சி செய்தான். அவனுக்காகப் போரிட ஏறத்தாழப் பத்தாயிரம் கிரேக்கக் கூலிப்படை வீரர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களே “பத்தாயிரவர்” (The Ten Thousand) என்று அழைக்கப்படுகின்றனர். பாபிலோனுக்கு அருகிலுள்ள குனாக்சா என்ற இடத்தில் நடந்த போரில் சைரஸ் கொல்லப்பட்டான். பகைவர் நாட்டின் நடுவே தலைவனின்றித் தனித்துவிடப்பட்ட கிரேக்கர்களின் படைத்தலைவர்களும் பின்னர் சதியால் கொல்லப்பட்டனர். 

அப்போது, சாக்ரடீஸோடு பழகியவரான ஏதென்ஸ் நகரத்து செனோஃபோன் தலைமையேற்று, மலைகளையும் ஆர்மீனியாவின் பனிப்பாதைகளையும் கடந்து கருங்கடலை நோக்கி பத்தாயிரத்தவர்களில் மீதமிருந்தவர்களை வழிநடத்தினார். இந்தப் பயணத்தை அவரே தன் “அனபாசிஸ்” நூலில் பதிவு செய்திருக்கிறார். கடலை நெருங்கும் வழியில், கருங்கடல் கரையிலிருந்த கிரேக்க நகரான டிரபிசஸுக்குச் சிறிது முன்பு, பசியிலிருந்த வீரர்கள் வழியிலிருந்த கிராமங்களின் தேன்கூடுகளிலிருந்து தேனை எடுத்து உண்டனர்.

செனோஃபோன் அந்த நிகழ்வை இப்படி விவரிக்கிறார்.

//தேனை உண்டவர் அனைவரும் புலன் இழந்தனர்; வாந்தியும் பேதியும் வந்தன; யாராலும் நிற்க முடியவில்லை. கொஞ்சமாக உண்டவர்கள் மிகையாகக் குடித்தவர்கள் போலவும், நிறைய உண்டவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போலவோ சாகக் கிடப்பவர்கள் போலவோ கிடந்தனர். நிலம் முழுவதும் வீரர்கள் கிடந்த காட்சி தோற்றோடிய படையைப் போல இருந்தது, பெருந்துயரம் நிலவியது. ஆனால் அன்று யாரும் இறக்கவில்லை. உண்ட அதே நேரத்தை ஒட்டி  மறுநாள் அவர்கள் தெளியத் தொடங்கி, மூன்றாம்,  நான்காம் நாளில் மருந்துகொடுத்து பிழைத்து எழுந்தவர்கள் போல் எழுந்தனர். அங்கே அவர்கள் தேடி உண்ட தேனால்தான் இது நேர்ந்தது// என்று செனோஃபோன் சொல்கிறார். ஆனால் எந்தச் செடியிலிருந்து அந்தத் தேன் வந்தது என்பதை அவரும் சொல்லவில்லை.

இந்தத் தேனுக்குக் காரணமான செடியை நோக்கி முதல் விரல் நீட்டிய பதிவுகளில் ஒன்று ரோமானிய அறிஞர் மூத்த பிளினியுடையது (கி.பி. 23/24–79). அவர் வெசூவியஸ் எரிமலை வெடித்தபோது உயிரிழந்தவர். 

பிளினி தன் “இயற்கை வரலாறு” (Naturalis Historia) என்ற பெருநூலில், பாண்டஸ் பகுதியில் ஒரு குறிப்பிட்ட செடியின் மலர்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேன் மனிதரைப் பைத்தியம் பிடித்தது போல் ஆக்குகிறது என்று எழுதுகிறார். அந்தத் தேனுக்குப் “பைத்தியமாக்குவது” என்று பொருள்படும் “மெலி மைனோமெனோன்” என்ற பெயரையும், ஆடுகளைக் கொல்வது” என்று பொருள்படும் “ஐகோலெத்ரான்” என்ற பெயரையும் அவர் குறிப்பிடுகிறார். 

அந்த “ஐகோலெத்ரான்” இன்றைய ரொடோடென்ட்ரான் என்றே பெரும்பாலான தாவரவியலாளர்கள் கருதுகின்றனர். கிழக்கே, சீனாவின் பழைய மூலிகை நூல்கள் ரொடோடென்ட்ரான் இனமான Rhododendron molle செடியை, ஆடுகளைத் தடுமாறச் செய்யும் நஞ்சுள்ள செடி என்று பதிவு செய்தன; இன்றும் அது “நாவோ யாங் ஹுவா” என்ற “ஆடுகளைக் குழப்பிப் பித்தாக்கும் பூ” என்னும் சீனமொழிப் பெயரில் அறியப்படுகிறது.

இது பழங்கதை மட்டுமல்ல; இன்றும் நேபாளம் மற்றும் இமயமலையில் பாறை முகடுகளில் தொங்கும் இராட்சதத் தேனீக்களின் (Apis laboriosa) கூடுகளை அறுவடை செய்யும் குருங் இனத்தவர், வசந்தத்தில் ரொடோடென்ட்ரான் மலரும் காலத்தில் எடுக்கும் சிவந்த தேனை மருந்தாகவும் போதைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். 

துருக்கியின் கருங்கடல் பகுதியில் இதே ரொடோடெண்ட்ரான் தேன் “டெலி பால்” (deli bal, பைத்தியத் தேன்) என்ற பெயரில் அறியப்படுகிறது. உள்ளூர் மக்கள் அதை நாட்டு மருந்தாக மிகச் சிறிய அளவில் உண்கின்றனர். அதிக அளவில் உண்டவர்கள் தலைச்சுற்றல், வியர்வை, இதயத் துடிப்புக் குறைவு, இரத்த அழுத்தம் வீழ்ச்சி ஆகியவற்றுடன் மருத்துவமனைக்கு வருவது அங்குள்ள மருத்துவப் பதிவுகளில் மீண்டும் மீண்டும் காணப்படுகிறது. 

அமெரிக்காவில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மவுண்டன் லாரல் (Kalmia latifolia) செடியின் தேனும் இதே விளைவைத் தருவதாக அறியப்படுகிறது.

இந்தத் தேனுக்கு மூலமான ரொடோடென்ட்ரான் (Rhododendron) எரிகேசி (Ericaceae) குடும்பத்தைச் சேர்ந்த பேரினம். இதன் பெயர் கிரேக்கச் சொற்களான rhodon (ரோஜா), dendron (மரம்) என்பதிலிருந்து வந்தது; “ரோஜா மரம்” என்பது பொருள். 

ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலாளர் லின்னேயஸ் 1753-ல் தன் “Species Plantarum” நூலில் இந்தப் பேரினத்தை வகைப்படுத்தினார். இன்று இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ எண்பது இனங்கள் பதிவாகியுள்ளன; பெரும்பாலானவை இமயமலையில் 1500 முதல் 5500 மீட்டர் உயரத்தில் வளர்கின்றன. இந்தப் பேரினம் பெரிதும் வடக்கு அரைக்கோளத்தில் பரவியது. இதன் மிகப் பெரிய பரவல் இமயமலையிலும் யுனான்–சிச்சுவான் பகுதிகளிலும் காணப்படுவதால், இது ஆசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இது தவிர, ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைகளிலும், காக்கசஸ்–கருங்கடல் பகுதியிலும், வட அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைகளிலும் இதன் இனங்கள் வளர்கின்றன. இந்தியாவில் Rhododendron arboreum உத்தராகண்டின் மாநில மரமாகவும், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகியவற்றின் மாநிலப் மலராகவும், நேபாளத்தின் தேசிய மலராகவும் இருக்கிறது.

இதன் R. arboreum subsp. Nilagiricum என்னும் துணையினம் தென்னிந்தியாவில் நீலகிரி மலையிலும் வளர்கிறது 

ரொடோடென்ட்ரான் சிறு புதர்களிலிருந்து உயர்ந்த மரங்கள் வரை பல வடிவங்களில் வளர்கிறது. R. arboreum போன்ற இனங்கள் இருபது மீட்டர் வரை உயரும் மரங்கள். இவற்றின் இலைகள தடித்த தோல் போன்றவை. பல இனங்களில் கிளை நுனிகளில் இலைகள் கொத்தாக அமைந்திருக்கும். சில இனங்கள் பசுமை மாறாதவை (R. ponticum), சில இலையுதிர்ப்பவை (R. luteum).  இவை புளிப்பு மண்ணை விரும்புகின்றன; வேர்கள் ஆழம் குறைந்தவை. எரிகேசிக்கே உரிய “எரிகாய்டு மைக்கோரைசா” என்ற பூஞ்சை உறவு இவற்றின் ஊட்டச்சத்துக்கு உதவுகிறது

ரொடோடென்ட்ரான் மலர்கள் தனித்தனியாக மலராமல், கிளை நுனிகளில் ஒரு கொத்தாகத் திரண்டு மலர்கின்றன. அந்தக் கொத்து உருண்டை வடிவில் அமைந்து, தொலைவிலிருந்து பார்த்தால் ஒரே பெரிய மலர் போலத் தோன்றும். ஒவ்வொரு மலரும் புனல் வடிவத்தில், அடியில் இதழ்கள் இணைந்த குழலாக இருந்து, மேலே ஐந்து மடல்களாக விரிகிறது. செம்மை, இளஞ்சிவப்பு, ஊதா, வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு. என பல நிறங்களில் மலர்கள் இருக்கின்றன.பல மலர்களில் நிறமுள்ள புள்ளிகள் காணப்படும். 

கிரேக்கத்தில் இது “ரோஜா மரம்” என்று பெயர் பெற்றதற்குக் காரணம், பல இனங்களின் மலர்கள் ரோஜாவின் செம்மை, இளஞ்சிவப்பு நிறங்களைக் கொண்டிருப்பதினால்தான்.  

இதன் கனி பல நுண்ணிய சிறகுள்ள விதைகளைக் கொண்ட வெடிகனி. மலர்கள் மிகுதியாகத் தேனைச் சுரக்கின்றன. இமயமலையில் தேன்பறவைகளும், பிற பகுதிகளில் தேனீக்களும் இந்தப் பூக்களை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.

இந்தத் தேனீக்களே பித்துத் தேனை சேகரிப்பவை. பல ரொடோடென்ட்ரான் இனங்களின் இலை, பூ, மகரந்தம், தேன் ஆகியவற்றில் கிரயனோடாக்சின் என்ற நஞ்சு உள்ளது; இது மேயும் விலங்குகளிடமிருந்து செடியைக் காக்கும் தற்காப்புக்காக உருவாக்கப்படுகிறது. 

வசந்தத்தில் ஒரு மலைச்சரிவு முழுவதும் ரொடோடென்ட்ரான் பூத்துக் குலுங்கும்போது, அதன் அருகில் அமைந்திருக்கும் தேனீக்கள் வேறு மலர்கள் எதையும் தேடாமல் இந்தப் பூக்களின் தேனையே பெருமளவில் சேகரிக்கின்றன. 

கருங்கடல் மலைகளில் R. luteum, R. ponticum பூக்களிலிருந்து இத்தேன் உருவாகிறது; நேபாளத்தில் இராட்சதத் தேனீக்கள் இமயமலை ரொடோடென்ட்ரான்களிலிருந்து இதைச் சேகரிக்கின்றன. இவ்வாறு உருவான தேன் அடர் சிவப்பு நிறத்தோடு, தொண்டையில் எரிச்சல் தரும் கசப்புடனும் இருக்கும். பல மலர்களின் தேன் கலந்த சாதாரணத் தேனில் இந்த நஞ்சு கரைந்து நீர்த்துப்போவதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஒரே செடியின் தேன் தனியாகத் திரளும்போதுதான் அது பைத்தியத் தேனாகிறது.

ரொடோடென்ட்ரானின் நஞ்சு என்ன, அது உடலை எவ்வாறு தாக்குகிறது?

செனோஃபோன் கி.மு. 401-ல் நிகழ்ந்ததாகப் பதிவு செய்ததையும், இன்று துருக்கிய மருத்துவமனைகளில் பதிவாகும் நோயாளிகளின் அறிகுறிகளையும் அருகருகே வைத்துப் பார்த்தால், இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகள் இடைவெளி இருந்தும் பதிவுகள் ஒத்துப்போகின்றன. தலைச்சுற்றல், வியர்வை, வாந்தி, உமிழ்நீர் சுரப்பு, கைகால் மரத்துப்போதல், இதயத் துடிப்புக் குறைவு, இரத்த அழுத்த வீழ்ச்சி, சிலருக்கு மயக்கம். இந்தத் தொடர்ச்சியே அறிவியலுக்கு உபயோகமுள்ள முதல் குறிப்பு. 

அடுத்து வேதியியலும் அதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த மலர்களில் உள்ள நஞ்சு கிரயனோடாக்சின்கள் (grayanotoxins) எனப்படும் டைடெர்பீன் (diterpene) வகைச் சேர்மங்கள். அவற்றின் வேதி அமைப்புக்குக் “கிரயனேன்” (grayanane) என்று பெயர். இந்தப் பெயர் ஜப்பானிய எரிகேசிச் செடியான லியூகோதோ கிரேயானா (Leucothoe grayana) என்பதிலிருந்து வந்தது. இப்போது இத்தகைய இருபதுக்கும் மேற்பட்ட சேர்மங்கள்  இந்தத் தேனில் அறியப்பட்டுள்ளன; 

ரொடோடெண்ட்ரான் தேன் நஞ்சாவதில் முதன்மையானவை கிரயனோடாக்சின் I மற்றும் III. முற்காலத்தில் இந்த நஞ்சு “ஆண்ட்ரோமெடோடாக்சின்” என்ற பெயரில் அறியப்பட்டது; பின்னர் ஜப்பானிய வேதியியலாளர்கள் அதன் அமைப்பைத் தெளிவுபடுத்தினர். இந்த நஞ்சு ரொடோடென்ட்ரானுக்கு மட்டுமே உரியதல்ல; அதன் குடும்பத்தைச் சேர்ந்த காம்மியா, பியரிஸ், லியோனியா போன்ற செடிகளிலும் இது காணப்படுகிறது. மேயும் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இந்தக் குடும்பம் உருவாக்கிய வேதிக் கவசம் இது.

நீலகிரி ரொடோடென்ரான்

இந்த நஞ்சு உடலுக்குள் செய்வது இதுதான். நரம்பு, தசை, இதய செல்களின் சவ்வில் சோடியம் கால்வாய்கள் (voltage-gated sodium channels) உள்ளன. சாதாரணமாக ஒரு தூண்டுதல் வந்ததும் இவை திறந்து, சில நொடிகளில் தானாக மூடிக்கொள்கின்றன. கிரயனோடாக்சின் இந்தக் கால்வாயின் குறிப்பிட்ட இணைப்புத் தளத்தில் ஒட்டிக்கொண்டு, அது மூடுவதைத் தடுக்கிறது. செல் தொடர்ந்து உற்சாகநிலையிலேயே நின்றுவிடுகிறது. இதயத்தில் இதன் விளைவாக வேகஸ் நரம்பு தூண்டப்பட்டு, இதயத் துடிப்பு மெதுவாகிறது; சிலருக்கு இதயத் துடிப்பின் ஒழுங்கும் குலைகிறது, இரத்த அழுத்தமும் சரிகிறது. இதனால்தான் மருத்துவமனைக்கு வருபவர்கள் தலைச்சுற்றல், வியர்வை, வாந்தி, மயக்கத்துடன் வருகிறார்கள். 

தேனை உண்டு சுமார் இருபது நிமிடம் முதல் சில மணி நேரத்துக்குள் அறிகுறிகள் தோன்றலாம். மருத்துவ உலகில் இதற்கான சிகிச்சை எளிது: அட்ரோபின் என்ற மருந்து தேனின்  விளைவை எதிர்த்து இதயத் துடிப்பை மீட்கிறது; பெரும்பாலோர் ஒரு நாளுக்குள் முழுமையாக மீண்டுவிடுகின்றனர்; இறப்புகள் மிகவும் அரிது. பித்துத் தேன் அருந்தி இறப்பின்றி மீளும் இந்த இயல்பு செனோஃபோனின் பதிவோடும் ஒத்துப்போகிறது.

நஞ்சாக்கியது ரொடோடென்ரானில் இருந்து எடுக்கப்பட்ட ஒருமலர்த்தேன்தானா என்பதை ஆய்வகம் இரு வழிகளில் உறுதிசெய்கிறது. 

முதலாவது மகரந்தப் பகுப்பாய்வு (melissopalynology). தேனில் தேனீக்கள் கொண்டுவந்த மகரந்தத் துகள்களும் கலந்திருக்கும்; அவற்றை நுண்ணோக்கியில் பார்த்து, எந்தச் செடியின் மகரந்தம் எவ்வளவு உள்ளது என்று கணக்கிடலாம். எரிகேசிக் குடும்பத்தின் மகரந்தம் நான்கு துகள்கள் ஒன்றாக இணைந்த கொத்தாக (tetrad) இருப்பது அதைக் கண்டறிய உதவும் ஓர் அடையாளம். ஒரு தேனில் ரொடோடென்ட்ரான் மகரந்தம் பெரும்பான்மையாக இருந்தால், அது ரொடோடென்ட்ரான் தேன் என்று உறுதிசெய்யப்படுகிறது. 

இரண்டாவது முறை திரவ நிறமூர்த்தவியல்–நிறை நிறமாலையியல் (LC-MS/MS). இது தேனில் கலந்துள்ள சேர்மங்களைப் பிரித்து, அவற்றின் மூலக்கூறு எடையைக் கொண்டு கிரயனோடாக்சின் I, III ஆகியவற்றை மிகச் சிறிய அளவிலும் துல்லியமாகக் கண்டறிகிறது. அதனால் மகரந்தம் மட்டுமின்றி,  தேனில் எவ்வளவு நஞ்சு உள்ளது என்பதையும் அளவிட முடியும். 

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை கணக்கில் கொள்ளவேண்டும். ரொடோடென்ட்ரான் செடிகளில் எடுக்கப்பட்ட எல்லாத் தேனும் நஞ்சுள்ளது அல்ல, எல்லா இனங்களும் ஒரே அளவு நஞ்சு கொண்டவையும் அல்ல. பல வகை மலர்களின் தேன் கலந்த கலவையில் ரொடோடென்ரான் நஞ்சு நீர்த்துப்போகிறது. ஒரே மலரின் தேன் தனியாகத் திரளும் இடங்களிலும்  குறிப்பிட்ட பருவங்களிலும் மட்டுமே அது பித்து அல்லது போதை தரும் அளவுக்கு வலுப்பெறுகிறது.

பாம்பேயின் வீரர்கள் உண்ட தேனையோ, செனோஃபோனின் வீரர்கள் உண்ட தேனையோ நாம் இன்று ஆய்வகத்தில் சோதிக்க முடியாது.

ஆனால் இன்று அதே பகுதிகளில் அதே அறிகுறிகளோடு வரும் நோயாளிகளிடமிருக்கும் தேனை நாம் சோதிக்க முடிகிறது; அதில் இதே நஞ்சு கண்டறியப்படுகிறது. இந்த இரண்டும் இணையும்போதுதான் இரண்டாயிரம் ஆண்டுப் பழைய கதையை இன்றைய அறிவியல் நம்பகமாக்குகிறது.

ஆகவே ஸ்ட்ராபோ பதிவு செய்த அந்தப் பதுங்கல் தாக்குதல் வெறும் புராணக்கதை அல்ல. அதன் பின்னால் ஒரு தாவரத்தின் வேதித் தற்காப்பும், ஒரு தேனீயின் உணவுத் தேடலும், ஒரு மலைக்குடியின் இயற்கையறிவும் இணைந்திருந்தன.  

கருங்கடல் மலைகளில் இந்த மலர் ஒரு படையை வீழ்த்தும் ஆயுதமாக வரலாற்றில் இடம்பெற்றது என்றால், சீனாவில் அது ஒரு மன்னனின் துயரக் கதையாக தொன்மங்களில் வாழ்கிறது. சீன மொழியில் ரொடோடென்ட்ரான் வகை மலருக்கும் குயிலுக்கும் ஒரே பெயர்: “டூஜுவான்” . 

பழங்காலச் சீனாவில் ஷூ நாட்டை ஆண்ட டூ யூ என்ற மன்னன் வேளாண்மையை அறிந்தவன், மக்களை நேசித்தவன். அவன் இறந்தபின் குயிலாக மாறினான் என்பது தொன்மம். 

ஆண்டுதோறும் வசந்தத்தில் அந்தக் குயில் திரும்பி வந்து கூவுகையில், அவன் கற்றுத்தந்தபடி வயலை உழும் காலம் வந்துவிட்டதை மக்களுக்கு நினைவூட்டுகிறது. குயிலாக வந்த அவன் சொந்த நாட்டையும் விவசாயத்தையும் நினைத்து இடைவிடாமல் கூவிக் கூவி, தொண்டையிலிருந்து இரத்தம் கக்கினான், அந்த இரத்தம் ரொடோடென்ரான் மலர்களின்மேல் விழுந்து அவற்றைச் சிவப்பாக்கியது என்னும்  ஒரு தொன்மத்தினால், சீன மக்கள் பறவைக்கும் மலருக்கும் அதே பெயரை வைத்தார்கள்

“இரத்தம் கக்கிக் கூவும் குயில்” என்ற உவமை சீனாவிலிருந்து கொரிய, ஜப்பானிய இலக்கியங்களுக்கும் பரவி, ஏக்கத்தின், அடங்காத துயரத்தின் குறியீடாக நிலைத்தது. 

 ரோடோடென்ட்ரான் மலர்களின் மயக்கும் அழகும் அதனுள் பொதிந்திருக்கும் அபாயகரமான பித்துத்தேனும், வரலாற்றின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் தொன்மங்களும் இணைந்து, அந்தத் தாவரத்தை வெறும் தாவரவியலின் எல்லைக்குள் முடக்காமல், மனித வரலாற்றின் மர்மப் பக்கங்களோடு பிணைக்கின்றன.

ரோடோடென்ட்ரான் மலர்த்தேன்  “Mad Honey” அல்லது “Himalayan Red Honey” என்ற பெயர்களில் விற்கப்படுகிறது. இமயமலைப் பகுதி மலைவாழ் மக்கள் மற்றும் நேபாளம், துருக்கி போன்ற நாடுகளின் மலைப்பகுதிகளிலிருந்து இது சேகரிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாகவும் சிறப்பு விற்பனை வலைத்தளங்கள் வழியாகவும் விற்கப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக, ரோடோடென்ட்ரான் மலர்த்தேனில் இருக்கும் ‘கிரையானாடாக்சின்’ காரணத்தினால் இது சிறிதளவு மயக்கத்தைத் தரக்கூடியதாகவும், மருத்துவக் குணம் கொண்டதாகவும் கருதப்படுவதால் மிகக் குறைவாக, மிகவும் எச்சரிக்கையுடனும் கடுமையான கட்டுப்பாடுகளுடனும் மட்டுமே விற்கப்படுகிறது.

இந்தத் தேனை விற்பனை செய்யும் பெரும்பாலான தளங்கள், இது ஒரு ஆபத்தான பித்துத்தேன் (Mad Honey) என்பதையும், சிறிதளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதற்கான கடுமையான எச்சரிக்கை குறிப்புகளையும் (Warning labels) அச்சிட்டே விற்கின்றன

 டயமண்ட் பனை

ஜோஹன்ஸ் எலியாஸ் (Johannes Elias Teijsmann -1808–1882) ஒரு டச்சுத் தாவரவியலாளர், தாவரச் சேகரிப்பாளர் மற்றும் தோட்டக்கலை வல்லுநர். நெதர்லாந்தின் Arnhem நகரில் பிறந்த இவர்,1830-ம் ஆண்டு ஜாவாவுக்குச் சென்றார். பிறகு  தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜாவாவில் கழித்தார்.

அங்கு அவர் டச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் ஆளுநரரான மற்றொரு ஜோஹன்ஸ் வான் டென் (Johannes van den Bosch )என்பவரின் தோட்டக்காரராகப் பணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே, இன்றைய இந்தோனேசியாவின் Bogor நகரில் அமைந்திருந்த Buitenzorg Botanic Gardens -ன் பொறுப்பாளராக (hortulanus) நியமிக்கப்பட்டு 1831 முதல் 1869 வரை — சுமார் 38 ஆண்டுகள், அந்தத் தாவரவியல் பூங்காவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.

தாவரவியல் பூங்காவைப் பராமரித்தது மட்டுமல்லாமல். தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளுக்கு அவர் தாவரச் சேகரிப்புப் பயணங்களையும் மேற்கொண்டார். சுந்தா தீவுகள், மலாய் தீவுக்கூட்டம் மற்றும் அன்றைய Siam (இன்றைய Thailand) உள்ளிட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்ட பயணங்களிலிருந்து பல தாவரங்களைச் சேகரித்து Bogor தாவரவியல் பூங்காவுக்குக் கொண்டு வந்தார்.

Teijsmann-ன் ஆர்வம் அழகான தாவரங்களைச் சேகரிப்பதில் மட்டுமல்லாமல் மனிதர்களுக்குப் பயன்படும்    economically important தாவரங்கள் மீது, குறிப்பாக உணவுப்பயிர்கள் மீதும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.

அன்றைய டச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க மரவள்ளிக்கிழங்கு பயிரிடுவதை இவரே ஊக்குவித்தார். மேலும், சின்கோனா மரங்களை ஜாவாவில் பயிரிடுவதற்கும் முக்கியப் பங்காற்றினார். இம்மரங்களின் பட்டையிலிருந்து பெறப்பட்டகுயினைன் மலேரியா சிகிச்சையில் பயன்பட்டது.

பனைத் தாவரங்களிலும் அவருக்கு தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து எண்ணெய்ப்பனை (Elaeis guineensis) இந்தோனேசியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அவரது காலத்தில் Bogor தாவரவியல் பூங்காவின் தாவரச் சேகரிப்பு பெரிதும் விரிவடைந்தது.

அவர் ஓய்வு பெற்ற பிறகும் தாவரச் சேகரிப்புப் பணியை நிறுத்தவில்லை. 1869-ல் பூங்காவின் பொறுப்பிலிருந்து விலகிய பின்னரும் Honorary Inspector of Cultures என்ற பதவியில் இருந்து, டச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் பல பகுதிகளுக்குச் சென்று தாவரங்களைச் சேகரித்து வந்தார்.

இவரது நினைவாக Teijsmann என்ற பெயர் பல தாவரங்களின் அறிவியல் பெயர்களில் இடம்பெற்றுள்ளது. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானது: Johannesteijsmannia என்னும் Diamond Palm. இது Johannesteijsmannia என்ற பேரினப் பெயர், 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுத் தாவரவியலாளரும் தோட்டக்கலை வல்லுநருமான இந்தஜோஹன்ஸ் எலியாஸ் டெய்ஸ்மானைகௌரவிக்கும் வகையில்  வைக்கப்பட்டது.

ஃபிஜியில் பிரபல sleeping giant  பூங்காவில் ஜெ வும் சைதன்யாவும் இதனருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப்ப்பார்த்த பின்னர்தான் இதை எழுத நினைத்தேன்

Johannesteijsmannia altifrons தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும் ஒரு அரிய பனை. இதன் மிகப்பெரிய, அகலமான, ஆழமான மடிப்புகளைக்  (Pleats) கொண்ட  வைரத்தின் வடிவைக்கொண்ட பெரிய இலைகளுக்காக இது Diamond Palm  என்று அழைக்கப்படுகிறது.

சிற்றினப் பெயரான altifrons இரண்டு லத்தீன் சொற்களிலிருந்து உருவானது. altus என்றால் “உயரமான” அல்லது “மேல்நோக்கிய” என்றும், frons என்றால் “இலை” அல்லது “இலைத்தொகுதி” என்றும் பொருள். எனவே altifrons என்பதனை “உயர்ந்து நிற்கும் இலைகளைக் கொண்டது” என்று பொருள்படுத்தலாம்.

இதன் மற்றுமோர் சிறப்பு  இது ஒரு   தண்டற்ற பனை (acaulescent palm) என்பதுதான். “தண்டற்றது” என்றால் தண்டு இல்லாதது என்று பொருள் அல்ல. மிகக்குறுகிய , தரைக்குக் கீழே மண்ணுக்குள் கிடைமட்டமாக படர்ந்து வளரும் தண்டு இருக்கும் ஆனால். வெளியில் இருந்து பார்க்கும்போது தண்டு தெரியாது. நீளமான காம்புகளுடன் வைரம் போன்ற அழகிய மடிப்புகள் கொண்ட இலைகளின் கூட்டமாக மரம் இருக்கும். 

சைதன்யாவுக்கு இந்த புகைப்படங்களுக்காக அன்பும் நன்றியும்.

கனிமலர்!

காலையில் அருணாவின் ஸ்டேடசில் சைதன்யா ஃபிஜியில் ஒரு பின்க் வாழையின் அருகில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்கள். அது வாழைகளில் எனக்கு மிகப்பிரியமானது. அருணாவிடம் அனுமதி பெற்று அதை நானும் பகிர்ந்தேன்.

ஏற்காடு வைல்ட் ஆர்கிட் குடியிருப்புக்கு தம்பி அரங்கசாமி மற்றும் நண்பர்களுடன் போயிருந்தபோது அங்கு ஏராளமாக இந்த வாழை வளர்ந்திருந்தது. அந்நிறுவனத்தின் MD ராஜேஷ் இதன் ஒரு கன்றை மனமுவந்து எனக்களித்தார். ஒரு கன்று சுமார் 10,000க்கும் அதிக விலை கொண்டது. அது வீட்டில் ஒரு தொட்டியில் வளர்ந்து வான் நோக்கி நிமிர்ந்து ஒரே ஒரு அழகிய இளஞ்சிவப்பு மலரை அளித்ததோடு சரி. அதன் பிறகு குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இருக்கிறது. அன்றாடம் அதனருகில் சற்று நிற்பதுண்டு. ஒருவேளை ஆல்டிட்யூட் தான் பிரச்சனையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதன் அறிவியல் பெயர் Musa velutina. அஸ்ஸாம் மற்றும் இமாலயப் பகுதியைத் தாயகமாகக்கொண்டது. கேரளாவிலும் ஆங்காங்கே இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள பெரும் பூங்காக்களில் அழகு வாழையாக வளர்க்கப்படுகிறது. பிரேசிலில் மிக அதிகமாக இருக்கும் இது ஃபிஜியிலும் இருக்கிறது.

ஆங்கிலத்தில் Pink banana, Pink velvet banana, Hairy banana என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு. வடகிழக்கு இந்தியா, குறிப்பாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் அடிவாரக் காடுகளில் இவை சாதாரணமாகக் காணப்படும். இதை அறிவியல் ரீதியாக விளக்கியவர்கள்: H. Wendland & Drude (1875)

ஒப்பீட்டளவில் இது சிறிய வாழை. உயரம் சுமார் 1.5 முதல் 2 மீட்டர் மட்டுமே.

இதன் மஞ்சரி நிமிர்ந்து நிற்கும். அதன் பூவிதழ்கள் (bracts) சிவப்பு கலந்த இளஞ்சிவப்பு நிறம். இளஞ்சிவப்பு அல்லது பபிள்கம் நிறத்தில் காய்கள் 7 முதல் 10 செ.மீ. நீளமிருக்கும், மென்மையான மயிர்களால் மூடப்பட்டவை. இதனால்தான் இலத்தீன் பெயர் velutina (velvety, மெல்லிய ரோமம் உடைய) என்றிருக்கிறது.

பழம் பழுத்ததும் தோல் தானாகவே வளைந்து சுருண்டு திறந்துவிடும். அழகிய இளஞ்சிவப்பில் விரிந்து இருக்கும் இது ஒரு கனிமலர்போலிருக்கும். உள்ளே வெள்ளைச்சதையும் கருப்பு நிற விதைகளும் தெரியும்.

இது விதைகளைப் பரப்புவதற்கான ஒரு வழி. வெடித்து திறந்து கிடக்கும் பழங்களை பறவைகளும் விலங்குகளும் எளிதாக உண்ணும். கனியுடன் விதைகளும் அவற்றின் வயிற்றுக்குள் சென்று எச்சம்வழியே வந்து விழுந்து முளைக்கும்.அவற்றின் எச்சம் வழி இந்தச் செடிகள் பரவும்.

நம் வாழைகள் சக்கர் எனப்படும் அடித்தண்டுகள் வழி இனப்பெருக்கம் செய்வதால் பழங்கள் இப்படி வெடிப்பதில்லை. எத்தனை அறிவு?

பழத்தில் விதைகள் அதிகம், சதை குறைவு. எனவே உணவாக அதிகம் பயன்படாது. ஆனால் உண்ணக்கூடிய கனிதான். பொதுவாக அலங்காரச் செடியாக வளர்க்கப்படுகிறது. மற்ற வாழைகளை விடக் குளிரைத் தாங்கும் தன்மை அதிகம்.

இந்தப் புகைப்படத்தை இன்று பகிர்ந்துகொண்டதும் கார்த்திக் கேரளாவின் காட்டுவாழையின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார், அதுவும் ஒரு அதிசயம்தான். வாழைகளின் பேரினமான மியூஸாவில் முன்பிருந்து இப்போது என்செட்டே பேரினத்தின் கீழ் வரும் இந்த வாழைக் காட்டுமூதாதையின் பெயர் Ensete superbum. இதற்கு பாறை வாழை என்றும் பெயர்.

Ensete superbum மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் தீபகற்ப இந்தியாவின் மலைப்பகுதிகளிலும் பாறைச் சரிவுகள், செங்குத்தான பாறைகள், பாறை இடுக்குகள், கற்கள் நிறைந்த குன்றுகளில் இயல்பாக வளர்கிறது. சாதாரண வாழை வளமான, ஈரமான மண்ணை விரும்பும். இது பாறையிலேயே வேரூன்றி நிற்பதால் “பாறை வாழை” (Rock Banana) என்ற பெயர் வந்தது.

Ensete superbum என்னும் அறிவியல் பெயரின் காரணம்

Ensete – இது எத்தியோப்பியாவின் அம்ஹாரிக் (Amharic) மொழிச் சொல்லான “enset” என்பதிலிருந்து வந்தது. எத்தியோப்பியாவில் வளரும் Ensete ventricosum என்ற இனத்தை அங்குள்ள மக்கள் இப்பெயரால் அழைக்கிறார்கள். அந்த இனத்தின் தண்டும் கிழங்கும் அங்கே முக்கிய உணவு. ஆக, இந்தப் பேரினத்துக்குப் பெயர் ஆப்பிரிக்கத் தாவரத்தின் உள்ளூர்ப் பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. இந்தியத் தாவரத்துக்கும் அதே பேரினம் பொருந்துவதால் அதே பெயர் தொடர்கிறது.

superbum என்னும் சிற்றினப் பெயர் இலத்தீன் சொல்லான superbus என்பதிலிருந்து வந்தது. கம்பீரமான, மிகச் சிறந்த, பெருமிதமான, எடுப்பான தோற்றமுடைய என்றெல்லாம் பொருள் கொண்டது இந்தச்ச்சொல்.

12 அடி உயரம், பருத்த அடிப்பகுதி, பெரிய இலைகள், செம்பழுப்பு நிறப் பூவிதழ்கள் என்ற இதன் கம்பீரத் தோற்றத்தையே இது குறிக்கிறது.

இதை முதலில் Roxburgh என்பவர் Musa superba என்று Musa பேரினத்தில் விவரித்தார். பிற்காலத்தில் Cheesman என்பவர் இதை Ensete பேரினத்துக்கு மாற்றினார். அதனால் இன்றைய பெயர் Ensete superbum (Roxb.) Cheesman. அடைப்புக்குள் உள்ள Roxb. என்பது முதலில் பெயரிட்டவரைக் குறிக்கிறது. ஆகவே முழுப்பொருள்: “கம்பீரமான என்செட்டே” அல்லது “எத்தியோப்பிய வாழையின் இந்தியக் கம்பீர உறவினன்”

நம் வாழைக்கும் இந்தப் பாறை வாழைக்கும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

பாறை வாழையும் சாதாரண வாழையும்.

பாறை வாழை உண்மையில் Musa இனத்தைச் சேர்ந்தது அல்ல. இது Ensete என்ற தனிப் பேரினம். ஆனால் Musaceae குடும்பத்தில் வாழையின் நெருங்கிய உறவினர்.

இரண்டுக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு இனப்பெருக்கத்தில் உள்ளது. சாதாரண வாழையின் அடிக்கிழங்கிலிருந்து பக்கக்கன்றுகள் தோன்றுகின்றன. அவற்றின் மூலம் இவற்றின் சந்ததி தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

பாறை வாழைக்குப் பக்கக்கன்றுகள் இல்லை. ஒரே தண்டு மட்டும் வளர்கிறது, விதைகள் மூலம் மட்டுமே இனம் பெருகுகிறது.

போலித்தண்டின் வடிவத்திலும் வேறுபாடு உண்டு. சாதாரண வாழையின் தண்டு அடியிலிருந்து நுனி வரை ஏறக்குறைய ஒரே பருமனாக இருக்கும். பாறை வாழையின் அடிப்பகுதி பருத்து, மேலே செல்லச் செல்லச் சிறுத்து, குடுவை போன்ற தோற்றம் தரும். வறண்ட பருவத்தில் பாறை வாழையின் மேற்பகுதி முழுவதும் அழிந்துவிடுகிறது. கிழங்கு மட்டும் உயிருடன் இருந்து, மழை தொடங்கியதும் புதிய இலைகளை முளைக்கச் செய்கிறது. சாதாரண வாழையில் கிழங்கு தொடர்ந்து புதிய கன்றுகளை உருவாக்குவதால் செடி இடைவிடாமல் வாழ்வைத் தொடர்கிறது.

பூவிலும் வேறுபாடு தெரியும். பாறை வாழையின் பூவிதழ்கள் (bracts) உதிராமல் நிலைத்து நிற்கின்றன. சாதாரண வாழையில் பூக்கள் விரியும்போது இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடுகின்றன. சாதாரண வாழையின் நுனியில் பெரிய பூ மொட்டு (வாழைப்பூ) தொங்கும். பாறை வாழையில் அப்படித் தனியாகத் தொங்கும் பெரிய மொட்டு இல்லை.

காய்களிலும் இந்த வேறுபாடு தொடர்கிறது. பாறை வாழையின் காய்கள் சிறியவை, முக்கோண வடிவம் உடையவை. உள்ளே பெரிய கடினமான விதைகள் நிறைந்து, சதை மிகக் குறைவாக இருக்கும். அதனால் பழம் உண்ணத் தகுந்ததல்ல.

சாதாரண வாழையின் காய்கள் நீளமானவை. பயிரிடும் ரகங்களில் விதையற்ற இனிப்புச் சதை உண்டு. அதன் பழம், காய், பூ, தண்டு அனைத்தும் உணவாகப் பயன்படுகின்றன.

வாழிடத்திலும் இவை வேறுபடுகின்றன. பாறை வாழை பாறைச் சரிவுகளிலும் மலைப்பகுதிகளிலும் வளர்கிறது. சாதாரண வாழை பல்வேறு நிலங்களில், பெரும்பாலும் வளமான மண்ணில் வளர்கிறது.

குரோமோசோம் எண்ணிக்கையும் வேறு. இரண்டுமே டிப்ளாய்டு தான் என்றாலும் பாறை வாழையில் 2n = 18, சாதாரண வாழையில் பொதுவாக 2n = 22.

இரண்டும் ஒருமுறை பூத்துக் காய்த்தபின் அந்தத் தண்டு இறந்துவிடும் (monocarpic). ஆனால் சாதாரண வாழை பக்கக்கன்றுகள் (suckers) மூலம் தொடர்ந்து வாழ்கிறது. பாறை வாழைக்கு அந்த வசதி இல்லை, விதைகளே அதன் இனப்பெருக்க வழி. அதனால்தான் அதன் பழத்தில் கடினமான விதைகள் அதிகமாக உள்ளன.

இன்று வாழையடி வாழை நாள் எனக்கு.

அக்கம் பக்கம்!

இந்த கிராமத்துக்கு வீடுகட்டி குடிவருகையில், வீட்டில் இருப்பவர்கள் நகரமயமாக்கலுக்கு எதிரான என் போக்கை வன்மையாகக் கண்டித்தாலும், எனக்குக் கிராமத்துச் சூழலிலும், கிராம மக்களின் மனப்பாங்கிலும் பெரிய நம்பிக்கை இருந்ததால் பிடிவாதமாக வந்தேன். ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை; எனக்கு இங்கே காலூன்றுவதற்கே பெரும்பாடாக இருந்தது. கல்லூரியில் அரசுப்பணியில் அப்போதுதான் இணைந்திருந்தேன். புரொபேஷனரி காலத்துக்கான எல்லா இக்கட்டுகளும் இருந்தன, எல்லாவற்றுக்கும் என்னைச்சார்ந்திருந்த இரு சிறு பிள்ளைகள் இருந்ததோடு, உடல்நிலையும் சீர்கெட்டிருந்தது , நிதிநிலைமையும் படு பாதாளத்தில்; எனவே இவற்றோடு போராடியதால் வேறு எதையும் கவனிக்கவில்லை.

பிற்பாடுதான் ஒவ்வொன்றாகக் கவனித்தேன். நான் நினைத்ததுபோல் ஊர்க்காரர்கள் எல்லாம் வெள்ளந்தியானவர்கள் அல்ல; மேலும், கல்லூரி வேலைக்கு நான் செல்வது குறித்த புகைச்சலும் பரவலாக இருந்தது. ஒரு உதவி கூடக் கிடைக்காமல் அல்லாடிப்போனேன்.

அடிக்கடி கரண்ட் மெயினில் ஃபியூஸ் போய்விடும்; அதை எனக்குச் சரி செய்யத் தெரியாது. ஒவ்வொரு முறையும் அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் இபி அலுவலகம்போய் ஒருவரை கெஞ்சிக்கூத்தாடி கூட்டி வருவேன் ஒவ்வொரு முறையும் 100 /200 கொடுக்கவேண்டும். அந்த அலுவலகக்கிழ அதிகாரி ஒருவர் நள்ளிரவுகளில் போன் செய்யத் துவங்கினார். ஒருமுறை கூட அழைப்பை எடுக்கவில்லை எனினும் அங்கு போவதை நிறுத்தி   நான்கு ஃபியூஸ் கட்டைகளையே வயர்  போட்டு வாங்கி வைத்து, தேவைப்படுகையில் மாற்றிக்கொண்டேன். இப்படி எல்லாவற்றுக்கும் நானே என்னை மெல்ல மெல்ல  தகவமைத்துக் கொண்டேன்.

சின்ன சின்ன தொந்தரவுகளைச் சமாளித்தேன், பெரியவற்றை எதிர்கொண்டேன். ஆனால் மூவருமாக மகிழ்ந்திருந்தோம். 

அடுத்த வருடமே எதிரில் ஒரு சிறு வீடு கட்டிக் குடியிருந்தார்கள்; மகனும் மகளுமாக சிறு குடும்பம். அந்தக் குடும்பத் தலைவர் திங்கள் முதல் வெள்ளி வரை சமர்த்தாக இருப்பார்; சனிக்கிழமை உற்சாகபானம் ஏற்றிக்கொண்டு வருவார். பின்னர் மாலை தொடங்கி இரவு வரை கணவனும் மனைவியுமாக உரக்கக்  காது கூசும் பல வசவுகளுடன் கத்திக் கூச்சலிட்டு, சண்டையிடுவார்கள்.  பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தமே தெரியாது.

வெளியில் விளையாடும் சரண் தருணை அந்த பேச்செல்லாம் கேட்கவேண்டாம் என்பதற்காக’’ உள்ளே வாங்கடா” என்றால், தருண் “எல்லாம் கேட்டாச்சு கேட்டாச்சு இனி உள்ள வந்தா என்ன வராட்டி என்ன ” என்பான். சரண் உடனே உள்ளே வந்துவிடுவான். சமயத்தில் அவர் சனிக்கிழமை மாலைகளில் என் காரைக் கை காட்டி நிறுத்துவார், ஜன்னல் வழியே “என்ன சிவராஜ்’(பெயரை மாற்றி இருக்கிறேன்) என்று கேட்பேன். “நீங்க ரொம்ப நல்லவங்க டீச்சர்” என்று சான்றிதழ் தருவார். நான் மகிழ்ந்து வீடு திரும்புவேன் 

இவர் இப்படி என்றால்,இந்த வீட்டுக்குப் பின் வீதியில் இருக்கும் ஒரு அம்மாள் வெகு சுவாரஸ்யமானவர். அவர் இரண்டு மாபெரும் ஸ்பீக்கர்களை வைத்திருக்கிறார் — திருவிழாக்களில் வைத்திருப்பார்களே அதே மாதிரி. தினமும் அதிகாலையில் அதில் பாடல்கள் அலறும்.  பெரும்பாலும் எல் ஆர் ஈஸ்வரியம்மாதான்.  ‘’ஏசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே’’ தான் என் அலாரம். ஆனால் ஏசுவிடம் நான் எத்தனை மன்றாடியும் அந்த அம்மாளை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை

நான் உட்பட அந்தப் பகுதியில் யார் வீட்டிலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவோ, மேல்தொட்டியில் நீர் நிறைந்து வழியும் ஓசை கேட்டு மோட்டாரை நிறுத்தவோ, போன் வந்தால் கவனிக்கவோ — எதற்கும் முடியாத அளவுக்குச் சத்தமிருக்கும். பலமுறை பலர் எடுத்துச் சொல்லியும் பலனில்லை; ஒருவர் தாங்கமுடியாமல் காவல்துறையில் புகார் அளித்தும் ஒன்றும் நடக்கவில்லை.

அவர் எல்லா மத நம்பிக்கைகளையும் பின்பற்றுபவர் என்பதால் மாரியம்மன் பாடல்கள், அன்னை வேளாங்கண்ணி பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள் எல்லாம் ஒலிக்கும்.  அந்தப் பெண்ணிடம் ஊரில் பெரும்பாலும்  யாரும் பேசுவதில்லை என்பதால், அவர் உலகத்தோடு தொடர்பு கொள்வதே அதிக சத்தத்தில் ஒலிக்கும் பாடல்கள் மூலமும், எதிர்முனையில் யாருமில்லாமல் மணிக்கணக்காக அவர் உரக்கப் பேசும் அலைபேசி உரையாடல்கள் மூலமாகவும்தான்.

அவருக்கு வீட்டில் வேலை எல்லாம் ஒன்றுமில்லை; கணவர் பாத்திரம் துலக்கி, சமைத்து, துணி துவைத்து, காயப்போட்டு — எல்லா வேலையும் செய்துவிட்டு வேலைக்குச் செல்பவர். எனவே முழுநேரமும் அடுத்தவர்களைத் தொல்லைசெய்வதையே அந்த அம்மாள் செய்வார்.

ஆனால் ஒருநாள் அந்தக் கணவரை  கழுத்தோடு சட்டைக் காலரைப் பிடித்து வீட்டு வராண்டாவில் சுவரோடு சேர்த்து வைத்து, அடி நிமிர்த்தி ’’ஒழுங்காக இரு” என்று அவர் மிரட்டியபோது ’’ஆஹா இந்தம்மாவை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அடுத்த ஜென்மத்தில் மனைவியாக்க வேண்டும்’’ என்று எல்லாக் கடவுளிடமும் வேண்டிக்கொண்டேன்.

தீவிரமான attention seeking disorder உள்ளவர் என்று நான் புரிந்துவைத்திருக்கிறேன். அவர் வாழ்க்கையே மிகவும் நாடகீயமானது; எல்லாமே அதீதம்தான் அவருக்கு.

ஆகஸ்ட் துவங்கியதிலிருந்தே வேளாங்கண்ணி மாதா பாடல்கள் ஒலிக்கும். அதிலும் சினிமாப் பாட்டை கானா பக்திப் பாடலாக மாற்றியவை.

“அம்மாடி இதுதான் காதலா” பாடலை “மாதாவை வணங்கிட வாருங்க” என்று மாற்றிப் பாடலமைக்க எத்தனை நெஞ்சழுத்தம் வேண்டி இருந்திருக்கும்?

அடுத்த பாடல் “செம்பருத்தி செம்பருத்திப் பூவைப்போல பெண்ணொருத்தி” பாடலை “ஏத்தி வைச்ச மெழுவத்தி எரியுதம்மா  வூட்டைச் சுத்தி” என்று மாற்றியிருந்தார்கள். இவை இரண்டும் எப்போதும் ரிபீட் மோடில் ஒலிக்கும். எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது, எந்த இடத்தில் மீட்டர் இடிக்கும் என்று கூட.

மீட்டர் இடிப்பதைப் பற்றிச் சொல்லும்போது, சமீபத்தில் சிவகாசியில் நான் கலந்துகொண்ட ஒரு விழா நினைவுக்கு வருகிறது. அங்கு ஒரு கலைக்குழுவினர் பாடல்கள் இசைத்தார்கள். ஒருவர் அவரே இயற்றிய பாடலைப் பாடினார். “சிந்தனை செய் மனமே” பாடலை “தமிழை வளர்க்கணுமே” என்று எழுதிப் பாடினார்; துவக்கத்திலேயே மீட்டர் இடித்தது. தொடர்ந்து, “சிவகாமி மகனை ஷண்முகனை” வரிகளில்  இடித்ததோடு அல்லாமல், மீட்டர்  குப்புறப் புரண்டு துடித்துக் கதறியது.

அப்படித்தான் இந்த “மாதாவை வணங்கிட வாருங்க” அஹ அஹஹ அஹஹாஹா பாடலும் — முழுப் பாடலுமே வீட்டிலிருந்து கட்டுச்சோறு கட்டிப் புறப்பட்டு, ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்து, ஒவ்வொரு ஊராகக் கடந்து வேளாங்கண்ணி வந்துசேரும் ரன்னிங் கமெண்டரிதான் “வந்துட்டோம், வந்துட்டோம் நாகப்பட்டினத்துக்கு” என்பது போல. இது இன்றைக்கு நேற்றைக்கல்ல — இந்த வீட்டுக்கு வந்த காலத்திலிருந்தே நடப்பதுதான்.  ஷிஃப்ட்டில் வேலை செய்யும் கணவர் வீட்டிலிருக்கையில்… உலகநாயகனே!

யாருக்கேனும் பிறந்தநாள் என்றால் கேட்கவே வேண்டாம் — “பூவுக்குப் பிறந்த நாள்” தொடங்கி ஏராளமான கலெக்‌ஷன் எடுத்துவிடப்படும். மேல்மருவத்தூர் மாலை போடுவார்; அப்போது அந்த அம்மனின் ப்ரத்யேகப் பாடல்கள் ஒலிக்கும்.

கமல் மய்யம் துவங்கிய புதிதில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்ந்தது. வெறும் கமல் பாடல்கள் உச்ச ஸ்தாயியில்  இரவுபகலென ஒலித்தன  “கமலுக்கு இவர்தான் ஆலோசகர்” என்றும், “மய்யத்தின் பொறுப்பே தானென்றும்” உரக்கச் சொல்லிக்கொண்டே இருந்தார். வீட்டின் முகப்பில் கமலின் ஆள்உயரப் புகைப்படம் வைக்கப்பட்டபோது நானும் நம்பியே விட்டேன். “பொள்ளாச்சி தொகுதியில் இந்த அம்மாவைத்தான் வேட்பாளராக நிறுத்தப் போகிறார்; பிக்பாஸ் வீட்டில் சுவர்களின் வண்ணத்தைக்கூட இந்த அம்மாவிடம்தான் கமல் கேட்டுக்கொண்டார்; கமலின் பிரசார விஷயங்களை இவர்தான் தீர்மானிக்கிறார்” என்றெல்லாம் அடுத்தடுத்துக் கேட்கப் பிரமிப்பாயிருந்தது.

ஒரு ஆகஸ்ட் மாதத்தில் அவர் போனில் யாரிடமோ(?) சொல்லிக்கொண்டிருந்தார்: “நான் மஞ்சு வாரியரிட்டே சொல்லிட்டேன் — கரெக்டா காலையிலே 8 மணிக்கு மய்யம் ஆஃபிசுக்கு வரணும், இல்லாட்டி நாங்க வேற யாரையாவது  வச்சுகொடி ஏத்திருவோம் அப்புறமா நீங்க வருத்தப்படக்கூடாது ’’ என்று. அதிசயமான அதிசயமாயிருந்தது.

ஒருநாள் அவர் வீட்டுக்குக் கமல் வருகிறார் என்று ஒரே தடபுடலாக ஏற்பாடு நடந்தது. வீட்டருகில் இருந்த குப்பைகூளங்கள் சுத்தமாக்கப்பட்டு. சாலையின் துவக்கத்தில் செக்போஸ்ட் கம்பம் நடப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் கமல்சாரைப் பார்த்துவிடலாம் என்று ஆவலுடன் கொஞ்சம் நேரமே கல்லூரியிலிருந்து வந்து காத்திருந்தேன்.

 அந்த அம்மாளின் பெண் சரணை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்ப்பாள் — ஒருவேளை அது செட் ஆகி,  கல்யாணம் வரைக்கும் வந்தேவிட்டால் எப்படியும் கமல் கல்யாணத்துக்கு வருவார்,  சலங்கைஒலி கமலைநேரில் பார்த்துவிடலாம் என்று ஒரு  நானும் மனதில் ஒரு காதல்கோட்டை கட்டியிருந்தேன். ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை, அன்றும் என்றும் கமல் அந்த வீட்டுக்கு வரவே இல்லை. அவர் கடும் மனச்சிதைவுக்கு ஆளானவர் மட்டுமல்ல ஆளாக்குபவரும் கூட என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.

அடிக்கடி வீதியில் நடந்துகொண்டே போனில் உரக்கப் பேசிக்கொண்டிருப்பார்: “மேரிட்டே கேட்டேன் — வயிற்றில் ஜெபம் பண்ணின தண்ணீர் தடவினா எல்லாம் சரியாய்ப் போயிடும்னு சொன்னா. மேரிட்டே கேட்டேன் — இந்த மருந்தை 3 நாள் சாப்பிடச் சொன்னா. மேரி ஒன்னும் பயப்படவேண்டாம், சரியாயிடும்னா” என்பதெல்லாம் கேட்டு, “மேரி” ஒரு நர்ஸ் என்று நினைத்திருந்தேன். பிற்பாடுதான் தெரிந்தது — சாட்சாத் கன்னிமேரிதான், ஏசுவின் அன்னைதான், இவருடன் போனில் பேசியது என்று.

கிழக்குப்பார்த்த   வீட்டுக்காரர்களின் குற்றப்பின்னணி கொண்ட கதையை நான் ஜெ தளத்திலேயே எழுதியாயிற்று. மூன்று அன்னைப் பெருமரங்களை அவர்களால் நான் பலிகொடுத்தேன். அங்கும் குடிதான் வார இறுதிகளில் மேலோங்கி இருக்கும். 

மேற்குப் பக்கத்து வீடும் சளைத்தவர்கள் அல்ல;நானில்லாதபோது வீட்டின் மதிலுக்கருகே பெருங்குழியை  ஜேசிபி வைத்துத் தோண்டி இருந்தார்கள். போய்க்கேட்டபோது அதட்டலாக ’’சரி தோண்டிட்டோம் இப்போ மூடிறோம் என்னமோ பெரிசா’’ என்றார்கள்.”சரி” என்று கேட்டுக்கொண்டேன்.

ஒருமுறை ஒரு வாடகைகாரில் மகன்களுடன் நேரம் பிந்தி களைத்துபோய் வீடு திரும்பிய ஒரு இரவில், மாடியில் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். பதறிப்போய் பார்த்தால் பின் வீதியில் இருக்கும் ஒரு குடும்பம் வந்து, மாடியில் தண்ணீர் தொட்டியிலிருந்து ட்யூப் போட்டு நீரை அவர்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அக்கா, “வந்துட்டீங்களா? இன்னிக்கு வரமாட்டீங்கன்னு நினைச்சோம்” என்றும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்கள். 

எல்லாவற்றையும் கடந்து, இப்போதும் இங்கேயே இந்த ப்ளுமீரியா வீட்டில்தான் இருக்கிறோம் செடி கொடி மரங்களுடன் மகிழ்ந்து.. எவ்வளவு அடிச்சாலும் இயற்கையோடு நெருங்கி இருக்கும் வாழ்வுக்காக தாங்குவோம்.

கருங்கண்ணி- சூஸன்!

(புகைப்பட உதவி -கணேஷ்)

சமீபத்தில் ஜெனீவா கணேஷ் வாட்ஸேப் ஸ்டேட்டஸில் இந்த மலர்களின் புகைப்படத்தை வைத்திருந்தார். black eyed susan என்ற பொதுப்பெயர் கொண்ட பிரகாசமான பொன்மஞ்சள் இதழ்களும் மலரின் நடுப்பகுதி நல்ல கருப்பிலும் இருக்கும் மலரான இது எனக்கு மிக மிகப் பிரியமான மலர்,

“Black-eyed Susan” என்ற இந்தப் பெயருக்குப் பின்னால் 1720-ம் ஆண்டு ஜான் கே (John Gay, 1685–1732) என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய “Sweet William’s Farewell to Black-Eyed Susan” என்ற கடற்பாடல் (sea ballad) இருக்கிறது.

 கப்பலில் புறப்படும் தன் காதலன் வில்லியத்தைப் பிரிந்து அழுதுஅழுது கண்கள் கருத்துப்போன சூசன் என்ற பெண்ணைப் பற்றிய பிரிவுத் துயரக் கதைப்பாடல் இது.  பின்னாளில் இந்தமலரும், அதே நேரத்தில் பூக்கும் “Sweet William” (Dianthus barbatus) என்ற இன்னொரு மலரும்  இணைந்து மலர்வதால், அவை இரு காதலர்களின் மீள்சந்திப்பைக் குறிக்கின்றன என்ற நாட்டுப்புறக் கதையும் உருவானது.

ஜான் கேயின் பாடல் 1730-ல் ரிச்சர்ட் லெவெரிட்ஜ் என்பவரால் இசை அமைக்கப்பட்டு, அடுத்து வந்த நூறாண்டுக்கும் மேலாக ஆங்கில நாட்டுப்புறப் பாடல் மரபில் தொடர்ந்தது;20-ஆம் நூற்றாண்டு வரை நார்ஃபோக் விவசாயக் குடும்பங்களிடையே வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்தது.

1829- ல் டக்ளஸ் வில்லியம் ஜெரால்ட் இதே பெயரில் ஒரு நாடகத்தையும் எழுதினார் (“Black-Eyed Susan; or, All in the Downs”), அது 1913-ல் திரைப்படமாகவும் வெளியானது..

இது வட அமெரிக்க பழங்குடி மக்களுக்கு குறிப்பாக ஓஜிப்வே மற்றும் செரோகீ சமூகங்களுக்கு பழக்கமான ஒரு மருத்துவத் தாவரமும் கூட. ஓஜிப்வே நாட்டுமருதுவர்கள்  சூஸனின் இலைச்சாற்றை சளி மற்றும் காது வலி சிகிச்சைக்குப் பயன்படுத்தினர்; செரோகீ மக்கள் வேரின் விழுதை பாம்புக்கடி மற்றும் வீக்கத்திற்கு மருந்தாகப் பயன்படுத்தினர்.  

இதன் தாவரவியல் பெயர் Rudbeckia hirta,  இது Asteraceae (சூரியகாந்தி) குடும்பத்தைச் சேர்ந்தது. வட அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயற்கையாக வளரும் இது, சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இருவருடத் தாவரம் அல்லது குறுகிய ஆயுள் கொண்ட பல்லாண்டுத் தாவரம். பொன்னிற இதழ்கள் நடுவில் ஒரு கருஞ்சிவப்பு- நிற சற்றே மேடிட்டிருக்கும் மையத்தைக் கொண்டிருப்பதே இதன் அடையாளம். அந்த இருண்ட மையம்தான் “கருங்கண்” (black-eyed) என்ற பெயருக்குக் காரணம்.

 Rudbeckia என்ற பேரினப் பெயரை லின்னேயஸ் தமது ஆசிரியரும் நண்பருமான ஸ்வீடிஷ் தாவரவியலாளர் ஓலோஃப் ரட்பெக் நினைவாக வழங்கினார்; அவரது மகன் ஓலோஃப் ரட்பெக் (இளையவர்) உப்சலா பல்கலைக்கழகத்தில் லின்னேயஸின் ஆசிரியராக இருந்தார். நோபல் பரிசுகளை நிறுவிய ஆல்ஃபிரட் நோபல், ரட்பெக் குடும்பத்தின் வழித்தோன்றல்தான். hirta என்பது கூரிய முட்களைப் போலிருக்கும் விரைத்த மயிர்களைக் கொண்டிருக்கும் இச்செடியின் தண்டு மற்றும் இலைகளைக்குறிக்கிறது.

 சூரியகாந்தி பூக்களைப் போலவே, இதுவும் ஒரு “மலர்த்தலை” (composite flowerhead)—வெளிப்புற கதிர் மலர்களும் (ray florets) உள்பக்கமாக குழாய் மலர்களும் (disk florets) சேர்ந்து ஒரு மலராகத் தோற்றமளிக்கும் மஞ்சரி இது. நடுவில் இருக்கும் நுண்ணிய மலர்கள் மகரந்த சேர்க்கையாளர்களுக்கு தெரியாமல் போய்விடலாம் என்பதற்காக பிரகாசமான  மஞ்சளில் ரிப்பன் போன்ற இதழ்கள் மலர்களின் விளிம்பில் அமைந்திருக்கும். இவை மகரந்தச்சேர்க்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வேலையிலும், உள்ளே இருக்கும் நுண்மலர்கள் மகரந்தச்சேர்க்கைக்குப் பின்னர் கருவுறுதலிலும் ஈடுபடும்.

தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட மகரந்தச் சேர்க்கையாளர்களுக்கு இம்மலர்த்தலை  முக்கியமான ஊணாதாரம். கருகிய நிலம், சீர்குலைந்த மண் போன்ற இடங்களில் கூட எளிதாக வேரூன்றி வளரும் செடி இது. இதில் சுமார் இருபது இனங்கள் உள்ளன, பெரும்பாலும் வட அமெரிக்காவின் புல்வெளிகள், காடு ஓரங்கள், தீ பாதித்த நிலங்கள் போன்ற திறந்தவெளி, சீர்குலைந்த சூழல்களில் காணப்படுபவை.

அமெரிக்காவில் இம்மலர் ஆழமாக வேரூன்றிய கலாச்சார அடையாளமாகியிருக்கிறது,. 1918-ம் ஆண்டு  இம்மலர் மேரிலாந்து மாநிலத்தின் ஆட்சி மலராக அறிவிக்கப்பட்டது. மாநிலக் கொடியின் நிறங்களுடன் (கருப்பு-பொன்னிறம்) ஒத்துப்போவதும், பதின்மூன்று இதழ்கள் கொண்டிருப்பதும் (அமெரிக்காவின் தொடக்க பதின்மூன்று காலனிகளின் எண்ணிக்கையை நினைவூட்டும்) இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

மேரிலாந்தின் மிகப் பிரபலமான பெண்குதிரைப் பந்தயமான ப்ரீக்னெஸ் ஸ்டேக்ஸ் (Preakness Stakes), “The Run for the Black-Eyed Susans” என்றே அழைக்கப்படுகிறது; இதிலிருந்தே அந்த வார இறுதி “Black-Eyed Susan weekend” என அழைக்கப்படுகிறது. பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரைக்கு இந்த மலர்களால் ஆன ஒரு போர்வை அணிவிக்கப்படும் மரபு உண்டு.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால்  இந்தமலர் பந்தயம் நடைபெறும் மே மாதம் மலராததால், உண்மையில் அந்தப் போர்வையில் இருப்பது Viking mum என்ற இன்னொரு மலர்தான். அம்மலரின் மையப் பகுதியில் கருப்பு வர்ணம் தீட்டி கருங்கண் சூசனைப் போல தோற்றமளிக்கச் செய்யப்படுகிறது). கைப்பைகள் படுக்கை விரிப்புகள் போன்ற அன்றாட புழங்குபொருட்களிலும் சூஸன் இருக்கிறாள்.

மலர் மொழியில் (floriography) சூஸன் நீதி மற்றும் ஊக்கம்  ஆகியவற்றைக் குறிக்கிறது.

 தோட்டக்கலைத்துறையினரால் இதில் பல அலங்கார ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன—’Indian Summer’ (பெரிய பூக்கள்), ‘Goldsturm’ (குறுகிய வளர்ச்சி), ‘Cherry Brandy’ (சிவப்பு-மெரூன் இதழ்கள்), ‘Prairie Sun’ (பச்சை நிற மையம்), ‘Toto’ (குட்டை ரகம்) என பலவகைகள் பிரபலமாக இருக்கின்றன.

அந்தப்பாடலின் சில வரிகள்:

“All in the Downs the fleet was moored,
The streamers waving in the wind,
When Black-eyed Susan came aboard,
Oh! where shall I my true love find?”

ஒவ்வொரு மலருக்கும் பின்னால் இப்படி மிகச்சுவாரஸ்யமான கதைகளும் கலாச்சாரத்தொடர்புகளும் இருப்பது மேலும் மேலும் தாவரங்களின் மீதான பிரியத்தை அதிகப்படுத்துகிறது.

மலராகிவிடுதல்!

( வான்கோ பதிப்பகம் வெளியிட்ட தேவதேவனின் நிலவில் உதித்த கார்முகில் கவிதை நூலுக்கு எழுதிய என்னுரை)

மலராகிவிடுநல்!

தேவதேவன் அவர்களை 2018 ஆம் ஆண்டு காவிய முகாமில் முதன்முதலாகச் சந்தித்தேன். அமர்வுகளின் இடைவேளையில் வெயில் காய்ந்துகொண்டு பட்டுத்தலையணைகளைப் போல மலர்ந்திருந்த ஹைட்ராஞ்சியாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தேவதேவன் அருகிலிருந்த ஒரு அடர் ஊதா மலரைக்காட்டி, ‘இது எத்தனை அழகாருக்கு இல்லியா’ என்றார். அதற்கு முன்னர் அவரிடம் நான் பேசியிருக்கவில்லை.

இடையில் நின்றுவிட்ட உரையாடலை விட்ட இடத்திலிருந்து துவங்குவதுபோல அந்தப் பேச்சு துவங்கியது. அங்கிருந்து ஃபெர்ன் ஹில்லை சுற்றி ஒரு நடை சென்று பல மலர்களைப் பார்த்தோம். முதன்முதலாக வீட்டைவிட்டு வெளியே வந்து வானை, மண்ணை, மலர்களை, செடிகொடிகளைப் பார்க்கும் ஒரு சிறுவனுடன் நடந்து செல்வது போலத்தான் இருந்தது.

அப்போதைக்கப்போது அங்கிருக்கும் இயற்கை அழகுகளைக் குறித்து கவிதைகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் குறித்த பிரமிப்பு இன்று வரை தொடர்கிறது. என் பெயரைக் கேட்டுவிட்டு ‘நல்ல பெயர் இந்தப் பெயருக்கு ஒரு கவிதை எழுதித் தருகிறேன்’ என்றார்.(பிறகு எழுதித்தந்தார்)

வானை, மண்ணை, கார்முகிலை, மலரை, மலர்ச்செண்டுகளை, காளானை, ரயில் பூச்சியை, புழுவை, மூங்கிலை விவரிக்கும் அழகிய கவிதைகளின் இத்தொகுப்பை வாசிக்கையிலும் ஃபெர்ன் ஹில்லின் அந்தக் காலைநடைக்கு மீண்டும் சென்றதைப்போலத்தான் இருந்தது.

அவரது தாவரவியல் அறிவு ஆச்சரியமூட்டுகிறது. பாரிஜாதமென்றும் பவளமல்லியென்றும் அழைக்கப்படும் மலரைக்குறித்துச் சொல்கையில் ‘இரவெல்லாம் விழித்திருந்து பகலில் தூக்கச்சடவில் இருப்பவை, கண் ததும்பும் நீரில் நனைந்தவை போன்ற வெண்ணிதழ்கள்’ என்கிறார்.

பவளமல்லியின் Nyctanthes arbor-tristis என்னும் அறிவ்யல்  பெயருக்கு (Nyct- இரவில், anthe – மலர்/ arbor – மரம், tristis – துயர்)   இரவில் மலர்ந்த துயர் நிரம்பிய மரம் என்று பொருள். கண் ததும்பும் நீரில் நனைந்த வெண்ணிற இதழ்கள் இரவில் விழித்திருக்கின்றன, பகலில் தூங்குகின்றன’ என்னும்  இவரது கவிதை இந்த அறிவியல் பெயருக்கு மிகக் கவிதுவமான  பொருளை  அளித்துவிட்டது.

யார் மலர்ச்செண்டு என்றது? என்னும் கவிதையில் ’’மலர்ச் செண்டிலிருக்கும் ஒரு  மலரை அண்மித்துப் பார்க்கையில் ஒவ்வொரு மலரும் ஒரு  மலர்ச் செண்டுதான்’ என்கிறார்.

பாரிஜாதத்தைக் குறித்து மட்டும் நான்கு  கவிதைகள் எழுதி இருக்கும், வானும்  பூமியும் ஏன் இந்த வாழ்வேமே பூதான் என்னும் இவரின் மனதின் மலர்தலை எல்லாக் கவிதைகளிலும் காணமுடிகிறது.

‘வீறு கொண்டு எழுந்து நிற்பது’ என்னும் மூங்கிலைச் சொல்லும் அந்தக் கவிதையும் அப்படித்தான் எத்தனை சரி, எத்தனை சரி என்று பூரிப்படைய வைத்தது. மூங்கிலின் அந்த நிமிர்வை, உயரத்தை, கம்பீரத்தை வீறுகொண்டு என்னும் சொல் அத்தனை சரியாகச் சொல்லிவிடுகிறது.

மரங்களின் மீதும் மனிதர்கள் மீதும் பொழியும் மழையை  ,அடுக்ககக்  கட்டடங்கள் மீதும் பொழியும் கார்முகிலைப் பற்றிய கவிதையில் ‘வானை அறிந்தவர்களுக்கும் நேசத்தைச் சொல்லித்தரவேண்டுமா’ என்கிறார் தேவதேவன். அவரும் அப்படித்தான் மிக உயரத்திலிருந்து குனிந்து பெருங்கருணையுடன் உலகைப் பார்த்து ரசிக்கிறார், வியக்கிறார் எந்தப் புகாருமின்றி எல்லாவற்றையும் நேசிக்கிறார்.

எதன் மீதும் விலக்கமில்லை அவருக்கு, நல்லதும் அல்லதுமெல்லாம் ஒன்றுதான். கோப்பையொன்றில் நிறைந்திருக்கும் கொடுமையின் சிவப்பைக் காணும் அவர் மனம் அங்கிருந்து தாவி கனியின் சிவப்பில் வந்து நிற்கிறது. தற்கொலை செய்யத் துணிந்த ஒருவனின் விழிகளில் தெரியும் நேரெதிர்திசையைச் சொல்லும் கவிதையும் அப்படித்தான் அவரது மனவிரிவைக் காட்டுகிறது.

பச்சிளம் குழந்தையின் உள்ளங்கால் சிவப்பில் கிளை நிறைந்து மலர்ந்திருக்கும் வசந்தராணியெனும் மரத்தை ‘மரமே மலராக மறைந்து கிடக்கும் பேருண்மை வெளிப்பட்டுவிட்டது’ என்கையில் அக்கவிதை அம்மரத்தைக் காட்டிலும் பேரழகாகிவிடுகிறது.

சென்னை வெள்ளத்தையும் சொல்லுகிறது ஒரு கவிதை. எல்லா  நூல்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் பெருவெள்ளம் அத்தனை அறிவையும் பெற்ற பின்னர் பேரமதியுடன் இருக்கிறது என்கிறார். சென்னைப் பெருவெள்ளம் வந்து நூல்களை அடித்துச் சென்றது ஒரு அழிவு, பேரவலம். அந்த அழிவிலும் ஒரு அழகைக் காணும் அவர் மனதை என்னவென்று சொல்லுவது?

‘யார் வந்து தழுவுமுன்னும் தான் வந்து முந்தித் தழுவும், யார் தழுவ வருகையிலும் தான் விலகி நிற்கும்’ காற்றின் போரன்பிக்கும் இருக்கிறது ஒரு கவிதை, இந்தத் தொகுப்பில் என் தனித்த பிரியத்துக்குள்ளானது இந்த கவிதை.

இணைப்பறவைகளான இருவிழிகளையும், கடக்க முடியாத மலைத்தொடரின் குகைக்குள் ஒளிந்திருக்கும் உயிரின் ஓராயிரம் ரகசியங்களையும் சொல்லுகையில் மலர்களைக் கண் மலர்த்திப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் திடீரெனக் காதல்கொண்டிருக்கும் ஓர் இளைஞனாகிவிட்டிருந்தான்.

பொடிப்பொடியான பூ மொக்குகளைக் கைப்பையில் நிரப்பும் ஒருத்தியும், பெயரிலேயே குட்டி இருப்பதால் வயதே ஆகாத குட்டி சித்ராவும், உன்னி உன்னி ஊஞ்சலாடும் ஒரு சிறுமியும் வழியில் எதிர்ப்படுகிறார்கள்.

பூப்பறிக்கும் ஒருத்தியை ஒரு கவிதையில் ‘பூக்களை பறித்துக் கொண்டிருந்தது ஒரு பெரிய பூக்குவியல்’ என்கிறார். பரிசாக வந்த படுக்கைவிரிப்பின் பூக்களையும் கவனிக்கிறது அவரது பூ மனம், தெருவின் குப்பைகளைக் கடந்து தூயதோர் வெளியில் சென்று திரும்பும் ஒரு குளிரூட்டப்பட்ட காரிடம் ‘சந்தோஷமாகத்தான் இருக்கிறாயா காரே’ எனும் அவர் கேள்வி புன்னகைக்க வைக்கிறது.

‘எதுவுமே செய்ய வேண்டியதில்லை, எதுவுமே செய்யாதிருக்கையில்தான் அன்பு நிகழும், பூஜ்ஜியத்தையும் ஒரு வட்டமிட்டுத்தானே காட்ட வேண்டி இருக்கிறது சிக்னல் இல்லாசாலையில் நம்மைக்காத்திருக்கச் சொல்வதும் கைபிடித்துக் கூட்டிச் செல்வதும் யார்’ போன்ற கவிதைகளில் தெரிவதெல்லாமும் அவர் மனதின் மிகை மலர்வே!

மணிமுடியை, பயணத்தை, பயண வண்டியை, மய்யப்புள்ளியை, மடிமீதமர்ந்திருக்கும் ஒற்றைக்கையைச் சொல்லும், மலர்களைச் சொல்லாத கவிதைகளிலும் மலர்ந்தேதான் கிடக்கிறது அவரது மனம்.

‘நான் யாரா? நாம்தான்’ என்பதற்கு மேலும் சொல்லவும் கேட்கவும் என்னதான் இருக்கிறது?

ஆம், மானுடம் கண்டுகொள்ள வேண்டியதைக் கண்டுகொண்டே தான் இருக்கிறது பெருநிறை பேரருள்.

கற்றலும் கற்பித்தலும்

இன்று ஆசிரியர் தினம். உண்மையிலேயே நான் மகிழ்ந்து கொண்டாடும் தினம். மகன்களும் சாம்பவியும் வாழ்த்துச் சொல்ல மறந்துவிட்டால் கோபித்துக்கொள்வேன். ஆசிரியை ஆவது குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் நல்ல ஆய்வாளராக மட்டுமே இருக்க விழைந்த என்னை, கொஞ்சமாக ஆய்வும் முழுக்க முழுக்க கற்பிப்பவளும் கற்றுக்கொள்பவளுமாக ஆக்கியிருக்கிறது ஊழ்.

ஆசிரியம் என்றால் என்னவென்றே தெரியாத பதின்ம வயதில், ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படம், என்னை ஊட்டியில் ஒரு மேட்டு நிலத்தில் வெள்ளை ரீப்பர்களால் மறிவேலியிடப்பட்ட (picket fence) ஒரு சிறு சிமிழ் போன்ற வீடும், உதவிக்கு ஒரு முதியவளுமாக வாழ்ந்து, ஏராளமான வண்ணக் குடைகளும் ஆர்கண்டி புடவையுமாக இருக்கும் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை ஆகும் விழைவை உண்டாக்கி இருந்தது. ஊட்டி இளமைப் பருவத்தில் என்னுடன் எப்போதும் இருந்தது, இப்போதும் என் கனவுகளில் உடனிருக்கும் நிலப்பரப்பு அதுவே. கலைந்த பலநூறு கனவுகளில் அதுவும் இருந்தது என்றாலும், பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் எதிர்பாராமல் என்னை ஒரு ஆய்வாளராக்கியதை இனிமையுடன் நினைவுகூர்கிறேன்.

முதுகலை படிப்பில் இணைந்த முதல் வாரத்தில், ராஜாராம் அண்ணனின் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு ஒரு சிறு வகுப்பறையில் நிகழ்ந்தது. அந்தத் தேர்வைக் குறித்து எந்தச் சிந்தனையும் அறிதலும் இல்லாமல், கடைசி வரிசையில் அமர்ந்து கொடுக்கப்பட்ட குளிர்பானத்தையும் பிஸ்கட்டையும் ருசித்துக்கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. மாரிமுத்துவும் அன்று உடனிருந்தார். ஒரு பழங்குடியினர் பயன்படுத்திய விதையின் ஊட்டச்சத்து குறித்து ராஜாராம் என்னவோ விளக்கிக்கொண்டிருந்தார்; நான் சுவாரசியமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். பலரும் அவரிடம் என்னவோ கேள்விகள் கேட்டார்கள், அவரும் சலிக்காமல் பதிலளித்தார்.

பின்னர் இறுதியாக “இனிமேல் ராஜாராம், ‘டாக்டர் ராஜாராம்’ என அழைக்கப்படுவார்” என்று ஒருவர் சொன்னதும், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து, ராஜாராம் அண்ணனைக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த போது ‘டாக்டர்’ எனும் அந்த விளி என் மீது ஒரு காய்ச்சல் போல அந்த நிமிடம் பற்றிக்கொண்டது.

அன்று ராஜாராம் எங்களை ஒரு வேனில் கோவை ஆர். எஸ். புரம் அன்னபூர்ணாவிற்கு மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். உணவு முடிந்து வெளியே வருகையில், அங்கே தள்ளுவண்டியில் இருந்த பீடாவை வாங்கிக்கொடுத்தார். அது ‘ஜர்தா பீடா’ என்பதை, எனக்கு தலைசுற்றி மயக்கம் வந்தபோதே அறிந்தேன்! அதுதான் அன்னபூர்ணா என்னும் உணவகத்திற்கு நான் முதன்முதலாகச் சென்ற நாளும் கூட.

பின்னர் முழுநேரமும் துறையில் நடந்த ஆய்வுகளைக் கவனிப்பவளாக மாறியிருந்தேன். குறிப்பாக முதல் தளத்தில் இருந்த கடல்பாசிகளுக்கான ஆய்வு நடந்துகொண்டிருந்த Seaweed Lab-ல், முனைவர் பட்ட ஆய்வில் இருப்பவர்களுக்கு எடுபிடி வேலைகளை நான் முனமுவந்து செய்துகொண்டிருப்பேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம்.

ஒரு பின்னந்தியில் Tribal Pulse Lab-இல் நான் அந்த வயதில் பார்த்திருக்கக்கூடாத ஒரு காட்சியையும் அசர்ந்தமாகப் பார்த்தேன். அதுவுமொரு அறிதல்தான், ஒருபோதும் பிறருடன் பகிர்ந்துகொள்ளவே முடியாத அந்தக் காட்சி கணநேரம்தான் என்றாலும், அது எனக்குப் பெரும்திகைப்பை உண்டாக்கியது. அதன் பிறகு நான் மிகவும் அமைதியானவளாகவும், அதிகம் சிந்திப்பவளாகவும் மாறியிருந்தேன். விளையாட்டுக்கு நண்பர்கள் கை என் மீது பட்டாலும் விதிர்விதிர்த்துக்கொண்டிருந்தேன்.

பின்னர் நல்ல சித்திரம் வரைபவளாக, உன்னதமான ஆங்கிலம் இல்லாவிட்டாலும் சரியான ஆங்கிலம் பேசுபவளாக, எந்நேரமும் நூலகத்தில் பழிகிடப்பவளாக, எதையாவது எழுதிக்கொண்டிருப்பவளாக மாறிப்போனேன். வய்யூரு ராமகோடி ரெட்டி என்னும் VRKரெட்டி சைட்டாலஜிஸ்ட் ஆசிரியராகப் பணியில் இணைந்த பின்னர்—வெலிங்டன் கோதுமை வயால்களில் அதிகாலையில் கதிரெழுகையில் வானின் தங்க நிறப் பின்னணியில் கோதுமை மலர்களைச் சேகரித்தது, டால்ஃபின்கள் துள்ளி விளையாடும் அலைகளைக் கடந்து குருசடி தீவை அடைந்து பாசிகளைச் சேகரித்தது, ஊட்டிக்கும் மருதமலைக்கும் சென்று தாவரங்களைச் சேகரித்தது,எலக்ட்ரோபோரசிஸில் புரதங்களைப் பிரித்தெடுத்தது; அகாவே கள்ளிகளின் அழகிய மலரரும்புகளை மெழுகிலிட்டு கட்டிகளாக்கி மைக்ரோடோமில் மிக மெல்லிய செக் ஷன் எடுத்தது என ஆய்வுகளில் தீவிரமான விருப்பம் உண்டாகியிருந்தது.

என்னுடன் பல துறையைச்சேர்ந்த நண்பர்களின் ஒரு சிறு குழு எப்போதும் இருந்தது. கேன்டீன் போகும் வழியில் இருந்த ஒரு சிறு திட்டில் மாலை நேரங்களில் மணிக்கணக்கில் அமர்ந்து நான் எதையாவது பேசுவதும், அதை அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதும் வழக்கமானது. கெமிஸ்ட்ரி விஜி ‘ .. டீ, நான் வேண்னா மத்தியானம் உனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வரேன் நீ ஹாஸ்டலுக்கு போகாம எங்க கூடவே இருந்து எதாச்சும் பேசிகிட்டிரேன்…’ என்பாள். மேட்டுப்பாளையத்திலிருந்து உடன் படித்த செந்திலின் நண்பர் ஷரவண் அந்தக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வார். அவர் முதலில் செந்திலைப் பார்க்கவும், பிறகு நான் பேசுவதைக் கேட்கவே வெள்ளி மாலைகளில் தொடர்ந்து வந்தார் என்பதை நானும் அறிந்திருந்தேன்.

அவரும், ஒரு மதிய வேளையில், துறையின் தாவரவியல் பூங்காவில் மண்ணைக் கொத்திக்கொண்டிருக்கையில், மேலே வெள்ளி மீனாக நீந்திக்கொண்டு சென்ற விமானத்தை வாய்பிளந்து வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவளிடம் சக மாணவர் ஒருவரும், ஆங்கில இலக்கியம் படித்த படுகரான தேயிலைத்தோட்ட உரிமையாளர் ஒருவரும் என்னை விரும்புவதாக நேரடியாகச் சொன்னபோதும், எனக்கு அந்த நேசத்திலும், அந்தப் பையன்களிடம் எந்த ஈடுபாடும் உருவாகவில்லை. அதை அவர்களிடமே புன்னகையுடன் சொல்ல முடிந்தது. ஆனந்தலட்சுமி (சிறகு) சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டது போல எனக்கு ஆய்வில் மட்டுமே பெருவிருப்பம் இருந்தது. மேலும் அன்று ஆய்வகத்தில் நான் கண்ட காட்சி எனக்கு ஆண்-பெண் உறவைக் குறித்த நுட்பமான ஒரு விலக்கத்தையும் உள்ளே உண்டாக்கியிருந்தது. ஆய்வின் மீது மட்டுமே பெருங்காதல் கொண்டிருந்த காலம் அது.

பின்னர் வேறு பல்கலைக்கழகம், அங்கே 10 மாதங்களில் எம்.பில் முடித்தேன். மற்ற துறை மாணவிகள் எம்.பில் ஆய்வுக்காக வெளியே செல்ல வார்டனிடம் அனுமதி வாங்க வரிசையில் நிற்கையில், நான் ஆய்வை முடித்து , அவற்றைச் சமர்பிக்க ஆய்வேடுகளுடன் Registrar அலுவலகத்திற்கு அவர்களுக்கு எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்தேன். பின்னர் 3 வருடங்களில் முனைவர் பட்ட ஆய்வை முடித்து, மிகத் தீவிரமான ஆய்வாளராகும் கனவுகளுடன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்தேன்.

அச்சமயத்தில் உண்மையிலேயே காதல் வயப்பட்டிருந்தேன். ராணுவ வீரர் என்பதாலும், அவரது போர்ச் சாகசக் கதைகள் உண்டாக்கிய கிளர்ச்சியினாலும், அந்தக் குடும்பம் எங்களின் ஜாதிப் பிடிமானக் குடும்பத்தை விடவும் வேறுபட்டிருந்ததாலும், அவர்கள் என் மீது பொழிந்த அன்பினாலும், 45 பக்க பிரிண்டரின் தொடர்ச்சியான காகிதங்களில் வந்த கடிதங்களாலும், இளமைக்கே உரித்தான அசட்டுத்தனத்தினாலும் அந்த நேசத்தில் நானும் தீவிரமாக இருந்தேன். வலுக்கட்டாயமாக அந்த நேசமும் எங்களிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது.

அந்தக் காயமாறுவதற்குள், ஆய்வாளராகப் பணிபுரியும் பல வாய்ப்புகள் வந்தன. ஊட்டியில் ஒரு எஸ்டேட்டில், அதன் மிகப்பெரிய செல்வந்தரான உரிமையாளர் மேஜையில் இருந்த தேநீர்க் கோப்பையை ‘சர்’ என ஓசை வரும்படி அருந்திக்கொண்டே, “உங்க படிப்பெல்லாம் பார்த்தேம்மா, உங்களுக்கு இங்கே என்ன வேலை கொடுக்கிறதுனு எனக்குத் தெரியலை… என்ன வேலை நீங்கள் செய்ய முடியுமோ அதைச் செய்யலாம், என்ன சம்பளம் கேட்கிறீர்களோ அதைத் தருகிறேன்” என்றது நினைவிலிருக்கிறது. அதையும் வீட்டில் மறுத்தார்கள்.

ஒரு மத்திய அரசுத் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி, ஹைதராபாத்தின் சணல் ஆய்வு மையத்தில் ஆய்வாளராக வேலை கிடைத்தபோது, “நம்ம வீட்டுப் பொண்ணு ஆந்திரா வரைக்கும் போறதா?” என்று மறுக்கப்பட்டது.

பின்னர், இந்தக் கல்லூரியில் ’’நம்ம பொண்ணெல்லாம் எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்? சங்கரன் ரிட்டையர் ஆகிறார்; அந்த இடத்துக்கு நம்ம பொண்ண வரச் சொல்லுங்க” என்று சொல்லப்பட்டதால், மனம் உடைந்து வேண்டா வெறுப்பாக இங்கே இணைந்தேன்.

கல்லூரியில் இணைந்து 2 மாதங்களில் கல்லூரி அலுவலகத்திலிருந்து எனக்கு போன் வந்திருப்பதாகச் சொன்னார்கள். எடுத்துப் பேசினேன். வினுதா என்னும் பெங்களூரு இந்துஸ்தான் லீவரின் காரியதரிசி பேசினாள். இரண்டு நாட்களுக்குள் அங்கே நேர்காணலுக்கு வர முடியுமா என அவள் கேட்டாள், “சரி” என்று சொல்லிவிட்டு வைக்கும்போது, உன் பெயர் மிக அழகு என்றேன். சற்றுத்தயங்கி “தேங்க்யூ ” என்று சொன்னாள்.

அந்த போனை மற்றொரு இணைப்பிலிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரியின் மேற்பார்வையாளர், “என்னம்மா… ராஜினாமா பண்ணிட்டு போகப் போறியா பெங்களூருக்கு?” என்றார். “தெரியலை” என்று மட்டும் பதில் சொன்னேன்.

மறுநாள் இரவெல்லாம் பேருந்தில் பயணித்து, அதிகாலை பெங்களூருவில் இறங்கி, இந்துஸ்தான் லீவருக்கு ஆட்டோவில் போய், அங்கிருந்த கழிவறையில் முகம் கழுவிக்கொண்டு, அதே பயண உடைகளுடன் காலை 10 மணிக்கு ஒரு மாபெரும் போர்டு ரூமுக்குச் சென்றேன். அந்தக் குளிரூட்டப்பட்ட அறையையும், கோட் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த பலரையும் பார்த்து நான் திகைத்துப் போய்விட்டேன். பேனலில் 7 பேர் இருந்தார்கள். என் முனைவர் பட்ட ஆய்வையும், சால்ஃபோர்டில் ஒரே சஞ்சிகையில் பிரசுரமான எனது 6 சர்வதேச ஆய்வறிக்கைகளையும் என் எளிமையான தோற்றத்தையும் பொருத்திப்பார்க்க அவர்கள் சிரமப்பட்டார்கள். என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் நான் எளிதாகப் பதிலளித்தேன்.

“தேயிலைக் கழிவுகளில் உங்களால் வேலை செய்ய முடியுமா?” எனத் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டது. அதிலிருக்கும் டானின்களின் நிறமியைப் பிரித்தெடுப்பது பற்றிய ஆய்வில் என்னை இணைத்துக்கொள்வதுதான் அந்த நேர்காணல் என்று எனக்குத் தெரிந்ததும், நான் பாலிஃபெனால், தியோப்ரோமின், தியோஃபிலின்கள் பற்றி விளக்கிக் கூறி, என் தாவரவியல் அறிவை அவர்கள் முன்பாகச் சந்தேகமில்லாமல் முன்வைத்தேன்.

“விரைவில் தொடர்புகொள்கிறோம்” என்று சொல்லி, அதிலொருவர் எனக்கு முதன்முதலாகக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். என் வாழ்வின் முதல் கைகுலுக்கல் அதுதான்! காலையில் உணவருந்தாததால் களைத்துப்போய் அந்த கட்டிடத்திலிருந்து வெளியே வருகையில், கைகுலுக்கிய அந்த இளம் அதிகாரி (அடர் நீல கோட் அணிந்திருந்தார்) பின்னால் வேகமாக வந்து, எங்களை கேன்டீனுக்குக் கூட்டிப்போய், அங்கிருந்தவர்களிடம் சொல்லி எங்களுக்கு உணவளிக்கச் சொல்லிவிட்டு, கனிந்த புன்னகையுடன் என்னை மீண்டும் ஒருமுறை பார்த்து விடைபெற்றுக்கொண்டார்.

அப்போது எனக்கு 26 வயது முடிந்திருந்தது. அடுத்த வாரம், மிக அழகிய வான் நீல நிற உறையில் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. என்னை 3 வருடங்கள் என்று முன்தீர்மானிக்கப்பட்ட தேயிலைக் கழிவு குறித்த ஆய்வில், மாதம் 18 ஆயிரம் சம்பளத்துடன் ‘ஜூனியர் சயின்டிஸ்ட்’ ஆக இணைந்துகொள்ள விரும்புகிறீர்களா என்றும், சம்மதமென்றால் 10 நாட்களுக்குள் வரவேண்டுமென்றும், நிர்வாகம் நினைத்தால் பதவியை நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நீலத்தில் இருந்த கடிதத்தாளின் ஒரு மூலையில் இளஞ்சிவப்பில் மூன்று சிறு மலர்கள் இருந்தன.

அந்த வாய்ப்பையும் ’கர்நாடகாவுக்கெல்லாம் நம்ம வீட்டுப்பொண்னை எப்படி அனுப்புவது’ என்று நிராகரித்தார்கள்.நானும் அச்சமயத்தின் மனமுடைதலில் எதன்பொருட்டும் வீட்டில் விவாதிக்க மனமற்றவளாக இருந்தேன். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… 26 வயதில் இந்துஸ்தான் லீவரில் இருந்திருந்தால் எத்தனையெத்தனை முக்கிய ஆய்வுகளை நான் செய்திருக்கக்கூடும்!

ஆனால், இந்தக்கல்லூரியில் பணியில் இணைந்து சில வருடங்களிலேயே கற்பிப்பதில் ஆர்வம் கொண்டுவிட்டேன். அவ்வப்போது ‘கிஸான் வேர்ல்ட்’ என்னும் சஞ்சிகையில் சிறு கட்டுரைகள் எழுதி, அதற்கான சன்மானமாக 400 ரூபாய்கள் வாங்கிக்கொண்டிருந்ததை கல்லூரி ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்தக்கல்லூரியின் முதல்முனைவர் பட்டம் கொண்டிருந்த பேராசிரியை நான்தான்.

ஆசிரியர் பணியில் மெல்ல மெல்ல ஆர்வம் ஏற்பட்டிருக்கையில், அரசு வேலை தேடி வந்த தருணத்தில் அதிலிருந்தும் தடுக்கப்பட்டு,வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டு, மண்முடித்து வைக்கப்பட்டேன். வளைகுடா நாடொன்றிற்கு அனுப்பட்டேன். அங்கு அந்தப்பாலையிலும், “இப்போது ஜிம்னோஸ்பெர்ம் எடுக்கும் ஆசிரியர் அதன் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிச் சரியாகச் சொல்வாரா? சைகஸின் இலைகளின் மெழுகுப் பூச்சு பற்றிச் சொல்லியிருப்பாரா?” என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டே, சரணுக்குப் பால்பொடியைக் கரைத்துக்கொண்டிருப்பேன்.

அந்தக் கொடும் வாழ்வு முடிந்து 5 வருடங்களில், தப்பித்து இந்தியா வந்து, மீண்டும் அதே கல்லூரியில் அதே துறையில் இணைந்தேன். இன்று வரை ‘ஆசிரியை’ என்பதை விட, “அன்றாடமும் தாவரங்கள் குறித்துக் கற்றுக்கொண்டிருப்பவள்” என்றுதான் சொல்ல வேண்டும். தாவரங்கள் குறித்த அபிமானம் மேலும் மேலும் எனக்குப் பெருகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் 500 வருடங்களுக்காவது அவற்றைக் குறித்துக் கற்கவும் கற்பிக்கவும் எழுதவும் விஷயமிருக்கிறது,யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றாலும்.

அன்னையும், ஆசிரியையும், வாசகியுமாய்தான் என்னை எங்கும் எப்போதும் முன்வைக்கிறேன். கல்லூரியில் எனக்குச் சௌகரியமான சூழல் இல்லைதான்; என்றாலும் என் தனியறையில் நான் மகிழ்ந்து பணியாற்றுகிறேன். 1950-களில் கட்டப்பட்ட கட்டிடத்தில் துறை இயங்குகிறது. என் மேஜைக்குப் பின்னால் அந்தக் காலத்துக் கம்பிகளற்ற திறந்த சாளரம் வழியே புங்கை வாகை பெருமரங்களின் மரக்குடை பிரம்மாண்டமாகத் தெரிய, அவற்றின் உலர்ந்த இலைகள் அவ்வப்போது ஆசியளிப்பது போல் என் மேஜையில் வந்து விழ, ஒருநாளும் சலித்துக்கொள்ளாமல் மிகுந்த விருப்பத்துடன் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்.

நான் தாவரவியல் கற்றுத் தருபவளாக மட்டுமல்லாது, மாணவிகளுக்கும் சக ஆசிரியர்கள் சிலருக்கும் அந்தரங்கத் துயரைப் பகிர்ந்துகொள்ளும் முகமாகவும் இருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன். உடன் பணியாற்றும் பல ஆசிரியர்கள் ஆசிரியப்பணியின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் என்னும் வருத்தமும் எனக்குண்டு.

இங்கு இது எனது 24-வது வருடம். ஆசிரியையாக எத்தனையோ கசப்பான அனுபவங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஓர் ஆசிரியை தனக்கேற்பட்ட ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க என் மீது அபாண்டமாகப் பொய்ப் பழி சுமத்தி, மிகச் சமர்த்தியமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட சூழலில், நான் மனம் கலங்கிப்போனேன். அத்தகைய சூழ்ச்சிகளைச் செய்யக்கூடியவள் அந்தப் பெண் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் அவளை நான் வெறுக்கிறேன் என்றோ, அவள் எனக்கு எதிரி என்றோ இல்லை. எனக்கு எதிரியாக இருக்கும் தகுதி கொண்டோர் இந்தக் கல்லூரியில் இல்லவே இல்லை. அவளை முற்றிலுமாக என் வாழ்விலிருந்து விலக்கிவிட்டிருக்கிறேன், எனினும் அந்தக் காலத்தில் நான் கடும் துயருற்றேன் என்பது உண்மைதான்.

நான் அடிக்கடி பயணப்பதும், அவ்வப்போது போனில் பேசிக் கொண்டிருப்பதாலும், எப்போதும் வாசிப்பதாலும், மேடைகளில் பேசுவதாலும் என் ஒழுக்கம் குறித்த சான்றிதழைக் கேட்காமலேயே அளிக்கும் சக ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்களனைவரையும் சுகக்கேடுள்ள பிள்ளைகள் மீதான அன்னையின் கனிவுடன் பார்க்கிறேன்.

இங்கு பணிபுரியும் யாரைக் காட்டிலும் நான் உயர்ந்தவள் அல்ல; ஆனால் நிச்சயம் அவர்களிடமிருந்து வேறுபட்டவள் என்பதை அறிவேன். அதிலெனக்குச் சற்று அகந்தையும் இருக்கிறது! நான் இருக்கும் அறிவார்ந்த உலகை அவர்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள் என்பதில் எனக்குத் துயருமுண்டு.

மாணவர்களில் எனக்குப் பெண்கள் மீது தனிப் பரிவுண்டு. காலம் காலமாகக்கல்வியும் சுதந்திரமும் மறுக்கப்பட்டு, இப்போதுதான் வீட்டை விட்டு வெளியே வந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மீது தனிப் பரிவு கொண்டிருக்கிறேன். ஆசிரியராக எப்போதும் ஒரு கையில் கனிவும், மறுகையில் கண்டிப்புமாகவே இருக்கிறேன், மகிழ்ந்தும் இருக்கிறேன்.

கலாமணி மேம், தனா மேம், சண்முகசுந்தரம் சார், ரவீந்திரன் சார் மற்றும் சங்கரன் சாரை எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். நல்லாசிரியர்களால் செதுக்கப்பட்ட மாணவி நான்.

அவர்களிடமிருந்து மட்டுமல்ல, ‘ஜெ’ என்னும் ஞானகுருவிடமிருந்து பெற்றவைகளே என்வாழ்வை முழுவதுமாக உருவாக்கியிருக்கிறது. சரணும் தருணும் எனக்கு ஆசிரியர்கள் தான், நான் அவர்களுக்கல்ல, அவர்களே எனக்கு அன்னையர். அற்று விழ எல்லாக் காரணங்களும் இருந்தபோதும் இந்த வாழ்வைத் தொடரும் பிடிப்பை எனக்கு உண்டாக்கியவர்கள் அவர்களிருவருமே,

எப்போதும் ஒளியை நோக்கியும், களைகளைப் பொருட்படுத்தாமலும் வளர்வது, எங்கு விழுந்தாலும் முளைத்து மலர்வது எனப் பலபாடங்களைக் கற்றுக்கொடுத்த தாவரங்களும் ஆசிரியர்களே! அனைவருக்கும் என் வந்தனங்கள்!

கேமரா லூஸிடா-ஒளியூட்டப்பட்ட அறை

நேற்றுத்தான் நித்யவனம் மகளிர் மட்டும் 3 நாட்கள் வகுப்பிலிருந்து வீடு திரும்பினேன். அந்த வகுப்புகளில் ஒன்றில் லலிதா என்னும் ஆசிரியரின் (அபாரமான) ஓவியம் குறித்தும், ராணுவத்தில் காமிராக்கள் கண்டுபிடிக்கப்படும் முன்பு அனைவரும் ஓவியப் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டதையும், குற்றவாளிகளின் உருவத்தை,  வரைபடங்களை, நிலப்பரப்புக்களை ராணுவத்தினர் அப்போதெல்லாம் துல்லியமாக கைகளாலேயே வரைவார்கள் என்றும்  ஜெ சொன்னார். எனக்கு அது மிகப்புதிய தகவல்.

நான் இந்தக் கல்லூரியில் இளங்கலை படிக்கையில் மைக்ரோஸ்கோப்புகளின் கண் பொருத்தும் லென்சில் இணைக்கப்படும் கேமரா லூசிடா என்னும் ஒரு சிறு எளிய சாதனம் இருந்தது. அனாடமி வகுப்புக்களுக்குச் செல்லும்போது மிகவும் பயமாக இருந்ததற்கு இந்த கேமரா லூசிடாவும் ஒரு முக்கியக் காரணம். தண்டோ இலையோ வேரோ செக்‌ஷன் எடுத்து அதை மைக்ரோஸ்கோப்பில் அழகாக வைத்துவிடுவேன், அருமையாக மெல்லியதாக செக்‌ஷன் எடுக்கும் திறமைகொண்டவள் என்னும் பெயரும் எனக்கு இருந்தது. ஆனால் அதை காமிரா லூசிடா வழியே பார்த்து, வலக்கை பக்கத்தில் வைத்திருக்கும் வெள்ளைத் தாளின் மீது இருக்கும் கூராக சீவப்பட்ட பென்சிலின் நுனியும், மைக்ரோஸ்கோப்பில் தெரியும் ஸ்பெசிமெனின் பிம்பமும் ஒரே தளத்தில் தெரிய , கண்களைப் பழக்கவே அரை மணி நேரமாகிவிடும். அதன் பின்னர் அச்சுப் பிசகாமல் அப்படியே சித்திரத்தை வரைந்து கையெழுத்து வாங்கிவிட்டே லேபிலிருந்து புறப்பட முடியும். பெரும் பதட்டத்துடன் அந்த வேலையைச் செய்வேன், பலமுறை தாமதமாகச் சித்திரம் வரைந்ததற்கு திட்டு வாங்கியும் இருக்கிறேன்.

ஆனால்  அந்த அனுபவத்தில் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கச் சென்றபோது, மிக அழகிய செல் அமைப்புகளை  அவற்றின் வேறுபாடுகளுடன் துல்லியமாகக் காண்பிக்கும் சித்திரம் வரைபவளாக அறியப்பட்டிருந்தேன். பெரும்பாலும் என் அனாடமி சித்திரங்கள் பாராட்டப்பட்டு, பையன்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டு அவர்களை ஒருமுறை பார்க்கச் சொல்லும்படியாகவே இருக்கும். எனக்கும் அனாடமி சித்திரங்களை சரியாக அழகாக வரைபவள் என்னும் பெருமை (கொஞ்சம் அகங்காரமும்) இருந்தது.  முதுகலை முதலாம் ஆண்டில் அனாடமி லேபில் நறுமணத்துயர் மரமான (பவளமல்லி) நைக்டாந்தஸின் தண்டை செக்‌ஷன் எடுத்து அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வரைந்ததை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

எனவே கேமரா லூசிடா (Camera Lucida) என்பது புகைப்படக் கருவி அல்ல, அது ஒரு ஒளியியல் சாதனம் — ஒரு மாணவர் அல்லது ஆய்வாளர் ஒரு மாதிரியின் (specimen) துல்லியமான உருவத்தை காகிதத்தில் நகலெடுக்க ( இது உதவுகிறது.

வரையும் மேசைக்கு மேலே ஒரு கைப்பிடியில் பழைய மைக்ரோஸ்கோப்களில் ஒரு சாய்ந்த கண்ணாடியும், புதிய மைக்ரோஸ்கோப்புகளில் ஒரு பிரிஸமும் பொருத்தப்பட்டிருக்கும். மைக்ரோஸ்கோப்பின் eyepiece வழியே பார்க்கும்போது, லென்ஸ் வழியாக தெரியும் ஸ்பெசிமனின் பிம்பம் மற்றும் கீழே இருக்கும் காகிதமும் கையும் பென்சில் நுனியும் —எல்லாம் ஒரே பார்வைத் தளத்தில் ஒன்றன் மேல் ஒன்றாகத்  தெரியும், தெரியவேண்டும். இதனால் கண்ணில் காணும் பிம்பத்தை நேரடியாக பென்சிலால் தொடர்ந்து அச்சு அசலாக வரையலாம், அது துல்லியமாக அமைந்துவிடும்.

இதை 1806-ல் ஆங்கில விஞ்ஞானி வில்லியம் ஹைட் வோலஸ்டன் (William Hyde Wollaston) காமரா லூசிடா என்னும் பெயரில் காப்புரிமை பெற்றார். காமரா லூசிடா  என்பது லத்தீன் மொழியில் “ஒளியூட்டப்பட்ட அறை” என்று பொருள்படும், இது பழைய “கேமரா ஆப்ஸ்குரா” (இருண்ட அறை) என்பதன் நேரெதிர்.

அறிவியல் சித்திரங்கள் துல்லியமாக வரையப்படுவது இதன் மிகப் பெரிய பங்களிப்பாக இருந்தது. தாவரவியலாளர்கள், விலங்கியலாளர்கள், உடற்கூற்றியலாளர்கள், புவியியலாளர்கள் ஆகியோர் நூற்றாண்டுகளாக மாதிரிகளின் துல்லியமான வரைபடங்களை உருவாக்க இதைப் பயன்படுத்தினர், குறிப்பாக நுண்ணோக்கியில் பொருத்தப்படும்போது பெரிதாக்கப்பட்ட பிம்பங்களுக்கு. புகைப்பட நுண்ணோக்கம் (photomicrography) நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, லென்ஸ் வழியாகப் பார்க்கப்பட்டதை துல்லியமாகப் பதிவு செய்வதற்கான ஒரே தரமான வழி இதுவாகவே இருந்தது.

கள ஆய்வாளர்கள் (field naturalists) துல்லியமாக நிலப்பரப்புகளையும் மாதிரிகளையும் வரைவதற்கு   காமிரா லூஸிடாவை பெரிதும்   பயன்படுத்தினர்.

20-ம் நூற்றாண்டு வரை வகைப்பாட்டியல் (taxonomic), வடிவவியல் (morphological) மற்றும் உடற்கூறியல் பணிகளில் நுண்ணோக்கிக்கான கேமரா லூசிடா இணைப்புகள் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தன. அந்தக் காலத்து தாவரவியல் மோனோகிராஃப்களில் (monographs), “கேமரா லூசிடா உதவியுடன் வரையப்பட்டது” என்று படங்களின் தலைப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது இருண்ட அலமாரிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது காமிரா லூசிடா.

« Older posts

© 2026 அதழ்

Theme by Anders Noren — Up ↑