கோவை மாவட்டத்தில்  வழக்கமாக ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்  ஆனால் கேரளத்துக்கு தொட்டடுத்து உள்ள பொள்ளாச்சியில் ஏறக்குறைய கேரளம் போலவே விமர்சையாக ஓணம் கொண்டாடப்படும். பாலக்காட்டு சாலையில் பாலக்காட்டிலிருந்து  முக்கால் மணிநேர பேருந்து பயணத்தில் அடைய முடியும் எங்கள் கல்லூரியில்  (அதாவது நான் படித்த, நான் பணி செய்கின்ற கல்லூரி!!!!!) ஓணத்துக்கு எப்போதும் விடுமுறையும் உண்டு. 

எனக்கு எப்போதுமே கேரளம், மலையாள மொழி, கேரள உணவு, பண்டிகைகள் மீதெல்லாம் சாய்வு உண்டு. இந்த வீடும் கேரள பாணியில் வீட்டு முன்பாகத் தோட்டம் வைத்துக் கட்டப்பட்டதுதான். மாலையில் ஏற்றப்படும் கல்விளக்கு தீபங்களும் வீட்டு முகப்பில் மாட்டப்பட்டிருக்கும்  கேரள  முகம் எனப்படும் மரச்செதுக்கு சிற்பமும் கேரளத்தை  வெகுவாக நினைவூட்டும். வழக்கமாக ஓணம் பண்டிகை அன்று மகன்கள் வீட்டில் இருப்பார்கள் எனவே எங்கேனும் வெளியூருக்கு செல்வோம். 

இந்த முறை தருண்  மட்டும் வீட்டுக்கு வந்திருந்தான், கவின்(வெண்ணிலா மகளும் என் மருமகளும்) நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் கோவையில் பயிற்சி மையத்தில் இருந்தாள். எனவே எல்லோரும் ஓணம் சத்யா எனப்படும் ஓண விருந்து சாப்பிடலாம் என்று முடிவானது. சரணும் தருணுமாகக் கோவையில் ஓண சத்யா அளிக்கும் உணவகங்களை இணையத்தில் தேடினர். எங்கும் இடம் இல்லை. ஒரு நல்ல உணவகத்தில் இடம் இருந்தது ஆனால் 45 நிமிடம் மட்டுமே உணவுண்ணும் நேரம் என்றனர் கறாராக.  அப்படி நேரக்கணக்கெல்லாம் வைத்துக்கொண்டு மகிழ்ந்து சாப்பிட முடியுமா என்ன? எனவே தேடித்தேடி ஒரு வழியாக மலபார் உணவகத்தைக் காந்திபுரத்தில் கண்டுபிடித்தோம்.

மிகுந்த நெரிசலான சந்துப்பகுதியில் அமைந்திருந்தது உணவகம். அவர்களின் மிகக் குறுகிய இடத்தில் காரைப் பார்க் செய்வதே பெரிய சாகசமாக இருந்தது.

கூட்டம் நெரிந்தது.  என்னைப்போலவே பலர் ஓணப்புடவையிலும், சிலர் செட்டு முண்டிலும் வந்திருந்தனர், பார்சல் வாங்கும் இடமும் திருவிழா போல இருந்தது. டோக்கன் வாங்கிக்கொண்டு நால்வரும் மாடிக்குச் சென்றோம்,

 டோக்கன் கொடுப்பவர்களுக்கும் மாடியில் பரிமாறுபவர்களுக்கும் ஜென்மாந்திரமாகத் தொடர்பே இல்லை போல. அங்கே அமர இடமே இல்லை என்னும் தகவலே தெரியாமல் சகட்டு மேனிக்கு கீழே டோக்கன்கள் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஏஸி பேருக்கு வேலை செய்துகொண்டிருந்தது, ஓணவெயில் அடித்துக்கொண்டிருந்த அந்த நண்பகலில் வியர்த்து வழிந்து, களைத்து வெகுநேரம் காத்திருந்து மின்விசிறிக்கடியில் ஒரு மேசை கிடைத்து  அமர்ந்தோம்.

ஓணம் சத்யா என்பது 16 வகை அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் தொடுகறிகளும் வல்லரிசிச்சோறும், பலவகைப் பாயசங்களும் பப்படமும் குழம்புகளுமாக இருக்கும் சைவ விருந்து. வெறும் உணவுண்ணும் அனுவபம் மட்டுமல்ல சத்யா, அது ஒரு பண்பாட்டு அனுபவமும் கூட.

தொடுகறிகள் துவரன், ஓலன், காளன், அவியல், தீயல், எரிசேரி, பச்சடி, கிச்சடி, பலவித ஊறுகாய்கள், துவையல்கள், இஞ்சிப்புளியென ஆடம்பரமாக இருக்கும். 

மலபார் உணவகத்தில் வாசலில் 16 வகைகளையும் (உப்பு வாழையிலை உள்ளிட்ட) பட்டியல் இட்டுப் பேனர் வைத்திருந்தார்கள்.பரிமாறிக்கொண்டிருந்த இளைஞர்கள் அப்போதே மிகவும் களைத்திருந்தனர். முற்பகலிலிருந்தே பந்தி நடந்திருக்கும் போல. நாங்கள் எண்ணியது போல 16 வகை தொடுகறிகளுடன் விமரிசையாக உணவு வரவில்லை.

ஒரு  நீள எவர்சில்வர் தட்டில் வாழை இலையை வைத்து அதில் அவசரக்கோலத்தில் எல்லா தொடுகறிகளையும் குழந்தைக்குக் கூட ஊட்ட முடியாத குறைந்த அளவில் வீசி எறிந்தது போல வைத்துக் கொண்டு வந்து வைத்தார்கள். வைக்கும் போதே என் இலையில் பாயஸம் கொட்டி இருந்தது. பேப்பர் கப்புக்களில் இரு வகை பாயஸம், எண்ணெய் படாத விளிம்புகளுடன் பச்சை உளுந்தின் வீச்சம்கொண்ட  வேகாத சிறிய பப்படம் ஒன்று.  

 எல்லா இலையிலும் நாலைந்து துவையல்கள் ஒன்றாய் சேர்ந்திருந்தன. என் முகத்தைப் பார்த்த கவின்  கொஞ்சமாக துவையல்கள் கலந்திருந்த அவளது இலையை எனக்குத்தர வந்தாள். நான் மறுத்து ஒரு டிஷ்யூ பேப்பர் வாங்கி பாயஸத்தை துடைத்தேன்.முதலில் பரிமாற வேண்டிய பருப்பும் நெய்யும் வரவே இல்லை. சாம்பார் மோர்க்குழம்பு ரசம் தயிர் வந்தது. இலையின் ஒரு மூலையில் வைத்திருந்த ஒரு சொட்டு பருப்புத்தான் பருப்பு நெய் என்று கடைசியில் தெரிந்துகொண்டேன். ஆனாலும் உணவகங்கள் இப்படி அறமில்லாமல் தொழில் செய்வதை சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. 

 அதன்பிறகு ஏனென்று கேட்கக் கூட ஆளில்லை. ஒவ்வொரு உணவுக்கும்  கைவிரல்கள் காய காத்திருக்க வேண்டி இருந்தது, சாதம் பரிமாறவும் என்ன வேண்டும் எனக்கேட்கவும் கூப்பிடு தூரத்தில் என்ன பலமைல் சுற்றளவில் கூட யாருமே இல்லை. களைத்துப்போன ஊழியர்கள் ஆங்காங்கே ஒளிந்து நின்று கொண்டார்கள் அப்படி தலையைக்காட்டின சிலரும் வட இந்தியர்கள் அவர்களுக்கு மோர்க்குழம்பையும் ரசத்தையும் பிரித்தறியத் தெரியவில்லை.

தருணின் தட்டில் கருத்து நெகிழ்ந்துபோன ஒரு பழம் இருந்தது அதை மாற்றித்தர சொன்னோம் எடுத்துக்கொண்டு போய் பதிலுக்கு பாதி தோலுரிந்த அழுக்கான ஒரு பழத்தை கொடுத்தார்கள் அதை அப்படியே வைத்துவிட்டான் தருண்.

கூடுதலாகத் துவரன், ஊறுகாய்கள் கேட்டபோது வெகுநேரம் கழித்து வந்து சின்ன ஸ்பூனில் கால்பாகம் வைத்தார்கள்.  பரிமாறியவருக்கு கையில் நரம்புத்தளர்ச்சியாக இருக்கலாம், பாத்திரத்துக்குள் விட்ட கையை அவரால் வெளியே எடுக்கவே முடியவில்லை பாவம்,

500 ரூபாய்க்கான உணவில் அளிக்கப்பட்டது 100 ரூபாய்க்கானது கூட இல்லை.  உணவின் அளவில் குறைவு இருந்தது கூடப் பரவாயில்லை,  பரிமாறுகையில் அன்பு இல்லாவிட்டாலும் போகிறது 500  ரூபாயில் 200 ரூபாய்க்கான அக்கறையாவது வேண்டுமல்லவா? அதுவும் இல்லை.

 நாங்கள் நொந்து போய் படி இறங்குகையில் கூட்டம் கூட்டமாக பலர் மேலே உணவுக்காக ஏறி வந்து கொண்டிருந்தார்கள் அய்யோ பாவம் என்று நினைத்துக் கொண்டோம். உண்மையில் அந்த உணவகத்தின் ஊழியர்கள் தான் ரொம்பவும் பாவம். ஓய்வே இல்லாமல் வேலை அன்று அவர்களுக்கெல்லாம்.

 கேரள சத்யாவை இப்படி மகா கேவலமாகச் சாப்பிட்ட இந்த ஓணம் மறக்க முடியாதது.அடுத்த ஓணம் வரை காத்திருக்காமல் சரண் நவம்பர் கடைசியில் இந்தியா வருகையில் சத்யாவை பிரமாதமாகச் சமைத்து எல்லாருமாகச் சாப்பிடனும் என்று கொதியாக இருந்தது. அந்த உணவகத்தின் முன்பாக  பூக்கோலமிட்டிருந்தார்கள். நால்வரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

ஓணம் விழாவை சாக்கிட்டு வசூலுக்காகத்தான் அந்த சத்யா என்னும் அறிவிப்பும் பூக்கோலமும், மற்றபடி நல்ல உணவை ஒரு சிறப்பான கலாச்சாரம் சார்ந்த பண்டிகையின் போது அளித்து அதன்பேரில் லாபம் என்னும் நல்ல நினைப்பெல்லாம் இல்லை அந்த உணவகத்துக்கு.

கவினையும் உடன் வந்த ஈழவேந்தனையும் (என்ன ஒரு அழகான கம்பீரமான பெயர் இல்லையா?) விருந்தினர் மாளிகையில் இறக்கி விட்டுவிட்டு நானும் தருணுமாக நாஞ்சில்நாடன் அவர்கள் கி ரா விருது பெறும் நிகழ்வுக்கு  மாலை கோவை பூசாகோ தொழில்நுட்பக்கல்லூரிக்கு செல்ல வேண்டி இருந்தது.  நானும் முகம் கழுவிக்கொள்ள நினைத்தேன். கோவையில் பல நண்பர்கள் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்றாலும் நான்  அவர்களின் வீடுகளுக்கு எப்போதுமே  அழைப்பின்றி செல்வதில்லை. 

ஒரு நல்ல காப்பி தேவைப்பட்டது. எனவே பூ சா கோ கல்லூரியிலிருந்து கோவை அன்னபூர்ணாவுக்கே சென்றோம் 4 மணிக்கே கார் பார்க்கிங் நிறைந்து விட்டிருந்தது. காத்திருந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் முன்பாகவே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்னபூர்ணாவில் ஓணம் சத்யா அளிக்கப்படும் என்று முன்னால் போர்டு வைத்திருந்தார்கள். எப்படி இது எங்கள் கவனத்துக்கு வராமல் போனது என்று வருந்தினேன்.நல்ல அருமையான சாப்பாட்டை  அனுபவத்தை தவற விட்டுவிட்டோம் என்று நொந்தேன்.

கூட்டம் இருந்தாலும் எங்களுக்கு மேசை இருந்தது. அன்னபூர்ணாவின் மிகச்சுத்தமாகப் பராமரிக்கப்படும் (எப்போதுமே) ஓய்வறையில் முகம் கழுவி புடவை திருத்தித் தலைவாரிக் கொண்டேன். அன்னபூர்ணாவுடனான உறவைக்காட்டிலும் நெருக்கமான உறவுகள் கோவையில் எனக்கில்லை.

எத்தனை முறை அன்னபூர்ணாவில் உணவுண்டிருக்கிறோம்?  தருண் மிகச்சிறியவனாக இருக்கையில் அன்னபூர்ணாவின் மினி இட்லி அவனுக்கு பிரியம். ஒரு முறை ஏர்போர்ட்டிலிருந்து பீப்பிள்ஸ் பார்க் வருகையில் இரவாகி விட்டிருந்தது. தருணுக்கு அப்போது தூக்கம் வந்தால் நிறுத்தாமல் தூங்கிக்கொண்டே சாப்பிடும் பழக்கம் இருந்தது. 

அன்று இரண்டு மினி இட்லி தட்டுக்களுக்குப் பிறகும் மினி இட்லி வேண்டும் என்று  தூக்கக்கலக்கத்தில் அடம்பிடித்து ’’மினி இட்லி மினி இட்லி’’ என்று கதறக்கதற அவனை இழுத்துக்கொண்டு வந்ததை அன்னபூர்ணாவில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் சிரித்துக்கொண்டே பார்த்தார்கள்,

வழக்கமாக எல்லா செமஸ்டரும் அரசு கலைக்கல்லூரியில் விடைத்தாள் திருத்தும்  பணிக்கு வரும்போதெல்லாமே அங்குதான் நான் மதிய உணவு சாப்பிடுவேன்.

அனேகமாகப் பல சுவையான உணவுகள் எந்தெந்த கிளைகளில் சாப்பிட்டிருக்கிறேன் என்று கூட நினைவிருக்கிறது. டவுன்ஹால் கிளையில் ஒருமுறை நன்கு அமைந்த அவியல். ஏர்போர்ட் கிளையில் பிரமாதமான சாம்பார், ஆர் எஸ் புரத்தில் மசாலா அப்பளம் இப்படி பட்டியல் நீளும். அவர்களின் தரம் சுவை சுத்தம் மட்டுமல்ல பரிமாறுவதில் இருக்கும் அக்கறையும் ஒழுங்கும்தான் உணவின் சுவையை கூட்டி அந்த அனுபவத்தை மகத்தானதாக்கி விடுகின்றது.

விஷ்ணுபுர விருது விழாக்களுக்கு எப்போதும் நான் அன்னபூர்ணாவில்தான் தங்குவது. அங்கிருந்து நடந்தே ராஜஸ்தானி சங்கத்திற்கு வந்துவிடலாம் என்பதுவும் நல்ல  காலை உணவும் முக்கிய காரணங்கள். 

அன்னபூர்ணா தொடங்கப்பட்டதிலிருந்து அங்கே மட்டும் காப்பி அருந்தும் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் வீட்டு துக்க நிகழ்வுக்குக் கூட அன்னபூர்ணாவிலிருந்துதான் காப்பி அத்தனை கூட்டத்துக்கும் வாங்கினார். அவர் வீட்டின் உணவு மேசை அருகில் அன்னபூர்ணாவில் இருப்பதைபோல் வாஷ்பேசின் வைக்கும் அளவுக்கு அன்னபூர்ணாவுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது.

அன்றும் நல்ல காப்பியும் சாம்பார் வடையும். அருகிலேயே நின்று ஒரு பெண் வேண்டியதை கவனித்து கேட்டுக் கொண்டு வந்து கொடுத்தார். 

 பிறகு விழா முடிந்து பின்னிரவில் கற்பகம் பைபாஸ் சாலையில் இருந்த 20 ,30 கார்கள் நின்றிருந்த ஒரு சாலையோர பிரம்மாண்டமான உணவகத்தில் இரவு உணவு. கார்கள் இருந்த அளவுக்கு  வாடிக்கையாளர்கள் இல்லை. பெரிய திரையில் குத்துப்பாட்டுக்கள் ஓடிக்கொண்டிருந்தன. குழந்தைகள் அதனருகில் ஒரே ஆட்டம். ஒரே ஒரு கன்னம் ஒட்டிய ஒல்லியான பையன் மட்டுமே இருந்தான் பரிமாற.

இரண்டு தோசை, ஒரு சாலட் சொல்லி 20 நிமிடத்தில் தோசையும், சாப்பிட்டு முடிந்த பின்னர் சாலடும் கொண்டு வந்தான். அவனைக் கோபித்துக்கொள்ளவே முடியாத படிக்கு பரிதாபகரமான தோற்றம், ஏறக்குறைய நல்லிரவு அப்போது.

ஒன்றும் சொல்லாமல் எழுந்தோம்.  அந்தக் கார்கள் எல்லாம் ஒருவேளை இஞ்சின் இல்லாமல் சும்மா ஒரு பார்வைக்காக கூட்டம் வரும் உணவகமென்று காட்டும் பொருட்டு உரிமையளர்களால் வாங்கி நிற்க வைக்கப்பட்டிருக்குமோ? இந்த உணவுக்கு எப்படி இத்தனைபேர் வா முடியும் அந்த அகாலத்தில்?

வளர்ந்து கொண்டிருந்த நிலவைப் பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்கையில் அதிகாலையாகிவிட்டிருந்தது. அன்றைய நாள் நல்ல சூடும் மெல்லிய  கசப்பும் சரியான இனிப்புமாக இருந்த அன்னபூர்ணாவின் காப்பியாலாகி இருந்தது.