துறைத்தலைவரான பிறகு முன்பு போல வாரத்துக்கு 16 மணி நேர வகுப்புகள் இல்லை என்பது பெரும் குறையாக இருந்தது. இப்போது ஒரு பேராசிரியை 15 நாட்கள் பயிற்சிக்குச் சென்றிருப்பதால் முடிந்த வரை அவரின் வகுப்புக்களை மகிழ்ச்சியுடன் நான் எடுத்துக் கொள்கிறேன். 

இன்று காலை 2 மணி நேரம் தொடர்ந்து. பாலாடைக்கட்டி உருவாக்கத்தில் நுண்ணுயிரிகளின் பங்கு, பாலருந்தும் இளம் கன்றுகளின் இரைப்பையின் நான்காவது சுவற்றிலிருந்து எடுக்கப்படும் ரென்னெட், கூடவே பால் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் என்று சுவாரஸ்யமான வகுப்பு. 

வகுப்பு முடிந்து ரெக்கார்டுகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கையில் தமிழ்த்துறை பேராசிரியை புஷ்பராணி அழைத்திருந்தாள். என்னைப் பார்க்க வர வேண்டும் என்றாள்  வரச்சொன்னேன். கையில் ஒரு லஞ்ச் பேக்குடன் வந்து சீம்பால் இருக்கு என்று கொடுத்தாள். 

இது  எப்படி தற்செயலாகும்? என்று நானே என்னைக் கேட்டுக்கொண்டேன். பால்பொருட்களை குறித்து வகுப்பில் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ எனக்குப் பிரியமான பால்பொருளை ஒரு பெண் அன்புடன் கொண்டு வந்து தருகிறாள்.

  எப்போதோ ஒரு முறை என் வாட்ஸ் ஆப் நிலைத் தகவலில் அது எனக்குப் பிரியமானது என்பதை தெரிந்து கொண்ட பின்னர் எப்போது  அவர்களது  வீட்டில் கன்று பிறந்தாலும் எனக்குச் சீம்பால் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருக்கிறாள்.  என்ன கன்று? என்று கேட்டேன் ’’தெரியவில்லை கன்று மாமாவின் தோட்டத்தில் பிறந்திருக்கிறது’’ என்றாள்.  நான் அந்தப் பெண்ணுக்கு எதுவுமே செய்ததில்லை என்னவோ இப்படி என்மீது அன்பும் மரியாதையுமாய் இருக்கிறாள்.

புஷ்பா இரு சிறுமகன்களின் தாய். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்றாள்.

மதியம் கல்லூரி அலுவலகத்தில்  நான் ஒருவரால் சற்று மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டேன். என்னை அப்படி அவரல்ல கல்லூரியிலும் கல்லூரிக்கு வெளியிலும் அப்படி யாரும் நடத்தவேண்டியதே இல்லை. விஷயம்  கல்விக் கட்டணம் கட்ட முடியாத சில மாணவர்களின் நலன் குறித்தென்பதாலும் இப்போதெல்லாம் நான்  சமநிலை இழப்பதில்லை (usually but not always) என்பதாலும் பதிலுக்கு நான் எதிர்வினையாற்றவில்லை. 

அப்படி நான் நடத்தபட்டபோது ஆசிரியரல்லாப் பணியாளர் ஒருவரும் மூன்று பேராசிரியர்களும் அந்த அறையில் இருந்தனர். அதன் பொருட்டே நான் அப்படி நடத்தப்பட்டேன் என்பதையும் நான் அறிவேன்.ஆனால் எனக்குத் துளியும் கோபமோ பதட்டமோ எரிச்சலோ ஏன் வருத்தம் கூட உண்டாகவில்லை.  என் முயற்சியில் நான் சற்றும் மனம் தளரவில்லை. மேலும் என்னை இந்தக்கல்லூரியில் இருப்போர் 20 வருடங்களுக்கும் மேலாக அறிவார்கள். 

’’அப்பாடா! லோகமாதேவி அவமானப்படுத்தப்பட்டாள்’’ என்று அவர்கள் யாரும் மகிழ்ந்திருக்க மாட்டார்கள் என்றும் நான் அறிவேன் .என்னைக் குறித்து எனக்குப் பின்னால் பேச இத்தனை வருடங்களில் ஏதுமில்லை இனியும் இருக்காது என்பதால் நான் அதிலிருந்து உடனே மீண்டு வந்தேன்

என்னிடம் ஒன்று அளிக்கப்படுகையில்  அதை நான் வாங்கிக்கொண்டால்தானே அது என்னுடையதாகும்? அது என்னை வந்து சேரவே இல்லை, மேலும் நான் கல்லூரியில் ஆசிரியை என்னும்  எனக்கான இடத்தை மிகக் கவனமுடன் கையாளுபவள். ஒருபோதும் பிறர் முன்னிலையில் குரலை உயர்த்துவதோ அகம் சிதறுவதோ இல்லை மாணவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்பது என் கவனத்தில் எப்போதும் இருக்கும். 

அவரிடமிருந்து வந்த   ’’வீசி எறிந்துவிடுவேன்’’ என்று சொல்லப்பட்டது மிகவும் அதிகமாகிப்போன ஒன்று  எனவே அதைச்சொல்லிவிட்டு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துத் தலையை ஒரு காகிதத்தில் எழுதுவதுபோலக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தார். நான் எந்தப் பதட்டமும் இல்லாமல் அவரிடம் ’’அப்போ நாளைக்கு வரட்டுமா?’’ என்றேன். கவனிக்காதவர் போலிருந்தார். மீண்டும் ’’அப்போ நான் நாளைக்கு வரட்டுமா?’’ என்று பலமாகக் கேட்டு அவர் குனிந்தபடியே சரி என்பதுபோலத் தலையாட்டிய பின்னரே வெளியே வந்தேன்.அதே விஷயத்துக்காக நாளையும் நிச்சயமாகச் செல்வேன்.

வீட்டுக்கு வரும் வழியில் இப்படி சற்றே வேறுபட்ட அன்றாடங்களின்போது  வழக்கமாகச் செய்வதுபோல  random ஆக ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்து  வெண்முரசை வாசித்தேன்

கிராதத்தின் 64 -வது அத்தியாயம்.

‘’உண்மை சினம் கொள்ளவைக்கிறது. நம்மால் மாற்றமுடியாத உண்மையோ பெருஞ்சினம் கொள்ளவைக்கிறது. ஏனெனில் நாமும் ஒரு கண்ணியென்றிருக்கும் இப்புடவி நெசவின் இரக்கமற்ற விரிவை அவை நமக்கு காட்டுகின்றன. தெய்வங்களும் அதில் ஒரு கண்ணியே. சினம் நிலை அழியச்செய்கிறது. நிலையழிவோர் முதலில் பிறழ்வது சொல்லில். சொல்லென்பது சித்தம் ஒவ்வொரு கணமும் கொள்ளும் கயிற்று நடை. 

ஒருபக்கம் அகமெனும் முடிவிலியின் ஆழம். மறுபக்கம் புறமென்றாகி நின்றிருக்கும் தகவுகளின் வெளி. செவிகள் சொற்களை அள்ளி முடைந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் வானத்தில் வந்து விழுந்து திகைக்கின்றன சொற்பொருட்கள். ஒருமுறை  சித்தம் அடிபிழைத்தால் சொல் ஓராயிரம் முறை தவறுகிறது’’ என்றிருந்த பத்தியை வாசித்தேன்.

வீட்டுக்கு வந்து வழக்கமான வேலைகள் மாலை நடை குளியல் விளக்கேற்றுதல் எல்லாம் முடித்துப் புஷ்பா கொடுத்த பையைத் திறந்தேன்.  இனிப்பில்லாமல் வேகவைக்கப்பட்ட சீம்பால், அதற்குத் தனித்தனியெ வெள்ளை மற்றும் கரும்புச்சர்க்கரை இரு சிறு டப்பாக்களில், மற்றொரு கிண்ணத்தில் கொங்கு பிரியாணியான அரிசிபருப்பு சாப்பாடும் ஆகியவை இருந்தன. ஏன் சர்க்கரையைக் கூட அதுவும் இரண்டு விதங்களில் புஷ்பா கொண்டு வந்தாள்? அத்தனை அன்பும் மரியாதையும் அவள் கொண்டிருக்கிறாள்.  எப்போதாவது  வளாகத்தில் சந்தித்தால் புன்னகைப்பதை தவிர புஷ்பாவுக்கு நான் எதுவுமே செய்ததில்லை.

நான் இன்று அந்த அறையில் பதிலுக்குக் குரல் உயர்த்தாமல் வந்ததற்கு காரணம் நான் என்மீதும் அதே அளவுக்கு மரியாதையும் அன்பும் கொண்டிருக்கிறேன் எனபதால்தான்.

சமநிலை இழப்பவரகளை குனிந்து பார்க்கும் உயரத்தில் நான் இல்லாவிடினும் நிச்சயமாக விலகி நின்று பார்க்கும் தொலைவில்தான் இருக்கிறேன் என்பதால் எனக்குச் தொடர்பே  இல்லாத சங்கடங்கள் என்னைத் தொடுவதே இல்லை.

இரவுச் சமையலிலிருந்து புஷ்பா என்னை விடுவித்து விட்டாள். ஒரு சிறு கரண்டியில் கரும்புச்சர்க்கரையை கலந்து சீம்பாலை வாயிலிட்டேன். அன்பின் சுவை அபாரமாக இருந்தது.

புஷ்பாவுக்கு அன்பு):