லோகமாதேவியின் பதிவுகள்

Month: December 2024

இளமை!

காலையில் கல்லூரியின் அறிவியல் ஆய்வகமொன்றின்  முன்பிருந்த இடைநாழியில் ஓர் இளைஞனும், யுவதியும்.

அன்றைய செய்முறைத்தேர்வுக்காக தூண்களின் இடையில் இருந்த திட்டில் அமர்ந்து மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த அவளிடம் அவன் ’’ப்ளீஸ் ரெகார்டு  எழுதிக் கொடுடி’’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்  அவள் எரிச்சலுடன் ’’ஆமா நீ ஊர் சுத்தப்போவே நான் உட்கார்ந்து 22 பக்கம் இப்போ எழுதிதரனுமாக்கும் போடா’’ என்றாள். 

அவன் பத்தெட்டுக்கள் பின்புறமாகவே நடந்துசென்று, மண்டியிட்டு கைகளை அகலமாக விரித்தபடி ‘’ வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச்சேரும்’’ என்று பாடியபடி முன்னே வந்து மீண்டும் மண்டியிட்டு கைகளை பக்கவாட்டில்  எம் ஜி யார்போல  வீசிக்காண்பித்தான். அவள் சிரித்தபடி  ’’எருமை மாடு, எழுதித்தொலைக்கறேன்’’ என்றாள்

2024-ல் இருந்து 2025-ற்கு!

நாளை புதிய ஆண்டு பிறக்கவிருக்கிறது. இந்த 2024 எனக்கு  வழக்கத்தை விடச் சற்று மாறுதலான ஆண்டாக இருந்தது. சரண் மேற்படிப்பை ஐரோப்பாவில் முடித்துவிட்டு அங்கேயே அரசுப் பணியில் இணைந்தான்.

டேராடூனில் காட்டியல் முடித்ததும் இந்திய வனத்துறைத் தேர்வு எழுத வேண்டிய தருண்,  பெங்களூருவில்  கிறைஸ்ட் பல்கலைக்கழகத்தில் MBA சேர்ந்தான். முதுகலை முடித்து  ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்து விட்டு பின்னர் போட்டித்தேர்வுக்கு தயாராவதாகச் சொல்கிறான். எனக்கு அவர்களின் எந்த முடிவிலும் மாற்றுக்கருத்தில்லை. 

தருணுக்கு பிரியமான பைக் வாங்கியது, வீட்டு முன்பாக நண்பர்களுடன் அமர்ந்து பேசவும் சாப்பிடவுமாக ஒரு அறை எழுப்பியது,  கடும் கோடையை தாங்கமுடியாமல் படுக்கை அறைகளில் ஏசி அமைத்தது என்று சில மாற்றங்கள் வீட்டில். 

எனவே மற்றுமோர் தனித்துக்கழித்த ஆண்டு இதுவும். ஆனால் நிறைய எழுதினேன்.  சொல்வனத்தில், அகழில், குருகுவில், புழுதியில், ஜெயமோகன் அவர்களின் தளத்தில் கட்டுரைகள் வந்தன.  எல்லாக்கட்டுரைகளுமே எனக்கு முக்கியமானது தான் என்றாலும் விலக்கப்பட்ட கனி, கொகெய்ன், பெனிசிலின், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை. அதிக காலம் எடுத்துக் கொண்டு தரவுகளை சேகரித்து எழுதப்பட்டவை அவை.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, தியடோர் பாஸ்கரன் அவர்களைக் குறித்தது. அவர் தனக்கு அக்கட்டுரை மிகவும் பிடித்ததாகக் கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்தது. எப்படி ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகியது என்னும் கட்டுரைக்கும் ஏறக்குறைய 6 மாதம் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். கொகெயின் கட்டுரைக்காக cocainenomics குறித்து நான் வாசித்தறிந்ததுபோல கடத்தல்காரர்களும் வாசித்திருக்க மாட்டார்கள்.அப்படித்தான் பெனிசிலினும்.

ஆனந்தசந்திரிகைக்கு எழுதுவதை  இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்திவிட்டேன். பல வருடங்களாக அதில் சிறு சிறு தாவரவியல் கட்டுரைகளை மாதம் இரண்டு என எழுதிவந்தேன் எனினும் ஒரே ஒரு எதிர்வினையோ, கண்டனமோ, பாராட்டோ அல்லது வாசித்தேன் என்று ஒரு வரியோ  கடைசி வரை வரவே இல்லை. அதைக்குறித்து நான் குறைப்பட்டுக்கொண்டும் எந்த பலனும் இல்லை. ஒவ்வொரு கட்டுரையுமே தமிழில் அதுவரை இல்லாத ஏதோ ஒரு புதிய தாவர அறிவியல் விஷயத்தை சொல்வதுதான் ஒவ்வொன்றுக்கும் நான் 10 நாட்கள் வரை மெனெக்கெட்டுத்தான் எழுதினேன். ஒரு வழிப்பாதையில் தொடர்ந்து செல்ல முடியாமல் அதிலிருந்து விலகினேன். என் கட்டுரைகளை வாசிக்கிறார்களா இல்லையா என்று கூடத்தெரியாமல் எத்தனை ஆண்டு தொடர்ந்து எழுத முடியும்?

தமிழ் விக்கி வேலைகளை நாள் தவறாமல் விரும்பிச்செய்கிறேன்.கட்டுரைகளைப் பங்களிப்பதில்லை ஆனால் திருத்தி ஃபைனலைஸ் செய்கிறேன். எப்படியும் ஒரு நாளைக்கு 10 பக்கம் பார்த்துவிடுகிறேன், ஒருவேளை விடுபட்டால் மறுநாள் சேர்த்துப் பார்த்துவிடுகிறேன்.

நிறைய வாசிக்காமல் போனதும் இந்த ஆண்டுதான். காரணமாக நேரமின்மையைத்தான் சொல்லவேண்டி இருக்கிறது. வழக்கம் போல அதிகாலை 1 மணி நேரம் ஜெ வின் தளம், வெண்முரசின் சில அத்தியாயங்களின் மீள் வாசிப்பு, தலைப்புச்செய்திகளை, விகடன் ஆன்லைன் வாசிப்பதெல்லாம் அப்படியே மாற்றமில்லாமல் தொடர்ந்தது என்றாலும் முந்தின ஆண்டைப்போல பிறவற்றை அதிகம் வாசிக்கவில்லை. 

இன்னும் பிரித்துப்பார்க்காத நூல்கள் 20-க்கு மேல் காத்திருக்கின்றன. கல்லூரியில் துறைத்தலைவரான பின்னர் கடும் வேலைப்பளு, கூடவே இந்த ஆண்டு தேசிய தரச்சான்றிதழ் வாங்கி ஆகவேண்டிய நிர்பந்தமும் கூடச் சேர்ந்து தாளமுடியாத மன அழுத்தம் இருந்தது.

நாளிதழ்களில் வேலைப்பளுவினால் தற்கொலை செய்துகொண்டவர்களைக் குறித்து வாசிக்கையில் ”இதுக்கெல்லாமா செத்துப்போறது ’’ என்று நினைத்ததுண்டு ஆனால் தலைவலியும் காய்ச்சலும் எனக்கும் வந்தபோதுதான் கஷ்டம் புரிந்தது. என்னை அதிலிருந்து மீட்டது இந்த வீட்டின் பசுமைதான்.

அதிகம் பயணம் செய்த ஆண்டும் 2024- தான். சென்னைக்கும் பங்களூருவிற்கும் வெள்ளிமலைக்கும், குபேர யாகத்துக்காக திருவண்ணாமலை, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்காட்டில் வாரக்கணக்கில் தங்கள், அதற்கான பள்ளிக்கல்வித்துறை நடத்திய கூடுகைகளுக்காக சென்னை, ஜெ வின் கட்டண உரை, மாணவர்களுடன் தாவரவியல் சுற்றுலாவிற்கு ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, NSS-ல் பேச கிராமங்களுக்குச்சென்றேன்.

ஒரு குக்கிராமத்தில் அந்திமயங்கிய நேரத்தில் மாணவர்களுடன் சேர்ந்து காலில் வயல்சேற்றோடு திட்டுக்களில் அமர்ந்திருந்த கிராமத்துப்பெரியவர்களுக்கும் முறத்தில் வெங்காயம் உரித்துக்கொண்டு கீரை ஆய்ந்துகொண்டு அமர்ந்திருந்த பெண்களுக்கும் வேப்பமரத்தடியில் இளங்காற்றில் பார்வை மங்கும் நேரம் வரையிலும் ஸ்ரீவள்ளி ஆலோலம் பாடி தினைப்புனம் காத்ததிலிருந்து தொடங்கி சிறுதானியங்கள் குறித்துப்பேசி ஒரு எவெர்சில்வர் டிஃபன் பாக்ஸ் பரிசாக வாங்கி வந்தது நல்ல அனுபவமாக இருந்தது.

அறக்கல்வி வகுப்புக்களுக்காக திருப்பூரும் ஈரோடும் கோவையுமாக தொடர்ந்து அயராமல் பயணித்துக்கொண்டிருந்தேன்.  வள்ளியின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க ஹைதராபாத் அப்படியே தீபக் குடும்பத்தினருடன் ஒரு ஆந்திர சுற்றுலா, சென்னை குமரகுருபரன் விருது, ஈரோட்டில் தூரன் விருது என எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டேன்.  பெருந்தலையூர் வெற்றி விழாவிலும், சென்னிமலை நூற்பு விழாவிலும் கலந்து கொண்டேன். கொடை மடம் வெளியீட்டு விழாவிற்கு சாம்ராஜ் அழைத்ததால் மீண்டும்சென்னை சென்றேன். காலச்சுவடு விருந்தினராக இரண்டு வாரத்தங்கலுக்கு ஆனைகட்டிக்கும் சென்று வந்தேன். 12 வருட இடைவெளியில் மலர்ந்திருந்த குறிஞ்சிக் காட்டைப்பார்க்க கோத்தகிரிக்குச்சென்றது இவ்வாண்டின் பெருமிதங்களில் ஒன்று.

பணி மேம்பாட்டு நிதி இன்னுமே எங்களுக்கு வரவில்லை அதன் பொருட்டு கோவையிலும் சென்னையிலும் உண்ணாவிரதம், போராட்டம் என பயணித்தேன். கல்லூரியின் ஒரு திட்டவரைவை சமர்ப்பிக்கும் பொருட்டு புதுதில்லிக்கும், ராஜேந்திரன் அவர்களின் சென்னை கானாத்தூர் கடற்கரை விடுதிக்கு வெண்ணிலா குடும்பத்தாருடனும் சென்றேன்.

இவ்வாண்டில் இறுதியாக கோவை விஷ்ணுபுரம் விழாவிலிருந்து புதுக்காரில் மகன்கள், சாம்பவியுடன் நால்வருமாக சென்னைக்குச்சென்றது பேரனுபவமாக இருந்தது. மாற்றி மாற்றி பிடித்த பாடல்களைக்கேட்டுக்கொண்டு நிறுத்தி நிறுத்தி வழியெல்லாம் சாபிட்டுக்கொண்டு பயணித்தோம்.

நீரதிகாரத்தின் நூரதிகாரவிழாவில் பேசவும் கோபாலகிருஷ்ணன் அவர்களின் வேங்கை வனம் நாவல் குறித்து பேசவும் மீண்டும் மீண்டும் சென்னை சென்று கொண்டிருந்தேன். நீரதிகாரத்தைக் குறித்துப் பேச விஜயா பதிப்பக அண்ணாச்சி ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கு மேலூருக்குப் போய்ப் பேசினேன்.

மீண்டும் அகரமுதவனின் போதமும் காணாத போதம் நூல் வெளியீட்டுக்காக திருவண்ணாமலை, சிறுதானியக்கருத்தரங்கிற்கு அழைப்பாளராக குன்னூர் ப்ராவிடன்ஸ் கல்லூரி , திருமதி கிருஷ்ணம்மாள் ஜகன்னாதனை சந்திக்க திண்டுக்கல் என்று பயணித்துக்கொண்டே இருந்தேன்.

வழக்கம் போல கோவில்களுக்கும் போனேன். இலுப்பை நகரத்திற்கும் ஆண்டியகவுண்டனூருக்கும் நண்பர் ஒருவரின் நிலத்தை பார்ப்பதற்கும், அங்கு விளையும் காய்கறிப் பயிர்களையும் வெட்டுமரக்கன்றுகளையும் மேற்பார்வையிடவும் அடிக்கடி பயணித்துக்கொண்டு இருந்தேன்.

கேரளாவுக்கு தருணுடன் வடக்குநாதர் கோயிலுக்கும் பாலக்காடு தோனி அருவிக்குமாக  சிலமுறை சென்று வந்தேன். திருச்சிசெயிண்ட் ஜோஸஃப் கல்லூரிக்கு கல்லூரி விஷயமாக சென்றிருந்தேன்.

இத்தனைக்கும் இப்போது கால் வலி அதிகமாகி விட்டிருக்கிறது. 22 ஆண்டுகள் வாரம் 16 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டு பணி செய்தது, மாடியில் இருக்கும் துறைக்கும் கீழ்த்தளத்தில் இருக்கும் வகுப்பறைகளுக்குமாக எத்தனை ஏறி இறங்கல்கள்? எந்த ஒத்தாசையும் இல்லாமல் வீட்டில் எத்தனை நடை? தோட்டப் பராமரிப்புக்கு எத்தனை அலைச்சல்?  கால்களும் கைகளும் ஓய்ந்து போயிருக்கக்கூடும். 

இப்போதெல்லாம் கரும்பலகையில் சித்திரங்கள் வரைகையில் அவ்வப்போது கையை கீழே ஓய்வாக வைத்துக் கொண்டு பின்னர் மீண்டும் வரைகிறேன் ஆனாலும் விடாப்பிடியாக மகிழ்வுடன் பயணித்தேன், இருள் படிந்திருந்த இரு தசாப்தங்களுக்கு பிறகு தெரிந்த வெளிச்சமென்பதால் எதையும் நினைக்காமல் சென்று கொண்டே இருந்தேன்.

அதுபோலவே தொடர்ந்து செய்துகொண்டிருந்தது தாவரவியல் தொடர்பான வாசித்தல். அதில் தொய்வே இல்லை. தேடித்தேடி வாசித்துக் கொண்டேதான் இருக்கிறேன். இலக்கிய வாசிப்பில்தான் சோடை போய் விட்டேன்.

கற்றுக்கொள்வதின் ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. புதிது புதுதாக கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

நூற்றாண்டுகளாக உள்ளங்கையில் இட்டுக்கொள்ளும் நடுவில் சற்றுப்பெரிதான வட்டமொன்றும் சுற்றிலும் குட்டிக்குட்டி வட்டங்களுமான மருதாணி வடிவத்தின் பெயர் இட்லி தோசை வடிவமென்பதை இந்த வருடம்தான் தீக்‌ஷிதாவிடமிருந்து அறிந்துகொண்டேன், என்னிடமிருந்து பலரும் .

தினமும் பத்துக்கு குறையாமல் தாவரங்களை இனம் காண கேட்டு வரும் புகைப்படங்களில் இருப்பவற்றை அடையாளம் கண்டு சொல்கிறேன் அச்செயலின் மூலம் புதிதாக கற்றுக் கொண்டுமிருக்கிறேன்.

இந்த வருடம் மட்டும் 6 நூல்கள் வெளியாகி இருக்கின்றன.மேலும் மூன்று விரைவில் வரவிருக்கிறது,

NCBH  பிரசுரமாக 100 விஞ்ஞானிகளை குறித்து 100 எழுத்தாளர்கள் எழுதும் 100 புத்தகங்களில் ஒன்றாக அதிகம் பேர் அறிந்திருக்காத சூழியல் துறையை தன் சித்திரங்களால் தோற்றுவித்த மரியாசிபில்லாவைக்குறித்த நூல் வெளியானது.

காலச்சுவடுக்காக hidden life of trees என்னும் பீட்டர் ஜெர்மானிய மொழியில் எழுதி ஆங்கிலமாக்கப்பட்டதை தமிழில் மொழிபெயர்த்தேன். சவாலான மொழியாக்கமாக இருந்தது ஏனெனில் மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததிலேயே பல விடுபடல்கள் இருந்தன மேலும் அந்த ஆங்கிலமும் மிகப்பழையது. சொன்ன தேதிக்குள் கொடுக்க ராத்திரி பகலாக எழுதிக்கொண்டிருந்தேன். இந்த டிசம்பர் புத்தகக்கண்காட்சிக்கு அதை காலச்சுவடு கொண்டு வராமல் தாமதமானதில் எனக்கு வருத்தமுண்டு.  மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தில் வானவில் மரம் வெளியானது . இந்திய பூர்வீக மரங்களை குறித்த முதல் பாக நூலும் நுண்ணுயிருலகு என்னும் நூலும் விரைவில் வரவிருக்கிறது.

தாவரவியல் அகராதி பாதிக்கிணறு வரை வந்திருக்கிறது. 

என் பிறந்த நாள் பரிசாக வெண்ணிலா அகநியில் விலக்கப்பட்ட கனி. அந்தரத்தாமரை மற்றும் முத்தச்சிறுகிளை ஆகிய மூன்று நூல்களை பிப்ரவரி 12 அன்று வெளியிட்டார்கள். 

என் ஒரு கட்டுரைத் தொகுப்பை  பிரசுரிப்பதாகக் கேட்டு வாங்கி 2 வருடங்களுக்கு மேல் வைத்திருந்து பல திருத்தங்கள் செய்து, திருத்தம் செய்கையில் நுட்பமாக அவமதித்து, அலைக்கழித்த பின்னர் லே அவுட் ஆர்டிஸ்ட் கட்டுரைத் தொகுப்புக்கு கிடைக்கவில்லை என்னும் காரணம் சொல்லி ஒரு பதிப்பக மேற்பார்வையாளர் திரும்பக் கொடுத்தார். உண்மையிலேயே புண்பட்டிருந்தேன்.

அது திரும்பக் கொடுக்கப்பட்டு மிகச்சரியாக ஒரே மாதத்தில் அகநி மிக அழகான நூலாக அதை வெளியிட்டது. வெண்ணிலா அப்படி ஒரு இக்கட்டான துயரான நேரத்தில்  இடுக்கண் களைந்தார்.

வெண்ணிலாவுக்கு அளிக்கப்பட்ட கண்ணதாசன் விருதையும் லட்சரூபாய் பரிசுத்தொகையையும் அவருக்கு பதிலாக நான் சென்று கோவையில் ஒரு மேடையில் வாங்கியபோது ’’என்னையும் வெண்ணிலாவையும் பலர் சகோதரிகள் என்று நினைக்கிறார்கள் ஒருவேளை எங்கள் தோழமையின அடர்த்தி அப்படி சகோதரிகள் என்னும் சாயலை அளித்திருக்கலாம்’’என்று சொன்னேன். வெண்ணிலாவுக்கு அன்பும் நன்றியும். 

அகநியில் பள்ளிக்குழந்தைகளுக்கான சங்க இலக்கிய தாவரங்கள் குறித்த நூல் முழுமையடைந்தும் பல காரணங்களால் அது வெளியாகாமல் இருக்கிறது.

அடுத்து லின்னேயஸ், மரியா சிபில்லா, கார்வர், டைபாய்டு மேரி ஃபென்னி ஹெஸ்ஸ என்று அறிவியலில் பெரும் பங்காற்றிய ஆளுமைகளைக் குறித்து ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கிறேன்

 பயணித்த இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கிடைத்த நல்ல உணவையும் சொல்ல வேண்டும். ஈரோடு ஏட்ரியம் விடுதியின் அசைவ உணவு, பொள்ளாச்சியில் ஒரு சிறு மெஸ்ஸின் அரிசி பருப்பு சாதம், கணக்கம்பட்டி சித்தர் கோவிலுக்கு முதன் முறையாக சென்றபோது கோவை தொழிலதிபர் திரு பாலசுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்தினரோடு அவர்களின் விலை உயர்ந்த காரில் அமர்ந்து, பொழியும் மழையை பார்த்தபடி சாப்பிட்ட ஒரு மதிய உணவு, அகரமுதல்வன் குடும்பத்துடன் கடும் மழைபொழிந்த இடியும் மின்னலுமாக வானம் அதிர்ந்துகொண்டிருந்த ஒரு இரவில் பண்ணை வீடொன்றில் நான் சமைத்து அனைவரும் சாப்பிட்ட கோதுமை உப்புமா, என்னை உட்கார வைத்து தருண் சுட்டுத்தந்த தோசைகள், சென்னை சில்க்ஸின் (சென்னைக்கிளையில்) பணியாளர்களுடன் சாப்பிட்ட மதிய உணவில் இருந்த அவரைப்பருப்பில் கலவைக்காய் போட்ட சாம்பார், நாவழிபாட்டுக்கு கேரளா செல்லும் வழியில் பொன் துணுக்குகளாக சிதறிக்கிடந்த புளியஇலைகளின் மீது போர்வை விரித்தமர்ந்து சாப்பிட்ட தக்காளி சாதமும், மோர் மிளகாயுடன் தயிர்சாதமும் என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது, மறக்கவே முடியாமல்.

சந்தித்தவர்களில் பல ஆளுமைகள் மிக முக்கியமானவர்களும் கவனம் கோருபவர்களுமாக இருந்தார்கள். அமெரிக்காவிலிருந்து வந்து பெருந்தலையூரில் கட்டியணைத்துக்கொண்டு அன்பு காட்டிய ஜமீலா, முதன்முறை சந்தித்து அன்றிரவே  அவர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டு மாடியில் விடிய விடிய பேசிக்கொண்டே சொந்த சகோதரியை போலாகிவிட்டிருக்கும் கலைவாணி, அகரமுதல்வனின் மனைவி பிரபா, குறிஞ்சி மலர்வை காண உதவிய காட்டிலாகா அதிகாரி ஆதவன், கடவுள் பிசாசு நிலம் அளித்த அகரமுதல்வன்,  திருவண்ணாமலையில் சந்தித்த திரு குறிஞ்சி செல்வம், அன்னம் கட்டுரைக்குப்பிறகு அணுக்கமான சென்னிமலை மதி, குளித்தலை சண்முகம், சிவாத்மா, இந்தியாவிற்கும் ஃப்ரான்ஸுக்குமாக மாறிமாறி பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ், உயிரியல் படிப்பிற்காக வீட்டுக்கு சிலநாட்கள் வந்த ரிதி, சக்திபாலசுப்ரமணியன், மலர்களைப்பற்றி மணிக்கணக்கில் பேசும் தமிழ்க்குமரன், அலகில் அலகு வேணு, முதல் வாசகர்களான டெய்ஸியும் சக்திவேலும், நன்னிலம் ராஜேஷ், அரங்கசாமியின் மனைவி சுமதி……

இவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் என் அகம் நிறைத்தவர்கள்.

இவர்களில் ரிதி நான் இதுவரை பார்த்த பெண்களில் ஆகச்சிறந்த பேரழகி.

பொதுவாக இந்தியாவில் மங்களூரில் தான் அழகிகள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ரிதி, மங்களூரை பூர்வீகமாகக்கொண்ட எங்கள் குடும்ப மருத்துவர் வசந்த் அவர்களின் மகள். அழகிற்கு இலக்கணம் என்றுதான் அவளைப் பார்க்கையில் நினைத்துக் கொள்வேன். 

மான் நிறத்தில், எந்த ஒப்பனையும் இல்லாமல் பவுடர் பூச்சு, பொட்டு, காது கழுத்தில் அணிகலன்கள், பளிச்சென்று தெரியும் உடைகள் என எதுவுமே இல்லாமல் குளித்துவிட்டு ஈரத்தலையுடன் எளிய டி-சர்டும் செளகரியமான ஒரு பருத்தி கால்ச் சட்டையுமாக இருக்கையில் ஒருபெண் அத்தனை அழகாக இருக்க முடியுமென்று ரிதியை பார்க்கு முன்னர் நானும் நினைத்திருக்கவில்லை.இனி ரிதியைக்காட்டிலும் அழகியொருத்தியை நான் பார்க்கப் போவதில்லை.

அப்படியே என்னை புகைப்படமெடுத்துத்தர வந்த சுதந்திரா.நானும் சுதந்திராவும் ஒரே தேதியில் பிறந்திருக்கிறோம். சுதந்திரா பிறந்த போது அவளைப்பார்க்க நான் சரணையும் தருணையும் எடுத்துக்கொண்டு போயிருந்தேன் கட்டிலில் கால்களை உதைத்துக்கொண்டு மேலே விதானத்தைப் பார்த்துக்கொண்டு சமத்தாகப்படுத்திருந்த அந்தக் குழந்தை இன்று மிக நளினமான, மிகப்பொருத்தமான உடைகளுடன்  கண்ணியமான உடல்மொழியுடன் இருக்கிற அபாரமான புகைப்பட கலைஞராகி விட்டிருக்கிறாள். very well mannered girl.  ஒரு நாளைக்கு ஐம்பதாயிரத்துக்கு குறையாமல் சம்பாதிக்கிறாள். விரைவில் மேற்படிப்புக்கு இத்தாலி செல்லவிருக்கிறாள்

சரணும் தருணும் வளர்ந்து  தோள் பெருத்து, நெஞ்சு விரிந்து ஆளாகிவிட்டனர். சரண் நான் மகிழ்ந்து பார்த்த நிலையிலிருந்து அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறான். நான் 22 வருட பணிக்குப் பிறகு வாங்கும் சம்பளத்தை விட 4 மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறான்.  

 வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை தேவைப்படுவோருக்கு முதல் மாதத்திலிருந்து செலவழிக்கிறான். தாவரவியல் துறையில் 5 எளிய பின்புலம் கொண்ட  மாணவர்களின்  படிப்புச் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறான். வலி நிவாரணச் சிகிச்சை பெறுவோரின் மருத்துவ உதவிக்கும், பசித்தவர்களுக்கு உணவிடவும்  கணிசமான தொகையை தொடர்ந்து அளிக்கிறான். 

தருணுக்கு கல்லூரிப்படிப்புக்கு (கல்விக்கட்டணத்தைத் தவிர்த்து)  வேண்டியதை  ஒரு தந்தையின் இடத்திலிருந்து  பொறுப்புடன் செய்கிறான்.எனக்கென்று ஒரு காரை வாங்கிக் கொடுத்திருக்கிறான். லோகமாதேவி எனப் பெயர் எழுதிய அந்தக்காரில் மிகப்பெருமையாக கல்லூரிக்குச் செல்கிறேன்.

துறையில் ஒரு விதை வங்கி துவங்கவேண்டுமென்னும் என் ஆவலை கல்லூரி நிர்வாகம் பல விண்ணப்பங்களுக்குப் பிறகும் கண்டுகொள்ளவில்லை. சரண் எனக்காக பெருந்தொகை கொடுத்து அதை ஏற்பாடு செய்து கொடுத்தான். கல்லூரியில் அளிக்கப்பட்டிருக்கும்  அரதப்பழசான கணினிக்கு பதிலாக புதிதாக நவீனமான ஒன்றை என் சொந்த உபயோகத்திற்கெனெ வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

அவனது வாசிப்பின் விஸ்தீரணத்தை திகைப்புடன் கவனித்துக்கொண்டிருக்கிறான். அர்த்தசாஸ்திரம் காமசூத்திரம் எல்லாம் முழுக்க வாசித்துவிட்டான் . மனுஸ்மிருதியும் முழுக்க வாசித்திருக்கிறான். இந்த முறை விடுமுறையில் என்னிடம் aryan invasion theory, aryan migration theory, hitler’s aryan supremacy theory  ஆகியவற்றை விளக்கி சொல்லிக்கொண்டிருந்த சில மணி நேரங்களை என்னால் மறக்கவே முடியாது.

அதுபோலவே அவன் எனக்களித்த மற்றுமொரு பெருமிதம் ஐரோப்பாவில்  அவனின் முதுகலை படிப்பின் இறுதிக்கட்ட ஆய்வேட்டை எனக்கு சமர்ப்பித்தது. To Dr. Logamadevi,  My mother and one of the best researcher out there என்று அச்சிடப்பட்ட அந்த பக்கக்தை அவனது பல்கலைக்கழக வளாகத்தின் மரபெஞ்ச்சொன்றில் உதிர்ந்து கிடந்த மக்னோலியாவின் இளஞ்சிவப்பு இதழ்களுக்கு மத்தியில் வைத்து புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி இருந்தான்.

தருணுக்கும் MBA படிக்க கோவை பூசாகோ கல்லூரி, பெங்களூரு ஜெயின் மற்றும் கிரைஸ்ட் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தது. பூ சா கோவில் பேனலில் இருந்தவர்கள் வா சாமி, போ சாமி என்று பேசியதால் இந்த கொங்கு பாஷையைத்தான் வீட்டிலேயே கேட்கறேனே இங்கே எதுக்கு ?  என்னை மேலும் உயர்த்தும் இடத்தில்தான் நான் படிக்கணும் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டான்.

ஜெயினில் கிடைத்த அட்மிஷனை நேரமேலாண்மையை கருத்தில் கொள்ளாமல் அநாவசியமாக கல்லூரி நிர்வாகத்தினர் காக்கவைத்தற்காக நிராகரித்தான.

கிறைஸ்ட்  அவனுக்கு பிடித்திருந்தது அங்கே மனமகிழ்ந்து படிக்கிறான். பல்கலைக்கழகத்தின் நாயகனாகி விட்டிருக்கிறான்

அடுத்த வருடத்திற்கான மாணவர் சேர்க்கையின் விளம்பரப் படத்தில் தருண்தான் முதன்மையாக இருக்கிறான். எத்தனை விளையாட்டன்றாலும் படிப்பில் கவனம் சிதறுவதில்லை.

தருண் பெங்களூருவில் இந்த மாதம் வீடு மாறியபோது சரணும் 10 நாட்கள் உடனிருந்து உதவினான். சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதில்  எனக்கும் மகிழ்ச்சி. நான் மூச்சுலகில் இருந்து பார்க்க விழைவது இதைத்தவிர வேறொன்றுமில்லை

சாம்பவியும் பெங்களூருவில் இதழியலும் சர்வதேச அரசியலும் படிக்கிறாள். அவளது கட்டுரைகள் நல்ல தரமான சஞ்சிகைகளில் பிரசுரமாகின்றன ஜனவரி முதல் வாரம் அவளது கட்டுரை ஒன்று சர்வதேச கருத்தரங்கில் வெளியாகிறது அதன் பொருட்டு அவள் கொல்கத்தா பயணமாகிறாள். இளங்கலைப் படிப்பிலேயே இத்தனை ஆழம் செல்வது அவளுக்கு அந்த துறையில் மிகப் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கும்.

நான் இளமையில் எழுதவும் பயணிக்கவும் விரும்பியவள் ஆனால்  உள்ளறையிலிருந்து நானும் மித்ராவும் கூடத்துக்கு வரக்கூட அனுமதி இல்லாமல் இருந்தது. நல்ல போஷாக்கான,  போதுமான அளவு உணவும் கவனிப்பும் இல்லாமல் வலியும் அச்சமுமாக கழிந்த என் இளமைக்காலத்தின் பிழையீடாகவே சாம்பவியின் இந்த வளர்ச்சியைப் பார்க்கிறேன். எனக்கு அவள் மீது அன்பும் பெருமிதமும் மிகுந்திருக்கிறது, மூவருக்கும் என் தனித்த பிரியங்களும் ஆசிகளும்.

பெற்றவை வகைகளில் வெண்ணிலா குடும்பத்தார் அன்பும் அகரமுதல்வனின் தோழமையும் மிக முக்கியமானவை. 2024 விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் ஒரு அந்தரங்க துயரைச் சொல்லப்போகையில் நானே எதிர்பார்க்காமல் கண் நிறைந்து உடைந்தேன். அது எனக்கே திகைப்பளித்தது.அப்படித்தான பாண்டிச்சேரி சிவாத்மாவும், ஆவடி தேவியும் அகத்துக்கு அணுக்கமானவர்கள். அன்பு, நிலா, கவினுக்கு நான் அத்தனை பிரியமான அத்தையாகி இருக்கிறேன்.என் அன்றாடங்களில் அவர்களும் இருக்கிறார்கள்

எனக்கென மேப்பிள் இலைகளை பாடம் செய்து அனுப்பிய நியூ ஜெர்ஸியின் பழனி ஜோதி, மகேஷ். சிட்னி கார்த்தி குடும்பத்தினர், கனடாவில் இருக்கும் அன்பின் வடிவான இந்து  இவர்களால் தான் என் வாழ்வின் சாரம் வற்றிவிடாமல் இருக்கிறது.

அவ்வளவாக பேசிக் கொள்ளாவிட்டாலும் தேவை என்றால் நான் தயங்காமல் தொடர்பு கொள்ளமுடியுமென்னும் நம்பிக்கை அளித்திருக்கும் எழுத்தாளர் ஸ்ரீராமும், சீம்பாலை எப்போதும் எனக்காக கொண்டு வரும் தமிழ்த்துறை புஷ்பராணியும் இந்த அணுக்கப்பட்டியலில் இருக்கிறார்கள்.

இப்படி நான் பெற்றவை அளித்தவை பயணித்தவை மட்டுமல்லாது இழந்தவைகளும் முறித்துக்கொண்டவைகளும் இருந்தன இந்த ஆண்டில். 

இந்த ஆண்டும் மிக அருகில் நம்பிக்கை துரோகத்தை பலமுறை சந்தித்தேன். 

மிக இளம் வயதில் ஒரு ஆளுமை, அவளுக்கு கிடைத்திருக்கும் ஓரிடத்தை   சரியாக கையாள முடியாமல் இருக்கிறாள் அவள் திட்டமிட்டு  என்னைக் காயப்படுத்தியது நடந்தது. நான் அவளை முற்றாக என் வாழ்வில் நினைவில் மனதில் இருந்து   விலக்கி விட்டேன்.

மற்றுமொரு உறவுக்காரப்பெண் மிகக் கீழே சென்று நடந்துகொண்டாள், அவளது உறவையும் என்றைக்குமாக முறித்துக்கொண்டேன். 

என் வயதில் இருக்கும் மற்றுமொருத்தி   அதே போல் ஒரு betrayal ஆனால் அவளின் இடத்தில் இருந்து அந்தப் பொறாமையை அந்த சங்கடத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இலக்கிய வாசிப்பு எல்லோருக்கும் அகவிரிவை உருவாக்குவதில்லை தானே? அவளிடமிருந்தும் விலகிவிட்டிருக்கிறேன்.

முறிவுகளில் மிகவும் பாதித்த ஒன்றும் இருக்கிறது. என்னால் கையாள முடியாத அளவுக்கான முறிவு அது

அதில் மனதுடைந்து போனேன். மிகக் கட்டுகோப்பான, அறத்தின் பேரில் நிற்கிற, நியாயமான, அழகுணர்ச்சி மிகுந்த, நேர்மையான, என் மீது மரியாதை கொண்டிருக்கிற, வாசிப்பில் ஆர்வமும் பரிச்சயமும் கொண்டவரென நம்பிய ஓர் ஆளுமை ஏறக்குறைய 2  வருடங்களுக்குப் பின் அவை எல்லாமே என்  கற்பிதங்கள் எனக் காட்டியதிலும் அந்த நட்பை முறித்துக்கொண்டதிலும்  துயர் கொண்டிருக்கிறேன். நான் அந்த ஆளுமையின் வாழ்வில் இருந்த இடைவெளிகளை நிரப்பிக் கொண்டிருந்தேன் என் வாழ்வின் பெரும் பள்ளங்களைக் குறித்துக் கவலைப் படாமல். ஆனாலும் அந்தப் பொய்யுருவின் மீதான மரியாதை அப்படியேதான் இருக்கிறது ஒரு குறிப்பிட்ட நீண்டகாலத்துக்கு மனிதர்களின் மீதான நம்பிக்கையை அறுந்துபோகாமல் காப்பாற்றியவர் அவர்.

ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் அவர்களுடன் நான் நெருக்கமாக இருந்தேன் அவர்களும் என் வாழ்வில் பெரும் தாக்கம் உண்டாக்கியவர்கள் ஆனால் இந்த வருடம் அவர்கள் மிக உயரத்தில் ஏறி விட்டிருப்பதால் குனிந்து பார்க்க முடியாதவர்களாகி விட்டிருக்கிறார்கள் எனவே அவர்களிடமிருந்தும் விலகி இருக்கிறேன் எப்போதாவது சந்திப்பேனென்றால் அளிக்க அவர்களுக்கு என ஒரு தனித்த புன்னகையை  வைத்திருக்கிறேன். அவர்கள் மீது விரோதம் எல்லாம் இல்லை ஆனால் அவர்களை தொல்லை செய்யும் எண்ணம் இல்லாததால் விலகி விட்டிருக்கிறேன்.

90 களில் இருந்து அறிந்த நண்பர் ஒருவரை என் வாழ்க்கையில் இருந்து விசையுடன் வெளியே வீசி எறிந்தேன்.

மற்றுமோர் முறிவு, அது வெகுகாலம் தாழ்த்தி நான் முறித்தது முன்பே மனதளவில் வெகுவாக திரும்பி வரவே முடியாத தூரத்துக்கு நான் சென்றுவிட்டிருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லியவகையில் அதுவும் இந்த  ஆண்டின் முறிவுகளில் ஒன்றாகி விட்டிருக்கிறது. 

என் வாழ்வின் பெரும்பகுதி முன்பே வீணாகி விட்டிருக்கிறது இனி மீதமிருக்கும் வாழ்க்கையை கண்ணியமாக எனக்கு பிடித்த மாதிரியாக குரல்வளையை அழுத்தும் விரல்களின் அழுத்தமில்லாமல் சுதந்திரமாக வாழ்வதென  முடிவு செய்திருக்கிறேன்.

சில மரணங்கள் இந்த ஆண்டின் துயரங்களில் சேர்ந்துவிட்டிருக்கின்றன. அத்தை மகன் முத்துக்குமாரின் அகால மரணம் அதிலொன்று.   மதுவின் பிடியில் அகப்பட்டு மீட்கவே முடியாத நிலைக்குச் சென்று சாலைவிபத்தில் மடிந்துபோனான்.அவனை மின்மயான அடுப்பில் கிடத்தியவரைக்கும் பார்க்கவேண்டிய துயரத்துக்கும் ஆளாகினேன். அபயமத்தையின் மறைவு. உண்மையிலேயே அத்தை இல்லாத வெற்றிடம் யாராலுமே நிரப்ப முடியாதது.

என் ஆசிரியர் ராஜ்குமார் அவர்களின் இரண்டாவது மகன் மரணம். அதுவும் வேதனையளிக்கிறது. ராஜ்குமார் அவர்களின் பி ஹெச் டி தீசிஸ் திருத்தம் பார்த்துக்கொண்டிருக்கையில் i thank my sons என்று அவர் குறிப்பிட்டிருந்த வரியை நினைத்துக்கொண்டேன்.

தேர்வுக்கட்டுப்பாட்டு துறை தமிழ்ச்செல்வியின் கணவரின் இறப்பும் ஏற்றுக்கொள்ளவும் தாளவும் முடியாத துயரளித்தது. வலியும் துயரும் நிரம்பிய இரு வருடங்களுக்கு பின்னர்  ஸ்ரீவள்ளியும் இறந்துவிட்டார்கள்.

அம்பராம்பாளையம் மருத்துவமனைக்குச் சென்று தங்கக்கூடாது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இந்த ஆண்டும் வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டி வந்தது.

ஆப்பிள் செர்ரி வாங்கி வந்து அகரமுதல்வன் கையால் வைத்து அது மலர்ந்து கனியளிக்கத் துவங்கி இருக்கிறது. 

தோட்டத்தில் 3 தென்னைகள் அருகில் இருக்கும்  மரங்களின் கூடுதல் நிழலால் காய்ப்பை நிறுத்தி விட்டன. கடந்த கோடையில் ஆடாதோடை முழுக்க காய்ந்து போனது, பாதாம் மரம் வீழ்ந்தது, பாட்டில் பிரஷ் மரத்தின் இரு பெருங்கிளைகள் ஒரு மழையில் முறிந்து விழுந்தன, சர்க்கரைப் பழமரம் முற்றிலுமாக காய்ந்து போனது.

 புதிதாக ம்யூஸா ஆர்னேட்டா இளஞ்சிவப்பில் மலர்ந்தது, சீதா மரத்தை வெட்டவேண்டி வந்தது, அம்மா இறந்ததற்கு பின்னால் இன்னும் அரிசி மாங்காய் மலரளிக்காமல் இருக்கிறது. வழக்கம் போல வருடத்துக்கு 2 முறை பிரம்மகமலம் மலர்ந்தது. நாவல் கனிந்தது சாம்பங்காய்களும் நெல்லிக்காய்களும் விளிம்பியும் நாரத்தையுமாய் காய்த்துக் குலுங்கின, வலிய நாரங்காய்ச்செடி அரப்பு மரத்தின் நிழலில் காய்க்க மறந்துவிட்டிருக்கிறது. 

பல புதிய செடிகளும் கொடிகளும் இணைந்திருக்கின்றன

வீட்டுவேலைகளுக்கு வருடங்களாக உதவிக்கொண்டிருந்த அம்சவேணிக்கு  பதிலாக இப்போது ரம்யா.  

ரம்யாவின் சிறுமகன் தர்ஷன் என் தோழன் அவனுக்காகவே வீட்டில் தாமரைவடிவ நீர்த்தொட்டியொன்றில் மீன்களுடன் தாமரையும் அல்லியும் பிஸ்தியாவும் ஹைட்ரில்லாவும் வளர்கின்றன.

நல்ல மழை இந்த ஆண்டு திகட்டத்திகட்ட. மிக அதிகமாக புகைப்படங்கள் எடுத்த, மிக அதிக புடவைகள் வாங்கிய ஆண்டும் இதுதான்.

விஷ்ணுபுரம் விழாவில் இரவு தன் தோட்டத்து வாழையை அனைவருக்கும் கொண்டு  வந்திருந்த ,என்னைத்தனியே அழைத்து இரண்டு சீப்பு பழங்களை   கொடுத்து வீட்டுக்கு கொண்டு போங்க என்ற நண்பர் சண்முகம் , மதிய அமர்வு துவங்கு முன்பாக ஒரு மரமல்லி மலரை கொண்டு வந்து கொடுத்த தமிழ்குமரன்,  அமெரிக்காவில் ஒரு பியர் தயாரிக்கும் வடிசாலைக்கு சென்றபோது என்கட்டுரையை நினைவு கூர்ந்ததகவும் ஹாப்ஸ் மலர்களை எனக்கென எடுத்து வைத்தாகவும் சொன்ன  ஆம்ஸ்டர்டாமில் இருந்து வந்த ஒரு இளைஞன், அன்றாடம் கல்லூரியில் நான் கையெழுத்திடும் இடத்தருகே சிறு குழந்தையின் முகம் போன்ற அளவில் இருக்கும் இளரோஜா வண்ண நாகலிங்க மலர்களுடன் காத்திருந்து அளிக்கும் கிருஷ்ண மூர்த்தி அண்ணன், நல்ல இசையை, கவிதைகளை, மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை எந்நேரமும் பகிரவும் கேட்கவுமான தோழமையுடன் மருத்துவர் வேணு வெட்ராயன், இன்னொரு மகனாகிவிட்டிருக்கும் தீபக் தாண்டு, வெங்காயக்கடையில் இருக்கும், காரணமேயில்லாமல் என்மீது பிரியமாயிருக்கும் அந்த இன்னும் பெயர் கேட்டிராத அழகுப்பெண், இவர்களும் என் வாழ்வின் இடைவெளிகளை, குழிகளை, பள்ளங்களை எல்லாம் அன்பினால் நிரப்பிக்கொண்டிருப்பவர்கள்.

I am aging gracefully. அன்னையும் ஆசிரியையுமாக முழு மகிழ்ச்சியுடன் பெருமிதத்துடன் இருக்கிறேன்.

பொருளாதார தற்சார்பும், தாவரவியல் துறையின் மீதான என் ஆர்வமும், தொடர்ந்து நான் செய்துவரும் ஆய்வுகளும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

 எனினும் களைத்து வரும் மாலைகளில் ஒரு தேநீர்க்கோப்பையை எனக்கென நீட்டும் கைகளுக்கும்,  நல்லதும் அல்லதுமாக கழிந்த நாளின் முடிவில் how was your day? என்ற கேள்வியுடன் எனக்கென காத்திருக்கவும், என் கோபதாபங்களை, மகிழ்ச்சியை, அன்பை, பரிவைப்  பெற்றுக் கொள்ளவும், என் ஆன்மாவுக்கான தோழமையாக இருக்கவும் யாரும் இல்லை என்னும் ஏக்கம் மட்டும் ஈரநாக்கால் நக்கிக்கொண்டு காலடியில் உரசிக்கொண்டே ஒரு செல்ல நாய்குட்டியைப்போல  கூடவே இருக்கிறது. அதை மட்டும் எப்படியாவது விரட்ட வேண்டும்.

அரிதானது எதுவும் அருகில் இருக்காது என் நம்பும் சிலருக்கும் , வாழ்வின் சாரம் வற்றிப்போனலும் அன்றாடத்தில்  உழலுவதை நிறுத்த மாட்டேன் என்பவர்களுக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்கள். 

எந்த உறவும் தானே மடிவதில்லை அதைக் கொல்வது எப்போதுமே ஆணவம்தான். அப்படி ஆணவம் கொண்டோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.  

 புது வருடத்திற்கான சபதம் ஏதுமில்லை

நம்பவைத்து கழுத்தறுப்பவர்களை சற்று முன்பாகவே அடையாளம் கண்டுகொள்ளும் திறன் அளிக்கும் பயிற்சி வகுப்புகள் ஏதேனும் இருந்தால் செல்லலாம் என நினைக்கிறேன் அவ்வளவுதான். 

அன்பு

தோசையம்மா தோசை!

சரண் விடுமுறையில் இந்தியா வந்திருக்கிறான். தருண் பங்களூரில் இருப்பதாலும், புதிதாக வீடு மாற்றுவதாலும் சரணும் அங்கேபோய் அவனுடன் ஒரு வாரமாக இருக்கிறான். நேற்று காலை இருவரும் வீடியோ காலில் மசால் தோசை சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இருவருக்குமே தோசை பிடிக்கும் இருவருமே நன்றாக மாவு அரைக்கவும் தோசைபோடவும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். தோசை மட்டுமல்ல என்னைப்போலவே விரிவாகச் சமையல் செய்யவும் என்னைவிடச் சுவையாகச் சமைக்கவுமறிந்தவர்கள் இருவரும். குறிப்பாகத் தோசையை விதம் விதமாகச் சமைப்பார்கள்.

சரண் தருண் இருவரும் குட்டிப்பையன்களாக இருக்கையில் பல சிறார் பாடல்களை நாங்கள் வளைத்தும் நெளித்தும் உடைத்தும் எங்கள் வசதிக்கேற்ப மாற்றுவோம் அப்படி தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை, அரிசிமாவும் உளுந்துமாவும் அரைச்சுசெய்த தோசை பாடலின் பாலின சமத்துவமின்மையை உணர்ந்து ஏகத்துக்கும் வருந்தினோம்.

அரிசை உளுந்தை அரைத்து மாவாக்கி கிரைண்டர் கழுவி தோசை சட்னி எல்லாம் செய்து மற்றவர்களுக்கும் தோசை ஊற்றிக்கொடுக்கும் அம்மாவுக்கு ஏன் அப்பாவைவிட ஒன்று குறைவாக இருக்கனும்?

’’அப்பாவுக்கு 4 (சாப்பிடட்டும்)

அம்மாவுக்கு 5

அண்ணனுக்கு 4

எனக்கு மட்டும் 1

தின்னத்தின்ன ஆசை இன்னும் கேட்டாலும் தோசை!’’

(குழந்தை ஆசையாகக் கேட்கையில் ஏன் அதற்குப் பூசை ?சந்தோஷமாகச் சுட்டுக்கொடுக்கலாமே)

ஆண்கள்தான் உசத்தி அவர்களுக்கே எதுவானாலும் தரமானதும் அதிகமும் தரவேண்டும் என்பதை மிக இளமையிலிருந்தே அறமில்லாமல் கற்றுக்கொடுக்கும் இப்படியான பாடல்களை நம் சமூகம் தவிர்க்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நாங்களே இருந்தோம் (அல்லது திகழ்ந்தோம்,)

மற்றுமொரு சமூக சமத்துவமின்மையையும் விருந்தோம்பலுக்கு எதிரானதுமான ஒரு பாடலையும் இப்படித்தான் மாற்றினோம்,

’’மழை வருது மழை வருது குடையை பிடிங்க

முக்கால்படி அரிசி போட்டுமுறுக்கு சுடுங்க

தேடி வந்த மாப்பிள்ளைக்கு எடுத்துக்கொடுங்க

சும்மா வந்த மாப்பிள்ளைக்குச் சூடு வையுங்க’’

இந்தப்பாடலை இறுதி வரியில்

’’சும்மா வந்த மாப்பிள்ளைக்கும் சேர்த்துக்கொடுங்க’’

என்று மாற்றினோம்.

என்னாதானாலும் மாப்பிள்ளை அல்லவா? சும்மா வந்தாலும் தேடிவந்தாலும் முறுக்கு கொடுப்பதில் என்ன ஆகிவிடப்போகிறது மேலும் நாம் விருந்தோம்பலில் பெயர் பெற்றவர்களல்லவா?.சிறார் பாடல்கள் மூலம் இப்படி சும்மா வந்தால் சூடுவைப்பது போன்ற பிஞ்சுமனதில் நஞ்சை விதைக்கும் வரிகளை, கருத்துக்களை திணிப்பதை மாற்ற வேண்டும் என்பதற்கும் நாங்களே…………

மறுபடி தோசைக்கு வருகிறேன்

சரண் 4-லிலும் தருண் இரண்டிலும் படித்துக்கொண்டிருந்த சாந்தி ஸ்கூலுக்கு அவர்களைக் காலையில் நான் கொண்டு போய் விட்டுவிட்டு மீண்டும் மாலை நானே அழைத்துக்கொண்டு வருவேன்

வைன் சிவப்பில் சின்ன ஆல்டோ கார் இருந்தது அப்போது. எனக்குக் கல்லூரி 3 மணிக்கு முடியும் பள்ளி 3. 30க்கு. கடைசி 2-3 மணி பீரியட் கல்லூரியில் எனக்கு வகுப்பு அல்லது லேப் இருந்தால் சாக்பீஸ் பிடித்த கையோடு தலையெல்லாம் சாக்பீஸ் பொடியுடன் அப்படியே பாய்ந்து காரில் ஏறிப் பள்ளிக்கு வருவேன். பிள்ளைகள் எனக்காக காத்துக்கொண்டிருக்கக் கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தேன்.

அரிதாகத்தான் மீட்டிங்கினால் தாமதாமாவது நடக்கும். அப்படி ஒரு நாள் நான் முன்னரே போய்ப் பள்ளிக்கதவு திறக்கக் காத்திருக்கையில் ஒரு இளம் தகப்பன் தனது அம்மாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான். திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகி ஒருக்கலாம். குட்டிப்பாப்பாவொன்றை மழலையர் பள்ளிக்கு கொண்டுவிட பைக்கில் அவர் வருவதை பார்த்திருக்கிறேன்.அவர் ஒரு மரத்தடியில் நின்றபடி அம்மாவிட ம் ‘’பாருமா ரெண்டு தோசை ஊத்திட்டு போதுமானு கேட்கறா ?ஒருநாள் ரெண்டுநாள் இல்லை எப்போவுமே இப்படித்தான் ரெண்டு எப்படிம்மா பத்தும் ?’’ என்று பேசிக்கொண்டிருந்தான்.

ஆச்சர்யமாக இருந்தது அந்த இளம் மனைவியைக் குறித்து அவளுக்கே இரண்டு தோசை போதாதே?

இந்தக் கணவனாகட்டும் ஏன் அவளை தோசை போட்டுத்தரச்சொல்லி இப்படி குறைப்பட்டுக்கொள்ளவெண்டும்? தானே தோசை ஊற்றிக்கொண்டு வேண்டுமட்டும் சாப்பிட்டுவிட்டு அவளுக்கும் ஊற்றிக்கொடுக்கலாமே?

அன்றைக்கென்னவோ ஒரே கவலையாக இருந்தது எதிர்காலத்தில் மகன்களுக்கு வயிறு நிறைய உணவு கிடைக்குமாவென்று. இப்போது எந்தக்கவலையும் இல்லை அவர்களின் வயிறும் கூட இருப்பவர்களின் வயிறும் என்றும் நிறைந்திருக்கும்.

வேட்டையன்

இன்று அரசுக்கல்லூரிகளின் செமெஸ்டர் தேர்வுகளின் பேப்பர்களை, அவை அடுத்தவாரம் திருத்தப்படவிருக்கும் பல கல்லூரிகளுக்குப் பங்கிட்டு அளிக்கும் பணிக்காகப் பாரதியார் பல்கலைக்கழகம் செல்லவேண்டி இருந்தது.

எப்போதுமே எனக்குப் பல்கலைக்கழகம் செல்வது பிடித்தமானது. நான் உலகை அறிந்துகொண்டது. தனித்து வாழ்வை வாழ முடியும் என்னும் நம்பிக்கையைப் பெற்றது, முக்கியமாகத் தாவரவியலையும் இலக்கியத்தையும் கற்றுக்கொண்டது இவற்றோடு வீட்டுப்பிரச்சனைகள், அப்பாவின் அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லாமல் மகிழ்வுடன் கழிந்த 2 ஆண்டுகளும் இங்கேதான். முதல் விடுதித்தங்கலும் இங்கேதான். வயிறு நிறைய சாப்பிட்டதும் இங்கேதான். எனவே கடும் மழையிலும் உற்சாகமாகப் புறப்பட்டுச்சென்றேன்.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சென்று விட்டதால் முதலில் தாவரவியல் துறைக்குச்சென்றேன். எந்த மாற்றமும் இல்லாத அந்தத் துறை எனக்குப் பழைய நினைவுகளைக் கிளர்த்தியது. நான் இருந்த tribal pulse lab மட்டும் மாற்றமடைந்திருந்தது. நான் படித்த முதல், இரண்டாம் முதுகலை வகுப்புக்களையும் சென்று பார்த்தேன். 10 மணிக்குத்தான் எல்லோரும் வருவார்கள் என்பதால் நானும் என் நினைவுகளும் மட்டுமே தனித்திருந்தோம்.

பேராசிரியர் வி ஆர் கே ரெட்டிஅவரது முதல் ஜெனிடிக்ஸ் வகுப்பில் தன் பெயரை வய்யூரு ராமகோட்டி ரெட்டி என எழுதிக்காட்டிய அந்தப் பச்சை நிற போர்ட் இன்னும் இருந்தது. ரெட்டி விநோதமாக போஸ்டாஃபீஸில் நீளமாக வரிசையாக இருக்கும் ஸ்டாம்களை அப்படியே வால் போல நாக்கில் வழித்து எச்சில்தொட்டு ஒட்டியதை ஒருக்கில் பார்த்தேன்,

அந்த tribal pulse லேப் அங்கே நான் செய்த பழங்குடியினர் உபயோகப்படுத்திய அவரை விதையின் புரத அளவு குறித்த ஆய்வு, எனக்கு மிகக்கடுமையாக ஆய்வைச்சொல்லிக்கொடுத்த சீனியர் அண்ணா சித்துராஜ் , அனாடமி ரெகார்டு சித்திரங்களை மிகச்சரியாக வரையச்சொல்லிக்கொடுத்த விஜயலக்‌ஷ்மி அக்கா, பிஹெச்டி சேர்க்கை முடிவுகளுக்காக நான் மிக நம்பிக்கையுடன் காத்திருந்த அந்த நோட்டீஸ் போர்ட், அதில் மாலை வெகுநேரக்காத்திருப்புக்கு பின்னர் ஒட்டப்பட்ட பட்டியலில் என் பெயர் தாவர வகைப்பாட்டியலில் இல்லாமல் டிஸ்யூ கல்ச்சரில் இருந்த அதிர்ச்சி. பிஹெச் டி அந்தப்பல்கலைக்கழகத்தில் சேருவதில்லை என்று எடுத்த முடிவு ,அன்று ஊர் திரும்புகையில் பேருந்தில் கதறி அழுதபடி வந்தது எனப் பலவற்றை நினைத்துக்கொண்டேன்.

பல்கலைக்கழகத்துக்கு அப்போது எக்சேஞ் ப்ரோகிராமில் இரு அமெரிக்க இளைஞர்கள் வந்திருந்தார்கள் பீட்டரும், மைக்கேலும். அவர்களுடன் பேசி அவர்களுக்குப் பல்கலைக் கழகத்தை சுமார் 3 மாதகாலம் சுற்றிக்காண்பிக்கவும், கூட இருக்கவும் இந்தியபண்பாட்டை அறிமுகப்படுத்தவும் ’’ஆங்கிலம் சரளமாகப்பேசத்தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?’’ என்று பேராசிரியர் மணியன் வகுப்பில் கேட்டபோது நான் அவசரமாகப் பின்னால் ஒளிந்து அமர்ந்துகொண்டேன்.

அவிலா கான்வெண்ட்டில் படித்த’’ i even think in english’’ என்று அடிக்கடி ஸ்டைலாகச் சொல்லும் ’’ச்சீ தயிர் சாதத்துக்குப்போய் அப்பளாம் தொட்டுக்குவியா?’’ என்று என்னைக் கேலிசெய்யும் பத்மாதான் அவர்களுடன் சென்றாள். பின்னர் மைக் பத்மாவின் மீது மையல் கொண்டுவிட்டிருந்தான் என்று கேள்விப்பட்டோம்.ஆனால் பத்மா எம்பியே அருள் மீது காதலில் இருந்தாள்.

நான் முதுகலை படிக்கையில் நர்மதா மேமிடம் எம்பில் ஆய்வில் இருந்த ஷீலா ரபேக்கா வண்ணமலர் அமரும் அந்த மூலை மேசை அடுத்த லேபில் தெரிந்தது. ஊட்டியைச்சேர்ந்த ஷீலாவும் அவள் காதலித்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பிஹெச்டி நாகராஜும் மருதமலைக்கு கால்நடையாகச்சென்று திரும்புகையில் அந்திசாய்ந்த இருட்டில் சாலையில் நின்றபடி முத்தமிட்டுக்கொண்டிருந்ததை லேப் உதவியாளர் ஏசடிமை அந்தோணிராஜ் சைக்கிளில் அவர்களைக் கடக்கையில் பார்த்துவிட்டு, அப்போது ஹாஸ்டல் வார்டனாக இருந்த பேராசிரியை வனிதகுமாரியிடம் குவார்ட்டஸுக்குப்போய் அப்போதே சுடச்சுட போட்டுக்கொடுக்கையில் தவறுதலாகப் பொள்ளாச்சிப்பெண்ணும் ஊட்டிப்பையனும் என்று சொல்லிவிட்டார்.

மறுநாள் முதல்கட்ட விசாரணைக்கு என்னை அழைத்துவிட்டார்கள். நான் மறுத்து அழுதழுது நெஞ்சு வலிவந்து மயக்கமடையும் நிலைக்குப்போனபோதுதான் ஷீலா ரபேக்காவே வந்து அது நானில்லை அவள் என்று சொல்லி விசாரணையை மடைமாற்றினாள். அதன் பிறகு நாங்கள் தோழிகளாயிருந்தோம். ஷீலாவும் நாகராஜும் கல்யாணம் செய்துகொண்டார்கள் (அவரவர் வீட்டில் பார்த்துவைத்த மாப்பிள்ளையையும் பெண்ணையும்.)

கீழிறங்கி பொட்டானிகல் கார்டனைப்பார்க்கலாமென்று வருகையில் ஒரு டி விஎஸ் 50-யில் வந்த முதியவர் ’’அம்மா நல்லாருக்கீங்களாம்மா?’’ என்றார். எனக்கு அவரைத்தெரியவில்லை எனினும் நலம் என்றேன். ’’என்னைத் தெரியலையாம்மா ? நான்தான் வேட்டையன்’’ என்றார். அப்போதும் எனக்குத் தெரியவில்லை

’’மன்னிச்சுக்குங்க தெரியலை’’ என்றேன். ’’லோகமாதேவிதானே நீங்க? முதல் செட் எம் எஸ்ஸி படிச்சீங்களே இங்கே?’’ என்றார். ஆம் என்றேன்

நாந்தாம்மா அப்போ இந்த சயின்ஸ் பிளாக்குக்கெல்லாம் தண்ணி திறந்துவிடற வேலையில் இருந்தேன். ஒரு நாள் உங்க லேப்பில் தண்ணி வரலைனு நீங்க மெயின் ஆபீஸுக்கு கூப்பிட்டு சொல்லி நான் வாளியில் கொண்டு வந்து வந்து ஊத்தினேனேம்மா?’’ என்றார்

எனக்கு அப்போதும் நினைவு வரவில்லை. ஆனால் தெரிந்ததுபோலவே காட்டிக்கொண்டேன். இப்போது வரை அவர் பல்கலைக்கழகத்தில்தான் எடுபிடி வேலைகள் செய்துகொண்டு இருக்கிறாராம் ’’நான் இங்கதாம்மா சாவேன் எனக்கு வேற இடமே இல்லை இதைவிட்டா’’ என்றார்.

அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் துறைத்தலைவராகி இருப்பதில் அப்படி மகிழ்ந்தார். ’’ஆகாம என்னம்மா? எந்நேரமும் படிப்பீங்களே அப்போ? உதயன் சார் உங்களைப்பத்தி பெருமையா சொல்லுவாரேம்மா’’ என்றார்.உளம் மகிழ்ந்தேன் உண்மையிலேயே.

ஆச்சர்யமாக எல்லாம் நினைவில் வைத்திருந்தார். என்னுடன் படித்த ஒருவனுக்கு வலிப்பு நோய் அடிக்கடி வரும் என்பதைக்கூட சொன்னார். இன்னொரு நண்பன் தீக்குளித்து இறந்துபோனதை அவருக்கு நான் சொன்னேன். திகைத்து ’’அப்படியாம்மா? தனபால் இப்போ இல்லியாம்மா? என்னம்மா இது’’ என்று வருந்தினார்.

’’நீங்க எப்போவுமே போய் உட்கார்ந்துக்குவீங்களே அந்தத் தண்ணித்தொட்டி, அதை இடிச்சுட்டாங்கம்மா’’ என்றார். ஆம் நான் துறையை ஒட்டி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கார்டனில் இருந்த பெருங்கொன்றை மரத்தடித் தண்ணீர்த்தொட்டியின் விளிம்பில் எப்போதும் தனியே பொன்னிற மலர்கள் நீரில் மிதந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு, எதையாவது நினைத்தபடி துயரில் அமர்ந்திருப்பேன். நான் எழுதியனுப்பிய அசட்டுக்கதையொன்றை ஆனந்தவிகடன் திருப்பி அனுப்பியபோதும் அங்குதான் அமர்ந்து கண்ணீர் விட்டழுதேன்.

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு தேர்வுக்கட்டுப்பாட்டு அறைக்கு வந்தேன். எத்தனை வருடங்களுக்கு முன்பிருந்து என்னை வேட்டையன் நினைவில் வைத்திருக்கிறார் என்று ஆச்சர்யமும் மகிழ்ச்சியுமாக இருந்தேன். இதுநாள் வரையிலான என் வாழ்வின் மாபெரும் இந்த நினைவுவலையில் இப்படி எத்தனை எத்தனை கண்ணிகள் ?

அன்பு !

வருங்காலப் பாதுகாப்பில் விதை வங்கிகள்.

ஆள் நடமாட்டமே இல்லாத அந்த நகரத்தின் கைவிடப்பட்ட தெருவொன்றில்  பனியில் உறைந்த உடலொன்றை இழுத்துக்கொண்டு போகிறார்கள்  ஆலிஸாவும், மாக்ஸிமும்.  வழியெங்கும் ஏராளமான விறைத்த சடலங்கள் கிடக்கின்றன. அந்தப் பெரு நகரம் முழுவதும்  இடிந்து பாழாகிக் கிடக்கிறது. வருடங்களாக மின்சாரமும் உணவும் தடைப்பட்டிருந்ததால் மரணஓலம் எழுப்பக்கூட திராணி இல்லாமல் கடுங்குளிரில் விறைத்துப்போன மனிதர்கள் நகரெங்கும் அரைப்பிணங்களாக  அப்புறப்படுத்தப்படாத சடலங்களுக்கு மத்தியில் கிடக்கிறார்கள்.  

இரணடாம் உலகப்போரில் முற்றுகையிடப்பட்டு உலகின் பிற பாகங்களிலிருந்து  சுமர் 900 நாட்கள்  (1941 – 1944) முற்றிலும் துண்டிக்கப்பட்டு பட்டினியால் மெல்ல இறந்துகொண்டிருந்த லெனின்கிராட் நகரின் விதைவங்கியில் இருக்கும் விதைகளைக் காப்பாற்ற இரண்டு தாவரவியலாளர்கள்  போரடியஉண்மைக்கதையை சொல்லிய One man dies a million times  என்னும் ரஷ்யமொழித் திரைப்படத்தின் காட்சிகள்தான் இவை.

 சுற்றிலும் போர்ச்சூழ்கை, உறைபனியின் எலும்பை ஊடுருவும் குளிரோடு கடும் பட்டினியும் சேர்ந்துகொண்டிருந்தது.  நகரின் அனைவரின் பசியையும் போக்கி உயிர்பிழைக்கச்செய்யும் கடைசி வாய்ப்பாக   விதைவங்கியின் விதைகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் உலகின் முதல் விதைவங்கியான அதன் ஆய்வாளர்கள் பலரும் எதிர்கால உலகிற்கான அவ்விதைகளை தின்று உயிர்வாழ்வதை விடவும் உயிரை விடுவதையே தேர்ந்தெடுக்கிறார்கள். கடைசியாகப் பிழைத்திருந்த இருவரான அலிஸாவும் மாக்ஸிமும் பட்டினியால் உயிரிழந்துகொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கையும், தோல் தொப்பிகளையும், கம்பளி ஆடைகளையும் கூட தின்றுகொண்டிருந்த மனிதர்கள், பெரும்படையாக  விதை வங்கியை முற்றுகை இடும் எலிகள் மற்றும் விதை வங்கியை அபகரிக்க துடிக்கும் நாஸிகளிடமிருந்து விதைவங்கியை காப்பாற்றப் போராடியதுதான் அந்த உண்மைக்கதை. 

 ‘One man dies a million times’  2019-ல் வெளியாகவிருந்த இத்திரைப்படம் கோவிட் பெருந்தொற்றினால் இரண்டு வருடங்கள் கழித்து 2022-ல் வெளியானது. இந்தக் கதை சொல்லும் உண்மை மாந்தர்களின் தியாகத்தைக் கருத்தில் கொண்டு இது திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது வேறெந்த ஊடகம் வழியாகவும் இதைக் காண முடியாது. அமெரிக்க இயக்குநர் ஜெசிக்கா ஓரக்கினால் இயக்கப்பட்ட உலகின் முதல் விதைவங்கியை பற்றிய இந்தத் திரைப்படம் வரலாறு, அறிவியல், மனிதநேயம், காதல், இயற்கை ஆகியவற்றின் கலவை. நேற்றைக்கும் இன்றைக்கும் இடையில், நம்பிக்கைக்கும் நிராசைக்கும் இடையில்  ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்தத் திரைக்கதையை ஜெசிகா கருப்பு வெள்ளையில் காட்டி இருக்கிறார்.

ரஷ்யத் தாவரவியலாளர்கள் அலிஸாவுக்கும் மாக்ஸிமுக்கும் இடையிலான காதல், பட்டினிக்கும் போர்முற்றுகைக்கும் நிராசைக்கும் இடையிலும் முகிழ்க்கிறது. நிலைமை மோசமாக ஆக அவர்களுக்கிடையேயான  பிணைப்பு மேலும் இறுகுகிறது. குண்டு விழும் ஓசை கேட்கையிலெல்லாம் ஒருவரை ஒருவர் பற்றிக்கொள்வதும், அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் தோட்டத்தில் இருவருமாக நீண்ட நடைசெல்வதுமாக மிக அழகிய காட்சிகள்  வழியாகக் கதை நகர்கிறது.  

காலநிலை மாற்றம், அழிந்துவரும் பல்லுயிரியம், சிதைந்துக் கொண்டிருக்கும் சூழலமைப்புக்கள் போன்ற எதிர்கால சிக்கல்களைக்காட்டித் துவங்கும் படம் பின்னர் வரலாற்று காலத்துக்குத் திரும்பி விதைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.அவ்வப்போது குரலாக மட்டும் கேட்கும் போர்ச்சூழலில் எழுதப்பட ஒரு நாட்குறிப்பின் நம்பிக்கை ஊட்டும் வாசகங்களும் படத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த N. I. Vavilov Institute of Plant Genetic Resources விதைவங்கி உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட  லட்சக்கணக்கான விதைகளைச் சேமித்துவைத்திருக்கிறது. இந்த விதைவங்கி உலகின் ஆகப்பெரிய விதைசேகரிப்பு மையங்களில் ஒன்றாக இருக்கிறது.  

Nikolai Ivanovich Vavilov

ரஷ்ய தாவரவியலாளர் வாவிலோவ் (Nikolai Ivanovich Vavilov) இதை உருவாக்கினார். உலகெங்கிலும் பயணித்து உணவுத்தாவர விதைகள் அனைத்தையும் சேகரித்த அவர் அரசியல் காரணங்களால் புரட்சியாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.  வாவிலோவின் மரணதண்டனை 20 ஆண்டு சிறைவாசமாகக் குறைக்கப்பட்டாலும், அவர் சிறையிலேயே இறந்தார். அவரது மரணச் சான்றிதழ் அவர் உடல் பலவீனத்தால் இறந்தார் என்று சொன்னாலும் அவர் கடுமையான சித்திரவதைகளுக்கும், பட்டினிக்கும் ஆளாகி சுண்ணாம்புக் காளவாயில் தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இப்போது மக்களால் கொண்டாடப்படும் ரஷ்ய நாயகர்களில் ஒருவர் வாவிலோவ்.

அந்தப் போர் முற்றுகையின்போது விதைவங்கிக்குள் இறந்துகிடந்த தாவரவியலாளர்  டிமிட்ரி இவனோவைச் (Dmitri Ivanov) சுற்றிலும் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன.  மேசையில் அமர்ந்தபடியே உயிரிழந்த மற்றுமொரு தாவரவியலாளரின் கைகளில் நிலக்கடலைகள் இருந்தன. கண் முன்னே இருந்த ஏராளமான உணவை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல மரணத்தைத் தேர்ந்தெடுத்த அவரின் உள்ள உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது.

நம்மில் பெரும்பான்மையானோர் விதைகளை உண்டு உயிர்வாழ்பவர்கள்தான், இந்தப்படம் நம்மில் ஒரு சிலரையாவது பயிர்செய்வோராக, விதைகளைச் சேகரிப்பவராக, பயிர்களுக்கு நீர் பாய்ச்சுபவராக, பயிர்களைப் பரமரிப்பவர்களாக, களை எடுப்பவராக  மாற்றும் விதையை மனதில் ஊன்றும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதனுக்கு உணவு, மருந்து, நாரிழை சாயம் மற்றும் ஆபரணங்களுக்காக விதைகளுடன் நெருங்கிய உறவு இருந்தது. அப்போதிலிருந்தே மனிதன் விதைகளைச் சேகரிக்கவும், சேமிக்கவும் அவற்றிலிருந்து பயிர்களை உருவாக்கவும்  கற்றுக்கொண்டான்.

இப்போதும் உலகின் அனைத்துக்கலாச்சாரங்களிலும் விதைகளே பிரதான உணவாக இருக்கின்றன. உலகின் பசியாற்றுவதில் பாதிப்பங்கில் கோதுமை, நெல், பார்லி, ஓட்ஸ் ஆகிய தானிய வகை விதைகள் இருக்கின்றன, இவற்றுடன் பயறு வகை விதைகளும் சேர்ந்து நமது சரிவிகித உணவு ஆகிறது.  மனிதர்களின் 50 சதவிகித கலோரி, அரிசி, கோதுமை, மக்காச்சோள விதைகளில் இருந்துதான் கிடைக்கிறது. 

மனித நாகரிகங்கள் அனைத்துமே விதைகளை மையமாகக் கொண்டவைதான் என்பது மிகைப்படுத்தப்பட்டதல்ல.  உலக நாகரீகங்கள் அனைத்துமே தானியங்களும் பயறுவகைகளும் இருந்த, விளைந்த இடங்களை மையமாகக்கொண்டே உருவாகின. கோதுமை பார்லி பட்டாணி கொண்டைக்கடலை ஆகியவை மேற்கு ஆசியப்பகுதிகளின் வளமிக்க  காட்டுபயிர்களாக இருந்தன. சிறு தானியங்கள், அரிசி, சோயாபீன் ஆகியவை பண்டைய சீனாவில் சாகுபடியாகின

பீன்ஸ் உள்ளிட்ட பயறுவகைகளும் மக்காச்சோளமும் அன்றைய மீசோ அமெரிக்க பகுதியன இன்றைய மெக்சிகோவில் மாயன்களால் சாகுபடி செய்யப்பட்டது. ஆண்டீஸ் மலைப்பகுதியின் இன்கா பழங்குடியினரால் கீன்வா, நிலக்கடலை மற்றும் லிமா பீன்ஸ் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. சோளம், ஆப்பிரிக்க அரிசி, தட்டைப் பயறு மற்றும் நிலக்கடலை  ஆகியவை மேற்கு ஆப்பிரிக்காவில் பயிராகின.  

சிறார் கதைகளில் சொல்லப்படும் ஏழு கடல் ஏழுமலைதாண்டி வாழும் மந்திரவாதியைப் போல விதைகளும் பல மலைகள் கடல்களைத் தாண்டிப் பயணிப்பவை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்பவை. பட்டாணிக்குடும்பத்தின் பவளபீன்ஸ்களும், ஹேம்பர்கர் பீன்ஸுகளும் கடல்நீரில் வருடக்கணக்காக இருந்தாலும் உயிருடன் இருப்பவை. அலைகளால் கரையொதுங்கிய அவை ஐரோப்பிய கரையோர நகரங்களில் வளர்ந்தன.  

கடந்த 30 கோடி வருடங்களாக விதைகள் அளவிலும், வடிவத்திலும் நிறங்களிலும்  பல மாற்றங்களை அடைந்துள்ளன.  வளமான மண்ணும் நல்ல தட்பவெப்பமும் இருக்கும் இடங்களில் மட்டுமல்ல துருவப்பகுதிகளிலும் பாலை நிலங்களிலும் கூட விதைத்தாவரங்கள் இருக்கின்றன. 

10,000 வருடங்களுக்கு முன்னர் விவசாயம் உருவானதிலிருந்து விதைகளே மனித வாழ்க்கையின் ஆதரங்களாக இருந்துவருகின்றன, நம் மூதாதையர்கள் மனித குலத்தின் பசியாற்றிய விதைகளில், எதிலிருந்து  நல்ல விளைச்சல் கிடைத்ததோ. எது நோய்த்தாக்குதலை எதிர்த்ததோ, எது காலநிலை மாற்றங்களைத் தாங்கிக்கொண்டதோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து  சேமித்து வைத்துத் திரும்பத் திரும்பப் பயிரிட்டனர்.  அப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கலப்பின முறைகளால் மேம்படுத்தப்பட்டு, சேமிக்கப்பட்டவிதைகள் தான் இன்று நாம் உபயோகிக்கும், உண்ணும் விதைகள். எளிய உதாரணமாக மக்காச்சோளத்தை சொல்லலாம், அமெரிக்க பழங்குடியினர் பண்டைய காலத்தில் பயிரிட்ட மக்காச்சோளத்திலிருந்து நீண்ட கதிரும், கொழுத்த விதைமணிகளும், அழுத்தமான நிறங்களும் கொண்டவற்றை மட்டுமே சேமித்து  பயிரிட்டனர்.

பல நாகரீகங்களின் தொன்மங்களிலும் விதை சேமிப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அறிவின் கடவுள் அஹுரா பண்டைய பெர்சியாவின் மன்னரான யிமாவை ’வரா’ என்னும் நிலத்தடி வங்கியில் உலகின் ஒவ்வொரு தாவரத்திலிருந்தும்   குறைகளற்றவையாக, 300 குளிர்காலங்களை தாங்கியவையாக இரு விதைகளை எடுத்துச் சேமிக்கச்சொல்லியதாக உலகின் பழமை வாய்ந்த சமயங்களில் ஒன்றான ஜொராஷ்ட்ரிய தொன்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நார்ஸ் தொன்மமும் இதற்கு இணையான  Odainsaker என்னும்  இயற்கைப் பேரழிவுகளின்போது பொது மக்களும் தாவரங்களும் பாதுகாப்பாக இருக்கும்  நிலத்தடி பூங்காவொன்றை  குறிப்பிடுகிறது. பஞ்சகாலம் வந்தால் தேவைப்படுமென்று ஜோசப் விதைகளைச் சேமித்ததைக் குறித்து புனித வேதகாமம் குறிப்பிடுகிறது.

மத்திய கிழக்குநாடுகளில் நடந்த அகழ்வாய்வுகளில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகக் களி மண் பானைகளிலும் நிலத்தடி குழிகளிலும் சேமித்துவைக்கப்பட்ட விதைகளின் எச்சங்கள் கிடைத்திருக்கின்றன. எகிப்தின்பிரமிடுகளும் விதைகள் பல ஆண்டுகள் சேமிக்கப்படுவதற்கு தேவையான சீரான வெப்பநிலை கொண்ட உள்கட்டமைப்பினைக் கொண்டிருக்கின்றன.

உலகின் எல்லா கலாச்சாரங்களிலும் விதைகள் இன்றியமையாத பங்காற்றுகின்றன.  குறிப்பாக நெல் பல கலாச்சாரங்களின் மையப் பகுதியாக இருக்கிறது. 

எத்தனை பஞ்ச காலமானாலும் விதைநெல்லை உணவுக்குப் பயன்படுத்துவதில்லை என்பது தமிழர் மரபு.   விதை சேமிப்பென்பது உலக நாடுகளனைத்திலும் மிக முக்கியமான விவசாயவழிகளில் ஒன்றாக இருந்துவருகிறது.விருக்‌ஷ ஆயுர்வேதம், அர்த்தசாஸ்திரம் ஆகிய பண்டைய நூல்களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பல வகையான விதை சேமிப்பு முறைகள் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

நிலத்தடியில் உருளை வடிவ குழி வெட்டி அதில் தானியங்கள் சேமிக்கும் வழக்கமும் இந்தியாவில் இருந்தது. தமிழகத்தின் தானியக்களஞ்சியங்கள், குதிர்கள்,  பத்தாயங்கள் ஆகியவையும் தானிய சேமிப்புக்கிடங்குகள் தான்.தஞ்சாவூரில் அன்றெல்லாம் திருமணத்தின்போது எந்த வீட்டில் குதிரும் பத்தாயமும் இருக்கிறதோ அங்குதான் எதிர்காலதிட்டமிடல் இருக்கும் என்று பெண் கொடுப்பார்கள். 

பாபநாசம் அருகே திருப்பாலத்துறையில் உள்ள பாலைவனநாதர் கோயிலில்  1640 -ல் கட்டப்பட்ட  மிகப்பெரிய தானியக் களஞ்சியம் இருக்கிறது. பூச்சிகள் அண்டாமல் நெல்லைப்பாதுகாக்க  அந்தக்காலத்திலேயே இப்படியொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.   36 அடி உயரமும், 84 அடி சுற்றளவும் கொண்ட, 90 ஆயிரம் கிலோ தானியத்தைப் பல ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்க முடியும் அமைப்பான இதுவே ஆசியாவின் மிகப்பெரிய தானியக்களஞ்சியம். இன்றும் இந்தக் களஞ்சியம் எந்தச் சேதமுமின்றி இருக்கிறது.  

பண்டைய இந்தியாவில் விதைகளைச் செம்மண்ணில் பிசைந்து  பந்துகளாக உருட்டிவைத்துப் பாதுகாப்பது எளிய வழிமுறையாக இருந்தது. இன்றும் தமிழக கிராமங்களில் மண் கட்டிய பயறு வகைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தேடிச்சென்று விரும்பி வாங்குவோரும் உண்டு, அவற்றின் சுவையும் அபாரமாக இருக்கும்.

’சந்தகா’  (Sandaka) எனப்படும் 12  குவிண்டால் அளவு விதைகளைச் சேமித்து வைக்கும்  நான்கு கால்களும், பல அறைகளும் கொண்டிருக்கும் மரப்பெட்டிகள் இந்தியாவில் இருந்தன.

மிகப்பெரிய விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் ஏராளமான விதைகளைச் சேமித்து வைக்க ’கோத்தி’ (Kothi) எனப்படும் பெரிய சேமிப்பு அறைகள் இருந்தன. இவற்றில் சோளமும், நெல்லும் சேமிக்கப்பட்டன.இந்த அறையின் ஒரு மூலையிலிருந்து தானியங்களை எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும்.

’உத்ரானி’ (Utrani) எனப்படும் சுட்ட களிமண் பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்துப் பலவகையான தானியங்களும் விதைகளும் சேமிக்கப்பட்டன. ஹகேவு  (Hagevu)  எனப்படும் நிலத்தடிக் குழிகள் அமைக்கப்பட்டு அவற்றில் வைக்கோல் மற்றும் கற்களைச் சுற்றிலும் வைத்து, குழியின் வாய் பிசைந்த மண்ணால் மூடப்பட்டு சோளம்  சேமிக்கப்பட்டது.

சிறிய அளவுகளில் விதைகளைச் சேமித்து வைக்கச் சுரைக்குடுவைகளும் இந்தியாவெங்கும் பயன்பாட்டில் இருந்தன. சுரைக்குடுவையில் விதைகளை இட்டு அதன் வாயைச் சாணம் அல்லது மண்ணால் அடைத்து, அவை கூரையில் கட்டித்தொங்கவிடப்பட்டன.

மூங்கில் மற்றும் பனையோலைப்பெட்டிகளும் பண்டிய இந்தியாவின் விதை சேமிப்பில் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தன. விதைகளைச் சாம்பல், செம்மண், வேப்பெண்ணெய், மரத்தூள் ஆகியவற்றுடன் கலந்து சேமிக்கும் வழக்கம் இன்று வரையிலுமே இருக்கிறது. இன்றும் கிராமப்புறங்களில் தானியங்கள், பயறுவகை விதைகளைச் சேமிக்க அவற்றுடன் உலர்ந்த வேம்பு, தும்பை, புன்னை, புங்கை இலைகளைப் போட்டுவைக்கும் வழக்கம் இருக்கிறது 

இந்து மதக்கலாச்சாரத்தில் எந்த மங்கல நிகழ்வானாலும் நவதானியங்களின் பயன்பாடு இருக்கிறது, திருமண விழாக்களில் மஞ்சள் அரிசி தூவுவதும், கல்வி துவங்குகையில் நெல்லில் முதற் சொல் எழுதுவதுமாகப் பல கலாச்சாரங்களில் பொதுவான விதைகளின் மங்கலப்பயன்பாடுகள்  பலகாலமாக இருந்துவருகிறது.

தாவரவியலாளர்கள் உலகில் இதுவரை 370000 விதை கொண்டிருக்கும் தாவரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர்.  மேலும் ஆண்டுகொருமுறை புதிதாக 2000 வகைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. பல தாவர வகைகள் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்  விரைவாக அழிந்துகொண்டுமிருக்கின்றன  சமீபத்திய புள்ளி விவரமொன்று ஐந்தில் ஒரு தாவரம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்கிறது. 

1950-களில் சீனாவில் புழக்கத்தில் இருந்த அரிசி வகைகளில் இப்போது வெறும் 10 % தான் பயன்பாட்டில் இருக்கின்றன. அமெரிக்கா 1900- களில் இருந்த  அதன் 90% காய்கறி மற்றும் பழ ரகங்களை முற்றிலும் இழந்து விட்டிருக்கிறது.

உலகில் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கும் தாவர வகைகளில் சில நூறு வகைகளே மனிதர்களின் உணவுத்தாவரங்களாக இருக்கின்றன. அவற்றிலும் மனிதர்களின் உணவுக்கான 95%  பயன்பாட்டில் இப்போது இருப்பது 35 வகையான பயிர்கள் மட்டுமே. அவற்றிலும் வெகுசில உணவுப் பயிர்களே பயிராக்கப்பன்றன. அவையும் அழியும் அபாயத்தில் இருக்கின்றன. இயற்கை பேரழிவுகளும் பெருந்தொற்றுக்களும் போர் அபாயங்களும் சூழ்ந்திருக்கும் இக்காலத்தில் முன்பெப்போதும் விடவும் விதைப் பாதுகாப்பு மிக முக்கியமானதாகி விட்டிருக்கிறது.உலகெங்கிலும் 40% விதைகள் அழியும் அபாயத்தில் இருப்பதால் விதை சேமிப்பு என்பது மிக முக்கியமானதாகி விட்டிருக்கிறது. 

லெனின்கிராட் முற்றுகையைப்போலவே 2011-ல் சிரியா போரின்போது அங்கிருந்த பெரிய விதை வங்கி புரட்சியாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்த விதை வங்கிகள் முற்றிலும் போரில் அழிந்துவிட்டன, இந்த வங்கிகளின்  அழிந்த விதைகள் உலக விதை வங்கிகள் எதிலுமே சேமித்துவைக்க படவில்லை.  போர் மட்டுமல்ல பிலிபைன்ஸில் நடந்ததுபோல் இயற்கை பேரழிவுகளும் விதை வங்கிகளை அழித்திருக்கின்றது.  பிலிப்பைன் தேசிய ஜீன் வங்கியின் 45,000  வகை விதைகள் 2006 வெள்ளத்தில் பாதிக்கு மேல் சேதமாகின மீதம் இருந்தவை மீண்டும் 2012-ல்  எற்பட்ட தீவிபத்தில் அழிந்தன. எனவேதான் உலகெங்கிலும் விதை பாதுகாப்பு என்பது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இன்று உலகளவில் சுமார் 1700 வகையான விதை வங்கிகள் செயல்பாட்டில் இருக்கின்றன.

 இந்த விதைவங்கிகள் பொதுவாக மூன்று வகைப்படுகின்றன 

  • விதை உதவி வங்கிகள் (Assistentialist seed banks) -இவற்றில் சிறு விவசாயிகளுக்குத் தேவையான அதிக விளைச்சல் அளிக்கும், பராமரிப்பு அதிகம் தேவைப்படாத, குறைந்த மூலதனம் தேவைப்படும்  குறுகியகாலப் பயிர்களின் விதைகள் சேமித்து வைக்கப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
  • உற்பத்தி வங்கிகள் (Productivist seed banks)- மிகப்பெரிய அளவில் விதைகள் இதில் சேகரிக்கப்படுகின்றன. அதிக நிலப்பரப்பில் நல்ல விளைச்சல் கொடுக்கும், நோயெதிர்ப்புச் சக்தி கொண்டிருக்கும் உணவுப்பயிர்களின் விதைகள் இங்கு சேமிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு விதை மாதிரிகள்அளிக்கபடுகின்றது.’ 
  • பாதுகாப்பு வங்கிகள்(Preservationist seed banks)- இவற்றில்தான் உலகநாடுகளின் அனைத்து வகையான விதைகளும் நெடுங்காலத்துக்கு சேமிக்கப்படுகின்றன. 

விதைகளைச் சேமித்து வைப்பதோடு தேவைப்படுவோருக்கு  தொடர்ந்து அளிக்கும் வங்கி   seed library  எனப்படுகிறது. அமெரிக்காவில் இத்தகைய வங்கிகள் 500க்கும் மேல் செயல்படுகின்றன.seed bank எனப்படும் விதை வங்கி  விதைகளை, விதைகளின் மரபணுக்களைப் பலகாலத்துக்கு சேமித்து வைக்கிறது.  

ஐக்கிய இராச்சியத்தின் மில்லினியம் விதை வங்கி, ஆர்டிக் பகுதியின்  ஸ்வால்பாட் (Svalbard Global Seed Vault) ஆகியவை விதை பாதுகாப்பு வங்கிகளில்  குறிப்பிடத் தகுந்தவை.

நார்வீஜிய தீவொன்றில் பனிமலையின் அடியாழத்தில் ஸ்வால்பாட்  வங்கியின்பாதுகாப்புப்பெட்டகங்களில் உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட  லட்சக்கணக்கான விதைகள் சேமித்துவைக்கப் பட்டிருக்கின்றன.  ஸ்வால்பாட் உலகவிதை வங்கி   இயற்கைப் பேரழிவுகளால் உலகின் முக்கிய உணவுப்பயிர்களின் விதைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. 2008-ல் இருந்து  இங்கு விதைகள் சேமிக்கப்படுகிறது.  இந்த வங்கியின் குண்டு துளைக்காத அணுஆயுத தாக்குதலிலும் பாதிப்படையாத சுவர்கள் 1 மீ தடிமன் கொண்டவை.

 2024-ன் கணக்கெடுப்பின்படி நிச்சயமற்ற எதிர்காலதிற்கான சேகரிப்பாகச் சுமார் 1,280,677   விதைகள் இந்த வங்கியில் பனிமலைக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு சேமித்து வைக்கப்பட்டிருப்பது விதைகள் மட்டுமல்ல 13000 வருடங்களுக்கு முன்பான உலக விவசாய வரலாறும்தான். இதுவே உலகின் மிகப்பெரிய விதை வங்கி.

மற்றுமொரு முக்கியமான விதை வங்கி Millennium Seed Bank. லண்டனில் செயல்படும் இந்த விதைவங்கி ஸ்வால்பாட் வங்கியைக் காட்டிலும் 100 மடங்கு பெரியது. ஆனால் இதன் சேமிப்பு அளவு ஸ்வால்பாட் வங்கியைக்காட்டிலும் குறைவு. இவ்விரண்டு வங்கிகளிலும் சேமிப்பிலிருக்கும் விதைகளின் முளைதிறன் ஒவ்வொரு பத்து வருடத்துக்கொருமுறை ஆய்வுக்குள்ளாக்கப்படுகிறது. முளைதிறன் இழந்தவை உடனடியாக மீண்டும் சேகரிக்கப்படுகின்றன. 

இவற்றைப் போல உலகெங்கிலும் இப்படி பெரிய மற்றும் சிறிய அளவிலான விதை வங்கிகள் செயல்படுகின்றன.இவற்றில் சில உணவுப் பயிர்களின் விதைகளையும் மற்றவை காட்டுத்தாவரங்களின் விதைகளையும் சேமிக்கின்றன.

 1986-ல் துவங்கபட்ட George Hulbert Seed Vault  என்னும்  New South Wales-ல் இருக்கும் விதைவங்கி   ஆஸ்திரேலிய நெல் ரகங்களின் விதைகளை மட்டும் சேமிக்கிறது, குறிப்பாகப் பசுமைப் புரட்சிக்கு முந்தைய நெல் ரகங்கள் இங்கு சேமிக்கப்படுகின்றன. 

இந்தியாவில் BBA எனப்படும்  (Beej Bachao Andolan — Save the Seeds movement)   விதைகளைச் சேகரிக்கும் இயக்கம் 1980-களில் விஜய் ஜர்தாரி என்பவரால் உத்தரகண்டில் தொடங்கப்பட்டது. இங்கு  நாட்டு விதைகள் சேமிக்கப்படுகின்றன. BBA-வின் முன்னெடுப்பில்  2010-ல் இந்திய விதை வங்கி லடாக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   இதில் ஆப்ரிகாட், பார்லி, முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட சுமார் 200 வகை பயிர்களின் 10,000 விதைகள் சேமிக்கப் பட்டிருக்கின்றது.

Desert Legume Program (DELEP)  எனப்படும் பாலை நிலப்பயறு விதைகளுக்கான பிரத்யேக வங்கி உலகின் வறண்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சுமார் 6 கண்டங்களின், 65 நாடுகளைச் சேர்ந்த,  1400 பயறு வகைச்சிற்றினங்களின்  3600 வகை  விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன. 

உலகின் மாபெரும் விதை வங்கிகளில் ஒன்றான National Gene Bank of Plants,  1990-களில் உக்ரைனில் துவங்கபட்டது. 2022ல் ரஷ்யப்டையினரால் இந்த வங்கி பெருமளவில் சேதமுற்றாலும் அதன் முக்கியமான விதைகள் பல்லாயிரக்கணக்கில் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. 

பிரான்சின் ’INRAE Centre for Vegetable Germplasm’  எனப்படும் விதை வங்கியில்  கத்தரிக்காய், மிளகாய், தக்காளி, பூசணி மற்றும் கீரைச்செடிகளின் வகைகளின் 10,000 வகைகள் பாதுகாக்கபட்டிருக்கிறது 

பெல்ஜியத்தின் ’Meise Botanical Garden’  விதை வங்கியில் காட்டு பீன்ஸ், காட்டு வாழை உள்ளிட்ட  பெல்ஜியத்தின் பூர்விக தாவரங்களின் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.

இப்படி  மனிதர்களால் உருவாக்கப்படும் விதை வங்கிகள் மட்டுமல்லாமல் இயற்கையும் விதை வங்கிகளை உண்டாக்குகிறது. பல தாவரங்கள் வளரும் இடங்களிலேயே அவற்றின் விதைகளைச் சேமிக்கின்றன. ஒரு சில தாவரங்களின் சிறு விதைகள் மழை நீருடன் கலந்து நிலத்தின் நுண்ணிய இடைவெளிகள்மூலம் நிலத்தடிக்குச் செல்கின்றன. ஒரு சில விதைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு நிலத்தடியில் சேகரமாகின்றன. மேலும் சில அவற்றின் மிகச்சிறிய அளவினால் நிலத்தின் விரிசல்களில் நுழைந்து ஆழத்திற்கு செல்கின்றன்.

நிலவங்கிகளில் இருக்கும் விதைகளில்  Striga (witchweed) சிற்றினங்களின் விதைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. ஏனெனில் அவை அதிக எண்ணிக்கையில் விதைகளை உருவாக்குகின்றன. ஆக்கிரமிக்கும் இயல்புடைய  ஸ்ட்ரைகா சுமார் லட்சத்திலிருந்து 5 லட்சம்வரை விதைகளை உருவாக்கும்.

கலைக்கொல்லி உபயோகம் அதிகமாவதற்கு முன்பு வரை ஐரோப்பாவெங்கும் நிலவங்கிகளில்   Papaver rhoeas,  விதைகள் ஏராளமாகச் சேமிக்கபட்டிருந்தன.வட அமெரிக்காவுக்கு சொந்தமான  Androsace septentrionalisஎன்னும் தாவரத்தின் விதைகள் நிலதின்த்  மேலிருப்பதை விட நிலத்தடியில்தான்  அதிகளவில் இருக்கிறது. 

பல தாவரவியலாளர்கள்  அதிகம் அறியபட்டிருக்காத இந்த நிலவிதை வங்கிகளைக் குறித்து பல வருடங்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.இந்த ஆய்வு முடிவுகள் நிலவங்கியில் சேகரமாகி, பலகாலம்  நிலத்தடியில் முளைதிறன் அழியாமல் காத்திருக்கும் விதைகள் அளவில் சிறியவையாகவும்,விழுந்தவுடனே முளைப்பவை  தட்டையாகப் பெரிதாகவும் இருக்கின்றன என்கிறது

நில வங்கிக்குள் சேமித்து வைக்கப்படும் விதைகள் பொதுவாக 3 மில்லி கிராம் எடைக்கும் குறைவாக இருக்கின்றன, அவற்றிற்கு இறகுகள், கொக்கிகள், மயிரிழைகள் போன்ற  விதை மரவ உதவும் அமைப்புக்கள் எதுவும் இருப்பதில்லை என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. மண்புழுக்களும் எறும்புகளும் கூட நில வங்கியில் விதைகள் சேமிப்பதில் பெரும் உதவி செய்கின்றன. நிலத்தடியில் காத்திருப்பதால் இவ்விதைகள் மேய்ச்சல் விலங்குகள், இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றன.  நில வங்கியின் விதைகள் முளைப்பதை காலம்தான் முடிவு செய்கிறது. எப்போது அடிமண் மேலே வருகிறதோ அப்போதுதான் இவை முளைக்கின்றன.

தாவரங்களின் விதைகள் ஒவ்வொன்றும் தாய்மரத்திலிருந்து பிரிந்ததும் முளைப்பதில்லை ஒவ்வொரு விதையும் முளைப்பதற்கான காலம் வேறுபடும்.சில விதைகள் உடனே முளைத்துவிடும், ஒரு சில விதைகள் முளைப்பதற்கு முன் உறக்ககாலம் எடுத்துக்கொள்ளும். உரிய தருணம் வரும்போது அவை முளைத்தெழும். விதைகள் முளைக்கையில் ஒரு புதுத் தாவரம் உருவாவதில்லை, உண்மையில்  விதை என்பதே நுண்வடிவில் ஒரு தாவரம்தான். அது நீரிலோ, காற்றிலோ, பூச்சி அல்லது விலங்குகளாலோ மனிதச்செயல்படுகளாலோ சரியான நிலத்திற்கு எடுத்துச்செல்லபட்டு அங்கு  முளைக்கின்றன.

விதைமுளைதிறன் என்பது ஒரு விதை கனியிலிருந்து பிரிந்தபின்னர் எப்போது முளைக்கிறது என்பதை குறிக்கிறது.விதைகள் முளைக்குமுன்னே செல்லும் உறக்கநிலை தாவரவியலாளர்களின், சூழியலாளர்களின் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களில் ஒன்று.  விதைகளின் முளைதிறன் குறித்த சுவாரஸ்யமான ஆய்வுகள் உலகின் பல நாடுகளில் நடந்திருக்கின்றன. மிச்சிகனில் 1879ல் இந்த ஆய்வுகளை  ஜேம்ஸ் பேல்  James Beal என்பவர் துவங்கினார். 21 சிற்றினங்களின் 50 விதைகளை இவர் 20 பாட்டில்களில் அடைத்து நிலத்தில் புதைத்தார். ஐந்து வருடங்களுக்கொருமுறை ஒவ்வொரு சிற்றினத்தின் விதைகளும் மேலே எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் முளைக்கவைக்கப்பட்டன

அவரது காலத்திற்கு பின்னர் அவற்றை எடுத்து முளைக்க வைப்பதற்கான காலம் மிக நீண்டது.1980-ல் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த ஆய்வுகள் தொடர்ந்தபோது புதைக்கப்பட்டவற்றில்   moth mullein (Verbascum blattaria), common mullein (Verbascum thapsus) மற்றும்  common mallow (Malva neglecta) ஆகிய 3 சிற்றினங்களின் விதைகள் மட்டும் முளைத்தன. இப்படி பல நாடுகளில் ஆய்வுகள் பலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது.

வில்லோ மற்றும் பாப்லர் விதைகள் சரியான இடத்தில் விழுந்து ஒரு சில நாட்களில் முளைக்காவிட்டால் அழிந்துவிடும். மக்காச்சோளம், வெங்காயம் போன்றவற்றின் விதைகள் இரண்டு வருடங்கள் கூடத் தாக்குபிடிப்பவை .பீட்ரூட், கேரட், பூசணி, தர்பூசணி விதைகள்  5-லிருந்து 6 வருடங்கள் முளைதிறனை தக்க வைப்பவை. வெள்ளரிக்காய் விதைகள்; 10 வருடங்களுக்கு முளைதிறன் கொண்டிருப்பவை.  சக்ரவர்த்தினி கீரையின் (Chenopodium album) விதைகளும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முளைதிறனை தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை.  

விதைகளின் முளைதிறன் பலகாரணிகளால் தீர்மானிக்கபடுகிறது.நிலத்தின் ஆழத்தில் புதையும் விதைகள் நெடுங்காலம் பாதுகாப்பாக இருப்பதுண்டு.  

பொதுவாகக் கடினமான மேலுறை கொண்டிருக்கும் விதைகளின் முளைதிறன் வெகுநாட்களுக்கு நீடித்திருக்கும், இதைப் பயறுவகை விதைகளிலும் தாமரை, காப்பி ஆகியவற்றிலும் காணலாம். 50 வருடங்களுக்கும் மேலான தாமரைவிதைகளை சாதரணமாக முளைக்கவைத்து தாமரைக்கொடி வளர்க்கப்படுகிறது.

 சீன ஏரிப் படுகையிலிருந்து எடுக்கப்பட்ட 1250 வருடங்களூக்கு முன்பான தாமரைவிதைகளை நட்டுவைத்து அவற்றில் பல முளைத்துக் கொடியாகி பலகொடிகளில் மலர்களும் மலர்ந்தன.  1940-ல் லண்டன் வரலாற்று அருங்காட்சியகம் நெருப்பில் சேதமுற்றபோது அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த விதைகளில் பலவிதைகள் நெருப்பின் வெப்பத்தினாலும், நெருப்பை அணைக்க ஊற்றப்பட்ட நீரினாலும் முளைத்தன. அப்படி முளைத்தவற்றில் சில விதைகள் 1793-ல் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட சிலைவாகை (Albizia chinensis) மரத்தின் விதைகள்.

தெற்கு இஸ்ரேலின் மாஸுடா கோட்டை இடிபாடுகளில் (rubble of Masada) இருந்து அறிவியலாளர்கள் கண்டெடுத்த  2000 வருடங்கள் பழமையான ஒரு பேரீச்சை விதை வெற்றிகரமாகச் சமீபத்தில் முளைக்கச் செய்யப்பட்டது. இதுவே உலகின் பழமையான விதைகளில் முளைத்து வளர்ந்தவற்றில் முதன்மையானது . 1960-களில் ஜூடியான் பாலையில்  கிமு35-ல் கட்டப்பட்ட  மாஸுடா கோட்டையின் இடிபாடுகளில் அகழ்வாய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சீசாவில் சேமிக்கப்பட்டிருந்த ஏராளமான  பேரீச்சை விதைகள் கிடைத்தன. ஜூரிச் பல்கலைகழகதின் ரேடியோ கார்பன் கணக்கீடுகள் அவ்விதைகள் கிமு  155- 64 பொ யு காலத்தைச் சேர்ந்தவையென உறுதிப்படுத்தின. பின்னர் அவை 40 ஆண்டுகள்  இஸ்ரேலின் Bar-Ilan University-ல் பாதுகாக்கபட்டன.

அவற்றில் மூன்று விதைகளை  ஜெருசேலத்தின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அங்கமாகிய  Louis L. Borick Natural Medicine Research Center  -ன் இயக்குநரும் இயற்கை மருந்துகளின் ஆய்வில் ஈடுபட்டிருந்தவருமாகிய சாரா சலோன் நட்டுவைத்தார் 

2000 ஆண்டுகளுக்குப் பிறகு   2008-ல் இந்த ஜுடியான் பேரீச்சை விதைகளில் ஒன்று  முளைத்தது.  முளைத்தெழுந்த அந்த பேரீச்சைக்கு  பைபிளில் வரும்  நெடுங்காலம் வாழ்ந்தவரான மெத்தூசலா என்னும் பெயர் வைக்கப்பட்டது.(உலகின் மிகப் பழமையான 4856 வயதான  பைன் மரமொன்றிற்கும் மெத்தூசலா என்றுதான் பெயர்)

சில வருடங்களுக்குப் பிறகு சாராவும் அவரது ஆய்வுக்குழுவினரும் தொட்டியில் வளர்ந்த அந்தப் பேரீச்சை மரத்தைக் குறித்தும் அதன் வயதை ரேடியோ கார்பன் கணகீட்டில் கண்டுபிடித்ததையும்   Science  இதழில் கட்டுரையாக வெளியிட்டார்கள். அத்தனை ஆண்டுகாலம் அவ்விதை முளைதிறனை தக்க வைத்திருந்தது பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. பாலையில் கடும் வெப்பம் அதனைப் பாதுகாத்திருக்கலாமென யூகிக்கப் பட்டது

2008- இம்மரம் 12 நீண்ட கூட்டிலைகளுடன் ஒரு பெரிய தொட்டியில் 1.4 மீ உயரம் வளர்ந்திருந்தது, 2011 மார்ச்சில் மெத்தூசலா பேரீச்சை மலர்ந்தபின்னர் அது ஆண் மரம் எனத் தெரியவந்தது. 2011 நவம்பரில்  2.5மீ வளர்ந்திருந்த மெத்தூசலா தொட்டியிலிருந்து நிலத்துக்கு மாற்றப்பட்டது. 2015 மே மாதம் இது 3 மீ உயரம் அடைந்திருந்தது, இதன் மலர்களில் மகரந்தங்கள் உருவாகியிருந்தன. இம்மரத்தின் மகரந்தங்களைக்கொண்டு எகிதிய பேரீச்சை பெண்மரமொன்றை  அயல்மகரந்த சேர்க்கைக்கு உட்படுத்தத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் முன்பு கிடைத்த   ஜுடாயன் பாலைவிதைகளிலிருந்தே மீண்டும் 32விதைகள் முளைத்து வளர்ந்திருந்தன. அவற்றில் பிழைத்து நன்றாக வளர்ந்த 6 நாற்றுகளுக்கு ஆதாம், ஜோனா, யுரியல்,போவாஸ், ஜூடியா மற்றும் ஹென்னா எனப் பெயரிடப்பட்டது.  இவற்றில் பெண் மரங்களும் இருந்ததால் அவற்றில் வெற்றிகரமாக மெத்தூசலாவின் மகரந்தங்களைக் கொண்டு  2019–லிருந்து மகரந்த சேர்க்கை ஆய்வுகள் நடத்தப்பட்டது. 2021-ல் ஹன்னா ஏராளமான பேரீச்சைக்கனிகளை அளித்தது.

ஜூடியான் பாலைவனப்பகுதி  நெடுங்காலமாகவே தரமான பேரீச்சைகளுக்கு புகழ்பெற்றிருந்தது, ஆனால் அப்பகுதியின் பேரீச்சைமரங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இந்த  மெத்தூசலா விதையில் மரபணு ஆய்வுகளிலும் அதன் தரத்தைக் குறித்த தகவல்களை அறிய உதவவில்லை.  இப்போது ஹன்னா அளித்திருக்கும் விதைகளில் பலவகையான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

இதே ஜூடியான் பாலைக்குகையொன்றிலிருந்து 1980-ல் 993-லிருந்து 1202-க்கு இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்ததாக இருக்கும் என யூகிக்கப்பட்ட சுமார் 10,00 வருடங்கள் பழமையான ஒரு விதை கண்டெடுக்கப்பட்டது. அது முளைதிறன் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்ததால் அது மெத்தூசலாவை முளைக்கச்செய்த சாரா சலோனினால் முளைக்கச்செய்யப்பட்டது. அப்படி முளைத்த அவ்விதை 14 ஆண்டுகள் வளர்ந்து மரமானது. ஷீபா எனப்பெயரிடப்பட்ட அம்மரம் பச்சைப்பசேலென்ற இலைகளுடன் 3 மீ உயரம் கொண்டிருக்கிறது.அதன் இலை, பிசின் மற்றும் மரக்கட்டையில் ஆய்வு செய்தபின்னர் அம்மரம் அழிந்துவிட்ட ஒன்று என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இம்மரம்  Commiphora பேரினத்தை சேர்ந்தது என்பதை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் இதில் மருத்துவப்பயன்கள் கொண்டிருக்கும் பல வேதிச் சேர்மங்கள் இருப்பதையும் கண்டறிந்திருக்கின்றனர். எனவே ஷீபா அதன் மருத்துவ உபயோகங்களுக்கென்று முன்பு வளர்க்கப்பட்டிருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது,  ஷீபா இனி மலர்ந்தால் மேலும் ஆய்வுகள் தொடரக்கூடும். 

2007-ல் செர்பியாவுக்கு சொந்தமான வெண்ணிற மலர்களை கொண்ட   Silene stenophylla என்னும் தாவரத்தின் 32,000 வருடத்திற்கு முந்தைய 600,000 உறைந்த கனிகள்  ரஷ்ய அறிவியலாளர்களால் செர்பிய நிலத்தடி உறைபனியின் 124 அடிக்கு கீழே பனியுக அணிலொன்றின்  70 பொந்துகளில் இருந்து  கண்டுபிடிக்கப்பட்டது.   விதைகள் முளைக்காமல் இருப்பதற்காக அணில்கள் அவற்றை  உடைத்திருந்தன எனினும் அவற்றில் உடைபடாமல் இருந்த 3 கனிகளில் இருந்த விதைகள்  2012-ல்  முளைக்கச்செய்யப்பட்டன. அந்த  விதைகள் முளைதிறனை இழந்துவிட்டிருந்தன என்றாலும் கனிகளின் சூலொட்டுத்திசுவிலிருந்து புதிய தாவரங்கள்  உருவாக்கப்பட்டன. 

இப்படி உறைபனி மற்றும் வெப்பத்தினால் உலர்வதை தாங்கிக்கொண்டு முளைதிறனை தக்க வைத்துக்கொள்ளும் விதைகள் Orthodox seeds  எனப்படுகின்றன.  வெப்பத்தையும் உறைபனியையும் தாக்குபிடிக்க முடியாமல் குறுகிய காலத்திலேயே முளைதிறனை இழப்பவை recalcitrant seeds எனப்படுகின்றன. 

 மிகப்பழமையான விதைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகப் பல சமயம் கட்டுக்கதைகளும், தவறான தகவல்களும் கூட வந்ததுண்டு.

1954-ல்  கனடாவின் யுகான் (Yukon) பிரதேச பனிப்பாறைகளிலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முன்பான  லுபின் விதைகள்  (Lupinus arcticus) எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவ்விதைகள் 1966-ல் முளைக்க வைக்கப்பட்டன, ஆனால் கார்பன் கணக்கீடுகள் அவை  மிகப்பழைய முயல் பொந்துகளிலிருந்து எடுக்கப்பட்ட 10 வருடப்பழமையானவை என்பதைக் காட்டின.

2009 டிசம்பரில் துருக்கிய நாளிதழொன்றில் 4000 ஆண்டு பழமையான லெண்டில் விதை முளைக்கச்செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது.பின்னர் அது தவறான தகவல் எனத் தெரியவந்தது..

இதைப்போலவே எகிப்திய பிரமிடுகளிலிருந்து எடுக்கப்பட்ட  3000 ஆண்டு பழமையான  கோதுமை விதைகள் முளைத்ததாகப் பல கட்டுக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கோதுமை விதைகள் போலி ஆய்வாளர்களால் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டதும் நடந்தது. ஆனால் ராயல் அறிவியல் பூங்காவில் அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி அவற்றில் முளைதிறன் முற்றிலும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. 

கான்கிரீட் தரையில் மிகச்சிறிய விரிசலிலிருந்து முளைத்து மலரளிக்கும் ஒரு சிறுசெடி,  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முளைதிறனை தக்கவைத்துக்கொண்டு, இன்றைய சூழலில் முளைப்பவையென விதைகள் நமக்களிக்கும் ஆச்சர்யங்கள் ஏராளமானவை. இனி ஏதெனும் ஒரு கனியை உண்டு, விதைகளை அலட்சியமாகத் துப்புமுன்னர் அதனுள்ளிருக்கும் உயிர்ச்சக்தியை, வானை, ஒளியை காண்பதற்காக அது கொண்டிருக்கும் கனவையெல்லாம் எண்ணிப்பாருங்கள்.

விதைகள் வெறும் தாவர பாகங்கள் அல்ல அவை நமது மூதாதைகள், அவற்றிற்குள் வரலாறும் எண்ணற்ற கதைகளும் புதைந்திருக்கின்றன, இன்று நம் முன்னிருக்கும் விதைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு நமது கலாச்சாரங்களுடன் இணைந்திருப்பவைதான். விதைகளின்பாதுகாப்பென்பது நமது  மூதாதையர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதுதான்.

மரவுரி

சமீபத்தில் யானைப்பலா மரங்களை குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன் buttress .roots என்னும் பலகை வேர்களை கொண்டிருக்கும் மரங்களை தேடத் துவங்கித்தான் யானைப்பலாவிற்கு வந்திருந்தேன். யானைப்பலாவின் மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் மரவுரியை இந்தோனேசிய மூரத் மற்றும் டயாக் பழங்குடியினர் வெகுவாக உபயோகப்படுத்துவதை வாசித்தபோது, பலகை வேர்களிலிருந்து விலகி மரவுரிக்குத் தேடல் சென்றுவிட்டது. Artocarpus Tamaran என்னும் இந்த யானைப்பலா மட்டுமல்லாது பலாவின் பல வகைகளில் இருந்தும் மரவுரி எடுக்கப்படுகிறது.

பிறகு பழங்குடியினரின் மரவுரி பயன்பாட்டைக்குறித்து விரிவாக வாசித்தேன். உகாண்டா பழங்குடியினரின் மரவுரிகளுக்கு 2005ல் யுனெஸ்கோவின் கலாச்சார அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது. அது தொடர்பான காணொளிகளையும் பார்க்கையில் வெண்முரசில் மரவுரி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. பண்டைய இந்தியாவில் பட்டு, கம்பளி, பருத்தி, மற்றும் லினன் துணிகள் பயன்பாட்டில் இருந்தன. மரவுரியும் அவற்றிற்கிணையாகவே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை வெண்முரசை மீள வாசிக்கையில் அறிய முடிந்தது.

வெண்முரசு வாசிப்புக்கு முன்பு வரை மரவுரி என்பது மரப்பட்டையின் நிறத்தில் உடுத்துக்கொள்ளும் ஆடை மட்டுமே என்று நினைத்திருந்தேன். ஆடையாகவும், போர்வையாகவும், பாயாகவும் இன்னும் பலவிதங்களிலும் மரவுரி பயன்பட்டதும் அவை பலவண்ணங்களில் சாயமேற்றப்பட்டிருந்ததையும் வெண்முரசின் இந்த மீள் வாசிப்பின் போதுதான் அறிந்துகொண்டேன்.

ஆடைகளுக்கென்றும், குதிரைகளின் உடலை உருவிவிடவென்றும், உடல் துவட்டிக்கொள்ளவும், போர்த்திக்கொள்ளவும், பாயாக, மெத்தையாக படுத்துக்கொள்ளவும், சிகிச்சையளிக்கையில் பஞ்சைப்போலவும், திரைச்சீலைகளாகவும் என பல மரவுரி பயன்பாடுகள் இருந்திருக்கின்றன.

மரவுரி உடை. பகுண்டாக்கள்

மரவுரி குவியல்களுக்கடியிலிருந்து விரைந்து மறைகிறது நாகமொன்று, வெய்யோன் மகனை கருவிலேயே அழிக்க வந்தவளை மரவுரிக்குள் மறைந்திருந்து தீண்டுகிறது மற்றுமொரு அரசநாகம், மரவுரிப்பொதிகள் வண்டிகளில் வருகின்றன, விடுதிகளில் பயணிகளுக்களிக்கவென்று மரவுரிப்பாய்கள் சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. அரசவாழ்வை துறந்து கானேகுகையிலும், நாடு நீங்குகையிலும் மரவுரியாடை அணிந்து கொள்ளப்படுகிறது. பிறந்த குழந்தைகள் மரவுரியில் சுற்றிக் கொண்டு வரப்படுகின்றன. வெண்முரசில் பற்பல இடங்களில் பலவித மரவுரி பயன்பாடுகள் உணர்வுபூர்வமான பல நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருக்கின்றது.

முதற்கனலில் புஷ்கரவனத்தில் இருந்து மரவுரியாடை அணிந்து புறப்படும் ஆஸ்திகன், ஜனமேஜயனின் வேளிவிச்சாலையில் வலப்பக்கம் வாழைப்பூ போல செந்நிற மரவுரியாடை அணிந்த முனிவர்கள் அமர்ந்திருப்பதை காண்பதிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மரவுரி, இறுதியில் முதலா விண்ணில் இளவரசர் ப்ரீஷித் நீர்க்கலமொன்றில் எடுத்து வரப்படுவதை சொல்லும் அஸ்தினபுரியின் பெருவணிகன் மிருத்திகன் குளித்து விட்டு மரவுரியால் தலை துவட்டி கொள்ளுவது வரை வெண்முரசின் அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

அரச ஆடைகளை துறந்து மரவுரி அணிந்து நாடுவிட்டு செல்லும் உணர்வுபூர்வமான காட்சிகள் வெண்முரசில் பல இருக்கின்றன.

பிரயாகையில் கோசலத்தை இளையோனாகவே அரியணை அமர்ந்து ஆண்ட இக்ஷ்வாகு குலத்து மன்னன் பகீரதன், தந்தை இறந்து குரல்கள் கேட்க துவங்கிய பின்னர் ஒருநாள் காலை தன் அரசைத் துறந்து, தனது இளையோனை அரசனாக்கிவிட்டு மரவுரி அணிந்து தன்னந்தனியனாக காடேகுகிறான்.

நீர்க்கோலத்தில் சூதுக்களத்திற்கு பின்னர் நகர் நீங்குகையில் அணிகள் களையபட்டு அரச உடைகளும் நீக்கபட்டு இறுதிச் சிற்றாடையுடன் நிற்கும் புஷ்கரனுக்கு ஒரு முதியவரிடமிருந்து மரவுரியை வாங்கி அளிக்கிறான் சுதீரன்.

பல முக்கிய ஆளுமைகள் நாடு நீங்குகையில் மரவுரி அணிந்தே செல்கின்றனர். க்ருத்ஸமதர் தன் இரு துணைவியரையும் சென்னிசூடி வணங்கிவிட்டு. மரவுரி அணிந்து, இரந்துண்டு, நாட்டை நடந்து நீங்குகிறார். அம்மரவுரியையும் களைந்துவிட்டு காட்டுக்குள் நுழைகிறார்.

பிருஹத்ரதனும் அரசுப்பொறுப்பை தலைமை அமைச்சர் பத்மரிடம் அளித்துவிட்டு மரவுரி அணிந்து வெறும்கோல் ஒன்றை கைக்கொண்டு நகர்நீங்குகிறார்.

நீர்க்கோலத்தில் அரங்கு நீங்குகையில் தமயந்திக்கும் அவல் மகலுக்கும் மாலினி மரவுரியடையை அளிக்க உத்தரவிடுகிறாள். ஒற்றை மரவுரி ஆடை அணிந்து தமயந்தி வெளியே வரும் தமயந்திக்கு அவ்வாடை பழக்கமில்லாததனால் அதை மார்புடன் இரு கைகளாலும் அள்ளிப் பற்றியிருப்பாள். அவளுடைய குதிகால்கள் வரைதான் அந்த ஆடை இருக்கும்.

புஷ்கரனும் நளனிடம் “நீ அணிந்திருக்கும் ஆடையும் இவ்வரசுக்குரியது. இங்குள்ள எவரிடமேனும் ஒரு மரவுரியை இரந்து பெற்று அணியலாம்” எனும்போது. கருணாகரர் அருகே நின்ற ஒருவனிடமிருந்து மரவுரியை வாங்கி ஒரு வீரனிடம் கொடுத்து நளனுக்கு அளிக்கச் சொல்கிறார். நளன் அதை அங்கே நின்றபடியே உடுத்துக்கொள்கிறான்.

உத்தாலகரிடம் இறுதிக்கணத்தில் இருக்கும் அயோததௌம்யர் ’இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் அவருக்கு தூய காயத்ரியையும் மரவுரியையும் அளித்ததை சொல்லி தான் அதுவரை ஆடையென்றும் அணியென்றும் கொண்ட அப்போது எஞ்சியிருக்கும் அதையும் அகற்ற சொல்லுகிறார். அதன்பின்னரே விழிமூடி மறைகிறார். தேவாபி துறவு பூண்டு வனம் செல்கையில் மரவுரியை அணிந்துகொண்ட பின்பே புறப்படுகிறான்.

அரிஷ்டநேமி அர்ஜுனனுடன் புறப்படுகையில் கையில் வைத்திருக்கும் சிறிய மரவுரி மூட்டையை திருப்பி குகைக்குள் வீசிவிட்டு அவனிடம் திரும்பி புன்னகையுடன் “எத்தனை எளிய உயிர்கள் மனிதர்கள்! நான் நாடாளச் செல்கிறேன். இக்குகையிலிருந்து இந்த மரவுரியையும் திருவோட்டையும் கொப்பரையையும் கொண்டு செல்வதனால் என்ன பொருள்?” என்பார்

காண்டீபத்தில் மாலினி மரவுரிச் சுருள் ஒன்றைச் சுருட்டி கைகளில் எடுத்துக்கொண்டு காத்திருக்கும் ஊர்தியில் ஏறி நகர் நீங்குகிறாள்.வெண்முரசில் முதியவர்களும் முனிவர்களும் ஆடையென பெரும்பாலும் மரவுரியைத்தான் அணிந்திருக்கின்றனர்.

வெய்யோனில் கர்ணன் திருதிராஷ்டிரரின் இசைக்கூடத்தில் இசை கேட்டுக்கொண்டிருக்கும் இளைய கெளரவர்களை காணச்செல்லுகையில் வழியில் இடையில் செம்மரவுரி அணிந்த முனிவர் நின்றிருப்பார். அக்காட்சியில் அந்தியின் செவ்வொளி விழுந்து பொன்னுருகி நிறைந்த கலமென மாறியிருக்கும் திருதிராஷ்டிரரின் நீள்வட்ட இசைகூடத்தின் நடுவே இருந்த தடித்த மரவுரிமெத்தை.வெய்யொன் கர்ணனின் கனவிலும் மரவுரி உடுத்த கொழுத்த உடலுடன் ஒரு பார்வையற்ற முதியவர் வருவார்.

பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனுக்கும் பீமனுக்குமான போர் இடைவேளையில் நடுவர்கள் இருபக்கமிருந்தும் ஓடிச்சென்று ஜராசந்தனையும் பீமனையும் பீடங்களில் அமரச்செய்து இன்னீர் அளித்து அவர்களின் உடல்வியர்வையை மரவுரியால் ஒற்றுகிறார்கள். இப்படி மரவுரித்துணி துண்டுபோல உடல் துடைக்கவும் வியர்வை ஒற்றவும் பயன்படுவது வெண்முரசில் பலமுறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

துரோணரும் இன்னும் பலரும் நீராடி முடித்து மரவுரியால் துவட்டிக்கொள்ளுகின்றனர். கிராதத்தில் சண்டனும் ஜைமினியும், சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் மரவுரி ஆடைகளை நனைத்து பிழிந்து காய வைக்கிறார்கள். திரௌபதி மரவுரியை முகத்தின்மேல் போட்டுக்கொண்டு துயில்கிறாள், இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கி குளிக்கிறாள்

நீர் கோலத்தில் பீமன் கரிய கம்பளி ஆடையால் உடலை மூடி மரவுரியை தலையில் சுற்றி கட்டி ஊர்களுக்குள் நுழைந்து கொடை அளிக்கும் படி கேட்கிறான்

இன்னும் சில அரிய நிகழ்வுகளின் போதும் மரவுரி இருக்கிறது மழைப்பாடலில் குழந்தை துரியனுக்கு காந்தாரி அளித்த முலைப்பால் பெருகி குளம்போல தரையில் தேங்கிக்கிடக்கையில் சுஸ்ரவையின் கண்ணில் படாமல் மறைக்க அதில் மரவுரி போட்டு மூடுகிறாள் சத்யசேனை.

களத்தில் பீஷ்மரின் அனைத்து மாணவர்களும் இறந்த பின்னர் அவருக்கு தேரோட்டும் பொருட்டு வரும் துண்டிகன் அவரை காண செல்லுகையில் பீஷ்மர் மரவுரியால் தன் உடலை துடைத்துக்கொண்டு மரப்பெட்டியில் இருந்து புதிய மரவுரியை உடுத்திக்கொள்கிறார். அதுவே அவரின் கடைசி மரவுரியாடை.

பிருதைக்கு கருக்கலைக்க வரும் கிழவி மரவுரிக்குள்ளிருந்த நாகத்தால் தீண்டப்படுகிறாள். வண்ணக்கடலில் பிருதையிடம் விடைபெறும் நாளில் துர்வாசர் “நீ இளம்பெண். இளவரசி. நானோ மரவுரி அணிந்த கிழவன். என்னுடன் விளையாடி நீ தோற்றுவிட்டாய்” என்கிறார். அதன் பிறகே பிருதைக்கு அந்த வரம் கிடைக்கிறது களிற்றியானை நிறையில் ராஜசூய வேள்விக்கான திசைக்குதிரைகளின் கொட்டிலை சுதமன் பார்வையிடச் செல்லுகையில் மரவுரி குவையினடியில் இருந்து சீறி எழுந்து படமெடுக்கிறது அரச நாகம்

பாரத்வாஜர் குருநிலையில் மரவுரியால் துரோணன் கண்களைக் கட்டிய பின்னரே அவனிடம் தர்ப்பை பீடத்திலிருந்து ஏதேனும் ஒரு தர்ப்பையை எடுக்கும்படி சொல்லப்படுகிறது.

அஸ்வத அருமணியை காணாது தேடுகையில் சித்தம் தடுமாறி இருக்கும் விதுரர், கையிலிருந்து அகல் சுடர் சரிந்து தரையில் பற்றிய நெருப்பின் மீது மரவுரியை எடுத்துப் போடுகிறார், அனல் அம்மரவுரியை உண்டு புகை எழுப்பும்.

அஸ்வத்தாமன் பிறந்த போது இன்கிழங்கு போல சிவந்த சிற்றுடல் கொண்டிருந்த குழந்தையை மரவுரியில் சுற்றி எடுத்துவந்து துரோணரிடம் காட்டுவார்கள்

மழைப்பாடலில் மாத்ரி மணம் புரிந்து வந்த முதல் நாளில் குஹ்யமானஸத்துக்கு செல்லுகையில் சத்யவதி கந்தர்வனின் சிலைப்பதிட்டை முன்னால் விரிக்கப்பட்டிருந்த மரவுரி இருக்கையில் அமர்கிறாள்.

வண்ணக்கடலில் ஓரிரவில் கிருதகட்டத்தின் முன்றிலில் மரவுரி போர்வைகளை போர்த்தியபடி கூடிய நிஷாதர்கள் நடுவே அமர்ந்து தன் குறுமுழவை இரு விரல்களால் மீட்டி மிருண்மயர் பாட்டுடன் கதை சொல்கிறார்.

இந்த அத்தியாயத்தில் தான் மரவுரி தயாரிப்பும் வணிகமும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. நிஷாத நாடு முழுக்க பெருந்தொழிலாக இருப்பது மரவுரியாடை அமைத்தலே. சர்மாவதியின் இருகரைகளிலும் நூற்றுக்கணக்கான சிற்றூர்களின் படித்துறைகளில் இருந்து படகுகள் மரவுரிப் பொதிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன என்கிறார் மிருண்மயர்

பன்னிருபடைக்களத்தின் சூதுக்களத்தின் நடுவே பலகைகளால் அமைக்கப்பட்ட வட்ட வடிவ ஆடுகளத்தின் மீதும் செந்நிற மரவுரி விரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அவைக்களம் முழுக்க தரைமேல் அழுத்தமான மரவுரி மெத்தை மூடியிருந்தது. அங்கு நுழைபவர்களும் மரவுரி காலணி அணிந்து மட்டுமே நுழைய வேண்டும் என்றும் வகுக்கப்பட்டிருந்தது.

சூதுக்கு முந்தைய நாள் துயில் நீத்திருந்த தருமர் ‘மரப்பட்டை கூரை குடிலும், நீர் வைக்க ஒரு கலம். உணவு சமைக்க பிறிதொரு கலம். மரவுரி பாய் ஒன்று. ஒரு மாற்றாடை உணவு திரட்ட கூர்முனை கொண்ட கழி ஒன்று. அதற்கப்பால் இப்புவியிலிருந்து அவர் பெறுவதற்கொன்றுமில்லை’ என்று நினைக்கிறார்..

நிஷதகுடியின் மூத்த இளவரசர் நளனுக்கும் அவர் இளவலும் அரசருமாகிய புஷ்கரனுக்கும் நடக்கும் நாற்களமாடலும் மரவுரி விரித்த மேடையில் போடப்பட்ட நாற்களப் பலகையில்தான் நடக்கிறது.

பல அரசவை கூடங்களில் அவைகளில் அரசகுடியினர் அமர்வதற்கான மேடை மரவுரி விரிக்கப்பட்டு அதன்மேல் அரியணையும், மயிலணையும், அணியணைகளும் போடப்பட்டு இருக்கும். செந்நிற மரவுரித் திரைச்சீலைகள் பல கூடங்களில் அசைந்து கொண்டிருந்தன.

மழைப்பாடலில் கௌந்தவனத்தின் முகவாயிலை வசுதேவன் கடக்கையில் அங்கிருந்த காவலர்கள் தோலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிருக்கு மரவுரி போர்த்தியபடி குவிந்து அமர்ந்திருக்கின்றனர். ஈர உடைகளை உதறியபடி குடிலுக்குள் நுழைந்த வசுதேவனுக்கு பிருதை உலர்ந்த மரவுரியாடை எடுத்துவந்து பீடத்தில் வைக்கிறாள்

நீர்க்கோலத்தில் விராடபுரியின் அரண்மணியில் தனக்கான தனியறைக்குள் நுழைந்ததும் பாஞ்சாலி பிரீதையிடம் அவளுடைய மரவுரிகளும் தலையணைகளும் எங்கே என்று கேட்கையில் சேடிப்பெண் ஒருத்தி அவற்றைக் கொண்டு வந்து சீராக விரித்து அமைக்கிறாள்

பயணவழியில் ஆளில்லா விடுதியொன்றில் இருந்த மூங்கில் பெட்டிகளிலிருந்து பீமன். மரவுரிகள் மற்றும் ஈச்சைப்பாய்களையும் எடுத்து தருமன் அமர விரிக்கிறான்.

பயணங்களில் விடுதிகளில் பலர் மரவுரி ஆடையணிந்தும் மரவுரி போர்த்தியும் அமர்ந்திருக்கின்றனர். அர்ஜுனனுக்கு வணிகனொருவன் வெள்ளியை வாங்கிக்கொண்டு அளித்த மரவுரியை சருகுகள் மீது விரித்து, வணிகர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் வெளியே மழை பெய்வதையும் கேட்டுக்கொண்டே அர்ஜுனன் படுத்துக்கொள்ளுகிறான். கர்ணன் சம்பாபுரிக்கு வந்த புதிதில் அவனைக்குறித்து குடிகள் பேசிக்கொள்வதை கேட்க ஒரு விடுதியில் கரிய மரவுரியால் உடலை போர்த்திக்கொண்டு அமர்ந்திருப்பான்.

காயங்களுக்கான சிகிச்சையில் இப்போது பயனாகும் பருத்திப்பஞ்சைபோல அப்போது மரவுரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கார்கடலில் போர்க்களத்தில் காயம்பட்ட திருஷ்டத்துய்மனனின் காயங்கள் தேன் மெழுகிலும் கந்தக கலந்த நீரிலும் முக்கி எடுக்கப்பட்ட மரவுரியால் துடைத்து சுத்தம் செய்யப்படுகின்றன.

சிகிச்சையின் போது கவசங்கள் தசைகள் மீது வலுவுடன் அறையாமலிருக்கும் பொருட்டு உள்ளே அழுத்தப்பட்டு தகடுகளாக மாறிய மரவுரி சுருள்களை உரிய இடங்களில் வைத்து இறுக்கப்படுகின்றது.

பிரயாகையில் திரௌபதியும் மாயையும் அணிகளேதுமின்றி இடைசுற்றி எடுத்து மார்பில் போடப்பட்ட செந்நிற மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்து அன்னைபூசனைக்கு செல்கிறார்கள். செந்நிறமான மரவுரி ஆடையின் மடிப்புகள் உலைய திரௌபதி இறங்கி தரையில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுகின்றன.

செந்நா வேங்கையில் மரவுரி மேலாடைகளும், கயிற்றுக்கட்டிலில் மரவுரியும் நார்த் தலையணையும் சொல்லப்பட்டிருக்கும்

பிரேமை மரவுரி மேலாடையை அணிந்திருப்பாள். சரத்வான் மரவுரி அணிந்து புலித்தோல் மேலாடை அணிந்திருப்பார். முதிய குலத்தலைவர்கள் மரவுரித் தலைப்பாகைகளுடன் இடையில் மரவுரி ஆடை மட்டும் சுற்றி நின்றிருப்பார்கள். இடையில் கைக்குழந்தை ஏந்திய மூதாய்ச்சியர் மரவுரியால் தோள்போர்த்து வந்தமர்ந்திருப்பார்கள்.

துரோணரும் கிருபியும் மணமான புதிதில் பயணிக்கையில் கிருபி தன் மரவுரியில் இருந்து மெல்லிய நூலை பிரித்தெடுத்து அதை ஒன்றுடனொன்று சேர்த்து முடிந்து நீளமாக்கி நாணலின் நுனியில் கட்டி அதில் இருவரும் தேன் சேகரிப்பார்கள்.

குருதிச்சாரலிலும் இப்படி ஓரிடம் வருகிறது. சகுனி விழிகளைத் தாழ்த்தி தாடியை நீவி கொண்டிருக்க கணிகர் தான் அமர்ந்திருந்த சேக்கையிலிருந்த மரவுரியின் ஒரு நூலை மெல்ல பிரித்து எடுத்துக் கொண்டிருப்பார்

பாஞ்சால இளவரசியின் மணத்தன்னேற்புக்கு மரவுரி ஆடையுடன் இருக்கும் நம்மை உள்ளே விடமாட்டார்கள் என்று இளையவர்கள் சொல்லுவார்கள். மணத்தன்னேற்பரங்கிலும் மரவுரி விரிக்கப்பட்ட பீடங்கள் போடப்பட்டிருக்கும். நிகழ்வைக் காண வந்தவர்கள் இப்போது பேருந்தில் இடம்பிடிக்க ஜன்னல் வழியே துண்டு போடுவதுபோல இருக்கைகளில் மரவுரி போட்டு இடம்பிடித்து அமர்கிறார்கள். மண முற்றத்திலும் செந்நிறத்தில் மரவுரிக் கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும்

அன்னைவிழியில் காலபைரவியின் கருவறைக்குள் கருங்கல் பீடத்தில் மரத்தாலத்தில் மரவுரியில் வண்ணமிட்டு ஐந்து புரிகளாக பின்னப்பட்டிருக்கும் கேசம் இருக்கும். மரவுரிகளால் ஆன சேலைகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மரவுரி படுக்கையில் மரவுரி அணையில் தலை வைத்து இளைய யாதவர் மல்லாந்து துயின்றுகொண்டிருக்கிறார்.

தரையில் போடப்பட்ட மஞ்சப்பலகையில் மரவுரி விரித்து அதன்மேல் படுத்திருக்கும் துரோணரின் காலடியில் அமர்ந்து அஸ்வத்தாமன் காலடியில் அமர்ந்து அவர் கால்களை பிடித்துக் கொண்டிருப்பான்.

பூரிசிரவஸ் குதிரை மேல் இருந்த மூங்கில் படுக்கை கூடைக்குள் உடலை ஒடுக்கிச் சுருண்டு உறங்கும் பால்ஹிக பிதாமகரை பார்க்கையில் கருவறைத் தசைபோலவே இருந்த செந்நிறமான மரவுரி மெத்தையில் கருக்குழந்தை போல அவர் துயின்று கொண்டிருப்பதாக நினைக்கிறான்.

பாண்டவர்களும் திரெளபதியும் காத்யாயனர் குடிலில் அமர்ந்திருக்கையில் மாணவர்கள் ஒவ்வொருவராக மரவுரி அசையும் ஒலி மட்டும் கேட்க மெல்ல வந்து அவர்களுக்குரிய புல்லிருக்கைகளில் அமர்கின்றனர். மாணவர்களுக்குரியது மரவுரி என்பது பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கும். இப்போது பள்ளிச்சீருடை போல் அப்போதெல்லாம் எளிமையான மரவுரி இருந்திருக்கிறது.

பீதர் நாட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு பளிங்குப் பாளத்திற்கு மேலும் கீழும் மரவுரி மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தன.

குருஷேத்திர போரில் மரவுரியின் பயன்பாடு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. கெளரவப்படைகளின் காவல் மாடத்தில் சிறுத்தையின் சிறுநீரில் நனைக்கப்பட்ட மரவுரிகள் தொங்குகின்றன. போர்க்களத்தில் மருத்துவ நிலைகளில் அனைத்துப் பலகைகளும் நிரம்ப, வெளியே திறந்தவெளியில் நிலத்தில் மரவுரிப்பாய்களை விரித்து புண்பட்டவர்கள் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.

போர் ஓய்ந்து களம் அடங்கிக் கொண்டிருந்த ஒரு அந்திப்பொழுதில் சிகண்டியின் இரு மைந்தர்களுடன் சதானீகன் வருகையில் பாண்டவப்படைகளில் ஒருவன் யுதிஷ்டிரரைப் போல மரவுரி சூடி, தோளில் மரவுரியை சால்வையாக அணிந்து, உடைந்த வேலொன்றை தொடைகளால் கவ்வி அதை அசைத்து நடனமிடுகிறான்

மரவுரியை ஐந்து புரிக்கூந்தலாக தலையில் கட்டியிருந்த பிறிதொருவன் திரௌபதி போல இடை ஒசித்து கையில் மரவுரி சால்வை ஒன்றை மாலையாக கொண்டு வந்து, அதை அந்த வேலுக்கு அணிவித்து தொழுகிறான். வெடிச்சிரிப்புடன் பலர் கவசங்களையும் மரவுரிகளையும் வானில் தூக்கி எறிந்து கூச்சலிடுகின்றனர்.

அந்தக் களத்தில் எவருமே புத்தாடை அணிந்திருக்கவில்லை. மாமன்னர் யுதிஷ்டிரர்கூட மீண்டும் மீண்டும் போருக்கணிந்த, குருதி நனைந்து இறுகி மரக்கட்டை போலாகிவிட்ட மரவுரியையே அணிந்திருந்தார். ஒவ்வொரு உடலிலும் மரவுரியால் துடைத்து நீவி எடுத்த பின்னும் எஞ்சும் குருதி உலர்ந்த கரும்பசையாலான வரிகள் நிறைந்திருந்தன.

மருத்துவ நிலைகளை நோக்கித் தொடர்ந்து வண்டிகளில் தேன்மெழுகும் அரக்கும் மரவுரியும் சென்றுகொண்டிருந்தன. போரில் உயிரிழந்த வீரர்களை மரவுரி விரிப்பில் புரட்டிப் போட்டு தூக்கிச் செல்கின்றனர்.

கர்ணன் களம்பட்ட பின்னர் மரவுரி விரித்து அதன்மேல் கர்ணனின் உடலை சரித்து படுக்க வைக்கின்றனர்.

பல பழங்குடியினத்தவர்கள் இறப்பு சடங்குகளில் மரவுரி ஆடைகள் இடம்பெற்றிருக்கும். பல ஆண்டுகள் உடலை மரவுரி பாதுகாக்கும் என்பதால் புதைக்கப்படும் சவங்கள் மரவுரியால் சுற்றப்படும். எகிப்திலும் மம்மிகள் லினன் துணியால் பலமுறை சுற்றப்பட்டிருக்கின்றன. அத்துணிகள் இப்போதும் பெரிய சேதமில்லாமல் கிடைத்திருக்கின்றன.

ஃபல்குனை சித்ராங்கதனுக்கு சிகிச்சை அளிக்கையில் புதிய மரவுரி துணி நான்கு சுருள்கள் கேட்கிறாள். சிறுநீரில் நனைத்த அம்மரவுரியில் உருகும் மெழுகு விழுதை தோய்த்து காயத்துக்கு சிகிச்சை அளிக்கிறாள்

மேலும் பல இடங்களில் காயமடைந்தவர்களுக்கு புண் வாயில் கந்தகமும் மெழுகும் கலந்து அழுத்தி மரவுரியால் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சொல்வளர்காட்டில் அனைவரும் மரவுரியின் நிறத்திலேயே அமைந்த பருத்தியாடை அணிந்திருப்பது சொல்லப்பட்டிருக்கும். இப்போது பருத்தியில் தடிமனாக மரவுரியைபோல ஆடைகளை செய்கிறார்கள்.

1960களிலிருந்து பருத்தி மரவுரி எனும் பெயரில் மிக அடர்த்தியாக நெய்யப்பட்ட பருத்தி துணிகள் (cotton bark cloth) பயன்பாட்டில் இருக்கின்றன. இவைகள் மேசை மற்றும் படுக்கை விரிப்பிற்கும், திரைச்சீலைகளாவும் பயன்படுகிறது.

குடி மக்களும் அரசகுடியினரும் மரவுரி சேக்கையில் அமர்கிறார்கள் சேற்றுக் கலங்கல் மரவுரியில் வடிகட்டி அருந்தப்படுகிறது.

காவலர்கள் மரவுரி மூட்டையை பரண் வீடுகளில் அடுக்கி வைக்கின்றனர். காவலரண்களின் கீழே நெருப்பிட்டு எரிவெம்மையில் புகை சூழ மரவுரியும் கம்பளியும் போர்த்தி அமர்ந்து தாயமும் பகடையும் சொல்மாற்றும் விளையாடுகின்றனர்.

துச்சாதனன் கையில் ஒரு மரவுரிப்பை வைத்திருக்கிறான். போர் முடிந்து மைந்தர்களை இழந்து சவம் போலிருக்கும் தேவிகையை பூர்ணை கைபற்றி அழைத்துச் சென்று மரவுரியை குடில் சுவரிலிருந்து இழுத்துக்கட்டி சிறிய மறைப்பை உருவாக்கி சிறிய மூங்கில் பீடத்தில் அமர செய்வாள்.

குருதிச்சாரலில் கலங்கள் மரவுரிகளால் உறையிடப்படுகின்றன. செந்நிறமும் நீலநிறமும் ஏற்றப்பட்ட மரவுரிநார்கள் சொல்லப்படுகின்றன.

மாத்ரி நகர் நுழையும் காட்சியில் மரவுரி விரிப்பது கொங்கு திருமணங்களில் நடைபெறும் ஒரு சடங்கை நினைவூட்டியது. மணமக்கள் நடக்கும் வழியெங்கும் உபயோகப்படுத்திய ஆடைகளை ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் விரித்து போட்டுக்கொண்டே வருவார்கள், மணமக்கள் மிதித்து கடந்த துணிகளை மீண்டும் எடுத்து முன்னே விரிப்பார்கள்.

பத்து மங்கலங்களை ஏந்தியபடி மூன்று சேடியர் சென்றனர். சேடிகள் தரையில் விரித்த மரவுரிமேல் கால்களைத் தூக்கி வைத்து மாத்ரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் இரு சேடியர் அந்த மரவுரியை எடுத்து மீண்டும் விரித்தனர்

களிற்றியானை நிரையில் படகுகளில் நடப்பட்டிருந்த. மூங்கில்களில் முடையப்பட்ட மரவுரிப்பாய்கள் கட்டப்பட்டிருந்தன. மாவுரியின் இந்த பயன்பாடு மிகுந்த வியப்பளித்தது. முன்பு லினன் துணிகளில் இப்படி பாய்மரக் கப்பல்களின் பாய்கள் செய்யப்பட்டன.

குளிக்கவைக்கபட்ட புரவிகளின் தோல் பளபளப்பாக ஆனபின்னர் மரவுரியை நீரில் தோய்த்து ஒருமுறை நீவித்துடைத்துவிட்டு மீண்டும் நாய்த்தோலால் நீவப்படுகிறது.

வெண்முரசில் மரவுரிகள் சில இடங்களில் உவமையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இளைய யாதவர் நக்னஜித்தையை மணக்கும் பொருட்டு களிறுகளை வெல்லும் கள நிகழ்வின் போது வாடிவாசலில் இருந்து களம் புகுந்த முதல் காளையின் கழுத்துச் சதை மரவுரித் திரைச்சீலையின் அடிநெளிவுகளென உலைகிறது.

யுயுத்ஸுவின் புரவி சிறு இடைவெளிகளில் புகுந்து, வழி உருவாக்கி ஊடுருவி முன் செல்வதை மரவுரிக்குள் நுழைந்து செல்லும் ஊசிபோல ஊடுருவுவதாக அவன் எண்ணுகிரான்.

ஒற்றையடிப்பாதை கரிய காட்டுக்குள் கம்பளியை தைத்த மரவுரி சரடென ஊடுருவிச் சென்றது என இமைக்கணத்திலும் இப்படி ஒரு விவரிப்பு வருகிறது.

’மரவுரியில் ஓடிய தையல் நூல் என புதர்களை ஊடுருவிச் சென்ற சிறு பாதையின் ஓரம் நின்றிருந்த மரத்தின் பட்டையில் ஒரு செதுக்கடையாளத்தைக் காண்பது’ என்னும் மற்றொரு உவமையும் மிக அழகாக இருக்கும்.

உறங்குகையில் நனைந்த மரவுரி கோழிக்குஞ்சை என துயில் அவனை மூடி அழுத்திகொண்டது என்னும் ஒரு வரி உறங்குபவருக்கு அந்த உறக்கம் அப்போது எத்தனை தேவை, எத்தனை பாதுகாப்பை அது அளிக்கிறது என்பதை உணரச்செய்யும். அதைப்போலவே ‘இங்கு அரியணை அமர்ந்திருக்கிறேன். ஆனால் என் உள்ளம் குளிர்ந்து நீரிலூறிய மரவுரியென கிடக்கிறது’ என்னும் இன்னோரு வரியும் நீரிலூறிய மரவுரி அளிப்பது போன்ற பாதுகாப்புணர்வைச் சொல்லும்

பிரபாச க்ஷேத்திரத்தின் பெருநாணலின் நாரிலிருந்தும் மக்கள் மரவுரி ஆடைகளை நெய்து அணிகின்றனர்.

கிராதத்தில் தொல்வேதம் அசுரர்களிடமிருந்து வந்ததை சொல்லுகையில் ஜைமினி //மரப்பட்டை நூறாயிரம் முறை அறைவாங்கி நூறுநாள் நீரிலூறி சக்கை களைந்து ஒளிகொண்ட சரடென மட்டுமே எஞ்சும்போதுதான் அது மரவுரியாகிறது. வேள்விக்கு இனிய தேன் தேனீக்களின் மிச்சிலே. ஆனால் அது மலர்களில் ஊறியதென்பதே மெய்.// என்கிறான்.

மலைக்கு வருவதில் முதன்மையானதாகிய உப்பும் செல்வதில் முதன்மையானதாகிய மரவுரியும் மழைக்கு வீணாகிப்போகின்றவை என்னும் குறிப்பும் வெண்முரசில் வருகிறது

மனிதர்கள் முதன்முதலில் உருவாக்கிய இயற்கை இழை மரவுரிதான். ஆப்பிரிக்காவில் இவை முதன்முதலில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். என்று கருதப்படுகிறது. குறிப்பிட்ட வகை மரங்களின் உள்மரப்பட்டையை நீளமாக உரித்தெடுத்து, கொதிநீரில் இட்டு, கட்டைகளால் அடித்து மென்மையாக்கி, பின்னர் ஆடை நெய்ய அவை பயன்படுத்தபட்டது. ஆப்பிரிக்க பழங்குடியினர் மரவுரிகளை திரைச்சீலைகள், இடையாடை, உள்ளாடை, மற்றும் சுவர் மறைப்புக்களாக பயன்படுத்தினர். கெட்டியான மரவுரிகள் படுக்கைகளாக பயன்பட்டன.

பழங்குடியினரின் சமயச் சடங்குகளில் மரவுரிகள் முக்கியமான இடம்பெற்றிருந்தன போர்னியோ தீவு கூட்டங்களின் பழங்குடியினர் ஒரு துண்டு மரவுரியை துக்க காரியங்களின் போது கைகளில் வைத்திருப்பார்கள். கொங்குப்பகுதி துக்க நிகழ்வுகளிலும் இம்முறை நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. துக்க வீடுகளில் கைகளில் ஒரு துண்டு வைத்திருப்பார்கள், அந்த துண்டைக் கைகளில் தொட்டுக்கொண்டு வணங்குவதே துக்க விசாரிப்பு இங்கெல்லாம். தொல்குடி சடங்குகளின் நீட்சிகளாகத்தான் பல சடங்குகள் இன்னும் நம்மிடையே நீடித்திருக்கின்றன.

தென்கிழக்காசியாவின் பழங்குடியினத்தவரகளின் பெண் குழந்தைகளுக்கான முதலுடையாக மரவுரி ஆடையே அணிவிக்கப்படும். உகாண்டாவின் பெரும்பாலான பழங்குடியினரின் இறப்பு சடங்குகளில் மரவுரி மிக முக்கியமான பொருளாக இருக்கிறது. அங்கு முதுவா எனப்படும் அத்தி வகை மரத்தின் பட்டைகளிலிருந்தே மரவுரி பெறப்படுகிறது (Mutuba -Ficus Natalensis). லத்தீன் மொழியில் நட்டாலன்ஸிஸ் என்றால் ‘அந்த பகுதிக்கு சொந்தமான’ என்று பொருள். இவற்றுடன் மரவுரிகள் அளிக்கும் ஏராளமான பிற மரங்களும் இருக்கின்றன. சாய அத்தி எனப்படும் Ficus Tinctoria, (தாவரவியலில் டிங்டோரியா என்னும் சிற்றினப் பெயரைக்கொண்ட அனைத்துமே சாயம் அளிப்பவை) காகித முசுக்கொட்டை மரமான (Paper Mulberry) Broussonetia Papyrifera ஆகியவற்றின் மரப்பட்டைகளும் மரவுரி நார்கள் அளிக்கின்றன. நியூசிலாந்தில் மாவோரி (Māori) பழங்குடியினரும் காகித முசுக்கொட்டை மரப்பட்டையிலிருந்தே மரவுரியை எடுக்கின்றனர்.

துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல பலாவின் பலவகைகளும் (Artocarpus Altilis, Artocarpus Tamaran Artocarpus Mariannensis) மரவுரியை அளிக்கின்றன. பெரும்பாலான மரவுரி மரங்கள் மல்பெரி குடும்பமான மோரேசியை சேர்ந்தவை.

மரவுரிகள் டாபா, இங்கட்டு, ஆட்டே, உஹா மற்றும் ஹிபோ என்னும் பெயர்களில் அவை உருவாகும் மரங்களின் பெயருடன் இணைத்து அழைக்கப்படுகின்றன(Tapa, Ngatu, Aute, Uha, Hiapo). ஹிபோ என்பது காகித முசுக்கொட்டை மரங்களின் பெயர். மரவுரியை பொதுவாக ஒலுபுகோ என்கிறர்கள் (olubugo)

டாபா என்பது பட்டையான ஆடை என்னும் பொருள் கொண்ட சொல். (border or strip) அகலமான துணிகளை பட்டைகளை தைத்தும் ஒட்டியும் உருவாக்க தெரிந்து கொள்வதற்கு முன்பு நீளமான பட்டைகளாகவே மரவுரி துணிகள் உருவாக்கப்பட்டன அப்போது வழங்கிய பெயரே டாபா. தென்கிழக்கு சீனா மற்றும் வியட்நாமில் மரவுரி ஆடைகள் புழக்கத்தில் இருக்கிறது

ஹவாய் தீவில் மரவுரியாடைகள் காபா (kaapa) எனவும் ஃப்யூஜி தீவில் மாஸி எனவும் அழைக்கப்டுகின்றன (masi) டாபாவை அடித்து அகலமும் மிருதுவும் ஆக்கிய பின்னர் அவற்றை புகையிட்டு சாயமேற்றி அலங்கரிக்கப்படுகின்றது. மர அச்சுக்கள் மூலம் பல இயற்கை வடிவங்கள் அதில் தீட்டப்படுகின்றன. வடிவங்களில் அதிகமாக மரங்களும் மீன்களும் இருக்கும்.

அனைத்து இயற்கை வண்ணங்களும் உபயோகப்படுத்தப்படுகிறது என்றாலும் மிக அதிகமாக கருப்பும் மண் நிறமும் இருக்கும்.

இப்போது பழங்குடியினர் வசிக்கும் பல தீவுகளில் பருத்தியாடைகளும் கிடைக்கிறதென்றாலும் விழாக்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் சமயச்சடங்குகளின் போதும் புல்லாடைகளும் மரவுரியாடைகளுமே பழங்குடியினரால் அணியப்படுகிறது. பலவிதமான முகமூடிகளை உருவாக்கவும் காகிதங்களாகவும், புனித பொருட்களை சுற்றிவைக்கவும் மரவுரி பயன்படுத்தப்படுகின்றது

பட்டையான டாபா துணிகளை தலையில் பழங்குடியினர்கள் வழக்கமாக கட்டிக்கொள்ளுகிறார்கள். திருமணமாகாத பெண்களும் துறவிகளும் அரசகுடியினருக்கும் தனித்தனியே பட்டைகள் இருக்கின்றன. பட்டைத்துணியின் குறுக்கே ஒரு வண்ணக்கோடு இருந்தால் அது மணமான பெண்களையும் வண்ணக்கோடு இல்லாத நெற்றி பட்டைகள் திருமணமாகாத பெண்களையும் குறிக்கும். விளையாட்டு வீரர்கள் மரவுரி துணிப்பட்டைகளை மார்பின் குறுக்கில் அணிந்துகொள்கிறார்கள்.

உகாண்டாவின் பகாண்டா பழங்குடியினர் (Baganda) உருவாக்கும் மரவுரியாடை மனிதகுலத்தின் மிகப்பழைய மரவுரியாக கருதப்படுகிறது. பல பண்டைய நாகரிகங்களில் பயன்பாட்டில் இருந்த மரவுரிகள் இப்போது தடயமின்றி அழிந்துவிட்டன. உகாண்டாவில் 18, 19 நூற்றாண்டுகளில் சரிந்திருந்த மரவுரித்தொழில் இப்போது கலாச்சார அந்தஸ்து அளிககப்டபின்னர் மிகவும் வேகமெடுத்திருக்கிறது

மழைக்காலங்களில் நனைந்திருக்கும் முதுபா மரங்களின்(Ficus Natalensis) பட்டைகள் உரித்தெடுத்துகொண்டு வரப்பட்டு கொதி நீரில் வேகவைத்து, பலமுறை அடித்து அவை அகலமாகி மண் நிறம் வந்தபின்பு உலர்த்தப்படுகிறது பட்டைகள் விரைவாக உலர்ந்து அவற்றின் இழுவைத்தன்மை இழந்துவிடாமல் மெதுவாக உலரும்படி கவனமாக பாதுகாக்க படுகிறது. மரத்தின் பட்டையை உரித்தபின்னர் வாழையிலைகளால் சுற்றிக்கட்டி மூடி மரத்தை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கின்றனர். ஒரு வருடத்திற்கு பிறகு அம்மரங்கள் மீண்டும் உரித்தெடுக்க பட்டையை அளிக்கின்றன.

ஆண்கள் இடையாடைகளும் பெண்கள் இடையாடையும் மேலாடையும் மரவுரியில் அணிகின்றனர். உயர்/அரச குடியினர் கருப்பு சாயமிட்ட ஆடைகளையும் பிறர் சாயமேற்றப்படாத ஆடைகளையும் அணிகின்றனர். உடையணியும் விதங்களிலும் இவர்களின் குடியை அடையாளம் காணமுடியும். ஆடைகளாக மட்டுமல்லாது கொசுவலைகளாக, பாய்களாக, திரைச்சீலைகள் மெத்தைகள் போர்வைகளாகவும் இவை பயன்படுகின்றன.

யுனெஸ்கோவின் கலாச்சார அந்தஸ்து பெற்றிருக்கும் உகாண்டா மரவுரியாடைகள் 1374 – 1404 வரை உகாண்டாவை ஆண்ட கிமிரா வம்சத்தினரால் அரசகுடும்பத்திற்கான ஆடைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை.

இப்போது உகாண்டாவில் சுமார் 4 லட்சம் விவசாயிகள் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் உகாண்டாவின் மரவுரி கருத்தரங்குகளுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கின்றனர். மரவுரிப்பயன்பாட்டை அறிந்து கொள்ளுகையில் அப்போது மனிதர்களுகும் இயற்கைக்கும் இருந்த மிக நெருக்கமான தொடர்பும் தெரிய வருகிறது. இன்று பத்து செடிகளின் பெயரைக்கூட தெரிந்திருக்காத தலைமுறையினரை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது.

தீயின் எடையில் கோட்டைக்குள் நகுலன் நுழைந்து சம்வகையை முதன்முதலில் காணும் அத்தியாயத்தில் குருதி மழை போல் பொழியும். நனைந்த தரையின் ஈரத்தை. பெண்கள் மரவுரியை நீரில் நனைத்து தரையைத் துடைத்தபடியே வருவார்கள். ஈரம்பட்டதுமே புழுதி குருதியாக மாறி, வளைந்த குருதிக்கோடுகள் விரிந்து விரிந்து அலையாக மாறி கூடத்தை மூடும்.

அம்மையப்பத்திலும் கிளி சொன்ன கதையிலும் இதுபோலவே காட்சிகள் வரும்.

அம்மா எருமைக்குப் பால்கறக்கும் ஒலி போல தொரப்பை உரசிச் சீற கூட்டினாள். ஈரத்தரையில் ஈர்க்கின் நுனிகள் வரிவரியாக வரைந்து சென்றன. அனந்தன் ஓடிப்போய் அந்த வரிகள் மீது தன் கால்களை பதித்து தடம் வைத்தான். அங்கே நின்று பார்த்தபோது அரைவட்ட அடுக்குகளாக தொரப்பைத்தடம் பதிந்த முற்றம் கையால் வீசி வீசிச் சாணிமெழுகிய களமுற்றம்போல தெரிந்தது

கோழிக்கு அவ்வப்போது சற்று பிய்த்து வீசினேன். வாரியல்தடங்கள் வளையம்வளையமாகப் படிந்த மணல்விரிந்த முற்றத்தில் நெடுந்தொலைவுக்கு அதைத் தூக்கி வீசினேன்

பலகை வேர்கள் குறித்து தேடத்துவங்கி மரவுரிகளுக்குள் புகுந்து கிளிப்பேச்சு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இன்னும் இன்னும் என வெண்முரசு புதிது புதிதாக விரிந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும். தீர்வதேயில்லை வெண்முரசு எனக்கு.

வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் மது வகைகள் குறித்து இப்போது வாசிக்க துவங்கி இருக்கிறேன் அதுவும் விரிந்து கொண்டே செல்கிறது.

மரப்பட்டை சேகரிக்கும் பகுண்டாக்கள்.

ஒளிமாசு

சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் குழுமம் நண்பர் சக்திவேல் என்னிடம் தாவரவியல் தொடர்பான ஒரு சந்தேகத்தை கேட்டார். 18 வருடங்கள் ஆகிவிட்டன நான் தாவரவியல் கற்பிக்கத் துவங்கி. திறமையான மாணவர்கள், தங்கப்பதக்கம் வாங்கியவர்கள், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்கள் என்று பலர் இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள், எனினும் இந்த சந்தேகத்தை ஒருவர் கூடக் கேட்டதில்லை.

பிற துறைகளை காட்டிலும் தாவரவியல் துறையில் இயற்கையோடு நெருக்கமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் எனினும் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதையும் அவைகளையும் சக உயிரினங்களாக பார்க்க வேண்டும் என்பதையும் உணரும் தாவரவியலாளர்களை நான் சந்தித்ததில்லை. விதிவிலக்காக பனைப்பாதிரி காட்சன் மட்டும் இருக்கிறார் எனக்கு தெரிந்து. தாவரங்களை அப்படி சக உயிராக பாவித்துத் தான் சக்திவேல் என்னிடம் அந்த சந்தேகத்தை கேட்டார்.

தன் வீட்டு மனோரஞ்சித செடி இரவு முழுக்க விளக்கு ஒளியில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “ஒளிச்சேர்க்கைக்கு தாவரங்களுக்கு ஒளி அவசியம் ஆனால் இப்படி இரவிலும் அவற்றின் மீது இப்படி செயற்கை ஒளி விழுந்துகொண்டே இருந்தால், அவற்றிற்கு எந்த பாதிப்பும் இருக்காதா? நாம் உறங்க வேண்டிய இரவில் இப்படி வெளிச்சம் இருந்து கொண்டிருந்தால் எரிச்சலடைகிறோமே அப்படி அவற்றிற்கும் இருக்குமா” என்று சக்திவேல் கேட்டார். இந்த கேள்வியை கேட்கவும் அப்படி அவற்றின் கஷ்டங்களையும் நினைத்து பார்க்கவும் மனதில் கனிவு வேண்டும்.

பலருக்கு இல்லாத இதுதான் ’தாவரக் குருடு’, plant blindness எனப்படுகிறது. சாலை விபத்துகளின்போது அடிபட்டவர்களுக்கு உதவ, அவர்களுக்கு வருத்தப்பட, ஆம்புலன்ஸை அழைக்க, அவர்கள் குறித்து பேச என்று அநேகமாக பலர் இருக்கிறார்கள். ஒருமுறை இருசக்கர வாகன விபத்தொன்றில் குறுக்கே வந்த நாயும் அடிபட்டுவிட்டது. ஒரு இளைஞர் கடைசிக்கணத்தில் இருந்த அந்த நாய்க்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் மரம் வெட்டப்படுகையில் அதை ஒரு பொருட்டாகக் கூட நினைப்பதில்லை. கோவை பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தின் போது நூற்றுக்கணக்கான பெருமரங்கள் வெட்டப்பட்டன. அவறைவெட்டி அகற்றும் பொருட்டு பேருந்துகள் சற்று நேரம் நிறுத்தப்படுகையில் பலரும் வாழைப்பழம் போல அவை அறுக்கப்படுவதை வியப்புடன் வேடிக்கை பார்த்தார்கள். பலர் கைக்கடிகாரத்தை பார்த்து நேரமாவதற்கு சலித்துகொண்டர்கள். வெகு சிலரே “இருக்கற மரத்தையும் வெட்டிட்டா இனி எப்படி மழை வருமெ”ன்று பேசிக்கொண்டார்கள், அங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு படுகொலை என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் தாவரங்கள் அலறுவதில்லை, ரத்தம் சிந்தவில்லை. எனவே அவற்றை மக்கள் கண்டுகொள்ளவில்லை

சமீபத்தில் நான் ஒரு கல்லூரியில் உரையாற்றுகையில் ஒரு அடர் காட்டில் இரண்டு டைனோசர்கள் இருக்கும் புகைப்படத்தை காட்டி ’என்ன தெரிகிறது’? என்று கேட்டேன். பார்வையாளர்கள் பலர் டைனோசர் என்று கூறினார்கள். ஒருவர் கூட அந்த காட்டில் பச்சை பசேலென்று டைனோசர்களை சுற்றி இருந்த மரங்கள், புதர்கள் சிறு செடிகளை பார்க்கவும், கவனிக்கவும், சொல்லவும் இல்லை. நகருதல் இல்லாமல் ஓரிடத்தில் இருப்பதால் தாவரங்களை அலட்சியமாகவும், உயிரற்றவையெனவும் நினைக்கிறார்கள்.

அவையும் வளர்கின்றன, நீரையும் உணவையும் தேடுகின்றன, சேமித்து வைக்கின்றன, காதல் செய்கின்றன, கருவுருகின்றன, சந்ததியை பெருக்குகின்றன என்பதையெல்லாம் நம்மில் பலர் அறிவதில்லை.

சக்திவேலின் சந்தேகத்துக்கு அப்போதே மகிழ்வுடன் பதில்களை அனுப்பி வைத்தேன்.

இப்படியான மிகை ஒளி, காலம் தப்பிய ஒளி தாவரங்களின் மீது பொழிந்து கொண்டே இருப்பது ஒளிமாசு எனப்படுகின்றது.

தாவரங்களுக்கு ஒளிநாட்டக் கணக்குகள் உண்டு.இது photoperiodism எனப்படும் ஒவ்வொரு தாவரங்களுக்கும் இந்த ஒளிநாட்டக் கணக்கு வேறுபடும். மிகுந்த ஒளிநாட்டமுடையவை long day plants என்றும் குறைந்த நாட்டமுடையவை short day plants என்றும் இவற்றுக்கிடையில் இருக்கும் மிகுதியும் குறைவும் இல்லாமல் மத்திம ஒளித்தேவை உள்ளவை day neutral plants என்றும் வகைப்படுத்தப்படுகின்றன

இந்த கணக்கு பிறழ்கையில் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் பெரும் குழபத்துக்குள்ளாகின்றன.

விஷ்ணுபுரம் குழுமத்தில் ஒரு மருத்துவர் இந்த non 24 வகை பிரச்சனை உள்ளவர். உயிரி கடிகார கணக்கு பிறழ்ந்துவிட்டிருப்பதால் உறங்குவதில் அவருக்கிருக்கும் பிரச்சனை குறித்து ஜெ தளத்தில் அவர் கோவிட் தொற்று காலத்துக்கு முன்பு கடிதங்கள் எழுதி இருக்கிறார்

அவருக்கிருப்பதைபோலவே பிரச்சனைகள் தாவரங்களுக்கும் உண்டாகின்றன.

ஒளியின் அலைநீளம், அளவு மற்றும் ஒளி விழும் கால அளவு ஆகியவை தாவரங்களுக்கு நேரடியான பாதிப்பை உண்டாக்கும். ஒளிநாட்ட கணக்குகள் நிறமிகள் உருவாக்கம், இலை உதிர்தல், இலைத்துளை திறந்து மூடுதல்,இலை மொட்டுக்கள் உருவாதல், மகரந்த சேர்க்கை, இனப்பெருக்கம் மற்றும் விதை உறக்கம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் மிகை ஒளி இவை அனைத்தையும் பாதிக்கும்.

இரவில் மலரும் நிஷாகந்தி போன்ற மலர்களும், அவற்றை மென்னொளியில் மகரந்த சேர்க்ககை செய்யவரும் இரவாடிகளான பூச்சிகளும் இதனால் பாதிப்படைகின்றன

ஒவ்வொரு உயிருக்கும் , ஒரு செல் நுண்ணுயிரியாகட்டும், தாவரங்கள், மனிதர்கள் என அனைத்து உயிர்களுக்குமே இரவு பகலால் அமையும் அன்றாட, பருவகால மற்றும் சூரிய சந்திர சுழற்சிகளுக்கு ஏற்ப உடலியக்கம் மற்றும் பிற செயல்பாடுகள் நிகழ்கின்றன. தாவரங்களுக்கு ஒளி, வெப்பம், மழை ஆகியவை சமிக்ஞைகள். அவற்றைக்கொண்டு அவை இலைகளை உதிர்ப்பது, உறக்க நிலையில் இருப்பது, மலர்தல், கனி கொடுத்தல். ஆகியவற்றைக் காலக்கணக்கு பிசகாமல் செய்து வருகின்றன.

பகலில் ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் அவற்றிற்கு இரவில் சுவாசிக்க வேண்டி இருக்கிறது.

காலை எழுந்து நாளை துவங்க அலாரம் வைத்துக்கொள்பவர்களும் அலாரம் ஒலி கேட்காமல் தூங்குபவர்களும் நம்மில் பலர் இருக்கையில், மாலை நான்கு மணிக்கே இலைகள் கூம்பி உறங்கும் தூங்கு வாகையை, மிகச்சரியாக மாலை 4 மணிக்கு மலரும் அந்தி மந்தாரையை, பெண் மலர்கள் கருவுற்றதை அறிந்து, மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் தென்னையின் ஆண் மலர்கள், இனி அவை இருந்தால் கனி உருவாக்கத்துக்கு செல்வாகும் ஆற்றல் தங்களுக்கும் பகிரப்பட்டு வீணாகும் என்று அனைத்தும் ஒரே சமயத்தில் உதிர்ந்து விடுவதையெல்லாம், கவனித்திருக்கும் சிலருக்கு மட்டுமாவது கொஞ்சம் தெரிந்திருக்கும் மிகை ஒளி மாசினால் தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறித்து.

தாவரவியலில் Plant Biological Rhythms என்னும் மிக முக்கியமான உயிரியல் நிகழ்வில் மிகை ஒளியால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடக்கவில்லை எனினும் கவனிப்புக்குள்ளாகி இருக்கிறது இந்த விஷயம்.நெடுஞ்சாலைகளின் விளக்குகளின் எண்ணிக்கையை, ஒளியை கட்டுப்படுத்துதல், தேவையான இடங்களில் மட்டும் இரவு விளக்குகளை உபயோகித்தல் என்று மெல்ல மெல்ல இந்த விஷயம் தொடர்பான முறைப்படுத்தல்கள் சில நாடுகளில் துவங்கி இருக்கின்றன.

தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்பு மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புத்தான்.

ஒளி மாசு என்பது தேவையற்ற, பொருத்தமற்ற, அதிகப்படியான செயற்கை விளக்குகளின் ஒளிப்பொழிவை குறிக்கிறது.இரவு நேர அலங்கார விளக்குகளின் மிகையொளி, இரவுp போக்குவரத்தின் வாகன ஒளி. இரவின் நகர ஒளி (SkyGlow) ஆகியவை தாவரங்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகள்தான் ஒளிமாசு.

எனினும் ஒளி போதாமல் இருக்கும்,  குளிர்காலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இயற்கை ஒளிக்கு ஈடாக அளிக்கப்படும் செயற்கை ஒளி விளக்குகள் இந்த வகை மாசை உருவாக்குவதில்லை.

அது ஒரு சாகுபடி தொழில் நுட்பம்.  தாவரங்களை  பிரியமான செல்லபிராணிகளை போல பழக்கி நமக்கு வேண்டியதை, வேண்டிய அளவில் எடுத்துக் கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று

தாவரங்களில் நடைபெறும் Photosynthesis, photoperiodism, photomorphogenesis, Phototropism  ஆகியவற்றிற்கான வேறுபாட்டை அறிவதன் மூலம் இதை  புரிந்து கொள்ளலாம்.

சூரிய ஒளியின் முழு நிறமாலை என்பது வானவில்லின் அனைத்து வண்ணங்களையும் கொண்டுள்ள  சூரியனின் வெண்ணிற ஒளியைக் குறிக்கின்றது. சூரியன் அதன் வேறுபட்ட  நிறங்களை பொருத்து, பல அளவிலான அலைநீளங்களில் கதிர்வீச்சை வெளியிடுகிறது, பூமியின் வளிமண்டலம் அதிலிருக்கும் புற ஊதா (UV) மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சுகளை தடுக்கிறது.

பூமியின் உயிர்களை நிலைநிறுத்தும் முதன்மை ஆதாரம்  சூரிய  கதிர்வீச்சுதான் அதிலும் தாவாங்களுக்கு சூரிய ஆற்றல் பலவிதங்களில் அத்தியாவசியமானது.சூரியன் அதன் வேறுபட்ட  நிறங்களை பொருத்து, பல அளவிலான அலைநீளங்களில் கதிர்வீச்சை வெளியிடுகிறது, பூமியின் வளிமண்டலம் அதிலிருக்கும் புற ஊதா (UV) மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சுகளை தடுக்கிறது.

பூமியின் உயிர்களை நிலைநிறுத்தும் முதன்மை ஆதாரம்  சூரிய  கதிர்வீச்சுதான் அதிலும் தாவாங்களுக்கு சூரிய ஆற்றல் பலவிதங்களில் அத்தியாவசியமானது.

இதில்  Photosynthesis என்பது ஒளியாற்றலைக்கொண்டு அவை உணவை  தயாரித்து மாவுச்சத்தாக சேமித்து வைத்துக்கொள்வது.

Phototropism என்பது ஒளியை நோக்கி திரும்புதல் அல்லது வளர்தல். எளிய உதாரணமாக தென்னந்தோப்புகளில் மதில் ஓரமாக இருக்கும் மரங்கள் வெளியில்  வளைந்து வளர்ந்திருப்பதை பார்த்திருப்போம்.  உள் பகுதிகளில் ஒளிக்கான  போட்டி அதிகமாக இருப்பதால் அவை வெளியிலிருக்கும் ஒளியை நோக்கி வளரும், இந்த ’ஒளி நோக்கி வளருதலை; அடிப்படையாக கொண்டு தான் மியாவாக்கி காடு வளர்ப்பு முறை செயல்படுகிறது. மிகச்சிறிய நிலப்பகுதியில் நெருக்கமாக பல்வேறு உயரங்களில் வளரும் தாவரங்கள் வளருகையில்   அவை பக்கவாட்டில் வளர வாய்ப்பில்லாமல் மேல் நோக்கி ஒளியை தேடி வெகு வேகமாக வளர்கின்றன. 3 வருடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான  உயரத்தில் அங்கு தாவரங்களை காணமுடியும்.

Photoperiodism   என்பது  அந்த ஒளிமாசு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒளி நாட்ட காலக்கணக்கு. ஒவ்வொரு வகை தாவரத்திற்கும் குறிப்பிட்ட அளவு பகல் நேர சூரிய ஒளி தேவைப்படும், சூரிய ஒளிக்கதிரில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து  அதற்கேற்ப  தான் வாழ்வு சுழற்சியை அதாவது  மலரும் காலம், கனி அளிக்கும் காலம் போன்றவற்றை தீர்மானிக்கும்  தாவரங்களின் திறன்.

    அதைக் கொண்டுதான் short day plants, long day plants, day neutral plants என்று குறைந்த பகல் நேர ஒளி போதுமானவை, நீண்ட ஒளி நேரம் தேவைப்படுபவை,  இரண்டுக்கும் இடைப்பட்ட, ஒளிக்கால அளவை பொருட்படுத்தாமல் பூத்து காய்க்கும் (நெல், வெள்ளரி) போன்றவை என வேறுபடுகின்றன. இந்த ஒளிக்கால அளவில்  உண்டாகும்  வேறுபாடுகள்  நிழல் மரங்களை   நட்டு இயற்கையாகவும் சரி செய்யப்படுகின்றன.

    உதாரணமாக  இதைச் சொல்லலாம்.  சென்ற வாரம் நான் ஏற்காடு இந்திய காபி வாரியத்தின் காபி தோட்டங்களுக்கு சென்றிருந்தேன்.அங்கே வளரும் காபி செடிகளுக்கு 6 மணி நேர பகல் வெளிச்சம் போதுமானதாக இருக்கிறது எனவே காபிச்செடிகளுக்குள்ளும், தோட்ட விளிம்பிலும் சில்வர் ஓக் மற்றும் கல்யாண முருங்கை மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். அவற்றில் உயரமாக கிளைகளதிகமாக இல்லாமல் வளரும் சில்வர் ஒக் மரங்கள் நிரந்தர நிழலுக்கும் அவ்வபோது கத்தரித்து விடப்படும் கல்யாண முருங்கை மரங்கள் தற்காலிக நிழல் அளிக்கவும் பயன்படுகின்றனஅவ்வாறு சரியான கோணத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு  நிழல் அளிக்கும்படியே  அவை வளர்க்கப்படுகின்றன.

    செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி செய்வதென்பது Photomorphogenesis என்பதை அடிப்படையாகக் கொண்டது. Photomorphogenesis என்பது ஒளிசார்ந்த உடல்வளர்ச்சி குறிப்பாக செல்கள் பிரிந்து  வளர்வதற்கு தாவரங்கள் சார்ந்திருக்கும் குறிப்பிட்ட நிறத்திலிருக்கும் ஒளிக்கற்றையின் நீளம் என்று கொள்ளலாம்.

      ஒளிக்கற்றையின் நிறம் மற்றும் நீளம் ஆகியவற்றில் இருக்கும் நுட்பமான மாறுபாட்டை புரிந்துகொண்டால் இதை புரிந்துகொள்ள முடியும். தாவரங்களுக்கு ஒளிச்சேர்க்கைக்கு பெரும்பாலும் சூரிய ஒளியின்  நீலம் மற்றும் சிவப்பு ஒளி தேவைப்படுகிறது, ஆனால் மலர்வதற்கு அகச்சிவப்பு ஒளி தேவைப்படுகிறது. இப்படி தண்டின் நீளம் அதிகமாக ,இலைகளின் பச்சை நிறம் அடர்த்தியாக என்று பிரத்தியேக தேவைகள் அவற்றிற்கு உள்ளது

      குளிர்காலங்களில் குறுகிய பகல் நேரமும் நீண்ட இரவு நேரமும் இருப்பதால் பகலின் போதாமையை இரவில் செயற்கை வெளிச்சம் கொண்டு ஈடுகட்டி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

      இயற்கை ஒளியில் உண்டாகும் எதிர்பாராமைகள், குளிர்காலங்களில் உண்டாகும் போதாமைகளினால் விவசாய பயிர்களின் மகசூல் பாதிக்கப்படுவது உலகெங்கிலும் ஏற்படும் ஒன்று. துவக்க காலங்களில் இந்த குறைபாட்டை களையத்தான் பசுமைகுடில்களில்  கட்டுப்படுத்தப்பட்ட  காலநிலைகளில் பயிர் வளர்ப்பு செய்யப்பட்டது.

      1860களில் செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி குறித்த ஆய்வுக் கட்டுரைகளை H.Mangon,E.Prilleux ஆகியோர் எழுதினர். எனினும் விரிவான வணிக ரீதியான பயிர் சாகுபடிக்கான செயற்கை வெளிச்ச பயன்பாடு 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தான் பயன்பாட்டுக்கு வந்தது.

      தற்போது கட்டுப்படுத்தப்பட சூழலில் குறிப்பிட்ட கால அளவுகளில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கை விளக்கொளியில்  பயிர் சாகுபடி என்பது மிக முக்கியமான தொழில் நுட்பமாகி விட்டிருக்கிறது

      1809-ல் sir Humphry Davy வளைந்த செயற்கை ஒளிரும் மின்வீச்சு விளக்கை இதற்கெனவே உருவாகினார் . 1879 ல் தாமஸ் எடிசன் மின்விளக்குகளுக்கு பிறகு பல வகையில் பயிர் சாகுபடிக்கு பொருத்தமான செயற்கை விளக்குகளின் பயன்பாடு குறித்து சோதனை முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன பல மாதிரி விளக்குகள்  உருவாக்கப்பட்டாலும் வணிகரீதியாக அவற்றை பயன்படுத்த  முடியாத அளவுக்கு செலவு பிடித்த தொழில்நுட்பங்களாயிருந்தன அவையனைத்துமே.

      ’1901 லிருந்து 1936 வரையில் நடந்த பல ஆய்வுகளுக்கு பின்னர் மெர்குரி வாயு விளக்குகள் இந்த வகை பயன்பாட்டுக்கு பொருத்தமானவை  என சொல்லப்பட்டது, எனினும் அவ்விளக்கொளி  தாவர ஒளிச்சேர்க்கைக்கு பாதகமாயிருந்தது.இறுதியாக LED விளக்குகள் இவ்வாறான கட்டுப்படுத்தப் பட்ட சூழலில் நடைபெறும் விவசாயத்திற்கு பொருத்தமானவை என்று கண்டறியப்பட்டது.1960களில் இவை  சந்தைப்படுத்தப்பட்டு  மேலும் பல தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்களுக்கு உள்ளாகி தற்போது ஆகச்சிறந்த சாகுபடிக்கான செயற்கை விளக்குகளாக  உபயோத்தில் இருக்கின்றன

      அதிக சிவப்பு, அகச்சிவப்பு மற்றும் குறைந்த நீலநிறக் கற்றைகளை கொண்டவை, அதிக நீலக்கற்றைகளும் குறைந்த அகச்சிவப்பு கற்றைகள் கொண்டவை என பிரத்யேகமாக  வடிவமைக்கப்பட்ட விளக்குகள் தற்போது கிடைக்கின்றன.  சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தேவைக்கேற்ப இவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன

      இவ்விளக்குகள் இயற்கை ஒளியுடன் கூடுதலாக துல்லியமாகக் காலக் கணக்குகள் கணக்கிடப்பட்டு அந்த நேரத்துக்கு மட்டுமே அளிக்கப்படுபவை.  ஒளியின் தீவிரம், ஒளிக்கற்றையின்  நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் தாவரத்துக்கும்  செயற்கை விளக்குகளுக்குமான இடைவெளி துல்லியமாக கணிக்கப்பட்டு விளக்குகள்  அமைக்கப்படுகின்றன.

      இந்த வகையான செயற்கை விளக்குகள் தேவைப்படும்போது ஒளியின் கோணத்தை மாற்றியமைக்க எதுவாக் திருகு கம்பங்களில் அமைக்கப்படும். தற்போது இளஞ்சிவப்பு LED விளக்குகள் தாவர வளர்ச்சிக்கு மிகவும் உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

      இவ்வொளி தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை குளிர் நிரம்பிய,  சூரிய ஒளி மிகக்குறைவாக இருக்கும் காலத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்றன. இவற்றால் அந்த பயிர்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ  இதுவரை  ஆபத்துகள் ஏதும் கவனிக்கும்படி கண்டறியப்படவில்லை.

      சாகுபடி தொழில்நுட்பங்களில் ஒன்றான இதன் விளைவுகள்  இதுவரை பெரிதாக ஆய்வுக்கு உள்ளாகவில்லை. சூழல் வெப்பம் அதிகமாகின்றது என்பதை மட்டும் இப்போதைக்கு கருத்தில் கொண்டிருக்கிறார்கள்

      இந்த நிகழ்வில்  வேதியியல் மற்றும் இயற்பியல் நுட்பங்களும் இருக்கின்றன. இந்த இணைப்பில் இருக்கும் கட்டுரை  அவற்றை எளிமையாக விளக்குகிறது https://www.valoya.com/artificial-lighting-in-agriculture/

      செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி குறித்து மேலும் அறிய: https://www.agrivi.com/blog/farming-under-artificial-light-as-a-response-to-future-food-demands/

      பிளாஸம் என்கிற வேக்கா!

      இங்கிலாந்த்தின்  கிளாஸ்டுஷா* மாகாணத்தில் அமைந்திருக்கும் பார்க்லீகோட்டையின் விரிந்த மைதானத்தில்  நண்பர்கள் பலர் இணைந்து வெப்பக்காற்றுபலூன்களைஉயரப்பறக்கவிட்டும், அது எத்தனை எடைதாங்கும் என்பதை கணக்கிட்டுக்கொண்டுமிருந்தார்கள். அது 1784-ன் செப்டம்பர் மாதம்.

      ஃப்ரஞ்ச்சகோதரர்களான  ஜோசப் மற்றும் எட்டியன் இருவரும் எடையற்ற ஒரு பொருளுக்குள்வெப்பக்காற்றைநிறைத்தால் அது உயரே பறக்கும், அதில் பயணம் செய்யலாம் என்பதை பல சோதனைகள் மூலம் 1782- ல் தான் நிரூபித்திருந்தார்கள். வைக்கோல் மற்றும் கம்பளியை எரித்து ஒரு பலூனுக்குள்வெப்பக்காற்றைச் செலுத்தி அந்தப் பலூனை3000 அடி உயரத்தில் 10 நிமிடம் வானில் நிற்க வைத்த முதல் சோதனைக்குப் பிறகு 1783-ல் அந்த வெப்பக்காற்றுபலூனில் ஒரு ஆடு, சேவல் மற்றும் வாத்து ஆகியவற்றையும் அனுப்பி  8 நிமிடம் பறந்தபலூன்10 மைல் தொலைவில் தரையிறங்கியசோதனையையும்வெற்றிகரமாகச் செய்தனர். 

      அதே வருடம் நவம்பர் மாதம் மனிதர்கள் வானில் பயணம் செய்த  உலகின் முதல்  வெப்பக்காற்றுபலூனையும் அவர்கள் பறக்கச் செய்தனர். 3 பயணிகளுடன்அந்த  ஹைட்ரஜன்வெப்பக்காற்றுபலூன் சுமார் 10 கிமீபயணித்தது. இந்த வெற்றிக்குப் பிறகு உலகின் பல பாகங்களிலும்இந்தச்சோதனைகள் செய்து பார்க்கப்பட்டது.

      கேலப்ஹில்லியர் பாரி (Caleb Hillier Parry) என்பவர் ஆளில்லா வெப்பக் காற்று பலூனைப்பட்டுத்துணியில் உருவாக்கி  ஹைட்ரஜன்வெப்பமூட்டி1784- ஜனவரியில்19 மைல்தொலைவுக்குப்பறக்கக் செய்தார். பாரியின் நெருங்கிய நண்பரானஎட்வர்ட்ஜென்னெரும்அந்தச்சோதனையில் ஆர்வம் கொண்டார்.

      இன்றைக்கு சரியாக 240 வருடங்களுக்கு முன்பாக 1784-ன் செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 2 மணிக்கு  வெப்பக்காற்றுபலூன்களின்சோதனையில்எட்வர்ஜென்னரும்பாரியும்பார்க்லீ கோட்டை மைதானத்தில்   இருந்தனர். ஜென்னரின்பலூன்உயரப் பறந்து  10 மைல் தொலைவில் இருந்த ஆண்டனிகிங்ஸ்காட்என்பவருக்குச் சொந்தமான மாபெரும் எஸ்டேட்டில்தரையிறங்கியது.  அங்கு தோட்ட வேலையில் இருந்தவர்கள் அந்தப் பலூனைக்கண்டு பயந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கையில்ஜென்னர்  பலூனைத்தேடிக்கொண்டு அங்கே சென்றார்.  

      பலூனைக் காண்பதற்கு முன்னர் எஸ்டேட்உரிமையாளரின்மகளானகேத்தரினை  கண்டதும் காதல் கொண்டார்எட்வர்ட்ஜென்னெர். அவர்களிருவரும்1788-ல் மணம் புரிந்து கொண்டனர்.அவர்களின்திருமணத்தின்போது இருவரின் காதலைக் குறித்த கவிதைகள் எழுதப்பட்டவெப்பக் காற்று பலூன்   திருமணம் நடந்த தேவாலத்திலிருந்துபறக்கவிடப்பட்டது. அந்த பலூன் சென்று தரையிறங்கிய20 மைல் தொலைவில் இருந்த இடம் இன்றும் அவர்களின் காதலின் நினைவுச்சின்னமாக “Air Balloon Inn”. என்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கானபொழுதுபோக்கும் இடமாக இருக்கிறது.

      ஜென்னர்வெப்பக்காற்றுபலூன்களிலும், விலங்கு மற்றும் பறவைகளிலும், இயற்கையை அணுகி ஆராய்வதிலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஜென்னர்தான்பறவைக்கூடுகளில் வைக்கப்படும் குயில் முட்டைகளில் இருந்து வெளிவந்த குயில் குஞ்சுகள் பிற பறவைகளின்முட்டைகளைகூட்டிற்கு வெளியே தள்ளி விடும் brood parasitism என்பதை கண்டறிந்தவர்.

      மருத்துவரானஜென்னர்angina pectoris என்கிற மார்பு நெரிப்பு, கண் அழற்சி, போன்ற பலவற்றைக் குறித்து ஆராய்ந்து கட்டுரைகளைவெளியிட்டிருக்கிறார்.  பறவைகள் வலசைபோவதையும்ஆராய்ந்திருக்கிறார்ஜென்னெர்.

      கோவிட்பெருந்தொற்றிலிருந்துபலகோடிப்பேர்பிழைத்திருப்பதற்கும்எட்வர்ட்ஜென்னர்தான் காரணம். நவீன நோய் எதிர்ப்பு அறிவியலுக்கானஅடித்தளத்தைஅமைத்தவரானஜென்னரேஉலகின் முதல் அதிகாரபூர்வமானதடுப்பூசியைஉருவாக்கியவர்.அவர்அமைத்துக்கொடுத்த பாதையில் சென்றவர்களால்தான்கோவிட்-19 தடுப்பூசிகள் விரைவாக உருவாக்கப்பட்டு, உலகளவில்கோடிக்கணக்கானஉயிர்களை காப்பாற்ற முடிந்தது.

      நோயெதிர்ப்பறிவியலின் (Immunology) தந்தை எனக் கருதப்படும் ஜென்னெர்1796 மே மாதம் 14-ம் தேதி மருத்துவ அறிவியல் வரலாற்றின் பாதையை முழுவதுமாக மாற்றி அமைத்தார். அன்றுதான் பெரியம்மை நோய்க்கு எதிராக,  மாட்டம்மையிலிருந்துஉருவாக்கப்பட்ட  உலகின் முதல் தடுப்பூசி வெற்றிகரமாக அவரால் அளிக்கப்பட்டது.

      ஜென்னருக்கு இருபது ஆண்டுகள் முன்பே  இங்கிலாந்திலும்ஜெர்மனியிலும் ஐந்து ஆய்வாளர்கள் (Sevel, Jensen, Jesty, Rendell & Plett) பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசியைமாட்டம்மைக்கொப்புளங்களிலிருந்துகண்டுபிடித்திருந்தார்கள் 

      1774-ல்இங்கிலாந்தின்டார்செட்பகுதியைச்சேர்ந்த  விவசாயிபெஞ்சமின்ஜெஸ்டிக்கும், நிறைய  மாடுகள் வளர்ந்த அவரது பண்ணையில் வேலை செய்தவர்களுக்கும்மாட்டம்மை தொற்று உண்டாகி இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கும் குழந்தைகளுக்கும்மாட்டமைத் தொற்று உண்டாகி இருக்கவில்லை. நகரில் பெரியம்மைத்தொற்றுவிரைவாகப்பரவியபோது அக்கம்பக்கம் இருந்தவர்களின்  பலத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஜெஸ்டி தன் குடும்பத்தினரின் கைகளில் சருமத்துக்கடியில்மாட்டம்மைச்சீழை  ஊசியால்குத்திச்  செலுத்தினார், அவர்களுக்கு பெரியம்மை வரவில்லை. இப்படி ஜென்னெருக்கு முன்பே பலர் இந்த சோதனையை செய்திருந்தார்கள்.

      ஆனாலும் பொதுவெளியில்பலருக்கு முன்பு இந்தச்சோதனையைச் செய்து அதன் முடிவுகளை மேலும் பல முறை சரிபார்த்து தடுப்பூசியின்செயல்பாட்டுகுறித்தானஆய்வறிக்கைகளையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டவர் என்னும் வகையில் எட்வர்ட்ஜென்னரே இந்த நோயெதிர்ப்பறிவியல்துறையைஉருவாக்கியவராகிறார். 

      தொற்றுநோய்த்தடுப்புமுறைகளின் வரலாறு

      பெரியம்மைநோய் வரலாற்றுக்காலத்திலிருந்தே ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் சீனாவில் இருந்தது. பெரியம்மையினால் இறப்பு, கண் பார்வை இழப்பு மற்றும் தழும்புகளால் முகம் விகாரமாவது ஆகியவை உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்தது. இதற்கான ஆதரங்கள்கிமு1200-த்தைச்சேர்ந்தஎகிப்தியமம்மிகளிலிருந்துகிடைத்தன.

      நூற்றாண்டுகளாகசீனாவிலும்இந்தியாவிலும் காய்ந்த அம்மைப்பொருக்குகளை  உலர்த்தித் தூளாக்கி மூக்குப்பொடி போல உறிஞ்சி நோயெதிர்ப்பைப் பெறும்வேரியோலேஷன்என்னும் வழக்கம் இருந்தது. கொப்புளப்பொடியை மூக்கில் ஊதவெள்ளியாலான சிறு ஊது குழல்கள்பயன்பாட்டில் இருந்தன. பண்டைய சீனாவில்இந்தக்கொப்புளப்பொருக்குத்துகள்கள்உலோகக்கூடைகளில் வைத்து தெருக்களில்விற்கப்பட்டன.

      16-ம்நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியாவில் வங்காள பிராமணர்கள் மத்தியில் இந்த தடுப்பு முறை புழக்கத்தில் இருந்தது என்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்த அது குறித்த ஆவணங்கள் காலனியாதிக்கத்தின்போதுமறைக்கப்பட்டுஜென்னரின் கண்டுபிடிப்பு முன்வைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

      இந்தியாவில் இந்த பொருக்குப்பொடியை பிறருக்கு தடுப்பு மருந்தாக அளித்த மருத்துவர்கள் ’திக்காதர்கள்’ (Tikadars) என அழைக்கப்பட்டனர். இன்றும் பல இந்திய மொழிகளில்  தடுப்பூசிபோட்டுக்கொள்வது  திக்கா’’ (tika) என்று அழைக்கப்படுகிறது.

      கான்ஸ்டண்டினோபிலில்கொப்புளப்  பொருக்குகளைநோய்த்தடுப்புக்காகநுகரும் முறை புழக்கத்தில் இருந்தது. அதை அறிந்த ஒட்டமான்பேரரசின் அரசவை மருத்துவர் இம்மானுவேல் (Emmanuel Timoni) அந்த முறையை  1714-ல்விளக்கமாக எழுதி ராயல்சொசைட்டிக்குசமர்ப்பித்திருந்தார்.

      1720-களில்  கான்ஸ்டண்டினோபிலின்பிரிடிஷ்தூதரின் மனைவி மேரி (Lady Mary Wortley Montegue) இந்தியாவிலும்சீனாவிலும், கான்ஸ்டண்டினோபிலிலும் பரவலாக அப்போது  புழக்கத்தில் இருந்த  பெரியம்மைக்கெதிராகமாட்டம்மைக்கொப்புளங்களின் உலர்ந்த பொடியை மூக்கில் உறிஞ்சும் தடுப்பு முறையைக்கற்றுக்கொண்டு இங்கிலாந்து வந்தார்.1717-ல் மேரி  இதை எழுத்துப்பூர்வமாக அவரது தோழி சாராவுக்குகடிதமொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

      மேரியின் சகோதரர்   1713-ல்பெரியம்மையினால் இறந்தார், இறப்பதற்கு முன்னர் அவரிடமிருந்து மேரிக்கும்அம்மைத்தொற்று உண்டானது எனினும் உடலிலும் முகத்திலும் விகாரமான, நிரந்தரமான தழும்புகளுடன்  மேரி பிழைத்துக்கொண்டார். (அவரது உருவச்சித்திரங்கள்வரையப்படுகையில் அந்தத் தழும்புகள் கவனமாக தவிர்க்கப்பட்டன.) 

      1721-ல்லண்டனில் பெரியம்மை நோய்த்தொற்றுபரவியபோது  மேரி தனது 4 வயதுமகளுக்கும், 5 வயது மகனுக்கும்  அரசவை மருத்துவரும்அறுவைச்சிகிச்சைநிபுணருமாகியசார்லஸைக் (Charles Maitland) கொண்டு  மாட்டம்மைக்கொப்புளங்களின்உல்ர்பொடியைஉறிஞ்சச்செய்தார். அவரது குழந்தைகளுக்கு பெரியம்மைத் தொற்று உண்டாகவில்லை. அதன்பின்னர் ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதுமே  சிறைக்கைதிகளுக்கும்அனாதைக்குழந்தைகளுக்கும் வெற்றிகரமாக சார்லஸால்அந்தச்சோதனை செய்து பார்க்கப்பட்டது, பின்னர் அந்த பெரியம்மை நோய்த்தடுப்பு முறை உலகெங்கிலுமே  பரவலாகியது.

      ராணுவ வீரர்களுக்கும்குழந்தைகளுக்கும்உலகெங்கிலும் இந்த வேரியோலேஷன் என அழைக்கப்ட்ட தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. 1757-ல்இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது அச்சிறுவர்களில்8 வயது எட்வர்ட்ஜென்னரும் இருந்தார்.

      18-ம்நூற்றாண்டின் இறுதியில் சூடானில் அம்மை நோய்கண்ட குழந்தை இருக்கும் வீட்டுக்குச் செல்லும் தாய்மார்கள், கொப்புளங்களின்எண்ணிக்கைக்குஈடாக கட்டணம் செலுத்தி நோயுற்றகுழந்தையின் கைகளில் கட்டப்பட்ட துணியை கொண்டு வந்து தங்களின் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கு கட்டிவிடும் வழக்கம் பரவலாக இருந்தது. இதன் நவீன வடிவமாகத்தான் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  அம்மை நோயுற்ற குழந்தைகளின் வீட்டுக்கு பலர் குழந்தைகளை அழைத்துவந்து கூடும் அம்மைப் பார்ட்டிகள்2010 வரையிலுமே நடந்தன.(Pox party)*

      இந்த தடுப்பு முறைக்குஉலகெங்கிலும்கண்டனங்களும்எதிர்ப்புமிருந்தது, அரசகுடும்பத்தினர் உள்ளிட்ட சிலருக்கு இந்த தடுப்பு முறைக்குப்பிறகுஇறப்பும் உண்டானது எனினும் உலகெங்கிலுமே  பரவலாக இந்த நுகரும் முறை புழக்கத்தில் இருந்தது,பெரியம்மை நோயினால் உண்டான இறப்பு வெகுவாககுறைந்தும் இருந்தது.

      1779-களிலிருந்தே பலரும் மாட்டம்மைக்கொப்புளங்களின் தொற்று நோயெதிர்ப்புத்திறனைச்சோதிக்கும்ஆய்வுகளைமனிதர்களில்செய்யத்தொடங்கினர் என்றாலும், 20 ஆண்டுகள் கழித்து ஜென்னர் அதை நிரூபிக்கும் வரை அந்த தடுப்பூசி  அதிகாரபூர்வமாகபுழக்கத்துக்குவந்திருக்கவில்லை.  

      ஜென்னர்

      ஸ்டீஃபன்ஜென்னருக்கும்சாராஜென்னருக்கும்1749,  மே 17 அன்று அவர்களின் 9 குழந்தைகளில், எட்டாவதாகப் பிறந்தார் எட்வர்ட்ஜென்னர். 

      ஜென்னர் பிறந்த சமயத்தில் பிரிடிஷ்மருத்துவப் பயிற்சி மற்றும் கல்வி பெரும் மாற்றம் கண்டிருந்தது. ஆக்ஸ்ஃபோர்டிலும்கேம்பிரிட்ஜிலும் பயின்று வந்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள்  ஆகியோர் உடனே தொழிலை தொடங்காமல்அனுபவத்தின் பொருட்டு அவரவர் துறைகளில்பிரபலமானவர்களிடம்உதவியாளர்களாக சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டபிறகே தனியே தொழிலைத்தொடங்கினார்கள். பலர் பயிற்சிக்குப்பின்னரேமருத்துவப்படிப்புக்குச்சென்றார்கள். தொற்றுநோய்களின்பரவலால்மருத்துவச்சேவை அப்போது உச்சகட்ட  தேவையான தொழிலாக இருந்தது 

      ஜென்னரின் தந்தை மதகுருவாக இருந்தவர், ஜென்னரின் மிக இளம் வயதிலேயே1754-ல் அவரது  தந்தையும்தாயும்  மறைந்தனர்.அவரை அவரது மூத்த சகோதரர் அன்னையும்தந்தையுமாக இருந்து வளர்த்தார். ஜென்னருக்குஇளமையிலிருந்தேஇயற்கையை கூர்ந்து கவனிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அடிப்படைக்கல்வியை வீட்டுக்கு  அருகில் இருந்த பள்ளியில் படித்த ஜென்னர், 13 வயதில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் ஜார்ஜிடம் (George Harwicke). உதவியாளராக பணியில் இணைந்தார்.அடுத்த8 வருடங்களில் ஜென்னர் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சையின்அடிப்படைக்கல்வியைப்பெற்றிருந்தார்.

      அதன் பின்னர் தனது  21-ம் வயதில் லண்டனுக்குச் சென்று செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில்  பணியிலிருந்தலண்டனின் புகழ்பெற்ற  அறுவை சிகிச்சை நிபுணரான  திரு ஜான்ஹண்டரின்மாணவராகஜென்னர் இணைந்தார். ஜான்ஹண்டர்லண்டனின்முதன்மையான  உடற்கூறாய்வாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

      ஹண்டருக்கும்ஜென்னருக்கும் இடையே நல்ல புரிதலும் நட்பும் உண்டானது. அந்தப் பிணைப்பு ஹண்டர்1793-ல்மரணமடையும் வரை தொடர்ந்தது. ஹண்டரிடமிருந்துஜென்னர்இயறகையை மேலும் அணுகி ஆராய்வது, எந்தக்கருத்தானாலும் அதற்கான அறிவியல் அடிப்படையைதேடிக்கண்டடைவதன் அவசியம், இயற்கை உயிரியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் மற்றும் தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றைக்கற்றுக்கொண்டார். 

      ஹண்டர் சொல்லித்தான் குயில் குஞ்சுகளின் ’ஒட்டுண்ணியை அடைகாத்தல்’ என்னும் வழக்கத்தைஜென்னெர் கண்டறிந்தார். அந்தக் கண்டுபிடிப்புக்காகத்தான்ஜென்னருக்குராயல்சொசைட்டியின் அங்கத்தினர் என்னும் அந்தஸ்து கிடைத்தது.

      ஹண்டருடன்பணிபுரிகையில்தான்ஜென்னருக்கு கேப்டன் குக்கின்கடற்பயணத்தில்உடனிருந்தஜோசப்பேங்க்ஸ்அறிமுகமானார். கடற்பயணத்திலிருந்துபேங்க்ஸ் கொண்டு வந்திருந்த பல உயிரினங்களின்பதப்படுத்தப்பட்டஉடல்களை வகைபிரித்து அடுக்கிவைக்கும் பணியை ஜென்னர் செய்து கொடுத்தார். 

      ராயல்சொசைட்டியின்தலைவராக40 வருடங்கள் பணியாற்றிய பேங்க்ஸினால் தான் ஜென்னருக்குஉலகின் தலைசிறந்த அறிவியலாளர்களின், மருத்துவர்களின்அறிமுகமும், நட்பும் கிடைத்தது.  கேப்டன் குக் தனது இரண்டாம் உலகப்பயணத்தில்இணைந்துகொள்ளும் படி விடுத்தஅழைப்பைஜென்னெர்ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு பறவையியலில், நிலவியலில், இயற்கை வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவற்றில் கவனம் செலுத்தினார். புதைபடிவங்களானஃபாஸில்களைதேடுவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.  வெப்பக்காற்றுபலூன்களிலும் சோதனை செய்து இரண்டு முறை சுமார் 12 மைல்தொலைவுக்கு அவரே உருவாக்கிய பலூன்களைஜென்னர்பறக்கச்செய்தார்.

      ஹண்டருடன்20 வருட தீவிரமான மருத்துவப்பணிக்குப் பிறகு ஜென்னர் தனது மருத்துவ மேற்படிப்பைஸ்காட்லாந்தின்செயிண்ட்ஆண்ட்ரூஸ்பல்கலைக்கழகத்தில்1792-ல்முடித்துப் பட்டம் பெற்றார். தனது பெயருக்குப் பின்னே  MD, FRS, என்னும் பட்டங்களை குறிப்பிட்ட பிறகே தனது தனிப்பட்ட மருத்துவத் தொழிலை ஜென்னர்தொடங்கினார். 

      ஜென்னருக்கு அப்போது டைஃபஸ்பாக்டீரியாக் காய்ச்சல் உண்டானது. அதிலிருந்து குணமாக  ஏராளமான கனிம நீரூற்றுக்கள் இருக்கும் இங்கிலாந்தின் பிரபல நகரமாகியசெல்டென்ஹாமிற்குகோடைக்காலங்களில்நீரூற்றுக்குளியலின்பொருட்டுச்செல்லத்துவங்கினார். அங்கு ஜென்னருக்குமேல்தட்டுமக்களுடனான அறிமுகம் கிடைத்தது. அங்கு அவர் வயலினும்புல்லாங்குழலும்வாசிக்கக்கற்றுக்கொண்டார். கவிதைகள் எழுதினார்.அங்கு ஓய்வில் இருக்கையில் எல்லாம் சீனாவிலும்இந்தியாவிலும்புழக்கத்திலிருந்த  வேரியோலாஷன்எனப்படும்அம்மைக்கொப்புளங்களின்உலர்பொடியைநுகரும்நோய்த்தடுப்புப்முறையைக் குறித்த  கட்டுரைகளைவாசித்துகுறிப்பெடுத்துக்கொண்டார். தனது மருத்துவ அனுபவங்களையும்வாசித்தமருத்துவக்கட்டுரைகளையும்  பிரசுரிக்கத்தகுந்தபடி   ஒழுங்கமைத்துக்கொண்டார்.

      ஜென்னர்மருத்துவப்பணியில் இருந்த நகரின்பால்காரப்பெண்மணிகளுக்குமாடுகளின்மடியிலிருந்து பரவிய மாட்டமையினால் மிக லேசான பாதிப்புகள் மட்டுமே உருவானதையும் அவர்களுக்கெல்லாம் பெரியம்மைக்கு எதிரான நோயெதிர்ப்புஇருப்பதாகச்சொல்லப்பட்டகதைகளை அவர் ஹண்டருடன்பணிபுரிகையிலேயே அறிந்திருந்தார்.  பால்காரப்பெண்மணிகள்கர்வத்துடன்“எங்களின் முக அழகு ஒருபோதும் தழும்புகளால்கெட்டுப்போகாது ஏனென்றால் எங்களுக்கு மாட்டம்மைதான் வரும் பெரியம்மை வராது“ என்று சொல்வது கிராமப்புறங்களில்  வாடிக்கையாக இருந்தது. 

      அப்போது பெரியம்மையினால் இறப்பு, குறிப்பாக குழந்தைகளின் இறப்பு மிக அதிகமாக இருந்தது.  எனவே ஜென்னர்அதற்கெதிரான தடுப்பு மருந்துகளுக்காக ஆய்வு செய்யத்தொடங்கினார்.

      1796-ல்ஜென்னர்13 மனிதர்களுக்குமாட்டம்மைக்கொப்புளங்களின்பொருக்குத்துகள்கள்முகரச்செய்யப்பட்டுபெரியம்மைக்கெதிரானநோயெதிர்ப்பை உருவாக்கிய தகவலை அறிகையாக  ராயல்சொசைட்டிக்குஅனுப்பினார். ஆனால் அக்கட்டுரையின் முக்கியத்துவம் அப்போது சரியாகப்புரிந்துகொள்ளப்படாமல் அந்த ஆய்வறிக்கை ஜென்னருக்கே திரும்ப அனுப்பப்பட்டது.

      ஜென்னர் மீண்டும் மீண்டும் அந்த ஆய்விலேயே மூழ்கி இருந்தார். மாட்டம்மை (Cowpox) மாடுகளின்மடிக்காம்புகளில் பெரிய கொப்புளங்களை உருவாக்கியது. பால் கறப்பவர்களுக்கு கைகளில் கொப்புளங்களையும் லேசான காய்ச்சலையும் மட்டுமே உருவாக்கிய மாட்டம்மை வேறு சிக்கல்கள் எதையும் உருவாக்கவில்லை, எனவே மாட்டம்மை மிக லேசான அறிகுறிகள் கொண்ட ஆபத்தில்லாத ஒரு நோயென்பதை அறிந்த ஜென்னர்   மாட்டம்மைக்கொப்புளங்களின்சீழை  மிகக்குறைந்த அளவு உடலில் செலுத்துவதன் மூலம் பெரியமைக்கான் நோய் எதிர்ப்பைப் பெற முடியும் எனக் கருதினார். 

      ஜென்னரின்சோதனையும்தடுப்பூசிஉருவாக்கமும்

      1796-ல்50 வயதை நெருங்கி கொண்டிருந்த ஜென்னரின் வீட்டுக்கு பால்கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருந்த  சாராவின் (Sarah Nelmes) பிளாஸம் (Blossom) என்னும் பசுமாட்டிற்குமாட்டம்மை உண்டாகி இருந்தது. அந்தப் பசுவிடமிருந்துசாராவுக்கும்மாட்டம்மை தொற்றி அவரது புறங்கைகளில் பெரிய கொப்புளங்கள் உருவாகி இருந்தன,

      அப்போதுதான் ஜென்னர்மிகச்சவாலானதும்  நவீன அறிவியலின்படிஅறமற்றதுமான ஒரு சோதனையைச் செய்ய முற்பட்டார். 

      சாராவின் கைகளில் இருந்த மாட்டம்மைக்கொப்புளங்களின்சீழிலிருந்து உலர்ந்த பொடியைத் தயாரித்த ஜென்னர்1796 மே மாதம் 4-ம் தேதி அவரது தோட்டக்காரரின்8 வயது பேரன் ஜேம்ஸ்பிப்ஸின் இரு கைகளிலும் லேசான கீறல்களை உருவாக்கி அவற்றின் மீது அந்தப் பொடியைலேசாகத்தேய்த்துவிட்டார். 

      சிலநாட்களில்ஜேம்ஸுக்கு மிக லேசான மாட்டம்மைஅறிகுறிகளும்காய்ச்சலும் உண்டானது. எனவே மாட்டம்மை ஒரு தொற்றுநோய் என்பதை ஜென்னர்நிரூபித்தார்.அடுத்தகட்டமாகமாட்டம்மை நோய் எப்படி பெரியம்மைக்கெதிரானஎதிர்ப்பைக் கொடுக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டி இருந்தது. பிப்ஸுக்கு லேசான காய்ச்சல் பசியின்மைஆகியவற்றைத் தவிர வேறு சிக்கல்கள் எழவில்லை, 10ம் நாள் பிப்ஸ் முழுக்க நலமடைந்தான்.

      அந்தச்சிறுவனுக்குஜென்னர்பெரியம்மைக்கொப்புளங்களிலிருந்து எடுக்கப்பட்ட  சீழ் ஊசியை ஜூலை 1-ம் தேதி அளித்தார். அவனுக்கு பெரியம்மை நோய்த்தொற்று  உண்டாகவே இல்லை.

      அதன்பிறகு வரலாற்றுச்சிறப்பு மிக்க அந்தத் தடுப்பூசியை தனது மகன்  உள்ளிட்ட மேலும் 25 மனிதர்களுக்கு செலுத்தி அவர்களுக்கும் பெரியம்மை உண்டாகவில்லை என்பதை நிரூபித்து,ஆய்வு முடிவுகளை லண்டனில் தனது சொந்தச்செலவில்`An Inquiry into the Causes and Effects of the VariolaeVaccinae` என்னும் தலைப்பில் ஒரு சிறு நூலாக  ஜென்னர்பிரசுரித்தார். அதன்பின்னரேராயல்சொசைட்டிக்கு அந்த அறிக்கை குறித்த தகவல்கள்தெரியவந்தது.மூன்றுபாகங்களாகஅமைக்கப்பட்டிருந்த அந்த நூலில்ஜென்னர் மாடு என்பதற்கானலத்தீனச்சொல்லானவேக்கா(vacca) என்பதை உபயோகித்து அந்த தடுப்பூசி செலுத்தும் முறைக்குவேக்ஸினேஷன்-vaccination என பெயரிட்டிருந்தார்.

      பின்னர் ஜென்னெர்லண்டனுக்குச் சென்று இந்தத்தடுப்பூசிபோட்டுக்கொள்ளதன்னார்வலர்களைத்தேடிக்கண்டுபிடித்தார். ஜென்னரிடமிருந்து சீழ் மருந்தை வாங்கி இருந்த  ஜார்ஜ் பியர்சன், ஹென்றி மற்றும் வில்லியம்ஆகியோரும்லண்டனில் அந்த ஊசியைசெலுத்திக்கொண்டிருந்தார்கள். George Pearson , William Woodville &  Henry Cline 

      அதிலும் ஜென்னெருக்கு பல பிரச்சனைகள்உருவாகின. பியர்சன்தடுப்பூசிகண்டுபிடிப்பில்ஜென்னருக்குஎந்தத் தொடர்பும் இல்லை தானே அதைக்கண்டறிந்த்தாகலண்டனில் சொல்லிக்கொண்டிருந்தார்.

      வில்லியம்மாட்டம்மைச்சீழுடன் பெரியம்மை சீழை கலந்து நோய்த்தடுப்பைசிக்கலாக்கியிருந்தார்.

      பலரும் ஜென்னர்கட்டியவழியிலேயேதடுப்பூசி தயாரித்து உபயோகித்தார்கள் எனினும் ஜென்னர் தயாரித்தது போல மிகச்சரியாக பலர் தயாரிக்கவில்லை எனவே அதன் செயல்பபாடுகள் சில இடங்களில் திருப்தியளிக்கவில்லை.

      மாட்டம்மைஉலகின் எல்லா பகுதிகளிலும்பரவியிருக்கவில்லை எனவே தூய மாட்டம்மைச் சீழ் கிடைப்பதும்அதைப் பாதுகாத்து வைப்பதும், ஊசியாகஉபயோப்பதும்அனைவருக்கும் எளிதாக இல்லை.மேலும் உடலின் நோயெதிர்ப்புக் குறித்த அறிவியல் அடிப்படை அப்போது பலருக்கும் தெளிவாக இல்லாததும் கூடுதல் சிக்கலை உருவாக்கியது. 

      மாட்டம்மைக்கொப்புளங்களின் சீழ் தேவைப்படுவோர்ஜென்னரையேநாடவேண்டி இருந்தது.   மாட்டம்மைச்சீழை  உலர்த்தி பத்திரப்படுத்தி உலகின் பல பாகங்களுக்கும்எந்தச்  சலிப்புமின்றிஜென்னர் தொடர்ந்து அனுப்பி வைத்துகொண்டிருந்தார். அவரே அவரை உலகின்தடுப்பூசி அலுவலர் என்றழைத்துக்கொண்டார்.  

      ஆங்காங்கே சில தவறுகள் நடந்தாலும் ஜென்னரின் அந்தத் தடுப்பூசி முறை வேகமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும்  பின்னர் அங்கிருந்து  உலகின் மற்ற பகுதிகளுக்கும்பரவியது.   பெரியம்மை இறப்பு வெகுவாகக் குறைந்தது. 

      ஜென்னரின் புகழ் உலகெங்கும் பரவியது. எனினும் ஜென்னர் இந்த பாராட்டுகளில் அதிக ஆர்வம் காட்டாமல்பெரியம்மையை உருவாக்கும் காரணிகளைகண்டுபிடிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். அவரது மருத்துவத்தொழிலும் குடும்ப நிர்வாகமும் இதனால் வெகுவாகப்பாதிக்கப்பட்டாலும்ஜென்னர் பெரியம்மை நோய்க்கிருமியைகண்டுபிடிப்பதிலேயே தன் கவனத்தைச்செலுத்தினார். 

      அப்போது வைரஸ் என்னும் நுண்ணுயிர் கண்டுபிடிக்க பட்டிருக்கவில்லை எனவே ஜென்னருக்குப் பெரியம்மை எப்படி எதனால் உருவானது என்பது தெரிந்திருக்கவில்லை ஆனால் உலகெங்கிலும் பெரியம்மை நோயால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க இந்த மாட்டம்மைத்தடுப்பூசியைபிரபலமாக்கினார். அவரது Chantry என்னும்  பெரிய வீட்டின் ஒரு பகுதியில் ஒரு சிறு குடிசையை உருவாக்கிய ஜென்னர் அதற்கு தடுப்பூசிக் கோவில் (“Temple of Vaccinia”) என்று பெயரிட்டு அங்கே அன்றாடம் ஏராளமான ஏழைகளுக்கு இலவசமாக அந்த தடுப்பூசியைஅளித்துக்கொண்டிருந்தார்.    அவரது சேமிப்பு கரைந்துகொண்டே இருந்தது.

      எனவே அரசு  அவருக்கு முதல்தவணையாக10ஆயிரம் பிரிட்ஷ் பவுண்டு நிதியையும் இரண்டாவது தவணையாக20 ஆயிரம் பவுண்டு நிதியையும் பரிசாக அளித்து அவரது ஆராய்ச்சியையும்மக்களுக்குத்தடுப்பூசி தொடர்ந்து அளிக்கப்படுவதையும் ஊக்குவித்தது. 

      உலகெங்கும் ஜென்னரின் புகழ் வேகமாகப்பரவியது. ஜென்னர் பல மருத்துவர்களுக்கு அந்தத் தடுப்பூசியை உருவாக்கி செலுத்தும் முறையைபயிற்றுவித்தார்.ஜென்னர்  உருவாக்கிய அதே பாதையில் தான் 100 வருடங்கள் கழித்து லூயிபாஸ்டரும்  பயணித்து ரேபிஸுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்தார், ஜென்னரைபெருமைப்படுத்தும் விதமாக லூயி அந்த முறைக்குஜென்னர்உபயோகப்படுத்திய அதே  வேக்ஸினேஷன் என்னும் பெயரையேவைத்துக்கொண்டார்.

      ஜென்னருக்கு ஏராளமான விருதுகளும்பாராட்டுகளும்கிடைத்தன.1821-ல்நான்காம் ஜார்ஜ் மன்னரின்பிரத்யேகமருத்துவராக  ஜென்னர் நியமனம் செய்யப்பட்டார். 

      ஜென்னருக்குஅளிக்கப்பட்டவிருதுகளில் மிகச் சிறப்பானதாகநெப்போலியன்1804-ல் அளித்த ஒரு பதக்கமும், ரஷ்யப்பேரரசி அளித்த ஒரு மோதிரமும் கருதப்படுகிறது. டோக்கியோவிலும்லண்டனிலும்ஜென்னரின்உருவச்சிலைநிறுவப்பட்டது.  

      ஜென்னர் அவரது சொந்த ஊரின்மேயராகவும்அமைதிக்கானநீதிபதியாகவும்நியமிக்கப்பட்டார்

      பெயரும்புகழும்விருதுகளும் இருந்த அளவுக்கேஜென்னருக்கெதிரான  கண்டனங்களும்,  அந்த தடுப்பூசிக்குஎதிர்ப்புகளும்  இருந்தன. அவரைக் குறித்த அவதூறுகள் பரப்பப்பட்டன ஆனால் ஜென்னர் அவற்றை சற்றும் பொருட்படுத்தவில்லை.

      ஜென்னரை கடுமையாக விமர்சித்தவர்களில்  சமயகுருக்கள்அதிகம்பேர் இருந்தனர்.  நோயுற்றஉடலிலிருந்துஎடுத்தவற்றைஆரோக்கியமானவர்களின் உடலில் செலுத்துவதுஇயற்கைக்கும்கடவுளுக்கும் எதிரானது என்னும் கண்டனத்தை வலுவாக ஜென்னருக்கெதிரே அவர்கள் முன்வைத்தார்கள். 

      1802-ல்ஜென்னரின்  மாட்டம்மைதடுப்பூசியைப்போட்டுக்கொண்டவர்களுக்குமாட்டுத்தலைமுளைப்பதாகவும், குளம்புகள்  உருவாவதாகவும்கேலிச்சித்திரங்கள். நாளிதழ்களில்வெளியாகின. ஆனால் மாட்டம்மைத்தடுப்பூசியின்   பெரியம்மைகெதிரான   வெற்றிகரமான செயல்பாட்டினால் ஜென்னரின் புகழ்  அப்படியான கேலி, கண்டனங்கள்எதிர்ப்புக்களுக்குமத்தியிலும்வெகுவாகப்பரவியது. 

      ஜென்னர்தடுப்பூசியை மேம்படுத்துவதிலும் பெரியம்மை நோய்க்கான காரணத்தை அறிந்து கொள்வதிலும் தொடர்ந்து ஆய்வுகள் செய்துகொண்டிருந்தார். அவரது காதல் மனைவி கேதரின் காசநோயால்1815-ல்மரணிக்கும் வரை தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த ஜென்னர் மனைவியின் மரணத்குப் பிறகு முற்றிலும் அவற்றிலிருந்து விலகினார்.எட்வர்ட்ஜென்னர்  1823-ல்மரணமடைந்தார்   

      அவரது வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது.அந்தப் பூங்காவில் ஜென்னர் அரண்மனையில்மருத்துவராகப்பணியிலிருக்கையில் அங்கிருந்து கொண்டு வந்த திராட்சைக் கொடியின் தண்டுகளிலிருந்து உருவாகிய  ஏராளமான திராட்சைக் கொடிகள் தோட்டத்தில் வளர்கின்றன.

      ஜென்னரின்இந்தக் கண்டுபிடிப்பில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மருத்துவ வரலாற்றில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் காப்பாற்றியவர்களில் ஜென்னர் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.  

      1967-லிருந்து உலக சுகாதார  நிறுவனம் பெரியம்மை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.  70-களில் நான் பள்ளிச்சிறுமியாக இருக்கையில் சுவர்களில் பெரியம்மை இருப்பதாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தால் ஆயிரம் ரூபாய் பரிசு என்றெழுதப்பட்ட வாசகங்களைக் கண்டிருக்கிறேன். என் பள்ளித்தோழன் மணிகண்டனுக்கு பெரியம்மை கண்டு அவன் பார்வையிழந்ததையும் அறிந்திருக்கிறேன்.

      உலக சுகாதார நிறுவனத்தின் பணியாளர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெரியம்மை கொப்புளச்சீழ் உலர்பொடிகளை தேடிக் கண்டறிந்து அழித்தார்கள்.

      1975 -ல் பங்களாதேஷில் ரஹிமா பானு என்னும் 3 வயது பெண் குழந்தைக்கு பெரியம்மை நோய் உண்டாகி இருந்தது. பில்கிஸுன்னிஸா என்னும் 8 வயதுச் சிறுமி அது பெரியம்மையாக இருக்கக்கூடும் என்று பெரியம்மை ஒழிப்பு சுகதார அலுவலர்களிடம் தெரிவித்தாள். ரஹிமா தனிமைப்படுத்தப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுக் குணமாக்கப்பட்டாள் . ரஹிமாவே ஆசியாவின் கடைசி பெரியம்மை நோயாளி,பில்கிஸுன்னிஸாவுக்கு பெரியம்மை நோயை தெரிவித்ததற்காக 250 Taka (180 இந்திய ரூபாய்) பரிசாக அளிக்கப்பட்டது.

      ரஹிமா

      உலகின் கடைசி பெரியம்மைத் தொற்றுசோமாலியாவில்1977-ல் கண்டறியப்பட்டது. சொமாலியாவின் அலி மாவோ மாலின் (Ali Maow Maalin ) என்பவருக்கு உண்டான பெரியம்மை அக்டோபர் 30, 1977 அன்று முழுக்கக் குணமாக்கப்பட்டது.

      அலி மலேரியாவினால் ஜூலை 22, 2013 -ல் மரணமடைந்தார். அவரே இயற்கையாக பெரியம்மை தொற்று உண்டான உலகின் கடைசி மனிதர். 1980-ல் உலக சுகாதார நிறுவனம் பெரியம்மை உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று அறிவித்தது.   உலகின்மிக அபாயகரமான தொற்று நோய்களில் முதலில் ஒழிக்கப்பட்டதுபெரியம்மைதான்.

      பெரியம்மையை உருவாக்கும்  வேரியோலாவைரஸின்மாதிரிகள் தற்போது சைபீரியா மற்றும் அமெரிக்காவின் இரு ஆய்வகங்களில் பல அடுக்கு பாதுகாப்புடன்வைக்கப்பட்டிருக்கின்றன.  

      A WHO poster commemorating the eradication of smallpox in October 1979, which was officially endorsed by the 33rd World Health Assembly on May 8, 1980.

      சாராவின்பசுமாடுபிளாஸம்இறந்த பின்னர் அதன்  பதப்படுத்தப்பட்ட தோல் ஜென்னரால்  லண்டன் செயிண்ட் ஜார்ஜ் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பரிசளிக்கப்பட்டது.  நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெருநோய்த் தொற்று ஒன்றிலிருந்துமனிதகுலத்தை விடுவிக்க ஜென்னர்ஈடுபட்டிருந்த பெரும் போராட்டமொன்றின் சாட்சியாக அந்த பசுமாட்டின் தோல் இன்றும் மிகப் பத்திரமாக அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது .

      ஜென்னர்வெப்பக்காற்றுபலூன்சோதனையில்ஈடுபட்டநாளின்240 வது நினைவு தினம் 2024. செப்டம்பரில்அதுபோலவேவெப்பக்காற்றுபலூன்களைப்பறக்கவிட்டுகொண்டாடப்பட்டது.  

      அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஜென்னரின்கண்டுபிடிப்பிலிருந்து சமீபத்திய கோவிட்பெருந்தொற்றுவரையிலான மருத்துவ வரலாற்றின்சங்கிலியில்கோவிட்தடுப்பூசியினால் பிழைத்து இந்தக்கட்டுரையைவாசித்துக்கொண்டிருக்கும் நாமும் கண்ணிகள்தான்.

       பிரான்ஸிஸ்கால்டன் (Francis Galton)

      ’’In science credit goes to the man who convinces the world, not the man to whom the idea first occurs’’ 

      என்று சொல்லி இருக்கிறார். இதற்கு ஜென்னரைத் தவிர வேறு யாரும் அத்தனை பொருத்தமாக இருக்கமாட்டார்கள்

      மேலதிகத்தகவல்களுக்கு:

      1. https://www.who.int/news-room/spotlight/history-of-vaccination/a-brief-history-of-vaccination
      2. https://www.nlm.nih.gov/exhibition/smallpox/sp_vaccination.html
      3. How One Daring Woman Introduced the Idea of Smallpox Inoculation to England‘, 
      4.  ‘Edward Jenner and the history of smallpox and vaccination‘, 
      5. https://www.jameslindlibrary.org/wp-data/uploads/2010/05/J-R-Soc-Med-2018-07-Morabia-255-257.pdf  6.https://artuk.org/discover/stories/the-smallpox-vaccine-edward-jenner-and-a-cow-called-blossom
      6. * The TV series South Park (“Chickenpox“) and The Simpsons (“Milhouse of Sand and Fog“) each aired an episode featuring a pox party intended to spread varicella.
      7. *Gloucestershire.

      பானிபூரி

      வழக்கமாகக் கோட்டுர் சாலையில்தான் கல்லூரிக்குச் செல்வது. அங்கே இருக்கும் பெண்கள் பள்ளிக்கு முன்பாகத்தான் வால்ப்பாறைச்சாலை பொள்ளாச்சிச்சாலையைத் தொட வேண்டும்.

      அது நான்கு வழிச்சந்திப்பு அங்கே போக்குவரத்துக் காவலர்களோ, சாலைசந்திப்பின் மையத்தில் ஒரு ரவுண்டானாவோ இல்லாததால் வண்டிகள் ஒன்றையொன்று தவிர்த்தும் தயங்கியும் எப்படியோ வழிகண்டுபிடித்துத்தான் முன்னேறுவது வழக்கம். அங்கே எப்போதும் சில நொடிகள் தாமதமாகும்.

      பள்ளியின் வாசலில் ஒரு ஓரத்தில் பானிபூரி விற்கும் பீஹாரி இளைஞனை பார்ப்பேன். பிடரியில் வழியும் எண்ணெய் வைத்த தலைமயிர். ஒரே உடைதான் எப்போதும், கலங்கலான நிறத்தில் ஒரு இறுக்கமான டி ஷர்ட், காக்கி நிற முக்கால்ச்சட்டை.

      அவனிடம் ஒரு குட்டி ஸ்டூல் இருக்கும் அதில் அவன் உட்காருவதில்லை அந்தக் குட்டிக்குட்டி பானிபூரிகள் நிரம்பி இருக்கும் பையை அந்த ஸ்டூலில் வைத்து மீதமிருக்கும் சிறு இடத்தில் கலங்கலான அந்தப் பானிபூரிக்கான பானியை ஒருபானையில் வைத்திருப்பான். ஒருபோதும் வேறு உடையிலோ அல்லது அமர்ந்தோ அவனைப்பார்த்ததில்லை. பெண்கள் பள்ளி அது என்றாலும் அவன் பூரிகளைத் தருகையில் பூரிகளின் மீதுமட்டும்தான் கண்களை வைத்திருப்பான்.அவன் பெயர் தெரியாதென்பதால் அவனுக்கு நானே பிரசாந்த என்று பெயரிட்டிருக்கிறேன்.

      அன்றொரு நாள் அவனை நோக்கி நீலச்சேலையில் வந்த ஒரு பிச்சைக்காரப்பெண் கைகளை ஏந்தி யாசகம் கேட்பதைப்பார்த்தேன். எனக்குப் பெண்கள், அதுவும் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்கள் பிச்சை எடுப்பதைப்பார்த்தால் பற்றிக்கொண்டு வரும். ஒரு முறை பொள்ளாச்சி கடைவீதியில் அப்போதுதான் பிடுங்கின கிழங்கு போலிருந்த ஒருத்தி ’’அம்மா அம்மா சாப்பிட எதாச்சும் தாங்கம்மா’’ என்று வயிற்றையும் வாயையும் தொட்டுத்தொட்டுக்காட்டி கேட்டபோது நான் சீரியஸாக’’ எங்க வீட்டுக்கு வரியா தினம் தோட்டத்தை மட்டும் கூட்டிப்பெருக்கு சாப்பாடு போட்டு மாசம் 3000 ரூபாய் தரேன்’’ என்றேன். அவள் என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள்.

      அன்றும், அந்தப் பானிபூரிக்காரனே பாவம் அவனிடம் போய் இந்தம்மா கேட்கிறாளே என்று நான் நினைப்பதற்குள் அந்தப்பையன் முதத்தில் எந்த உணர்வு மாறுபாடுமின்றி ஒரு பானி பூரியை எடுத்து நீளமான கட்டை விரல் நகத்தினால் அதை உடைத்து உள்ளே அந்த நீரை ஊற்றி அவளிடன் தந்தான்.

      என் வாழ்வின் மகத்தான, நிறைவான தருணங்களில் அதுவும் ஒன்று.

      © 2025 அதழ்

      Theme by Anders NorenUp ↑