நாளை புதிய ஆண்டு பிறக்கவிருக்கிறது. இந்த 2024 எனக்கு  வழக்கத்தை விடச் சற்று மாறுதலான ஆண்டாக இருந்தது. சரண் மேற்படிப்பை ஐரோப்பாவில் முடித்துவிட்டு அங்கேயே அரசுப் பணியில் இணைந்தான்.

டேராடூனில் காட்டியல் முடித்ததும் இந்திய வனத்துறைத் தேர்வு எழுத வேண்டிய தருண்,  பெங்களூருவில்  கிறைஸ்ட் பல்கலைக்கழகத்தில் MBA சேர்ந்தான். முதுகலை முடித்து  ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்து விட்டு பின்னர் போட்டித்தேர்வுக்கு தயாராவதாகச் சொல்கிறான். எனக்கு அவர்களின் எந்த முடிவிலும் மாற்றுக்கருத்தில்லை. 

தருணுக்கு பிரியமான பைக் வாங்கியது, வீட்டு முன்பாக நண்பர்களுடன் அமர்ந்து பேசவும் சாப்பிடவுமாக ஒரு அறை எழுப்பியது,  கடும் கோடையை தாங்கமுடியாமல் படுக்கை அறைகளில் ஏசி அமைத்தது என்று சில மாற்றங்கள் வீட்டில். 

எனவே மற்றுமோர் தனித்துக்கழித்த ஆண்டு இதுவும். ஆனால் நிறைய எழுதினேன்.  சொல்வனத்தில், அகழில், குருகுவில், புழுதியில், ஜெயமோகன் அவர்களின் தளத்தில் கட்டுரைகள் வந்தன.  எல்லாக்கட்டுரைகளுமே எனக்கு முக்கியமானது தான் என்றாலும் விலக்கப்பட்ட கனி, கொகெய்ன், பெனிசிலின், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை. அதிக காலம் எடுத்துக் கொண்டு தரவுகளை சேகரித்து எழுதப்பட்டவை அவை.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, தியடோர் பாஸ்கரன் அவர்களைக் குறித்தது. அவர் தனக்கு அக்கட்டுரை மிகவும் பிடித்ததாகக் கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளித்தது. எப்படி ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகியது என்னும் கட்டுரைக்கும் ஏறக்குறைய 6 மாதம் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். கொகெயின் கட்டுரைக்காக cocainenomics குறித்து நான் வாசித்தறிந்ததுபோல கடத்தல்காரர்களும் வாசித்திருக்க மாட்டார்கள்.அப்படித்தான் பெனிசிலினும்.

ஆனந்தசந்திரிகைக்கு எழுதுவதை  இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்திவிட்டேன். பல வருடங்களாக அதில் சிறு சிறு தாவரவியல் கட்டுரைகளை மாதம் இரண்டு என எழுதிவந்தேன் எனினும் ஒரே ஒரு எதிர்வினையோ, கண்டனமோ, பாராட்டோ அல்லது வாசித்தேன் என்று ஒரு வரியோ  கடைசி வரை வரவே இல்லை. அதைக்குறித்து நான் குறைப்பட்டுக்கொண்டும் எந்த பலனும் இல்லை. ஒவ்வொரு கட்டுரையுமே தமிழில் அதுவரை இல்லாத ஏதோ ஒரு புதிய தாவர அறிவியல் விஷயத்தை சொல்வதுதான் ஒவ்வொன்றுக்கும் நான் 10 நாட்கள் வரை மெனெக்கெட்டுத்தான் எழுதினேன். ஒரு வழிப்பாதையில் தொடர்ந்து செல்ல முடியாமல் அதிலிருந்து விலகினேன். என் கட்டுரைகளை வாசிக்கிறார்களா இல்லையா என்று கூடத்தெரியாமல் எத்தனை ஆண்டு தொடர்ந்து எழுத முடியும்?

தமிழ் விக்கி வேலைகளை நாள் தவறாமல் விரும்பிச்செய்கிறேன்.கட்டுரைகளைப் பங்களிப்பதில்லை ஆனால் திருத்தி ஃபைனலைஸ் செய்கிறேன். எப்படியும் ஒரு நாளைக்கு 10 பக்கம் பார்த்துவிடுகிறேன், ஒருவேளை விடுபட்டால் மறுநாள் சேர்த்துப் பார்த்துவிடுகிறேன்.

நிறைய வாசிக்காமல் போனதும் இந்த ஆண்டுதான். காரணமாக நேரமின்மையைத்தான் சொல்லவேண்டி இருக்கிறது. வழக்கம் போல அதிகாலை 1 மணி நேரம் ஜெ வின் தளம், வெண்முரசின் சில அத்தியாயங்களின் மீள் வாசிப்பு, தலைப்புச்செய்திகளை, விகடன் ஆன்லைன் வாசிப்பதெல்லாம் அப்படியே மாற்றமில்லாமல் தொடர்ந்தது என்றாலும் முந்தின ஆண்டைப்போல பிறவற்றை அதிகம் வாசிக்கவில்லை. 

இன்னும் பிரித்துப்பார்க்காத நூல்கள் 20-க்கு மேல் காத்திருக்கின்றன. கல்லூரியில் துறைத்தலைவரான பின்னர் கடும் வேலைப்பளு, கூடவே இந்த ஆண்டு தேசிய தரச்சான்றிதழ் வாங்கி ஆகவேண்டிய நிர்பந்தமும் கூடச் சேர்ந்து தாளமுடியாத மன அழுத்தம் இருந்தது.

நாளிதழ்களில் வேலைப்பளுவினால் தற்கொலை செய்துகொண்டவர்களைக் குறித்து வாசிக்கையில் ”இதுக்கெல்லாமா செத்துப்போறது ’’ என்று நினைத்ததுண்டு ஆனால் தலைவலியும் காய்ச்சலும் எனக்கும் வந்தபோதுதான் கஷ்டம் புரிந்தது. என்னை அதிலிருந்து மீட்டது இந்த வீட்டின் பசுமைதான்.

அதிகம் பயணம் செய்த ஆண்டும் 2024- தான். சென்னைக்கும் பங்களூருவிற்கும் வெள்ளிமலைக்கும், குபேர யாகத்துக்காக திருவண்ணாமலை, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்காட்டில் வாரக்கணக்கில் தங்கள், அதற்கான பள்ளிக்கல்வித்துறை நடத்திய கூடுகைகளுக்காக சென்னை, ஜெ வின் கட்டண உரை, மாணவர்களுடன் தாவரவியல் சுற்றுலாவிற்கு ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, NSS-ல் பேச கிராமங்களுக்குச்சென்றேன்.

ஒரு குக்கிராமத்தில் அந்திமயங்கிய நேரத்தில் மாணவர்களுடன் சேர்ந்து காலில் வயல்சேற்றோடு திட்டுக்களில் அமர்ந்திருந்த கிராமத்துப்பெரியவர்களுக்கும் முறத்தில் வெங்காயம் உரித்துக்கொண்டு கீரை ஆய்ந்துகொண்டு அமர்ந்திருந்த பெண்களுக்கும் வேப்பமரத்தடியில் இளங்காற்றில் பார்வை மங்கும் நேரம் வரையிலும் ஸ்ரீவள்ளி ஆலோலம் பாடி தினைப்புனம் காத்ததிலிருந்து தொடங்கி சிறுதானியங்கள் குறித்துப்பேசி ஒரு எவெர்சில்வர் டிஃபன் பாக்ஸ் பரிசாக வாங்கி வந்தது நல்ல அனுபவமாக இருந்தது.

அறக்கல்வி வகுப்புக்களுக்காக திருப்பூரும் ஈரோடும் கோவையுமாக தொடர்ந்து அயராமல் பயணித்துக்கொண்டிருந்தேன்.  வள்ளியின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க ஹைதராபாத் அப்படியே தீபக் குடும்பத்தினருடன் ஒரு ஆந்திர சுற்றுலா, சென்னை குமரகுருபரன் விருது, ஈரோட்டில் தூரன் விருது என எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டேன்.  பெருந்தலையூர் வெற்றி விழாவிலும், சென்னிமலை நூற்பு விழாவிலும் கலந்து கொண்டேன். கொடை மடம் வெளியீட்டு விழாவிற்கு சாம்ராஜ் அழைத்ததால் மீண்டும்சென்னை சென்றேன். காலச்சுவடு விருந்தினராக இரண்டு வாரத்தங்கலுக்கு ஆனைகட்டிக்கும் சென்று வந்தேன். 12 வருட இடைவெளியில் மலர்ந்திருந்த குறிஞ்சிக் காட்டைப்பார்க்க கோத்தகிரிக்குச்சென்றது இவ்வாண்டின் பெருமிதங்களில் ஒன்று.

பணி மேம்பாட்டு நிதி இன்னுமே எங்களுக்கு வரவில்லை அதன் பொருட்டு கோவையிலும் சென்னையிலும் உண்ணாவிரதம், போராட்டம் என பயணித்தேன். கல்லூரியின் ஒரு திட்டவரைவை சமர்ப்பிக்கும் பொருட்டு புதுதில்லிக்கும், ராஜேந்திரன் அவர்களின் சென்னை கானாத்தூர் கடற்கரை விடுதிக்கு வெண்ணிலா குடும்பத்தாருடனும் சென்றேன்.

இவ்வாண்டில் இறுதியாக கோவை விஷ்ணுபுரம் விழாவிலிருந்து புதுக்காரில் மகன்கள், சாம்பவியுடன் நால்வருமாக சென்னைக்குச்சென்றது பேரனுபவமாக இருந்தது. மாற்றி மாற்றி பிடித்த பாடல்களைக்கேட்டுக்கொண்டு நிறுத்தி நிறுத்தி வழியெல்லாம் சாபிட்டுக்கொண்டு பயணித்தோம்.

நீரதிகாரத்தின் நூரதிகாரவிழாவில் பேசவும் கோபாலகிருஷ்ணன் அவர்களின் வேங்கை வனம் நாவல் குறித்து பேசவும் மீண்டும் மீண்டும் சென்னை சென்று கொண்டிருந்தேன். நீரதிகாரத்தைக் குறித்துப் பேச விஜயா பதிப்பக அண்ணாச்சி ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கு மேலூருக்குப் போய்ப் பேசினேன்.

மீண்டும் அகரமுதவனின் போதமும் காணாத போதம் நூல் வெளியீட்டுக்காக திருவண்ணாமலை, சிறுதானியக்கருத்தரங்கிற்கு அழைப்பாளராக குன்னூர் ப்ராவிடன்ஸ் கல்லூரி , திருமதி கிருஷ்ணம்மாள் ஜகன்னாதனை சந்திக்க திண்டுக்கல் என்று பயணித்துக்கொண்டே இருந்தேன்.

வழக்கம் போல கோவில்களுக்கும் போனேன். இலுப்பை நகரத்திற்கும் ஆண்டியகவுண்டனூருக்கும் நண்பர் ஒருவரின் நிலத்தை பார்ப்பதற்கும், அங்கு விளையும் காய்கறிப் பயிர்களையும் வெட்டுமரக்கன்றுகளையும் மேற்பார்வையிடவும் அடிக்கடி பயணித்துக்கொண்டு இருந்தேன்.

கேரளாவுக்கு தருணுடன் வடக்குநாதர் கோயிலுக்கும் பாலக்காடு தோனி அருவிக்குமாக  சிலமுறை சென்று வந்தேன். திருச்சிசெயிண்ட் ஜோஸஃப் கல்லூரிக்கு கல்லூரி விஷயமாக சென்றிருந்தேன்.

இத்தனைக்கும் இப்போது கால் வலி அதிகமாகி விட்டிருக்கிறது. 22 ஆண்டுகள் வாரம் 16 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டு பணி செய்தது, மாடியில் இருக்கும் துறைக்கும் கீழ்த்தளத்தில் இருக்கும் வகுப்பறைகளுக்குமாக எத்தனை ஏறி இறங்கல்கள்? எந்த ஒத்தாசையும் இல்லாமல் வீட்டில் எத்தனை நடை? தோட்டப் பராமரிப்புக்கு எத்தனை அலைச்சல்?  கால்களும் கைகளும் ஓய்ந்து போயிருக்கக்கூடும். 

இப்போதெல்லாம் கரும்பலகையில் சித்திரங்கள் வரைகையில் அவ்வப்போது கையை கீழே ஓய்வாக வைத்துக் கொண்டு பின்னர் மீண்டும் வரைகிறேன் ஆனாலும் விடாப்பிடியாக மகிழ்வுடன் பயணித்தேன், இருள் படிந்திருந்த இரு தசாப்தங்களுக்கு பிறகு தெரிந்த வெளிச்சமென்பதால் எதையும் நினைக்காமல் சென்று கொண்டே இருந்தேன்.

அதுபோலவே தொடர்ந்து செய்துகொண்டிருந்தது தாவரவியல் தொடர்பான வாசித்தல். அதில் தொய்வே இல்லை. தேடித்தேடி வாசித்துக் கொண்டேதான் இருக்கிறேன். இலக்கிய வாசிப்பில்தான் சோடை போய் விட்டேன்.

கற்றுக்கொள்வதின் ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. புதிது புதுதாக கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

நூற்றாண்டுகளாக உள்ளங்கையில் இட்டுக்கொள்ளும் நடுவில் சற்றுப்பெரிதான வட்டமொன்றும் சுற்றிலும் குட்டிக்குட்டி வட்டங்களுமான மருதாணி வடிவத்தின் பெயர் இட்லி தோசை வடிவமென்பதை இந்த வருடம்தான் தீக்‌ஷிதாவிடமிருந்து அறிந்துகொண்டேன், என்னிடமிருந்து பலரும் .

தினமும் பத்துக்கு குறையாமல் தாவரங்களை இனம் காண கேட்டு வரும் புகைப்படங்களில் இருப்பவற்றை அடையாளம் கண்டு சொல்கிறேன் அச்செயலின் மூலம் புதிதாக கற்றுக் கொண்டுமிருக்கிறேன்.

இந்த வருடம் மட்டும் 6 நூல்கள் வெளியாகி இருக்கின்றன.மேலும் மூன்று விரைவில் வரவிருக்கிறது,

NCBH  பிரசுரமாக 100 விஞ்ஞானிகளை குறித்து 100 எழுத்தாளர்கள் எழுதும் 100 புத்தகங்களில் ஒன்றாக அதிகம் பேர் அறிந்திருக்காத சூழியல் துறையை தன் சித்திரங்களால் தோற்றுவித்த மரியாசிபில்லாவைக்குறித்த நூல் வெளியானது.

காலச்சுவடுக்காக hidden life of trees என்னும் பீட்டர் ஜெர்மானிய மொழியில் எழுதி ஆங்கிலமாக்கப்பட்டதை தமிழில் மொழிபெயர்த்தேன். சவாலான மொழியாக்கமாக இருந்தது ஏனெனில் மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததிலேயே பல விடுபடல்கள் இருந்தன மேலும் அந்த ஆங்கிலமும் மிகப்பழையது. சொன்ன தேதிக்குள் கொடுக்க ராத்திரி பகலாக எழுதிக்கொண்டிருந்தேன். இந்த டிசம்பர் புத்தகக்கண்காட்சிக்கு அதை காலச்சுவடு கொண்டு வராமல் தாமதமானதில் எனக்கு வருத்தமுண்டு.  மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தில் வானவில் மரம் வெளியானது . இந்திய பூர்வீக மரங்களை குறித்த முதல் பாக நூலும் நுண்ணுயிருலகு என்னும் நூலும் விரைவில் வரவிருக்கிறது.

தாவரவியல் அகராதி பாதிக்கிணறு வரை வந்திருக்கிறது. 

என் பிறந்த நாள் பரிசாக வெண்ணிலா அகநியில் விலக்கப்பட்ட கனி. அந்தரத்தாமரை மற்றும் முத்தச்சிறுகிளை ஆகிய மூன்று நூல்களை பிப்ரவரி 12 அன்று வெளியிட்டார்கள். 

என் ஒரு கட்டுரைத் தொகுப்பை  பிரசுரிப்பதாகக் கேட்டு வாங்கி 2 வருடங்களுக்கு மேல் வைத்திருந்து பல திருத்தங்கள் செய்து, திருத்தம் செய்கையில் நுட்பமாக அவமதித்து, அலைக்கழித்த பின்னர் லே அவுட் ஆர்டிஸ்ட் கட்டுரைத் தொகுப்புக்கு கிடைக்கவில்லை என்னும் காரணம் சொல்லி ஒரு பதிப்பக மேற்பார்வையாளர் திரும்பக் கொடுத்தார். உண்மையிலேயே புண்பட்டிருந்தேன்.

அது திரும்பக் கொடுக்கப்பட்டு மிகச்சரியாக ஒரே மாதத்தில் அகநி மிக அழகான நூலாக அதை வெளியிட்டது. வெண்ணிலா அப்படி ஒரு இக்கட்டான துயரான நேரத்தில்  இடுக்கண் களைந்தார்.

வெண்ணிலாவுக்கு அளிக்கப்பட்ட கண்ணதாசன் விருதையும் லட்சரூபாய் பரிசுத்தொகையையும் அவருக்கு பதிலாக நான் சென்று கோவையில் ஒரு மேடையில் வாங்கியபோது ’’என்னையும் வெண்ணிலாவையும் பலர் சகோதரிகள் என்று நினைக்கிறார்கள் ஒருவேளை எங்கள் தோழமையின அடர்த்தி அப்படி சகோதரிகள் என்னும் சாயலை அளித்திருக்கலாம்’’என்று சொன்னேன். வெண்ணிலாவுக்கு அன்பும் நன்றியும். 

அகநியில் பள்ளிக்குழந்தைகளுக்கான சங்க இலக்கிய தாவரங்கள் குறித்த நூல் முழுமையடைந்தும் பல காரணங்களால் அது வெளியாகாமல் இருக்கிறது.

அடுத்து லின்னேயஸ், மரியா சிபில்லா, கார்வர், டைபாய்டு மேரி ஃபென்னி ஹெஸ்ஸ என்று அறிவியலில் பெரும் பங்காற்றிய ஆளுமைகளைக் குறித்து ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கிறேன்

 பயணித்த இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கிடைத்த நல்ல உணவையும் சொல்ல வேண்டும். ஈரோடு ஏட்ரியம் விடுதியின் அசைவ உணவு, பொள்ளாச்சியில் ஒரு சிறு மெஸ்ஸின் அரிசி பருப்பு சாதம், கணக்கம்பட்டி சித்தர் கோவிலுக்கு முதன் முறையாக சென்றபோது கோவை தொழிலதிபர் திரு பாலசுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்தினரோடு அவர்களின் விலை உயர்ந்த காரில் அமர்ந்து, பொழியும் மழையை பார்த்தபடி சாப்பிட்ட ஒரு மதிய உணவு, அகரமுதல்வன் குடும்பத்துடன் கடும் மழைபொழிந்த இடியும் மின்னலுமாக வானம் அதிர்ந்துகொண்டிருந்த ஒரு இரவில் பண்ணை வீடொன்றில் நான் சமைத்து அனைவரும் சாப்பிட்ட கோதுமை உப்புமா, என்னை உட்கார வைத்து தருண் சுட்டுத்தந்த தோசைகள், சென்னை சில்க்ஸின் (சென்னைக்கிளையில்) பணியாளர்களுடன் சாப்பிட்ட மதிய உணவில் இருந்த அவரைப்பருப்பில் கலவைக்காய் போட்ட சாம்பார், நாவழிபாட்டுக்கு கேரளா செல்லும் வழியில் பொன் துணுக்குகளாக சிதறிக்கிடந்த புளியஇலைகளின் மீது போர்வை விரித்தமர்ந்து சாப்பிட்ட தக்காளி சாதமும், மோர் மிளகாயுடன் தயிர்சாதமும் என ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது, மறக்கவே முடியாமல்.

சந்தித்தவர்களில் பல ஆளுமைகள் மிக முக்கியமானவர்களும் கவனம் கோருபவர்களுமாக இருந்தார்கள். அமெரிக்காவிலிருந்து வந்து பெருந்தலையூரில் கட்டியணைத்துக்கொண்டு அன்பு காட்டிய ஜமீலா, முதன்முறை சந்தித்து அன்றிரவே  அவர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டு மாடியில் விடிய விடிய பேசிக்கொண்டே சொந்த சகோதரியை போலாகிவிட்டிருக்கும் கலைவாணி, அகரமுதல்வனின் மனைவி பிரபா, குறிஞ்சி மலர்வை காண உதவிய காட்டிலாகா அதிகாரி ஆதவன், கடவுள் பிசாசு நிலம் அளித்த அகரமுதல்வன்,  திருவண்ணாமலையில் சந்தித்த திரு குறிஞ்சி செல்வம், அன்னம் கட்டுரைக்குப்பிறகு அணுக்கமான சென்னிமலை மதி, குளித்தலை சண்முகம், சிவாத்மா, இந்தியாவிற்கும் ஃப்ரான்ஸுக்குமாக மாறிமாறி பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ், உயிரியல் படிப்பிற்காக வீட்டுக்கு சிலநாட்கள் வந்த ரிதி, சக்திபாலசுப்ரமணியன், மலர்களைப்பற்றி மணிக்கணக்கில் பேசும் தமிழ்க்குமரன், அலகில் அலகு வேணு, முதல் வாசகர்களான டெய்ஸியும் சக்திவேலும், நன்னிலம் ராஜேஷ், அரங்கசாமியின் மனைவி சுமதி……

இவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் என் அகம் நிறைத்தவர்கள்.

இவர்களில் ரிதி நான் இதுவரை பார்த்த பெண்களில் ஆகச்சிறந்த பேரழகி.

பொதுவாக இந்தியாவில் மங்களூரில் தான் அழகிகள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ரிதி, மங்களூரை பூர்வீகமாகக்கொண்ட எங்கள் குடும்ப மருத்துவர் வசந்த் அவர்களின் மகள். அழகிற்கு இலக்கணம் என்றுதான் அவளைப் பார்க்கையில் நினைத்துக் கொள்வேன். 

மான் நிறத்தில், எந்த ஒப்பனையும் இல்லாமல் பவுடர் பூச்சு, பொட்டு, காது கழுத்தில் அணிகலன்கள், பளிச்சென்று தெரியும் உடைகள் என எதுவுமே இல்லாமல் குளித்துவிட்டு ஈரத்தலையுடன் எளிய டி-சர்டும் செளகரியமான ஒரு பருத்தி கால்ச் சட்டையுமாக இருக்கையில் ஒருபெண் அத்தனை அழகாக இருக்க முடியுமென்று ரிதியை பார்க்கு முன்னர் நானும் நினைத்திருக்கவில்லை.இனி ரிதியைக்காட்டிலும் அழகியொருத்தியை நான் பார்க்கப் போவதில்லை.

அப்படியே என்னை புகைப்படமெடுத்துத்தர வந்த சுதந்திரா.நானும் சுதந்திராவும் ஒரே தேதியில் பிறந்திருக்கிறோம். சுதந்திரா பிறந்த போது அவளைப்பார்க்க நான் சரணையும் தருணையும் எடுத்துக்கொண்டு போயிருந்தேன் கட்டிலில் கால்களை உதைத்துக்கொண்டு மேலே விதானத்தைப் பார்த்துக்கொண்டு சமத்தாகப்படுத்திருந்த அந்தக் குழந்தை இன்று மிக நளினமான, மிகப்பொருத்தமான உடைகளுடன்  கண்ணியமான உடல்மொழியுடன் இருக்கிற அபாரமான புகைப்பட கலைஞராகி விட்டிருக்கிறாள். very well mannered girl.  ஒரு நாளைக்கு ஐம்பதாயிரத்துக்கு குறையாமல் சம்பாதிக்கிறாள். விரைவில் மேற்படிப்புக்கு இத்தாலி செல்லவிருக்கிறாள்

சரணும் தருணும் வளர்ந்து  தோள் பெருத்து, நெஞ்சு விரிந்து ஆளாகிவிட்டனர். சரண் நான் மகிழ்ந்து பார்த்த நிலையிலிருந்து அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறான். நான் 22 வருட பணிக்குப் பிறகு வாங்கும் சம்பளத்தை விட 4 மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறான்.  

 வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை தேவைப்படுவோருக்கு முதல் மாதத்திலிருந்து செலவழிக்கிறான். தாவரவியல் துறையில் 5 எளிய பின்புலம் கொண்ட  மாணவர்களின்  படிப்புச் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறான். வலி நிவாரணச் சிகிச்சை பெறுவோரின் மருத்துவ உதவிக்கும், பசித்தவர்களுக்கு உணவிடவும்  கணிசமான தொகையை தொடர்ந்து அளிக்கிறான். 

தருணுக்கு கல்லூரிப்படிப்புக்கு (கல்விக்கட்டணத்தைத் தவிர்த்து)  வேண்டியதை  ஒரு தந்தையின் இடத்திலிருந்து  பொறுப்புடன் செய்கிறான்.எனக்கென்று ஒரு காரை வாங்கிக் கொடுத்திருக்கிறான். லோகமாதேவி எனப் பெயர் எழுதிய அந்தக்காரில் மிகப்பெருமையாக கல்லூரிக்குச் செல்கிறேன்.

துறையில் ஒரு விதை வங்கி துவங்கவேண்டுமென்னும் என் ஆவலை கல்லூரி நிர்வாகம் பல விண்ணப்பங்களுக்குப் பிறகும் கண்டுகொள்ளவில்லை. சரண் எனக்காக பெருந்தொகை கொடுத்து அதை ஏற்பாடு செய்து கொடுத்தான். கல்லூரியில் அளிக்கப்பட்டிருக்கும்  அரதப்பழசான கணினிக்கு பதிலாக புதிதாக நவீனமான ஒன்றை என் சொந்த உபயோகத்திற்கெனெ வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

அவனது வாசிப்பின் விஸ்தீரணத்தை திகைப்புடன் கவனித்துக்கொண்டிருக்கிறான். அர்த்தசாஸ்திரம் காமசூத்திரம் எல்லாம் முழுக்க வாசித்துவிட்டான் . மனுஸ்மிருதியும் முழுக்க வாசித்திருக்கிறான். இந்த முறை விடுமுறையில் என்னிடம் aryan invasion theory, aryan migration theory, hitler’s aryan supremacy theory  ஆகியவற்றை விளக்கி சொல்லிக்கொண்டிருந்த சில மணி நேரங்களை என்னால் மறக்கவே முடியாது.

அதுபோலவே அவன் எனக்களித்த மற்றுமொரு பெருமிதம் ஐரோப்பாவில்  அவனின் முதுகலை படிப்பின் இறுதிக்கட்ட ஆய்வேட்டை எனக்கு சமர்ப்பித்தது. To Dr. Logamadevi,  My mother and one of the best researcher out there என்று அச்சிடப்பட்ட அந்த பக்கக்தை அவனது பல்கலைக்கழக வளாகத்தின் மரபெஞ்ச்சொன்றில் உதிர்ந்து கிடந்த மக்னோலியாவின் இளஞ்சிவப்பு இதழ்களுக்கு மத்தியில் வைத்து புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி இருந்தான்.

தருணுக்கும் MBA படிக்க கோவை பூசாகோ கல்லூரி, பெங்களூரு ஜெயின் மற்றும் கிரைஸ்ட் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தது. பூ சா கோவில் பேனலில் இருந்தவர்கள் வா சாமி, போ சாமி என்று பேசியதால் இந்த கொங்கு பாஷையைத்தான் வீட்டிலேயே கேட்கறேனே இங்கே எதுக்கு ?  என்னை மேலும் உயர்த்தும் இடத்தில்தான் நான் படிக்கணும் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டான்.

ஜெயினில் கிடைத்த அட்மிஷனை நேரமேலாண்மையை கருத்தில் கொள்ளாமல் அநாவசியமாக கல்லூரி நிர்வாகத்தினர் காக்கவைத்தற்காக நிராகரித்தான.

கிறைஸ்ட்  அவனுக்கு பிடித்திருந்தது அங்கே மனமகிழ்ந்து படிக்கிறான். பல்கலைக்கழகத்தின் நாயகனாகி விட்டிருக்கிறான்

அடுத்த வருடத்திற்கான மாணவர் சேர்க்கையின் விளம்பரப் படத்தில் தருண்தான் முதன்மையாக இருக்கிறான். எத்தனை விளையாட்டன்றாலும் படிப்பில் கவனம் சிதறுவதில்லை.

தருண் பெங்களூருவில் இந்த மாதம் வீடு மாறியபோது சரணும் 10 நாட்கள் உடனிருந்து உதவினான். சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதில்  எனக்கும் மகிழ்ச்சி. நான் மூச்சுலகில் இருந்து பார்க்க விழைவது இதைத்தவிர வேறொன்றுமில்லை

சாம்பவியும் பெங்களூருவில் இதழியலும் சர்வதேச அரசியலும் படிக்கிறாள். அவளது கட்டுரைகள் நல்ல தரமான சஞ்சிகைகளில் பிரசுரமாகின்றன ஜனவரி முதல் வாரம் அவளது கட்டுரை ஒன்று சர்வதேச கருத்தரங்கில் வெளியாகிறது அதன் பொருட்டு அவள் கொல்கத்தா பயணமாகிறாள். இளங்கலைப் படிப்பிலேயே இத்தனை ஆழம் செல்வது அவளுக்கு அந்த துறையில் மிகப் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கும்.

நான் இளமையில் எழுதவும் பயணிக்கவும் விரும்பியவள் ஆனால்  உள்ளறையிலிருந்து நானும் மித்ராவும் கூடத்துக்கு வரக்கூட அனுமதி இல்லாமல் இருந்தது. நல்ல போஷாக்கான,  போதுமான அளவு உணவும் கவனிப்பும் இல்லாமல் வலியும் அச்சமுமாக கழிந்த என் இளமைக்காலத்தின் பிழையீடாகவே சாம்பவியின் இந்த வளர்ச்சியைப் பார்க்கிறேன். எனக்கு அவள் மீது அன்பும் பெருமிதமும் மிகுந்திருக்கிறது, மூவருக்கும் என் தனித்த பிரியங்களும் ஆசிகளும்.

பெற்றவை வகைகளில் வெண்ணிலா குடும்பத்தார் அன்பும் அகரமுதல்வனின் தோழமையும் மிக முக்கியமானவை. 2024 விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் ஒரு அந்தரங்க துயரைச் சொல்லப்போகையில் நானே எதிர்பார்க்காமல் கண் நிறைந்து உடைந்தேன். அது எனக்கே திகைப்பளித்தது.அப்படித்தான பாண்டிச்சேரி சிவாத்மாவும், ஆவடி தேவியும் அகத்துக்கு அணுக்கமானவர்கள். அன்பு, நிலா, கவினுக்கு நான் அத்தனை பிரியமான அத்தையாகி இருக்கிறேன்.என் அன்றாடங்களில் அவர்களும் இருக்கிறார்கள்

எனக்கென மேப்பிள் இலைகளை பாடம் செய்து அனுப்பிய நியூ ஜெர்ஸியின் பழனி ஜோதி, மகேஷ். சிட்னி கார்த்தி குடும்பத்தினர், கனடாவில் இருக்கும் அன்பின் வடிவான இந்து  இவர்களால் தான் என் வாழ்வின் சாரம் வற்றிவிடாமல் இருக்கிறது.

அவ்வளவாக பேசிக் கொள்ளாவிட்டாலும் தேவை என்றால் நான் தயங்காமல் தொடர்பு கொள்ளமுடியுமென்னும் நம்பிக்கை அளித்திருக்கும் எழுத்தாளர் ஸ்ரீராமும், சீம்பாலை எப்போதும் எனக்காக கொண்டு வரும் தமிழ்த்துறை புஷ்பராணியும் இந்த அணுக்கப்பட்டியலில் இருக்கிறார்கள்.

இப்படி நான் பெற்றவை அளித்தவை பயணித்தவை மட்டுமல்லாது இழந்தவைகளும் முறித்துக்கொண்டவைகளும் இருந்தன இந்த ஆண்டில். 

இந்த ஆண்டும் மிக அருகில் நம்பிக்கை துரோகத்தை பலமுறை சந்தித்தேன். 

மிக இளம் வயதில் ஒரு ஆளுமை, அவளுக்கு கிடைத்திருக்கும் ஓரிடத்தை   சரியாக கையாள முடியாமல் இருக்கிறாள் அவள் திட்டமிட்டு  என்னைக் காயப்படுத்தியது நடந்தது. நான் அவளை முற்றாக என் வாழ்வில் நினைவில் மனதில் இருந்து   விலக்கி விட்டேன்.

மற்றுமொரு உறவுக்காரப்பெண் மிகக் கீழே சென்று நடந்துகொண்டாள், அவளது உறவையும் என்றைக்குமாக முறித்துக்கொண்டேன். 

என் வயதில் இருக்கும் மற்றுமொருத்தி   அதே போல் ஒரு betrayal ஆனால் அவளின் இடத்தில் இருந்து அந்தப் பொறாமையை அந்த சங்கடத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இலக்கிய வாசிப்பு எல்லோருக்கும் அகவிரிவை உருவாக்குவதில்லை தானே? அவளிடமிருந்தும் விலகிவிட்டிருக்கிறேன்.

முறிவுகளில் மிகவும் பாதித்த ஒன்றும் இருக்கிறது. என்னால் கையாள முடியாத அளவுக்கான முறிவு அது

அதில் மனதுடைந்து போனேன். மிகக் கட்டுகோப்பான, அறத்தின் பேரில் நிற்கிற, நியாயமான, அழகுணர்ச்சி மிகுந்த, நேர்மையான, என் மீது மரியாதை கொண்டிருக்கிற, வாசிப்பில் ஆர்வமும் பரிச்சயமும் கொண்டவரென நம்பிய ஓர் ஆளுமை ஏறக்குறைய 2  வருடங்களுக்குப் பின் அவை எல்லாமே என்  கற்பிதங்கள் எனக் காட்டியதிலும் அந்த நட்பை முறித்துக்கொண்டதிலும்  துயர் கொண்டிருக்கிறேன். நான் அந்த ஆளுமையின் வாழ்வில் இருந்த இடைவெளிகளை நிரப்பிக் கொண்டிருந்தேன் என் வாழ்வின் பெரும் பள்ளங்களைக் குறித்துக் கவலைப் படாமல். ஆனாலும் அந்தப் பொய்யுருவின் மீதான மரியாதை அப்படியேதான் இருக்கிறது ஒரு குறிப்பிட்ட நீண்டகாலத்துக்கு மனிதர்களின் மீதான நம்பிக்கையை அறுந்துபோகாமல் காப்பாற்றியவர் அவர்.

ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் அவர்களுடன் நான் நெருக்கமாக இருந்தேன் அவர்களும் என் வாழ்வில் பெரும் தாக்கம் உண்டாக்கியவர்கள் ஆனால் இந்த வருடம் அவர்கள் மிக உயரத்தில் ஏறி விட்டிருப்பதால் குனிந்து பார்க்க முடியாதவர்களாகி விட்டிருக்கிறார்கள் எனவே அவர்களிடமிருந்தும் விலகி இருக்கிறேன் எப்போதாவது சந்திப்பேனென்றால் அளிக்க அவர்களுக்கு என ஒரு தனித்த புன்னகையை  வைத்திருக்கிறேன். அவர்கள் மீது விரோதம் எல்லாம் இல்லை ஆனால் அவர்களை தொல்லை செய்யும் எண்ணம் இல்லாததால் விலகி விட்டிருக்கிறேன்.

90 களில் இருந்து அறிந்த நண்பர் ஒருவரை என் வாழ்க்கையில் இருந்து விசையுடன் வெளியே வீசி எறிந்தேன்.

மற்றுமோர் முறிவு, அது வெகுகாலம் தாழ்த்தி நான் முறித்தது முன்பே மனதளவில் வெகுவாக திரும்பி வரவே முடியாத தூரத்துக்கு நான் சென்றுவிட்டிருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லியவகையில் அதுவும் இந்த  ஆண்டின் முறிவுகளில் ஒன்றாகி விட்டிருக்கிறது. 

என் வாழ்வின் பெரும்பகுதி முன்பே வீணாகி விட்டிருக்கிறது இனி மீதமிருக்கும் வாழ்க்கையை கண்ணியமாக எனக்கு பிடித்த மாதிரியாக குரல்வளையை அழுத்தும் விரல்களின் அழுத்தமில்லாமல் சுதந்திரமாக வாழ்வதென  முடிவு செய்திருக்கிறேன்.

சில மரணங்கள் இந்த ஆண்டின் துயரங்களில் சேர்ந்துவிட்டிருக்கின்றன. அத்தை மகன் முத்துக்குமாரின் அகால மரணம் அதிலொன்று.   மதுவின் பிடியில் அகப்பட்டு மீட்கவே முடியாத நிலைக்குச் சென்று சாலைவிபத்தில் மடிந்துபோனான்.அவனை மின்மயான அடுப்பில் கிடத்தியவரைக்கும் பார்க்கவேண்டிய துயரத்துக்கும் ஆளாகினேன். அபயமத்தையின் மறைவு. உண்மையிலேயே அத்தை இல்லாத வெற்றிடம் யாராலுமே நிரப்ப முடியாதது.

என் ஆசிரியர் ராஜ்குமார் அவர்களின் இரண்டாவது மகன் மரணம். அதுவும் வேதனையளிக்கிறது. ராஜ்குமார் அவர்களின் பி ஹெச் டி தீசிஸ் திருத்தம் பார்த்துக்கொண்டிருக்கையில் i thank my sons என்று அவர் குறிப்பிட்டிருந்த வரியை நினைத்துக்கொண்டேன்.

தேர்வுக்கட்டுப்பாட்டு துறை தமிழ்ச்செல்வியின் கணவரின் இறப்பும் ஏற்றுக்கொள்ளவும் தாளவும் முடியாத துயரளித்தது. வலியும் துயரும் நிரம்பிய இரு வருடங்களுக்கு பின்னர்  ஸ்ரீவள்ளியும் இறந்துவிட்டார்கள்.

அம்பராம்பாளையம் மருத்துவமனைக்குச் சென்று தங்கக்கூடாது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இந்த ஆண்டும் வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டி வந்தது.

ஆப்பிள் செர்ரி வாங்கி வந்து அகரமுதல்வன் கையால் வைத்து அது மலர்ந்து கனியளிக்கத் துவங்கி இருக்கிறது. 

தோட்டத்தில் 3 தென்னைகள் அருகில் இருக்கும்  மரங்களின் கூடுதல் நிழலால் காய்ப்பை நிறுத்தி விட்டன. கடந்த கோடையில் ஆடாதோடை முழுக்க காய்ந்து போனது, பாதாம் மரம் வீழ்ந்தது, பாட்டில் பிரஷ் மரத்தின் இரு பெருங்கிளைகள் ஒரு மழையில் முறிந்து விழுந்தன, சர்க்கரைப் பழமரம் முற்றிலுமாக காய்ந்து போனது.

 புதிதாக ம்யூஸா ஆர்னேட்டா இளஞ்சிவப்பில் மலர்ந்தது, சீதா மரத்தை வெட்டவேண்டி வந்தது, அம்மா இறந்ததற்கு பின்னால் இன்னும் அரிசி மாங்காய் மலரளிக்காமல் இருக்கிறது. வழக்கம் போல வருடத்துக்கு 2 முறை பிரம்மகமலம் மலர்ந்தது. நாவல் கனிந்தது சாம்பங்காய்களும் நெல்லிக்காய்களும் விளிம்பியும் நாரத்தையுமாய் காய்த்துக் குலுங்கின, வலிய நாரங்காய்ச்செடி அரப்பு மரத்தின் நிழலில் காய்க்க மறந்துவிட்டிருக்கிறது. 

பல புதிய செடிகளும் கொடிகளும் இணைந்திருக்கின்றன

வீட்டுவேலைகளுக்கு வருடங்களாக உதவிக்கொண்டிருந்த அம்சவேணிக்கு  பதிலாக இப்போது ரம்யா.  

ரம்யாவின் சிறுமகன் தர்ஷன் என் தோழன் அவனுக்காகவே வீட்டில் தாமரைவடிவ நீர்த்தொட்டியொன்றில் மீன்களுடன் தாமரையும் அல்லியும் பிஸ்தியாவும் ஹைட்ரில்லாவும் வளர்கின்றன.

நல்ல மழை இந்த ஆண்டு திகட்டத்திகட்ட. மிக அதிகமாக புகைப்படங்கள் எடுத்த, மிக அதிக புடவைகள் வாங்கிய ஆண்டும் இதுதான்.

விஷ்ணுபுரம் விழாவில் இரவு தன் தோட்டத்து வாழையை அனைவருக்கும் கொண்டு  வந்திருந்த ,என்னைத்தனியே அழைத்து இரண்டு சீப்பு பழங்களை   கொடுத்து வீட்டுக்கு கொண்டு போங்க என்ற நண்பர் சண்முகம் , மதிய அமர்வு துவங்கு முன்பாக ஒரு மரமல்லி மலரை கொண்டு வந்து கொடுத்த தமிழ்குமரன்,  அமெரிக்காவில் ஒரு பியர் தயாரிக்கும் வடிசாலைக்கு சென்றபோது என்கட்டுரையை நினைவு கூர்ந்ததகவும் ஹாப்ஸ் மலர்களை எனக்கென எடுத்து வைத்தாகவும் சொன்ன  ஆம்ஸ்டர்டாமில் இருந்து வந்த ஒரு இளைஞன், அன்றாடம் கல்லூரியில் நான் கையெழுத்திடும் இடத்தருகே சிறு குழந்தையின் முகம் போன்ற அளவில் இருக்கும் இளரோஜா வண்ண நாகலிங்க மலர்களுடன் காத்திருந்து அளிக்கும் கிருஷ்ண மூர்த்தி அண்ணன், நல்ல இசையை, கவிதைகளை, மருத்துவம் தொடர்பான சந்தேகங்களை எந்நேரமும் பகிரவும் கேட்கவுமான தோழமையுடன் மருத்துவர் வேணு வெட்ராயன், இன்னொரு மகனாகிவிட்டிருக்கும் தீபக் தாண்டு, வெங்காயக்கடையில் இருக்கும், காரணமேயில்லாமல் என்மீது பிரியமாயிருக்கும் அந்த இன்னும் பெயர் கேட்டிராத அழகுப்பெண், இவர்களும் என் வாழ்வின் இடைவெளிகளை, குழிகளை, பள்ளங்களை எல்லாம் அன்பினால் நிரப்பிக்கொண்டிருப்பவர்கள்.

I am aging gracefully. அன்னையும் ஆசிரியையுமாக முழு மகிழ்ச்சியுடன் பெருமிதத்துடன் இருக்கிறேன்.

பொருளாதார தற்சார்பும், தாவரவியல் துறையின் மீதான என் ஆர்வமும், தொடர்ந்து நான் செய்துவரும் ஆய்வுகளும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

 எனினும் களைத்து வரும் மாலைகளில் ஒரு தேநீர்க்கோப்பையை எனக்கென நீட்டும் கைகளுக்கும்,  நல்லதும் அல்லதுமாக கழிந்த நாளின் முடிவில் how was your day? என்ற கேள்வியுடன் எனக்கென காத்திருக்கவும், என் கோபதாபங்களை, மகிழ்ச்சியை, அன்பை, பரிவைப்  பெற்றுக் கொள்ளவும், என் ஆன்மாவுக்கான தோழமையாக இருக்கவும் யாரும் இல்லை என்னும் ஏக்கம் மட்டும் ஈரநாக்கால் நக்கிக்கொண்டு காலடியில் உரசிக்கொண்டே ஒரு செல்ல நாய்குட்டியைப்போல  கூடவே இருக்கிறது. அதை மட்டும் எப்படியாவது விரட்ட வேண்டும்.

அரிதானது எதுவும் அருகில் இருக்காது என் நம்பும் சிலருக்கும் , வாழ்வின் சாரம் வற்றிப்போனலும் அன்றாடத்தில்  உழலுவதை நிறுத்த மாட்டேன் என்பவர்களுக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்கள். 

எந்த உறவும் தானே மடிவதில்லை அதைக் கொல்வது எப்போதுமே ஆணவம்தான். அப்படி ஆணவம் கொண்டோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.  

 புது வருடத்திற்கான சபதம் ஏதுமில்லை

நம்பவைத்து கழுத்தறுப்பவர்களை சற்று முன்பாகவே அடையாளம் கண்டுகொள்ளும் திறன் அளிக்கும் பயிற்சி வகுப்புகள் ஏதேனும் இருந்தால் செல்லலாம் என நினைக்கிறேன் அவ்வளவுதான். 

அன்பு