சரண் விடுமுறையில் இந்தியா வந்திருக்கிறான். தருண் பங்களூரில் இருப்பதாலும், புதிதாக வீடு மாற்றுவதாலும் சரணும் அங்கேபோய் அவனுடன் ஒரு வாரமாக இருக்கிறான். நேற்று காலை இருவரும் வீடியோ காலில் மசால் தோசை சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இருவருக்குமே தோசை பிடிக்கும் இருவருமே நன்றாக மாவு அரைக்கவும் தோசைபோடவும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். தோசை மட்டுமல்ல என்னைப்போலவே விரிவாகச் சமையல் செய்யவும் என்னைவிடச் சுவையாகச் சமைக்கவுமறிந்தவர்கள் இருவரும். குறிப்பாகத் தோசையை விதம் விதமாகச் சமைப்பார்கள்.
சரண் தருண் இருவரும் குட்டிப்பையன்களாக இருக்கையில் பல சிறார் பாடல்களை நாங்கள் வளைத்தும் நெளித்தும் உடைத்தும் எங்கள் வசதிக்கேற்ப மாற்றுவோம் அப்படி தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை, அரிசிமாவும் உளுந்துமாவும் அரைச்சுசெய்த தோசை பாடலின் பாலின சமத்துவமின்மையை உணர்ந்து ஏகத்துக்கும் வருந்தினோம்.
அரிசை உளுந்தை அரைத்து மாவாக்கி கிரைண்டர் கழுவி தோசை சட்னி எல்லாம் செய்து மற்றவர்களுக்கும் தோசை ஊற்றிக்கொடுக்கும் அம்மாவுக்கு ஏன் அப்பாவைவிட ஒன்று குறைவாக இருக்கனும்?
’’அப்பாவுக்கு 4 (சாப்பிடட்டும்)
அம்மாவுக்கு 5
அண்ணனுக்கு 4
எனக்கு மட்டும் 1
தின்னத்தின்ன ஆசை இன்னும் கேட்டாலும் தோசை!’’
(குழந்தை ஆசையாகக் கேட்கையில் ஏன் அதற்குப் பூசை ?சந்தோஷமாகச் சுட்டுக்கொடுக்கலாமே)
ஆண்கள்தான் உசத்தி அவர்களுக்கே எதுவானாலும் தரமானதும் அதிகமும் தரவேண்டும் என்பதை மிக இளமையிலிருந்தே அறமில்லாமல் கற்றுக்கொடுக்கும் இப்படியான பாடல்களை நம் சமூகம் தவிர்க்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நாங்களே இருந்தோம் (அல்லது திகழ்ந்தோம்,)
மற்றுமொரு சமூக சமத்துவமின்மையையும் விருந்தோம்பலுக்கு எதிரானதுமான ஒரு பாடலையும் இப்படித்தான் மாற்றினோம்,
’’மழை வருது மழை வருது குடையை பிடிங்க
முக்கால்படி அரிசி போட்டுமுறுக்கு சுடுங்க
தேடி வந்த மாப்பிள்ளைக்கு எடுத்துக்கொடுங்க
சும்மா வந்த மாப்பிள்ளைக்குச் சூடு வையுங்க’’
இந்தப்பாடலை இறுதி வரியில்
’’சும்மா வந்த மாப்பிள்ளைக்கும் சேர்த்துக்கொடுங்க’’
என்று மாற்றினோம்.
என்னாதானாலும் மாப்பிள்ளை அல்லவா? சும்மா வந்தாலும் தேடிவந்தாலும் முறுக்கு கொடுப்பதில் என்ன ஆகிவிடப்போகிறது மேலும் நாம் விருந்தோம்பலில் பெயர் பெற்றவர்களல்லவா?.சிறார் பாடல்கள் மூலம் இப்படி சும்மா வந்தால் சூடுவைப்பது போன்ற பிஞ்சுமனதில் நஞ்சை விதைக்கும் வரிகளை, கருத்துக்களை திணிப்பதை மாற்ற வேண்டும் என்பதற்கும் நாங்களே…………
மறுபடி தோசைக்கு வருகிறேன்
சரண் 4-லிலும் தருண் இரண்டிலும் படித்துக்கொண்டிருந்த சாந்தி ஸ்கூலுக்கு அவர்களைக் காலையில் நான் கொண்டு போய் விட்டுவிட்டு மீண்டும் மாலை நானே அழைத்துக்கொண்டு வருவேன்
வைன் சிவப்பில் சின்ன ஆல்டோ கார் இருந்தது அப்போது. எனக்குக் கல்லூரி 3 மணிக்கு முடியும் பள்ளி 3. 30க்கு. கடைசி 2-3 மணி பீரியட் கல்லூரியில் எனக்கு வகுப்பு அல்லது லேப் இருந்தால் சாக்பீஸ் பிடித்த கையோடு தலையெல்லாம் சாக்பீஸ் பொடியுடன் அப்படியே பாய்ந்து காரில் ஏறிப் பள்ளிக்கு வருவேன். பிள்ளைகள் எனக்காக காத்துக்கொண்டிருக்கக் கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தேன்.
அரிதாகத்தான் மீட்டிங்கினால் தாமதாமாவது நடக்கும். அப்படி ஒரு நாள் நான் முன்னரே போய்ப் பள்ளிக்கதவு திறக்கக் காத்திருக்கையில் ஒரு இளம் தகப்பன் தனது அம்மாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான். திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகி ஒருக்கலாம். குட்டிப்பாப்பாவொன்றை மழலையர் பள்ளிக்கு கொண்டுவிட பைக்கில் அவர் வருவதை பார்த்திருக்கிறேன்.அவர் ஒரு மரத்தடியில் நின்றபடி அம்மாவிட ம் ‘’பாருமா ரெண்டு தோசை ஊத்திட்டு போதுமானு கேட்கறா ?ஒருநாள் ரெண்டுநாள் இல்லை எப்போவுமே இப்படித்தான் ரெண்டு எப்படிம்மா பத்தும் ?’’ என்று பேசிக்கொண்டிருந்தான்.
ஆச்சர்யமாக இருந்தது அந்த இளம் மனைவியைக் குறித்து அவளுக்கே இரண்டு தோசை போதாதே?
இந்தக் கணவனாகட்டும் ஏன் அவளை தோசை போட்டுத்தரச்சொல்லி இப்படி குறைப்பட்டுக்கொள்ளவெண்டும்? தானே தோசை ஊற்றிக்கொண்டு வேண்டுமட்டும் சாப்பிட்டுவிட்டு அவளுக்கும் ஊற்றிக்கொடுக்கலாமே?
அன்றைக்கென்னவோ ஒரே கவலையாக இருந்தது எதிர்காலத்தில் மகன்களுக்கு வயிறு நிறைய உணவு கிடைக்குமாவென்று. இப்போது எந்தக்கவலையும் இல்லை அவர்களின் வயிறும் கூட இருப்பவர்களின் வயிறும் என்றும் நிறைந்திருக்கும்.