எல்லாம் உங்களால் தான் பிதாவே,
எல்லா பாவிகளையும் எப்போதும் மன்னித்துக்கொண்டே இருந்தால் பிறகெப்படி இருக்கும்?
லோகமாதேவியின் பதிவுகள்
எல்லாம் உங்களால் தான் பிதாவே,
எல்லா பாவிகளையும் எப்போதும் மன்னித்துக்கொண்டே இருந்தால் பிறகெப்படி இருக்கும்?
ஆண்டவரே!
எனக்கு எதிர் தரப்பென்று ஒன்றிருப்பதில் புகாரேதும் இல்லை,
அவர்கள் வலுவற்றவர்களாய் இருப்பதிலும் ஆட்சேபணை இல்லை
இருந்தாலும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படியாகவாவது இருக்ககூடாதா?
கொஞ்சம் பார்த்துப்பண்ணுங்கள் பிதாவே!
மறுபிறவியென்னும் சாத்தியமிருப்பின்
நான் ஒரு ஜகரண்டா மரமாகவே
நிச்சயம் பிறப்பேன்,
காலத்தை கடந்துநிற்கும்
மலைமுகடுகளை பார்த்தபடிக்கு
அப்போதும் ஒற்றையாய் ஓங்கியுயர்ந்து,
ஈரமற்று தகிக்கும் பாறைகள் மீது
அடர் ஊதா மலர்களை சொரித்தபடியிருப்பேன்,
அன்புக்குரியவர்கள் என்னை கடக்கையில்
அவர்களின்திசைநோக்கி
கூடுதலாய் மலர்களை பொழிவேன்.
அவர்களின் காலடியில்
மிதிபடும் மலர்களை மெளனமாய் பார்த்தபடி
காத்திருப்பேன்
மீண்டுமோர் கடும் கோடையொன்றில்
மேலும் மேலுமென மலர்களை பொழிய!
சிறு அதட்டலில் பணிந்துவிடும்
பெரும்பாலும்,
அவ்வப்போது மிரட்ட வேண்டியிருக்கையில்,
அஞ்சினாற்போல் எங்காவது போய் பதுங்கிக்கொள்ளும்,
அப்படித்தான் எப்போதுமென்றும் சொல்லமுடியாது
பிரம்பெடுத்தாலே அடங்கும் சமயங்களும் உண்டு,
வசைச்சொல்லும் வேண்டியிருக்கும்
வேளைகெட்ட வேளைகளில் விவஸ்தையின்றி நடந்துகொண்டால்,
அரிதாக அதற்கு ஆவேசம் வரும் நாட்களில் கழுத்தை திருகியும்,
காலடியிலிட்டு நசுக்கியும் கொன்று புதைப்பதுண்டு,
அப்படியும் உயிர்த்தெழுந்து விடுகிறது
உடன்கட்டையேறும் வரை உடனிருக்குமிந்த
உள்ளுறை விலங்கு!
அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
அதிகம் நனைந்து விட வேண்டாம் உன்காதலில் என்று,
கட்டுப்படுத்திக்கொண்டுமிருக்கிறாய்
பேரன்பின் பிரியத்தில் நிலைமறக்க வேண்டியதில்லை என
மட்டுறுத்திகொண்டுமிருக்கிறாய்,
அன்பில் அலைக்கழிந்து போக வேண்டமென்று
கட்டளைகூட இட்டிருக்கிறாய்
காத்திருப்பின் தவிப்பில் கரைந்து போக வேண்டியதில்லையென
நீ உணரவேயில்லை
நீ சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம்
ஈரமண்ணிற்குள் விதைகளை மறைத்து வைப்பதற்கான
முயற்சிகள் என்பதை
முளைத்து, தழைத்து, இலையும் கிளையுமாய்
தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் பெருமரமொன்றை
நீ எண்ணிகொண்டிருக்கிறாய் சின்னஞ்சிறு விதையென!
யுத்தத்தில் மரணம் போல்,வெயிலில் தாகம் போல்
தவிர்க்க இயலாததுதான் நீ என்னை மறுத்ததும்
தேவதைகள் கிடைப்பது அரிதென்று தெரிந்து கொண்டேன்
முதலிலும் ,முடியவே முடியாதெனும் உன் முடிவிலும்
எனினும் இன்னுமிருக்கிறதோர் வேண்டுகோள்,
இத்தனைக்கும் பிறகும்.,,
உன் இதழோரம் என்றுமிருக்குமே ஓர் இளநகை,
அதை மட்டுமாவது எனக்களியேன்?
எனக்கான அக் குறுஞ்சிரியின் நினைவுகளிலேயே
வாழ்ந்து முடித்து விடுகிறேன் மீதி நாட்களை
நீயின்றியும்……
தனித்திருக்கும் மற்றுமோர் இரவில் நானுமாய் நேற்றிருந்தோம்
உன்னுடனேதான் நானும் பயணித்துக்கொண்டிருந்தேன்
உன் ஜன்னலுக்கு வெளியே பொழிந்த மழையில்
தாமதமாகவேனும்?
கண்முன்னே நழுவிச்செல்கிறது காலம்
அதிலிருந்து தெறித்து வெளிவரும்
கணங்களில்
கைக்கு கிடைத்த
சிலவற்றை அள்ளி சேகரித்து
மடியில் இறுக்கக்கட்டிக்கொள்கிறேன்
உன்னுடன் வாழ
எனக்கும் வேண்டுமல்லவா
சில கணங்கள்!
© 2024 அதழ்
Theme by Anders Noren — Up ↑