வீசி எறிந்துகொண்டிருக்கிறாய்
என்மீதான உன் வெறுப்பை அங்கிருந்தபடி,
முகத்திலறைந்தபடி விழுபவற்றையும்
மடிநழுவி சிந்தியவற்றையும் இருகைகளையும் விரித்து
அள்ளிப்பற்றி சேகரித்துக்கொள்கிறேன்
இன்னும் இன்னுமென நீ வாரி இறைப்பாயெனினும்
அள்ளிகொள்கிறேன் அவற்றையும்
முன்பு நீயளித்த முத்தங்களை ஏந்திக்கொண்டது போலவே
முழு மனதோடு,
முகாந்திரமற்றதும் யூகிக்கமுடியாததாகவும் அதற்கான காரணமிருக்கலாம்
எனினும் எனக்கு புகாரேதுமில்லை
முன்னறிவிப்புகளேதுமின்றி தேவன் தொட்டளித்ததோர் கணமொன்றில்
நீ எனக்கு கையளித்த துய காதலைப்போலவே
இதனையும் மகிழ்வுடனே ஏற்றுக்கொள்கிறேன்
அள்ளி அள்ளி பூசிக்கொண்டதில் பரிசுத்தமாகியதென்னை உனது காதல்
இதோ இன்றென்னை முழுக்க நனைக்கும்
இவ்வெறுப்பினாலும் ஆசிர்வதிக்கவே பட்டிருக்கிறேன்
ஏனெனில்
வேறுயாறுமல்லவே, நீயல்லவா என்னை வெறுப்பது ?
எதற்கும் இன்னொரு முறை கனவுகளிலும் நினைவுகளிலும்
எனது புன்னகைக்கசடுகள் ஏதேனும்
மிச்சமிருக்கிறதா என தேடிப்பார்த்து சுத்தமாக துடைந்தெறிந்து விடு
வெறுக்கமுடியும் அப்போதுதான் என்னை முழுமையாய்,
குவித்த ககைகளை வானோக்கி உயர்த்தி நன்றி சொல்கிறேன்
உன் வெறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் இதயத்தை எனக்கு படைத்தவனுக்கு,
எப்போழுதவது என்னைக்கொல்லும் இச்சை வந்தால் சொல்லியனுப்பு
உன் கையிலிருக்கும் நச்சுதோய்ந்த கூர்நுனியில் கிழிபடவென
கழுத்தின் நீலநரம்பினை துல்லியமாய் தெரியும்படி
துடைத்துச்சுத்தமாக்கிக்கொண்டு வருகிறேன்
அப்போழுதும் எந்தப் புகாருமின்றி
இன்னுமிருக்கிறதோர் வேண்டுகோள்
இ்றுதிக்கணத்திலும் என் கண்களில் ததும்பும் உனக்கானகாதலை
காண்பாயெனில் தடுமாறலாம் நீ,
எனவே எனதன்பே,
முகத்தைத் திருப்பிக்கொள் என் கழுத்தைக்கிழிக்கையில்!