நீ பேசிக்கொண்டிருக்கையில்

செவிகளே உடலாகி

குரலாக மாறிவிட்ட உன்னை கேட்டுக்கொண்டிருக்கிறேன்

 

நான் கேட்க விரும்புவதைத்தவிர

வேறு என்ன என்னவோ பேசுகிறாய் எப்போழுதும்

 

எப்போதாவதுதான் தெரியாமல் கைபட்டு

இனிப்பை தொட்டுக்கொண்டது போல

என் மீதான் உனதன்பை கோடிட்டு காட்டுகிறாய்,

 

நீ பேசி முடித்த பின்னர்

கைப்பேசியின் உள்ளிருந்து உருவி எடுத்து

உன் வாக்கியஙகளை சொல் சொல்லாக பிரித்தெடுத்து

வேறு வேறாக அடுக்கி கட்டமைத்துப்பார்க்கிறேன்

 

ஒளிந்திருக்குமோ என்மீதான உன் காதல்

இவற்றுக்குள் எங்கேனுமென்று!!