கவிதை மொழியிலேயே பேசுகிறாய் என்னுடன் எப்பொழுதும்,
உன் கவிதையைப்பிடித்தபடிதான்
உன் உலகிற்குள் நுழைந்திருக்கிறேன்.
ஆயினும், ஒன்றே போலிருப்பதில்லை உனது கவிதைகள் யாவும்.
ஒரு சில திரிசூலமும், மழுவும், உடுக்கையுமாய்
மூன்றாம் கண்ணுடன் முப்புரம் எரிக்கையில்
திகைத்து தள்ளி நின்று கொள்கிறேன்.
இன்னும் சில ஆயிரம் தடக்கைகளில்
ஆயுத்தத்துடன் ஆங்காரமாய் வ்ருகையில்
அடைக்கலம் கோருகிறேன்.
முள்கிரீடம் அணிந்து , சிலுவையில் அறைபட்டு
குருதி கசிகிறது சிலவற்றில்
அவற்றை, பதறி எடுத்து மடியிலிட்டு முந்தானையால் துடைக்கிறேன்.
குப்பைத்தொட்டியில் போடப்பட்ட
பச்சிளம் சிசுவாய் பரிதவித்து வீரிடும்
கவிதைகளை
அள்ளிஎடுத்து என் முலைகொடுக்கிறேன்.
ஒரு சிலவே மென் திரையாக இருப்பதால்
மெல்ல விலக்கி கடந்து செல்கிறேன்.
வெகு சிலவே சிற்றகலின் ஒற்றைச்சுடரின்
ஒளியில் தெரியும் கடவுள்களைப்போல
சொந்தமென்னும் உணர்வையும் நம்பிகையும் அளிக்கின்றன.
கனத்த சில கவிதைகள்
குளிரும் இரவுகளில் என்னை முழுவதும் மூடியிருக்கும்
கதகதப்பான மகிழம்பூ மணக்கும் கம்பளியாகின்றன.
இன்னும் ஒன்றே ஒன்றுதான்
உன்னால் எழுதாக்கவிதையாய் இருக்கிறது
என் கழுத்தின் குருதிக்குழாயை
வலியின்றி வெட்டும் நஞ்சு தோய்ந்த
உன் கூர் வாள் கவிதையொன்றினையும் எழுதி விடேன்.
உன் கவிதைகளோடு வாழ்வதைப் போலவே இனிதானது
குருதி கொப்பளிக்க அவற்றாலேயே சாவதும்!
நேசம், எழுதாகவிதை இரண்டும் மிக அருமை