பேருந்தின் படிக்கட்டுகளில்

ஒற்றைக்கையால் பற்றிக்கொண்டு

ஊசலாடும் பயணமொன்றில்

அறுந்து விட்டதென் செருப்பின் நீல வாரொன்று,

அவசரமாய் உதறினேன் இரண்டையுமே

காலடியில்

விரைந்து கொண்டிருந்த  கரிய தார்ச்சாலையில்,

 

பலநாட்களாய் உயிருக்கு போராடிய

அவற்றினின்றும் விடுதலை பெற்ற

என் பாதங்களின்புத்துணர்வை
சொல்லிப்புரிய வைக்க முடியாதென்னால்!
கீழ்மை நிறைந்த காத்திருப்புகளுக்கும்
கடந்து வந்த கடினப்பாதைகளுக்கும்
இயலாமையும் நிராசையும் நிறைந்த
என்னை இதுவரை சுமந்து தேய்ந்ததற்கும்
மெளன சாட்சியான  அவை அங்கெயே கிடக்கட்டும்
என் இறையே, அருள்வீராக
அதன் மீதாவது ஏதேனும் ஒரு பெரு வண்டியின் சக்கரங்கள் ஏறிச்செல்லும்படி,
ஆமென், ஆமென்