லோகமாதேவியின் பதிவுகள்

Month: June 2024

அநீதி!

ஒரு முக்கியமான மொழியாக்கத்தை முடிக்க வேண்டி இந்த விடுமுறையை முழுக்க செலவிட்டுக்கொண்டிருக்கிறேன். இடையில் பரீட்சை பேப்பர் திருத்துவது காவிய முகாமில் கலந்துகொள்வது சரண் தருண் வருகை எதிர்பாரா வீட்டு மராமத்துப் பணிகள் என நாட்கள் தீர்ந்துவிட்டதால் இந்த மாதகடைசிக்குள் முடிக்க வேண்டும் என்னும் கெடு கழுத்துக்கு அருகில் வந்துவிட்டிருந்தது. ஏறக்குறைய முடித்துவிட்டிருக்கிறேன் எனவே ஒரு விடுபடலுக்காக ஏதேனும் ஒரு திரைப்படம் பார்க்க நினைத்தேன். பிரைமில் அநீதி இருந்தது. முன்பே அதை கேள்விப்பட்டிருந்ததால் அதையே பார்க்க முடிவு செய்தேன்

நேற்று முழுவதுமாக பார்த்து முடித்தேன். தன் குடும்பத்துக்கு நேர்ந்த அநீதியால் மனம் அல்லது மூளை பிறழ்கிறது ஒரு சிறுவனுக்கு. அவன் இளைஞனானதும் மேலும் மேலும் அநீதிகள் அவனுக்கும் அவனுக்கு வேண்டியவர்களுக்கும் தொடர்ந்து நடக்கிறது .அதில் அவன் மூளைக்கோளாறு தீவிரமடைந்து எல்லாரையும் கொல்லனும்னு நினைக்க மட்டும் செய்யறான். நிலைமை கைமீறிப்போகையில் அவனும் சகட்டுமேனிக்கு எல்லாரையும் கொல்லும் அநீதியை செய்கிறான்.

என்ன மூளைக்கோளாறானாலும் காதலியை கொல்லும் அநீதியை இறுதியில் செய்யமுடியவில்லை அவனால், ஏனென்றால் மூளை, மனப்பிறழ்வுகளையெல்லாம் கடந்ததுதானே காதல்.அல்லது காதலும் ஒரு தீவிரமான மனப்பிறழ்வுதானே? இதுதான் படம் என்று புரிந்து கொண்டேன். முகத்தை ரத்தத்தில் கழுவும் அளவுக்கு படத்தின் ரத்தக்களறி ஒரு அநீதியென்றால் அந்த நிலோஃப்ர் நகைச்சுவை மாபெரும் அநீதி அதை எதுக்கு உள்ளே கொண்டு வந்தார்கள் என்று புரியவேயில்லை!

நிலோஃபரின் மொக்கை நகைச்சுவை காட்சி முடிந்த அடுத்த காட்சியிலேயே வீட்டு வாசலில் அமெரிக்க பிள்ளைகள் வந்துவிடுகிறார்களே? ஏன் தேவை இல்லாமல் நிலோஃபர்?

வாசற்கதவின் இடைவெளி வழியே மருதாணி இட்ட கை வந்து பார்சலை வாங்கிக்கொள்வது, மழையில் நனைந்தவனுக்கு துவட்டிக்கொள்ள துண்டு தருவது போன்ற சாத்வீக காட்சிகள் ஒன்றிரண்டுதான் மீதி எல்லாமே ரத்தம் தெறிக்கிறது. அர்ஜுன்தாஸ் சவலைப்பிள்ளை போலிருக்கிறார். அந்த நாயகி பரவாயில்லை அவரைவிட ஆரோக்கியம்.

அநீதி இழைக்கப்பட்டதால் அநீதி இழைப்பவனாக மாறிய ஒருவனின் அநீதி நிறைந்த வாழ்வையும், அறியாப்பருவத்தில் நிகழும் அநீதி எப்படி ஒரு சிறுவனை வன்முறையாளனாக வளர்த்தெடுக்கிறது என்பதை படம் சொல்லுகிறது. மற்றபடி தீர்வெல்லாம் சொல்லவில்லை.

எனக்கு ஒரு உம்மை மட்டும் தெரிஞ்சாகனும்,ocd என்கிற பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு என்பதை நான் இதுவரை தீவிரமான சுத்தம் பேணுவது,எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கவிரும்புவது போன்ற உபத்திரவம் இல்லாத north 24 katham படத்தின்பகத்ஃபாசிலுக்கு இருக்கும் சிக்கல்போலத்தான் நினைத்திருந்தேன். ஆனால் அநீதியில் அர்ஜுன் தாஸின் கண் பாப்பாவெல்லாம் சுருங்கி விரிந்து கொலைவெறி எல்லாம் வருகிறதே! உண்மைதானா?

தெய்வானை!

யான் அறக்கட்டளை பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் ஜக்கர்பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட இருக்கிறார்கள். அந்த கிராமத்தை பசுமையாக்கும் அவர்களின் முயற்சியில் நானும் இணைந்திருக்கிறேன். இன்னும் சில வருடங்களில் அந்த கிராமம் ஒரு குறுங்காடாக காட்சியளிக்கும்.  இளம் மாணவர்கள் அந்த செயல்திட்டத்தில் ஆர்வமுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

நேற்று அந்த கிராமத்துக்கு சென்று விட்டு வெகுகாலத்துக்கு பிறகு பேருந்தில் வீடு திரும்பினேன். 80களின் தமிழ் சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க சாரல் மழையில் பயணம். அந்த பேருந்து 80 களிலேயே நின்றுவிட்டது போல. நான் கல்லூரிக்காலத்தில் சென்ற பயணத்தில் எந்த மாற்றமும் இன்றி இருந்தது. ஜன்னலோர இருக்கை  வேறு கிடைத்தது. மானசீகமாக கொஞ்சம் பின்னோக்கி பயணித்துக்கொண்டேன்.

பேருந்தில் நல்ல கூட்டம் பலர் நின்று கொண்டிருந்தனர். எனக்கு முன்பாக பல பெண்கள் வயல்வேலைகளுக்கும் மில் வேலைகளுக்கும் சென்று திரும்பி கொண்டிருப்பவர்கள். வயர்கூடைகளில் தண்ணீர் பாட்டில்களும், எவர்சில்வர் சாப்பாட்டுபாத்திரங்களும் கூடவே மழைக்காலமாதலால் வயலில் பிடுங்கிய பண்ணை, கும்மிட்டி, தொய்யக் கீரைகள்  இருந்தன. பல பெண்கள் வெற்றிலையும் புகையிலையும் மென்றனர்.

எனக்கு இரு இருக்கைகள் முன்னால் ஒரு பெண் நின்றிருந்தாள். நல்ல கருப்பு, உருண்டை முகம், கைகள் நல்ல உருளையாக திடமாக இருந்தன. கூடையோ வேறு பையோ கொண்டு வந்ததுபோல்  தெரியவில்லை, நேர்கொண்டபார்வை. யாருடனும் அவள் பேசிக்கொண்டிருக்கவும் இல்லை. அவ்வபோது வெளியே மழையை பார்க்க திரும்புகையில் அவள் முகம் தெரிந்தது நெற்றிப்பொட்டில்லை, சிறிய கோடாலிக்கொண்டை அலட்சியமாக போடப்பட்டிருந்தது. 

காவாலதிகாரிகள் முதுகுப் பக்கம் துப்பாக்கியை செருகி வைத்திருப்பதைபோல அவள் ஒரு கருக்கரிவாளை பின்னால் செருகி இருந்தாள். முள் மரம் வெட்டவோ, நெல்லறுக்கவோ கடலை பிடுங்கவோ சென்று திரும்புவாளாயிருக்கும்.எனக்கென்னவோ அது அப்படி பிடித்திருந்தது. அவள் நிற்பதிலும் ஒரு கம்பீரம். இருக்கை காலியாகிறதா, எப்போது உட்கார  இடம் கிடைக்கும் என்றெல்லாம்  கண்ணும் மனசும் அலையவேயில்லை அவளுக்கு. கம்பியை பிடித்த ஒற்றைக்கை அசையாமல் அப்படியே நின்ற மேனிக்கு நின்றாள். 

40,45 வயதிருக்கலாம் ஆனால் உடல்கட்டுக்குலையாமல் உறுதியாக இருந்தது  கழுத்திலும் வெறுமை ஒருவேளை திருமணம் ஆகாமல்  தப்பித்திருக்கலாம். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது அப்படி கருக்கரிவாள் செருகி இருந்ததில் அவளின் ஆளுமையை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த கிராமத்தில்  பிறந்து விவசாய வேலைகளில் ஈடுபடுவோரை பல்லாண்டுகளாக பார்த்து வரும் எனக்கு இப்படி ஒருத்தியை பார்த்த நினைவே இல்லை. எந்த ஊருக்கு செல்கிறாள் என்றும் தெரியவில்லை அவளை பார்த்து புன்னகைக்கவாவது நினைத்தேன் வாய்ப்பில்லாமல் போனது. 

நான்  ஊரில் இறங்கியபின்னரும் அவள் பயணித்தாள். அவளுக்கு தெய்வானை என்று பெயரிட்டேன்.என் ஆத்தாவின் பெயர் இது. வாழ்நாளில் ஒரு தென்னிந்தியப்பெண்ணுக்கான எல்லா அநீதிகளும் இழைக்கப்பட்டவர். 80 வருட வாழ்வில் கோவையை தாண்டியதில்லை ஆத்தா. அப்பாருவின் மண உறவைத்தாண்டிய உறவுகளை குறித்துக் கூட வாய் பேசாதவர், குழாயடியில் குடுமிபிடி சண்டை நடக்கையில் கூட குடத்துடன் ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த ஆத்தாவின் சித்திரம் என் மனதில் அப்படியே இருக்கிறது.  இந்த பெண்ணுக்கு அவர் பெயரிட்டது ஒரு பிழையீடு போல.

 தெய்வானையை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். என்னை இப்படி வசீகரித்த பெண்கள் திரிபுரசுந்தரி என்னும் என் பள்ளிக் கால ஆங்கில ஆசிரியையைத் தவிர வேறு யாரும் இல்லை. அதுவும் அப்படி ஸ்டைலாக இடுப்பின் பின்புறம் அரிவாளை செருகிக்கொண்டிருக்கும் அவள் தோற்றம் எனக்கு பெரும் கிளர்ச்சியை அளிக்கிறது நினைக்கும் போதெல்லாம்.

வீட்டில் அவளை நிந்திக்கவும், சந்தேகப்படவும், அவள் சம்பாத்தியத்தை பிடுங்கிகொள்ளவும், குடித்துவிட்டு அடிக்கவும்  ஒரு ஆண் இல்லை என்று நானே கற்பனையும் முடிவும் செய்துகொண்டேன்.  அவளை கரிசனத்துடன் தோள் சாய்த்துக்கொள்ளவும் ,காதல் ததும்ப முத்தமிடவும், அணைத்துக் கொள்ளவும் கூட  ஆண் என்று ஒருவன் அவள் வாழ்வில் இருக்கவேண்டியதில்லை என்று முடிவு செய்ததில் நல்ல மனநிறைவு உண்டானது எனக்கு.  தெய்வானையின் வாழ்வில் எந்த மாதிரியான ஆண் இருந்தாலும் அவளுக்கு அது ஒரு தொல்லையாகத்தான் இருக்கும்.  எளிய உயிர்களான  ஆணுக்கானவளல்ல அவள்.

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑