யான் அறக்கட்டளை பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் ஜக்கர்பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட இருக்கிறார்கள். அந்த கிராமத்தை பசுமையாக்கும் அவர்களின் முயற்சியில் நானும் இணைந்திருக்கிறேன். இன்னும் சில வருடங்களில் அந்த கிராமம் ஒரு குறுங்காடாக காட்சியளிக்கும்.  இளம் மாணவர்கள் அந்த செயல்திட்டத்தில் ஆர்வமுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

நேற்று அந்த கிராமத்துக்கு சென்று விட்டு வெகுகாலத்துக்கு பிறகு பேருந்தில் வீடு திரும்பினேன். 80களின் தமிழ் சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க சாரல் மழையில் பயணம். அந்த பேருந்து 80 களிலேயே நின்றுவிட்டது போல. நான் கல்லூரிக்காலத்தில் சென்ற பயணத்தில் எந்த மாற்றமும் இன்றி இருந்தது. ஜன்னலோர இருக்கை  வேறு கிடைத்தது. மானசீகமாக கொஞ்சம் பின்னோக்கி பயணித்துக்கொண்டேன்.

பேருந்தில் நல்ல கூட்டம் பலர் நின்று கொண்டிருந்தனர். எனக்கு முன்பாக பல பெண்கள் வயல்வேலைகளுக்கும் மில் வேலைகளுக்கும் சென்று திரும்பி கொண்டிருப்பவர்கள். வயர்கூடைகளில் தண்ணீர் பாட்டில்களும், எவர்சில்வர் சாப்பாட்டுபாத்திரங்களும் கூடவே மழைக்காலமாதலால் வயலில் பிடுங்கிய பண்ணை, கும்மிட்டி, தொய்யக் கீரைகள்  இருந்தன. பல பெண்கள் வெற்றிலையும் புகையிலையும் மென்றனர்.

எனக்கு இரு இருக்கைகள் முன்னால் ஒரு பெண் நின்றிருந்தாள். நல்ல கருப்பு, உருண்டை முகம், கைகள் நல்ல உருளையாக திடமாக இருந்தன. கூடையோ வேறு பையோ கொண்டு வந்ததுபோல்  தெரியவில்லை, நேர்கொண்டபார்வை. யாருடனும் அவள் பேசிக்கொண்டிருக்கவும் இல்லை. அவ்வபோது வெளியே மழையை பார்க்க திரும்புகையில் அவள் முகம் தெரிந்தது நெற்றிப்பொட்டில்லை, சிறிய கோடாலிக்கொண்டை அலட்சியமாக போடப்பட்டிருந்தது. 

காவாலதிகாரிகள் முதுகுப் பக்கம் துப்பாக்கியை செருகி வைத்திருப்பதைபோல அவள் ஒரு கருக்கரிவாளை பின்னால் செருகி இருந்தாள். முள் மரம் வெட்டவோ, நெல்லறுக்கவோ கடலை பிடுங்கவோ சென்று திரும்புவாளாயிருக்கும்.எனக்கென்னவோ அது அப்படி பிடித்திருந்தது. அவள் நிற்பதிலும் ஒரு கம்பீரம். இருக்கை காலியாகிறதா, எப்போது உட்கார  இடம் கிடைக்கும் என்றெல்லாம்  கண்ணும் மனசும் அலையவேயில்லை அவளுக்கு. கம்பியை பிடித்த ஒற்றைக்கை அசையாமல் அப்படியே நின்ற மேனிக்கு நின்றாள். 

40,45 வயதிருக்கலாம் ஆனால் உடல்கட்டுக்குலையாமல் உறுதியாக இருந்தது  கழுத்திலும் வெறுமை ஒருவேளை திருமணம் ஆகாமல்  தப்பித்திருக்கலாம். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது அப்படி கருக்கரிவாள் செருகி இருந்ததில் அவளின் ஆளுமையை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த கிராமத்தில்  பிறந்து விவசாய வேலைகளில் ஈடுபடுவோரை பல்லாண்டுகளாக பார்த்து வரும் எனக்கு இப்படி ஒருத்தியை பார்த்த நினைவே இல்லை. எந்த ஊருக்கு செல்கிறாள் என்றும் தெரியவில்லை அவளை பார்த்து புன்னகைக்கவாவது நினைத்தேன் வாய்ப்பில்லாமல் போனது. 

நான்  ஊரில் இறங்கியபின்னரும் அவள் பயணித்தாள். அவளுக்கு தெய்வானை என்று பெயரிட்டேன்.என் ஆத்தாவின் பெயர் இது. வாழ்நாளில் ஒரு தென்னிந்தியப்பெண்ணுக்கான எல்லா அநீதிகளும் இழைக்கப்பட்டவர். 80 வருட வாழ்வில் கோவையை தாண்டியதில்லை ஆத்தா. அப்பாருவின் மண உறவைத்தாண்டிய உறவுகளை குறித்துக் கூட வாய் பேசாதவர், குழாயடியில் குடுமிபிடி சண்டை நடக்கையில் கூட குடத்துடன் ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த ஆத்தாவின் சித்திரம் என் மனதில் அப்படியே இருக்கிறது.  இந்த பெண்ணுக்கு அவர் பெயரிட்டது ஒரு பிழையீடு போல.

 தெய்வானையை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். என்னை இப்படி வசீகரித்த பெண்கள் திரிபுரசுந்தரி என்னும் என் பள்ளிக் கால ஆங்கில ஆசிரியையைத் தவிர வேறு யாரும் இல்லை. அதுவும் அப்படி ஸ்டைலாக இடுப்பின் பின்புறம் அரிவாளை செருகிக்கொண்டிருக்கும் அவள் தோற்றம் எனக்கு பெரும் கிளர்ச்சியை அளிக்கிறது நினைக்கும் போதெல்லாம்.

வீட்டில் அவளை நிந்திக்கவும், சந்தேகப்படவும், அவள் சம்பாத்தியத்தை பிடுங்கிகொள்ளவும், குடித்துவிட்டு அடிக்கவும்  ஒரு ஆண் இல்லை என்று நானே கற்பனையும் முடிவும் செய்துகொண்டேன்.  அவளை கரிசனத்துடன் தோள் சாய்த்துக்கொள்ளவும் ,காதல் ததும்ப முத்தமிடவும், அணைத்துக் கொள்ளவும் கூட  ஆண் என்று ஒருவன் அவள் வாழ்வில் இருக்கவேண்டியதில்லை என்று முடிவு செய்ததில் நல்ல மனநிறைவு உண்டானது எனக்கு.  தெய்வானையின் வாழ்வில் எந்த மாதிரியான ஆண் இருந்தாலும் அவளுக்கு அது ஒரு தொல்லையாகத்தான் இருக்கும்.  எளிய உயிர்களான  ஆணுக்கானவளல்ல அவள்.