ஐந்திலும் ஏழிலும் படித்துக்கொண்டிருந்தார்கள் சரணும் தருணும் ஒரு முழுநிலவு நாளில் தென்னை மரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் இருந்தபடி யானை டாக்டர் கதையை கேட்கையில்.பள்ளிக்காலங்களில் நாங்கள் கதைகள் படிக்காத கேட்காத இரவுகளே இல்லை. வார இறுதிகளில் முழுநாளுமே கதைகள்தான். வெண்முரசு வாசித்தும் கேட்டுமிருந்த காலங்கள் எங்கள் நினைவுகளில் மிக இனிமையானவை.

யானை டாக்டர் வாசித்து சொல்லிக் கொண்டிருக்கையில்  யாரோ குடித்துவிட்டு வீசி எறிந்த உடைந்த பீர் பாட்டில் யானையின் காலில் குத்தி உள்ளே ஏறியதை கேட்டதும் தருண் ’’ உணர்வு மேலிட’’ நான் ஃபாரஸ்ட் ஆஃபீசராகி இவனுங்களை எல்லாம் சவுக்கில அடிக்க போறேன் பாரு ’’என்று சொல்லி  கதறி கதறி அழுதான்.

அதன் பிறகான பல ஆண்டுகள் கழிந்து இதோ இன்று மாலை விமானத்தில் டேராடூனில் இருந்து இளங்கலை காட்டியல் படிப்பை நான்கு வருடங்கள் படித்து முடித்த தருண் வீடு திரும்புகிறான்.

இடையில் எந்த கட்டத்திலும் அவன் வேறு படிப்பை குறித்து சிந்திக்கவும் இல்லை. யானைகளில் இருந்த கவனம் மெல்ல ஊர்வனவற்றில் குறிப்பாக பாம்புகளுக்கு திரும்பியிருந்தது. மைசூரில் அறிவியல் ரீதியாக பாம்புகளை கையாள்வது குறித்த ஒரு முக்கிய பயிற்சியை இரண்டுகட்டங்களாக  முறையாக இடையில் எடுத்துக் கொண்டான். STORM-  scientific training on reptile management என்னும் அந்த பயிற்சிக்கு பிறகு பல பாம்புகளை தருண் பொதுமக்கள் அடித்து கொல்லாமல் காப்பாற்றி இருக்கிறான்.வீட்டில் எங்களுக்கும் விஷம், விஷமற்றவை என பாம்புகளை வேறுபடுத்தி அடையாளம் காணவும், பாம்புகளை கண்டதுமே பீதியடைய தேவையில்லை என்பதையும் கற்றுக் கொடுத்தான்.

ஒருமுறை வால்பாறைக்கு புகைப்படம் எடுக்க எல்லோருமாக சென்று திரும்பி கொண்டிருக்கையில் ஆழியாறு அணைப்பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தினுள்ளே புகுந்துவிட்டிருந்த பாம்பை பிடிக்க சிறு கூட்டம் கூடி இருந்தது. காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடிப்போய் அதை வெளியில் மிகுந்த பிரயத்தனத்துக்கு பிறகு தருண் கொண்டு வந்தான்.

 பாம்பு வெளியில் வந்த மறு நொடி அங்கிருந்த பருமனான ஒருவர் அதை கால்களால் மிதிக்கச் சென்றார் . தருண் பதறி அவரின் அழுக்குப்பிடித்த கனத்த செருப்புக்கடியே அவன் கைகளை வைத்து அதை தடுப்பதை  காரிலிருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். 

அந்த பாம்பு மீண்டு நழுவிச்சென்று சாலையோரம் மாங்காய் பத்தை விற்கும் ஒரு அம்மாளின் டிவிஎஸ் 50 வண்டிக்குள் புகுந்து விட்டது. அந்த அம்மாள் தருணை கெட்ட வார்த்தைகள்சொல்லி வைது கொண்டே இருந்தார். 

முயற்சியில் சற்றும் மனம் தளராத தருண் சுமார் 3 மணி நேரம் செலவழித்து அந்த விஷமற்ற பாம்பை  பிடித்து பத்திரமாக ஆழியாறு  வனப்பகுதியில் விட்டபின்னரே வீடு திரும்பினோம். 

அப்படியே சென்ற வருடம் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆழியாறு அணையின் உபரி நீர் சேகரமாகும் ஒரு அழகிய இடத்திற்கு நண்பர்களுடன் சென்றிருக்கையில் அங்கிருந்த உபயோகத்திலில்லாத ஒரு மீன்வலையில்  பல நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த உயிரிழக்கும் அபயகரமான கட்டத்தில் இருந்த ஒரு பாம்பை தருண் கண்டுபிடித்து சாலையில் செல்லும் யார் யாரையோ கேட்டு ஒரு கத்தி வாங்கி மீன்வலையை கிழித்து பல நாட்கள் பட்டினியிலும் கழுத்துப்பகுதியில் காயங்களுமாக இருந்த அதை காப்பாற்றினான்.

அந்த பாம்பை காப்பாற்றும் முன்பு அதன் வாலை அவன் தொட்டபோது உயிரச்சத்தில் இருந்த அந்த பாம்பு அவன் விரலை, ஒரு சிறு குழந்தை எப்படி இறுகப்பற்றிக்கொள்ளுமோ அப்படி சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டது.

அக்கம் பக்கம் சிறுவர்களுக்கு பாம்புகளை சரியானபடி கையாளுவதை குறித்து கற்றுக் கொடுத்திருக்கிறான்.வீட்டில் இருக்கும் மரங்களிலும் மோட்டார் சுவிட்ச் இருக்கும் பெட்டிகளிலும் இப்போது பாம்புகளை அடிக்கடி பார்க்கிறோம் இருந்தாலும் நாங்களும் அவற்றை பொருட்படுத்துவதில்லை.அவையும் எங்களை கண்டுகொள்வதில்லை. வீட்டில் பல பெட்டிகளில் பாம்புச்சட்டைகளை  பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்.

பாம்புகள் இருப்பதாக தகவல்வந்தால் உடனடியாக நேரில் சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட நண்பர்களை வரவழைத்தோ அவற்றை காப்பாற்றிக்கொண்டிருக்கிறான்

அப்பா வீட்டில் சமையலுக்கு உதவும் மாணிக்கா சென்ற மாதம் செடிகளுக்குள்ளிருந்த பாம்பொன்றை  விரட்டிவிட்டு வழக்கம்போல வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

தருண் இன்னும் சில நாட்களில் சேரவிருக்கும் பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தின்  முதுகலை படிப்பிற்கான நேர்காணலில் அவனது  கானுயிர் புகைப்படங்கள் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை  பார்த்த தேர்வுக்குழுவினர் ’’ஒரு காட்டியல் படித்தவனாக  இதுவரை என்ன சாதித்திருக்கிறாய்?என்று கேட்டார்கள். ’’ வீட்டில் இருக்கும் ஒரு படிப்பறிவில்லாத பணிப்பெண் பாம்பை பார்த்ததும் பயந்துவிடாமல், அடித்துக்கொன்றுவிடாமல் அதை விரட்டிவிட்டு வேலைபார்க்கும் அளவுக்கு என்னால் முடிந்த சிறு வட்டத்தில் காட்டுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி இருக்கிறேன்’’ என்று தருண் பதிலளித்தான். அவனுக்கு இடம் கிடைத்து விட்டிருக்கிறது.

டேராடூனின் இந்த கல்லூரி காட்டியல் படிப்பு குறித்த  அவன் எதிர்பார்ப்புக்களை எல்லாம் முழுக்க தோற்கடித்தது. இப்போதைய பெரும்பாலான கல்லூரி பேராசிரியர்களை போலவேதான் அங்கும் துறைசார்ந்த அறிவும்,பொது அறிவும், பொதுவான அறிவும், கல்வி கூடத்திற்கான கற்பித்தலுக்கான அடிப்படை ஒழுக்கமும் நேர்மையும் இல்லாத ஆசிரியர்கள்  இருக்கிறார்கள்.ஆனாலும் முயற்சி செய்து இந்த படிப்பை அவன் முடித்துவிட்டான். வகுப்பில் தருண் கேட்கப்போகும் கேள்விகளுக்கான பயத்துடன் வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் அங்கே இனி நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள்.

canopy எனப்படும் காட்டுமரங்களின் உச்சி இலைப்பரப்பின் இடைவெளிகள் வழியே நுழையும் சூரியஒளியின் அளவு ஷொரியா ரொபஸ்டா என்னும் ஒரு மரத்தின் வளர்ச்சியில் கொண்டிருக்கும் பங்களிப்பு குறித்த தருணின் காட்டியல் படிப்பிற்கான சிறு ஆய்வும் இளங்கலை படிப்புக்கு ஏற்றதுதான்.

 காட்டியல் படிப்பின் ஒரு பகுதியாக மேற்கு மலை தொடர்ச்சி காடுகளில் சுமார் 100 நாட்கள் பயிற்சியில் இருக்கையில்தான் தருணுக்கு காட்டில் பணியாற்றுதல் என்பதின் உண்மை நிலவரம் தெரிந்தது. இரவு ரோந்து பணிக்கு சென்றது, உச்சிக்காட்டில் மலர்ந்திருந்த நீலக்குறிஞ்சியை கண்டது, யானைகளை காத்திருந்து இரவில் பார்த்தது என பல நேரடி கள அனுபவங்கள் அவனை மேலும் செம்மையாக்கின. அவன் மாணவனென்று அறியாமல். காட்டிலாகா அதிகாரியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று எப்படியோ அங்கிருந்த பணியாளர்கள் நம்பினார்கள். அவனுடன் நான் அக்காட்டுக்கு சென்ற போது அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளில் அதை நானும் உணர்ந்தேன். 

பயிற்சி முடித்தபின்னர் வனச்சரக அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க அவனுடன் நானும் சென்றிருந்தேன். ஜீப்பில் உள்ளே செல்கையில் வழியில் இருந்த அரளிச்செடியில் மலர்களை பறித்துக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண் தருணை பார்த்ததும் அவசரமாக தூக்கிச் செருகியிருந்த புடவையை இறக்கிவிட்டுவிட்டு நெற்றியில் கையை வைத்து ஒரு சல்யூட் அடித்தார். தருணுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை எனக்கு பெருமிதமாக இருந்தது.

தருண் இந்த காலகட்டத்தில் சென்ற காட்டு பயணங்களும் ,  எடுத்த முக்கியமான கானுயிர் புகைப்படங்களும் responsible wild photography குறித்த அவன் மேடைப்பேச்சுக்களும், அறிவியல் சஞ்சிகைகளில் காட்டுயிர் குறித்து எழுதிய  ஆய்வுக் கட்டுரைகளும் எனக்கு பெருமகிழ்ச்சி அளித்தவை. குறிப்பாக Cicada என்கிற சிள்வண்டுகுறித்த அவனது கட்டுரையின்  கவித்துவமான இறுதிப்பத்தி எனக்கு பெரும் நிறைவளித்தது. பிற்காலத்தில் தருணின் அம்மா லோகமாதேவி என்றறியப்படப்போகிறேன் என்பதை சொல்லியவை அக்கட்டுரைகள்.

தருண் கடந்த ஜனவரியில் வீட்டிலிருக்கையில்  சிலருடன் காட்டுக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு பரவி வளர்ந்திருந்த  செடிகளை அங்கிருந்தவர்களுக்கு காட்டி இதுதான் கம்யூனிஸ்ட் பச்சை எனப்படும் தாவரம் முன்பு கேரளமெங்கும் பல்கிப்பரவிக் கொண்டிருந்த இதற்கு இப்படி பெயர்வந்தது என்று சொல்லிவிட்டுஅதன் அறிவியல் பெயர்  Eupatorium odoratum  என்று சொன்னேன்.தருண் இடைப்பட்டு நான் சொன்னது அதன் இணைப்பெயர்தான் ஆனால் புழங்கு பெயர்  Chromolaena odorata என்று திருத்தினான். 

பிரேஸில் கடற்கரையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காலில் கட்டுப்போட்டபடி  நாற்காலியில் அமர்ந்திருந்த புகழ்பெற்ற தாவரவியலாளார் கம்மர்சன்,  போகன்வில்லா கொடியை கொண்டு வந்து காட்டிய ஆண் வேடத்திலிருந்த அவரது காதலியும் உதவியாளருமான ழான் பாரேவிடம் ’’இந்த மலர்கள் தான் எத்தனை அழகு’’ என்றபோது ழான் பாரே  ’’வண்ணமயமான இவை மலர்களல்ல அன்பே, மலரடிச்செதில்கள்’’ என்று திருத்தியபோது அடைந்த திகைப்பை நானும் அடைந்தேன்.

 தருண் எனது மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பதில் ஒரு அன்னையாகவும் ஆசிரியையாகவும் மகிழ்கிறேன். முதுகலை படித்து முடித்து ஒரு மாத இடைவெளியில் ஜெர்மனியில் அரசு வேலையில் இணைந்து 22 வருடங்களுக்கு பிறகு நான் இப்போது வாங்கும் சம்பளத்தின் மும்மடங்கு சம்பளம் வாங்கும் , கடினமானது என்று கருதப்படும் எல்லா கணினி சார்ந்த வேலைகளையும் எளிதில்  முடித்துவிடும்  அதிபுத்திசாலி சரணும் என் மற்றொரு வடிவம்தான் . ஒரு பெண்ணாக மகளாக  சகோதரியாக மனைவியாக நான் இழந்த  பலவற்றின் பள்ளங்களை ஒரு அன்னையாக நிரப்பிக்கொண்டு, ததும்பி வழிந்துகொண்டு இருக்கிறேன்.

தருண் இனி முதுகலை முடித்துவிட்டு IFS தேர்வு எழுதவிருக்கிறான். அதுவரையிலும் நேர்மையான அதிகாரியாக  காட்டில் பணியாற்ற வேண்டுமென்னும் அவனது கனவு கலையாதிருக்கட்டும், உறுதி குலையாதிருக்கட்டும்.நல்வரவு தருண்.