நீண்ட பயணத்திற்கு பின் நேற்று முன்னிரவில் தான் வீடு வந்தேன். உடலும் மனமும் சோர்ந்திருந்தது. நல்ல பசியும் கூட. வழக்கமாக நேரம் பிந்தி வீடு திரும்புகையில்  ஓட்டுநரிடம் ஏதேனும் நல்ல உணவகத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி சாப்பிட வாங்கிக்கொண்டு வருவேன். ஆனால் நேற்று வீட்டில் சாப்பிடவேண்டுமென்ற கொதி உள்ளே இருந்தது எனவே அதை செய்யவில்லை. 

குளித்து விளக்கேற்றி சாதம் வடித்து சாப்பிட பின்னிரவாகிவிட்டது. எனினும் தளர்வாக  பிசைந்த இளஞ்சூடான தயிர் சாதத்தை மிளகாயின் நெடி மட்டும் கொண்ட, அறவே காரமில்லாத  முருகலாக கருகலாக வறுத்த, நெடிய மோர்மிளகாய்களுடன் சாப்பிட்ட பின்புதான் தொலைவில் போய்க்கொண்டிருந்த  உயிர் திரும்ப என்னிடம் வந்தது.

பயணத்தில் புதிதாக சில மனத்துயரங்கள்  இருந்தன ஆனாலும் அந்த உணவு தற்காலிகமாக அவற்றை மறக்கச் செய்தது.  

 எனக்கு உணவென்பது வெறும் பசி தீர்ப்பதல்ல, பல நிகழ்வுகளுடன் தொடர்புடைய உணர்வுபூர்வமான ஒன்று. சமீபத்தில் ’’ இருப்புக்கொள்ள முடியவில்லை’’ என்பார்களே அப்படி ஒரு இருப்புக் கொள்ளாத இடத்தில் இருக்கவேண்டி வந்தது.  என்னால் அங்கு ஒரு நொடியும் என்னை பொருத்திகொள்ள முடியவில்லை. பல காரணங்கள் இருந்தன அவற்றில் முதன்மையானது எந்த அக்கறையுமின்றி, சுவையாக சமைக்கப்படாத, போதுமான அளவுக்கு பரிமாறப்படாத உணவு அதையும் வாங்கி உண்ணவேண்டிய  ஒரு சூழல்.

நான் ஒருபோதும் உணவில் எந்த குறையும் வைத்துக்கொள்ளாதவள். ஏராளமாக சமைத்து தாராளமாக பரிமாறி நிறைவாக உண்பவள்

உண்பதில் எனக்கு எந்த குற்ற உணர்வும் தயக்கமும் இருப்பதில்லை ஏனெனில் வருடங்களாக நான் என் சுய சம்பாத்தியத்தில் குடும்பத்திற்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்கிறேன்

அன்றாடம் என் கையால் 50க்கும் அதிகமான பறவைகள் அதிகாலையில் அவைகளுக்கு பிடித்தமான உணவை உண்கின்றன.

இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து அதிகாலையில் நிறைய காகங்கள் எனக்காக காத்திருக்கும். அவை உண்ட பின்னர் தவிட்டுக்குருவிகளும் மைனாக்களும் இரட்டைவால் குருவிகளும் பொறுக்குகளை தேடி உண்ணும், பின்னர் கட்டெறும்புகளும் சிற்றெறும்புகளும் எஞ்சியவற்றை உண்ணும் , பின்னர் மீதமிருக்கும் உப்புசுவைக்கென அணில்கள் வரும், நுண்ணுயிரிகளும் வருமாயிருக்கும். ஒரு நாளை இப்படி அன்னமிட்டுத்தான் நான் துவக்குகிறேன்.   

அன்னக்கையின் விளிம்பில் கால்பாகத்துக்கும் குறைவான இடத்தில் எடுக்கப்பட்ட உணவை காட்டி போதுமா? என்று கேட்கப்பட்ட கேள்வி என்னை வெகுவாக காயப்படுத்தியது. தோசையோ சப்பாத்தியோ எத்தனை வேண்டும்? என்ற கேள்வியும் அப்படித்தான். நான் ஒருபோதும் அந்த கேள்வியை கேட்பதில்லை. என் காதுபட அப்படி  யாரும் கேட்பதை வீட்டில் நான் அனுமதிப்பதும் இல்லை. சமையலறை பொறுப்பை இதன்பொருட்டே நான் என் வசம் வைத்திருக்கிறேன்

வயிற்றுக்கு போதாமல் அளிக்கப்பட்ட. தாழ்வாக உணரும்படி அளிக்கப்பட்ட உணவு என் பழைய காயங்களின்பொருக்கை கிள்ளி மீண்டும் ரத்தம் கசிய செய்துவிட்டது

இளமையில்நான் பசியாலானவளாக இருந்தேன்.

பெண்குழந்தைகளுக்கான பாரபட்சம் நிறைந்த வீட்டில், மகன் பிறப்பான் என்னும் எதிர்பார்ப்பை, நம்பிக்கையை, புத் எனும் நரகத்துக்கு போகாமல் இருக்கும் வாய்ப்பை இரண்டாவது முறையாக பொய்யாக்கிவிட்டு பிறந்த மகள் என்னும் காழ்ப்பு என்மீது எப்போதும் இருந்தது.  நினைவு தெரிந்த நாளிலிருந்து போதுமான அளவில் உள்ளே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்கும் படியான உணவு  கிடைத்ததில்லை. 18 அறைகளுடன் கூடிய மாபெரும் வீடும் இரண்டுஅரசு உத்தியோகஸ்தர்களும் இருந்த வீடென்பதால் நிச்சயம் வறுமை காரணமல்ல. 

 அப்போது குக்கர் வந்த புதிது குக்கரின் உள்ளே  சாதம் வைக்க பெரிய பாத்திரம் ஒன்றும் அதன் விளிம்பில் பொருந்திகொள்ளும்படி காய்கறிகளும் பருப்பும் வேகவைக்கவென்று ஒரு சிறு பாத்திரமும் இருக்கும். அம்மா எப்போதும் அந்த சிறு பாத்திரத்தில்தான் சாதம் வைப்பார்கள். ஐந்து நபர்கள் கொண்ட் அவ்வீட்டின் உணவு நேரத்தின் போதுகடும் பசியுடன் அமர்ந்திருக்கும் ஒரு சிறுமிக்கு அந்த பாத்திரத்தை பார்த்ததுமே கண்ணில் நீர் நிறைந்துவிடும் உணவளிக்கையில் தயங்கும்  கைகளையும் கண்டிக்கும் அதட்டும் கட்டுப்படுத்தும் குரலையும் கேட்டு வளர்ந்தவளாதலால் இளமையிலிருந்தே நல்ல உணவை சமைக்கவும் அளிக்கவும் பெருங்கனவுகள் இருந்தன

என் அக்காவுக்கும் எனக்கு நிகழ்ந்ததுதான். 

நாங்களிருவரும் விளையாட்டுத்தோழனான கேவி விஸ்வநாத் என்றழைக்கப்பட்ட பக்கத்துவீட்டு பிரபாவுமாக கற்பனை கதைகளை பேசிக்கொள்வோம். தயிர்சாதத்தில் மாம்பழம் பிசைந்து வெள்ளித்தட்டில் மணக்க மணக்க உணவுன்னும் பிரபா மாயாவிக்கதைகளை சொல்லுவான்.

 எங்கள் தரப்பு கதைகளில்  நாங்கள்  செல்லும் ஒரு அடர்காட்டில் அண்டாக்களில் நிறைந்து வழியும் உணவும் இனிப்புகளும் போதாக்குறைக்கு பலாவும் மாவும் வாழையுமாக சொப்பிக்காய்த்திருக்கும் மரங்களும் நிறைந்திருக்கும்.அப்போதைய எங்களின் சிற்றுண்டி என்பது அரிந்த தக்காளியில் சர்க்கரை தூவி சாப்பிடுவது மட்டும்தான்

என் இளமையே பசியாலும் போதாமைகளாலும் நிறைவின்மையாலும், முறம் போன்ற கைகளால் மூக்கு சில்லு உடையும்படி அறையும், கார்க் குண்டு போடப்பட்டிருக்கும் மரத்துப்பாக்கியை காட்டி சுவரில் பல்லி போல ஒட்டிகொண்டு கதறும் எங்களை சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டும்   அப்பாவை குறித்த அச்சத்தாலும் தான் ஆக்கப்பட்டிருந்தது.

இளங்கலை படித்துமுடிக்கும் வரை இதே நிலைதான். மூன்றாம்வருடம் படிக்கையில் என் சி சியில் ஆனைமலை காந்தி ஆசிரம கட்டிடவேலைகளுக்கென அழைத்துச்செல்லப்பட்டோம், காரைச்சட்டி, செங்கல்சட்டி தூக்குவது, மணல் சுமப்பது என கடினமான வேலைகள் எனினும் அதைக்காட்டிலும் கடினமான வேலைகளை வீட்டில் செய்து பழகிய எனக்கு அது பொருட்டாக இல்லை. என்சிசி பொறுப்பாளராக சுசீலா என்னும் ஆசிரியர் இருந்தார். முதல்நாள் மதியம் அக்கிராமத்தின் ஒரு ஓட்டுவீட்டின் உயரமான திண்ணையில் எங்களுக்கு தலைவாழை இலைபோட்டு வடை பாயாசத்துடன் விருந்தளிக்கப்பட்டது என் வாழ்க்கையில் முதல் முழுமையான உணவு அது. அன்று சுசீலா என்னும் அந்த அன்னை நீலத்தில் சிவப்பு மலர்களிட்ட புடவை கட்டியிருந்தார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இருக்கிறது.

கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் அவர்களுடன் அலைபேசியில்  பேசவாய்பு கிடைத்தது, இதைச் சொன்னேன் மறுமுனையில் சற்று நேரம் கனத்த அமைதி நிலவியது, பின்னர் தழுதழுத்த குரலில் என்னிடம் ’’ வைக்கிறேன் தேவி’’ என்றுவிடை பெற்றுக் கொண்டார்கள். நான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான பணி என நினைக்கும், நம்பும் இந்த தாவரவியல் அகராதியை சுசீலாம்மாவுக்கே சமர்ப்பிக்கவிருக்கிறேன்

நான் 7-ல் படிக்கையில் இருந்தே சமைக்கவும் ஆணையிடப்பட்டேன் எனினும் அம்மாவின் கட்டளைகள், குறைவாக எண்ணெய் ஊற்ற, அளவாக பொருட்களை எடுக்க உடனிருந்து கொண்டே இருக்கும்

முதுகலை படிக்க முதன்முறையாக  கோவை பல்கலைக்கழக விடுதியில் இருக்கையில் முதல் நாள் வகுப்பு முடிந்து நெடுந்தூரம் நடந்து வந்து விடுதியின் உணவுக்கூடத்திற்கு வந்தேன்

அண்டாக்களில் சாதமும் கறியும் இரண்டு வகை ,குழம்பும், கட்டித்தயிரும் கூடவே அப்பளமும் ஊறுகாயும் நிறைத்து வைக்கப்பட்டிருந்தது, மேலும் பரிமாற யாரும் இல்லை நாமே எடுத்துப்போட்டு சாப்பிடலாம் என்பதுவும்  எனக்கு பெரும் திகைப்பளித்தது

கருப்பாக  ஒல்லியாக இடுப்புக்கு கீழ் நீண்டிருந்த பின்னலை தவிர இளமையின் அம்சமென்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லாத, போஷாக்கில்லாமல் கண்களில் மட்டும் உயிரை வைத்துக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் அன்றைய திகைப்பை  அந்த  உணவு அவளுக்களித்த நிறைவை இதற்குமேலும் எழுதவிடாமல் தன்மதிப்பு கையை பிடித்து தடுக்கிறது.

பல்கலைகழகத்தின் என் எல்லா சொல்லிக்கொள்ளும் படியான செயல்பாடுகளுக்கும் அந்த  நல்ல உணவே பின்னணியில் இருந்தது.  

அப்போதுதான் முதுகலை படிப்புக்கள் துவங்கி இருந்ததால் விடுதி முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டிருக்கவில்லை.சமையலறையில் இரவுணவின் போது நாங்களும் கூடமாட ஒத்தாசை செய்தோம் அந்த சமையல்கார தாத்தா எனக்கு பல சமையல்  நுணுக்கங்கள் கற்றுக்கொடுத்தார்.  அம்மாவின் அதட்டல்கள் கட்டுப்படுத்தல்கள் இல்லாமல் சமையல் கற்றுக்கொண்ட, நிறைவாக சாப்பிட்ட காலம் அதுதான்

நான் நன்றாக சமைப்பவள் என்னும் பெயர்பெற்றதும் அதன்பிறகுதான்.

 என் முன்சகோதரி சங்கமித்ரா (முன் காதலன், முன் கணவன் இருக்கையில் ஏன் இப்போது சகோதரியாக இல்லாத ஒருத்தியை இப்படி குறிப்பிடக் கூடாது?) ’’தேவி கைகழுவிய தண்ணியில் கருவேப்பிலை கிள்ளிப்போட்டா அது ரசமாயிரும்’’ என்று சொன்னதெல்லாம் அதீதம்தான் என்றாலும் நன்றாக சமைக்கிறேன்தான்,

கொஞ்சம் உடல் பருமன் அதிகமாக இருந்த தருணின் இளமைக்காலத்தில் எங்கள் குடும்பமருத்துவர் வசந்த் அவனிடம் ’’டேய் கொஞ்சம் சாப்பாட்டை கம்மி பண்ணுடா’’ என்றபோது ’’ அலட்டிக்கொள்லாமல் மிதப்பாக //அம்மாவ முதல்ல டேஸ்டா சமைக்கவேண்டாம்னு சொல்லுங்க// என்ற  புட்டு தருணின் பாராட்டைவிட மேலுமொன்று எனக்கு கிடைக்கப் போவதே இல்லை.

 இரண்டாண்டுகளுகு முன்பு காலமாகும் வரை ஒரு முறைகூட அம்மா என் சமையலை பாராட்டியதே இல்லை எதுவுமே குறை சொல்ல முடியாமல் மிக விரிவாக சமைத்த நாளிலும் ’’சாப்பாடு இன்னும் ஒரு விஸில் கூட வச்சிருக்கலாம்’’ என்றாவது சொல்லி விடுவார்கள்.

சமைக்கும் சுதந்திரம் என் கைகளுக்கு வராமல் அம்மா கவனமாக இருந்தார்கள் எனினும் எனக்குள் நான் ஒரு குடும்பத்தை எதிர்காலத்தில் நிர்வகிக்கையில் தாராளமாக சமையல் செய்யும் திட்டம் வலுவாக இருந்தது.

இப்போது என் தம்பி மற்றும் மகன்களின் குற்றச்சாட்டே ’’எதுக்கு இத்தனை அதிகமாக சமைக்கிறே’’? என்பதுதான் அதற்கான பதில் தம்பிக்கு தெரியும் மகன்களுக்கு முழுமையாக தெரியாது.

எப்போதும் பல பிடி அதிகமாகத்தான் சமைக்கிறேன். யாராவது  விருந்து வராத வாரஇறுதிகள் என வீட்டில் இல்லவே இல்லை. 

அபுதாபியின் என் இரு கர்ப்பகாலங்களிலும் பசியறிந்து உணவிட யாருமில்லை. சமைக்க முடியாத கர்ப்பகால தொந்தரவுகளிலும் நான் சமைத்துக்கொண்டுதான் இருந்தேன். மிக கடிமான காலங்கள் அவை.  இப்போதைய  என் மனக்கட்டிக்கான காரணமும் அந்தக் காலம்தான்.

 அப்போது (எனக்கு பிற்பாடு தெரியவந்த வேறு உள்நோக்கங்கள் இருந்தாலும்) மகேஸ்வரி என்னும் பெண் (தோழி அல்ல) மிகப்பெரிய அகன்ற நானே அமர்ந்துகொள்ளலாம் என்னுமளவிலான தட்டில் எனக்கு வாய்க்கு பிடித்தமானவைகளை பலமுறை சமைத்தளித்திருக்கிறாள். அந்த உணவும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அறியாச்சிறுமிகளான எங்களிருவரையும் சென்னைக்கு காரில் அழைத்துச் சென்று அதே இரவில் அரசியலில் சம்பாதித்த அண்ணா நகரின் பிரம்மாண்ட பங்களா முழுக்க கழுவி துடைக்க வைத்து தூக்கமும் அசதியுமாக இருந்த எங்களுக்கு  எம் எல் ஏ பெரியம்மா பழனியம்மாள் கொடுத்த இரவுணவான ஃப்ரிஜ்ஜில் இருந்த விறைத்து குளிர்ந்துபோன வல்லரிசிச்சோறும் ஊசிப்போய் நூல்விட்டிருந்த வெண்டைகாய் குழம்பும் இன்னும் என்  நினைவுகளில் செரிக்காமல் இருக்கிறது. அந்த வீட்டின் துர்மரணங்களுக்கு இந்த அநீதியும் ஒரு காரணமாக இருக்ககூடும்.

எனக்கு  மனமுவந்து உணவளித்தவர்களும் உண்டு. ஊட்டி ராஜி வீட்டில் இருந்த பத்து நாட்கள். சின்ன வேலையும் கூட செய்யவிடாமல்  நல்ல உணவும் முழு ஓய்வும் எனக்கு ராஜி மட்டுமே அளித்தாள். மிக சுத்தமாக பராமரிக்கப்பட்ட அந்த வீட்டில் எப்போதுமே எதையாவது எனக்கு சாப்பிட கொடுத்துக்கொண்டே இருந்தாள். கைகழுவ வெதுவெதுப்பான நீரிலிருந்து வாசிக்க கதைபுத்தகங்கள் வரை எல்லாம் எல்லாம் என்னெதிரே தயாராக இருக்கும். மாலைவேளைகளில் சுரேஷ் நகைக் கடையிலிருந்து வருகையில் மீண்டும் சுடச்சுட திண்பண்டங்கள் கொண்டு வருவார். மூவரும் ரக்‌ஷித்தை அருகில் அமர்த்திக்கொண்டு  தரையில் அமர்ந்து கதையான கதை பேசிக்கொண்டு சாப்பிட்ட நிறைவான நாட்களின் நினைவு ,

வீட்டில் குடியிருந்த மணி அண்ணன் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வீட்டு தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்க கூட்டமாக அமர்ந்திருக்கும் நானுள்ளிட்ட அனைவருக்கும் வாங்கிவரும் வெண்ணைக்காகித கவரில் இருக்கும் வறுத்த கோழிக்கறி.

நாகமாணிக்கம் அண்ணன் முதல்முறையாக கார் வாங்கியபோது என்னையும் அவர்கள் குடும்பத்துடன் அழைத்து சென்று ஆர் எஸ் புரத்தின் மிக  உயர்தர அசைவ உணவகத்தில் வாங்கிக்கொடுத்த மீன்முட்டை பொரியலும், கோழி ஈரல் வறுவலும்,

ஒரு நண்பர் விஷ்ணுபுர விழாவின்போது எங்களில் சிலரை அழைத்துக்கொண்டுபோய் கொடுத்த அசைவ உணவு விருந்தின்போது. நான் போதுமென்று மறுத்தபோதும் விடாமல் அவர் எடுத்து என் இலையில் வைத்த ஒரு பெரிய இறைச்சித்துண்டு ,

என் தாத்தா வாயிலிட்டு மென்று எனக்கும் அளிக்கும் வெற்றிலை குதப்பல் இந்த நினைவுகளெல்லாம்  மின்மயானம் போகும்போதும் உடன் வரும் பட்டியலில் இருப்பவை.

 உணவு மட்டுமல்லாது  பிறர் உவந்தளித்த வேறு சிலவும் என் நினைவுகளில் பசுமையாக இருந்து என் ஆளுமையில் பெரும் மாற்றத்தையும் உண்டாக்கி இருக்கிறது

கல்யாண அழைப்பிதழ் கொடுக்க அப்பாவுடன் இனிஷியல்களால் மட்டும் குறிப்பிடப்படும் வேட்டைக்காரன்புதூரின் ஒரு பெரியமனிதர் வீட்டுக்கு சென்றிருக்கையில் அந்த வீட்டம்மா நான் எத்தனை மறுத்தும் கேட்காமல் பெரும் சிரமத்துக்கிடையில் கொக்கிச்சல்லை கொண்டுமிக உயரமாக வளர்ந்து விட்டிருந்த செண்பக மரத்திலிருந்து செஞ்சுடர்போல ஆரஞ்சு நிறத்திலிருந்த ஒரு பூவை பறித்துக்கொடுத்தார்.

அதற்கு பின்னர் நான் சூடிக்கொண்ட ஆயிரக்கணக்கான செண்பக பூக்களிலும் அன்று என் கையில் குளிர்ந்த பொன்போல மணம்வீசிக்கொண்டிருந்த அதே மலரின் வாசனை தானிருக்கின்றது. செண்பகபூக்களை எனக்கு வாங்கிக்கொடுப்பவர்கள் எல்லாரையுமே அந்த அம்மாளாகத்தான் கருதுகிறேன்.

அப்படியே ஒரு தோட்டத்திலிருந்து புறப்படுகையில் அதன் உரிமையாளர் எனக்களித்த ஒரு  கனிந்த முள்சீதா பழமும் இருக்கிறது. அதன் விதைகள் முளைத்து இந்த வீட்டிலும் அதே சீதாமரம் இப்போது கனியளிக்கிறது. அந்த மரத்தை வளர்ப்பதென்பது அவரது அதே அன்பை வளர்த்தல்தான்.

 இங்கு வந்து கிளம்பிசெல்பவர்களுக்கு ஒரு கொத்து கறிவேப்பிலையாவது கொடுக்காமல் என் மனம் நிறைவதில்லை

 இல்லாமைகளாலும் நிராகரிப்புக்களாலும் நிரம்பியிருந்த என் இளமைக்காலத்தின் நினைவுகளிலிருந்து தப்பிக்கவே நான் இவற்றை செய்கிறேனாயிருக்கும் 

நான் போட்டுக்கொடுத்த தேநீரோ காப்பியோ நன்றாக இருப்ப்தாக முதல் வாயிலேயே சொல்பவர்களும் என் நேசத்துக்குரியவர்களே!

தருணும் ராம்ராஜ் அப்பாவும் அதில் இருக்கிறார்கள்

எந்த எளிமையான உணவானாலும் இருவரும் மனம் நிறைய பாராட்டி வயிறு நிறைய உண்பவர்கள். சாப்பிடுகையில் தொலைக்காட்சியோ வேறு கவனச்சிதறல்களோ இல்லாமல் உணவை மட்டும் கவனித்து சாப்பிடுபவர்கள் இருவரும்

உணவை அளிக்க தயங்கும் கைகளை நான் வெறுக்கிறேன் அது அறியாமை உள்ளிட்ட எந்த காரணமாயினும்.அந்த உணவையும் வரிசையில் நின்று வாங்கி உண்ட தாழ்மையை  இனி எப்படியும் நினைவில் இருந்து நீக்க முடியாதென்னும் உண்மையும் வலிக்கிறது.

இந்த நெடிய கட்டுரை அப்படியான ஒரு உணவை சாப்பிடவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளான தாழ்மை உருவாக்கிய காயங்களுக்கான மருந்துதான். 

வெண்முரசில் பீமன் அரண்மனை அடுமடையில் அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கும் பேருருளி இப்புடவி என்றறிவதை சொல்லும் அத்தியாயத்தில்  ’’அன்னத்தை உண்ணும் அன்னமே உடல். பசி என்பது அன்னத்துக்காக அன்னம் கொள்ளும் வேட்கை. சுவை என்பது அன்னத்தை அன்னம் கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது அன்னம் அன்னமாகும் தருணம். வளர்வதென்பது அன்னம் அன்னத்தில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது அன்னத்திடம் அன்னம் தோற்கும் கணம். அன்னமே பிரம்மம். அது வாழ்க!”என்றிருக்கும்

அன்னம் வாழ்க ஆம் அப்படியே ஆகுக!’’