ஐரோப்பாவில் மேற்படிப்பு முடித்துவிட்டு சரண் வீடு திரும்பி இருக்கிறான். ஒரு மாத விடுமுறை காலத்தின் பின்னர் மீண்டும் மே மாதம் ஜெர்மனியில் பணியில் சேர வேண்டும்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவுக்கு ஐரோப்பா இணையப் பாதுகாப்பளிக்கிறது. அந்த பல்லாண்டு திட்டத்தில் சரணும் முக்கிய பொறுப்பிலிருக்கிறான். அவனுக்கு ஐரோப்பா வாழ்க்கை அத்தனை உவக்கவில்லை எனினும் இந்த பணியில் ஈடுபாடு இருக்கிறது. சைபர் தொழில்நுட்பத்தின் தேவை கானா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இப்போது தான் துவங்கி இருப்பதால் அந்த அடிப்படை முன்னெடுப்புக்களில் தன் பங்களிப்பும் இருப்பது மிகவும் முக்கியம் என்று கருதுகிறான். இதில்
எனக்கும் மகிழ்ச்சிதான்.
சரணை பார்க்க நண்பர்களும் உறவினர்களுமாக வந்துகொண்டிருப்பதால் இத்தனைநாள் சந்தடி இல்லாமல் தனிமையும் நானும் மட்டுமாக இருந்த வீடு கலகலவென்றிருக்கிறது, அப்படி யாரும் வராத தினங்களில் நானும் அவனும் பயணிக்கிறோம்.
இந்த கிராமத்து வீட்டில் சரணும் தருணும் மிகச்சிறுவர்களாக இருக்கையிலேயே வசிக்கத்துவங்கி விட்டிருந்தோம். இருவரையும் மாதா மாதம் இந்த கிராமத்து நாவிதர் மணியின் சலூனுக்கு அழைத்துச் செல்வேன். கடைவாசலில் நான் தெருவை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரும் முடிவெட்டும் வரை நாளிதழ்கள் வாசித்துக்கொண்டிருப்பேன்.
மணியிடம் முடிவெட்டுதல் என்பது ஏறக்குறைய செடிகளுக்கு பாத்தி கட்டுதல் அல்லது செடிகளை தறித்தல் என்பதற்கு நிகரான ஒன்றுதான். சட்டிகிராப் என்பார்கள் இங்கெல்லாம். தலையில் ஒரு சட்டியை கவிழ்த்து சட்டிக்கு வெளியே தெரியும் முடியை முழுக்க வெட்டி அகற்றும் ஸ்டைல் அது. மணிக்கு சட்டி தேவையில்லை தலையின் அளவுக்கேற்ற அப்படி ஒன்றை மானசீகமாக கவிழ்த்து முடிவெட்டி விடுவார். கோவிட் காலங்களில் வீட்டுக்கு வந்து மகன்களுக்கு முடி திருத்திய மணியின் உதவியை மறக்கவே முடியாது.
சரணும் தருணும் விடுமுறைக்கு வீடுவந்தால் மரியாதை நிமித்தம் மணி வந்து அவர்களை பார்த்து நலம் விசாரித்துவிட்டு போவது வழக்கம்
இன்றும் மணி வந்திருந்தார். சரணிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்படுகையில் ’’தம்பி, கிரிஜாம்மணி செளக்கியங்களா’’? என்றார்
சரண் பதறி’’ அண்ணா ஏன்னா இன்னும் அதை கேட்கறீங்க”என்றான் வெட்கம் பிடுங்கி தின்ன.
ஒரு சுவாரஸ்யமான ஃப்ளேஷ்பேக்!
சரண் 6 அல்லது 7-ல் படிக்கையில் ஒரு மாதாந்திர முடிவெட்டுதலுக்காக மணி கடைக்கு போயிருந்தோம். நான் வழக்கம் போல வெளியில் அமர்ந்திருந்தேன்.
சரணுக்கு மணி முடிவெட்டிகொண்டிருந்தார், தருண் அடுத்ததாக வெட்டிக்கொள்ள காத்திருந்தான்.
திடீரென மணி வெளியே முகம் முழுக்க சிரிப்புடன் வந்து ’’பெரிய தம்பி என்னமோ சொல்லறாப்பிலங்க’’ என்றார்
மகன்கள் இருவரும் திருத்தமாக முடிவெட்டிக்கொள்வதில் நான் கவனமாக இருந்தேன் அப்போதெல்லாம். இப்போது தருணின் பிடரிவழியும் கேசத்தை பார்க்கையில் ’’அந்தக்காலம் அது அது அது ஒரு கனவு காலம்’’ என்று தோன்றும்.
எனவே எனக்கு தெரியாமல் சரண் சற்று கீழிறக்கி கிருதா வைத்துக்கொள்ள விரும்பியிருக்கிறான். ஆனால் சரணுக்கு அவன் வைத்துக்கொள்ள விரும்பியதின் பெயர் கிருதா என்பது தெரியவில்லை அது எப்படியோ கிரிஜா என்று மனதில் பதிந்திருக்கிறது
எனவே மணியிடம் ’’அண்ணா கிரிஜாவை ஒண்ணும் பண்ணாதீங்க, விட்ருங்க நான் வச்சுக்கறேன்’’ என்று சொல்லி இருக்கிறான். நானும் மணியுமாக வெகுநேரம் சிரித்தோம் அன்று.
அந்த கிரிஜாவை பின்னர் பலமுறை மணி நலம் விசாரிப்பதுண்டு கிரிஜாவை தவிர்க்கவேண்டியே மணியிடம் போவதை நிறுத்திக்கொண்டு பலநூறுகள் கொடுத்து முடிவெட்டினது போலவும் வெட்டாதது போலவும் காட்டும் நேச்சுரல்ஸுக்கு சரண் மாறி இருந்தான்.
ஆனாலும் இப்படி வீடுவரை வந்து கிரிஜாவை அவ்வப்போது மணி விசாரிப்பதுண்டு
பல ஆண்டுகளுக்கு பிறகென்பதால் நாங்களும் கிரிஜாவை பேசிப்பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்
இப்போது வளர்ந்து வாலிபனாகி இருக்கும் சரணின் வருங்கால மனைவிக்கு ஒருவேளை கிரிஜாவை பற்றி தெரிய வந்தால் என்னவாகும் என்பது கவலை அளிக்கிறது
அப்படி கிரிஜாவின் மீது உள்ளார்ந்த அன்பு கொண்டிருந்த சிறுவன் சரண் நாளை 24 வயதை நிறைவு செய்கிறான். மனமார்ந்த அன்பும் ஆசிகளும், சரணுக்கும் அவன் கிரிஜாவுக்கும்!