லோகமாதேவியின் பதிவுகள்

Month: December 2017

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

இன்னுமோர் ஆண்டு எனக்களிக்கப்பட்டிருக்கிறது ஆசிரியையாகவும் அன்னையாகவும் வாழ்வினைத்தொடர. கடந்த ஆண்டை திரும்பிப்பார்க்கையில் ஏற்ற இறக்கங்களுடன் கலவையாகவே இருக்கிறது வழக்கம் போலவே, நிறைய புடவைகள், கொஞ்சமாய் நகைகள், சென்னையில் ஷாப்பிங் பழைய பாடங்கள், புதிய மாணவர்கள்……

எனினும் முன்னைக்காட்டிலும் நிறைய வாசித்திருக்கிறேன் அதிகம் நல்ல திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன் குறிப்பாக காதலுக்கும் ஆண் பெண் உறவுகளுக்குமிடையேயான வரையறைகள் பெரிதும் மாறிவிட்டதைக்காட்டும் படங்களின் வரிசையில் salmon fishing in Yemen, mountain between us   போன்றவை, நிறைய புதிய நண்பர்கள் நிறைய நிறைய சந்திப்புகள்,  வழக்கத்தைக்காட்டிலும் குறைவான பயணங்கள், இதுவரை சாத்தியமே இல்லாதிருந்த தன்னந்தனிப்பயணம் ஆகஸ்டில் புதுவை பயிலரங்கிற்கு, மதுரை புத்தகக்கண்காட்சி, விஷ்ணுபுரம் விழா, ஊட்டி முகாமில் கலந்துகொண்டது

இலங்கை பேராதனா  மாணவர்களுக்கான உரையாற்றியது,  ஒரு பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கும் ’’எனது கணவரும் ஏனைய விலங்குகளும்’’ புத்தகத்தைக்குறித்து நிலாமுற்றத்தில் பேசியது, ஏப்ரல் மே மாதங்கள் முழுமையும் டெங்குவின் பிடியில் மருத்துவமனை வாசம், சொர்க்கத்தினுடைதோ அன்றி நரகத்தினுடையதோ கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்துவிட்டு, எப்படியோ தப்பிப்பிழைத்தது, அம்மா மிக ஆபத்தான நிலையிலிருந்து மீண்டது , ஒரு மாதம் மித்ராவீட்டில் தங்கி இருந்து பதவி உயர்வின் பொருட்டு புத்தாக்கப் பயிற்சி பல்கலையில் எடுத்துக்கொண்டது, மித்ராவின் அறுவைசிகிச்சை, சில மறக்க இயலா சந்திப்புகள், பிரிவுகள்,வெகு சில புரிதல்கள், பற்பல தப்பர்த்தங்கள்,, கவிதை முயற்சிகள், வலைப்பூ, இளங்கலை நண்பர்களை மீண்டும் பல வருடங்களுக்குப்பிறகு சந்தித்து நட்பை புதிப்பித்துக்கொண்டது,  என்று நீள்கிறது கடந்த வருடத்தின் நினைவுகள்

நஞ்சுக்கொடி கழுத்தை இறுக்கியதால் 9ஆவது மாதத்தில் வயிற்றிலேயே மாணவி அர்ச்சனாவின் தலைச்சன் ஆண் குழந்தை,  சாலை விபத்தில் நாகேந்திரன்,கல்விச்சுற்றுலா சென்றிருக்கையில் கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டும், ஒரு மழைநாளில் மின்விளக்கு மாற்றுகையில் மின்சாரம் தாக்கியும் ,இருசக்கர வாகன விபத்திலுமாய் அநியாயமாக மூன்று இளம் மாணவர்கள்,மாடியிலிருந்து தவறிவிழுந்து க சீ சிவகுமார்,  மைக்ரோபயாலஜியில் என் ஆர்வத்தை திசை திருப்பிய என் ஆசிரியர் ரவிந்திர ராஜு, இப்படி இன்னும் மீளமுடியாத துக்கத்தை ஏற்படுத்திய இறப்புகளும், அதைகாட்டிலும் வலிமிகுந்த  பிரிவுகளும், பழுத்து கனிந்து உதிர்ந்தாலும் இழப்பின் வெற்றிடத்தை ஏற்படுத்திய நான் மிக மதிக்கும் சில மூத்த எழுத்தாளர்களும்  என்றும் என் நினைவில் தெய்வத்தின் இடத்தில் இருக்கிறார்கள்

எல்லாம் எல்லாம் மாறிக்கொண்டே இருப்பினும் மாறாமல் இருப்பது  என் எளிய வாழ்வில், இன்னும் கூட இனிய அறியாமையால் நிறைந்திருக்கும் என் உள்ளுலகமும், வாழ்வின் ஓரங்கமாக ஆகிவிட்ட ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளும், நான் தொடர்ந்து வாழ்வதற்கான காரணமாகவும் வாழ்வின் வேர்கள் இற்றுவிடாமல் நீரூற்றிக்கொண்டேயும் இருக்கும் என் இரு மகன்களின் துணையும், இத்தனைக்கும் பிறகும் எனக்கு  அற்றுவிடாத சக மனிதர்கள் மீதுள்ள நம்பிக்கையும் தான். இனியொரு வருடத்தின் இறுதியில் இப்படி பதிவிடும் வாய்ப்பு எனக்களிக்கப்படுமோ என்னவோ தெரியவில்லை

எனக்கு எந்த புகாருமில்லை எதன் மீதும் யார் மீதும்  என்னை வெறுப்பவர்களுக்கும், நேசிக்கிறவர்களுக்கும் ( அப்படி யாரேனும் இருப்பின்) என்னிடம் படிப்பவர்களுக்கும் என்னை கடினப்பாடங்களாகப் படிப்பித்துக்கொண்டே இருப்பவர்களுக்கும், இன்னும் பாடங்கள் கற்றுத்தர வரிசையில் நின்று கொண்டிருபவர்களுக்கும்  சேர்த்து என்றும் மாறாத எனதன்பும் நன்றியும்  புத்தாண்டு வாழ்த்துக்களும்.

 

 

தாவரவியலும் தமிழர் பண்பாடும்

இன்று மார்கழி துவங்கிவிட்டது. பல வீடுகளில் எந்த மாற்றமும் இல்லையெனினும் இன்னும் மரபும் பழமையும் மிச்சமிருக்கும் சில கிராமத்து வீடுகளில் சாணப்பிள்ளையாரும் கோலமும் மரத்தடி பிள்ளையாருக்கு அதிகாலை நீராட்டுமாய் இருக்கத்தான் செய்கிறது. நல்ல வேளையாக நான் இவற்றையெல்லாம் பார்க்க கிராமத்தில் இருக்கிறேன்
சாணப்பிள்ளையாரும் அதில் மலர்களுமான இந்த வழமையில் தாவரவியல் பின்புலம் இருகிறது. அதிகாலையில் குடும்பத்தினர் கோவில்களுக்கு செல்லும் மாதமாகையாலும் அடுத்து தை பிறப்பதாலும் இந்த மாதத்தில்தான் முன்பு பரவலாக திருமணங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போழுது போல அப்போதெல்லம் matrimony . com ல் கொண்டாட்டமாய் திருமணங்கள் நிச்சயிக்கப்படவில்லை. அவையும் இலை மறை காய்மறையாகவே இருந்தகாலம் அது
வாசலில் சாணப்பிள்ளையாருக்கு அருகு வைத்திருந்தால் அந்த வீட்டில் கல்யாணத்திற்கு பிரம்மச்சாரி இளைஞர்கள் இருப்பார்கள், பூசணிப்பூ ,( அது ஒரு unisexual மலர் ) இருந்தால் கல்யாணவயதில் பெண்பிள்ளைகள் இருப்பார்கள், அருகும் பூசணிப்பூவும் சேர்ந்திருந்தால் கல்யாணத்திற்கு மகனும் மகளும் இருக்கிறார்கள், செம்பருத்தி சங்குப்பூ போன்றவை ( மகரந்தமும் சூலகமும் சேர்ந்திருக்கும் bisexual மலர்கள் இவை) இருப்பின் திருமணமான கணவனும் மனைவியுமாய்க் இருகிறார்கள் பெண்ணோ ஆணோ கல்யாண வயதில் அந்த வீட்டில் இல்லை என்று கொள்ளலாம். அதிகாலையில் வீடுகளைக்கடந்து கோவில்களுக்கு செல்பவர்கள் இவற்றிலிருந்து செய்திகளைத்தெரிந்து கொண்டு பின் பேசி முடிவு செய்தால் தையில் திருமணம் நடக்க ஏதுவாக இருக்கும்

தும்பைமலர்களும் அவ்வப்போது இருக்கும் தும்பை வைரஸ் தொற்றைத்தடுக்கும் குணமுள்ளது. பனிக்காலத்தில் அது போன்ற தொற்றுக்கள் பரவாமல் இவை தடுக்கும்
ஸ்டிக்கர் கோலமிடும் இந்த நவநாகரீககாலத்தில் இவற்றை தெரிந்துகொள்ளவாவது செய்யலாம்.
”மார்கழித்திருநாளில் மங்கையர் இளந்தோளில் கார்குழல் வடிவாக கண்ணன் வந்தான்”” என்னும் இந்த பாடலை நினைவு கூறுகிறேன் இந்த. அற்புதமான மாதத்தில்

 

வயிறும் வாழ்வும்,

கடந்த ஆகஸ்டில் பூசாகோ கல்லூரி நிலாமுற்றம் நிகழ்வில் ஜானகிலெனினின் ’’எனது கணவரும் ஏனைய விலங்குகளும் ‘’ புத்தகம் குறித்துப்பேசி பரிசாக அந்த கல்லூரியில் அளித்த புத்தகம் ச. தமிழ்செல்வன் அவர்களின் ‘’ ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்’’ அதை இன்று (12/12/17) முழுவதுமாய் வாசித்து முடித்தேன். அத்தனை நல்ல புத்தகம்.

நம் வீட்டு நிகழ்வுகளை நம் உடன்பிறந்த ஒருவர் பின்னாளில் நமக்கே கடிதமொன்றில் எழுதி அதை நாம் வாசிப்பது போல நெருக்கமான உணர்வினை அளித்தது. கூடவே மனதின் ஆழத்தில் உறங்கிக்கொண்டிருந்த சாப்பாட்டுடனான என் பல நினைவுகளையும் இவ்வாசிப்பு தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டது எனவே என் வயிறும் அது தொடர்பான இதுவரையிலான என் வாழ்வும் குறித்து எழுதுகிறேன்

உணவுடனான தொடர்பு என்பது என் வாழ்வின் இயங்கியலில்  பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.  சுவையாக சமைக்கும், சுவையறிந்து சாப்பிடும் ஒருத்தியாகவே நான் என் பதின்பருவத்திலிருந்து அறியப்பட்டிருக்கிறேன். அதற்கு முன்னரான என் பால்யகாலங்களில் நடந்த உணவு தொடர்பான பல நினைவுகள் இப்போது இப்புத்தகத்தால் தூசி தட்டி விடப்பட்டிருக்கிறது

நானும் அக்கா மித்ராவும் சிறுமிகளாய் இருக்கையில் பொள்ளாச்சி  வெங்கடேசா காலனியின் வாடகை வீட்டில் இருந்தோம், அப்பா அம்மா எப்போதாவது சினிமாவிற்கும் வெளி வேலைகளுக்கும் செல்ல வேண்டி இருந்தால் எங்கள் இருவரையும் வாசல் கதவைப்பூட்டி வெளியில் இருக்கச்சொல்லிவிட்டு இருவருக்குமான சாப்பாட்டையும்  குடிக்க தண்ணீரையும் வாசலில் வைத்துவிட்டு போய்விடுவார்கள் அனேகமாக இரவில் வீடு திரும்புவார்கள் அதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிற்து.

இரண்டு விவரமறியாச்சிறுமிகளின் பாதுகாப்பை விடவா வீட்டின் உள்ளிருப்பவை அரியதாக இருந்திருக்கும்? ஹாசினியை வன்புணர்ந்து நெருப்பிட்டு கொளுத்தியவனைப்போல பக்கத்துவீட்டில் இளைஞன் ஒருவனுமில்லாமல் போனது எங்களின் அதிர்ஷ்டமே

களங்கமில்லா அறியாமையுடன் எப்போதும் ஒரு தெய்வம் தொடர்ந்து வந்து காக்கும்  எனசொல்லுவார்களல்லவா? ஹாசினியை எந்தக்காரணத்தினாலோ காக்கத்தவறிய தெய்வம் எங்களிருவரையும் ஏனோ இன்றுவரையிலும்  கைவிட்டுவிடாமல் காக்கிறது

திண்பண்டங்களோ நொறுக்குத்தீனிகளோ  அறிந்திராத எங்களுக்கு அப்பா அடிக்கடி வாங்கும் வாழைப்பழக்கடைக்காரர் எங்களுக்கும் கையில்  இனாமாக தரும் இரண்டு வாழைப்பழங்கள் அளித்த மகிழ்ச்சியை எப்படி பதிவு செய்வது? மகிழ்ச்சி என்பதை விட son preference   மிக வலுவாக இருந்த எங்கள் வீட்டில் என் தம்பியின் பிறப்பிற்கு முன்பு நாங்கள் வேண்டாதவர்களாகவும், அவன் பிறந்த பின்னர் நாங்கள் தேவையற்றவர்களாகவும் இருந்த காலகட்டத்தில் இந்த இனாமாக அவ்வப்போது  கிடைத்த  வாழைப்பழங்கள்  எங்களுக்கான  ஒரு அங்கீகாரமாகவும் இருந்தது

ஏச்சுக்களும் வசவுகளுமாய்க் கழிந்த  பால்யவாழ்வில் எங்களையும் ஒரு பொருட்டாக  மதித்துத் தரப்பட்ட இந்த வாழைப்பழங்களும் சின்ன தம்ளருடன் காத்திருக்கும் எங்களுக்கு பால்காரர் ஊற்றும், கொஞ்சம் கொசுறுப்பாலும் அளித்தது பெரும் நிறைவைத்தான்

மார்கழி மாத விடியல்கள் மிக அருகிலிருந்த அய்யப்பன் கோவிலின் வெண்பொங்கல் வாசத்துடனே விடியும். குளிரைப்பொருட்படுத்தாது குளித்து ஈரத்தலையை காயவைக்காமலும் ஓட்டமாய் ஓடிப்போய் வரிசையில் நின்று வாங்கி சுடச்சுட பொங்கல்  சாப்பிட்டதும், வருடா வருடம் மாலை அணிந்து  எங்கிருந்தோ அங்கு வரும் ஒரு ஊமைச்சாமி, வீட்டு வாசலில் நின்ற செம்பருத்தியின் குருதி நிறப்பூக்களை கோவிலுக்கு போகையில் பறித்துக்கொண்டுபோவதும், என்ன காரணத்தாலோ அவரின் பிரசாதப்பொங்கலைத் தவறாமல் எங்களிரண்டுபேருக்குமாய் திரும்பி வருகையில் தினசரி தந்துவிட்டுப்போவதும் இப்போதும் நினைவிலிருக்கிறது. எங்களின் நிராதரவான நிலை அவரின் மனதிற்கும் அய்யப்பனுக்கும் தெரிந்திருக்குமோ என்னவோ!

வயிறு நிறைய சாப்பிடுவதொன்றே பெருங்கனவாயிருந்த காலங்கள் அவை

எதிர்வரிசை வீடுகளில் ஒன்றிலிருந்த கிருத்துவ குடும்பத்தைச்சேர்ந்த நிம்மி என்றழைக்கப்பட்ட  நிர்மலா அறிமுகப்படுத்திய ஒரு சுவையான தின் பண்டம்  நறுக்கிய தக்காளித்துண்டுகளில் சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது.

எதன் காரணத்தாலோ எப்போதுமாய் வீட்டின் சந்தில் நிரந்தரமாய் நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் எடுத்துக்கொண்டு போகும் தள்ளு வண்டியொன்றின் அருகில் நாங்கள் மூவருமாய் அமரந்தபடி துளித்துளியாய் அந்த சர்க்கரை தொட்ட தக்காளித்துண்டுகளைச் சாப்பிட்டிருக்கிறோம் பல நாட்கள்.

 

அம்மா ஹார்லிக்ஸ் கண்ணாடிபாட்டிலில் தயிரை நீரூற்றிப்பெருக்கி குலுக்கி குலுக்கி வெண்ணை எடுப்பதும் நினைவில் இருக்கிறது.

திரிஸ்டவ்வின் திரிகளை மாற்றுவது பின்னர் வந்த அடிபம்ப் ஸ்டவ்வில் கைவலிக்க அடித்தது இன்று ஆட்டோஇக்னிஷன் ஸ்விட்ச் இருக்கும் அடுப்புகளும் , குக்கிங் ரேஞ்சுகளும்,மைக்ரோ வேவ் அடுப்புகளுமாய் சமையலறை,  மாறி வரும் வாழ்வுமுறைக்கேற்ப மாறி இருக்கிறது என்றாலும்  சமைப்பது பெண்களின் பணி என்பது மட்டும் மாறவில்லை. என்ன ஒரு ஆறுதலென்றால் முன்புபோல  சாப்பிடுவதும் அடுப்படியில் என்றில்லாமல் பெண்கள் கூடத்திற்கு வந்து சாப்பிட அனுமதிக்கபட்டிருக்கிறார்கள். பாலங்கள் எனும் சிவசங்கரியின் நாவலில் அந்த காலத்தில் பெண்கள்  உள்கட்டில் சாப்பிடுகையில் ரசத்தில் அப்பளத்தை நனைத்து வெளியில் இருப்பவர்களுக்கு சத்தம் கேட்காமல் சாப்பிடுவது குறித்துச்சொல்லி இருப்பார். முன்னைக்கு இபோது பரவாயில்லை அல்லவா?

எல்லா  பள்ளி விடுமுறைகளிலும் நாங்கள் செல்லும் ( கொண்டு விடப்படும்) ஊட்டி லவ்டேலின் லாரன்ஸ் பள்ளியிலிருந்த அத்தை வீட்டின் நினைவுகளோ அபூர்வம்

 

அந்த குளிரும் அங்கிருந்த  சர்வதேச உறைவிடப்பள்ளியின் உணவுகளும் பசுமையாக நினைவிலிருக்கிறது அங்குதான் முதன்முதலாக கனத்த வெண்ணிற பீங்கான் தட்டுக்களில் உணவையும் பீங்கான் கோப்பைகளில் சூடாக தேனீரும் உடன் வாட்டிய ரொட்டித்துண்டுகளையும் சாப்பிட்டது.

அத்தை மாமா இருவரும் அங்கு ஆசிரியர் குடியிருப்பில் வசித்ததால் உறவினர்களுக்கு பள்ளியின் மெஸ்ஸிலிருந்தே உணவளிக்கப்பட்டது. மதிய உணவை ஒரு பெரிய கேரியரில் வாங்கி வர மெஸ்ஸிற்கு சென்று அங்கு முட்டையை பூரியைப்போல எண்ணைச்சட்டியில் உடைத்து ஊற்றி  பொறித்து எடுப்பதை வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருப்போம்

அனுதினமும் உணவுடன் தரப்படும் பழக்கூழ், காலையில் கட்டாயமாய் பச்சைமுட்டை  அடித்து ஊற்றப்பட்ட பெரிய தம்ளர் பால், 10 பைசாவிற்கு அங்கிருக்கும் கடையில் கிடைக்கும் வாய்கொள்ளாத அளவில் பெரிதான, பல வசீகர வண்ணங்களில் இருக்கும் கோழிமுட்டை மிட்டாய்,  மளிகைக்கடைகளில், நாளிதளில் வெட்டி எடுத்துத்தரப்படும் தேங்காய் எண்ணைக்கட்டிகளும்,, ஆலங்கட்டி மழை பொழிந்த (அல்லது விழுந்த) ஒரு நாளில் ஓடி ஓடி நாங்கள் இருவருமாய் சேகரித்த நீர்க்கட்டிகளை எடுத்து அத்தை தயாரித்துக்கொடுத்த ஒரு வாசனையான ஆலங்கட்டித் தேனிரும், அப்போதுதான் அறிமுகமாயிருந்த  கோன் ஐஸ் கிரீம் கடையில் வீட்டில் இட்லி மாவு வைத்திருக்கப்பயன்படுத்தும்  பெரிய பாத்திரத்தில் ஐஸ்கிரீமும் தனியே 10-15 பிஸ்கட் கோன்களுமாய்  வாங்கி வந்து இஷ்டம் போல் அவற்றைச் சாப்பிட்டது, வீட்டின் முன்பு எப்போதும் இருக்கும் இளம் பனி  சூடியிருக்கும் புற்கள் நிறைந்திருக்கும் வெளியும் அவை எங்களின் சின்னஞ்சிறு கால்களில் எப்போதுமாய் ஏற்படுத்திக்கொண்டே இருந்த  ஈரமும் அதன் குளிர்ச்சியும், வீட்டின் முன்பிலிருந்த மஞ்சள் மலர்கள் நிறைந்திருக்கும்  பெயர் தெரியா பெருமரமொன்றும்  அதன் அடியில் அமர்ந்து பள்ளி வளாகத்தில் எப்போதும் நடந்துகொண்டிருக்கும் படப்பிடிப்புகளில்  கமலையும் ஸ்ரீதேவியையும் தர்மேந்திரா ஹேமாமாலினி மற்றும் அமிதாப்பச்சனையும் வேடிக்கை பார்த்தவாறு பொழுதைக்கழித்த நாட்களும் இப்போதுபோல பசுமையாய் வாசமாய்  குளிர்ச்சியாய் நினைவிலிருக்கிறது. நகர நாகரீகம் அறியா கிராமத்துச்சிறுமிகள் என்பதால் பலவித கெடுபிடிகளுடன் நாங்கள் அங்கு நடத்தப்பட்டிருந்தாலும் வயிறார உணவுண்டோம் என்பதை மறுப்பதற்கில்லை

வீட்டின் நேர் எதிரே இருந்த அம்மாபாதுகாவலராக பணியாற்றிய  மாணவிகளுக்கான விடுதியில் வாரம் ஒருநாள் அளிக்கப்படும் கஞ்சியும் கொள்ளுச்சட்னியும்  என்னை எப்போதும்  ஈர்க்கும். அவற்றை அவர்களுடன் அமர்ந்து சாப்பிடாத  நாட்கள இல்லை எனலாம்

பல காரணங்களால் நாங்களிருவரும் ஆத்தாவின் வீடிருக்கும் வேட்டைகாரன் புதூருக்கு 1 வருடம் அனுப்பப்பட்டபோது வறுமை இருந்தும் வயிறு நிறைய உணவும் மகிழ்ச்சியும் குதூகாலமும் இருந்தது எங்களுக்கு அங்கு 3 ஆம் வகுப்பு படித்த அந்த பள்ளியும் வாசலில் விற்றுக்கொண்டிருக்கும் இலந்தை வடை, மரச்சீனிக்கிழங்கு, நெல்லிக்காய் மாங்காய்பத்தை ஆகியவை 1 பைசா 2 பைசாவுக்கெல்லாம் கிடைத்தது. காடுமேடெல்லாம் சுற்றி புத்தகங்களுக்கு வெளியேயான வாழ்வொன்றினைக் கண்டுகொண்டதும்அங்குதான்

வீட்டின் முன்பிருக்கும் சீனிப்புளியங்காய் மரத்தின் மீதேறி சித்தப்பா உலுக்கியதும் பொல பொலவென உதிரும்  வெள்ளையும் இளஞ்சிவப்புமான சதையுடன் இருக்கும் கோணல் புளியங்காய்களும் அவற்றின்  பளபளக்கும் கரியவிதைகளை காயமின்றி உரித்தால் நினைத்தது நிறைவேறும் என்னும்   குழந்தைகளின் உலகிற்கான நம்பிக்கையொன்றும், நாங்கள் அப்படி கவனமாக உரித்த பலநூறு விதைகளும் பசுமையாய் மனதில் இருக்கின்றது.  சிறு வயதின் அந்த சுவையின் நீட்சியோ என்னவோ இப்போழுதும் அந்த காய்கள் அத்தனை பிரியம்

திருமணம் நிச்சயமாகி 2 மாதங்கள் கழித்து முகூர்த்தத்திற்கு 10 நாட்கள் முன்பாகத்தான்  வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த  கணவர் என்னை முதன் முதலில் பார்க்க வந்தார். அன்றே இரு வீட்டாரின் அனுமதியுடனும் உடன் பயணிக்க ஒரு பெரும் பட்டாளத்துடனும் கோவைக்கு காரில் அழைத்துச்சென்று  ஆர் எஸ் புரம் எனும் பெரும் பகட்டான ஒரு வீதியில் காரை நிறுத்தி எனக்கு என்ன வேண்டுமென ஆர்வமுடன் கேட்டார். அவர் மனதில் என் முனைவர் பட்டமும் என் ஆய்வுக்கட்டுரைகளும் நான் பார்த்துக்கொண்டிருந்த பேராசிரியைப்பணியுமாய் என்னைக்குறித்த உத்தேசமான  ஒரு தோற்றம் இருந்திருக்கும் போல

ஆனால் எனக்குள்  எப்பொதும் இருப்பது ஒரு கிராமத்துச்சிறுமியே அல்லவா?

நான் உற்சாகமாய் ’’அதோ தள்ளு வண்டியில் விற்கும் சீனிப்புளியங்காய்’’  என்றதும் அவர் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை இன்னும்  நினைவு கூறுகிறேன். உறைந்த முகத்துடன் கால் கிலோ வாங்கிவந்து நான் திரும்பி வரும் வழியெல்லாம் அதை வாயிலிட்டு அரைத்துக்கொண்டே வந்ததை இறுகிய முகத்துடன் கவனிக்காதது போல கவனித்துக்கொண்டு வந்தார். செல்லுமிடங்கள்  மாற்றுவதா சுபாவம்? மேலும் என் கிராமமும் நானறிந்த இயற்கை உணவுகளின் சுவையும் என் நாவில் மட்டுமல்ல ஜீன்களிலும் நிறைந்திருக்கையில் நான் அங்கிருக்கும் தனிஷ்க் கடையில் வைர நகையா கேட்டிருக்க முடியும்? இன்னும் நான் அப்படியே தான் இருக்கிறேன், இருப்பேன்.

மேலும் கனவுகளையும் கற்பனைகளையும் ஆசைகளையும் காலடியில் மிச்சமின்றி  தேய்த்து நசுக்கி அழிக்கும் நிகழ்வல்லவா கல்யாணமென்பது?அப்படி தகர்ந்திருக்கும் சரண் அப்பாவின் என்மீதான நம்பிகை ஒன்று (அதன் பின்னர் பலப்பல)

என்அப்பாவின் அப்பாவான அப்பாருக்கு அதே ஊரில் இருந்த விறகுக்கடைப் பெண்ணுடன் இருந்த தொடர்பு குறித்து எனக்கு இப்போதுதான் தெரியும் என்றாலும்  அந்த வயதில் ஒருமுறை அவருடன் நானும்  அந்த விறகுக்கடைக்குச்சென்று எனக்களிக்கப்பட்ட வெல்லத்தை சுவைத்தபடி வீடு திரும்பி ,எப்போதும் சாந்த சொரூபியாய் இருக்கும் ஆத்தாவிடம்  இனிமே போவியா போவியா என்று குச்சியில் அடிவாங்கியதும் அடித்துக்கொண்டிருந்த ஆத்தா அப்பொது அழுதுகொண்டிருந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த உண்மை கசப்பதால்  இன்றும் வெல்லம் எனக்கு இனிப்பதில்லை,. அந்த  அடியெல்லாம்  அப்பாருக்கானது என தாமதமாகத் தெரியவந்தது. யுகம் யுகமாக தொடரும் பெண்களின் துயருக்கு என் ஆத்தாவும் விதிவிலக்கல்ல.

ஆத்தா கைசாலையில்  சமைக்கும் அடுப்பில் கோட்டு அடுப்பென்று அழைக்கப்படும் இரண்டாம் அடுப்பில் தீச்சூட்டில் எப்போதும் இருக்கும் மண் சட்டியில் மீந்த குழம்பு ரசம் காய் எல்லாம் எப்போதும் சுண்டிக்கொண்டே இருக்கும் அது கலவையான மணமும் சுவையுமாய் இருக்கும். 10 பைசாவிற்கு ஒரு காகிதக்கூம்பு நிறைய பொட்டுக்கடலையும் நாட்டுச்சர்க்கரையும் தருவார்கள் அது ஒரு நொறுக்குத்தீனி எங்களுக்கெல்லாம் அப்போது. வேட்டைக்காரன் புதூரில் இருந்தது ஒரே வருடமென்றாலும் அந்த நினைவுகள் ஒரு ஜென்மத்திற்கானது

மறுபடியும் 4ஆம் வகுப்பிற்கு போகையில் குட்டிதம்பி பிறந்து வாழ்வு அப்பா அம்மாவிற்கு பூரணமாகியிருந்ததால் நாங்களும் 1 வருடம் அம்மா பணி மாறுதலின் பொருட்டு போன தாராபுரம் சென்றோம்

அங்கு  அம்மா வேலைபார்த்த விடுதியிலெயே தங்கி இருந்தோம் விடுதிக்கு பின்னால் கண்ணுக்கெட்டிய தூரம்  வரையிலும் நெல்வயல்கள் நிறைந்திருக்கும், மார்கழி தை மாசி மாதங்களில் பால்பிடித்திருக்கும் கதிர்களை உண்ண வரும் அரிக்குருவி என்னும் ஒருவகை சிறு கருங்குருவிகளை கண்ணுக்குத்தெரியாத மெல்லிய வலைகளை நெற்பயிருக்கு மேல் பரப்பி அவற்றின் கால்கள் வலையில்  மாட்டியதும் பிடித்து தலைகீழாக கட்டி விற்பனைக்கு கொண்டுவருவார்கள்.

பள்ளியிலிருந்து திரும்பும் பல மாலைகளில் மாடிப்படிக்கடியில் சிறு  மணிக்கண்களை அச்சத்தில்  உருட்டியபடி  குவியலாக கால்கள் சேர்த்துக்கட்டப்பட்டிருக்கும் 10 ,15 குருவிகள் பரிதாபமாகக் கழுத்துத்திருகி கொல்லப்படக்காத்திருக்கும்

இரவுகளிலிந்த அரிக்குருவிக்குழம்பிற்கெனவே வேட்டைக்காரன்புதூரிலிருந்து  அப்பாரும் சித்தப்பாவும் வருவதும் சிவப்பு நிற கற்கள் பதிக்கபட்ட மொட்டை மாடியில் குண்டுவிளக்கின் வெளிச்சத்தில் இரவுணவில் அந்த குருவிகளில் செய்யபட்ட குழம்பு பரிமாறப்பட்டதும் சாப்பிடுவதற்கு முன்பாக சித்தப்பா மாடியிலிருக்கும் குழாயில் தன் பாதஙகளை   பலமுறை தேய்த்துக்கழுவுவதும் இன்னும் நினைவிலிருக்கிறது

அருகில் ஓடிக்கொண்டிருக்கும் பெரிய ஆற்றிலிருந்து அயிரை மீன் குஞ்சுகளை  உயிருடன் ஒரு பெண் விற்றுவிட்டு போனதும் விடுதியின் காவலர் பழனிச்சாமி  துள்ளிக்கொண்டு உயிருடன் இருக்கும் அவற்றை சிறு மணற் குன்றில்  நுழைத்து கொல்வதை எந்த  குற்ற உணர்வுமின்றி  நாங்களிருவரும் வேடிக்கை பார்த்ததும் கூட நினைவிலிருகிறது

இதற்கெல்லாம் பிழையீடாகத்தான் பலவருடங்களுக்கு முன்பே நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் என்றும் சொல்லலாம்

5 ஆம் வகுப்பிற்கு மீண்டும் பொள்ளாச்சி, மீண்டும் அதே வாழ்வு இப்போது என்ன மாற்றமிருந்தது என்றால், எங்களால் ஆன பிரயோஜனத்தை அப்பா அம்மா கண்டுபிடித்துக்கொண்டார்கள் என்பதே,  மிகப்பெரிய ஆட்டுரலில் எங்களை மாவாட்டச்சொல்லலாம் , கனத்த இரும்பு வாளியில் நீர் நிரப்பி அக்காவை  வீடு துடைக்கச்சொல்லலாம், என்னை சமையல் செய்யசொல்லலாமென்றெல்லாம் அவர்கள் கண்டுகொண்டிருந்தமையால் வாழ்வின் போக்கு கொஞ்சம மாறி இருந்தது

நான் கரண்டியை கையில் பிடித்துக்கொண்டேன். அக்கா வீட்டு பராமரிப்பு. இதற்கிடையில் படிக்கவும் செய்தோம். சமையலில் பல பாடங்களை அப்போதிலிருந்து நான் கற்றுக்கொண்டிருந்தேன் எனினும் பல பாடங்கள் மிகக் கடினமாகக்கற்றுத்தரப்பட்டன  என்றுதான் தோன்றுகிறது

ஒரு முறை அம்மாவின் சினேகிதியும் தாராபுரம் சட்டமன்ற அவை உறுப்பினருமான   ஆனஒரு அம்மாளின் குடும்பம் வந்திருக்கும் பொழுது மதிய உணவு முழுக்கத்  தயார் செய்யும் பொறுப்பு. 7 ஆம் வகுப்பில் இருக்கும் சிறுமியான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. சமையல் எல்லாம் முடித்து  சமையலறையையும் சுத்தம் செய்து தவறுதலாக அப்பளம் காய்ச்சிய சூடான எண்ணையை ஹார்லிக்ஸ்  கண்ணாடி பாட்டிலில் அப்போதே ஊற்றி அது அடிபிளந்து எண்ணை முழுதும் வீணாகி நல்ல அடி கிடைத்தது.இபோது சூடான எண்ணை விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

அந்த MLA  மிக வித்தியாசமானவர் பல நூறு ஏக்கரில் அவருக்கு வயல்களும் தோப்பும் இருந்தது அவர் எனக்கு தெரிந்து 3 முறை அந்த பதவியில் இருந்திருந்தார்,ஆயினும் மிகச்சிக்கனம்

நாங்கள் அனைவரும் கோதுமை உப்புமா சாப்பிட்ட ஒரு நாளில் தட்டுக்களிலிருந்து பச்சைமிளகாயை தனியே எடுத்துக்கொண்டுபோய் அதிலிருந்து சட்டினி அரைத்துவிட்டு அதற்கு விளக்கமாக ‘’ அதில் இன்னும் காரம் இருக்குன்னுதானே சாப்பிடாம தூக்கி போடறோம்’’ என்றார்

எங்களிருவரையும் அப்பா அம்மா இல்லாத பொழுது எங்கள்  வறுமையைக்காரணம் காட்டி உதாசீனப்படுத்துவதும் மற்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாக நடத்துவதும் அடிக்கடி நடக்கும். அத்தனை கஞ்சத்தனம் இருக்கும் அவரும் அவர் பெண்ணும் ஒரு முறை என்னையும் மித்ராவையும் அவர்களுடன் சென்னைக்குவேண்டி விரும்பி  வலுக்கட்டயாமாக அழைத்துப்போனார்கள் ,ஆச்சர்யமாக இருந்தது அந்த முதல் நெடும்பயணம்

சென்னை அண்ணா நகரிலிருந்த அவர்களின்  மிகப்பெரிய பங்களாவில் இறங்கிய அந்தநாளிலேயே  அறியாச்சிறுமிகளான எங்களிருவரையும் முழு வீட்டையும் நீரூற்றிகழுவிவிட சொன்னதும் மயங்கிவிழாத குறையாக அத்தனையும்  இரவு வரை செய்து முடித்த பின்னர்  அவர்கள் எப்போதோ வீடு பூட்டிவிட்டு போகும் போது குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டுப்போன  கெட்டுப்போயிருந்த வெண்டைக்காய் சாம்பாரையும் நீரில் நனைத்து வைக்கபட்டிருந்த   கொட்டை அரிசிச்சோற்றையும் சூடு கூட பண்ணாமல் அப்படியே சாப்பிடகொடுத்ததும் வெண்டைக்காய்  ஊசிப்போய் நூல்நூலாய் வந்ததும் நினைவிலிருகிறது.

எதற்கு எங்களை பொள்ளாச்சியிலிருந்து அழைத்துபோன்னர்கள் என்றும் அதன் பிறகே தெரிய வந்தது

அந்தக்குடும்பத்தின்  ஒரே ஆண் வாரிசான அப்போதே அண்ணா பல்கழையில் தங்கப்பதக்கம் வாங்கிய பொறியியல் பட்டதாரியும் மிக நல்ல மனதுள்ளவருமான   ——-அண்ணன், அவரின் திருமண நிச்சயத்திற்காக புறப்பட்டு வரும் வழியில் ரயிலில் அடிபட்டு 4 நாட்கள் கழித்தே தகவல் வந்தது,  குஜராத் அருகிலிருக்கும் ஒரு  மிகச்சிறிய மருத்துவமனையில் உடல் அழுகி வீங்கி அடையாளம் தெரியாமலிருந்த  அவரின் சடலத்தை அங்கேயே எரியூட்டியபின்னர் மனம் பேதலித்த அவரின் அப்பா   காணாமல் போய் இன்று வரை  வீடு திரும்பவில்லை, அந்த MLA அம்மாளும் இப்போது உயிருடன்இல்லை அவரின் ஒரே மகள் திருமணமின்றி  முக பக்கவாதம் வந்ததால் பேச்சுமிழந்து மாபெரும் சொத்தை பூதம் காப்பதுபோல காத்துக்கொண்டும் ஒரு தத்துப்பிளையை வளர்த்துக்கொண்டுமிருக்கிறார்

வாழ்வெனும் இந்த விளையாட்டில் கண்ணுக்குத்தெரியாத ஆட்டப்பங்காளியாக ஊழ் இருந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

அந்த அண்ணன் ஆவிஅமுதாவின் வாயிலிருந்துஆண்குரலில் தன்னை ஒரு நண்பன் ரயிலிலிருந்து தள்ளி விட்டதாக சொன்னதெல்லாம் கிளைக்கதை. பசியுடன் இரண்டு சிறுமிகள் பங்களாவின் அறைகளைசுத்தம் செய்த  அவ்விரவின் நினைவு எப்போது சென்னை சென்றாலும் தவிர்க்க இயலாமல் வந்துவிடுகின்றது

இன்றுவரை தோளுக்கு மேல் வளர்ந்த ஆண்பிள்ளைகளானபின்னரும் கூட என் இரு மகன்களையும்  மித்ராவைத்தவிர யாருடனும்  எத்தனை சர்க்கரையாக கூப்பிட்டாலும் எதன்பொருட்டும் நான் அனுப்பியதே இல்லை இது உளவியல் சிக்கலென்றாலும் சரி என்னால் அனுப்ப முடிவதே இல்லை,

பக்கத்துவீட்டு பிராமணப் பெண் கமலா தினசரி உணவு மேசையில் இணைக்கபட்டிருந்த  சிறு இயந்திரத்தில் காபிக்கொட்டையை வறுத்தரைத்து தினம் வாசனையாக காபி போடுவது, அவரின் மகனுக்கு அடிக்கடி தயிரில் மாம்பழச்சதையை பிசைந்து ஊட்டுவது, பசியுடன் பூட்டிய கதவிற்கு முன்னால் அமர்ந்து நாங்கள் காத்திருக்கும்  பல மாலைகளில் எங்களுடன் விளையாட ஓடிவரும் அவனிடமிருந்து வீசும் பூரிக்கிழங்கு வாசனை எல்லாமெல்லாம் இன்னும் நினைவிலிருக்கிறது

கல்லூரி வாழ்விலும் கல்யாணம் ஆகிப்போகும் வரையிலும் சமையல் என் பொறுப்பிலேயேதான் இருந்தது எனினும் வயிராற உண்ட நினைவில்லை ஒருபோதும்

கல்லுரியில் இளங்கலை தாவரவியல் படிக்கையில் நாட்டுநலப்பணித்திட்டத்தில்  ஒரு பகுதியாக ஆனைமலை காந்திஆசிரம கட்டிடப்பணிக்கு மாணவர்கள்  திருமதி சுசிலா என்னும் அன்னைமை நிறைந்த விலங்கியல் துறை ஆசிரியருடன் அனுப்பப்பட்டோம். அப்படிச் சென்றிருந்த  ஒரு முதல் நாளில் கூடி வேலை செய்ததாலோஅன்றி அதுபோல கடுமையான உழைப்புகளுக்கு பழகியதாலோ சிரமிமின்றி செங்கல் சுமக்கும் வேலைகளை முடித்த எங்களுக்கு ஒரு  ஓட்டு வீட்டின்  திண்ணையில் வாழையிலையில் முழுச்சாப்பாடு போட்டார்கள்.

என் வாழ்வில் நான் உண்ட முதல் நிறைவான வடைபாயசத்துடனான சாப்பாடு அதுவே.  பல வருடங்களுக்கு முன்பாக பணி ஓய்வு பெற்றிருந்த   சுசீலா அவர்களிடம் சமீபத்தில் அவரைப்பார்த்தபோது  இதைச்சொன்னதும் அவர் அறியாமல் கண் கலங்கி விட்டார்கள்

முதுகலை படிக்க பாரதியார் பல்கலைக்கு சென்றபின்னர் விடுதிச்சாப்பாடு பெரும் பிரமிப்பு அளித்தது. அண்டாக்களில் நிறைந்திருக்கும் உணவு வகைகளும் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து போட்டுக்கொள்ளலாமென்னும் சுதந்திரமும் என்னைப்போன்ற கிராமத்திலிருந்து  வந்த பாரபட்சமாய் பாவித்து வளர்க்கப்பட்ட  வீட்டைச்சேர்ந்த பெண்ணொருத்திக்கு எத்தனை கிளர்ச்சியைதந்திருக்கும் ?

வாரம் ஒரு நாள் எங்களுக்கு மதிய உண்வின் போது ஒரே ஒரு மசாலா திணித்துப் பொறிக்கப்பட்ட கத்தரிக்காய் ஒன்றே ஒன்று தருவார்கள் அது எனக்கு மிகப்பிடிக்கும் என்பதால் என் அறைத்தோழி சசி அந்த இரண்டுவருடமும் அவளுடையதை எனக்கே எனக்கென தந்துவிடுவாள் அதை அன்பென்பதா, பிரியமென்பதா அன்றி தனக்கில்லாவிடினும் பிறருக்கு அளிக்கும் அன்னைமை  என்பதா?

பின்னர் நல்ல உணவு நல்ல  இயற்கையான சூழல், நூலகப்பயன்பாடு, அது திறந்த எண்ணற வாயில்கள்  என வாழ்வு மிகப் பெரிய அளவில் மாறியதென்றே  சொல்லலாம்

அங்கிருக்கையில் பரிச்சயமான நண்பர் ஒருவர் அய்யங்கார் வீட்டுப்பையன். அவர் சாதத்தை அமுது, ரசத்தை சாத்தமுது , பொரியலை கறியமுதென்றெலாம்  சொல்வது வேடிக்கையாக இருக்கும். சிரித்தால் புண்பட்டுப்போவாரென்பதால்  சிரமப்பட்டு அடக்கிக்கொள்வேன்

முனைவர் பட்டத்திற்கென சென்ற அவினாசிலிங்கம் மனையியல்  பல்கலையில் உணவு பெரும் கொண்டாட்டமாயிருக்கும்

ஆராய்ச்சி மாணவிகளும் ஆசிரியர்களும் ஒன்றாக உணவருந்தலாம். சாப்பிடுபவர்கள் தரையிலும் சிறு பீடம் போன்ற மேசையில் உணவுமாய் இருக்கும். கால் மடித்து சம்மணமிட்டு தினசரி நிறைய காய்கறி பழங்கள் கீரை இரவு தவறாமல் பால் குறைந்த உணவுக்கட்டணம், அங்கிருக்கும் போதுதான்  என் உடல் நல்ல சதை பிடித்தது

ஆய்வுக்கட்டுரை ஒன்று சமர்ப்பிக்க பெங்களூருவிற்கு முதன் முறையாக சென்றிருந்த போது        எதேச்சையாக அந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களின் விமானச்சீட்டுகளுக்கான பணத்தை திரும்பத் தரும் பொறுப்பு எனக்கு தரப்பட்டது சுமார் 6 லட்சம் தொகையை எந்த சிக்கலுமின்றி 2 மணி நேரத்தில் கொடுத்து முடித்ததை கேள்விப்பட்ட அப்போதைய கர்நாடக முதல்வரும் அந்த உணவுப்பாதுகாப்புக் கருத்தரங்கின் சிறப்பு விருந்தாளாருமான  திரு. வீரப்ப மொய்லி அவர்கள் என்னையும் என் தோழியையும் இரவு  நடைபெற இருந்த விருந்திற்கு அழைத்திருந்தார். அதுவும் ஒரு மறக்க முடியா இரவுணவு

அரசியல் விருந்தென்றால்  என்னவென்று அப்போதுதான் அறிந்து கொண்டோம், லால் பாக் பூங்காவில் அமைக்கப்பட்ட விருந்துத்திடலில் நாங்கள்சாப்பிடாமல் விட்டுவந்த உணவு வகைகளே பல நூறு இருக்கும். உண்மையில் அது வெறும் விருந்தல்ல உண்டாட்டு

அங்கு சந்தித்த ஜெர்மனியிலிருந்து வந்திருந்த சுப்பாராவ் அப்போதிலிருந்து இன்று வரை  நண்பரானதும் அவரின் ஹைதராபாத் வீட்டில் அவர் மனைவி சமைத்து மொட்டை மாடியில் சாப்பிட்ட இரவு உணவும் அப்போது சுவைத்த காரசாரமான கொங்குராச்சட்டினியும்  நினைக்கையிலேயே நாக்கை சுறு சுறுப்பாக்கிவிடும்

ஜெர்மனியின் ரால்ஃப் வருடா வருடம்வருவதும் அவருடன் இணைந்து  சிறு தெய்வங்கள் பற்றிய குறும்படமொன்றினைத்தயாரிக்கும் பொருட்டு கிராமம் கிராமமாக அலைந்து பல சிறிய கடைகளில் உணவுண்டதும், ஒரு இரவில் தோழி பிரியாவின் வீட்டில் தங்கி இருக்கையில் ரால்ஃப் ½ மணிக்கொருமுறை மாடியிலிருந்து கீழிறங்கிச்சென்று தங்கநிறத்தில் தயாரித்துக்கொண்டுவந்து தந்த தேனும் எலுமிச்சையுமிட்ட தெய்வங்களுக்கு படைக்கும் தரத்துடனிருந்த  தேனீரும் அன்று இரவெல்லாம்  உறக்கமின்றி பேசிக்கொண்டிருந்ததும் மறக்க இயலா  இனிய நினைவுகளில் ஒன்று

முனைவர் பட்டத்திற்கு பின்னரும் வீடு திரும்பி சமையலை தொடர்ந்தேன், பின் திருமணம், வளைகுடா நாட்டிலிருக்கும் கணவருடன் செல்ல கடவுச்சீட்டு வாங்குவதில் ஏதோ பிரச்சனையாக இருந்ததால் அப்போது லவ்டேல் அத்தை வேளச்சேரியில் இருக்கும் ஸ்டாலின் அவர்களின் மனைவி தன் தோழியானதால் அவரிடம் சொல்ல என்னையும் கூட்டிச்சென்றிருந்தார்கள்  அன்று திருமதி துர்கா அவர்கள் சிறு வெள்ளித்தம்ளரில் அளித்த காபியைப்போல வேறெங்கும் இது வரை குடித்ததே இல்லை அப்படியான சுவை அதில்.

கணவரின் வீடான ஈரோடில் சாப்பிட அமர்கையில் ஒரு சிறு கிண்ணத்தில் நீர் நிரப்பி வைத்துக்கொண்டு அன்னக்கரண்டியை காயப்போடாமல்  அவ்வப்போது அதில் போட்டு வைக்கும் நூதன  வழக்கத்தை என் மாமியாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஈரோட்டில் புதுமணப்பெண்ணாக குலதெய்வக்கோயிலுக்கு பொங்கல் வைக்கசென்றிருக்கையில் என்னைத்தவிர அனைவரும் பதற்றமாகவே இருந்தார்கள்.  பின்னர் வைத்த பொங்கல் வடக்கில் பொங்கி வழிந்த பின்னரே அனைவரின் முகமும் இயல்பானது . முதல் பொங்கல் வடக்கில் விழுந்தால் வந்திருக்கும் பெண்ணால் வரவென்றும் தெற்கில் விழுந்தால் செலவென்றும் நிலவி வரும் நம்பிக்கையை நல்லவேளையாக என்னிடத்தில் முன்னரே சொல்லவில்லை என்று நினத்துக்கொண்டேன்

அந்த குழைந்த பச்சர்சிப்பொங்கல் சாப்பாட்டிற்கு கோவிலில் இவரின் அண்ணி செய்து கொடுத்த ஈரோட்டின் பிரபல பச்சைப்புளி ரசம் அத்தனை சரியாக இணைசேர்ந்திருந்தது. நான் சாப்பிட்டதிலேயெ ஆகச்சிறந்த ரசம் அதுதான். இப்படி உணவு சார்ந்த நம்பிக்கைகள், உணவு தரும் நம்பிக்கைகள் பற்றியெல்லாம் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலப்பல நம்பிகைகள் இப்படி இருக்குமல்லவா ?

என் அப்பா தயிரையும் எண்ணையையும் சேர்ந்து வைத்தால் கடிந்துகொள்ளுவார் இனறும், விளக்கு வைத்த பின்னர் எண்ணை யாருக்கும் தரக்கூடாது, உப்பை கையில் தரக்கூடாது, இரட்டை வாழைப்பழத்தை சிறுமிகள் சாப்பிடக்கூடாது, சிறுவர்கள் வெற்றிலை போடக்கூடாது, தயிர் சோற்றில் மீன் கலந்து உண்ணக்கூடாது, கீரையை இரவில் சாப்பிடக்கூடாது, இப்படி எத்தனை எத்தனைகூடாதுகள்?  அவசியம் இந்த நம்பிக்கைகளுக்குப் பின்  இருக்கும்  அறிவியலை பதிவிடவேண்டும் யாராவது

 

அபுதாபி சென்று அங்கு அப்போது கிடக்காத பல தென்னிந்திய சமையல் பொருட்களின்றி சமைக்க திணறியது, கருவுற்றிருக்கையில் நல்ல பசியுடன் சாப்பிட அமர்ந்தால்  அங்கு கிடைக்கும் சிவப்பு கொட்டை அரிசி கண்ணைமுழித்துக்கொண்டு தட்டில் இருப்பதைக்கண்ட மாத்திரத்தில் கண்ணீர் நிறைந்துவிடுவதுமாய் துவக்கமே கண்ணைக்கட்டியது

வாழ்வின் கடினப்பாடங்கள் அப்போழுதும் முடிவடையாமல் வாத்தியார்கள் இன்னுமின்னுமென பாடம் நடத்த வரிசையாய் நின்று கொண்டிருந்த  கொடுமைக்காலம் அது

நிறைமாதமாய் இருக்கையில் அங்கிருந்த தோழி ஒருத்தி உள்ளேயே அமர்ந்து சாப்பிடலாம் என்னும் அளவிற்கு பெரிய தட்டில் 9 வகையான கலவை சாதம் அளித்து அவள் வீட்டுக்கூடத்தில் அமர்ந்து  நிறைவுடன் உண்டது மட்டுமல்லாது அதே தோழி செய்த ஒரு மகத்தான துரோகமும் கூட நினைவிலிருக்கிறது. இரண்டையுமே மறக்க முடியவைல்லை மறக்கக்கூடியதுமல்ல அது

வட இந்தியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கையில் லஸ்ஸி குடித்த பஞ்சாபி ஒருவரின் கடையில்  சலவை இயந்திரத்தில் லஸ்ஸி தயரித்துக்கொடுத்த புதுமையை இன்றும் என் மாணவிகளுக்கு பால் பொருட்கள் குறித்து பாடம் எடுக்கையில்  தவறாமல் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

அதைப்போலவே கொழும்புவில் அவர் இருந்த பல வருடங்களில் மிகச்சுவையான் உணவுகளை சுவைத்திருக்கிறோம். ஒரு புத்த பூர்ணிமா அன்று பண்டார நாயகா விமான நிலையத்திலிருந்து  வீடு  வரைக்கும் காரை நிறுத்தி நிறுத்தி எங்களுக்கு அம்மக்கள் அளித்த இனிப்புகள், அசங்க ராஜ பக்‌ஷ எனும் நண்பர் ஒருவரின் வீட்டில் செய்து தந்த வட்டாலப்பம் எனும்  வாயிலும் தொண்டையிலும் பின் மனதிலும் கூடஇன்னும்  இனித்துக்கொண் டே இருக்கும் அவர்களின் பாரம்பரிய இனிப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக  அங்கு கிடைத்த கட்டித்தயிர், மண் சட்டிகளில் துணி கட்டி விற்கப்படும் வாசனையான சுவையான எருமைத்தயிரை இங்கு எதற்கும் ஈடு சொல்லவே முடியாது .

நுவரேலியாவின் மாபெரும் பால்பண்னையொன்றிற்கு சென்றிருந்தபோது குடித்த பெரிய கண்ணாடித்தம்ளரில் தரப்பட்ட அருமையான குளிர்விக்கபட்ட மிகச்சுவையான அடர்த்தியான பாலைப்போல உலகில் வேறெங்கும் குடிக்கவே முடியாது என அடித்துச்சொல்லுவேன்

இலங்கை உணவகங்களில் பெரிய தாம்பாளமொன்றை மேசை நடுவில் வைத்து ஆடு கோழி மாடு மீன் இறால் என பலவகை இறைச்சிகளையும் கலந்து செய்த குழம்பொன்றை நடுவில் கொட்டப்பட்டிருக்கும் சோற்றுக்குவியலின் நடுவே ஊற்றி சுற்றி அமர்ந்திருப்பவர்களிடம் சிறிய கரண்டிகளை தருகிறார்கள் ஓரங்களிலிருந்து எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பேசிச்சிரித்தபடி சாப்பிட துவங்குகிறார்கள். நம்மைபோல உணவகங்களில் தட்டு நம் முன்னால் வைக்கப்பட்டட்தும் அதன் மீது பாய்ந்து நிமிடமாய் உணவை முடித்து விடாமல் மெதுவாகப் சாபிட்டு அதிக நேரம் உணவகங்களில் செலவிடுகிறார்கள்

அது போன்ற ஒரு உணவகத்தில் அசைவம் சாப்பிடாத எனக்கு என்ன வேண்டும் என் கேட்டதற்கு நான் அரிசிச்சோறும் தயிரும் வாங்கிக்கொண்டேன் கேட்காமலேயே தேன் கொண்டுவந்தார்கள், அவர்கள் வெறும் சோற்றில் தயிர் பிசைந்து உண்பதில்லை தயிரில் தேன் கலந்து சாப்பிடுவதே அங்கு வழமை. நான் சோற்றில் உப்பும் தயிரும் பிசைந்து நறுக்கிய வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை பலர் எழுந்து வந்து வேடிக்கை பார்த்தனர்

உலர் சட்டினியான சம்பல் அதனுடன் இடியாப்பம். பாலில் வேக வைத்த அரிசிச்சோற்றுக்கட்டிகள்,  பெரும் தேங்காய்கள் என கொழும்புவின்  நினைவில் இருக்கும் உணவுகளின் பட்டியல் நீண்டது

ஹீரோ மோட்டார்ஸில் கணவர் வேலை செய்த குறுகிய காலத்தில் குர்கானில் ஒரு கடுங்கோடையில் விடுமுறையில் சென்று மாட்டிக்கொண்டேன். வெயில் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வடிவில் இருக்கும் என்பதை உணர்ந்த காலம் அது உடல் உருகும் வெம்மை அங்கிருக்கும்.  அங்கு ஒரு முறை வீட்டில் மட்டன் குழம்பு வைத்துக்கொண்டிருந்தேன். நான் சாப்பிடாவிட்டாலும் மற்றவர்களுக்கு அசைவம் சமைத்துக்கொண்டுதானிருக்கிறேன். மணக்க மணக்க வைக்கும் கைவாகு வாய்த்திருப்பதால்  விரிவான சமையல் அன்று. திடீரென கதவு தட்டும் சத்தம். வாசலில் ஒரு கிண்ணத்துடன் அருகில் குடியிருக்கும்   தனியே வசிக்கும் இரு இளைஞர்கள் .  குழம்பின் வாசனை இழுத்ததால் என்ன நினைத்தாலும் நினைத்துக்கொள்ளட்டும் கேட்டே விடுவோமென்று வந்துவிட்டார்கள். உண்மையில் எனக்கு கண்ணைக்கரித்துக்கொண்டு வந்து விட்டது. வீட்டையும் அம்மா கைச்சமையலையும் விட்டு பொருளீட்டும் பொருட்டு  பிரிந்து இப்படி எத்தனையோ  இளைஞர்கள் பழைய நினைவுகளை சுவைத்துக்கொண்டிருக்கிறார்களல்லவா? அன்று உணவை அந்த இளைஞர்களுடன் பகிர்ந்தே உண்டோம்.

என் மகன்களுக்கு இந்த நிலை வராமல் இருக்க இரண்டுபேரும் நன்றாகவே சமைக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள்  சுவையான உணவுக்கு மட்டுமல்ல அருமையான புரிதலுடனான  இல்லறத்திற்குமாய் சேர்ந்தே அவர்கள் சமைக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆம் கணவன் மனைவி இருவருமாய் சேர்ந்து சமைத்து உண்னும் இனிய குடும்ப வாழ்வு அவர்களுக்கு அமையட்டும் என்பதுவே என் தினசரி வேண்டுதல். சமையலறைக்கு வெளியே ஒரு வசீகர உலகை நான் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன்  என் மருமகள்களுக்கு சமையலறையும் வசீகரமாகட்டும்

சின்ன மகன் தருண் அரைக்கும் விஷேச சட்னிகளுக்கு நான் பெரும் ரசிகை அவன் கொழுந்து நாரத்தை இலைகளை பருப்புடன் வறுத்து அரைக்கும் துவையலுக்கு சாப்பிடும் அனைவரும் நிச்சயம் ரசிகர்கள் ஆவார்கள். வெயில் வீணாய்ப்போகாமல் நிறைய ஊறுகாய்கள் போடக்கற்றுக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் மத்தியில் இவை விசேஷமாய் பேசப்படும் அளவிற்கு சுவையாக இருக்கும்.

மகன்களைப்பற்றி இன்னுமொரு சுவையான சம்பவமிருக்கிறது. இவரின் தம்பிக்கு பெண் பார்க்கபோன இடத்தில் தட்டில் மிக்சர் கொண்டு வந்து வைத்தார்கள். அபுதாபியிலிருந்து வந்திருந்த நாங்களும் சென்றிருந்தோம். போன உடன் என் மாமியாருக்கு பெண்ணைபிடிக்கவில்லை அதையும் அவர்களிடமே நேரடியாக சொல்லியும் விட்டார். ஆனால் சரண் தருண் இருவரும் மிக்சர் பிடித்துவிட்டிருந்தது தட்டிலிருந்து கையை எடுக்கணுமே! பிடிக்கவில்லை என்றபின்னும் இருந்து  மிக்சரைக்காலி செய்துவிட்டு வந்த அபுதாபி சிறுவர்களை பற்றி என்னவெல்லாம் கேலிபேசினார்களோ அன்றைக்கு?

ஆனால் நகைமுரணாக அதே பெண் தான் இன்று அவர்களில் சித்தி. எங்கெங்கோ சுற்றி பெண் கிடைக்கமால் மீண்டும் அவர்கள் வீட்டிற்கே வந்து கெஞ்சிக்கூத்தாடி திருமணம் செய்து கூட்டி வந்தோம். உரிமையுள்ள வீடென்று தெரிந்துதான் மிக்ஸர் சாப்பிட்டு இருக்கிறார்கள்

மாணவிகளுடன் கல்விச்சுற்றுலாவிற்கு சென்று திரும்பும் வழியில் ஒருமுறை பேருர் கோவிலருகில் வந்ததும் அங்கும் பேருந்தை நிறுத்தி சாமிகும்பிடப்போனோம். திரும்பி பேருந்தில் எல்லோரும் அனேகமாய் ஏறிவிட்டபோது ஒரு மாணவி புளியோதரை தராங்க என்று ஒரு குரல் கொடுத்ததும் கும்பலாய் பலர்  மட மடவென இறங்கி பிரசாதம் வாங்கினார்கள் அதில் அவர்களின் ஆசிரியையான நானும் இருந்தேன்

திரு ஜெமோ அவர்களின் அனுமதியுடன் வெண் முரசு காட்டும் உணவுகள் குறித்து அன்னம் பிரம்மமென்னும் தலைப்பில் சமீபத்தில் உரையாற்றியபோது மகபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய செலுத்து நெறிகளையும் ஒடுக்கு நெறிகளையும்பற்றி பலர் வியந்து தகவல்கள் கேட்டுக்கொண்டது மகிழ்வளித்தது.

இன்னும் சமையலில் சலிப்பு வராமல் புதிது புதிதாய் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். முன்னாள் முதல்வர் ஒருவருக்கு கல்லூரி விழா ஒன்றில் குழம்பு ஊற்ற முனைகையில் ’தேவி நிறைய ’தான்’ போடு என்றதும் குழம்பினேன். ஏதோ தோப்புக்கரணம் போடு முட்டி போடு என்பது போல என்ன இது தான்’ போடுவது என்று

பின்னர் அவரே ’முழிக்காதே தான் என்றால் குழம்பில் உள்ள காய்கறிகள் அள்ளி போடு என்றார்.

ஜெ மோ அவர்கள் நடத்தும் ஊட்டி முகாமில் கடந்த மார்ச் மாதத்தில் கலந்துகொண்டிருந்தேன். பொள்ளாச்சியிலிருந்து  நல்ல வெயிலில் கிளம்பிஅந்த குருகுலத்திற்கு சென்று சேர்கையில் நல்ல குளிரும் இளமழையுமாய் ரம்மியமாய் இருந்தது 7 மணிக்கெல்லாம் பற்கள் கிட்டிக்கும் குளிர்,  8 மணிபோல ஒரு பெண் துறவி  மணியடித்து அழைத்ததும் இரவுணவிற்கு சென்றோம், கொதிக்ககொதிக்க அரிசிச்சோறும் ஆவி முகத்தில் அடிக்கும்படி கொதித்த பல காய்களை பெரிது பெரிதாக வெட்டிப்போட்டிருந்த குழம்புமாய் அந்த சூடும் சுவையும் அபாரம். மலைக்காய்களுக்கே உரித்தான சுவையும் மணமும்  சூடாய் சாப்பிட்டதில் வயிறும் மனமும் சேர்ந்தே நிறைந்தது. கவிஞர் தேவதேவனும் அங்கிருந்தார் உட்கார இடமின்றி அவரருகில் உட்கார தயங்கிய என்னை பரவாயில்லை உட்காரும்மா என்றுதந்தையின் பாசத்துடன்  சொன்னதும் அவரருகில் அமர்ந்து அந்த குளிர் இரவில் நானும் தருணும் மற்ற பங்கேற்பாளர்களுமாய் சாப்பிட்டது வாழ்விலே ஒரு முறைதான் நிகழும் அற்புதக்கணங்களில் ஒன்று.

புதிய வார்த்தைகள் புதிய பக்குவங்கள் புதியசேர்மானங்கள், உத்திகள் என்று நாளும் கற்றுக்கொண்டே இருக்கிறேன்

யார் வந்தாலும் சின்ன அளவிலாவது சமைத்துச் சாப்பிட வைத்து அனுப்ப பெரிதும் முயலுவேன் . மனிதர்களுக்கு மட்டுமல்லாது பல வருடங்களாய் அதிகாலையில் காகங்களுக்கும் உணவிடுகிறேன். உப்புமா வைத்த  ஒரு நாள்  கல்லூரி வரை துரத்தி வந்து காகம் கொத்தியதை அடுத்து இப்போது அதை மட்டும் வைக்காமல் மற்றவற்றை அளிக்கிறேன். 6 மணிக்கு முன்னால் என் கையால் சாப்பிட்டு வருடக்கணக்காக பழகிய அவைகள் கொஞ்சம் தாமதமானலும் அதட்டி கத்திக்கூச்சலிட்டு என்னை ஒரு வழி பண்ணி விடும்

சில வருடங்களுக்கு முன்னால் வெண்முரசின் இரண்டாம் பாகத்தை மூன்றாம் முறை ஒரு மதிய நேரத்தில் தனியெ வீட்டிலிருந்து வாசிக்கையில் முன் வாசலில் காகமொன்றின் குரல் பலமாக வித்தியாசமாய் கேட்டுக்கொண்டே இருந்தது. வாசிக்க அது இடைஞ்சலாய் இருந்ததால் கொஞ்சம் எரிச்சலோடு பொறுமையின்றி சென்று பார்க்கையில் வாசல் திண்ணையேறி உள்ளே வர முயன்று கொண்டிருந்த  ஒரு கொம்பேறி மூக்கன் பாம்பை தலையிலேயே கொத்தியபடி என்னை அழைத்து எச்சரிக்கை குரல் கொடுத்த அந்த காகத்தின்  சோற்றுக்கடனை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் பாம்பை நானும் இன்னொரு பெண்ணுமாக துரத்தினோம் என்றாலும் சிலிர்ப்பூடும் நிகழ்வு இது

கடந்த வாரம் நல்ல மழை பெய்து கொண்டிருந்த காலையில் மின் கம்பிகளில் சொட்டச்சொட்ட நனைந்தபடி என்னை கூவி அழைத்தால் நான் நனைந்துகொண்டு வருவேன் என்பதால் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாய் மழையில் நனைந்த படி காத்திருந்த அவற்றின் மனதை என்னவென்பது!. நெகிழ்ந்து போய்விட்டேன்

தோட்டத்தில்  வளர்க்கும் மரவள்ளிக்கிழங்குகளை தோண்டி சாப்பிட வரும் சிவப்புக்கண்களுடனான   சாம்பல் வண்ன முயல்கள், நான் கல்லுரி முடிந்து திரும்பும் மாலைவேளைகளில்  தோட்டக்கதவின் கம்பி இடைவெளியில் என் கால்களுக்குள் நுழைந்து ஓடும் போது கிடைக்கும் இன்பத்தை பதிவு செய்வதும் கடினம் அவற்றிற்கென்றே கிழங்குகளை மாற்றி மாற்றி பயிரிடுகிறேன் எப்போதும்

இளநீர் குடித்த பின்னர் வழுக்கையை தென்னையில் இருக்கும் அணில்கள் விரும்பி சாப்பிடும் என்பதால் மரத்தடியில் வைத்து விடுவோம் பாவமாய் திரும்பித்திரும்பி பார்த்தபடி பதற்றமாய் யாரும் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்களோ எனும் அச்சத்துடனே அவசரமாய் இரு கைகளையும் ஏந்திக்கொண்டு அவை சாப்பிடும் அழகே அழகு

தேனீக்களும் வண்டுகளும் குளவிகளும் நீரருந்தவென்றே ஒரு கல்லுருளி பிரத்யேகமாய் நீர் நிரப்பி எப்போதுமிருக்கும் வீட்டில்

சிறு தொட்டி ஒன்று புன்னை மரத்தடியில் முத்துப்போன்ற பூக்கள் மிதக்க குளிர்ந்த நீருடன் காத்திருக்கும் காகங்களும் கொக்குகளும் கிளிகளும் நீரருந்தவென்று

வாழும் உயிருக்கெல்லாம் வயிற்றுக்கு சோறிட இயலாவிட்டாலும் முடிந்த வரை உதவலாமல்லவா?

பழங்குடி இனத்தைச்சேர்ந்த தோழி ராஜியின் ஊட்டி வீட்டில் சாப்பிட்ட மிகச்சுவையான மூங்கில் குருத்துக்குழம்பு, பாலக்காடு பிராமணப்பெண்ணான என் தம்பியின் காதல் மனைவி அவர்களின் மகளுக்கு ஒரு சிறு ஆட்டுக்குட்டியைக்காண்பித்து சாப்பாடு ஊட்டிகொண்டிருக்கையில் சரண் அப்பா சும்மாயிருக்க முடியாமல் ‘’ நீங்க எல்லாம் ஆட்டுக்குட்டியைப்பார்த்துட்டு சாப்பிடுவீங்க, நாங்க  ஆட்டுக்குட்டியையே சாப்பிடுவோம் ‘’ என்று சொல்லி வைக்க அது ஒரு சிறு குடும்பப்பூசலானது, இந்த ஆயுத பூஜைக்கு மயிலாப்பூரில் இருக்கும் தளிகை என்னும் பெயரில் ஒரு உணவகம் சென்று ‘’ பிராமணாள் போஜனப்பிரியராயிற்றே’’ சுவையாக இருக்குமென நம்பி சாப்பிட்டால் மண்ணள்ளி வாயிலிட்டது போல உப்பும் உரைப்பும் ஒன்றுமில்லாமல் இருந்தது, இப்படி இன்னும் எழுதினால் எழுதிக்கொண்டே போகலாமென்னும் அளவிற்கு உணவின் நினைவுகள் தளும்புகின்றது மனதில்

திரு ச. தமிழ்செல்வனின் எழுத்துக்கள் என் மனதின் அடியில் கனன்று கொண்டிருந்த பல  நினைவுகளை  ஊதி கொழுந்துவிட்டெரியச்செய்து விட்டது. எழுத்தில் எழுதியபின்னர் என்னவோ ஒரு நிம்மதியும் வந்திருக்கிறது. உளமயக்கோ என்னவொ ஆனால் கொஞ்சம் விடுதலை உணர்வுடன் இருக்கிறேன் இப்போது . அவருக்கு எனது நன்றிகள்

லடாக்

திரு ஜெ அவர்களின் லடாக் பயண அனுபவம் வாசித்தேன். லடாக் அடிக்கடி சென்று வரும் என்  பல்கலைஆசிரியரின் அனுபவங்களைக்கேட்டுக்  கேட்டு அங்கிருக்கும் தாவரங்களுக்காக  லடாக் செல்லவேண்டும் என நினைத்திருந்தேன் இதுவரை.

அவரின்  அனுபவத்தை படித்தபின் அங்கு போகவேண்டும் என்று மட்டுமல்ல, போனபின்பு அங்கேயே இருந்துவிடலாமென்றும் கூட தோன்றுகிறது. எதன் பொருட்டு இப்படி நாமெல்லாரும் பரபரப்பாய் அலைகிறோம்? எத்தனை இனிமை அவர்களின்   அந்த மெதுவான வாழ்க்கை?

காலம் என்னை கடந்து செல்வதை நான் ஒவ்வொரு கணமும் உணர்கிறேன் அதற்காக வருந்தவும் கூட செய்கிறேன் பல சமயங்களில் (குறிப்பாக பிறந்தநாளின் போதும், பிறந்த குழந்தைகளை காணும் போதும்).

காலை 5.30 மணியிலிருந்து ஓயாமல் பதட்டமாக இரவு 10, 11 மணிவரை அலையும் எனக்கு அவர் விவரித்த “ கம்பளி ஆடைகளை அனிந்துகொண்டு ஹூக்காவை பிடித்தபடி இளவெயிலில்  மலைச்சரிவுகளைப்பார்த்தபடி நாளெல்லாம்  அமர்ந்திருக்கும்  காலமற்ற அவர்களின் வாழ்க்கை”   ஏகத்துக்கும் பொறாமையை அளிக்கிறது.

அவர்களுக்கு இன்று மட்டுமே எனக்கொ நேற்று இன்று நாளை எல்லாமே இருக்கிறது. வரும் ஞாயிறு என்ன சமைப்பது என்று. அதற்கு முந்தின 3 நாட்களில் யோசித்து இட்லிக்கோ அடைக்கோ மாவு தயாரிக்கிறேன்.என் மகன்களின் வருங்கால மனைவிகள் அவர்களுக்கு நன்றாக வயிறு நிறைய சமைத்துப்போடுவார்களா என்று இப்போதெல்லாம்  தொலைநோக்குப்பார்வையோடு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

பரபரப்பான அலைச்சல் மிகுந்த என்  வாழ்க்கையின் மீதும், உட்காரவிடாத ஒடிக்கொண்டே இருக்க சொல்கிற பதற்றமாக பதட்டமாக கவலையோடே  இருக்கிற   உள்ளத்தின் மீதும் கோபமும் அவமானமுமாய் இருந்தது இந்த லடாக் கட்டுரை படித்தபின்னர்.

நான் நினைப்பதுண்டு  , மின்மயானத்திற்கு என்னைக் கொண்டு செல்கையிலும் குக்கர் வைத்துவிட்டு 3 விசிலில் நிறுத்தச்சொல்லிவிட்டுதான் போவெனென்று!!!!
..

புன்னகையுடன் மடியில் கைகளை வத்துக்கொண்டு கண்மூடி தியானத்தில் இருக்கும் புத்தரும், அந்த ஆழ்ந்த  அமைதியில் இருக்கும் மலைச்சிகரங்களும்,  அந்த மக்களும்   அவர்களின் நீர்த்துளிக்கண்களும்  நூற்றாண்டுகளை மிகச்சாதாரணமாய்க்கடந்து எள்ளுப்பேத்திகளைக்கையில் வைத்துக்கொஞ்சும் அவர்களின் பாக்கியமும் ,என்ன  சொல்லுவது? they live and i exist என்றுதான் தோன்றுகிறது

comfort zone லிருந்து வெளியெ வரப்பழக்கமில்லாத அல்லது விரும்பாத எனக்கு ,ஜெ கையில் எடுத்துக்கொண்டிருக்கும் ,பனிபோல குளிர்ந்த அந்த குட்டி ரித்திகா அவர் கண்ணை நேராகப்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நிழற்படம் அவரின் எழுத்துக்களின் மீதான மதிப்பையும்   அனுபவங்கள் மீதான பொறாமையையும் ஒரு சேர ஏற்படுத்துவதை தடுக்கவே முடியவில்லை

நீயின்றியும்…

யுத்தத்தில் மரணம் போல்,வெயிலில் தாகம் போல்

தவிர்க்க இயலாததுதான் நீ என்னை மறுத்ததும்

தேவதைகள் கிடைப்பது அரிதென்று தெரிந்து கொண்டேன்

முதலிலும் ,முடியவே முடியாதெனும் உன் முடிவிலும்

எனினும் இன்னுமிருக்கிறதோர் வேண்டுகோள்,

இத்தனைக்கும் பிறகும்.,,

உன் இதழோரம் என்றுமிருக்குமே ஓர் இளநகை,

அதை மட்டுமாவது எனக்களியேன்?

எனக்கான அக் குறுஞ்சிரியின் நினைவுகளிலேயே

வாழ்ந்து முடித்து விடுகிறேன் மீதி நாட்களை

நீயின்றியும்……

லக்‌ஷ்மி

 

கடந்த மாதத்திலிருந்தே பரவலாக ஊடகங்களில் பேசப்பட்ட லக்‌ஷ்மி என்னும் இந்த குறும்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். முதலில் வந்த உணர்வு ஏமாற்றம்.

என்ன இருக்கிறதென்று இதனை இத்தனை பெரிதாய் பேசினார்கள் என்றே தெரியவில்லை. இதைக்காட்டிலும் என்று சொல்ல முடியாதபடிக்கு இதனுடன் ஒப்பிடவே முடியாத தரத்தில் பல நூறு குறும்படங்கள்  வந்திருக்கின்றதே!

கதையைபார்த்தால்,  அலுப்பூட்டும் வாழ்வில் இருக்கும் ஒருத்தி, அவள் ஆயிரக்கணக்கான பெண்களின் பிரதிநிதிதானே ஒழிய புதியதாய் ஒன்றும் சொல்லப்படவில்லை. தினசரி சீறும் குக்கரும்,  பள்ளிக்கு தயாராகும் மகனும் அவனுக்கு அணிவிக்கப்படும் சீருடையும் அன்பில்லாத கணவனும் மதிய உணவு கொடுத்ததும் போய் வருகிறேன்  என்று கூட சொல்லாமலும் உணவு பறிமாறுகையில் போதும் என்பதைக்கூட சொற்களன்றி சைகையில்  சொல்லும் கணவனும்அமையப்பெற்றவள்  அதன் பின்னர் அடித்துப்பிடித்து அலுவலகம் கிளம்புவதும், களைத்துத்திரும்புவதுமமாய் நகலெடுத்த நாட்களில் இருக்கிறாள். இரவில் அவள் மேல் நிகழ்வதும் அவளுக்கு தொடர் அலுப்பூட்டும். மகன் விழித்துவிடுவானோ என்று அச்சமும் ஊட்டும் ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு நாளின் இரவுணவின் போது  கணவனுக்கு வரும் ஒரு கைப்பேசி அழைப்பின் பெண்குரல் கணவனின் மீதான சந்தேகத்தை எற்படுத்துகிறது என்பதே வலுவில்லாத ஒரு  அம்சம்.அந்த அடிப்ப்படையிலேயே இந்த கதை நகர்கிறது என்பது மேலும் அபத்தம். நேரடியான எந்த நிகழ்வுகளியும் அவள் காணவில்லை அவளுக்கு  அலுப்பூட்டும் வாழ்வு Xerox  எடுத்தது போல மாற்றமில்லா வாழ்வு என்பதைத்தவிர வேறு ஏதும் ப்ரச்சனைகளூம் சொல்லபடவில்லை, அவளின் ஆர்வங்கள் ஏதும் காட்டப்படவில்லை

வாசிக்கும் ஆர்வம் எழுதும் ஆர்வம் வரையும் ஆர்வம் இப்படி ஏதும் இல்லை அவற்றை கண்வன் கட்டுப்படுத்தினான் என்ற பேச்சுக்கும் இடமில்லை

வெறும் ஒரு அலைபேசி அழைப்பு, பின்னர் அவள் இரவில் திரும்பி படுத்துக்கொண்டு கண்ணீர் வடிக்கிறாள், உடன் தனக்கும் ஒரு மாற்றம் வேண்டுமென நினைக்கிறாள். இதுவும் அசாதாரணமே

.கணவனின் திருமணபந்தத்தைத்தாண்டிய உறவினைக்குறித்து தெரியவந்த மனைவி வருத்தம் கோபம் படலாம் உடன் தனக்கும் ஒரு மாற்றம் வேண்டுமென நினைப்பதில் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லை. அதைவிட  அவள் நினைத்த அடுத்தநாளே கதிர் எனும் இளைஞன் கவனிக்கும் படி அவளருகில் வந்து ரயிலில் அமர்வது அபத்தத்திலும் அபத்தம். கணவனின் துரோகத்திற்கு  பதிலாக தானும் துரோகம் செய்வதை பிழையீடாக நினைக்கும் மனைவிகள் இருக்கிறார்கள் என்கிறதா இப்படம்?

கதிரின் மீது ஏன் இவளுக்கு ஈர்ப்பு வருகிறது என்பதற்கு ஒரே ஒரு காரணம் கூட இதில் சொல்லப்படவில்லை, அவன் அவசியமில்லாமல் பாரதியார் பாடல்களை பாடிக்காட்டுவதும் எரிச்சலூட்டுகிறது, பாரதியையும் அறியாத வாசிப்பிலும் ஆர்வமுள்ளவளாக கட்டப்படாத கதாநாயகி ஒரு நாளின் போக்குவரத்து துண்டிப்பில் கதிருடன் சிற்பக்கூடத்திற்கு செல்வது உணவுண்ணுவது இறுதியில் படுக்கையிலும் அவனைச்சந்திப்பதெல்லம் மேலும் மேலும் சொல்லப்பட்டிருக்கும் அபத்தங்கள்

கடைசிக்காட்சியில் அதே குக்கரின் சீற்றத்தின் போது இவள்  முகத்திலொரு புன்னைகையையாவது காட்டியிருந்தால் அவளுக்கு அந்த ரகசிய அனுபவத்தில் ஒரு ரகசிய மகிழ்ச்சி இருக்கு என்று கூட நாம் நினைக்கலாம் ஆனால் அப்படி எதும் இன்றி அவள் இனி கொஞ்ச நாள் ரயிலில் செல்லாமல் ,அதாவது கதிரைப் பார்ப்பதை தவிர்த்து பேருந்தில் செல்கிறாள் என்று முடிகிறது படம்

என்னதான் சொல்ல வருகிறார்கள் இதில்? எதற்கு இத்தனை பிரபல்யம் இதற்கு? இணைப்பைக்கொடுத்துள்ளேன் பார்க்காதவர்கள் பாருங்கள் கருத்துக்கள் இருப்பின் பகிருங்கள்

 

 

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑