இன்னுமோர் ஆண்டு எனக்களிக்கப்பட்டிருக்கிறது ஆசிரியையாகவும் அன்னையாகவும் வாழ்வினைத்தொடர. கடந்த ஆண்டை திரும்பிப்பார்க்கையில் ஏற்ற இறக்கங்களுடன் கலவையாகவே இருக்கிறது வழக்கம் போலவே, நிறைய புடவைகள், கொஞ்சமாய் நகைகள், சென்னையில் ஷாப்பிங் பழைய பாடங்கள், புதிய மாணவர்கள்……

எனினும் முன்னைக்காட்டிலும் நிறைய வாசித்திருக்கிறேன் அதிகம் நல்ல திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன் குறிப்பாக காதலுக்கும் ஆண் பெண் உறவுகளுக்குமிடையேயான வரையறைகள் பெரிதும் மாறிவிட்டதைக்காட்டும் படங்களின் வரிசையில் salmon fishing in Yemen, mountain between us   போன்றவை, நிறைய புதிய நண்பர்கள் நிறைய நிறைய சந்திப்புகள்,  வழக்கத்தைக்காட்டிலும் குறைவான பயணங்கள், இதுவரை சாத்தியமே இல்லாதிருந்த தன்னந்தனிப்பயணம் ஆகஸ்டில் புதுவை பயிலரங்கிற்கு, மதுரை புத்தகக்கண்காட்சி, விஷ்ணுபுரம் விழா, ஊட்டி முகாமில் கலந்துகொண்டது

இலங்கை பேராதனா  மாணவர்களுக்கான உரையாற்றியது,  ஒரு பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கும் ’’எனது கணவரும் ஏனைய விலங்குகளும்’’ புத்தகத்தைக்குறித்து நிலாமுற்றத்தில் பேசியது, ஏப்ரல் மே மாதங்கள் முழுமையும் டெங்குவின் பிடியில் மருத்துவமனை வாசம், சொர்க்கத்தினுடைதோ அன்றி நரகத்தினுடையதோ கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்துவிட்டு, எப்படியோ தப்பிப்பிழைத்தது, அம்மா மிக ஆபத்தான நிலையிலிருந்து மீண்டது , ஒரு மாதம் மித்ராவீட்டில் தங்கி இருந்து பதவி உயர்வின் பொருட்டு புத்தாக்கப் பயிற்சி பல்கலையில் எடுத்துக்கொண்டது, மித்ராவின் அறுவைசிகிச்சை, சில மறக்க இயலா சந்திப்புகள், பிரிவுகள்,வெகு சில புரிதல்கள், பற்பல தப்பர்த்தங்கள்,, கவிதை முயற்சிகள், வலைப்பூ, இளங்கலை நண்பர்களை மீண்டும் பல வருடங்களுக்குப்பிறகு சந்தித்து நட்பை புதிப்பித்துக்கொண்டது,  என்று நீள்கிறது கடந்த வருடத்தின் நினைவுகள்

நஞ்சுக்கொடி கழுத்தை இறுக்கியதால் 9ஆவது மாதத்தில் வயிற்றிலேயே மாணவி அர்ச்சனாவின் தலைச்சன் ஆண் குழந்தை,  சாலை விபத்தில் நாகேந்திரன்,கல்விச்சுற்றுலா சென்றிருக்கையில் கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டும், ஒரு மழைநாளில் மின்விளக்கு மாற்றுகையில் மின்சாரம் தாக்கியும் ,இருசக்கர வாகன விபத்திலுமாய் அநியாயமாக மூன்று இளம் மாணவர்கள்,மாடியிலிருந்து தவறிவிழுந்து க சீ சிவகுமார்,  மைக்ரோபயாலஜியில் என் ஆர்வத்தை திசை திருப்பிய என் ஆசிரியர் ரவிந்திர ராஜு, இப்படி இன்னும் மீளமுடியாத துக்கத்தை ஏற்படுத்திய இறப்புகளும், அதைகாட்டிலும் வலிமிகுந்த  பிரிவுகளும், பழுத்து கனிந்து உதிர்ந்தாலும் இழப்பின் வெற்றிடத்தை ஏற்படுத்திய நான் மிக மதிக்கும் சில மூத்த எழுத்தாளர்களும்  என்றும் என் நினைவில் தெய்வத்தின் இடத்தில் இருக்கிறார்கள்

எல்லாம் எல்லாம் மாறிக்கொண்டே இருப்பினும் மாறாமல் இருப்பது  என் எளிய வாழ்வில், இன்னும் கூட இனிய அறியாமையால் நிறைந்திருக்கும் என் உள்ளுலகமும், வாழ்வின் ஓரங்கமாக ஆகிவிட்ட ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளும், நான் தொடர்ந்து வாழ்வதற்கான காரணமாகவும் வாழ்வின் வேர்கள் இற்றுவிடாமல் நீரூற்றிக்கொண்டேயும் இருக்கும் என் இரு மகன்களின் துணையும், இத்தனைக்கும் பிறகும் எனக்கு  அற்றுவிடாத சக மனிதர்கள் மீதுள்ள நம்பிக்கையும் தான். இனியொரு வருடத்தின் இறுதியில் இப்படி பதிவிடும் வாய்ப்பு எனக்களிக்கப்படுமோ என்னவோ தெரியவில்லை

எனக்கு எந்த புகாருமில்லை எதன் மீதும் யார் மீதும்  என்னை வெறுப்பவர்களுக்கும், நேசிக்கிறவர்களுக்கும் ( அப்படி யாரேனும் இருப்பின்) என்னிடம் படிப்பவர்களுக்கும் என்னை கடினப்பாடங்களாகப் படிப்பித்துக்கொண்டே இருப்பவர்களுக்கும், இன்னும் பாடங்கள் கற்றுத்தர வரிசையில் நின்று கொண்டிருபவர்களுக்கும்  சேர்த்து என்றும் மாறாத எனதன்பும் நன்றியும்  புத்தாண்டு வாழ்த்துக்களும்.