அவரின் அனுபவத்தை படித்தபின் அங்கு போகவேண்டும் என்று மட்டுமல்ல, போனபின்பு அங்கேயே இருந்துவிடலாமென்றும் கூட தோன்றுகிறது. எதன் பொருட்டு இப்படி நாமெல்லாரும் பரபரப்பாய் அலைகிறோம்? எத்தனை இனிமை அவர்களின் அந்த மெதுவான வாழ்க்கை?
காலம் என்னை கடந்து செல்வதை நான் ஒவ்வொரு கணமும் உணர்கிறேன் அதற்காக வருந்தவும் கூட செய்கிறேன் பல சமயங்களில் (குறிப்பாக பிறந்தநாளின் போதும், பிறந்த குழந்தைகளை காணும் போதும்).
காலை 5.30 மணியிலிருந்து ஓயாமல் பதட்டமாக இரவு 10, 11 மணிவரை அலையும் எனக்கு அவர் விவரித்த “ கம்பளி ஆடைகளை அனிந்துகொண்டு ஹூக்காவை பிடித்தபடி இளவெயிலில் மலைச்சரிவுகளைப்பார்த்தபடி நாளெல்லாம் அமர்ந்திருக்கும் காலமற்ற அவர்களின் வாழ்க்கை” ஏகத்துக்கும் பொறாமையை அளிக்கிறது.
அவர்களுக்கு இன்று மட்டுமே எனக்கொ நேற்று இன்று நாளை எல்லாமே இருக்கிறது. வரும் ஞாயிறு என்ன சமைப்பது என்று. அதற்கு முந்தின 3 நாட்களில் யோசித்து இட்லிக்கோ அடைக்கோ மாவு தயாரிக்கிறேன்.என் மகன்களின் வருங்கால மனைவிகள் அவர்களுக்கு நன்றாக வயிறு நிறைய சமைத்துப்போடுவார்களா என்று இப்போதெல்லாம் தொலைநோக்குப்பார்வையோடு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
பரபரப்பான அலைச்சல் மிகுந்த என் வாழ்க்கையின் மீதும், உட்காரவிடாத ஒடிக்கொண்டே இருக்க சொல்கிற பதற்றமாக பதட்டமாக கவலையோடே இருக்கிற உள்ளத்தின் மீதும் கோபமும் அவமானமுமாய் இருந்தது இந்த லடாக் கட்டுரை படித்தபின்னர்.
..
புன்னகையுடன் மடியில் கைகளை வத்துக்கொண்டு கண்மூடி தியானத்தில் இருக்கும் புத்தரும், அந்த ஆழ்ந்த அமைதியில் இருக்கும் மலைச்சிகரங்களும், அந்த மக்களும் அவர்களின் நீர்த்துளிக்கண்களும் நூற்றாண்டுகளை மிகச்சாதாரணமாய்க்கடந்து எள்ளுப்பேத்திகளைக்கையில் வைத்துக்கொஞ்சும் அவர்களின் பாக்கியமும் ,என்ன சொல்லுவது? they live and i exist என்றுதான் தோன்றுகிறது
comfort zone லிருந்து வெளியெ வரப்பழக்கமில்லாத அல்லது விரும்பாத எனக்கு ,ஜெ கையில் எடுத்துக்கொண்டிருக்கும் ,பனிபோல குளிர்ந்த அந்த குட்டி ரித்திகா அவர் கண்ணை நேராகப்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நிழற்படம் அவரின் எழுத்துக்களின் மீதான மதிப்பையும் அனுபவங்கள் மீதான பொறாமையையும் ஒரு சேர ஏற்படுத்துவதை தடுக்கவே முடியவில்லை