தொலைதூர இரவுப்பயணமொன்றில்  பேருந்தில் நீயும்

தனித்திருக்கும் மற்றுமோர் இரவில் நானுமாய் நேற்றிருந்தோம்

உன்னுடனேதான் நானும் பயணித்துக்கொண்டிருந்தேன்

உன் ஜன்னலுக்கு வெளியே பொழிந்த மழையில்

நனைந்து குளிர்ந்து தோள் சாய்ந்தபடி
நேற்றென்னவோ
காதலில் தோய்ந்தபடி என்னிடமிருந்து  உன்னை வந்தடைந்த
என் வார்த்தைகள அனைத்தையும்
குத்து வாட்களாய் எதிர்கொண்டது உன் மறுமொழிகள்
திகைத்துப்பார்த்துக்கொண்டிருந்த என் இதயத்தையும்
சில  கூ ர்நுனிகள் மெல்ல கிழித்து குருதிச்சுச்வை பார்த்தன
 உறக்கமின்றி உணர்ந்துகொண்டே இருக்க முடிந்ததென்னால்
நகரும் பேருந்தில் சாய்ந்து உறங்கிவிட்ட உன்னை
இறப்பைக்குறித்து பேசிக்கொண்டே இருக்கிறாய்
வாழ்வெனும் நதியில்  மூழ்க விரும்பும் என்னை முடிபற்றிச்சுழற்றி
மரணமென்னும் கரையில் வீசி எறிந்தபடி
சென்றடைந்து விட்டாயா எனும் என் குறுந்தகவலொன்றிற்கு
இன்னும் வரவில்லை உன்னிடமிருந்து பதிலொன்று
இரு நீலக்கோடுகளுக்காய் காத்துக்கொண்டிருக்கிறதென் காலை
ஒருவேளை உன் கோப்பையில் உற்சாகமாய்
பொங்கி வழியும் பானமொன்றின் குமிழிகளில்
 எனைக்காணும் பொழுதினில்  பதிலொன்று
அளிப்பாயல்லவா

தாமதமாகவேனும்?