மறுபிறவியென்னும் சாத்தியமிருப்பின்

நான் ஒரு ஜகரண்டா மரமாகவே

நிச்சயம் பிறப்பேன்,

காலத்தை கடந்துநிற்கும்

மலைமுகடுகளை பார்த்தபடிக்கு

அப்போதும் ஒற்றையாய் ஓங்கியுயர்ந்து,

ஈரமற்று தகிக்கும் பாறைகள் மீது

அடர் ஊதா மலர்களை சொரித்தபடியிருப்பேன்,

அன்புக்குரியவர்கள் என்னை கடக்கையில்

அவர்களின்திசைநோக்கி

கூடுதலாய் மலர்களை பொழிவேன்.

அவர்களின் காலடியில்

மிதிபடும் மலர்களை மெளனமாய் பார்த்தபடி

காத்திருப்பேன்

மீண்டுமோர் கடும் கோடையொன்றில்

மேலும் மேலுமென மலர்களை பொழிய!