நேற்று ஒரு பண்ணை வீட்டின் காணொளிகளையும் புகைப்படங்களையும் பார்த்தேன். பொதுவாக விஷ்ணுபுரம் நண்பர்கள் இப்படி சிறந்த இடங்களுக்கு செல்கையில் அவற்றை அனைவருடனும் பகிர்வார்கள்

அந்த பண்ணை வீட்டின் பேரில் தனித்த பிரியம் கொண்டிருக்கும், அங்கே அடிக்கடி கூடுகைகளுக்கு சென்று வரும் நண்பர்களில் சிலர் வாட்ஸப் குழுமங்களில் அவரது பண்ணையில் யானை வந்து நீரருந்திச்செல்வது, பலாப்பழங்களை பறித்துண்பது போன்ற காணொளிகளை பகிர்வது வழக்கம். நேற்று அப்படி பகிரப்பட்ட காணொளிகளில் கோடைக்கால கனிகளின் பல வகைகள் செறிந்து காய்த்தும் கனிந்தும் இருந்ததையும், அறுவடையையும் பகிர்ந்திருந்தார்கள்.

எனக்கு எப்போதுமே அறுவடை செய்வதும் அதை காண்பதும் பெரும் பரவசமளிப்பவை

அந்த பண்ணை வீட்டின் பிரியர்களில் நானும் ஒருத்தி. தென்னை, மா, பலா, நாவல், முந்திரி கொய்யா உள்ளிட்ட பல பழவகை மரங்களும் மந்தாரையிலிருந்து பல வண்ண மலர்ச்செடிகளும் நிறைந்த பல்லுயிர் பெருக்கில் ததும்பும், முறையாக பராமரிககப்படும் தோட்டம் அது

முதல்  முறை அங்கு சென்றபோது கோடைக்காலமாகையால் பகலில் பெண்கள் குழாம் நாவல் மரங்களை வேட்டியாடினோம், இரவில்  பாலுவே பலாச்சுளைகளை அனைவருக்குமாக அளித்தார்

அங்கு எனக்கு சுவாதீனமுண்டு, அடுப்படியில் தேநீர் தயாரிப்பது மாலை விளக்கு ஏற்றுவது என்று, விஷ்ணுபுரம்  வெறும் இலக்கியம் பேசும் குழுமம் மட்டும் அல்லவே அது ஒரு குடும்ப அமைப்புபோலத்தானே! 

அப்படியான அந்த பண்ணையை நேற்று காணொளியில் பார்க்கையில் நூற்றுக்கணக்கில் மாங்கனிகள் மரத்தடியில் சிதறியும் இறைந்தும் கிடந்தன,பச்சைகாய்களை கொண்ட  தென்னைகள் நிறைந்த குலைகளுடன் நின்றது. பலாவின் பெருங்கனியொன்று கிளையிலிருந்து உதிர மனமின்றி அதிலேயே வெடித்து பிளந்து சுளைகளைக் காட்டி ஆசையூட்டிக் கொண்டிருந்தது.

இது ஒருவேளை என் இடமாக  இருந்திருந்தால், இப்போது இங்கு வேடசெந்தூர் வீட்டில் வெற்றிலைக்கொடியினருகிலேயே  சுணணாம்பும்,  இனிப்பூட்டிய பாக்குத்தூளுமாக அமர்ந்து மனம் நிறைய வெற்றிலை போட்டுக்கொள்ளுவதை போல பலா மரத்தடியில் அமர்ந்தே அச்சுளைகளை உண்டிருப்பேன்.

நேற்று மாலை அப்பா வீட்டில் பலாக்கனிகள் சில முற்றி நம் வீட்டில் விழுந்து உடைந்து சிதறிக்கிடந்தன. மாலை நல்ல மழையும் ஆதலால் வீடெங்கும் அதன் மணம் கமழ்ந்தது ஒருபோதும் நான் அந்த பழத்தை சுவைத்ததில்லை சுவைக்கவும் போவதில்லை. காலை அப்பா என்னிடம் பலாச்சுளைகளை சாப்பிடும்படி சொன்னார், அவர் கண்களை நேராக சந்தித்து ’’எனக்கு பலாப்பழமே பிடிக்காதே’’ என்றேன். 

ஆம், வஞ்சம்தான், அது எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது, இது என்னை அறமற்றவளென்று வகுக்குமேயானால் அவ்வாறே ஆகட்டும், அறியட்டும் உலகு  நான் அறமற்றவள் என்று, வஞ்சம் புகையும் கல்நெஞ்சக்காரி என்றும் கூட.  இப்பிறவியில் இவற்றிலிருந்து எனக்கு மீட்சியில்லை. மீட்சியை நான் விழையவும் இல்லை.

மனம் எங்கோ சென்றுவிட்டது பலாவின் மணத்துடன்,இதோ திரும்பி வருகிறேன்

ஆம் அறுவடை, அது எனக்களிப்பது பெரும் நம்பிக்கையை, காயும் கனியும் கீரையும் மலர்களுமாக தோட்டமும் பண்ணையும் வயல்களும் நிறைந்திருப்பதும் அறுவடை செய்யப்பட்டவை குவிந்துகிடப்பதையும் பார்க்கவே எனக்கு பெரும் கிளர்ச்சியண்டாகும்.

அறுவடை என்பது வளமையின் சாட்சி, செழிப்பின் சாட்சி தொடர்ந்து இவ்வுலகில் உயிர்கள் வாழும்  சாத்தியத்திற்கான  உத்திரவாதம்,  எனக்கு வாழ்வை தொடர வேண்டும் என்னும் பிடிப்பையும் பெருவிருப்பையும் அறுவடையும் அறுவடையை காணுதலும் உருவாக்கும்.

நீர் நிரம்பிய கலம் அவற்றில் மிதக்கும் வண்ண மலர்கள் தீபச்சுடரொளி இவைகளும் அப்படித்தான், மலரும் நீருமின்றி வீட்டிலிருந்து ஒருபோதும் பயணத்தை துவக்குவதில்லை, எப்போதும் காரில் ஓரிரு மங்கலங்கள் இருக்கவேண்டும் என்பதை மகன்களுக்கும் உணர்த்தியிருக்கிறேன்

மாலைவேளைகளில் விளக்கேற்றாவிட்டால் மனம் எப்படியோ வெறுமை கொண்டுவிடுகிறது, எவ்விதத்திலும் இருள் அணுகிவிடக்கூடாது என்னும்  ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாகவும்  இது இருக்கலாம்.

அந்த பண்ணை வீட்டிலிருந்து முதல்முறை திரும்புகையில் கொண்டு வந்த ராம் சீதாப்பழத்தின் விதையினின்றும் ஒரு செடி இளம்பச்சை நீளிலைகளுடன் இங்கு வளர்ந்து நிற்கிறது.

அப்படி ஒரு நஞ்சில்லா நிலமொன்றில் பலவ்ற்றை விளைவித்து மகிழும் விழைவு எனக்குள் பல்லாண்டுகளாக நிறைவேறாமல் காத்திருக்கிறது. அவ்விழைவின் மீச்சிறு வடிவமாகவே வேடசெந்தூர்வீட்டிலும் வகை கனிமரங்களிலும் ஒவ்வொன்று, பாரதியின் காணி நிலம் போல 12 தென்னைகள், மலர்ச்செடிகளும் மூலிகைகளுமாக வைத்து வளர்த்து பசுமையும் செழுமையும் நிரம்பி, வளமை பொங்க வாழ்கிறேன்.

ஊட்டி ஃபெர்ன்ஹில் நித்யா ஆசிரமம் நல்ல மேட்டு நிலத்தில் அமைந்திருக்கும் முழுவதும் மலர்ச்செடிகளாலும் இயற்கை புல்வெளியாலும் சூழப்பட்டிருக்கும் சொர்க்கத்துக்கு இணையான இடம் அது.அங்கு எனக்கு தாளமுடியாததென்றால் குளிர்மட்டுமே மற்றபடி திரும்பிவராமல் இறுதி மூச்சுவரை இருக்க விரும்பும் ஒரு சில இடங்களில் அதுவும் ஒன்று.

அங்கு ஒரு கோடைக்கால காவிய முகாமின் போது தேவதேவன் அவர்களுடன் ஒரு மாலை நடை சென்றேன், மலர்கள் மலர்கள் மலர்களென்று முழுவதும் மலர்களை பார்த்து அவற்றின்  பெயர்களை தெரிந்துகொண்டு அவற்றின் மணம் நுகர்ந்து கொண்டு அவற்றை பறித்து கையில் ஏந்திக்கொண்டு ஒன்றை தலையிலும் சூடிக்கொண்டு அனைத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டு மலர்களால் ஆன நாளாகவே  அமைந்தது அன்று.

அன்று பிற்பகல் ஊர் திரும்பவே எனக்கு மனதில்லை நிர்மால்யாவிடம் அனுமதி பெற்று வட்டத் தலையணைகள் போல் நெருக்கமான  வண்ணச்சிறுமலர்களால் ஆன  ஹைட்ராஞ்சியா  மலர்ப்பந்துகளில் ஒன்றை பறித்துக்கொண்டு பொள்ளாச்சி வந்தேன்

குருநித்யா ஆசிரமத்தின் ஒரு சிறு துண்டையே வீட்டுக்கு கொண்டு வந்தது போல் இருந்தது அம்மலரை பார்க்கையில் எல்லாம். கன்யாகுமாரி கவிதை முகாமிற்கு பிறகும் அங்கிருந்து என் கைக்கடிகாரப்பட்டையில் ஒட்டிக்கொண்டு வீடுவரை வந்த கடற்கரை மணலும் அப்படியான உணர்வை, அவ்விடத்தின் நினைவுகளின் நீட்சியை அளித்தது. அப்படித்தான் இந்த பண்ணை வீட்டு நினைவும். 

ராம் சீதாவும் அங்கிருக்கும் பல மரங்களில் ஒன்றொன்றாக இங்குமிருப்பதுமாக அப்பண்ணையின் ஒரு சிறு துண்டு தான் இங்குமிருக்கிறது, பெருமரங்களின் மீச்சீறு போன்சாய் வடிவங்களை போல.

இன்று ஜெ தன் பிறந்தநாளன்று அருணாவுடன் எர்ணாகுளம் சென்று  விட்டு,மழை பெய்திருந்த நாகர்கோவில் திரும்பியதை சொல்லியிருந்தது போலவே நானும் இன்று  நினைவுகளில் பசுமை வழியாகவே சென்று பசுமை வழியாகவே மீண்டேன்