வழக்கமில்லாத வழக்கமாக இந்த மாதம் இரண்டு முறை வார இறுதிகளில் 3 நாட்கள் விடுமுறை தினங்களாகிவிட்டது.

வெள்ளி சனி வீட்டில் ஓய்வாக இருந்தேன். நிறைய பாடல்கள் கேட்டேன்.குறிப்பாக லால் இஷ்க், அர்ஜித் சிங் குரலெல்லாம் தெய்வத்தினருள்தான்.  ராம் சீதா மரத்தடியில் நாளெல்லாம் அமர்ந்திருந்தேன். அதன் இளம்பச்சை நீள் இலைகளின் அடியில் மனமும் உடலும் குளிர்ந்திருந்தது.

 சில தினங்களாக ஏதும் எழுதவேயில்லை, எழுத மனம் குவியவில்லை. தினம் தொகுக்கும், திருத்தும் விக்கியின் பக்கங்களையும் 2 நாட்களுக்கு முன்னர் திருத்தியது மீண்டும் துவங்கவில்லை,கல்லூரியிலிருந்து வந்ததும் கணினியும் கையுமாக இருக்கும் அதே தேவிதானா இது என எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.

ஞாயிறு மாலா இனியா அபியுடன் ஜெகனின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு போக வேண்டி இருந்தது. எனக்கு உண்மையில் கோவையில் மாலை நிகழ்வென்றால் நள்ளிரவில் வீடு திரும்புவதும் மறுநாள்; கல்லூரி செல்வதும் பெரும் சிரமமாகி விடும் எனினும் மாலா மிக விருப்பப்பட்டதால் மாலதியை பார்க்கவென்றே போக நினைத்தேன்.

மாலை 4 மணிக்கு நல்ல எதிர்வெயிலில் புறப்பட்டேன். வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் கூடவே ராமபாண சரம் வைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பிடித்த அடர் தேன் நிற ப்ளெயின் புடவை. இதே போலொரு புடவையை கட்டிக்கொண்டு ராஜீவ் காந்தி இறந்த தினம் பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தது  நினைவுக்கு வந்தது.

அபிக்கும் இனியாவுக்கும் இரண்டு சரங்கள் தனியே தொடுத்து எடுத்துக்கொண்டேன், மாலதிக்கு கொடுக்க முடியாமலாகிவிட்டது துயரளித்தது. ஆனால் மாலா ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது?

காரில்  பொதுவாக ஏஸி போட்டுக்கொள்வதில்லை எனினும் வெயில் தாளாமால் போட்டுக்கொண்டேன். பொள்ளாச்சி வருவதற்குள் ராமபாண சுகந்தம் கமழ்ந்தது.  தி ஜாவின் கதையில் வருமே ஸ்வாமி அலமாரியில் முந்தின நாள் வைத்திருந்த ஜாதிமல்லி அரும்புகளின் மணம் மறு நாள் காலையில் மனதை நிறைத்ததும் அந்த மனைவியை இழந்த ஒரு சிறு மகளின் தகப்பனார் உடனே ஒரு திருமணம் செய்துகொண்டுவிடுவாரே!அப்படி ஒரு மயக்கும் நறுமணம்.

கிணத்துக்கடவு வருகையில் மலர்மணம் பித்து பிடிக்க வைத்தது. மனம் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு மிதந்து பறந்துவிடும் போலானதும் ,ஏஸியை அணைக்க சொல்லிவிட்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டேன்.  

என்னவோ அதிசயமாக சாலையில் போக்குவரத்து மிகவும் நீர்த்திருந்தது. கற்பகம் வழியே பைபாஸ் சாலையில் சென்று நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்டேன்.  யூ டர்ன் போடுகையில் கடந்த ஜென்னிஸ் கிளப் ஒரு மின்னலை உண்டாக்கியது. அந்த பழங்காலத்திய அரங்கிற்கு முதன் முதலாக வந்திருக்கிறேன்.

மாலதி அரைமணி கழித்து வருவதாக சொன்னதும் பாதியில் இருந்த நைட் ஏக்‌ஷன் தொடரை பார்க்க நினைத்தேன் எனினும் மனம் ஒரு நிலையில் இல்லை எனவே அமைதியாக அந்த மரநிழலில் காத்திருந்தேன்.

ஜெகனும் மாலதியும் ஒரே சமயத்தில் வந்தார்கள் ஜெகன் என்னை கண்டதும் வியப்பாகினான். நான் அவனிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தேன்.இனியா வந்திருந்தாள் அபி  மருத்துவமனையில் கூட்டமதிகமென்பதால் பின்னர் வரவிருந்தாள்.மாலதி என்னை இறுக்க கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டதும் நானும் கட்டிக்கொண்டேன். அரங்கில் அமர்ந்த பின்னரும் மற்றுமொரு முறை மாலா என் கன்னத்தில் முத்தமிட்டு ’’இன்னிக்கு என்னவோ ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்றாள்

.

ஓரளவுக்கு கூட்டம், எனக்கு தெரிந்த வேண்டிய முகங்களை தேடினேன் யாரும் இல்லை. நிகழ்ச்சியில் நானும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் பலமுறை. அபியும் வந்துவிட்டாள் .

ஜெகன் ஜெ வின் சில நகைச்சுவைகளை நகலெடுத்தான். கூட்டத்தில் பலவயதுள்ளோரும் இருந்தோம் சிறு குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை. ஆடியன்ஸ் பல்ஸ் என்பார்களே அதை நன்றாக பார்த்து தக்கபடி பேசிய ஜெகன் அந்த கூட்டத்தில் பேசியிருக்க வேண்டாத பெரியவர்களுக்கேயான சிலவற்றை பேசியது எனக்கு உவக்கவில்லை.

அதில் நகைச்சுவை இருக்கலாம் எனினும் அத்தனை அந்தரங்கமான விஷயத்தை தன் சொந்த வாழ்வில் இணைத்து அப்படி பரஸ்யமாக்கியது எனக்கு ஒரு விலகலை அளித்தது, மாலதிக்காக முக மாறுபாடுகளை கவனமாக மறைத்துக்கொண்டேன்

நிகழ்ச்சி முடிய 9 மணியானது, பின்னர் அந்த தீப்பிடித்தது போலான போக்குவரத்து நெரிசலில் அண்ண பூர்ணா சென்று இரவுணவுக்கு பின்னர் புறப்பட இரவு 10 மணிக்கும் மேலானது. அபியை இருசக்கர வாகனத்தில் அனுப்பி விட்டு புறப்பட்டோம். பின்னாலேயே மாலதியும் இனியாவும் அவர்கள் காரில் வந்தனர்

மாலதி கார் ஒட்டிக்கொண்டு வந்தது எனக்கு பெரும் மனநிறைவை அளித்தது.

பைபாஸில் அத்தனை போக்குவரத்து இல்லை. பீளமேடு சாலையில்  வானில் நிலவில்லை,  சின்னியம்பாளையும் கிளைச்சாலையில் திரும்பியதும் என் இடப்பக்கம் பொன்னென முழுநிலவெழுந்தது,

நல்ல குளிர் காற்றில், வானின்  அப்பெரு வெளியில் ஒரு மேகப்பிசிறோ விண்மீனோ இன்றி தன்னந்தனித்திருந்தது நிலவு. முழு நிலவு தோன்றி சிலநாட்களாயிருந்தது,  நீர் பட்டுக்கலைந்த ஓவியம் போல கொஞ்சம் கலைந்திருந்தது. எனினும் கீழ்ப்பகுதியின் பிறை வடிவு மட்டும் கூடுதல் ஒளிகொண்டிருந்தது.

அத்தனை வசீகரமாக அத்தனை பேரழகுடன் அத்தனை தனித்திருந்த நிலவு பெரும் துயரளித்தது.போதாக்குறைக்கு வானொலியில் ’’செந்தாழம்பூவில்’’ பாடிக்கொண்டிருந்தார்  தாஸேட்டன்.

ஷோபாவின் எளிய அழகையும் சரத்பாபுவின் கனவில் மிதக்கும் கண்களையும் அந்த மலைப்பாதை ஜீப் பயணத்தையும் நினைவில் மீட்டிக்கொண்டேன்.

கற்பகம் சந்திப்பில் மாலாவிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஞாயிறென்பதால் பல கடைகள் அடைத்திருந்தன. பல தெருக்கள் சந்தடியின்றி இருந்தன. என்னவோ ஒரு இனம்புரியாத துக்கம் நெஞ்சில் கல்லைப்போல அழுத்திக்கொண்டிருந்தது

நிலவு என்னையும் நான் நிலவையும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டே பயணித்தோம்.  நிலவை புகைப்படம் எடுத்துக்கொண்டேன், ஒரு மேம்பால வளைவில் கொஞ்சம் முயன்றால் கையில் அள்ளி எடுத்து விடலாம் போல  நிலவு வெகுஅருகில் வந்தது.

சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வழி வருகையில் நள்ளிரவு 12 மணி ஒரு பூக்கடையின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக பலர் பூத்தொடுத்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கும் மலரின் சுகந்தம் மனம் மயக்குமா, மலர் தொடுத்தலை ஒரு தொழிலாக அகாலத்தில் செய்து கொண்டிருக்கையில் அப்படியான இனிமையை மனம் உணருமா?

வால்பாறை சாலையில் ஓரிடத்தில்  வரிசையான விளக்குகள் ஒளிர ஒரு அம்மன் கோவில் விழா நடந்த அடையாளங்கள் மிச்சமிருந்தன, சிம்மவாஹினியை ஒளிரும் பலவண்ண சிறு விளக்குகளால் சாலையோரம்  அமைத்திருந்தார்கள் சற்றுத்தள்ளி இளமுருகனும் வேலும் மயிலுமாக குறுஞ்சிரிப்புடன் ஒளிர்ந்தான,கைகூப்பி வணங்கி  இருக்கிறீர்கள் தானே தெய்வங்களே ?என்று மானசீகமாக வினவினேன் கண் நிறைந்தது.  நெஞ்சின் எடையுடன் தொண்டைக்குழியிலும் ஒன்று அடைத்துக்கொண்டது.

வீட்டுக்கு வரும்வரை நிலவு தொடர்ந்துகொண்டிருந்தது. என் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறதோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்

சரி நிலவாவது இருக்கிறதே என்னுடன் இணைந்து பயணிக்க!

வீடு திரும்பும்அரசமர வளைவிலும் தொடர்ந்த நிலவு மலைவேம்பின் கிளைகளுக்குள் புகுந்து புன்னையின் மின்னிலைகளுக்கு மேல் நின்று கொண்டு விடை கொடுத்தது.

ஏன் இந்த ஒற்றை நிலவு இன்று  இத்தனை துயரளித்தது?

என்னைபோலத்தான் அதுவும், தனித்தது, துயருற்றது, மனதளவில் எங்கோ வெகு தொலைவில் இருப்பது, லேசாக கலைந்திருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்திலாவது மினுங்கலை  மிச்சம் வைத்திருப்பது. களைத்திருந்தேன் எனினும்  இன்றைய நாளை எழுதவிரும்பினேன்.

அத்தனை அமைதியாக  என் முன்னே முடிவற்று நீண்டு கிடந்த  இரவை முன்வாசல் அகல்விளக்கின் சுடரொளி திரைச்சீலை அசைகையில் உண்டான இடைவெளிகளின் வழியே கீறி கீறிச் சென்றுகொண்டிருக்கிறது.