இன்று இன்ஸ்டாவில் கும்ப்ளாங்கி நைட்ஸ் -ன் சில காட்சிகளை மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு எவர்கிரீன் படமாகிவிட்டிருக்கிறது கேரளத்திலும் என்னைபோல அரைமலையாளிகளுக்கும்.
இனி கேரளா இல்லை தெரியும் தானே? இந்த வாரத்திலிருந்து கேரளமானு.
அன்னா பென், கன்னக்குழியழகன் ஷான் நிகாமிடம் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்கென வீண்டும் ஒருக்கில் மீன் வலையை வீசச்சொல்லிக் கேட்டுக்கொள்வதும், அநாயசமாக வலை வீசும் ஷான், அகலக்கண்ணி அன்னாவின் காதல் வலையில் சிக்கிக்கொள்ளும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு முறை படத்தைப் பார்க்கவேண்டும் நேரம் கிடைக்கையில். பசுமை கண்ணை நிறைக்கிறது காட்சிக்கு காட்சி.
இன்னொரு துண்டு ரீல்ஸில் ஷெளபின் ஷாகீரிடம், ஷான் தனது காதலை லேசாகச்சொல்லி, காதலியின் அக்காள் கணவனாகிய ஃபகத்திடன் வந்து பேசச் சொல்லிக்கேட்கும் காட்சியைப்பார்த்தேன். உண்மையிலேயே ஷெளபின் அசாத்தியமான கலைஞன். அதே காட்சியை உலகின் வேறெந்த நடிகரும் அத்தனை சரியாக சிறப்பாக நடிக்கவெ முடியாது. சாம்பவியுடன் ஷாகிரின் மகள்(மனைவியின் மகள்) படிக்கிறாள் என்று எனக்கு இன்று பெருமையாக இருந்ததென்றால் பாருங்களேன். நான் அவரின் ரசிகை (டென்ஸைல் வாஷிங்டன், இட்ரிஸ் எல்பா, பார்த்திபன் மற்றும் டாம் க்ரூஸ் இவர்களுடன்).
சட்டையிலாமல் இடிந்த திண்ணையில் படுத்துக்கொண்டு தேங்காயை கரண்டியபடி, அவ்வப்போது கடித்துக்கொள்ள,வெற்று மார்பில் துண்டு வெல்லத்தை வைத்துக்கொண்டு நடிக்க தமிழில் யாராவது இருக்கிறார்களா என்ன? அப்படி ஒரு காட்சியை ஒரு நடிகரிடம் சொல்லும் துணிவு கொண்ட இயக்குநர்களோ உதவி இயக்குநர்களோ இருப்பார்களா முதலில்?
அண்ணன் என்று கூப்பிடச்சொல்லி, ஷான் அப்படிக் கூப்பிடுகையில் செளபினின் நடிப்பு அபாரம் அபாரம். இன்று நினைத்துப் பாரக்கையில் கும்பளாங்கி நைட்ஸுக்கு நான் எழுதிய திரைவிமர்சனம் அசட்டுத்தனமானது என்று தோன்றுகிறது ஆனால் படம் பார்த்ததும் உணர்வெழுச்சியில் அப்போதே எழுதியது என்பதால் மன்னிக்கலாம்.
கரீபியன் கடல் தீவு கூட்டங்களில் ஒன்றான குவாடலூப்பில் (Guadeloupe.) நவம்பர் 4, 1493’ல் தனது இரண்டாம் பயணத்தின் போது வந்திறங்கிய கொலம்பஸுக்கு அத்தீவின் ஆதிகுடிகள் உணவளித்து வரவேற்றார்கள். அவரது முதல் பயணத்தின் படுகொலைகள் ஏற்கனவே அத்தீவுக்கூட்டங்களில் அறியப்பட்டிருந்ததால் அங்கு கொலம்பஸுக்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை.
அவர்கள் அளித்த ஒரு வகைச் சாறு நிரம்பிய புளிப்பும் இனிப்புமான பழமொன்று கொலம்பஸ் அதுவரை கண்டிராத சுவை கொண்டிருந்தது. ஆதிகுடிகள் அதை ‘பழம்’ என்னும் பொருளில் நனாஸ் அல்லது ’மிகச் சிறந்த பழமென்னும்’ பொருளில் அனானஸ் (Ananas) என்றும் அழைத்தனர். (துபி மொழியில்). அப்பழம் கடினமாக உச்சியில் கூர்நுனி கொண்ட சிற்றிலைகளுடன் பொன்மஞ்சள் நிறத்தில் இருந்தது.
அப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மதுவும் கொலம்பஸுக்கு அளிக்கப்பட்டது, அச்சுவையில் கிறங்கிய கொலம்பஸ் அந்த பழம் கிடைக்கும் செடியை காணச்சென்றார். நான்கடி உயரத்தில், வாள் போன்ற விறைப்பான இலைகளுடன் மத்தியில் கிரீடம் போன்ற சிற்றிலைக் கொத்துக்களுடன் பழங்களை கொண்டிருந்த அச்செடி ஆதிகுடிகளால் சாகுபடி செய்யப்பட்டு கொண்டிருந்ததையும், ஒவ்வொரு குடிசை வாசலிலும் அப்பழம் வரவேற்பின் அடையாளமாக தொங்கவிடப் பட்டிருப்பதையும் கண்டார்.
கொலம்பஸ் அங்கிருந்து அக்கனியின் விதைகளையும் தன்னுடன் வந்திருந்த 17 கப்பல்களில் ஏராளமான பழுத்த கனிகளையும் ஸ்பெயினுக்கு திரும்பிச் செல்லுகையில் கொண்டு வந்தார். அவற்றுடன் அனானாஸ் என்னும் பெயரும் பயணித்தது. இன்று நாம் தமிழில் அன்னாசி என்று அழைக்கும் பைனாப்பிள் தான் அன்று கொலம்பஸால் கண்டறியப்பட்டது.
கொலம்பஸின் பால்யகால நண்பரும் இரண்டாம் கடற்பயணத்தின் போது உடனிருந்தவருமான மைக்கேல் டி குனியோ (Michael de Cuneo) //ஆர்டிசோக்கை போல இருந்த அச்செடியில் பைன் மரங்களின் கோன்களை போல தோற்றமளித்த, அவற்றைக் காட்டிலும் இரு மடங்கு பெரிய, நல்ல ருசி கொண்ட கனிகள், டர்னிப்புக்களை போல கடினமான அவற்றை கத்தியால் மட்டுமே வெட்டி உண்ண முடியும். இக்கனி சத்துக்கள் நிரம்பியது// என்று தனது பயணக் கட்டுரைகளில் முதன்முதலாக குறிப்பிட்டிருந்தார்.
நீண்ட பயணம் ஆதலால் கொலம்பஸ் கொண்டு வந்திருந்தவற்றில் சில மட்டுமே கெட்டுப்போகாமல் இருந்தன. அந்த பழத்தை அப்போதைய இளவரசி இஸபெல்லாவிற்கு கொலம்பஸ் பரிசளித்தார். அது போன்ற புதிய உணவு பொருட்களில் நஞ்சிருக்கும் என்னும் சந்தேகத்தினால் வழக்கமாக பிறர் உண்டபின்பு அரசகுடியினர் உண்பது வழக்கத்தில் இருந்தது. எனவே இளவரசியின் ஆசிரியர் பீட்டர் அதை முதலில் உண்டு ஆபத்தில்லாதது என உறுதி செய்த பின்னர் இஸபெல்லா அதை சுவைத்தார். புளிப்பும், இனிப்பும், வாசனையுமான அது அவருக்கு மிக பிரியமானதொன்றாகி விட்டது. இஸபெல்லாவின் காலையுணவில் மறுநாளிலிருந்து அவை தவறாமல் இடம் பிடித்தன
பீட்டர் தனது நாட்குறிப்பில் ’அந்த’ நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு பழத்தை தான் சாப்பிட்டதாகவும், அது வடிவத்திலும் நிறத்திலும் ஒரு பைன் நட்டை போன்றது, செதில்களால் மூடப்பட்டது மற்றும் முலாம் பழத்தை விட உறுதியானது அதன் சுவை மற்ற அனைத்துப் பழங்களையும் விட சிறந்தது. என பதிவு செய்திருந்தார்
அப்பழங்கள் பைன் கோன்களை போல இருந்ததால் கொலம்பஸ் அதற்கு இண்டீஸ் பைன் என்று பெயரிட்டார். இன்று இந்த பழம் ஆங்கிலத்தில் பைனாப்பிள் எனவும் டச்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் அனானாஸ் என்றும் அழைக்கப்படுகிறது கொலம்பஸ் அக்கனியின் விதைகளை ஸ்பெயினில் பயிரிட்டார். எனினும் வெப்ப மண்டலப்பயிரான அது அங்கு வளரவில்லை.
அன்னாசியின் தோற்றம்:
அன்னாசியின் காட்டு மூதாதைப் பயிர்கள் பிரேசிலுக்கும் பராகுவேவிற்கும் நடுவில் பரனா-பெராகுவே ஆற்று வடிகால்களில் வளர்ந்தன. இவற்றை வடக்கு பராகுவேயின் காருனி பழங்குடி இந்தியர்கள் முதன் முதலாகச் சாகுபடி செய்தனர்.
அவை எவ்வாறு பழங்குடியினரால் கண்டு கொள்ளப்பட்டுச் சாகுபடி செய்யப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை பழங்குடியினரால் ஏராளமாக சாகுபடி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. பெரு மற்றும் மெக்ஸிகோவின் அகழ்வாய்வுகளில் 200 கிமு – கிபி 700 காலகட்டத்தில் அன்னாசி பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மாயன்களும் அஸ்டெக்குகளும் அன்னாசியை சாகுபடி செய்து அதன் மதுவை அருந்தியிருக்கின்றனர். பிரேசிலின் தென்பகுதியை சேர்ந்த அன்னாசி 15 ம் நூற்றாண்டில் மத்திய மற்றும் வடஅமெரிக்காவிலும் புழக்கத்திலிருந்து.
1400-களில் சாகுபடி செய்யப்பட்ட அன்னாசி அமெரிக்க பழங்குடியினரின் அன்றாட உணவுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது அதன் பிறகே கொலம்பஸ் அதனை கண்டறிந்து ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்
பெயர்கள்
1577ல் கத்தோலிக்க இறைப்பணியாளரான André Thevet’s தனது “The New Found World.” ’புதியதாக கண்டறிய பட்ட உலகம்’ என்னும் தனது பயண அனுபவங்களின் தொகுப்பு நூலில் பைனாப்பிள் பழத்தை பற்றிய குறிப்புகள் கொடுத்திருந்தார். அவர் அன்னாசியை குறிக்க Hoyriri, என்னும் சொல்லை உபயோகித்திருந்தார்.
முதன்முதலாக பைனாப்பிள் என்னும் ஆங்கிலச்சொல் 1398’ல் ஊசியிலை மரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களை குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டது. அன்னாசி பழத்தை முதலில் பார்த்தபோது ஐரோப்பியர்களுக்கு முட்செதில்கள் கொண்ட உருளை வடிவ அப்பழம் காண்பதற்கு பெரிய அளவு பைன் மரக்கோன்களை போலிருந்ததால் அதையும் பைனாப்பிள் என்றே அழைத்தனர். 1964ல் அன்னாசியின் ஆங்கில பெயர் “pineapple” என்பது அச்சில் குறிப்பிடப்பட்டது.
ஸ்பேனிஷ் மொழியில் இவை பைனா என்றழைக்கப்படுகின்றன எனினும் கப்பலில் அன்று கொலம்பஸுடன் பயணித்த அனானஸ் என்பதுதான் உலகின் பல மொழிகளிலும் இதன் பெயரக இருக்கிறது.தமிழிலும் இது அன்னாசிதான். செந்தாழை என்றும் தமிழில் அன்னாசிக்கு பெயருண்டு.
17-ம் நூற்றாண்டில் தாவரவியலாளர் சார்லஸ் ப்ளுமரால் இதன் தாவரவியல் தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. சார்லஸ் அந்த தாவரத்துக்கு Ananas aculeatus fructu ovato, carne albida. என்று பெயரிட்டார். ஸ்வீடன் தாவரவியலாளரான ப்ரோமெல்லை கெளரவப்படுத்த ப்ரோமீலியா என்னும் பேரினம் சார்லஸால் பெயரிடப் பட்டிருந்தது. பின்னர் 1753’ல் வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் Bromelia ananas/ Bromelia comosa. என அன்னாசிக்கு அறிவியல் பெயரிட்டார்.
பிரபல அமெரிக்க தாவரவியலாளரும், ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தின் அனைத்து தாவர வகைகளையும் பதிவு செய்து ஒரு மில்லியன் உலர் தாவர சேகரிப்புக்களை வைத்திருந்த மெரில் என்பவரால் அன்னாசி (Elmer Drew Merrill) Ananas comosus என்று இறுதியாக பெயரிடப்பட்டது.
பிரேசில் பழங்குடியினரின் துபி (Tupi) மொழியில் நனாஸ் என்றால் பைன் அல்லது பழம், காஸ்மோஸஸ் என்பது அன்னாசிச் செடியின் அடர்ந்த இலைகளை குறிக்கிறது. இதன் அடிப்படையில்தான் இந்த அறிவியல் பெயர் வைக்கப்பட்டது.
ஹவாயில் அன்னாசி ’வெளிநாட்டு பழம்’ எனும் பொருளில் ஹலா -காஹிகி (Halakahiki) என்றழைக்கப்படுகின்றது, ஹலா என்றால் கனி, காஹிகி என்றால் வெளிநாடு. பிரேசில் மற்றும் பராகுவேயை சேர்ந்தவை என்பதால் அன்னாசி முதன் முதலாக ஹவாய்க்கு அறிமுகமான போது அவற்றை வெளிநாட்டுப் பழம் என்று அம்மக்கள் அழைத்து அதே பெயர் இன்று வரை நிலைத்து விட்டிருக்கிறது
அன்னாசி ஆங்கிலத்தில் பைன் ஆப்பிள் என்றழைக்கப்பட்டாலும் இது பைனுக்கோ அல்லது ஆப்பிளுக்கோ தொடர்புடையது அல்ல .பெரி எனப்படும் சதைப்பற்றான கனிவகையை சேர்ந்தது. coenocarpium எனப்படும் பல நுண் கனிகளின் கூட்டுக்கனிதான் அன்னாசி.
தாவரவியல் தகவல்கள்
அன்னாசியின் முதல் சித்திரம் ஸ்பெயினை சேர்ந்த ஓவியரும் தாவரவியலாளரும், வரலாற்றாய்வாளருமான ஒவியெடோவால் (Oviedo) 1535 ல் அவரது Historia General de Las Indias என்னும் நூலில் வெளியானது.
ப்ரோமிலியேசியை சேர்ந்த அன்னாசி பல வருடங்கள் வளரும் ஒருவித்திலை பல்லாண்டுத் தாவரம். குறைந்தது 50 ஆண்டுகள் இது வளர்ந்து பலன் தரும்
அன்னாசிச் செடி வளர்ந்து 3 வருடங்களில் தன் முதல் கனியை அளிக்கும். ஒரு வருடத்தில் ஒரு செடியில் ஒற்றை கனிதான் உருவாகும்
30-லிருந்து 40 விறைப்பான சதைப்பற்றான நெருக்கமாக அமைந்திருக்கும் வாள் போன்ற இலைகள் வட்ட அடுக்குகளில் இருக்கும். இலை நுனி ஊசி போல கூர்மையாக இருக்கும். நட்ட 20 -வது மாதத்தில் மலர்த் தண்டு செடியின் மையத்திலிருந்து உருவாகி மஞ்சரி தோன்றும். 100லிருந்து 200 வரை சிவப்பு அல்லது இளம் ஊதா நிற தனித்தனி சிறு மலர்கள் இணைந்து ஒற்றை மஞ்சரியாக காணப்படும். அவை கருவுற்று 5 அல்லது 6 மாதங்களில் 50 லிருந்து 200 வரை இருக்கும் ஒவ்வொரு சிறு மலரின் அடிச்சூலகங்களும் மையத்தண்டுடன் இணைந்து அன்னாசி என்னும் கூட்டுக்கனி உருவாகும் . சுமாராக ஒரு கனி 1லிருந்து 2 கிலோ எடை கொண்டிருக்கும்,
அன்னாசியின் கடினமான சொறசொறப்பான செதில்கள் கொண்டிருக்கும். வெளிப்புறம் இருக்கும் பலகோண வடிவங்கள் அனைத்தும் பழுத்த சூலகங்கள்தான். அன்னாசி விதைகளற்றது. தென்னமெரிக்க காட்டு அன்னாசிகள் மட்டுமே இறகுகள் கொண்ட சிறு விதைகள் கொண்டவை .
வரலாறு மற்றும் பரவல்
கொலம்பஸ் அறிமுகப்படுத்திய பின்னர் ஸ்பெயின் அரச குடும்பங்களில் காலை உணவுகளில் அன்னாசி தவறாமல் இருந்தது. அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்தே ஐரோப்பியர்களின் பிரியத்துக்குரியதாகிய அப்பழம் அப்போதிலிருந்தே பிரபுத்துவம் மற்றும் கலைத் திறனுக்கு அடையாளமாக இருந்தது
வெப்ப மண்டலங்களில் வளரும் அன்னாசி ஐரோப்பாவின் குளிர்ந்த காலநிலைகளில் வெப்ப அறைகளில் அதிக பொருட்செலவில் சாகுபடி செய்யப்பட்டது. எனவே அன்னாசி செல்வத்தின், வளமையின், செல்வாக்கின் அடையாளமாக கருதப்பட்டது மேலும் தோட்டக்கலைத்துறையாளர்களின் பெருமிதங்களில் ஒன்றாகவும் இருந்தது
ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் விருந்து மேசைகளின் மத்தியில் ஒரு ஆடம்பரப் பொருளாக அன்னாசி காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு அன்னாசி அதிக அளவில் சாகுபடி செய்ய முடியாததால் பெரும்பாலும் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டது. எனவே தங்கள் செல்வச்செழிப்பை அப்போது பலரும் இப்படி அன்னாசியை காட்சி படுத்துவதன் மூலம் காட்டிக்கொண்டர்கள். ஒரு சிலர் அன்னாசியை ஒரு மாலை விருந்துக்கு கடன் வாங்கியும் சென்றார்கள். பல சமயங்களில் காட்சிப்படுத்தப்படும் அன்னாசி உண்ணப்படாமல் அழுகிப்போகும்.
வீடுகள் பெரும் கட்டிடங்கள், தேவாலயங்கள், அரண்மனைகளில் எல்லாம் அன்னாசி வடிவம் தவறாமல் இடம் பெற தொடங்கியது.
அக்காலத்தில் அன்னாசியின் சுவைக்கு பலரும் அடிமையானதற்கு அதன் இனிப்புச் சுவையே பிரதான காரணம். அக்காலத்தில் கரும்புச்சர்க்கரைக்கு மிக அதிக விலை இருந்தது எனவே இயற்கையாகவே இனிப்புச்சுவை கொண்டிருந்த அன்னாசி மக்கள் நாவில் நீங்கா இடம்பெற்றது. அன்னாசியை பழரசமாகவும், இனிப்புகளில் சேர்த்தும் உண்டு மகிழ்ந்தார்கள்.பல சிறார் பாடல்களிலும் அன்னாசி இடம்பெற்றிருந்தது.
1500-களில் அன்னாசியின் இலைகளிருந்து நாரெடுத்து துணிகளும் பிலிப்பைன்சில் உருவாக்கப்பட்டன. 1510-ல் கோவாவுக்கு போர்ச்சுக்கீசியர்கள் அன்னாசியை அறிமுகப்படுத்தினார்கள். K T Achaya தனது The Historical Companion to Indian Food- ‘இந்திய உணவுகளின் வரலாறு’ என்னும் நூலில் 1564- ல் இந்தியாவில் அன்னாசிப்பழங்கள் இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார்
அனைவருமே ஒரு துண்டு அன்னாசியாவது சுவைக்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தனர். எனினும் அரசகுடும்பத்தினருக்கு அதில் முன்னுரிமை இருந்தது.
ஐரோப்பாவில் வெப்ப அறைகளை உருவாக்கி அவற்றில் அன்னாசி சாகுபடி வெற்றிகரமாக நடைபெற்றது. வெப்ப அறைகளில் ஓக் மரப்பட்டைகளை அரைத்து தூளாக்கி எரித்து 27 பாகை எப்போதும் இருக்கும்படி சுவர்களின் துளைகள் வழியே வெப்பமூட்டப்பட்டது.
பலர் கரீபியன் தீவுகளுக்கு அன்னாசிகளுக்கென்றே கடற்பயணம் மேற்கொண்டார்கள். 16-ம் நூற்றண்டின் இறுதிக்குள் உலகின் வெப்ப மண்டல நாடுகள் அனைத்திலும் அன்னாசி சாகுபடி துவங்கி இருந்தது.
1655-ல் தென்னாப்பிரிகாவில்,16’ம் நூற்றண்டின் இறுதியில் சீனா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் அன்னாசி சாகுபடியானது
1675 லிருந்து 1680,க்குள் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அவரது அரண்மனை தோட்டக்காரர் ஜான் ரோஸ் முழந்தாளிட்டு அவருக்கு அங்கு விளைந்த முதல் அன்னாசியை அளிக்கும் காட்சியை பிரபல ஓவியர் ஹெண்ட்ரிக்கைக் (Hendrick Danckurts) கொண்டு வரைந்து காட்சிப்படுத்தினார், அதன்பிறகு அன்னாசிகள் அரசர்களின் அடையாளமாகியது
உயர்குடி பிரிட்டன் மக்கள் வசித்த பார்ன்படோஸ் நாக்ரில் Barbados, அன்னாசி பசுங்குடில்களில் சாகுபடி செய்யபட்டது. இங்கிலாந்துக்கு சென்ற பலர் அன்னாசியை கண்டதை பயணக்குறிப்புக்களில் குறிப்பிட்டனர்.
இங்கிலாந்தின் இரண்டாம் வில்லியமுக்கு அளிக்கவென 1699ல் உருவாக்கப்பட்ட ஒரு வெள்ளிச் சிறு மேசையில் அழகிய அன்னாசியின் உருவம் இருந்தது. உயர்குடியினரின் நாற்காலிகளின் மெத்தைகளில் கூட அன்னாசி உருவம் வரையப்பட்டிருக்கும் துணிகளே உபயோகப்படுத்தப்பட்டன.1700 களில் அன்னாசிக்காய்ச்சல் எங்கும் பரவி இருந்தது விக்டோரிய காலத்தில் கண்ணாடிக்குடில்களில் அன்னாசி வளர்க்கப்பட்டது
16, 17-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா முழுவதிலும் அன்னாசி உயர்குடிகளின் பழங்களாக கருதப்பட்டது. அச்சமயத்தில் போர்த்துக்கீசியர்கள் உலகின் பிறபகுதிகளுக்கு கரீபிய தீவுகளிலிருந்து அன்னாசியை அறிமுகப் படுத்திதாதல் ஐரோப்பாவில் அன்னாசி பழங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன.
இங்கிலாந்தில் அன்னாசி அறிமுகமாவதற்கு 100 வருடங்கள் முன்பே இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களால் 15-ம் நூற்றாண்டில் அறிமுகமாயிருந்தது அக்பரின் அரசாட்சியை குறித்த 16-ம் நூற்றாண்டு நூலான அயினி அக்பரில் அன்னாசி பழங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் அரண்மனை கணக்கு வழக்குகளில் ஒரு அன்னாசியின் விலை பத்து மாம்பழங்களின் விலைக்கு இணையானது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது
1681-ல் அன்னாசி கிருஸ்துவத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டது ரோமானிய கட்டிட கலைகளில் இடம்பெறும் பைன் கோன்களுக்கு இணையாக உலகின் பல நாடுகளின் கட்டிடங்களில் அன்னாசி வடிவங்கள் இடம் பெற துவங்கின.
ஐரோப்பியர்களின் உணவு மேசைக்கென உலகின் பல நாடுகளில் அன்னாசி விளைந்தது. அன்னாசிப் பழங்களுக்கென்றே ஐரோப்பாவின் விரைவுக் கப்பல்கள் பிரத்யேகமாக இயங்கின.
1687-ல் பூச்சிகள் மற்றும் மலர்களின் சித்திரங்களை தொகுத்தற்காக உலகப்புகழ்பெற்ற, ஆக்னஸ் (Agnes Block) நெதர்லாந்தில் இருந்த தனது வெளிநாட்டு தாவரங்களுக்கான பிரத்யேக தோட்டத்துக்கு அன்னாசிச் செடியைக் கொண்டு வந்தார்.
ஹாலந்தில் முதல் கனி 1690களில் அறுவடை செய்யப்பட்டது அங்கு முதல் வெற்றிகரமான பசுங்குடில் அன்னாசி சாகுபடியும் அறுவடையும் 17ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்தது
அப்போது அன்னாசிச் செடிகளை செயற்கையாக , வலுக்கட்டாயமாக மலரவைப்பது குறித்த தொழில்நுட்பங்கள் தோட்டக்கலை சஞ்சிகைகளில் வெளியாகின. 17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் நெதர்லாந்தில் அன்னாசி சாகுபடி செழித்திருந்தது.
1807களில் அன்னாசித் திருட்டுக்கள் குறித்த பல செய்திகள் உலகின் பல நாடுகளின் நாளிதழ்களில் வெளிவந்தன. ஆஸ்திரேலியாவில் ஏழு அன்னாசி திருடிய ஒருவருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது
அன்னாசிகளை கரீபியன் தீவுகளில் இருந்து ஐரோப்பா கொண்டு செல்வது 1800களில் நீராவிக் கப்பல்கள் வந்தபின்னர் மிக எளிதாகியது.
நீராவிக்கப்பல்கள் இயங்கத் தொடங்கியபோது இங்கிலாந்தை சேர்ந்த குடுவைத் தோட்டத்தை (Terrarium) கண்டுபிடித்தவரான வார்ட் (Nathaniel Bagshaw Ward) கண்ணாடிகூண்டுகளை பிரத்யேகமாக அன்னாசி பழங்களை கொண்டு செல்லவேண்டியே வடிவமைத்து கொடுத்தார். அதிலும் அன்னாசி பழங்கள் பல நாடுகளுக்கும் பயணித்தன
வார்ட் 1842 ல் வெளியான தனது தனது On the Growth of Plants in Closely Glazed Cases என்னும் நூலில் அன்னாசியின் இந்த மூடிய கண்ணாடிக்கூண்டு பயணத்தை விவரித்திருக்கிறார்.
ஐரோப்பாவின் அன்னாசி சாகுபடி மையமாகவே நெதர்லாந்து இருந்தது, 1816 ல் அறிமுகமான கொதிநீர் வெப்ப சாகுபடி முறைகளுக்கு பின்னர் அன்னாசி எளிதாக சாதாரண மக்களும் வாங்கும் படியான ஒரு பழமானது
சார்லஸ் டிக்கின்சனின் டேவிட் காப்பர்ஃபீல்ட் புதினத்தில் கோவண்ட் கார்டன் மார்க்கெட்டில் பார்த்த அன்னாசிப்பழத்தால் கதாநாயகன் ஈர்க்கப்பட்டு
//,,அல்லது நான் கோவண்ட் கார்டன் சந்தை வரை நடந்து சென்று அன்னாசிப் பழங்களை உற்றுப் பார்த்திருக்கிறேன்// என்றுசொல்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
“… or I have strolled, at such a time, as far as Covent Garden Market, and stared at the pineapples.”
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் Big Pineapple என்னும் மிகபெரிய அன்னாசி வடிவக் கட்டிடம் கட்டப்பட்டது அது இப்போதும் பிரபல சுற்றுலா தலமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் பாத்ரஸ் (Bathurst) நகரில் குயின்ஸ்லாந்தின் அதே மாதிரியில் பெரிய அன்னாசி என்னும் கட்டிடம் அமைக்கப்பட்டது 16.7 மீ உயரம் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் அன்னாசியை குறித்த ஆய்வுகள் நடக்கின்றன.
அன்னாசி வடிவம் கதவுகளில் செதுக்கப்பட்டன மேசைவிரிப்புகள், கைக்குட்டைகள், போர்வைகளில் அன்னாசியின் சித்திரம் வரையபட்டது கட்டிடக்கலையில், இறையியலில், சுவர் சித்திரங்களில் இடம்பெற துவங்கிய அன்னாசி இங்கிலாந்தில் விருந்தோம்பலின் அடையளமாக இருந்தது. இன்றும் இங்கிலாந்து விருந்துகளில் அன்னாசிக்கென சிற்ப்பான இடம் இருக்கிறது.
கிரீடம் போன்ற இலைக்கொத்தும் கொண்டிருந்த்தால், 1800 களில் பழங்களில் அரசனாக இருந்த அன்னாசி சுவையின் உலகை ஆண்டது என்றே சொல்லலாம்
பிரான்சுக்கு 1730’ல் அன்னாசி அறிமுகமானது. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அதிக கடினமான இலைகளுடன் கூடிய அன்னாசி செடிகள் 1838-ல் அறிமுகமாயின. இங்கிலாந்தின் கியூ தோட்டத்தில் இலங்கை, ஜமைக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட பல புதிய அன்னாசி ரகங்கள் வளரத் துவங்கின
அன்னாசியின் வரத்து அதிகரித்ததால் அதை சாதாரண மக்களும் வாங்க முடிந்தது குறிப்பாக மாலுமிகள் கடற்பயணம் முடித்து திரும்புகையில் வீட்டின் கதவில் அன்னாசிப் பழத்தைக் கட்டி தொங்கவிடுவது ஒரு வழக்கமாக இருந்தது.18-ம் நூற்றாண்டில் அன்னாசி எளிதாக இறக்குமதி செய்யப்படும் ஒன்றாகிய போது அதன் புகழ் மங்கியது அப்போதிலிருந்து அன்னாசி செல்வத்தின் அடையாளமாக இல்லாமல் அசலான அதன் ஆதி உபயோகமான உணவு, மது மற்றும் வரவேற்புக்கானதாகியது என்று பதிவு செய்கிறார் வரலாற்றாய்வாளர் நிக்கோலா கர்னிக் (Nicola Cornick)
ஹவாய் அன்னாசி
1886 ல் ஜேம்ஸ் டோல் என்பவரால் ஹவாயில் முதல் வணிக ரீதியான அன்னாசி சாகுபடி துவக்கப்பட்டது. அது மிக வெற்றிகரமாக இருந்ததால் ஜேம்ஸின் தொழில் 30 வருடங்களில் பன்மடங்கு விரிவடைந்தது 1911ல் அவரது நிறுவன ஊழியர் ஒருவரால் அன்னாசியின் கடினமான வெளித்தோலையும் நடுப்பகுதியையும் பிரித்தெடுக்கும் இயந்திரமும் கண்டு பிடிக்கபட்ட போது அந்நிறுவனம் மாபெரும் சாம்ராஜ்யம் ஆகியது.
1900’ல் ஜேம்ஸினால் ஹவாயில் மிகப்பெரிய அளவில் சாகுபடி செய்யப்பட்ட போது அங்கு மட்டுமே உலகின் 75 சதவீத அன்னாசி உற்பத்தியானது. ஜேம்ஸ் டோல் அனைவராலும் அன்னாசி அரசரென்று அழைக்கப்படலானார்.
1970 ல் இருந்து குளிர்சாதன வசதி கொண்ட கப்பல்கள் அன்னாசியை உலகெங்கும் சேதமின்றி கொண்டு சென்றபோது, உலகின் அன்னாசிக்கான ஹவாயின் தேவை குறைந்தது, இதனால் ஹவாயின் அன்னாசி சாகுபடி குறைய தொடங்கியது. டோல் தனது அன்னாசி தயரிப்புக்களை முற்றிலுமாக நிறுத்தினார். 2013-ல் ஹவாயில் இயங்கிய உலகின் மிகபெரிய காய்கறி மற்றும் பழங்களுக்கான பன்னாட்டு நிறுவனமான டோல் வயல்களின் (Dole Plantation) உற்பத்தி உலக அன்னாசி உற்பத்தியில் 0.1 % தான் இருந்தது எனினும் ஜேம்ஸ், ஹவாயின் அன்னாசி அடையாளமாகவே நீடிக்கிறார்
அவர் பெயரில் ஹவாயில் 3 ஏக்கரில் அமைந்திருக்கும் அன்னாசி செடி வடிவிலான புதிர்வழித்தோட்டம் உலகின் மிகப்பெரியது.(Dole Plantation’s Pineapple Garden Maze) இது சுமார் 14000 வண்ணமயமான ஹவாயின் தாவரங்களைக் கொண்டு 3 மைல் நீள சிக்கலான புதிர் பாதை அமைக்கப்பட்டு மத்தியில் அன்னாசி வடிவம் இருக்கும்படி உருவாக்கபட்டுள்ளது.
ஹவாயில் பிசுபிசுத்து தூறும் மழையை அன்னாசிச்சாறு மழை என்பார்கள். பல வருடங்களுக்கு இதன் அடித்தண்டிலிருந்து இலைகள் முளைத்து வருடா வருடம் கனிகள் உருவாவதால் ஹவாயில் வயதான தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் அன்னாசிப் பயல், அன்னாசிப் பெண் என்று செல்லமாக அழைக்கப்படுவார்கள்
சாகுபடி
19’ம் நூற்றாண்டில் தோட்டக்கலை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளின் மேம்பாடு நிகழ்ந்தபோது, 1816’ல் அறிமுகமான கொதிநீர் வெப்பமூட்டும் முறை மற்றும் 1833 ’ல் அறிமுகமான கண்ணாடித்தட்டு சாகுபடி, இவை இரண்டும் அன்னாசியின் சாகுபடியை வேகம் பிடிக்கச் செய்தன.
அப்போதிலிருந்து வெப்பமூட்டப்பட்ட கண்ணாடிஅறைகளில் அன்னாசி வளர்கின்றது. ஐரோப்பாவின் அன்னாசிப் பசுங்குடில்கள் பைனரிகள் என அழைக்கப்பட்டன
உடல் இனப்பெருக்கம் செய்யும் அன்னாசியின் கிரீடம் போன்ற கனிகளின் உச்சியில் இருக்கும் இலைத்தொகுதியை மட்டும் கத்தரித்து நிலத்தில் நட்டு வைத்தால் அன்னாசி செடி அதிலிருந்து உருவாகி பலனளிக்கத் துவங்கும்
ஒரு ஏக்கரில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் செடிகள் சாகுபடி செய்யப்படும். அன்னாசியின் அடிப்பகுதி தண்டுகள் மூலமாகவும் இவை சாகுபடி செய்யப்படுகின்றன
பல வகைகளில் முதல் வருடம் செடியின் மையத்தில் உருவாகும் கனியை அறுவடை செய்த பின்னர் கூடுதல் இனிப்புடைய பல சிறுகனிகள் மஞ்சரித்தண்டில் உருவாகும்.அவையும் அறுவடை செய்யப்படும்.
வகைகள்
உலகெங்கிலும் அதிகம் சாகுபடியாகும் அன்னாசியின் இரு வகைகள் cayenne மற்றும் Queen. வகைகள்
Cayenne group: மென்மையான வெளிப்புறமும் உருளை வடிவமும் கொண்டவை, மஞ்சள் நிற சதைப்பகுதி கொண்டவை. இந்தியாவின் கோவா மேகாலாயா வங்காளம் ஆகிய பகுதிகளில் அதிகம் விளைபவை
Queen group: சிறிய அதிக முட்கள் கொண்ட செடிவகை. தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் அதிகம் விளைகின்றன
பிற பிரபல வகைகள்:
“Hilo” 1 -கிலோ கச்சிதமான அளவுள்ள ஹவாய் வகை
“Kona sugarloaf” -3 கிலோ எடைகொண்ட வெள்ளைச் சதைப்பகுதி கொண்ட அதிகச் சர்க்கரை கொண்ட வகை
“Natal queen”- 2 கிலோ எடை கொண்டிருக்கும் இது மஞ்சள் சதைப்பகுதியும், மென்மையான நறுமணமும் கொண்டது
“Pernambuco”- 4 கிலோ எடை கொண்டிருக்கும் இவ்வகை இளமஞ்சள் நிற சதைப்பகுதி கொண்டது. அதிகதூரம் பயணித்தாலும் இயல்பு மாறாமல் இருக்கும் .
“Red Spanish” 1லிருந்து 2 கிலோ எடை கொண்ட பிரபல வகை. ஸ்பெயினிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ச்சிவப்பு ஸ்பானிஷ் அன்னாசி வகை இலை நார்களுக்காகவும் 17ம் நூற்றாண்டில் இருந்து வளர்க்கப்படுகிறது,
“Smooth cayenne”- 3 கிலோ எடை கொண்டிருக்கும் பிரபல வகை. உருளை வடிவ பழங்கள் அதிக சர்க்கரை அளவும் அமில அளவு கொண்டவை கேன்களின் பதப்படுத்தப்படும் வகை. இலைகள் முட்கள் இல்லாது மென்மையாக இருக்கும்
comosus ‘Variegatus’ – மிகச்சிறிய உருளை வடிவ பழங்களுடன் அலங்காரசெடிகளாக தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன
Vazhakulam pineapple -கேரளாவின் வாழக்குளம் அன்னாசி . வாழக்குளம் பகுதில் விளையும் இந்த அன்னாசிப்பழம் புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது. சுமார் 1500 கிராம் எடை கொண்டிருக்கும் இப்பழங்கள் நல்ல நறுமணம் கொண்டிருக்கும் . சதை பொன்மஞ்சள் நிறத்தில் இனிப்புச் சாறு நிரம்பியதாக இருக்கும்
Spanish group: அன்னாசி செடிகள் குட்டையானவை, மங்கிய நிறம் கொண்ட சதைப்பகுதி கொண்ட கனிகள்
Abacaxi group: லத்தீன் அமெரிக்க பகுதிகளின் அன்னாசி இது அன்னாசி சாறுக்கான பிரத்யேக வகை
Maipure group: மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் விளைகின்ற வகை
comosus var. parguazensis உருண்டையான பழங்களுக்கான வகை
comosus var. Bracteatus, A. bracteatussensu & A. fritzmuelleri- உயரமாக வளரும் உயிர் வேலி வகைகள்.
A. comosus var. erectifolius மிகசிறிய சுவையற்ற கனிகளை அளிக்கும். இலை நார்களுக்கானவை. இலைகள் மென்மையாக நீளமாக இருக்கும்
Antigua Black- உலகின் மிக அதிக சர்க்கரை கொண்ட அன்னாசி வகை
வேதிப்பொருட்கள்/சத்துக்கள்
அன்னாசியின் தோலில், சதைப்பகுதியிலும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றில் பாலிஃபீனால்கள், கேலிக் அமிலம், சிரிஞ்சிக் அமிலம், ஃபெருலிக் அமிலம், வனிலின், ப்ரோமெலைன் ஆகியவை முக்கியமானவை
ப்ரோமெலைன் நொதி மருத்துவ குணங்களை கொண்டது. தசையை தளர்த்தி ஜீரணத்தை எளிதாக்கும், கட்டிகளை கரைத்து உடல் நலத்தை காக்கும்.
அன்னாசியில் அதிக கால்சியம், நீர்ச்சத்து, பொட்டசியம், நார்ச்சத்து ஆகியவையுடன் வைட்டமின் B1, B6, ஆகியவையுமுள்ளன. மேலும் அன்னாசியின் அதீத வைட்டமின் C, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்
உணவு வகைகள்
அன்னாசிப்பழங்களின் சதையும், சாறும் உலகெங்கிலும் பல வகையான உணவுகளில் சேர்க்கப்படுகின்றது.
பால்டிமோரில் முதன்முதலாக 1865ல் அன்னாசி பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்டு சந்தப்படுத்தபட்டது
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தெருவோரக்கடைகளில் அன்னாசி ஒரு தின்பண்டமாக கிடைக்கிறது. மேற்கத்தைய நாடுகளில் பன்றி இறைச்சி உணவுகளை சீவிய அன்னாசி துண்டுகளால் அலங்கரித்து அளிப்பது வழக்கமாக இருக்கிறது
அன்னாசிபழத்துண்டுகளை பழக்கூழ்களில் கலப்பது உலகெங்கிலும் பொதுவான வழக்கமாக இருக்கிறது, அன்னாசிப்பழம் பீட்ஸாவிலும் இருக்கிறது.
நூற்றாண்டுகளாக பிலிப்பைன்ஸில் அன்னாசிச்சாற்றில் வேகவைக்கப்பட்ட பன்றி இறைச்சி உணவு Hamonado பிரசித்தம். அதைப்போலவே அங்கு afritada என்னும் அன்னாசி சாற்றில் வேகவைக்கப்பட்ட கோழிக்கறி உணவும் பிரபலம்.
kaeng som pla என்னும் தாய்லாந்து, மலேசியாவின் பிரபல மீன் உணவும் அன்னாசி சாற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது,
ஹவாயின் haystack என்பதுவும் அன்னாசி கலந்த அசைவ உணவுதான்
உலகெங்கிலும் அன்னாசிச்சாறு அருந்தப்படுகிறது அன்னாசி சாறு தயிரில், இனிப்புகளில், ஐஸ்கிரீம்களிலும் கலந்து விரும்பி உண்ணப்படுகிறது Puerto Rico வின் பிரபல பானமான piña colada அன்னாசிச்சாறு, தேங்காய்ப்பால் மற்றும் ரம் ஆகியவற்றின் கலவைதான்.
மெக்ஸிகோவின் பிரபல மது வகையான tepache. அன்னாசிப்பழத்தின் வெளித்தோலை அரைத்து நொதிக்கச்செய்து அத்துடன் கரும்புச்சர்க்கரை சேர்த்து தயரிக்கப்படுவது
அன்னாசி வினிகர் ஆப்பிரிகா பிலிப்பின்ஸ் நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
18 ம் நூற்றண்டில் இருந்து பிலிப்பைன்ஸின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருப்பது nata de piña என்னும் அன்னாசி ஜெல் உணவு. பப்பிள்கம் போல மென்று உண்ணவேண்டிய இது Komagataeibacter xylinus எனும் பாக்டீரியாவால் அன்னாசிச் சாற்றை நொதிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிறது.
அன்னாசியை நொதிக்கச்செய்து பல நாடுகளில் அன்னாசி மதுவும் உருவாக்கப்படுகிறது
நாம் உண்ணுகையில் நம்மை உண்ணும் அன்னாசி
அன்னாசியை நாம் விரும்பி சாப்பிடும் போது நம்மையும் அன்னாசி சாப்பிடுகிறது. இது எதோ சிறார்களுக்கான மாயாஜால கதையல்ல உண்மையிலேயே அன்னாசியிலிருக்கும் புரோமெலைன் (Bromelain) புரதத்தை உடைத்து அழிக்கும் இயல்புகொண்டது எப்போதெல்லாம் அன்னாசி உண்ணப்படுகிறதோ அப்போதெல்லாம் நாக்கின் புரதத்தை கொஞ்சம் இந்த நொதி அழிக்கிறது
ப்ரோமெலைன் அன்னாசியின் பழங்கள், தண்டு, இலைகள் இலைக்கொத்து ஆகியவற்றில் காண்படுகின்றது
அன்னாசியை சாப்பிடுகையில் கவலைப்படவேண்டிய அளவுக்கு அதில் ப்ரோமெலைனின் அளவு இல்லை
மேலும் ப்ரோமெலைன் குடல்பகுதிக்கு செல்வதற்குள் உருமாறி விடுவதால் அதிகம் அச்சம் கொள்ள தேவையில்லை
எனினும் அன்னாசித் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பழங்களை அறுவடை செய்கையில் இந்த நொதி சருமத்தில் பட்டுக்கொண்டே இருப்பதால் கைகள் அரிக்கபட்டு கைரேகைகள் முற்றிலும் அழிந்துபோகின்றன.
இதே புரோமெலைன் மூட்டுவலிக்கும் நிவாரணமளிக்கிறது
அறுவடைக்கு பின்னர் அன்னாசி
அன்னாசிப்பழங்கள் பச்சையாக உறுதியாக இருக்கையில் அறுவடை செய்யப்பட்டு அவை கனிவதற்காக எதிலீன் வாயு செலுத்தப்படுகிறது அதன்பிறகே அன்னாசிப்பழங்கள் பொன்மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம் பெறுகின்றன
அதற்குப் பின்னர் அவை மேலும் கனியாது . நாம் வீடுகளுக்கு அன்னாசி வாங்குகையில் பொன்மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம்கொண்ட கனிந்த பழங்களை வாங்கவேண்டும். 2 நாட்களில் கெட்டுப்போய்விடும் அன்னாசிப் பழங்களை மேலும் சிலநாட்கள் பாதுகாக்க அவற்றின் இலைகள் கீழிருக்கும் படி தலைகீழாக வைக்கலாம்.
பச்சைநிறப் பழங்கள் சிலநாட்களில் கனிந்துவிடும் என்று நினைக்கக்கூடாது. எனினும் பழுக்காத அன்னாசிப்பழங்களை தக்காளி , ஆப்பிள், வழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து வைக்கையில் அவை வெளியிடும் எதிலீனால் சிறிது பழுக்க வாய்ப்புள்ளது
அறுவடைக்கு பின்னர் கனிகளின் கடினமான வெளித்தோலும் மையத்தண்டும் நீக்கப்பட்ட பின்னர் அன்னாசி உலரச்செய்தோ, பதப்படுத்தப்பட்டோ அல்லது சாறாக்கியோ பல வகையாக சந்தைப்படுத்தப்படுகிறது.
பைனா நாரிழை
பிலிப்பன்ஸின் ‘Red Spanish’ அன்னாசி இலைநார்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பிலிப்பைன்ஸில் புழக்கத்தில் இருக்கின்றது
பிலிப்பன்ஸின் ஆண்களுக்கான தேசிய உடையான barong tagalog மற்றும் பெண்களின் தேசிய உடையான baro’t saya, ஆகியவை பைனா நாரிழைகளை கொண்டு உருவாக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் உயர்குடிபெண்களுக்கான பிரத்யேக உடையான traje de mestiza மற்றும் பெண்களின் கைக்குட்டைகள் ஆகியவையும் பைனா நாரிழைகளைக்கொண்டே உருவாகின்றன
உற்பத்தி
வெப்ப மண்டல பயிர்களில் வாழைக்கும் மாங்கனிகளுக்கும் அடுத்தபடியாக முக்கியமான பயிராக இருப்பது அன்னாசிதான் .. பிலிப்பைன்ஸ் , பிரேஸில் மற்றும் கோஸ்டாரிக்கா உலகின் மூன்று முன்னணி உற்பத்தியாளர்கள்
நெதெர்லாந்து உலகின் முன்னணி அன்னாசிச்சாறு இறக்குமதியாளராக இருக்கிறது. 2017 நிலவரப்படி மிக அதிக அன்னாசிச்சாறு உபயோகிப்பாளர்களாக தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் பிலிபைன்ஸ் நாடுகள் இருந்தன
அதிக மக்கள் தொகை இருந்தும் சீனாவும் இந்தியாவும் அன்னாசி பயன்பாட்டில் மிக கடைசி இடத்தில் இருக்கின்றன
2020ல் உலக அன்னாசி உற்பத்தியில் 28 மில்லியன் டன் பிலிப்பைன்ஸ் கோஸ்டாரிக்கா, பிரேசில் இந்தியா மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டது.
உலக அன்னாசி சந்தையில் பதப்படுத்தப்பட்ட அன்னாசி பொருட்கள் அதிக அளவு இருக்கின்றன. 250 மில்லியன் அமெரிக்க டால்ர்களை காட்டிலும அதிகமாக அன்னாசி சாறும், 600 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக டின்களில் அடைக்கப்பட்ட அன்னாசியும் சந்தைப் படுத்தப்படுகின்றன
அன்னாசியில் இருக்கும் புரோமெலைன் இறைச்சியை மென்மையாக்குவதால் உணவுத்தொழிற்சாலைகளில் இதன் தேவை அதிகம். அன்னாசியின் கழிவுகள் கால்நடை தீவனங்களில் கலககப்படுகின்றது
அன்னாசி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் முதல் 6 நாடுகள்
பொதுவாக ஆசிய பகுதிகளில் அன்னாசியை கர்ப்பிணிப்பெண்கள் உண்டால் கருக்கலைப்பு நிகழும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. ஒரு கர்ப்பிணிப்பெண் ஒரே சமயத்தில் 10 அன்னாசிகளை சாப்பிட்டால் மட்டுமே அது கவலைக்குரிய விஷயமாகிறது.
2011ல் உலகின் மிகப்பெரிய அன்னாசி பழம் ஆஸ்திரேலியாவில் கிரிஸ்டைன் என்பவரால் உருவாக்கப்பட்டது. 32 செமீ நீளமும்,66செமீ சுற்றளவும் கொண்டிருந்த அந்த அன்னாசிப்பழம் 8.3 கிலோ எடை கொண்டிருந்தது
அன்னாசிகளுக்கு புகழ்பெற்ற பிலிப்பைன்ஸின் பைன்யாசான் திருவிழா ( Pinyasan Festival,) ஏப்ரல் 14, 1993லிருந்து நடத்தப்படுகிறது
அடுத்த முறை அன்னாசியை சுவைக்கையில் 1640-ல் ’’இனிப்பு மணமும் வைனும் பன்னீரும் சர்க்கரையும் கலந்த சுவையும் போல’’ என்று தாவரவியலாளர்களால் 1640-ல் விவரிக்கப்பட்ட அதன் அசல் சுவையை அனுபவியுங்கள்.
நண்பர் `பனை காட்சன்` சென்ற வருடம் சாம் ஹிக்கின்பாதம் எழுதிய ‘’The Gospel and the Plow’’ என்னும் நூலைப் பரிந்துரைத்திருந்தார், அதை மொழியாக்கம் செய்யலாமென்னும் யோசனையையும் சொல்லியிருந்தார். இரண்டு நாட்களில் அதை வாங்கினேன். இப்போதுதான் படித்துமுடித்தேன்.
எனக்கு அதுநாள் வரை இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் கப்பலில் பயணச்சீட்டு வாங்காமல் ஒளிந்திருந்து பயணித்து, கப்பல் கேப்டனால் கண்டுபிடிக்கபட்டு மெட்ராஸ் துறைமுகத்தில் கப்பல் நிற்கையில் கட்டாயமாக கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபெல் ஜோஷுவா ஹிக்கின்பாதமை மட்டும் தான் தெரியும், அவர்தான் பிரபல ஹிக்கின்பாதம் புத்தகக் கடையைத் தோற்றுவித்தவர்.
காட்சன் பரிந்துரைத்த இந்த புத்தகத்திலிருந்துதான் அற்புதமான அருட்பணியாளரான சாம் ஹிக்கின்பாதம் என்பவரையும் ஆங்கிலத்தில் plow, plough என்ற இரண்டு சொற்களும் கலப்பையைக் குறிக்கிறது என்பதையும் அறிந்துகொண்டேன்,
நற்செய்தியும் கலப்பையும் என்னும் இந்த நூலைத் தமிழில் கொண்டு வரலாம் என்றிருக்கிறேன். இந்தியவிவசாயத்தில் மிக முக்கியமான மாற்றங்களை உண்டாக்கியவர் சாம் ஹிக்கின்பாதம் என்பதை இந்நூலிலிருந்துதான் அறிந்துகொண்டேன். 200-க்கும் குறைவான பக்கங்களைக்கொண்ட சிறிய நூல், ஆனால் வாசித்து முடித்ததும் கலப்பையில் இறையைக்கண்ட அவரைக் குறித்த பெரும் பிரமிப்பையும் அவரது பங்களிப்பைக் குறித்து ஏதுமறியாமல் இருந்ததன் குற்றவுணர்வும் உண்டானது.
அமெரிக்க அருட்ப்பணியாளரான சாம் இந்திய நவீன விவசாயத்தின் முன்னோடியாக இருந்தவர். ஏழ்மையிலிருந்த இந்திய விவசாயிகளின் பசியைப் போக்குவதே இறைப்பணி என்று நம்பி தன்னை முழுமையாக அதில் ஈடுபடுத்திக்கொண்ட சாம் ஹிக்கின்பாதமின் தத்துவமென்பது ’’நற்செய்தியும் கலப்பையும்’’ என்பதுதான்.
பொதுவாக கிறிஸ்தவ அருட்ப்பணியாளர்கள் என்றாலே கையில் பைபிளுடன் வெள்ளைக்கோட் போட்டுக்கொண்டிருக்கும் ஒருவரின் சித்திரம் தான் மனதில் தோன்றும் ஆனால் அவர்களுடன் ஒரு தோல்பையில் ஏராளமான விதைகளும், கிழங்குகளும், மரப்பட்டைகளும் எப்போதும் இருந்தன. உலகெங்கும் அருட்ப்பணியோடு பல நூறு தாவரங்களையும் கொண்டு வந்து அறிமுகப்படுத்திய அருட்பணியாளர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களைக் குறித்தும் அவர்களால் உலகெங்கும் பரவிய தாவரங்களைக் குறித்தும் நான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு நல்ல நூலைத் தமிழில் எழுதும் உத்தேசமும் இருக்கிறது.
குறிப்பாக உலகெங்கும் மதமாற்றப் பணிகளுக்கெனப் பயணித்த அருட்பணியாளர்கள், தேவாலயங்களில் அளிக்கப் படவேண்டிய வைனுக்காக பைபிள் மற்றும் சிலுவையுடன் கட்டாயமாகக் கொண்டு சென்ற திராட்சைக் கொடியின் நறுக்கப்பட்ட தண்டுகளைக் குறித்தும், misson grapes வழியே திராட்சைப்பயிர் கிருஸ்தவத்தோடு இணைந்து உலகெங்கும் பரவியதைக் குறித்தும் எழுத விரும்புகிறேன்.
எனினும் சாம் அப்படிக் குறிப்பிட தாவரங்களைப் புதிய நிலப்பரப்புக்கு அறிமுகம் செய்த அருட்பணியாளரல்ல.இங்கிலாந்தில் பிறந்து மிக இளமையிலேயே அமெரிக்காவுக்கு குடியேறியது அவரது குடும்பம். ஏழ்மையில் இருந்த அவர் தனது பள்ளிப்படிப்பையும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1903- ல் பட்டப்படிப்பையும் முடிக்க வீடு வீடாக பால் ஊற்றுவது வாடகைக்கார் ஓட்டுவது உள்ளிட்ட பல வேலைகளையும் செய்தார்.
பட்டம் வாங்கிய கையோடு வடஇந்தியாவில் இறைப்பணியாற்றும் குழுவினரோடு அவர் அலகாபாத் வந்து சேர்ந்தார். அலகாபாத் கிறிஸ்துவக் கல்லூரியில் சிலகாலம் பொருளாதாரம் பயிற்றுவித்த சாம் அந்தப் பகுதி விவசாயிகளின் சிகிச்சையளிக்கப் படாதிருந்த நோய்களையும், கடும் வறுமையையும் கண்டு கலங்கினார். தனது மனைவியுடன் இணைந்து தொழுநோய் சிகிச்சைக்கென நாய்னி தொழுநோய் சிகிச்சை மையத்தை உத்திரபிரதேசத்தில் உருவாக்கினார்.(Naini Leper Asylum,) அங்கு சாமின் மனைவி தொழுநோய் உள்ள குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் இல்லங்களை உருவாக்கிப் பராமரித்தார்.
இந்திய விவசாயிகளின் விவசாய முறைகளில் மாற்றம் உண்டாக்கினால் மட்டுமே அவர்களால் வறுமையிலிருந்து வெளியேறமுடியுமென்று நம்பிய சாம், அமெரிக்கா சென்று ஓஹியோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் விவசாயம், விவசாயப்பொருளாதாரம் மற்றும் அப்போதுதான் அமெரிக்காவில் உருவாகி இருந்த rural sociology என்னும் துறையைக்குறித்தும் முறையாகக் கற்றுக்கொண்டு மீண்டும் இந்தியா திரும்பினார்.
1910ல் அலகாபாத் விவசாய நிறுவனத்தை துவங்கினார். இந்தியாவில் விவசாயத்துக்கான முதல் கல்வி நிறுவனம் அது. (இப்போது Sam Higginbottom University of Agriculture, Technology and Sciences -SHUATS).அந்த நிறுவனத்தில் விவசாயப்பொறியாளராகப் பணியாற்றிய மேசன் வா-Mason Vaugh என்பவர்தான் இந்தியாவில் காலம் காலமாகப் பயன்பாட்டிலிருந்த ஆழமாக உழ முடியாத, மரத்தால் மட்டுமேயான கலப்பைகளை மாற்றி இரும்பு நுனி பொருத்தப்பட்ட மற்றும் முற்றிலும் இரும்பாலான, ஆழமாக உழுது மண்ணின் வளத்தை மேம்படுத்தும் புதிய கலப்பைகளை உருவாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர். மேஸன் வா இந்திய நவீன விவசாயத்தின் தந்தை என்றறியப்படுகிறார்.
அந்தப் புதிய கலப்பை கோதுமை வயல்களில் ஆழ உழுகையில் அதைப்பார்த்த விவசாயிகள் ’’வாஹ் வாஹ்’’ என்று பாராட்டியதால் அந்த கலப்பைக்கே ‘’வாஹ் வாஹ் கலைப்பை’’ “Wah-Wah” plow என்று பெயர் வந்தது. சாம் அந்தக் கலப்பையை இந்தியாவெங்கும் அறிமுகப்படுத்தினார். அதோடு பால் உற்பத்தி. கால்நடை வளர்ப்பு. பயிர் மேம்பாடு ஆகியவற்றிலும் பல ஆராய்சிகளைத் தொடர்ந்து செய்து அவற்றை இந்திய விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். மகாத்மா காந்தியின் கிராமப்புற சேவைகளில் பெரும் அபிமானம் கொண்டிருந்த சாம் காந்தியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார்
இந்திய நவீன விவசாயத்தில் தான் மேற்கொண்ட ஆய்வுகளை, அதனால் இந்திய விவசாயத்தில் உண்டான மாற்றங்களை விளக்கி ’’நற்செய்தியும் கலப்பையும்’’ என்னும் நூலை 1921-லும், ’’சாம் ஹிக்கின்பாதம் என்னுமோர் விவசாயி’’ என்னும் சுயசரிதையை 1949-லிலும் வெளியிட்டார் சாம்.
The Gospel and the Plow (1921):
Sam Higginbottom, Farmer (1949): His autobiography
நற்செய்தியும் கலப்பையும் நூலில் சாம் அருட்பணியாளரென்பவர் நற்செய்திகள் பரப்புபவராக மட்டுமல்லாது மக்களின் வறுமையைப் போக்கும் சேவகராகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். சாமின் இறையியல் அல்லாத பிற சேவைகளைக் குறித்து வாசிக்கையிலெல்லாம் பனை காட்சனுக்கும் அவரது பணிகளுக்குமிருந்த ஒற்றுமையை எண்ணிக்கொண்டே இருந்தேன்.
இந்த நூலில் இந்திய விவசாயிகளின் மரபான கிராமப்புற விவசாயக்கருவிகளுக்கு மாற்றாக சாம் முன்வைத்த தொழிற்சாலைகளில் வடிவமைக்கப்பட்ட நவீன விவசாய கருவிகளைக்குறித்து மகாத்மாகாந்திக்கு ஆட்சேபணை இருந்தது. பல விவசாயிகள் ஒன்றாக இணைந்து ஈடுபடும் விவசாயம் என்னும் காந்தியின் கருத்தும், பலரின் வேலையைச் செய்யும் ஒரே இரு இயந்திரம் என்னும் சாமின் கருத்தும் முரண்பட்டன எனினும் சாமின் சேவைகளில் பெருமதிப்புக்கொண்டிருந்த காந்தி அந்நூலை வெகுவாகப் பாராட்டியதோடு பல நாட்கள் சாம் ஹிக்கின்பாதமிடம் இந்நூலைக்குறித்து நீண்ட உரையாடல்களிலும் ஈடுபட்டிருந்தார். சேற்றிலிறங்கி கடும் உடலுழைப்பை செய்துகொண்டிருந்த இந்திய விவசாயிகளின் மீதான சாமின் கரிசனத்தை அவர் பெரிதும் மதித்தார்,
இந்த நூலில் சாம் இந்தியாவை அங்குலம் அங்குலமாக விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கவனித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது உதாரணமாக அப்போதைய இந்தியவீடுகளின் கைகளால் செய்யப்பட்ட ஓடுகள் உள்ளங்கை அகலத்தில் இருந்ததையும் அவற்றில் மழைநீர் வழிந்து விழ வரிகள் இருந்ததையும் குறிப்பிட்டிருப்பதைச்சொல்லலாம்.
அப்போது இந்தியாவில் இருந்த வெறும் கிளர்க்குகளை உருவாக்கும் பிரிடிஷ் கல்விமுறையை மாற்றி விவசாயத்தொழில் வல்லுநர்களை உருவாகும் கல்வி தேவை, இந்திய சாதிப்பிரிவினைகளே அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தது ஆகியவற்றை நூலில் குறிப்பிட்டிருப்பதோடு, இந்திய மரபுவழி விவசாயத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி நவீன விவசாயக்கருவிகளுடன் இணைந்த புதிய விவசாயமுறைகளின் அவசியத்தையும் இந்த நூலில் வலியுறுத்தி இருக்கிறார் சாம்.
இந்த நூல் முழுக்கத் தெளிவாகத் தெரியும், கிருஸ்தவ நற்செய்தியையும் கலப்பையினால் உண்டாகவிருக்கும் முன்னேற்றங்களையும் வேறு வேறு எனப் பிரிக்கவே முடியாது என்னும் அவரது நம்பிக்கை பெரும் ஆச்சரியமளித்தது.
இந்திய சாதிப்பிரிவினைகள் பற்றிச்சொல்லும் பல பக்கங்களில் சாம் “தீண்டத்தகாதவர்கள் சுத்தமற்றவர்கள் என்று ஒரு பிரிவினரைத் தனித்து அடையாளப்படுத்தி அவர்கள் மட்டும் நிலத்திலிறங்கி வேலைசெய்யும் இந்திய சாதிப்பிரிவினையை நீக்கினாலே விவசாயிகளின் வறுமை நீங்கும் இதற்கு ஒரே தீர்வு மானுடர் அனைவரும் சமம் என்னும் கிருஸ்துவின் நற்செய்தி மட்டும்தான் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டிருக்கீறார்,”the only cure for caste is Christ,”
பிரிடிஷ் ஆட்சியில் இந்தியர்களைச் சுரண்டாதவர்களை, இந்தியாவின் வறுமையைப்பற்றிக் கவலைப்பட்டவர்களை, இந்தியர்களின் நோய் தீரவும் அவர்களின் வாழ்வு மேம்படவும் சிந்தித்தவர்களை, அதன்பொருட்டே உழைத்தவர்களை மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறேன்.
எந்தப்பயனுமற்ற கால்நடைகள் மிக அதிக எண்ணிக்கையிலிருந்தது, இந்திய விவசாயம் அபாயகரமாக பருவகால மழையை மட்டுமே நம்பி இருப்பது, அறிவியல் அடைப்படையிலான நீர்ப்பாசனம் இல்லாமலிருப்பது மற்றும் நிலவளத்தைக் காப்பாற்ற தேவைப்பட்ட பயிர்சுழற்சிமுறை ஆகியவற்றை எல்லாம் சாம் இந்த நூலில் விவரித்திருக்கிறார்.
நற்செய்திகளைப் பெற்றுகொண்ட மனிதர்கள் எப்படி கிறுஸ்துவை அறிந்துகொண்டு ஆன்மவளம் பெறுகிறார்களோ அப்படி நவீன விவசாயத்தை அறிந்து கொண்டு தரிசு நிலங்களை வளமாக்கமுடியும் என்கிறார் சாம். இந்திய விவசாயிகளை நவீன விவசாயத்துக்கு மாற்றி அவர்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ளும்படி பிற விவசாயிகள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களையும் அழைத்திருக்கிறார்.
இந்நூலின் சாராம்சமாக “It appeared to me… the poverty of India was removable, not by the doling out of charity, but by education which would teach the Indian farmer how to get more out of his soil.” என்று சாம் குறிப்பிட்டிருப்பதை சொல்லலாம்.
சாம் ஹிக்கின்பாதம் பல இறையியல் நிறுவனங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பும் இந்நூலில் இருக்கிறது இதன் முன்னுரையில் ’’நான் இந்தியாவில் செய்யவிருப்பட்டவற்றில் மிகக்குறைவாகவே செய்திருக்கிறேன் அவற்றை இதில் எழுதி இருக்கீறேன்’’ என்கிறார் சாம்
மொத்தம் 10 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலின் முதலிரண்டு அத்தியாயங்களில் அருட்பணிக்கென அனுப்பப்பட்ட தான் எதிர்பாராமல் பொருளாதாரம் பயிற்றுவிக்கப் பணிக்கப்பட்டதையும் அதில் சற்றே ஏமாற்றமடைந்திருந்தாலும், பிற்பாடு இந்திய விவசாயத்தில் மாற்றமுண்டாக்கும் அரும்பணியில் மனமகிழ்ந்து ஈடுபட்டதையும் விவரிக்கிறார்.
மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியர்களின் கல்வியறிவின்மையையும், கடும் வறுமையையும் பேசுகிறார். இந்தியர்களின் இந்த நிலைமைக்குக் காரணம் சமூககட்டமைப்புக்கள்தான் கடவுளின் மீது விசுவாசம் கொள்ளாததால் அல்ல என்று சாம் என்னும் அருட்பணியாளர் விவரிக்கும் இந்த அத்தியாயம் நேரடியாக அவர் இதயத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. இந்தப்பகுதியின் ஒவ்வொரு சொல்லும் இந்தியர்கள் மீதான வாஞ்சையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
இதே அத்தியாயத்தில் மொத்த நிலப்பரப்பில் 80% விவசாய நிலங்களைக்கொண்டிருக்கும் இந்தியாவின் கல்விமுறையில் நிலவளம் விவசாயம் குறித்த கல்வி முற்றிலும் இல்லாமலிருப்பதன் முரணையும் அவர் வியப்புடன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
நான்காவது அத்தியாயத்தில் விவசாயத்துக்கு தேவையான கருவிகளை மேம்படுத்துவதையும் நிலவளத்தை அதிகரிக்க உரங்கள் உள்ளிட்ட பலவகையான இடுபொருட்கள் சேர்க்கப்பட வேண்டியதை விவரித்திருக்கிறார்.அடுத்த ஐந்தாவது அத்தியாயத்தில் அலகாபாத் விவசாய நிறுவனம் உருவானதை விவரிக்கிறார். தரிசு நிலங்களில் பயிர் செய்து வளம் பெருக்குவதையும் இந்த அத்தியாயம் பேசுகிறது.
6 மற்றும் 7-ம் அத்தியாயங்களில் ஒரு கிராமத்தில் பசித்த வயிற்றுடன் இருக்கும் அத்தனை பேராலும் செய்யமுடியாத, உண்டாக்க முடியாத மாற்றத்தை ஒரு இரும்புக்கலப்பை எளிதாக செய்து விடும் என்பதையும், இறைச்சியோ பாலோ உடலுழைப்போ அளிக்காத,புனிதம் என்ற பெயரால் பாதுகாக்கப்படும் ஆயிரக்கணக்கான கால்நடைகளைப் பராமரிப்பதால் உண்டாகும் விவசாய வறுமையைப் பேசுகிறார். இதை மாற்ற “Breed selection” (இனத் தேர்வு) அவசியம் என்றார்.
இறுதி அத்தியாயங்களில் இந்தப்பணிகளின் போது தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் சந்தித்த சவால்களையும் யேசுவின் 36 அற்புதங்களையும் பேசுகிறார் சாம். இதில் ’’இன்றைய ரொட்டியை எமக்குத்தாரும் பிதாவே’’ என்பதுதான் இறைவனால் கேட்கப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்பட்ட பிரார்த்தனை என்கிறார்
இந்திய ஏழைகளுக்குத் தேவையாக இருந்த, ஆனால் கிடைத்திருக்காத நல்ல உணவை பால்பொடியைக் கொடுத்து கிருஸ்தவ மதத்துக்கு (Rice christians) இந்தியர்களை மாற்ற பெரும்பாலான அருட்பணியாளர்கள் ஈடுபட்டிருக்கையில் நவீன விவசாயமுறைகளை அறிமுகம் செய்து கிருஸ்துவின் நற்செய்தி என்பது உண்மையில் பசித்தவயிற்றுக்கு அவர்களே உணவை உருவாக்கிக்கொள்ளும், நிலவளத்தினால் வாழ்வை வளமாக்கும் வழிகளைச் சொல்லிய ஒரு அருட்பணியாளர் எழுதிய நூல் இது
அப்போதைய பெரும்பாலான காலனிய எழுத்தாளர்கள் செய்ததுபோல கீழ்நிலைப் பணியாளர்களை களப்பணிக்கனுப்பி அவர்கள் அளித்த தகவல்களைக்கொண்டு நூல் எழுதாமல், சாம் ஹிக்கின்பாதம் சேற்றிலும் புழுதியிலும் விவசாயிகளோடு பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றி அசலான தரவுகளும் அறிவியல் அடிப்படையிலான புள்ளிவிவரங்களும் கொடுத்து நூலை உருவாக்கி இருக்கிறார்.
மத போதகராக இருக்கும் ஒருவரை விட அதிக கோதுமையை விளைவிப்பவனே கர்த்தருக்கு நெருக்கமானவன் என்று சொல்லும் இந்த நூல் அந்தக் காலகட்டத்தில் அரிதினும் அரிதானது.
இந்த நூல் வெளியான பொது கிறிஸ்தவ மிஷனரிகளிலும் இந்தியாவிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அப்போது கிருஸ்துவத்தை பரப்புவதில் போதகர்களும் மருத்துவர்களும்தான் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் சாம் ஹிக்கின்பாதம் பசித்தவயிற்றோடு இருப்பவனுக்கு கடவுளின் நற்செய்தியை கூறுவது பயனற்றது என்று சொல்லி விவசாய மாற்றங்களுக்கு பாடுபடுபவர்களும் போதகர்கள்தான் என்னும் புதிய சித்திரத்தையும் உருவாக்கினார்.
வெறும் போதகர்களாக மட்டுமல்லாது நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர் தன் சொந்தக்காலில் நின்று தன் குடும்பத்தையும் நாட்டையும் உயர்த்தவேண்டும் என்பது அப்போது மிகப்புதிதான ஒன்றாக இருந்தது. விவசாயத்தை ஒரு பட்டப்படிப்பாக அறிமுகப்படுத்திய இவரை காந்தி “டாக்டர் ஆஃப் ஃபாமிஷ்” என்று அழைத்துப் பாராட்டினார்.
அருட்பணியாளர்கள் விவசாய மாற்றத்துக்கு உதவவேண்டுமென்னும் இவரது ஜெபமும் சேறும் என்னும் கொள்கை இந்தியாவுக்கும் கிருஸ்துவ மிஷனரிகளுக்கும் மிகமிகப் புதிதாக இருந்தது.
ஆங்கிலேயர்களைப் பார்த்து முள்கரண்டிகளிலும் ஸ்பூன்களிலும் சாப்பிடுவது உயர்வு என இந்தியர்கள் கற்றுக்கொண்ட காலத்தில் சாம் “கைகளால் வேலை செய்வதில் இழிவு எதுவுமில்லை” என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று இந்த நூலில் வலியுறுத்துகிறார்.
அந்தக்காலத்திலேயே அலகாபாத் விவசாய நிறுவனத்தின் பாடத்திட்டம் செயல்முறை சார்ந்ததாக, நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதில் சாம் மிகக் கவனமாக இருந்தார். இந்த நூலின் தாக்கத்தினால்தான் உலகெங்கிலும் மிஷனரிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டதோடு “Agricultural Missions” என்னும் புதுத்துறையும் உருவானது.
காந்தியும் சாம் ஹிக்கின்பாதமும் ஒருசில கொள்கைகளில் முரண்பட்டாலும் ஏழை இந்தியர்களின் வாழ்வை மேம்படுத்துவது என்னும் புள்ளியில் இருவருமே இணைந்திருந்தார்கள். அலகாபாத் விவசாய நிறுவனத்துக்கு காந்தி அடிக்கடி சென்றார் ,அங்கு தயாரிக்கப்பட்ட தொழு உரத்தைக் குறித்து கவனமாக அறிந்துகொண்டார். தனது ஆசிரமப்பயிர்களின் வளர்ச்சிக்கான ஆலோசனையை சாம் ஹிக்கின்பாதமிடமிருந்து காந்தி அறிந்துகொண்டார்.
தனது யங் இந்தியா இதழில் சாம் ஹிக்கின்பாதம் என்னும் வெளிநாட்டவர் இந்தியவிவசாயிகளின் மீது கொண்டிருந்த கரிசனத்தையும் அவர் மேற்கொண்டிருந்த விவசாய மேம்பாட்டுப்பணிகளையும் குறித்து காந்தி வெகுவாக பாராட்டி எழுதி இருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இரண்டு வருடங்கள் முன்பாக பணி ஓய்வு பெற்று ஃப்ளோரிடாவில் தனது மகளின் வீட்டில் இருந்த சாம் தனது 83-வது வயதில் 1958 ஜீன் 11-ம் தேதி மறைந்தார் இறுதிவரை அங்கிருந்துகொண்டே இந்தியாவின் விவசாயம் நவீன மயமாகிக்கொண்டு வந்ததை கவனித்துக்கொண்டிருந்தார்.
பனையில் சிலுவையைக் காணும், பனையேறிகளின் வாழ்வுக்காகப் போராடும் காட்சனும் சாம் ஹிக்கின்பாதமைப்போல், நற்செய்தி என்பது வெறும் பிரசங்கம் அல்ல களத்தில் நின்று சேவை செய்வதுதான் என்று சொல்லும் மற்றொரு அருட்பணியாளர். இருவரையும் அறிந்துகொண்டிருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நற்செய்தியும் கலப்பையும் நூலின் இறுத்திப்பத்தியில் சாம் கவித்துவமாக ’’ ஏசுவின் முன்பு முள் கொண்டிருந்த, இப்போதைய ஜொலிக்கும் கிரீடத்தில், நவீனக் கதிரடிக்கும் இயந்திரங்கள், கலப்பை மற்றும் புதிய விவசாய இயந்திரங்களால் மேன்மை அடைந்த வளமான இந்தியா ஒரு பிரகாசமான அருமணியாக இருக்கட்டும் ’’என்கிறார்.
இந்த நூல் முழுமையாக இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது
கிண்டில் பதிப்பாகவும் அச்சு இதழாகவும் கிடைக்கிறது.
சிலுவையின் பெயரால் நூலில் //மெய்மையைத்தேடும் ஒருவன் தன் ஆன்மாவின் இயல்பாலேயே மீட்பின் கிறிஸ்துவைக் கண்டு அவரை தனித்து எடுத்துவிட முடியும்// என்று ஜெ சொல்லி இருப்பார். சாம் ஹிக்கின்பாதம் அப்படி மீட்பின் கிறுஸ்துவை சேவையில் நிறைவடையும் அவரின் இயல்பால் கண்டறிந்தவர்.
இந்த நல்ல நூலைப் பரிந்துரைத்த பனை காட்சனுக்கு என் அன்பும் நன்றியும்!
பொள்ளாச்சியில் நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் சில கிளைகள் அங்கும் இங்கும் இருக்கின்றன. அழகு நிலையம் என்றால் ரிஷப்ஷனிலும், உள்ளே சேவை செய்யவும் இருக்கும், அடர்த்தியான உதட்டுச்சாயமும் இறுக்கமான ஜீன்ஸும் அணிந்த ஒன்றிரண்டு அழகிய இளம்பெண்கள் இருக்குமிடம் என்றும் சொல்லலாம். மெய்யான அழகுச்சேவையெல்லாம் அங்கே கிடைப்பதில்லை. கட்டணமும் பெரும்பாலும் பகல் கொள்ளைதான்.
மகன்கள் முடி வெட்டிக்கொள்ள அங்கே தான் செல்வது வழக்கம். கொள்ளைப்பணம் கொடுத்து பல மணி நேரம் செலவழித்து முடிவெட்டிக்கொண்டு வெளியே வந்தால் ஜெல் தடவி படிய வாரி முடி வெட்டியது போலவேதான் தெரியும். வீடு வந்து குளித்துத் தலை துவட்டினால் பழையபடி முடி காடாக திரண்டு கிடக்கும். மாயா மாயா எல்லாம் மாயாதான்!
ஏற்கனவே நேச்சுரல்ஸில் கசப்பான அனுபவமொன்று இருந்தது. (கசப்பான அனுபவத்தை மனமுவந்து அளித்திராத நிறுவனங்களோ உறவுகளோ, மனிதர்களோ இருக்கிறார்களா என்ன?) சரண் தருண் பள்ளிக்காலத்தில் ஒரு கோடைவிடுமுறைக்கு முந்தைய , பள்ளியின் கடைசி தேர்வு நாளின் முடிவில் தருணுக்கு முடி வெட்ட அதே நேச்சுரல்ஸ்கு வந்தோம் . அவன் உள்ளே போய் நெடுநேரமானது.
வரவேற்பில் (அபூர்வமாக இருக்கும்) ஒரு ஆணும் மற்றும் சிலரும் உள்ளே செல்வதும், வெளியே வந்து கூடிக்கூடி என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல எதையோ தாழ்ந்த குரலில் பேசுவதுமாக இருந்தார்கள். எனக்கு கிலி பிடித்துக்கொண்டது. தருணுக்கு முடி வெட்டுகையில் காயம் ஏதோ ஆகியிருக்குமோவென்று. சரண் ’’.. அப்படியெல்லாம் இருக்காதும்மா, கத்தியெல்லாம் இல்லை, மெஷினில் தான் வெட்டுவாங்க..’’ என்றான்.
ஒருவழியாக இரண்டு பேர் என்னிடம் வந்து காத்திருக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு கேட்காதபடி ’’…மன்னிக்கனும் மேம், உங்க மகனுக்கு முடி வெட்டினவர் புதுசு, தெரியாம பின்னந்தலையில் பெரிய சொட்டையை உருவாக்கி விட்டார், இந்த சேவைக்கு (?) நீங்கள் கட்டணம் தரவேண்டாம்..’’ என்றார்கள். நான் கடுமையாக ஒன்றும் சொல்லக்கூடாதென என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வெளியேறினேன். அந்த விடுமுறையில் நாங்கள் திட்டமிட்டிருந்த பயணத்தை தருணின் இந்தசிகை அலங்காரத்தால் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தோம்.
பின்னரும் சென்ற வாரம் வரை நேச்சுரல்ஸ்க்கே ஏன் சென்றோமென்றால் பொள்ளாச்சியில் எரியும் கொள்ளிகளில் நேச்சுரல்ஸ் கொஞ்சம் நல்ல கொள்ளி எனவேதான் அதில் சுட்டுக்கொண்டோம்.
நானும் அங்கே செல்வதுண்டு உறுப்பினர் அட்டைகூட இருந்தது. (கவனிக்கவும் past tense) அழகு சிகிச்சை, சேவைக்கெல்லாம் போவதில்லை. அவ்வப்போது புருவங்களைத் திருத்திக்கொள்வதும், தினமும் சாக்பீஸ் பிடித்தும், தேங்காய் உரித்தும், காய்கறி வெட்டியும் கைகள் காய்ந்துபோய், எப்போதும் தோட்டத்து மண்ணில் வேலைசெய்து பாதங்கள் வறண்டு போவதால் அடிக்கடி பெடிக்யூர் மெனிக்யூர் செய்துகொள்வதுண்டு.
அரிதாகவே சருமப்பாதுகாப்புக்கு செல்வேன். கடந்த மாதம் கடும்பனியில் லவ்டேலிலும் வெள்ளிமலையிலும் இருந்து , வீட்டிலும் அதிகாலை நடைப்பயிற்சி சென்று, வழக்கமாக கருத்திருக்கும் முகம் இப்போது இருண்டுவிட்டிருந்தது. எனவே நேச்சுரல்ஸ் சென்று அவர்கள் காட்டிய விலைப்பட்டியலில் இருந்த எனக்குப்பிடிக்கவே பிடிக்காத கரீனா கபூரின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து,சரும pH யை சற்றுக் குறைத்து, சருமத்துளைகளின் அழுக்கை நீக்கி, cleansing செய்து, கொலாஜனை பூஸ்ட் செய்வதாகச்சொன்ன ஒருசிகிச்சையை கணிசமான தொகையொன்று போனாலும் பரவாயில்லை என்று தேர்வு செய்தேன்.
நிச்சயமாக 1 மணி நேரத்தில் முடித்து விடுவேன் என்று வாக்குறுதி அளித்து இரண்டரை மணிநேரமெடுத்துக் கொண்ட அந்த சிகிச்சையில் என்னை பாடாய்ப்படுத்தி சருமத்தை பெரும் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.
நான் ’’…மெதுவா பண்ணுங்கம்மா வலிக்குது….’’ என்று சொன்னபோது சருமம் தளர்ந்திருப்பதால் அப்படி வலிக்கிறது என்று அவள் சமாதானம் செய்ததைக்கூட மன்னித்து விட்டேன் (சருமம் நன்றாக இருந்தால் ஏன் நேச்சுரல்ஸ் வருகிறோம்?) நீங்க அடிக்கடி அரசன் ப்ளூ சோப் போட்டு முகம் கழுவினா நல்லது என்று அந்த சேவை (?????) செய்த பெண் சொன்னபோதுதான் தேவியின் கட்டுக்கள் தளர்ந்தன.
அரசன் சோப் போட்டுக்கச் சொல்லும் பரிந்துரையை குக்கிராம தெருமுனை அழகு நிலையங்களில் கூட பரிந்துரைக்க மாட்டார்களே! இதற்கெதற்கு நேச்சுரல்ஸ்? என்று கடுமையாக எதிர்வினையாற்றிவிட்டு உறுப்பினர் அட்டையை ரிஷப்ஷன் டெஸ்கில் உடைத்துப்போடலாமேன்னும் முடிவை’’ மீ அதிகமா கோபப்படாதே ப்ளீஸ் ‘’ என்னும் சரணின் குரல் காதில் கேட்டதால் செய்யாமல் வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்து அதை உடைத்துபோட்டேனென்று பாருங்கள்!
இது பல மூடுவிழாக்களுக்கான காலம் போலிருக்கிறது. சகித்துக்கொண்டு தக்கவைத்துக் கொண்டிருப்பவற்றின் கதவுகளை ஒவ்வொன்றாக அறைந்து சாத்திப்பூட்டி சாவியை தலையைச்சுற்றித் தூர வீசிக்கொண்டிருக்கிறேன்.
தேர்வுக்காலம் இப்போது கல்லூரியில்.வளாகமே மாணவர்களால் நிறைந்து வண்ணமயமாக இருக்கிறது. எனது துறைக்கருகில் பழுத்து வாடிய இலைகளை கொட்டிக் குவித்துக்கொண்டிருந்த புங்கை மரத்தடியில் என்னை இரு மாணவிகள் கைகோர்த்த படி கடந்து செல்கிறார்கள். ஒருத்தி மற்றவளிடம் ‘’.. சொல்லறதைச்சொல்லிட்டேண்டி, மாட்னேன்னு வைய்யி அவ்வளவுதான் பெரிய பிரச்சனையாயிரும் ..’ என்கிறாள். ஓங்கு தாங்காக பெருங்கூட்டுக்காரியாயிருந்த மற்றவள் கனவில் அழ்ந்த கண்களுடன்’’… என்னா ஆனாலும் சரிடிநான் பார்த்துக்கறேன்..’’ என்கிறாள். இந்த இளமை அளிக்கும் துணிச்சல் இருக்கிறதே!
தாவரவியலில் இருந்து சற்றே விலகி உலகெங்கிலும் பிரபலமான உணவு வகைகளைக் குறித்த ஒரு தொடர் எழுதி அந்தக் கட்டுரைகளை ஸம்பா என்னும் தலைப்பில் நூலாக வெளியிட ஒரு பதிப்பகத்தில் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. அகநியில் ஒன்றும் பரிசீலனையில் இருக்கிறது. காலச்சுவடின் ’அலையிடைவெளியில்’ மொழியாக்க நூலும் வரவேண்டும்.
ஸாகேவுக்குப்பிறகு பெல்லடோனா, கஞ்சா, கொகெய்ன், சோமக்கொடி என்று மேலும் சில போதைத்தாவரங்கள் குறித்த கட்டுரைகள் எழுதியிருக்கிறேன், அவற்றையும் ஸாகே கட்டுரைகளுடன் இணைத்து மறுவெளியீடு செய்யவேண்டும். அறிவியலில் பெரும் பங்காற்றிய ஆளுமைகளைக் குறித்த கட்டுரைகளையும் தொகுத்து தயாராக வைத்திருக்கிறேன் நல்ல பதிப்பாளரிடம் கொடுக்கவேண்டும். அறிவியல் இலக்கியத்தை வெளியிட பெரும்பாலும் பதிப்பகத்தார் தயாராக இல்லை. எனக்கிதில் ஆச்சரியமோ வருத்தமோ இல்லை.தெரிந்த பழகிபோன விஷயம் தான்.
ஒரு சில ஆளுமைகளின் தன்னம்பிக்கை நூல்கள் நூற்றுக்கணக்காக வெளியிடப்பட்டிருந்ததை இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்தேன் அவைதான் பொது வாசகர்களுக்கு போய்ச்சேர்கிறது போல. உரைநடையை மடக்கி மடக்கி எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருந்த நூல்களும் ஏராளம் இருந்தன.
லின்னேயஸ் தன்னை இரண்டாம் ஆதாம் என்று கருதி அதை வெளிப்படையாகச் சொல்லவும் சொல்லி, தாவர வகைப்பாட்டியலைக்கொண்டு வந்தார், அவரது பெயரே அவரது குடும்பத்துக்கு சொந்தமான ஒரு மரத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது என்பதை, கார்வர் என்னும் கறுப்பினத்தவர் பயிர்சுழற்சி முறைகளை அறிமுகப்படுத்தி பழமையான விவசாயமுறைகளின் பிழைகளை சரிசெய்ததை, இந்தியாவில் ஹெச் ஐ வி தொற்று இருப்பதை 80 களில் முதலில் கண்டறிந்த சுநீதியை நிர்மலாவை,டைபாய்டு மேரியை. சூழியலை டார்வினுக்கு பல நூற்றாண்டுகள் முன்னரே தனது இயற்கை வண்ண ஓவியங்களால் நிறுவிய, தன் சிறுமகளுடன் சுரினாம் பூச்சிகளைச் சேகரிக்க ஒரு படகில் நீண்ட கடற்பயணம் மேற்கொண்ட மரியா சிபில்லாவை,சாவா மூவா மருந்துக்கான தேடலில் சீஸ் கண்டுபிடிக்கப்பட்டதை,
ஒரு கடற்பயணத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட தளபதி ஒருவரால் பறவைக்கூடு சூப் கண்டுபிடிக்கப்பட்டதை, ரேபிஸ்க்கு லூயி எப்படி தடுப்பு மருந்து கண்டுபிடித்தாரென்பதை, வேக்சினேஷனை கண்டறிந்த ஜென்னரை அவரது காதல் கதையை, கண்வருக்கு உதவிசெய்யப் போய் அகார் அகாரை ஃபேனி ஹிஸ்ஸ கண்டறிந்ததை,, கங்கை நீர் எப்படி மாசடையாமல் இருக்கிறது என்று ஆய்வு செய்து அதற்குக் காரணமாக பாக்டீரியோ பாஜ் இருப்பதை கண்டறிந்து, காலரா பாதிப்பிலிருந்த இந்தியக்கிராமங்களுக்கு அந்த நீரைக்கொண்டு போய், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்திருந்த, படிப்பறிவற்ற கிராமத்தவர்களிடன் கிணற்றுநீரில் அதைச்சேர்க்க மனறாடிய ஆங்கிலேய அறிவியலாளரைப் பற்றியெல்லாம் எழுதபட்ட கட்டுரைகள் யாருக்கும் தேவையிருக்காதுதான். எனினும் இரண்டாம் ஆதாம் என்னும் தலைப்பிட்டு அவற்றைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.
கோடையில்லா ஆண்டைச்சொல்லி குப்பைமட்கான ஹ்யூமஸை விவரிக்கும் கட்டுரை, காடழித்தலை, தனிப்பயிர் விவசாயத்தின் பாதகங்களை, செர்ரி மலர்க் கொண்டாட்டங்களை, தாலியாவை,ஜப்பானியத் தேநீர் விருந்தை, லக்கி க்ளோவரை விவரிக்கும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு லக்கி க்ளோவர் என்னும் பெயரிலேயே வெளியாக வேண்டி இருக்கிறது.
இதற்கிடையில் வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரு புதிய தொடர் எழுத உத்தேசித்திருக்கும் என் மனக்கட்டியை என்னவென்பது?
ஐந்து கண்டங்களிலும் தேடித்தேடி மக்கள் பஞ்சம் போக்கும் உணவுப்பயிர்களின் விதைகளைச் சேகரித்து, உளவாளி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மாதக்கணக்காக பட்டினி போட்டுக் கொல்லப்பட்ட நிகலோவ், தொழுநோய்க்கான எளிய மூலிகை சிகிச்சையை கண்டறிந்து அந்த ஆய்வை மற்றொருவர் திருடக்கொடுத்து மிக இளம் வயதிலேயே இறந்து போன ஆலிஸ் பால், டி என் ஏ வின் இருசுழற்சி அமைப்பை முதலில் கண்டுபிடித்து, அதை வாட்சனும் க்ரிக்கும் தங்களுடையது என்று சொல்லி வெளியிட்டு அதற்காக நோபல் விருதும் வாங்கும் முன்னரே ஒவேரியன் கேன்சர் வந்து மறைந்துபோன அதிபுத்திசாலிப் பெண்ணான ரோஸலிண்ட் என்று பல ஆளுமைகளின் பட்டியலை கைவசம் வைத்துக்கொண்டு எழுதத்துவங்குகிறேன்.
கட்டுரைகளை இணைய இதழ்கள் வரவேற்று வெளியிடுகின்றன எனினும் நூல்களை வெளியிடத்தான் யாருமில்லை. எனக்கு இன்னும் 500 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து எழுதப் புதிய அறிவியல் விஷயங்கள் இருக்கின்றன. ஒருவேளை இவை எதுவுமே பிரசுரமாகாமலும் நூலாக வெளிவராமல் போனாலும் பாதகமில்லை என் இணையதளத்தில் அவற்றை தொடர்ந்து வெளியிடுவேன், கட்டுரைகளை ஆர்வமாக வாசிக்கும் சிலர் இருக்கிறார்கள், மகன் சரண் இணைய தளத்துக்கான கட்டணத்தை வருடா வருடம் கட்டிவிடுகிறான்.😌
எழுதுக என்னும் ஜெ வின் கட்டளை எப்போதும் எனக்கு அசரீரி போல கேட்டுக்கொண்டே இருக்கிறது, எனவே எழுதுகிறேன்.
மற்றுமோரு தினமணி நினைவு. என் முதல் சிறுகதை கல்லூரியில் படிக்கையில் தினமணிக்கதிரில் வெளியானது.
3-ம் வகுப்பு முடிந்து வரும் பெரிய விடுமுறையில் வெங்கடேசா காலனி வீட்டிலிருந்து ராஜா ராமண்ணா நகர் சொந்த வீட்டுக்கு குடிவந்துவிட்டிருந்தோம். அந்த வீட்டிலிருந்துதான் இப்போதிருக்கும் இந்தக்கல்லூரிக்குச் சென்றதும்.
அப்போதுதான் அந்த புறநகர் குடியிருப்பு உருவாகிக்கொண்டிருந்தது. தெருவின் எல்லையில் விவசாயநிலங்கள் இருந்தன.
நான் அப்போது கல்லூரியில் 2 ம் வருடத்திலிருந்தேன். அங்கு வந்த நாளிலிருந்தே வீடிருந்த தெரு முடியும் பிரதான சாலையில் இருந்த பாபு என்னும் பன்றி மேய்ப்பவரின் குடும்பத்தை அறிவேன். கருத்த பெரிய உடலும் மிகப்பெரிய தொப்பையுமாய் இருப்பார் பாபு. ஏராளமான பன்றிகளும் குழந்தைகளும் அவருக்கு இருந்தது நினைவிருக்கிறது.
பாபுவுக்கு மூன்று மனைவிகள். சனிக்கிழமைகளில் குடிசைக்கு முன்பாகஅவரை ஒரு கல்லில் அமரவைத்து மூவருமாக உடலெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள் கொஞ்ச நேரத்தில் வாசலில் கல்லுக்கூட்டிய அடுப்பில் பெரிய அலுமினியப் பாத்திரத்தில் மசாலாவில் வேகும் பன்றிக்கறியின் வாசனை கமகமக்கும். இப்போது நினைத்துப்பார்த்தால் பாபு சொர்க்க வாழ்வு வாழ்ந்ததை உணரமுடிகிறது.
பாபுவின் மகள்களும் மகன்களும் பல வயதிலும் இருந்தார்கள் ஒரு சிலர் என் வயதில் என் விளையாட்டுத்தோழர்களாக இருந்தார்கள் அம்மாவுக்குத்தெரியாமல் விளையாடவேண்டும் அவ்வளவுதான். சாயங்காலங்களில் சிறு தூக்குப்போசியுடன் வீடுவீடாகச்சென்று அக்குழந்தைகள் ’’..சாப்பாடுங்ங்ங்..’’ என்று ராகம் போடுவார்கள். வீடுகளில் மீந்தவற்றைக்கொடுத்தால் வாங்கிப்போவார்கள். வெகுநாட்கள் கழித்துத்தான் எனக்குத்தெரியும் அப்படி வாங்கியவற்றை அவர்கள் சாப்பிடுவதில்லை பன்றிகளுக்கு கரைத்து ஊற்றுவார்கள் என்பது. அதில் என் வயதிலிருந்த ஒருத்தி நான் இந்தக்கல்லூரியில் சேர்ந்த அன்றே அங்கே துப்புரவுப்பணியிலிருந்ததை அறிந்தேன். அங்கேயேதான் இன்றுமிருக்கிறாள். தி ஜா கதைகளின் நாயகியைபோல வாளிப்பானவள். அவளைக்குறித்து ஒரு சில நல்ல சிறுகதைகளை எழுதமுடியும் . அத்தனை சுவாரஸ்யமானவள்.
கல்லூரியில் பேராசிரியப்பணியில் சேர்ந்தபிறகு ஒரு நாள் கோ ஆப்பரேட்டிவ் ஸ்டோருக்கு எதிரில் இருந்த நடுச்சோலை மாமரத்துக்குஅடியில்( இப்போது மாமரம் இருந்த இடத்தில் வகுப்பறைகள் இருக்கின்றன) நானும் அவளுமாய் நின்று சிரித்துப்பேசிக்கொண்டு நான் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு போயிருந்த கன்னிமாங்காய் ஊறுகாயை டிபன் பாக்ஸிலிருந்து எடுத்துச்சாப்பிட்டுக்கொண்டிருந்ததை அப்போதைய கல்லூரி முதல்வர் பார்த்து என்னை அழைத்து கன்மையாக வண்டித்தார் சீ வன்மையாகக்கண்டித்தார்.(’’… லோகமாதேவி,ஒரு ப்ரொஃபெஸர் என்ன இடத்தில் இருக்கனும்னு தெரியாதா உனக்கு?…’’)
என் கல்லூரிக்காலத்தில் தெரு முடிந்த இடத்திலிருந்த , முள்கம்பி வேலியிட்ட நிலத்தில் சாம்பல்பூசணிகள் விளைந்திருந்தன. ஒரு ஞாயிறன்று பாபுவின் சிறுமகன்கள் இருவர் அந்த முள்கம்பிக்குள் நுழைந்து சட்டையணிந்திருக்காத உடலைக்கிழித்துக்கொண்டு ஒரு சில பூசணிக்காய்களைத் திருடி வந்து வீடுகளில் விற்றார்கள் அப்படி அடிக்கடி அவர்களும் மேலும் சிலரும் வயல்களில் விளைபவற்றை திருடிவிற்று சில்லறைக்காசுகளை வாங்கிச்செல்வது உண்டு.
அன்று வாசலில் நாங்கள் தேங்காய் போட்டு எண்ணி எடுத்த்து வைத்துக்கொண்டிருந்தோம். அப்பாவுமிருந்தார் . ஆளுக்கொரு பூசணிக்காயுடன் சிறுவர்கள் இருவரும் அப்பாவிடம் வந்து ’’..சார் பூசணிக்காய் வேணுமா..’’ என்றார்கள்.
அப்பா வழக்கமான உருட்டல் மிரட்டலுடன் ’’…ஏண்டா இந்த சின்ன வயசிலேயே திருடிப்பழகறீங்களா? நான் யார் தெரியுமா? போலீஸ், பிடிச்சு ஜெயில்ல போடட்டா? உங்கப்பன் பாபுவை வரச்சொல்லி இதைசொல்லட்டுமாடா?..’’ என்றதும் அவர்கள் பயந்துபோய் பூசணிக்காய்கள் இரண்டையும் வாசலிலேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிப்போனார்கள். அப்பா சாவதானமாக அம்மாவிடம் ’’..பாப்பாத்தி பூசணிக்காயை எடுத்து உள்ளே வை..’’ என்றார்
நான் அந்தசிறுவர்களின் தோளிலும் முதுகிலும் வரிவரியாக இருந்த ரத்தக்கீறல்களை பலநாட்கள் நினைத்துக்கொண்டே இருந்தேன். கல்லூரி நூலகத்தில் தினமணிக்கதிரில் இருந்த முகவரிக்கு என் கிறுக்கல் கையெழுத்தில் நடந்ததை அப்படியே ஒரு சின்னக்கதைபோல சாம்பல்பூசணி என்று தலைப்பிட்டு எழுதிப்போட்டேன். அடுத்த சிலவாரங்களிலேயே அது பிரசுரமாகி கல்லூரி முகவரிக்கு சன்மானமும் வந்தது.
ஆனால் கதைப்புத்தகங்கள் வாசித்தாலே அப்பாவிடம் அடிகிடைக்கும் ஆம் கல்லூரிக்காலத்திலும் அடிப்பார். அவரது முறம்போன்ற கையால் அடிவாங்கி பலநாட்கள் எனக்கு மூக்குச்சில்லு உடைந்து ரத்தம் கொட்டும், இப்படி பத்திரிக்கையில் எழுதியதற்கு இன்னமும் அதிகமாக அடிகிடைக்கும் அதிலும் அவரை, அவர் செய்த தவறைக்குறிக்க சாம்பல் பூசணி என்று குறிப்பிட்டு எழுதியது தெரிந்தால் ரத்தக்களறிதான் என்பதால் பிரசுரம் குறித்து யாரிடமும் சொல்லவேஇல்லை.
அந்த முதல் பிரசுரத்தை இன்று நினைக்கையில் அப்போதும் தலைப்பில் தாவரவியல் இருந்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.
இன்று தினமணியில் திரு அருள் செல்வன் அவர்களுக்கு அளித்த நேர்காணல் வெளியாகியிருக்கிறது. நான் நாளிதழ்கள் எதுவும் வாங்குவதில்லை .ஏதேனும் குறிப்பிட்ட செய்தி வாசிக்கவேண்டியிருந்தால் நூலகம் சென்று வாசிக்கிறேன். அதுவும் அரிதினும் அரிதாகத்தான்.
இப்போதெல்லாம் இந்து தமிழில் வெளியாகும் நண்பர் ஸ்ரீராமின் வியாழக்கிழமை கட்டுரைகளுக்காகச்செல்கிறேன். நாளிதழ்களும் தொலைக்காட்சித்தொடர்பும் இல்லாத இயற்கையுடன் இணைந்த வாழ்வின் ஆடம்பரம் இது.
முன்பு தினமலர் பட்டம் நாளிதழில் தொடர்ச்சியாகக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததற்குப்பிறகு அறவே நாளிதழ்கள் வாசிப்பதில்லை. எல்லாச்சேதியும் யாருடனும் தொடர்பிலில்லாமல் தனியறையில் கல்லூரியிலும், தன்னந்தனிமையில் வீட்டிலும் இருக்கையிலும் எனக்கு வந்து சேர்ந்துவிடுகிறது.
இன்று தினமணியில் என்னைக்குறித்த பதிவை வாசிக்கையில் தினமணிக்கும் எனக்குமான தொடர்பு நினைவுக்கு வந்தது.
நான் சிறுமியாக இருக்கையில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அந்த வீடு அங்குலம் அங்குலமாக எனக்கு நினைவிருக்கிறது. வீட்டைஒட்டி இருக்கும் ஐய்யப்பன் கோயிலில் தான் பெரும்பாலும் இருப்பேன். விறகடுப்பு பம்ப் ஸ்டவ் திரிஸ்டவ் என்று படிப்படியாக மேலே வந்ததும் நினைவிலிருக்கிறது. வாரா வாரம் செவ்வாய்க்கிழமை ஒரு ட்ரம் இணைக்கப்பட்ட தள்ளு வண்டியில் ’’….கிஷ்ணாயில்ல்ல்ல்ல்ல்ல்ல்…’’ என்று கூவி விற்றுக்கொண்டு ஒருவர் வருவார் அவரிடம் காத்திருந்து வாங்கிக்கொள்வது வழக்கம்.
அந்த தெருவின் கோடியில் இருந்த கொஞ்சம் வசதியான ஒரு வீட்டில் மட்டும்தான் தினமணியும் மாதாமாதம் ராணிமுத்துவும் வாங்குவார்கள். காலை 11 மணி வாக்கிலிருந்து அந்ததெருவே ஒவ்வொருவராக அவர்கள் வாசித்து முடித்த தினமணிப்பேப்பரை கடன்வாங்கி வாசித்து மாலை திருப்பிக்கொடுப்போம் பெரும்பாலும் நான் தான் போய் வாங்கிவருவேன். ஞாயிற்றுக்கிழமை இணைப்பான கதிர் பலர் வீட்டில் வாரக்கணக்காக இருக்கும் அதில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகளை அம்மாமார்கள் சமையலறை வேலை முடிந்தபின்னர் குழுவாக அமர்ந்து போடுவார்கள். செல்போனும் தொலைக்காட்சியும் இல்லாத பொற்காலமது.
அந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார்கள் அவர்களின் பெயரே கதிரக்காதான் ஏனெனில் கதிர் புத்தகத்தை கடன் கேட்ப்பவர்களுக்கு அவர்தான் எடுத்துக்கொடுப்பது வழக்கம். அவரது அசல் பெயர் எனக்கு நினைவிலில்லை. அந்தக்கதிரக்காவுக்கு கத்தரித்து விட்டபின்னரும் கணுக்கால்வரை நீண்ட பின்னல் இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது வீட்டுக்கு ஓட்டமாய் ஓடிப்போய் அவரது யக்ஷிபோல விரிந்திருக்கும் நீண்ட தலைமுடியை துவைக்கும் கல்லில் பரப்பி கதிரக்காவின் அம்மா அரப்புபோட்டு அலசுவதை வேடிக்கைப்பார்ப்பேன். அதைக்குறித்து வீட்டுக்கு வந்து நான் கண்கள் விரிய’’.. எத்தனை நீளம் தெரியுமா ..’’என்று பேசுகையில் அம்மா ’’…ஆமா சீவக்கட்டையாட்டம் எதுக்கு ஒருத்திக்கு அத்தனை முடி’’அதிகமுடி ஆளைக்கொல்லும்டீ’ என்பார்கள்.
பின்னர் ஒரு கூடையில் சாம்பிராணி போட்டு அக்காவின் முடியை அதில் விரித்துப்போட்டு உலர்த்துகையில் நானும் கூட ஒத்தாசை செய்வேன். கதிரக்காவின் கறுத்த களையான முகம் எனக்கும் அப்படியே நினைவில் இருக்கிறது. ஒருநாள் புளியை சர்க்கரையும் உப்பும் கலந்து உருட்டி ஈர்க்குச்சியில் செருகி அவருக்கும் எடுத்துக்கொண்டு எனக்கும் ஒன்று கதிரக்கா கொடுத்ததும் அதன் ருசியும் நினைவிருக்கிறது. கதிரக்காவுக்கு எப்போது கல்யாணம் ஆனது என்பதெல்லாம் எனக்கு நினைவிலில்லை நான் எப்போதிலிருந்து அந்த வீட்டுக்கு கதிரை தினமணியை வாங்கச்செல்வதையும் தலைமுடி அலசுவதை வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தினேன் என்பது நினவிலில்லை.
ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே அம்மாவீட்டுக்கு விருந்துக்கு வந்த கதிரக்கா, உடலெல்லாம் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டு தெருவுக்கு வந்து சம்மணமிட்டு அமர்ந்து ஒரு சின்ன கதறலோ கூவலோ சத்தமோ இல்லாமல் எரிந்தழிந்துபோனதையும், அதற்கு முந்தின நாள் பொள்ளாச்சியின் மிகப்பிரபலமான மற்றொரு குடும்பத்து இளைஞரொருவர் விஷமருந்திச் செத்துப்போனதையும் பிற்பாடு அம்மாவும் அத்தையுமாய் மாய்ந்துமாய்ந்து பேசிக்கொண்டிருக்கையில் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சண்முகம் என்னும் அந்த இளைஞரின் புகைப்படத்துடன் அஞ்சலிப் போஸ்டர்கள் பல இடங்களில் தெருவெல்லாம் ஒட்டப்பட்டிருந்தது.