காலையில் கல்லூரிக்குப்போகத் தயாரான போது Striped lily எனப்படும் வாள்போன்ற பசிய இலைகளும், கவிழ்ந்த வெள்ளை மணிபோன்ற, கழுத்தில் இளஞ்சிவப்புக் கோடுகளுள்ள பெரியமலர்களும் கொண்ட, விளிம்பி மரத்தடியில் கூட்டமாக வளர்ந்திருந்த செடி சோர்ந்து வாடியிருந்தது. (பள்ளியில் படிக்கையில் ஆங்கில ஆசிரியை திரிபுரசுந்தரி ’’..லோகா இப்படி காம்பவுண்ட் செண்டென்ஸாவே எழுதிட்டே இருந்தா அதுவே பழக்கமாயிரும்..’’ என்று அதட்டுவதை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்.)
பதறியபடி அருகில் சென்றேன். ஏராளமான வண்ணப்புழுக்கள் இலை மலர் அரும் பு என எல்லாவற்றையும் தின்றுகொண்டிருந்தது. கைப்பையை கீழே எறிந்துவிட்டு புழுக்களை திட்டிக்கொண்டே அப்புறப்படுத்த முனைந்தேன்.
“..நில்லு என்ன பண்ணறே! ” என்று தருண் வந்தான். “புழுடா பாவம் செடி”என்றேன். “எந்திரி முதல்ல இது லில்லி மோத்தோட இளம்புழுக்கள், இந்தச்செடியை மட்டும்தான் சாப்பிடும் இதோட அம்மா இந்தச்செடிதான் புழுக்களோட Host plantனு தெரிஞ்சு இதில் முட்டை வச்சிருக்கு. ஒரு செடியோட பயன் கண்ணுக்கு அழகா இருக்கறதும் சாப்பிடக்கொடுக்கறதும் நிழல் தரதும் தானா? நீயும் அப்படித்தான் நினைக்கறியா? பயோடைவர்சிட்டின்னா என்னன்னு நினைக்கறே?
இயற்கையின் அறம்னு வகுப்புவேற எடுக்கறே? வெண்முரசில் சொன்னியே இயற்கையின் இரக்கமற்ற விதிகளில் நாம் தலையிடக்கூடாது பார்வையாளராகத்தான் இருக்கனும்னு? விட்ரு அது சாப்பிட்டு இறக்கை வளர்ந்து பறந்து போகட்டும். தண்டடிக் கிழங்கிலிருந்து செடி மறுபடியும் வளர்ந்துரும் “என்றான். எனக்கு பதில் சொல்ல ஒன்றுமில்லாமல் போனது.லில்லியிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு கருநீலஉடலெங்கும் வெண்புள்ளிகளுடன் ஆர்வமாய் செடியை சாப்பிட்டுக்கொண்டிருந்த புழுக்களை பார்த்தபடியே புறப்பட்டேன். காரில் போகும்போது தருண் சொன்ன வெண்முரசு உவமையை யோசித்துப்பார்த்தேன்.
” இங்கு வாழ்வெனத் திகழ்வது என்ன? நெறியற்ற முட்டிமோதல். ஒன்றை ஒன்று தின்று செல்லும் வெறி. நெறியென்று எதையேனும் நம்பியிருப்போர் வீழ்ந்து மிதிபட்டு அழிய தன்னை எண்ணி தானொன்றே ஆக முன்செல்வோர் வெல்கிறார்கள்”
“வேட்டையில் விழுந்து சிம்மத்திற்கு உடலளிக்கும் மானுக்கு துயரில்லை. இப்புவியை ஆளும் இரக்கமற்ற நெறிக்கு தன்னை அளிக்கிறது அது!
கடந்த வெள்ளிக்கிழமை ஊட்டியருகில் ஒரு கல்லூரிக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு போயிருந்தேன். சமீபத்தில் துவங்கப்பட்டிருந்த கல்லூரி அது. மேலும் மாணவர்களைச் சேர்க்க போதுமான அளவு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என சோதிக்க வேண்டும். நடந்து சலித்தேன் கல்லூரி முழுக்கவே. ஒரு ஆய்வகம் திறக்க சாவி வரும்வரை வராண்டாவில் காத்திருந்தோம். அது உணவு இடைவேளை. பக்கத்தில் இருந்த ஒரு வகுப்பறையின் வாசலில் கதவுநிலவின் இருபக்கமும் கைகளை வைத்துக்கொண்டு நின்றிருந்த ஒருத்தியிடம் சிவப்பு ஸ்வெட்டெர் போட்டுக்கொண்டு ஒரு ஒல்லிப்பையன் வந்து லாங்சைஸ் நோட் ஒன்றை கொடுத்தான். அவளும் அதை மறுமுனையில் பிடித்துக்கொண்டாள். இவனும் கொடுக்கவில்லை அவளும் வாங்கவில்லை. அவன் அவளிடம் ’’எப்போ திருப்பித்தருவீங்க? என்கிறான். அவள் அவனை கண்ணுக்குள்ளேயே பார்த்து ‘’ ஏன் திருப்பித்தரணுமா கட்டாயம்? என்கிறாள் அவன் ’இல்லை நீங்க திருப்பித் தருவீங்கனு நம்பித்தான் நான் இதைகொடுக்கறேன் திங்கட்கிழமை தந்துருங்க’’ என்றன் அவள் வெட்கிச்சிவந்து வெடுக்கென நோட்டைப் பறித்தபடி உள்ளே ஓடினாள். அத்தனைபேர் அங்கே கூட்டமாக ஒரு முக்கியவேலையாக நிற்பதும் அருகில் அவர்கள் கல்லூரியின் ஆசிரியர்கள் நிற்பதும் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் புன்னகைத்தபடி திறக்கப்பட்ட அந்த ஆய்வகத்துக்குள் நுழைந்தேன். இசை சமீபத்தில் அகழ் இதழில் மலைச்சாரலில் மையல் யானைகள் என்று அபாரமான ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நான் ஒருவேளை தமிழ்த்துறை ஆசிரியராக அதுவும் இப்போது இருக்கும் நவீன இலக்கியப்பரிச்சயமே இல்லாத ஒருத்தியாக இருந்து அந்தக் கட்டுரையைப் படித்திருந்தால் நிச்சயம் குற்றவுணர்வும் அவமான உணர்வும் மேலிட தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன். அதில் சொலலப்பட்டிருக்கும் கெடுதி வினாவுதல் தான் இதுவும். நேற்று நான் அவள் அந்த நோட்டை திருப்பித்தந்திருப்பாளா அல்லது அவன் வந்து கேட்கட்டும் என்று கொடுக்காமல் வைத்திருப்பாளா என்று நினைத்துக்கொண்டேன்.
அரிதாக நேரம் கிடைக்கையில் வெப்சீரிஸ் பார்ப்பதுண்டு. மணிஹெயிஸ்டுக்குப்பிறகு நெட்ஃப்ளிக்ஸில் காலாபாணி தொடரைத்தான் வெகு சுவாரஸ்யமாக பார்த்தேன்.
மணி ஹெயிஸ்ட் வந்தபோது சரண் டெங்குக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவன் உறங்கிக்கொண்டிருக்கையில் நான் அருகிலிருக்கும் பெஞ்ச்சில் அமர்ந்து தொடரைப் பார்ப்பேன். ஒருமுறை அவனுக்கு ட்ரிப்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது தீர்ந்துபோய், அவன் ரத்தம் அந்தக் குழாயில் மேலே ஏறத் தொடங்கியதைக் கடைசித் தருணத்தில்தான் கவனித்து அந்த வால்வை நிறுத்தினேன்.
சரண் இன்றும் இதைச் சற்று மிகைப்படுத்தி, “மகனுக்கு ரத்தம் போனாலும் மணி ஹெயிஸ்ட் பார்த்த ஆளாச்சே நீ!” என்பான். காலாபாணியும் அப்படித்தான், நம்பவே முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக இருந்தது. அதன்பிறகு அதர்வாவின் மத்தகம் என்னும் தொடர் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.
இப்போது அமேசான் பிரைமில் ‘சாம்பல்’ என்று இந்தியில் பொருள் கொண்ட ‘Raakh’ தொடர் வெகுகாலத்துக்குப் பிறகு வந்திருக்கிறது. இரண்டு வாரம் முன்பு முதல் சீசனின் 8 எபிசோடுகளையும் ஒரே நாளில், உட்கார்ந்த இடத்தில் லேப்டாப்பில் சார்ஜ் தீரத் தீர, தருணை அழைத்துப் போடச் சொல்லியும், சமையலறையின் மேடை மீது வைத்துக்கொண்டும் பார்த்து முடித்தேன்.
உணர்ச்சிவசப்பட்டு, “அடிப்பாவி! அவனுக்கு இப்பவே விஷம் வச்சிரு, இல்லைன்னா உன்னைக் கொன்னுருவான்” எனத் திரையைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் என்னை தருண் புன்னகையுடன் கடந்துசெல்வான். அபாரமான தொடர்!
தாவரங்களின் பரவலைப் பற்றி வாசித்துக்கொண்டே இருக்கிறேன். மிகேல் போலானின் ’பாட்டனி ஆஃப் டிஸையர்’ நூல் குறிப்பிட்ட சில தாவரங்களின் பரவலைக்குறித்து மிக ஆச்சர்யமான தகவல்களைப் பேசுகிறது.
காற்றில், நீரில், வெடித்துப்பரவும் வழியில் ,விலங்குகளால், பறவைகளின் எச்சத்தால், மனிதர்களால் தெரிந்தும் தெரியாமலும் என்று அவற்றின் பல வழிகளை அறிந்துகொண்டிருக்கும் போதுதான் 1492 என்னும் நூலை எழுதத் தொடங்கினேன்.
1492-ல் தொடங்கிய கொலம்பஸின் கடற்பயணத்தில் அவர் கண்டறிந்த புதிய நிலங்கள் அங்கிருந்து பழைய உலகிற்கு அவர் அறிமுகப்படுத்திய அன்னாசி, புகையிலை, பருத்தி போன்ற தாவரங்களை அவரது கடல் பயணத்துடன் விவரித்துச் சொல்லும் நூலின் அத்தியாயங்களை சொல்வனத்தில் தொடராக எழுதிக் கொண்டிருக்கிறேன் இன்று அவர் கால்வைத்த கன்னித்தீவைக் குறித்த 5 வது அத்தியாயம் வெளியாகிறது.
மனிதர்களால் பரவிய தாவரங்களைக் குறித்த தேடலின் போதுதான் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏசுவின் ரத்தமாக கருதப்படும் திரட்சை ரசத்தை அளிக்க உலகெங்கிலுமிருந்தும் கிறிஸ்துவ இறைப்பணியாளர்கள் திரட்சைக்கொடியின் நறுக்கிய தண்டை சிலுவை மற்றும் பைபிளுடன் கடல்கடந்து எடுத்துச் சென்றது, திராட்சை வளர வழியே இல்லலாத இடங்களிலும் தேவாலயத்தோட்டங்களில் அவற்றை வளர்த்தது ஆகியவற்றைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
மும்பை மெதடிஸ்ட் தேவாலயத்தில் மிஷன் கிரேப்ஸ் என்னும் தலைப்பில் சமீபத்தில் ஒரு உரையாற்றினேன்.
கிறிஸ்தவ சமயச் சடங்குகளுக்கான வைனுக்காக திராட்சைக்கொடி உலகெங்கிலும் கிறிஸ்துவப் பாதிரியார்களால் பரவியதைக் குறித்தும், ஏன் திராட்சை ரசம் மட்டும் தேவைப்பட்டது, குருதியைப் போலவே இருக்கும் மாதுளைச்சாற்றை ஏன் தேவாலயங்கள் மறுத்தன, துருவப்பகுதி தேவாலயங்கள் ரத்தம் போல திரவமாக இருக்கவேண்டிய வைனுக்கு என்ன செய்தன? இவற்றோடு மெதடிஸ்ட் பிரிவை உருவாக்கியவரான வெஸ்லே மற்றும், ஈஸ்டின் பெருகலால் புளித்துப்போகாமல் இருக்க வைனை பாஸ்டுரைஸ் செய்த லூயி பாஸ்டரின் பங்களிப்பையும் சேர்த்து எழுதுவது சுவாரசியமாக இருக்கிறது.
ஏராளமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அகராதி முடிந்த பாடில்லை அதில் இணைத்த சித்திரங்களுக்கான credit கொடுக்காமல் அனேகமாக எழுதி முடித்தே விட்டேன். பாம்பு கடித்து பரமபதத்தின் கடைசிக்கு வந்து மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறேன் இந்த credit கொடுக்கும் வேலையை. இன்று மகன்களிடம் சொன்னேன் அனேகமாக இதை என் சார்பாக நீங்கள் தான் வெளியிடுவீர்களாக இருக்கும் என.
இன்னும் இரு நூல்கள் , ஸம்பா மற்றும் பொற்சுழல்; பிழைதிருத்தி பதிப்பகங்களில் தரவேண்டி இருக்கிறது. காலச்சுவடில் மொழிபெயர்ப்பு நூல் ‘அலையிடைவெளியில்’ வெளியாக வேண்டி இருக்கிறது. திரு அரவிந்தனின் மறைவினால் அது தாமதமாகிவிட்டது.
பெரும்பாலான பதிப்பகத்தார் என் தாவரவியல் நூல்களில் அக்கறை காண்பிப்பதில்லை என்பதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை , இறையன்பு மற்றும் கவிதாசனின் தன்னம்பிக்கை நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளியிட்டால் லாபம் வருகிறது, யாரும் விரும்பாத தாவரவியலைப் பற்றி நூல் வெளியிட்டு தெரிந்தே கையைச்சுட்டுக்கொள்ள யார்தான் தயாராக இருப்பர்கள்?
நூலாக வராவிட்டாலும் சரிதான்.எனக்கு எழுதவேண்டி இருப்பதை எல்லாம் மகிழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உத்தர பிரதேசத்தில் பிரம்மாண்டமான மகா கும்பமேளா 2025-ம் ஆண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் (அலகாபாத்) நடைபெற்றது. திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்தது. சுமார் 66 கோடிப் பேர் அங்கு புனித நீராடி இருக்கின்றனர்.
இந்தியாவின் இரு பெரும் நதிகளான யமுனையும் கங்கையும் கலக்கும் அலகாபாத்தில், இந்த நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுகையில் பல நோய்கள் தீருமென்றும் பிறவிச்சரடு அறுபடும் என்றும் கர்மவினைகள் தீரும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.
இந்தப் புனித நதிகளின் நீரின் தூய்மைப்படுத்தும் இயல்புகளுக்கு நுண்ணுயிரியல் வரலாறும் உள்ளது. நுண்ணுயிரியல் வரலாற்றில் மூன்று அறிவியலாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளில் பெரும் பங்காற்றி இருக்கின்றனர்.
ஹான்கின்-(Ernest Hanbury Hankin)
1895-ல் ஆக்ராவில் அரசு நுண்ணுயிரியலாளாராகப் பணியில் இருந்த பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் மற்றும் இயற்கையியலாளர் எர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின் அங்கு ஒரு நுண்ணுயிரியல் ஆய்வகத்தையும் அமைத்திருந்தார். அப்போது இந்தியாவில் காலராத்தொற்று அதிகம் இருந்து பலரை பலிவாங்கிக்கொண்டிருந்தது. ஆக்ராவைச்சுற்றிலும் காலரா பரவி இருந்தது. கங்கை யமுனை ஆறுகளில் பிணங்களை வீசுவதும் குளிப்பதும் துணிகளைத் துவைப்பது கழிவுகளை கொட்டுவதும்தான் அந்த நீரை மாசுபடுத்தி காலாரவை அந்தபகுதியில் உருவாக்கியது என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் ஹான்கின் அந்த நீரை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது எதிர்பாராத முடிவுகள் கிடைத்தன.
காலராத்தொற்றினால் இறந்த உடல்கள் வீசப்பட்ட கங்கை மற்றும் யமுனை நதிநீரை அருந்தும் மக்களுக்கு நோய்த்தொற்று உருவாகவில்லை என்பதைக் குறிப்பிட்டு அந்த இரு நதிகளின் நீரிலும் ஏதோ ஒரு கிருமிக் கொல்லிப்பொருள் இருப்பதாக ஹான்கின் தெரிவித்திருந்தார்.
1896-ல் முதன்முதலாக காலராக் கிருமிகளை குணமாக்கும் யமுனை மற்றும் கங்கை நதி நீரின் இயல்புகளைக் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றில் விவரித்தார். அதற்கு காரணமான பாக்டீரியாக்களை உண்ணும் வைரஸ்களான பேஜ்கள் (phages) அதற்கு 20 ஆண்டுகள் கழித்துத்தான் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும் ஹான்கின் அவற்றைக் குறித்த முதல் கண்டுபிடிப்பை செய்ததாகக் கருதப்படுகிறார்.
நோய்க்கிருமிகளை அழித்து தூய்மைப் படுத்தும் நதி நீரின் இயல்பைக் குறித்த ஹான்கினின் ஆய்வுக் கட்டுரைகள் அறிவாய்வியலுடன் தொன்மங்கள், நாட்டுப்பாடல்கள், வாய்வழிக்கதைகள் ஆகியவற்றையும், இணைத்துச் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளைத் தெரிவித்தன.
இந்தியாவின் வடமேற்கு பகுதிமுழுக்க அரசாங்க அதிகாரியாகப் பொறுப்பிலிருந்த ஹான்கின் பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவன சஞ்சிகையில் 1896-ல் வெளியிட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க L’action bactéricide des eaux de la Jumna et du Gange-“The Bactericidal Action of the Waters of the Jumna and the Ganges on the Cholera Vibrio” என்னும் ஆய்வறிக்கையில் கங்கை யமுனை நதிகளின் நீரில் இருக்கும் கிருமிக்கொல்லிகளைக் குறித்து விவரித்திருந்தார்.
அந்த நதிகளின் நீரில் பிற நதிகளில் இருப்பதை விட மிக மிகக் குறைவாகவே நோய்க்கிருமிகள் இருப்பதை ஹான்கின் குறிப்பிட்டிருந்தார்.
பாதி எரிந்த நிலையில் வீசப்பட்டு மிதக்கும் பிணங்களுக்கருகில் சூழ்ந்திருக்கும் பிணந்தின்னிக் கழுகுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு நீர் மாதிரிகளை ஆய்வுக்கெனச் சேகரித்தார் ஹான்கின்.
பல முறை ஆய்வுகளைச் செய்து அப்படிச் சேகரித்த நதிநீர் 3 மணி நேரத்தில் காலராக் கிருமிகளைக் கொல்கிறது என்று நிரூபித்த அவர் அந்த ’’பாக்டீரியக்கொல்லித்தன்மை’’ நீரை வெப்பமூட்டுகையில் ஆவியாகி விடுகிறது என்பதையும் ஆய்வுகளின் மூலம் தெரிவித்தார்.
1915-1917- களில் பாக்டீரியாக்களை கொன்று தின்னும் வைரஸ்களான பாக்டீரியா பேஜ்கள் ஃபெலிக்ஸ் மற்றும் ட்வார்ட் ஆகியோரால் (Frederick Twort & Félix d’Herelle) கண்டுபிடிக்கப்பட்டதில் ஹான்கினின் இந்த ஆய்வுகள் மிக உதவியாக இருந்தன
ஹான்கினின் இந்த ஆய்வு முடிவுகள் இருவகையான எதிர்வினைகளை உருவாக்கின.
ஒரு தரப்பு இப்படி நீரின் கிருமிக்கொல்லித் தன்மையை அறிவித்ததன் மூலம் மேலும் மேலும் கழிவுகளையும், பிணங்களையும் நதியில் கொட்டுவதற்கு ஹான்கின் காரணமாகிறார் என்று குற்றம் சாட்டியது
இந்துமத நம்பிக்கையாளர்களின் தரப்பு புனித நதிகளின் நீராடல் மக்களைத் தூய்மைப்படுத்துகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தவர் என்று ஹான்கினுக்கு பாரட்டைத் தெரிவித்தது.
ஹான்கினின் ஆய்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு அலகாபாத், பனாரஸ் மற்றும் ஆக்ராவுக்கு வருகை தந்த அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் பண்டைய இந்தியர்கள், பிணங்கள் மிதக்கும், நாற்றம் அடிக்கும் கங்கை நீர், தான் தொடுபவற்றை எல்லாம் புனிதப்படுத்தும் என்ற உண்மையை எப்படி அறிந்திருந்தார்கள்? என்று தன் வியப்பை தெரிவித்திருந்தார், பண்டைய இந்தியர்கள் கிருமி ஆய்வாளர்கள் என்றும் பயணக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்கந்த புராணம் பகவத்புராணம் மஹாபரதம் ஆகிவற்றிலும் கங்கை நீரின் கெட்டுப்போகாத, பாசிபிடிக்காத, எத்தனை காலம் வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசாத புனிதத்தன்மை குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற பின்னர், லூயி பாஸ்டருடனும், ராபர்ட் காச்சுடனும் பணிபுரிந்த பின்பு இந்தியாவிற்கு வந்த ஹான்கின் இந்தியாவில் பரவிக் கொண்டிருந்த காலரா உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான காரணம் நுண்ணுயிர்கள் என்பதை அறிவித்தவர்களில் முதன்மையானவர். ஹான்கின் ஆந்த்ராக்ஸ் மற்றும் உடலின் நோயெதிர்ப்புக் குறித்த ஆய்வுகளிலும் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்.
இந்திய காலனியாதிக்கக் காலத்தில் மருத்துவ ஆய்வுகளை துவங்கியதில் ஹான்கினின் பங்கு அளப்பரியது. 1900-களில் இமாச்சல பிரதேசத்தில் முதல் பாஸ்டர் ஆய்வு நிறுவனத்தை உருவாக்குவதில் ஹான்கின் மிக முக்கியப் பங்கு வகித்தார். அங்குதான் இந்தியாவில் பரவிக்கொண்டிருந்த டைபாய்டு மற்றும் காலாரா நோய் குறித்த ஆராய்ச்சி முழுவீச்சில் நடைபெற்றது.
அங்கு பணியில் இருந்த புகழ்பெற்ற பாக்டீரியா நிபுணரான ஹாஃப்கின்னுடன் (W. M. Haffkine) இணைந்து இந்தியா முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருந்த பிளேக் மற்றும் காலராவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியதில் ஹான்கின் பெரும்பங்காற்றினார்.
இந்திய கிராமங்களில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை கிருமிநாசினியாக உபயோகிப்பதை பரவலாக்கியதும் ஹான்கின்தான்.
காலரா மற்றும் பிளேக் நோயுற்று இறநதவர்களின் உடல்களைத் தின்று, நோயுற்ற பிணந்தின்னிக் கழுகுகளைக் கருணையுடன் சிகிச்சையளித்து காப்பாற்றியவராக மருத்துவ அறிவியல் வராலாற்றில் ஹான்கின் பெருமதிப்புடன் நினைவு கூறப்படுகிறார்.ஹான்கின் இந்தியாவில் ஆற்றிய பணிகளில், காலரா பாக்டீரியா பற்றிய ஆராய்ச்சிக்கு அடுத்தபடியாக மிக முக்கியமானது, அவர் பாறுகழுகள் (Vultures) மற்றும் பிற பறவைகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறித்து மேற்கொண்ட ஆய்வுகள்தான்.
அவர் கழுகுகளைக் குணப்படுத்தினார் என்பதை விட, “அவ்வளவு அசுத்தமான அழுகிய இறைச்சியைத் தின்றும் கழுகுகளுக்கு ஏன் நோய் ஏற்படுவதில்லை, அவற்றின் செரிமான மண்டலம் எவ்வாறு நோய் கிருமிகளை அழிக்கிறது?” என்ற கோணத்திலேயே அவரது முதன்மை ஆராய்ச்சி அமைந்தது. ஹான்கின் கழுகுகளை வெறும் ஆராய்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்கவில்லை; அவர் பல கழுகுகளைத் தனது சொந்தக் கைகளால் பராமரித்து, குணப்படுத்தி, காப்பாற்றவும் செய்துள்ளார்.
அவர் ஆக்ராவில் இருந்த தனது ஆய்வகத்தின் அருகே பெரிய கூண்டுகளை (Aviaries) அமைத்து, காயமடைந்த அல்லது நோயுற்ற கழுகுகளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்த்தார்.வேட்டையாடப்பட்டோ அல்லது விபத்துகளில் சிக்கியோ காயமடையும் கழுகுகளை ஹான்கின் மீட்டு வருவார். அவற்றின் சிறகுகள் மற்றும் கால்களில் ஏற்படும் காயங்களுக்கு மருந்திட்டு, அவை மீண்டும் பறக்கும் திறன் பெறும் வரை தனது கூண்டுகளில் வைத்துப் பராமரித்தார்.
பொதுவாக பாறுகழுகுகள் மனிதர்களைக் கண்டால் அஞ்சும் அல்லது தாக்க வரும் குணம் கொண்டவை. ஆனால், ஹான்கின் அவற்றுக்குத் தொடர்ந்து உணவளித்துக் காப்பாற்றியதால், அவை அவரிடம் மிகவும் பழகிவிட்டன.
அவர் கூண்டுக்குள் செல்லும்போது, அந்தக் கழுகுகள் நாய்க்குட்டிகளைப் போல அவரிடம் ஓடிவந்து, அவரது கைகளில் இருந்து உணவைக் கொத்தித் தின்னும் அளவுக்கு சாதுவாக மாறின. பூனைகள் அல்லது பிற விலங்குகள் தாக்க வரும்போது, இந்தக் கழுகுகள் ஹான்கினைத் தங்களுக்குப் பாதுகாப்பான அரணாகக் கருதி அவர் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு அவற்றுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது.
கழுகுகள் குணமடைந்தவுடன், அவற்றின் சிறகுகள் பலம்பெற வேண்டும் என்பதற்காகத் தனது ஆய்வக வளாகத்திலேயே அவற்றைப் பறக்கவிட்டுப் பயிற்சி அளிப்பார். முழுமையாகக் குணமடைந்த பறவைகளை மீண்டும் இயற்கையாக வாழ காடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவார்.
தன் உடலையே ஆராய்ச்சி விலங்காக மாற்றிக்கொண்டு நாகத்தின் நஞ்சு, ஓபியத்தின் போதை ஆகியவற்றின் விளைவுகளை ஆராய்ந்த ஹான்கின் அவரது காலத்தில் முக்கியமான இந்த ஆய்வுகளுக்கு பேரும் புகழும் பெறவில்லை என்றாலும் பாக்டீரியாபேஜ் கண்டுபிடிப்பாளர்கள் இருவரும் பல ஆய்வறிக்கைகளில் ஹான்கினின் துவக்க கால ஆய்வு முடிவுகளைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
ட்வார்ட்- Frederick Twort
1915-ல் பிரிட்டிஷ் பாக்டீரிய நிபுணர் ஃப்ரெட்ரிக் ட்வார்ட்( Frederick Twort), நதி நீரில் இருக்கும் ஒரு மிகச்சிறிய நுண்ணுயிர் பாக்டீரியாக்களை அழிப்பதை கண்டறிந்தார்.
அந்த நுண்ணுயிர்
வாழ்க்கைச் சுழற்சியில் பாக்டீரியாவின்ஒரு நிலை
பாக்டீரியா ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வெளியிடும் ஒரு நொதி
அல்லது
பாக்டீரியாவைக் கொல்லும் ஒரு வைரஸாக இருக்கக்கூடும் என அவர் யூகித்தார்
மேற்கொண்டு ஆய்வுகளைத் தொடர்ந்து அது என்னவென்று ட்வார்ட் உறுதிப்படுத்துவதற்கு முன்பு முதல் உலகப் போர் துவங்கியது . எனவே நிதிப் பற்றாக்குறையால் ட்வார்ட்டின் இந்த ஆய்வு அப்படியே கைவிடப்பட்டது.
1917-ல்தான் அது பாக்டீரியாபேஜ் என்று ஃபெலிக்ஸினால் பெயரிடப்பட்டது. ட்வார்ட்டின் கண்டுபிடிப்பு நுண்ணுயிர்களின் அடிப்படை வகைகளின் அறிதலில் ஒரு பெரிய திறப்பை உண்டாக்கியது. ட்வார்ட் 1950-ல் இறந்தார். நுண்ணுயிரியல் வரலாற்றில் ட்வார்ட்டின் சோதனைகள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மிக முக்கியமானவை
ஃபெலிக்ஸ் -Félix d’Hérelle
தானாகவே நுண்ணுயிரியலை கற்றுத்தேர்ந்திருந்த, பாரீஸில் பாஸ்டர் நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருந்த ஃபெலிக்ஸ் (Félix d’Hérelle) என்னும் நுண்ணுயிரியலாளர் 1917- செப்டம்பர் 3-ம் தேதி, நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் கண்ணுக்குத் தெரியாத அளவு நுண்மையான ஒரு உயிரியைத்தான் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார், அவர் பாக்டீரியாக்களைக் கொல்லும் அந்த வைரஸுக்கு பாக்டீரியோ பேஜ் – bacteriophage என்றும் பெயரிட்டிருந்தார்.
வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட ஒரு நோயாளிக்கு பாக்டீரியோ பேஜ் சிகிச்சை அளித்து அவர் முழுக்க குணமானதையும் அப்போது அவர் ஆவணப்படுத்தினார். அதன் பிறகு ஃபெலிக்ஸ் பல ஆய்வுகளைச் தீவிரமாகச் செய்து பேஜ் சிகிச்சை முறையை அறிமுகம் செய்தார்.
பாரிஸில் முதல் அதிகாரபூர்வமான பேஜ் சிகிச்சையை அளித்த ஃபெலிக்ஸ் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த பாக்டீரியாபேஜ்களைக் கொண்டு மனித மற்றும் விலங்குகளின் நோய்க்கு சிகிச்சையளிக்கலாம் என்னும் கருத்தை வலுவாக முன்வைத்தார். ஆனால் உலகப்போரில் மும்முரமாக இருந்த உலகநாடுகள் இதைக் கவனிப்பதற்குள் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கின் பெனிசிலின் கண்டுபிடிப்பு ஃபெலிக்ஸின் இந்த முன்னெடுப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டது.
உலக நாடுகள் பலவற்றில் பெனிசிலின் பயன்பாடு துவங்கி இருந்த வேளையில் ஃபெலிக்ஸின் குழு சோவியத் யூனியனில் இந்த பேஜைக்கொண்டு சிகிச்சையளிப்பதை வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தது.
முதல் உலகப்போரில் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஃபெலிக்ஸ் பாக்டீரியா பேஜ்களைக்கொண்டு அளித்த சிகிச்சை பலனளித்ததை உலகெங்கும் இருந்த மருத்துவர்கள் வியந்து கவனித்தார்கள். மருத்துவ சஞ்சிகைகளில் பேஜ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து விளைவிக்காத வைரஸ் என்பது பரவலாக அறிவிக்கப்பட்டது.
1930-40-களில் அஜர்பைஜான், உக்ரைன், ஜார்ஜியா மற்றும் ரஷ்யாவில் பேஜ் சிகிச்சை முயற்சிகள் ஃபெலிக்ஸின் முன்னெடுப்புக்களால் பரவலாக நடந்தன. மத்திய ஐரோப்பா, பிரான்ஸ் மற்றும் பிரேசிலிலும் இந்த பேஜ் சிகிச்சைச் சோதனைகள் நடந்தன.
ஃபெலிக்ஸ் இந்தியாவுக்கு வந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் புனிதத்தலங்களில் இருக்கும் நீர்நிலைகளில் காலராவுக்கெதிராக பேஜ்களைக் கலந்தார். அந்த இடங்களிலெல்லாம் காலராத்தொற்று மிக வேகமாகக் குறைந்தது.
அஸ்ஸாம் மற்றும் வங்காளத்தின் பல கிராமங்களுக்கும் நேரில் சென்று பேஜ் கலந்த நீரை ஊர்க்கிணறுகளில் கலக்கவும், அந்த நீரை கொதிக்க வைக்காமல் அருந்தச்சொல்லியும் ஊர்த்தலைவர்களிடம் ஃபெலிக்ஸும் அவரது குழுவினரும் அளித்தனர்.
அப்போது காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நடந்துகொண்டிருந்த காலமாதலால் நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்கும் அந்த எளிய முறையை துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான ஊர்த்தலைவர்கள் மறுத்தனர். அங்கெல்லாம் காலரா தொற்றினால் பலர் பரிதாபமாக இறந்தார்கள்.
எனவே 1937-ல் ஃபெலிக்ஸின் இந்த பேஜ் சோதனை கைவிடப்பட்டது. பிரான்ஸுக்கு திரும்பிய ஃபெலிக்ஸ் ஜெர்மானிய ஆயுதப்படையினரால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருக்கையில் அறிவியல் சோதனைகளின் விளைவுகள்- “The Value of Experiment” என்னும் 800 பக்க நாவலை ஃபெலிக்ஸ் எழுதி முடித்தார்.
நுண்ணுயிரியலை எந்த கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் படிக்காமல் தானே நூல்களிலும் சோதனைகள் செய்தும் கற்றுக்கொண்ட நுண்ணுயிரியல் படிக்காத மேதையான ஃபெலிக்ஸ் 1949-ல் கணையப் புற்றுநோயால் மடிந்தபோது அவர் யாருக்குமே தெரியதவராயிருந்தார்.
பேஜ் ஆராய்ச்சிகளுக்காக பலருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. 1960-லிருந்து நோபல் பரிசுக்காக 10 முறை பரிந்துரைக்கப்பட்டும் ஃபெலிக்ஸுக்கு அப்பரிசு கிடைக்கவில்லை. ஆனால் ஃப்ரான்ஸ் அவரை மறக்கவில்லை ஒரு தெருவுக்கு அவர் பெயர் வைக்கப்ட்டிருக்கிறது.
Félix d’Hérelle என்னும் அவர் பெயரைக்கொண்டு பேஜ்களின் ஒரு குடும்பமான Herelleviridae பெயரிடப்பட்டிருக்கிறது.
இப்போது இந்த பேஜ்சிகிச்சை நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புச்சக்தி பெற்றிருக்கும் நோய்க்கிருமிகளுக்கெதிராகச் செயல்புரியுமென்பது ஆய்வுகளில் நிரூபணமாகி இருக்கிறது
நுண்ணுயிரெதிர்ப்பிகளால் அழிக்கமுடியாத Pseudomonas aeruginosa, Klebsiella pneumoniae, மற்றும் Staphylococcus aureus ஆகிய பாக்டீரியாக்களுக்கு எதிராக பேஜ் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.
நுண்ணுயிரெதிர்ப்புச் சக்தி பெற்றுக்கொண்டிருக்கும் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பேஜ் சிகிச்சை உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை, உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விவசாயத்துறைகளில் மிக முக்கியமான பங்காற்றிக் கொண்டிருக்கிறது.
நுண்ணுயிரிகளின் வாழ்க்கை மற்றும் மருத்துவத்தில் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய நமது புரிதலை இந்த மூன்று முன்னோடி நுண்ணுயிரியலாளர்களின் பங்களிப்புகள் வெகுவாக மாற்றியமைத்தன. பாக்டீரியோ பேஜ்களின் ஆரம்பகால கண்டுபிடிப்பு முதல் நுண்ணுயிரெதிர்ப்பி-எதிர்ப்பு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் அவற்றின் நவீன பயன்பாடு வரை, இம்மூவரின் பணி புதிய தலைமுறை அறிவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
இப்போது மீண்டும் கவனத்துக்குள்ளாகி இருக்கும் பேஜ் சிகிச்சை இம்மூவரின் பங்களிப்பை நாம் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியமாகிறது.
1930-ல் பிரயாக்ராஜில் (அலகாபாத்) நிறுவப்பட்ட அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவான கங்கா கேலரியில் கங்கை நீர் குறித்த தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியவை சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.
அங்கு ஹான்கினின் புகைப்படமும், 3 மணி நேரத்தில் காலராக் கிருமிகளை கங்கை நீர் அழிக்கிறது என்னும் அவரது ஆய்வு முடிவுகளின் வாசகங்களும் பொறிக்கட்டிருப்பதை கும்பமேளாவுக்கு வருகை தருபவர்கள் காணலாம்
நியூயார்க் டைம்ஸில் 2019 -ல் வெளியான கட்டுரையொன்று கங்கை நீரில் பெருகி இருக்கும் நோயுருவாக்கும் பாக்டீரியாக்களைப் பற்றி கவலை தெரிவித்திருந்தது.
ஹான்கின் இந்த நீரின் தூய்மைத் தன்மையைக்குறித்து ஆய்வு செய்து நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகின்றன. இன்று திரிவேணி சங்கமத்தில் தொழிற்சாலைக் கழிவுகளும், கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடுதலால் உண்டாகும் மாசுபாடும் சாக்கடைக்கழிவுகளும் அதிக அளவில் கலந்திருப்பதால் ஹான்கின் குறிப்பிட்ட கிருமிக்கொல்லித்தன்மையும், ட்வார்ட்டும் ஃபெலிக்ஸும் கண்டு பிடித்த பாக்டீர்யாபேஜின் பாக்டீரியாவைக் கொல்லும் தன்மையையும் தாண்டி நதி நீர் மாசுபட்டிருக்கிறது.
சமீபத்தில் கோடிக்கணக்கில் மக்கள் நீராடும் இந்த நதிகளில் மலபாக்டீரியா எனப்படும் இகோலியின்-(E coli) அளவு மிக மிக அதிகரித்திருப்பது முக்கியச் செய்தியாகியிருகிறது.
பொதுமக்களின் ஆரோக்கியம்,நீர் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு,கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நதிநீரின் புனிதத்தன்மை, ஆகியவற்றால் பிரயாக்ராஜின் நதி நீர் மாசுபாடு மிகப்பெரிய சவாலாகி இருக்கிறது.
மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டு, பெருந்திரளாக அங்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி, கழிவு நீர் சுத்திகரிப்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை புகுத்தி கங்கை யமுனை நதிகளின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.
திரிவேணி சங்கமத்தில் கங்கை யமுனை நதிகளுடன் சரஸ்வதி நதியும் கண்ணுக்குப்புலப்படாத மாய நதியாக கலப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. அன்னை நதிகளான கங்கையும் யமுனையும் அப்படி மாயமாகிப்போய்விடாமல் காக்கப்படட்டும்.
நிமோனியாவில் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அப்பா (!) கடந்த 2 வாரங்களாக இருக்கிறார். தம்பி மனைவி லஷ்மி, நான், தருண் மூவருமாக உடனிருக்கிறோம். தம்பிவிஜி முக்கிய வேலையாக வெளியே இருக்கிறான் எனவே அவனை தொந்தவரவு செய்யாமல் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.
வீடு, கல்லூரி, மருத்துவமனை என தொடர்ந்து அலைந்து பின்னிரவில் களைத்து வீடு திரும்புகையில் சமயங்களில் எனக்கு சுய பச்சாதாபமும் எதிர்படுவோர் மீது ஆத்திரமும் வந்துவிடுகிறது. ஆனால் வெளியில் காண்பித்துக்கொள்வதில்லை லக்ஷ்மியும் மருத்துவமனையே கதி என்றுதான் இருக்கிறாள்.
ஜூன் மாதம் தருண் கொச்சியில் அவனுக்கு கிடைத்திருக்கும் பணியில் இணைய வேண்டும். எதன்பொருட்டோ அது தாமதமாகி, வரும் ஆகஸ்டில் வந்தால் போதும் எனச்சொல்லிவிட்டதால் அவன் வீட்டில் இருந்து நல்லவேளையாக எங்களுக்கு உதவுகிறான்.
காலை, மதியம், இரவு என வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவது,அவ்வப்போது லக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து வந்து அவள் குளித்து தயாரானதும் மீண்டும் மருத்துவமனைக்கு செல்வது, இது ஒரு கிராமத்து மருத்துவமனை என்பதால் ஸ்கேன் எடுக்க அடிக்கடி பொள்ளாச்சிக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து வருவது, மருத்துவமனையிலேயே அடிக்கடி எக்ஸ்-ரேவுக்கு கூட்டிச்செல்வது இரவுணவு கொண்டுவருவது என ஓயாமல் கார் ஓட்டிக்கொண்டு, ஓய்வு கிடைக்கையில் அந்த சின்ன மருத்துவமனை அறையிலேயே அமர்ந்து போனை பார்த்துக்கொண்டு இருக்கிறான். .
ஒருமுறைகூட சங்கடப்பட்டுக்கொண்டோ முகம்சுளித்தோ புகார் சொல்லியோ அவனைப் பார்க்கவில்லை. ’’பாவம்டா நீ இத்தனை வேலை செய்யறே, ஸாரி’’ என்று நான் சொன்னாலும் “டேய் கார், ஓட்டறதெல்லாம் ஒரு வேலையா” என்பான்.
அவரை முழு அன்புடன் அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறான். இரு மகன்களுக்கும் மூத்தோரின் அன்பு என்பதே கிடைத்ததில்லை. முற்றிலுமாக அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள். நான் மகன்களைக் கல்லூரிக்கு என்னுடன் அழைத்து வந்துதான் வளர்த்தேன். அழைத்து வரமுடியாத சமயங்களில் இந்த வீட்டிற்குள் அவர்களை வைத்து கதவை பூட்டிவிட்டு கல்லூரிக்கு வந்திருக்கிறேன்.
ஆனாலும் அந்த நினைவுகளின் காயம் ஏதுமில்லாமல் என் வருத்தங்கள், துயரங்கள் அறிந்திருந்தும் அவை தொட்டுவிடாத தொலைவில் தருண் இருக்கிறான்.
இடையில் அவனது தோழிகளும் தோழர்களும் அழைத்தால் “டிரைவிங்கில் இருக்கிறேன் பிறகு பேசலாம்” என்பான். முகம் சுளிக்காமல் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு, டயப்பர் மாற்ற செவிலியர்களுடன் இணைந்து கொள்கிறான். இரவு வீடு திரும்புகையில் எனக்கு பிடித்தமான பாடல்களை ஒலிக்கச் செய்வது, என்னிடம் கல்லூரிக் கதைகளைக் கேட்பது என்று சுவாரஸ்யமாகப் பயணத்தை அமைத்துக் கொள்கிறான்.
மருத்துவமனையிலிருந்து வீடு வந்ததும் உலக வழக்கமான, ஆண்கள் நேரே வீட்டிற்குள் சென்று உடைமாற்றி சாப்பாட்டுக்கு காத்துக்கொண்டிருப்பது என்பதற்கு மாறாக காரில் இருக்கும் பைகள், சாவி, பாட்டில்கள், அழுக்குத்துணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாடிக்கு வருவது, என்னை அதிகம் நடக்காமல் பார்த்துக்கொள்வது என எதைச்செய்தாலும் சிரித்த முகத்துடன் செய்கிறான்.
இரவு குளித்து சமைக்க வருகையில் அவனும் தயாராகி இயல்பாக சமையலறையில் கூட ஒத்தாசை செய்வது, அல்லது முதலில் என்னை சாப்பிட வைத்து பிறகு அவன் சாப்பிடுவது என்று கவனமாக இருக்கிறான். இடையிடையே அடுத்த கானுலாவைக் குறித்து திட்டமிடுவது, வீட்டில் இளநீர் குடித்துவிட்டு மரத்திலேயே குடியிருந்து கொழுத்திருந்த எலியை கூண்டில் பிடித்து வேறெங்காவது கொண்டு விட்டுவிட்டு வருவது என எந்நேரமும் பிஸியாகவே இருக்கிறான்.
அவ்வப்போது சூழலின் இறுக்கத்தை உணர்ந்து, நானும் மகன்களும் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் நகைச்சுவையாக ஏதேனும் சொல்லி தளர்த்துவதையும் செய்கிறான். நேற்று புரோட்டீன் பார் எனக்கு அனுப்புவதாக சரண் சொன்னதும் நான் ’’ அப்புறமா நான் சொன்னபுறமா வாங்கலாம்ஆர்டர் போடாதே’’ என்றேன். தருண் அண்ணனிடம் ’’டேய் அம்மாட்டெ ஆர்டர் போடலாமா பொறுமையா பேசு’’ என்கிறான் 🙂
ஆனைமலை விவசாய பூமி வழியே தினமும் மருத்துவமனைக்கு செல்லுகையில் மரங்களடர்ந்த அந்தச் சாலையைப் புகைப்படம் எடுப்பது, வயலில் இருக்கும் கருந்தலை அரிவாள் மூக்கன்களை கவனித்து வீடியோ எடுத்து எனக்கு அனுப்புது என அவனையும் உடன் இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறான்.
நான் தாவரங்களிடமிருந்து ஒளியை நோக்கியே செல்வது என்னும் பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன்தான் எனினும் களைச்செடிகளின் தொல்லை தாங்கமுடியாமலாகும்போது சலிப்படைந்துவிடுகிறேன் ஆனல் மகன்கள் அப்படியல்ல என்பதில் மகிழ்கிறேன்
மாலை வாசல் தெளித்துக் கோலமிட்டு விளக்கேற்றிக் கொண்டிருப்பார்கள், தோட்டத்தில் பூப்பறித்து நெருக்கமாக தொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லைதான் எனினும் எங்கோ கொடுத்து வைத்த மகராசிகள் இருவர் நெட்ஃப்ளிக்ஸ் பார்த்துக்கொண்டோ, அஸைன்மென்ட் எழுதிக்கொண்டோ, மால்களில் சுற்றிக்கொண்டோ இருப்பார்கள். அவர்கள் இருவரையும் நினைத்தால் கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.