லோகமாதேவியின் பதிவுகள்

Month: August 2026

ஸாகே !மீண்டும்

ஜெனீவா கணேஷ் ஸாகே வாசிப்பனுபத்தை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறார். வெகுகாலத்துக்குப் பிறகு கட்டுரைகளின் சாரத்தை வாசிக்கையில் அவற்றை வெவ்வேறு இடங்களில் பல நேரங்களில் எழுதிய நாட்களின் நினைவு நிழலாடியது. தூரன் விருது விழாவில் அதன் வெளியீடும் நினவுக்கு வந்தது.

அன்புள்ள அக்கா,

இம்முறை ஐஸ்வர்யாவும் மகள்களும் இந்தியா வந்த பொழுதில் எனக்கென்று வாங்கிக்கொண்ட புத்தகம் உங்களது ஸாகே! இதிலுள்ள சில கட்டுரைகளை ஏற்கனவே உங்கள் தளத்தில் வாசித்திருக்கிறேன் என்றாலும், நூலாக இதை வாசித்தேயாக வேண்டும் என நினைத்திருந்தது இம்முறை நிறைவேறியது. இந்த நூலில் என்னை முதன்மையாக கவர்ந்தது, தாவரங்களில் விருப்பமானவை ஒவ்வாதவை என்ற பாகுபாட்டை இந்நூல் எளிதாக நீக்கிவிடுகிறது. “அட! இந்த வேதிச் சேர்மங்களால்தான் இது விஷம் என்றாகிறதா? இது துர்நாற்றம் கொண்டதாகிறதா? இந்தளவு போதை பொருளாக அறியப்படும் இதன் செடி உண்மையில் நாமறிந்த தாவரத்தின் குடும்பத்திலிருந்து கிளைத்ததுதானா?” என்ற அறிதல்கள், அந்த “தீமையான தாவரங்கள்” என நாம் (நான்) வகைப்படுத்தி வைத்திருப்பவற்றின் மீதான ஒவ்வாமையை நீக்கிவிடுகிறது. “அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு” என்ற நாம் கேட்டு பழகிய பழமொழியை உங்கள் நூலை வாசித்தபின் “அளவுக்குள் இருக்கும் நஞ்சுதான் அமிர்தம் என்றாவதே!” என்று மாற்றிச் சொல்லவேண்டும் என தோன்றுகிறது. மனப்பிறழ்வையும், மரணத்தையும் அளிக்கவல்ல பூஞ்சைகள் மயக்கமூட்டியாகவும், மருந்தாகவும் செயல்படும் விந்தை பேச்செழா நிலையை அளிக்கிறது. பழங்குடியினரின் மது தயாரிப்பில் உமிழ்நீரை துப்பி நொதிக்கவைக்கும் முறைமைகள்.. அவற்றை எப்படி விளங்கிக் கொள்வது என்று நிஜமாகவே தெரியவில்லை. “அம்மதுவுக்கு அதுவும் ஒரு மூலப்பொருள், அதை சுவைக்க வேண்டுமென்றால், அம்மூலப்பொருளையும் சேர்த்துதான் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் அந்த சுவை என்னவென்று அறியாமல் இருந்துவிடப் போகிறாயா என்ன?” என எனக்கு கடவுள் வைக்கும் சவால் என அதை எடுத்துக் கொள்கிறேன். அந்நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இவ்வாழ்வில் எனக்கு வந்துவிடும் என்றே நம்புகிறேன்.

வேதியியல் நோக்கில் வலுப்படுத்தப்பட்ட கண்ணாடி 1960களிலேயே உருவாக்கப்பட்டு, ஆனால் எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாமல் காத்திருந்து 2007ல் ஸ்மார்ட்ஃபோன்கள் உருவாக்கப்படுகையில் பேருரு கொண்டு எழுந்தது. உங்களது சிக்கரி தொடர்பான கட்டுரை எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. காபி புழக்கத்துக்கு வருவதற்கு பலகாலம் முன்னரே சிக்கரி தயாராகி காத்திருந்ததை வாசிக்க ஆச்சரியமாக இருந்தது. போலவே தொழில்நுட்பத்தின்படி கலப்படக் காஃபியான அதை விளம்பரப்படுத்தி வென்றதன் நேர்த்தியும் அழகு. இங்கே மதியம் இரண்டு மணிக்குமேல் காஃபி குடித்தால் இரவு தூக்கம் கெடும் என்னும் ஐரோப்பியர்களிடம் “எங்களூரில் இரவு காஃபி குடிக்காவிட்டால் தூக்கம் வராது தவிக்கும் உறவுகள் உண்டு” என சொல்லி அவர்கள் பீதியடைவதை கண்டு குதூகலித்திருக்கிறேன். ஆனால் இப்போது புரிகிறது, என் அந்த உறவினர்கள் சிக்கரி அதிகம் சேர்த்த காஃபியை பருகிதான் அந்த “சாதனையை” நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று. எனக்குமே இங்கே மாலை ஐந்து மணிக்கு மேல் குடிக்கும் காஃபி இரவு தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. சிக்கோரி என்ற ஃப்ரெஞ்ச் மொழி பெயரிலிருந்து சிக்கரி என வந்தது என அறிந்தபோது, அதே பெயரில் இங்கே ஜெனிவாவில் உள்ள துணிக்கடையை தாண்டுகையில் அதை மகள்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டேன். 

உங்களிடம் தனிச்செய்தியில் சொன்னதுபோல, ஒவ்வொரு கட்டுரையுமே அதன் பேசுபொருளை நோக்கி வாசிப்போரை முழுக்க இழுத்து சிக்கவைத்து விடுகிறது. சாக்ரடீஸ் அருந்திய ஹெம்லாக் நஞ்சையுமே நாம் சுவைத்து பார்த்தால் என்ன என தோன்றுமளவு நினைப்பு சென்றுவிடுகிறது. நியாயமாக நீங்கள் இதற்கு புத்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு எச்சரிக்கையை அச்சிடச் சொல்லவேண்டும்! டக்கீலா கட்டுரையை வாசித்தால், அடடா இன்னும் டக்கீலா அருந்தாமல் இருக்கிறோமே என்றும், பியர் கட்டுரையில் லாகர் வகையை பார்த்திருக்கிறோம், ஏல் வகையை பார்த்த நினைவில்லையே என்றும் தோன்றிவிடுகிறது. நூறு சதவீத ஆல்கஹால் இருக்கும் அசல் டக்கீலாவை பற்றி, ஒயினிலும் எனக்கு குடித்தால் மட்டையாகும் அளவு போதை வேண்டும் என சலம்பும் நண்பனிடம் சொல்லி ஆற்றுப்படுத்த வேண்டும் என தோன்றியது. கண்ணாடிக் கோப்பைகள் குறித்த கட்டுரை உங்கள் தளத்தில் ஏற்கனவே வாசித்து நெகிழ்ந்தது தான். இருப்பினும் இம்முறை வாசிக்கையில் இடைப்பட்ட காலத்தில் எப்படியும் ஒரு இருபது பேர்கிட்ட இந்த வைன் கோப்பையின் வடிவம் பற்றியும், அதை பயன்படுத்தப்படும் முறை குறித்தும் சொல்லியிருப்பே இல்ல என நினைத்துக் கொண்டேன்.

அக்காலத்து ஆராய்ச்சியாளர்கள் மீதும், அவர்களின் உழைப்பு மீதும் பெரும் மரியாதையை உங்கள் எழுத்துமுறை கொண்டுவந்து விடுகிறது. சில இடங்களில் ஓரிரு வரிகளில் அவற்றை நீங்கள் தாண்டிச் சென்றுவிடுகிறீர்கள். ஆனால் அவ்வரிகள் பின்னால் யோசிக்கையில் வாசிப்பவருக்குள் வளர்ந்து “எவ்வளவு தொடர்ச்சியான முயற்சிகள்! தவம் போன்ற உழைப்பு! முதன்மையாக இவற்றை செய்ய அவர்களுக்கு கிடைத்த கவனச்சிதறல்களில்லா நேரம்!” என ஆழமாக சென்றுகொண்டே இருக்கின்றன. மயக்கமூட்டி சோதனையில் தோல்வியுற்ற அந்த மருத்துவர் மனமுடைந்து சில வருடங்களில் தற்கொலை செய்துகொள்ளும் இடத்தில் கண்ணீர் திரண்டது. எவ்வளவு பெரிய அவமானம் அவருக்கு அந்த தருணம்! இல்லையா? அநேகமாக அனைத்து கட்டுரைகளின் இறுதிவரிகளும் அழகு. மார்ட்டனை நினைத்துக் கொள்ளச் சொல்லும் இடமும் வழக்கம்போலவே இதுக்காகவாச்சும் நமக்கு அப்பிடி ஒரு அறுவை சிகிச்சை நடக்கணும் என்ற எண்ணத்தை கொண்டுவந்தது. 

கட்டுரைகளில் உச்சம் என்றால் பாப்பி மலர் குறித்த கட்டுரைதான். அது ஏன் போர்க்கள கவிதையில் அம்மலர் பற்றிய குறிப்பு வருகிறது என்பதிலிருந்து துவங்கி செல்லும் அந்த நடை வெகு அழகு. போர்க்களத்தின் மண் வளமை கொண்டதாக மாறுவதன் பின்புலம், அவ்வாறு வளம் மிக்க மண் உருவாகும்வரை இம்மலர்களின் விதைகள் பொறுமையாக  நிலத்துக்கடியில் காத்திருப்பது பிரமிப்பு என்றால், அகழ்வாய்வில் நான்காயிரம் வருட பழமை நிறைந்த விதைகள் கிடைப்பது இது என்ன வகை டிஸைன் என்ற திகைப்பு என்றாகிவிடுகிறது. அவற்றை வளர்த்துப் பார்க்க முயன்றார்களா, அவை முளைத்தனவா என்பதையும் நீங்கள் எழுதிருக்கலாம்.  வளராது இருந்திருந்தால்தான் ஆச்சரியப்படவேண்டும் இல்லையா? 🙂 

குன்றிமணி கட்டுரை தாவரவியல் சார்ந்தது என்பதோடு, சமூகம் செயல்படும் விதத்தையும் விளக்கருகில் கொண்டுவந்து காட்டியது. இறந்த மாட்டை தொடாத “உயர்”சாதி, அவற்றை அகற்றி சுத்தம் செய்தோரை தாழ்ந்த சாதி என முத்திரையிட்டு விலக்கி அடக்க, அவர்கள் அவ்வடக்குதலையே தனக்கான ஆயுதமாக்கி மாடுகளை கொல்வதும், அதெற்கென உதவுவதற்கென்றே உருவெடுத்தது போன்ற குன்றிமணியும், கொல்லப்படும் மாடுகளின் தோலுக்கு மிகப்பெரிய சந்தை ஏற்கனவே உருவாகி காத்திருப்பதுமான அந்த மாற்றங்கள் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை ஒத்திருந்தன. இதில் உச்சம் அந்த மாடுகளை கொல்லும் குன்றிமணி விஷம், இறந்த அம்மாடுகளின் இறைச்சியை உண்பவர்களுக்கு ஏதும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதுதான். அதேநேரம் அக்குன்றிமணியை நேரடியாக உண்டால் மரணம்தான் என்னும் செய்தி “எனக்கான எல்லைக்குள் நான் என்றுமே வில்லன்தான்” என குன்றிமணிகள் குத்துவசனம் பேசுவதாக எனக்கு ஒலித்தது. அடக்குமுறையிலிருந்து இவ்வாறாகினும் அச்சமூகத்தினருக்கு ஒரு பலன் கிடைத்ததே என்றெண்ணி அசட்டு ஆசுவாசம் கொள்கையில், பசுக்கொலையை கட்டுப்படுத்தும் காவல்துறை வழியாக அதே இனத்தவர் அவ்வழியிலும் ஒடுக்குமுறையையும் சித்ரவதையையும் அனுபவித்ததை அறிய நேரும்போது துயரம் நிறைந்த அமைதிக்குள் நம்மை கொண்டுசென்று விடுகிறது.

முந்திரி மது பற்றிய கட்டுரையும் எனக்கு அணுக்கமாக இருந்தது. புதுக்கோட்டையில் முந்திரி தோட்டங்களில் பருப்புகளே அவற்றின் உரிமையாளர்களுக்கு குறி என்பதால் பழங்களை எங்களை எடுத்துக் கொள்ள விடுவர். அதை உண்ணும்போது அதன் காரல் நிறைந்த ரசம் உள்ளிறங்குகையிலேயே அடுத்த நாள் தொண்டை கட்டிக்கொள்வதும் தொடர்ந்து ஜுரம் இருமல் என வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுவிடும். அதிலிருந்து மது என்பது புதிய செய்திதான். ஆனால் அந்த பழத்தின் சுவை மதுவாக ஆவதற்கு ஏற்றதுதான் என இப்போது தோன்றுகிறது. இதுதவிர பொதுவாகவே இக்கட்டுரைகளில் சொல்லப்படும் பயிர் வளர்க்கப்படும் முறைகள் ஒருவகையில் ஆயாசத்தையே கொடுக்கின்றன. மனிதன் விலங்குகளை அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி/பெருக்கி, காமத்தை நீக்கியும் “நெறிப்படுத்தியும்” என பலவாறு சித்திரவதை செய்கிறான் என்றால், தாவரங்களிலுமே அவ்வாறான வன்முறை நுண்ணிய தளங்கள் வரைக்கும் சென்று ஏவப்படுகிறது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறீர்கள். செடிகளின் பூக்களை நீக்கி, அதன் சக்தி முழுவதையும் இலைகளை வளர்ப்பது நோக்கி குவிப்பதன் குரூரம் முதுகை சில்லிட செய்கிறது.

புகை கட்டுரையையும் ஏற்கனவே உங்கள் தளத்தில் வாசித்துள்ளேன். இருப்பினும் இம்முறை வாசிக்கும்போதும், மருத்துவர்கள் சிகரெட்டை ஆரோக்கியத்துக்கு பரிந்துரைத்தார்கள் என்ற செய்தியை கடக்கும்போது சிரிப்பு வந்துவிட்டது. அதை தவறு என ஆராய்ந்து வெளியிட்டவர் எதிர்கொண்ட அழுத்தம் அந்த காலத்தில் என்னவாக இருந்திருக்கும் என எண்ணிக்கொள்கிறேன். உங்களிடம் சொன்னதுபோல இங்கு சுருட்டு பிடிக்கும் வயதானவர்களை அடிக்கடி காண்பதுண்டு. சிகரெட் போல உடனுக்குடன் புகையை இழுக்காமல், பற்றவைத்து கங்கு கனல ஆரம்பித்தபின் அதுவும் ஏதோ ஒரு உணவுப் பொருள் என்பதுபோல, கங்கு உள்ள பகுதியை அந்தரத்தில் நிறுத்தியாவாறு ஆஷ் ட்ரேவில் வைத்துவிட்டு செய்தித்தாளை படிக்கவோ உடனிருக்கும் நண்பருடன் கதைக்கவோ ஆரம்பிப்பவர்களை பார்க்க விநோதமாக இருக்கும். அவ்வப்போது நினைவு வந்தவர்கள் போல அதை எடுத்து புகையை இழுத்துக் கொள்வர். அவர்கள் அவ்வாறு வலிந்து இழுத்தே அவர்களில் பலருக்கு கன்னத்தில் டொக்கு விழுந்திருப்பதை காணமுடியும். அவ்வாறு இல்லாது செழித்த கன்னத்தை உடையவர்களை “உள்ளே பார்த்தால் கன்னத்தில் சிக்ஸ் பேக் விழுந்திருக்குமாக இருக்கும்” என நானும் ஐஸ்வர்யாவும் சொல்லி சிரித்துக் கொள்வதுண்டு. சுருட்டுகளுக்கென்றே உள்ள கடைகள் மிகவும் அழகியலோடு அமைக்கப்பட்டிருக்கும். சுருட்டுகள் வைக்க அழகான பெட்டிகள், சுருட்டு நறுக்கும் கருவிகள் என அது ஒரு தனி உலகமாக இருக்கும். சிகரெட்டோ சுருட்டோ அவற்றின் வடிவமைப்பின் அழகால் கவர்வது இயல்பு. ஆனால் உங்கள் கட்டுரை நாற்றம் தரும் பீடியையும் ரசிக்க வைத்து விடுகிறது. வழக்கம்போலவே வாழ்நாளில் ஒரு பீடியையாவது புகைத்து சுவைத்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். 

என் உறவினர் ஒருவர் புகையிலையை மெல்லும் பழக்கம் கொண்டவர். தனது இறுதிக்காலத்தில் தவறுதலாக அதை உண்டுவிட்டவகையில் மயக்கமடைந்து கோமாவுக்கு சென்று உயிரிழந்தார். அதுகுறித்து ஒரு உறவினர் சொல்கையில் “அவ்வாறு பலருக்கு புகையிலை இறுதிவரை உடன்வரும் நண்பனாக இருந்துள்ளது” என்றார். அவர் சொன்ன பொழுதில் கேட்க கஷ்டமாக இருந்தாலும், “வாழ்வின்போது மட்டுமல்லாது, மரணத்திலும் உன்னை அணைத்திருக்கும் ஆடை போல உன் நண்பனை நீ நேசி” என்ற சூஃபி பாடல் வரிகளோடு உங்கள் கட்டுரைகளையும் இணைத்து யோசிக்கையில், ஒருவர் அவ்விதம் ஒரு பொருளை தனது இறுதிவரை என தேர்ந்தெடுத்தால் அதில் தீர்ப்பு சொல்ல நாம் யார் என எண்ணிக்கொண்டேன்.

நூலாக்கத்தைப் பற்றி சில வார்த்தைகள்:

நூலில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு விஷயம் வெளிநாட்டு பெயர்களின் உச்சரிப்புகள். ஜெர்மன் ஃப்ரெஞ்ச் மொழிகளில் பெயர்களின் உச்சரிப்பை கொஞ்சம் நன்றாகவே அறிந்தவன் என்பதால் ஒவ்வொரு முறையுமே பெயர்களைத் தாண்டுகையில் அவை தமிழில் எழுதப்பட்டிருப்பதை கவனம் செலுத்தி வாசித்துச் சென்றேன். தமிழில் அவற்றை எழுத ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறீர்கள்! கூடவே அவற்றை ஆங்கிலத்திலும் அச்சிட்டிருப்பதற்கு தனி நன்றி! Thermocol என்பதை தமிழில் கற்று dhermacol என்னுமாறு உச்சரித்து “பார்த்துடா! அது ஏற்கனவே மெல்லிசு.. நீ சொல்றதிலே உடைஞ்சிடப்போகுது” என ஆங்கிலமறிந்த உறவினர்களால் கிண்டலுக்கு உள்ளான என் போன்ற கிராமத்து மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும்! மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் வரும்போது அவற்றை முதலில் தமிழில் மொத்தமாகவும், அடுத்ததாக அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் பெயர்களை வரிசையாக கொடுத்திருப்பதும் வாசிப்பின் விரைவை குறைக்காமல் இருக்கச் செய்கிறது. 

படங்களை கறுப்பு வெள்ளையாக பார்த்தபோது முதலில் ஏமாற்றம். இவை வண்ணங்களிலல்லாது இவ்வகை புத்தகங்களில் அச்சிடப்படுகையில் என்ன பயன் என்றுதான் நினைத்தேன். ஆனால் புத்தகத்தின் இறுதியில் அவற்றை வண்ணப்படங்களாக காண்கயில் மகிழ்ச்சியாக இருந்தது. விளையாட்டாக, படங்களை மட்டும் பார்த்து அவை எந்தெந்த கட்டுரைகளுக்கானவை என யோசித்து பார்க்கையில், பெரும்பாலானவற்றை நினைவில் மீட்ட முடிந்தது ஒரு இனிய விளையாட்டாக இருந்தது. 

புத்தகத்தை அலுவலக மேஜையில் வைத்திருந்தபோது கவனித்த ஒரு வடநாட்டு நண்பன் வண்ணப் படங்களை பற்றி குறிப்பாக பாராட்டினான். தமிழ் எழுத்துருவை அறிந்திராத சக ஊழியர் ஒருவர் மிகவும் அழகான ஸ்கிரிப்ட் கொண்டுள்ளதாக இருக்கிறது உங்கள் மொழி என்றார். அவர் அரபு மொழியை அறிந்தவர் என்ற வகையில் அவர் அப்படி சொன்னது மிகவும் பெருமையாக இருந்தது. 

சக ஜெ வாசகர் ஒருவரும் நானும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டோம். தினமும் அவரவர் வாசிக்கும் பக்கங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக் கொண்டுவரவேண்டும் என. அவருடைய பளு நிறைந்த பணிச்சூழலால் என்னைவிட எண்ணிக்கையில் பின்தங்கிய நிலையில் இருந்தார். பணிப்பளுவால் வாசிப்பில் தோற்பதென்றால், அதுவும் என்னிடம், அவருக்கு எந்தளவு பணிப்பளு இருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்! நான் அவரை “என்னங்க! சிலநூறு பக்கங்கள் பின்தங்கிட்டீங்களே” என ஒருநாள் வம்பிழுக்க, “இன்னிக்கு பாருங்க” என்றவர் சொன்னது போலவே அதீதமாக வாசித்துத் தள்ளி வெகு அருகில் வந்து சேர்ந்தார்! “என்ன புக்னு சொல்லுங்க பார்ப்போம்” என்றார். “குமரித்துறைவி?” என்றதற்கு “வெள்ளையானை” என்றார். பிறிதொரு வரலாற்று புத்தகத்தை முந்தைய நாள்வரை வாசித்துக் கொண்டிருந்ததால் வாசிப்பு ஆனாலும் மெதுவாக போனதாகவும், இடைவெளியை குறைக்க வேண்டி ஜெ எழுத்து அணுக்கமாக இருப்பதால், வெள்ளையானையை எடுத்ததாகவும் சொன்னவர் “ஆனா எனக்கே ஆச்சரியம்! அதுவோ தீவிரமான புத்தகம். நாம் உத்தேசிச்சது நடக்குமா என சந்தேகப்பட்டேன். நல்லபடியாக தீவிரம் குறையாமல் அதே சமயம் விரைவாகவும் வாசித்து முடிக்க முடிந்தது” என்றார். “இது நல்ல யோசனையாக இருக்கே!” என்று சொல்லி – உண்மையில் எண்ணிக்கையி அவர் அதீதமாக நெருங்கி வந்திருந்தார் என்பதால், நான் விரைந்து முன்னேறுவதற்காக – நானும் உங்களில் ஸாகே புத்தகத்தை எடுத்தேன். ஏற்கனவே வாசித்த சில கட்டுரைகளும் அதில் இருக்கின்றன என்பதால். பின்னர் யோசனை. “என்ன இருந்தாலும் தாவரவியல் துறை சார்ந்த புத்தகம். உங்கள் எழுத்து எனக்கு அணுக்கம்தான் என்றாலும் அயலான துறை என்பதால் எந்தளவு ஒரு அபுனைவு புத்தகத்தை வேகமாக வாசித்துவிடமுடியும்?” என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, நல்ல வேகத்துடனேயே வாசித்து முடித்தேன். மொத்தம் மூன்று நாட்களில் நாளுக்கொரு அமர்வு என 300 பக்க தாவரவியல் சார்ந்த ஒரு அபுனைவை வாசித்தது எனக்கு தனிப்பட்ட சாதனை! அச்சாதனைக்கு வழிவகுத்த உங்களுக்குதான் முதன்மையாக நன்றி சொல்லவேண்டும்! 

அன்புடன்,

கணேஷ் பெரியசாமி.

HMS

கடற்பயணங்களை  குறித்து அதிகம் வாசிக்கிறேன், நேரம் கிடைக்கையில் எல்லாம். கல்லூரியில் பரிணாமக்கோட்பாடுகளை கற்பிக்கையில் டார்வினின் 5 வருடக் கடற்பயணத்தை விவரிப்பேன், கூடவே அவரின் காதலை, உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று காதலியும் மனைவியும் ஆன எம்மா அவருக்கு அடிக்கடி  எழுதும் கடிதங்களையும் சேர்த்துச் சொல்லுவேன்.

இன்று கப்பல் பெயரிடல் மரபுகள் தொடர்பான பொதுவான கடல்சார் வரலாற்றையும் டார்வினின் HMS Beagle  பயணத்தையும் கொஞ்சம் இறங்கிப்போய் அல்லது நீந்திப்போய் வாசித்தேன். 

அப்போதெல்லாம் யார் அரசாட்சியில் இருக்கிறார்களோ அதைப் பொறுத்து HMS என்பது பொருள் கொள்ளப்படும்.”His/Her Majesty’s Ship” என்பது “அரசர்/அரசியின் கப்பல்” என்று பொருள்படும்.
அரசர் ஆட்சியில் இருந்தால் → His Majesty’s Ship (HMS)
அரசி ஆட்சியில் இருந்தால் → Her Majesty’s Ship (HMS)
வார்த்தை மாறினாலும், சுருக்கெழுத்து “HMS” என்றே தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

 பிரிட்டிஷ் கடற்படையின் கப்பல்களுக்கு முன்னால் இந்த முன்னொட்டு வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.
டார்வின் பயணித்த காலத்தில் (1831–1836)  நான்காம் வில்லியம் மன்னராக இருந்ததால், அது His Majesty’s Ship Beagle ஆக இருந்தது. ஆனால் திரும்பியபோது விக்டோரியாவின் ஆட்சி என்பதால் அப்போது அது Her Majesty’s Ship என்றானது. இந்த HMS முன்னொட்டுக்கு ஒரு  நீண்ட வரலாறு இருக்கிறது.

1649-ல்  இங்கிலாந்தில் முடியாட்சிக்கெதிரான உள்நாட்டுப் போரினால் முதலாம் சார்லஸ் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டு முடியாட்சி முடிவுக்கு வந்தது. பின்பு ஆலிவர் க்ரோம்வெல் தலைமையில் “Commonwealth of England” என்னும் பெயரில் முடியாட்சி இல்லாத அரசாட்சி வந்தது; பின்னர் ஏகப்பட்ட குழப்பங்கள் மீண்டும் நாடுகடத்தப்பட்டிருந்த முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் சார்லஸ் வரவழைக்கப்பட்டு  அரசராக முடிசூட்டப்பட்டார்.

இந்த மறுசீரமைப்புக்குப் பின்னரே “Royal Navy” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் புழக்கத்திற்கு வந்தது. க்ரோம்வெல் காலத்தில் அது “Commonwealth Navy” என அழைக்கப்பட்டது; அப்போதுதான் அரசருக்குச் சொந்தமான கப்பல்களுக்கு “His Majesty’s Ship” எனும் முன்னொட்டும் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

HMS எனும் முன்னொட்டு பெறும் கப்பல்கள் உண்மையிலேயே அரச குடும்பத்திற்குச் சொந்தமானவை என்பதை குறித்தது. ஏனெனில் அப்போதெல்லாம் அரசர் தனக்கென பல போர்க்கப்பல்களை வைத்திருப்பதில்லை, தேவைப்படும்போது கப்பல்களை வாடகைக்கு எடுப்பதோ கையகப்படுத்துவதோதான் வழக்கமாக இருந்தது. அரசுக்குச் சொந்தமான, அதிகாரப்பூர்வமான கப்பல்களை தனியார் கப்பல்கள், வணிகக் கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே இந்த முன்னொட்டு தேவைப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் HMS  முன்னொட்டு பயன்படுத்தப்பட்டது .”His Majesty’s Submarine” எனும் பொருளில், அவை HMS/m என எழுதப்படும்.
 

1911-ல் ஐந்தாம்  ஜார்ஜ் , ஆஸ்திரேலிய கடற்படைக்கு “Royal Australian Navy” எனும் பட்டத்தை வழங்கியபோது, HMAS (His Majesty’s Australian Ship) எனும் தனி முன்னொட்டு உருவானது.

மனித குல வரலாற்றின் தொடக்கத்தைச் சொன்ன டார்வினின் பரிணாமக் கொள்கை உருவாகக் காரணமாக இருந்த HMS Beagle கப்பலைக் குறித்துப் பார்க்கலாம்.

HMS Beagle (இந்தப் பெயரில் வந்த ஒன்பது கப்பல்களில் இது மூன்றாவது) 1820 மே 11ல் லண்டன் அருகே தேம்ஸ் நதிக்கரையில் உள்ள வூல்விச் கப்பல் தளத்தில் முதன்முதலில் கண்காணிப்பு, தூது போன்ற பணிகளுக்காக. கடலிறக்கப்பட்டது. “Beagle என்பது வேட்டை நாய் இனத்தின் பெயர்.— மணத்தைப் பின்தொடர்ந்து,  தடம் துரத்தும் ஒரு சிறிய, விடா முயற்சி கொண்ட நாய்.  

இது 10 பீரங்கிகள் கொண்ட, எடைகூடிய இரு பாய்மரங்களைக் கொண்ட “brig” வகைக் கப்பலாக வடிவமைக்கப்பட்டிருந்தது.  அதன் நீளம் சுமார் 28 மீட்டர், அகலம் சுமார் 8 மீட்டர். 1820-ல் நான்காம் ஜார்ஜ் மன்னருக்கான கடற்படை அணிவகுப்பில், முழுமையாக பாய்மரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் பழைய லண்டன் பாலத்தின் அடியில் கடந்து சென்ற முதல் கப்பல் இதுதான்.

1825-ல் Beagle மேலும் ஒரு பாய்மரம் மூன்றாவதாகச் சேர்க்கப்பட்டு “bark” வகைக் கப்பலாக மாற்றப்பட்டது. அது  (1826-30), லெப்டினன்ட் Pringle Stokes தலைமையில், தென் அமெரிக்கக் கடற்கரையை அளவிடும்  முதல் பணிக்காக HMS Adventure கப்பலுடன் சேர்ந்து அனுப்பப்பட்டது. 1828-ல் கேப் ஹார்னில் தனிமையும், கடுமையான வானிலையும், மனச்சோர்வும் இணைந்ததால் ஸ்டோக்ஸ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு  தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் Robert FitzRoy கப்பலுக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஃபிட்ஸ்ரோய் தனது இரண்டாம் பயணத்தில் நன்கு படித்த, கடற்பயணத்தைத் தாங்கும் ஆரோக்கியம் கொண்ட இளைஞர் ஒருவரைத் துணையாக அழைத்துச் செல்ல விரும்பினார்.

கடற்பயண நெறிகளின்படி கேப்டன் தன்னைவிட கீழ்நிலையில் உள்ள யாருடனும் நெருக்கமாக இருக்கக் கூடாது, கப்பலில் அனைவருமே அவரைவிடக் கீழ்நிலையில்தான் இருந்தார்கள், எனவே சம சமூக அந்தஸ்துடைய புத்திசாலியுமான ஒருவரை உடன் அழைத்துச் செல்ல ஃபிட்ஸ்ரோய் விரும்பினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை அவர் இதற்காகத் தொடர்பு கொண்டார்.

டார்வினின் ஆசிரியரான ஹென்ஸ்லோ, ஃபிட்ஸ்ரோய் க்கு துணையாக இருக்கக்கூடிய, இயற்கை வரலாற்றைப் படிக்க ஆர்வமுள்ள ஒரு இளைஞரைப் பரிந்துரைக்கும்படி கேட்கப்பட்டார்.  மூவரை அவர் பரிந்துரைத்தார். முதலிருவரும் இந்த வாய்ப்பை நிராகரித்த பின், டார்வின் பட்டியலின் முதலிடத்திற்கு வந்தார். டார்வினின் தந்தை பயணத்திற்கு அனுமதி தரவும்,பயணத்துக்கு  போதுமான நிதியுதவி கிடைக்கவும் பல வாரங்கள் ஆனது.

1831 டிசம்பர் 27 முதல் 1836 அக்டோபர் 2 வரை நடந்த, புவியியல் ஆய்வுக்காக மனித வரலாற்றை மாற்றிய அந்த இரண்டாம் ஆய்வுப் பயணத்தில், 22 வயதேயான பட்டதாரி இளைஞர்  சார்லஸ் டார்வின், மத போதகராக ஆவதற்கு முன் வெப்பமண்டலப் பகுதிகளைப் பார்க்க ஆசைப்பட்டு இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

முற்றிலும் மாறுபட்ட அரசியல் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் (டார்வினின் குடும்பம் தீவிர லிபரல்கள்),ஃபிட்ஸ்ரோயும் டார்வினும் பயணத்தின்போது உண்மையான, நெருக்கமான நண்பர்களாக ஆனார்கள். மேலும் முந்தைய கேப்டன் ஸ்டோக்ஸ் மனச்சோர்வால் தற்கொலை செய்து கொண்டதால்,ஃபிட்ஸ்ரோய் அதே பாணியான மனச்சோர்வுக்கு உள்ளாகக்கூடும் என அவரைச் சுற்றியிருந்தோர் கவலைப்பட்டு, அவருக்கு ஒரு துணை தேவை என நினைத்தனர்.

டார்வின் தன் சுயசரிதையில் ஃபிட்ஸ்ரோயுடன் உண்டான  கருத்து வேறுபாடுகளைக் குறிப்பிடுகிறார். அதிலொன்று அடிமைத்தனம் குறித்தது. அடிமைகளை பணிக்கு அமர்த்துவதைக் குறித்த தன் ஆட்சேபனையை டார்வின் தெரிவித்தபோது, ஃபிட்ஸ்ரோய் “அடிமைகள் அடிமைப்பட்டிருக்க விரும்புகிறார்கள்” என வாதிட்டார். விவாதம் சூடானபோது ஃபிட்ஸ்ரோய் இனி டார்வின் தன்னோடு சாப்பாட்டு மேசையில் இணையாக அமர்ந்து சாப்பிட க்கூடாது  என ஆணையிட்டார். ஆனால் விரைவில் டார்வினிடம் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டதால் இருவரும் சமரசம் ஆனார்கள் 

இளம் டார்வின்

கடற்பயணிகளுக்கு கப்பல் புறப்பட்டு சில நாட்களில் sea legs எனப்படும் கடலில் கால் ஊன்றுதல் பழக்கமாகி விடும்ஆனால் டார்வினுக்கு தொடர்ந்து வாந்தி மயக்கம் தலைசுற்றல் என்று நோய்வாய்பட்டுக்கொண்டே இருந்தார். 

கப்பலில் எப்போதும் அவர் ஒரு ஹேமக் தூளியில் படுத்தவாறே இருப்பார். கப்பல் கரையணைந்தால் உடனே இறங்கி கரைக்குச்சென்று விடுவார். ஐந்து வருடப்பயணத்தில் டார்வின் கப்பலில், கடலில் இருந்தது வெறும் 18 மாதங்கள் மட்டுமே. மூன்றரை வருடங்கள் அவர் நிலத்தில் இருந்ததால்தான் பரிணாமக்கோட்பாடு உருவானது.

ஃபிட்ஸ்ரோயின் முன்கோபம், மனநிலை ஏற்ற இறக்கம், டார்வினின் தொடர்ச்சியான கடல் நோய், காதலியின் ஏக்கம் ஆகியவற்றின் நடுவே  ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரியாதையுடனும் பாசத்துடனும் இருவரும் திரும்பியது ஒரு அதிசயம்தான்.

பயணக் காலகட்டத்தில் (1831-1836) இருவரும் மிக நெருக்கமாக இருந்தார்கள். பயணத்தின்போது பகிரப்பட்ட அறிவியல் ஆர்வங்கள் அவர்களது வேறுபாடுகளைக் குறைத்தன. ஆனால் இங்கிலாந்திற்குத் திரும்பியபின், அவர்களது மாறுபட்ட கருத்துகள் ,குறிப்பாக கிறிஸ்தவ மத விஷயங்களிலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிலும்  மிக வெளிப்படையாகத் தெரிந்தன.

 பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும், டார்வினே பைபிளை உறுதியாக நம்பியவராகவும், ஃபிட்ஸ்ரோய் சந்தேகவாதியாகவும் இருந்தார் என்பதை பல ஆதாரங்கள் காட்டுகின்றன. உண்மையில், டார்வினுக்கு Charles Lyell-ன் “Principles of Geology” புத்தகத்தைக் கொடுத்தவரே ஃபிட்ஸ்ரோய் தான். அந்தப் புத்தகம்தான் பூமியின் “ஆழ்கால”க் கோட்பாட்டை முன்வைத்து, டார்வினின் எதிர்கால கருத்துகளுக்கு அடிப்படையாக அமைந்தது; இதைக்குறித்து  ஃபிட்ஸ்ரோய் பின்னாளில் பெரிதும் வருந்தினார்.

 ராபர்ட் ஃபிட்ஸ்ரோய்

பூமி புத்தம் புதியது என்று நம்பிய ஃபிட்ஸ்ரோய் பூமி மிகப்பழையது என்று ஃபாஸில்களை ஆதாரமாகக்கொண்டு டார்வின் விளக்கி, பரிணாமக்கோட்பாட்டையும் உலகின்  முன்வைத்து கடவுளை இரண்டாம் பட்சமாகி விட்டார் என்று   பெரும் குற்றவுணர்வுக்காளானார். டார்வினை அந்தப்பயணத்துக்கு உடன் அழைத்துப் போயிருக்கக்கூடாது என அவர் வருந்தினார்.

ஒரு பிரபலமான விவாதத்தில்  ஃபிட்ஸ்ரோய்  கலந்துகொண்டு டார்வினின் கோட்பாட்டை  வெளிப்படையாகவே எதிர்த்தார்.  டார்வினின் “The Voyage of the Beagle ” புத்தகத்தில் தன்னையும் தன் அதிகாரிகளையும் போதுமான அளவு பாராட்டவில்லை என்று வருத்தம் அடைந்தார் ஃபிட்ஸ்ரோய். டார்வினின் பயணப் புத்தகமான மூன்று தொகுதிகளாக வெளியான ’’Narrative of the Surveying Voyages of His Majesty’s Ships Adventure and Beagle’’  ஃபிட்ஸ்ரோயின் புத்தகத்தை விட அதிகம் விற்பனையாகி, அவருக்கு மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பின்னாளில் நியூசிலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட ஃபிட்ஸ்ரோய், நியூஸிலாந்து பூர்வகுடிகளான மாவோரி மக்கள் மீதான அனுதாபத்திற்காக வெள்ளையர்களால் வெறுக்கப்பட்டார். ஒரு நிலத் தகராறில் ஒன்பது வெள்ளையர்களைக் கொன்ற ஒரு மாவோரி தலைவரை மன்னித்ததால் மேலும் வெறுப்பை சம்பாதித்தார். வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வும் கடும் கோபமும் அவரை வாட்டியிருந்தாலும், அவர் யாரிடமும் பகைமை வைத்திருக்கவில்லை, தான் கருத்து வேறுபடும் நபர்களிடமும் இரக்கம் காட்டினார். இறுதியில் 1865ல் ஃபிட்ஸ்ரோய் தன் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓர் அரசரின் பெயரால் புறப்பட்ட அந்தச் சிறு கப்பல்,   ஒரு சாதாரணப் தேடல்பணிக்காகவே அனுப்பப்பட்டது. ஆனால் அது திரும்பி வந்தபோது, உலகம் இயங்குவது இறைவனின் பெயரால் அல்ல, அறிவியல் விதிகளின்படி என்று சொல்லிய ஒரு உலகைப்பயணத்தின் சாட்சியாக மாறியிருந்தது.  

ஆதி !

புடவைத்தலைப்பை எடுத்துத் தலையை மறைத்துக்கொண்டேன். 11 மணி வெயில் மண்டையைப் பிளந்தது. கீழே தரையில் சதுரமாக அடுக்கப்பட்டிருந்த செங்கற்களின் மீது ரகு உட்கார்ந்துகொண்டான். தளர்ந்திருந்தான். தொடர்ந்து அழுததில் கண்களின் கீழே சுருக்கங்கள் விழுந்து, முகம் வெளிறிப்போய் இருந்தது.

என்னை நிமிர்ந்து பார்த்து, “அப்ப இனி நமக்கு அம்மா இல்லையா வசந்தி? அவ்வளவுதானா?” என்றான். கேட்டு முடிப்பதற்குள்ளாகவே கண்ணீர் பெருகியது. வேட்டியின் நுனியால் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன், “நான் நினைச்சுக்கூடப் பார்க்கலையே…” என்றான்.

“என்னடா செய்யறது…” என்று நான் அவனிடம் பேசத் தொடங்குவதற்குள் போன் அடித்தது. எடுத்தேன்; அதே எண்ணிலிருந்துதான் அந்த ஆறுமுகம் கூப்பிட்டான். “அம்மா, பக்கத்தில் வந்துட்டம்மா, இதோ இப்ப வந்துடுறேன்…” என்றான். இதையே அரை மணி நேரமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ரோட்டோரமாக இருந்த அந்தக் குடிசையின் தகரக் கதவில் சின்னப் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. வாசலில் சின்னச் சின்னக் குவியலாக எம்-சாண்டும் , செங்கற்களும் குவிக்கப்பட்டிருந்தன. குடிசையின் கதவுக்குப் பக்கத்தில் ஒரு சதுரமான தகரத்தில், ‘ஆறுமுகம் ட்ரேடர்ஸ் – சில்லறையாகவும் மொத்தமாகவும் செங்கல், மணல் கிடைக்கும்’ என்று மஞ்சள் பெயிண்டால் கோணலாக எழுதி, அதன் கீழ் போன் நம்பரும் இருந்தது. காலை பத்து மணிக்கே வந்து அந்த நம்பருக்குக் கூப்பிட்டுச் சொல்லியும் அவன் வந்தபாடில்லை.

கால்கடுத்தது. எங்காவது உட்கார இடம் இருக்குமா என்று தேடுவதற்குள், தடதடவென்று சத்தத்துடன் வந்த பைக்கிலிருந்து ஆஜானுபாகனாக ஒருவன் இறங்கினான். ஸ்டாண்ட் போட்டு பைக்கை நிறுத்திக்கொண்டே, “மன்னிச்சிருங்கம்மா, ஒரு லோடு அனுப்பப் போனேன், அதான் லேட் ஆயிடுச்சு…” என்றான்.

கைலியை மடித்துக்கட்டி, முழுக்கை சட்டையைப் புஜங்கள் தெரியும்படி சுருட்டிவிட்டு, கழுத்துப்பட்டையில் கர்ச்சீப் சொருகியிருந்தான். “நீதான் ஆறுமுகமாப்பா?” என்றேன். ரகு அவனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அப்படியே குனிந்து நிலத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். “ஆமாம்மா, சொல்லுங்க, எத்தனை செங்கல் வேணும்?” என்றான்.

“30 வேணும்னு சொன்னாங்கப்பா…” என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்து, “பெரிய காரியங்களாம்மா?” என்றான். நான், “ஆமாப்பா, நேத்து அம்மா தவறிட்டாங்க…” என்றேன்.

ரகுவிடமிருந்து பெரிய கேவலொன்று எழுந்தது. கதறி அழத் தொடங்கினான். அவனருகில் போய் மண்டியிட்டு அணைத்துக்கொண்டு, “டேய், என்னடா இது? ப்ளீஸ், அழாதே. நாம என்ன செய்ய முடியும்?” என்று தேற்றினேன்.

ஒரு காரைச்சட்டியில் செங்கற்களை அடுக்கிக்கொண்டு வந்த ஆறுமுகம், கனிந்த புன்னகையுடன் ரகுவைப் பார்த்துவிட்டு, “அம்மா, கார் டிக்கியத் தொறங்கம்மா…” என்றான். ரகு கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து, கார் சாவியை எடுத்து டிக்கியைத் திறந்தான். நான் போய் செங்கல்லை அடுக்க உதவி செய்யப் போனேன்.

“நீங்க விடுங்கம்மா, நான் பார்த்துக்கறேன்…” என்றவன், மடமடவென்று 30 செங்கற்களையும் அடுக்கிவிட்டு, “அம்மா, கூட நாலு கல்லு ஃப்ரீயா தாரேன் எடுத்துட்டுப் போங்க. ஏதாச்சும் விரிசல் விட்டுருந்தா அப்புறம் வாத்தியார் வேணாம்னுவாரு…” என்றபடி மேலும் நாலு செங்கற்களைக் கையில் எடுத்து வந்து டிக்கியில் வைத்தான். “தேங்க்ஸ்…” என்றபடி போனிலேயே பேசியிருந்த தொகையைக் கொடுத்தேன்.

ரகு கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்ததும், ஆறுமுகம் அவனருகில் சென்று, “சார், ‘ஆண்டாண்டு அழுது புலம்பினாலும் மாண்டார் மீண்டு வாரார்’னு பாட்டெல்லாம் இருக்கே. நீங்கல்லாம் படிச்சவங்க, இப்படி மனசை விடலாமா? நாமும் ஒருநாள் போகத்தானே போறோம்? மனசைத் திடமாக்கிக்கங்க சார்…” என்றான். ரகு அவனுக்குப் பதில் சொல்லாமல், ஸ்டியரிங்கில் கைகளை வைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தான். நான் ஆறுமுகத்திடம், “சரிப்பா, போயிட்டு வர்றோம்…” என்று விடைபெற்றுக்கொண்டேன்.

“ரகு, 12 மணி ஆயிடுச்சு. இப்பவே , இன்னும் நிறைய சாமான் வாங்கணுமே, காரை எடு…” என்றேன். என்னைத் திரும்பிப் பார்த்து, “வசந்திக்கா, அம்மாவை இனி நாம பார்க்கவே முடியாதா?” என்றான். கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது.

“ரகு, என்னடா இது? அம்மா 80 வயசு வரை நல்லா வாழ்ந்தாச்சு.இப்ப அம்மா இல்லைன்னு நினைக்கவே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அதையே நினைச்சுகிட்டு இருக்க முடியுமாடா? மனசைத் தேத்திக்கோ, ப்ளீஸ். ஒண்ணுமே சாப்பிடாம வெறும் வயித்தோட வேற இருக்கே. நாம ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு அப்புறமா கடைக்குப் போலாமா?” என்றேன்.

பைத்தியக்காரன் போலத் தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தவன், “வசந்திக்கா இங்க பாரு, இந்தக் கையாலதான்… இந்த கையாலதான் அம்மா வயித்துல சோப்புக்கட்டிமாதிரி பெரிய சூடத்தை வச்சுத் தீயைப் பத்த வச்சேன். அம்மாவை எரிச்ச கைக்கா இது? இதுல என்னால எப்படி இனி சாப்பிட முடியும்?” என்று கதறியபடி ஸ்டியரிங்கில் தலையைச் சாய்த்துக்கொண்டான்.

மகன் சரண் என் நெஞ்சில் ஏற்றவிருக்கும் சூடம் கண்ணில் தெரிந்தது; மனம் கலங்கினேன். கண்ணைத் துடைத்துக்கொண்டு, “ரகு அழாதே ப்ளீஸ், நேரமாச்சு போலாம். வீட்டுல அப்பா மட்டும்தான் இருக்காரு வரவங்களைப் பார்க்க. மாமாவும் லட்சுமியுமா அத்தனை வேலைகளையும் எல்லா குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. போய் செய்ய எனக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு, போலாம்…” என்றேன்.

மூக்கை உறிஞ்சிக்கொண்டு காரை எடுத்தான். “கூகுள் மேப்பில் வாத்தியார் சொன்ன அந்தக்கடை எங்கேன்னு நான் பார்த்து வழி சொல்றேன், நீ போ…” என்று சொல்லி மேப்பைப் பார்த்தேன். இன்னும் 6 கி.மீ. தூரத்தில் இருந்தது அந்தக் கடை.

நாளை நடக்கவிருக்கும் அம்மாவின் மூன்றாம் நாள் காரியங்களுக்கான பொருட்களை வாத்தியார் பட்டியலிட்டு, அந்தப் பட்டியலையும் வாங்க வேண்டிய கடையின் பெயரையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி இருந்தார். அந்தக் கடை ரோட்டிலிருந்து சற்று உள்ளே தள்ளி, வரிசையாக நின்ற புளிய மரங்களின் மறைவில் இருந்தது. ‘ஆதி’ என்று பெரியதாகவும், அதன் கீழே ‘பூஜை சாமான்கள் கிடைக்கும்’ என்று சிறிதாகவும் எழுதியிருந்த போர்டு கடையின் முகப்பிலேயே தெரிந்தது.

பூஜை சாமான்களுக்கு இத்தனை பெரிய கடையா?” என்று ஆச்சரியமாக இருந்தது. பொள்ளாச்சி வரும்போதெல்லாம் அந்த ரோட்டில் எத்தனையோ முறை போயிருந்தும் இந்தக் கடையை நான் பார்த்ததே இல்லை. அது சரி முன்ன பின்ன செத்தாத்தானே சுடுகாடு தெரியும்?

காரை மரநிழலில், புளியம்பூக்கள் பொன் போலத் தரையெங்கும் உதிர்ந்து கிடந்த இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே போனோம்.

பெரிய கடை. உள்ளே ஒரு தடுப்பிற்கருகில் கீழே மூன்று பெண்கள் அமர்ந்து, சிறிய பித்தளைச் செம்புகளுக்கு நூல் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒருவர் கையிலிருந்த பட்டியலைப் பார்த்து, “தர்ப்பைக்கட்டு 4, கற்பூரம் 5, குங்குமப் பாக்கெட் 4, தொன்னை 50, அகல் விளக்கு சின்னது 25” என்று சொல்லச் சொல்ல, இன்னொருவர் அவற்றை ஒரு பெரிய கவரில் எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் உள்ளிருந்து குள்ளமாக இருந்த ஒருவர், “என்னங்க வேணும்?” என்று கேட்டபடியே வந்தார்.

நான் பதில் சொல்வதற்குள் உள்ளிருந்து வேகமாக வந்த இளைஞன் ஒருவன், “டேய் ரகுநாத்! என்னடா இங்கே? எப்படி இருக்கே?” என்று ரகுவின் கையைப் பிடித்துக்கொண்டான். ஒரு நொடி திகைத்த ரகு, “முருகானந்தா! நீயா? என்னடா இங்கே?” என்றபடி அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

“நல்லாக் கேட்ட போ! கடையே என்னோடதுதான். வா, வா, உள்ளே வா…” என்றவன் என்னிடம் திரும்பி, “அக்கா, ஆளே அடையாளம் தெரியலை. உங்களை வாங்கக்கா…” என்று நான் கை வைத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த சிறு தடுப்புப் பலகையை அப்படியே மேலே தூக்கி வழி உண்டாக்கி உள்ளே அழைத்துப் போனான்.

கடைக்குப் பின்னாடியே வீடு. உயர்தரமான சோபாக்களுடன் இருந்த ஹாலின் ஏசி சில்லிப்பு இதமாக இருந்தது. “உட்காருங்க” என்றவன், உள்ளே திரும்பி “கமலி…” என்று குரல் கொடுத்தான். “அப்புறம் எப்படிரா இருக்கே? லவ் மேரேஜாமா? சொன்னாங்க…” என்றான். ரகு சற்று வெட்கி, “ஆமாடா, ஒரே பிரச்சனையா இருந்தது, அதான் யாரையும் கூப்பிட முடியலை…” என்றான்.

“போகட்டும் விடு, இங்கே எங்கே வந்தே?” என்றான். ரகு கண்ணில் நீர் தளும்ப, தொண்டை அடைக்க, “அம்மா தவறிட்டாங்கடா நேத்து…” என்றான்.

மிக இயல்பாக, “ஓ அப்படியா? மூணாம் நாள் காரியத்துக்கு சாமான் வாங்க வந்தியா? சரி இரு…” என்றபடி வெளியே பார்த்து, “பசுபதிண்ணே…” என்றான். அந்தக் குள்ளமான மனிதர் “தம்பி சொல்லுங்க…” என்றபடி கதவருகில் நின்றார். “அண்ணே, இவர் கொடுக்கிற லிஸ்ட்டை மடமடன்னு எடுத்து வைங்க பார்க்கலாம். மத்த வேலையெல்லாம் அப்புறம், முதல்ல இதை முடிக்கணும்…” என்றான். அவர் பணிவாக “சரி தம்பி…” என்றார். ரகு போனில் இருந்த பட்டியலை முருகானந்தத்திடம் காட்டினான். அவன் அதைத் தன் எண்ணுக்கு மாற்றி பசுபதிக்கு அனுப்பி, “அண்ணே, நல்லாப் பேக் பண்ணிருங்க…” என்றான்.

கமலி வந்து கையிலிருந்த ‘வாழைப்பூ’ செம்பை டீபாயில் வைத்துவிட்டு, இருவரையும் பார்த்துக் கைகூப்பி “வணக்கம், வாங்க…” என்றாள். காம்பஸ் வைத்து வரைந்தது போன்ற வட்ட முகம், சின்னதாக முத்து ஜிமிக்கியும் கழுத்தில் தடிமனாகச் சங்கிலியும் அணிந்திருந்தாள். சாட்டை போன்ற நீளப் பின்னல். செம்பிலிருந்த நீரை குடிப்பதற்குள் அவள் பின்னாடியே ஒரு அம்மாள் வந்து இருவருக்கும் டபரா டம்ளரில் காபி கொடுத்தார். மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டோம். காபி கள்ளிச் சொட்டுப் போல் அருமையாக இருந்தது. கமலியும் அங்கிருந்த குட்டி மொடாவில்  அமர்ந்து கொண்டாள்.

ரகு, “முருகா, அம்மா நமக்கெல்லாம் மீன் வறுத்துக் கொடுப்பாங்களே, நினைவிருக்கா?” என்றான்.

“பின்னே! வாசல்ல விறகடுப்புக் கூட்டி அருமையா செஞ்சு கொடுப்பாங்களே! நான் வீட்டுக்குத் தெரிஞ்சுரும்னு பாக்கெல்லாம்  போட்டுக்கிட்டுதான் போவேன். எப்படி மறக்க முடியும் அதெல்லாம்?” என்று சிரித்தான். கமலிக்கும் தெரியும் போல அவன் அசைவம் சாப்பிடுவது; முகத்தில் சிரிப்புடன் உட்கார்ந்திருந்தாள்.

முருகானந்தம், “டேய், நாமெல்லாரும் ஸ்கூல் முடிஞ்சதும் போய் சாயங்காலம் சுப்பிரமணிய சாமி கோயில் வாசல்ல அப்பா வச்சிருந்த கடையில உட்கார்ந்து ராத்திரி வரை அரட்டை அடிப்போமே? உங்க அம்மா லேட்டா வந்தா செமத் திட்டுத் திட்டுவாங்க உன்னை!” என்றான்.

“ஆமாம்ல!” என்ற ரகு, “அந்தக் கடையை இப்போ யாருடா பார்த்துக்கறா? மணி அண்ணனா?” என்றான்.

“இல்லடா, அதையெல்லாம் வித்தாச்சு அப்பா போனப்புறம்…”

“அப்பா போயிட்டாரா? அய்யோ! எப்போ?” “ரெண்டு வருஷம் ஆச்சுடா. அப்பா போன ஆறாம் மாசம் அம்மாவும் போயிட்டாங்க. அப்புறமாதான் இங்கே இருந்த நிலத்துல கடையைப் போட்டு, பின்னாடி வீட்டையும் கட்டிட்டு வந்துட்டேன். அப்பா பேரேதான் கடைக்கு வச்சிருக்கேன் ‘ஆதி’ன்னு. நல்லாப் போகுது இப்போ! உன்கிட்ட சொல்றதுக்கென்ன, இன்னும் ரெண்டு பிரான்ச் கோயமுத்தூர்ல போட்டாச்சு போன வருஷம்…” என்றான்.

கமலியிடம் திரும்பி, “கமலி, நான் சொல்லுவேனே என் ஸ்கூல் பிரண்டு ரகுநாத்னு, அவன்தான் இது. இது வசந்திக்கா. எங்களுக்கெல்லாம் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் அக்காதான் சொல்லிக் கொடுத்து பாஸ் பண்ண வச்சாங்க…” என்றவன் மீண்டும் என்னிடம் திரும்பி, “டியூஷன்ல செம அடி அடிப்பீங்களே, நினைவிருக்காக்கா?” என்றான். நான் சிரித்தேன்.

“அப்படி அடிச்சு சொல்லிக் கொடுக்கலைன்னா நானெல்லாம் எங்கே உருப்பட்டிருப்பேன்? ரகு நினைவிருக்கா, அப்பா கடையிலதானே நாம பிளஸ்-டூ ரிசல்ட் பார்த்தோம்?”

“ஆமாடா, சுதாகர் நம்பர் வரலைன்னு அழு அழுன்னு அழுதானே பாவம்!”

“அப்படி அழுதவன்தான் இப்போ துபாயில பெரிய பிசினஸ்மேனா இருக்கான். நாம பாஸ் பண்ணிட்டு இங்கே கிடக்கோம்!” என்றான் முருகானந்தம்.

பசுபதி, “தம்பி, எல்லாம் எடுத்து வச்சாச்சுங்க…” என்று குரல் கொடுத்ததும், கமலி எழுந்துகொண்டு, “அண்ணா, சமையல் எல்லாம் ஆச்சு, கட்டாயமா சாப்பிட்டுட்டுத்தான் போகணும்…” என்றாள்.

நான் எழுந்துகொண்டு, “இன்னொரு சமயம் ஆகட்டும்மா. இப்ப வீட்டுல எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க, போகணும்…” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டேன். ரகு பசுபதியிடம் தொகையைக் கொடுத்துவிட்டு காருக்கு வந்தான்.

முருகானந்தம் கூடவே வந்து, அவன் போனில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் போட்டோவைக் காட்டி, “இதாண்டா பொண்ணுங்க. மந்தஹாசினி, மதுரபாஷிணின்னு அம்மன் பேரே வச்சுட்டோம். 7-வது படிக்கறாங்க பி.கே.டி. ஸ்கூல்ல. 4 மணிக்கு வேன்ல வருவாங்க…” என்றவன், “உனக்கு?” என்றான்.

“எனக்கு ஒரே பொண்ணுடா, சாம்பவி. நானும் குலதெய்வத்தோட பேர்தான் வச்சிருக்கேன்…” என்றான். என்னைப்பார்த்து, “சரண் என்னக்கா பண்றான்?” என்றான். நான் அவன் மும்பையில் வேலையில் இருப்பதைச் சொன்னேன். காரருகில் வந்தும் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

கடைக்கு முன்பாகப் பெரிய காரில் ஒரு இளைஞன் வந்து இறங்கினான். ‘புது மாப்பிள்ளை’ என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. முருகானந்தத்தைப் பார்த்து, “சார், சீமந்தத்துக்கு வேணுங்கற சாமான் எல்லாம் இங்கே இருக்கா?” என்றான்.

முருகானந்தம், “எல்லாம் இருக்கு சார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இவங்களை அனுப்பிட்டு வர்றேன், அடுத்து உங்களுக்கு எடுத்துரலாம். ஆனா மூக்கு பிழியறதுக்கு ஆலம் மொக்கெல்லாம் நீங்கதான் எடுத்துக்கணும், அது கடையில கிடைக்காது…” என்றான். “ஓகே ஓகே” என்ற அவன், கடைக்கு முன்பு போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்துகொண்டான்.

வாசலில் வந்து நின்ற பைக்கிலிருந்து களைத்துப்போன இரண்டு ஆண்கள் இறங்கி, வெளியே வந்து நின்ற பசுபதியிடம், “ஏங்க, கருமாதி சாமான் எல்லாம் வேணும்…” என்றார்கள். “வாங்க, லிஸ்ட்டைக் கொடுங்க…” என்றார் அவர்.

“சரிடா, நீ போய் கடையைப் பாரு…” என்ற ரகுவும் நானும் விடைபெற்றுக் காரில் ஏறி உட்கார்ந்தோம்.

“ரகு, 16-ஆம் நாளுக்கு என்ன வேணும்னு போன்ல சொல்லிரு, நான் கொடுத்து அனுப்பிடுறேன். இந்தா என் கார்டு. அப்புறமா சுதாகர் நம்பர் இருந்தா அனுப்பு. அடுத்து வந்தா கட்டாயம் சாப்பிட்டுட்டுத்தான் போகணும், கமலி பிரமாதமா சமைப்பா…” என்றவன் கைகுலுக்கி விடை கொடுத்தான்.

காரில் உட்கார்ந்து பெல்ட் போட்டுக்கொண்ட ரகு, ரோட்டைத் தாண்டியதும், “அக்கா, 3 மணி ஆயிடுச்சு. கௌரி கிருஷ்ணா போய் சாப்பிட்டுட்டு அப்புறமா வீட்டுக்குப் போலாமா? பசிக்குது…” என்றான். அவன் தலையில் இருந்த புளியம்பூவைத் தட்டிவிட்டு, “போலாண்டா, எனக்கும் பசிக்குது…” என்றேன்.

தருண் 24

இன்று தருணுக்குப் பிறந்த நாள் 24 வருடங்களாகிவிட்டதா? நம்பத்தான் முடியவில்லை. புட்டுத் தருணாக இருந்து எந்நேரமும் “தூக்கி தூக்கி” என அடம்பண்ணி இடுப்பிலேயே உட்கார்ந்துகொள்ளும் தருண் இப்போது பல பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் இளைஞனாகிவிட்டிருக்கிறான். 

அவனது முதல் பிறந்தநாள் முடிந்து 2003 ஆகஸ்ட் 28ம் தேதி அவனைத் தோளில் போட்டுக்கொண்டு, சரணைக் கையில் பிடித்துக்கொண்டு இந்தியா திரும்பியது கனவு போலிருக்கிறது. ஒரே சமயத்தில் பெரும் நம்பிக்கையாகவும் பெரும் பொறுப்பாகவும் இருந்தார்கள் அவர்கள் அப்போது; ஆனால் என் ஒரே பற்று இப்போது இருவரும் தான்.

தருணுக்கு ஸ்நேகிதிகள் எண்ணிக்கை கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும், யாரிடமும் இதுவரை கூடுதல் பிரியமோ அடுத்த கட்டநகர்வுக்கான விழைவோ வந்ததில்லை (என்று சொல்கிறான், நானும் நம்புகிறேன்).

சரணை பிரீ கே.ஜி வகுப்புக்கு கொண்டு விடுகையில் தருணும் என் கையைப் பிடித்துக்கொண்டு உடன் வருவான், காலை மாலை இருவேளையும். 

வழியில் ஒரு வீட்டில் பொமெரேனியன் ஒன்று சாலையை கடப்பவர்களைப் பார்த்து, அதன் சைஸுக்கு பொருத்தமில்லாமல் பயங்கரமாக குலைக்கும். தருண் அந்த வீட்டு கேட்டைப் பிடித்துக்கொண்டு அதைப் பார்த்து பதிலுக்கு விடாமல் குரைத்து, அந்த நாய் அமைதியாகும் வரை அதை ஒரு வழி பண்ணுவான். சமாதானம் பண்ணி இழுத்துக்கொண்டு போவேன். 

சரண் பள்ளியில் மைதானத்தில் விளையாடுவதை கேட்டின் கீழிருக்கும் இடைவெளி வழியே குனிந்து பார்த்து, அண்ணன் தெரிந்தால் மகிழ்ந்து என்னிடம் சொல்லுவான். அந்தப் பள்ளி ஆசிரியைகளுக்கெல்லாம் அவன் அங்கே சேரும் முன்னரே செல்லமான செல்லம் பாலாமணி என்று ஒரு டீச்சர். அவனை எப்போதும் இடுப்பிலேயே வைத்துக்கொண்டிருப்பாள். இதோ இப்போது அந்த தருண் காட்டியல் முடித்து, எம்பிஏவும் முடித்து வேலையிலும் சேர்ந்துவிட்டான், 

யானை டாக்டரின் தாக்கம் இன்னும் இம்மியும் குறையவில்லை. எப்போதும் காட்டில்தான் இருக்கிறான். பாம்புகளைப் பாதுகாப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறான். தருமனும் அர்ஜுனனும் பீமனும் கலந்த கலவை இவன்.

உடலெங்கும் அட்டை கடித்த வீரத்தழும்புகள் நிறைந்திருக்கிறது.”எப்போ பார்த்தாலும் வீட்டுத் தோட்டத்தை கூட்டிப் பெருக்கி சுத்தமாவே வச்சிருந்தா, எப்படி இங்கே பாம்பு வரும்? எங்கே தங்கும்” என்று அம்மாவிடம் கோபித்துக்கொண்டு இலைதழையை கூட்டிக் குவித்து, அதன் மீது ரெண்டு காலிப் பூந்தொட்டிகளை சற்று இடைவெளி இருக்கும்படி கவிழ்த்துவைக்கும் இளைஞனை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறானே தருண்.

பிரமாதமான சமையல் நிபுணன். எனக்குத் தெரிந்து தோழிகளுக்கு வீட்டில் பிரியமாக சமைத்துப் போடும் நண்பன் இவன்தான். அண்ணன் மீது மாறாத அன்பும் அபிமானமும் கொண்டிருப்பதில் லக்ஷ்மணனுக்குப் பிறகு தருணைத்தான் சொல்லவேண்டும். 

எங்கும் தேங்கி நிற்காமல் காற்றில் பட்டுத் துணி போல் நழுவி நழுவி சென்று கொண்டே இருப்பான்; யாரையும் காயப்படுத்துவதில்லை, அதில் கவனமாக இருக்கிறான்.  என் வஞ்சங்கள் அவனை தொட்டுவிடாத தூரத்தில்தான் இருக்கிறான். சரணுக்கு எல்லாமே கருப்பும் வெள்ளையும்தான், என்னைப்போலவே, இடையில் ஒரு சாம்பல் நிறமெல்லாம் இல்லை; ஆனால் தருண் அப்படியில்லை, மன்னிக்கிறான் எவராயினும் எப்பிழை செய்திருந்தாலும்!

குந்திக்கு அர்ஜுனன் போல் என் விழைவுகளே வடிவாக உருவானவன் தருண். மகன்களோடு சென்ற கார் பயணங்களைத்தான் நான் மின்மயானம் செல்லும் வழியில் நினைத்துக்கொள்வேனாயிருக்கும். சரண் கண்கள் ஒளிர தீவிரமாக பேசிக்கொண்டிருந்தவற்றை கேட்டுக்கொண்டிருந்ததையும் அப்போது நினைத்துக் கொள்வேன். 

 சமீபத்தில் ’’ஒடிஸி’ படம் பார்த்துவிட்டு பின் இரவு வீடு திரும்புகையில், அந்தப் படத்தின் நாயகனின் அகப்பயணம் பற்றி தருண் சொல்லிக்கொண்டேவந்த, அவ்வளவையும் திகைப்புடன் கவனித்துக்கொண்டிருந்தேன். சென்ற மாதம் குடும்பப் பிரச்சனையைப் பேச பொது நண்பர்கள் இருவர் வந்திருந்தபோது, அவனும் உடனிருந்து மிக முதிர்ச்சியாக பலவற்றை பேசிக்கொண்டிருந்ததையுமே திகைப்புடன் கவனித்தேன். சரணின் இடத்துக்கு தருண் வந்துவிட்டிருக்கிறான். இருவரும் எனக்களிக்கும் மாரல் சப்போர்ட்டைப்போல   இவ்வுலகில் வேறு யாருமே அளிக்கவில்லை; இனி அளிக்கவும் முடியாது. 

 நான் ஒருமுறை சென்னையிலிருந்து ரயிலில் பொள்ளாச்சி வந்தேன். அந்த குட்டி ஸ்டேஷனில் Dr Logamadevi என்று அட்டையில் எழுதி தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றான். மொத்த ஸ்டேஷனுமே வேடிக்கை பார்த்தது நான்  இறங்கி வந்ததை. இப்படி சரண், தருணைப் போன்ற இயல்பில் இருக்கும் ஒருவரை நான் எப்போதும் மனதில் எனக்கானவராக  கற்பனை செய்துவைத்திருந்தேன். புத்திசாலி, handsome, playful, nature loving  நகைச்சுவையுணர்வு கொண்டவன் என்று,அதில் கவிதை எழுதுவதும் இருந்தது எனினும் இரண்டு பேருமே அதில் இன்னும் இறங்கவில்லை, ஒருவேளை இனிமேல் எழுதக்கூடும்.

தருணைக் குறித்து பெருமையாய் எண்ணிக்கொள்ளும் நினைவுகளில் மிக முக்கியமானது: வீட்டுக்கருகே இருக்கும் ஒரு நீர்நிலையில் கிடந்த ஒரு மீன்பிடி வலையில் எப்போதோ நுழைந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டு, உடலின் காயமும் பசியும் தாகமும்  வலியும் தாங்காமல் உயிருக்குப் போராடிய ஒரு பாம்பை கண்டுபிடித்து, அவ்வழியில் சென்றவர்களிடம் கெஞ்சிக்கேட்டு கத்தி வாங்கி வரச்சொல்லி நெடுநேரம் போராடி  வலையைஅறுத்து அதைக் காப்பாற்றியதுதான். 

அந்தப் பாம்பு அவன் அதை முழுவதும் காப்பாற்றும்வரை பயத்திலும் பசியிலும் காப்பற்றப்பட்டு விடுவோம் என்னும் நம்பிக்கையிலும் அவன் விரலைத் தன் வாலால் இறுக்க, ஒரு சின்னக் குழந்தையைப் போல் சுற்றிப் பிடித்திருந்தது. அவனால் நீருக்குள்  விடப்பட்டதும் அந்தப்பாம்பு மறுபிறவி எடுத்தது போல வழுக்கிக்கொண்டு  இறங்கிச் சென்றதை கண்ணீருடன்தான்  வீடியோவில் பார்த்தேன். நானும் அந்த பாம்புதான்  மகன்களால் காப்பாற்றப்பட்டு மகிழ்ந்திருப்பவள்.மகன்களை பிடித்துக்கொண்டே இருப்பவள்.

எத்தனையோ சிக்கல்களில் இருந்து என்னை இருவரும் உயிருடன் விடுவித்திருக்கிறார்கள்

 தருணே!

உனக்கென காடு எப்போதும் திறந்திருக்கட்டும், உன் கனவுகள்  என்றென்றும் கலையாதிருக்கட்டும், அன்பும் ஆசிகளும்.

 கடவுளே காத்துக்கொள்க.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் தாவரங்கள்

சமீப காலமாகவே எனக்குக் கிறித்தவ இலக்கியங்களில் கொஞ்சம் ஆர்வம் உண்டாயிருக்கிறது. இதற்கு என் நண்பர் பனை காட்சனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு அவரும் நானும் பேசிக் கொண்டிருக்கையில், விவிலியத்தில் இடம்பெற்றிருக்கும் தாவரங்களைப் பட்டியலிட்டு ஒரு கட்டுரை எழுதலாம் என்ற யோசனை வந்தது. ஆனால், அது யோசனை என்ற அளவிலேயே நின்றுவிட்டது.

இந்த வருடத் தொடக்கத்தில் மும்பை மெதடிஸ்ட் தேவாலயத்தில் உரையாற்றும்படி காட்சனிடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஏற்றுக்கொண்டேன். காட்சன் எங்களது கல்லூரிக்கு வந்தபோது, அந்த நிகழ்வைக் குறித்து நான் தயங்கித் தயங்கி ஜெ விற்கு எழுதிய கடிதம் தான் அவரது தளத்தில் வெளியான எனது முதல் கடிதம். அதன் பிறகுதான் இத்தனை எழுதுகிறேன். எனவே, காட்சன் அழைத்தால் தட்டவே முடியாது. மேலும், சரண் அந்த வாரம்தான் மும்பையில் பணியில் இணைந்திருந்தான். அவனுடைய வீட்டிற்கும் போய்விட்டு அப்படியே இந்த நிகழ்வையும் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

விவிலியத்தில் இருக்கும் தாவரங்கள், மெதடிஸ்ட் கிறித்தவப் பிரிவை உருவாக்கிய ஜான் வெஸ்லே எழுதிய மூலிகைத் தாவர நூலிரண்டு, தேவாலயங்களில் அளிக்கப்படும் திராட்சரசத்தின் பொருட்டுத் திராட்சைக் கொடிகள் கிறித்தவ போதகர்களால் உலகெங்கும் பரவியது ஆகிய செய்திகளை மையமாகக் கொண்டு அந்த உரையை அமைத்திருந்தேன். எனது மிக நல்ல உரைகளில் மும்பை உரையும் ஒன்று.

“Consider the lilies” என்று கிறிஸ்து ஏன் சொன்னார்? எந்த லில்லிகளைச் சொன்னார்? விவிலியத்தில் தேன் என்று சொல்லப்படுவது தேனீக்களிடமிருந்து பெறப்பட்டதா அல்லது கனிந்த பேரீச்சைகளின் சாறா? ‘ஆமென்’ என்பதன் பொருள் என்ன? ஏன் தேவன் நானே உண்மையான திராட்சைக்கொடி நீங்கள் அதன் கிளைகள் என்றார்?போன்றவற்றைக்கொண்டு அந்த உரையை அமைத்திருந்தேன். அந்த உரை எனக்கும் மிக நிறைவளித்தது.

லக்கி குளோவர்’ குறித்தும், அதற்கும் கிறிஸ்தவத்திற்குமான தொடர்பை மையமாகக் கொண்டும் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டேன். தற்போது ‘மிஷன் கிரேப்ஸ்’ குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன், .

இப்போது சொல்வனத்தில் வந்து கொண்டிருக்கும்கொலம்பஸ் தொடரிலும், அவரது முதல் கப்பற்பயணத்தின் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே அன்றாடம் காலையும் மாலையும் மூன்று கப்பல்களிலும் கீழ்வரும் கிறித்தவப் பிரார்த்தனைப் பாடல்களும் கீர்த்தனைகளும் பாடப்பட்டதை எழுதியிருந்தேன்.

  • சால்வே ரெஜினா (Salve Regina – வாழ்க அரசியே): கொலம்பஸின் கப்பல்களில் பாடப்பட்ட மிக முக்கியமான பாடல்.
  • தே தேவும் (Te Deum): கடவுளுக்கு நன்றி செலுத்தும் திருப்பாடல்.
  • பேட்டர் நோஸ்டர் (Pater Noster): எங்கள் பரமபிதாவே.
  • ஆவே மரியா (Ave Maria): அருள்நிறை மரியே.
  • க்ரேதோ (Credo): விசுவாச அறிக்கை.

அந்தக் காலத்துக் கத்தோலிக்கப் பாரம்பரியத்தின்படி, இந்தப் பாடல்கள் அனைத்தும் லத்தீன் மொழியிலேயே பாடப்பட்டன. இந்தக் கீர்த்தனைப் பாடல்கள் தன்னை அந்த அபாய காலங்களில் மிகவும் அமைதிப்படுத்தியதாகக் கொலம்பஸ் தனது நாட்குறிப்பிலும் எழுதியிருக்கிறார்.

எனவே, கிறித்தவ இலக்கியங்கள் மற்றும் கீர்த்தனைகளில் எனக்கும் கொஞ்சமே கொஞ்சம் பரிச்சயம் உண்டாயிருக்கிறது.

இந்த வருடம் பெரியசாமி தூரன் விருது தமிழ் கிறித்தவ இலக்கிய ஆய்வாளர் திரு. ஞான சந்திர ஜான்சனுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே, கிடைத்தவரை அவரது ஆய்வுகளையும் நூல் விமர்சனங்களையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

‘குருகு’ இதழின் ஞான சந்திர ஜான்சன் சிறப்பிதழும் இன்று வெளியானது; அதிலும் அவரது கிறித்தவத் தமிழ் இலக்கியங்கள் குறித்த பலரின் கட்டுரைகளை வாசித்தேன். பலகோணங்களில் ஜான்சன் ஆய்வுகள் செய்திருக்கிறார். எனினும், அந்த இலக்கியங்களில் இருக்கும் தாவரங்களைப் பற்றி அவர் ஆவணப்படுத்தியிருக்கிறாரா அல்லது குறிப்பாவாவது எழுதியிருக்கிறாரா என்று தேடினேன்; ஆனால் இல்லை.

இன்று திரு. ஞான சந்திர ஜான்சன் அவர்களின் பிறந்தநாள் எனவே அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லிவிட்டு இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டேன். அவர் யோசித்துவிட்டு, “இல்லை, தாவரங்களை நான் எங்குமே கவனித்துக் குறிப்பிடவில்லை” என்றார்.

“ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து இறக்காவிட்டால் அது தனியாகவே இருக்கும்; இறந்தால் மிகுந்த கனியைத் தரும்” என்ற இயேசுவின் உருவகம், யோவான் நற்செய்தியில் வரும் மிக அழகான தாவர உருவகங்களில் ஒன்று. இங்கு ஒரு விதையின் இயற்கையான வாழ்க்கைச் சுழற்சி,மண்ணில் விழுதல், மறைதல், முளைத்தல், வளர்தல், கனியளித்தல் என்பது ஒரு மனிதனின் ஆன்மிக வாழ்க்கையையும், இறுதியில் இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விளக்கும் மொழியாகிறது.

தமிழில் கிறித்தவ இலக்கியம் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. காப்பிய அமைப்பு, சமயக் கருத்து, இறையியல், மொழிநடை, இலக்கிய உத்திகள், வரலாற்றுப் பின்னணி, கவிஞர்களின் வாழ்க்கை, விவிலியத் தாக்கம் போன்றவை ஆராயப்பட்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளுக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்களில் யோ. ஞான சந்திர ஜான்சன் குறிப்பிடத்தக்கவர். கிறித்தவத் தமிழ் இலக்கியம், கிறித்தவக் கீர்த்தனைகள், கிறித்தவக் காப்பியங்கள், கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் எனப் பரந்த பரப்பில் அவர் தொடர்ந்து ஆய்வு செய்து வந்துள்ளார். குறிப்பாக ‘கிறித்தவக் காப்பியங்கள்’ என்ற அவரது ஆய்வு, கிறித்தவக் காப்பிய உலகை ஒருங்கிணைத்துப் பார்க்கும் முக்கியமான முயற்சியாகும்.

ஆனால் சமய இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகளில் பொதுவாக ஒரு சிறிய இடைவெளி இருக்கிறது. அந்தப் படைப்புகளுக்குள் வாழும் தாவரங்கள் பெரும்பாலும் தனியாகக் கவனிக்கப்படுவதில்லை. ஒரு மலர் வந்தால் அது அழகுக்கான உவமை என்று பதிவு செய்யப்படுகிறது; ஒரு மரம் வந்தால் அது ஒரு காட்சியின் பகுதியாகக் கடந்து செல்கிறது; ஒரு கனி வந்தாலும் அப்படித்தான். ஆனால் அந்த மலர் எந்தத் தாவரம்? அந்த மரம் தமிழ்ச் சூழலின் எந்த மரபைச் சேர்ந்தது? கனி உருவாகும் தாவரவியல் நிகழ்வு என்ன? விதை ஏன் ஒரு புதிய வாழ்க்கையின் உருவகமாகிறது? மலர்–வண்டு உறவு ஏன் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வருகிறது? போன்ற கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை.

தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்பது வெறும் காட்சிப் பின்னணி அல்ல; அது மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் உதவும் ஒரு இயற்கை மொழியாகவும் இருக்கிறது. காடு, மரம், செடி, கொடி, மலர், கனி, விதை, மண், மழை, வயல், சோலை, தோட்டம் போன்ற இயற்கைக் கூறுகள் மனித உணர்வுகள், அறம், ஆன்மிகம், இறைநம்பிக்கை, பிறப்பு, வளர்ச்சி, அழிவு, மீட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் கிறித்தவ இறையியலில், மீட்பின் வரலாறு ஏதேன் தோட்டத்தில்தானே முளைவிட்டது? எனவே, திரு. யோ. ஞான சந்திர ஜான்சன் அவர்கள் ஆய்வு செய்த கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களிலும் பிற இலக்கியங்களிலுமாக என் தேடலைத் தொடர்ந்தேன்.

சமீபத்தில் கோவை புத்தகத் திருவிழாவில் “புறத்திணையில் மலர்கள்” எனும் உரையாற்றினேன். ஒரு கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வு மாணவிகளும் சிறு தயாரிப்போடு வந்திருந்தார்கள். ஆனால், என்னென்ன மலர்கள் இருக்கின்றன என்று மட்டுமே சொன்னார்களே தவிர, ஏன் வெட்சி, ஆநிரை கவர்தலுக்கு ஏன் வாகையை வெற்றிக்காகச் சூடினார்கள் என்பதை ஒருவர் கூட விளக்கவில்லை; அவர்களுக்குத் தெரியவும் இல்லை. நான் ஒவ்வொரு மலரையும் விளக்கி, ஏன் அது அந்த குறிப்பிட்ட பொருளில் அங்கு வருகிறது என்று கூறினேன். சொல்லப்போனால், ஒரு வாரமாக அதைக் குறித்துத் தீவிரமாகப் படித்தறிந்த பிறகே உரையாற்றச் சென்றேன்.

தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் மனிதனுக்கும் தாவரங்களுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. சங்க இலக்கியத்தின் திணைக் கோட்பாட்டிலிருந்து பக்தி இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் வரை தாவரங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

திருவாசக வாசிப்பின் போது:

“புற்றேர் அரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்

கற்றேர் குழவியின் தீம்பால் உற்றே அமிழ்தெனினும்

நற்றேர் நச்சுற்ற மாம்பழம் போன்மிளிரும் உலகை

அற்றேனென்று அஞ்சாமை கண்டு அஞ்சினேனே.”

இப்பாடலில் வரும் “நச்சு மாம்பழம்” என்னவென்று ஆராய்ந்தேன். அது ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் கடற்கரை மரமான செரிபரா மாங்காஸ் (Cerbera manghas, commonly known as the sea mango) என்னும் மரமாகத்தான் இருக்க வேண்டும். வேறு நச்சு மாம்பழங்கள் ஏதும் எனக்குத் தெரிந்தவரை இல்லை. இப்படி ஆய்வு செய்யத் தொடங்கினால் மிக நல்ல புதிய விஷயங்கள் தெரியவருகின்றன.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் இந்தத் தாவர உலகம் இன்னொரு பரிமாணத்தைப் பெறுகிறது. இங்கு தாவரங்கள் தமிழ் இயற்கை மரபுடனும் விவிலியச் சிந்தனையுடனும் சந்திக்கின்றன.

முனைவர் யோ. ஞான சந்திர ஜான்சன் அவர்களின் ‘கிறித்தவக் காப்பியங்கள்’ நூல், முப்பது கிறித்தவக் காப்பியங்களை விரிவாக அறிமுகப்படுத்தி ஆய்வு செய்கிறது. அவை திருமறை வரலாற்றுக் காப்பியங்கள், கிறிஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள், திருமறை மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள், திருமறை சாரா மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள் என உள்ளடக்க அடிப்படையிலும்; தழுவல் மற்றும் மொழிபெயர்ப்புக் காப்பியங்கள் எனப் படைப்புத் தன்மை அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றுள் முழுத் தாவரங்களாக மரம், செடி, கொடி, புல், பயிர் போன்றவைகளும்; அவை வளரும் சூழல்களான சோலை, தோட்டம், நந்தவனம், வயல், காடு, புல்வெளி ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும் வேர், தண்டு, கிளை, இலை, தளிர், அரும்பு, மலர், கனி, விதை போன்ற தாவர உறுப்புகளும்; விதைத்தல், முளைத்தல், வளர்தல், மலர்தல், கனிதல், வாடுதல், உதிர்தல், அறுவடை போன்ற தாவரம் சார்ந்த செயல்பாடுகளும் உள்ளன. இவை நேரடி இயற்கை வருணனையாக, உவமையாக, உருவகமாக, குறியீடாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் மலர் பல இடங்களில் குறியீடாக அமைகிறது. குறிப்பாகத் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு காவியம், திருத்தொண்டர் காப்பியம் போன்ற காப்பியங்களில் தாவரங்கள் இயற்கைக் காட்சிகளாக மட்டுமல்லாமல் அழகு, தூய்மை, நம்பிக்கை, ஆன்மிக வளர்ச்சி, நற்செயல், பயன், நிலையாமை, மீட்பு ஆகிய கருத்துகளின் உருவகங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

மலர்மாலை, மலர்க்காணிக்கை, மலரால் அலங்கரித்தல் போன்ற செயல்களும் தாவரத்தைச் கிறிஸ்துவச் சமய அனுபவத்துடன் இணைக்கின்றன.

வீரமாமுனிவரின் தேம்பாவணி, கிறித்தவத் தமிழ்க் காப்பிய மரபின் மிக முக்கியமான படைப்பு. இது மூன்று காண்டங்களையும் 36 படலங்களையும் 3,615 பாடல்களையும் கொண்ட பெருங்காப்பியம்.

காட்சிப்படலத்தில், “கொழுந்து உறும்கு ளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும்…” என்று முல்லை குறிப்பிடப்படுகிறது. இங்கு “முல்லை” என்பது வெறும் மலர் அல்ல. அது முல்லை நிலம், இடையர், கால்நடை, இயற்கை, குழந்தை இயேசுவைச் சந்தித்தல் ஆகியவற்றை இணைக்கும் பண்பாட்டு அடையாளமாகிறது. இப்படி இந்தக் கிறிஸ்தவக் கதை தமிழின் நிலவியல் மொழிக்குள் மாற்றப்படுகிறது.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் இந்த மரபு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. மேற்கத்திய விவிலிய உலகில் காணப்படும் விதை, திராட்சைக் கொடி, அத்திமரம், ஆலிவ் மரம், அத்திப்பழம், தோட்டம் போன்ற உருவகங்கள் தமிழ்க் காப்பியப் புலவர்களின் கைகளில் தமிழின் இயற்கை மொழியுடன் கலக்கின்றன. அதே நேரத்தில், தமிழ் இலக்கிய வாசகர்களுக்குப் பரிச்சயமான முல்லை, வேங்கை, தாமரை, சோலை, வயல், நந்தவனம் போன்ற இயற்கைக் கூறுகளும் கிறித்தவக் கதையுலகிற்குள் நுழைகின்றன.

அதே காட்சிப்படலத்தில், “மாலை மேவு வேங்கை பற்றி வண்டு…” என்று வேங்கை மலரும் வண்டும் குறிப்பிடப்படுகின்றன.

தேம்பாவணியில் தாமரை உருவகம் கண்களின் அழகைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. காட்சிப்படலத்தில் குழந்தையின் பார்வை தாமரை மலருடன் ஒப்பிடப்படுகிறது:

“விண்மீன் ஒக்கும் விழிவிளங்கும்; வேதம் நாறக்

கண்மீன் உற்ற தாமரைபோல் கமழும் வாயான்;

தண்மீன் தேன்சொல் சுவைஒழிக்கும்; தையல் காட்டும்

வான்மீன் பூத்த முகம்ஒக்கும் வடிவின் மேலோன்.”

எச். ஏ. கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் தாவர உருவகங்களை ஏராளமாகக் குறிப்பிடுகிறது. மலர், மலர்முகை, தேன், வனம், கற்பகமரம், புல், தரு/மரம், கனி, விதை, தளிர், கிளை, சோலை, நந்தவனம், கொடி, மரக்கிளை, வயல்/பயிர் எனப் பல தாவரச் சொற்கள் தொடர்ச்சியாக வருகின்றன.

“வண்டு இனம் பயிலச் செய்ய மலர் முகை அவிழ்ந்து செந்தேன்…” என்று வரும் காட்சி குறிப்பிடத்தக்கது. இரட்சணிய யாத்திரிக உரைப்பகுதியில் “புனித ஜீவ கற்பக மலர்”, “கற்பகப் பொதும்பர்” போன்ற சொற்கள் வருகின்றன. இங்கு ‘கற்பகம்’ என்பதை ஒரு குறிப்பிட்ட தாவரமல்ல. அது ஒரு புராணக் கற்பனை மரம். கிறித்தவக் காப்பியத்தில் அது இறை அருளின் வளம் என்ற புதிய பொருளைப் பெறுகிறது.

மேலும் இரட்சணிய யாத்திரிக உரையில் “விதி”, “விதை”, “முளைத்த” போன்ற சொற்கள் தாவர உருவகத்துடன் தொடர்புடைய பகுதிகளில் வருகின்றன. குறிப்பாக “முளைத்த இச் சீவ கங்கை” போன்ற தொடர்களைச் சொல்லலாம்

கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ 1982-இல் வெளியானது. இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பாடல் வடிவில் எடுத்துரைக்கும் காப்பியமாகும். தாவர உருவகங்களைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது.

இதில் “கனி கொடு, இல்லையேல் வரும் கேடு” என்ற தலைப்பின் கீழ் அத்திமர உருவகம் வருகிறது. மரம் வேர்விட்டும் கிளைவிட்டும் வளர்கிறது; ஆனால் கனி தர மறுக்கிறது. ஒரு மரம் உயரமாக வளரலாம், கிளைகள் பரவலாம், வேர் வலிமையாக இருக்கலாம்; ஆனால் கனி தராவிட்டால் அதன் வளர்ச்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. “வாழ்வது மட்டும் போதாது; வாழ்க்கை பிறருக்குப் பயனளிக்க வேண்டும்” என்ற அறக்கருத்தாக இது மாறுகிறது. கிறித்தவ விவிலிய மரபில் அத்திமரம் முக்கியமான குறியீட்டு மரமாகும்.

இதே அத்திமர உருவகம் இரட்சணிய யாத்திரிகத்திலும் மிகத் தெளிவாக வருகிறது. ஒரு மரம் பெரிதாக வளர்ந்திருந்தும் கனி தராத நிலை குறித்து, “பெரு மரம் ஆன போதும் கனி கொடாப் பெற்றி…” என்று குறிப்பிடுகிறது. தொடர்ந்து அந்த மரத்திற்கு இன்னும் ஒரு கால அவகாசம் வழங்கி, உரமிட்டு, பராமரித்து, கனி தருகிறதா என்று பார்க்கும் காட்சியும் வருகிறது.

இது தாவரவியல் ரீதியாகவும் சுவாரஸ்யமான உருவகம். மரம் கனி தராததற்கு வயது, ஊட்டச்சத்து குறைபாடு, நீர் பற்றாக்குறை, ஒளி, மலர்ச்சி இல்லாமை, மகரந்தச் சேர்க்கை, நோய், சூழல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் காப்பியம் இதனை மனித ஆன்மிக வாழ்க்கையின் மொழியாக மாற்றுகிறது: வாய்ப்பு → திருத்தம் → கனியளித்தல்’ என்ற கருத்து உருவாகிறது.

இரட்சணிய யாத்திரிக உரையில், “மன்னு நந்தனவனத்து எழில் மரக்கிளை பின்னியும் வல்லிகள் பிணைத்தும்…” என்று வரும் பகுதி தாவரக் காட்சியின் சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு மரக்கிளை, வல்லி, தழைக்கொடி, மணம், தோட்டம் எனப் பல விஷயங்கள் ஒன்றாக வருகின்றன. ஒரு தோட்டச் சூழல் இங்கு வர்ணிக்கப்படுகிறது.

சூ. இன்னாசியின் ‘திருத்தொண்டர் காப்பியம்’ 4,135 பாடல்களைக் கொண்டது; நாற்பது படலங்களாக நான்கு காண்டங்களில் அமைந்துள்ளது. இதில் நாட்டுப்படலம், பொழிலுறு படலம், இயற்கை வருணனைகள், உவமைகள் போன்றவை இடம்பெறுகின்றன.

இந்தக் காப்பியத்தில் தேவசகாயம் பிள்ளையின் ஞானஸ்நான மாற்றத்தை விளக்கும்போது, “தருவழிந் ததன்விதை மறுதரு ஆம்போல் தாய்வழிப் பாவம் அழியும் புத்துயிர்…” என்றிருக்கிறது.

ஒரு மரம் பட்டுப்போய்/அழிந்து போனாலும், அதிலிருந்து விழும் விதையானது மீண்டும் முளைத்து ஒரு புதிய மரமாக (மறுதரு) உருவாகிறது. அதுபோலவே, மனிதன் பிறக்கும்போதே தாயின் வழியே (முன்னோர்கள் வழியே) தொடரும் ஜென்மப் பாவம் என்ற நிலை இருந்தாலும், இறைவனின் அருளாலும் திருமுழுக்கினாலும் அந்தப் பாவம் முற்றிலும் அழிந்து, மனிதன் ஆன்மீக ரீதியாக ஒரு “புதிய உயிராக” மாறுகிறான்.

மேலும் திருத்தொண்டர் காப்பியம் தேவசகாயம் பிள்ளை துன்புறுத்தப்பட்ட நிகழ்வை வருணிக்கும்போது, “நிலைகுலைய எருக்கலையால் நெடியமாலை சூடினார்கள்…” என்று கூறுகிறது. இங்கு எருக்கலையின் தாவரவியல் பண்பை விட, அவமானத்தின் அடையாளமாக இலைமாலை சூட்டுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு இலக்கியத்தை, காப்பியத்தைப் படிக்கும்போது நாம் பொதுவாகக் கதாநாயகனை அல்லது நாயகியை, அவர் எங்கு பிறந்தார், எங்கு சென்றார், யாரைச் சந்தித்தார், என்ன செய்தார் என்று பார்க்கிறோம். கவிஞன் கட்டியிருக்கும் உலகத்துக்குள் நுழைகிறோம்; ஆனால் அந்த உலகில் நம்மோடு கூடவே மரங்களையும் செடிகளையும் கவனிப்பதில்லை.

அந்தக் குழந்தையின் அருகில் எந்த மலர் மலர்கிறது? அந்தப் பாதையின் ஓரத்தில் என்ன மரம் நிற்கிறது? எந்தக் கனியைப் பற்றிக் கவிஞன் சொல்கிறான்? விதை ஏன் உருவகமாகிறது? ஒரு மரம் ஏன் கனி தர வேண்டும்? மலர் எப்போது அழகாக இருக்கிறது; எப்போது அவமானத்தின் அடையாளமாகிறது?

இந்தக் கேள்விகளோடு யோ. ஞான சந்திர ஜான்சன் ஆராய்ந்த கிறித்தவக் காப்பியங்களுக்குள் நுழைந்தால், நாம் எதிர்பார்த்ததை விடப் பெரிய ஒரு தாவர உலகம் திறக்கிறது. அது வெறும் மரங்களின் பட்டியல் அல்ல; விதையிலிருந்து கனி வரை மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு பசுமையான மொழி.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்கள் மேற்கத்திய மதக் கதைகளைத் தமிழில் சொல்லிய நூல்கள் மட்டுமல்ல. அவை தமிழ்மொழியின் கற்பனைக்குள் நுழைந்து தங்களுக்கான புதிய நிலப்பரப்பை உருவாக்கியவை. அதனால் விவிலிய உலகத்தின் தோட்டங்களும் மரங்களும் தமிழின் வயல்களோடும் பொழில்களோடும் சோலைகளோடும் கலக்கின்றன.

இதில் ஜான்சனின் ‘கிறித்தவக் காப்பியங்கள்’ முக்கியமான வழிகாட்டியாக இருக்கிறது. கிறித்தவக் காப்பியங்களைப் பற்றிய அவரது ஆய்வின் வழியாகச் சென்றால், காப்பியங்களின் கதை மட்டுமல்லாமல் அவற்றின் இயற்கைக் காட்சிகளும் நம் கவனத்திற்கு வருகின்றன.

மிக மேலோட்டமாகத்தான் பார்த்திருக்கிறேன். இனி விழா முடிந்து அவருடைய நூல்களை வாங்கி வந்து வாசித்து, மேலும் செறிவான கட்டுரை எழுதவேண்டும்.

சஹேலி!

 சிறுமியாக இருந்தபோதிலிருந்தே மருதாணி வைத்துக்கொள்வதில் பிரியமுண்டு.   வீட்டு முற்றத்தில் வளர்ந்த மருதாணிச் செடியிலிருந்து இளந்தளிர் இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, புளி, சர்க்கரை, கிராம்பு, எலுமிச்சைச் சாறு எல்லாம் சேர்த்து அரைத்து, இரவு முழுவதும் விரல்களில் தொப்பியும், உள்ளங்கையில் பெரிய வட்டமும் அதைச் சுற்றி சின்னச் சின்ன வட்டங்களுமாக  ’’இட்லி தோசை டிசைன்” என்று அழைக்கப்படும் அந்த எளிய வடிவம் மறுநாள் ரத்தசிவப்பில் கைகளை அழகாக்குவது ஒரு மாயம் போல் இருக்கும் எனக்கு. அம்மா சமயங்களில் உயிருடன் கட்டெறும்புகளையும் வைத்து அரைப்பதை கண்ணை பாதி மூடிக்கொண்டு பார்த்திருக்கிறேன்

 இப்போதும் மருதாணி வைத்துக்கொள்கிறேன் நிறம் மங்க மங்க தொடர்ந்து வைத்துக்கொள்வது வழக்கமாகி இருக்கிறது. மருதாணிச்சிவப்பு இல்லாத உள்ளங்கை எனக்கு வளையல் இல்லாத கை, கம்மல் இல்லாத காது போல ஒரு மூளியான உணர்வை கொடுக்கும்.

வீட்டுத்தோட்டத்தில்  மருதாணிச்செடி இருக்கிறது என்றாலும் பறித்து அரைக்க இப்போது நேரம் இருப்பதில்லை .  செயற்கை ஹென்னாக் குழம்புகளை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதனால்தான் ராஜஸ்தானிலிருந்து நேரடியாக வரவழைக்கும் சஹேலி (Saheli) இயற்கை மருதாணிப் பசையை இப்போது பயன்படுத்துகிறேன்.சஹேலி என்றால் தோழி என்று பொருள்  உருது மொழியில்.எத்தனை பொருத்தமான அழகுப்பெயர்.

சஹேலி மருதாணி தயாரிக்கப்படுவது ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சோஜத் (Sojat) பகுதியில் சோஜத் தான் உலகின் “மருதாணி நகரம்” என்றே அழைக்கப்படும் இடம். அங்குள்ள வறண்ட, வெப்பமான காலநிலையும் மணல் கலந்த களிமண்ணும் Lawsonia inermis தாவரத்தின் இலைகளில் லாசோன் (lawsone) என்ற இயற்கை நிறமியை அதிக அளவில் சேர்க்கின்றன. இதனால்தான் சோஜத் மருதாணி மற்ற பகுதிகளின் மருதாணியை விட அடர் நிறத்தையும் நீடித்த தன்மையையும் தருகிறது.  

ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய பாலைவனப் பகுதிகளில் மக்கள் கடும் வெப்பத்திற்கு நடைமுறை சிகிச்சையாக கை, கால்களில் மருதாணிக் குழம்பைப் பூசிக்கொண்டனர் — ஈரமான குழம்பு ஆவியாகும்போது ஏற்படும் குளிர்ச்சி, நவீன குளிரூட்டும் தொழில்நுட்பம் இல்லாத அக்காலத்தில் சிறிது நேர நிவாரணத்தை அளித்தது. காலப்போக்கில் இந்த நடைமுறைப் பயன்பாடு அலங்கார, சடங்கு, மங்கல அர்த்தங்களுடன் இணைந்தது, குறிப்பாக திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் . இப்பகுதியே  மருதாணித் தாவரத்தின் முதன்மையான வளரும் மண்டலமாக இருந்ததால், மருதாணி ஏராளமாகவும் மலிவாகவும் கிடைத்து, பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருக்கலாம்.

ராஜஸ்தான் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக இருந்ததால், அதன் மருதாணியும் (கை, கால்களில் நுணுக்கமான வடிவங்களை வரையும் மெஹந்தி கலைப் பாரம்பரியமும்) வர்த்தக வழிகள் மற்றும் திருமண உறவுகள் வழியாக வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், பின்னர் இதே போன்ற காலநிலை மற்றும் பண்பாட்டு சூழல் கொண்ட மத்திய கிழக்கிற்கும் பரவியது.

பாலி மாவட்டத்தில் உள்ள சோஜத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இப்போதும் 2026 ரிலும் இந்தியாவின் மொத்த மருதாணி உற்பத்தியில் தோராயமாக 80% வழங்குகின்றன, ( இது 90%க்கும் மேல் கூட இருக்கலாம்). இந்தியா உலக மருதாணி விநியோகத்தில் சுமார் 80% வழங்குவதால், சோஜத் ஒன்றே உலக மருதாணி வர்த்தகத்தின் பெரும்பகுதியை நிர்ணயிக்கிறது என்று கூட ச்சொல்லலாம்.

இதற்குக் காரணம் தாவரவியல் ரீதியானது, வர்த்தக ரீதியானது மட்டுமல்ல காலநிலை சார்ந்ததும் கூட. சோஜத்தின் அரை-வறண்ட காலநிலை, மணல் கலந்த களிமண், கடுமையான வறண்ட வெப்பம் (கோடையில் வெப்பநிலை அடிக்கடி 45°C கடக்கும்) ஆகியவை Lawsonia inermis என்னும் மருதாணிச்செடியின் வளர்ச்சிக்கு சிறந்த சூழலை உருவாக்குகின்றன. இந்த வறட்சியில் வளரும் தாவரங்கள் குளிர்ந்த அல்லது ஈரப்பதமான பகுதிகளில் வளரும் மருதாணியை விட கணிசமாக அதிக lawsone செறிவை உருவாக்குகின்றன — இதுவே அடர்ந்த, நீடித்த சாயத்திற்கு நேரடியாக வழிவகுக்கிறது

இந்த ஊரின் மருதாணிப் பொருளாதாரம் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது — சோஜத் ஒரு முழுமையான மருதாணி பதப்படுத்தல் சுற்றுச்சூழல் அமைப்பையும் கட்டியெழுப்பியுள்ளது: சுத்தம் செய்யும் யூனிட்டுகள், அரைக்கும் ஆலைகள், ஈரப்பத கட்டுப்பாட்டு பேக்கேஜிங் வசதிகள், தர சோதனை ஆய்வகங்கள், தரகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் அடர்ந்த வலையமைப்பு ஆகியவை UAE, சவூதி அரேபியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளின் வாங்குபவர்களை நேரடியாக சோஜத்துடன் இணைக்கின்றன .

சோஜத்  60 ஆயிரம் மக்கள் தொகை கொண்டிருக்கும் ஒரு சிறிய நகரம்தான் .ஒப்பீட்டளவில் இந்தியாவின் பல மாவட்டத் தலைநகரங்களைக் காட்டிலும் மக்கள்தொகை குறைவு. ஆனால் இந்த ஒரு சிறு நகரமும் அதைச் சுற்றியுள்ள பாலி மாவட்டப் பகுதியும் இணைந்து இந்தியாவின் மொத்த மருதாணி உற்பத்தியில் 80%-90% வரை வழங்குகின்றன,  

சஹேலி பசையின் தன்மைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன . எந்த ரசாயனமும் சேர்க்கப்படாமல், காபிக்கொட்டைச்சாறு மட்டும் சேர்ககப்பட்டு மிக மென்மையாகக் குழைக்கப்பட்டு, தரமான பாக்கெட்டுகளில் கிடைக்கிறது; குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பல மாதங்கள் பயன்படுத்தலாம். ஒரு மணி நேரத்திலேயே கைகள் ரத்தச்சிவப்பு நிறத்தில் சிவந்துவிடும் என்பது, இதன் லாசோன் செறிவு உண்மையிலேயே அதிகம் என்பதற்குச் சான்று. காய்ந்த பிறகு அதைச் சுரண்டி எடுத்தவுடன் தண்ணீரில் கழுவாமல், நீலகிரி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவினால், நிறம் இன்னும் நீண்ட நாட்களுக்கு அடர்த்தியாக நிலைத்திருக்கும் என்பது என் அனுபவம்.

இந்த “லாசோன்” என்ற வேதிப் பெயரின் மருதாணிச்செடியின் பேரினப்பெயரின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் இன்று தாவரவியல் வகைப்பாட்டு முறையின் தந்தை என்று போற்றப்படும் கார்ல் லின்னேயஸ்   ஒரு ஏழைப் போதகரின் மகனாக ஸ்வீடனின் ஸ்மாலண்டு எனும் வறிய பிராந்தியத்தில் பிறந்தார். இளமையில் அவரிடம் பணமே இல்லை; பல்கலைக்கழகக் காலத்தில் ஆசிரியர்களின் நூலகங்களையும் தயாள மனப்பான்மையையும் நம்பியே கல்வி கற்றார். 1735-ல் ஹாலந்துக்குச் சென்று தன் புரட்சிகரமான Systema Naturae கையெழுத்துப் பிரதியை வெளியிட முயன்றபோதும், அவரிடம் அச்சிடச் செலவு செய்யப் பணம் இல்லை.

அப்போது அவருக்கு உதவிய இருவரில் ஒருவர் — ஐசாக் லாசன் (Isaac Lawson) என்ற ஸ்காட்லாந்து மருத்துவர். மரபுரிமையாகப் பெற்ற செல்வத்தைக் கொண்டிருந்த லாசன், தன் நண்பர் க்ரோனோவியஸுடன் இணைந்து, லின்னேயஸின் அந்த நூலின் அச்சிடல் செலவை ஏற்றுக்கொண்டார். அந்த ஒரு உதவியே, இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தாவர வகைப்பாட்டு முறையை சாத்தியமாக்கியது.

நன்றியுணர்வுடன், லின்னேயஸ் தன் நண்பரின் பெயரை என்றென்றைக்கும் நினைவுகூரும் வகையில், கிழக்கத்திய பாலைவனங்களில் காணப்பட்ட ஒரு தாவரத்திற்கு — நம் மருதாணிக்கு — Lawsonia என்று பெயரிட்டார். அந்தத் தாவரத்தில் காணப்படும் சிவப்பு-ஆரஞ்சு நிறமியும் அதே பெயரிலிருந்தே lawsone (லாசோன்) என்று அழைக்கப்பட்டது.

“Lawson” என்பது ஓர் ஆங்கில/ஸ்காட்டிஷ் தந்தைவழிப் பெயர் (patronymic surname) , இதை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

  • Law — “Lawrence” (Laurence) என்ற முதற்பெயரின் இடைக்கால சுருக்க வடிவம். “Lawrence” இலத்தீன் “Laurentius” என்பதிலிருந்து பிறந்தது — அதாவது “Laurus” (லாரல் மரம்/இலை) என்பதுடன் தொடர்புடையது; மூலப் பொருள் “லாரல் மரத்துடன் தொடர்புடையவர்” என்பதே.
  • -son — “மகன்” எனப் பொருள்படும்.

எனவே “Lawson” = “லா(ரன்ஸின்) மகன்”, அதாவது “லாரல் மரத்துடன் தொடர்புடையவனின் மகன்” எனும் நீண்ட வழிமுறையில் ஒரு மரத்தின் பெயரிலிருந்தே இப்பெயர் தோன்றியுள்ளது — Johnson (John-ன் மகன்), Robertson (Robert-ன் மகன்) போன்ற அதே அமைப்பு முறையில் உருவான ஒரு பொதுவான ஸ்காட்டிஷ் குடும்பப்பெயர்தான் இது.

 ஒரு மரத்தின் (லாரல்) பெயரிலிருந்து தொடங்கிய குடும்பப்பெயர், தலைமுறை தலைமுறையாகக் கடந்து, ஐசாக் லாசன் என்ற மனிதர் வழியாக, இறுதியில் இன்னொரு தாவரத்தின் மருதாணியின் , விஞ்ஞானப் பெயராகவே மாறியிருப்பது  எத்தனை அழகு?.

உள்ளங்கையில் மருதாணி வைத்துக்கொளும் போதெல்லாம், அதன் பின்னணியில் இருக்கும் இந்தச் சங்கிலியை நினைத்துப் பார்க்கிறேன் — சோஜத்தின் வறண்ட மண், ஒரு ஏழை ஸ்வீடிஷ் இளைஞனுக்கு உதவிய செல்வந்த மருத்துவரின் நட்பு, ஒரு மரத்தின் பெயரிலிருந்து பிறந்த குடும்பப்பெயர், இறுதியில் என் உள்ளங்கையில் பதிந்த சிவப்பு நிறம்.

ஒரு சிறிய தாவரம், இத்தனை நூற்றாண்டுகளையும் கண்டங்கள் கடந்த கதைகளையும் எடுத்துக்கொண்டு, நம் கையில் வந்து செக்கச்செவேலெனச் சேர்ந்திருக்கிறது!

இயற்கையான, தூய்மையான மருதாணியைப் பயன்படுத்துவது வெறும் அழகுக்காக மட்டுமல்ல — அது ஒரு பாரம்பரியத்தைத் தொடர்ச்சியும் கூடத்தான். சஹேலி மருதாணியை நான் அனைவருக்கும் மனப்பூர்வமாகப் பரிந்துரைக்கிறேன்.

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑