சமீப காலமாகவே எனக்குக் கிறித்தவ இலக்கியங்களில் கொஞ்சம் ஆர்வம் உண்டாயிருக்கிறது. இதற்கு என் நண்பர் பனை காட்சனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு அவரும் நானும் பேசிக் கொண்டிருக்கையில், விவிலியத்தில் இடம்பெற்றிருக்கும் தாவரங்களைப் பட்டியலிட்டு ஒரு கட்டுரை எழுதலாம் என்ற யோசனை வந்தது. ஆனால், அது யோசனை என்ற அளவிலேயே நின்றுவிட்டது.

இந்த வருடத் தொடக்கத்தில் மும்பை மெதடிஸ்ட் தேவாலயத்தில் உரையாற்றும்படி காட்சனிடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஏற்றுக்கொண்டேன். காட்சன் எங்களது கல்லூரிக்கு வந்தபோது, அந்த நிகழ்வைக் குறித்து நான் தயங்கித் தயங்கி ஜெ விற்கு எழுதிய கடிதம் தான் அவரது தளத்தில் வெளியான எனது முதல் கடிதம். அதன் பிறகுதான் இத்தனை எழுதுகிறேன். எனவே, காட்சன் அழைத்தால் தட்டவே முடியாது. மேலும், சரண் அந்த வாரம்தான் மும்பையில் பணியில் இணைந்திருந்தான். அவனுடைய வீட்டிற்கும் போய்விட்டு அப்படியே இந்த நிகழ்வையும் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

விவிலியத்தில் இருக்கும் தாவரங்கள், மெதடிஸ்ட் கிறித்தவப் பிரிவை உருவாக்கிய ஜான் வெஸ்லே எழுதிய மூலிகைத் தாவர நூலிரண்டு, தேவாலயங்களில் அளிக்கப்படும் திராட்சரசத்தின் பொருட்டுத் திராட்சைக் கொடிகள் கிறித்தவ போதகர்களால் உலகெங்கும் பரவியது ஆகிய செய்திகளை மையமாகக் கொண்டு அந்த உரையை அமைத்திருந்தேன். எனது மிக நல்ல உரைகளில் மும்பை உரையும் ஒன்று.

“Consider the lilies” என்று கிறிஸ்து ஏன் சொன்னார்? எந்த லில்லிகளைச் சொன்னார்? விவிலியத்தில் தேன் என்று சொல்லப்படுவது தேனீக்களிடமிருந்து பெறப்பட்டதா அல்லது கனிந்த பேரீச்சைகளின் சாறா? ‘ஆமென்’ என்பதன் பொருள் என்ன? ஏன் தேவன் நானே உண்மையான திராட்சைக்கொடி நீங்கள் அதன் கிளைகள் என்றார்?போன்றவற்றைக்கொண்டு அந்த உரையை அமைத்திருந்தேன். அந்த உரை எனக்கும் மிக நிறைவளித்தது.

லக்கி குளோவர்’ குறித்தும், அதற்கும் கிறிஸ்தவத்திற்குமான தொடர்பை மையமாகக் கொண்டும் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டேன். தற்போது ‘மிஷன் கிரேப்ஸ்’ குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன், .

இப்போது சொல்வனத்தில் வந்து கொண்டிருக்கும்கொலம்பஸ் தொடரிலும், அவரது முதல் கப்பற்பயணத்தின் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே அன்றாடம் காலையும் மாலையும் மூன்று கப்பல்களிலும் கீழ்வரும் கிறித்தவப் பிரார்த்தனைப் பாடல்களும் கீர்த்தனைகளும் பாடப்பட்டதை எழுதியிருந்தேன்.

  • சால்வே ரெஜினா (Salve Regina – வாழ்க அரசியே): கொலம்பஸின் கப்பல்களில் பாடப்பட்ட மிக முக்கியமான பாடல்.
  • தே தேவும் (Te Deum): கடவுளுக்கு நன்றி செலுத்தும் திருப்பாடல்.
  • பேட்டர் நோஸ்டர் (Pater Noster): எங்கள் பரமபிதாவே.
  • ஆவே மரியா (Ave Maria): அருள்நிறை மரியே.
  • க்ரேதோ (Credo): விசுவாச அறிக்கை.

அந்தக் காலத்துக் கத்தோலிக்கப் பாரம்பரியத்தின்படி, இந்தப் பாடல்கள் அனைத்தும் லத்தீன் மொழியிலேயே பாடப்பட்டன. இந்தக் கீர்த்தனைப் பாடல்கள் தன்னை அந்த அபாய காலங்களில் மிகவும் அமைதிப்படுத்தியதாகக் கொலம்பஸ் தனது நாட்குறிப்பிலும் எழுதியிருக்கிறார்.

எனவே, கிறித்தவ இலக்கியங்கள் மற்றும் கீர்த்தனைகளில் எனக்கும் கொஞ்சமே கொஞ்சம் பரிச்சயம் உண்டாயிருக்கிறது.

இந்த வருடம் பெரியசாமி தூரன் விருது தமிழ் கிறித்தவ இலக்கிய ஆய்வாளர் திரு. ஞான சந்திர ஜான்சனுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே, கிடைத்தவரை அவரது ஆய்வுகளையும் நூல் விமர்சனங்களையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

‘குருகு’ இதழின் ஞான சந்திர ஜான்சன் சிறப்பிதழும் இன்று வெளியானது; அதிலும் அவரது கிறித்தவத் தமிழ் இலக்கியங்கள் குறித்த பலரின் கட்டுரைகளை வாசித்தேன். பலகோணங்களில் ஜான்சன் ஆய்வுகள் செய்திருக்கிறார். எனினும், அந்த இலக்கியங்களில் இருக்கும் தாவரங்களைப் பற்றி அவர் ஆவணப்படுத்தியிருக்கிறாரா அல்லது குறிப்பாவாவது எழுதியிருக்கிறாரா என்று தேடினேன்; ஆனால் இல்லை.

இன்று திரு. ஞான சந்திர ஜான்சன் அவர்களின் பிறந்தநாள் எனவே அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லிவிட்டு இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டேன். அவர் யோசித்துவிட்டு, “இல்லை, தாவரங்களை நான் எங்குமே கவனித்துக் குறிப்பிடவில்லை” என்றார்.

“ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து இறக்காவிட்டால் அது தனியாகவே இருக்கும்; இறந்தால் மிகுந்த கனியைத் தரும்” என்ற இயேசுவின் உருவகம், யோவான் நற்செய்தியில் வரும் மிக அழகான தாவர உருவகங்களில் ஒன்று. இங்கு ஒரு விதையின் இயற்கையான வாழ்க்கைச் சுழற்சி,மண்ணில் விழுதல், மறைதல், முளைத்தல், வளர்தல், கனியளித்தல் என்பது ஒரு மனிதனின் ஆன்மிக வாழ்க்கையையும், இறுதியில் இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விளக்கும் மொழியாகிறது.

தமிழில் கிறித்தவ இலக்கியம் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. காப்பிய அமைப்பு, சமயக் கருத்து, இறையியல், மொழிநடை, இலக்கிய உத்திகள், வரலாற்றுப் பின்னணி, கவிஞர்களின் வாழ்க்கை, விவிலியத் தாக்கம் போன்றவை ஆராயப்பட்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளுக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்களில் யோ. ஞான சந்திர ஜான்சன் குறிப்பிடத்தக்கவர். கிறித்தவத் தமிழ் இலக்கியம், கிறித்தவக் கீர்த்தனைகள், கிறித்தவக் காப்பியங்கள், கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் எனப் பரந்த பரப்பில் அவர் தொடர்ந்து ஆய்வு செய்து வந்துள்ளார். குறிப்பாக ‘கிறித்தவக் காப்பியங்கள்’ என்ற அவரது ஆய்வு, கிறித்தவக் காப்பிய உலகை ஒருங்கிணைத்துப் பார்க்கும் முக்கியமான முயற்சியாகும்.

ஆனால் சமய இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகளில் பொதுவாக ஒரு சிறிய இடைவெளி இருக்கிறது. அந்தப் படைப்புகளுக்குள் வாழும் தாவரங்கள் பெரும்பாலும் தனியாகக் கவனிக்கப்படுவதில்லை. ஒரு மலர் வந்தால் அது அழகுக்கான உவமை என்று பதிவு செய்யப்படுகிறது; ஒரு மரம் வந்தால் அது ஒரு காட்சியின் பகுதியாகக் கடந்து செல்கிறது; ஒரு கனி வந்தாலும் அப்படித்தான். ஆனால் அந்த மலர் எந்தத் தாவரம்? அந்த மரம் தமிழ்ச் சூழலின் எந்த மரபைச் சேர்ந்தது? கனி உருவாகும் தாவரவியல் நிகழ்வு என்ன? விதை ஏன் ஒரு புதிய வாழ்க்கையின் உருவகமாகிறது? மலர்–வண்டு உறவு ஏன் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வருகிறது? போன்ற கேள்விகள் பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை.

தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்பது வெறும் காட்சிப் பின்னணி அல்ல; அது மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் உதவும் ஒரு இயற்கை மொழியாகவும் இருக்கிறது. காடு, மரம், செடி, கொடி, மலர், கனி, விதை, மண், மழை, வயல், சோலை, தோட்டம் போன்ற இயற்கைக் கூறுகள் மனித உணர்வுகள், அறம், ஆன்மிகம், இறைநம்பிக்கை, பிறப்பு, வளர்ச்சி, அழிவு, மீட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் கிறித்தவ இறையியலில், மீட்பின் வரலாறு ஏதேன் தோட்டத்தில்தானே முளைவிட்டது? எனவே, திரு. யோ. ஞான சந்திர ஜான்சன் அவர்கள் ஆய்வு செய்த கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களிலும் பிற இலக்கியங்களிலுமாக என் தேடலைத் தொடர்ந்தேன்.

சமீபத்தில் கோவை புத்தகத் திருவிழாவில் “புறத்திணையில் மலர்கள்” எனும் உரையாற்றினேன். ஒரு கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வு மாணவிகளும் சிறு தயாரிப்போடு வந்திருந்தார்கள். ஆனால், என்னென்ன மலர்கள் இருக்கின்றன என்று மட்டுமே சொன்னார்களே தவிர, ஏன் வெட்சி, ஆநிரை கவர்தலுக்கு ஏன் வாகையை வெற்றிக்காகச் சூடினார்கள் என்பதை ஒருவர் கூட விளக்கவில்லை; அவர்களுக்குத் தெரியவும் இல்லை. நான் ஒவ்வொரு மலரையும் விளக்கி, ஏன் அது அந்த குறிப்பிட்ட பொருளில் அங்கு வருகிறது என்று கூறினேன். சொல்லப்போனால், ஒரு வாரமாக அதைக் குறித்துத் தீவிரமாகப் படித்தறிந்த பிறகே உரையாற்றச் சென்றேன்.

தமிழ் இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் மனிதனுக்கும் தாவரங்களுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. சங்க இலக்கியத்தின் திணைக் கோட்பாட்டிலிருந்து பக்தி இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் வரை தாவரங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

திருவாசக வாசிப்பின் போது:

“புற்றேர் அரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்

கற்றேர் குழவியின் தீம்பால் உற்றே அமிழ்தெனினும்

நற்றேர் நச்சுற்ற மாம்பழம் போன்மிளிரும் உலகை

அற்றேனென்று அஞ்சாமை கண்டு அஞ்சினேனே.”

இப்பாடலில் வரும் “நச்சு மாம்பழம்” என்னவென்று ஆராய்ந்தேன். அது ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் கடற்கரை மரமான செரிபரா மாங்காஸ் (Cerbera manghas, commonly known as the sea mango) என்னும் மரமாகத்தான் இருக்க வேண்டும். வேறு நச்சு மாம்பழங்கள் ஏதும் எனக்குத் தெரிந்தவரை இல்லை. இப்படி ஆய்வு செய்யத் தொடங்கினால் மிக நல்ல புதிய விஷயங்கள் தெரியவருகின்றன.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் இந்தத் தாவர உலகம் இன்னொரு பரிமாணத்தைப் பெறுகிறது. இங்கு தாவரங்கள் தமிழ் இயற்கை மரபுடனும் விவிலியச் சிந்தனையுடனும் சந்திக்கின்றன.

முனைவர் யோ. ஞான சந்திர ஜான்சன் அவர்களின் ‘கிறித்தவக் காப்பியங்கள்’ நூல், முப்பது கிறித்தவக் காப்பியங்களை விரிவாக அறிமுகப்படுத்தி ஆய்வு செய்கிறது. அவை திருமறை வரலாற்றுக் காப்பியங்கள், கிறிஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள், திருமறை மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள், திருமறை சாரா மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள் என உள்ளடக்க அடிப்படையிலும்; தழுவல் மற்றும் மொழிபெயர்ப்புக் காப்பியங்கள் எனப் படைப்புத் தன்மை அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றுள் முழுத் தாவரங்களாக மரம், செடி, கொடி, புல், பயிர் போன்றவைகளும்; அவை வளரும் சூழல்களான சோலை, தோட்டம், நந்தவனம், வயல், காடு, புல்வெளி ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும் வேர், தண்டு, கிளை, இலை, தளிர், அரும்பு, மலர், கனி, விதை போன்ற தாவர உறுப்புகளும்; விதைத்தல், முளைத்தல், வளர்தல், மலர்தல், கனிதல், வாடுதல், உதிர்தல், அறுவடை போன்ற தாவரம் சார்ந்த செயல்பாடுகளும் உள்ளன. இவை நேரடி இயற்கை வருணனையாக, உவமையாக, உருவகமாக, குறியீடாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் மலர் பல இடங்களில் குறியீடாக அமைகிறது. குறிப்பாகத் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு காவியம், திருத்தொண்டர் காப்பியம் போன்ற காப்பியங்களில் தாவரங்கள் இயற்கைக் காட்சிகளாக மட்டுமல்லாமல் அழகு, தூய்மை, நம்பிக்கை, ஆன்மிக வளர்ச்சி, நற்செயல், பயன், நிலையாமை, மீட்பு ஆகிய கருத்துகளின் உருவகங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

மலர்மாலை, மலர்க்காணிக்கை, மலரால் அலங்கரித்தல் போன்ற செயல்களும் தாவரத்தைச் கிறிஸ்துவச் சமய அனுபவத்துடன் இணைக்கின்றன.

வீரமாமுனிவரின் தேம்பாவணி, கிறித்தவத் தமிழ்க் காப்பிய மரபின் மிக முக்கியமான படைப்பு. இது மூன்று காண்டங்களையும் 36 படலங்களையும் 3,615 பாடல்களையும் கொண்ட பெருங்காப்பியம்.

காட்சிப்படலத்தில், “கொழுந்து உறும்கு ளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும்…” என்று முல்லை குறிப்பிடப்படுகிறது. இங்கு “முல்லை” என்பது வெறும் மலர் அல்ல. அது முல்லை நிலம், இடையர், கால்நடை, இயற்கை, குழந்தை இயேசுவைச் சந்தித்தல் ஆகியவற்றை இணைக்கும் பண்பாட்டு அடையாளமாகிறது. இப்படி இந்தக் கிறிஸ்தவக் கதை தமிழின் நிலவியல் மொழிக்குள் மாற்றப்படுகிறது.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் இந்த மரபு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. மேற்கத்திய விவிலிய உலகில் காணப்படும் விதை, திராட்சைக் கொடி, அத்திமரம், ஆலிவ் மரம், அத்திப்பழம், தோட்டம் போன்ற உருவகங்கள் தமிழ்க் காப்பியப் புலவர்களின் கைகளில் தமிழின் இயற்கை மொழியுடன் கலக்கின்றன. அதே நேரத்தில், தமிழ் இலக்கிய வாசகர்களுக்குப் பரிச்சயமான முல்லை, வேங்கை, தாமரை, சோலை, வயல், நந்தவனம் போன்ற இயற்கைக் கூறுகளும் கிறித்தவக் கதையுலகிற்குள் நுழைகின்றன.

அதே காட்சிப்படலத்தில், “மாலை மேவு வேங்கை பற்றி வண்டு…” என்று வேங்கை மலரும் வண்டும் குறிப்பிடப்படுகின்றன.

தேம்பாவணியில் தாமரை உருவகம் கண்களின் அழகைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. காட்சிப்படலத்தில் குழந்தையின் பார்வை தாமரை மலருடன் ஒப்பிடப்படுகிறது:

“விண்மீன் ஒக்கும் விழிவிளங்கும்; வேதம் நாறக்

கண்மீன் உற்ற தாமரைபோல் கமழும் வாயான்;

தண்மீன் தேன்சொல் சுவைஒழிக்கும்; தையல் காட்டும்

வான்மீன் பூத்த முகம்ஒக்கும் வடிவின் மேலோன்.”

எச். ஏ. கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் தாவர உருவகங்களை ஏராளமாகக் குறிப்பிடுகிறது. மலர், மலர்முகை, தேன், வனம், கற்பகமரம், புல், தரு/மரம், கனி, விதை, தளிர், கிளை, சோலை, நந்தவனம், கொடி, மரக்கிளை, வயல்/பயிர் எனப் பல தாவரச் சொற்கள் தொடர்ச்சியாக வருகின்றன.

“வண்டு இனம் பயிலச் செய்ய மலர் முகை அவிழ்ந்து செந்தேன்…” என்று வரும் காட்சி குறிப்பிடத்தக்கது. இரட்சணிய யாத்திரிக உரைப்பகுதியில் “புனித ஜீவ கற்பக மலர்”, “கற்பகப் பொதும்பர்” போன்ற சொற்கள் வருகின்றன. இங்கு ‘கற்பகம்’ என்பதை ஒரு குறிப்பிட்ட தாவரமல்ல. அது ஒரு புராணக் கற்பனை மரம். கிறித்தவக் காப்பியத்தில் அது இறை அருளின் வளம் என்ற புதிய பொருளைப் பெறுகிறது.

மேலும் இரட்சணிய யாத்திரிக உரையில் “விதி”, “விதை”, “முளைத்த” போன்ற சொற்கள் தாவர உருவகத்துடன் தொடர்புடைய பகுதிகளில் வருகின்றன. குறிப்பாக “முளைத்த இச் சீவ கங்கை” போன்ற தொடர்களைச் சொல்லலாம்

கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ 1982-இல் வெளியானது. இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பாடல் வடிவில் எடுத்துரைக்கும் காப்பியமாகும். தாவர உருவகங்களைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது.

இதில் “கனி கொடு, இல்லையேல் வரும் கேடு” என்ற தலைப்பின் கீழ் அத்திமர உருவகம் வருகிறது. மரம் வேர்விட்டும் கிளைவிட்டும் வளர்கிறது; ஆனால் கனி தர மறுக்கிறது. ஒரு மரம் உயரமாக வளரலாம், கிளைகள் பரவலாம், வேர் வலிமையாக இருக்கலாம்; ஆனால் கனி தராவிட்டால் அதன் வளர்ச்சி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. “வாழ்வது மட்டும் போதாது; வாழ்க்கை பிறருக்குப் பயனளிக்க வேண்டும்” என்ற அறக்கருத்தாக இது மாறுகிறது. கிறித்தவ விவிலிய மரபில் அத்திமரம் முக்கியமான குறியீட்டு மரமாகும்.

இதே அத்திமர உருவகம் இரட்சணிய யாத்திரிகத்திலும் மிகத் தெளிவாக வருகிறது. ஒரு மரம் பெரிதாக வளர்ந்திருந்தும் கனி தராத நிலை குறித்து, “பெரு மரம் ஆன போதும் கனி கொடாப் பெற்றி…” என்று குறிப்பிடுகிறது. தொடர்ந்து அந்த மரத்திற்கு இன்னும் ஒரு கால அவகாசம் வழங்கி, உரமிட்டு, பராமரித்து, கனி தருகிறதா என்று பார்க்கும் காட்சியும் வருகிறது.

இது தாவரவியல் ரீதியாகவும் சுவாரஸ்யமான உருவகம். மரம் கனி தராததற்கு வயது, ஊட்டச்சத்து குறைபாடு, நீர் பற்றாக்குறை, ஒளி, மலர்ச்சி இல்லாமை, மகரந்தச் சேர்க்கை, நோய், சூழல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் காப்பியம் இதனை மனித ஆன்மிக வாழ்க்கையின் மொழியாக மாற்றுகிறது: வாய்ப்பு → திருத்தம் → கனியளித்தல்’ என்ற கருத்து உருவாகிறது.

இரட்சணிய யாத்திரிக உரையில், “மன்னு நந்தனவனத்து எழில் மரக்கிளை பின்னியும் வல்லிகள் பிணைத்தும்…” என்று வரும் பகுதி தாவரக் காட்சியின் சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு மரக்கிளை, வல்லி, தழைக்கொடி, மணம், தோட்டம் எனப் பல விஷயங்கள் ஒன்றாக வருகின்றன. ஒரு தோட்டச் சூழல் இங்கு வர்ணிக்கப்படுகிறது.

சூ. இன்னாசியின் ‘திருத்தொண்டர் காப்பியம்’ 4,135 பாடல்களைக் கொண்டது; நாற்பது படலங்களாக நான்கு காண்டங்களில் அமைந்துள்ளது. இதில் நாட்டுப்படலம், பொழிலுறு படலம், இயற்கை வருணனைகள், உவமைகள் போன்றவை இடம்பெறுகின்றன.

இந்தக் காப்பியத்தில் தேவசகாயம் பிள்ளையின் ஞானஸ்நான மாற்றத்தை விளக்கும்போது, “தருவழிந் ததன்விதை மறுதரு ஆம்போல் தாய்வழிப் பாவம் அழியும் புத்துயிர்…” என்றிருக்கிறது.

ஒரு மரம் பட்டுப்போய்/அழிந்து போனாலும், அதிலிருந்து விழும் விதையானது மீண்டும் முளைத்து ஒரு புதிய மரமாக (மறுதரு) உருவாகிறது. அதுபோலவே, மனிதன் பிறக்கும்போதே தாயின் வழியே (முன்னோர்கள் வழியே) தொடரும் ஜென்மப் பாவம் என்ற நிலை இருந்தாலும், இறைவனின் அருளாலும் திருமுழுக்கினாலும் அந்தப் பாவம் முற்றிலும் அழிந்து, மனிதன் ஆன்மீக ரீதியாக ஒரு “புதிய உயிராக” மாறுகிறான்.

மேலும் திருத்தொண்டர் காப்பியம் தேவசகாயம் பிள்ளை துன்புறுத்தப்பட்ட நிகழ்வை வருணிக்கும்போது, “நிலைகுலைய எருக்கலையால் நெடியமாலை சூடினார்கள்…” என்று கூறுகிறது. இங்கு எருக்கலையின் தாவரவியல் பண்பை விட, அவமானத்தின் அடையாளமாக இலைமாலை சூட்டுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு இலக்கியத்தை, காப்பியத்தைப் படிக்கும்போது நாம் பொதுவாகக் கதாநாயகனை அல்லது நாயகியை, அவர் எங்கு பிறந்தார், எங்கு சென்றார், யாரைச் சந்தித்தார், என்ன செய்தார் என்று பார்க்கிறோம். கவிஞன் கட்டியிருக்கும் உலகத்துக்குள் நுழைகிறோம்; ஆனால் அந்த உலகில் நம்மோடு கூடவே மரங்களையும் செடிகளையும் கவனிப்பதில்லை.

அந்தக் குழந்தையின் அருகில் எந்த மலர் மலர்கிறது? அந்தப் பாதையின் ஓரத்தில் என்ன மரம் நிற்கிறது? எந்தக் கனியைப் பற்றிக் கவிஞன் சொல்கிறான்? விதை ஏன் உருவகமாகிறது? ஒரு மரம் ஏன் கனி தர வேண்டும்? மலர் எப்போது அழகாக இருக்கிறது; எப்போது அவமானத்தின் அடையாளமாகிறது?

இந்தக் கேள்விகளோடு யோ. ஞான சந்திர ஜான்சன் ஆராய்ந்த கிறித்தவக் காப்பியங்களுக்குள் நுழைந்தால், நாம் எதிர்பார்த்ததை விடப் பெரிய ஒரு தாவர உலகம் திறக்கிறது. அது வெறும் மரங்களின் பட்டியல் அல்ல; விதையிலிருந்து கனி வரை மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு பசுமையான மொழி.

கிறித்தவத் தமிழ்க் காப்பியங்கள் மேற்கத்திய மதக் கதைகளைத் தமிழில் சொல்லிய நூல்கள் மட்டுமல்ல. அவை தமிழ்மொழியின் கற்பனைக்குள் நுழைந்து தங்களுக்கான புதிய நிலப்பரப்பை உருவாக்கியவை. அதனால் விவிலிய உலகத்தின் தோட்டங்களும் மரங்களும் தமிழின் வயல்களோடும் பொழில்களோடும் சோலைகளோடும் கலக்கின்றன.

இதில் ஜான்சனின் ‘கிறித்தவக் காப்பியங்கள்’ முக்கியமான வழிகாட்டியாக இருக்கிறது. கிறித்தவக் காப்பியங்களைப் பற்றிய அவரது ஆய்வின் வழியாகச் சென்றால், காப்பியங்களின் கதை மட்டுமல்லாமல் அவற்றின் இயற்கைக் காட்சிகளும் நம் கவனத்திற்கு வருகின்றன.

மிக மேலோட்டமாகத்தான் பார்த்திருக்கிறேன். இனி விழா முடிந்து அவருடைய நூல்களை வாங்கி வந்து வாசித்து, மேலும் செறிவான கட்டுரை எழுதவேண்டும்.