லோகமாதேவியின் பதிவுகள்

Month: September 2026

அக்கம் பக்கம்!

இந்த கிராமத்துக்கு வீடுகட்டி குடிவருகையில், வீட்டில் இருப்பவர்கள் நகரமயமாக்கலுக்கு எதிரான என் போக்கை வன்மையாகக் கண்டித்தாலும், எனக்குக் கிராமத்துச் சூழலிலும், கிராம மக்களின் மனப்பாங்கிலும் பெரிய நம்பிக்கை இருந்ததால் பிடிவாதமாக வந்தேன். ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை; எனக்கு இங்கே காலூன்றுவதற்கே பெரும்பாடாக இருந்தது. கல்லூரியில் அரசுப்பணியில் அப்போதுதான் இணைந்திருந்தேன். புரொபேஷனரி காலத்துக்கான எல்லா இக்கட்டுகளும் இருந்தன, எல்லாவற்றுக்கும் என்னைச்சார்ந்திருந்த இரு சிறு பிள்ளைகள் இருந்ததோடு, உடல்நிலையும் சீர்கெட்டிருந்தது , நிதிநிலைமையும் படு பாதாளத்தில்; எனவே இவற்றோடு போராடியதால் வேறு எதையும் கவனிக்கவில்லை.

பிற்பாடுதான் ஒவ்வொன்றாகக் கவனித்தேன். நான் நினைத்ததுபோல் ஊர்க்காரர்கள் எல்லாம் வெள்ளந்தியானவர்கள் அல்ல; மேலும், கல்லூரி வேலைக்கு நான் செல்வது குறித்த புகைச்சலும் பரவலாக இருந்தது. ஒரு உதவி கூடக் கிடைக்காமல் அல்லாடிப்போனேன்.

அடிக்கடி கரண்ட் மெயினில் ஃபியூஸ் போய்விடும்; அதை எனக்குச் சரி செய்யத் தெரியாது. ஒவ்வொரு முறையும் அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் இபி அலுவலகம்போய் ஒருவரை கெஞ்சிக்கூத்தாடி கூட்டி வருவேன் ஒவ்வொரு முறையும் 100 /200 கொடுக்கவேண்டும். அந்த அலுவலகக்கிழ அதிகாரி ஒருவர் நள்ளிரவுகளில் போன் செய்யத் துவங்கினார். ஒருமுறை கூட அழைப்பை எடுக்கவில்லை எனினும் அங்கு போவதை நிறுத்தி   நான்கு ஃபியூஸ் கட்டைகளையே வயர்  போட்டு வாங்கி வைத்து, தேவைப்படுகையில் மாற்றிக்கொண்டேன். இப்படி எல்லாவற்றுக்கும் நானே என்னை மெல்ல மெல்ல  தகவமைத்துக் கொண்டேன்.

சின்ன சின்ன தொந்தரவுகளைச் சமாளித்தேன், பெரியவற்றை எதிர்கொண்டேன். ஆனால் மூவருமாக மகிழ்ந்திருந்தோம். 

அடுத்த வருடமே எதிரில் ஒரு சிறு வீடு கட்டிக் குடியிருந்தார்கள்; மகனும் மகளுமாக சிறு குடும்பம். அந்தக் குடும்பத் தலைவர் திங்கள் முதல் வெள்ளி வரை சமர்த்தாக இருப்பார்; சனிக்கிழமை உற்சாகபானம் ஏற்றிக்கொண்டு வருவார். பின்னர் மாலை தொடங்கி இரவு வரை கணவனும் மனைவியுமாக உரக்கக்  காது கூசும் பல வசவுகளுடன் கத்திக் கூச்சலிட்டு, சண்டையிடுவார்கள்.  பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தமே தெரியாது.

வெளியில் விளையாடும் சரண் தருணை அந்த பேச்செல்லாம் கேட்கவேண்டாம் என்பதற்காக’’ உள்ளே வாங்கடா” என்றால், தருண் “எல்லாம் கேட்டாச்சு கேட்டாச்சு இனி உள்ள வந்தா என்ன வராட்டி என்ன ” என்பான். சரண் உடனே உள்ளே வந்துவிடுவான். சமயத்தில் அவர் சனிக்கிழமை மாலைகளில் என் காரைக் கை காட்டி நிறுத்துவார், ஜன்னல் வழியே “என்ன சிவராஜ்’(பெயரை மாற்றி இருக்கிறேன்) என்று கேட்பேன். “நீங்க ரொம்ப நல்லவங்க டீச்சர்” என்று சான்றிதழ் தருவார். நான் மகிழ்ந்து வீடு திரும்புவேன் 

இவர் இப்படி என்றால்,இந்த வீட்டுக்குப் பின் வீதியில் இருக்கும் ஒரு அம்மாள் வெகு சுவாரஸ்யமானவர். அவர் இரண்டு மாபெரும் ஸ்பீக்கர்களை வைத்திருக்கிறார் — திருவிழாக்களில் வைத்திருப்பார்களே அதே மாதிரி. தினமும் அதிகாலையில் அதில் பாடல்கள் அலறும்.  பெரும்பாலும் எல் ஆர் ஈஸ்வரியம்மாதான்.  ‘’ஏசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே’’ தான் என் அலாரம். ஆனால் ஏசுவிடம் நான் எத்தனை மன்றாடியும் அந்த அம்மாளை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை

நான் உட்பட அந்தப் பகுதியில் யார் வீட்டிலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவோ, மேல்தொட்டியில் நீர் நிறைந்து வழியும் ஓசை கேட்டு மோட்டாரை நிறுத்தவோ, போன் வந்தால் கவனிக்கவோ — எதற்கும் முடியாத அளவுக்குச் சத்தமிருக்கும். பலமுறை பலர் எடுத்துச் சொல்லியும் பலனில்லை; ஒருவர் தாங்கமுடியாமல் காவல்துறையில் புகார் அளித்தும் ஒன்றும் நடக்கவில்லை.

அவர் எல்லா மத நம்பிக்கைகளையும் பின்பற்றுபவர் என்பதால் மாரியம்மன் பாடல்கள், அன்னை வேளாங்கண்ணி பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள் எல்லாம் ஒலிக்கும்.  அந்தப் பெண்ணிடம் ஊரில் பெரும்பாலும்  யாரும் பேசுவதில்லை என்பதால், அவர் உலகத்தோடு தொடர்பு கொள்வதே அதிக சத்தத்தில் ஒலிக்கும் பாடல்கள் மூலமும், எதிர்முனையில் யாருமில்லாமல் மணிக்கணக்காக அவர் உரக்கப் பேசும் அலைபேசி உரையாடல்கள் மூலமாகவும்தான்.

அவருக்கு வீட்டில் வேலை எல்லாம் ஒன்றுமில்லை; கணவர் பாத்திரம் துலக்கி, சமைத்து, துணி துவைத்து, காயப்போட்டு — எல்லா வேலையும் செய்துவிட்டு வேலைக்குச் செல்பவர். எனவே முழுநேரமும் அடுத்தவர்களைத் தொல்லைசெய்வதையே அந்த அம்மாள் செய்வார்.

ஆனால் ஒருநாள் அந்தக் கணவரை  கழுத்தோடு சட்டைக் காலரைப் பிடித்து வீட்டு வராண்டாவில் சுவரோடு சேர்த்து வைத்து, அடி நிமிர்த்தி ’’ஒழுங்காக இரு” என்று அவர் மிரட்டியபோது ’’ஆஹா இந்தம்மாவை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அடுத்த ஜென்மத்தில் மனைவியாக்க வேண்டும்’’ என்று எல்லாக் கடவுளிடமும் வேண்டிக்கொண்டேன்.

தீவிரமான attention seeking disorder உள்ளவர் என்று நான் புரிந்துவைத்திருக்கிறேன். அவர் வாழ்க்கையே மிகவும் நாடகீயமானது; எல்லாமே அதீதம்தான் அவருக்கு.

ஆகஸ்ட் துவங்கியதிலிருந்தே வேளாங்கண்ணி மாதா பாடல்கள் ஒலிக்கும். அதிலும் சினிமாப் பாட்டை கானா பக்திப் பாடலாக மாற்றியவை.

“அம்மாடி இதுதான் காதலா” பாடலை “மாதாவை வணங்கிட வாருங்க” என்று மாற்றிப் பாடலமைக்க எத்தனை நெஞ்சழுத்தம் வேண்டி இருந்திருக்கும்?

அடுத்த பாடல் “செம்பருத்தி செம்பருத்திப் பூவைப்போல பெண்ணொருத்தி” பாடலை “ஏத்தி வைச்ச மெழுவத்தி எரியுதம்மா  வூட்டைச் சுத்தி” என்று மாற்றியிருந்தார்கள். இவை இரண்டும் எப்போதும் ரிபீட் மோடில் ஒலிக்கும். எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது, எந்த இடத்தில் மீட்டர் இடிக்கும் என்று கூட.

மீட்டர் இடிப்பதைப் பற்றிச் சொல்லும்போது, சமீபத்தில் சிவகாசியில் நான் கலந்துகொண்ட ஒரு விழா நினைவுக்கு வருகிறது. அங்கு ஒரு கலைக்குழுவினர் பாடல்கள் இசைத்தார்கள். ஒருவர் அவரே இயற்றிய பாடலைப் பாடினார். “சிந்தனை செய் மனமே” பாடலை “தமிழை வளர்க்கணுமே” என்று எழுதிப் பாடினார்; துவக்கத்திலேயே மீட்டர் இடித்தது. தொடர்ந்து, “சிவகாமி மகனை ஷண்முகனை” வரிகளில்  இடித்ததோடு அல்லாமல், மீட்டர்  குப்புறப் புரண்டு துடித்துக் கதறியது.

அப்படித்தான் இந்த “மாதாவை வணங்கிட வாருங்க” அஹ அஹஹ அஹஹாஹா பாடலும் — முழுப் பாடலுமே வீட்டிலிருந்து கட்டுச்சோறு கட்டிப் புறப்பட்டு, ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்து, ஒவ்வொரு ஊராகக் கடந்து வேளாங்கண்ணி வந்துசேரும் ரன்னிங் கமெண்டரிதான் “வந்துட்டோம், வந்துட்டோம் நாகப்பட்டினத்துக்கு” என்பது போல. இது இன்றைக்கு நேற்றைக்கல்ல — இந்த வீட்டுக்கு வந்த காலத்திலிருந்தே நடப்பதுதான்.  ஷிஃப்ட்டில் வேலை செய்யும் கணவர் வீட்டிலிருக்கையில்… உலகநாயகனே!

யாருக்கேனும் பிறந்தநாள் என்றால் கேட்கவே வேண்டாம் — “பூவுக்குப் பிறந்த நாள்” தொடங்கி ஏராளமான கலெக்‌ஷன் எடுத்துவிடப்படும். மேல்மருவத்தூர் மாலை போடுவார்; அப்போது அந்த அம்மனின் ப்ரத்யேகப் பாடல்கள் ஒலிக்கும்.

கமல் மய்யம் துவங்கிய புதிதில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்ந்தது. வெறும் கமல் பாடல்கள் உச்ச ஸ்தாயியில்  இரவுபகலென ஒலித்தன  “கமலுக்கு இவர்தான் ஆலோசகர்” என்றும், “மய்யத்தின் பொறுப்பே தானென்றும்” உரக்கச் சொல்லிக்கொண்டே இருந்தார். வீட்டின் முகப்பில் கமலின் ஆள்உயரப் புகைப்படம் வைக்கப்பட்டபோது நானும் நம்பியே விட்டேன். “பொள்ளாச்சி தொகுதியில் இந்த அம்மாவைத்தான் வேட்பாளராக நிறுத்தப் போகிறார்; பிக்பாஸ் வீட்டில் சுவர்களின் வண்ணத்தைக்கூட இந்த அம்மாவிடம்தான் கமல் கேட்டுக்கொண்டார்; கமலின் பிரசார விஷயங்களை இவர்தான் தீர்மானிக்கிறார்” என்றெல்லாம் அடுத்தடுத்துக் கேட்கப் பிரமிப்பாயிருந்தது.

ஒரு ஆகஸ்ட் மாதத்தில் அவர் போனில் யாரிடமோ(?) சொல்லிக்கொண்டிருந்தார்: “நான் மஞ்சு வாரியரிட்டே சொல்லிட்டேன் — கரெக்டா காலையிலே 8 மணிக்கு மய்யம் ஆஃபிசுக்கு வரணும், இல்லாட்டி நாங்க வேற யாரையாவது  வச்சுகொடி ஏத்திருவோம் அப்புறமா நீங்க வருத்தப்படக்கூடாது ’’ என்று. அதிசயமான அதிசயமாயிருந்தது.

ஒருநாள் அவர் வீட்டுக்குக் கமல் வருகிறார் என்று ஒரே தடபுடலாக ஏற்பாடு நடந்தது. வீட்டருகில் இருந்த குப்பைகூளங்கள் சுத்தமாக்கப்பட்டு. சாலையின் துவக்கத்தில் செக்போஸ்ட் கம்பம் நடப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் கமல்சாரைப் பார்த்துவிடலாம் என்று ஆவலுடன் கொஞ்சம் நேரமே கல்லூரியிலிருந்து வந்து காத்திருந்தேன்.

 அந்த அம்மாளின் பெண் சரணை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்ப்பாள் — ஒருவேளை அது செட் ஆகி,  கல்யாணம் வரைக்கும் வந்தேவிட்டால் எப்படியும் கமல் கல்யாணத்துக்கு வருவார்,  சலங்கைஒலி கமலைநேரில் பார்த்துவிடலாம் என்று ஒரு  நானும் மனதில் ஒரு காதல்கோட்டை கட்டியிருந்தேன். ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை, அன்றும் என்றும் கமல் அந்த வீட்டுக்கு வரவே இல்லை. அவர் கடும் மனச்சிதைவுக்கு ஆளானவர் மட்டுமல்ல ஆளாக்குபவரும் கூட என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.

அடிக்கடி வீதியில் நடந்துகொண்டே போனில் உரக்கப் பேசிக்கொண்டிருப்பார்: “மேரிட்டே கேட்டேன் — வயிற்றில் ஜெபம் பண்ணின தண்ணீர் தடவினா எல்லாம் சரியாய்ப் போயிடும்னு சொன்னா. மேரிட்டே கேட்டேன் — இந்த மருந்தை 3 நாள் சாப்பிடச் சொன்னா. மேரி ஒன்னும் பயப்படவேண்டாம், சரியாயிடும்னா” என்பதெல்லாம் கேட்டு, “மேரி” ஒரு நர்ஸ் என்று நினைத்திருந்தேன். பிற்பாடுதான் தெரிந்தது — சாட்சாத் கன்னிமேரிதான், ஏசுவின் அன்னைதான், இவருடன் போனில் பேசியது என்று.

கிழக்குப்பார்த்த   வீட்டுக்காரர்களின் குற்றப்பின்னணி கொண்ட கதையை நான் ஜெ தளத்திலேயே எழுதியாயிற்று. மூன்று அன்னைப் பெருமரங்களை அவர்களால் நான் பலிகொடுத்தேன். அங்கும் குடிதான் வார இறுதிகளில் மேலோங்கி இருக்கும். 

மேற்குப் பக்கத்து வீடும் சளைத்தவர்கள் அல்ல;நானில்லாதபோது வீட்டின் மதிலுக்கருகே பெருங்குழியை  ஜேசிபி வைத்துத் தோண்டி இருந்தார்கள். போய்க்கேட்டபோது அதட்டலாக ’’சரி தோண்டிட்டோம் இப்போ மூடிறோம் என்னமோ பெரிசா’’ என்றார்கள்.”சரி” என்று கேட்டுக்கொண்டேன்.

ஒருமுறை ஒரு வாடகைகாரில் மகன்களுடன் நேரம் பிந்தி களைத்துபோய் வீடு திரும்பிய ஒரு இரவில், மாடியில் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். பதறிப்போய் பார்த்தால் பின் வீதியில் இருக்கும் ஒரு குடும்பம் வந்து, மாடியில் தண்ணீர் தொட்டியிலிருந்து ட்யூப் போட்டு நீரை அவர்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அக்கா, “வந்துட்டீங்களா? இன்னிக்கு வரமாட்டீங்கன்னு நினைச்சோம்” என்றும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்கள். 

எல்லாவற்றையும் கடந்து, இப்போதும் இங்கேயே இந்த ப்ளுமீரியா வீட்டில்தான் இருக்கிறோம் செடி கொடி மரங்களுடன் மகிழ்ந்து.. எவ்வளவு அடிச்சாலும் இயற்கையோடு நெருங்கி இருக்கும் வாழ்வுக்காக தாங்குவோம்.

கருங்கண்ணி- சூஸன்!

(புகைப்பட உதவி -கணேஷ்)

சமீபத்தில் ஜெனீவா கணேஷ் வாட்ஸேப் ஸ்டேட்டஸில் இந்த மலர்களின் புகைப்படத்தை வைத்திருந்தார். black eyed susan என்ற பொதுப்பெயர் கொண்ட பிரகாசமான பொன்மஞ்சள் இதழ்களும் மலரின் நடுப்பகுதி நல்ல கருப்பிலும் இருக்கும் மலரான இது எனக்கு மிக மிகப் பிரியமான மலர்,

“Black-eyed Susan” என்ற இந்தப் பெயருக்குப் பின்னால் 1720-ம் ஆண்டு ஜான் கே (John Gay, 1685–1732) என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய “Sweet William’s Farewell to Black-Eyed Susan” என்ற கடற்பாடல் (sea ballad) இருக்கிறது.

 கப்பலில் புறப்படும் தன் காதலன் வில்லியத்தைப் பிரிந்து அழுதுஅழுது கண்கள் கருத்துப்போன சூசன் என்ற பெண்ணைப் பற்றிய பிரிவுத் துயரக் கதைப்பாடல் இது.  பின்னாளில் இந்தமலரும், அதே நேரத்தில் பூக்கும் “Sweet William” (Dianthus barbatus) என்ற இன்னொரு மலரும்  இணைந்து மலர்வதால், அவை இரு காதலர்களின் மீள்சந்திப்பைக் குறிக்கின்றன என்ற நாட்டுப்புறக் கதையும் உருவானது.

ஜான் கேயின் பாடல் 1730-ல் ரிச்சர்ட் லெவெரிட்ஜ் என்பவரால் இசை அமைக்கப்பட்டு, அடுத்து வந்த நூறாண்டுக்கும் மேலாக ஆங்கில நாட்டுப்புறப் பாடல் மரபில் தொடர்ந்தது;20-ஆம் நூற்றாண்டு வரை நார்ஃபோக் விவசாயக் குடும்பங்களிடையே வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்தது.

1829- ல் டக்ளஸ் வில்லியம் ஜெரால்ட் இதே பெயரில் ஒரு நாடகத்தையும் எழுதினார் (“Black-Eyed Susan; or, All in the Downs”), அது 1913-ல் திரைப்படமாகவும் வெளியானது..

இது வட அமெரிக்க பழங்குடி மக்களுக்கு குறிப்பாக ஓஜிப்வே மற்றும் செரோகீ சமூகங்களுக்கு பழக்கமான ஒரு மருத்துவத் தாவரமும் கூட. ஓஜிப்வே நாட்டுமருதுவர்கள்  சூஸனின் இலைச்சாற்றை சளி மற்றும் காது வலி சிகிச்சைக்குப் பயன்படுத்தினர்; செரோகீ மக்கள் வேரின் விழுதை பாம்புக்கடி மற்றும் வீக்கத்திற்கு மருந்தாகப் பயன்படுத்தினர்.  

இதன் தாவரவியல் பெயர் Rudbeckia hirta,  இது Asteraceae (சூரியகாந்தி) குடும்பத்தைச் சேர்ந்தது. வட அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயற்கையாக வளரும் இது, சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இருவருடத் தாவரம் அல்லது குறுகிய ஆயுள் கொண்ட பல்லாண்டுத் தாவரம். பொன்னிற இதழ்கள் நடுவில் ஒரு கருஞ்சிவப்பு- நிற சற்றே மேடிட்டிருக்கும் மையத்தைக் கொண்டிருப்பதே இதன் அடையாளம். அந்த இருண்ட மையம்தான் “கருங்கண்” (black-eyed) என்ற பெயருக்குக் காரணம்.

 Rudbeckia என்ற பேரினப் பெயரை லின்னேயஸ் தமது ஆசிரியரும் நண்பருமான ஸ்வீடிஷ் தாவரவியலாளர் ஓலோஃப் ரட்பெக் நினைவாக வழங்கினார்; அவரது மகன் ஓலோஃப் ரட்பெக் (இளையவர்) உப்சலா பல்கலைக்கழகத்தில் லின்னேயஸின் ஆசிரியராக இருந்தார். நோபல் பரிசுகளை நிறுவிய ஆல்ஃபிரட் நோபல், ரட்பெக் குடும்பத்தின் வழித்தோன்றல்தான். hirta என்பது கூரிய முட்களைப் போலிருக்கும் விரைத்த மயிர்களைக் கொண்டிருக்கும் இச்செடியின் தண்டு மற்றும் இலைகளைக்குறிக்கிறது.

 சூரியகாந்தி பூக்களைப் போலவே, இதுவும் ஒரு “மலர்த்தலை” (composite flowerhead)—வெளிப்புற கதிர் மலர்களும் (ray florets) உள்பக்கமாக குழாய் மலர்களும் (disk florets) சேர்ந்து ஒரு மலராகத் தோற்றமளிக்கும் மஞ்சரி இது. நடுவில் இருக்கும் நுண்ணிய மலர்கள் மகரந்த சேர்க்கையாளர்களுக்கு தெரியாமல் போய்விடலாம் என்பதற்காக பிரகாசமான  மஞ்சளில் ரிப்பன் போன்ற இதழ்கள் மலர்களின் விளிம்பில் அமைந்திருக்கும். இவை மகரந்தச்சேர்க்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வேலையிலும், உள்ளே இருக்கும் நுண்மலர்கள் மகரந்தச்சேர்க்கைக்குப் பின்னர் கருவுறுதலிலும் ஈடுபடும்.

தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட மகரந்தச் சேர்க்கையாளர்களுக்கு இம்மலர்த்தலை  முக்கியமான ஊணாதாரம். கருகிய நிலம், சீர்குலைந்த மண் போன்ற இடங்களில் கூட எளிதாக வேரூன்றி வளரும் செடி இது. இதில் சுமார் இருபது இனங்கள் உள்ளன, பெரும்பாலும் வட அமெரிக்காவின் புல்வெளிகள், காடு ஓரங்கள், தீ பாதித்த நிலங்கள் போன்ற திறந்தவெளி, சீர்குலைந்த சூழல்களில் காணப்படுபவை.

அமெரிக்காவில் இம்மலர் ஆழமாக வேரூன்றிய கலாச்சார அடையாளமாகியிருக்கிறது,. 1918-ம் ஆண்டு  இம்மலர் மேரிலாந்து மாநிலத்தின் ஆட்சி மலராக அறிவிக்கப்பட்டது. மாநிலக் கொடியின் நிறங்களுடன் (கருப்பு-பொன்னிறம்) ஒத்துப்போவதும், பதின்மூன்று இதழ்கள் கொண்டிருப்பதும் (அமெரிக்காவின் தொடக்க பதின்மூன்று காலனிகளின் எண்ணிக்கையை நினைவூட்டும்) இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

மேரிலாந்தின் மிகப் பிரபலமான பெண்குதிரைப் பந்தயமான ப்ரீக்னெஸ் ஸ்டேக்ஸ் (Preakness Stakes), “The Run for the Black-Eyed Susans” என்றே அழைக்கப்படுகிறது; இதிலிருந்தே அந்த வார இறுதி “Black-Eyed Susan weekend” என அழைக்கப்படுகிறது. பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரைக்கு இந்த மலர்களால் ஆன ஒரு போர்வை அணிவிக்கப்படும் மரபு உண்டு.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால்  இந்தமலர் பந்தயம் நடைபெறும் மே மாதம் மலராததால், உண்மையில் அந்தப் போர்வையில் இருப்பது Viking mum என்ற இன்னொரு மலர்தான். அம்மலரின் மையப் பகுதியில் கருப்பு வர்ணம் தீட்டி கருங்கண் சூசனைப் போல தோற்றமளிக்கச் செய்யப்படுகிறது). கைப்பைகள் படுக்கை விரிப்புகள் போன்ற அன்றாட புழங்குபொருட்களிலும் சூஸன் இருக்கிறாள்.

மலர் மொழியில் (floriography) சூஸன் நீதி மற்றும் ஊக்கம்  ஆகியவற்றைக் குறிக்கிறது.

 தோட்டக்கலைத்துறையினரால் இதில் பல அலங்கார ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன—’Indian Summer’ (பெரிய பூக்கள்), ‘Goldsturm’ (குறுகிய வளர்ச்சி), ‘Cherry Brandy’ (சிவப்பு-மெரூன் இதழ்கள்), ‘Prairie Sun’ (பச்சை நிற மையம்), ‘Toto’ (குட்டை ரகம்) என பலவகைகள் பிரபலமாக இருக்கின்றன.

அந்தப்பாடலின் சில வரிகள்:

“All in the Downs the fleet was moored,
The streamers waving in the wind,
When Black-eyed Susan came aboard,
Oh! where shall I my true love find?”

ஒவ்வொரு மலருக்கும் பின்னால் இப்படி மிகச்சுவாரஸ்யமான கதைகளும் கலாச்சாரத்தொடர்புகளும் இருப்பது மேலும் மேலும் தாவரங்களின் மீதான பிரியத்தை அதிகப்படுத்துகிறது.

மலராகிவிடுதல்!

( வான்கோ பதிப்பகம் வெளியிட்ட தேவதேவனின் நிலவில் உதித்த கார்முகில் கவிதை நூலுக்கு எழுதிய என்னுரை)

மலராகிவிடுநல்!

தேவதேவன் அவர்களை 2018 ஆம் ஆண்டு காவிய முகாமில் முதன்முதலாகச் சந்தித்தேன். அமர்வுகளின் இடைவேளையில் வெயில் காய்ந்துகொண்டு பட்டுத்தலையணைகளைப் போல மலர்ந்திருந்த ஹைட்ராஞ்சியாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தேவதேவன் அருகிலிருந்த ஒரு அடர் ஊதா மலரைக்காட்டி, ‘இது எத்தனை அழகாருக்கு இல்லியா’ என்றார். அதற்கு முன்னர் அவரிடம் நான் பேசியிருக்கவில்லை.

இடையில் நின்றுவிட்ட உரையாடலை விட்ட இடத்திலிருந்து துவங்குவதுபோல அந்தப் பேச்சு துவங்கியது. அங்கிருந்து ஃபெர்ன் ஹில்லை சுற்றி ஒரு நடை சென்று பல மலர்களைப் பார்த்தோம். முதன்முதலாக வீட்டைவிட்டு வெளியே வந்து வானை, மண்ணை, மலர்களை, செடிகொடிகளைப் பார்க்கும் ஒரு சிறுவனுடன் நடந்து செல்வது போலத்தான் இருந்தது.

அப்போதைக்கப்போது அங்கிருக்கும் இயற்கை அழகுகளைக் குறித்து கவிதைகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் குறித்த பிரமிப்பு இன்று வரை தொடர்கிறது. என் பெயரைக் கேட்டுவிட்டு ‘நல்ல பெயர் இந்தப் பெயருக்கு ஒரு கவிதை எழுதித் தருகிறேன்’ என்றார்.(பிறகு எழுதித்தந்தார்)

வானை, மண்ணை, கார்முகிலை, மலரை, மலர்ச்செண்டுகளை, காளானை, ரயில் பூச்சியை, புழுவை, மூங்கிலை விவரிக்கும் அழகிய கவிதைகளின் இத்தொகுப்பை வாசிக்கையிலும் ஃபெர்ன் ஹில்லின் அந்தக் காலைநடைக்கு மீண்டும் சென்றதைப்போலத்தான் இருந்தது.

அவரது தாவரவியல் அறிவு ஆச்சரியமூட்டுகிறது. பாரிஜாதமென்றும் பவளமல்லியென்றும் அழைக்கப்படும் மலரைக்குறித்துச் சொல்கையில் ‘இரவெல்லாம் விழித்திருந்து பகலில் தூக்கச்சடவில் இருப்பவை, கண் ததும்பும் நீரில் நனைந்தவை போன்ற வெண்ணிதழ்கள்’ என்கிறார்.

பவளமல்லியின் Nyctanthes arbor-tristis என்னும் அறிவ்யல்  பெயருக்கு (Nyct- இரவில், anthe – மலர்/ arbor – மரம், tristis – துயர்)   இரவில் மலர்ந்த துயர் நிரம்பிய மரம் என்று பொருள். கண் ததும்பும் நீரில் நனைந்த வெண்ணிற இதழ்கள் இரவில் விழித்திருக்கின்றன, பகலில் தூங்குகின்றன’ என்னும்  இவரது கவிதை இந்த அறிவியல் பெயருக்கு மிகக் கவிதுவமான  பொருளை  அளித்துவிட்டது.

யார் மலர்ச்செண்டு என்றது? என்னும் கவிதையில் ’’மலர்ச் செண்டிலிருக்கும் ஒரு  மலரை அண்மித்துப் பார்க்கையில் ஒவ்வொரு மலரும் ஒரு  மலர்ச் செண்டுதான்’ என்கிறார்.

பாரிஜாதத்தைக் குறித்து மட்டும் நான்கு  கவிதைகள் எழுதி இருக்கும், வானும்  பூமியும் ஏன் இந்த வாழ்வேமே பூதான் என்னும் இவரின் மனதின் மலர்தலை எல்லாக் கவிதைகளிலும் காணமுடிகிறது.

‘வீறு கொண்டு எழுந்து நிற்பது’ என்னும் மூங்கிலைச் சொல்லும் அந்தக் கவிதையும் அப்படித்தான் எத்தனை சரி, எத்தனை சரி என்று பூரிப்படைய வைத்தது. மூங்கிலின் அந்த நிமிர்வை, உயரத்தை, கம்பீரத்தை வீறுகொண்டு என்னும் சொல் அத்தனை சரியாகச் சொல்லிவிடுகிறது.

மரங்களின் மீதும் மனிதர்கள் மீதும் பொழியும் மழையை  ,அடுக்ககக்  கட்டடங்கள் மீதும் பொழியும் கார்முகிலைப் பற்றிய கவிதையில் ‘வானை அறிந்தவர்களுக்கும் நேசத்தைச் சொல்லித்தரவேண்டுமா’ என்கிறார் தேவதேவன். அவரும் அப்படித்தான் மிக உயரத்திலிருந்து குனிந்து பெருங்கருணையுடன் உலகைப் பார்த்து ரசிக்கிறார், வியக்கிறார் எந்தப் புகாருமின்றி எல்லாவற்றையும் நேசிக்கிறார்.

எதன் மீதும் விலக்கமில்லை அவருக்கு, நல்லதும் அல்லதுமெல்லாம் ஒன்றுதான். கோப்பையொன்றில் நிறைந்திருக்கும் கொடுமையின் சிவப்பைக் காணும் அவர் மனம் அங்கிருந்து தாவி கனியின் சிவப்பில் வந்து நிற்கிறது. தற்கொலை செய்யத் துணிந்த ஒருவனின் விழிகளில் தெரியும் நேரெதிர்திசையைச் சொல்லும் கவிதையும் அப்படித்தான் அவரது மனவிரிவைக் காட்டுகிறது.

பச்சிளம் குழந்தையின் உள்ளங்கால் சிவப்பில் கிளை நிறைந்து மலர்ந்திருக்கும் வசந்தராணியெனும் மரத்தை ‘மரமே மலராக மறைந்து கிடக்கும் பேருண்மை வெளிப்பட்டுவிட்டது’ என்கையில் அக்கவிதை அம்மரத்தைக் காட்டிலும் பேரழகாகிவிடுகிறது.

சென்னை வெள்ளத்தையும் சொல்லுகிறது ஒரு கவிதை. எல்லா  நூல்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் பெருவெள்ளம் அத்தனை அறிவையும் பெற்ற பின்னர் பேரமதியுடன் இருக்கிறது என்கிறார். சென்னைப் பெருவெள்ளம் வந்து நூல்களை அடித்துச் சென்றது ஒரு அழிவு, பேரவலம். அந்த அழிவிலும் ஒரு அழகைக் காணும் அவர் மனதை என்னவென்று சொல்லுவது?

‘யார் வந்து தழுவுமுன்னும் தான் வந்து முந்தித் தழுவும், யார் தழுவ வருகையிலும் தான் விலகி நிற்கும்’ காற்றின் போரன்பிக்கும் இருக்கிறது ஒரு கவிதை, இந்தத் தொகுப்பில் என் தனித்த பிரியத்துக்குள்ளானது இந்த கவிதை.

இணைப்பறவைகளான இருவிழிகளையும், கடக்க முடியாத மலைத்தொடரின் குகைக்குள் ஒளிந்திருக்கும் உயிரின் ஓராயிரம் ரகசியங்களையும் சொல்லுகையில் மலர்களைக் கண் மலர்த்திப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் திடீரெனக் காதல்கொண்டிருக்கும் ஓர் இளைஞனாகிவிட்டிருந்தான்.

பொடிப்பொடியான பூ மொக்குகளைக் கைப்பையில் நிரப்பும் ஒருத்தியும், பெயரிலேயே குட்டி இருப்பதால் வயதே ஆகாத குட்டி சித்ராவும், உன்னி உன்னி ஊஞ்சலாடும் ஒரு சிறுமியும் வழியில் எதிர்ப்படுகிறார்கள்.

பூப்பறிக்கும் ஒருத்தியை ஒரு கவிதையில் ‘பூக்களை பறித்துக் கொண்டிருந்தது ஒரு பெரிய பூக்குவியல்’ என்கிறார். பரிசாக வந்த படுக்கைவிரிப்பின் பூக்களையும் கவனிக்கிறது அவரது பூ மனம், தெருவின் குப்பைகளைக் கடந்து தூயதோர் வெளியில் சென்று திரும்பும் ஒரு குளிரூட்டப்பட்ட காரிடம் ‘சந்தோஷமாகத்தான் இருக்கிறாயா காரே’ எனும் அவர் கேள்வி புன்னகைக்க வைக்கிறது.

‘எதுவுமே செய்ய வேண்டியதில்லை, எதுவுமே செய்யாதிருக்கையில்தான் அன்பு நிகழும், பூஜ்ஜியத்தையும் ஒரு வட்டமிட்டுத்தானே காட்ட வேண்டி இருக்கிறது சிக்னல் இல்லாசாலையில் நம்மைக்காத்திருக்கச் சொல்வதும் கைபிடித்துக் கூட்டிச் செல்வதும் யார்’ போன்ற கவிதைகளில் தெரிவதெல்லாமும் அவர் மனதின் மிகை மலர்வே!

மணிமுடியை, பயணத்தை, பயண வண்டியை, மய்யப்புள்ளியை, மடிமீதமர்ந்திருக்கும் ஒற்றைக்கையைச் சொல்லும், மலர்களைச் சொல்லாத கவிதைகளிலும் மலர்ந்தேதான் கிடக்கிறது அவரது மனம்.

‘நான் யாரா? நாம்தான்’ என்பதற்கு மேலும் சொல்லவும் கேட்கவும் என்னதான் இருக்கிறது?

ஆம், மானுடம் கண்டுகொள்ள வேண்டியதைக் கண்டுகொண்டே தான் இருக்கிறது பெருநிறை பேரருள்.

கற்றலும் கற்பித்தலும்

இன்று ஆசிரியர் தினம். உண்மையிலேயே நான் மகிழ்ந்து கொண்டாடும் தினம். மகன்களும் சாம்பவியும் வாழ்த்துச் சொல்ல மறந்துவிட்டால் கோபித்துக்கொள்வேன். ஆசிரியை ஆவது குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் நல்ல ஆய்வாளராக மட்டுமே இருக்க விழைந்த என்னை, கொஞ்சமாக ஆய்வும் முழுக்க முழுக்க கற்பிப்பவளும் கற்றுக்கொள்பவளுமாக ஆக்கியிருக்கிறது ஊழ்.

ஆசிரியம் என்றால் என்னவென்றே தெரியாத பதின்ம வயதில், ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படம், என்னை ஊட்டியில் ஒரு மேட்டு நிலத்தில் வெள்ளை ரீப்பர்களால் மறிவேலியிடப்பட்ட (picket fence) ஒரு சிறு சிமிழ் போன்ற வீடும், உதவிக்கு ஒரு முதியவளுமாக வாழ்ந்து, ஏராளமான வண்ணக் குடைகளும் ஆர்கண்டி புடவையுமாக இருக்கும் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை ஆகும் விழைவை உண்டாக்கி இருந்தது. ஊட்டி இளமைப் பருவத்தில் என்னுடன் எப்போதும் இருந்தது, இப்போதும் என் கனவுகளில் உடனிருக்கும் நிலப்பரப்பு அதுவே. கலைந்த பலநூறு கனவுகளில் அதுவும் இருந்தது என்றாலும், பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் எதிர்பாராமல் என்னை ஒரு ஆய்வாளராக்கியதை இனிமையுடன் நினைவுகூர்கிறேன்.

முதுகலை படிப்பில் இணைந்த முதல் வாரத்தில், ராஜாராம் அண்ணனின் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு ஒரு சிறு வகுப்பறையில் நிகழ்ந்தது. அந்தத் தேர்வைக் குறித்து எந்தச் சிந்தனையும் அறிதலும் இல்லாமல், கடைசி வரிசையில் அமர்ந்து கொடுக்கப்பட்ட குளிர்பானத்தையும் பிஸ்கட்டையும் ருசித்துக்கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. மாரிமுத்துவும் அன்று உடனிருந்தார். ஒரு பழங்குடியினர் பயன்படுத்திய விதையின் ஊட்டச்சத்து குறித்து ராஜாராம் என்னவோ விளக்கிக்கொண்டிருந்தார்; நான் சுவாரசியமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். பலரும் அவரிடம் என்னவோ கேள்விகள் கேட்டார்கள், அவரும் சலிக்காமல் பதிலளித்தார்.

பின்னர் இறுதியாக “இனிமேல் ராஜாராம், ‘டாக்டர் ராஜாராம்’ என அழைக்கப்படுவார்” என்று ஒருவர் சொன்னதும், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து, ராஜாராம் அண்ணனைக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த போது ‘டாக்டர்’ எனும் அந்த விளி என் மீது ஒரு காய்ச்சல் போல அந்த நிமிடம் பற்றிக்கொண்டது.

அன்று ராஜாராம் எங்களை ஒரு வேனில் கோவை ஆர். எஸ். புரம் அன்னபூர்ணாவிற்கு மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். உணவு முடிந்து வெளியே வருகையில், அங்கே தள்ளுவண்டியில் இருந்த பீடாவை வாங்கிக்கொடுத்தார். அது ‘ஜர்தா பீடா’ என்பதை, எனக்கு தலைசுற்றி மயக்கம் வந்தபோதே அறிந்தேன்! அதுதான் அன்னபூர்ணா என்னும் உணவகத்திற்கு நான் முதன்முதலாகச் சென்ற நாளும் கூட.

பின்னர் முழுநேரமும் துறையில் நடந்த ஆய்வுகளைக் கவனிப்பவளாக மாறியிருந்தேன். குறிப்பாக முதல் தளத்தில் இருந்த கடல்பாசிகளுக்கான ஆய்வு நடந்துகொண்டிருந்த Seaweed Lab-ல், முனைவர் பட்ட ஆய்வில் இருப்பவர்களுக்கு எடுபிடி வேலைகளை நான் முனமுவந்து செய்துகொண்டிருப்பேன் நேரம் கிடைக்கும்போதெல்லாம்.

ஒரு பின்னந்தியில் Tribal Pulse Lab-இல் நான் அந்த வயதில் பார்த்திருக்கக்கூடாத ஒரு காட்சியையும் அசர்ந்தமாகப் பார்த்தேன். அதுவுமொரு அறிதல்தான், ஒருபோதும் பிறருடன் பகிர்ந்துகொள்ளவே முடியாத அந்தக் காட்சி கணநேரம்தான் என்றாலும், அது எனக்குப் பெரும்திகைப்பை உண்டாக்கியது. அதன் பிறகு நான் மிகவும் அமைதியானவளாகவும், அதிகம் சிந்திப்பவளாகவும் மாறியிருந்தேன். விளையாட்டுக்கு நண்பர்கள் கை என் மீது பட்டாலும் விதிர்விதிர்த்துக்கொண்டிருந்தேன்.

பின்னர் நல்ல சித்திரம் வரைபவளாக, உன்னதமான ஆங்கிலம் இல்லாவிட்டாலும் சரியான ஆங்கிலம் பேசுபவளாக, எந்நேரமும் நூலகத்தில் பழிகிடப்பவளாக, எதையாவது எழுதிக்கொண்டிருப்பவளாக மாறிப்போனேன். வய்யூரு ராமகோடி ரெட்டி என்னும் VRKரெட்டி சைட்டாலஜிஸ்ட் ஆசிரியராகப் பணியில் இணைந்த பின்னர்—வெலிங்டன் கோதுமை வயால்களில் அதிகாலையில் கதிரெழுகையில் வானின் தங்க நிறப் பின்னணியில் கோதுமை மலர்களைச் சேகரித்தது, டால்ஃபின்கள் துள்ளி விளையாடும் அலைகளைக் கடந்து குருசடி தீவை அடைந்து பாசிகளைச் சேகரித்தது, ஊட்டிக்கும் மருதமலைக்கும் சென்று தாவரங்களைச் சேகரித்தது,எலக்ட்ரோபோரசிஸில் புரதங்களைப் பிரித்தெடுத்தது; அகாவே கள்ளிகளின் அழகிய மலரரும்புகளை மெழுகிலிட்டு கட்டிகளாக்கி மைக்ரோடோமில் மிக மெல்லிய செக் ஷன் எடுத்தது என ஆய்வுகளில் தீவிரமான விருப்பம் உண்டாகியிருந்தது.

என்னுடன் பல துறையைச்சேர்ந்த நண்பர்களின் ஒரு சிறு குழு எப்போதும் இருந்தது. கேன்டீன் போகும் வழியில் இருந்த ஒரு சிறு திட்டில் மாலை நேரங்களில் மணிக்கணக்கில் அமர்ந்து நான் எதையாவது பேசுவதும், அதை அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதும் வழக்கமானது. கெமிஸ்ட்ரி விஜி ‘ .. டீ, நான் வேண்னா மத்தியானம் உனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வரேன் நீ ஹாஸ்டலுக்கு போகாம எங்க கூடவே இருந்து எதாச்சும் பேசிகிட்டிரேன்…’ என்பாள். மேட்டுப்பாளையத்திலிருந்து உடன் படித்த செந்திலின் நண்பர் ஷரவண் அந்தக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வார். அவர் முதலில் செந்திலைப் பார்க்கவும், பிறகு நான் பேசுவதைக் கேட்கவே வெள்ளி மாலைகளில் தொடர்ந்து வந்தார் என்பதை நானும் அறிந்திருந்தேன்.

அவரும், ஒரு மதிய வேளையில், துறையின் தாவரவியல் பூங்காவில் மண்ணைக் கொத்திக்கொண்டிருக்கையில், மேலே வெள்ளி மீனாக நீந்திக்கொண்டு சென்ற விமானத்தை வாய்பிளந்து வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவளிடம் சக மாணவர் ஒருவரும், ஆங்கில இலக்கியம் படித்த படுகரான தேயிலைத்தோட்ட உரிமையாளர் ஒருவரும் என்னை விரும்புவதாக நேரடியாகச் சொன்னபோதும், எனக்கு அந்த நேசத்திலும், அந்தப் பையன்களிடம் எந்த ஈடுபாடும் உருவாகவில்லை. அதை அவர்களிடமே புன்னகையுடன் சொல்ல முடிந்தது. ஆனந்தலட்சுமி (சிறகு) சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டது போல எனக்கு ஆய்வில் மட்டுமே பெருவிருப்பம் இருந்தது. மேலும் அன்று ஆய்வகத்தில் நான் கண்ட காட்சி எனக்கு ஆண்-பெண் உறவைக் குறித்த நுட்பமான ஒரு விலக்கத்தையும் உள்ளே உண்டாக்கியிருந்தது. ஆய்வின் மீது மட்டுமே பெருங்காதல் கொண்டிருந்த காலம் அது.

பின்னர் வேறு பல்கலைக்கழகம், அங்கே 10 மாதங்களில் எம்.பில் முடித்தேன். மற்ற துறை மாணவிகள் எம்.பில் ஆய்வுக்காக வெளியே செல்ல வார்டனிடம் அனுமதி வாங்க வரிசையில் நிற்கையில், நான் ஆய்வை முடித்து , அவற்றைச் சமர்பிக்க ஆய்வேடுகளுடன் Registrar அலுவலகத்திற்கு அவர்களுக்கு எதிர்த் திசையில் சென்றுகொண்டிருந்தேன். பின்னர் 3 வருடங்களில் முனைவர் பட்ட ஆய்வை முடித்து, மிகத் தீவிரமான ஆய்வாளராகும் கனவுகளுடன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்தேன்.

அச்சமயத்தில் உண்மையிலேயே காதல் வயப்பட்டிருந்தேன். ராணுவ வீரர் என்பதாலும், அவரது போர்ச் சாகசக் கதைகள் உண்டாக்கிய கிளர்ச்சியினாலும், அந்தக் குடும்பம் எங்களின் ஜாதிப் பிடிமானக் குடும்பத்தை விடவும் வேறுபட்டிருந்ததாலும், அவர்கள் என் மீது பொழிந்த அன்பினாலும், 45 பக்க பிரிண்டரின் தொடர்ச்சியான காகிதங்களில் வந்த கடிதங்களாலும், இளமைக்கே உரித்தான அசட்டுத்தனத்தினாலும் அந்த நேசத்தில் நானும் தீவிரமாக இருந்தேன். வலுக்கட்டாயமாக அந்த நேசமும் எங்களிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது.

அந்தக் காயமாறுவதற்குள், ஆய்வாளராகப் பணிபுரியும் பல வாய்ப்புகள் வந்தன. ஊட்டியில் ஒரு எஸ்டேட்டில், அதன் மிகப்பெரிய செல்வந்தரான உரிமையாளர் மேஜையில் இருந்த தேநீர்க் கோப்பையை ‘சர்’ என ஓசை வரும்படி அருந்திக்கொண்டே, “உங்க படிப்பெல்லாம் பார்த்தேம்மா, உங்களுக்கு இங்கே என்ன வேலை கொடுக்கிறதுனு எனக்குத் தெரியலை… என்ன வேலை நீங்கள் செய்ய முடியுமோ அதைச் செய்யலாம், என்ன சம்பளம் கேட்கிறீர்களோ அதைத் தருகிறேன்” என்றது நினைவிலிருக்கிறது. அதையும் வீட்டில் மறுத்தார்கள்.

ஒரு மத்திய அரசுத் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி, ஹைதராபாத்தின் சணல் ஆய்வு மையத்தில் ஆய்வாளராக வேலை கிடைத்தபோது, “நம்ம வீட்டுப் பொண்ணு ஆந்திரா வரைக்கும் போறதா?” என்று மறுக்கப்பட்டது.

பின்னர், இந்தக் கல்லூரியில் ’’நம்ம பொண்ணெல்லாம் எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்? சங்கரன் ரிட்டையர் ஆகிறார்; அந்த இடத்துக்கு நம்ம பொண்ண வரச் சொல்லுங்க” என்று சொல்லப்பட்டதால், மனம் உடைந்து வேண்டா வெறுப்பாக இங்கே இணைந்தேன்.

கல்லூரியில் இணைந்து 2 மாதங்களில் கல்லூரி அலுவலகத்திலிருந்து எனக்கு போன் வந்திருப்பதாகச் சொன்னார்கள். எடுத்துப் பேசினேன். வினுதா என்னும் பெங்களூரு இந்துஸ்தான் லீவரின் காரியதரிசி பேசினாள். இரண்டு நாட்களுக்குள் அங்கே நேர்காணலுக்கு வர முடியுமா என அவள் கேட்டாள், “சரி” என்று சொல்லிவிட்டு வைக்கும்போது, உன் பெயர் மிக அழகு என்றேன். சற்றுத்தயங்கி “தேங்க்யூ ” என்று சொன்னாள்.

அந்த போனை மற்றொரு இணைப்பிலிருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரியின் மேற்பார்வையாளர், “என்னம்மா… ராஜினாமா பண்ணிட்டு போகப் போறியா பெங்களூருக்கு?” என்றார். “தெரியலை” என்று மட்டும் பதில் சொன்னேன்.

மறுநாள் இரவெல்லாம் பேருந்தில் பயணித்து, அதிகாலை பெங்களூருவில் இறங்கி, இந்துஸ்தான் லீவருக்கு ஆட்டோவில் போய், அங்கிருந்த கழிவறையில் முகம் கழுவிக்கொண்டு, அதே பயண உடைகளுடன் காலை 10 மணிக்கு ஒரு மாபெரும் போர்டு ரூமுக்குச் சென்றேன். அந்தக் குளிரூட்டப்பட்ட அறையையும், கோட் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த பலரையும் பார்த்து நான் திகைத்துப் போய்விட்டேன். பேனலில் 7 பேர் இருந்தார்கள். என் முனைவர் பட்ட ஆய்வையும், சால்ஃபோர்டில் ஒரே சஞ்சிகையில் பிரசுரமான எனது 6 சர்வதேச ஆய்வறிக்கைகளையும் என் எளிமையான தோற்றத்தையும் பொருத்திப்பார்க்க அவர்கள் சிரமப்பட்டார்கள். என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் நான் எளிதாகப் பதிலளித்தேன்.

“தேயிலைக் கழிவுகளில் உங்களால் வேலை செய்ய முடியுமா?” எனத் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டது. அதிலிருக்கும் டானின்களின் நிறமியைப் பிரித்தெடுப்பது பற்றிய ஆய்வில் என்னை இணைத்துக்கொள்வதுதான் அந்த நேர்காணல் என்று எனக்குத் தெரிந்ததும், நான் பாலிஃபெனால், தியோப்ரோமின், தியோஃபிலின்கள் பற்றி விளக்கிக் கூறி, என் தாவரவியல் அறிவை அவர்கள் முன்பாகச் சந்தேகமில்லாமல் முன்வைத்தேன்.

“விரைவில் தொடர்புகொள்கிறோம்” என்று சொல்லி, அதிலொருவர் எனக்கு முதன்முதலாகக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். என் வாழ்வின் முதல் கைகுலுக்கல் அதுதான்! காலையில் உணவருந்தாததால் களைத்துப்போய் அந்த கட்டிடத்திலிருந்து வெளியே வருகையில், கைகுலுக்கிய அந்த இளம் அதிகாரி (அடர் நீல கோட் அணிந்திருந்தார்) பின்னால் வேகமாக வந்து, எங்களை கேன்டீனுக்குக் கூட்டிப்போய், அங்கிருந்தவர்களிடம் சொல்லி எங்களுக்கு உணவளிக்கச் சொல்லிவிட்டு, கனிந்த புன்னகையுடன் என்னை மீண்டும் ஒருமுறை பார்த்து விடைபெற்றுக்கொண்டார்.

அப்போது எனக்கு 26 வயது முடிந்திருந்தது. அடுத்த வாரம், மிக அழகிய வான் நீல நிற உறையில் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. என்னை 3 வருடங்கள் என்று முன்தீர்மானிக்கப்பட்ட தேயிலைக் கழிவு குறித்த ஆய்வில், மாதம் 18 ஆயிரம் சம்பளத்துடன் ‘ஜூனியர் சயின்டிஸ்ட்’ ஆக இணைந்துகொள்ள விரும்புகிறீர்களா என்றும், சம்மதமென்றால் 10 நாட்களுக்குள் வரவேண்டுமென்றும், நிர்வாகம் நினைத்தால் பதவியை நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நீலத்தில் இருந்த கடிதத்தாளின் ஒரு மூலையில் இளஞ்சிவப்பில் மூன்று சிறு மலர்கள் இருந்தன.

அந்த வாய்ப்பையும் ’கர்நாடகாவுக்கெல்லாம் நம்ம வீட்டுப்பொண்னை எப்படி அனுப்புவது’ என்று நிராகரித்தார்கள்.நானும் அச்சமயத்தின் மனமுடைதலில் எதன்பொருட்டும் வீட்டில் விவாதிக்க மனமற்றவளாக இருந்தேன். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்… 26 வயதில் இந்துஸ்தான் லீவரில் இருந்திருந்தால் எத்தனையெத்தனை முக்கிய ஆய்வுகளை நான் செய்திருக்கக்கூடும்!

ஆனால், இந்தக்கல்லூரியில் பணியில் இணைந்து சில வருடங்களிலேயே கற்பிப்பதில் ஆர்வம் கொண்டுவிட்டேன். அவ்வப்போது ‘கிஸான் வேர்ல்ட்’ என்னும் சஞ்சிகையில் சிறு கட்டுரைகள் எழுதி, அதற்கான சன்மானமாக 400 ரூபாய்கள் வாங்கிக்கொண்டிருந்ததை கல்லூரி ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்தக்கல்லூரியின் முதல்முனைவர் பட்டம் கொண்டிருந்த பேராசிரியை நான்தான்.

ஆசிரியர் பணியில் மெல்ல மெல்ல ஆர்வம் ஏற்பட்டிருக்கையில், அரசு வேலை தேடி வந்த தருணத்தில் அதிலிருந்தும் தடுக்கப்பட்டு,வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டு, மண்முடித்து வைக்கப்பட்டேன். வளைகுடா நாடொன்றிற்கு அனுப்பட்டேன். அங்கு அந்தப்பாலையிலும், “இப்போது ஜிம்னோஸ்பெர்ம் எடுக்கும் ஆசிரியர் அதன் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிச் சரியாகச் சொல்வாரா? சைகஸின் இலைகளின் மெழுகுப் பூச்சு பற்றிச் சொல்லியிருப்பாரா?” என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டே, சரணுக்குப் பால்பொடியைக் கரைத்துக்கொண்டிருப்பேன்.

அந்தக் கொடும் வாழ்வு முடிந்து 5 வருடங்களில், தப்பித்து இந்தியா வந்து, மீண்டும் அதே கல்லூரியில் அதே துறையில் இணைந்தேன். இன்று வரை ‘ஆசிரியை’ என்பதை விட, “அன்றாடமும் தாவரங்கள் குறித்துக் கற்றுக்கொண்டிருப்பவள்” என்றுதான் சொல்ல வேண்டும். தாவரங்கள் குறித்த அபிமானம் மேலும் மேலும் எனக்குப் பெருகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் 500 வருடங்களுக்காவது அவற்றைக் குறித்துக் கற்கவும் கற்பிக்கவும் எழுதவும் விஷயமிருக்கிறது,யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றாலும்.

அன்னையும், ஆசிரியையும், வாசகியுமாய்தான் என்னை எங்கும் எப்போதும் முன்வைக்கிறேன். கல்லூரியில் எனக்குச் சௌகரியமான சூழல் இல்லைதான்; என்றாலும் என் தனியறையில் நான் மகிழ்ந்து பணியாற்றுகிறேன். 1950-களில் கட்டப்பட்ட கட்டிடத்தில் துறை இயங்குகிறது. என் மேஜைக்குப் பின்னால் அந்தக் காலத்துக் கம்பிகளற்ற திறந்த சாளரம் வழியே புங்கை வாகை பெருமரங்களின் மரக்குடை பிரம்மாண்டமாகத் தெரிய, அவற்றின் உலர்ந்த இலைகள் அவ்வப்போது ஆசியளிப்பது போல் என் மேஜையில் வந்து விழ, ஒருநாளும் சலித்துக்கொள்ளாமல் மிகுந்த விருப்பத்துடன் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்.

நான் தாவரவியல் கற்றுத் தருபவளாக மட்டுமல்லாது, மாணவிகளுக்கும் சக ஆசிரியர்கள் சிலருக்கும் அந்தரங்கத் துயரைப் பகிர்ந்துகொள்ளும் முகமாகவும் இருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன். உடன் பணியாற்றும் பல ஆசிரியர்கள் ஆசிரியப்பணியின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் என்னும் வருத்தமும் எனக்குண்டு.

இங்கு இது எனது 24-வது வருடம். ஆசிரியையாக எத்தனையோ கசப்பான அனுபவங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஓர் ஆசிரியை தனக்கேற்பட்ட ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க என் மீது அபாண்டமாகப் பொய்ப் பழி சுமத்தி, மிகச் சமர்த்தியமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட சூழலில், நான் மனம் கலங்கிப்போனேன். அத்தகைய சூழ்ச்சிகளைச் செய்யக்கூடியவள் அந்தப் பெண் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் அவளை நான் வெறுக்கிறேன் என்றோ, அவள் எனக்கு எதிரி என்றோ இல்லை. எனக்கு எதிரியாக இருக்கும் தகுதி கொண்டோர் இந்தக் கல்லூரியில் இல்லவே இல்லை. அவளை முற்றிலுமாக என் வாழ்விலிருந்து விலக்கிவிட்டிருக்கிறேன், எனினும் அந்தக் காலத்தில் நான் கடும் துயருற்றேன் என்பது உண்மைதான்.

நான் அடிக்கடி பயணப்பதும், அவ்வப்போது போனில் பேசிக் கொண்டிருப்பதாலும், எப்போதும் வாசிப்பதாலும், மேடைகளில் பேசுவதாலும் என் ஒழுக்கம் குறித்த சான்றிதழைக் கேட்காமலேயே அளிக்கும் சக ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்களனைவரையும் சுகக்கேடுள்ள பிள்ளைகள் மீதான அன்னையின் கனிவுடன் பார்க்கிறேன்.

இங்கு பணிபுரியும் யாரைக் காட்டிலும் நான் உயர்ந்தவள் அல்ல; ஆனால் நிச்சயம் அவர்களிடமிருந்து வேறுபட்டவள் என்பதை அறிவேன். அதிலெனக்குச் சற்று அகந்தையும் இருக்கிறது! நான் இருக்கும் அறிவார்ந்த உலகை அவர்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள் என்பதில் எனக்குத் துயருமுண்டு.

மாணவர்களில் எனக்குப் பெண்கள் மீது தனிப் பரிவுண்டு. காலம் காலமாகக்கல்வியும் சுதந்திரமும் மறுக்கப்பட்டு, இப்போதுதான் வீட்டை விட்டு வெளியே வந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மீது தனிப் பரிவு கொண்டிருக்கிறேன். ஆசிரியராக எப்போதும் ஒரு கையில் கனிவும், மறுகையில் கண்டிப்புமாகவே இருக்கிறேன், மகிழ்ந்தும் இருக்கிறேன்.

கலாமணி மேம், தனா மேம், சண்முகசுந்தரம் சார், ரவீந்திரன் சார் மற்றும் சங்கரன் சாரை எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். நல்லாசிரியர்களால் செதுக்கப்பட்ட மாணவி நான்.

அவர்களிடமிருந்து மட்டுமல்ல, ‘ஜெ’ என்னும் ஞானகுருவிடமிருந்து பெற்றவைகளே என்வாழ்வை முழுவதுமாக உருவாக்கியிருக்கிறது. சரணும் தருணும் எனக்கு ஆசிரியர்கள் தான், நான் அவர்களுக்கல்ல, அவர்களே எனக்கு அன்னையர். அற்று விழ எல்லாக் காரணங்களும் இருந்தபோதும் இந்த வாழ்வைத் தொடரும் பிடிப்பை எனக்கு உண்டாக்கியவர்கள் அவர்களிருவருமே,

எப்போதும் ஒளியை நோக்கியும், களைகளைப் பொருட்படுத்தாமலும் வளர்வது, எங்கு விழுந்தாலும் முளைத்து மலர்வது எனப் பலபாடங்களைக் கற்றுக்கொடுத்த தாவரங்களும் ஆசிரியர்களே! அனைவருக்கும் என் வந்தனங்கள்!

கேமரா லூஸிடா-ஒளியூட்டப்பட்ட அறை

நேற்றுத்தான் நித்யவனம் மகளிர் மட்டும் 3 நாட்கள் வகுப்பிலிருந்து வீடு திரும்பினேன். அந்த வகுப்புகளில் ஒன்றில் லலிதா என்னும் ஆசிரியரின் (அபாரமான) ஓவியம் குறித்தும், ராணுவத்தில் காமிராக்கள் கண்டுபிடிக்கப்படும் முன்பு அனைவரும் ஓவியப் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டதையும், குற்றவாளிகளின் உருவத்தை,  வரைபடங்களை, நிலப்பரப்புக்களை ராணுவத்தினர் அப்போதெல்லாம் துல்லியமாக கைகளாலேயே வரைவார்கள் என்றும்  ஜெ சொன்னார். எனக்கு அது மிகப்புதிய தகவல்.

நான் இந்தக் கல்லூரியில் இளங்கலை படிக்கையில் மைக்ரோஸ்கோப்புகளின் கண் பொருத்தும் லென்சில் இணைக்கப்படும் கேமரா லூசிடா என்னும் ஒரு சிறு எளிய சாதனம் இருந்தது. அனாடமி வகுப்புக்களுக்குச் செல்லும்போது மிகவும் பயமாக இருந்ததற்கு இந்த கேமரா லூசிடாவும் ஒரு முக்கியக் காரணம். தண்டோ இலையோ வேரோ செக்‌ஷன் எடுத்து அதை மைக்ரோஸ்கோப்பில் அழகாக வைத்துவிடுவேன், அருமையாக மெல்லியதாக செக்‌ஷன் எடுக்கும் திறமைகொண்டவள் என்னும் பெயரும் எனக்கு இருந்தது. ஆனால் அதை காமிரா லூசிடா வழியே பார்த்து, வலக்கை பக்கத்தில் வைத்திருக்கும் வெள்ளைத் தாளின் மீது இருக்கும் கூராக சீவப்பட்ட பென்சிலின் நுனியும், மைக்ரோஸ்கோப்பில் தெரியும் ஸ்பெசிமெனின் பிம்பமும் ஒரே தளத்தில் தெரிய , கண்களைப் பழக்கவே அரை மணி நேரமாகிவிடும். அதன் பின்னர் அச்சுப் பிசகாமல் அப்படியே சித்திரத்தை வரைந்து கையெழுத்து வாங்கிவிட்டே லேபிலிருந்து புறப்பட முடியும். பெரும் பதட்டத்துடன் அந்த வேலையைச் செய்வேன், பலமுறை தாமதமாகச் சித்திரம் வரைந்ததற்கு திட்டு வாங்கியும் இருக்கிறேன்.

ஆனால்  அந்த அனுபவத்தில் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கச் சென்றபோது, மிக அழகிய செல் அமைப்புகளை  அவற்றின் வேறுபாடுகளுடன் துல்லியமாகக் காண்பிக்கும் சித்திரம் வரைபவளாக அறியப்பட்டிருந்தேன். பெரும்பாலும் என் அனாடமி சித்திரங்கள் பாராட்டப்பட்டு, பையன்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டு அவர்களை ஒருமுறை பார்க்கச் சொல்லும்படியாகவே இருக்கும். எனக்கும் அனாடமி சித்திரங்களை சரியாக அழகாக வரைபவள் என்னும் பெருமை (கொஞ்சம் அகங்காரமும்) இருந்தது.  முதுகலை முதலாம் ஆண்டில் அனாடமி லேபில் நறுமணத்துயர் மரமான (பவளமல்லி) நைக்டாந்தஸின் தண்டை செக்‌ஷன் எடுத்து அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வரைந்ததை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

எனவே கேமரா லூசிடா (Camera Lucida) என்பது புகைப்படக் கருவி அல்ல, அது ஒரு ஒளியியல் சாதனம் — ஒரு மாணவர் அல்லது ஆய்வாளர் ஒரு மாதிரியின் (specimen) துல்லியமான உருவத்தை காகிதத்தில் நகலெடுக்க ( இது உதவுகிறது.

வரையும் மேசைக்கு மேலே ஒரு கைப்பிடியில் பழைய மைக்ரோஸ்கோப்களில் ஒரு சாய்ந்த கண்ணாடியும், புதிய மைக்ரோஸ்கோப்புகளில் ஒரு பிரிஸமும் பொருத்தப்பட்டிருக்கும். மைக்ரோஸ்கோப்பின் eyepiece வழியே பார்க்கும்போது, லென்ஸ் வழியாக தெரியும் ஸ்பெசிமனின் பிம்பம் மற்றும் கீழே இருக்கும் காகிதமும் கையும் பென்சில் நுனியும் —எல்லாம் ஒரே பார்வைத் தளத்தில் ஒன்றன் மேல் ஒன்றாகத்  தெரியும், தெரியவேண்டும். இதனால் கண்ணில் காணும் பிம்பத்தை நேரடியாக பென்சிலால் தொடர்ந்து அச்சு அசலாக வரையலாம், அது துல்லியமாக அமைந்துவிடும்.

இதை 1806-ல் ஆங்கில விஞ்ஞானி வில்லியம் ஹைட் வோலஸ்டன் (William Hyde Wollaston) காமரா லூசிடா என்னும் பெயரில் காப்புரிமை பெற்றார். காமரா லூசிடா  என்பது லத்தீன் மொழியில் “ஒளியூட்டப்பட்ட அறை” என்று பொருள்படும், இது பழைய “கேமரா ஆப்ஸ்குரா” (இருண்ட அறை) என்பதன் நேரெதிர்.

அறிவியல் சித்திரங்கள் துல்லியமாக வரையப்படுவது இதன் மிகப் பெரிய பங்களிப்பாக இருந்தது. தாவரவியலாளர்கள், விலங்கியலாளர்கள், உடற்கூற்றியலாளர்கள், புவியியலாளர்கள் ஆகியோர் நூற்றாண்டுகளாக மாதிரிகளின் துல்லியமான வரைபடங்களை உருவாக்க இதைப் பயன்படுத்தினர், குறிப்பாக நுண்ணோக்கியில் பொருத்தப்படும்போது பெரிதாக்கப்பட்ட பிம்பங்களுக்கு. புகைப்பட நுண்ணோக்கம் (photomicrography) நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, லென்ஸ் வழியாகப் பார்க்கப்பட்டதை துல்லியமாகப் பதிவு செய்வதற்கான ஒரே தரமான வழி இதுவாகவே இருந்தது.

கள ஆய்வாளர்கள் (field naturalists) துல்லியமாக நிலப்பரப்புகளையும் மாதிரிகளையும் வரைவதற்கு   காமிரா லூஸிடாவை பெரிதும்   பயன்படுத்தினர்.

20-ம் நூற்றாண்டு வரை வகைப்பாட்டியல் (taxonomic), வடிவவியல் (morphological) மற்றும் உடற்கூறியல் பணிகளில் நுண்ணோக்கிக்கான கேமரா லூசிடா இணைப்புகள் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தன. அந்தக் காலத்து தாவரவியல் மோனோகிராஃப்களில் (monographs), “கேமரா லூசிடா உதவியுடன் வரையப்பட்டது” என்று படங்களின் தலைப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது இருண்ட அலமாரிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது காமிரா லூசிடா.

© 2026 அதழ்

Theme by Anders Noren — Up ↑