( வான்கோ பதிப்பகம் வெளியிட்ட தேவதேவனின் நிலவில் உதித்த கார்முகில் கவிதை நூலுக்கு எழுதிய என்னுரை)
மலராகிவிடுநல்!
தேவதேவன் அவர்களை 2018 ஆம் ஆண்டு காலியபுரகாபியில் முதன்முதலாகச் சந்தித்தேன். அமர்வுகளின் இடைவேளையில் வெயில் காய்ந்துகொண்டு பட்டுத்தலையணைகளைப் போல மலர்ந்திருந்த ஹைட்ராஞ்சியாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தேவதேவன் அருகிலிருந்த ஒரு அடர் ஊதா மலரைக்காட்டி, ‘இது எத்தனை அழகாருக்கு இல்லியா’ என்றார். அதற்கு முன்னர் அவரிடம் நான் பேசியிருக்கவில்லை.
இடையில் நின்றுவிட்ட உரையாடலை விட்ட இடத்திலிருந்து துவங்குவதுபோல அந்தப் பேச்சு துவங்கியது. அங்கிருந்து ஃபெர்ன் ஹில்லை சுற்றி ஒரு நடை சென்று பல மலர்களைப் பார்த்தோம். முதன்முதலாக வீட்டைவிட்டு வெளியே வந்து வானை, மண்ணை, மலர்களை, செடிகொடிகளைப் பார்க்கும் ஒரு சிறுவனுடன் நடந்து செல்வது போலத்தான் இருந்தது.
அப்போதைக்கப்போது அங்கிருக்கும் இயற்கை அழகுகளைக் குறித்து கவிதைகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் குறித்த பிரமிப்பு இன்று வரை தொடர்கிறது. என் பெயரைக் கேட்டுவிட்டு ‘நல்ல பெயர் இந்தப் பெயருக்கு ஒரு கவிதை எழுதித் தருகிறேன்’ என்றார்.(பிறகு எழுதித்தந்தார்)

வானை, மண்ணை, கார்முகிலை, மலரை, மலர்ச்செண்டுகளை, காளானை, ரயில் பூச்சியை, புழுவை, மூங்கிலை விவரிக்கும் அழகிய கவிதைகளின் இத்தொகுப்பை வாசிக்கையிலும் ஃபெர்ன் ஹில்லின் அந்தக் காலைநடைக்கு மீண்டும் சென்றதைப்போலத்தான் இருந்தது.
அவரது தாவரவியல் அறிவு ஆச்சரியமூட்டுகிறது. பாரிஜாதமென்றும் பவளமல்லியென்றும் அழைக்கப்படும் மலரைக்குறித்துச் சொல்கையில் ‘இரவெல்லாம் விழித்திருந்து பகலில் தூக்கச்சடவில் இருப்பவை, கண் ததும்பும் நீரில் நனைந்தவை போன்ற வெண்ணிதழ்கள்’ என்கிறார்.
பவளமல்லியின் Nyctanthes arbor-tristis என்னும் அறிவ்யல் பெயருக்கு (Nyct- இரவில், anthe – மலர்/ arbor – மரம், tristis – துயர்) இரவில் மலர்ந்த துயர் நிரம்பிய மரம் என்று பொருள். கண் ததும்பும் நீரில் நனைந்த வெண்ணிற இதழ்கள் இரவில் விழித்திருக்கின்றன, பகலில் தூங்குகின்றன’ என்னும் இவரது கவிதை இந்த அறிவியல் பெயருக்கு மிகக் கவிதுவமான பொருளை அளித்துவிட்டது.
யார் மலர்ச்செண்டு என்றது? என்னும் கவிதையில் ’’மலர்ச் செண்டிலிருக்கும் ஒரு மலரை அண்மித்துப் பார்க்கையில் ஒவ்வொரு மலரும் ஒரு மலர்ச் செண்டுதான்’ என்கிறார்.
பாரிஜாதத்தைக் குறித்து மட்டும் நான்கு கவிதைகள் எழுதி இருக்கும், வானும் பூமியும் ஏன் இந்த வாழ்வேமே பூதான் என்னும் இவரின் மனதின் மலர்தலை எல்லாக் கவிதைகளிலும் காணமுடிகிறது.
‘வீறு கொண்டு எழுந்து நிற்பது’ என்னும் மூங்கிலைச் சொல்லும் அந்தக் கவிதையும் அப்படித்தான் எத்தனை சரி, எத்தனை சரி என்று பூரிப்படைய வைத்தது. மூங்கிலின் அந்த நிமிர்வை, உயரத்தை, கம்பீரத்தை வீறுகொண்டு என்னும் சொல் அத்தனை சரியாகச் சொல்லிவிடுகிறது.
மரங்களின் மீதும் மனிதர்கள் மீதும் பொழியும் மழையை ,அடுக்ககக் கட்டடங்கள் மீதும் பொழியும் கார்முகிலைப் பற்றிய கவிதையில் ‘வானை அறிந்தவர்களுக்கும் நேசத்தைச் சொல்லித்தரவேண்டுமா’ என்கிறார் தேவதேவன். அவரும் அப்படித்தான் மிக உயரத்திலிருந்து குனிந்து பெருங்கருணையுடன் உலகைப் பார்த்து ரசிக்கிறார், வியக்கிறார் எந்தப் புகாருமின்றி எல்லாவற்றையும் நேசிக்கிறார்.
எதன் மீதும் விலக்கமில்லை அவருக்கு, நல்லதும் அல்லதுமெல்லாம் ஒன்றுதான். கோப்பையொன்றில் நிறைந்திருக்கும் கொடுமையின் சிவப்பைக் காணும் அவர் மனம் அங்கிருந்து தாவி கனியின் சிவப்பில் வந்து நிற்கிறது. தற்கொலை செய்யத் துணிந்த ஒருவனின் விழிகளில் தெரியும் நேரெதிர்திசையைச் சொல்லும் கவிதையும் அப்படித்தான் அவரது மனவிரிவைக் காட்டுகிறது.
பச்சிளம் குழந்தையின் உள்ளங்கால் சிவப்பில் கிளை நிறைந்து மலர்ந்திருக்கும் வசந்தராணியெனும் மரத்தை ‘மரமே மலராக மறைந்து கிடக்கும் பேருண்மை வெளிப்பட்டுவிட்டது’ என்கையில் அக்கவிதை அம்மரத்தைக் காட்டிலும் பேரழகாகிவிடுகிறது.

சென்னை வெள்ளத்தையும் சொல்லுகிறது ஒரு கவிதை. எல்லா நூல்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் பெருவெள்ளம் அத்தனை அறிவையும் பெற்ற பின்னர் பேரமதியுடன் இருக்கிறது என்கிறார். சென்னைப் பெருவெள்ளம் வந்து நூல்களை அடித்துச் சென்றது ஒரு அழிவு, பேரவலம். அந்த அழிவிலும் ஒரு அழகைக் காணும் அவர் மனதை என்னவென்று சொல்லுவது?
‘யார் வந்து தழுவுமுன்னும் தான் வந்து முந்தித் தழுவும், யார் தழுவ வருகையிலும் தான் விலகி நிற்கும்’ காற்றின் போரன்பிக்கும் இருக்கிறது ஒரு கவிதை, இந்தத் தொகுப்பில் என் தனித்த பிரியத்துக்குள்ளானது இந்த கவிதை.
இணைப்பறவைகளான இருவிழிகளையும், கடக்க முடியாத மலைத்தொடரின் குகைக்குள் ஒளிந்திருக்கும் உயிரின் ஓராயிரம் ரகசியங்களையும் சொல்லுகையில் மலர்களைக் கண் மலர்த்திப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் திடீரெனக் காதல்கொண்டிருக்கும் ஓர் இளைஞனாகிவிட்டிருந்தான்.
பொடிப்பொடியான பூ மொக்குகளைக் கைப்பையில் நிரப்பும் ஒருத்தியும், பெயரிலேயே குட்டி இருப்பதால் வயதே ஆகாத குட்டி சித்ராவும், உன்னி உன்னி ஊஞ்சலாடும் ஒரு சிறுமியும் வழியில் எதிர்ப்படுகிறார்கள்.
பூப்பறிக்கும் ஒருத்தியை ஒரு கவிதையில் ‘பூக்களை பறித்துக் கொண்டிருந்தது ஒரு பெரிய பூக்குவியல்’ என்கிறார். பரிசாக வந்த படுக்கைவிரிப்பின் பூக்களையும் கவனிக்கிறது அவரது பூ மனம், தெருவின் குப்பைகளைக் கடந்து தூயதோர் வெளியில் சென்று திரும்பும் ஒரு குளிரூட்டப்பட்ட காரிடம் ‘சந்தோஷமாகத்தான் இருக்கிறாயா காரே’ எனும் அவர் கேள்வி புன்னகைக்க வைக்கிறது.
‘எதுவுமே செய்ய வேண்டியதில்லை, எதுவுமே செய்யாதிருக்கையில்தான் அன்பு நிகழும், பூஜ்ஜியத்தையும் ஒரு வட்டமிட்டுத்தானே காட்ட வேண்டி இருக்கிறது சிக்னல் இல்லாசாலையில் நம்மைக்காத்திருக்கச் சொல்வதும் கைபிடித்துக் கூட்டிச் செல்வதும் யார்’ போன்ற கவிதைகளில் தெரிவதெல்லாமும் அவர் மனதின் மிகை மலர்வே!
மணிமுடியை, பயணத்தை, பயண வண்டியை, மய்யப்புள்ளியை, மடிமீதமர்ந்திருக்கும் ஒற்றைக்கையைச் சொல்லும், மலர்களைச் சொல்லாத கவிதைகளிலும் மலர்ந்தேதான் கிடக்கிறது அவரது மனம்.

‘நான் யாரா? நாம்தான்’ என்பதற்கு மேலும் சொல்லவும் கேட்கவும் என்னதான் இருக்கிறது?
ஆம், மானுடம் கண்டுகொள்ள வேண்டியதைக் கண்டுகொண்டே தான் இருக்கிறது பெருநிறை பேரருள்.
Leave a Reply
You must be logged in to post a comment.