காலையில் அருணாவின் ஸ்டேடசில் சைதன்யா ஃபிஜியில் ஒரு பின்க் வாழையின் அருகில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்கள். அது வாழைகளில் எனக்கு மிகப்பிரியமானது. அருணாவிடம் அனுமதி பெற்று அதை நானும் பகிர்ந்தேன்.

ஏற்காடு வைல்ட் ஆர்கிட் குடியிருப்புக்கு தம்பி அரங்கசாமி மற்றும் நண்பர்களுடன் போயிருந்தபோது அங்கு ஏராளமாக இந்த வாழை வளர்ந்திருந்தது. அந்நிறுவனத்தின் MD ராஜேஷ் இதன் ஒரு கன்றை மனமுவந்து எனக்களித்தார். ஒரு கன்று சுமார் 10,000க்கும் அதிக விலை கொண்டது. அது வீட்டில் ஒரு தொட்டியில் வளர்ந்து வான் நோக்கி நிமிர்ந்து ஒரே ஒரு அழகிய இளஞ்சிவப்பு மலரை அளித்ததோடு சரி. அதன் பிறகு குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இருக்கிறது. அன்றாடம் அதனருகில் சற்று நிற்பதுண்டு. ஒருவேளை ஆல்டிட்யூட் தான் பிரச்சனையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதன் அறிவியல் பெயர் Musa velutina. அஸ்ஸாம் மற்றும் இமாலயப் பகுதியைத் தாயகமாகக்கொண்டது. கேரளாவிலும் ஆங்காங்கே இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள பெரும் பூங்காக்களில் அழகு வாழையாக வளர்க்கப்படுகிறது. பிரேசிலில் மிக அதிகமாக இருக்கும் இது ஃபிஜியிலும் இருக்கிறது.
ஆங்கிலத்தில் Pink banana, Pink velvet banana, Hairy banana என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு. வடகிழக்கு இந்தியா, குறிப்பாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் அடிவாரக் காடுகளில் இவை சாதாரணமாகக் காணப்படும். இதை அறிவியல் ரீதியாக விளக்கியவர்கள்: H. Wendland & Drude (1875)
ஒப்பீட்டளவில் இது சிறிய வாழை. உயரம் சுமார் 1.5 முதல் 2 மீட்டர் மட்டுமே.

இதன் மஞ்சரி நிமிர்ந்து நிற்கும். அதன் பூவிதழ்கள் (bracts) சிவப்பு கலந்த இளஞ்சிவப்பு நிறம். இளஞ்சிவப்பு அல்லது பபிள்கம் நிறத்தில் காய்கள் 7 முதல் 10 செ.மீ. நீளமிருக்கும், மென்மையான மயிர்களால் மூடப்பட்டவை. இதனால்தான் இலத்தீன் பெயர் velutina (velvety, மெல்லிய ரோமம் உடைய) என்றிருக்கிறது.
பழம் பழுத்ததும் தோல் தானாகவே வளைந்து சுருண்டு திறந்துவிடும். அழகிய இளஞ்சிவப்பில் விரிந்து இருக்கும் இது ஒரு கனிமலர்போலிருக்கும். உள்ளே வெள்ளைச்சதையும் கருப்பு நிற விதைகளும் தெரியும்.

இது விதைகளைப் பரப்புவதற்கான ஒரு வழி. வெடித்து திறந்து கிடக்கும் பழங்களை பறவைகளும் விலங்குகளும் எளிதாக உண்ணும். கனியுடன் விதைகளும் அவற்றின் வயிற்றுக்குள் சென்று எச்சம்வழியே வந்து விழுந்து முளைக்கும்.அவற்றின் எச்சம் வழி இந்தச் செடிகள் பரவும்.
நம் வாழைகள் சக்கர் எனப்படும் அடித்தண்டுகள் வழி இனப்பெருக்கம் செய்வதால் பழங்கள் இப்படி வெடிப்பதில்லை. எத்தனை அறிவு?
பழத்தில் விதைகள் அதிகம், சதை குறைவு. எனவே உணவாக அதிகம் பயன்படாது. ஆனால் உண்ணக்கூடிய கனிதான். பொதுவாக அலங்காரச் செடியாக வளர்க்கப்படுகிறது. மற்ற வாழைகளை விடக் குளிரைத் தாங்கும் தன்மை அதிகம்.
இந்தப் புகைப்படத்தை இன்று பகிர்ந்துகொண்டதும் கார்த்திக் கேரளாவின் காட்டுவாழையின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார், அதுவும் ஒரு அதிசயம்தான். வாழைகளின் பேரினமான மியூஸாவில் முன்பிருந்து இப்போது என்செட்டே பேரினத்தின் கீழ் வரும் இந்த வாழைக் காட்டுமூதாதையின் பெயர் Ensete superbum. இதற்கு பாறை வாழை என்றும் பெயர்.

Ensete superbum மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் தீபகற்ப இந்தியாவின் மலைப்பகுதிகளிலும் பாறைச் சரிவுகள், செங்குத்தான பாறைகள், பாறை இடுக்குகள், கற்கள் நிறைந்த குன்றுகளில் இயல்பாக வளர்கிறது. சாதாரண வாழை வளமான, ஈரமான மண்ணை விரும்பும். இது பாறையிலேயே வேரூன்றி நிற்பதால் “பாறை வாழை” (Rock Banana) என்ற பெயர் வந்தது.
Ensete superbum என்னும் அறிவியல் பெயரின் காரணம்
Ensete – இது எத்தியோப்பியாவின் அம்ஹாரிக் (Amharic) மொழிச் சொல்லான “enset” என்பதிலிருந்து வந்தது. எத்தியோப்பியாவில் வளரும் Ensete ventricosum என்ற இனத்தை அங்குள்ள மக்கள் இப்பெயரால் அழைக்கிறார்கள். அந்த இனத்தின் தண்டும் கிழங்கும் அங்கே முக்கிய உணவு. ஆக, இந்தப் பேரினத்துக்குப் பெயர் ஆப்பிரிக்கத் தாவரத்தின் உள்ளூர்ப் பெயரிலிருந்து எடுக்கப்பட்டது. இந்தியத் தாவரத்துக்கும் அதே பேரினம் பொருந்துவதால் அதே பெயர் தொடர்கிறது.
superbum என்னும் சிற்றினப் பெயர் இலத்தீன் சொல்லான superbus என்பதிலிருந்து வந்தது. கம்பீரமான, மிகச் சிறந்த, பெருமிதமான, எடுப்பான தோற்றமுடைய என்றெல்லாம் பொருள் கொண்டது இந்தச்ச்சொல்.
12 அடி உயரம், பருத்த அடிப்பகுதி, பெரிய இலைகள், செம்பழுப்பு நிறப் பூவிதழ்கள் என்ற இதன் கம்பீரத் தோற்றத்தையே இது குறிக்கிறது.
இதை முதலில் Roxburgh என்பவர் Musa superba என்று Musa பேரினத்தில் விவரித்தார். பிற்காலத்தில் Cheesman என்பவர் இதை Ensete பேரினத்துக்கு மாற்றினார். அதனால் இன்றைய பெயர் Ensete superbum (Roxb.) Cheesman. அடைப்புக்குள் உள்ள Roxb. என்பது முதலில் பெயரிட்டவரைக் குறிக்கிறது. ஆகவே முழுப்பொருள்: “கம்பீரமான என்செட்டே” அல்லது “எத்தியோப்பிய வாழையின் இந்தியக் கம்பீர உறவினன்”
நம் வாழைக்கும் இந்தப் பாறை வாழைக்கும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
பாறை வாழையும் சாதாரண வாழையும்.
பாறை வாழை உண்மையில் Musa இனத்தைச் சேர்ந்தது அல்ல. இது Ensete என்ற தனிப் பேரினம். ஆனால் Musaceae குடும்பத்தில் வாழையின் நெருங்கிய உறவினர்.
இரண்டுக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு இனப்பெருக்கத்தில் உள்ளது. சாதாரண வாழையின் அடிக்கிழங்கிலிருந்து பக்கக்கன்றுகள் தோன்றுகின்றன. அவற்றின் மூலம் இவற்றின் சந்ததி தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
பாறை வாழைக்குப் பக்கக்கன்றுகள் இல்லை. ஒரே தண்டு மட்டும் வளர்கிறது, விதைகள் மூலம் மட்டுமே இனம் பெருகுகிறது.
போலித்தண்டின் வடிவத்திலும் வேறுபாடு உண்டு. சாதாரண வாழையின் தண்டு அடியிலிருந்து நுனி வரை ஏறக்குறைய ஒரே பருமனாக இருக்கும். பாறை வாழையின் அடிப்பகுதி பருத்து, மேலே செல்லச் செல்லச் சிறுத்து, குடுவை போன்ற தோற்றம் தரும். வறண்ட பருவத்தில் பாறை வாழையின் மேற்பகுதி முழுவதும் அழிந்துவிடுகிறது. கிழங்கு மட்டும் உயிருடன் இருந்து, மழை தொடங்கியதும் புதிய இலைகளை முளைக்கச் செய்கிறது. சாதாரண வாழையில் கிழங்கு தொடர்ந்து புதிய கன்றுகளை உருவாக்குவதால் செடி இடைவிடாமல் வாழ்வைத் தொடர்கிறது.
பூவிலும் வேறுபாடு தெரியும். பாறை வாழையின் பூவிதழ்கள் (bracts) உதிராமல் நிலைத்து நிற்கின்றன. சாதாரண வாழையில் பூக்கள் விரியும்போது இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடுகின்றன. சாதாரண வாழையின் நுனியில் பெரிய பூ மொட்டு (வாழைப்பூ) தொங்கும். பாறை வாழையில் அப்படித் தனியாகத் தொங்கும் பெரிய மொட்டு இல்லை.
காய்களிலும் இந்த வேறுபாடு தொடர்கிறது. பாறை வாழையின் காய்கள் சிறியவை, முக்கோண வடிவம் உடையவை. உள்ளே பெரிய கடினமான விதைகள் நிறைந்து, சதை மிகக் குறைவாக இருக்கும். அதனால் பழம் உண்ணத் தகுந்ததல்ல.
சாதாரண வாழையின் காய்கள் நீளமானவை. பயிரிடும் ரகங்களில் விதையற்ற இனிப்புச் சதை உண்டு. அதன் பழம், காய், பூ, தண்டு அனைத்தும் உணவாகப் பயன்படுகின்றன.
வாழிடத்திலும் இவை வேறுபடுகின்றன. பாறை வாழை பாறைச் சரிவுகளிலும் மலைப்பகுதிகளிலும் வளர்கிறது. சாதாரண வாழை பல்வேறு நிலங்களில், பெரும்பாலும் வளமான மண்ணில் வளர்கிறது.
குரோமோசோம் எண்ணிக்கையும் வேறு. இரண்டுமே டிப்ளாய்டு தான் என்றாலும் பாறை வாழையில் 2n = 18, சாதாரண வாழையில் பொதுவாக 2n = 22.
இரண்டும் ஒருமுறை பூத்துக் காய்த்தபின் அந்தத் தண்டு இறந்துவிடும் (monocarpic). ஆனால் சாதாரண வாழை பக்கக்கன்றுகள் (suckers) மூலம் தொடர்ந்து வாழ்கிறது. பாறை வாழைக்கு அந்த வசதி இல்லை, விதைகளே அதன் இனப்பெருக்க வழி. அதனால்தான் அதன் பழத்தில் கடினமான விதைகள் அதிகமாக உள்ளன.
இன்று வாழையடி வாழை நாள் எனக்கு.