
ஃபிஜி தீவின் ஒரு சிறு கிராமத்தில் அந்தி நேரம். கடற்கரையில் நெருக்கமாக வளர்ந்திருந்த ஆற்றுப்பூவரசு மரங்களால் சூழப்பட்டிருந்தது அந்தப் பனையோலைக் கூரையிடப்பட்ட, ‘பூர்’ (Bure) குடிசை. வெளியிலிருந்து வந்த கடற்காற்றுடன் வேர்களின் ஈர மணமும் மண் வாசமும் குடிசைக்குள் நிறைந்திருந்தன.
குடிசையின் தரையில் விரித்திருந்த , தாழம்பூ இலையால் பின்னப்பட்ட ‘இபே’ (Ibe) பாய்களில் ஆணும் பெண்ணுமாகப் பலர் குழுமி அமர்ந்திருந்தனர்.

குடிசையின் நடுவே ‘வெசி’ மரத்திலிருந்து கைவேலையாக உருவாக்கப்பட்டு, ஃபிஜி கலாச்சாரத்தில் தலைமுறை தலைமுறையாகப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படும் கால்கள் கொண்ட பெரிய மரக்கிண்ணமான ‘தநோவா’ (Tanoa) வைக்கப்பட்டிருக்கிறது. அதன் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் கிராமத்து மூத்த தலைவரான ‘துகா’ கடற்கரையோர ஆற்றுப்பூவரசு மரத்தின் பட்டையிலிருந்து உரிக்கப்பட்ட ‘வாவு’ (Vau) நார்களைத் தன் கைகளில் சுற்றிக்கொள்கிறார்.

மேலும் சில ஆண்கள் ஆற்றுப்பூவரசு, பெரணி மற்றும் சில நறுமண மூலிகை இலைகளை நாரில் கட்டி கைகளிலும் கழுத்திலும் அணிந்துகொண்டு சடங்கிற்குத் தயாராகிறார்கள். இடுப்பில் ‘வாவு’ மரப்பட்டை நாராலான இடையாடையை ஆண்கள் அனைவரும் அணிந்திருக்கிறார்கள்.
ஃபிஜியக் கலாச்சாரத்தில் “நிலம், அதில் வாழும் மக்கள், மற்றும் தாவரங்கள் அனைத்தும் பிரிக்க முடியாத ஒரே உயிரமைப்பு” என்னும் ‘வானுவா’ என்றொரு முதன்மையான கோட்பாடு உண்டு. எனவே தாவரங்கள் அவர்களின் அன்றாட வாழ்விலும் சடங்குகளிலும் விழாக்களிலும் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கின்றன.
ஃபிஜி நாட்டின் பாரம்பரிய முறைப்படி கவா தயாரித்துப் பரிமாறும் ஒட்டுமொத்தக் கலாச்சாரச் சடங்கான இந்த ‘யாக்கோனா வாகாவிடி’யின் போது, இயற்கைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் மரப்பட்டைகள், குரோட்டன் இலைகள் மற்றும் நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆடைகளை ஃபிஜி மக்கள் உடுத்துகிறார்கள். தேங்காய்ச்சிரட்டையை எரித்துக் கிடைக்கும் கருஞ்சாம்பலைக் குழைத்து அனைவரும் முகத்தில் வரிகளையும் பொட்டுகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்,

அந்த அமைதியான அந்திப் பொழுதில், சடங்கின் தொடக்கமாக கிராமத்தின் மூத்த தலைவரான ‘துகா’ வின் குரலில் ஃபிஜிய மொழியின் பாரம்பரியப் பாடல் எழுகிறது.
“Bula vinaka, bula re…
Yaqona tabu, yaqona tabu…
Vaka turaga na nodada Vanua…”
உங்களுக்கு நல்வாழ்த்துகள், இனிய நல்வாழ்வு உரித்தாகட்டும்…
இது புனிதமான கவா, இது தூய்மையானது…
அரச மாண்பும் பெருமையும் மிக்கது நமது தாய் நிலம் …
அந்த நீண்ட பாடலின் இறுதியில் “இந்த மண்ணின் தெய்வங்களே, எங்களின் தலைவரே, இந்தத் தூய வேர்ப்பானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இயற்கையையும் மூதாதையர்களையும் வாழ்த்திப் பாடும் வரிகள் ஒலித்ததும், சுற்றிலும் வட்டமாக அமர்ந்திருக்கும் மூத்தவர்கள் அனைவரும் தங்கள் உள்ளங்கைகளைக் கிண்ணம் போலக் குவித்துத் தாளம் எழுப்புகிறார்கள். சாதாரணக் கைதட்டல் போலல்லாமல், ஆழமான ஒலியாக எழும் அந்த ‘கொபோ’ (Cobo) கைத்தாளம் மூதாதையர்களின் ஆன்மாவை வணங்கி, இயற்கையிடம் அமைதியைக் கோரும் ஃபிஜித்தீவின் பிரத்யேகப் பண்பாட்டுத்தாளம்.

அந்த தாளத்தோடு தநோவா மரக்கிண்ணத்தின் குழிவில் கவா வேர்ப்பொடியும் தண்ணீரும் கலக்கப்பட்டு, வாவு நார்ச்சல்லடையில் சாறு பிழியபடுகிறது. சாறு இறங்கும் சலசலப்பும் கொபோ கூட்டுத்தாளமுமாக கவா என்னும் அந்தத் தூய வேர்ப்பானம் தயாராகிறது.
பசிபிக் மொழியின் தொன்மரபுச் சொல்லான ‘கவா’ (kawa) என்பதற்கு “கசப்பு” என்று பொருள். இந்தப் பெயர் இந்த வேர்ப்பானத்தின் தீவிரமான கசப்புச் சுவையைக் குறிக்கிறது
ஃபிஜி மொழியில் இதற்கு நாக்கை மரத்துபோகச்செய்யும் கசப்புவேர் என்னும் பொருள் கொண்ட ‘யாகோனா’ (Yaqona) என்று தனிப்பெயர் இருந்தாலும், கவா தான் பரவலான பசிபிக் வட்டாரப் பயன்பாட்டில் இருக்கிறது.
கவா என்ற பொதுப்பெயர் தென் பசிபிக் மொழிகளின் பழைய சொல்வடிவங்களுடன் தொடர்புடையதாக மொழியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொழியியலாளர் ஜான் டி. லிஞ்ச் (John D. Lynch) 2002-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில், kava என்ற சொல் பண்டைய பெருங்கடலிய மொழியில் இருந்திருக்கக்கூடிய kawari என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். அந்தச் சொல், தனித்துவமான நரம்பியல் அல்லது சடங்குசார் பண்புகளைக் கொண்ட வேரைக் குறித்திருக்கலாம் அல்லது அது காட்டுக் கவாவையோ வேறு தாவரங்களையோ குறித்திருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் ஜான்
ஃபிஜியின் தேசிய பானமான கவா அவர்களின் சமூக உறவுகள், சடங்குகள், நம்பிக்கைகள், விருந்தோம்பல், பொருளாதாரம் ஆகியவற்றோடு மிக நெருக்கமாகப் பிணைந்திருக்கிறது.

தென் பசிபிக் தீவுகளில் ஒன்றான வனுவாட்டுவைத் தாயகமாகக் கொண்ட Piper methysticum என்னும் கவா தாவரத்தின் வேர் மற்றும் வேர்க்கிழங்குகளிலிருந்து இந்தப் பாரம்பரியப் பானம் தயாரிக்கப்படுகிறது. மிளகுக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்ச்சாறு, மனிதர்களின் மனநிலை மற்றும் நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இது பசிபிக் தீவுகளின் பாரம்பரியச் சடங்குகளிலும் சமூகக் கூடுகைகளிலும் தனித்த சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப்பானம் சமோவா தீவில் ஆவா (Ava), ஹவாயில் ஆவா (ʻAwa) எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
கவாவை அறிந்துகொள்ள, அதன் தாவரவியல் அடையாளத்திலிருந்து அதன் பெயரின் பொருள், காட்டு மூதாதை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலப்பின வளர்ப்பு, தொன்மக் கதைகள், பண்பாட்டு முக்கியத்துவம், வேதிப்பொருட்கள், பயன்பாடுகள் மற்றும் பக்கவிளைவுகள் எனப் பல தளங்களுக்குள் பயணிக்க வேண்டியிருக்கிறது.
கவா ஒரு மெதுவாக வளரும், பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய வெப்பமண்டலச் செடி. இதன் இலைகள் அகலமாகவும் இதய வடிவிலும் இருக்கும். இலைகளில் நரம்பமைப்பு தெளிவாக அமைந்திருக்கும்.
கவா செடியில் அதன் தடிமனான வேர்களும் வேர் அடிக்கிழங்கும், முக்கியமானவை. வேரில் இருக்கும் வேதிப்பொருள்களே பானத்தின் நரம்பு மண்டலத் தாக்கங்களுக்குக் காரணமாக இருக்ன்றன.

Piper methysticum என்னும் மனிதர்களின் மனநிலை மற்றும் உணர்வுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்ட இதன் அறிவியல் பெயரை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் புரிந்துகொள்ளலாம்.
Piper என்பது மிளகைக் குறிக்கும் லத்தீன் பெயர். (கருமிளகான Piper nigrum இதே பேரினத்தைச் சேர்ந்தது.) methysticum என்னும் சிற்றினப்பெயர் கிரேக்க மொழியின் “போதையை ஏற்படுத்தக்கூடியது” என்று பொருள் படும் methystikos என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.
ஜெர்மானிய இயற்கையியலாளர் ஜார்ஜ் ஃபோர்ஸ்டர் (Georg Forster), 18-ம் நூற்றாண்டில் (ஜேம்ஸ் குக் உடன் தனது இரண்டாம் உலகப் பயணத்தின் போது) இந்தத் தாவரத்தை அறிவியல் உலகிற்கு முறையாக அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர். இது 1786- ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவியல் பெயரிடப்பட்டது.

“போதையுணர்வை ஏற்படுத்தும் மிளகுத் தாவரம்” என்று கவா பொருள் கொண்டிருந்தாலும், காவாவின் தாக்கம் மதுவின் தாக்கத்திலிருந்து வேறுபட்டது.
இன்று பசிபிக் தீவுகளில் பயிரிடப்படும் கவா எங்கிருந்து தோன்றியது?
இப்போது பயிரிடப்படும் Piper methysticum தாவரம், அதன் காட்டு மூதாதையான Piper wichmannii -லிருந்து உருவாக்கப்பட்டது.
Piper wichmannii என்பது நியூ கினியா, சாலமன் தீவுகள், வனுவாட்டு உள்ளிட்ட மெலனேசியப் பகுதிகளுடன் தொடர்புடைய காட்டுத் தாவரம். இதன் சிற்றினப்பெயர் ஹென்ரிச் விச்மேன் (Heinrich Wichmann) என்னும் ஜெர்மன் நாட்டுப் புவியியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரை சிறப்பிக்கும் பொருட்டு வைக்கப்பட்டது.*
20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பசிபிக் தீவுகளில் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகளின் போது, கவா தாவரத்தின் காட்டு இன மாதிரிகளை (Wild specimens) முதன் முதலில் சேகரித்து வகைப்படுத்தியவர் இவரே. புகழ்பெற்ற தாவரவியலாளர் கசிமிர் தே காண்டோல் (Casimir de Candolle), விச்மேன் சேகரித்து அனுப்பிய அந்தத் தாவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டுதான், இந்த காட்டு இனத்திற்கு Piper wichmannii என்று முறையான அறிவியல் பெயரிட்டு ஆவணப்படுத்தினார்.
Piper methysticum காட்டுமூதாதையிலிருந்து பெறப்பட்ட”கலப்பினப்” பயிர் அல்ல, மாறாக, மனிதர்களின் தேர்ந்தெடுத்த வளர்ப்பு முறை -Selective Cultivation மூலம் உருவானது.
கவா பானம் வனுவாட்டு பழங்குடியினரால் கி.மு. 1000 அளவில் கண்டுபிடிக்கப்பட்டது. தாவரவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளின்படி (குறிப்பாக தாவரவியலாளர் டாக்டர் வின்சென்ட் லெபோட் போன்றோரின் ஆய்வுகள்). சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் பெருங்கடல் பகுதியில் குறிப்பாக வனுவாட்டு தீவுகளில், காட்டுக் கவாத் தாவரமான Piper wichmannii-ல் சில இயற்கை மரபணு மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றமடைந்த தாவரங்களிலிருந்து கிடைத்த பானம் மனிதர்களுக்கு அதிக அமைதியையும், நல்ல உணர்வையும் தருவதை பசிபிக் தீவு மக்கள் கண்டறிந்தனர். அதனால், அந்த குறிப்பிட்ட செடிகளின் தண்டுப் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து, தொடர்ந்து பயிரிட்டு வளர்த்தனர்.

பசிபிக் பெருங்கடலில் ஆயிரக்கணக்கான தீவுகள் பரவிக் கிடக்கின்றன. அவற்றுக்கிடையே மக்கள் மேற்கொண்ட கடற்பயணங்கள், குடியேற்றங்கள், உணவுப் பயிர்கள் மற்றும் பயனுள்ள தாவரங்களின் பரிமாற்றங்கள் ஆகியவை அப்பகுதியின் உயிரியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை வடிவமைத்தன.
தாவரவியல் மற்றும் மொழியியல் ஆய்வுகள், வடக்கு வனுவாட்டுவிலிருந்து மனிதர்களின் கடற்பயணங்கள், குடியேற்றங்கள், தாவரப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் வழியாக கவா பசிபிக் தீவுகளின் பல பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம் என்கின்றன. பிஜி, டோங்கா, சமோவா, வனுவாட்டு, ஹவாய் உள்ளிட்ட பல பசிபிக் சமூகங்களில் கவா சாகுபடியும் அதனுடன் தொடர்புடைய பான மரபுகளும் இப்படித்தான் பரவி வளர்ந்தன.
ஆனால் எல்லாத்தீவுகளிலும் கவாவின் பெயர், தயாரிப்பு முறை, சடங்குகள், சமூகப் பயன்பாடுகள் ஒரே மாதிரியாக இல்லை.
காவாவைப் பற்றிய தொன்மக் கதைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தீவுச் சமூகத்திலும் உள்ளூர் மரபுகள், கடவுள்கள், மூதாதையர் பற்றிய நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கவாவின் கதைகளும் மாறுபடுகின்றன.
பிஜியப் பண்பாட்டில், தேகெய் (Degei) என்ற தெய்வம் தொடர்பான பிரபலமான தொன்மக்கதை இருக்கிறது.
உலகின் உயர்ந்த படைப்பாளி மற்றும் ஆதிப் பெருநாகக் கடவுளான தேகெய் மனிதர்களுக்கு வழங்கிய தெய்வீகப் பரிசுதான் கவா செடி. காடுகளிலும் மலைகளிலும் தொடர் போர்களால் தொல்குடிமக்கள் அடித்துக்கொண்டு அழிந்த காலகட்டத்தில், மனிதர்களின் மனக்கசப்பையும் வன்முறையையும் தணித்து அவர்களை அமைதிப்படுத்தவும், தெய்வங்களுடன் தொடர்பில் வைத்திருக்கவும் இந்தச் செடியைத் தேகெய் பூமிக்கு அளித்தார் என்கிறது அந்தத் தொன்மம்.
மனிதர்கள் தங்களிடையே உள்ள பகையை மறந்து ஒரே வட்டமாக அமர்ந்து கவாவைச் சுவைப்பதன் மூலம், கடவுளின் அருளும் அமைதியும் அவர்களுக்குக் கிடைக்கும் என்பது அங்கே நிலைத்துவிட்டிருக்கும் ஒரு மரபு.
பிஜியில் காவா ஒரு பானம் மட்டுமல்ல; அது சமூக உறவுகளை உருவாக்கும் ஒரு பண்பாட்டுக் கருவி. பாரம்பரிய நிகழ்வுகள், விருந்தோம்பல், பேச்சுவார்த்தைகள், குடும்பக் கூடுகைகள், கிராமக் கூட்டங்கள் போன்ற பல சூழல்களில் அது இடம் பெறுகிறது.
பிஜியில் செவுசெவு (Sevusevu) என்பது ஒரு கிராமத்திற்கோ சமூகத்திற்கோ வருகை தரும் விருந்தினர்கள், அங்குள்ள தலைவர்களிடம் அல்லது சமூகப் பிரதிநிதிகளிடம் மரியாதையுடன் தங்களை அறிமுகப்படுத்தும் பாரம்பரிய நிகழ்வு. இதன் ஒரு பகுதியாக கவா வேர்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்தப் பரிசு விருந்தினர்கள் அந்தச் சமூகத்தின் மரபுகளை மதிக்கிறார்கள் என்பதையும், அங்குள்ளவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
ஃபிஜியில் கவா அருந்துவது ஒரு சமூகக் கூட்டமைப்பின் வெளிப்பாடு. வட்டமாக அமர்ந்து கவாவை அருந்திக்கொண்டே நாட்டின் அரசியல், சமூகப் பிரச்சினைகள் முதல் குடும்ப நிகழ்வுகள் வரை கலந்துரையாடும் பண்பாட்டிற்கு ‘தலனோவா’ என்று பெயர்.
கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும், உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் இந்தத் தலனோவா நிகழ்வுகளே முதன்மையான களமாக அமைகின்றன.
ஃபிஜி கலாச்சாரத்தில் ஏதேனும் ஒரு தவறு நடந்து, இரண்டு குடும்பங்கள் அல்லது கிராமங்களுக்கு இடையே பிணக்கு ஏற்பட்டால், தவறு செய்தவர் கவா செடியின் காய்ந்த வேர்களைக் கொண்டு சென்று மன்னிப்பு கேட்பார். இந்தச் சடங்கிற்கு ‘சொரு’ என்று பெயர். கவா வேரை ஏற்றுக்கொண்டால், தவறு முழுமையாக மன்னிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள்.
கவா சடங்கின் தொடக்கத்தில் பழங்குடித் தலைவர்களுக்கு முதல் கவா கோப்பை வழங்கி மரியாதை செய்யப்பட்டாலும், அந்த வட்டத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஒரே பாத்திரத்தில் இருந்துதான் கவா பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது சமூகத்தில் உள்ள அனைவரையும் சமமாக மதிக்கும் உணர்வை வளர்க்கிறது.

கவாவில் உள்ள ‘கவாலக்டோன்கள்’ மன அழுத்தத்தைக் குறைத்து, உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் இயல்புடையவை. மது அல்லது பிற போதைப்பொருட்களைப் போல இது மூளையின் தெளிவைக் கெடுப்பதில்லை. இதனால், நாள் முழுவதும் உழைத்த மக்கள் மாலையில் உடற்சோர்வைப் போக்கவும், நிம்மதியான உறக்கத்தைப் பெறவும் கவாவை நாடுகிறார்கள்.
ஃபிஜியர்களின் ‘வானுவா’ தத்துவத்தின்படி, நிலமும் அதில் உள்ள தாவரங்களும் மூதாதையர்களின் ஆன்மாக்கள் வாழும் இடங்கள். எனவே, கவா செடியை வெட்டி எடுப்பதற்கு முன், அந்தத் தோட்டத்தின் அல்லது காட்டின் மூதாதையர்களிடம் மனதார அனுமதி கேட்பார்கள்.
“இந்தத் தூய வேரைக் கொண்டு நாங்கள் மனிதர்களின் அமைதிக்காகவும் நல்லுறவுக்காகவும் சடங்கு செய்யப் போகிறோம்; இந்தத் தாவரத்தை அறுவடை செய்ய எங்களுக்கு அனுமதி தாருங்கள்” என்று அமைதியான முறையில் வேண்டிக்கொள்வார்கள்.
அறுவடைக்காக ஒரு கவா தோட்டத்திற்குள் நுழையும்போது, கைவசம் இருக்கும் கவா வேர்ப்பொதியையோ அல்லது புகையிலை இலையையோ ஒரு சிறிய காணிக்கையாக அந்த நிலத்திற்குச் செலுத்துவது அவர்களின் வழக்கம். “நிலத்திடம் இருந்து எதை எடுக்கிறோமோ, அதற்குப் பதிலாக மரியாதையைக் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்ற தொல்மரபின் அடிப்படையில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. கவா செடியின் வேர்கள் முழு முதிர்ச்சி அடைந்திருந்தால் மட்டுமே மிகுந்த கவனத்துடன் வெட்டி எடுப்பார்கள்.
கழுவிச் சுத்தமாகப்பட்ட கவா வேர்கள் வெட்டி, நசுக்கப்பட்டு உலர்த்தி அரைக்கப்பட்டு பொடியாக்கி, வெசி (Intsia bijuga) மரத்திலிருந்து உருவாக்கப்பட்ட தநோவா மரக்கிண்ணத்தில் குழியிலிடப்பட்டு தண்ணீருடன் கலக்கப்படுகின்றன. பின்னர் வாவு மரப்பட்டை நார்த்துணியால் வடிகட்டப்பட்ட சாம்பல்-மஞ்சள் நிறப் பானம் தநோவாவில் சேகரிக்கப்படுகிறது. சிறிய தேங்காய்ச் சிரட்டைக் கிண்ணமான பிலோ (bilo) மூலம் அது பரிமாறப்படுகிறது.

இந்தத் தயாரிப்பு முறை வெறும் சமையல் முறையாக அல்லாமல் இயற்கையோடு இணைந்து செய்யப்படும் ஒரு புனிதச் சடங்காகச் செய்யப்படுகிறது. இந்த காவு பானச்சடங்கு பெரும்பாலும் மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகுதான் நடைபெறும்.
கவாவுக்கு உடலைத் தளர்த்தி, அமைதிப்படுத்தும் இயல்பு உண்டு என்பதால் மக்கள் தங்கள் அன்றாட விவசாய வேலைகளை முடித்துவிட்டு, மாலை வேளையில் மன அழுத்தத்தைப் போக்கவும் நிம்மதியாக உறங்கவும் கவாவைப் பருகுகிறார்கள்.
அரசு விழாக்கள், புதிய விருந்தினர்களை வரவேற்கும் அல்லது பழங்குடித் தலைவர்களின் முக்கியமான கூட்டங்கள் நடைபெறுகையில் பகல் நேரத்திலும் கவா தயாரிக்கப்படுகிறது.
சடங்குகளில் கவா பாத்திரத்தைச் சுற்றி அமர்ந்து பிழிந்து தரும் பணிகளை ஆண்களே முதன்மையாகச் செய்வார்கள். பெண்கள் கவாவை விருந்தினர்களுக்குக் கோப்பைகளில் ஊற்றி உபசரிப்பதில் ஈடுபடுகிறார்கள். கவா அருந்தும் நிகழ்வுகளில் பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் அமர்வதும், பேசுவதும், பானத்தைப் பரிமாறுவதும் முக்கியமானதாக இருக்கிறது.
கவா முழுக்க முழுக்க இயற்கையான வேர்ப்பொடியைத் தண்ணீரில் கலந்து வடிகட்டப்படும் ஒரு சாறு மட்டுமே. இதில் ஆல்கஹால் இல்லை எனவே இது ஒரு மதுபானம் அல்ல, மனநிலை மற்றும் உடல் செயல்பாடுகளை மாற்றக்கூடிய உளச்செயல்பாட்டுத் தாவரப் பானம்தான் கவா.
கவா பொதுவாகத் தயாரிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் பருகப்பட்டுவிடும். இதில் இயற்கையான நொதித்தல் இல்லாததால், புளிக்கவைக்கும் பாக்டீரியாக்களோ அல்லது ஈஸ்ட்களோ இதில் பங்காற்றுவதில்லை. இது தாவரச் சாற்றின் நேரடிப்பானம். தண்ணீரில் கரைக்கப்பட்ட கவா சாற்றை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க முடியாது. சில மணி நேரங்களுக்கு மேல் வைத்தால் அது கெட்டுப்போய்விடும், அதன் சுவையும் தன்மையும் மாறிவிடும்.
வெயிலில் உலர்த்திய வேர்த்துண்டுகளையும் வேர்ப்பொடியையும் பல ஆண்டுகளுக்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
கவா (Piper methysticum) தாவரத்தின் வேர்களில் காணப்படும் முக்கிய வேதிச்சேர்மங்கள் ஆறு வகையான கவாலாக்டோன்கள். மன அழுத்தத்தைக் குறைத்து, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் கவாவின் பண்புகளுக்கு இந்த கவாலாக்டோன்களே காரணம்.
- முதன்மைச் சேர்மமான கவைன் (Kavain), மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அமைதிப்படுத்தி, தசைத் தளர்வைத் தூண்டுகிறது.
- இதன் துணைச் சேர்மமான டைஹைட்ரோகவைன் (Dihydrokavain), மூளையின் நரம்பியல் செயல்பாடுகளைச் சீரமைப்பதுடன், கவாவின் அமைதியளிக்கும் பண்புகளை மேலும் தீவிரப்படுத்துகிறது.
- மெத்திஸ்டிசின் (Methysticin) மற்றும் டைஹைட்ரோமெத்திஸ்டிசின் (Dihydromethysticin) ஆகிய இரண்டு சேர்மங்களும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பதற்றத்தைக் குறைத்து, நரம்பணுக்களின் மிதமிஞ்சிய தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துகின்றன.
- யாங்கோனின் (Yangonin) உடலின் நரம்பியல் சமிக்ஞை அமைப்புகளுடனும், மனநிலையை முறைப்படுத்தும் ஏற்பிகளுடனும் (Receptors) நேரடியாக வினையாற்றி, மனதிற்கு அமைதி உணர்வைத் தருகிறது.
- இதனுடன் இணைந்து செயல்படும் டெஸ்மெத்தாக்ஸி யாங்கோனின் (Desmethoxy yangonin), மூளையில் டோபமைன் போன்ற நரம்புக்கடத்திகளின் அளவைச் சீராகப் பராமரிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, இந்த ஆறு கவாலாக்டோன்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு மனித உடலுக்கு தசை மற்றும் நரம்புத் தளர்வையும் அளிக்கும் மருத்துவப் பானமாகிறது.
கவா அருந்துகையில் வாயில் தற்காலிக மரத்துப்போதல் அல்லது கூச்ச உணர்வும் உண்டாகும். கவாவை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைச்சுற்றல், மயக்கம், செரிமானக் கோளாறு அல்லது உடல் ஒருங்கிணைப்பில் குறைபாடு ஆகியவை உண்டாகக்கூடும். அதிக அளவில், நீண்டகாலம் பயன்படுத்தும்போது தோல் வறட்சி, செதில் போன்ற தோல் மாற்றங்கள் கல்லீரல் பாதிப்பு ஆகியவை உண்டாகலாம்..
மதுபானம் அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளுடன் கவாவைச் சேர்த்துப் பயன்படுத்தக்கூடாது. கல்லீரல் நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனையின்றிக் கவாவை அருந்தக்கூடாது.
கவாவின் காட்டுமூதாதையிலும் காவாலாக்டோன்கள் காணப்படுகின்றன. எனினும், அதன் வேதியியல் அமைப்பு வளர்ப்புக் காவாவிலிருந்து வேறுபடுகிறது எனவே, இரண்டையும் ஒரே தாவரமாகவோ ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தக் கூடியவையாகவோ கருதக்கூடாது
கவா பசிபிக் தீவுகளின் பண்பாட்டின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
கவாவை வெறும் கலாச்சாரத்தோடு நிறுத்தாமல், அதன் உலகளாவிய தரம் மற்றும் பெயரைப் பாதுகாப்பதற்காக, உருவாக்கப்பட்ட ‘ஃபிஜி கவா மசோதா’ (Fiji Kava Bill) தற்போது ஃபிஜி நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. இது பிஜியின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கவா தொழில்துறையை முறைப்படுத்தவும், பாதுகாக்கவும், வர்த்தக ரீதியாக மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒரு முக்கியமான சட்ட முன் வடிவம்.
கவா தொழில்துறையை நிர்வகிக்கவும், விவசாயிகள், பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உரிமங்கள் வழங்கவும், தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தவும் ஒரு பிரத்யேக அமைப்பை உருவாக்குவது இதன் முதன்மையான நோக்கம்.
கவா சாகுபடி, வேர் பதப்படுத்துதல், உள்நாட்டு விற்பனை முதல் சர்வதேச ஏற்றுமதி வரை முழு உற்பத்திச் சங்கிலியிலும் கட்டாய உரிம முறை, தயாரிப்பு கண்காணிப்பு மற்றும் கடுமையான தரக் கட்டுப்பாட்டு முறைகளையும் இம்மசோதா அறிமுகப்படுத்துகிறது
வெளிநாடுகளில் போலியான அல்லது தரமற்ற பானத்தை ‘ஃபிஜி கவா’ என்ற பெயரில் விற்பதைத் தடுப்பதற்கான பிரத்யேக தரக்கட்டுப்பாடுகளும், ‘ஃபியூஜி யாகோனா கவுன்சில்’ (Fiji Yaqona Council) அமைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளும் இதன் மூலம் எடுக்கப்படும்
இன்று அக்டோபர் 10-ம் தேதி பிஜி நாடு தனது சுதந்திரத்தைப் பெற்ற நாளாகவும் (1970), பிரிட்டிஷ் ஒப்பந்த நாளாக மாறிய வரலாற்று நாளாகவும் (1874) போற்றப்படும் ‘பிஜி நாள்’ (Fiji Day) ஆக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், வழக்கத்துக்கு அதிகமாக கவா அருந்தும் நிகழ்வுகளும், நட்புறவு உரையாடல்களும், தேசியக் கொண்டாட்டங்களின் முக்கியப் பகுதியாக விமரிசையாக நடைபெறும்.


PC-தற்போது ஃபிஜியில் இருக்கும் ஜெ
மேலதிக வாசிப்புக்கான நம்பகமான ஆதாரங்கள்
1. National Center for Complementary and Integrative Health — கவாவின் பயன்பாடுகள், மருத்துவ ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்பு: Kava: Usefulness and Safety.
2. Museum of Archaeology and Anthropology, University of Cambridge — பிஜியின் யகோனா மரபு, தானோவா மற்றும் சடங்குகள்: Yaqona.
3. John D. Lynch (2002) — Potent roots and the origin of kava, Oceanic Linguistics: ஆய்வின் சுருக்கம்.
4. Dan F. Orcherton (2012) — Forging Fijian Camaraderie: The Cultural Significance and Social Uses of Kava (Yaqona): முழு ஆய்வுக் கட்டுரை.
5. US National Library of Medicine — தாவரத்தின் வேதிப்பொருள்கள், உருவவியல் மற்றும் பயன்பாடு தொடர்பான ஆய்வுத் தகவல்கள்: Kava: Botanical and exposure information.
* தாவரவியல் வரலாற்றில் வழக்கமாக, இயற்கையில் இருக்கும் காட்டுத் தாவரத்தைககண்டுபிடித்துப் பெயரிட்ட பிறகே, அதிலிருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட பயிர் வகைகளுக்குப் பெயரிடுவார்கள். ஆனால், கவா பெயரிடுதலில் இது தலைகீழாக நடந்தது.
18-ம் நூற்றாண்டில் (1770-களில்) கேப்டன் ஜேம்ஸ் குக்கின் இரண்டாவது உலகப் பயணத்தின் போது, அவருடன் வந்த ஜெர்மனியத் தாவரவியலாளர் Georg Forster பசிபிக் தீவுகளில் மக்கள் வளர்த்து வந்த கவா செடியை முதன்முதலில் சேகரித்து 1786- ல் அறிவியல் ரீதியாக Piper methysticum எனப் பெயரிட்டார். தீவுவாசிகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நறுக்கிய தண்டு மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஒரு வளர்ப்புப் பயிரைத்தான் (Domesticated Cultigen) ஐரோப்பிய தாவரவியலாளர்கள் முதலில் சந்தித்தனர்.
கவாவின் பிறப்பிடமான மெலனீசியக் தீவுகளின் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு 20ம் நூற்றாண்டில்தான் (1903-ல்) சுவிஸ் தாவரவியலாளர் காசிமிர் டி கண்டோல் (Casimir de Candolle) போன்றவர்கள் சென்று ஆய்வு செய்தனர். அங்கிருந்த காடுகளில் இயற்கை முறையில் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்து தானாக வளர்ந்த அதன் காட்டுமூதாதையைக் கண்டறிந்து, 19.-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் அதற்கு ‘பைப்பர் விச்மானி’ (Piper wichmannii) எனப் பெயரிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.