குளித்தலை ஷண்முகம் அவர் வயலிலிருந்து மெய்யாகவே தூயதான, நஞ்சில்லாமல் விளைவித்த தூயமல்லி கைக்குத்தல் அரிசியைக் கொடுத்திருந்தார். பாண்டிச்சேரியிலிருந்து குளித்தலை வந்து, அவரது பிரம்மாண்டமான மாளிகை வீட்டிலிருந்து அரிசியை எடுத்துக்கொண்டுதான் வீடு வந்தேன். இன்றுதான் இந்த அரிசியைச் சமைத்தேன். கைக்குத்தல் அரிசியின் சுவையே அலாதிதான்; அதுவும் நஞ்சற்றது என்பதால் இன்னும் சிறப்பு.

இதற்கு முன்பு ஒரு நண்பர் ஒரு மூட்டை கைக்குத்தல் அரிசி கொடுத்தனுப்பி இருந்தார், கோவிட் முடிந்த சமயம் என்று நினைக்கிறேன். அச்சமயத்தில் பெல்ஜியம் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வருவதாகத் தகவல் சொன்னபோது நான் கல்லூரியில் இருந்தேன். மதியம் விடுப்பெடுத்துக்கொண்டு வந்து, அன்று சனிக்கிழமை என்பதால் கொள்ளுப்பருப்பு கடைந்து, ரசம், பீட்ரூட் பொரியல் செய்து, கைக்குத்தல் அரிசியைக் கஞ்சி வடித்துச் சமைத்திருந்தேன். சனிக்கிழமை எப்போதும் கொங்குப் பகுதியில் கொள்ளுப்பருப்பு செய்வது வழக்கம்.

நண்பருடன் அவரது நண்பருமாக இருவரும் வந்திருந்தார்கள். அவர்கள் இந்தியா வரும்போதெல்லாம் பொள்ளாச்சியின் பிரபல நிறுவனமொன்றிலிருந்து அவர்களுக்குக் கார் கொடுத்தனுப்புவார்கள். அன்றும் அப்படித்தான்; ஓட்டுநர் வெள்ளைச் சீருடையில் இருந்தார். அவரும் மதியம் சாப்பிட்டிருக்கவில்லை. எனினும் எத்தனை அழைத்தும் உள்ளே விருந்தினர்களுடன் அமர்ந்து சாப்பிட மறுத்துவிட்டார். எனவே  திண்ணையில் இருக்கும், நான் காபி குடிக்கும் எனது பிரியத்துக்குரிய வட்ட கிரானைட் மேசையில், இலை போட்டு ஒரே சமயத்தில் அவருக்கும் பரிமாறி உள்ளும் புறமுமாக நடந்துகொண்டிருந்தேன்.

மறுசாப்பாடு போட வெளியே வந்தபோது அந்த ஓட்டுநர் தோளில் அரட்டை அரங்கம் விசு போலச் சின்ன டவல் போட்டிருந்ததை எடுத்துக் கண்ணையும் மூக்கையும் துடைத்துக்கொண்டே, “அம்மா,” என்று குரல் கமற, “நீங்களாம்மா கொள்ளுப்பருப்பு கடைஞ்சீங்க?” என்றார். “ஆமாங்க, இங்கே வீட்டில் எப்போதும் சமையல் நான்தான்” என்றேன். மீண்டும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “அப்படியே இந்தக் கைக்குத்தல் அரிசிக்குக் கொள்ளுப்பருப்புமா எங்கம்மா கைப்பக்குவம்மாதிரியே இருக்குங்க, இப்படித்தான்; இப்படியேதான் எங்கம்மா கொள்ளு சமைச்சுப் பக்கத்திலேயே நின்னுட்டு பரிமாறுவாங்க. அவங்க போனதுக்கப்புறம் அதே மாதிரி இன்னிக்குத்தான் சாப்பிடறேன்” என்றார். 

நான் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தேன். பின்னர் சமாளித்துக்கொண்டு, “இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைச்சு ரசம் ஊத்தட்டுமா?” என்றேன். “சாப்பாடு போடுங்க, கொள்ளு இருக்காம்மா?” என்றார். “இருக்குங்க, நிறையவே கடைஞ்சிருக்கேன்” என்றேன். “ரசம் வேண்டாம்மா, கொள்ளுப்பருப்பே ஊத்துங்க” என்றார். மீண்டும் கண்ணையும் மூக்கையும் துடைத்துக்கொண்டே சாப்பிட்டார்; மறுமுறையும் சாப்பாடு வாங்கி, கொள்ளுப்பருப்பையே வாங்கிக்கொண்டார். சுத்தமாக சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம் ஏதோ யோசித்துவிட்டு இலையை மடக்கி எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனார். 

என்னவோ எனக்கு நெஞ்சில் கனமாக அடைத்துக்கொண்டதுபோலவே இருந்தது. பின்னர் விருந்தினர்கள் மாலை 5 மணிவாக்கில் புறப்படும்வரை அரப்பு மரத்தடி மரப் பெஞ்சில் உட்கார்ந்திருந்து, கையைக் கட்டிக்கொண்டு எதிரில் இருந்த தென்னை மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். 

புறப்படுகையில் என்னைப் பார்த்து,  கைகூப்பி வணங்கி “அம்மா வரட்டுங்களா! மறக்கவே மாட்டேன் உங்களையும் இந்தச் சாப்பாட்டையும்” என்றார். நானும் கைகூப்பி விடைகொடுத்தேன். 

இப்போது சில வருடங்களாக, மகன்களை விமான நிலையத்திலும் ரயிலடியிலும் பேருந்து நிலையத்திலும் அனுப்பிவைத்துவிட்டுத் திரும்புகையில், அவரது அடிபட்டதுபோல் சிவந்து கன்றிய முகத்தையும் கண்ணீர் தளும்பிய கண்களையும் நினைத்துக்கலங்குகிறேன்.