
க்னேயஸ் பாம்பேயஸ் மாக்னஸ் என்கிற பாம்பே, ரோமானியக் குடியரசு கண்ட மிகச் சிறந்த தளபதிகளில் ஒருவர். இளம் வயதிலேயே சிசிலி, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் நடந்த பெரும்போர்களில் வெற்றி பெற்றதால் “மாக்னஸ்” (பெரியவர்) என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஸ்பெயினில் நடந்த போரிலும், மத்தியதரைக் கடலைப் பீடித்திருந்த கடற்கொள்ளையரை ஒடுக்கியதிலும் அவர் பெரும்புகழ் பெற்றார். இந்தப் புகழால் கி.மு. 66-ல், கருங்கடலின் தென்கரையிலிருந்த பாண்டஸ் அரசின் மன்னன் ஆறாம் மித்ரிடேட்ஸுக்கு எதிரான பல தொடர்ப் போர்களின் முழுப் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் போரில் அவர் மித்ரிடேட்ஸின் படையை முறியடித்து, பாண்டஸ் பகுதிகளில் தம் படைகளை நிறுத்தி நகரங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றிக்கொண்டிருந்தார்.
அந்தக் காலத்தில் (சுமார் கி.மு. 66–64) ஒரு சமயம், அவருடைய படைப்பிரிவுகள் டிரபிசஸ் நகரைச் சுற்றிய மலைநாட்டு வழியாகச் சென்றன. படையினர் பசியிலும் தாகத்திலும் வெகுவாகக் களைத்திருந்தனர்.
அங்கு வாழ்ந்த ஹெப்டகோமெட்டாய் (“ஏழு கிராமத்தார்”) என்ற மலைக்குடிகள் அவர்கள் வரும் பாதையோரத்தில் தேன் நிரம்பிய குடுவைகளை ஏராளமாக வைத்துவிட்டுப் பதுங்கிக்கொண்டனர். பசியில் களைத்திருந்த வீரர்கள் அதை மலைக்குடியினரின் வழக்கமான விருந்தோம்பல் என்று கருதி அந்தத் தேனை அருந்தினார்கள். ஆனால் அருந்திய உடனேயே வீரர்களுக்குத் தலை சுற்றிப் புலன்கள் தடுமாறி, கால்கள் நிற்க முடியாமல் போனது. கையில் ஆயுதத்தைத் தாங்க முடியாமல் போதையில் இருப்பவர்கள் போல் அவர்கள் தள்ளாடியபோது, பதுங்கியிருந்த மலைக்குடியினர் பாய்ந்து வந்து மூன்று ரோமானியப் படைப்பிரிவுகளையும் முழுமையாக வெட்டி வீழ்த்தினர். தங்களின் பிரதேசத்துக்குள் அந்நியர் வருவதை விரும்பாத அவர்கள் உயிரிஆயுதமாக அங்கு கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட மலர்த்தேனை பயன்படுத்தியிருந்தார்கள்.
இந்தச் சம்பவம் உலகிற்குத் தெரிய வந்தது பாண்டஸ் பகுதியின் அமாசியா நகரில் பிறந்த கிரேக்கப் புவியியலாளர் ஸ்ட்ராபோவின் “புவியியல்” (Geographica) நூலிலிருந்து. அவர் இதை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார். எனினும் இந்தச் சிறு மோதல் போரின் முடிவை மாற்றவில்லை; இறுதியில் அந்தப் போரில் வென்றது பாம்பேதான். புகலிடம் கிடைக்காமல் மித்ரிடேட்ஸ் மரணமடைந்தான்.

ஆனால் ஒரு மலைக்குடியின் இயற்கையறிவு ஒரு பெரும் படையின் ஆயுதபலத்தை விஞ்சிய அந்தத் தருணம் போரின் வெற்றியைக்காட்டிலும் முதன்மையானதாக வரலாற்றில் நிலைத்துவிட்டது. அந்தத் தேனில் அப்படி என்னதான் இருந்தது? எந்த மலரிலிருந்து அந்தப் பித்துத்தேன் கிடைத்தது?
ஏழு கிராமத்தார் அந்தச் செடியை என்ன பெயரில் அழைத்தனர் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை. அவர்களுடைய மொழி எழுத்திலும் இல்லை; ஸ்ட்ராபோவும் செடியின் பெயரைச் சொல்லாமல் “தேன்” என்று மட்டுமே பதிவு செய்கிறார். எனவே அந்த மலைக்குடிகள் பொறியாக வைத்த தேன் எந்தச் செடியின் மலரிலிருந்து எடுக்கப்பட்டது, அந்தச் செடியை அவர்கள் எந்தப் பெயரில் அழைத்தனர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் குறிப்பிட்ட மலர்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேன் மனிதர்களைத் தற்காலிகமாகப் பித்தாக்கித் தடுமாறச் செய்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அது ஆளைக் கொல்வதைவிடச் சிறிது நேரம் செயலிழக்கச் செய்யும் என்பதையும், பசியோடு வரும் வீரர்கள் தேனை மறுக்க மாட்டார்கள் என்பதையும் அறிந்தே அதை ஆயுதமாக்கினர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இன்றும் அதே கருங்கடல் மலைகளில் வாழும் மக்கள் இத்தேனை “கோமார் பாலி” (komar balı) என்று அழைக்கின்றனர்; “கோமார்” என்பது கிழக்குக் கருங்கடலில் ரொடோடென்ட்ரான் செடியைக் (R. ponticum) குறிக்கும் உள்ளூர்ச் சொல்.
பாம்பேயின் வீரர்கள் பித்துத்தேனால் வீழ்ந்த நிகழ்வுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கும் முன்பே, அதே கருங்கடல் கரையில் இதே தேனால் ஒரு படை வீழ்ந்ததாக ஒரு வரலாற்றுப்பதிவு உண்டு.
கி.மு. 401-ல் பாரசீகப் பேரரசர் இரண்டாம் ஆர்டாக்செர்க்செஸுக்கு எதிராக அவருடைய தம்பி இளைய சைரஸ் கிளர்ச்சி செய்தான். அவனுக்காகப் போரிட ஏறத்தாழப் பத்தாயிரம் கிரேக்கக் கூலிப்படை வீரர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களே “பத்தாயிரவர்” (The Ten Thousand) என்று அழைக்கப்படுகின்றனர். பாபிலோனுக்கு அருகிலுள்ள குனாக்சா என்ற இடத்தில் நடந்த போரில் சைரஸ் கொல்லப்பட்டான். பகைவர் நாட்டின் நடுவே தலைவனின்றித் தனித்துவிடப்பட்ட கிரேக்கர்களின் படைத்தலைவர்களும் பின்னர் சதியால் கொல்லப்பட்டனர்.
அப்போது, சாக்ரடீஸோடு பழகியவரான ஏதென்ஸ் நகரத்து செனோஃபோன் தலைமையேற்று, மலைகளையும் ஆர்மீனியாவின் பனிப்பாதைகளையும் கடந்து கருங்கடலை நோக்கி பத்தாயிரத்தவர்களில் மீதமிருந்தவர்களை வழிநடத்தினார். இந்தப் பயணத்தை அவரே தன் “அனபாசிஸ்” நூலில் பதிவு செய்திருக்கிறார். கடலை நெருங்கும் வழியில், கருங்கடல் கரையிலிருந்த கிரேக்க நகரான டிரபிசஸுக்குச் சிறிது முன்பு, பசியிலிருந்த வீரர்கள் வழியிலிருந்த கிராமங்களின் தேன்கூடுகளிலிருந்து தேனை எடுத்து உண்டனர்.
செனோஃபோன் அந்த நிகழ்வை இப்படி விவரிக்கிறார்.
//தேனை உண்டவர் அனைவரும் புலன் இழந்தனர்; வாந்தியும் பேதியும் வந்தன; யாராலும் நிற்க முடியவில்லை. கொஞ்சமாக உண்டவர்கள் மிகையாகக் குடித்தவர்கள் போலவும், நிறைய உண்டவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போலவோ சாகக் கிடப்பவர்கள் போலவோ கிடந்தனர். நிலம் முழுவதும் வீரர்கள் கிடந்த காட்சி தோற்றோடிய படையைப் போல இருந்தது, பெருந்துயரம் நிலவியது. ஆனால் அன்று யாரும் இறக்கவில்லை. உண்ட அதே நேரத்தை ஒட்டி மறுநாள் அவர்கள் தெளியத் தொடங்கி, மூன்றாம், நான்காம் நாளில் மருந்துகொடுத்து பிழைத்து எழுந்தவர்கள் போல் எழுந்தனர். அங்கே அவர்கள் தேடி உண்ட தேனால்தான் இது நேர்ந்தது// என்று செனோஃபோன் சொல்கிறார். ஆனால் எந்தச் செடியிலிருந்து அந்தத் தேன் வந்தது என்பதை அவரும் சொல்லவில்லை.
இந்தத் தேனுக்குக் காரணமான செடியை நோக்கி முதல் விரல் நீட்டிய பதிவுகளில் ஒன்று ரோமானிய அறிஞர் மூத்த பிளினியுடையது (கி.பி. 23/24–79). அவர் வெசூவியஸ் எரிமலை வெடித்தபோது உயிரிழந்தவர்.
பிளினி தன் “இயற்கை வரலாறு” (Naturalis Historia) என்ற பெருநூலில், பாண்டஸ் பகுதியில் ஒரு குறிப்பிட்ட செடியின் மலர்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேன் மனிதரைப் பைத்தியம் பிடித்தது போல் ஆக்குகிறது என்று எழுதுகிறார். அந்தத் தேனுக்குப் “பைத்தியமாக்குவது” என்று பொருள்படும் “மெலி மைனோமெனோன்” என்ற பெயரையும், ஆடுகளைக் கொல்வது” என்று பொருள்படும் “ஐகோலெத்ரான்” என்ற பெயரையும் அவர் குறிப்பிடுகிறார்.
அந்த “ஐகோலெத்ரான்” இன்றைய ரொடோடென்ட்ரான் என்றே பெரும்பாலான தாவரவியலாளர்கள் கருதுகின்றனர். கிழக்கே, சீனாவின் பழைய மூலிகை நூல்கள் ரொடோடென்ட்ரான் இனமான Rhododendron molle செடியை, ஆடுகளைத் தடுமாறச் செய்யும் நஞ்சுள்ள செடி என்று பதிவு செய்தன; இன்றும் அது “நாவோ யாங் ஹுவா” என்ற “ஆடுகளைக் குழப்பிப் பித்தாக்கும் பூ” என்னும் சீனமொழிப் பெயரில் அறியப்படுகிறது.
இது பழங்கதை மட்டுமல்ல; இன்றும் நேபாளம் மற்றும் இமயமலையில் பாறை முகடுகளில் தொங்கும் இராட்சதத் தேனீக்களின் (Apis laboriosa) கூடுகளை அறுவடை செய்யும் குருங் இனத்தவர், வசந்தத்தில் ரொடோடென்ட்ரான் மலரும் காலத்தில் எடுக்கும் சிவந்த தேனை மருந்தாகவும் போதைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
துருக்கியின் கருங்கடல் பகுதியில் இதே ரொடோடெண்ட்ரான் தேன் “டெலி பால்” (deli bal, பைத்தியத் தேன்) என்ற பெயரில் அறியப்படுகிறது. உள்ளூர் மக்கள் அதை நாட்டு மருந்தாக மிகச் சிறிய அளவில் உண்கின்றனர். அதிக அளவில் உண்டவர்கள் தலைச்சுற்றல், வியர்வை, இதயத் துடிப்புக் குறைவு, இரத்த அழுத்தம் வீழ்ச்சி ஆகியவற்றுடன் மருத்துவமனைக்கு வருவது அங்குள்ள மருத்துவப் பதிவுகளில் மீண்டும் மீண்டும் காணப்படுகிறது.
அமெரிக்காவில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மவுண்டன் லாரல் (Kalmia latifolia) செடியின் தேனும் இதே விளைவைத் தருவதாக அறியப்படுகிறது.
இந்தத் தேனுக்கு மூலமான ரொடோடென்ட்ரான் (Rhododendron) எரிகேசி (Ericaceae) குடும்பத்தைச் சேர்ந்த பேரினம். இதன் பெயர் கிரேக்கச் சொற்களான rhodon (ரோஜா), dendron (மரம்) என்பதிலிருந்து வந்தது; “ரோஜா மரம்” என்பது பொருள்.
ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலாளர் லின்னேயஸ் 1753-ல் தன் “Species Plantarum” நூலில் இந்தப் பேரினத்தை வகைப்படுத்தினார். இன்று இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ எண்பது இனங்கள் பதிவாகியுள்ளன; பெரும்பாலானவை இமயமலையில் 1500 முதல் 5500 மீட்டர் உயரத்தில் வளர்கின்றன. இந்தப் பேரினம் பெரிதும் வடக்கு அரைக்கோளத்தில் பரவியது. இதன் மிகப் பெரிய பரவல் இமயமலையிலும் யுனான்–சிச்சுவான் பகுதிகளிலும் காணப்படுவதால், இது ஆசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தவிர, ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைகளிலும், காக்கசஸ்–கருங்கடல் பகுதியிலும், வட அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைகளிலும் இதன் இனங்கள் வளர்கின்றன. இந்தியாவில் Rhododendron arboreum உத்தராகண்டின் மாநில மரமாகவும், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகியவற்றின் மாநிலப் மலராகவும், நேபாளத்தின் தேசிய மலராகவும் இருக்கிறது.
இதன் R. arboreum subsp. Nilagiricum என்னும் துணையினம் தென்னிந்தியாவில் நீலகிரி மலையிலும் வளர்கிறது
ரொடோடென்ட்ரான் சிறு புதர்களிலிருந்து உயர்ந்த மரங்கள் வரை பல வடிவங்களில் வளர்கிறது. R. arboreum போன்ற இனங்கள் இருபது மீட்டர் வரை உயரும் மரங்கள். இவற்றின் இலைகள தடித்த தோல் போன்றவை. பல இனங்களில் கிளை நுனிகளில் இலைகள் கொத்தாக அமைந்திருக்கும். சில இனங்கள் பசுமை மாறாதவை (R. ponticum), சில இலையுதிர்ப்பவை (R. luteum). இவை புளிப்பு மண்ணை விரும்புகின்றன; வேர்கள் ஆழம் குறைந்தவை. எரிகேசிக்கே உரிய “எரிகாய்டு மைக்கோரைசா” என்ற பூஞ்சை உறவு இவற்றின் ஊட்டச்சத்துக்கு உதவுகிறது
ரொடோடென்ட்ரான் மலர்கள் தனித்தனியாக மலராமல், கிளை நுனிகளில் ஒரு கொத்தாகத் திரண்டு மலர்கின்றன. அந்தக் கொத்து உருண்டை வடிவில் அமைந்து, தொலைவிலிருந்து பார்த்தால் ஒரே பெரிய மலர் போலத் தோன்றும். ஒவ்வொரு மலரும் புனல் வடிவத்தில், அடியில் இதழ்கள் இணைந்த குழலாக இருந்து, மேலே ஐந்து மடல்களாக விரிகிறது. செம்மை, இளஞ்சிவப்பு, ஊதா, வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு. என பல நிறங்களில் மலர்கள் இருக்கின்றன.பல மலர்களில் நிறமுள்ள புள்ளிகள் காணப்படும்.

கிரேக்கத்தில் இது “ரோஜா மரம்” என்று பெயர் பெற்றதற்குக் காரணம், பல இனங்களின் மலர்கள் ரோஜாவின் செம்மை, இளஞ்சிவப்பு நிறங்களைக் கொண்டிருப்பதினால்தான்.
இதன் கனி பல நுண்ணிய சிறகுள்ள விதைகளைக் கொண்ட வெடிகனி. மலர்கள் மிகுதியாகத் தேனைச் சுரக்கின்றன. இமயமலையில் தேன்பறவைகளும், பிற பகுதிகளில் தேனீக்களும் இந்தப் பூக்களை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.
இந்தத் தேனீக்களே பித்துத் தேனை சேகரிப்பவை. பல ரொடோடென்ட்ரான் இனங்களின் இலை, பூ, மகரந்தம், தேன் ஆகியவற்றில் கிரயனோடாக்சின் என்ற நஞ்சு உள்ளது; இது மேயும் விலங்குகளிடமிருந்து செடியைக் காக்கும் தற்காப்புக்காக உருவாக்கப்படுகிறது.
வசந்தத்தில் ஒரு மலைச்சரிவு முழுவதும் ரொடோடென்ட்ரான் பூத்துக் குலுங்கும்போது, அதன் அருகில் அமைந்திருக்கும் தேனீக்கள் வேறு மலர்கள் எதையும் தேடாமல் இந்தப் பூக்களின் தேனையே பெருமளவில் சேகரிக்கின்றன.
கருங்கடல் மலைகளில் R. luteum, R. ponticum பூக்களிலிருந்து இத்தேன் உருவாகிறது; நேபாளத்தில் இராட்சதத் தேனீக்கள் இமயமலை ரொடோடென்ட்ரான்களிலிருந்து இதைச் சேகரிக்கின்றன. இவ்வாறு உருவான தேன் அடர் சிவப்பு நிறத்தோடு, தொண்டையில் எரிச்சல் தரும் கசப்புடனும் இருக்கும். பல மலர்களின் தேன் கலந்த சாதாரணத் தேனில் இந்த நஞ்சு கரைந்து நீர்த்துப்போவதால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஒரே செடியின் தேன் தனியாகத் திரளும்போதுதான் அது பைத்தியத் தேனாகிறது.
ரொடோடென்ட்ரானின் நஞ்சு என்ன, அது உடலை எவ்வாறு தாக்குகிறது?
செனோஃபோன் கி.மு. 401-ல் நிகழ்ந்ததாகப் பதிவு செய்ததையும், இன்று துருக்கிய மருத்துவமனைகளில் பதிவாகும் நோயாளிகளின் அறிகுறிகளையும் அருகருகே வைத்துப் பார்த்தால், இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகள் இடைவெளி இருந்தும் பதிவுகள் ஒத்துப்போகின்றன. தலைச்சுற்றல், வியர்வை, வாந்தி, உமிழ்நீர் சுரப்பு, கைகால் மரத்துப்போதல், இதயத் துடிப்புக் குறைவு, இரத்த அழுத்த வீழ்ச்சி, சிலருக்கு மயக்கம். இந்தத் தொடர்ச்சியே அறிவியலுக்கு உபயோகமுள்ள முதல் குறிப்பு.
அடுத்து வேதியியலும் அதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த மலர்களில் உள்ள நஞ்சு கிரயனோடாக்சின்கள் (grayanotoxins) எனப்படும் டைடெர்பீன் (diterpene) வகைச் சேர்மங்கள். அவற்றின் வேதி அமைப்புக்குக் “கிரயனேன்” (grayanane) என்று பெயர். இந்தப் பெயர் ஜப்பானிய எரிகேசிச் செடியான லியூகோதோ கிரேயானா (Leucothoe grayana) என்பதிலிருந்து வந்தது. இப்போது இத்தகைய இருபதுக்கும் மேற்பட்ட சேர்மங்கள் இந்தத் தேனில் அறியப்பட்டுள்ளன;
ரொடோடெண்ட்ரான் தேன் நஞ்சாவதில் முதன்மையானவை கிரயனோடாக்சின் I மற்றும் III. முற்காலத்தில் இந்த நஞ்சு “ஆண்ட்ரோமெடோடாக்சின்” என்ற பெயரில் அறியப்பட்டது; பின்னர் ஜப்பானிய வேதியியலாளர்கள் அதன் அமைப்பைத் தெளிவுபடுத்தினர். இந்த நஞ்சு ரொடோடென்ட்ரானுக்கு மட்டுமே உரியதல்ல; அதன் குடும்பத்தைச் சேர்ந்த காம்மியா, பியரிஸ், லியோனியா போன்ற செடிகளிலும் இது காணப்படுகிறது. மேயும் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இந்தக் குடும்பம் உருவாக்கிய வேதிக் கவசம் இது.

நீலகிரி ரொடோடென்ரான்
இந்த நஞ்சு உடலுக்குள் செய்வது இதுதான். நரம்பு, தசை, இதய செல்களின் சவ்வில் சோடியம் கால்வாய்கள் (voltage-gated sodium channels) உள்ளன. சாதாரணமாக ஒரு தூண்டுதல் வந்ததும் இவை திறந்து, சில நொடிகளில் தானாக மூடிக்கொள்கின்றன. கிரயனோடாக்சின் இந்தக் கால்வாயின் குறிப்பிட்ட இணைப்புத் தளத்தில் ஒட்டிக்கொண்டு, அது மூடுவதைத் தடுக்கிறது. செல் தொடர்ந்து உற்சாகநிலையிலேயே நின்றுவிடுகிறது. இதயத்தில் இதன் விளைவாக வேகஸ் நரம்பு தூண்டப்பட்டு, இதயத் துடிப்பு மெதுவாகிறது; சிலருக்கு இதயத் துடிப்பின் ஒழுங்கும் குலைகிறது, இரத்த அழுத்தமும் சரிகிறது. இதனால்தான் மருத்துவமனைக்கு வருபவர்கள் தலைச்சுற்றல், வியர்வை, வாந்தி, மயக்கத்துடன் வருகிறார்கள்.
தேனை உண்டு சுமார் இருபது நிமிடம் முதல் சில மணி நேரத்துக்குள் அறிகுறிகள் தோன்றலாம். மருத்துவ உலகில் இதற்கான சிகிச்சை எளிது: அட்ரோபின் என்ற மருந்து தேனின் விளைவை எதிர்த்து இதயத் துடிப்பை மீட்கிறது; பெரும்பாலோர் ஒரு நாளுக்குள் முழுமையாக மீண்டுவிடுகின்றனர்; இறப்புகள் மிகவும் அரிது. பித்துத் தேன் அருந்தி இறப்பின்றி மீளும் இந்த இயல்பு செனோஃபோனின் பதிவோடும் ஒத்துப்போகிறது.
நஞ்சாக்கியது ரொடோடென்ரானில் இருந்து எடுக்கப்பட்ட ஒருமலர்த்தேன்தானா என்பதை ஆய்வகம் இரு வழிகளில் உறுதிசெய்கிறது.
முதலாவது மகரந்தப் பகுப்பாய்வு (melissopalynology). தேனில் தேனீக்கள் கொண்டுவந்த மகரந்தத் துகள்களும் கலந்திருக்கும்; அவற்றை நுண்ணோக்கியில் பார்த்து, எந்தச் செடியின் மகரந்தம் எவ்வளவு உள்ளது என்று கணக்கிடலாம். எரிகேசிக் குடும்பத்தின் மகரந்தம் நான்கு துகள்கள் ஒன்றாக இணைந்த கொத்தாக (tetrad) இருப்பது அதைக் கண்டறிய உதவும் ஓர் அடையாளம். ஒரு தேனில் ரொடோடென்ட்ரான் மகரந்தம் பெரும்பான்மையாக இருந்தால், அது ரொடோடென்ட்ரான் தேன் என்று உறுதிசெய்யப்படுகிறது.
இரண்டாவது முறை திரவ நிறமூர்த்தவியல்–நிறை நிறமாலையியல் (LC-MS/MS). இது தேனில் கலந்துள்ள சேர்மங்களைப் பிரித்து, அவற்றின் மூலக்கூறு எடையைக் கொண்டு கிரயனோடாக்சின் I, III ஆகியவற்றை மிகச் சிறிய அளவிலும் துல்லியமாகக் கண்டறிகிறது. அதனால் மகரந்தம் மட்டுமின்றி, தேனில் எவ்வளவு நஞ்சு உள்ளது என்பதையும் அளவிட முடியும்.
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை கணக்கில் கொள்ளவேண்டும். ரொடோடென்ட்ரான் செடிகளில் எடுக்கப்பட்ட எல்லாத் தேனும் நஞ்சுள்ளது அல்ல, எல்லா இனங்களும் ஒரே அளவு நஞ்சு கொண்டவையும் அல்ல. பல வகை மலர்களின் தேன் கலந்த கலவையில் ரொடோடென்ரான் நஞ்சு நீர்த்துப்போகிறது. ஒரே மலரின் தேன் தனியாகத் திரளும் இடங்களிலும் குறிப்பிட்ட பருவங்களிலும் மட்டுமே அது பித்து அல்லது போதை தரும் அளவுக்கு வலுப்பெறுகிறது.
பாம்பேயின் வீரர்கள் உண்ட தேனையோ, செனோஃபோனின் வீரர்கள் உண்ட தேனையோ நாம் இன்று ஆய்வகத்தில் சோதிக்க முடியாது.
ஆனால் இன்று அதே பகுதிகளில் அதே அறிகுறிகளோடு வரும் நோயாளிகளிடமிருக்கும் தேனை நாம் சோதிக்க முடிகிறது; அதில் இதே நஞ்சு கண்டறியப்படுகிறது. இந்த இரண்டும் இணையும்போதுதான் இரண்டாயிரம் ஆண்டுப் பழைய கதையை இன்றைய அறிவியல் நம்பகமாக்குகிறது.
ஆகவே ஸ்ட்ராபோ பதிவு செய்த அந்தப் பதுங்கல் தாக்குதல் வெறும் புராணக்கதை அல்ல. அதன் பின்னால் ஒரு தாவரத்தின் வேதித் தற்காப்பும், ஒரு தேனீயின் உணவுத் தேடலும், ஒரு மலைக்குடியின் இயற்கையறிவும் இணைந்திருந்தன.
கருங்கடல் மலைகளில் இந்த மலர் ஒரு படையை வீழ்த்தும் ஆயுதமாக வரலாற்றில் இடம்பெற்றது என்றால், சீனாவில் அது ஒரு மன்னனின் துயரக் கதையாக தொன்மங்களில் வாழ்கிறது. சீன மொழியில் ரொடோடென்ட்ரான் வகை மலருக்கும் குயிலுக்கும் ஒரே பெயர்: “டூஜுவான்” .
பழங்காலச் சீனாவில் ஷூ நாட்டை ஆண்ட டூ யூ என்ற மன்னன் வேளாண்மையை அறிந்தவன், மக்களை நேசித்தவன். அவன் இறந்தபின் குயிலாக மாறினான் என்பது தொன்மம்.
ஆண்டுதோறும் வசந்தத்தில் அந்தக் குயில் திரும்பி வந்து கூவுகையில், அவன் கற்றுத்தந்தபடி வயலை உழும் காலம் வந்துவிட்டதை மக்களுக்கு நினைவூட்டுகிறது. குயிலாக வந்த அவன் சொந்த நாட்டையும் விவசாயத்தையும் நினைத்து இடைவிடாமல் கூவிக் கூவி, தொண்டையிலிருந்து இரத்தம் கக்கினான், அந்த இரத்தம் ரொடோடென்ரான் மலர்களின்மேல் விழுந்து அவற்றைச் சிவப்பாக்கியது என்னும் ஒரு தொன்மத்தினால், சீன மக்கள் பறவைக்கும் மலருக்கும் அதே பெயரை வைத்தார்கள்
“இரத்தம் கக்கிக் கூவும் குயில்” என்ற உவமை சீனாவிலிருந்து கொரிய, ஜப்பானிய இலக்கியங்களுக்கும் பரவி, ஏக்கத்தின், அடங்காத துயரத்தின் குறியீடாக நிலைத்தது.

ரோடோடென்ட்ரான் மலர்களின் மயக்கும் அழகும் அதனுள் பொதிந்திருக்கும் அபாயகரமான பித்துத்தேனும், வரலாற்றின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் தொன்மங்களும் இணைந்து, அந்தத் தாவரத்தை வெறும் தாவரவியலின் எல்லைக்குள் முடக்காமல், மனித வரலாற்றின் மர்மப் பக்கங்களோடு பிணைக்கின்றன.
ரோடோடென்ட்ரான் மலர்த்தேன் “Mad Honey” அல்லது “Himalayan Red Honey” என்ற பெயர்களில் விற்கப்படுகிறது. இமயமலைப் பகுதி மலைவாழ் மக்கள் மற்றும் நேபாளம், துருக்கி போன்ற நாடுகளின் மலைப்பகுதிகளிலிருந்து இது சேகரிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாகவும் சிறப்பு விற்பனை வலைத்தளங்கள் வழியாகவும் விற்கப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக, ரோடோடென்ட்ரான் மலர்த்தேனில் இருக்கும் ‘கிரையானாடாக்சின்’ காரணத்தினால் இது சிறிதளவு மயக்கத்தைத் தரக்கூடியதாகவும், மருத்துவக் குணம் கொண்டதாகவும் கருதப்படுவதால் மிகக் குறைவாக, மிகவும் எச்சரிக்கையுடனும் கடுமையான கட்டுப்பாடுகளுடனும் மட்டுமே விற்கப்படுகிறது.
இந்தத் தேனை விற்பனை செய்யும் பெரும்பாலான தளங்கள், இது ஒரு ஆபத்தான பித்துத்தேன் (Mad Honey) என்பதையும், சிறிதளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதற்கான கடுமையான எச்சரிக்கை குறிப்புகளையும் (Warning labels) அச்சிட்டே விற்கின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.