ஜெனீவா கணேஷ் ஸாகே வாசிப்பனுபத்தை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறார். வெகுகாலத்துக்குப் பிறகு கட்டுரைகளின் சாரத்தை வாசிக்கையில் அவற்றை வெவ்வேறு இடங்களில் பல நேரங்களில் எழுதிய நாட்களின் நினைவு நிழலாடியது. தூரன் விருது விழாவில் அதன் வெளியீடும் நினவுக்கு வந்தது.

அன்புள்ள அக்கா,

இம்முறை ஐஸ்வர்யாவும் மகள்களும் இந்தியா வந்த பொழுதில் எனக்கென்று வாங்கிக்கொண்ட புத்தகம் உங்களது ஸாகே! இதிலுள்ள சில கட்டுரைகளை ஏற்கனவே உங்கள் தளத்தில் வாசித்திருக்கிறேன் என்றாலும், நூலாக இதை வாசித்தேயாக வேண்டும் என நினைத்திருந்தது இம்முறை நிறைவேறியது. இந்த நூலில் என்னை முதன்மையாக கவர்ந்தது, தாவரங்களில் விருப்பமானவை ஒவ்வாதவை என்ற பாகுபாட்டை இந்நூல் எளிதாக நீக்கிவிடுகிறது. “அட! இந்த வேதிச் சேர்மங்களால்தான் இது விஷம் என்றாகிறதா? இது துர்நாற்றம் கொண்டதாகிறதா? இந்தளவு போதை பொருளாக அறியப்படும் இதன் செடி உண்மையில் நாமறிந்த தாவரத்தின் குடும்பத்திலிருந்து கிளைத்ததுதானா?” என்ற அறிதல்கள், அந்த “தீமையான தாவரங்கள்” என நாம் (நான்) வகைப்படுத்தி வைத்திருப்பவற்றின் மீதான ஒவ்வாமையை நீக்கிவிடுகிறது. “அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு” என்ற நாம் கேட்டு பழகிய பழமொழியை உங்கள் நூலை வாசித்தபின் “அளவுக்குள் இருக்கும் நஞ்சுதான் அமிர்தம் என்றாவதே!” என்று மாற்றிச் சொல்லவேண்டும் என தோன்றுகிறது. மனப்பிறழ்வையும், மரணத்தையும் அளிக்கவல்ல பூஞ்சைகள் மயக்கமூட்டியாகவும், மருந்தாகவும் செயல்படும் விந்தை பேச்செழா நிலையை அளிக்கிறது. பழங்குடியினரின் மது தயாரிப்பில் உமிழ்நீரை துப்பி நொதிக்கவைக்கும் முறைமைகள்.. அவற்றை எப்படி விளங்கிக் கொள்வது என்று நிஜமாகவே தெரியவில்லை. “அம்மதுவுக்கு அதுவும் ஒரு மூலப்பொருள், அதை சுவைக்க வேண்டுமென்றால், அம்மூலப்பொருளையும் சேர்த்துதான் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் அந்த சுவை என்னவென்று அறியாமல் இருந்துவிடப் போகிறாயா என்ன?” என எனக்கு கடவுள் வைக்கும் சவால் என அதை எடுத்துக் கொள்கிறேன். அந்நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இவ்வாழ்வில் எனக்கு வந்துவிடும் என்றே நம்புகிறேன்.

வேதியியல் நோக்கில் வலுப்படுத்தப்பட்ட கண்ணாடி 1960களிலேயே உருவாக்கப்பட்டு, ஆனால் எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாமல் காத்திருந்து 2007ல் ஸ்மார்ட்ஃபோன்கள் உருவாக்கப்படுகையில் பேருரு கொண்டு எழுந்தது. உங்களது சிக்கரி தொடர்பான கட்டுரை எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. காபி புழக்கத்துக்கு வருவதற்கு பலகாலம் முன்னரே சிக்கரி தயாராகி காத்திருந்ததை வாசிக்க ஆச்சரியமாக இருந்தது. போலவே தொழில்நுட்பத்தின்படி கலப்படக் காஃபியான அதை விளம்பரப்படுத்தி வென்றதன் நேர்த்தியும் அழகு. இங்கே மதியம் இரண்டு மணிக்குமேல் காஃபி குடித்தால் இரவு தூக்கம் கெடும் என்னும் ஐரோப்பியர்களிடம் “எங்களூரில் இரவு காஃபி குடிக்காவிட்டால் தூக்கம் வராது தவிக்கும் உறவுகள் உண்டு” என சொல்லி அவர்கள் பீதியடைவதை கண்டு குதூகலித்திருக்கிறேன். ஆனால் இப்போது புரிகிறது, என் அந்த உறவினர்கள் சிக்கரி அதிகம் சேர்த்த காஃபியை பருகிதான் அந்த “சாதனையை” நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று. எனக்குமே இங்கே மாலை ஐந்து மணிக்கு மேல் குடிக்கும் காஃபி இரவு தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. சிக்கோரி என்ற ஃப்ரெஞ்ச் மொழி பெயரிலிருந்து சிக்கரி என வந்தது என அறிந்தபோது, அதே பெயரில் இங்கே ஜெனிவாவில் உள்ள துணிக்கடையை தாண்டுகையில் அதை மகள்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டேன். 

உங்களிடம் தனிச்செய்தியில் சொன்னதுபோல, ஒவ்வொரு கட்டுரையுமே அதன் பேசுபொருளை நோக்கி வாசிப்போரை முழுக்க இழுத்து சிக்கவைத்து விடுகிறது. சாக்ரடீஸ் அருந்திய ஹெம்லாக் நஞ்சையுமே நாம் சுவைத்து பார்த்தால் என்ன என தோன்றுமளவு நினைப்பு சென்றுவிடுகிறது. நியாயமாக நீங்கள் இதற்கு புத்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு எச்சரிக்கையை அச்சிடச் சொல்லவேண்டும்! டக்கீலா கட்டுரையை வாசித்தால், அடடா இன்னும் டக்கீலா அருந்தாமல் இருக்கிறோமே என்றும், பியர் கட்டுரையில் லாகர் வகையை பார்த்திருக்கிறோம், ஏல் வகையை பார்த்த நினைவில்லையே என்றும் தோன்றிவிடுகிறது. நூறு சதவீத ஆல்கஹால் இருக்கும் அசல் டக்கீலாவை பற்றி, ஒயினிலும் எனக்கு குடித்தால் மட்டையாகும் அளவு போதை வேண்டும் என சலம்பும் நண்பனிடம் சொல்லி ஆற்றுப்படுத்த வேண்டும் என தோன்றியது. கண்ணாடிக் கோப்பைகள் குறித்த கட்டுரை உங்கள் தளத்தில் ஏற்கனவே வாசித்து நெகிழ்ந்தது தான். இருப்பினும் இம்முறை வாசிக்கையில் இடைப்பட்ட காலத்தில் எப்படியும் ஒரு இருபது பேர்கிட்ட இந்த வைன் கோப்பையின் வடிவம் பற்றியும், அதை பயன்படுத்தப்படும் முறை குறித்தும் சொல்லியிருப்பே இல்ல என நினைத்துக் கொண்டேன்.

அக்காலத்து ஆராய்ச்சியாளர்கள் மீதும், அவர்களின் உழைப்பு மீதும் பெரும் மரியாதையை உங்கள் எழுத்துமுறை கொண்டுவந்து விடுகிறது. சில இடங்களில் ஓரிரு வரிகளில் அவற்றை நீங்கள் தாண்டிச் சென்றுவிடுகிறீர்கள். ஆனால் அவ்வரிகள் பின்னால் யோசிக்கையில் வாசிப்பவருக்குள் வளர்ந்து “எவ்வளவு தொடர்ச்சியான முயற்சிகள்! தவம் போன்ற உழைப்பு! முதன்மையாக இவற்றை செய்ய அவர்களுக்கு கிடைத்த கவனச்சிதறல்களில்லா நேரம்!” என ஆழமாக சென்றுகொண்டே இருக்கின்றன. மயக்கமூட்டி சோதனையில் தோல்வியுற்ற அந்த மருத்துவர் மனமுடைந்து சில வருடங்களில் தற்கொலை செய்துகொள்ளும் இடத்தில் கண்ணீர் திரண்டது. எவ்வளவு பெரிய அவமானம் அவருக்கு அந்த தருணம்! இல்லையா? அநேகமாக அனைத்து கட்டுரைகளின் இறுதிவரிகளும் அழகு. மார்ட்டனை நினைத்துக் கொள்ளச் சொல்லும் இடமும் வழக்கம்போலவே இதுக்காகவாச்சும் நமக்கு அப்பிடி ஒரு அறுவை சிகிச்சை நடக்கணும் என்ற எண்ணத்தை கொண்டுவந்தது. 

கட்டுரைகளில் உச்சம் என்றால் பாப்பி மலர் குறித்த கட்டுரைதான். அது ஏன் போர்க்கள கவிதையில் அம்மலர் பற்றிய குறிப்பு வருகிறது என்பதிலிருந்து துவங்கி செல்லும் அந்த நடை வெகு அழகு. போர்க்களத்தின் மண் வளமை கொண்டதாக மாறுவதன் பின்புலம், அவ்வாறு வளம் மிக்க மண் உருவாகும்வரை இம்மலர்களின் விதைகள் பொறுமையாக  நிலத்துக்கடியில் காத்திருப்பது பிரமிப்பு என்றால், அகழ்வாய்வில் நான்காயிரம் வருட பழமை நிறைந்த விதைகள் கிடைப்பது இது என்ன வகை டிஸைன் என்ற திகைப்பு என்றாகிவிடுகிறது. அவற்றை வளர்த்துப் பார்க்க முயன்றார்களா, அவை முளைத்தனவா என்பதையும் நீங்கள் எழுதிருக்கலாம்.  வளராது இருந்திருந்தால்தான் ஆச்சரியப்படவேண்டும் இல்லையா? 🙂 

குன்றிமணி கட்டுரை தாவரவியல் சார்ந்தது என்பதோடு, சமூகம் செயல்படும் விதத்தையும் விளக்கருகில் கொண்டுவந்து காட்டியது. இறந்த மாட்டை தொடாத “உயர்”சாதி, அவற்றை அகற்றி சுத்தம் செய்தோரை தாழ்ந்த சாதி என முத்திரையிட்டு விலக்கி அடக்க, அவர்கள் அவ்வடக்குதலையே தனக்கான ஆயுதமாக்கி மாடுகளை கொல்வதும், அதெற்கென உதவுவதற்கென்றே உருவெடுத்தது போன்ற குன்றிமணியும், கொல்லப்படும் மாடுகளின் தோலுக்கு மிகப்பெரிய சந்தை ஏற்கனவே உருவாகி காத்திருப்பதுமான அந்த மாற்றங்கள் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை ஒத்திருந்தன. இதில் உச்சம் அந்த மாடுகளை கொல்லும் குன்றிமணி விஷம், இறந்த அம்மாடுகளின் இறைச்சியை உண்பவர்களுக்கு ஏதும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதுதான். அதேநேரம் அக்குன்றிமணியை நேரடியாக உண்டால் மரணம்தான் என்னும் செய்தி “எனக்கான எல்லைக்குள் நான் என்றுமே வில்லன்தான்” என குன்றிமணிகள் குத்துவசனம் பேசுவதாக எனக்கு ஒலித்தது. அடக்குமுறையிலிருந்து இவ்வாறாகினும் அச்சமூகத்தினருக்கு ஒரு பலன் கிடைத்ததே என்றெண்ணி அசட்டு ஆசுவாசம் கொள்கையில், பசுக்கொலையை கட்டுப்படுத்தும் காவல்துறை வழியாக அதே இனத்தவர் அவ்வழியிலும் ஒடுக்குமுறையையும் சித்ரவதையையும் அனுபவித்ததை அறிய நேரும்போது துயரம் நிறைந்த அமைதிக்குள் நம்மை கொண்டுசென்று விடுகிறது.

முந்திரி மது பற்றிய கட்டுரையும் எனக்கு அணுக்கமாக இருந்தது. புதுக்கோட்டையில் முந்திரி தோட்டங்களில் பருப்புகளே அவற்றின் உரிமையாளர்களுக்கு குறி என்பதால் பழங்களை எங்களை எடுத்துக் கொள்ள விடுவர். அதை உண்ணும்போது அதன் காரல் நிறைந்த ரசம் உள்ளிறங்குகையிலேயே அடுத்த நாள் தொண்டை கட்டிக்கொள்வதும் தொடர்ந்து ஜுரம் இருமல் என வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுவிடும். அதிலிருந்து மது என்பது புதிய செய்திதான். ஆனால் அந்த பழத்தின் சுவை மதுவாக ஆவதற்கு ஏற்றதுதான் என இப்போது தோன்றுகிறது. இதுதவிர பொதுவாகவே இக்கட்டுரைகளில் சொல்லப்படும் பயிர் வளர்க்கப்படும் முறைகள் ஒருவகையில் ஆயாசத்தையே கொடுக்கின்றன. மனிதன் விலங்குகளை அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி/பெருக்கி, காமத்தை நீக்கியும் “நெறிப்படுத்தியும்” என பலவாறு சித்திரவதை செய்கிறான் என்றால், தாவரங்களிலுமே அவ்வாறான வன்முறை நுண்ணிய தளங்கள் வரைக்கும் சென்று ஏவப்படுகிறது என்பதை விரிவாக விளக்கியிருக்கிறீர்கள். செடிகளின் பூக்களை நீக்கி, அதன் சக்தி முழுவதையும் இலைகளை வளர்ப்பது நோக்கி குவிப்பதன் குரூரம் முதுகை சில்லிட செய்கிறது.

புகை கட்டுரையையும் ஏற்கனவே உங்கள் தளத்தில் வாசித்துள்ளேன். இருப்பினும் இம்முறை வாசிக்கும்போதும், மருத்துவர்கள் சிகரெட்டை ஆரோக்கியத்துக்கு பரிந்துரைத்தார்கள் என்ற செய்தியை கடக்கும்போது சிரிப்பு வந்துவிட்டது. அதை தவறு என ஆராய்ந்து வெளியிட்டவர் எதிர்கொண்ட அழுத்தம் அந்த காலத்தில் என்னவாக இருந்திருக்கும் என எண்ணிக்கொள்கிறேன். உங்களிடம் சொன்னதுபோல இங்கு சுருட்டு பிடிக்கும் வயதானவர்களை அடிக்கடி காண்பதுண்டு. சிகரெட் போல உடனுக்குடன் புகையை இழுக்காமல், பற்றவைத்து கங்கு கனல ஆரம்பித்தபின் அதுவும் ஏதோ ஒரு உணவுப் பொருள் என்பதுபோல, கங்கு உள்ள பகுதியை அந்தரத்தில் நிறுத்தியாவாறு ஆஷ் ட்ரேவில் வைத்துவிட்டு செய்தித்தாளை படிக்கவோ உடனிருக்கும் நண்பருடன் கதைக்கவோ ஆரம்பிப்பவர்களை பார்க்க விநோதமாக இருக்கும். அவ்வப்போது நினைவு வந்தவர்கள் போல அதை எடுத்து புகையை இழுத்துக் கொள்வர். அவர்கள் அவ்வாறு வலிந்து இழுத்தே அவர்களில் பலருக்கு கன்னத்தில் டொக்கு விழுந்திருப்பதை காணமுடியும். அவ்வாறு இல்லாது செழித்த கன்னத்தை உடையவர்களை “உள்ளே பார்த்தால் கன்னத்தில் சிக்ஸ் பேக் விழுந்திருக்குமாக இருக்கும்” என நானும் ஐஸ்வர்யாவும் சொல்லி சிரித்துக் கொள்வதுண்டு. சுருட்டுகளுக்கென்றே உள்ள கடைகள் மிகவும் அழகியலோடு அமைக்கப்பட்டிருக்கும். சுருட்டுகள் வைக்க அழகான பெட்டிகள், சுருட்டு நறுக்கும் கருவிகள் என அது ஒரு தனி உலகமாக இருக்கும். சிகரெட்டோ சுருட்டோ அவற்றின் வடிவமைப்பின் அழகால் கவர்வது இயல்பு. ஆனால் உங்கள் கட்டுரை நாற்றம் தரும் பீடியையும் ரசிக்க வைத்து விடுகிறது. வழக்கம்போலவே வாழ்நாளில் ஒரு பீடியையாவது புகைத்து சுவைத்துவிட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். 

என் உறவினர் ஒருவர் புகையிலையை மெல்லும் பழக்கம் கொண்டவர். தனது இறுதிக்காலத்தில் தவறுதலாக அதை உண்டுவிட்டவகையில் மயக்கமடைந்து கோமாவுக்கு சென்று உயிரிழந்தார். அதுகுறித்து ஒரு உறவினர் சொல்கையில் “அவ்வாறு பலருக்கு புகையிலை இறுதிவரை உடன்வரும் நண்பனாக இருந்துள்ளது” என்றார். அவர் சொன்ன பொழுதில் கேட்க கஷ்டமாக இருந்தாலும், “வாழ்வின்போது மட்டுமல்லாது, மரணத்திலும் உன்னை அணைத்திருக்கும் ஆடை போல உன் நண்பனை நீ நேசி” என்ற சூஃபி பாடல் வரிகளோடு உங்கள் கட்டுரைகளையும் இணைத்து யோசிக்கையில், ஒருவர் அவ்விதம் ஒரு பொருளை தனது இறுதிவரை என தேர்ந்தெடுத்தால் அதில் தீர்ப்பு சொல்ல நாம் யார் என எண்ணிக்கொண்டேன்.

நூலாக்கத்தைப் பற்றி சில வார்த்தைகள்:

நூலில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு விஷயம் வெளிநாட்டு பெயர்களின் உச்சரிப்புகள். ஜெர்மன் ஃப்ரெஞ்ச் மொழிகளில் பெயர்களின் உச்சரிப்பை கொஞ்சம் நன்றாகவே அறிந்தவன் என்பதால் ஒவ்வொரு முறையுமே பெயர்களைத் தாண்டுகையில் அவை தமிழில் எழுதப்பட்டிருப்பதை கவனம் செலுத்தி வாசித்துச் சென்றேன். தமிழில் அவற்றை எழுத ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறீர்கள்! கூடவே அவற்றை ஆங்கிலத்திலும் அச்சிட்டிருப்பதற்கு தனி நன்றி! Thermocol என்பதை தமிழில் கற்று dhermacol என்னுமாறு உச்சரித்து “பார்த்துடா! அது ஏற்கனவே மெல்லிசு.. நீ சொல்றதிலே உடைஞ்சிடப்போகுது” என ஆங்கிலமறிந்த உறவினர்களால் கிண்டலுக்கு உள்ளான என் போன்ற கிராமத்து மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும்! மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் வரும்போது அவற்றை முதலில் தமிழில் மொத்தமாகவும், அடுத்ததாக அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் பெயர்களை வரிசையாக கொடுத்திருப்பதும் வாசிப்பின் விரைவை குறைக்காமல் இருக்கச் செய்கிறது. 

படங்களை கறுப்பு வெள்ளையாக பார்த்தபோது முதலில் ஏமாற்றம். இவை வண்ணங்களிலல்லாது இவ்வகை புத்தகங்களில் அச்சிடப்படுகையில் என்ன பயன் என்றுதான் நினைத்தேன். ஆனால் புத்தகத்தின் இறுதியில் அவற்றை வண்ணப்படங்களாக காண்கயில் மகிழ்ச்சியாக இருந்தது. விளையாட்டாக, படங்களை மட்டும் பார்த்து அவை எந்தெந்த கட்டுரைகளுக்கானவை என யோசித்து பார்க்கையில், பெரும்பாலானவற்றை நினைவில் மீட்ட முடிந்தது ஒரு இனிய விளையாட்டாக இருந்தது. 

புத்தகத்தை அலுவலக மேஜையில் வைத்திருந்தபோது கவனித்த ஒரு வடநாட்டு நண்பன் வண்ணப் படங்களை பற்றி குறிப்பாக பாராட்டினான். தமிழ் எழுத்துருவை அறிந்திராத சக ஊழியர் ஒருவர் மிகவும் அழகான ஸ்கிரிப்ட் கொண்டுள்ளதாக இருக்கிறது உங்கள் மொழி என்றார். அவர் அரபு மொழியை அறிந்தவர் என்ற வகையில் அவர் அப்படி சொன்னது மிகவும் பெருமையாக இருந்தது. 

சக ஜெ வாசகர் ஒருவரும் நானும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டோம். தினமும் அவரவர் வாசிக்கும் பக்கங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக் கொண்டுவரவேண்டும் என. அவருடைய பளு நிறைந்த பணிச்சூழலால் என்னைவிட எண்ணிக்கையில் பின்தங்கிய நிலையில் இருந்தார். பணிப்பளுவால் வாசிப்பில் தோற்பதென்றால், அதுவும் என்னிடம், அவருக்கு எந்தளவு பணிப்பளு இருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்! நான் அவரை “என்னங்க! சிலநூறு பக்கங்கள் பின்தங்கிட்டீங்களே” என ஒருநாள் வம்பிழுக்க, “இன்னிக்கு பாருங்க” என்றவர் சொன்னது போலவே அதீதமாக வாசித்துத் தள்ளி வெகு அருகில் வந்து சேர்ந்தார்! “என்ன புக்னு சொல்லுங்க பார்ப்போம்” என்றார். “குமரித்துறைவி?” என்றதற்கு “வெள்ளையானை” என்றார். பிறிதொரு வரலாற்று புத்தகத்தை முந்தைய நாள்வரை வாசித்துக் கொண்டிருந்ததால் வாசிப்பு ஆனாலும் மெதுவாக போனதாகவும், இடைவெளியை குறைக்க வேண்டி ஜெ எழுத்து அணுக்கமாக இருப்பதால், வெள்ளையானையை எடுத்ததாகவும் சொன்னவர் “ஆனா எனக்கே ஆச்சரியம்! அதுவோ தீவிரமான புத்தகம். நாம் உத்தேசிச்சது நடக்குமா என சந்தேகப்பட்டேன். நல்லபடியாக தீவிரம் குறையாமல் அதே சமயம் விரைவாகவும் வாசித்து முடிக்க முடிந்தது” என்றார். “இது நல்ல யோசனையாக இருக்கே!” என்று சொல்லி – உண்மையில் எண்ணிக்கையி அவர் அதீதமாக நெருங்கி வந்திருந்தார் என்பதால், நான் விரைந்து முன்னேறுவதற்காக – நானும் உங்களில் ஸாகே புத்தகத்தை எடுத்தேன். ஏற்கனவே வாசித்த சில கட்டுரைகளும் அதில் இருக்கின்றன என்பதால். பின்னர் யோசனை. “என்ன இருந்தாலும் தாவரவியல் துறை சார்ந்த புத்தகம். உங்கள் எழுத்து எனக்கு அணுக்கம்தான் என்றாலும் அயலான துறை என்பதால் எந்தளவு ஒரு அபுனைவு புத்தகத்தை வேகமாக வாசித்துவிடமுடியும்?” என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நினைத்ததற்கு மாறாக, நல்ல வேகத்துடனேயே வாசித்து முடித்தேன். மொத்தம் மூன்று நாட்களில் நாளுக்கொரு அமர்வு என 300 பக்க தாவரவியல் சார்ந்த ஒரு அபுனைவை வாசித்தது எனக்கு தனிப்பட்ட சாதனை! அச்சாதனைக்கு வழிவகுத்த உங்களுக்குதான் முதன்மையாக நன்றி சொல்லவேண்டும்! 

அன்புடன்,

கணேஷ் பெரியசாமி.