அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
அதிகம் நனைந்து விட வேண்டாம் உன்காதலில் என்று,
கட்டுப்படுத்திக்கொண்டுமிருக்கிறாய்
பேரன்பின் பிரியத்தில் நிலைமறக்க வேண்டியதில்லை என
மட்டுறுத்திகொண்டுமிருக்கிறாய்,
அன்பில் அலைக்கழிந்து  போக வேண்டமென்று
கட்டளைகூட இட்டிருக்கிறாய்
காத்திருப்பின் தவிப்பில் கரைந்து போக வேண்டியதில்லையென
நீ உணரவேயில்லை
நீ சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம்
ஈரமண்ணிற்குள்  விதைகளை மறைத்து வைப்பதற்கான
முயற்சிகள் என்பதை
முளைத்து, தழைத்து, இலையும் கிளையுமாய்
தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் பெருமரமொன்றை
நீ எண்ணிகொண்டிருக்கிறாய் சின்னஞ்சிறு விதையென!