உனக்கே உனக்கானதோர் என் காதலை
உணர்ந்திருக்கிறாயா உள்ளபடி நீ?
உனக்கு வேண்டுமானால்
ஒருவேளை அவை
  ஒரு கோப்பை பானத்தின் ஒற்றைத் துளியாகவோ
நீ காலடியில் தேய்த்தழிக்கும்
கடைசித்துண்டு  சிகரெட்டாகவோ
 தவறாக எழுதி சுருட்டி எறியும் காகிதமாகவோ
அன்றி
 வெகு நாட்களாய்  வாசிக்க மறந்த ஒரு புத்தகமாக்கூட இருக்கலாம்
ஆனால் அன்பே
 கதகதப்பாய் எனை மூடிக்கொண்டிருக்கிறது
கனத்ததோர் கம்பளியாய் உன் மீதான என் காதல்,
 உறங்கிக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும்
அதனுள் என்னை முற்றிலுமாய் பொதிந்து கொண்டு
மூச்சுத்திணறி  அப்படியே மரணிப்பதற்கும் சம்மதமாய்!