ஆள் நடமாட்டமே இல்லாத அந்த நகரத்தின் கைவிடப்பட்ட தெருவொன்றில்  பனியில் உறைந்த உடலொன்றை இழுத்துக்கொண்டு போகிறார்கள்  ஆலிஸாவும், மாக்ஸிமும்.  வழியெங்கும் ஏராளமான விறைத்த சடலங்கள் கிடக்கின்றன. அந்தப் பெரு நகரம் முழுவதும்  இடிந்து பாழாகிக் கிடக்கிறது. வருடங்களாக மின்சாரமும் உணவும் தடைப்பட்டிருந்ததால் மரணஓலம் எழுப்பக்கூட திராணி இல்லாமல் கடுங்குளிரில் விறைத்துப்போன மனிதர்கள் நகரெங்கும் அரைப்பிணங்களாக  அப்புறப்படுத்தப்படாத சடலங்களுக்கு மத்தியில் கிடக்கிறார்கள்.  

இரணடாம் உலகப்போரில் முற்றுகையிடப்பட்டு உலகின் பிற பாகங்களிலிருந்து  சுமர் 900 நாட்கள்  (1941 – 1944) முற்றிலும் துண்டிக்கப்பட்டு பட்டினியால் மெல்ல இறந்துகொண்டிருந்த லெனின்கிராட் நகரின் விதைவங்கியில் இருக்கும் விதைகளைக் காப்பாற்ற இரண்டு தாவரவியலாளர்கள்  போரடியஉண்மைக்கதையை சொல்லிய One man dies a million times  என்னும் ரஷ்யமொழித் திரைப்படத்தின் காட்சிகள்தான் இவை.

 சுற்றிலும் போர்ச்சூழ்கை, உறைபனியின் எலும்பை ஊடுருவும் குளிரோடு கடும் பட்டினியும் சேர்ந்துகொண்டிருந்தது.  நகரின் அனைவரின் பசியையும் போக்கி உயிர்பிழைக்கச்செய்யும் கடைசி வாய்ப்பாக   விதைவங்கியின் விதைகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் உலகின் முதல் விதைவங்கியான அதன் ஆய்வாளர்கள் பலரும் எதிர்கால உலகிற்கான அவ்விதைகளை தின்று உயிர்வாழ்வதை விடவும் உயிரை விடுவதையே தேர்ந்தெடுக்கிறார்கள். கடைசியாகப் பிழைத்திருந்த இருவரான அலிஸாவும் மாக்ஸிமும் பட்டினியால் உயிரிழந்துகொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கையும், தோல் தொப்பிகளையும், கம்பளி ஆடைகளையும் கூட தின்றுகொண்டிருந்த மனிதர்கள், பெரும்படையாக  விதை வங்கியை முற்றுகை இடும் எலிகள் மற்றும் விதை வங்கியை அபகரிக்க துடிக்கும் நாஸிகளிடமிருந்து விதைவங்கியை காப்பாற்றப் போராடியதுதான் அந்த உண்மைக்கதை. 

 ‘One man dies a million times’  2019-ல் வெளியாகவிருந்த இத்திரைப்படம் கோவிட் பெருந்தொற்றினால் இரண்டு வருடங்கள் கழித்து 2022-ல் வெளியானது. இந்தக் கதை சொல்லும் உண்மை மாந்தர்களின் தியாகத்தைக் கருத்தில் கொண்டு இது திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது வேறெந்த ஊடகம் வழியாகவும் இதைக் காண முடியாது. அமெரிக்க இயக்குநர் ஜெசிக்கா ஓரக்கினால் இயக்கப்பட்ட உலகின் முதல் விதைவங்கியை பற்றிய இந்தத் திரைப்படம் வரலாறு, அறிவியல், மனிதநேயம், காதல், இயற்கை ஆகியவற்றின் கலவை. நேற்றைக்கும் இன்றைக்கும் இடையில், நம்பிக்கைக்கும் நிராசைக்கும் இடையில்  ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்தத் திரைக்கதையை ஜெசிகா கருப்பு வெள்ளையில் காட்டி இருக்கிறார்.

ரஷ்யத் தாவரவியலாளர்கள் அலிஸாவுக்கும் மாக்ஸிமுக்கும் இடையிலான காதல், பட்டினிக்கும் போர்முற்றுகைக்கும் நிராசைக்கும் இடையிலும் முகிழ்க்கிறது. நிலைமை மோசமாக ஆக அவர்களுக்கிடையேயான  பிணைப்பு மேலும் இறுகுகிறது. குண்டு விழும் ஓசை கேட்கையிலெல்லாம் ஒருவரை ஒருவர் பற்றிக்கொள்வதும், அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் தோட்டத்தில் இருவருமாக நீண்ட நடைசெல்வதுமாக மிக அழகிய காட்சிகள்  வழியாகக் கதை நகர்கிறது.  

காலநிலை மாற்றம், அழிந்துவரும் பல்லுயிரியம், சிதைந்துக் கொண்டிருக்கும் சூழலமைப்புக்கள் போன்ற எதிர்கால சிக்கல்களைக்காட்டித் துவங்கும் படம் பின்னர் வரலாற்று காலத்துக்குத் திரும்பி விதைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.அவ்வப்போது குரலாக மட்டும் கேட்கும் போர்ச்சூழலில் எழுதப்பட ஒரு நாட்குறிப்பின் நம்பிக்கை ஊட்டும் வாசகங்களும் படத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த N. I. Vavilov Institute of Plant Genetic Resources விதைவங்கி உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட  லட்சக்கணக்கான விதைகளைச் சேமித்துவைத்திருக்கிறது. இந்த விதைவங்கி உலகின் ஆகப்பெரிய விதைசேகரிப்பு மையங்களில் ஒன்றாக இருக்கிறது.  

Nikolai Ivanovich Vavilov

ரஷ்ய தாவரவியலாளர் வாவிலோவ் (Nikolai Ivanovich Vavilov) இதை உருவாக்கினார். உலகெங்கிலும் பயணித்து உணவுத்தாவர விதைகள் அனைத்தையும் சேகரித்த அவர் அரசியல் காரணங்களால் புரட்சியாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.  வாவிலோவின் மரணதண்டனை 20 ஆண்டு சிறைவாசமாகக் குறைக்கப்பட்டாலும், அவர் சிறையிலேயே இறந்தார். அவரது மரணச் சான்றிதழ் அவர் உடல் பலவீனத்தால் இறந்தார் என்று சொன்னாலும் அவர் கடுமையான சித்திரவதைகளுக்கும், பட்டினிக்கும் ஆளாகி சுண்ணாம்புக் காளவாயில் தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இப்போது மக்களால் கொண்டாடப்படும் ரஷ்ய நாயகர்களில் ஒருவர் வாவிலோவ்.

அந்தப் போர் முற்றுகையின்போது விதைவங்கிக்குள் இறந்துகிடந்த தாவரவியலாளர்  டிமிட்ரி இவனோவைச் (Dmitri Ivanov) சுற்றிலும் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன.  மேசையில் அமர்ந்தபடியே உயிரிழந்த மற்றுமொரு தாவரவியலாளரின் கைகளில் நிலக்கடலைகள் இருந்தன. கண் முன்னே இருந்த ஏராளமான உணவை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல மரணத்தைத் தேர்ந்தெடுத்த அவரின் உள்ள உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது.

நம்மில் பெரும்பான்மையானோர் விதைகளை உண்டு உயிர்வாழ்பவர்கள்தான், இந்தப்படம் நம்மில் ஒரு சிலரையாவது பயிர்செய்வோராக, விதைகளைச் சேகரிப்பவராக, பயிர்களுக்கு நீர் பாய்ச்சுபவராக, பயிர்களைப் பரமரிப்பவர்களாக, களை எடுப்பவராக  மாற்றும் விதையை மனதில் ஊன்றும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதனுக்கு உணவு, மருந்து, நாரிழை சாயம் மற்றும் ஆபரணங்களுக்காக விதைகளுடன் நெருங்கிய உறவு இருந்தது. அப்போதிலிருந்தே மனிதன் விதைகளைச் சேகரிக்கவும், சேமிக்கவும் அவற்றிலிருந்து பயிர்களை உருவாக்கவும்  கற்றுக்கொண்டான்.

இப்போதும் உலகின் அனைத்துக்கலாச்சாரங்களிலும் விதைகளே பிரதான உணவாக இருக்கின்றன. உலகின் பசியாற்றுவதில் பாதிப்பங்கில் கோதுமை, நெல், பார்லி, ஓட்ஸ் ஆகிய தானிய வகை விதைகள் இருக்கின்றன, இவற்றுடன் பயறு வகை விதைகளும் சேர்ந்து நமது சரிவிகித உணவு ஆகிறது.  மனிதர்களின் 50 சதவிகித கலோரி, அரிசி, கோதுமை, மக்காச்சோள விதைகளில் இருந்துதான் கிடைக்கிறது. 

மனித நாகரிகங்கள் அனைத்துமே விதைகளை மையமாகக் கொண்டவைதான் என்பது மிகைப்படுத்தப்பட்டதல்ல.  உலக நாகரீகங்கள் அனைத்துமே தானியங்களும் பயறுவகைகளும் இருந்த, விளைந்த இடங்களை மையமாகக்கொண்டே உருவாகின. கோதுமை பார்லி பட்டாணி கொண்டைக்கடலை ஆகியவை மேற்கு ஆசியப்பகுதிகளின் வளமிக்க  காட்டுபயிர்களாக இருந்தன. சிறு தானியங்கள், அரிசி, சோயாபீன் ஆகியவை பண்டைய சீனாவில் சாகுபடியாகின

பீன்ஸ் உள்ளிட்ட பயறுவகைகளும் மக்காச்சோளமும் அன்றைய மீசோ அமெரிக்க பகுதியன இன்றைய மெக்சிகோவில் மாயன்களால் சாகுபடி செய்யப்பட்டது. ஆண்டீஸ் மலைப்பகுதியின் இன்கா பழங்குடியினரால் கீன்வா, நிலக்கடலை மற்றும் லிமா பீன்ஸ் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. சோளம், ஆப்பிரிக்க அரிசி, தட்டைப் பயறு மற்றும் நிலக்கடலை  ஆகியவை மேற்கு ஆப்பிரிக்காவில் பயிராகின.  

சிறார் கதைகளில் சொல்லப்படும் ஏழு கடல் ஏழுமலைதாண்டி வாழும் மந்திரவாதியைப் போல விதைகளும் பல மலைகள் கடல்களைத் தாண்டிப் பயணிப்பவை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்பவை. பட்டாணிக்குடும்பத்தின் பவளபீன்ஸ்களும், ஹேம்பர்கர் பீன்ஸுகளும் கடல்நீரில் வருடக்கணக்காக இருந்தாலும் உயிருடன் இருப்பவை. அலைகளால் கரையொதுங்கிய அவை ஐரோப்பிய கரையோர நகரங்களில் வளர்ந்தன.  

கடந்த 30 கோடி வருடங்களாக விதைகள் அளவிலும், வடிவத்திலும் நிறங்களிலும்  பல மாற்றங்களை அடைந்துள்ளன.  வளமான மண்ணும் நல்ல தட்பவெப்பமும் இருக்கும் இடங்களில் மட்டுமல்ல துருவப்பகுதிகளிலும் பாலை நிலங்களிலும் கூட விதைத்தாவரங்கள் இருக்கின்றன. 

10,000 வருடங்களுக்கு முன்னர் விவசாயம் உருவானதிலிருந்து விதைகளே மனித வாழ்க்கையின் ஆதரங்களாக இருந்துவருகின்றன, நம் மூதாதையர்கள் மனித குலத்தின் பசியாற்றிய விதைகளில், எதிலிருந்து  நல்ல விளைச்சல் கிடைத்ததோ. எது நோய்த்தாக்குதலை எதிர்த்ததோ, எது காலநிலை மாற்றங்களைத் தாங்கிக்கொண்டதோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து  சேமித்து வைத்துத் திரும்பத் திரும்பப் பயிரிட்டனர்.  அப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கலப்பின முறைகளால் மேம்படுத்தப்பட்டு, சேமிக்கப்பட்டவிதைகள் தான் இன்று நாம் உபயோகிக்கும், உண்ணும் விதைகள். எளிய உதாரணமாக மக்காச்சோளத்தை சொல்லலாம், அமெரிக்க பழங்குடியினர் பண்டைய காலத்தில் பயிரிட்ட மக்காச்சோளத்திலிருந்து நீண்ட கதிரும், கொழுத்த விதைமணிகளும், அழுத்தமான நிறங்களும் கொண்டவற்றை மட்டுமே சேமித்து  பயிரிட்டனர்.

பல நாகரீகங்களின் தொன்மங்களிலும் விதை சேமிப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அறிவின் கடவுள் அஹுரா பண்டைய பெர்சியாவின் மன்னரான யிமாவை ’வரா’ என்னும் நிலத்தடி வங்கியில் உலகின் ஒவ்வொரு தாவரத்திலிருந்தும்   குறைகளற்றவையாக, 300 குளிர்காலங்களை தாங்கியவையாக இரு விதைகளை எடுத்துச் சேமிக்கச்சொல்லியதாக உலகின் பழமை வாய்ந்த சமயங்களில் ஒன்றான ஜொராஷ்ட்ரிய தொன்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நார்ஸ் தொன்மமும் இதற்கு இணையான  Odainsaker என்னும்  இயற்கைப் பேரழிவுகளின்போது பொது மக்களும் தாவரங்களும் பாதுகாப்பாக இருக்கும்  நிலத்தடி பூங்காவொன்றை  குறிப்பிடுகிறது. பஞ்சகாலம் வந்தால் தேவைப்படுமென்று ஜோசப் விதைகளைச் சேமித்ததைக் குறித்து புனித வேதகாமம் குறிப்பிடுகிறது.

மத்திய கிழக்குநாடுகளில் நடந்த அகழ்வாய்வுகளில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகக் களி மண் பானைகளிலும் நிலத்தடி குழிகளிலும் சேமித்துவைக்கப்பட்ட விதைகளின் எச்சங்கள் கிடைத்திருக்கின்றன. எகிப்தின்பிரமிடுகளும் விதைகள் பல ஆண்டுகள் சேமிக்கப்படுவதற்கு தேவையான சீரான வெப்பநிலை கொண்ட உள்கட்டமைப்பினைக் கொண்டிருக்கின்றன.

உலகின் எல்லா கலாச்சாரங்களிலும் விதைகள் இன்றியமையாத பங்காற்றுகின்றன.  குறிப்பாக நெல் பல கலாச்சாரங்களின் மையப் பகுதியாக இருக்கிறது. 

எத்தனை பஞ்ச காலமானாலும் விதைநெல்லை உணவுக்குப் பயன்படுத்துவதில்லை என்பது தமிழர் மரபு.   விதை சேமிப்பென்பது உலக நாடுகளனைத்திலும் மிக முக்கியமான விவசாயவழிகளில் ஒன்றாக இருந்துவருகிறது.விருக்‌ஷ ஆயுர்வேதம், அர்த்தசாஸ்திரம் ஆகிய பண்டைய நூல்களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பல வகையான விதை சேமிப்பு முறைகள் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

நிலத்தடியில் உருளை வடிவ குழி வெட்டி அதில் தானியங்கள் சேமிக்கும் வழக்கமும் இந்தியாவில் இருந்தது. தமிழகத்தின் தானியக்களஞ்சியங்கள், குதிர்கள்,  பத்தாயங்கள் ஆகியவையும் தானிய சேமிப்புக்கிடங்குகள் தான்.தஞ்சாவூரில் அன்றெல்லாம் திருமணத்தின்போது எந்த வீட்டில் குதிரும் பத்தாயமும் இருக்கிறதோ அங்குதான் எதிர்காலதிட்டமிடல் இருக்கும் என்று பெண் கொடுப்பார்கள். 

பாபநாசம் அருகே திருப்பாலத்துறையில் உள்ள பாலைவனநாதர் கோயிலில்  1640 -ல் கட்டப்பட்ட  மிகப்பெரிய தானியக் களஞ்சியம் இருக்கிறது. பூச்சிகள் அண்டாமல் நெல்லைப்பாதுகாக்க  அந்தக்காலத்திலேயே இப்படியொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.   36 அடி உயரமும், 84 அடி சுற்றளவும் கொண்ட, 90 ஆயிரம் கிலோ தானியத்தைப் பல ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்க முடியும் அமைப்பான இதுவே ஆசியாவின் மிகப்பெரிய தானியக்களஞ்சியம். இன்றும் இந்தக் களஞ்சியம் எந்தச் சேதமுமின்றி இருக்கிறது.  

பண்டைய இந்தியாவில் விதைகளைச் செம்மண்ணில் பிசைந்து  பந்துகளாக உருட்டிவைத்துப் பாதுகாப்பது எளிய வழிமுறையாக இருந்தது. இன்றும் தமிழக கிராமங்களில் மண் கட்டிய பயறு வகைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தேடிச்சென்று விரும்பி வாங்குவோரும் உண்டு, அவற்றின் சுவையும் அபாரமாக இருக்கும்.

’சந்தகா’  (Sandaka) எனப்படும் 12  குவிண்டால் அளவு விதைகளைச் சேமித்து வைக்கும்  நான்கு கால்களும், பல அறைகளும் கொண்டிருக்கும் மரப்பெட்டிகள் இந்தியாவில் இருந்தன.

மிகப்பெரிய விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் ஏராளமான விதைகளைச் சேமித்து வைக்க ’கோத்தி’ (Kothi) எனப்படும் பெரிய சேமிப்பு அறைகள் இருந்தன. இவற்றில் சோளமும், நெல்லும் சேமிக்கப்பட்டன.இந்த அறையின் ஒரு மூலையிலிருந்து தானியங்களை எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும்.

’உத்ரானி’ (Utrani) எனப்படும் சுட்ட களிமண் பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்துப் பலவகையான தானியங்களும் விதைகளும் சேமிக்கப்பட்டன. ஹகேவு  (Hagevu)  எனப்படும் நிலத்தடிக் குழிகள் அமைக்கப்பட்டு அவற்றில் வைக்கோல் மற்றும் கற்களைச் சுற்றிலும் வைத்து, குழியின் வாய் பிசைந்த மண்ணால் மூடப்பட்டு சோளம்  சேமிக்கப்பட்டது.

சிறிய அளவுகளில் விதைகளைச் சேமித்து வைக்கச் சுரைக்குடுவைகளும் இந்தியாவெங்கும் பயன்பாட்டில் இருந்தன. சுரைக்குடுவையில் விதைகளை இட்டு அதன் வாயைச் சாணம் அல்லது மண்ணால் அடைத்து, அவை கூரையில் கட்டித்தொங்கவிடப்பட்டன.

மூங்கில் மற்றும் பனையோலைப்பெட்டிகளும் பண்டிய இந்தியாவின் விதை சேமிப்பில் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தன. விதைகளைச் சாம்பல், செம்மண், வேப்பெண்ணெய், மரத்தூள் ஆகியவற்றுடன் கலந்து சேமிக்கும் வழக்கம் இன்று வரையிலுமே இருக்கிறது. இன்றும் கிராமப்புறங்களில் தானியங்கள், பயறுவகை விதைகளைச் சேமிக்க அவற்றுடன் உலர்ந்த வேம்பு, தும்பை, புன்னை, புங்கை இலைகளைப் போட்டுவைக்கும் வழக்கம் இருக்கிறது 

இந்து மதக்கலாச்சாரத்தில் எந்த மங்கல நிகழ்வானாலும் நவதானியங்களின் பயன்பாடு இருக்கிறது, திருமண விழாக்களில் மஞ்சள் அரிசி தூவுவதும், கல்வி துவங்குகையில் நெல்லில் முதற் சொல் எழுதுவதுமாகப் பல கலாச்சாரங்களில் பொதுவான விதைகளின் மங்கலப்பயன்பாடுகள்  பலகாலமாக இருந்துவருகிறது.

தாவரவியலாளர்கள் உலகில் இதுவரை 370000 விதை கொண்டிருக்கும் தாவரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர்.  மேலும் ஆண்டுகொருமுறை புதிதாக 2000 வகைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. பல தாவர வகைகள் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்  விரைவாக அழிந்துகொண்டுமிருக்கின்றன  சமீபத்திய புள்ளி விவரமொன்று ஐந்தில் ஒரு தாவரம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்கிறது. 

1950-களில் சீனாவில் புழக்கத்தில் இருந்த அரிசி வகைகளில் இப்போது வெறும் 10 % தான் பயன்பாட்டில் இருக்கின்றன. அமெரிக்கா 1900- களில் இருந்த  அதன் 90% காய்கறி மற்றும் பழ ரகங்களை முற்றிலும் இழந்து விட்டிருக்கிறது.

உலகில் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கும் தாவர வகைகளில் சில நூறு வகைகளே மனிதர்களின் உணவுத்தாவரங்களாக இருக்கின்றன. அவற்றிலும் மனிதர்களின் உணவுக்கான 95%  பயன்பாட்டில் இப்போது இருப்பது 35 வகையான பயிர்கள் மட்டுமே. அவற்றிலும் வெகுசில உணவுப் பயிர்களே பயிராக்கப்பன்றன. அவையும் அழியும் அபாயத்தில் இருக்கின்றன. இயற்கை பேரழிவுகளும் பெருந்தொற்றுக்களும் போர் அபாயங்களும் சூழ்ந்திருக்கும் இக்காலத்தில் முன்பெப்போதும் விடவும் விதைப் பாதுகாப்பு மிக முக்கியமானதாகி விட்டிருக்கிறது.உலகெங்கிலும் 40% விதைகள் அழியும் அபாயத்தில் இருப்பதால் விதை சேமிப்பு என்பது மிக முக்கியமானதாகி விட்டிருக்கிறது. 

லெனின்கிராட் முற்றுகையைப்போலவே 2011-ல் சிரியா போரின்போது அங்கிருந்த பெரிய விதை வங்கி புரட்சியாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்த விதை வங்கிகள் முற்றிலும் போரில் அழிந்துவிட்டன, இந்த வங்கிகளின்  அழிந்த விதைகள் உலக விதை வங்கிகள் எதிலுமே சேமித்துவைக்க படவில்லை.  போர் மட்டுமல்ல பிலிபைன்ஸில் நடந்ததுபோல் இயற்கை பேரழிவுகளும் விதை வங்கிகளை அழித்திருக்கின்றது.  பிலிப்பைன் தேசிய ஜீன் வங்கியின் 45,000  வகை விதைகள் 2006 வெள்ளத்தில் பாதிக்கு மேல் சேதமாகின மீதம் இருந்தவை மீண்டும் 2012-ல்  எற்பட்ட தீவிபத்தில் அழிந்தன. எனவேதான் உலகெங்கிலும் விதை பாதுகாப்பு என்பது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இன்று உலகளவில் சுமார் 1700 வகையான விதை வங்கிகள் செயல்பாட்டில் இருக்கின்றன.

 இந்த விதைவங்கிகள் பொதுவாக மூன்று வகைப்படுகின்றன 

  • விதை உதவி வங்கிகள் (Assistentialist seed banks) -இவற்றில் சிறு விவசாயிகளுக்குத் தேவையான அதிக விளைச்சல் அளிக்கும், பராமரிப்பு அதிகம் தேவைப்படாத, குறைந்த மூலதனம் தேவைப்படும்  குறுகியகாலப் பயிர்களின் விதைகள் சேமித்து வைக்கப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
  • உற்பத்தி வங்கிகள் (Productivist seed banks)- மிகப்பெரிய அளவில் விதைகள் இதில் சேகரிக்கப்படுகின்றன. அதிக நிலப்பரப்பில் நல்ல விளைச்சல் கொடுக்கும், நோயெதிர்ப்புச் சக்தி கொண்டிருக்கும் உணவுப்பயிர்களின் விதைகள் இங்கு சேமிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு விதை மாதிரிகள்அளிக்கபடுகின்றது.’ 
  • பாதுகாப்பு வங்கிகள்(Preservationist seed banks)- இவற்றில்தான் உலகநாடுகளின் அனைத்து வகையான விதைகளும் நெடுங்காலத்துக்கு சேமிக்கப்படுகின்றன. 

விதைகளைச் சேமித்து வைப்பதோடு தேவைப்படுவோருக்கு  தொடர்ந்து அளிக்கும் வங்கி   seed library  எனப்படுகிறது. அமெரிக்காவில் இத்தகைய வங்கிகள் 500க்கும் மேல் செயல்படுகின்றன.seed bank எனப்படும் விதை வங்கி  விதைகளை, விதைகளின் மரபணுக்களைப் பலகாலத்துக்கு சேமித்து வைக்கிறது.  

ஐக்கிய இராச்சியத்தின் மில்லினியம் விதை வங்கி, ஆர்டிக் பகுதியின்  ஸ்வால்பாட் (Svalbard Global Seed Vault) ஆகியவை விதை பாதுகாப்பு வங்கிகளில்  குறிப்பிடத் தகுந்தவை.

நார்வீஜிய தீவொன்றில் பனிமலையின் அடியாழத்தில் ஸ்வால்பாட்  வங்கியின்பாதுகாப்புப்பெட்டகங்களில் உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட  லட்சக்கணக்கான விதைகள் சேமித்துவைக்கப் பட்டிருக்கின்றன.  ஸ்வால்பாட் உலகவிதை வங்கி   இயற்கைப் பேரழிவுகளால் உலகின் முக்கிய உணவுப்பயிர்களின் விதைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. 2008-ல் இருந்து  இங்கு விதைகள் சேமிக்கப்படுகிறது.  இந்த வங்கியின் குண்டு துளைக்காத அணுஆயுத தாக்குதலிலும் பாதிப்படையாத சுவர்கள் 1 மீ தடிமன் கொண்டவை.

 2024-ன் கணக்கெடுப்பின்படி நிச்சயமற்ற எதிர்காலதிற்கான சேகரிப்பாகச் சுமார் 1,280,677   விதைகள் இந்த வங்கியில் பனிமலைக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு சேமித்து வைக்கப்பட்டிருப்பது விதைகள் மட்டுமல்ல 13000 வருடங்களுக்கு முன்பான உலக விவசாய வரலாறும்தான். இதுவே உலகின் மிகப்பெரிய விதை வங்கி.

மற்றுமொரு முக்கியமான விதை வங்கி Millennium Seed Bank. லண்டனில் செயல்படும் இந்த விதைவங்கி ஸ்வால்பாட் வங்கியைக் காட்டிலும் 100 மடங்கு பெரியது. ஆனால் இதன் சேமிப்பு அளவு ஸ்வால்பாட் வங்கியைக்காட்டிலும் குறைவு. இவ்விரண்டு வங்கிகளிலும் சேமிப்பிலிருக்கும் விதைகளின் முளைதிறன் ஒவ்வொரு பத்து வருடத்துக்கொருமுறை ஆய்வுக்குள்ளாக்கப்படுகிறது. முளைதிறன் இழந்தவை உடனடியாக மீண்டும் சேகரிக்கப்படுகின்றன. 

இவற்றைப் போல உலகெங்கிலும் இப்படி பெரிய மற்றும் சிறிய அளவிலான விதை வங்கிகள் செயல்படுகின்றன.இவற்றில் சில உணவுப் பயிர்களின் விதைகளையும் மற்றவை காட்டுத்தாவரங்களின் விதைகளையும் சேமிக்கின்றன.

 1986-ல் துவங்கபட்ட George Hulbert Seed Vault  என்னும்  New South Wales-ல் இருக்கும் விதைவங்கி   ஆஸ்திரேலிய நெல் ரகங்களின் விதைகளை மட்டும் சேமிக்கிறது, குறிப்பாகப் பசுமைப் புரட்சிக்கு முந்தைய நெல் ரகங்கள் இங்கு சேமிக்கப்படுகின்றன. 

இந்தியாவில் BBA எனப்படும்  (Beej Bachao Andolan — Save the Seeds movement)   விதைகளைச் சேகரிக்கும் இயக்கம் 1980-களில் விஜய் ஜர்தாரி என்பவரால் உத்தரகண்டில் தொடங்கப்பட்டது. இங்கு  நாட்டு விதைகள் சேமிக்கப்படுகின்றன. BBA-வின் முன்னெடுப்பில்  2010-ல் இந்திய விதை வங்கி லடாக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   இதில் ஆப்ரிகாட், பார்லி, முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட சுமார் 200 வகை பயிர்களின் 10,000 விதைகள் சேமிக்கப் பட்டிருக்கின்றது.

Desert Legume Program (DELEP)  எனப்படும் பாலை நிலப்பயறு விதைகளுக்கான பிரத்யேக வங்கி உலகின் வறண்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சுமார் 6 கண்டங்களின், 65 நாடுகளைச் சேர்ந்த,  1400 பயறு வகைச்சிற்றினங்களின்  3600 வகை  விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன. 

உலகின் மாபெரும் விதை வங்கிகளில் ஒன்றான National Gene Bank of Plants,  1990-களில் உக்ரைனில் துவங்கபட்டது. 2022ல் ரஷ்யப்டையினரால் இந்த வங்கி பெருமளவில் சேதமுற்றாலும் அதன் முக்கியமான விதைகள் பல்லாயிரக்கணக்கில் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. 

பிரான்சின் ’INRAE Centre for Vegetable Germplasm’  எனப்படும் விதை வங்கியில்  கத்தரிக்காய், மிளகாய், தக்காளி, பூசணி மற்றும் கீரைச்செடிகளின் வகைகளின் 10,000 வகைகள் பாதுகாக்கபட்டிருக்கிறது 

பெல்ஜியத்தின் ’Meise Botanical Garden’  விதை வங்கியில் காட்டு பீன்ஸ், காட்டு வாழை உள்ளிட்ட  பெல்ஜியத்தின் பூர்விக தாவரங்களின் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.

இப்படி  மனிதர்களால் உருவாக்கப்படும் விதை வங்கிகள் மட்டுமல்லாமல் இயற்கையும் விதை வங்கிகளை உண்டாக்குகிறது. பல தாவரங்கள் வளரும் இடங்களிலேயே அவற்றின் விதைகளைச் சேமிக்கின்றன. ஒரு சில தாவரங்களின் சிறு விதைகள் மழை நீருடன் கலந்து நிலத்தின் நுண்ணிய இடைவெளிகள்மூலம் நிலத்தடிக்குச் செல்கின்றன. ஒரு சில விதைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு நிலத்தடியில் சேகரமாகின்றன. மேலும் சில அவற்றின் மிகச்சிறிய அளவினால் நிலத்தின் விரிசல்களில் நுழைந்து ஆழத்திற்கு செல்கின்றன்.

நிலவங்கிகளில் இருக்கும் விதைகளில்  Striga (witchweed) சிற்றினங்களின் விதைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. ஏனெனில் அவை அதிக எண்ணிக்கையில் விதைகளை உருவாக்குகின்றன. ஆக்கிரமிக்கும் இயல்புடைய  ஸ்ட்ரைகா சுமார் லட்சத்திலிருந்து 5 லட்சம்வரை விதைகளை உருவாக்கும்.

கலைக்கொல்லி உபயோகம் அதிகமாவதற்கு முன்பு வரை ஐரோப்பாவெங்கும் நிலவங்கிகளில்   Papaver rhoeas,  விதைகள் ஏராளமாகச் சேமிக்கபட்டிருந்தன.வட அமெரிக்காவுக்கு சொந்தமான  Androsace septentrionalisஎன்னும் தாவரத்தின் விதைகள் நிலதின்த்  மேலிருப்பதை விட நிலத்தடியில்தான்  அதிகளவில் இருக்கிறது. 

பல தாவரவியலாளர்கள்  அதிகம் அறியபட்டிருக்காத இந்த நிலவிதை வங்கிகளைக் குறித்து பல வருடங்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.இந்த ஆய்வு முடிவுகள் நிலவங்கியில் சேகரமாகி, பலகாலம்  நிலத்தடியில் முளைதிறன் அழியாமல் காத்திருக்கும் விதைகள் அளவில் சிறியவையாகவும்,விழுந்தவுடனே முளைப்பவை  தட்டையாகப் பெரிதாகவும் இருக்கின்றன என்கிறது

நில வங்கிக்குள் சேமித்து வைக்கப்படும் விதைகள் பொதுவாக 3 மில்லி கிராம் எடைக்கும் குறைவாக இருக்கின்றன, அவற்றிற்கு இறகுகள், கொக்கிகள், மயிரிழைகள் போன்ற  விதை மரவ உதவும் அமைப்புக்கள் எதுவும் இருப்பதில்லை என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. மண்புழுக்களும் எறும்புகளும் கூட நில வங்கியில் விதைகள் சேமிப்பதில் பெரும் உதவி செய்கின்றன. நிலத்தடியில் காத்திருப்பதால் இவ்விதைகள் மேய்ச்சல் விலங்குகள், இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றன.  நில வங்கியின் விதைகள் முளைப்பதை காலம்தான் முடிவு செய்கிறது. எப்போது அடிமண் மேலே வருகிறதோ அப்போதுதான் இவை முளைக்கின்றன.

தாவரங்களின் விதைகள் ஒவ்வொன்றும் தாய்மரத்திலிருந்து பிரிந்ததும் முளைப்பதில்லை ஒவ்வொரு விதையும் முளைப்பதற்கான காலம் வேறுபடும்.சில விதைகள் உடனே முளைத்துவிடும், ஒரு சில விதைகள் முளைப்பதற்கு முன் உறக்ககாலம் எடுத்துக்கொள்ளும். உரிய தருணம் வரும்போது அவை முளைத்தெழும். விதைகள் முளைக்கையில் ஒரு புதுத் தாவரம் உருவாவதில்லை, உண்மையில்  விதை என்பதே நுண்வடிவில் ஒரு தாவரம்தான். அது நீரிலோ, காற்றிலோ, பூச்சி அல்லது விலங்குகளாலோ மனிதச்செயல்படுகளாலோ சரியான நிலத்திற்கு எடுத்துச்செல்லபட்டு அங்கு  முளைக்கின்றன.

விதைமுளைதிறன் என்பது ஒரு விதை கனியிலிருந்து பிரிந்தபின்னர் எப்போது முளைக்கிறது என்பதை குறிக்கிறது.விதைகள் முளைக்குமுன்னே செல்லும் உறக்கநிலை தாவரவியலாளர்களின், சூழியலாளர்களின் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களில் ஒன்று.  விதைகளின் முளைதிறன் குறித்த சுவாரஸ்யமான ஆய்வுகள் உலகின் பல நாடுகளில் நடந்திருக்கின்றன. மிச்சிகனில் 1879ல் இந்த ஆய்வுகளை  ஜேம்ஸ் பேல்  James Beal என்பவர் துவங்கினார். 21 சிற்றினங்களின் 50 விதைகளை இவர் 20 பாட்டில்களில் அடைத்து நிலத்தில் புதைத்தார். ஐந்து வருடங்களுக்கொருமுறை ஒவ்வொரு சிற்றினத்தின் விதைகளும் மேலே எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் முளைக்கவைக்கப்பட்டன

அவரது காலத்திற்கு பின்னர் அவற்றை எடுத்து முளைக்க வைப்பதற்கான காலம் மிக நீண்டது.1980-ல் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த ஆய்வுகள் தொடர்ந்தபோது புதைக்கப்பட்டவற்றில்   moth mullein (Verbascum blattaria), common mullein (Verbascum thapsus) மற்றும்  common mallow (Malva neglecta) ஆகிய 3 சிற்றினங்களின் விதைகள் மட்டும் முளைத்தன. இப்படி பல நாடுகளில் ஆய்வுகள் பலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது.

வில்லோ மற்றும் பாப்லர் விதைகள் சரியான இடத்தில் விழுந்து ஒரு சில நாட்களில் முளைக்காவிட்டால் அழிந்துவிடும். மக்காச்சோளம், வெங்காயம் போன்றவற்றின் விதைகள் இரண்டு வருடங்கள் கூடத் தாக்குபிடிப்பவை .பீட்ரூட், கேரட், பூசணி, தர்பூசணி விதைகள்  5-லிருந்து 6 வருடங்கள் முளைதிறனை தக்க வைப்பவை. வெள்ளரிக்காய் விதைகள்; 10 வருடங்களுக்கு முளைதிறன் கொண்டிருப்பவை.  சக்ரவர்த்தினி கீரையின் (Chenopodium album) விதைகளும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முளைதிறனை தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை.  

விதைகளின் முளைதிறன் பலகாரணிகளால் தீர்மானிக்கபடுகிறது.நிலத்தின் ஆழத்தில் புதையும் விதைகள் நெடுங்காலம் பாதுகாப்பாக இருப்பதுண்டு.  

பொதுவாகக் கடினமான மேலுறை கொண்டிருக்கும் விதைகளின் முளைதிறன் வெகுநாட்களுக்கு நீடித்திருக்கும், இதைப் பயறுவகை விதைகளிலும் தாமரை, காப்பி ஆகியவற்றிலும் காணலாம். 50 வருடங்களுக்கும் மேலான தாமரைவிதைகளை சாதரணமாக முளைக்கவைத்து தாமரைக்கொடி வளர்க்கப்படுகிறது.

 சீன ஏரிப் படுகையிலிருந்து எடுக்கப்பட்ட 1250 வருடங்களூக்கு முன்பான தாமரைவிதைகளை நட்டுவைத்து அவற்றில் பல முளைத்துக் கொடியாகி பலகொடிகளில் மலர்களும் மலர்ந்தன.  1940-ல் லண்டன் வரலாற்று அருங்காட்சியகம் நெருப்பில் சேதமுற்றபோது அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த விதைகளில் பலவிதைகள் நெருப்பின் வெப்பத்தினாலும், நெருப்பை அணைக்க ஊற்றப்பட்ட நீரினாலும் முளைத்தன. அப்படி முளைத்தவற்றில் சில விதைகள் 1793-ல் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட சிலைவாகை (Albizia chinensis) மரத்தின் விதைகள்.

தெற்கு இஸ்ரேலின் மாஸுடா கோட்டை இடிபாடுகளில் (rubble of Masada) இருந்து அறிவியலாளர்கள் கண்டெடுத்த  2000 வருடங்கள் பழமையான ஒரு பேரீச்சை விதை வெற்றிகரமாகச் சமீபத்தில் முளைக்கச் செய்யப்பட்டது. இதுவே உலகின் பழமையான விதைகளில் முளைத்து வளர்ந்தவற்றில் முதன்மையானது . 1960-களில் ஜூடியான் பாலையில்  கிமு35-ல் கட்டப்பட்ட  மாஸுடா கோட்டையின் இடிபாடுகளில் அகழ்வாய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சீசாவில் சேமிக்கப்பட்டிருந்த ஏராளமான  பேரீச்சை விதைகள் கிடைத்தன. ஜூரிச் பல்கலைகழகதின் ரேடியோ கார்பன் கணக்கீடுகள் அவ்விதைகள் கிமு  155- 64 பொ யு காலத்தைச் சேர்ந்தவையென உறுதிப்படுத்தின. பின்னர் அவை 40 ஆண்டுகள்  இஸ்ரேலின் Bar-Ilan University-ல் பாதுகாக்கபட்டன.

அவற்றில் மூன்று விதைகளை  ஜெருசேலத்தின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அங்கமாகிய  Louis L. Borick Natural Medicine Research Center  -ன் இயக்குநரும் இயற்கை மருந்துகளின் ஆய்வில் ஈடுபட்டிருந்தவருமாகிய சாரா சலோன் நட்டுவைத்தார் 

2000 ஆண்டுகளுக்குப் பிறகு   2008-ல் இந்த ஜுடியான் பேரீச்சை விதைகளில் ஒன்று  முளைத்தது.  முளைத்தெழுந்த அந்த பேரீச்சைக்கு  பைபிளில் வரும்  நெடுங்காலம் வாழ்ந்தவரான மெத்தூசலா என்னும் பெயர் வைக்கப்பட்டது.(உலகின் மிகப் பழமையான 4856 வயதான  பைன் மரமொன்றிற்கும் மெத்தூசலா என்றுதான் பெயர்)

சில வருடங்களுக்குப் பிறகு சாராவும் அவரது ஆய்வுக்குழுவினரும் தொட்டியில் வளர்ந்த அந்தப் பேரீச்சை மரத்தைக் குறித்தும் அதன் வயதை ரேடியோ கார்பன் கணகீட்டில் கண்டுபிடித்ததையும்   Science  இதழில் கட்டுரையாக வெளியிட்டார்கள். அத்தனை ஆண்டுகாலம் அவ்விதை முளைதிறனை தக்க வைத்திருந்தது பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. பாலையில் கடும் வெப்பம் அதனைப் பாதுகாத்திருக்கலாமென யூகிக்கப் பட்டது

2008- இம்மரம் 12 நீண்ட கூட்டிலைகளுடன் ஒரு பெரிய தொட்டியில் 1.4 மீ உயரம் வளர்ந்திருந்தது, 2011 மார்ச்சில் மெத்தூசலா பேரீச்சை மலர்ந்தபின்னர் அது ஆண் மரம் எனத் தெரியவந்தது. 2011 நவம்பரில்  2.5மீ வளர்ந்திருந்த மெத்தூசலா தொட்டியிலிருந்து நிலத்துக்கு மாற்றப்பட்டது. 2015 மே மாதம் இது 3 மீ உயரம் அடைந்திருந்தது, இதன் மலர்களில் மகரந்தங்கள் உருவாகியிருந்தன. இம்மரத்தின் மகரந்தங்களைக்கொண்டு எகிதிய பேரீச்சை பெண்மரமொன்றை  அயல்மகரந்த சேர்க்கைக்கு உட்படுத்தத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் முன்பு கிடைத்த   ஜுடாயன் பாலைவிதைகளிலிருந்தே மீண்டும் 32விதைகள் முளைத்து வளர்ந்திருந்தன. அவற்றில் பிழைத்து நன்றாக வளர்ந்த 6 நாற்றுகளுக்கு ஆதாம், ஜோனா, யுரியல்,போவாஸ், ஜூடியா மற்றும் ஹென்னா எனப் பெயரிடப்பட்டது.  இவற்றில் பெண் மரங்களும் இருந்ததால் அவற்றில் வெற்றிகரமாக மெத்தூசலாவின் மகரந்தங்களைக் கொண்டு  2019–லிருந்து மகரந்த சேர்க்கை ஆய்வுகள் நடத்தப்பட்டது. 2021-ல் ஹன்னா ஏராளமான பேரீச்சைக்கனிகளை அளித்தது.

ஜூடியான் பாலைவனப்பகுதி  நெடுங்காலமாகவே தரமான பேரீச்சைகளுக்கு புகழ்பெற்றிருந்தது, ஆனால் அப்பகுதியின் பேரீச்சைமரங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இந்த  மெத்தூசலா விதையில் மரபணு ஆய்வுகளிலும் அதன் தரத்தைக் குறித்த தகவல்களை அறிய உதவவில்லை.  இப்போது ஹன்னா அளித்திருக்கும் விதைகளில் பலவகையான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

இதே ஜூடியான் பாலைக்குகையொன்றிலிருந்து 1980-ல் 993-லிருந்து 1202-க்கு இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்ததாக இருக்கும் என யூகிக்கப்பட்ட சுமார் 10,00 வருடங்கள் பழமையான ஒரு விதை கண்டெடுக்கப்பட்டது. அது முளைதிறன் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்ததால் அது மெத்தூசலாவை முளைக்கச்செய்த சாரா சலோனினால் முளைக்கச்செய்யப்பட்டது. அப்படி முளைத்த அவ்விதை 14 ஆண்டுகள் வளர்ந்து மரமானது. ஷீபா எனப்பெயரிடப்பட்ட அம்மரம் பச்சைப்பசேலென்ற இலைகளுடன் 3 மீ உயரம் கொண்டிருக்கிறது.அதன் இலை, பிசின் மற்றும் மரக்கட்டையில் ஆய்வு செய்தபின்னர் அம்மரம் அழிந்துவிட்ட ஒன்று என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இம்மரம்  Commiphora பேரினத்தை சேர்ந்தது என்பதை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் இதில் மருத்துவப்பயன்கள் கொண்டிருக்கும் பல வேதிச் சேர்மங்கள் இருப்பதையும் கண்டறிந்திருக்கின்றனர். எனவே ஷீபா அதன் மருத்துவ உபயோகங்களுக்கென்று முன்பு வளர்க்கப்பட்டிருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது,  ஷீபா இனி மலர்ந்தால் மேலும் ஆய்வுகள் தொடரக்கூடும். 

2007-ல் செர்பியாவுக்கு சொந்தமான வெண்ணிற மலர்களை கொண்ட   Silene stenophylla என்னும் தாவரத்தின் 32,000 வருடத்திற்கு முந்தைய 600,000 உறைந்த கனிகள்  ரஷ்ய அறிவியலாளர்களால் செர்பிய நிலத்தடி உறைபனியின் 124 அடிக்கு கீழே பனியுக அணிலொன்றின்  70 பொந்துகளில் இருந்து  கண்டுபிடிக்கப்பட்டது.   விதைகள் முளைக்காமல் இருப்பதற்காக அணில்கள் அவற்றை  உடைத்திருந்தன எனினும் அவற்றில் உடைபடாமல் இருந்த 3 கனிகளில் இருந்த விதைகள்  2012-ல்  முளைக்கச்செய்யப்பட்டன. அந்த  விதைகள் முளைதிறனை இழந்துவிட்டிருந்தன என்றாலும் கனிகளின் சூலொட்டுத்திசுவிலிருந்து புதிய தாவரங்கள்  உருவாக்கப்பட்டன. 

இப்படி உறைபனி மற்றும் வெப்பத்தினால் உலர்வதை தாங்கிக்கொண்டு முளைதிறனை தக்க வைத்துக்கொள்ளும் விதைகள் Orthodox seeds  எனப்படுகின்றன.  வெப்பத்தையும் உறைபனியையும் தாக்குபிடிக்க முடியாமல் குறுகிய காலத்திலேயே முளைதிறனை இழப்பவை recalcitrant seeds எனப்படுகின்றன. 

 மிகப்பழமையான விதைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகப் பல சமயம் கட்டுக்கதைகளும், தவறான தகவல்களும் கூட வந்ததுண்டு.

1954-ல்  கனடாவின் யுகான் (Yukon) பிரதேச பனிப்பாறைகளிலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முன்பான  லுபின் விதைகள்  (Lupinus arcticus) எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவ்விதைகள் 1966-ல் முளைக்க வைக்கப்பட்டன, ஆனால் கார்பன் கணக்கீடுகள் அவை  மிகப்பழைய முயல் பொந்துகளிலிருந்து எடுக்கப்பட்ட 10 வருடப்பழமையானவை என்பதைக் காட்டின.

2009 டிசம்பரில் துருக்கிய நாளிதழொன்றில் 4000 ஆண்டு பழமையான லெண்டில் விதை முளைக்கச்செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது.பின்னர் அது தவறான தகவல் எனத் தெரியவந்தது..

இதைப்போலவே எகிப்திய பிரமிடுகளிலிருந்து எடுக்கப்பட்ட  3000 ஆண்டு பழமையான  கோதுமை விதைகள் முளைத்ததாகப் பல கட்டுக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கோதுமை விதைகள் போலி ஆய்வாளர்களால் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டதும் நடந்தது. ஆனால் ராயல் அறிவியல் பூங்காவில் அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி அவற்றில் முளைதிறன் முற்றிலும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. 

கான்கிரீட் தரையில் மிகச்சிறிய விரிசலிலிருந்து முளைத்து மலரளிக்கும் ஒரு சிறுசெடி,  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முளைதிறனை தக்கவைத்துக்கொண்டு, இன்றைய சூழலில் முளைப்பவையென விதைகள் நமக்களிக்கும் ஆச்சர்யங்கள் ஏராளமானவை. இனி ஏதெனும் ஒரு கனியை உண்டு, விதைகளை அலட்சியமாகத் துப்புமுன்னர் அதனுள்ளிருக்கும் உயிர்ச்சக்தியை, வானை, ஒளியை காண்பதற்காக அது கொண்டிருக்கும் கனவையெல்லாம் எண்ணிப்பாருங்கள்.

விதைகள் வெறும் தாவர பாகங்கள் அல்ல அவை நமது மூதாதைகள், அவற்றிற்குள் வரலாறும் எண்ணற்ற கதைகளும் புதைந்திருக்கின்றன, இன்று நம் முன்னிருக்கும் விதைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு நமது கலாச்சாரங்களுடன் இணைந்திருப்பவைதான். விதைகளின்பாதுகாப்பென்பது நமது  மூதாதையர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதுதான்.